February 25, 2010

உக்கார்ந்து யோசிச்சது (25-02-2010)..!!!

கடைசியாக அது நடந்தே விட்டது. ஒரு நாள் போட்டிகளின் முதல் இரட்டை சதம் என்பதை நம் சச்சின் சாதித்து இருக்கிறார். இருபது வருடங்கள் கிரிக்கெட்டுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர். 1999 உலகக்கோப்பையின் போது அவருடைய தந்தை மரணம் அடைந்த சூழலிலும் நாட்டுக்காக விளையாடியவர். அத்தகைய அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஒருவரால் இந்த சாதனை படைக்கப்பட்டிருப்பதுதான் எத்தனை பொருத்தம்? மென்மேலும் சச்சின் பட்டையைக் கிளப்ப வேண்டும். அவருடைய விளையாட்டு வாழ்வில் ஒரே ஒரு குறை இருக்கிறதென்று சொன்னால், அது உலகக்கோப்பை மட்டுமே. 2011யில் அந்தக் கனவும் நிறைவேற சச்சினுக்கு வாழ்த்துகள்.

***************



மேலே இருக்கும் காடு போன்ற இடம் என்னவென்று உங்களால் அனுமானிக்க முடிகிறதா? மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பாத்தியமான திருமண மண்டபம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடம் இது. பெரியார் பேருந்து நிலையத்தை ஒட்டி, மதுரையின் மையப்பகுதியான எல்லிஸ் நகரில் இந்த இடம் இருக்கிறது.


எனக்குத் தெரிந்து கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக இப்படித்தான் எந்த விதமான கவனிப்பும் இன்றி கேட்பாரற்றுக் கிடக்கிறது. ஏன் இப்படி? யாருக்குமே பலனில்லாமல் இந்த இடம் இப்படித்தான் இருக்க வேண்டுமா? இதை கொஞ்சம் சுத்தம் செய்து வாழ்விடம் இல்லாத நடைபாதை மக்கள் தங்குவதற்கான மண்டபம் போல கட்டினாலாவது அவர்களுக்கு பயன்படுமே? அல்லது உருப்புடியாக எந்தவொரு விஷயத்துக்காகவாவது உபயோகப்படுத்திக் கொள்ளலாமே? பொறுப்பில் உள்ளவர்கள் யோசிப்பார்களா?

***************

சமீபத்தில் உறவினரின் திருமணத்துக்காக கோவை சென்று வந்த நண்பரொருவரின் அனுபவம் இது. உக்கடத்தில் இருந்து காந்திபுரம் செல்வதற்காக பேருந்தில் ஏறி இருக்கிறார். மதுரை மக்களுக்குத்தான் படியில் தொங்குவதில் அலாதி பிரியமாச்சே... நம்மாளும் வாசலில் நின்று கொண்டிருந்திருக்கிறார். அருகில் வந்த நடத்துனர் இவரிடம் கத்தி இருக்கிறார்.

"மேல ஏறி வாங்க சார்.. நீங்களே ஓசிங்க.. நான் மத்த டிக்கட்டெல்லாம் ஏத்த வேண்டாமா?"

நம்மாளுக்கு கெட்ட கோபம் வந்து பதிலுக்கு கத்தியிருக்கிறார்.

"ஏய்.. யாரப் பாத்து ஓசின்னு சொன்ன.. கொன்னுபுடுவேன்.. காசையும் வாங்கிக்கிட்டு லந்த கொடுக்குறியா?"

இவரின் வேகத்தை பார்த்து நடத்துனர் அரண்டு போய் விட்டார் போல... அப்புறம் தான் தெரிகிறது.. "யோசிங்க" என்பது தான் "ரோசிங்க" என்று மாறி "ஓசிங்க.." ஆகி இருக்கிறது.

ஊருக்கு ஊர் பாஷை மாறுவதால் வரும் பிரச்சினை. என்ன கொடுமை சார் இது? மதுரையில் வெகு சாதரணமாக புழங்கும் "ம*ரு" என்ற வார்த்தையை கோவையில் இருக்கும் நண்பனிடம் சொல்லி நான் டன் டன்னாக வாங்கிக் கட்டியது நினைவுக்கு வந்தது. சிரித்துக் கொண்டேன்.

***************

ஒரு மனிதனால் இத்தனை உருகி உருகி காதலிக்க முடியுமா என்று திகைக்க வைக்கிறது யூமா.வாசுகியின் "மஞ்சள் வெயில்". அகல் வெளியீடு. நாவல் என்று சொல்லாமல் மிக நீண்ண்ண்ண்ண்ட கவிதை என்றுதான் சொல்ல வேண்டும். ஜீவிதா என்ற பெயருடைய யாரையேனும் சந்திக்க மாட்டேனா என்று ஏங்க வைத்து விட்டது புத்தகம். "கடலலைகள் கழுவிச் சென்ற கரையின் ஓரமாக நடந்து செல்லும் சிறு குழந்தையின் கட்டை விரல் பதிவைப்போல சுழிந்திருக்கிறது உங்கள் நாபி ஜீவிதா.." அத்தனை அழகான வர்ணனைகள் புத்தகம் முழுதும் விரவிக் கிடக்கின்றன.

பிறிதொரு சந்தர்ப்பத்தில் புத்தகம் பற்றிய முழுமையான அறிமுகப்பதிவொன்று எழுதும் ஆசை இருக்கிறது. காதலித்தவர்கள், காதலிப்பவர்கள், காதலிக்கும் எண்ணம் கொண்டவர்கள், காதலை ரசிப்போர் என அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். இந்த புத்தகத்தை எனக்கு பரிசாக அளித்த நண்பர் யாத்ராவுக்கு நன்றி. (தவிர்க்க முடியாத கல்லூரிப்பணியின் காரணமாக உங்கள் திருமணத்துக்கு வரமுடியவில்லை.. மன்னியுங்கள் நண்பா..)

***************

கர்ணமோட்சம் - தேசிய விருது பெற்றிருக்கும் தமிழின் முதல் குறும்படம். அன்புக்குரிய எஸ்ராவின் கதை, வசனத்தில் உருவாகி இருக்கிறது. கூத்துக்கலையின் வீழ்ச்சியையும், இன்றைய சமூகத்தின் அலட்சியத்தையும் உள்ளத்தை உருக்கும்படியாக படம் படித்திருக்கிறார் இயக்குனர். இது போன்ற படங்களால் ஏதேனும் விழிப்புணர்வு உண்டானால் சரி. படத்தினைக் காண நண்பர் பிரசன்னா ராசனின் தளத்துக்கு செல்லுங்கள்.

(தகவல் பகிர்வுக்கு நன்றி - செல்வேந்திரன்)

***************

"விண்ணைத் தாண்டி வருவாயா" - கவுதமின் படங்கள் எப்போதுமே என்னைக் கவர்ந்தது கிடையாது. "காக்க காக்க" தவிர மற்ற எல்லா படங்களுமே என்னை கொலையாய் கொன்றவை. இது போதாதென்று குருவி, ஆதவன் என்று தமிழ் சினிமாவை சூறாவளியாய் தாக்கிக் கொண்டிருக்கும் "ரெட் ஜெயன்ட்" வெளியீடு என்பதாலேயே நான் கொஞ்சம் பயந்து போய் தான் இருக்கிறேன். இசைப்புயல் வேறு மாங்கு மாங்கென்று வேலை பார்த்து ரொம்பவே வித்தியாசமான இசையைக் கொடுத்து இருக்கிறார். என்ன நடக்கப் போகிறதோ? சிம்புவின் நேரம் எப்படி.. நாளை தெரிந்து விடும்.

***************

ஒரு அழைப்பு..

சந்திப்பு, மதுரை அன்புடன் அழைக்கிறது..

கலாப்ரியாவின் "நினைவின் தாழ்வாரங்கள்" நூல் அறிமுகம்

தலைமை: நா.முருகேசப்பாண்டியன்

வரவேற்புரை: சமயவேல்

கருத்துரை: சுந்தர் காளி, யவனிகா ஸ்ரீராம், திருச்செந்தாழை, லிபி ஆரண்யா, கடற்கரய், ரமேஷ் பிரேதன், ஜெயமோகன்

ஏற்புரை: கலாப்ரியா

நாள்: 28-02-2010 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை பத்து மணி

இடம்: ஹோட்டல் பிரேம் நிவாஸ், மதுரை

பதிவுலக நண்பர்கள் மற்றும் வாசகர்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

February 22, 2010

நேசமித்ரனும், நண்பர்களும் பின்னே ஞானும்..!!!

பிரியத்துக்குரிய நண்பரும் பதிவுலகின் டெர்ரர் கவிஞருமான நேசமித்திரன் நேற்று மதுரை வந்திருந்தார். காலை பதினோரு மணிபோல அவருக்காக ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன். திண்டுக்கல்காரராக இருந்தாலும் நைஜீரியாவில் இருந்து வருபவர், கவிதைகளில் ஒரு புது மொழியை உண்டாக்கி மனிதர்களைக் கலங்கடிப்பவர்... எப்படி இருப்பாரோ என்று ஒருவித பயத்துடன் தான் இருந்தேன். ஆனால், "வணக்கம்ணே.. சொல்லுங்க.." என்று மாறாத மதுரை மண்ணின் பேச்சோடும் முகம் மலர்ந்த புன்னகையோடும் மிக எளிமையாக வந்திறங்கினார் நேசன். கூடவே அவருடைய நண்பர் சதீஷும் வந்திருந்தார்.

இருவரையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு நானும் ஸ்ரீதரும் மதுரையில் வழக்கமாக பதிவர் சந்திப்பு நடக்கும் இடமான அமெரிக்கன் கல்லூரி சிற்றுண்டிசாலைக்கு வந்து சேர்ந்தோம். தருமி ஐயா, ஜெரி ஈஷானந்தா, மதுரை சரவணன் என்று நண்பர்கள் எல்லோரும் வந்து சேர சந்திப்பு களைகட்டியது. மதியத்திற்கு மேல் நண்பர் பாலகுமாரும் சேர்ந்து கொண்டார்.

பதிவர் சந்திப்பு என்று சொல்வதை விட கிட்டத்தட்ட ஒரு இலக்கிய கூட்டம் என்றே சொல்லலாம் என்னுமளவுக்கு நிறைய விஷயங்களை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டார் நேசன். பல விஷயங்களைப் பற்றி தெளிவாக விளக்கினார். நண்பர்களின் சில கேள்விகளையும் அவர் பகிர்ந்து கொண்ட சில விஷயங்களையும் என் நினைவிலிருந்து தொகுத்து இருக்கிறேன்..

உங்களுடைய கவிதைகளை புரிந்து கொள்வது அத்தனை கடினமாக இருப்பது ஏன்?

