October 30, 2009

கண்டேன் காதலை - திரைப்பார்வை..!!!


ஹிந்தியில் சக்கை போடு போட்ட"Jab We Met" படத்தின் தமிழ் ரீமேக் தான் "கண்டேன் காதலை". ஆறுமுகம் என்னும் டப்பாப்படத்துக்குப் பிறகு இந்தப் படத்தைத்தான் சின்ன தளபதி(?!) பரத் பெரிதும் நம்பியிருக்கிறார். "ஜெயம்கொண்டான்" என்ற படத்தை இயக்கிய ஆர்.கண்ணனின் இரண்டாவது படம். மோசர்பியர் தயாரிப்பில் சன் பிக்சர்ஸ் விநியோகம் செய்திருக்கிறார்கள்.

வியாபாரத்திலும், காதலிலும் பெற்ற தோல்விகளால் மனம் உடைந்து கிடைக்கிறார் பரத். சாவைத் தேடித் போகும் வழியில் துறுதுறு பெண்ணான தமன்னாவை சந்திக்கிறார். அவர்களுக்குள் இனம் புரியாத ஒரு நட்பு உருவாகிறது. தமன்னாவுடன் தேனியில் இருக்கும் அவர் வீட்டுக்குப் போகிறார். அங்கே தமன்னாவுக்கும் அவருடைய மாமனான சந்தானத்துக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. ஏற்கனவே தமன்னா முன்னாவைக் காதலிப்பதால் பரத்துடன் வீட்டை விட்டு எஸ்கேப் ஆகிறார்.

ஊட்டியில் தமன்னாவை விட்டு சென்னை திரும்பும் பரத் வாழ்க்கையில் மீண்டும் நம்பிக்கையோடு போராடி முன்னேறுகிறார்.ஆனால் தமன்னாவின் வீட்டார் பரத் தான் தமன்னாவை ஏதோ செய்து விட்டதாக அவரை மிரட்டுகிறார்கள். காதலனைத் தேடி ஊட்டிக்குப் போன தமன்னா என்ன ஆனார்? அவருடைய காதல் என்ன ஆனது? கடைசியில் அவர் யாரைக் கைபிடிக்கிறார்? இதுதான் "கண்டேன் காதலை".

இது முழுக்க முழுக்க தமன்னாவுக்கான படம். அழகாக இருக்கிறார். ஹிந்தியில் கரீனா செய்ததை அப்படியே செய்ய முயற்சிக்கிறார். முதல் பாதியில் அடாவடியாகவும், இரண்டாம் பாதியில் அமைதியாகவும் மனதை அள்ளுகிறார். ஆனால் அவருடைய குழந்தைத்தனமான பேச்சு ஒரு சிலருக்கு எரிச்சலைக் கிளப்பக் கூடும். ஷாகிதின் பாத்திரத்துக்கு பரத் அவ்வளவு நன்றாகப் பொருந்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏதோ ஒன்று மிஸ்ஸிங். ஒரு சில இடங்களில் அவர் பேசுவதும் நாடகத்தனமாக இருக்கிறது.

படத்தில் கைதட்டல்களை அள்ளுபவர் தமன்னாவின் மாமனாக வரும் சந்தானம். கிராமத்து மனிதராக பட்டாசு கிளப்புகிறார். சிங்கமுத்துவோடு சேர்ந்து கொண்டு அவர் அடிக்கும் லூட்டிகள் அட்டகாசம். ரவிச்சந்திரன், நிழல்கள் ரவி, அழகம்பெருமாள், மனோபாலா, சுதா, முன்னா, ஜீவா என்று ஒரு பெரிய கூட்டமே படத்தில் இருக்கிறது. எல்லோருமே அவரவருடைய பங்களிப்பை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

ஹிந்தி படத்தின் வெற்றிக்குப் பாடல்கள் பெரிதும் துணைபுரிந்தன. ஆனால் இங்கே வித்யாசாகர் சொதப்பி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். சூப்பர் ஹிட் என்று சொல்லும் அளவுக்கு எந்தப் பாடல்களுமே இல்லை. "காற்று புதிதாய்", "ஓடோடிப் போறேன்" ஆகிய இரண்டு பாடல்கள் மட்டுமே தேறுகின்றன. பாடல்களிலும், ஊட்டிக் காட்சிகளிலும் ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா நன்றாகச் செய்திருக்கிறார். ரேம்போனின் கலை இயக்கம் படத்துக்கான ரிச் லுக்குக்கு பெரிதும் உதவுகிறது.

இம்தியாஸ் அலியின் கதைக்கு திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் கண்ணன். தமிழ்ச் சூழலுக்கு இந்தக் கதை சரிவருமா எனத் தெரியவில்லை. தமிழுக்குத் தேவையான மாற்றங்கள் செய்வதிலும், நகைச்சுவைக் காட்சிகளை படமாக்குவதிலும் இயக்குனர் காட்டிய கவனத்தை கொஞ்சம் திரைக்கதையை விறுவிறுப்பாக்குவதில் காட்டி இருந்தால் இன்னும் படம் நன்றாக வந்திருக்கும். இரண்டாம் பாதி ரொம்பவே நீளம். போதாக்குறைக்கு அடிக்கடி வரும் பாட்டுகள் வேறு படத்தின் வேகத்தை குறைக்கின்றன. என்றாலும் எந்த விதமான இரட்டை அர்த்த வசனங்களோ, ஆபாசமோ இல்லாமல் ஒரு நீட்டான காதல கதையை படமாக்கி இருப்பதற்காக இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

கண்டேன் காதலை - கண்ணியம்

October 28, 2009

ஊடல் பொழுதுகள்..!!!


மேகங்கள் ஏதுமற்ற பாழ்வெளியில்
சுற்றித்திரியும்
திசையறியாப் பறவையாய்
தத்தளித்துக் கிடக்கிறது மனது

தீராத மௌனத்தின் கசப்பால்
நிரம்பி வழிகிறது
உனக்கும் எனக்குமான இடைவெளி

எத்தனை முயற்சித்தும்
துயரத்தின் பள்ளத்தாக்குகளை
தாண்ட இயலாமல்
தோற்றுப் போகிறேன்

நெஞ்சை ஆற்றிச்செல்லும்
ஒற்றைப் பார்வைக்காய்
உன்னை நான் எதிர்நோக்க -
அமிலம் தோய்ந்த வார்த்தைகளால்
உனக்கான என் மொத்த அன்பையும்
சுக்கு நூறாக சிதறடிக்கிறாய்

கோபம் மாய்ந்துபோன
பிறிதொரு கணத்தில்
மன்னிப்பு என்னும் கேடயம் ஏந்தி
என் மடி சாய்கிறாய்

மனதின் வலியை மறைத்தவளாய்
முகத்தில் புன்னகை தேக்கி
உன்னை அரவணைத்துக் கொள்கிறேன்

ஆனால் - அந்த
நொடிப்பொழுதின்
பின்னத்தில்
என்னருகே
இருந்தும்
நீ இல்லாதவனாகவே இருக்கிறாய்..!!!

October 22, 2009

உக்கார்ந்து யோசிச்சது(22-10-09)..!!!

தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு. இடம்: .கே.அகமத் ஜவுளிக்கடை, மதுரை. போத்திஸ், லலிதா எல்லாம் வந்து விட்டதால் இந்த முறை அகமதில் அவ்வளவாக கூட்டம் இருக்காது என்று சொன்னவர்கள் முகத்தில் கரி. என் அப்பாவுக்கு வேட்டி, சட்டை வாங்கி விட்டு பணம் கட்டுவதற்காக கியூவில் நின்று கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் ஒரு கிராமத்து தம்பதி. அவர்கள் பேசிக்கொண்ட வார்த்தைகள்..

கணவன்: உன்னைய நான் என்ன சொல்லிக் கூட்டிட்டு வந்தேன்? உனக்கும் பிள்ளைங்களுக்கும் துணி எடுத்தாப் போதும்னு தானே? இப்போ நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க?

மனைவி: ஏன்? நான் என்ன தப்பு பண்ணிட்டேனாம்?

கணவன்: விளையாடாத புள்ள.. எனக்கு ரெண்டு வேட்டி, நாலு கைலி.. இதெல்லாம் அவசியமா? இந்தக் காசுக்கு குழந்தைக்கு இன்னும் நல்லதா துணி வாங்கி இருக்கலாம்..

