March 29, 2011

ஒரு கனவின் கதை

அவன் மெதுவாகப் புரண்டு படுத்தான். கண்களை திறக்க விரும்பாதவனாக இருந்தவனால் தன்னைச் சுற்றி ஏதோ மெல்லியதொரு வாசனையை உணர முடிந்தது. மெதுமெதுவாக அந்த வாசம் தனக்குள் நுழைந்து நெஞ்சம் நிறைப்பதை அவனால் தடுக்க முடியவில்லை. மாறாக அவன் அந்த வாசத்தை பெரிதும் விரும்புபவனாக தன்னையும் அறியாமல் மேலும் ஆழமாக மூச்சை இழுத்து உள்வாங்கத் துவங்கினான். ஒரு கட்டத்தில் காற்றால் முழுக்க நிரம்பிய நெஞ்சுக்கூட்டில் வேறேதும் இடமில்லாமல் போக அவன் ப்ஹா என்று அலறியபடியே கண்கள் விழித்து எழுந்தான். அவன் வாழ்வின் அதிர்ச்சி அங்கே அவனுக்காக காத்து இருந்தது.

முந்தைய தினத்தின் இரவில் தன் படுக்கையில் வீழ்ந்து கிடந்த அவன் இப்போது ஒரு வனத்தின் பெரிய மரத்தின் கீழே நின்று கொண்டிருந்தான். எங்கும் இருள் சூழ்ந்து கிடந்தது. அது என்ன இடம் என்பது வனுக்கு மிகப்பெரும் குழப்பமாகவும் ஏதும் புரியாமலும் இருந்தது. தான் எப்படி அங்கே வந்திருக்க முடியும் அது சாத்தியமே இல்லை இது வெறும் பிரம்மை எனவும் தான் காணும் கனவெனவும் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். அந்தக் கனவிலிருந்து வெளியேற விரும்பியவனாக கண்களை மூடி அந்த மரத்தின் கீழேயே படுத்துக் கொண்டவன் இன்னும் சற்று நேரத்தில் எல்லாம் சரியாகி விடும் என் தனக்குத் தானே சொல்லிக் கொண்டு உறங்க முயற்சித்தான்.

இத்தனை நேரமாக அவனை இம்சித்துக் கொண்டிருந்த வாசனை சுத்தமாக காணாமல் போயிருந்தது அவனுக்கு ஆசுவாசமாக இருந்தது. கண்கள் இறுக மூடியபடியே விடிந்து விட வேண்டுமென எதிர்பார்த்துக் கிடந்தான். சிறிது நேரம் கழித்து எங்கோ தொலைவில் யாரோ அழும் ஓசை கேட்கத் தொடங்கியது. ஒரு சிறுகுழந்தையின் குரலை ஒத்த அந்த அழுகை இப்போது மெதுவாக காற்றோடு ஊர்ந்து வந்து அவனருகே சப்பணமிட்டு அமர்ந்து கொண்டது. நேரம் ஆக ஆக அந்த ஒலி இரண்டாக பத்தாக நூறாக பல்கிப்பெருகி அவனை பெரும்பாரமென அழுத்தத் துவங்கியது. நாராசம் தாங்காமல் அவன் கண்கள் திறவாமலே காதுகளை இறுகப் பொத்திக் கண்டான். இன்னும் சிறிது நேரம் கழித்து அந்த குழந்தைகளின் ஒலி பூனைகளின் சத்தமாக மாறி ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. அலறலை இதற்கு மேலும் தாங்க முடியாதெனும் கணத்தில் அவன் அலறியபடி எழுந்து திக்குத் தெரியாமல் ஓடத் தொடங்கினான்.

அந்தக்காட்டில் எந்தப்பக்கம் போவதென அவன் அறிந்திருக்க வில்லை. எங்கு பார்த்தாலும் பெரிதாக கிளைகள் விரித்து நின்ற மரங்கள் அடர்த்தியாய் இருக்க பாதை தேடி ஓடுவதென மிகவும் கடினமாக இருந்தது. பூமியில் அழுந்தப் பதிந்திருந்த வேர்கள் தடுக்கி கீழே விழுந்த சிராய்ப்புகள் வந்தது எதையும் அவன் பொருட்படுத்தவேயில்லை. எந்த வாசனையும் குரலும் தன்னை தீண்ட முடியாதவொரு இடத்துக்குப் போய் விட வேண்டுமென்பதே அவனுடைய ஒரே எண்ணம். திரும்பிப் பார்க்காமல் ஓடியபடியே இருந்தான். எத்தனை நேரம் ஓடினோம் என்றோ எத்தனை தூரம் வந்திருப்போம் என்பதோ தெரியாமல் மூச்சிரைத்து அவன் இறுதியாக பிசாசென நின்று கொண்டிருந்த ஒரு பெரிய மரத்தினடியில் வந்து நின்றான். தனக்கு என்ன நடக்கிறது என்பது தெரியாத பீதி அவனுக்குள் ஒரு கசப்பையும் பயத்தையும் சுரக்கச் செய்திருந்தது.

தான் மட்டும்தான் அந்தக்காட்டில் இருக்கிறோமோ இல்லை வேறு ஏதேனும் மனிதர்களோ மிருகங்கள் உண்டா இது என்ன மாதிரியான இடம் உண்மையா மாயமா என அவனுக்கு சந்தேகமாக இருந்தது. கடவுள்கள் மீதோ மாயங்கள் மீதோ நம்பிக்கை இல்லாத அவனிடம் யாரேனும் உனக்கு இப்படி நடக்கக் கூடும் என்று முன்னரே சொல்லியிருந்தால் அவன் விழுந்து விழுந்து சிரித்திருப்பான். ஆனால் இன்று அவனிருக்கும் நிலை கண்டு அவனுக்கு ஆச்சரியமாகவும் இன்னொரு புறம் அழுகையாகவும் இருந்தது. அடுத்து தான் செய்ய வேண்டுவது என்ன என்பதோ இந்த மாயக்காட்டில் இருந்தோ அல்லது கனவில் இருந்தோ எப்படி வெளியேறுவது என்பதை அறியாமல் திகைத்துப் போய் செயலற்றவனாக நின்று கொண்டிருந்தான்.

அந்த வேளையில் அவன் முதுகுக்குப் பின்னால் அந்த சத்தம் கேட்டது. மெதுவாக திரும்பிப் பார்த்தவன் அதிர்ந்து போனான். அங்கிருந்த புதருக்குள் இருந்து வெளியேறி அவர்கள் இவனை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். குறைந்தது பதினைந்து பேர்களாவது இருப்பார்கள். வெகு வினோதமாக கற்கால மனிதர்கள் போல் உடையணிந்து இருந்த அவர்களை அவன் இதற்கு முன்னமே எங்கோ பார்த்திருந்த ஞாபகம் இருந்தது. தன் நினைவுகளின் அடுக்குகளில் தேடிப் பார்த்தவன் திக்பிரம்மை அடைந்தவன் போலானான். அவர்கள் எல்லோருமே அவனுடைய வெகு நெருக்கமான நண்பர்கள்.

சிறுவயது தோழர்கள் முதல் கல்லூரி நண்பர்கள்வரை இவன் வெகுவாக நேசித்த பலரும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். அவர்கள் முகத்தில் பயங்கரமான வெறி இருந்தது. அனைவருமே தங்கள் கைகளில் ஏதேதோ ஆயுதங்களைத் தாங்கியபடி இவனை நோக்கி முன்னேறி வந்தார்கள். யாரிடமும் இவனை அடையாளம் கண்டுகொண்டதற்கான சுவடே இல்லை மாறாக அடித்துக் கொல்லும் வெறியே இருந்தது. இவன் அவர்களுடைய பெயர்களைச் சொல்லி அலறினான். அதைக் கண்டுகொள்ளாமல் முகங்கள் எல்லாம் கல்லாக இறுகிப் போயிருந்த அவர்கள் இவனை நோக்கி முன்னேறுவதிலேயே குறியாக இருந்தனர். அவர்கள் கையில் அகப்பட்டால் கண்டிப்பாகத் தன்னால் தப்பமுடியாது என்பதை உணர்ந்தவனாக அவன் மீண்டும் ஓடத் தொடங்கினான்.

திரும்பி திரும்பி பார்த்தபடி வெகு நேரம் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தவனின் கண்களில் சட்டென்று அந்த ஒளி தட்டுப்பட்டது. நெருப்பு மூட்டப்பட்டதற்கான அந்த அடையாளம் அவனுக்கு ரொம்ப ஆதரவாக இருந்தது. அங்கு சென்றுவிட்டால் யாரேனும் மனிதர்கள் இருக்கலாம் எனவும் அவர்கள் உதவியோடு இங்கிருந்து தப்பிவிடலாம் என்றும் அவன் நம்பி நெருப்பை நோக்கி ஓடத் தொடங்கினான். இன்னும் இருபதடி போனால் அந்த நெருப்பை அடைந்து விடலாம் எனும் சூழலில் அவன் கால்கள் தேய்த்து நின்றான். எதிர்பாரா பல கஷ்டங்களைத் தந்திருந்த அந்த இரவு அவனுக்குள் நிறையவே எச்சரிக்கை உணர்வை உருவாக்கி இருந்தது. நெருப்பை நெருங்குமுன் அங்கிருப்பவர்கள் யாரெனத் தெரிந்து கொள்ள விரும்பியவனாக ஒரு மரத்தின் பின்னே நின்று கொண்டு கவனிக்கத் தொடங்கினான்.

சிலுவை வடிவிலிருந்த ஒரு மரக்கட்டை தரையில் நடப்பட்டு தீப்பந்தம் போல கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அதைச் சுற்றி சில மனிதர்கள் நின்று கொண்டிருந்தார்கள். எல்லாருமே முகத்திலிருந்து கால்வரை மூடிய ஒரு நீள அங்கியை அணிந்து இருந்தார்கள்.அதைப் பார்த்துக் கொண்டிருந்த இவனுக்குத் தான் மேற்கத்தைய காமிக்ஸுகளில் படித்திருந்த குக்ளாஸ்க்ளான் இயக்கத்தின் நினைவு வந்தது. குழம்பியவனாக அவர்களை பார்த்தபடி இருந்தான். அந்தக் கூட்டத்தின் தலைவன் போல இருந்தவன் சிறிது நேரம் கழித்து தலையசைக்க யாரோ ஒருவனை சிலர் கைகள் கட்டி இழுத்து வந்தார்கள். நெருப்பு வெளிச்சத்தில் முகம் மூடாமலிருந்த அவன் யாரெனப் பார்க்க இவன் முயற்சித்தவன் அவர்கள் அழைத்து வந்தது இவனைத்தான் என அடையாளம் தெரிந்தபோது மிரண்டு போனான்.

இங்கிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் தான் எப்படி அவர்கள் கையில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்று அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அது தான் தானா இல்லை தன்னைப் போலவே வேறாருமா என சந்தேகமும் பீதியும் அவனை சூழ்ந்து கொண்டன. முகத்தில் சிரிப்போடும் கொலைவெறி கும்பலிடம் மாட்டியிருக்கிறோமே என்ற பயமும் சிறிதுமில்லாத அவன் யாராக இருக்கக் கூடும் என இவன் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அவன் இவனைக் கண்டு கொண்டான். அதோ நான் அங்கிருக்கிறேன் என்னைத் தப்ப விடாதீர்கள் பிடியுங்கள் என்னைப் பிடியுங்கள் எனத் தொடர்ச்சியாக கத்த ஆரம்பித்த அவன் குரல் கேட்டு இவன்பக்கம் திரும்பிய அவர்களைக் கண்டு அரண்டுபோய் இவன் வேறொரு திசையில் ஓடத் தொடங்கினான்.