கவிதை என்பது ஒரு அனுபவமாக இருக்க வேண்டும். புதிய படிமங்களை உருவாக்க வேண்டும். படிக்கும்போது உங்களை வேறொரு தளத்துக்கு தூக்கி அடிக்க வேண்டும். எதற்காக இந்த வார்த்தைப் பிரயோகம் என்பதை யோசிக்க வைக்க வேண்டும். ஒரு கவிதையை எழுதி முடித்தவுடன் கவிஞன் இறந்து போகிறான். பிரதி மட்டுமே உங்கள் பார்வைக்கு இருக்கிறது. அதில் வாசகர்கள் சிந்திப்பதற்கான ஒரு வெளியை நான் உண்டாக்க முயலுகிறேன்.

பழைய உவமைகளை விடுத்து, புதிதாக.. இன்றைய அறிவியல் உலகத்தின் பாதிப்போடு எழுத முயலுகிறேன். ஒரு குறிப்பிட வட்டத்துக்குள் என்னை நான் அடைத்துக் கொள்ள விரும்பவில்லை. மாறாக எந்த ஒரு நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், என்னுடைய கவிதைகளை படிக்கும்போது அவர்களுக்கும் புரியும்படியாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

சொல்ல வரும் விஷயத்தில் இருக்கும் தீவிரத்தையும் அடர்த்தியையும் வார்த்தைகளைத் தெரிவு செய்வதிலும் கொண்டு வருவதுதான் முக்கியம். தேவையில்லாத வார்த்தை என்று ஒன்று கூட கவிதையில் இருக்கக் கூடாது என்பதால் எழுதும் கவிதைகளை கூர்தீட்டிக் கொண்டே இருப்பேன். ஒரு பென்சில் சீவுவது போலத்தான். பொறுக்கி எடுக்கப்பட்ட வார்த்தைகள் மட்டுமே இருக்கும்போது கடைசியில் அது ஒரு மூடுபனி போன்ற உருவத்தை தோற்றுவிக்கிறது. அதன் ஊடாக இருக்கும் செய்தியை அனுமானிக்க வேண்டியது வாசகன்தான்.

இந்த காரணங்களினாலேயே என்னுடைய கவிதையின் மொழி சற்று கடினமானதாகப்படுகிறது என சொல்லலாம்.

மொழி பற்றி?

தமிழ்மொழி போன்ற அழகான மொழி வேறெங்கும் கிடையாது என்று அடித்துச் சொல்லலாம். யாருமே யோசித்துப் பார்க்க முடியாத பல கற்பனைகளை தமிழ் பாடல்களில் பார்க்கலாம். குறிப்பாக சங்க காலப் பாடல்களை படிக்கும்போது அத்தனை பெருமையாக இருக்கிறது. அதில் காணக் கிடைக்கும் உவமைகளில் ஒன்று.. "புறாவின் கழுத்து வளைவை ஒத்ததாக ஒரு பெண்ணின் கைவிரல்கள் இருப்பதாக" ஒரு பாடல் இருக்கிறது. எத்தனை அழகு பாருங்கள்.. அதே போல ஒரே வார்த்தையில் பல விஷயங்களை சொல்லிப் போகும் கவிதைகளும் உண்டு.. இத்தனை காலம் தாண்டியும் தமிழ் இன்னும் செறிவாக இருப்பதே அதன் தனித்தன்மைக்கு சான்று.. அதை முன்னெடுத்து செல்வதென்பது ரொம்ப முக்கியம். எனவே எழுதும் போது ஒற்றுப்பிழைகளோ, தவறான வார்த்தை பிரயோகமோ இருக்கக்கூடாது.

பதிவுலகம்?

தீவிரமாக எழுத வேண்டும் என்று நினைக்கும் மக்களுக்கு ஒரு அருமையான பயிற்சிக்கூடமாக பதிவுகள் இருக்கின்றன. ஆனால வெகு சிலரே அது போன்ற முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம். பதிவுகள் ஒரு பொழுதுபோக்கு, வடிகால் என்பதையும் மீறி பயனுள்ளதாக செய்வது நம் கையில்தான் இருக்கிறது. எல்லாவற்றையும் மீறி நல்ல நட்பினை பதிவுகள் மூலம் அடைய முடிவது ரொம்ப சந்தோசம்.

ஒருவருடைய எழுத்தின் சாயல் மற்றவரின் எழுத்தில் இருப்பது பற்றி?

இதை நான் பெரிதும் வெறுக்கிறேன். இன்றைக்கு கவிதை எழுதுபவர்களில் பலரும் மனுஷ்யபுத்திரனின் நகலாக இருக்கிறார்கள். இது சரிதானா? "யாருமற்ற, வெறுமை, தன்னந்தனியாக.." இது போன்ற வார்த்தைகளே எங்கும் விரவிக் கிடக்கின்றன. ஏன்? உங்களுக்கான புது வார்த்தைகளை உருவாக்குங்கள். சொல்லாடல்களை கொண்டு வாருங்கள். மாறாக மற்றவரை பிரதியெடுக்க முயலாதீர்கள். நிறைய பேரை வாசிக்கலாம். அதன் மூலம் நம்முடைய தளம் விரிவடையும் என்பது உண்மைதான். மாறாக அவர்களின் சாயல் நம்மீது படிந்து விடக்கூடாது. சமீபத்தில் யானை என்பதைக் கொண்டு ஒரு கவிதை எழுத முற்பட்டேன். அதற்காக ஒரு படிமத்தை உருவாக்கினேன். பின்புதான் ஜெயமோகனின் "மத்தகம்" பற்றிய ஞாபகம் வந்தது. எந்த இடத்திலும் அதன் பாதிப்பு இருந்து விடக்கூடாதே என அஞ்சியபடி கதையை படித்தேன். அப்படி ஒரு வார்த்தை அங்கு இல்லை என்றான பின்புதான் நிம்மதியாக இருந்தது. இந்த சுயகவனிப்பு எல்லாரிடமும் இருக்க வேண்டியது மிக முக்கியம்.

(நேசன் பேசியதை முழுதும் எழுத வேண்டுமானால் இன்னும் இரண்டு, மூன்று இடுகைகள் தேவைப்படும் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.)

தன்னுடைய கவிதைகளில் சிலவற்றை வாசித்து விளக்கம் தந்தார் நேசன். அவருடைய வார்த்தைகளில் கேட்க ரொம்பவே அருமையாக இருந்தது. மதியம் காந்தி மண்டபத்தில் நடைபெற்ற அர்ஷியாவின் "ஏழரைப் பங்காளி வகையறா.." என்ற புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டோம். மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் கல்லூரியில் ஜமா கூடியது. நண்பர்கள் பாலகுமார். ஸ்ரீ மற்றும் நான் எழுதிய சில இடுகைகளை படித்து தன்னுடைய கருத்துகளை சொன்னார். என்ன மாதியான விஷயங்களை எழுதலாம் என்பது பற்றியும் பேசினோம். எதெதையோ தொட்டு, எங்கெங்கோ பயணித்தது பேச்சு. கடைசியாக எங்கள் சந்திப்பு முடிந்தபோது இரவு மணி பதினொன்று ஆகி விட்டிருந்தது. நண்பருக்கு அன்புப்பரிசாக யூமா.வாசுகியின் "மஞ்சள் வெயில்" என்ற புத்தகத்தை வழங்கினோம். அடுத்த வாரம் மீண்டும் மதுரைக்கு வருவதாக சொல்லி விடைபெற்றுக் கொண்டார் நேசன்.

ஞாயிற்றுக்கிழமையை ஒரு பயனுள்ள தினமாக, என்றும் நினைவில் நிற்கும் ஒரு நாளாக மாற்றிய நேசனுக்கும், நண்பர்களுக்கும் நன்றி.

(வழக்கம் போல கல்லூரியில் தொழில் நுட்ப கோளாறு காரணமா என்னால படங்களை இணைக்க முடியல.. அதை எல்லாம் தனிப்பதிவா போடுறேன்.. இப்போ படங்களுக்கு தருமி ஐயாவின் பதிவுக்குப் போங்க..)

February 20, 2010

நாட்டின் பேராண்மையும் ஈனவெங்காயமும்..!!!


நிலவில் தடம் பதித்தோம்
புதிதாய் பல கோள்கள் கண்டோம்
பிறவிக் குருடர்க்கும் பார்வை தந்தோம்
எத்தனையோ அற்புதங்கள் செய்தோம்

கூடவே
மனிதமும் தொலைத்து விட்டோம்

கனவுகளில் ஏக்கமும்
வாழ்க்கையில் வறுமையும்
கொண்டலையும் மனிதருக்கு
ஒரு வேளை உணவளிக்க
வக்கில்லா விட்டாலும்
2020 இல் வல்லரசு என
கொடிபிடித்து அலைந்து திரிகிறோம்

கண்ணெதிரே தோழர்கள்
நசித்து ஒழிக்கப்பட
கண்ணிருந்தும் குருடர்களாய்
அமைதி காக்கிறோம்

காலத்தினால் வந்த மாற்றமா
அல்லது
கலங்கி நிற்கும் தேசத்தின் தலைவிதியா?

வண்ணக்கனவுகள் கூட
விழிகளில் கருப்பு வெள்ளையாக மட்டுமே
தெரிவதைப் போல
காலகட்டங்களும் மாறிப்போன கொடுமையை
என்னவென்று சொல்வது?

சீறிவரும் இளைஞரின் நாட்டுப்பற்றெல்லாம்
வேகமிழந்த சிற்றாறாய்
டிவி பார்த்து கொண்டாடிய
தேசிய தினங்களோடு
முடிந்து போகக் கூடுமோ?

பணமிருப்பவர் பாராள்வதும்
மற்றவர் அவர்தம் கால் தொழுவதுமென
வேற்றுமைகள் இல்லா சமுதாயம்
என்பது கானல்நீர்தானா?

எல்லாம் தொலைத்துவிட்டு
அனாதையாய் இருப்பவர்களிடம் வந்து
நாட்டின் பேராண்மை பற்றிப் பேசும்
அன்பான ஈனவெங்காயங்களே

இதுதான் உங்கள் சுதந்திரம் என்றால்
நீங்களும் இந்த நாடும் நாசமாய்ப் போகட்டும்

(என்னுடைய மாணவி ஜெ.நிவேதா எழுதிய கவிதை.. இரண்டாம் ஆண்டு பொறியியல் படிக்கிறார்.. சமூக அக்கறை கொண்டவர்.. ரௌத்ரம் பழகுபவர்.. இன்னும் நிறைய எழுத வேண்டும் என அவருக்கு என் வாழ்த்துகள்.. நீங்களும் வாழ்த்துங்கள் நண்பர்களே )

February 10, 2010

தமிழ்ப்பதிவு - இது சத்தியமா வித்தியாசமான பதிவுங்கோ..!!!

