November 11, 2010

தன்னைத்தேடி - ஒரு புதிர்ப்பயணம் (1)

புதையலைத் தேடிக் கிளம்பிய அவர்கள் வழியில் பல இன்னல்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இதுவரை யாருமே பயணம் செய்திராத பாதையில் பயணம் செய்யும் தைரியம் கொண்டு முன்னேறிச் சென்ற அவர்களை எதிர்நோக்கி கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஆபத்துகள் காத்துக் கிடந்தன. ஆள்விழுங்கி ஏரிகள், பயங்கரப் பிராணிகள், காற்றும் புக முடியாத அடர்கானகம், நரமாமிசம் தின்னும் காட்டுவாசிகள் என்று எக்கச்சக்க தடங்கல்கள். அதை எல்லாவற்றையும் முறியடித்து அவர்கள் புதையல் பாதையின் இறுதியை நெருங்கி விட்டார்கள். அங்கே..

நிற்க.. மேலே இருக்கும் வாசகங்களைப் படிக்கும்போது ஏதேனும் காமிக்ஸ் புத்தகம் படிக்கும் உணர்வு உங்களுக்கு ஏற்படுகிறது எனில்.. சந்தோஷமாக உங்கள் தோளில் நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள். என் இனமய்யா நீர். என்னது காமிக்சா? அது சின்ன பிள்ளைங்க படிக்குறதாச்சே என்று சொல்லக்கூடியவர் என்றால் இப்படியே ஜகா வாங்கிக் கொள்ளுங்கள். இது உங்களுக்கான இடுகையல்ல..



அழகான படங்களோடும் மிக நுண்ணிய தகவல்களோடும் வரும் காமிக்ஸின் சித்திரக்கதைகள் நம் மனதை எளிதில் கொள்ளை கொண்டு விடக்கூடியவை. ஒரு அறை என்பது இப்படி இருந்தது என்று பக்கம் பக்கமாக வார்த்தைகளில் விளக்குவதை விட ஒரு படத்தின் மூலம் எளிதாக சொல்லி விடலாம். பார்க்கப்போனால் காமிக்ஸ்தான் இன்றைய திரைப்படங்களுக்கான முன்னோடி என்றுகூட சொல்லலாம். லாங்ஷாட், க்ளோசப் என்று ஒரு காட்சியை எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கான ஆரம்ப முயற்சிகளை எல்லாம் முதலில் செய்து காண்பித்தது காமிக்ஸ்தான்.

காமிக்ஸ் வாசிப்பது ஒரு அற்புத அனுபவம். வாசிக்கும் நம்மையும் ஒரு பாத்திரமாக மாற்றி உள்ளிழுத்துக் கொள்ளும் ஆற்றல் அந்தப் புத்தகங்களுக்கு உண்டு. அந்தப் புத்தகங்களை வாசிக்கும் தருணங்களில் விரைந்தோடும் குதிரைகளில் நாயகர்களோடு ஒருவனாக நானும் பயணித்திருக்கிறேன். இரும்புக்கை மாயாவியாய் மாறி அரூப வடிவில் துப்பாக்கி ஏந்தி எதிரிகளை டுமீல் டுமீல் என சுட்டு வீழ்த்தி இருக்கிறேன். ஸ்பைடரின் வலையில் தலைகீழாகத் தொங்கியுமிருக்கிறேன்.

கொலராடோ நதியும் செவ்விந்தியர்களும் ஏதோ நமக்கு வெகு அருகாமையில் இருப்பதைப் போன்றதொரு உணர்வை காமிக்ஸ்கள் எனக்கு கொடுத்திருக்கின்றன. எனக்கு அறிமுகமாயிராத முற்றிலும் புதிய உலகங்களையும் காமிக்ஸ்களின் மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன். அஸ்டெக் என்றொரு இனம் இருக்கிறது, அவர்கள் சூரியக்கடவுளை வழிபடுவார்கள் என்பதில் ஆரம்பித்து கவுபாய்களின் உலகம் எப்படியிருக்கும் என்பது வரை காமிக்ஸ்கள் பல தகவல்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கின்றன.