மனைவி: தே.. சும்மாக் கிட..கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா மில்லுக்கு ஒரே கைலிய கட்டிட்டு போய்க்கிட்டு இருக்க.. நாலு இடம் போற வர மனுஷன்.. உனக்கு நாலு துணி வாங்கினா ஒண்ணும் தப்பு கிடையாது.. வா..

அன்பும் பாசமும் நிறைந்த வெள்ளந்தி மனிதர்கள். ஒருவர் மற்றொருவருக்காக கவலைப்படும் நல்ல உள்ளங்கள். அவர்களைப் பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இது போன்ற மனிதர்கள் இருப்பதால்தான் அன்பென்னும் உணர்வுக்கு இன்னும் இந்த உலகில் மரியாதை இருக்கிறது எனத் தோன்றுகிறது.

***************

தீபாவளி அன்று "தினசரி வாழ்க்கை" mayvee காசி விஸ்வநாத் போன் செய்து வாழ்த்துகள் கூறினார். ஆனால் மனிதர் கடைசியில் செய்த அட்வைஸ் தான் என்னை மண்டை காயச் செய்தது. "பட்டாசுகளை எல்லாம் பத்திரமா வெடிங்க.. அது உங்க சேப்டிக்கு. தயவு செஞ்சு அன்னைக்காவது இலக்கியம் பேசாதீங்க, அது உங்களை சுத்தி இருக்குற மத்தவங்க சேப்டிக்கு.." அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். ஏன்யா எம்மேல இந்தக் கொலைவெறி?

***************

நேற்றைக்கு முன்தினம் நண்பர் ஸ்ரீதரோடு டவுன் ஹால் ரோட்டில் சுற்றிக் கொண்டிருந்தேன். நடுத்தர வயதுடைய, ஒரு கால் இல்லாத மனிதரொருவர் நடைபாதையின் ஓரத்தில் நின்றபடி தர்மம் கேட்டுக் கொண்டிருந்தார். பார்க்கப் பாவமாக இருக்கவே இரண்டு ரூபாயை கொடுத்து விட்டு வந்தேன். அப்போது அந்தப் பக்கமாக போய்க்கொண்டிருந்த இன்னொரு மனிதர் என்னருகே வந்து என்னைக் கடிந்து கொண்டார். "இந்த மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் தர்மம் பண்ணாதீங்க சார். அந்த ஆளுக்கு நாலு புள்ளைங்க. எல்லாமே பிச்சை எடுக்குதுங்க. கிடைக்குற காசை வச்சு தண்ணி அடிக்கிறதும், வரிசையாப் பிள்ளையப் பெத்துக்குறதும் மட்டும்தான் இவங்களுக்குத் தெரியும்..."சொல்லி விட்டுப் போய் விட்டார். நான் திரும்பி ஸ்ரீதரைப் பார்த்தேன். அவர் ஒரே ஒரு வாசகம்தான் சொன்னார்.."ஜெயகாந்தனோட ஒரு கதைல படிச்சு இருக்கேன். இந்த மாதிரி விளிம்பு நிலை மனிதர்களுக்கு இருக்கக் கூடிய ஒரே பொழுதுபோக்கு அதுதானே.. அதை எப்படிக் குற்றம் சொல்ல முடியும்?" எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக நடக்கத் தொடங்கினேன்.

***************

சன் டிவி தன்னுடைய அடுத்த படமான "கண்டேன் காதலை" படத்தோட புரமொஷனை ஆரம்பிச்சுட்டாங்க. அப்போ "வேட்டைக்காரன்"?. அது பொங்கலுக்குத்தான் வரும்னு நினைக்கிறேன். போட்டிக்கு அசலும் வந்தா களைகட்டும். பார்க்கலாம். தீபாவளிக்கு வந்த படங்கள்ல பேராண்மை தான் முதலிடம். ஆதவனைப் பார்த்த பதிவுலக மக்கள் எல்லோருமே செம பிளேட் என்கிற மாதிரி சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஆனால் எனக்கு என்னமோ அப்படித் தோணல. பழைய படங்களோட உல்டா, கிளைமாக்ஸ் கொடுமை அத்தனையும் தாண்டி படம் பி, சி செண்டர்ல எல்லாம் பட்டையக் கிளப்பும்னு நினைக்கிறேன். அதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

***************

இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் - புலிப்பானி ஜோதிடர். சந்தியா பதிப்பக வெளியீடு. "காலபைரவன்" என்னும் புனைப்பெயரில் எழுதி வரும் விஜயகுமார் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார் என்றறிந்தபோது உள்ளூர ஒரு சந்தோஷம். வித்தியாசமான கதைக்களங்கள். எல்லாக் கதைகளுமே நன்றாக இருந்தபோதும் "வனம்" என்னும் கதை என்னை மிகவும் பாதித்தது. பள்ளிக்கூட மாணவர்களை வெறும் இயந்திரங்களாகப் பார்க்காமல் இயற்கையைக் கற்றுத்தர முயலும் ஒரு ஆசிரியர் எவ்வாறு காயப்படுகிறார் என்பதை அருமையாக சொல்லி இருக்கிறார் நண்பர் காலபைரவன். படிக்க வேண்டிய புத்தகம்.

***************

பதிவுலக நண்பர் பொன்.வாசுதேவனின் "அகநாழிகை" என்னும் கலை இலக்கிய சிற்றிதழ் வெளியாகி உள்ளது. அவருக்கு வாழ்த்துகள். கதை, கவிதை, கட்டுரை, உலக சினிமா, தமிழ் சினிமா, அரசியல், குறும்படம் என சகல தளங்களையும் தொட்டுச் செல்கின்றது புத்தகம். அருமையான வடிவமைப்பு. பெரிய எழுத்தாளர்களின் படைப்புகளுடன் நம் சக பதிவர்களின் படைப்புகளையும் பார்க்க நேரிடும்போது ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. புத்தகத்தில் நம்முடைய படைப்பும் இடம்பெற நாமும் நன்றாக எழுத வேண்டும் என்கிற உத்வேகத்தையும் தருகிறது.

இதழில் வெளியாகி இருக்கும் கதைகளில் பாவண்ணனின் "பூனைக்குட்டி" என்னும் கதையும், எஸ்.செந்தில்குமாரின் "பாலை நிலக் காதல்" என்னும் கதையும் மனதை நெகிழச் செய்தன. கவிதைகளில் தமிழ்நதி, ந.லக்ஷ்மி சாகம்பரி, அய்யனார், விதோஷ், என்.விநாயக முருகன், லீனா மணிமேகலை, மண்குதிரை, சேரல், கே.ஸ்டாலின் ஆகியோரின் கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்து இருக்கின்றன. குறிப்பாக என்.விநாயக முருகனின் இந்தக் கவிதை என்னை மிகவும் பாதித்தது.

பெருநகரில் தொலைந்து போன
பறவையொன்றை
நான்கு வயது மகளுக்கு
விளக்க வேண்டியிருந்தது

புத்தகத்தில் பறக்கும்
காட்டுப்பறவையை
விவரித்தேன்

குரல் பதியப்பட்ட
ஒலிநாடா ஓடவிட்டேன்

இந்த ஸ்பரிசம் போலவென்று
கூண்டுக்கிளியை
தொட்டுக் காட்டினேன்

மூன்றையும் ஒன்று சேர்த்துக் காட்ட
முடிந்ததேயில்லை..

அகநாழிகைக்கும், வாசுவுக்கும் மீண்டும் என் வாழ்த்துகள்..!!!!

October 18, 2009

ஆதவன் - திரைவிமர்சனம்..!!!


1980களில் ரஜினி நடித்து தாய்வீடு என்று ஒரு படம் வந்தது எல்லோருக்கும் நினைவிருக்கலாம். அதே கதையை கொஞ்சம் உல்டா செய்தால் ஆதவன் ரெடி. நோ லாஜிக், ஒன்லி மேஜிக் - இதுதான் கே.எஸ்.ரவிக்குமார் படங்களின் தாரக மந்திரம். ஏன், எதற்கு என்று கேள்வி கேட்காமல் படம் பார்த்தால் ரெண்டு மணி நேரம் பொழுது போக்கி விட்டு வரலாம். ஆதவனிலும் அதே கதைதான். குருவி என்னும் மாபெரும் வெற்றிப் படத்துக்குப்(?!!) பிறகு உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் இரண்டாவது படம்.