டிஸ்கி 1 : இந்த இடுகை முழுக்க முழுக்க கற்பனை கிடையாது என்றாலும், முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்ட இடுகை.. நண்பர்கள் யாரும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்கின்ற நம்பிக்கையிலேயே எழுதுகிறேன்..

டிஸ்கி 2 : இடுகையில் எந்த விதமான குறியீடோ, உள்குத்தோ, வெளிகுத்தோ கிடையாது என்பதை தெளிவாக சொல்லி விடுகிறேன்..

டிஸ்கி 3 : இடுகையில் லாஜிக் தேடுபவர்களுக்கு கும்மாங்குத்து விழும் என்பதையும் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்வதில் பெருமையடைகிறேன்..

மெட்ராசின் (கவனிங்க.. சென்னை இல்ல.. சோ இது கற்பனைதான.. ) முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியரின் வீடு.

"என்னதான் சொல்றான் உன்னோட பையன்?"

"அவனுக்கு கண்டிப்பா கம்ப்யூட்டர் படிக்கணுமாம்.."

"அஞ்சு வயசுலையே அவனுக்கு இவ்ளோ திமிரா? அவன என்ன பண்றேன் பாரு.."

கோபமாகக் கத்தியவரின் மனசில் மேலாளர் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

"இந்தக் கம்பெனியில வேலை பாக்குரவங்களோட பிள்ளைங்க என்ன வேணுனாலும் படிக்கலாம்.. ஆனா கம்ப்யூட்டர மட்டும் தொடக் கூடாது. ஏன்னா.. அத படிச்சுப்புட்டு, ஏதாவது ஒரு டப்பா காலேஜ்ல சேர்ந்து இஞ்சினியரிங் படிக்க வேண்டியது.. அப்புறம் வேலைக்கு சேர்ந்து ஆபிசுல வேலையைப் பார்க்காம மொக்கையா பதிவெழுதி மனுஷங்க உசிர வாங்க வேண்டியது.. வேண்டாம்டா சாமி.. அதை மீறி யாராவது புள்ளங்கள கம்ப்யூட்டர் படிக்க வச்சா.. இந்தா.. முருகா முருகானு பொலம்பிக்கிட்டே இருப்பாரே.. நம்ம டுபாக்கூர் தமிழன்.. அவரோட பதிவு அத்தனையும் ஒரே நாள்ல படிக்கனும்கிரதுதான் தண்டன.."

ஒரே நாள்ல அத்தன பதிவும்? நெனக்கும்போதே அப்பாவுக்கு கண்ணக் கட்டுது. "இவன இப்படியே விடக்கூடாது. நாளைக்கு நம்ம பாடு திண்டாட்டம் ஆகிடும். இன்னைக்கு உன்னைய பொலி போட்டுடுறேண்டா.." கோபமா எந்திரிச்சு உள்ள வாரார்.

அப்பாக்கிட்ட மாட்டினா பிரபல பதிவர் ஆகணும் அப்படிங்குற லட்சியம் என்ன ஆகுறது? சோ நம்ம ஹீரோ வீட்ட விட்டு ஓடி வரார். வந்து சேர்ற இடம்.. ஒரு பிளேடு தயாரிப்பாளரோட வீடு. வேல பார்த்துக்கிட்டு அங்கேயே வளர ஆரம்பிக்கிறார்.

ஒரு நாள் ஓனர்கிட்ட போய் சொல்றார். "எவ்வளவுதான் நான் நெஜ பிளேடு மட்டும் செஞ்சுக்கிட்டு இருக்குறது? நான் பெரியவனாகனும். பிரபல பதிவர் ஆகணும். பதிவு எழுதி பிளேடு போடணும்.அதுக்கு ஏதாவது பண்ணுங்க.."

மொறச்சு பார்க்குற ஓனர் பையனோட கையில ஒரு எலிப்பொறியத் தரார். இது எதுக்குன்னு கேப்பீங்க? பதிவு எழுத கம்ப்யூட்டர் வேணும்ல.. அதோட மவுசும் (Mouse ) வேணும்ல.. நம்ம லாஜிக் எப்பூடி?

பொறிய வச்சு எலியப் பிடிக்கிறார் நம்ம ஹீரோ. அத ஆசையா தடவிக் கொடுக்கிறார். இப்போ க்ளோசப்புல கையையும் எலியையும் காட்டுறோம். ஜூம் அவுட் பண்ணினா, நம்ம ஹீரோ வளர்ந்துட்டார்.

பதிவு எழுதணும். பல பேர மெண்டல் ஆக்கணும். வெறியோட அலையுறார் நம்ம ஹீரோ. என்ன பண்ணாலாம்னு யோசிச்சுக்கிட்டு சிஸ்டத்த நோண்டிக்கிட்டு இருக்கும்போதுதான் எதேச்சையா அந்தப் பதிவு கண்ணுல பட்டுது.

சூரத்தில் இருக்குற நக்கல் மன்னன், லேட்டஸ்ட் இலக்கியவாதி, கவிஞர் டொக்ளசொட பதிவு.

"பிரபல பதிவர் ஆக பத்து எளிய வழிகள்"

1. பேரக் கேட்டவுடனே சும்மா எல்லாரும் டர் ஆகுற மாதிரி ஒரு பேர்ல எழுத ஆரம்பிங்க. உ.ம்: டர்சிம்னு வச்சுக்கலாம். பழைய காலத்து இலக்கியத்துல எல்லாம் பாட்டா எழுதி இருக்காங்க? எல்லாம் அடாசு.. புரியாத மொழி.. மனுஷன் படிப்பானான்னு சங்க காலத்துப் புலவன எல்லாம் வம்புக்கு இழுத்தா நீங்கதான் அடுத்த "கார்ப்பரேட் வம்பர்".

2. பதிவுல கெலிக்க சினிமா ரொம்ப முக்கியம். யாரையாவது பிடிச்சு இன்டஸ்டிரியில நுழைஞ்சிடனும். அப்புறம் ஒரு நாளைக்கு நாலு படம் பார்த்து அஞ்சு விமர்சனம் எழுதணும். ஒரு டேபிள போட்டு ஹாயா உக்கார்ந்துக்கிட்டு எல்லாப் படத்தையும் பட்டி பார்த்து டிங்கர் பண்ணி கிழிச்சா நீங்கதான் "டேபிள் டிங்கர்". கூடவே "வுமன் ப்ரீயும், ரெண்டு பிட் ஷக்கீலாவும்" னு புக் கூடஎழுதலாம்.

3. எல்லார் பதிவையும் படிச்சு பின்னூட்டம் போடணும். சரக்கு பத்தி கவிதை எழுதணும். சாமி இருக்குன்னு யாராவது சொன்னா ஓடிப்போய் அவங்கள ஓட்டு ஓட்டுன்னு ஓட்டனும். மத்தவங்கள நக்கல் பண்றதுதான் என் வாழ்க்கையோட கோல்னு (Goal ) சொல்றவர்தான் கோல்பையன். நீங்க சொல்றதுதான் சரின்னு கூடவே ஒரு ராமன்அம்பிகாகுணாளனும் சேர்ந்துக்கிட்டா ஒரே மஜாதான் போங்க.

4. லக்கு, லுக்கு, டக்குன்னு காமிக்ஸ்ல வர ஒரு நல்ல கேரக்டரா பார்த்து பேர் வச்சுக்கோங்க. அவர மாதிரி ஒரு எழுத்தாளர் உண்டான்னு யாரவது ஒரு இலக்கியவாதிய தலையில தூக்கி வச்சு ஆடனும். சகட்டு மேனிக்கு எல்லாரையும் கிண்டல் பண்ணனும். யாரைப் பத்தியும் கவலைப்படாம தெனாவட்டா இருக்கணும். அதுக்கு மேலயும் யாரவது அடிக்கிறதுக்கு வந்தா, "ஓடப் பிறந்தவன்.. ஒளிய மாட்டேன்னு" ஸ்லைடு போட்டுட்டு.. எஸ்கேப் மாமு எஸ்கேப்.

5. எதை எழுதினாலும் சுவாரசியமா எழுதணும். அட்டு பிகரும் பிட்டு படமும், வீணாப்போன சாதியும் பரங்கிமலை ஜோதியும்.. இந்த மாதிரி அஜால் குஜால் மேட்டரும் எழுதணும். ஒரு ஊர்ல ஒரு முனிவர் இருந்தாராம்னு டகல்பாஜி கதையும் சொல்லணும். யாராச்சும் கேட்டா இதுதாண்டா ஜென்னு, நீ தின்னுக்கடா பன்னுன்னு உதார் விடணும். இப்போத் தெரிஞ்சிருக்குமே.. அடுத்த மிதிஷா நீங்கதான்.

6. நடிக்கவே தெரியாத ஒரு நடிகர செலக்ட் பண்ணும். இவர மாதிரி ஒருத்தர் உண்டானு எவ்வளவு அடிச்சாலும் ஸ்டிராங்கா கொடி பிடிக்கணும். அப்பப்போ குட்டிக் கதையும் எழுதணும். வீட்டு ஜன்னல் வழியா உள்ள நுழையுற காத்து மாதிரி எல்லார் மனசுலயும் இடம் பிடிக்கணும். உங்க பதிவு எல்லாம் பார்ல வச்ச தீ மாதிரி எல்லார்கிட்டயும் பரவினா, நீங்கதான் பார்த்தீ.

7. பதிவுலக நண்பர்கள் எல்லாரையும் ஒழுங்கா வழிநடத்தனும். நண்பர்களுக்கு ஒரு பிரச்சினைன்னா மொத ஆளா நிக்கணும். எதுன்னாலும் நம்ம தலைவர் இருக்காருன்னு அப்பத்தான் மக்களுக்கு ஒரு நம்பிக்கை வரும். அதனால, மத்தவங்கள பிரச்சினைல இருந்து பெயில்ல எடுத்தா, நீங்கதான் பெயிலான்.

8. குறும்படம் இயக்கலாம். கூடவே தெனமும் ஒரு பதிவாவது போடணும். இல்லைன்னா கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சுடும். இதுக்கு பதிவோபோபியான்னு பேரு. அதனால, தெனமும் எழுதுறேன்... பார்த்துக்கோ பார்த்துக்கோன்னு தண்டோரா போட்டுக்கிட்டே இருந்தோம்னா.. ஈசியா பிரபல பதிவர் ஆகிடலாம்.

