June 30, 2009

கடவு -இசையோடு ஒரு கொண்டாட்டம்...!!!

கடவு இலக்கிய அமைப்பின் சார்பாக மதுரையில் 27-06-09 மற்றும் 28-06-௦௦௦09 ஆகிய இரு தினங்களும் கூடல் சங்கமம் என்னும் பெயரில் கவிதை, சிறுகதை பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. இதற்கான அழைப்பிதழை "தூறல் கவிதை" ச.முத்துவேல் எனக்கு ஒரு மாதத்துக்கு முன்னரே அனுப்பி இருந்தார். தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் பலரும் கலந்து கொள்ள இருப்பதால் கண்டிப்பாக நீங்கள் போக வேண்டும் என்று நண்பர் "அகநாழிகை" பொன்.வாசுதேவனும் சொல்லி இருந்தார்.
இருந்த போதிலும் எனக்குள் ஒரு தயக்கம். போவதா வேண்டாமா என்று ஒரு சின்ன தடுமாற்றம். நான் வெகு சமீபமாகத்தான் தீவிர இலக்கியங்களை வாசித்து வருகிறேன் என்பதால் அவ்வளவாக இலக்கியப் பரிச்சயம் கிடையாது. இதை எனது நண்பர் ஸ்ரீதரிடம் பகிர்ந்து கொண்டபோது அவர் சொன்னார்.."ரொம்ப நல்லதாப் போச்சு.. ஒண்ணுமே தெரியாமப் போனாத்தான்யா நிறைய கத்துக்க முடியும். நம்ம ஊர்ல நடக்கும்போது நாம இல்லாமையா? கண்டிப்பா போறோம்.."
அழகர் கோவிலுக்கு வெகு அருகே இருக்கும் ஓயாசிஸ் பாஸ்கர சேதுபதி அரங்கில் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சனிக்கிழமை எனக்கு கல்லூரி என்பதால் மாலை ஐந்து மணிக்குத்தான் நிகழ்ச்சிக்கு போக முடிந்தது. நண்பர் ஸ்ரீதரும் அதே நேரத்துக்கு வந்து சேர்ந்தார். பதிவுலக நண்பர்களில் வால்பையனும், கும்க்கியும் வந்து இருந்தார்கள். கவிஞர் மற்றும் பதிவரான யாத்ராவும் வந்து இருந்தார்.
சனிக்கிழமை முழுவதும் கவிதைகள் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. நாங்கள் சென்றபோது ஆதவன் தீட்சண்யா தலைமையில் கவிஞர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட புத்தகங்களைப் பற்றிய கருத்துக்களை முன்வைத்துப் பேசிக்கொண்டு இருந்தார்கள். எனக்கு மிகவும் பிடித்த புத்தகமான தமிழச்சி தங்கபாண்டியனின் "வனப்பேச்சி" பற்றி அருமையாகப் பேசினார் யவனிகா ஸ்ரீராம். நிகழ்ச்சிக்குப் பிறகு வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது. பின்னர் நண்பர்கள் எல்லாரும் மதுரைக்கு வந்து சேர்ந்தோம்.
முத்துவேலும் யாத்ராவும் தங்கி இருந்த அறைக்கு நானும் ஸ்ரீதரும் போனபோது மணி ஒன்பதரை. அங்கே முக்கியமான இரு நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. நரன் - இலக்கிய உலகில் வளர்ந்து வரும் கவிஞர். அருமையாக பேசினார். விஷயங்களை தெள்ளத்தெளிவாக புரிந்து வைத்து இருக்கிறார். இசை - இத்தனை நாளாக இவரது கவிதைகளை நாம் ஏன் படிக்கவில்லை என்று ஏங்க வைத்து விட்டார். இசையின் உறுமீன்கள் அடர்ந்த நதி என்னும் புத்தகத்தின் சில கவிதைகளை யாத்ரா வாசித்துக் காட்டினார். ஒரே வார்த்தையில் சொல்வதானால் அற்புதம். இருவருமே பதிவுலகில் எழுதி வருகிறார்கள். கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டியவர்கள்.
யாத்ரா நன்றாகப் பாடுவார் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் தெரியாத விஷயம்.. முத்துவேலின் பாடும் திறன். பட்டையைக் கிளப்பி விட்டார். மனிதர் மேடைப்பாடகராம். பாட்டின் நடுவே வரும் இசைக்கோர்வைகளைக் கூட சீட்டியின் மூலம் இசைக்கிறார். அவரவருக்கு பிடித்த பாடல்களை பாடத் தொடங்கினோம். இசை கடினமான பாடல்களான நின்னைச் சரணடைந்தேன், ராக தீபமே போன்ற பாடல்களை அனாயாசமாக பாடினார். யாத்ராவுக்கோ இளையராஜா என்றால் உயிர் போல. எல்லாம் மென்மையான பாடல்களாகப் பாடினார்.
அனைவரும் கொண்டாட்டமாக இருந்த அந்தத் தருணங்கள் அற்புதமானவை. நடுவில் வேறு சில நண்பர்களும் வந்து சேர கச்சேரி களை கட்டியது. இதனால் ஓட்டல் ஊழியர்களின் சாபத்துக்கு ஆளானது வேறு கதை. நடு ராத்திரி இரண்டு மணி வரை பாடிக் கொண்டிருந்தால் பாவம் அவர்கள் தான் என்ன செய்வார்கள்? ஆனால் இதெல்லாம் பார்த்தால் தொழில் பண்ண முடியுமா பாஸ்? பாட்டு பாடி முடித்த பின்னும் நரனுடன் ஒரு மணி நேரம் இலக்கியம் பற்றி பேசிவிட்டு புறப்பட்டோம். இலக்கியத்தையும் கொண்டாட்டத்தையும் ஒரு நாளில் திகட்டத் திகட்ட அனுபவித்து இருந்தேன்.
பேசிக் கொண்டிருக்கையில் முத்துவேல் திடீரென எனக்கு நன்றி சொன்னார்.
"என்னப்பா..எதுக்கு நன்றி?" - நான்.
"என்னை பாலோ பண்றதுக்கு ரொம்ப நன்றி கார்த்தி. நான் எல்லாம் சாதரணமான ஆள். எனக்கு என்ன தகுதி இருக்கு? ஆனா பெரிய பெரிய ஆள் எல்லாம் இந்தப் பதிவுலகத்துல இருக்காங்க. டாக்டர், இன்ஜினியர் எல்லாம் நாம எழுதுறதைப் படிக்கிறாங்க என்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுக்குத்தான்." - முத்துவேல்.
"எங்களை அசிங்கப்படுத்தாதீங்க நண்பா.. நீங்க ஒரு படைப்பாளி. கவிஞர். இதை விட என்ன பெரிய தகுதி வேண்டும்?"
இதை நான் சொல்லி முடித்த நொடியில் அருகில் அமர்ந்து இருந்த இசை என்னை கட்டிக் கொண்டார். "சரியாச் சொன்னீங்க நண்பா.." அன்போடு என் கன்னத்தில் முத்தமிட்டார். பாசத்தின் வெளிப்பாடு. ஒரு கலைஞனுக்குள் இருந்த குழந்தை. எனக்கு ரொம்பப் பெருமையாக இருந்தது..!!!
(எஸ்ராவும், கோணங்கியும் பங்குபெற்ற சிறுகதை பற்றிய உரையாடல்களும், மற்ற அனுபவங்களும் அடுத்த பதிவில்..)
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

June 27, 2009

நாடோடிகள் - திரைவிமர்சனம்..!!!