கூலிக்கு கொலை செய்பவர் சூர்யா. குழந்தைகளைக் கொன்று உடல் உறுப்புகளைத் திருடும் கூட்டத்தை பற்றி விசாரணை செய்ய அமைக்கப்பட்ட கமிஷனுக்குத் தலைவர் பரத் முரளி. அவரைக் கொலை செய்வதற்காக வேலைக்காரன் வேசத்தில் வீட்டுக்குள் நுழைகிறார் சூர்யா. உண்மையில் முரளிதான் சூர்யாவின் அப்பா. உண்மை தெரிந்து கடைசியில் எப்படி வில்லன்களிடம் இருந்து தன் அப்பாவை சூர்யா காப்பாற்றுகிறார் என்கின்ற ஹைதரலி, ஷாஜகான், பாபர் காலத்து கதைதான் ஆதவன்.

மாஸ் ஹீரோ ஆக முயற்சி செய்திருக்கிறார் சூர்யா. (வேணாம்னே.. சொன்னாக் கேளுங்க. படத்துக்குப் படம் ஏதோ வித்தியாசமா பண்றீங்கன்னுதான் உங்க படத்துக்கு வரோம். அதுல மண்ண அள்ளிப் போடாதீங்க...) அழகாக இருக்கிறார். ஆடுகிறார். பாடுகிறார். நடிப்பதற்கு வாய்ப்பில்லாத படத்தில் அவரால் வேறொன்றும் செய்ய இயலவில்லை. பிளாஷ்பேக்கில் பத்து வயதுப் பையனாக வரும் காட்சிகளில் மார்பிங் படு கேவலமாக இருக்கிறது. தன் கலையுலக வாழ்வில் முதல் முறையாக ஒரு படத்தில் இடையைக் காட்டாமல் நடித்து இருக்கிறார் நயன்தாரா. பரிகாரமாக ஒரு பாட்டில் "பம்பாய் - மணிஷா கொய்ராலா" மாதிரி ஓட விட்டிருக்கிறார்கள். பாடல்களுக்காக வந்து போகிறார். க்ளோசப் ஷாட்டுகளில் பாட்டி மாதிரித் தெரிகிறார்.

முதல் பாதியின் உண்மையான ஹீரோ வடிவேலுதான். ரொம்ப நாட்களுக்குப் பிறகு மனிதர் பிரித்து மேய்ந்திருக்கிறார். அட்டகாசம். பரத் முரளியின் கடைசிப் படம். நன்றாக நடித்து இருக்கிறார். படத்தில் நடித்திருக்கும் பெரிய பட்டாளத்தில் நம்மை இம்சை செய்பவர்களில் முதலிடம் சரோஜா தேவிக்கு.. இரண்டாமிடம் ரமேஷ் கண்ணாவிற்கு.... மூன்றாமிடம் ஷாயாஜி ஷிண்டேவுக்கு. லூசுத்தனமான வில்லன் வேடத்தில் ராகுல்தேவ். எப்போதும் விஜயகாந்த் படங்களில் இஸ்லாமியத் தீவிரவாதியாக வருபவர் இதில் கொலைகார டாக்டராக வருகிறார். வில்லன்கள் எல்லோருமே இஸ்லாமியராக சித்தரிக்கப்படுவது ஏன் என்பதுதான் புரிந்து தொலைய மாட்டேன் என்கிறது.

இரண்டாம் பாதி படத்தின் ஹீரோ ஹாரிஸ் ஜெயராஜ். மூன்று அருமையான பாடல்களும் இரண்டாவது பாதியில்தான் வருகிறது. ஏனோ ஏனோ பாட்டும், ஹசிலி பிசிலி பாட்டும் படமாக்கப்பட்டு இருக்கும் விதம் அருமை. வெளிநாடுகளின் அருமையான லொகேஷன்களில் படமாகி இருக்கும் ஒளிப்பதிவாளர் கணேஷுக்கு பாராட்டுக்கள். சண்டைக் காட்சிகளை அமைத்து இருப்பவர் கனல்கண்ணன். படத்தின் ஆரம்பத்தில் வரும் சேசிங் காட்சி தூள். டான்மேக்சின் எடிட்டிங் ஓகே ரகம்தான்.

ரமேஷ் கண்ணாவின் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கி இருப்பவர் கே.எஸ்.ரவிக்குமார். ஹீரோயிசம், சிரிப்பு, சண்டை, நாலு பாட்டு என தன்னுடைய வழக்கமான பார்முலாவை விட்டு நகர மறுக்கிறார். படத்தின் ஆரம்பக் காட்சிகள் படு மந்தம். அதே போல கிளைமாக்ஸ். இத்தனை ரணகொடூரமான கிளைமாக்சை பார்த்து ரொம்ப நாளாகி விட்டது. காரில் இருக்கும் பாமை, அந்தரத்தில் பறந்து போய் பிடுங்கி, ஹெலிகாப்டரில் கொண்டு சூர்யா சொருகும் காட்சியில் நமக்கு கண்களில் ரத்தக்கண்ணீரே வருகிறது. தசாவதாரம் படத்துக்குப் பின் வரும் ரவிக்குமார் படம் என்று ரொம்ப எதிர்பார்த்துப் போனால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

ஆதவன் - ஆவரேஜ்

October 17, 2009

பேராண்மை - திரைவிமர்சனம்..!!!


தமிழில் இத்தகைய பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு படம் எடுக்கத் துணிந்தமைக்காக இயக்குனர் ஜனநாதனுக்கு பாராட்டுக்கள். காதலையும் கடலையும் மையப்படுத்தி இயற்கை, மேலை நாடுகள் வளரும் நாடுகளின் மக்களை ஆராய்ச்சிக்காக பயன்படுத்தும் அவலத்தை படம்பிடித்துக் காட்டிய ஈ ஆகிய இரண்டு படங்களைத் தொடர்ந்து வெளிவந்திருக்கும் ஜனநாதனின் மூன்றாவது வித்தியாசமான படம் - பேராண்மை. உண்மையைச் சொல்வதானால் இது ஒரு ஹை-டெக் விஜயகாந்த் படம் (நன்றி - ராஜு). ஆனால் சொன்ன விதத்தில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள்.


பழங்குடி இனத்தைச் சேர்ந்த காட்டிலாகா அதிகாரி "ஜெயம்" ரவி. அவரிடம் பயிற்சிக்காக வரும் என்.சி.சி மாணவிகளில் ஐந்து பேருக்கு மட்டும் அவரை பிடிக்காமல் போகிறது. அந்தப் பெண்களோடு காட்டுக்குள் ட்ரெக்கிங் போகும் இடத்தில் இந்திய ராக்கெட்டை நாசம் செய்ய வரும் அந்நிய சக்திகள் பற்றித் தெரிந்து கொள்கிறார் ரவி. எப்படி அந்த சதியை பெண்களின் உதவியோடு ரவி முறியடிக்கிறார், அவருக்கு ஏற்படும் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறார் - இதுதான் பேராண்மை.


உடம்பை இரும்பாக்கி இருக்கிறார் "ஜெயம்" ரவி. சண்டைக் காட்சிகளில் பயங்கர ரிஸ்க் எடுத்திருக்கிறார். சமீப காலங்களில் ஒரு தமிழ் சினிமா ஹீரோ கோவணத்துடன் நடித்திருப்பது இந்தப் படமாகத்தான் இருக்கும். பயிற்சிக்கு வரும் பெண்களால் அசிங்கப்படும் போதும், மேலதிகாரி கேவலப்படுத்தும்போதும் தானும் கலங்கி நம்மையும் கலங்க வைக்கிறார். ஐந்து கதாநாயகிகள். நிறைவாகச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக அஜிதாவாக வரும் பெண் செம க்யூட். புதைகுழியில் மாட்டி செத்துப் போகும்போது பரிதாபத்தை அள்ளிக் கொள்கிறார். ஆரம்ப காட்சிகளில் நாயகிகளின் சேட்டை நம்மை எரிச்சல் கொள்ளச் செய்தாலும் போகப்போக மனம் மாறி நாட்டுக்காக போராடும் காட்சிகளில் கலக்குகிறார்கள்.