9. ஒலக சினிமா பாக்குறது பதிவருக்கு அழகு. தமிழ்ல எல்லாம் படமா எடுக்குறானுங்க.. ஹங்கேரி, ஜெர்மனி, பிரான்ஸ் மாதிரி வருமான்னு சொல்லிக்கிட்டு யாருமே பாக்காத படத்தப் பத்தி பேசிக்கிட்டே இருக்கனும். கையில ஒரு காமிரோவோட நம்ம போட்டோவ எடுத்து தளத்துல போட்டுக்கிட்டோம்னா ஒரு அறிவுஜீவி லுக்கு வந்திரும். எல்லா படத்தையும் பாக்கி வைக்காம பார்த்தா நீங்கதான் "பாக்கி சேகர்".

10 . நெறைய கார்ட்டூனை எடுத்துக்கலாம். நம்ம மனசுல தோனுற கமெண்டை போடுறோம். படிக்குறவன் எல்லாம் தெறிச்சு ஓடனும். எப்படி உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் தோனுதுன்னு அவனவன் டரியல் ஆகணும். உங்ககிட்ட பேசுனா விசு கூட தோத்துருவாறு அப்படின்னு சொல்ற அளவுக்கு மக்கள் நோக விட்டா, நீங்கதான் விசும்பன்.

11. இல்லையா.. இருக்கவே இருக்கு எதிர்க்கவிதை. யாரவது கவிதை எழுதுறாங்களான்னு கண்ணு முழிச்சு பார்த்துக்கிட்டே இருக்கணும். அப்படி எழுதினவுடனே, ஓடிப்போய் எதிர்க்கவிதை எழுதணும். தண்ணி, சரக்கு, மட்டை இதெல்லாம் நடுவுல நடுவுல போட்டுக்கணும். சும்மா பறந்து பறந்து எழுதினா அதுதான் "நையாண்டி மைனா".

பதிவு பிரபலமாக இத்தன வழி இருக்கானு நம்ம ஹீரோ ஆனந்தக் கூத்தாடுறார். அப்போ ஒருத்தர் அவர்கிட்ட வந்து நீங்க இந்த வாரம் அலைச்சரம் ஆசிரியர் ஆக முடியுமான்னு கேக்குறார். அவர்தான் தீனா ஐயா.

சந்தோஷமா சமதிக்கிற நம்ம ஹீரோ அங்கயும் எழுதிக்கிட்டே தனக்குன்னு இருக்குற பதிவுல எழுத ஆரம்பிக்கிறார். அவரோட இடுகையோட தலைப்பு...

தமிழ்ப்பதிவு - இது சத்தியமா வித்தியாசமான பதிவுங்கோ..!!!

நன்றி நன்றி நன்றி

வரும் பதினாலாம் தேதியோடு நான் திரட்டிகளில் இணைந்து, ஹிட் கவுண்டர் போட்டு ஒரு வருடம் ஆகிறது. முக்கி முக்கி ஒரு லட்சம் ஹிட்ஸ்களைத் தொட்டு விட்டேன். பதிவுலக நண்பர்கள, வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.

February 8, 2010

பார்த்து சூதானமா வண்டி ஓட்டுங்கப்பூ...!!!

இந்த வருஷம் புதுசா பொறந்த சமயத்துல, சனவரி மொத வாரத்த நம்ம தமிழ்நாடு அரசு "சாலை பாதுகாப்பு வாரமா" கொண்டாடுறதா அறிவிப்பு செஞ்சாங்க.. எதுக்காக? இன்னைக்கு இருக்குற அவசர உலகத்துல, சாலை விபத்துனால தினமும் இறந்து போறவங்க எண்ணிக்கை ரொம்ப ஜாஸ்தி ஆகிக்கிட்டே போகுது.. அத கம்மி பண்ணனும்.. அப்படிங்கிறதால.. இது பத்தி தோழி "இதயப்பூக்கள்" இயற்கை ஒரு இடுகை எழுதி இருக்காங்க.. அத்தோட என்னையும் தொடரா எழுத சொல்லிக் கூப்பிட்டாங்க.. ஆனா பாருங்க நாமதான்ஒண்ணாம் நம்பர் சோம்பேறி ஆச்சே.. இந்தா அந்தான்னு ஒரு மாசம் ஆகிப் போச்சு..

ஒரு குட்டி கத.. ஒரு அம்மா சக்கர சாப்பிடுரத கம்மி பண்ணனும்னு அறிவுரை சொல்லுங்கன்னு காந்திக்கிட்ட கூட்டிக்கிட்டு வந்தாங்களாம். அதுக்கு அவரு ரெண்டு நாள் கழிச்சு கூட்டிட்டு வரச் சொன்னாராம். ஏன்னா அவருக்கு சக்கரைய ஜாஸ்தி சாப்பிடுற பழக்கம் இருந்ததாம். அத கம்மி பண்ணிக்கிட்டு மத்தவங்களுக்கு அறிவுரை சொன்னாராம். அந்தக் கதைல வர மாதிரி இப்ப இத நான் எழுதுறதுக்கு ஒரு தனிப்பட்ட காரணம் இருக்கு.. அது என்னன்னா.. போன வாரம்தான் வண்டில இருந்து விழுந்து புதையல் எடுத்தேன். இப்போ நாம சொன்னாத்தான கரெக்டா இருக்கும். நாம பட்டுத்தான் தெரிஞ்சுக்குற கூட்டம்.. பட்டாச்சு.. அதனால் பத்திரமா இருங்கன்னு மத்தவங்களுக்கு சொல்றதுக்குத்தான் இந்த இடுகை..

ராத்திரி பத்து மணி. நண்பர் ஸ்ரீதர அவங்க வீட்டுல பார்த்துட்டு நம்ம ஏரியாக்கு திரும்பி வந்துக்கிட்டு இருக்கேன். நல்ல பசி. பைபாஸ் ரோடு. ரோட ரெண்டா பிரிச்சு இருக்காங்க. அதனால் ரோட்டோட ஒரு பக்கம் ஒன் வே மாதிரிதான். அவ்வளவா டிராபிக் வேற இல்லைன்னு வண்டிய கொஞ்சம் வேகமா பத்திக்கிட்டு வரேன். திடீர்னு எங்கிருந்து வந்ததுன்னு தெரியாம ஒரு லாரி - ரோட்டுக்கு நடுவுல இருக்குற ஒடப்பு வழியா உள்ளே வந்துட்டான். நான் எதிர்பார்க்கவே இல்ல.

இப்போ எனக்கு ரெண்டே வழிதான். ஒண்ணு நேராக் கொண்டு போய் லாரி மேல மோதலாம். இல்லைன்னா வண்டிய ரோட்ட விட்டுக் கீழ இறக்கணும். இறக்கிட்டேன். புல்லா மண்ணு. சரட்டி விட்டுருச்சு. வண்டியக் கீழ போட்டுட்டு தவ்விட்டேன். இருந்தாலும் முட்டிலையும், இடுப்புலயும் செம அடி. பின்னாடி வந்தவங்க லாரிக்கரானத் திட்டிக்கிட்டு இருந்தாங்க. என்னத் திட்டி என்ன பிரயோஜனம்? நாம விழுந்தது விழுந்தது தானே..

இதுல இருந்து என்ன தெரியுது? பசின்னு பறக்காவெட்டியா வண்டி ஓட்டக் கூடாது, கார்த்திக்கு ராத்திரின்னா கண்ணு தெரியாது.. இந்த மாதிரி எகத்தாளமா பதில் சொல்லக் கூடாது.

நான் சொல்ல வந்த விஷயம்.. நீங்க என்னதான் நல்லா வண்டி ஓட்டினாலும், ஒங்கள சுத்தி இருக்குறவங்க சரியா ஓட்டலைன்னாலும் நாம ஆபத்துல மாட்டிக்கிறது வாய்ப்பு இருக்கு. அதனால எப்பவுமே வண்டியில கொஞ்சம் வேகம் கம்மியா போறது நல்லது. தப்பித்தவறி விழுந்தாக்கூட அவ்வளவா அடிபடாது.

ஹெல்மட் போடுறத எல்லோருமே ஏதோ ஒரு பாரமா நினைக்கிறோம். (நானும்தான்..) அது தப்பு. விபத்தப்போ தலைல அடிபடுறதால தான் பல உயிரிழப்பு நேரிடுது. அந்த சமயத்துல தலைக்கவசம்தான் நம்ம உயிரக் காப்பாத்தும். சோ.. ஹெல்மட் முக்கியம்.

கோட்டுக்கு முன்னாடி நிக்கிறதுதான ரூல். அதை மதிப்போம். அதோட சிக்னல்களை மதிக்கப் பழகிக்குவோம். சிவப்பு போட்டதுக்கு அப்புறமும் போறது, பச்சை விழுறதுக்கு முன்னாடியே அவசர அவசரமா ஓடுறது.. இதெல்லாம் வேண்டாமே..

ஒரு கணவன் மனைவி வண்டில போய்க்கிட்டு இருந்தப்போ, மொபைல்ல பேசுறேன்னு குப்பை வண்டில விட்டு, மொத்தமா போய் சேர்ந்த கதை எல்லாம் இருக்கு. நானே பார்த்து இருக்கேன். அதனால, தயவு செஞ்சு வண்டில போகும்போது அலைபேசிய பயன்படுத்தாதீங்க.

குடும்பத்தோட ரொம்ப தூரம் போறதுக்கு பைக்க பயன்படுத்தாதீங்க. இன்னைக்கு காலைல காலேஜுக்கு வரப்ப பார்த்தேன். வீட்டுக்காரர் வண்டி ஓட்டுறார். முன்னாடி ஒரு பெரிய பேக். பின்னாடி வீட்டுக்காரம்மா. கையில ஒரு குட்டிக் குழந்த. நடுவுல சின்னப் பையன் வேற. இது போதாதுன்னு வண்டியோட பின்பக்கம் ஒரு பெரிய பைய வேறக் கட்டி வச்சிருந்தாங்க. அது என்ன வண்டியா இல்ல லோடு லாரியா? சின்ன பிசகு ஆனாக்கூட என்ன ஆகும்? இதை எல்லாம் யோசிக்கணும்.

கடைசியா மாணவர்கள். வேகம், ட்ரிபிள்ஸ்.. எல்லாமே த்ரில்லாத்தான் இருக்கும். ஆனா அதுல இருக்குற ரிஸ்கையும் மனசுல வச்சுக்கணும். ஏன்னா, மனுச உசிரு விலை மதிப்பில்லாதது. உங்க அப்பா, அம்மா உங்க மேல வச்சிருக்கிற நம்பிக்கைகளை காப்பாத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கு. எல்லாத்துக்கும் மேல, நீங்க தான் இந்த நாட்டின் வருங்காலத் தூண்கள். அத மனசுல நினைச்சுக்கிட்டுவண்டியத் தொடுங்க.