முடிவு 1:

இதற்கு மேலும் ஒடமுடியாதெனும் கணத்தில் அவன் அந்த வனத்தின் இருளில் தொலைந்து போனவனாக தள்ளாடி நடந்து வந்து அந்த மரத்தின் அடியில் விழுந்தான். பயமும் அசதியும் போட்டழுத்த தன்னை மறந்தவனாக தூங்கிப் போனான். எத்தனை நேரம் அப்படி கிடந்திருப்பான் எனத் தெரியவில்லை. வெகு நேரத்துக்குப் பிறகு அவன் மெதுவாகப் புரண்டு படுத்தான். கண்களை திறக்க விரும்பாதவனாக இருந்தவனால் தன்னைச் சுற்றி ஏதோ மெல்லியதொரு வாசனையை உணர முடிந்தது.

முடிவு 2:

இதற்கு மேலும் ஒடமுடியாதெனும் கணத்தில் அவன் அந்த வனத்தின் இருளில் தொலைந்து போனவனாக தள்ளாடி நடந்து வந்து அந்த மரத்தின் அடியில் விழுந்தான். பயமும் அசதியும் போட்டழுத்த தன்னை மறந்தவனாக தூங்கிப் போனான். சிறிது நேரம் கழித்து மெதுவாக அந்த மரம் தன் கிளைகளை இறக்கி அவனைத் தூக்கிக் கொண்டது. உயர்ந்து வளந்திருந்த அதன் நடுமரம் சட்டெனப் பிளந்து கொள்ள கர்ப்ப சிசு போல மெதுவாக அவனை உள்ளிறுத்தி தன் பிளவை மூடிக் கொண்டது. எங்கும் நிசப்தம். மறுநாள் காலையில் அவன் அம்மா அவனுடைய அறையைத் திறந்தபோது அவனுடைய படுக்கையின் மேல் சில இலைகள் மட்டுமே கிடந்தன.

முடிவு 3:

இந்தக் கதை உங்களுடையதாகக் கூட இருக்கும் பட்சத்தில் இதற்கான முடிவை நீங்களே எனக்குச் சொல்லலாம்.


March 19, 2011

உக்கார்ந்து யோசிச்சது (19-03-11)

போன வாரம் அம்மாவுக்கு சிறிது உடல்நலம் சரியில்லை என சாயங்கால நேரமாக மருத்துவமனைக்கு அழைத்துப் போயிருந்தேன். டாக்டர் வர நேரமாகுமென வரவேற்பறையில் காத்திருக்கச் சொன்னார்கள். நல்ல விசாலமான ஹாலில் முப்பதுக்கும் மேற்பட்டோர் காத்திருக்க டிவியில் ஏதோ ஒரு பாட்டுச் சானல் ஓடிக் கொண்டிருந்தது. மாலை ஆறரை ஆன பிறகுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. நடக்கவே முடியாமல் ஓரமாக படுத்து இருந்த ஒரு வயதான பெண்மணி மெதுவாக எழுந்து நர்சிடம் வந்தார்.

"அம்மா.. மணி ஆச்சு.. சன் டிவில நாடகம் போட்டு விடுங்கம்மா.."

அவர் சொல்லி வாய் மூடுமுன் இன்னொரு பெண் வேக வேகமாக நர்சிடம் வந்தார்.

"நாடகம் போடுங்க வேணாம்னு சொல்லல. ஆனா ஜி டிவில போடுங்க.. அதான் நல்லா இருக்கும்.."

"இங்க பாரு.. நான் தான் மொதல்ல வந்து மாத்த சொன்னேன்.. சன் டிவி தான் போடணும்.."

"இது என்ன உங்கப்பன் வீட்டு சொத்தா? அதெல்லாம் முடியாது.."

பாவம் அந்த நர்ஸ். என்ன செய்வதெனத் தெரியாமல் கையைப் பிசைந்தபடி நின்று கொண்டிருந்தார். நல்ல வேளையாக அப்போது டாக்டர் வர கூட்டத்தின் கவனம் யார் முதலில் உள்ளே போவதென்பதில் திசை மாறியதால் டிவி தப்பித்தது.

மக்கள் உடம்புக்கு முடியாமல் ஆற்றாமையோடு வருகிற மருத்துவமனைகளில் கூட இந்த மாதிரி சண்டைகள் அவசியம்தானா? நோயில் வேதனை தாங்காமல் அரற்றிக் கொண்டிருக்கும் வேளையில் கூட டிவி பார்ப்பது அத்தனை முக்கியமா? மக்களைக் குறை சொல்வதா.. இல்லை டிவி எல்லாம் வைத்து மருத்துவமனைகளையும் வியாபாரக் கூடமாக்கும் நிர்வாகத்தை குறை சொல்வதா? என்னமோ போடா மாதவா..

***************

எழுத்தாளர் பா.வெங்கடேசனோடு கொஞ்ச நேரம் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. ரொம்ப சிம்பிளான மனிதராக இருக்கிறார். நான் தாண்டவராயன் கதையை படித்திராத காரணத்தால் இன்னும் விரிவாக அவரோடு பேச முடியவில்லை. மாறாகப் பேச்சு சமகால இலக்கியம் பற்றியும் படிக்க வேண்டிய முக்கியமான வெளிநாட்டு எழுத்தாளர்கள் பற்றியதாகவுமாக இருந்தது. தன்னுடைய எழுத்து எப்படி இருக்க வேண்டும் எனத் தான் விரும்புவதாக அவர் சொன்ன விஷயம் மிக முக்கியமானது. "ஒரு பெண்ணுக்கு வார்த்தைகளால் விவரிக்க முடியாத துன்பமொன்று நேர்கிறது என வைத்துக் கொள்வோம். அந்தத் துன்பம் நிகழும்போது இருக்கக் கூடிய அந்தப் பெண்ணின் மனநிலையையும் வலியையுமே இன்றைய எழுத்தாளர்கள் பதிவு செய்கிறார்கள். ஆனால் அந்த நிகழ்வு நடந்து பத்து நாட்களோ, இரண்டு வாரமோ ஆன பின்பு.. மீண்டும் தன் நினைவுகளில் பயணித்து தனக்கு ஏன் இப்படி நடந்தது என அந்தப் பெண் தன் மனதுக்குள் நடத்தக் கூடிய போராட்டமும் அதன் காரணமான வலியும் இன்னும் நூறு மடங்கு வீரியம் கொண்டதாக இருக்கும். என் எழுத்தும் அப்படி இருப்பதையே விரும்புகிறேன்.." புத்தகத்தைப் படித்து விட்டு இன்னும் அவரோடு நிறைய பேச வேண்டும்.

***************

இதுவும் மருத்துவமனை கதைதான். நண்பர் ஒருவருக்குத் தோல் வியாதிகள் சம்பந்தமாக சில சந்தேகங்கள் கேட்பதற்காக மருத்துவர் ஒருவரைத் தேடிப்பிடித்து போயிருக்கிறார்.

"சொல்லுங்க.. என்ன பிரச்சினை.."

"திடீர்னு கைல கொஞ்சம் கரணை கரணையா வருது சார்.. ஏன்னு தெரியல.."

"ஓ.. இதுதானா.. சார் எங்க வேலை பாக்குறீங்க.."

"சிட்டிபாங்க்ல மேனேஜரா இருக்கேன்.."

"அடடே.. ஏன் பையன் கூட அங்கதான் இருக்கான்.. ஆனா போஸ்டிங் பெங்களூர்ல.. இங்க மதுரைல சிட்டிபாங்க் இருக்கா என்ன?"

"ஆமா சார்.. சிம்மக்கல்ல ஒரு ஆபிஸ் இருக்கு.. அங்கதான் வேலை பாக்குறேன்.."

"அப்போ சரி.. கம்ப்யூட்டர்ல நிறைய வேலை பார்ப்பீங்களோ.."

நண்பருக்கு தான் கணினியில் தொடர்ச்சியாக வேலை பார்ப்பதால்தான் இந்தப் பிரச்சினை என்பதை டாக்டர் கண்டுபிடித்து விட்டார் என ஒரே குஷி.

"ஆமா சார்.."

"அதுல கூகிள்னு கேள்விப்பட்டு இருக்கீங்க இல்லையா.."

"(குழப்பமாக) தெரியும் சார்.."

"ஆங்.." ஏதோ ஒரு நோயின் பேரை ஆங்கிலத்தில் எழுதி நண்பரிடம் தந்திருக்கிறார். "இதுதான் உங்களுக்கு வந்திருக்குற நோயோட பேரு.. இதை கூகிள்ல போட்டு தேடிப்பாருங்க.. இதுக்கு மருந்தே கிடையாதுன்னு வரும்.. பாருங்க.. எனக்குக் கூட இருக்கு.."

டாக்டர் தன் கைகளைக் காட்ட நண்பர் மயக்கம் போடாத குறைதான். ஙே..

***************

ஆனந்த விகடன் வாங்குவதை நிறுத்தி நிறைய வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் கடந்த சில வாரங்களாக மீண்டும் வாங்க ஆரம்பித்து இருக்கிறேன். அதற்குக் காரணம் சுகாவின் மூங்கில் மூச்சும் முத்துக்குமாரின் அணிலாடும் முன்றிலும். அத்தோடு அறிவுமதியின் மழைப்பேச்சும் ரொம்ப அருமையாக இருந்தது. அதை சீக்கிரமே முடித்ததில் எனக்குக் கொஞ்சம் வருத்தமும் கூட. மற்றபடி அரசியல் சார்ந்து வரும் விகடனின் கட்டுரைகளை வாசிப்பதை தவிர்த்து விடுகிறேன். முழுக்க முழுக்க தி.மு.க.வுக்கு எதிரான ஒரு நிலை எடுத்து விகடன் குழுமம் ஒரு தீர்மானத்தோடு களத்தில் இறங்கி இருப்பது கிட்டத்தட்ட ஒரு ஊடக தாக்குதல் போல இருப்பது சரியானதாக எனக்குப் படவில்லை. பார்க்கலாம்.

***************

இப்போது திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டேயிருக்கும் பாடல் "கோ"வின் "என்னமோ ஏதோ"தான். ஆலாப் ராஜுவின் குரல் உள்ளே நுழைந்து மனதை உலுக்கி எடுக்கிறது. இந்த வருடத்தின் மிகப் பெரிய ஹிட்டாகப் போகும் பாடல் என அடித்துச் சொல்லலாம். புதிதாக வந்ததில் "மாப்பிள்ளை"யில் இரண்டு குத்துப் பாடல்கள் தேறும். போதாக்குறைக்கு "என்னோட ராசி" பாட்டை ரீமிக்ஸ் பண்ணி இருக்கிறார்கள். தனுஷுக்கு இன்னொரு ஹிட் படம் ஆக இருக்கும் என நினைக்கிறேன்.

***************

நண்பர்கள் தான் வாழ்வில் எல்லாமே என நம்புவதில் தவறில்லை. ஆனால் அந்த நண்பர்கள் சரியானவர்களாக இல்லையென்றால் உங்கள் வாழ்க்கையில் தாங்க முடியாத சோகத்தை சந்திக்க வேண்டியதாக இருக்கலாம். (கருத்து சொன்னா கேட்டுக்கணும்.. ஆராயக் கூடாது..)

***************

சமீபத்தில் வாசித்த கவிதைகளில் எனக்கு ரொம்பப் பிடித்த நண்பர் போகனுடைய கவிதைகளில் சில இங்கே..