மேலதிகாரியாக பொன்வண்ணன். கீழ்சாதிக்காரன் என்று ரவியை அவமானப்படுத்துவதும், பழங்குடி இனத்தவரை அடித்து நொறுக்கும்போதும் பார்ப்பவர்களை வெறிகொள்ளச் செய்கிறார். அந்நிய சக்திகளை போராடி வீழ்த்துவது ரவியாக இருந்தாலும், கடைசியில் ஜனாதிபதி விருதை பொன்வண்ணன் வாங்குவது நம் நாட்டில் நிலவும் குரூரமான நிலையைக் காட்டுகிறது. வார்டனாக வரும் வடிவேலுவும், ஊர்வசியும் வெட்டியாக வந்து போகிறார்கள். வெளிநாட்டு வில்லன் ரோலந்த் கின்கின்கர் எருமைக்கடா போல இருக்கிறார். ரவியோடு சண்டை போட்டு செத்துப் போகிறார்.


வைரமுத்துவின் பாடல்களுக்கு இசை அமைத்திருப்பது வித்யாசாகர். தேவைப்படும் இடங்களில் மட்டும் பாடல்கள் பயன்படுத்தப் பட்டிருப்பது புத்திசாலித்தனம். ஒளிப்பதிவாளர் சதீஷ் குமார் கலக்கி இருக்கிறார். ரவியோடு சேர்ந்து கேமராவும் மரம் ஏறுகிறது, அருவிகளில் விழுகிறது. அட்டகாசமான ஆங்கிள்களில் படம்பிடித்து இருக்கிறார்கள். வி.டி.விஜயன் படத்தின் முதல் பாதியின் நீளத்தை மட்டும் கொஞ்சம் எடிட்டியிருக்கலாம். சண்டைக்காட்சிகளும் தரம்.


அரசியல் பற்றிய தன்னுடைய சமுதாயக் கருத்துகளை பயப்படாமல் சொல்லி இருக்கிறார் ஜனநாதன். விவசாயம் பற்றியும்,வெளிநாடுகள் இந்தியாவில் மார்க்கெட்டாகப் பயன்படுத்துவது பற்றியும் ஆதங்கப்படுகிறார். வசனங்களில் தீப்பொறி பறக்கிறது. படத்துக்கான பல விஷயங்களை சிரமப்பட்டு சேகரித்து இருக்கிறார்கள். ஒவ்வொரு பிரேமிலும் இயக்குனரின் உழைப்புத் தெரிகிறது. படத்தில் சில குறைகள் இல்லாமலும் இல்லை. முதல் பாதியில் பெண்கள் நடந்து கொள்ளும் விதம், வசனங்களில் இருக்கும் இரட்டை அர்த்தங்கள் ஆகியவற்றைக் குறைத்து இருக்கலாம்.


அதே போல நம்முடைய சென்சாரும் பைத்தியக்காரத்தனமாக பல வசனங்களை வெட்டியிருப்பது அசிங்கம். ஆபாசக் காட்சிகள் கொண்ட
படத்துக்கெல்லாம் "யு" சர்டிபிகேட் கொடுத்து விட்டு ஜாதியைப் பற்றிய நாட்டில் நிலவும் உண்மையான நிலையை சொல்லும் விஷயங்களைக் கட செய்வது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட முயற்சிக்காகவே கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.


பேராண்மை - பெருமை

October 15, 2009

தீபாவளி தீபாவளிதான்..!!!

பண்டிகைகள் கொண்டப்படுவதன் அடிப்படை அர்த்தம் என்ன? வேலையின் பொருட்டோ, வேறு ஏதேனும் காரணங்களை முன்னிட்டோ திசைக்கொன்றாய் சிதறிக் கிடக்கும் உறவினர்களும் நண்பர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களின் அன்பை பரிமாறிக் கொள்வதற்காகத்தான். நம் தமிழ்நாட்டில் எத்தனையோ பண்டிகைகள் கொண்டாடுகிறோம். பொங்கலைத்தான் தமிழர் திருநாள் என்றும் சொல்கிறோம். இருந்தாலும் தீபாவளி நம் வீட்டுக்கு கொண்டு வரும் மகிழ்ச்சிக்கும் சந்தோசத்துக்கும் அளவே கிடையாது.

என்னைப் பொறுத்தவரை தீபாவளிக்கு முந்தைய நாள் இரவுகள் எப்போதுமே விசேஷமானவை. என்னுடைய ரயில்வே காலனி நண்பர்கள் எல்லோரோடும் சேர்ந்து கொண்டு மதுரையின் கடைவீதிகளில் விடிய விடிய சுத்துவேன். இரவு ஒன்பது மணிக்கு உள்ளே நுழைந்தால் எப்படியும் வீடு திரும்ப காலை நான்கு மணியாகிவிடும். ரயில்வே காலனியில் எங்கள் குழுவுக்கு "குழாயடி க்ரூப்ஸ்" என்று பெயர். தெருமுக்கில் இருக்கும் குழாயடியில் தான் எங்கள் டாப்பு என்பதால் இந்தக் காரணப்பெயர். குழுவில் மொத்தம் ஐந்து உறுப்பினர்கள். (அதில் மூவருக்கு இப்போது திருமணம் ஆகிவிட்ட காரணத்தால் இந்த வருடம் அவர்களால் இரவு வெகுநேரம் வரை சுத்த முடியாத நிலை வந்து விட்டது. அடுத்த வருடம் என் கதை என்னவாகுமோ... ஹ்ம்ம்ம்ம்.)

ராத்திரி ஒன்பது மணிக்கு முன்பாகவே நண்பர்கள் அனைவரும் பெரியார் பேருந்து நிலையத்துக்கு அருகேயுள்ள சர்ச்சின் வாசலில் கூடி விடுவோம். அங்கிருந்து டவுன் ஹால் ரோட்டின் வழியாக உள்ளே நுழைந்து, ஏதாவதொரு புரோட்டாக் கடையில் செட்டில் ஆகிவிடுவோம். முதலில் ஆர்டர் செய்வது ஒரு முழு பொறித்த கோழியாக இருக்கும். (ஆளுக்கு ஒண்ணெல்லாம் கிடையாதப்பா.. மொத்த க்ரூப்புக்கும் சேர்த்துத்தான் ஒண்ணு..) அதன் பின்னர் செட்டு, புரோட்டா, தோசை என அவரவருக்கு வேண்டியதை வாங்கி அமுக்கி விட்டுக் கிளம்ப வேண்டியதுதான்.

கட்டபொம்மன் சிலை அருகே போய் நின்றாலே போதும். நாம் நடந்தெல்லாம் போக வேண்டாம். அங்கிருக்கும் மக்கள் கூட்டம் நம்மைத் தானாகவே நகர்த்தத் தொடங்கி விடும். நடைபாதை எங்கும் கடைகள். தீபாவளிக்காகவே முளைத்தவை. நமக்குப் பண்டிகை. ஒரு சிலருக்கோ அதுவே வாழ்வின் ஆதாரம். எல்லாவிதமான கடைகளும் இருக்கும். அறுபது ரூபாய்க்கு விற்கும் குடைகள், டார்ச்சுகள், மிதியடிகள், பனியன் ஜட்டி, பிளாஸ்டிக் பொருட்கள், பட்டாசுகள், பழங்கள், தட்டுமுட்டு சாமான்கள் என அந்தக் கடைகளில் கிடைக்காத பொருட்களே இருக்காது என சொல்லாம்.

திருப்பூரில் மொத்த லாட்டில் வாங்கிய டீஷர்ட், சட்டைகளை கட்டில்களின் மீது போட்டு விற்றுக் கொண்டிருப்பார்கள். ஷோரூமில் "peter england, derby" என்றால் நடைபாதைகளில் அவற்றுக்குப் பெயர் "peter english, derchy" என்றிருக்கும். விலையும் ஐம்பது ரூபாயோ அல்லது நூறு ரூபாயாகவோ தான் இருக்கும். கடை போட்டிருப்பவர்கள் எல்லோரும் அதிகாலை நேரங்களில் தான் தங்களுடைய குடும்பத்துக்கு தேவையானதை வாங்கத் தொடங்குவார்கள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்காக சிலமுறை தமுக்கம் வரை நடந்தே போக வேண்டியிருக்கும்.

நண்பர்கள் யாருக்கேனும் உடை வாங்க வேண்டி இருந்தால் வாங்கிக் கொள்வோம். ஒவ்வொரு முறையும் நடுஇரவில் மழை பெய்யாமல் இருக்காது. நடைபாதை வியாபாரிகள் எல்லோரும் மழை பெய்தால் அடித்துப் பிடித்துக் கொண்டு தங்களுடைய கடைகளை தார்ப்பாயினால் மூடி விடுவார்கள். மழை விட்டபின்பு மீண்டும் கடைகள் திறக்கப்படும். எங்காவது ஒதுங்கி இருந்து விட்டு மழை நின்றவுடன் மீண்டும் நடக்கத் தொடங்குவோம். அதிகாலை நெருங்கும்போது ஒரு டீயைப் போட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்புவோம்.