"என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்.." இந்த ஒரு வரியை அடிப்படையாகக் கொண்டு வந்திருக்கும் படம் தான் நாடோடிகள். காதலின் வலியையும் நட்பின் ஆழத்தையும் ரொம்ப அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார்கள். தெளிவான கதையுடனும், அழகான திரைக்கதையுடனும் களமிறங்கி கலக்கி இருக்கிறார்கள். இயக்குனராக சுப்ரமணியபுரம், தயாரிப்பாளராக பசங்க என்று பட்டாசு கிளப்பிக் கொண்டிருக்கும் எம்.சசிக்குமாருக்கு நடிகராக இது ஒரு அருமையான படம்.
தான் காதலிக்கும் மாமன் பெண்ணுக்காக கவர்மென்ட் வேலைக்கு முயற்சி செய்து வருபவன் கருணாகரன் (சசிக்குமார்). அவனுடைய நண்பன் சந்திரன் (விஜய்) சொந்தமாக கம்ப்யூட்டர் சென்டர் வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறான். அவனுக்கும் கருணாவின் தங்கைக்கும் காதல். இவர்களின் இன்னொரு நண்பனான பாண்டி (பரணி) வேலைக்காக வெளிநாட்டுக்கு போக விரும்புபவன். சந்தோஷமாக இருக்கிறார்கள். கருணாவின் மாமன் பெண்ணான நல்லம்மாள் (அனன்யா) அவன் மீது உயிரையே வைத்து இருக்கிறாள்.
கருணாவின் இன்னொரு நண்பன் சரவணன். அவனுடைய காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு. அவர்களை சேர்த்து வைக்க கருணாவும் அவனுடைய நண்பர்களும் போராடுகிறார்கள். பிரச்சினையின்போது சந்திரன் தன் காலை இழக்கிறான். பாண்டிக்கு காது கேட்காமல் போகிறது. கேஸ் ஆகிப்போனதால் கவர்மென்ட் வேலை கிடைக்காது என நல்லம்மாளை அவள் அப்பா வேறு ஒருவருக்கு மணம் செய்து தருகிறார். நண்பனின் காதலுக்காக இவர்கள் தங்கள் சொந்த வாழ்வை இழக்கிறார்கள். ஆனால் அந்தக் காதல் உண்மையானது தானா? இவர்களின் தியாகத்துக்கு தகுதியானதுதானா? கடைசியில் என்ன நடந்தது.. இதுதான் நாடோடிகள்.
சசிக்குமார் ஒரு சாயலில் டீயார் போலவே இருக்கிறார். கனமான பாத்திரத்தை அலட்டாமல் செய்து இருக்கிறார். கஷ்டப்பட்டு குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடுகிறார். அவருடைய அழுத்தமான குரல் அவருக்கு மேலும் கம்பீரத்தை தருகிறது. சென்னை 28 விஜய்க்கு அடக்கமான கேரக்டர். அவருக்கும் அவருடைய அப்பாவுக்குமான உறவை சொல்லும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. படத்தின் ரியல் ஹீரோ பரணி தான். மனுஷன் பிரித்து மேய்ந்து இருக்கிறார். கல்லூரியிலியே கலக்கியவர். காதலுக்காக அலையும் காட்சிகளாகட்டும், காது கேட்காமல் அவதிப்படும் காட்சிகளாகட்டும்.. சிக்கிய இடத்தில் எல்லாம் மனிதர் சிக்சர் அடிக்கிறார். நாயகி அனந்யாவும் நிறைவாக செய்து இருக்கிறார். கஞ்சா கருப்புக்கு இது இன்னொரு டக்லஸ். படத்தின் எல்லா நடிகர்களுமே அலட்டாமல் தங்கள் வேலையை நிறைவாக செய்து உள்ளார்கள்.
"சம்போ சிவசம்போ" பாட்டுதான் படத்தின் உயிர்நாடி. இதைத் தவிர சொல்லிக் கொள்ளும்படியாக வேறு பாடல்கள் இல்லை. இசை சுந்தர்.சி.பாபு. பின்னணி இசையில் கவனம் செலுத்தி இருக்கிறார். சேசிங் காட்சிகளில் கதிரின் காமிரா அதகளம் பண்ணுகிறது. படத்தின் ரியாலிட்டிக்கு கலை இயக்குனர் மிகவும் உதவி உள்ளார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் சமுத்திரக்கனி. வசனங்கள் நச். படத்தின் பெரிய பலம வசனங்கள்தான். ஆரம்பம் முதல் இறுதி வரை படத்தில் ஒரு நகைச்சுவை உணர்வு இழையோடிக் கொண்டே இருக்கிறது. அவ்வப்போது சுப்ரமணியபுரம் சாயல் வருவதை தவிர்த்து இருக்கலாம். தேவை இல்லாமல் ஒரு திருவிழாப் பாட்டும், ஒரு குத்துப்பாட்டையும் இணைத்து இருக்க வேண்டாம். உன்னைச் சரணடைந்தேன் என்னும் நல்ல படத்தையும், நெறஞ்ச மனசு என்னும் நொல்லப் படத்தையும் கொடுத்த சமுத்திரக்கனி நாடோடிகளில் பட்டையைக் கிளப்பி விட்டார்.


நாடோடிகள் - உள்ளம் கவர் கள்வர்கள்...


(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

June 25, 2009

உக்கார்ந்து யோசிச்சது (25-06-09)......!!!

மனம் பூராவும் நிறைந்து வழியும் மகிழ்ச்சியோடு இந்தப் பதிவை எழுதுகிறேன். நேற்று என் தங்கையின் திருமண வைபவம் இனிதே நடந்து முடிந்தது. கல்யாணம் என்பது இரு உள்ளங்களின் சங்கமம் மட்டும் அல்ல, இரு குடும்பங்களின் இணைப்பும் கூட. புதிதாக சில உறவுகள், பொறுப்புக்கள்.. எல்லாமே எனக்கு புதிய அனுபவம். வாரநாள் (புதன்கிழமை) என்றபோதும் எனக்காக திருமணத்திற்கு வந்த நண்பர்களையும், மாணவர்களையும் பார்த்த போது கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது. நான் உறவை விட அதிகமாக நட்பை மதிப்பவன். நம்மால் இவ்வளவு மனிதர்களை சம்பாதிக்க முடிந்ததே என்று மனதுக்கு நிறைவாக இருந்தது .
சந்தோஷத்தை இரட்டிப்பாக்கும் வகையில் பதிவுலக நண்பர்களும் பெருமளவில் வந்து வாழ்த்தினர். சீனா ஐயா மற்றும் அவரது துணைவியார், ஸ்ரீதர், அன்பு, சுந்தர், ஜாலிஜம்பர், பாலகுமார், சொல்லரசன், ஆதவா, தம்பதி சமேதராக வந்த தருமி ஐயா மற்றும் தேவன்மாயம் என அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் வர முடியாத காரணத்தால் தங்கள் அண்ணனை அனுப்பி வைத்த நண்பர்கள் முத்துராமலிங்கம், அன்புமணி.. போனில் அழைத்து வாழ்த்திய ரம்யா அக்கா, வால்பையன், mayvee, ஞானசேகரன், இளைய கவி.. பதிவில் வாழ்த்திய நண்பர்கள்.. எல்லாருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
***************
அண்ணன் அஞ்சாநெஞ்சன் மதுரையின் எம்.பியான போது கொஞ்சம் நெருடலாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது நடக்கும் காட்சிகளை பார்க்கும்போது மனதுக்கு இதமாக இருக்கிறது. பல வருடங்களாக நிறைவேறாமல் இருந்த மதுரை மக்களின் கோரிக்கையான சென்ட்ரல் மார்க்கெட்டை மாட்டுத்தாவணிக்கு மாற்றும் பணி தொடங்கி விட்டது. மதுரை ஏர்போர்ட் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுக் கட்சி எம்.எல்.ஏவான நன்மாறனின் வேண்டுகோளை ஏற்று மாசாத்தியார் பெண்கள் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது. பாலங்களும் வேகமாக கட்டுப்படுகின்றன. கண்டிப்பாக இவை எல்லாமே மக்களிடம் அஞ்சாநேஞ்சனுக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படியே இந்த போஸ்டர் கலாச்சாரத்தை கட்டுப்படுத்தவும், தென் மாவட்டங்களுக்கு தொழிற்சாலைகளை கொண்டு வரவும் முயற்சிகள் எடுத்தால் மக்கள் அவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள்.
***************
இந்திய அணி T20 கிரிக்கட்டில் தோற்றுப் போனதற்கு காரணங்களைத் தேடித்தேடி, பக்கம் பக்கமாக போட்டு வருகின்றன பத்திரிக்கைகள். ஆனால் சத்தமே இல்லாமல் ஒரு பெண் சாதனை செய்து இருப்பதை மீடியா கண்டு கொள்ள மறுக்கின்றது. ஒரே ஒரு பத்தியில் போனால் போகட்டும் என்று எழுதுகிறார்கள். சாய்னா நேவால்.. இந்தியாவின் புதிய பூப்பந்து வீராங்கனை. சூப்பர் சீரீஸ் என்னும் முக்கியமான போட்டியில் ஜெயித்து இருக்கிறார். கிரிக்கட் வீரர்களுக்கு மட்டும் கோடிகளை கொட்டிக் கொடுக்கும் நம் அரசாங்கம் ஏன் மற்ற விளையாட்டுக்களை கண்டு கொள்ள மறுக்கிறது? இந்த நிலை மாறி எல்லா விளையாட்டு வீரர்களையும் நாம் ஊக்கப்படுத்தா விட்டால் இன்னும் எத்தனை காலம் ஆனாலும் ஒலிம்பிக்கில் ஒரு மெடலுக்கும் ரெண்டு மெடலுக்கும் நாம் பிச்சை எடுத்து கொண்டிருக்கும் அவலம் தொடரத்தான் செய்யும்...
***************
ஒரு சின்ன கவிதை...


நீண்டும் சிறுத்தும்..
ஒரு நிலையில் நில்லாமல்...
நேரத்திற்கு தகுந்தாற்போல்..
மாறிக்கொண்டு இருக்கின்றன..
நிழல்கள் - மனித
மனங்கள் போலவே..!!!
***************
கடைசியா கொஞ்சம் குட்டி ஜோக்ஸ்..


1) இரண்டு பெண்கள் அமைதியாக உக்கார்ந்து இருக்கிறார்கள்.


2) இரண்டு சர்தார்கள் செஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.


3) போனுக்கான பில்லை காதலி கட்டுகிறாள்.


தாங்க முடியல இல்ல? சரி.. இன்னும் ஒண்ணே ஒண்ணு..


4) "விஜய்" தான் அடுத்த நடிகர் திலகம்.


ஹி ஹி ஹி.. நெக்ஸ்ட் மீட் பண்றேன்... :)))))))))))(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

June 21, 2009

அன்புடன் அழைக்கிறேன்.. வாழ்த்த வாங்க..!!!