இதுல சொல்லி இருக்குற விஷயங்கள் உங்களுக்கு மட்டுமில்ல, எனக்கும் சேர்த்துத்தான். பார்த்து சூதானமா வண்டி ஓட்டுவோம். பத்திரமா இருப்போம். சரிதானுங்களே நான் சொல்றது?

( இந்த வாரம் வலைச்சரத்துலையும் எழுதுறேன்.. அங்கயும் உங்களோட ஆதரவை எதிர்பார்க்கிறேன் நண்பர்களே.. )

February 5, 2010

அசல் - திரைப்பார்வை..!!!


ஏகனின் ஏமாற்றத்துக்குப் பின் வரும் "தல"யின் 49 ஆவது படம். சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு. அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்தை டைட்டிலில் போடவில்லை. அசலில் முதல் முறையாக அஜித் திரைக்குப் பின்னே படத்துக்காக பங்களிப்பு செய்து இருக்கிறார். கதை, திரைக்கதை வசனத்தில் உதவி என்றும் இணை இயக்கம் என்றும் போடுகிறார்கள்.

நினைத்ததை முடிக்கும் ஒரு சூப்பர் ஹீரோவின் கதைதான். நியாயமான ஆயுத விற்பனையாளர் அப்பா அஜித். அவருடைய மூத்த தாரத்து மகன்கள் சம்பத் மற்றும் ராஜீவ் கிருஷ்ணா. அவர்களின் மாமா பிரதீப் ராவத். இளைய தாரத்தின் மகனான இன்னொரு அஜித் மீதுதான் அப்பாவுக்கு பாசம். அப்பா இறந்த பிறகு தவறான வழியில் பணம் சேர்க்க நினைக்கும் சகோதரர்களை அஜித் காப்பாற்ற முயல, அவர்களோ அஜித்தையே கொல்ல நினைக்கிறார்கள். ஏன் அவர்கள் அப்படி செய்தார்கள், கடைசியில் என்ன ஆனது என்பதுதான் "அசல்".

திரைக்கு முன்
****************

அஜித் - தனக்கு நன்றாக வருவதை மட்டும் செய்வதை தலயிடம் ரசிக்கலாம்.. இரட்டை வேடம்.. இருந்தாலும் அப்பாவுக்கு வேற யாரையாவது போட்டிருக்கலாம்.. இன்னும் பில்லாவில் இருந்து வெளியே வரவில்லை... நடிக்கிறார்.. பிறகு நன்றாக நடக்கிறார்.. சுருட்டு எதுக்கு என்றுதான் தெரியவில்லை.. பஞ்ச் டயலாக் எதுவும் பேசாதது ஆறுதல்..



கெல்லி டோர்ஜி - ஸ்மார்ட்டான வில்லன்.. பாதியிலேயே அவுட்..

சம்பத் - கெரகம்.. சுத்த வேஸ்ட்..

ராஜீவ் கிருஷ்ணா - சைக்கோ மாதிரி .. இது தேவையா?

பிரதீப் ராவத் - இவர் படத்துல எதுக்கு இருக்காருன்னு அவருக்கே தெரியாது போல..

சுரேஷ் - வில்லன்களில் ஒரே ஆறுதல்.. கொஞ்சம் சீரியஸ்.... நிறையவே காமெடி.. அதிலும் கடைசி சீனில் திருந்துவது மிகப்பெரிய காமெடி..

பிரபு - படத்துல இருக்காரா?

யூகி சேது - லூசு டான்... படத்தோட காமெடி பீசு..

பாவனா - கொள்ளை அழகு.. பாலிஷ் போட்ட மாதிரி சும்மா சூப்பரா இருக்கார்.. சீராக இல்லாத பல்வரிசையோடு சிரிக்கும் ஓரச் சிரிப்பில் பாண்டியன் காலி...

சமீரா - கொஞ்சம் வயசான குதிரை.. ரெண்டு பாட்டுல டான்ஸ் ஆடுறதுக்கு மட்டுமே..



திரைக்குப் பின்
*****************

பிரசாந்த் டி மிசேல் - ஒளிப்பதிவாளர் - ஜமாய்த்து இருக்கிறார்.. டைட்டில் போடும்போது வான்வழியே பாரிஸ் நகரை சுட்டிருக்கும் அழகு மனதை கொள்ளை கொள்ளுகிறது.. வெளிநாடுகளை படமாக்கி இருக்கும் விதம் அருமை.. படத்தின் ரிச் லுக்குக்கு மிக முக்கிய காரணம் இவர்தான்.. ரொம்பவே நன்றாக செய்திருக்கிறார்..

ஆண்டனி - எடிட்டிங் - மொத்தப் படமும் ரெண்டே மணி நேரம்தான்.. முதல் பாதி கொஞ்சம் இழுவை.. இரண்டாம் பாதி ஓகே..

பரத்வாஜ் - இசை - ஐம்பதாவது படமாம்.. கிடைத்த வாய்ப்பை தவற விட்டுருக்கிறார்.. நிறைய காப்பி.. டோட்டடாயிங் பாட்டைத் தவிர எதுவும் தேறவில்லை.. பின்னணியில் பான்ட் இசையை போட்டுக் கொலையாய்க் கொல்லுகிறார்..

கதை - யூகி சேது - வில்லனில் செதுக்கியவர் இதில் சறுக்கி இருக்கிறார்.. நிறையவே பார்த்து சலித்துப் போன கதை.. வெளிநாட்டில் நடக்கும லோக்கல் வாரிசுப் பிரச்சினை - புதிதாக ஒன்றுமே இல்லை..

சரண் - திரைக்கதை, இயக்கம் - ஏன் சரண்? டான் கதை.. அதுக்கு ஸ்டைலான முலாம் போட்டால் போதுமா? திரைக்கதையில் வேகம் வேண்டாமா? அஜித் என்ற மாஸ் நடிகர் இருந்தால் என்ன வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று எண்ணியதன் விளைவா? சின்ன சின்ன ரசனையான விஷயங்கள் வழக்கமாக உங்கள் படங்களில் இருக்கும்.. இதில் அப்படி எதுவுமே இல்லையே? நிறையவே ஏமாற்றம்..

படத்தில் ரசித்த விஷயங்கள்
********************************


--> அஜித்தின் வெகு சாதரணமான இன்ட்ரோ.. ஸ்டைல்

--> பாவனா தன்னுடைய அப்பாவின் புத்தகத்தை அடிக்கடி திறந்து பார்க்கும் அழகு

--> அஜீத்துக்காக பாவனாவும் சமீராவும் உரசிக் கொள்ளும் காட்சி..

--> சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கும் விதம்..

--> உடை அலங்காரம்..

எரிச்சல்கள்
*************

--> சம்பத் மற்றும் பிரதீப் ராவத்..

--> அடிக்கடி எல்லோரும் தல தல என்றே புலம்பிக் கொண்டிருப்பது..

--> திரைக்கதை.. மெது மெதுவாக நகரும் காட்சிகள்..

நான் அஜித் ரசிகன்தான். அதற்காக என்ன மாதிரி படம் எடுத்தாலும் சூப்பர் என்று சொல்லக் கூடியவன் கிடையாது. நல்ல படமாகத் தருவார் என்று நம்பும் என்னைப் போன்ற அஜித்தின் தீவிர ரசிகர்களுக்கு படம் கொஞ்சம் ஏமாற்றம்தான். ரொம்ப எதிர்பார்க்காமல் போனால் ஒரு சராசரி படம் பார்த்த திருப்தி கிடைக்கும்.

அச(த்த)ல் கம்மிதான்

இனிதே நடந்த பதிவர் பயிலரங்கம்..!!!!

மதுரை அமெரிக்கன் கல்லூரி செமினார் ஹாலில் கடந்த வெள்ளியன்று (29/01/2010) மாணவர்களுக்கான பதிவர் பயிலரங்கு சிறப்பாக நடந்தது. பதிவரும், அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் பேராசிரியருமான தருமி ஐயா தலைமையில் நடைபெற்ற பயிலரங்கில் பதிவுலக நண்பர்கள் பலரும் கலந்து கொண்டோம்.

நிகழ்வின் சில துளிகள், நினைவிலிருந்து...

நண்பரும் தலைமை ஆசிரியருமான ஜெரி ஈஷானந்தா, ஈழத்திற்காக உயிராயுதம் ஏந்திய முத்துக்குமார் பற்றி நினைவு கூர்ந்தார். இந்த நிகழ்வு தான், தான் பதிவு எழுத முக்கிய காரணமாக இருந்ததையும் நெகிழ்வுடன் குறிப்பிட்டார். தனது கல்லூரி பருவத்தில் இருந்த வாசிக்கும் ஆர்வம், இப்போது வலைப்பதிவுகள் படிப்பது மூலம், வெகுவாக அதிகரித்திருப்பதாக சொன்னார். மாணவர்கள் பொதுநல நோக்கோடு சமுதாயத்தை அணுக பதிவுகள் முதற்படியாக அமையலாம் என்றார்.

அவர் குறிப்பிட்ட தடுப்புமுகாம் கவிதைகளிலிருந்து சில வரிகள்...

புதைகுழி மறந்த
சதைபிண்டங்களிநூடே
ஊர்ந்து ...நெளியுது
மானுடம்.

வலைச்சரம் சீனா ஐயா குழுப்பதிவுகள் பற்றிக் கூறினார். ஒத்த கருத்துடைய நண்பர்கள் பொதுவான தளத்தில் புகுந்து விளையாட முடியும் என்றும், உதாரணமாக, வருத்தபடாத வாலிபர் சங்கம், பயமறியா பாவைகள் சங்கம், வலைச்சரம், பேரண்ட்ஸ் க்ளப் இன்னும் பல குழுப்பதிவுகள் பற்றியும், அவற்றை உருவாக்குவது பற்றியும், நண்பர்களை உறுப்பினர்களாக இணைப்பது பற்றியும் சில தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வழங்கினார்.

ஐயா பதிவுலகை கலக்கும் "எதிர் கவிதைகள்" பற்றி சொல்லிக் கொண்டிருக்க, கணினியை இயக்கிக் கொண்டிருந்த கார்த்திகைப் பாண்டியன், ஒரு கவிதையையும், அதற்கான எதிர்கவிதையையும் திரையில் காட்ட, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சீனா ஐயாவை இரு கவிதைகளையும் மைக்கில் வாசிக்குமாறு பணிக்க, அவர் கவிதைகளை வாசிக்க, ஐயோ கவிதையா, கலவரம் எதும் வெடிக்கப் போகுதோ என் நான் நினைக்கும் போதே.... நல்ல வேளை, மாணவர்கள் சிரித்துக் கொண்டே கவுஜைகளை கடந்து விட்டனர்.