முள்ளோடு கலந்தது முளரி கள்ளோடுஇறங்கிற்று கலயம் கலயத்தில் புரண்ட கரு நாவல் துண்டுகள் உண்ண உண்ணத் தீரா உயிர்ச்சோறு
இந்தக் குகை எங்கு முடிகிறது என்றவனிடம் உன்னால் எதுவரை போக முடிகிறதோ அங்கு என்றாள்
***************
பொதுவாகவே நான் மிகப்பெரிய சோம்பேறி.. தொடர்ச்சியா எழுதுறது எல்லாம் நமக்குப் பிடிக்காத வேலை.. ஆனாலும் தமிழ்மணம் நட்சத்திர வாரம்னு சொல்லி இந்த வாரம் தொடர்ச்சியா எழுதி இருக்கேன்.. இந்த வாய்ப்பின் மூலம் இன்னும் பல நண்பர்களிடத்தில் என்னைக் கொண்டு போய் சேர்த்திருக்கும் தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இப்போதைக்கு அவ்ளோதான். நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-)))))))

March 18, 2011

பெண்கள் மீதான ஆண்களின் பார்வை - மாறியிருக்கிறதா?

இன்று காலை எல்லிஸ் நகர் பகுதியில் நடந்து போய்க் கொண்டிருந்தபோதுதான் அந்தப் பெண்ணை பார்த்தேன். ஒரு நிமிடம் நாம் மதுரையில்தான் இருக்கிறோமா என சந்தேகமாகப் போய்விட்டது. நூடுல்ஸ் ஸ்ட்ராப்புடன் கூடிய ஒரு ஷார்ட் டாப்ஸ் இடைக்கு ரொம்ப மேலேயே நின்று போயிருக்க, வெகு இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் அணிந்து போய்க்கொண்டு இருந்தாள். ஒரு நிமிஷம் வாயைப் பிளந்து ஆவெனப் பார்த்தாலும் ச்சே ச்சே ஒரு பெண்ணை நாம் இப்படிப் பார்க்கலாமா என்று என்னை நானே திட்டிக் கொண்டு திரும்பிப் பார்த்தால் மொத்தத் தெருவுமே அவரைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது.

ஒரு பெண் இப்படி எல்லாம் உடையணியலாமா, அதை பார்க்கும் ஆண்கள் மனது கறை படிந்து போகாதா என்றெல்லாம் உளறிக் கொட்டி கலாச்சாரக் காவலனாக ஃபார்ம் ஆகும் ஆசை எனக்கு சுத்தமாகக் கிடையாது. மாறாக, நம் தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் மீதான ஆண்களின் பார்வை எப்படி இருந்திருக்கிறது என்பதையும், காலமாற்றத்தோடு இதிலும் ஏதாவது மாற்றம் வந்திருக்கிறதா என்பதையும் ஒரு ஆணாகப் பேசவே ஆசைபப்டுகிறேன்.

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் கதாநாயகி தன் தோழியிடம் சொல்வதாக ஒரு வசனம் கண்டிப்பாக இருக்கும். “கழுத்துக்குக் கீழ மட்டுமே பார்த்துப் பேசுற ஆம்பிளைங்களுக்கு மத்தியில அவன் என் கண்ண பார்த்துப் பேசுனாண்டி.. அதனாலேயே அவனை எனக்குப் பிடிச்சது..” ஒரு பெண்ணை ஆண் என்பவன் எப்போதும் உடல் சார்ந்து அணுகுவதாகவே நமது சமுதாயத்தில் ஒரு எண்ணம் உண்டு. என்னளவில் அது நிறையவே உண்மை என்றே நினைக்கிறேன். அப்படியானால் அதற்கான காரணங்கள் என்ன?

முதலாவதாக நாம் கலாச்சாரம் என்று சொல்லக்கூடிய விஷயம். சிறுவயது முதலே எதிர்பாலினத்தைச் சேர்ந்தவர்களை ஏதோ வேற்றுகிரக ஜீவராசிகள் போல பிரித்து வைப்பதையே வீடுகளில் தொடங்கி பள்ளிகளிலும் நாம் பின்பற்றி வருகிறோம். இன்றைக்கு சில கல்லூரிகளில் இதை ரொம்பப் பெருமையாக சொல்வது வழக்கமாகி இருப்பது இன்னும் அதிர்ச்சி. மூடி வைக்கும் பொருளை திறந்து பார்க்க வேண்டும் என்கிற பொதுவான எண்ணம் போல பெண் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஆண்களுக்கு அதிகமாக இருப்பது ஆச்சரியமான விஷயம் கிடையாது.

இரண்டாவது இன்றைக்கு இருக்கக் கூடிய ஊடகங்கள். குழந்தைகளுக்கான உணவுப்பொருளோ, வாசனை திரவியமோ, பிஸ்கட்டோ, துணியோ.. என்ன கருமமாக இருந்தாலும் அதை விளம்பரப்படுத்த அரைகுறை ஆடை அணிந்த பெண்கள்தான் தேவைப்படுகிறார்கள். பெண்ணை வெறும் நுகர்வுப் பொருள் என்பதைத் தாண்டி வேறு எப்படியும் காட்டிவிடக் கூடாது என்பதில் வெகு தீவிரமாக இருக்கும் ஊடகங்களின் அசாத்திய ஆதிக்கமும் கூட ஆண்கள் பெண்களை எப்படி அணுகுகிறார்கள் என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமான காரணம் என்று கூட சொல்லலாம்.

பெண்களை ஒரு அதிசயப் பொருளாகவே பார்த்து வந்த காலம் இருந்தது. சரி.. அதெல்லாம் பழைய காலம். ஆனால் இன்றைக்கு நாம் தொழில்நுட்ப ரீதியாக நிறைய மாறி விட்டோம். இப்போது பெண்கள் நிறைய விதத்தில் முன்னேறி விட்டர்கள். இப்போதும் ஆண்கள் பார்க்கும் பார்வை அப்படியேதான் இருக்கிறதா? தொடர்ச்சியாக மாணவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதால் என்னால் ஒரு விஷயத்தை நன்றாக கவனிக்க முடிந்தது. ஆண்களுக்கு பேசுவதற்கான விஷயமாக இன்று இருக்கும் இரண்டு விஷயங்கள்.. பெண்களும் சினிமாவும்.

பெருநகரங்களில் கொஞ்சம் இந்த நிலை மாறியிருப்பதாகத் தெரிகிறது. இப்போதும் சென்னைக்கு போகும்போதெல்லாம் எனக்கு ரொம்பவே ஆச்சரியமாக இருக்கும். ஸ்பென்சருக்கு உள்ளே நுழைந்தால் ஏதோ வேறு நாட்டுக்குள் நுழைந்து விட்ட உணர்வுதான் இருக்கும். குறிப்பாக பெண்கள் அணிந்து இருக்கும் மாடர்னான உடைகளை எல்லாம் பப்பரப்பா என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது சங்கடமாக இருந்தாலும் எப்போதும் அதைச் செய்யாமல் இருந்ததில்லை. எல்லாவற்றோடு சேர்ந்து ஒரு சந்தேகமும் கூடவே இருக்கும். இங்கிருக்கும் ஆண்கள் எல்லாம் இதை எல்லாம் இயல்பாக எடுத்துக் கொள்ளப் பழகி விட்டர்களா இல்லை அவர்களுக்கும் மனதுக்குள் என்போன்ற ஊசலாட்டங்கள் இருக்குமா? தெரியவில்லை.

எது எப்படியோ, தென்மாவட்டங்களில் வாழும் என்போன்றவர்களுக்கு கலாச்சார ரீதியாக இதுபோன்ற விஷயங்களை சட்டென ஒத்துக் கொள்வது சிரமமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். பெண்களை நான் எந்தவிதத்திலும் குறை சொல்லவில்லை. தங்களுக்கு வசதியான உடைகளை அணியும் அத்தனை உரிமையும் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் அதை எந்த மனத்தடையுமின்றி எளிதாக எடுத்துக் கொள்ளும் மனப்பாங்கை ஆண்களுக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் நான் சொல்ல வருவது.

அதற்கான ஒரே வாய்ப்பு, இளம் வயதிலிருந்தே ஆண் பெண் பற்றிய அடிப்படைகளை சொல்லிக் கொடுக்கும் பாலியல் கல்வியாக மட்டுமே இருக்க முடியும். சாப்பாடு, தூக்கம் போல இதுவும் ஒரு சாதாரணமான உணர்வே என்கிற தெளிவு இல்லாவிட்டால் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது கடினமாக இருக்கக் கூடும். அது சாத்தியப்படாத வரையில், பெண்களை கைக்கு எட்டாத அதிசயமாக பாவிக்கும் வரையில், கலாச்சாரத்தை பெரிதாகப் பேசும் நம் நாட்டில்தான் அளவுக்கு அதிகமான பாலியல் குற்றங்கள் நடைபெறுகின்றன என்பதை நாம் ஒத்துக் கொண்டு வாழ வேண்டி இருக்கும்.

March 17, 2011

என்னா ஒரு வில்லத்தனம்

மதுரையின் ரொம்பப் புகழ்பெற்ற தமுக்கம் மைதானத்தின் முன்பாக யாருக்குமே தெரியாமல் ஓரமாக இருந்த அந்த டீக்கடையின் வாசலில் அவர்கள் ஆறு பேரும் குழுமி இருந்தார்கள். அனைவருமே 22 வயத்தைத் தாண்டாத இளைஞர்கள். நாளைய உலகை ஆளத் துடித்துக் கொண்டிருப்பவர்கள். அதாவது.. இன்றைக்கு வெட்டி ஆபிசராக இருப்பவர்கள்.

கூட்டத்தில் நடுநாயகமாக இருப்பவன்தான் அவுங்களோட பாஸ். (ஏன்யா இது என்ன கொள்ளைக் கூட்டமா?) ஓகே ஓகே தலைவன்னு வச்சுக்குவோம். கார்த்தின்னு பேரு. அவன் ஏன் தலைவனா இருக்கான்னா.. மிச்ச பயபுள்ளைகளுக்கு எதுனாச்சும் வாங்கிக் கொடுக்குறதுக்கு காசு அவன்கிட்ட மட்டும்தான் உண்டு. அப்பன் சம்பாதிச்ச காசை கரைக்கிரதை விட புள்ளைகளுக்கு வேற ஏதும் முக்கியமான வேலை கிடையாதுன்னு ரொம்பத் தீவிரமா நம்புறவன்.

"இன்னும் எத்தனை நாளைக்குடா இப்படியே இருக்குறது? எல்லாப்பயலும் நம்மளப் பார்த்து வாயப் பொளக்கணும். அந்த மாதிரி கூடிய சீக்கிரம் ஏதாவது செய்யணும்டா மாப்ள.."சொல்லிய பாலு சிகரட்டை கீழே போட்டு நசுக்கினான்.

“ம்ம்.. ஆமாடா.. வீட்டுல இருக்குறய்வங்க நொச்சு தாங்க முடியல..” - உமர்.

இதே கருத்தை மீதியிருந்த மணி, கண்ணன், ஸ்டீபன் (பார்த்துக்கோங்கப்பா.. மத நல்லிணக்கம்) ஆகியோரும் சொல்ல என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தார்கள். சட்டென மண்டைக்கு மேலே பல்பு எரிய பாலுதான் அந்த ஐடியாவைச் சொன்னான்.

“நாம ஏண்டா ஒரு பாப் ஆல்பம் போடக் கூடாது?”

“நாம எப்புடிடா ஆல்பம் போடுறது? நமக்கு என்ன தெரியும்?” கண்ணன் குழம்பியவனாகக் கேட்டான்.