90 களின் ஆரம்பம். நான் ஐந்தாம் வகுப்போ ஆறாம் வகுப்போ படித்ததாக ஞாபகம். எங்கள் வீட்டில் அப்போது டிவி கிடையாது. பக்கத்து வீட்டில்தான் போய் பார்க்க வேண்டும். ஒரு முறை ஆர்வமாக டிவி பார்க்க பக்கத்து வீட்டுக்கு போனால், நான் வருவதைப் பார்த்து அந்த அக்கா கதவை வேகமாக சாத்தி விட்டார். அம்மா அதைப் பார்த்து விட எனக்கு நல்ல திட்டு. டிவி பார்க்க முடியாத ஆத்திரம் ஒரு பக்கம், அம்மாவிடம் திட்டு வாங்கியது ஒரு பக்கம் என்று உட்கார்ந்து அழுது கொண்டிருந்தேன். அப்போது ஆறுதலாக என் தோளின் மீது விழுந்தன பிஞ்சு விரல்கள். "அழாதண்ணே.. நாம அம்மாக்கிட்ட சொல்லி புது டிவி வாங்கிக்கலாம்..". ஐந்தே வயதான என் தங்கை கண்களில் நீரோடு என் அருகில் நின்று கொண்டிருந்தாள்.எனக்குப் பின் ஆறு வருடங்கள் கழித்து பிறந்தவள் என் தங்கை. எங்கள் வீட்டின் ஒரே பெண் பிள்ளை என்பதால் பயங்கரச் செல்லம். எந்தப் பொருளை வாங்கினாலும் முதலில் எனக்கு வாங்கி விட்டுத்தான் அவளுக்கு வாங்கிக் கொள்ளுவாள். நான் அவளிடம் காட்டும் பாசத்தை விட பத்து மடங்கு என் மீது அன்பை பொழிபவள். பள்ளியில் சேரும்போது கூட அண்ணனோடுதான் போவேன் என்று எனது பள்ளியிலேதான் சேர்ந்தாள். கைகளைப் பிடித்து அவளை கூட்டிக்கொண்டு பள்ளிக்கு போனது நேற்று நடந்தது போல இருக்கிறது. இன்றைக்கு.. அவளுக்கு கல்யாணம். காலம்தான் எத்தனை வேகமாக ஓடுகிறது?எத்தனையோ திருமணங்களுக்கு சென்று இருக்கிறேன். நண்பர்களின் திருமணத்தில் முதல் ஆளாய் நின்று வேலை பார்த்து இருக்கிறேன். ஆனால் என் வீட்டில் ஒரு விசேஷம் என்பது இதுதான் முதல் தடவை. எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறேன். மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்த தருணத்தை என்னுடைய நண்பர்கள் உடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். கடந்த ஆறு மாதங்களில் இணையத்தில் எனக்கு கிடைத்த நண்பர்கள்... நீங்களும் என் தங்கையை வந்து வாழ்த்த வேண்டும் என்று விரும்புகிறேன்.நாள்: 24 - 06 - 09 புதன்கிழமை

முகூர்த்த நேரம்: காலை 9:45 முதல் 10:45 வரை

மணமக்கள்: நா.நாகராணி
இர.தமிழ்க்குமரன்

இடம்: அன்னை வேளாங்கண்ணி திருமண மாளிகை,

மேலப்பொன்னகரம் ஏழாவது தெரு,

மதுரை.இல்லற வாழ்வை ஆரம்பிக்கும் என் தங்கைக்கு நல்ல உள்ளங்களின் ஆசீர்வாதம் கண்டிப்பாக வேண்டும். நீங்கள் அனைவரும் வந்து வாழ்த்த வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.


பிரியமுடன்,

மா.கார்த்திகைப் பாண்டியன்.

June 19, 2009

முத்திரை - திரை விமர்சனம்..!!!


தயாரிப்பாளர்கள் கதாநாயகர்களை நம்பாமல் நல்ல படங்களைத் தர முன்வருவது தமிழ் சினிமாவில் வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால் கதையும் திரைக்கதையும் சொதப்பி விட்டால் படம் ஊத்திக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. அதுதான் முத்திரைக்கு நடந்து இருக்கிறது. ஒளிப்பதிவாளர் ஜீவாவின் மரணத்துக்குப் பிறகு அவரின் மனைவி அனீஸ் தன்வீர் தொடங்கி இருக்கும் "விஷன் ஜீவா" ஸ்டூடியோசின் முதல் தயாரிப்பு.


பதவி பிரச்சினையில் தமிழகத்தின் முதல்வர் கொல்லப் படுகிறார். அவருடைய மரணம் பற்றிய ஆதாரம் ஒரு லாப்டாப்பில் இருக்கிறது. நிதின் சத்யாவும் டேனியல் பாலாஜியும் சில்லறைத் திருடர்கள். ஒரு சூழ்நிலையில் இந்த ஆதாரம் அவர்களிடம் சிக்கிக் கொள்கிறது. அதைக் கைப்பற்றத் துடிக்கும் போலிஸ் கமிஷனர் கிஷோரிடம் இருந்தும், உண்மையான கொலைகாரனான அரசியல்வாதி பொன்வண்ணனிடம் இருந்தும் இவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை.


நிதின் சத்யாவுக்கு காதல் காட்சிகளை விட காமெடி அருமையாக வருகிறது. சிரிப்புத் திருடன். அவருடைய ஒரு வரி வசனங்கள் செமை ஜாலி. டேனியல் பாலாஜி படம் முழுக்க இறுகிய முகத்துடன் அலைகிறார். பாடல் காட்சிகளில் கூட ஏதோ நாயகியை கற்பழிக்கப் போகிறவனைப் போல திரிகிறார். கிஷோர் கமிஷனராக வீணடிக்கப் பட்டு உள்ளார். சித்தப்பா சரவணன், சேத்தன், திருடா திருடா ஆனந்த் என்று பல பேர் வந்து போகிறார்கள்.


மேல்தட்டு கதாநாயகிகள் என்றால் எப்போதும் கிளேவேஜ் தெரிய அலைந்து கொண்டே இருக்க வேண்டுமா என்ன? லட்சுமிராயை ஒரு சில கோணங்களில் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. குறிப்பாக அவருக்கும் பாலாஜிக்கும் கல்யாணம் நடக்கும் காட்சியில் சேலை கட்டி, மேக்கப் இல்லாமல் அவர் நிற்கும்போது பல பேருக்கு மயக்கம் வரும். நிதின் சத்யாவின் காதலியாக மஞ்சரி. அறிமுகம். தமிழ் சினிமாவின் வழக்கமான லூசுப்பெண். ராக்கி சாவந்த் ஒரு பாட்டுக்கு டாங்ஸோடு ஆட்டம் போடுகிறார்.


இசை யுவன்ஷங்கர்ராஜா. ஒரு பாட்டு கூட விளங்க வில்லை. பின்னணி இசையும் ஏனோ தானோ ரகம்தான். யுவன் இனிமேல் படங்களை குறைத்துக் கொண்டு குவாலிட்டியில் கவனம் செலுத்தலாம். சலீமின் ஒளிப்பதிவு ஓகே. தோட்டா தரணியின் கலையும், ஆண்டனியின் எடிட்டிங்கும் தான் படத்தை தாங்கிப் பிடிக்கும் விஷயங்கள். கதை, திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார் அனீஸ் தன்விர்.


ஜீவாவின் உதவியாளரான ஸ்ரீநாத் (உள்ளம் கேட்குமே, தாம் தூம் படங்களில் நடித்தவர்..) இயக்கி உள்ளார். காட்சிகளில் கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லை. முதல்வரின் மரணம் பற்றிய ஆதாரம் கொண்ட லாப்டாப் கொஞ்சம் கூட சேபிடி இல்லாமல் அனாமாத்தாக ஓபன் ஆவது, போலிஸ் துரத்தும் நால்வரும் எந்த பிரச்சினையும் இல்லாமல் காட்டுக்குள் விதவிதமான உடைகளில் சுற்றுவது, க்ளைமாக்ஸ் என்று மனதில் ஒட்டாத காட்சிகள் நிறைய படத்தில் இருக்கின்றன. அடுத்த படத்தையாவது அனீஸ் தன்வீர் தரமான படமாகத் தரட்டும்.


"முத்திரை" பதிக்கத் தவறி விட்டார்கள்...

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

June 15, 2009

மாட்டுத்தாவணி... அவனும் அவளும்...(6)!!!