நண்பர் ஸ்ரீ புதிதாக வலைப்பதிவு ஆரம்பிப்பது எப்படி என செயல்முறை விளக்கங்களுடன் செய்து காட்டினார். ஜிமெயில் ஐ.டி. உருவாக்குவதிலிருந்து, ப்ளாகருக்குள் நுழைவது, கெஜ்செட் சேர்ப்பது, இன்னும் பல தொழில்நுட்ப விஷயங்களை எளிமையாக விளக்கினார். மாணவர்கள் கவனித்தார்களா தெரியவில்லை, கலந்து கொண்ட ஆசிரியர்கள் எல்லாம் ரொம்ப ஆர்வமா குறிப்பு எடுத்துட்டு இருந்தாங்க. அமெரிக்கன் கல்லூரி, விஷ்வல் கம்யூனிகேசன்(தமிழில் என்ன?) துறைக்காக http://viscom-ac.blogspot.com/ என்ற வலைப்பூவும் துவங்கப்பட்டது.

நண்பர் கார்த்திகைப் பாண்டியன் நிகழ்ச்சி முழுமைக்கும் தேவையான, பொருத்தமான ஸ்லைடுகளை கணினியில் இயக்கினார். மேலும் பதிவுலகில் இலக்கியம், நட்பு (தனிதனியா தான், ரெண்டும் சேராதுன்னு பெரியவங்க சொல்லிக்கிறாங்க) பற்றி பேசினார். இலக்கிய மும்மூர்த்திகள் (என்று யாரோ மூன்று பேர் பெயர்கள் சொனார், எனக்கு மனதில் பதியவில்லை) பதிவுலகில் சுறுசுறுப்பாக எழுதுவதாக பேசினார். பதிவுலகில் நீங்கள் காட்டும் உழைப்பு (அதாவது, எழுதுவதில் காட்டும் உழைப்பு) உங்களுக்கு நன்மதிப்பையும், நல்லவேலையும் கூட பெற்றுத்தரும் என்றும் சொன்னார். எழுத்து என்பதையும் தாண்டி பதிவுலகம் மூலம் நடைபெறும் ஆக்கப்பூர்வமான நிகழ்வுகள் பற்றி அருமையாக பேசினார்.

வெறும் ஒத்த கருத்துடைய நன்பர்களுக்குள் நடக்கும் அரட்டை மட்டுமல்ல, இந்த நட்பு மூலமாக சமுதாயத்தில் ஒரு சிறு மாற்றமாவது கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை மாணவர்களுக்கு எளிமையாக விளக்கினார். இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் சொல்லித் தெரிய வைக்க முடியாது, உள்ளிருந்து தான் வர வேண்டுமென்றாலும் ஏற்கனவே ஆர்வமுள்ளவர்களுக்கு கார்த்தியின் பேச்சு ஒரு தூண்டுகோலாக இருந்திருக்கும். முக்கியமாக ஒரு வாத்தியார்த்தனம் இல்லாமல், நண்பர்களிடம் பேசுவது போலவே இயல்பாகவே பேசினார்.

பாலகுமார், என்னென்ன வகையில் பதிவுகள் இருக்கின்றன் என்றும், என்னென்ன வகையிலும் பதிவுகள் இருக்கலாம் என்றும், பதிவில் என்னென்ன செய்யலாம் என்றும், பதிவில் என்னென்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றும், யாராரெல்லாம் பதிவு எழுதுகிறார்கள் என்றும், யாரார் வேண்டுமானாலும் பதிவு எழுதலாம் என்றும் எளிமையாக (????) சொல்லிவிட்டு அமர்ந்தார்.

நிகழ்ச்சியை துவக்கி வைத்து, தருமி ஐயா பதிவுலகம் பற்றி விரிவான விளக்கமும், துவக்கவுரையும் (பவர் பாயிண்ட் ப்ரசண்டேசன் வாயிலாக) தந்ததாக நண்பர்கள் சொன்னார்கள். வேறு ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு தாமதமாக வந்ததால், நான் அவரின் உரையைத் தவற விட்டு விட்டேன்.

இறுதியாக, காட்சி ஊடகத்துறையின் தலைவர், பேரசிரியர் ப்ரபாகர் பேசும் போது, பதிவுலகம் மிகச்சிறந்த மாற்று ஊடகமாக இருக்கும் என்றும், வந்தவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.

மொத்தத்தில் நிறைவான நிகழ்ச்சியாக இருந்தது. இன்னும் நேரம் கிடைத்திருந்தால், நண்பர்கள் வலைப்பூக்களை திறந்து வைத்து, மாண்வர்களிடம் ஒரு திறனாய்வு நடத்தியிருக்கலாம், மாணவர்களும் (ஊடகத்துறை சார்ந்தவர்கள் என்பதாலோ, இல்லை ரொம்ப பீட்டர் இல்லாமல் நிகழ்ச்சி எளிமையாக சென்றதாலோ) மிகவும் ஆர்வமாகவே கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் பங்கெடுக்க வாய்ப்பளித்த தருமி ஐயாவிற்கு நன்றிகள்.

புகைப்படங்களைப் பார்க்க இங்கே கிளிக்குங்கள்..

இந்த இடுகை நண்பர் பாலகுமார் எழுதியது.. என்னுடைய தளத்தில் அதனை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்ததற்கு அவருக்கு என் நன்றிகள்...

February 3, 2010

கனவு நிஜமானது - டாக்டர் ஷாலினிக்கு நன்றி..!!!

சந்தோஷமாக இருக்கிறேன் என்னும் ஒற்றை வார்த்தையின் மூலம் என்னுடைய உள்ளத்தின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த இயலாது. அத்தனை சந்தோஷமாக உணர்கிறேன். மதுரையில் "குழந்தைகள் மனநலம்" பற்றிய கருத்தரங்கத்தை டாக்டர்.ஷாலினியின் தலைமையில் நடத்த வேண்டும் என்பது மதுரைப் பதிவர்கள் வெகு நாட்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்த விஷயம். அதை ஒரு கனவு என்று கூட சொல்லலாம். சென்ற ஞாயிற்றுக்கிழமை அந்தக் கனவு நிஜமானது.



செப்டம்பரின் ஒரு அருமையான மாலைப்பொழுதில் இந்த நிகழ்ச்சிக்கான விதை தூவப்பட்டது. சமூகத்துக்கு நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று மதுரை பதிவுலக நண்பர்கள் ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், ஜெர்மனியில் இருந்து நண்பர் குமார் எங்களைத் தொடர்பு கொண்டார். சென்னையில் நடைபெற்ற "குட் டச் பேட் டச்" நிகழ்ச்சியை மதுரையில் நடத்தலாம் என முடிவானது. ஆனால் டாக்டர்.ஷாலினியின் தேதிகள் கிடைப்பது சிக்கலாகிப் போனது. முதல் முறையாக நாம் நடத்தலாம் என முடிவு செய்த விஷயம் என்பதால் அதை மாற்றவும் மனம் வரவில்லை. நல்லதே நினைப்போம், நல்லது நடக்கும்" என்னும் நம்பிக்கையோடு பொறுமை காத்தோம். எங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. கடைசியாக ஜனவரி31 அன்று நிகழ்ச்சியை நடத்துவதென முடிவானது.

31-01-10 - 7:00 AM

"பொதிகையில்" டாக்டர்.ஷாலினி வந்து இறங்கினார். தருமி ஐயாவும், நண்பர் ஸ்ரீதரும் அவரை வரவேற்று அமெரிக்கன் கல்லூரிக்கு அழைத்து சென்றனர். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நான் புகைவண்டி நிலையத்துக்குப் போக இயலவில்லை. கருத்தரங்கம் நடத்துவதற்காக செமினார் ஹாலைத் தந்து உதவிய அமெரிக்கன் கல்லூரி நிர்வாகமே டாக்டர் தங்குவதற்காக விருந்தினர் விடுதியையும் ஏற்பாடு செய்து தந்து இருந்தது. சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு காலை சிற்றுண்டிக்கு எல்லோரும் சந்திப்பது என முடிவானது.



9:00 AM

நான் அமெரிக்கன் கல்லூரியை அடைந்தபோது தருமி ஐயா ஏற்கனவே வந்திருந்தார். டாக்டரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். போனில் அவரின் குரலைக் கேட்டு கொஞ்சம் டரியலாகிப் போயிருந்தேன். ஆள் கொஞ்சம் கெத்து காமிப்பார் போல என்று எண்ணியிருந்தேன். ஆனால் நேரில் என்னுடைய கணிப்புக்கு அப்படியே எதிர்ப்பதமாக இருந்தார் ஷாலினி. ரொம்பவே சாப்ட் டைப் - எளிமை. கலகலப்பாக பேசினார். கொஞ்ச நேரத்தில் ஸ்ரீதரும் வந்து சேர்ந்தார். மீனாட்சி பவனில் காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டு திருமலை மன்னரின் அரண்மனைக்கு கிளம்பினோம். அங்கே எடுத்த சில போட்டோக்கள்..






11:00 AM

டாக்டரை மீண்டும் விடுதியில் தங்க வைத்து விட்டு கல்லூரிக்கு திரும்பினோம். கல்லூரி வாசலில் கட்ட வேண்டிய பிளக்சை பிரகஸ்பதி வழக்கம் போல வீட்டில் மறந்து வைத்து விட்டு வந்திருந்தது. (வேற யாரு.. நானேதான்..) அவசர அவசரமாக வீட்டுக்குப் போய் எடுத்துக் கொண்டு கிளம்பும்போது நண்பர் ஜாபர் ஈரோட்டில் இருந்து வந்து விட்டதாக அலைபேசினார். அவரை கூப்பிட்டுக் கொண்டு கல்லூரிக்கு வந்து சேர்ந்தபோது நண்பர் வால்பையனும் வந்து விட்டிருந்தார்.

2:00 PM

மதிய உணவுக்கு அண்ணா நகர் தாய் ரெஸ்டாரண்டுக்குப் போனோம். எங்களுக்குள் பேசுவதற்கான விஷயங்கள் நிறையவே இருந்தன. ஷாலினி இப்பொது சமண மதம் பற்றி ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறாராம். அதைப்பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சி நடக்கும் ஹாலில் ஓரளவுக்கு மக்கள் கூட்டம் வந்த பிறகு டாக்டரை அழைத்து வரலாம் என முடிவு செய்தோம். சாப்பிட்டுமுடித்து அவரை விடுதியில் விட்டுவிட்டு செமினார் ஹாலுக்கு கிளம்பினோம்.