“அது ஒரு மேட்டரே இல்ல மச்சி. இன்னைக்கு ஃபேஷனே ஆல்பம் போடுறதுதான். இப்போ பாரு... நம்ம ஸ்டீபனுக்கு அருமையா கவிதை எழுத வரும். அவன் நமக்காகப் பாட்டு எழுதட்டும். என்னடா ஓகேவா?”

ஸ்டீபன் லைட்டாக வானில் மிதந்து கொண்டிருந்தான். பாக்யாவில் கொடுத்து இருந்த ஒரு போட்டோவைப் பார்த்து “ஏ பெண்ணே நீயே ஒரு கட்டை உன் கண்களோ என் மனதை எரிக்கும் கொள்ளிக்கட்டை”ன்னு எழுதின ஒரு கவிதைக்கு 75 ரூபா சன்மானம் வந்த நாள் முதலாவே தன்னை தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாத்தப்போற கவிஞன்னு நம்பிக்கிட்டு இருக்குறவன்.

“செஞ்சுடலாம் மாப்ள. இது ஒரு மேட்டரா..”

“அது.. அப்புறம் நம்ம உமர் அருமையா கிடார் வாசிப்பான். யூஸ் பண்ணிப்போம். மணி ஃப்ளுட்ட பார்த்துப்பான். நானும் கண்ணனும் பாடலாம். அப்புறம்.. நம்ம கார்த்திதான் ப்ரொடியூசர். சரியாப் போச்சா?”

ஆக இப்படியாகத்தான் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்த பாப் ஆல்பம் ரெக்கார்டிங்கான விதை தூவப்பட்டது. மிகச்சரியாக ஒரு வாரத்துக்குப் பிறகு சினிப்பிரியா தியேட்டரின் முன்பாக இருந்த ரெக்கார்டிங் தியேட்டரின் வாசலில் நிலாவுக்கு ராக்கெட் ஏறப் போகும் ரேஞ்சுக்கு முனைப்போடு அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

"நில்லுங்கடா நல்ல காரியம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி பூஜையைப் போட்டுருவோம்.."

வீட்டிலிருந்து தூக்கிக் கொண்டு வந்திருந்த ஓஞ்சு போன பூசணிக்காயைத் தொம்மென தரையில் போட்டு உடைத்தான் கார்த்தி. தாக்குங்கள் என்று கத்தாத குறையாக அனைவரும் திமுதிமுவென தியேட்டருக்குள் பாய்ந்தார்கள். அவர்களைப் பார்த்த உரிமையாளருக்கு பக்கென்று இருந்தது.

"என்ன தம்பி.. வாசல்ல பூஜை எல்லாம்? ஏதாவது கோயில் கும்பாபிஷேக கலெக்ஷனா?"

"ஊய்.. யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொன்னீங்க. நாங்க தான் நாளைக்கு இசை உலகையே ஆளப்போற M.M.B குழு. புரியுதா?" (மதுரை மேட் பாய்சாமாம்.. கருமம்..)

"ரெக்கார்டிங் பண்ண வந்தவங்களா நீங்க.. கிழிஞ்சது.. சரி சரி.. வாங்க.."

அவருக்குப் பார்த்துவுடனேயே தெரிந்து கொண்டார் இது அல்லக்கை கூட்டம்னு. அதனாலென்ன காசு வந்தா சரி. நாய் வித்த காசு குரைக்கவா போகுது?

"போங்கப்பா.. போய் அந்த ரூம்புக்குள்ள எல்லாம் போய் அவங்கவங்க இடத்துல நில்லுங்க.."

ஒவ்வொருத்தரும் ஜம்மென்று காதில் ஹெட்போனையும் மாட்டிக்கொண்டு நின்றபிறகுதான் அடுத்த பிரச்சினை ஆரம்பமானது.

"ஏண்டா.. என்ன பாட்டுடா பாடுறது?"

நாசாமப் போச்சுன்னு தலைல கை வச்சு உக்கார்ந்துட்டார் ஓனர். "இனிமே தான் பாட்டே முடிவு பண்ணனுமா?"

"ஏண்டா ஸ்டீபா.. டக்குன்னு ஒரு பாட்ட சொல்லேண்டா.."

"ஏய்.. பாட்டுன்னா என்ன சும்மாவா? வான்னா ஒடனே வந்துருமா.. அது ஒரு பீல்டா.. அது எப்படின்னா.."

"டேய் மூடுறா.. சட்டுபட்டுன்னு ஏதாவது பாடுங்கடா.."

"தம்பி.. ஒரு மணி நேரத்துக்கு ரெண்டாயிரம் ரூபா வாடகை.. இருக்குல்ல.."

"ச்சே.. நடு நடுவுல இந்த ஆளு வேற.. அண்ணே கொஞ்சம் யோசிக்க விடுங்க அண்ணே.. கலைண்ணே.. அருவி மாதிரி பொங்கிட்டு வரும்போது தடுக்காதீங்க..”

குசுகுசுவென தங்களுக்குள் பேசி கடைசியாக அந்த முடிவுக்கு வந்தார்கள். "மடை திறந்து ஆடும் இளங்குயில்.. இந்தப் பாட்டே பாடிரலாம்டா.."

"இதுக்குத்தான் இவ்ளோ பில்டப்பா.. பாடித் தொலைங்க.." ஓனர் மனசுக்குள் கருவியபடியே இருந்தார். அவர்கள் பாட ஆரம்பித்து இருந்தார்கள்.

"மடை திறந்து தாவும் நதியலை நான்..
மனம் திறந்து கூவும் சிறுகுயில் நான்...
இசைக்கலைஞன் என் தனதன தனன
தனதன தனன தனன.."

"கருமம்.. இந்தப்பாட்டும் முழுசா தெரியாதா" என்று மனசுக்குள் ஓனர் திட்டிக் கொண்டிருந்த வேளையில் பாலு அந்த வினோதமான காரியத்தை செய்தான். வேகமாக மைக்குக்கு அருகில் வந்தவன் தன் கையைக்கொண்டு போய் தொடையிடுக்கில் வைத்துக்கொண்டு ஏதேதோ இங்கிலிஷில் பேத்த ஆரம்பித்தான். ஓனர் பதறிப்போனார்.

"ஏய் ஏய் தம்பி.. என்னய்யா பண்ற.."

"அண்ணே.. இது ராப்புண்ணே.."

"அதெல்லாம் சரிப்பா.. அதுக்கு எதுக்கு கையக் கொண்டு போய் குஞ்சாமணில வச்சுக்கிட்டு ஏதோ வயித்துக்கடுப்பு வந்தவன் மாதிரி அவதிப்படுற?”

“அய்யய்ய.. அப்படி இல்லண்ணே.. நான் எம் டிவில பார்த்திருக்கேன்.. எமினம்னு ஒருத்தரு.. அவரு இப்படித்தான் பாடுவார்.. ராப்புன்னா இப்படித்தான் பாடணும்ணே..”

“என்ன எழவோ செஞ்சு தொலைங்கடா..”

நல்லபடியாக ரெக்கார்டிங் முடிந்தது.

“ஆக மாப்ள.. ஒரு பாட்டு முடிச்சுட்டோம். அடுத்தது என்னைக்கு?”

“அது என்னைக்கு வேணும்னாலும் இருக்கலாம். மொதல்ல இன்னைக்கு பாடுனதுக்கு ரெண்டாயிரம் ரூபாய எடுங்கப்பா..” ஓனர் - சிவபூஜைக் கரடி. கார்த்தி தன் பைக்குள் கை விட்டு காசை எடுத்தான். 1500 இருந்தது.

“இம்புட்டுத்தாண்டா இருக்கு..”

எல்லாப்பயலும் கையில் கிடைத்த காசை போட்டு பார்த்தபோதும் ரெண்டாயிரத்துக்கு நூறு குறைந்தது.

“அஜ்ஜஸ் பண்ணுண்ணே.. அடுத்த ரெக்கார்டிங்குக்கு வெயிட்டா கவனிப்போம்..” மண்டை காய்ந்து போனவராக ஓனர் அதை வாங்கிக் கொண்டு உள்ளே போனார்.

“இப்போ வீட்டுக்கு எப்படிடா போறது.. கைல பத்து காசு கூட இல்லையே..”

“வேற எப்படி.. நடராஜா சர்வீஸ்தான்..”

புலம்பிக்கொண்டே கலைந்து போனவர்களில் உமரும் கண்ணனும் அண்ணா நகர் ஆர்ச்சுக்கு அருகே இந்தக் கதைசொல்லியை சந்தித்து தாங்கள் பாடல் பதிந்த கதையைச் சொல்கிறார்கள். அவனும் வெகு சுவாரசியமாகக் கேட்பதைப் போல நடிக்க வேண்டியதாகிறது.

“அடப்பாவிகளா.. கலை மேல இருக்குற ஆர்வத்துல இப்படியா பஸ்ஸுக்குக் கூட காசு இல்லாம நடந்து வருவீங்க? பரவாயில்லடா.. நல்லா வருவீங்க..”

“ஆமாம்ணே.. நீ அடுத்த பதிவுக்குக் கண்டிப்பா வரணும் சரியா?” சொல்லி விட்டு நடக்கத் தொடங்கினார்கள். (ஆகா.. என்னா ஒரு வில்லத்தனம்? ) நடந்தவர்களில் ஒருவன் திரும்பி வந்து மெதுவாக கதைசொல்லியிடம் கேட்டான்.

“அண்ணே.. காலைல இருந்து ஒண்ணுமே சாப்பிடல.. பசிக்குது.. ஒரு டீ சொல்றியா?”

March 16, 2011

மழை விளையாட்டு

இத்தனை நேரமாக ஓடாமல் நின்று போயிருந்த அந்த கடிகாரம் மீண்டும் ஓடத் துவங்கியிருந்தது. மழை நின்று போயிருந்தது.

அலுவலகம் விட்டு வெளியே வந்த அவன் வெகுவாக களைத்துப் போயிருந்தான். அன்றைய தினத்தின் ஏமாற்றங்கள் அவனுக்குள் ஏதேதோ நினைவுகளைக் கிளர்த்தி மிகவும் பலவீனமாக உணரச் செய்தபடியே இருந்தன. நேரம் ரொம்ப ஆகியிருக்காவிட்டாலும் எங்கும் இருள் சூழத் துவங்கியிருந்தது. நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். ஆங்காங்கே தென்பட்ட மேகங்களின் கூட்டம் மழையின் வருகையை முன்னறிவிப்பு செய்து கொண்டிருந்தது. அவன் மிகுந்த அச்சத்துடன் தன் வண்டியை நோக்கி விரைந்தான்.

பொதுவில் அவன் மழையை மிகவும் வெறுக்கக் கூடியவனாக இருந்தான். ஒரு மழைநாளின் இரவில்தான் அவன் தந்தை தூக்கு போட்டுக்கொண்டு இறந்தார் என்பதும் அவன் காதலி நிறைய பணம் சம்பாதிக்க இயலாத அவனைப் பிரிவதே சரியாக இருக்கும் எனச் சொல்லிபோனதும் கொடியதொரு மழைநாள்தான் என்பதும் அதற்கான காரணமாக இருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக மழை பேய்ந்து ஓய்ந்த பின்பான தனிமை அவனுக்குத் தாங்கவொண்ணா துக்கத்தை தரக்கூடியதாக இருந்தது. பித்துபிடித்தவன் போல ஏதோவொரு மாயலோகத்தில் சிக்கி சுழலச்செய்யும் அந்தத் தனிமையையும் அதற்கு காரணமான மழை இரவுகளையும் அவன் அறவே வெறுத்தான்.