"நாமளே எவ்வளவு நேரம் தான்ப்பா பேசுறது... பொண்ணும் பையனும் கொஞ்ச நேரம் தனியாப் பேசட்டும்.. அதுதானே முக்கியம்.." கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர் சொன்னார். அவனும் அவளும் ஒரு அறையில் தனியாக விடப்பட்டார்கள்.
அவன் அவளைப் பார்த்தான். ஒல்லியாகச் சின்னப் பெண்ணாக இருந்தாள். பட்டுச் சேலை மட்டுமே அவளைக் கொஞ்சம் பெரிய ஆளாக காட்டியது. கூரான நாசி. அழகான கண்கள். உதடுகள் மெல்லிதாக துடித்துக் கொண்டு இருந்தன. சின்னதொரு பயமாக இருக்கக் கூடும். அவனுக்கும் வயிற்றை எதோ பண்ணியது. இது போல பெண்ணோடு பேசுவது அவனுக்கும் முதல் தடவை. தயங்கியவனாக அவள் எதிரே அமர்ந்தான்.
அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளுக்கு பிடித்த அரைக்கை சட்டை, ஜீன்ஸ் அணிந்து இருந்தான். நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள். அவன் அவளையே பார்த்துக் கொண்டு இருப்பது தெரிந்தது. வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டாள். அவன் பேரழகன் இல்லை என்றபோதும் பார்க்க கம்பீரமாக இருந்தான். உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.
"நீங்க என்ன படிச்சு இருக்கீங்க, குடும்பம் எல்லாம் பத்தி தரகர் சொன்னாரு... என்னப் பத்தியும் உங்க வீட்ல எல்லாரும் சொல்லி இருப்பாங்க.. உங்களுக்கு எதுவும் கேட்கனும்னா கேளுங்க.." அவன் பேச்சை ஆரம்பித்தான்.
"உங்களுக்கு வீடு, நிலம் ஏதாவது இருக்கா?" அவள் மெதுவாக கேட்டாள்.
"இல்லைங்க.. என்னோடது ஒரு பக்கா மிடில் கிளாஸ் பேமிலி.. நான் இப்போ வேலைக்கு போய் சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகுதான் கொஞ்சம் தலை தூக்கி இருக்கோம்.. அப்பாவோட ரிடயர்மெண்ட பொருத்து ஒரு வீடு வாங்கலாம்னு இருக்கேன்.."
"நான் படிச்சு இருக்குறதால வேலைக்கு போகணும்னு விருப்பப்பட்டா போகலாமா?"
"கண்டிப்பா.. எந்தப் பொண்ணும் வேலைக்கு போகணும்னு தான் நான் சொல்லுவேன்.. யாரையும் சார்ந்து இருக்கக் கூடாதுங்கறது தான் என்னோட எண்ணம்.."
"தாங்க்ஸ்.. உங்களுக்கு.. என்ன பிடிச்சிருக்கா?.." தயங்கியவாறே கேட்டாள்.

"எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லைங்க.. நிஜமாவே உங்களை பிடிச்சு இருக்கு.. குறிப்பா வெளிப்படையா பேசுற உங்க குணம்..இப்போ நீங்க சொல்லுங்க.. உங்களுக்கு என்ன பிடிச்சு இருக்கா..?"
"ம்ம்ம்..நிறைய..."
அவனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. வெளியில் வந்து பெற்றோரிடம் தன் சம்மதத்தை சொன்னான். அவளுடைய சொந்தக்காரர்கள் உள்ளே சென்று அவள் சம்மதத்தை கேட்டு வந்தார்கள். திருமணத்தை தையில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவாகியது.
பெண்ணின் சொந்தக்காரர் ஒருவர் ஆரம்பித்தார். "அப்புறம் மத்த விஷயங்கள் எல்லாம் பேசிடுவோம்.. பொண்ணுக்கு என்ன செய்யணும்னு எதிர்பாக்குறீங்க.?"
"ஒத்தப் பொண்ணு.. உங்களுக்கு என்ன விருப்பமோ செய்ங்க.."அவனுடைய அம்மா சொன்னார்.

"அப்படி இல்லீங்க.. நீங்க என்ன நினைக்குரீங்கன்னு சொன்னாதான் நல்லா இருக்கும்.."

"ஒரு நாப்பது பவுன் பொண்ணுக்கு போடுங்க.. பையனுக்கு அஞ்சு பவுன்"

'இது ரொம்ப ஜாஸ்திங்க.. இன்னைக்கு தங்கம் விக்குற விலை என்ன? நாங்க இருபது பவுன் போடலாம்னு இருக்கோம்."
"இது ரொம்பக் குறைச்சல்.. என் பையன் படிச்ச படிப்புக்கு ஆளாளுக்கு போட்டி போட்டுக்கிட்டு வருவாங்க.."

பேரம் வளர்ந்து கொண்டே போய் கடைசியில் பொண்ணுக்கு முப்பது பவுனும் பையனுக்கு ஐந்து பவுன் என்றும் முடிவானது. அப்புறம் கல்யாண செலவு பற்றிய பேச்சு ஆரம்பித்தது. பையனின் அம்மா கல்யாண செலவில் ஆளுக்கு பாதி என்றார். பெண்ணின் அப்பாவோ அம்பதாயிரம் மட்டுமே தன்னால் தர முடியும் என்றார். அதை வைத்து ஒண்ணுமே செய்ய முடியாது என்று வாதிடத் தொடங்கினர் பையன் வீட்டுக்காரர்கள். பேச்சு வளர்ந்து கொண்டே போனது.

"உங்க பையனுக்கு என்ன கவர்மென்ட் உத்தியோகமா.. ரொம்ப ஓவரா பேசாதீங்க.. எங்க பொண்ணு முகத்துக்காக பாக்குறோம்.." கடைசியாக வாய் விட்டது ஒரு பைத்தியக் கிழம்.

பையனின் அம்மா முகம் சிவந்து போனது. "நீங்க இவ்வளவு பேசினதுக்கு அப்புறமும் உங்க பொண்ணை கட்டணும்னு எங்களுக்கு அவசியம் இல்ல.. வாடா போகலாம்.."
இரு வீட்டாரும் அடித்துக் கொண்டதில் கடைசியில் அவர்களின் ஆசை கருகிப் போனது. அந்தப் பெண் அவனை பாவமாக பார்த்தாள். ஏதும் செய்ய இயலாதவனாக அவன் நடக்கத் தொடங்கினான்.
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

June 13, 2009

மாசிலாமணி - திரை விமர்சனம்..!!!

காதலில் விழுந்தேன் பட ஜோடியான நகுலன், சுனைனா - ஈத்தரை படத்தைக் கூட விளம்பரத்தின் மூலமாக ஓட வைக்கும் சன் டிவி - திருட்டுப் பயலே தந்த கல்பாத்தி அகோரம்.. இவர்களின் கூட்டணியில் வந்து இருக்கும் படம்தான் மாசிலாமணி. லாஜிக், அது இது என்று கேள்வி கேக்காதவரா? இரண்டு மணி நேரம் பொழுது போனால் போதும் என்பவரா? இது உங்களுக்கான படம்.
வேலை வெட்டி இல்லாத, ஊருக்கு உதவும் நல்லவன் மாசிலாமணி (நகுலன்) . சுருக்கமாக மாசி. நடனாலயாவில் படிக்கும் திவ்யாவை (சுனைனா) பார்த்தவுடன் காதல் கொள்கிறார். ஆனால் சந்தர்ப்பவசத்தால் சுனைனா ஒவ்வொரு முறையும் நகுலனை ரவுடியாகவே பார்க்க நேரிடுகிறது. (இது துள்ளாத மனமும் துள்ளும்...) நகுலனின் காதலை ஏற்க மறுக்கிறார். சுனைனாவின் வீட்டில் இருக்கும் எல்லோரையும் கவர்வதற்காக மணியாக மாறுகிறார் நகுலன். (பூவெல்லாம் கேட்டுப் பார், ஜோடி..) மாசியும் மணியும் வேறு என்று சுனைனாவையும் நம்ப வைத்து காதலிக்கிறார். இடையில் ஒரு நொச்சு பிடிச்ச இன்ஸ்பெக்டர் தொல்லை வேறு. கடைசியில் உண்மை தெரிந்து நகுலனை சுனைனா ஏற்றுக் கொள்கிறாரா என்பதே படத்தின் கதை.
இரண்டாவது படத்திலேயே பறந்து வந்து இன்ட்ரோ ஆகிறார் நகுலன். கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம். நன்றாக நடனம் ஆடுகிறார். நடிப்பும் வருகிறது. ஆனால் தமிழை உச்சரிப்பதில் படுத்தி எடுக்கிறார். அவர் சீரியஸாக பேசும்போதும், காமெடி பண்ணும்போதும் நமக்கு எரிச்சல் வருகிறது. சுனைனா அழகு. எல்லா உடைகளும் அம்சமாக பொருந்துகின்றன. கவர்ச்சியாகவும் பாடல்களில் கலக்குகிறார். வில்லன் போலிசாக வரும் பவனை கடைசி காட்சியில் நல்லவனாக்கி காமெடி பீசாக்கி விடுகிறார்கள்.
சந்தானமும் ஸ்ரீநாத்தும் நகுலனின் நண்பர்களாக சிரிக்க வைக்கிறார்கள். சந்தானம் சகட்டு மேனிக்கு எல்லாரையும் திட்டுகிறார். இயல்பான காமடியில் ஸ்ரீநாத் அசத்துகிறார். கதாநாயகனாக வேண்டும் என்று விதம் விதமான கெட்டப்புகளில் வரும் எம். எஸ். பாஸ்கர் வரும் காட்சிகள் மொக்கை காமெடி. சிவாஜி ரஜினி கெட்டப்பும், கஜினியும் ஓகே. கருணாஸ் வேஸ்ட். சுனைனாவின் குடும்பமாக வரும் எல்லோரும் நிறைவாக செய்து இருக்கிறார்கள்.
இமானின் இசையில் பாடல்கள் எல்லாமே அசத்தல். "ஓ திவ்யா" பாட்டும் "டோரா டோரா" பாட்டும் மெலடி என்றால் "சிக்கு புக்கு" பாட்டும் "சூப்பரு" பாட்டும் குத்தாட்ட கலக்கல்கள். ரோமிலும் தாய்லாந்திலும் படம் பிடிக்கப் பட்டு இருக்கும் பாடல்களில் ஒளிப்பதிவாளர் வெற்றி அசத்துகிறார்.
முதல் பாதியை விட இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு தடவையும் மாசியும் மணியும் வேறு என்று நகுலன் நிரூபிக்கும் காட்சிகளை நன்றாக படமாக்கி உள்ளார்கள். ஏற்கனவே பார்த்து பார்த்து சலித்த படங்களின் கதையை உல்டா செய்து இருக்கிறார்கள். மணி யார் என்று கேட்காமலே கல்யாணத்துக்கு சுனைனா வீட்டில் ஒத்துக் கொள்வதெல்லாம் காதுல பூந்தோட்டம். ஆனாலும் படம் போரடிக்காமல் போவதுதான் அதன் பலமே. இயக்குனர் ஆர். என். ஆர். மனோகர் அடுத்த படத்தை கொஞ்சம் லாஜிக்கோடு எடுப்பார் என நம்புவோம்.