3:00 PM

அதை அதிர்ச்சி என்று சொல்லுவதா இல்லை பேரதிர்ச்சி என்று சொல்லுவதா? ஹாலில் மொத்தம் மூன்றே பேர்தான் இருந்தார்கள். சீனா ஐயா, ஜெரி மற்றும் அமெரிக்கன் கல்லூரியை சேர்ந்த நண்பரொருவர். எனக்கு பேச்சே வரவில்லை. என்ன செய்வதென்றும் தெரியவில்லை. கிட்டத்தட்ட நூறு பேர் வருவார்கள் என்றெண்ணிக் கொண்டிருந்த நிலையில் வெறும் மூன்று பேர் மட்டும் இருந்தால் மண்டை காயுமா காயாதா? நானும் நம்பர் ஜாபரும் நிறைய பதட்டத்துடன் கல்லூரி வாசலில் வந்து நின்று கொண்டிருந்தோம். வருவோர் போவோர் முகத்தை எல்லாம் பார்த்து இவர்கள் நம் நிகழ்ச்சிக்கு வந்தவர்களாக இருப்பர்களோ என்று அடித்துக் கொண்டது மனது. சற்று நேரம் கழித்து ஒன்றிரண்டு பேர் என ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் வரத் துவங்கியபின்தான் நிம்மதி ஆனது.

3:30 PM

அரங்கத்தில் ஐம்பது பேர் கிட்டே இருந்த நிலையில் நிகழ்ச்சி ஆரம்பமானது. சீனா ஐயா நிகழ்ச்சியை ஆரம்பித்து வைக்க, கா.பா.. அட நான்தானப்பா.. வரவேற்புரை வழங்கினார். குழந்தைகள் மனநலம், பெண்களின் அடிப்படை உடற்கூறுகள், குட் டச் பேட் டச் எனப் பல விஷயங்களை பற்றி எளிமையாக விளக்கினார் ஷாலினி. தவறுகளை செய்பவர்களை விட இடம்கொடுப்பவர்கள் அதிகமாக இருப்பதாலேயே பிரச்சினைகள் ஜாஸ்தி ஏற்படுகின்றன என்றவர் பல எடுத்துக்காட்டுகளையும் கூறினார். குழந்தைகளுக்கு உடல் உறுப்புகளைப் பற்றி சொல்லிக் கொடுக்கும்போது ஜனன உறுப்புகளைப் பற்றியும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசி முடித்தார். அவர் முடிக்கும்போது அரங்கம் பார்வையாளர்களால் நிரம்பி விட்டிருந்தது.




5:00 PM

ஒரு சிறிய தேநீர் இடைவேளைக்குப் பிறகு கேள்வி நேரம் தொடங்கியது. நேரில் கேட்க சங்கோஜமாக இருக்கக்கூடிய கேள்விகளை மக்கள் எழுதித் தந்தார்கள். அதை நண்பர் காவேரிகணேஷ் வாசிக்க டாக்டர் பதில் சொல்லத் தொடங்கினார். இங்கே ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். ஷாலினி நல்லதொரு மனநல மருத்துவர் என்பதோடு மட்டுமல்லாது இதிகாசங்களையும் கரைத்துக் குடித்தவராக இருக்கிறார். தனக்கு தேவையான இடங்களில் அருமையான உதாரணங்களோடு அவர் இதிகாசக் கதைகளை சொன்ன விதம் ரொம்பவே அருமை.




குழந்தைகள் மனநலம் மட்டும் என்றிராமல் நிறைய பொதுவான கேள்விகளும் கேட்கப்பட்டன. அனைத்துக்கும் டாக்டர் சலிக்காமல் பதில் சொன்னார். இந்தக் கேள்வி பதில் நேரமே சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது. அதன் பின்னர் ஆண்கள் எல்லாம் ஹாலை விட்டு வெளியேறி விட, பெண்கள் மட்டும் டாக்டருடன் தனிப்பட்ட முறையில் ஒரு அரை மணி நேரம் உரையாடினார்கள். மொத்தத்தில் நிகழ்ச்சி இனிதே நடந்து முடிந்தபோது மணிஏழரையைத் தாண்டி விட்டிருந்தது.




நாலு மணி நேரம். ஒரு சின்ன சலிப்பு கூட இல்லாமல் நிகழ்ச்சியை நடத்தினார் ஷாலினி. அருமையாக இருந்தது. நிகழ்ச்சியின் முடிவில் வால்பையனும், காரைக்குடியில் இருந்து வந்திருந்த நண்பர் "தமிழ்த்துளி" தேவன்மாயமும் டாக்டர்.ஷாலினிக்கு ஒரு நினைவுப் பரிசினை அளித்தார்கள். தருமி ஐயா நன்றியுரை ஆற்றினார். பதிவர்கள் அனைவரும் டாக்டருடன் போட்டோ எடுத்துக் கொண்டோம். இன்னும் சில புகைப்படங்கள் உங்களுக்காக..







இரவு உணவை முடித்துக் கொண்டு புகைவண்டி நிலையத்துக்கு வந்து சேர்ந்தோம். டாக்டருக்காக "பாண்டியனில்" டிக்கட் புக் செய்யப்பட்டு இருந்தது. திருநெல்வேலி லக்ஷ்மி விலாசின் ஸ்பெஷல் இனிப்புகளை டாக்டருக்கு வாங்கிக் கொடுத்து வழியனுப்பி வைத்தோம். அவர் கிளம்பிய பின்பு தருமி ஐயா சொன்ன வார்த்தைகள் ... "நல்லாத் தெரிஞ்ச நண்பர் ஒருத்தரோடப் பழகுன மாதிரியே இருந்தது.. போகுரப்ப மனசுக்கு சங்கடமாப் போச்சு..இல்ல?" சத்தியமான வார்த்தைகள். It was an wonderful experience. Thanks a lot Dr.Shalini.

நன்றிகள் பல..

நன்றி என்று சொல்லி உங்களை எல்லாம் அந்நியப்படுத்த விரும்பவில்லை.. இருந்தாலும்..

கடைசி நேர அவசரத்தில் டிக்கட் எடுக்கவும், அதை கன்பார்ம் செய்து கொடுக்கவும் பேருதவி செய்த அண்ணன் "வானம்பாடிகள்" பாலாவுக்கு ரொம்ப நன்றி.

பதிவுகளின் மூலம் இந்த நிகழ்ச்சி இன்னும் பலர் சென்றடைய உதவிய கேபிள் சங்கர், ராஜூ, ஈரோடு கதிர், நர்சிம், ஈரோடு பதிவர் குழுமம் ஆகியோருக்கு மதுரைப் பதிவர்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களுக்காக சிரமம் பார்க்காமல் வந்த நண்பர் வெயிலானுக்கும் நன்றி.

நாங்களும் எங்கள் பங்களிப்பை செய்வோம் என்று உதவிய நண்பர்கள் ஆ.ஞானசேகரனுக்கும், வால்பையனுக்கும், ராஜாவுக்கும், அமெரிக்கன் கல்லூரியை சேர்ந்த ரவிக்கும் நன்றி.

நிகழ்வை நல்ல முறையில் நடத்த தோள்கொடுத்த அமெரிக்கன் கல்லூரிக்கும் நன்றி.

இறுதியாக, கலந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும்.. நீங்கள் இல்லை என்றால் இது சாத்தியம் ஆகி இருக்காது. ரொம்ப நன்றி.

மதுரைப் பதிவர்கள்

இந்த நிகழ்ச்சியின் மூலம் புதிதாக சில மதுரைப் பதிவர்களின் அறிமுகமும் கிடைத்தது.

மதுரை சரவணன்

வெற்றி

காவேரிகணேஷ்

எம்.பிரபு

ஸ்ரீவித்யா

அன்போடு வழிநடத்தும் தருமி ஐயா மற்றும் சீனா ஐயா, தோள் கொடுக்கும் தோழர்கள் பாலகுமார், ஜெரி, ஸ்ரீதர், ஜாலிஜம்பர், சுந்தர்... அருமையான பதிவுலக நட்புகள்... நாமும் நம்மால் இயன்றதை செய்ய முடிகிறதே என்று சந்தோசம்... போதும்.

நாங்கள் ஏற்கனவே சொன்னது போல இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும் என்றே நம்புகிறோம்..!!!

தொடர்புடைய நண்பர்களின் இடுகைகள்

மருத்துவர் ஷாலினி மதுரை கருத்தரங்கம் - தொகுப்பு - புகைப்படங்கள் (காவேரிகணேஷ்)

மதுரை கருத்தரங்கம் - ஒரு அரைகுறைப் பார்வை
(வெற்றி)

டாக்டர் ஷாலினி (தேவன்மாயம்)

February 1, 2010

தமிழ்ப்படம் - ஒரு டுபாங்கோ பார்வை...!!!

எனக்கே நல்லாத் தெரியும்.. நா ரொம்ப லேட்டா வண்டில ஏறுறேன்னு... படம் ரிலீஸ் ஆகி மூணு நாள் ஆச்சு.. எல்லா பதிவரும் கைவலிக்க கால்வலிக்க படத்த பத்தி எழுதியாச்சு.. ஆனா என்ன பண்ண? தமிழ்ப்படம் பத்தி எழுதாத காரணத்துல பதிவுலகத்துல இருக்கற ஆரும் என்னோட அன்னந்தண்ணி பொழங்கக் கூடாது.. அதாவது பதிவ வாசிக்கக் கூடாது, கமென்ட் போடக் கூடாதுன்னு நாட்டாம தீர்ப்பு சொல்லிட்டா... ? கடமைன்னு வந்துட்டா கட் அண்ட் ரைட்டா சும்மா கன் மாதிரி இருப்போம்ல.. அதனால.. கெட் செட்.. ரெடி..கோ...



***************

செந்தில் : அண்ணே.. தமிழ்ப்படம் பார்த்துட்டீங்களா அண்ணே?

கவுண்டமணி : ஏண்டா டபரா தலையா.. என்னப் பார்த்தா கிண்டலா இருக்கா? தமிழ்நாட்டுல இருந்துக்கிட்டு தமிழ்ப்படம் பார்க்காம நான் என்ன ஹிந்தி படமும் இங்கிலிபீசு படமா பார்க்கப் போறேன்? அப்படியே பார்த்தாலும் அந்தக் கெரகம் எனக்கு என்ன புரியவா போகுது? ஓங்கி எத்தினேன்னு வையி.. நாலு நாளைக்கு எந்திரிக்க மாட்ட...

செந்தில் : ஐயோ அண்ணே.. நான் அந்த அர்த்தத்துல கேக்கல அண்ணே.. புதுசா ஒரு படம் வந்திருக்குல .. இந்த மிர்ச்சி சிவா நடிச்சது.. தமிழ்ப்படம்.. அதப் பத்திக் கேட்டேன்..