நீண்ட ஷெட்டின் கடைசியில் அவனுடைய வண்டி நின்று கொண்டிருந்தது. பத்து வருடங்களுக்கு முன்பாக ஒரு சேட்டிடம் இருந்து இவன் கைக்கு மாறி வந்த வண்டி. செகண்ட் ஹாண்டில் வாங்கி இருந்தாலும் இன்று வரைக்கும் அவனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பட்டியலில் அவன் அம்மாவுக்குப் பிறகு அந்த வண்டியைத்தான் அதிகமாக நேசித்தான். இதுவரை ஆறேழு முறை அந்த வண்டி விபத்தில் சிக்கியிருந்தாலும் ஒருமுறை கூட அவனுக்கு ரொம்ப ஆபத்தான காயம் ஏதும் பட்டதே கிடையாது என்பது தன் வண்டியின் மீதான அவனுடைய அன்பை இன்னும் அதிகமாக பெருக்கி விட்டிருந்தது.

வாஞ்சையோடு வண்டியில் ஏறி அமர்ந்து அதைக் கிளப்பினான். மழை பிடிக்குமுன் வீட்டுக்குப் போய்விட வேண்டும் என தனக்குத் தானே பேசியபடி அவன் கிளம்பிய சிறிது நேரத்திலேயே மழை பிடித்துக் கொண்டது. மழையையும் தன் மேலதிகாரியையும் சபித்தபடியே கண்முன் தென்பட்ட பேருந்து நிறுத்தத்தின் முன் வண்டியை நிப்பாட்டி விட்டு நிழற்குடையின் கீழே நனையாத இடத்தில் போய் நின்று கொண்டான். உடம்பில் மழை பட்ட இடங்கள் எல்லாமே அமிலம் தெரித்தாற் போலொரு உணர்வு அவனுக்குள் நிரம்பி இருந்தது. கைக்குட்டையையை எடுத்து மொத்தமாக துடைத்துக் கொண்டு நிமிர்ந்தான்.

அந்த நிறுத்தத்தில் அவனைத் தவிர்த்து மூன்று பேர் நின்று கொண்டிருந்தார்கள். அவனுக்கு இடப்புறம் நின்றிருந்த நீல நிறச் சேலையணிந்த இளம் வயதுப் பெண்ணொருத்தி அங்கு வேறு சிலரும் இருக்கிறார்கள் என்பதே அறியாதவள் போல அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள். வட்ட முகமும் மிகச் சிறிய கண்களும் கொண்டிருந்த அவள் மூக்கு குத்திக் கொண்டிருந்தது அவனுக்கு அவளை இன்னும் அழகாகக் காட்டியது. அவள் தன்னை கவனிக்க வேண்டும் என்பதாய் லேசாக இருமுறை இருமினான். ஆனால் அவள் பக்கம் திரும்பக் கூட இல்லை என்பது அவனுக்கு சங்கடமாக இருக்கவே முகத்தை திருப்பிக் கொண்டான்.

நிறுதத்தில் இருந்த மற்றவர்களில் பைத்தியம் போலிருந்த மனிதரொருவர் சாலையை வெறித்து பார்த்தபடியே இருந்தார். அங்கிருந்த இன்னொரு ஆண் உலகமே இன்னும் சிறிது நேரத்தில் அழிந்துவிடுமோ எனக் கவலை கொண்டவன்போல வெகு சிரத்தையாக புகைபிடித்துக் கொண்டிருந்தான். மழை கிளப்பி விட்டிருந்த மண்வாசனையையும் மீறி சிகரெட்டின் நொடி இவன் நாசிக்குள் புகுந்து நெஞ்சை நிறைத்தது ரொம்ப இதமாக இருந்தது. இவனுக்கு புகைப்பழக்கம் கிடையாது என்றாலும் முதல்முறையாக அதை தான் பழகாமல் விட்டுவிட்டோமே என்பதாக வருத்தம் கொண்டான். தன்னைத்தானே பழித்தபடி மழை எப்போது நிற்குமென யோசித்துக் கொண்டே சாலையை வேடிக்கை பார்க்கத் துவங்கினான்.

அப்போதுதான் அவன் அந்தச் சிறுவனைப் பார்த்தான். சோவென பெய்யும் மழையைப் பொருட்படுத்தாது வெகு சந்தோஷமாக பாட்டொன்றை பாடியபடியே சைக்கிள் மிதித்து போய்க் கொண்டிருந்தான் சிறுவன். தன்னுடைய வலது கையால் கைப்பிடியை திடமாகப் பிடித்து, இடது கையோ பாதி இல்லாமல முழங்கையோடு முடிந்து போயிருக்க, ஒற்றைக்கையால் வண்டியோட்டி போய்க் கொண்டிருந்த அவனைப் பார்த்த இவனுக்குள் இன்னதென்று சொல்ல முடியாத குற்றவுணர்ச்சி தோன்றியிருந்தது. தன் கஷ்டங்கள் மறந்து மழையைக் கொண்டாடியபடி செல்ல அந்த சிறுவனால் முடியும்போது தான் ஏன் மழையை வெறுக்கிறோம் என யோசிக்கத் துவங்கினான். சாலையில் விளையாடிபடி போய்க் கொண்டிருந்த குழந்தைகளின் கூட்டமொன்று அவனை மொத்தமாக கலைத்துப் போட்டது.

மிகுந்த யோசனைக்குப்பின் தன் கையை வெளியே நீட்டினான். மழைத்துளிகள் அபாரமான வேகத்தோடு அவன் கைகளில் பட்டு தெறித்து விழுந்தன. மெல்ல மெல்ல நகர்ந்து வந்து மொத்தமாக நனையும்படி மழையில் நின்றான். மழையின் குளிர்ச்சி மெல்ல மெல்ல உடலை நிரப்பத் துவங்கியிருந்தது. சந்தோஷமாக உணர்ந்தான். மழை மீது அவன் சேமித்து வைத்திருந்த கசப்பு அத்தனையும் கரைந்து நீரோடு ஓடுவதாக உணர்ந்தவன் உற்சாகம் கொண்டவனாக வண்டியில் ஏறிக் கிளம்பினான்.

மழையின் ஊடாக வண்டி சீரான வேகத்தில் போய்க் கொண்டிருந்தது. அவன் தன்னை புதிதாக பிறந்தவன் போல உணர்ந்தான். மழை அவன் பார்க்கும் காட்சிகளை எல்லாம் இன்னும் அழகாக மாற்றி விட்டிருந்தது. ஒரு ஆட்டோ சாலையில் இவனைக் கடந்து போனது. அதன் உள்ளே அமர்ந்து இருந்தவன் தன் கைகளில் சைக்கிள் ஒன்றை வைத்திருந்தான். ஆட்டோவின் இரு பக்கங்களிலும் சக்கரங்கள் முளைத்திட்ட புதிய வாகனமென அது போய்க் கொண்டிருந்தது வித்தியாசமான காட்சியாக அவனுக்குப் பட்டது. தனக்குள் சிரித்துக் கொண்டான்.

வழியில் குறுக்கிட்ட வண்டி ஒன்றுக்காக வேகத்தை குறைத்தபோதுதான் அவன் அதை கவனித்தான். வண்டியின் வேகம் குறைந்தபோது மழையின் வேகம் கூடி இருந்தது. எதிரே இருக்கும் எதுவும் இவனுக்கு தெரியாத வண்ணம் மழை சோவெனப் பெய்யத் துவங்கியது. மழையைத் தோற்கடிப்பவன் போல இவன் வண்டியின் வேகத்தைக் கூட்டினால் மழையின் வேகம் கம்மியானது. தன்னோடு மழை நடத்தும் விளையாட்டு அவனுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. வேகத்தைக் குறைப்பதும் கூட்டுவதும் என அதற்கு தகுந்தாற்போல மழையும் மாறுவது அவனுக்கு மிக வேடிக்கையாக இருந்தது.

வெகு நேரம் தொடர்ந்த அந்த விளையாட்டு முடிவே பெறாதோ என அவனுக்குத் தோன்றிய கணத்தில்தான் அது சட்டென உரைத்தது. பொதுவாக இத்தனை நேரம் அவன் வண்டியில் வீட்டுக்கே வந்திருக்கக் கூடும். ஆனால் இன்று இதுவரைக்கும் அவன் அத்தனை பரிச்சயம் இல்லாத சாலைகளில் பயணித்தபடியே இருந்தான். அவனுக்கு சற்றே குழப்பமாக இருந்தது. தன்னுடைய கடிகாரத்தைப் பார்த்தான். அது மிகச்சரியாக அவன் பேருந்து நிறுத்தத்தில் மழைக்குள் நுழைந்த கணத்தோடு நின்று போயிருந்தது. எதிர்கடந்து போகும் மனிதர்கள் எல்லாரும் சாதாரணமாகப் போக தன்மேல் மட்டும்தான் மழை பெய்து கொண்டிருக்கிறதோ என அவன் ஐயம் கொள்ளத் துவங்கினான். மழை நிற்காமலே போய்விடுமோ எனும் அச்சம் மெதுவாக அவனுள் பரவத் தொடங்கியது.

அவன் சாலையை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் மீண்டும் தான் ஒரே சாலையிலேயே பயணித்துக் கொண்டிருப்பதை வழியில் பார்த்த காத்து நிற்கும் மழைப்பெண் ஒருத்தியின் மூலமாக உறுதி செய்து கொண்டான். பயம் ஒரு மிருகமென அவனுக்குள் புகுந்து கொண்டு இம்சிக்க ஆரம்பித்தது. உறைந்து போய்க் கிடக்கும் காலத்தின் ஒரு துளியில் தான் சிக்கிக் கொண்டு விட்டோம் என்பதை அவனால் ஒத்துக் கொள்ளவே முடியவில்லை. சின்னதொரு கணத்தின் தாக்கத்தில் மழையில் வண்டியை செலுத்த முடிவு செய்த தன் மீதே அவனுக்கு கோபம் கோபமாக வந்தது. தந்திரமாகத் தன்னை மழை ஏமாற்றி விட்டதென உரக்கக் கத்தத் தொடங்கினான். மழையைக் கண்டபடி திட்டிய அவனுடைய கதறல்களை எல்லாம் காற்று தனக்குள் புதைத்துக் கொண்டது.

மழை உண்டாக்கிய அந்த மாயவெளியில் இருந்து வெளியேறும் வாசல் தெரியாதவனாக அவன் அழுது அரற்றியபடியே வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான். வீட்டில் தனக்காக காத்திருக்கும் அம்மாவின் முகம் அவன் கண்முன்னே வந்து வந்து போனது. எப்பாடியாவது தான் இந்த சுழலில் இருந்து தப்பி விடுவேன் என்று தனக்குத்தானே நம்பிக்கை சொல்லிக் கொண்டிருந்த வேளையில் திடீரென அவன் எதிர்பார்த்திராதாவொரு கணத்தில் பெரிய லாரியொன்று அவன் முன்னே திரும்பியது. நேராக அவன் வண்டி போய் அந்த லாரியிலேயே மோதியது. அவன் தூக்கி எறியப்பட்டான்.

சாலையில் இருந்து சற்று விலகி அந்த வண்டி முற்றிலுமாக உருக்குலைந்து கிடந்தது. பத்தடி தூரத்தில் தூக்கி எறியப்பட்ட அவன் விழுந்து கிடந்தான். தலையில் இருந்து வழிந்து கொண்டிருந்த ரத்தம் அவனைச் சுற்றி குளமாகத் தேங்கி நின்றது. அவன் விழுந்து கிடந்த இடம் நோக்கி மக்கள் குழுமத் தொடங்கி இருந்தார்கள். இத்தனை நேரமாக ஓடாமல் நின்று போயிருந்த அந்த கடிகாரம் மீண்டும் ஓடத் துவங்கியிருந்தது. மழை நின்று போயிருந்தது.