மாசிலாமணி - ஜாலியான டைம்பாஸ் மச்சி..

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

June 10, 2009

காணாமல் போன விளையாட்டுக்கள்..!!!

கண்ணு ரெண்டும் சுவத்துல இருக்கிற கடிகாரத்தப் பார்த்துக்கிட்டே இருக்கும். கடைசி கிளாஸ் யார் பாடம் நடத்துனாலும் கவனம் அதுல போகவே போகாது. எப்படா மணி அடிப்பாங்க, வீட்டுக்கு போகலாம் - இதுதான் மனசுல ஓடிக்கிட்டு இருக்கும். வீட்டுக்கு போனவுடனே பையத் தூக்கி எறிஞ்சுட்டு ஒரே ஓட்டம். "டேய்.. ஏதாவது சாப்பிட்டுட்டு போடா..." அம்மாவோட சத்தம் காதுலையே விழாது. தெருவுல நம்ம செட்டு பசங்க எல்லாம் ரெடியா இருப்பாங்க. ஆரம்பிக்குற விளையாட்டு இருட்டற வரைக்கும் தொடரும். களைச்சுப் போய் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம்தான் ஸ்கூல்ல கொடுத்த வீட்டுப்பாடம் நினைப்பே வரும். இந்த பால்ய நினைவுகள் நாம எல்லாருக்குமே இருக்கும்.
பம்பரம், குண்டுன்னு ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒவ்வொரு சீசன் இருக்கும். ஒரு விளையாட்டு அதிகபட்சம் மூணு மாசம் விளையாடுவோம். அதுக்கு அப்புறம் வேற விளையாட்டு சீசன். எத்தனையோ மறக்க முடியாத நினைவுகள். ஆனா இன்னைக்கு நகரத்தோட தெருக்கள்ள பசங்க விளையாடுறதை பாக்குறதே அதிசயமாத்தான் இருக்கு. அப்படியே விளையாண்டாலும் கிரிக்கெட்டத் தவிர வேற எதுவும் இல்லை. டிவியும், கிரிக்கெட்டும் சேர்ந்து இன்னைக்கு பசங்களோட வாழ்க்கைல இருந்து பல சுவாரசியங்களை பரிச்சிடுச்சோன்னு தோனுது.
என்னுடைய சின்ன வயசுல நான் விளையாண்ட விளையாட்டுல எனக்கு ரொம்பப் பிடிச்சது சில்லாக்கு. ஒரு தட்டையான கல், கொஞ்சம் சிகரெட் அட்டை இல்லன்னா தீப்பெட்டி அட்டை.. இதுதான் இந்த கேமுக்கான மூலதனம். தெருத்தெருவா சுத்தி, ஊர்ல இருக்குற ஒரு குப்பைத்தொட்டி விடாம அலசி, அட்டைகளை பொறுக்கிட்டு வருவோம். கிடைக்குறதுக்கு கஷ்டமான சிகரெட் அட்டை யாருக்கிட்ட இருக்கோ, அவனுக்கு மரியாதை தூள் பறக்கும். ஒரு வட்டம் போட்டு அதுல எல்லோரும் சிகரெட் அட்டையை வச்சுடுவோம். இப்போ கல்லை தூக்கி தூரமா வீசணும். இதை கட்டுறதுன்னு சொல்லுவோம். யாரு அதிக தூரம் வீசினானோ, அவனுக்குத்தான் முதல் சான்ஸ். கல்லை வீசி வட்டத்துக்கு உள்ள இருந்து எத்தனை சீட்டை எடுக்க முடியுமோ எடுத்துக்கலாம். ஒரு சில நேரங்களில் அடிதடி எல்லாம் நடக்கும். யாரு நிறையோ சீட்டு வச்சு இருக்கானோ, அவன்தான் எங்களுக்கு கோடீஸ்வரன்.
இன்னொரு அதிரடியான விளையாட்டு..பிள்ளைப்பந்து. எத்தனை பேர் விளையாடுறாங்களோ, அத்தனை குழி தோன்டனும். ஒவ்வொருத்தனுக்கும் ஒரு குழி. இப்போ பந்தை தூரத்துல இருந்து வீசணும். யாரோட குழில பந்து விழுகுதோ, அவன்தான் பட்டு. அந்த பந்தை எடுத்து அவன் யார் மேலயாவது எறியணும். அடி பட்டா, அவனுக்கு ஒரு பிள்ளை. அதாவது ஒரு கல்லை எடுத்து அடி வாங்குனவனோட குழியில போட்டுருவோம். இல்லன்னா எறிஞ்சவனுக்கு ஒரு பிள்ளை. அன்னைக்கு ஆட்ட முடிவுல, யார் அதிகமா பிள்ளை பெத்து இருக்கானோ அவன்தான் எல்லாருக்கும் டீயும் வடையும் வாங்கித் தரணும்.
பம்பரமும் குண்டும் பசங்களோட விளையாடுறது. பொம்பள பிள்ளைங்களோட சேர்ந்து விளையாட தனியா நிறைய விளையாட்டுக்கள். கல்லா மண்ணா, கரண்ட் பாக்ஸ், காலாட்டுமணி கையாட்டுமணி, வளையல் ஜோடி சேக்குறது.. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். ரவுண்டு கண்ணாமூச்சின்னு ஒரு விளையாட்டு. கிட்டத்தட்ட பத்து சந்து. எங்கன வேணும்னாலும் ஒளியலாம். பட்டு வரவன் எல்லாரையும் கண்டு பிடிக்கிறதுக்குள்ள மண்டை காஞ்சிடுவான். எல்லாமே உற்சாகமான விளையாட்டுக்கள். ஒருத்தருக்கு ஒருத்தர் அடிச்சிக்கிட்டும் பிடிச்சுக்கிட்டும் இருந்த அந்த பால்ய நாட்கள் மறக்க முடியாதவை. அதுல கிடைக்க கூடிய சந்தோஷம் கம்ப்யூட்டர் கேம்ச்லயோ, டிவிலயோ கிடையாது. இதை எல்லாம் அனுபவித்து இருக்கிறோம் என்ற வகையில் நாம் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள்தான்....!!!
நண்பர்களே.. இந்தப் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னடா இது சின்னப்புள்ளத்தனமா இருக்குன்னு சொல்லுவாங்களோன்னு பயந்துக்கிட்டு இருந்தேன். ஆனா படிச்ச எல்லாருமே அவங்களோட பால்ய நினைவுகள் பத்தி சொன்னது மகிழ்ச்சியைத் தருது. அண்ணன் பைத்தியக்காரன் இதை தொடர்பதிவா எழுதலாமேன்னு சொல்லி இருக்கார். நல்ல யோசனை. கண்டிப்பா அவங்க அவங்க சின்ன வயசுல வித்தியாசமான விளையாட்டுக்கள விளையாண்டு இருப்பீங்க. அதைப் பத்தி எழுதுங்க. இந்த தொடர்பதிவுக்கு நான் அழைப்பது...
தருமி ஐயா..
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

June 8, 2009

பாத்திரம் அறிந்து பிச்சை இடு..!!!

ஒரு கோவில். அதன் வாசலில் ஒரு பிச்சைக்காரன். கோவிலுக்கு தினமும் வரும் பெண்களில் ஒருத்தி அவனுக்கு காசு கொடுப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்தாள். ஒரு நாள் அவள் அந்தப் பிச்சைக்காரனுக்கு தானம் தரவில்லை. மாறாக மற்றவள் அவனுக்கு காசு கொடுத்தாள். அதற்கு அவன் சொன்னது.."தினமும் காசு தர தே..யா இன்னைக்குத் தரல.. என்னைக்குமே தராத மகராசி இன்னைக்கு தானம் பண்ணிட்டு போறா.." இதுதான் இன்றைய உலகம்.
மனிதனை இன்னும் மனிதனாக வைத்து இருப்பது ஒரு சில குணங்கள்தான். மற்றவர்களின் கஷ்டத்தைப் பார்த்து மனசு கேட்காமல் உதவி செய்யும் நல்ல உள்ளமும் அதில் ஒன்று. தன்னால் ஆன உதவிகளை பிரதிபலன் பாராமல் மற்றவர்களுக்கு செய்யும் மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இந்த உலகம் கொடுக்கும் அடைமொழி - "இளிச்சவாப் பய" என்பதாகவே இருக்கிறது.
"தானம் கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பார்த்தாற்போல்.." என்று ஒரு சொலவடை உண்டு. அதனுடைய அர்த்தம் எனக்கு சமீபத்தில் தான் புரிந்தது. கடலூரில் என் தோழியின் திருமணத்திற்கு சென்று இருந்தேன். வீட்டில் இருந்து மண்டபத்துக்கு போவதற்காக ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறினேன். அதிகாலை நேரம். என்னோடு ஒரே ஒரு பயணி மட்டுமே இருந்தார். அவர் வழியிலே இறங்கிக் கொண்டு ஓட்டுனரிடம் பத்து ரூபாய் நோட்டைக் கொடுத்தார். முதல் சவாரி என்பதால் சில்லரை இல்லை என்று ஓட்டுனர் சொல்லி விட்டார்.
பயணியோ அவசரமாகப் போக வேண்டும் என்றார். என்னிடம் பத்து ரூபாய்க்கு சில்லரை இருந்தது. உடனே அதை எடுத்து பயணியிடம் கொடுத்தேன். ஒரு ஐந்து ரூபாய் நோட்டும் சில்லறைக் காசுகளும். அதை வாங்கிப் பார்த்த அந்த மனிதர் சில்லரை வேண்டாம் என்று சொன்னார். கேட்டால் ஐந்து ரூபாய் நோட்டு ஓரத்தில் கிழிந்து இருந்ததாம். பக்கத்தில் இருந்த கடைகளில் அலைந்து திரிந்து சில்லறை வாங்கி வந்தார். அவசரத்திற்கு உதவலாம் என்று எண்ணிய எனக்கு மண்டை காய்ந்து போனது.
ஒரு ஜென் கதை...