இரண்டு மணிநேரம் தான் தூக்கம். சரியாக ஆறு மணிக்கு அம்மா எழுப்பி விட்டு விடுவார்கள். குளித்து விட்டு வந்தால் சுட சுட இட்டிலியும் கறிக்குழம்பும் ரெடியாக இருக்கும். ஒரு கட்டு கட்டிவிட்டு ஊர் சுற்றக் கிளம்பலாம். ஒவ்வொரு உறவினர் வீடாகப் போய் ஆசிர்வாதம் வாங்கி விட்டு கலெக்ஷனைப் போட்டால் அன்றைய பொழுதுக்கான செலவுக்கு காசு கிடைத்துவிடும். போகிற இடங்களில் எல்லாம் வடை, ஸ்வீட், காரம் வேறு பட்டையைக் கிளப்பும். நடுவில் போனில் பலரிடம் இருந்தும் வாழ்த்துகள் வந்து சேரும்.

மத்தியானம் வீட்டுக்கு வந்து ஒரு சின்ன தூக்கம். சாயங்காலம் பசங்களோட சேர்ந்து ஒரு படம். பட்டாசு வெடிச்ச காலம் எல்லாம் முடிஞ்சு போச்சு. அப்படியே வெடி போடனும்னு ஆசைப்பட்டாலும், கரிமேடு மார்கெட்டுக்குப் போய் கொஞ்சம் வெங்காய வெடிய வாங்கிக்க வேண்டியது. யார் யாரை எல்லாம் பிடிக்காதோ, அவங்க வீட்டு சுவத்துல அடிச்சி வெடிக்க வேண்டியது. அம்புட்டுத்தான்.

வீட்டாரோடு கழிக்கும் சந்தோஷமான பொழுதுகள், நண்பர்களோடு கொண்டாட்டம் என எப்பவுமே "தீபாவளி தீபாவளிதான்". நண்பர்கள், சகோதர சகோதரிகள் , இணைய வாசகர்கள் - அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். தீப ஒளி பெருகி எல்லோரின் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்..!!!

October 14, 2009

இளிச்சவாயர்களை அடையாளம் காண பத்து வழிகள்..!!!

இந்த உலகத்தில் அநியாயத்துக்கு நல்லவர்களாகத் திரிபவர்களுக்கு சமூகம் தரக் கூடிய பெயர் - இளிச்சவாயர்கள். "எவ்வளவு அடிச்சாலும் தாங்கக்கூடிய" இந்தக் கைப்பிள்ளைகளை அடையாளம் காண எளிமையான வழிகள் இங்கே..

--> கையில் பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு காதலியோடு ஷாப்பிங் போவார்கள். திரும்பி வரும்போது கையில் ஒரு கீசெயின் மட்டுமே மிச்சமாக இருக்கும். அதுவும் காதலிக்கு வாங்கிய ஏதாவது ஒரு பொருளுக்கு ப்ரீயாக கொடுத்து இருப்பார்கள். "அவ அன்புக்கு முன்னாடி காசெல்லாம் தூசு" என்று வசனம் பேசிக் கொண்டிருப்பார்கள், கடைசியில் அவள் அண்ணா என்று சொல்லி டாட்டா காட்டிவிட்டுப் போகும் வரை.

--> மழை பெய்த ரோட்டில் வண்டியில் போகும்போது, பக்கத்தில் நடப்பவர்கள் மீது தண்ணீர் தெறித்து விடக் கூடாதே என மெதுவாகப் போவார்கள். எதிரே வரும் கார்க்காரன் இவர்களின் மீது சாக்கடை நீராபிஷேகம் செய்து விட்டுப்போனாலும் அசர மாட்டார்கள்.

--> பண்டிகை நாட்களில் மொபைலில் அதிகமாக காசு பிடிப்பார்கள் என்ற கவலை இல்லாமல் (தன்னை யாரும் மதிக்கவில்லை என்றாலும் கூட) தெரிந்த நண்பர்கள் அனைவருக்கும் போன் பண்ணி வாழ்த்து சொல்லுவார்கள்.

--> டிராபிக் சிக்னலில் மிகச்சரியாக ஸ்டாப் கோடுக்கு வெகுமுன்பாகவே வண்டியை நிறுத்தி விடுவார்கள். சிவப்பு பச்சையாக மாறும்வரை பொறுமையாகக் காத்திருந்துதான் போவார்கள். இதனால் பின்னால் நிற்கும் லாரிக்காரனிடம் வண்டி வண்டியாய் திட்டு வாங்குவார்கள்.

--> வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் அவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கி தருவார்கள். தனக்கென ஏதாவது வாங்க ஆசைப்பட்டாலும், "இப்போ இது நமக்கு அவசியமா" என்று யாராவது சொன்னால் உடனே "ஆமாம்ல" என்று அமைதியாகி விடுவார்கள்.

--> கடையில் ஏதாவது பொருளுக்கு பில் கட்ட வேண்டி க்யூவில் நிற்பார்கள். பின்னாடி வந்தவர்கள் எல்லாம் நடுவில் போய் கட்டிவிட்டுப் போனாலும் ஏன் என்று கேட்க மாட்டார்கள். "அடுத்தவங்க பொல்லாப்பு நமக்கு எதுக்கு" என்று ஒதுங்கியே இருப்பார்கள்.

--> பஸ் பிரயாணத்தில் பக்கத்து சீட்டு பயணியிடம் புத்தகத்துக்காக தொங்கிக் கொண்டே வருவார்கள். இறங்கும் இடம் வருபோதுதான் புத்தகம் இவர்கள் கைக்கு வரும். கடைசியில் பார்த்தால் அது இவர்கள் வாங்கிய புத்தகமாக இருக்கும்.

--> ரோட்டில் போகும்போது யாராவது தர்மம் கேட்டால் உடனே கொடுத்து விடுவார்கள். வாங்கியவர்கள் அவர்கள் கண்முன்னாடியே அதே பொய்யை இன்னொரு ஆளிடம் சொல்லிக் கொண்டிருப்பதைக் கண்டாலும் திருந்த மாட்டார்கள்.

--> ஆபிசில் லீவே போட மாட்டார்கள். மற்றவர்கள் வேலையையும் இவர்களே பார்ப்பார்கள். போதாக்குறைக்கு பக்கத்து சீட்காரர் செய்த தப்புக்கும் சேர்த்து இவர்களே திட்டு வாங்கிக் கொள்வார்கள்.

--> யார் என்ன சொன்னாலும் எளிதில் நம்பி விடுவார்கள். உதாரணத்துக்கு, நம்ம பதிவுலகத்தையே எடுத்துக்குங்களேன். போடுறது மசமொக்கையா இருந்தாலும், பழகுன தோஷத்துக்கு படிக்குற மக்கள், நல்லா இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டாப் போதும்.. ஆகா நாம சூப்பரா எழுதுறோம் போலவேன்னு கற்பனை கோட்டை கட்டிக்குவாங்க. ( நம்மள நாமளே வாரி விடுறது..? அட, பொது வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணமப்பா..)


டிஸ்கி: இது சத்தியமா என் சொந்த அனுபவங்க இல்லீங்கோ.. அதனால யாரும் "நீயும் இளிச்சவாயன்தானான்னு" பின்னூட்டம் போட்டுறாதீங்க சாமிகளா... ஹி ஹி ஹி..

October 12, 2009

சோளகர் தொட்டி..!!!

நீங்கள் ஒரு இருப்பிடத்தில் வசித்து வருகிறீர்கள். அந்த இருப்பிடமே உங்களுக்கு எல்லாமுமாக இருக்கிறது. அந்த இருப்பிடத்தை நீங்கள் உங்கள் தாயை விட அதிகமாக நேசிக்கிறீர்கள். திடீரென எங்கிருந்தோ வந்த ஒரு கூட்டம் உங்கள் இருப்பிடத்தை அபகரிக்க முயன்றால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

நீங்கள் வசிக்கும் பகுதியின் அருகே ஒரு திருடனின் நடமாட்டம் தென்படுகிறது. அவனைப் பிடிப்பதற்காக காவல்துறையினரும் வந்து சேர்கிறார்கள். நீங்கள் திருடனுக்கு உதவுவதாக குற்றம் சாட்டி கொடுமை செய்கிறார்கள். நாதியற்ற ஜீவனாய் நடுத்தெருவில் நிற்கும் உங்களால் யாரையும் எதிர்க்க முடியவில்லை. இப்போது நீங்கள் என்னதான் செய்ய முடியும்?