விவரம் தெரிந்து நான் முதல்முதலில் காமிக்ஸ் வாங்கிய தினம் இன்றைக்கும் எனக்கு நினைவில் இருக்கிறது. நான் நான்காவதோ ஐந்தாவதோ படித்த சமயம். எதையோ கேட்டு அடம்பிடிக்கும் என்னை சமாளிக்க என் தாத்தா கடைக்கு அழைத்துப் போகிறார். அங்கே தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு புத்தகத்தின் அட்டைப்படம் என்னை வெகுவாக கவர்ந்திழுக்க அது வேண்டும் என கேட்டு வாங்குகிறேன். அந்த புத்தகம் டெக்ஸ் வில்லரின் "மந்திர மண்டலம்". மா-ஷை என்கிற கொடிய சூனியக்காரியை எதிர்த்துப் போராடும் டெக்ஸ் ஒரு மரணப் பள்ளத்தில் வீழ்வதும, அங்கே எதிர்ப்படும் பயங்கர ஆபத்துகளை சமாளித்து மீள்வதும்தான் கதை. அன்று ஆரம்பித்த காமிக்ஸ் மீதான என்னுடைய ஆர்வம் இன்று வரை தொடர்கிறது.

இந்த விஷயங்களை எல்லாம் என் நினைவுகளின் பேழையிலிருந்து இப்போது மீட்டெடுத்துப் பேசுவதற்கான அவசியம்.... இருக்கிறது. இந்தத் தீபாவளி, காமிக்ஸ் வாசிக்கும் அனைவருக்கும் மறக்க முடியாத ஒன்றாக அமைந்து விட்டது. கிடைப்பதற்கு அரிதானதொரு புதையல்.. இரண்டு வருடங்கள் முன்பாக அறிவிக்கப்பட்டதிலிருந்து கனவாகவே இருந்து விட்டதொரு விஷயம் இப்போது நனவாகி இருக்கிறது. 1986 இல் ஆரம்பித்த XIIIயின் பயணம் 25 வருடங்களுக்குப் பிறகு கடைசியாகத் தன் இலக்கை கண்டடைந்து இருக்கிறது. ஆம் நண்பர்களே.. லயன் காமிக்ஸின் "இரத்தப்படலம்" ஜம்போ ஸ்பெஷல் வெளியாகி விட்டது.


சில வருடங்களுக்கு முன் கமல்ஹாசன் நடித்த "வெற்றி விழா" என்றொரு படம் வெளியானது உங்கள் நினைவிலிருக்கலாம். அது இந்த காமிக்ஸ் தொடரைக் காப்பியடித்து எடுக்கப்பட்டதே. இரத்தப்படலத்தின் மூலக்கதை என்ன? கொலை முயற்சிக்கு ஆளாகி தன் நினைவுகளைத் தொலைத்த ஒருவன் தான் யாரெனத் தெரிந்து கொள்ள மேற்கொள்ளும் பயணம்தான் "இரத்தப்படலம்". ஒருவன் தன்னைத்தானே தேடிப்போவது என்பது விசித்திரம்தான் இல்லையா? மொத்தம் பதினெட்டு பாகங்கள் உடைய கதை. இதுவரை பத்து பாகங்கள் மட்டுமே லயனில் வெளிவந்து இருந்தன. ஆனால் இப்போது எல்லாப் பாகங்களையும் இணைத்து ஒரு ராட்சத இதழாக இந்தப் புத்தகம் வெளிவந்து இருக்கிறது.

காமிக்சைக் கொண்டாடும் அனைவருக்கும் அரிய பொக்கிஷமாக வந்திருக்கும் இந்தப்புத்தகத்தை வாங்க நான் பயணித்த கதையே ஒரு பெரும் கதைதான். அந்தக் கதையும், லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களும்.. அடுத்த இடுகையில்..

(தொடருவேன்..)

13 comments:

Prabu M said...

ரொம்ப ரொம்ப சுவாரஸ்யமான பதிவு கார்த்தி...
நான் ராணி காமிக்ஸ் வாசகன்... "முகமூடி வீரர் மாயாவி தோன்றும்" என்று போட்டாலே குஷியாகிவிடுவேன்... மாயாவி, இரும்புக்கை மாயாவி, ஜேம்ஸ்பாண்ட்,கௌபாய் காமிக்ஸ், அப்புறம் ஆங்கிலத்தில் ஆஸ்ட்ரிக்ஸ்....

அந்தக் குட்டிக்குட்டிப் படங்களில் ஆங்கிலப் படங்களைத் தமிழில் பார்க்கும் இன்பம்... இன்னும்கூட நிறைய ஹீரோஸ் ஞாபகம் வரவில்லை... திரும்ப ஆரம்பிச்சுடவேண்டியதுதான்.... வாங்க நானும் உங்க இனம்தான் :) காலைல ரொம்ப குஷியாகிட்டேன் உங்க பதிவு பார்த்துவிட்டு...