ஜென் குரு ஒருவர் மலைப்பாதையில் குதிரை மீது போய்க் கொண்டு இருந்தார். வழியில் ஒருவன் மயக்கம் போட்டுக் கிடந்தான். அவனுக்கு உதவ எண்ணிய குரு அவனை கஷ்டப்பட்டு குதிரை மீது ஏற்றினார். ஆனால் அவன் சட்டென்று குதிரையை திருடிக் கொண்டு ஓடிப் போனான். அவன் மயக்கம் போட்டவனாக நடித்தது பிறகுதான் குருவிற்கு புரிந்தது. சில நாட்களுக்குப் பிறகு ஒரு சந்தையில் குரு அந்தத் திருடனைப் பார்த்தார். அவன் அந்தக் குதிரையை விற்க முயன்று கொண்டு இருந்தான். குருவைப் பார்த்தவுடன் பயந்து ஓடப் பார்த்தான். அவனை தடுத்தி நிறுத்தி குரு சொனார்.. "பயம் கொள்ளாதே, நான் உன்னை காட்டிக் கொடுக்க மாட்டேன். இந்தக் குதிரையை நீயே வைத்துக்கொள். ஆனால் உதவி கேட்பது போல இனிமேல் யாரையும் ஏமாற்றாதே. பிறகு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமே மக்களுக்கு இல்லாமல் போய் விடும்.."
என்னுடைய நண்பரின் அப்பா ஒருவருக்கும் இதே அனுபவம்தான். தெரிந்த மனிதர் ஒருவருக்காக இவர் செக்யுரிடி கையெழுத்து போட்டு இருக்கிறார். பணம் வாங்கியவர் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போக இப்போது நண்பரின் அப்பா அந்தப் பணத்தைத் திரும்பி கட்டிக்கொண்டு இருக்கிறார். வீட்டில் ஏதோ அவர் கொலைபாதகம் செய்ததைப் போல பேசுவதாகவும் ஏண்டா மற்றவருக்கு உதவி செய்தோம் என்று எண்ணத் தோன்றுவதாகவும் நொந்து போய் சொன்னார். உதவி செய்வதில் தப்பில்லை. ஆனால் தப்பான மனிதர்களுக்கு உதவுவதுதான் தவறு என்று சொல்லி விட்டு வந்தேன். இதைத்தான் அன்றைக்கே சொல்லி வைத்து இருக்கிறார்கள்.. "பாத்திரம் அறிந்து பிச்சை இடு.."!!!
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

June 6, 2009

குளிர் 100 டிகிரி - திரைவிமர்சனம்..!!!


ஹிந்தியில் மல்டிப்ளெக்ஸ் படங்கள் என்று ஒரு தனிப் பிரிவே உண்டு. அதற்கென ஒரு ஆடியன்ஸ் இருக்கிறார்கள். தமிழின் முதல் மல்டிப்ளெக்ஸ் படம் என்று இந்தப் படத்தை சொல்லலாம். கொஞ்ச நாளைக்கு முன் வந்த விசில் படத்தில் "அழகிய அசுரா" பாடலைப் பாடியவர் அனிதா உதீப். அதன் பிறகு காணாமல் போனவர் இந்தப்படத்தின் இயக்குனராக திரும்பி வந்து இருக்கிறார். குளிர் 100 டிகிரி - பெயரில் இருக்கும் வித்தியாசம் படத்தின் கதைக் களத்திலும் இருக்கிறது. மேல்தட்டு மாணவர்கள் படிக்கும் பள்ளியையும், அங்கே நிலவும் பிரச்சினைகளையும் காட்டி இருக்கிறார்கள்.


நாயகன் சூர்யா. +1 படிக்கிறான். முன்கோபி. தப்பு செய்பவர்களைக் கண்டால் பிடிக்காது. அவன் அப்பா ஒரு தாதா. இதனால் அம்மாவும் அப்பாவும் பிரிந்து வாழ்கிறார்கள். எதிலும் பிரச்சினை செய்யும் சூர்யா திருந்த வேண்டும் என்பதற்காக அவனுடைய அம்மா அவனை ஒரு மலை வாசஸ்தலத்தில் இருக்கும் கான்வென்ட்டிற்கு அனுப்புகிறார். அங்கே அவனுடைய நண்பனாக பப்லு. பிரின்சிபாலின் மகளான தான்யாவின் சிநேகமும் கிடைக்கிறது.


ரோஹித் - ஆகாஷ் - ரால்டி... இந்த மூவரும் ஸ்கூலின் அடாவடி மாணவர்கள். ஸ்டூடண்ட் கவுன்சில் என்ற பெயரில் மற்ற மாணவர்களை அடக்கி வைத்து இருக்கிறார்கள். இவர்கள் வைத்ததுதான் சட்டம். சூர்யா இவர்களை எதிர்க்கிறான். ஸ்கூலில் நடக்கும் தேர்தலில் ரோகித்தின் ஆளைத் தோற்கடிக்கிறான் சூர்யா. கோபத்தில் ரோதித்தும் நண்பர்களும் சேர்ந்து பப்லுவைக் கொன்று விடுகிறார்கள். உண்மை தெரிந்து சூர்யா மூவரையும் பழி வாங்குகிறான். கடைசியில் சூர்யாவுக்கு என்ன ஆனது.. இதுதான் படத்தின் கதை.


சாதரணமான கதைக்கு வெகுப் பொருத்தமான மக்களை தேர்வு செய்து இருக்கிறார் இயக்குனர். சூர்யாவின் அப்பாவாக வரும் ஆதித்யா, ப்ரின்சியாக வரும் தலைவாசல் விஜய் தவிர எல்லாருமே புதுமுகங்கள். நாயகன் சூர்யாவாக நடித்து இருப்பவர் படு ஸ்மார்ட். அவருக்கு அப்படியே சிம்புவின் குரல். நன்றாக நடித்து இருக்கும் இன்னொருவர் பப்லுவாக வரும் குண்டுப் பையன். நண்பனுக்காக எதையும் செய்பவராக கலக்கி உள்ளார். கதாநாயகி ஓகே ரகம். வில்லன்களாக வரும் மூன்று பேரும் நன்றாக செய்து உள்ளார்கள்.


படத்தில் பட்டாசு கிளப்பி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய். டாப் ஆங்கிள்களில் வரும் காட்சிகள் மிரட்டல். மலைப்பகுதியின் பசுமையை கண்ணுக்கு குளிர்ச்சியாக படமாக்கி உள்ளார். பச்சைப்புல்வெளி, காடு, மணிக்கூண்டு, பள்ளிக்கூடம், பனி விழும் இரவு என அத்தனையையும் அம்சமாக காட்டுகிறார். சான்சே இல்லை. படத்தில் தூள் கிளப்பும் இன்னொரு விஷயம் இசை - BOBO சஷி. பின்னணி இசை கிளாஸ். பாடல்கள் பாப், ராப், jaaz என மேற்கத்திய ஸ்டைலில் இருக்கின்றன. நட்பை சொல்லும் "மனசெல்லாம்" பாடல் படமாக்கி இருக்கும் விதமும் அருமை. லெனின் கச்சிதமான எடிட்டிங் படத்தின் கூடுதல் பலம.


அடிபட்ட சூர்யாவின் காயங்களுக்கு பப்லு மருந்து போடும் காட்சியிலும், தன்னோடு வரும்படி சொல்லும் அப்பாவிடம் அம்மா கஷ்டப்படுவாங்காப்பா என்று சூர்யா சொல்லும் காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார் இயக்குனர். படத்தை அழகாக இயக்கி உள்ளார் அனிதா உதீப். அவரிடம் சில கேள்விகள்...


* தமிழ் சினிமா மரபுப்படி இந்த படத்தில் ஐந்து பாடல்களை சேர்த்து இருப்பது தேவையா?


* இவ்வளவு ஸ்ட்ரிக்டான ஸ்கூலில் ச்டூடன்ட்சை கண்ட்ரோல் பண்ண வாத்தியார்களே இருக்க மாட்டார்களா?


* தமிழ் படத்தின் நாயகி லூசாகத்தான் இருக்க வேண்டுமா?


* கடைசி இருபது நிமிட வன்முறை அவசியம்தானா?


இத்தனையும் மீறி படம் நம்மை ஈர்க்கிறது என்றால் அதன் காரணம் தெளிவான திரைக்கதை. இயல்பான வசனங்கள். முதல் படத்திலேயே கலக்கி உள்ளார் அனிதா. வாழ்த்துக்கள்.