ஒரு சில விஷயங்களை வார்த்தைகளால் விளக்க முடியாது. அந்த வாழ்க்கையின் வலி அதை அனுபவித்தவர்கள் மட்டுமே அறியக் கூடியது. அப்படிக் கஷ்டப்பட்ட ஒரு இனத்தைப் பற்றிய பதிவுதான் "சோளகர் தொட்டி". தொட்டி என்பது பழங்குடி இன மக்களின் கிராமத்தை குறிக்கும் வார்த்தை. சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் வாழ்ந்த சோளகர் என்னும் பழங்குடி இன மக்கள் பற்றியும், வீரப்பன் வேட்டையின் போது போலீசாரால் அவர்கள் அனுபவித்த இன்னல்கள் பற்றியும் விரிவாகப் பேசுகிறது "சோளகர் தொட்டி".

இதை ஒரு புத்தகம் என்று சொல்வதை விட ஒரு வாழ்வியல் ஆவணம் என்றுதான் சொல்ல வேண்டும். ரத்தமும் சதையுமாய் நம்மூடே வாழும் மக்களின் சரித்திரம் இந்தப் புத்தகம். இதில் இருக்கும் பெயர்கள் வேண்டுமானால் கற்பனையாக இருக்கலாம். ஆனால் அந்த மக்கள், அவர்களுடைய வாழ்க்கை, அவர்கள் பட்ட கஷ்டங்கள் அத்தனையும் அப்பட்டமான நிஜம். ஒரு பாவமும் அறியாதவர்களாய், தான் உண்டு தன வேலை உண்டு என்று காட்டை நம்பி வாழ்ந்து வந்த கூட்டம் எப்படி எல்லாம் அலைக்கழிக்கப்பட்டார்கள் என்பதை படிப்பவர்கள் உள்ளம் நெகிழ்ந்து போகும் விதமாக பதிவு செய்திருக்கிறார் ச.பாலமுருகன்.

புத்தகம் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. சோளகர் இன மக்களின் வாழ்க்கை முறையும், அடக்குமுறையின் மூலம் அவர்களுடைய நிலத்தை அபகரிக்க நினைக்கும் அநியாயக்காரர்கள் பற்றியும் விரிவாகப் பேசுகிறது முதல் பாகம். வீரப்பனின் வருகை, சோளகர்கள் தங்களுடையது என்றெண்ணும் வனத்துக்குள் செல்ல அவர்களுக்கே தடை, தமிழக மற்றும் கர்நாடக போலிசாரின் வன்கொடுமைகள் என்று பழங்குடி மக்களின் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களை விளக்குகிறது இரண்டாம் பாகம்.

மொத்தப் புத்தகமும் பேதன் என்பவனின் மகன் சிவண்ணாவைக் கதையின் நாயகனாகக் கொண்டு விரிகிறது. விரும்பியவரைத் திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்ற சுதந்திரமும், கிடைக்கும் உணவை அனைவரும் பகிர்ந்துண்டு உண்ணுவதும், ஒருவருக்கு ஒரு பிரச்சினை என்றால் மொத்தத் தொட்டியும் ஒன்றாகத் திரள்வதும் என பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. பேதன், சிக்குமாதா, சிவண்ணா , பரம்பரை பரம்பரையாக ஊருக்கு தலைவனாக இருக்கும் கொத்தல்லி, மணிராசன் கோவில் பூசாரியாக இருக்கும் கோல்காரன் என்று எல்லா மனிதர்களுமே வெள்ளந்திகளாய் இருக்கிறார்கள். அதனாலேயே கஷ்டப்படவும் செய்கிறார்கள்.

பழங்குடி இன மக்களுக்கு போலீஸ முகாம்களில் நடக்கும் கொடுமையைப் படிக்கும்போது, மனிதர்களில் இத்தனை கொடூரமானவர்கள் இருப்பார்களா என்ற அதிர்ச்சி நமக்கு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஈரம்மா என்னும் எட்டு மாத கர்ப்பிணியை எந்த வித இரக்கமும் இல்லாமல் காவலர்கள் வன்புணர்ச்சி செய்வதும், போலீசாருக்கு தகவல் சொல்லி உதவிய புட்டனையே சுட்டுக் கொள்வதும், சிவண்ணாவின் மனைவி மாதி மற்றும் மகள் சித்திக்கு நடக்கும் பாலியல் கொடுமைகளும், ஒர்க்ஷாப் என்ற இடத்தில் வைத்து அப்பாவி மக்களுக்கு கரண்ட் ஷாக் கொடுத்து சாகடிக்கும் துயரங்களும், கொல்ல நினைப்பவர்களுக்கு தையல் அளவெடுத்து வீரப்பனின் கையாள் போன்ற சீருடையை அணிவித்து காட்டுக்குள் கூட்டிப்போய் சுடுவதும் என.. வார்த்தைகளால் சொல்ல முடியாத கஷ்டங்களை நம் சக மனிதர்கள் அனுபவித்திருக்கிறார்கள் என்பதை எண்ணும்போதே மனம் பதறுகிறது.

சோளகர் தொட்டியை நான் படிக்கையில் மனம் முழுதும் ஏதோ ஒரு வெறுமை சூழ்ந்து கொண்டது. இதற்கு முன்பாக எஸ்.ராமகிருஷ்ணனின் உறுபசி நாவலைப் படித்தபோது இதே போன்ற ஒரு மனநிலையில் இருந்திருக்கிறேன். ஆனால் சோளகர் தொட்டி என்னுள் ஏற்படுத்திய அழுத்தமும் சோகமும் மிக அதிகம். படிக்கையில் என்னையும் அறியாமல் நான் கண்ணீர் விட்டு அழ எனது அம்மா என்னமோ, ஏதோ என்று பயந்து போனதும் நடந்தது. புத்தகத்தை முடித்து கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் பிரம்மை பிடித்தவனாக அலைந்து இருக்கிறேன்.

புத்தகத்தின் முடிவில் ச.பாலமுருகன் இப்படி சொல்கிறார்.."நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் தனக்குள் உள்வாங்கிக் கொண்டு, ஏதும் செய்ய இயலாத மௌன சாட்சியாக இருக்கிறது தொட்டி..". நாமும் அதுபோலத்தானே..!!


October 9, 2009

குழந்தைகளின் உலகில்..!!!


ஏழுமலையும் ஏழுகடலும் தாண்டி
மாயமாய் மறைந்து கிடக்கும் பச்சைத்தீவில்
வானம் தொட்டு உயர்ந்து நிற்கும்
ஆலமரத்தின் அடியில் புதைந்து கிடக்கிறது
ராட்சஷனின் உயிரைத் தாங்கி நிற்கும்
மரகத வீணை..
ராஜகுமாரன் அதனைத் தேடி எடுத்து
உடைக்க யத்தனித்தபோது..
எங்கிருந்தோ வந்த அப்பாவின் குரல் கேட்டு
அம்மா காணாமல் போக..
அசதியில் தூங்கி போகிறது குழந்தை..!!
இருந்தும் -
எப்போது கதை மீண்டும் தொடங்கப்படுகிறதோ
அப்போது தான் கொல்லப்படுவோம்
என்பதை அறியாதவனாக
குழந்தையின் ஆழ்மன அடுக்குகளில்
தீராத வன்மம் கொண்டவனாக
அலைந்து கொண்டே இருக்கிறான் ராட்சஷன்..!!!