பிரதாப் போத்தனின் "வெற்றி விழா" ராபர்ட் லட்லம்மின் "போர்ன் ஐடெண்டிடி"யுடைய பாதிப்பு....
இப்பொழுது மாட் டெமோனின் நடிப்பில் ஜேசன் போர்ன் சீரீஸ் வந்துகொண்டிருக்கிறதல்லவா... அதே இனம்தான்... பட் "ஜிந்தா", ராதாரவி என்று கதையை மாற்றியிருப்பார் பிரதாப்.... "இரத்தப் படலம்" நான் படித்ததில்லை... கண்டிப்பாகப் படிக்கிறேன்....

கார்த்திகைப் பாண்டியன் said...

@பிரபு

இந்தக் கதையின் ஆசிரியரே இது “பார்ன் ஐடெண்டிடி”யின் பாதிப்பால் எழுதப்பட்டது என்று ஒத்துக் கொண்டுள்ளார். அது வேற கதை. ஆனால் எனக்கு என்னமோ கமல் படம் இந்தப் புத்தகத்தில் இருந்தே உருவப்பட்டிருக்கும் என்றொரு உணர்வு.. காரணம் படம் வெளிவந்த வருடம் 1989.. இரத்தப்படலம் தமிழில் வரத்தொடங்கிய காலம் 1986.. அதனாலத்தான் அப்படி எழுதி இருக்கேன்.. :-))

டெக்ஸும் டைகரும் வாசிங்க.. காமிக்ஸோட தி பெஸ்ட் இவங்க ரெண்டு பேரும்னு என் அபிப்பிராயம்..

லேகா said...

@கார்த்திகை பாண்டியன்,

ரொம்ப நல்லா வந்திருக்கு...காமிக்ஸ் என்றதுமே எங்கிருந்தோ தொற்றிக்கொள்கிறது உற்சாகம்.மதுரை புத்தக சந்தையில் வாங்க தவறி விட்டேன்..இரும்புக்கை மாயாவி,அம்புலி மாமா,கோகுலம்,ராணி காமிக்ஸ்,டுவிங்கிள் உடன் கழிந்த நாட்கள் மறப்பதற்கில்லை.

பகிர்ந்தமைக்கு நன்றி.

Prabu M said...

கண்டிப்பாக இருக்கலாம்!!
டிசம்பர் மாதம் ஊருக்குவரும்போது "இரத்தப் படலம்" பார்சல் பண்ணிட்டுப் போறேன்...
கண்டுபிடிச்சுடுவோம் கமல்படத்தோட மூலத்தை :)
காமிக்ஸ்கள் திரைப்படத்தின் முன்தோன்றல்கள் என்பதை மறுப்பதற்கு இல்லவே இல்லை... "ஸ்டோரி போர்டு" வரைந்து பார்த்துதானே பெரிய பட்ஜெட் படங்களும் ஹாலிவுட் படங்களும் ஷூட்டிங்கிற்கே கிளம்புகிறார்கள்! ஸ்டோரி போர்டு படங்கள்தானே காமிக்ஸூகள்!
ஹாலிவுட்டில் ஹிட்டடித்த அத்தனை படங்களும் காமிக்ஸிலும் சக்கைபோடு போட்டு ரைட்ஸிலும் கரன்ஸிகளைக் குவிக்கத்தான் செய்கின்றன... அது ஏனோ நம்ம ஊரில் மட்டும் சினிமா, அச்சக ஊடகத்தின் பிஸினிஸையும்... டிவி, சினிமா ஊடகத்தின் வியாபாரத்தையும் விழுங்கிவிடுகின்றன....

காமிக்ஸுக்குப் படம் வரைபவர்கள்... மற்றும் இத்தனை நுணுக்கமாக நூற்றுக்கணக்கில் படம்வரைந்து சுவாரஸ்யமாய்க் கதை சொல்லிவிட்டு புத்தகத்தை ஐந்து ரூபாய்க்கு விற்பது அவர்களுக்கு எப்படிக் கட்டுப்பிடி ஆகிறது... காமிக்ஸின் வியாபார ஸ்கோப்தான் என்ன... முக்கியமாக காமிக்ஸுக்கு வருங்காலம் இருக்கிறதா என்றெல்லாம் சுவாரஸ்யமான பதில்களுடன் இந்தத் தொடர் கியர் அப் செய்து பயணிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்...