குளிர் 100 டிகிரி - ஜில்.


(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

June 3, 2009

எழவு வீட்டுக்குப் போனவர்கள்..!!!

"டேய்.. கண்ணனோட அப்பா செத்துட்டாராம்.."

அசோக் ஓடிவந்து சொன்னபோது நாங்கள் எல்லோரும் வகுப்பில் அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தோம். சட்டென அங்கே ஒரு மௌனம் பரவியது. யாருக்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
"நாம என்னடா பண்றது?" - அசோக்.

"கண்டிப்பாக எல்லாரும் போகனும்டா.." - மனோஜ். வகுப்பில் தைரியமானவன். சட்டென முடிவுகள் எடுக்கக் கூடியவன்.

"இப்போ சாயங்காலம் நாலு மணி. ராத்திரியே போய் பார்த்துடலாம். காலைல போக பெர்மிஷன் கேட்டா கண்டிப்பா HOD அனுப்ப மாட்டாரு. அதனால இப்பவே கிளம்பல்லாம். என்னடா..?" மனோஜ் கேட்க எல்லோரும் சம்மதம் என்பதுபோல தலையை ஆட்டினர்.
அப்படியே பெண்களிடம் கேட்டான். வகுப்பில் மொத்தம் பனிரெண்டு பெண்கள்தான். "Girls..நீங்க வரமுடியுமா?". "சாரிடா..எங்களை ஹாஸ்தல்ல விட மாட்டாங்க.. நீங்க போயிட்டு வாங்க.. கண்ணன்கிட்ட சொல்லிடு..". ராத்திரி எட்டு மணிக்கு கிளம்புவது என முடிவானது.
கோவையில் இருக்கும் ஒரு பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிப்பவர்கள் நாங்கள். கண்ணன் எங்களை விட இரண்டு வயது மூத்தவர். லேட்டரல் என்ட்ரியாக சமீபத்தில்தான் எங்கள் வகுப்பில் சேர்ந்து இருந்தார். அவருடைய ஊர் மதுரைக்கு பக்கத்தில் ஏதோ ஒரு கிராமம் என்று சொன்னதாக ஞாபகம்.
வந்த முதல் நாளே எனக்கு கண்ணனைப் பிடிக்காமல் போனது. அவர் மாநில அளவில் பாட்மிண்டன் விளையாடுபவர் என் பெண்கள் எல்லாம் அவரை சுற்றி வந்து கொண்டு இருந்ததும் ஒரு காரணம். அத்தோடு, நாங்கள் எல்லோரும் முதல் வருடத்தில் ராகிங் என்ற பெயரில் நாய் படாத பாடு படுவோமாம். இந்த லேட்டரல் என்த்ரிகள் நோகாமல் நேரடியாக இரண்டாம் ஆண்டு வந்து விடுவார்களாம். என்னய்யா நியாயம் இது? நண்பர்களை சேர்த்துக்கொண்டு லேட்டரல்களை நாங்களே ராகிங் செய்தோம். குறிப்பாக கண்ணனை நான் ஒட்டி எடுத்து விட்டேன். அது முதல் எனக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தம்தான்.
கண்ணனின் வீட்டுக்குப் போக எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆறு மணி நேர பயணம். எனக்கு பஸ்ஸில் உக்கார்ந்து தூங்கவும் தெரியாது. கடுப்போடு ரூமில் இருந்தபோது தேவா உள்ளே வந்தான். என் உயிர் நண்பன்.

"என்னடா.. கிளம்பலை..?"

"நான் வரலை.."

"ஏண்டா.."

"பிடிக்கலைன்னா விடேன்.."

"லூசு மாதிரி பேசாத.. எல்லாப் பசங்களும் போறாங்க.. நாம மட்டும் போகலைன்னா நல்லா இருக்காது.. கிளம்பு.." அவன் சொன்னால் என்னால் மறுக்க முடியாது. வேண்டா வெறுப்பாகக் கிளம்பினேன்.
படர்ந்து இருந்த இருட்டின் பாதையில் பஸ் போய்க்கொண்டு இருந்தது. எல்லாரும் ரொம்ப அமைதியாக இருந்தார்கள். காற்றின் சத்தம் மிகப் பெரியதாக, அச்சுறுத்துவதாக இருந்தது. எதன் பொருட்டு இந்தப் பயணம்? பிடிக்காத ஒருவனுக்கு நான் ஏன் போய் ஆறுதல் சொல்ல வேண்டும்? திரும்பிப் பார்த்தேன். தேவா என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்னடா..?"-நான்.

"ரொம்ப ஏழைப்பட்ட குடும்பமாம்..விளையாட்டு கோட்டாலதான் சீட்டே கிடைச்சுதாம்..இப்போ அப்பா வேற செத்துட்டாரு.. கஷ்டம்தான்.." - தேவா.

"ஏன்தான் கஷ்டம்னு ஒன்னை ஆண்டவன் படிச்சானோ?"

"சும்மா இருடா.. கஷ்டம்னு ஒன்னு இருக்குறதாலத்தான் நல்லது நடக்குறப்ப நம்மளால சந்தோஷமா இருக்க முடியுது. எப்பவுமே சந்தோஷம் மட்டுமே இருந்தா அதுக்குப் பேரு வாழ்க்கை இல்லை.. இயந்திரத்தனம்..". எனக்கு சுரீர் என்றது. தேவா அத்தோடு தூங்கிப் போனான். நான் வெளியில் இருந்த இருட்டின் கருமையை வெறிக்கத் தொடங்கினேன்.
கண்ணனின் வீட்டை அடைந்தபோது மணி இரண்டாகி விட்டிருந்தது. அடிப்படை வசதிகள் இல்லாத சின்ன கிராமம். வீட்டின் முன்பு பந்தல் போட்டு இருந்தார்கள். ஒரு மரச்செரைப் போட்டு அதில் கண்ணனின் அப்பா உடம்பைக் கிடத்தி இருந்தார்கள். அவர் காலின் கீழே ஒரு வயதான பெண் அழுது அழுது ஓய்ந்தவராக அமர்ந்து இருந்தார். கண்ணனின் அம்மாவாக இருக்கக் கூடும். நாலைந்து பெரியவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்று பேசிக்கொண்டு இருந்தார்கள்.
ஒரு மரபெஞ்சின் மீது கண்ணன் உக்கார்ந்து இருந்தார். கண்ணெல்லாம் சிவந்து போய் இருந்தன. எங்களைப் பார்த்தவுடன் வேகமாக வந்தார். நெருங்கிய நண்பனான வரதன் அவரருகே சென்றவுடன் உடைந்து அழ ஆரம்பித்தார். வரதன் அவரை ஆதரவாக தோளில் சாய்த்துக் கொண்டான். எனக்கு கோபம் கோபமாக வந்தது.
"இத்தனை பேரு வந்திருக்கோம்.. பாருடா.. அவன் மேல சாஞ்சு அழறதை.."
"சும்மா இருடா.. உளராம வா.." தேவா என்னை அதட்டியவுடன் அமைதியானேன்.
"வயல்ல வேலை பார்க்கும்போது பாம்பு கடிச்சிருச்சு..பக்கத்துல ஆசுபத்திரி ஏதும் இல்லை.. மதுரைக்கு கொண்டு போயும் காப்பாத்த முடியல.." பெரியவர் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். "சின்ன வயசுல என்னைக் கூட பாம்பு கடிச்சது.ஆனா பாருங்க.. அதுதான் செத்துப் போச்சு..ஹி ஹி ஹி..". சூழ்நிலைக்கு சம்பந்தமே இல்லாமல் உளறிக் கொண்டிருந்தான் சற்குணம். மற்றவர்கள் அவனைத் திரும்பி முறைக்கவும் வாயை மூடிக் கொண்டான்.
கிளம்பும்போது கண்ணின் அம்மா மெதுவாக எழுந்து வந்தார். அருகில் இருந்த என் கைகளைப் பிடித்துக் கொண்டார். "ரொம்ப நன்றி தம்பிங்களா.. கண்ணனுக்காக இவ்ளோ தூரம் வந்து இருக்கீங்க.. இனிமேல் என் புள்ளைய நீங்க எல்லாம்தான் பார்த்துக்கணும்.. அவனை நம்பித்தான் என் உசிரு இருக்கு.." அழத் தொடங்கினார். அவரைத் தேற்றிவிட்டு கிளம்பினோம். என் மனதில் ஏதோ சொல்ல முடியாத பாரம் கூடி இருந்தது. பஸ்ஸில் ஏறியவுடன் என்னை அறியாமல் தூங்கி விட்டேன்.
எனக்கு முழிப்பு வந்தபோது பஸ் எங்கோ நின்று கொண்டு இருந்தது. பஸ்சுக்குள் முக்கால்வாசி பசங்களைக் காணவில்லை. கடிகாரம் மணி ஐந்தரை என்றது. தேவா கீழே நின்று கொண்டு இருந்தான்.

"எங்கடா.. எவனையும் காணோம்..?"

"எல்லாம் தண்ணியடிக்கப் போய் இருக்கானுங்க.." அவன் எரிச்சலோடு சொன்னான்.

"என்னடா சொல்ற.." என்னால் நம்பவே முடியவில்லை.