கவுண்டமணி :அப்படித் தெளிவா சொல்லுடா அண்டா வாயா.. பார்த்துட்டேன்.. இப்போ என்ன அதுக்கு?

செந்தில் : அந்தப் படத்தோட கத என்ன அண்ணே?

கவுண்டமணி : அப்படிக் கேளுடா.. இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்னு சொல்றது.. தமிழ்ப்படத்தோட கத என்னன்னா.. கிராமத்துல பொறந்த ஹீரோ எப்படி சிட்டிக்கு வந்து ஒரு அகில ஒலக சூப்பர் ஸ்டாரா.. அதாவது என்ன மாதிரி.. அநியாயத்த தட்டிக் கேக்குற வைஸ் கேப்டனா.. எதிரிகளைக் களை எடுக்குற அண்டர்வேர் ஆபிசரா.. ச்சே.... அண்டர்கவர் ஆபிசரா ஆகுறார்.. அப்படிங்கறதுதான்.. நடுவுல காதல்.. தொலஞ்சு போன குடும்பத்தோட பாட்டுப் பாடி ஒண்ணு சேருறது.. மூஞ்சே காட்டாத வில்லன்னு பல பிட்டுகள ஒண்ணாப் போட்டுக் குலுக்கினா.. சுடச்சுட "தமிழ்ப்படம்" ரெடி..

செந்தில் : ஐயயையையையோ...

கவுண்டமணி : டேய்.. முண்டா முழியா.. என்னடா ஆச்சு?

செந்தில் : பயப்புடாதீங்க அண்ணே.. கதையைக் கேக்குறப்பவே அப்படியே சிலிர்க்குதுன்னே..

கவுண்டமணி : பார்த்துடா.. ரொம்ப சிலிர்த்து கடைசில உன்னைய வேற ஏதாவது ஆஸ்பத்திரில கொண்டு போய் விட்டுர பாருங்க.. எதுக்கும் நீ கொஞ்சம் எட்டத் தள்ளியே இரு நாயே.. அப்புறம் உன்னோட சேர்த்து என்னையும் தூக்கிட்டுப் போகிடப் போறாய்ங்க..





***************

விஜய் : ஏம்ப்பா? படத்துல இந்த சிவாவோட நடிப்பு எப்படி இருக்கு?

அஜித் : என்னது.. தமிழ்ப்படத்துல நடிச்சு இருக்குறது சிவாவா? நீங்க இல்லையா? ஹி ஹி ஹி.. நான் என்னமோ நீங்கதான் கெட்டப் மாத்தி நடிச்சு இருக்கீங்கன்னு நினச்சேன்.. ஏன்னா கதை கிட்டத்தட்ட உங்க படத்தோடது மாதிரி இருந்தது...

விஜய் : ஆனாலும் ஒனக்கு ரொம்ப ஓவருதான்.. சரி சரி.. சிவாவப் பத்தி சொல்லு..

அஜித் : என்னத்தச் சொல்றது.. உண்மையில பயமா இருக்கு.. நீ நான்லாம் சும்மா.. அலட்டிக்காம நடிச்சு இருக்காப்புடி.. அவர் பேசுறத வேற ஒரு மார்க்கமா இருக்கு.. காதலன் பிரபுதேவா மாதிரி ஒரு டான்ஸ் ஆடுறாரு பாரு.. நீயெல்லாம் இனிமேல் டான்ஸ் பத்தி பேசவே கூடாது..ஓமகசியா பாட்டுல உணர்ச்சி வேகத்துல கொடுக்குற எக்ஸ்பிரஷன்ஸ் பார்த்து நானே மெரண்டு போய் கிடக்கேன்.. ஹே.. இனிமேல் நான் பேச மாட்டேன்.. ஒரு ஹிட் கொடுத்துட்டுத்தான் பேசுவேன்..

விஜய் : நாசமாப் போச்சு.. அப்போ நீ எப்போ பேசுறது.. நாங்க எப்போ கேக்குறது?





(கவுண்டமணி - செந்தில் மற்றும் அஜித் - விஜய் என்று இருப்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் / வேண்டாம் என்று வாசகர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)

***************

போதும். இத்தோட நிறுத்திக்குவோம். படத்த பத்தி இனி நாமளே பேசுவோம்.

கடந்த முப்பது வருடங்களாக எந்தெந்த விஷயங்களை எல்லாம் நம் தமிழ் சினிமாவில் கொண்டாடி வந்திருக்கிறோமோ, அதை எல்லாம் நார் நாராய் கிழித்து கசக்கிப் பிழிந்து காயப் போட்டிருக்கிறார்கள். மற்ற படங்களை அவ்வப்போது சின்ன சின்ன கேலியும் கிண்டலும் செய்வதென்பது நம் தமிழ் சினிமாவில் அடிக்கடி காணக் கிடைப்பதுதான். உ.ம்: சத்யராஜின் மகாநடிகன், இங்கிலிஷ்காரன், வெங்கட்பிரபுவின் சரோஜா, விவேக்கின் காமெடி காட்சிகள். ஆனால் ஹாட்ஷாட்ஸ் போல ஒரு முழுநீள ஸ்பூப் படம் தமிழில் வந்தது கிடையாது என்ற குறையை நிவர்த்தி செய்கிறது "தமிழ்ப்படம்".

**************

என்னைப் பொறுத்தவரை இவர்கள்தான் படத்தின் உண்மையான நாயகர்கள்..

துரை தயாநிதி - இதுவரை தேவையில்லாத பிரச்சினைகளுக்காக மட்டுமே ஊடகங்களில் அடிபட்டு வந்த பெயர். முதல் முறையாக அவரைப்பற்றி நல்ல விதமாக பேச வைத்திருக்கிறது "தமிழ்ப்படம்". எனக்கு என்னமோ உதயநிதி ஸ்டாலினை விட தயாநிதிக்கு சினிமா ரசனை அதிகம் என்றே தோன்றுகிறது. "குருவி,ஆதவன்" என்று பெரிய ஸ்டார்களின் பின்னாடி ஓடிப்போய் முன்னவர் கும்மாங்குத்து வாங்கிக் கொண்டிருக்க, இவரோ சத்தமே இல்லாமல் "தமிழ்ப்பட"த்தை தயாரித்து வெற்றி பெற்றிருக்கிறார்.

அமுதன் - இயக்குனருக்கு ரொம்பவே தைரியம். லொள்ளு சபா டைப் படத்தை போர் அடிக்காத திரைக்கதையால் திறமையாக சொல்லி இருக்கிறார். சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனம் செலுத்தி இருக்கிறார். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், சினிமாபட்டிக்கு வந்து போகும் ரயில் வண்டி. இப்போதும் நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த படம் எப்படி எடுக்கப் போகிறார் என்பதை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

கண்ணன் - அறிமுக இசையமைப்பாளர் என்று நம்ப முடியவில்லை. எல்லாப்பாட்டுமே சூப்பர். குத்து விளக்கு பாட்டும், பச்சைத் தமிழன் பாட்டும் என்னோட பேவரைட்ஸ். பின்னணி இசையும் ஓகே. குடும்பப்பாட்டு என்று "MLTR" பாட்டைப் போட்டு கலக்கி இருக்கிறார்.



நீரவ்ஷா - சின்ன பட்ஜெட் படம் போலவே தெரியவில்லை. காட்சிகள் அத்தனை துல்லியம். ரெட் ஒன் காமிராவாம். (தகவல் உபயம் - அண்ணன் ஜாக்கி சேகர் ) நன்றாக செய்திருக்கிறார்.

சந்துரு - வசனம் எழுதி இருப்பவர். பதிவர் - நம்ம ஆளாம். டைமிங் ஜோக்சில் சுழட்டி அடிக்கிறார். வாழ்த்துகள்.

**************

படத்துல எனக்கு ரொம்பப் பிடிச்ச சீன்..

தண்ணியப் போட்டுட்டு சிவா பீச்ல மட்டையாகிக் கிடப்பாரு... மேல இருந்து காமிரா அவர நோக்கி வரும்.. அப்போ அவரு சொல்ற வசனம்.. " பிரியாவ தூக்கிட்டு போய்ட்டானுங்க.. ஏற்கனவே சரக்கு போட்டு தல சுத்திக்கிட்டு இருக்கு.. இவனுங்க வேற மேல காமிராவுல சுத்துறானுங்க.. என்னால முடியல..." (காக்க காக்க..)

அடங்கப்பா.. சிரிச்சு மாளல..

***************

கருத்தம்மா, தளபதி, நாட்டாமை, ரமணா, சிவாஜி, பாட்ஷா, கந்தசாமி, பில்லா, மௌனராகம், ரன், சிதம்பர ரகசியம் (தெரிஞ்சது கையளவு, தெரியாதது உலகளவு) என பல படங்களை சகட்டுமேனிக்கு கிண்டல் செய்து இருக்கிறார்கள். இந்தப் படங்களை எல்லாம் ஏற்கனவே பார்த்து இருந்தால் மட்டுமே ஒரு சில காட்சிகள் புரியும் என்பது படத்தின் பலவீனம். அதே போல முதல் பாதியின் வேகம் இரண்டாம் பாதியில் இல்லை. ஆனாலும் எந்தெந்த காட்சி எந்தெந்த படத்தில் இருந்து சுட்டிருக்கிறார்கள் என்று ரசிகர்கள் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருப்பதில் இந்தக் குறை வெளியே தெரியாமல் அமுங்கிவிடுகிறது.

**************

வீட்டுக்குப் போனபிறகும் யோசிச்சு யோசிச்சு பார்த்து சிரிக்கற அளவுக்கு ஜோக்ஸ் இல்ல. ஆனாலும் படம் பார்க்கும்போது இரண்டு மணி நேரம் கவலையை மறந்து நம்மையும் அறியாமல் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறோம். அதுதான் இந்தப்படத்தின் வெற்றி.

தமிழ்ப்படம் - கொண்டாட்டம்

பின்குறிப்பு 1 : துரை தயாநிதியின் அடுத்த படத்துக்கு பூஜை போட்டு விட்டார்கள். "தூங்கா நகரம்" - நம்ம மதுரையோட இன்னுமொரு பெயர். இதிலும் ஸ்டார்கள் யாருமில்லை. கதையை நம்பி களம் இறங்கி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். வெற்றி பெற வாழ்த்துகள்.

பின்குறிப்பு 2 : அப்பாடா.. படத்தோட கதையோ இல்ல முக்கியமா சீன்களோ, எதுவுமே சொல்லாம ஒரு இடுகை எழுதியாச்சு.. இனிமேலாவது தருமி ஐயா என்னைத் திட்டாமல் இருக்க சினிமா உலகை ரட்சிக்க வந்த கடவுள் "சிவா" அருள்புரிவாராக..:-)))