March 15, 2011

எல் தோப்போ (1970)

"எல் தோப்போ (எலி) நிலத்தினடியே தோண்டியபடி செல்லும் ஒரு விலங்கு. சில நேரங்களில் அது சூரியனைத் தேடி பூமியின் மேல்புறத்துக்கு வரும். அப்படி சூரியனைப் பார்க்கும்போது அதன் கண்கள் குருடாகி விடுகின்றன.."

சினிமா : அலைந்து திரிபவனின அழகியல் என்கிற சாருவின் புத்தகத்தில்தான் முதன்முறையாக அந்தப் பெயர் என் கண்ணில் பட்டது - அலெஹாந்த்ரோ ஹொடரோவெஸ்கி. தன் வாழ்நாளில் வெறும் நான்கே படங்களை இயக்கி இருக்கிறார். அப்போது, ஏதோ புதிதாக முயற்சி செய்தவர் என்ற வகையில், அவரை எளிதாகத் தாண்டிப் போய் விட்டேன். சில நாட்களுக்குப் பின் உலகில் வெளியான பயங்கர வன்முறை நிறைந்த படங்கள் வரிசையில் “எல் தோப்போ” என்கிற அவருடைய படத்தைப் பார்த்தபோது லேசாக பொறிதட்டியது. படத்தை தரவிறக்கம் செய்து பார்த்தபின் எனக்கு உண்டான உணர்வுகளை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதிகமாக வசதிகள் இல்லாத எழுபதுகளிலேயே இப்படியொரு படத்தை எடுத்திருக்கிறார் எனில் அந்த மனிதர் ஒரு மாபெரும் கலைஞனாகவே இருக்க முடியும். அவரோடு இணைந்து பணிபுரிந்த ஃபெர்னாண்டோ அர்ரபாலின் வார்த்தைகளில் சொல்வதானால் “ஹொடரோவெஸ்கி ஒரு தெய்வீகப் பைத்தியக்காரன்”.அகண்ட பாலைவனம். கறுப்பு நிற உடையணிந்து எல் தோப்போவும் நிர்வாணமான அவனுடைய ஏழு வயது மகனும் கறுப்புக் குதிரையில் வருகிறார்கள். அவன் தன் மகனிடம் சொல்கிறான். “இன்று உனக்கு ஏழு வயது முடிவதால் இனி நீ ஒரு ஆண்மகன். அதன் அடையாளமாக உன் முதல் பொம்மையையும் தாயின் புகைப்படத்தையும் பாலை மணலில் புதைக்க வேண்டும்..”. பிறகு தோப்போவும் அவன் மகனும் அருகிலிருக்கும் ஒரு நகரத்துக்கு வருகிறார்கள். ஊரெங்கும் பிணக்கோலம். தேவாலயத்தின் உள்ளே ஆண்கள் தூக்கில் தொங்குகிறார்கள். பெண்களும் தப்பவில்லை. விலங்குகள் இறந்து கிடக்க வீதியில் எங்கும் ரத்தவெள்ளம். குற்றுயிரும் குலையிருமாக இருக்கும் ஒருவனை தன் மகனின் கையில் துப்பாக்கியைக் கொடுத்து சுடச்சொல்லி அந்தத் துயரிலிருந்து விடுவிக்கிறான் தோப்போ.

தன்னை வழிமறிக்கும் மூன்று போக்கிரிகளிடமிருந்து இந்தப் பாவங்களை செய்தவன் கர்னல் என்பவனும் அவனுடைய ஐந்து ஆட்களும் என அறிந்து கொள்கிறான் எல் தோப்போ. கொடூரமான கர்னலைத் தேடிச்சென்று அவன் ஆண்குறியை வெட்டி விடுகிறான். வெட்கம் தாளாமல் கர்னல் தற்கொலை செய்து கொள்ள அவனோடு இருக்கும் பெண் தோப்போவுடன் சேர்ந்து கொள்கிறாள். குதிரையில் இருவர் மட்டுமே போகமுடியும் என்பதால் தன் மகனை அங்கிருக்கும் குருமார்களிடம் விட்டுவிட்டு பயணத்தைத் தொடர்கிறான். தன் மீதான காதலை நிரூபிக்க வேண்டுமானால் பாலைவனத்தில் இருக்கும் நான்கு துப்பாக்கி சாகசக்காரர்களை வெல்ல வேண்டும் எனச் சொல்கிறாள் அந்தப்பெண். அவர்கள் நால்வருமே விதவிதமான தத்துவங்களை தோப்போவுக்குச் சொல்கிறார்கள். இருந்தும் நால்வரையுமே சூதின் மூலம் வீழ்த்துகிறான் தோப்போ. ஆனால் அந்தப் பெண்ணோ தன் காதலியான இன்னொரு பெண்ணோடு சேர்ந்து கொண்டு தோப்போவை சுட்டு வீழ்த்துகிறாள். இறந்து கிடக்கும் அவன் சடலத்தை ஒரு குள்ளர்கள் கூட்டம் இழுத்துக்கொண்டு போகிறது.

இருபது வருடங்களுக்குப் பிறகு தோப்போ ஒரு இருட்டு குகையில் கண்விழிக்கிறான். உடல் ஊனமுற்றவர்களும் குள்ளர்களும் நிறைந்த அந்தக் குகையில் இருந்து தங்களைக் காக்க வந்த தேவதூதனாக அவன் நம்பப்படுகிறான். சுரங்கம் அமைத்து அந்த மக்களை குகையை விட்டு வெளியே அழைத்துப் போவதாக சத்தியம் செய்கிறான் தோப்போ. சுரங்கம் தோண்ட வேண்டி தன் மீது அன்பு செலுத்தும் ஒரு குள்ளப்பெண்ணோடு இணைந்து பக்கத்து ஊரில் வித்தைகள் செய்து காட்டி பணம் சம்பாதிக்க முயலுகிறான். அந்த நகரமோ மோசமான மனிதர்களால் நிறைந்து இருக்கிறது. பொய்யான மத நம்பிக்கைகளில் வாழும் அம்மக்களை மீட்க வரும் பாதிரி எல் தோப்போவின் மகன். தன் தந்தையை அடையாளம் கண்டுகொள்ளும் அவன் நடுவிழியில் இரக்கமின்றி தன்னை விட்டுப்போன தோப்போவைக் கொல்லத் துடிக்கிறான். இருந்தும் குள்ள மக்களுக்காக தோப்போ உழைப்பதை அறிந்து கொண்டு அவனுக்கு கொஞ்சம் அவகாசம் தருகிறான்.

ஒருவழியாக தோப்போ சுரங்கத்தை கட்டி முடிக்கிறான். பொறுமையில்லாத குள்ள மக்கள் வெளியுலகம் காண அவனுடைய எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் நகருக்குள் நுழைகிறார்கள். வேற்று ஆட்களை விரும்பாத உள்ளூர் மக்கள் ஒருவர் பாக்கியில்லாமல் குள்ளர்களை சுட்டு வீழ்த்துகிறார்கள். கோபம் கொள்ளும் தோப்போ தன் மாய சக்தியின் உதவியோடு நகரத்தில் இருக்கும் எல்லாரையும் கொன்று விட்டு தன்னையும் எரியூட்டிக் கொள்கிறான். படத்தின் கடைசி காட்சியிலும் ஒரு (வெள்ளை) குதிரை வருகிறது. இப்போது தோப்போவின் மகன் கறுப்பு உடை அணிந்து குதிரையை ஓட்டி வருகிறான். அவனுக்குப் பின்னால் தோப்போவை விரும்பிய குள்ளப்பெண்ணும், அவர்களுக்குப் பிறந்த குழந்தையும் இருக்கின்றன. பயணம் தொடர்கிறது.

மதங்கள் சார்ந்து விவாதிப்பதும் குறியீடுகளின் பயன்பாடும் ஹொடரோவெஸ்கியின் படங்கள் அளவுக்கு வேறு யார் படங்களிலும் பயன்பட்டு இருக்கிறது என்று தெரியவில்லை. ஒருவிதமான நாடகத்தன்மையும், ஆண் குரலில் பேசும் பெண், மொட்டைப்பாறையில் ஊற்றெடுக்கும் நீர், பாலைமணலின் அடியில் கிடைக்கும் முட்டைகள், பறவைகளைப்போல கிறீச்சிடும் பெண்கள் என சர்ரியலிச காட்சியமைப்புகளும் படம் முழுக்க நிரவிக் கிடக்கின்றன. படம் எடுப்பதில் தனக்கென ஒரு வழிமுறையை பயன்படுத்தி இருக்கிறார் ஹொடரோவெஸ்கி. அவர் படத்தில் நடிக்கும் யாரும் தொழில்முறை நடிகர்கள் கிடையாது. பயணத்தின்போது தான் சந்திக்கும் மனிதர்களையும், வித்தியாசமான உடலமைப்பு கொண்டவர்களையும் நடிக்க வைத்திருக்கிறார். படத்தில் வரக்கூடிய ஒரு வன்புணர்ச்சிக் காட்சியில் உண்மையாகவே தான் நாயகியை வற்புறுத்திப் புணர்ந்ததாக ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். அதேபோல படத்தில் செத்துக் கிடக்கும் மிருகங்கள் எல்லாம் உண்மையானவையே.

தத்துவம் சார்ந்து பேசுவதற்கான பல இடங்களும் குறியீடுகளும் படத்தில் உள்ளன. குறிப்பாக நான்கு சாகசக்காரர்களையும் தோப்போ எதிர்கொள்ளும் இடங்கள் மிக முக்கியமானவை. முதல் மனிதன் கண்பார்வையற்றவன். இருந்தும் தன் புலன்களை கட்டுப்படுத்தத் தெரிந்தவன். “எனக்கு பயம் என்பதே கிடையாது. நான் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. மாறாக அவை என்னை கடந்து போக அனுமதிக்கிறேன். இதற்குப் பிறகும் நீ என்னோடு மோத விரும்பினால் உனக்கு தோல்விதான். இவ்வுலகிம் மரணம் என ஒன்று இல்லவே இல்லை”. தான் அவனோடு போட்டி போட்டு வெல்ல முடியாது எனத் தெரிந்து கொண்டு எல்தோப்போ ஒரு குழிக்குள் அப்பார்வையில்லா மனிதனை விழச்செய்து பயத்தை உண்டாக்கி அவ்வேளையில் சுட்டுக் கொல்கிறான்.

இரண்டாம் சாகசக்காரன் தன் தாயின் மீது பெரும் அன்பு கொண்டவன். வெகு எளிதாக அவன் தோப்போவை தோற்கடிக்கிறான். "நீ உன்னை அறிந்து கொள்வதற்காக மட்டுமே துப்பாகியைக் கையாளுகிறாய். உண்மையில் உன்னைத் தொலைக்கும்போதுதான் நீ முழுமையடைய முடியும். அதற்கு பிறர் மீது அன்பு செலுத்த வேண்டும். ஆனால் பேராசைக்காரனான உன்னால் அது முடியாது. நீ எதையாவது கொடுப்பதாக நம்பும்போது உண்மையில் எடுக்கவே செய்கிறாய்.” அவனுடைய தாயின் நடைபாதையில் கண்ணடித்தூளைக் கொட்டி அவள் காயம்பட்டு அலறும் வேளையில் என்னவென்று பார்க்கும் சாகசக்காரனை வஞ்சகமாகக் கொல்கிறான் தோப்போ. மூன்றாமவன் இசைக்கலைஞன். முயல்களோடு வசித்து வருபவன். தோப்போ ஊதும் குழலோசை கொண்டே அவனை இனம் கண்டுகொள்கிறான். இருவரும் நேருக்கு நேர் மோதுகிறார்கள். அவன் இதயத்துக்குத்தான் குறிவைப்பான் என்பதை அறிந்து வைத்திருக்கும் தோப்போ தன் உடையின் உள்ளே ஒரு உலோகத்தை ஒளித்து வைத்து தப்பித்து எதிரியைக் கொல்கிறான். “அளவுக்கு அதிகமான கவனமும் குற்றமே..”