"ஆமாண்டா.. போய் அரை மணி நேரம் ஆச்சு.. ஒருத்தனையும் காணோம். இன்னைக்கு காலேஜுக்கு போன மாதிரிதான்."
எல்லாரும் வந்து பஸ்ஸை எடுத்த பொது மணி ஆறரை. முந்தைய நாள் துக்க வீட்டுக்கு போன நினைவே அவர்களிடம் இல்லை. உற்சாகத்தில் மிதந்தார்கள். ஒருவன் போய் டேப்பில் கேசட்டை போட்டான். ஏதோ ஒரு குத்துப்பாட்டு ஓடத் துவங்கியது. ஆட ஆரம்பித்தவர்கள் மற்றவர்களையும் எழுந்து ஆடச் சொன்னார்கள். ஆடியவர்களில் வரதனும் ஒருவன். எனக்கு அருவெறுப்பாக இருந்தது. ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. என்ன மனிதர்கள் இவர்கள்? எப்படி இவர்களால் இப்படி இருக்க முடிகிறது?
கண்ணன் அப்பாவை படுக்க வைத்து இருந்த காட்சி என் கண்ணில் படமாகத் தெரிந்தது. ஆனால் அந்த முகம்.. அதை உற்றுப் பார்த்த போது என் அப்பாவின் முகமாக இருந்தது. எனக்கு வயிற்றைப் புரட்டியது. தண்ணி அடித்த நண்பன் ஒருவன் என் கையைப் பிடித்து இழுத்தான்.

"வாடா ம்மாப்ள.. வா.. நீயும் ஆடு.."
நான் எழுந்து நின்றேன். நாளை என் வீட்டிலும் ஒரு மரணம் நடக்கக் கூடும். அப்போது இவர்கள் இதேபோலத்தான் ஆடுவார்கள்..பூம் பூம் பூம்.. இசையின் வேகம் கூடியது. தப்பு சத்தத்தோடு இன்னொரு வேகமான பாட்டு ஒலிக்க ஆரம்பித்தது.
"ஆடுறா.. ஆடு..' சுற்றி இருப்பவர்கள் கத்தினார்கள்.

நான் ஆடத் தொடங்கினேன். டம் டம் டம்.. பாட்டும் பிணமாக இருக்கும் என் அப்பாவின் முகமும் எனக்குள் மாறி மாறி வந்து போயின. கண்ணனை நினைக்கும் போது பாவமாக இருந்தது. சடாரென உடைந்து போனவனாக நான் ஓவெனக் கதறி அழத் தொடங்கினேன்.
{ 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது }
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

June 1, 2009

தேவாரம் - நினைவுகளின் மடியில்..!!!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருக்கும் எல்லோரும் குச்சனூரில் உள்ள சனிபகவான் கோவிலுக்கு செல்லலாம் என்று முடிவானது. பொதுவில் எனக்கு கடவுள் நம்பிக்கை அவ்வளவாக இல்லாதபோதும் வீட்டில் சொல்லும்போது மறுப்பது கிடையாது. மற்றவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தித்தான் என்னுடைய கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டும் என்பது தேவையில்லை என்ற எண்ணம் எனக்குண்டு. எனவே மகிழ்ச்சியாக சம்மதித்தேன். மகிழ்ச்சிக்கு இன்னொரு காரணம் - அங்கிருந்து பத்து மைல் தூரத்தில்தான் என் அம்மா பிறந்து வளர்ந்த ஊர் இருக்கிறது. நான் விவரம் தெரிந்து அங்கே போனது கிடையாது. எனவே இந்த முறை போகலாம் என்று எனது ஆசையை சொன்னபோது வீட்டிலும் ஒத்துக் கொண்டார்கள்.

தேவாரம் - இதுதான் என் பாட்டியின் ஊர். மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் ஒரு சின்ன டவுன். தேனி வழியாகப் போக வேண்டும். மதுரையில் இருந்து கிளம்பியபோது சரியான வெயில். ஆனால் போகப்போக காற்றின் குளுமை அதிகமாகிக் கொண்டே போனதால் வெயில் தெரியவில்லை. இருபுறமும் மலைகள் சூழ்ந்து நிற்க, குறுகிய பாதியின் வழியே பயணம் செய்யும் அனுபவமே அலாதிதான். திம்மரச நாயக்கனூர் என்னும் ஊரில் தர்ம சாஸ்தா கோவில் என்று ஒன்று உள்ளது. சிறுதெய்வம் போல. வாகனங்களை அங்கே நிறுத்தி பிரச்சினை இல்லாமல் பிரயாணம் செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து போகிறார்கள். அந்த சாமியின் கதை தெரிந்த மக்கள் யாரும் அங்கே இல்லை என்பது சோகம்தான். பின்பு குச்சனூர் அடைந்து சாமி கும்பிட்டு விட்டுக் கிளம்பினோம்.

நகரத்தின் இரைச்சல்களைப் பிரிந்து சிறு கிராமங்களின் வழியே பிரயாணித்து ஊரை அடைந்தோம். போகும் வழியில் வைகை நதி என்னும் போர்டு குறுக்கிட்டது. ஆனால் ஆறு சுத்தமாக வறண்டு கிடந்தது. நீர்ப்பாசனம் இல்லாத காரணத்தால் வயல்கள் எல்லாம் காய்ந்து கிடந்தன. விவசாயம் ரொம்ப கம்மியாகி விட்டதாக சொன்னார்கள். மக்கள் எல்லாரும் கிராமங்களை விட்டு நகரங்களுக்கு செல்லும் சூழலில் வருங்காலத்தில் விவசாயம் என்றால் என்ன என்று கேட்கும் நிலை வந்தாலும் ஆச்சரியம் இல்லை. போகும் வழியில் நான் பார்த்த பல தியட்டர்கள் மூடிக் கிடந்தன. வீட்டிலேயே டிவியும், டிவிடியும் வந்த பிறகு தியேட்டர்கள் எதற்கு என்று திருப்பிக் கேட்கிறார்கள்.

ஊரில் இருக்கும் அரண்மனை ஒன்றை பற்றிய நானூறு வருடங்களுக்கு முந்தைய சுவையான கதையும் நிலவி வருகிறது. ராஜா இறந்து போனதால் ராணி இளம் வயதிலேயே பொறுப்புக்கு வருகிறார். அவருக்கும் மந்திரி ஒருவருக்கும் காதல் உண்டாகி, ராணியும் உண்டாகி விட்டாராம். ஊருக்குத் தெரியாமல் பிள்ளை பெற மதுரைக்கு போனாராம் ராணி. திரும்பி வரும்வரை அரசை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை மந்திரி தன சொந்தக்காரகளிடம் தந்து உள்ளார். பிரசவத்தில் ராணி இறந்து போக, மந்திரியை தந்திரமாக மற்றவர்கள் கொன்று விட்டார்களாம். பின்னர் ராணியின் ஆவி சதிகாரர்கள் எல்லாரையும் கொன்று போட்டு விட்டதாக சொல்கிறார்கள். இன்றும் அரண்மனை பாழடைந்து கிடக்கிறது.

என் பாட்டி அந்த கிராமத்தில் ரொம்ப வசதியாக வாழ்ந்தவராம். ஊரின் முதல் மெச்சு வீடு அவருடையது தானாம். பல ஏக்கர் ஏலத்தோட்டங்கள் சொந்தமாக இருந்து இருக்கின்றன. அத்தனையையும் அவருடைய அண்ணனே ஏமாற்றி வாங்கிக் கொண்டு விட்டார். இப்போது பாக்கி இருப்பது ஒரே ஒரு வீடு மட்டுமே. நாங்கள் வந்து இருக்கும் விஷயம் தெரிந்தவுடன் அக்கம் பக்கத்து சனங்கள் எல்லாம் ஒன்று கூடி விட்டார்கள். ஜாதி மதம் பார்க்காமல் எல்லோரும் ஒன்றாக பழகி உள்ளார்கள் என்பதைப் பார்க்கும்போது ரொம்ப நெகிழ்வாக இருந்தது.
என் அம்மாவின் இளவயது தோழிகள் எல்லாரும் வந்து விட்டிருந்தனர். என் கண்முன்னே அம்மா அவரது பால்ய காலத்துக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். அம்மா யாரையும் வாடி, போடி என்றெல்லாம் பேசி நான் பார்த்தது கிடையாது. ஆனால் நேற்று பார்த்தேன். அம்மாவுக்கு சந்தோஷம் தாளவில்லை. இதுதான் நான் தூங்கும் கட்டில், இவதான் என்னோட பெஸ்ட் பிரண்டு, இந்த மாமாதான் என்னைத் தூக்கி வளர்த்தவங்க, இந்தக் கிணத்துலதான் எல்லாம் ஒண்ணா குளிப்போம் என்றெல்லாம் பல விஷயங்களை சொல்லிக் கொண்டே வந்தார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை.
கிளம்பும்போது அம்மா உடைந்து அழத் தொடங்கி விட்டார். நான் எதுவும் சொல்லவில்லை. வெளியில் சொல்லாத ஆசை ஒன்று நிறைவேறும்போது வரும் ஆனந்தக் கண்ணீர் அது. வீட்டிற்கு வந்த பிறகு அம்மா என்னிடம் சொன்னார் .. " நிறைய நாள் கழிச்சு நான் இன்னைக்கு நானாக இருந்தேன்.. ரொம்ப தாங்க்ஸ்டா தம்பி..". ஏதோ ஒன்றை சாதித்தது போல எனக்கும் சந்தோஷமாக இருந்தது...!!!
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)