***************

திசைக்கொன்றாய் சிதறிக் கிடந்த
புள்ளிகளை இணைத்து
கர்ம சிரத்தையாய் படமொன்றை
வரைந்து கொண்டிருந்தது குழந்தை..
"பாப்பா என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க.."
தந்தையின் குரல் கேட்டவுடன்
பெருமிதம் கொண்டவளாய் ஓடி வந்து
ஆசையுடன் காகிதத்தை நீட்டினாள்..
வெள்ளை நிறக் கிளியொன்று
சிறகுகள் முற்றுப்பெறாமல்
பறக்க முடியாத நிலையில்
காகிதத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தது..
"கிளி ரொம்ப அழகா இருக்குடா தங்கம்.."
அவன் சொல்ல
பிள்ளையின் முகம்
வாடிப் போனது..
"ஐயோ.. அப்பா.. அது கிளி இல்லை.. புறா.."
மீண்டும் அவன் சொன்னான்..
"இல்லம்மா.. இது கிளிதான்.."
கோபம் கொண்டவளாய்
வெடுக்கென காகிதத்தைப்
பறித்துக் கொண்டு சொன்னாள்..
"நான் வரையுறது என்னன்னு
எனக்கு மட்டும்தான் தெரியும்.."!!!

October 7, 2009

அன்பென்ற மழையிலே - அவனும் அவளும்(8)...!!!

"ஹலோ.."

"......"

"ஹலோ.."

"சொல்லுப்பா.."

"என்னம்மா.. தூக்கமா.."

"இல்லடா.. சொல்லு.."

"என்னம்மா.. என்ன ஆச்சு.. ஏன் வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு?"

"அதெல்லாம் ஒண்ணும் இல்ல.. சொல்லுப்பா.."

"அம்மாடி.. என்னம்மா.. அழுதியா?"

"....."

"என்னன்னு கேக்குறேன்ல.. அழுதியா?"

"ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்.."

"அம்மா.. அம்மா.. அழாதடி.. என்னமா.. ஏன் அழுகுற.. வேணாம்டிமா.."

"எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல. நான் எங்கப்பாகிட்ட போறேன்.. என்ன விட்டுருங்க.. எனக்கு யாரும் வேண்டாம்.."

"அம்மா.. கோபத்துல அர்த்தங்கெட்டதனமா பேசாத.. என்னடி ஆச்சு..?"

"ம்.ம்.ம்.ம்ம்.. போன வாரம் என்னை வந்து பொண்ணு பார்த்துட்டு போனாங்க இல்ல?"

"ஆமாம்.. அதுக்கு?"

"அந்தப் பையனுக்கு என்னைப் பிடிக்கலையாம்.."

"சரி விடுடி..அவனுக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு விடுவியா.. இதுக்குப் போய் அழுதுக்கிட்டு.."

"உனக்கு என்னடா.. இதெல்லாம் உனக்குப் புரியப் போறதே இல்ல.. அவன் என்னைப் பார்க்க வந்த மூணாவது பையன்.. பார்க்க குட்டையா ஒல்லியா இருந்தான்.. அவனுக்கே எண்ணப் பிடிக்கலேன்னா..? நான் என்ன அத்தனை அழகில்லாமலா இருக்கேன்? எனக்கு வேண்டாம்.. என்ன விட்டுருங்க.. நான் செத்துப் போறேன்.. எங்கப்பாகிட்ட போகணும்.."

"சும்மா லூசு மாதிரி பேசாதடி.. ஒரு பையனுக்கு உன்னைப் பிடிக்கலேன்னா அவ்ளோதானா? வாழ்க்கைனா என்ன உனக்கு விளையாட்டா இருக்கா? உங்க அப்பா மட்டும் உசிரோட இருந்தா நீ பேசுறதுக்கு உன்னை தூக்கி போட்டு மிதிச்சு இருப்பார்..பார்த்துக்கலாம்டிமா.. ரிலாக்ஸ்டி.."

"........."

"சாகறதுன்னா ஒரு நிமிஷம் போதும்டி.. ஆனா நீ விட்டுட்டுப் போன வலி எங்களை எத்தனை பாதிக்கும்னு யோசிச்சியா? நான் எல்லாம் உனக்கு என்னன்னு இருக்கிறேன்? இல்லை கேக்குறேன்.. ரெண்டு வாரம் முன்னாடி வண்டில போறப்ப பஸ்ல போய் அடிபட்டு விழுந்து கிடந்தைல.. உடனே யாருக்கு போன் பண்ணுன?.."

"....."

"யாருக்குடி பண்ணுன..."

"உனக்குத்தான்.."

"ஏன்.. உங்க அம்மா இருக்காங்க.. அக்கா? அவங்களுக்கு எல்லாம் போன் பண்ணாம ஏன் எங்கயோ தூரத்துல இருக்குற எனக்கு பண்ணின?"

"....."

"பதில் சொல்ல முடியலைல... அதுதாண்டி நான் உனக்கு.. உங்க அப்பா திடீர்னு இறந்து போனப்ப சாமிக்கு என்ன பண்ணன்னு தெரியாம என்னை அனுப்பிச்சாரு.. கடைசி வரைக்கும் இந்தப் பிள்ளைய நல்லா பார்த்துக்கப்பான்னு.. புரிஞ்சுதா? இது ஏதோ உனக்குத் தெரியாத மாதிரி.. நான் இருக்குறப்ப, நீ செத்துருவியா? உன்னை அப்படி விட்டா அப்புறம் நான் என்னடி மனுசன்? ம்.ம்.."

"அம்மா.. டேய்.. நீ ஏன்டா அழற?"

"அப்புறம் நீ பேசுறதைக் கேட்டு உன்னை என்ன மடில போட்டுக் கொஞ்சவா முடியும்? என்னை நானே நொந்துக்க வேண்டியதுதா.."

"சரிம்மா... சாரிப்பா.. தெரியாம சொல்லிட்டேண்டா.. நீ இருக்குறப்பா நான் ஏன்டா கவலைப்படணும்?"

"இப்ப இருக்குற புத்தி பேசுறப்ப எங்க போச்சாம்? சுட்டுத் தின்னுட்டியா?"

"ஐயா சாமி.. தெரியாம பேசிட்டேன்..மன்னிச்சுடுங்க.."

"அறிவு கேட்ட முண்டம்.. எரும மாடு.. நாயே.."

"தாங்க்ஸ்.. அப்புறம்..?"

"திட்டினா தாங்க்ஸ் சொல்வியா?"

"தாங்க்ஸ் திட்டினதுக்காக இல்ல.."

"பின்ன..?"

"எனக்கு எதுன்னாலும் கவலைப்பட ஒருத்தன் இருக்கியே.. எங்க அப்பா ஸ்தானத்துல.. அதுக்கு.."

"இருப்பேன்டி அம்மு.. சாகுறவரைக்கும்.. Friends for life"

"தாங்க்ஸ்டா.."

"அப்பாடா.. இப்போதான் பிள்ளை சிரிக்கிறா.. இப்போ எவ்வளவு நல்லா இருக்கு?"

"நான் இங்கே ஈரோட்டுல சிரிக்கிறது உனக்கு சென்னைல தெரியுதாக்கும்?"

"அதெல்லாம் பீலிங்க்ஸ் dog.. கண்டிப்பா கண்ணை மூடி பார்த்தா நீ தெரியுரம்மா.."

"எப்பவும் இப்படியே இருக்கணும்டா.."

"கண்டிப்பா.. நீ சிரிச்சிக்கிட்டே இரும்மா.. சந்தோஷமா.. ஒழுங்காத் தூங்குவியா.. நான் நிம்மதியா இருக்கலாமா?"

"சரிம்மா.. நான் நல்லாத்தான் இருக்கேன்.. நீயும் நிம்மதியா தூங்குடா.."

"thats my girl..good night..take care.."

"bye da.. good night.."

October 2, 2009

உக்கார்ந்து யோசிச்சது - மதுரை ஸ்பெஷல் (02-10-09)..!!!

மதுரையில் கொஞ்ச நாட்களாக வாகனம் ஓட்டும்போது ஹெல்மட் அணிவதை கட்டாயம் ஆக்கி இருக்கிறார்கள். அணியாத மக்களுக்கு இருநூறு ரூபாய் ஸ்பாட் பைன். என்னுடைய நண்பர் ஒருவருக்கு சமீபத்தில் கிடைத்த அனுபவம் வேறு மாதிரி. மனிதரிடம் ஹெல்மட் உண்டு. ஆனால் அதை அணியாமல் பைக்கின் முன்னாடி வைத்துக் கொண்டு போய் போலீசிடம் மாட்டிக் கொண்டார். அவருக்கும் போலிஸ்காரருக்கும் நடைபெற்ற உரையாடல் இங்கே..

"சார், நான் தான் ஹெல்மெட் வச்சு இருக்கேனே.. அப்புறம் எதுக்கு சார் நிப்பாட்டுறீங்க..?"