கடைசி சாகசக்காரன் வயதானவன். தன்னுடைய துப்பாக்கியை பட்டாம்பூச்சி பிடிக்கும் வலையாக மாற்றிக்கொண்டு விட்டவன். தோப்போவின் தோட்டாக்களை வலையால் அவன் மீதே திருப்பி அடிக்கிறான். அவனைத் தன்னால் வெல்லவே முடியாதென நொந்து போகிறான் தோப்போ. “நீ ஏன் இப்படி இருக்கிறாய். என்னிடம் எதுவுமில்லை. நீ வஞ்சகம் செய்தாலும் என்னிடம் ஒன்றுமில்லை. நான் போட்டியே போடாதபோது நீ எப்படி ஜெயிக்கவோ தோற்கவோ முடியும்?” “இல்லை உங்களிடம் உயிர் இருக்கிறதே..” உடனே கிழவன் துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொள்கிறான். “இப்போது என்னிடம் உயிரும் இல்லை. நீ தோற்று விட்டாய்.”

தோப்போ முதல் முறையாக தன் தவறுகளை உணருகிறான். தான் கொன்றவர்களைத் தேடிப்போகிறான். அங்கே முதல் சாகசக்காரனின் பிணத்தின் மீது தேனீக்கள் கூடு கட்டி இருக்கின்றன. அப்போது அம்மனிதன் வாழும் எண்கோண வடிவக் கிணற்றின் சுவரில் சிலுவையில் அறையப்பட்ட ஆடொன்று இருக்கிறது. இது நேரடியாக விவிலியத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சி. கடைசி காட்சியில் தோப்போ தீ வைத்துக் கொண்டு இறந்தபின்னும் அவனுடைய எலும்புகளின்மீது தேனீக்கள் மொய்த்துக்கொண்டு இருக்கும். எந்தப்பெண்ணுக்காக தோப்போ எல்லாவற்றையும் செய்தானோ அவளே அவனை சுட்டு விடுகிறாள். ஒரு பாலத்தின் மீது நடந்து வரும் தோப்போவை அவள் சரியாக கைகளிலும் கால்களிலும் ஆணி அறைந்ததுபோல சுடுவது கிருஸ்துவைக் குறிப்பது, பின்னால் ஒலிக்கும் வேத வசனங்கள் எனப் பல குறியீடுகள் படத்தில் உண்டு.

பதிவின் ஆரம்பத்தில் எலி பற்றி சொல்வது மனிதனையே குறிப்பதாக நம்புகிறேன். தான் யாரெனத் தெரிந்து கொள்ள வேண்டி அனைவருமே அலைகிறோம். ஆனால் உண்மை தெரியவரும்போது தொலைந்து போனவர்களாக இருக்கிறோம். கர்னலிடம் சண்டை போடும்போது அவன் தோப்போவிடம் கேட்பான். “நீதியை நிலைநாட்ட நீ யார்?” அதற்கு தோப்போவின் பதில் “நான் கடவுள்..” நம்பிக்கையின் உச்சமான அதுதான் ஹொடரோவெஸ்கி.

மேலதிகத் தகவல்களுக்கு நன்றி

சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல் (சாரு நிவேதிதா)
விக்கிப்பீடியா

எல்தோப்போ பற்றிய ஹொடரோவெஸ்கியின் பேட்டியை வாசிக்க இங்கே சொடுக்குங்கள்.

March 14, 2011

தன்னை தொலைத்தவர்கள்

பெருந்துறையில் வேலை பார்த்த சமயம். தானாக முகச்சவரம் செய்து கொள்ளத் தெரியாது என்பதால் கடையில் போய் செய்துதான் பழக்கம். அந்த ஞாயிற்றுக்கிழமை நான் வழக்கமாகப் போகும் கடை பூட்டி இருந்ததால் ஊருக்கு சற்று தள்ளி இருந்த ஒரு கடையைத் தேடிக் கண்டுபிடித்தேன்.

மொத்தம் மூன்று நாற்காலிகள். ஒரு நடுத்தர வயதுக்காரரும் ஒரு சிறுவனும் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். காலியாக இருந்த நாற்காலிக்கு அருகே சற்று வயதான ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார். நான் அங்கே போய் அமரலாம் என்றபோது நடுத்தர வயதுக்காரர் தடுத்தார்.

"கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்.. நான் முடிச்சுட்டு வந்துடுறேன்.."

நான் பெரியவரைப் பார்த்தேன். அவர் எந்த சலனமும் இல்லாமல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தார். நான் கொஞ்ச நேரம் பொறுத்து நடுத்தர வயது மனிதரின் நாற்காலியில் போய் உட்கார்ந்து கொண்டேன்.

சிறிது நேரங்கழித்து வயதான குடியானவர் ஒருவர் சவரம் செய்து கொள்ள வந்து பெரியவரின் நாற்காலியில் போய் உட்கார்ந்தார். இப்போது கடைக்காரர் எதுவும் சொல்லவில்லை. பெரியவரும் முகத்தில் சின்ன மகிழ்ச்சியோடு வேலையை ஆரம்பித்து இருந்தார்.

கொஞ்ச நேரம் கழித்து மெலிதான குரலில் யாரோ பாடும் சத்தம் கேட்கத் தொடங்கியது. அது எந்த சினிமா பாட்டாகவும் அல்லாமல் தெருக்கூத்துப் பாடல் போல இருந்தது. அந்தக் கடையில் டேப் ரெக்கார்டர் எதுவும் இல்லை என்பதால் நான் யாரென மெதுவாகத் திரும்பிப் பார்த்தேன்.

பெரியவர் ரொம்ப சந்தோஷமாக பாடியபடி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அதை அமர்ந்து இருந்த குடியானவரும் ரசித்துக் கேட்டபடி இருந்தார். நான் பார்ப்பதைப் பார்த்து விட்டு கடைக்காரர் சட்டெனக் கத்தினார்.

"வாய மூடிக்கிட்டு வேல பாக்க மாட்டீங்களா? உங்களோட இதே ரோதனையாப் போச்சு?"

நல்ல வெளிச்சமாக இருந்த இடம் சட்டென தடம் தெரியாமல் இருண்டு போனதைப்போல பெரியவரின் பாட்டு நின்று போனது.

"இல்ல.. பரவாயில்ல.. அவர் பாட்டு நல்லாத்தான் இருந்துச்சு.. எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை.."

பெரிவர் மெதுவாக என்னைப் பார்த்தார். அவர் கண்களில் ஒரு சின்ன நன்றி இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு அவர் பாடவில்லை. சவரம் முடித்து நான் எழுந்தபோது பெரியவரும் வேலை முடித்து இருந்தார்.

"என் கூட ஒரு டீ சாப்பிட வர்றீங்களா?"

பெரியவர் கடைக்காரரைப் பார்த்தார்.

"அதான் சார் கூப்பிடுறார்ல.. போயிட்டு வாங்க.."

அருகில் இருந்த கடையில் போய் நின்றோம்.

“நீங்க பாடுனது என்ன பாட்டு? ரொம்ப நல்லா இருந்துச்சுங்க அய்யா..”

“நெசமாவா சொல்றீங்க.. கிட்டத்தட்ட மூணு வருஷத்துக்குப் பொறவு ஒரு டவுன் மனுஷனுக்கு என் பாட்டு பிடிச்சிருக்குங்கிறத இப்போத்தான் கேக்குறேன் தம்பி.. ரொம்ப நன்றி..”

“உங்களுக்கு இதுதான் தொழிலா இல்ல..”

“என்ன தம்பி இப்படிக் கேட்டுப்புட்டீங்க..” சொல்லும்போது அவர் நெஞ்சு நிமிர்ந்து கொண்டது. “பரம்பரை பரம்பரையா கூத்து கட்டுற குடும்பம் தம்பி. சொந்த ஊரு விழுப்புரம் பக்கம். அந்தப்பக்கம் நான் கூத்து கட்டாத ஊரே கிடையாது. ஹ்ம்ம்.. அது ஒரு காலம். டிவி, சினிமா, டான்ஸ்னு வந்தபொறவு எங்க பொழப்பு நாறிப் போச்சு. பழசையே பேசிக்கிட்டு இருந்தா முடியுமா? அதான்.. இந்தக் கடை வச்சிருக்கவன் என் சம்சாரத்தோட தம்பி மவன். அதுதான் இங்க வந்துட்டேன்.. ஆனா கூட.. என்ன மீறி அப்பப்ப இந்த பாட்டெல்லாம் வாய்ல வந்து தொலையுது.. எல்லாம் என் தலையெழுத்து..”

சொல்லி முடித்தபோது அவர் கண்களில் லேசாக நீர் துளிர்த்திருந்தது. அவருக்கு ஆறுதலும் நன்றியும் சொல்லி விட்டுக் கிளம்பினேன்.

வேலை பார்ப்பது என்பது எல்லாருக்குமே அவசியம்தான். ஆனால் தான் விரும்பிய கலையை வாழ்வின் ஆதாரத்துக்கான வேலையாக பார்த்து வந்த ஒருவரை அதிலிருந்து அறுத்து எடுத்திருக்கும் யதார்த்த வாழ்வின் துயரம் என்னை வெகுவாகப் பாதித்து இருந்தது.

சென்ற வாரம் நண்பரொருவரின் வீட்டில் நடந்த துஷ்டிக்குப் போயிருந்தபோதும் இதே மாதிரியான மனிதரொருவரைக் கண்டேன். ஒப்பாரி வைக்க வந்த குழுவில் அவர் மட்டும் சுருதி பிசகாமல் பாட, தனிப்பாடல்கள் எனக் கலக்கிக் கொண்டிருந்தார். அவரிடம் தனியாகப் பேசியபோது இதே மாதிரியான பின்புலம் அவருக்கும் இருந்தது. பிழைப்பின் பொருட்டு இது மாதிர்யான இடத்துக்குத் தான் வந்து விட்டதை வருத்தமாகச் சொன்னார்.

இவர்கள் மட்டும்தான் என்றில்லை.. நீங்கள், நான்.. பொதுவாக நாம் எல்லாருமே ஏதோ ஒரு வகையில் நம்மை தொலைத்து விட்டு வாழ வேண்டிய சூழலில் இருக்கிறோம் என்றே எண்ணத் தோன்றுகிறது. கொடிய பற்சக்கரங்கள் கொண்ட வண்டியாய் வாழ்க்கை நம் கனவுகளை நசுக்கியபடி இருக்க பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நம்மில் எத்தனை பேரால் விரும்பியபடி படிக்கவோ அல்லது நாம் விரும்பிய துறையிலோ வேலை பார்க்க முடிகிறது? கனவுகள் எத்தனை இருந்தாலும் நிதர்சனம் வேறு மாதிரியாக இருக்கும்போது அதை ஒத்துக் கொண்டு வாழும் சூழ்நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோமே ஏன்?