மதுரை சரவணன் said...

காமிக்ஸ் பற்றிய பகிர்வு என் சிறுவயது நினைவுகளை கொண்டு வந்து விட்டது. தேடி தேடி பத்துக்காம்பவுண்டு ராஜு என்ற நண்பர் வீட்டில் போட்டிப்போட்டு காமிக்ஸ் படித்தக் காட்சி நினைவில் கொண்டு வந்ததற்கு நன்றி. வாழ்த்துக்கள்

ஆனந்தி.. said...

என் சிறுவயதில் என் புத்தக ஆர்வம் காமிக்ஸ் இல் தான் ஆரம்பித்தது...ராணி காமிக்ஸ் லெண்டிங் லைப்ரிரியன் வந்து கொடுப்பார்...என் வயதை ஒத்த சிறுவர்/சிறுமிகளுக்குள் சண்டை போட்டு பிடுங்கி படிப்போம்...ஓமனாவும்,ஆவியும் காமிக்ஸ் கதை இன்னும் என் நினைவில்...ம்ம்..நினைவை தூண்டி விட்டதற்கு நன்றி!! :))

Ganesan said...

என்னங்க, இங்கே , பிரபு, லேகா, கார்த்தி, சரவணன், ஆனந்தி, காவேரி கணேஷ், எல்லாம் மதுரகாரங்கல்லாம் ஒன்னு கூடியிருக்காங்கே..

கார்த்திகைப் பாண்டியன் said...

லேகா..

புத்தகத் திருவிழாவில் காமிக்ஸ் ஸ்டால் இல்லை..சென்னைல யாராவது போடுறாங்களான்னு பார்ப்போம்..

பிரபு..

இயக்குனராக ஆசைப்படுறவன்னு சரியா நிரூபிக்கிறப்பா..:-)) தொடரை கொஞ்சம் சுருக்கமா எழுதலாம்னு இருக்கேன்.. ஏன்னா இதை விரிவான கட்டுரையா பத்திரிக்கைக்கு அனுப்புற யோசனை இருக்கு..

கார்த்திகைப் பாண்டியன் said...

@சரவணன்

எல்லாருக்குமே இப்படியான அனுபவங்கள் இருக்கு தலைவரே.. நீங்க கூட இதுபத்தி எழுதலாமே

@ஆனந்தி

ந்ன்றிங்க

@காவேரிகணேஷ்

ஆனந்தியும் மதுரைதானா? ரைட்டு தலைவரே.. பாசக்காரப் பயபுள்ளைகள்ள..:-)))

நேசமித்ரன் said...

ம்ம் காமிக்ஸ் மாதிரி கவிதை எழுதுறடான்னு இன்னைக்கு காலைல ஒருத்தர் சொன்னார் . அவருக்கு எப்படியோ .. எனக்கு சந்தோஷம்
காமிக்ஸ் கற்பனா சக்தியை வளர்க்கும்

மதுரைக் காரங்கன்னு வேற சொல்லிட்டு போய்ட்டாங்க . பின்னூட்டம் போடாட்டி குத்தம்மாயிறாது

:)

R. Gopi said...

நல்ல பதிவு காபா. புத்தகம் சென்னையில் எங்கே கிடைக்கும்?

மேவி... said...

அருமையான பதிவு சார் . நானும் சின்ன வயசுல TINTIN காமிக்ஸ் யை ரொம்ப விரும்பி படிச்சு இருக்குறேன். ஒவ்வொன்னும் ஒவ்வொரு டிடெக்டிவ் நாவல் மாதிரி இருக்கும்.

பிறவு, நீங்க சொன்னதுக்கு அப்பரும் கடைல போய் தேடி பார்த்தேனுங்க. அந்த ஐஞ்சு ரூபாய் புஸ்தகம் தான் இருக்கு. உங்களுக்கு புஸ்தகம் எங்க கிடைக்கும்ன்னு எதாச்சு ஐடியா இருக்கா ?????

அமெரிக்காவுல mental stress ல இருந்து போலீஸ்காரங்க விடுபட, அவங்களை video games , comics எல்லாம் விளையாடவும் படிக்கவும் சொல்லுறாங்க. இன்னும் கொஞ்சம் தெரியும் எனக்கு... பொதுவுல வேண்டாம். போன் பண்ணும் போது சொல்லுறேன் ....

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் தலவரே.... அருமை கலக்கலாக இருக்கு