"யோவ், ஹெல்மெட் வச்சு இருந்தா போதுமா? அதை தலைல போட்டு இருக்கணும்யா.."

"அதெல்லாம் இல்லை சார்.. உங்களுக்கு என்ன.. ஹெல்மெட் இருக்கணும்.. என்கிட்டே இருக்கு.. அவ்வளவுதான்.."

"நீ அப்படி வரியா.. சரி நான் பேச்சுக்கு கேக்குறேன்.. நீ ஒரு பலான இடத்துக்கு போறேன்னு வச்சுக்குவோம்.."

"சார்.."

"யோவ், அதிர்ச்சி ஆகாதய்யா.. சும்மா போறேன்னு தானே சொன்னேன்.. அங்கே போறப்ப ஒற (காண்டம்) வாங்கிட்டுத்தான போவ.. அதை யூஸ் பண்ணாம பாக்கெட்ல வச்சு இருந்தா உனக்கு எய்ட்ஸ் வராம இருக்குமா?"

"சார்.. என்ன சார் இப்படி எல்லாம் பேசுறீங்க.."

"வலிக்குதுல.. அதே மாதிரித்தான்யா.. ஹெல்மெட் வாங்கி மாட்டாம இருக்கிறதும்.. ஒழுங்கா பைனக் கட்டிட்டுப் போ.."

நண்பர் பணத்தைக் கட்டிவிட்டு வந்திருக்கிறார். இதில் யாரை நொந்து கொள்ள?

***************

நேற்றைக்கு இரவு நண்பர்களோடு மீனாக்ஷி அம்மன் கோவில் பக்கம் சுற்றிக் கொண்டிருந்தேன். ஒரு வெளிநாட்டுக்கார தம்பதி (காதலர்கள்?) ரிகஷாக்காரரிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்கள். அவர் சொல்வது எதுவும் அவர்களுக்குப் புரியவில்லை. அதை கதைதான் அவருக்கும். என்னவென்று விசாரித்தேன். உடைந்த ஆங்கிலத்தில் பேசினார்கள். சுவிட்சர்லாந்தில் இருந்து வந்திருக்கிறார்கள். ரிகஷா வண்டியிலேயே ஊரை சுற்றிப் பார்க்க ஆசையாம். அதில் போனால்தான் ஊரைப் பொறுமையாக ரசிக்க முடியுமாம். வண்டிக்காரரிடம் பேசி ஏற்றி விட்டேன். இது போல வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு உதவும் வகையில் கோவிலை சுற்றி ஏன் உதவி மையங்களை அரசு அமைக்கக் கூடாது? ஏமாற்றிப் பணம் பறிக்கும் கூட்டத்தினரிடம் இருந்தும் பயணிகளைக் காக்க இது உதவுமே..!!!

***************

ஊர் சுற்றி விட்டு ஹோட்டலுக்கு சாப்பிடப் போனோம். மதுரை முருகன் இட்லிக் கடை. நான் அங்கே செல்வது நேற்று தான் முதல் தடவை. பொதுவாக எனக்கும் சைவ சாப்பாட்டுக் கடைகளுக்கும் ஆவதில்லை என்பதால் இது போன்ற கடைகளைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆளுக்கு ஒரு தோசையை ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தோம். நாங்கள் மூன்று பேர். டேபிளின் இன்னொரு சேரில் வேறொருவர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

தோசைக்கு பல ரகத்தில் சட்னி வைத்தார்கள். ஆனால் தேங்காய் சட்னி மட்டும் இல்லை. நண்பன் ஒருவன் "என்னடா இது.. தேங்கா சட்னி இல்லை?" என்றபோது எதிரில் இருந்த நபர் சொன்னார்.."என்ன தம்பி.. உங்களுக்குத் தெரியாதா.. நான் இங்கே பல வருஷமா சாப்பிடுறேன்.. இங்கே தேங்கா சட்னி தர மாட்டாங்களே.." ஓ..இது இந்தக் கடையின் வழக்கம் போல என்று சாப்பிடத் தொடங்கினோம்.

கொஞ்ச நேரம் கழித்து சர்வர் ஒருவர் சட்டியில் சட்னியோடு வந்தார். "சாரி சார், கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.." நண்பர்கள் அனைவரும் காண்டாகி பக்கத்தில் இருப்பவரைப் பார்த்தோம். "இதுதான் நீ பல வருஷமா சாப்பிடுற அழகா?" அவர் கேனத்தனமாக ஒரு சிரிப்பு சிரித்தார் பாருங்கள்... அடங்கொய்யால.. எதெதுல அலப்பறை விடுறதுன்னு ஒரு அளவு இல்லையா?

***************

மதுரை பதிவுலக நண்பர் தருமி ஐயா மொழிபெயர்த்து இருக்கும் புத்தகம் "அமினா". கிழக்கு பதிப்பக வெளியீடு. அவருக்கு வாழ்த்துகள். புத்தகம் பற்றிய நண்பர் ஸ்ரீதரின் விரிவான இடுகை இங்கே...

***************

தஞ்சாவூர் பெரியகோவிலை மாதிரியாகக் கொண்டு, அது கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டு காலம் ஆகி விட்டதைக் கொண்டாடும், மதுரை அருகே இருக்கும் ஒத்தக்கடையில் ஒரு கோவிலைக் கட்ட முயற்சி செய்து வருகிறார்களாம். இந்த முயற்சி மட்டும் செயல் பெறத் தொடங்கினால் பல்லாயிரக்கணக்கான சிற்பிகளுக்கு வேலை கிடைக்கக்கூடும். அரசு இந்த முயற்சிக்கு அனுமதி வழங்குமா எனத் தெரியவில்ல்லை. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

***************

இந்த எஸ்.எம்.எஸ். கவிதையை எனக்கு அனுப்பியவர் - மதுரையில் பிறந்தாலும் நமீதா பிறந்த சூரத் மண்ணில் இப்போது இருப்பதை தன் வாழ்நாள் சாதனையாகக் கருதும் அன்பு நண்பர் ராஜூ. (முன்னொரு காலத்தில் டக்ளஸ் என்று அறியப்பட்டவர்).

உன் விழிகளே போதுமடி
என்னைக் கொல்ல..
அதில், மேலும் ஏன்
விஷத்தைத் தடவுகிறாய்?
கண்மை..!!!

***************

கடைசியா.. ஒரு ஜோக். இதுவும் எஸ்.எம்.எஸ்ஸில் வந்ததுதான்.

பார். போன் அடிக்கிறது. ஒரு மனிதன் எடுத்துப் பேசுகிறான்.

"ஹலோ.."

"சொல்லும்மா.."

"டார்லிங்.. நான் ஷாப்பிங் வந்த இடத்துல ஒரு நகையப் பார்த்தேன்.. சூப்பரா இருக்கு.. ஒரு லட்சம்தான்.. வாங்கிக்கவா..?"

"கண்டிப்பா.. வாங்கிக்கோ.."

"தாங்க்ஸ்.. அதோட ஒரு பட்டு புடவையும் எடுத்துக்கவா?"

"ஒண்ணு போதுமா செல்லம்.. ரெண்டா வாங்கிக்கயேன்.."

"ஐயோ.. என் செல்லம்னா நீங்கதான்.. உங்க கார்ட் என்கிட்டே தான் இருக்கு.. யூஸ் பண்ணிக்கவா?"

"உனக்கு இல்லாமலா.. ஜமாய்.. பை.."

போனை வைத்த பிறகு அருகில் இருந்த மனிதர் அவனிடம் கேட்டார்.

"உங்க மனைவி மேல உங்களுக்கு இவ்ளோ பிரியமா?"

அவன் சிரித்துக் கொண்டே கூட்டத்தை பார்த்து சொன்னான்..

"யாருப்பா போனை இங்கே மறந்து வச்சிட்டு போனது?"

குறிப்பு: இன்று காந்தி ஜெயந்தி. மதுரை ரயில் நிலையத்தில் உடை அணியாமல் இருந்த ஒரு மனிதனைப் பார்த்து தான் மேலாடை அணியும் பழக்கத்தை கைவிட்டார் காந்தி மகான். இந்த நல்ல நாளில் அவருடையை எளிமையான வாழ்க்கையை பற்றி கொஞ்சமாவது யோசிப்பதுதான் நாம் அவருக்கு செய்யும் சிறு நன்றியாக இருக்க முடியும். பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துகள்..!!!