எல்லாரும் தான் விரும்பும் வேலையைத்தான் செய்வோம் எனில் அது சாத்தியமா? இன்றைக்கு உலகம் தனக்கென வகுத்துக் கொண்டிருக்கக் கூடிய பாதிகளில் இதற்கான வாய்ப்புகள் நிச்சயமாகக் கிடையாது. அப்படியானால் இதற்கான பதில்தான் என்ன? இதுதான் யதார்த்தம் என்பதை ஒப்புக் கொண்டு தொலைந்து போனவர்களில் ஒருவனாக உலகத்தோடு ஒத்துப்போவதே சரியாக இருக்கும் என்பதுதான் நம்முன் இருக்கும் ஒரே பதிலா? சில கேள்விகளுக்கு பதில்கள் கிடைப்பதில்லை. சில கேள்விகளுக்கு விடைகளே இருப்பதில்லை. இது இரண்டாம் வகை.

March 9, 2011

(கவனிக்கப்படாத) மனதைக் கவர்ந்த பாடல்கள் - 3

(கவனிக்கப்படாத) மனதைக் கவர்ந்த பாடல்கள் - 1

(கவனிக்கப்படாத) மனதைக் கவர்ந்த பாடல்கள் - 2

பட்டியல் தொடருது. நல்ல பாட்டா இருந்து டுபுக்கு படங்கள்ல சிக்கி காணாமப் போன பாடல்களை பத்திப் பேசுற முயற்சி இது. உங்களுக்குப் பிடித்த, இதே மாதிரியான, அதிகம் ஹிட்டாகாத நல்ல பாடல்கள் இருந்தாலும் சொல்லுங்க மக்களே..

அது ஒரு காலம் அழகிய காலம்
(படம்: அதே நேரம் அதே இடம் இசை:பிரேம்ஜி அமரன்)

ஜெய்யையும் நம்பி ஹீரோவாப் போட்டு எடுத்த படம். சென்னை 28 விஜயலட்சுமிதான் ஹீரோயினி. காதலி பணத்துக்காக காதலனை ஏமாத்துறான்னு காமா சோமான்னு ஒரு மொக்கப்படம். ஆனா இந்தப் பாட்டு.. சின்ன வலியை உண்டு பண்ணிப் போகும் எளிமையான வரிகள், அலட்டிக்காத இசை. "ஜோடியாய் இருந்தாள் ஒற்றையாய் விடத்தானா.. முத்துப்போல் சிரித்தாள் மொத்தமாய் அழத்தானா.." காதலிச்சு தோத்தவங்க எல்லாருக்கும் கண்டிப்பா ரொம்பப் பிடிக்கும்.

காதல் அடைமழைக்காலம்
(படம்: ஆண்மை தவறேல் இசை: மரிய மனோகர்)

படம் வெளிவரவே இல்லை. புதுமுகங்கள் நடிச்சு குழந்தை வேலப்பன்கிறவர் இயக்குன படம். ராகால எதேச்சையா கேக்கப் போய் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. பாடல்கள் எழுதினது யார்னு தெரியல, மனுஷன் அசத்தி இருக்கார். இந்தப் பாட்டோட ஆரம்பத்துல வர்ற மழை சத்தமும் ஹம்மிங்கும் அட்டகாசமா இருக்கும். இதே பாட்டோட ரீமிக்சும் இருக்கு.

ஆறு கஜம் சேலை உடுத்தி
(படம்: நேதாஜி இசை: வித்யாசாகர்)

ஏதோ ஒரு தீபாவளிக்கு “தினபூமி” பத்திரிக்கைல இந்தப்படத்துக்கு ஓசியா டிக்கட் கொடுத்தாங்களேன்னு போய்ப் பார்த்தேன். அவ்வ்வ்.. சரத்குமார் ஃபுல்ஃபார்ம்ல கொன்னு எடுத்தாரு. நாயகி லிசா ரே. பாவம் அந்தம்மாவ என்ன சொல்லி ஏமாத்திக் கூட்டிட்டு வந்தாய்ங்கன்னு தெரியல. ஒரு மழைப்பாட்டுக்கு போட்ட கெட்ட ஆட்டம் மட்டும் இப்போதைக்கும் ஞாபகம் இருக்கு. வித்யாசாகர் ஆள் யாருன்னு தெரியாம இருந்த காலத்துல ம்யூசிக் பண்ண படம். இந்தப்பாட்டு கொஞ்சம் நாட்டுப்புற எஃபக்ட்ல கேக்க நல்லாயிருக்கும். பாடுனது கோபால்ராவ் மற்றும் சிந்து.

ஒரு தேவதை பார்க்கும்
(படம்: வாமனன் இசை: யுவன்ஷங்கர் ராஜா)

மறுபடியும் ஜெய். மறுபடியும் ஒரு மொக்கை படம். இதே காலத்துல “முத்திரை”ன்னு ஒரு படம் வந்துச்சு. அதுவும் இதுவும் ஒரே கதை, எந்த வெளிநாட்டுப் படத்துல இருந்து சுட்டாய்ங்கன்னு தெரியல. அதுலையும் வாமனன்ல கூடுதலா கிம் கி டுக்கோட திரீ அயன்ல இருந்து வேற சுட்டிருப்பாய்ங்க. படத்தோட ஒரே ஆறுதல் - யுவனோட இசை. இந்தப்பாட்டும் ஏதோ செய்கிறாய் பாட்டும் நல்லா இருக்கும். அப்புறம் அந்த ஹீரோயின்.. ஹி ஹி.. ஷி இஸ் சோ நைஸ் யு நோ.

ஏதோ ஒரு ஏக்கமோ
(படம்:தா இசை: ஸ்ரீவிஜய்)

நிறைய இளையராஜாவின் சாயல் கொண்ட இசை. ஸ்ரீவிஜய் இலங்கைக்காரர் என்பதாகக் கேள்வி. நல்ல படமாக இருந்தும் கவனிக்கப்படாமல் டப்பாவுக்குள் போனதற்கு தாடி வச்சு கருமமாக இருந்த நாயகனும் திரும்ப திரும்ப பேசிப் பேசி சலித்துப்போன மதுரைப் பின்னணியும் கூட காரணமாக இருக்கலாம். எல்லாப் பாட்டுமே நல்லா இருந்த இந்தப்படத்தில் என்னைத் தொட்டுப்புட்டாவும், இந்தப்பாட்டும் என்னோட ஹாட் சாய்ஸ்.

முள்ளாக குத்தக் கூடாது
(படம்: சொன்னால்தான் காதலா இசை: விஜய டி ராஜேந்தர்)

வழக்கமான டியார் படம். தங்கச்சி செத்த பிறகு நம்ம கரடியார் ஒரு அழுகை அழுவார் பாருங்க.. வாட்டெர்ரர் மென். அத விடுங்க. பாட்டுக்கு வருவோம். சிம்பு பாடுன கொஞ்சம் வேகமான பாட்டு. காதல் வேண்டாம்னு சொல்ற ரோஜாவை முரளி கெஞ்சுற மாதிரி எடுத்திருப்பாங்க. நடுவுல நடுவுல வர்ற ஜில்பா ம்யூசிக்லாம் கொஞ்சம் தாங்கிக்கிற மனசு இருந்தா ஓரளவுக்குப் பிடிக்கலாம்.

பூப்பூக்கும் தருணம்
(படம்: அம்பாசமுத்திரம் அம்பானி இசை: கருணாஸ்)

இலங்கையைக் சேர்ந்த இராஜ், கிரேஸ் பாடின பாட்டு. பாப் மற்றும் வெஸ்டர்ன் ஸ்டைல் கலந்து கட்டி அடிச்சிருப்பாரு கருணாஸ். பாட்டை படமாக்குன விதமும் டான்சும் பட்டாசு கிளப்பும். நல்ல வளர்ந்து ஓங்குதாங்கா இருக்குற ஹீரோயின் உக்கார்ந்து எந்திருச்சு ஆடும்போது.. ஊப்ஸ். பாட்டுக்கு நடுவுல நடுவுல வர்ற "ஹேய்" சத்தமும் ராப்பும் பாட்டுக்கு இன்னமும் பெப்பைக் கூட்டும். எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு.

கோரே கோரே
(படம்: மாஸ்கோவின் காவேரி இசை: தமன்)

ரொம்ப எதிர்பார்க்க வச்சு பப்படமாப் போன ரவிவர்மனோட படம் (யார் எதிர்பார்த்தான்னு எல்லாம் எதிர்க்கேள்வி கேட்கக்கூடாது). இன்னைக்கு சினிமால பத்தே ட்யூன வச்சு மாத்தி மாத்தி ம்யூசிக் போட்டுக்கிட்டு இருக்குறது ரெண்டு பேரு. ஒண்ணு - ஹாரிஸ். இன்னொண்ணு - தமன். இந்தப்பாட்டும் ஏற்கனவே கேட்ட ஏதோ ஒரு பாட்டுதான் ஆனாலும் நல்லாயிருக்கும். நம்ம சமந்தாவுக்காக இந்தப்பாட்டைக் கேளுங்க..

{பாடல் வரிகளுக்கு மேல் கிளிக் செய்யும்போது அதன் யூட்யூப் வீடியோவோ அல்லது பாடல்கள் தரவிறக்கம் செய்வதற்கான லின்குகளோ இணைக்கப்பட்டு இருக்கின்றன..}

March 3, 2011

கமாண்ட் சார்

வெகு நாட்களாகவே கார் ஓட்டப் பழக வேண்டுமென்று ஆசை. நண்பர் ஒருவரும் ஆட்டத்தில் ஒட்டிக்கொள்ள இரண்டு வாரங்களுக்கு முன்பாக மதுரையின் பிரபலமான டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்து விட்டேன். அவர்களுடைய வழக்கமான நேரமும் எங்கள் கல்லூரி நேரமும் ஒத்து வராததால் எங்கள் இருவருக்கு மட்டும் தனி வண்டி, தனியான நேரம் ஒதுக்கி சொல்லிக் கொடுப்பதாக ஏற்பாடு.

முதல் நாள் வகுப்பில்தான் அவரை சந்தித்தேன். கமாண்ட் சார். எங்களுக்கு ஒதுக்கி இருந்த டிரக்கரின் இன்ஸ்ட்ரக்டர். வயது எப்படியும் ஐம்பதுக்கு மேல் இருக்கும் எனத் தோன்றியது. ஏற்றி சீவிய தலைமுடியும் இறக்கி வைத்த மீசையும் அவருக்கு ஒரு கெத்தை கொடுத்தது. அடிக்கடி பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகள் என்று வித்தியாசமான மனிதர்.

"இப்படிப் புடிக்கணும்.."

"ரோட்டைப் பாருங்க.. இப்புடி.. ஹ்ம்ம்.. கவனிங்க.."

"நீங்க படிச்சவங்கதான.. சொன்னாப் புரியாதா.."

"command.. command.. கமாண்ட கவனிங்க சார்.."

அன்றுதான் முதல் முறையாக காரில் இருக்கும் ஒருவனோடு பேசுகிறோம் என்கிற உணர்வே இல்லாமல் வறுத்துத் தள்ளி விட்டார் மனுஷர். எனக்கு செம கடுப்பு. நீ பெரிய டிரைவிங் வெங்காயம்னா அதுக்கு நாங்கதான் ஆளா? அடுத்த நாள் முதல் அவர் வண்டியில் ஏறுவதில்லை என்று முடிவு செய்தாகி விட்டது. அத்தோடு அவருக்கு ஒரு பட்டப்பெயரும்.. "கமாண்ட் மண்டையன்.."

பத்து நாட்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் போனது. நடுவில் ஒருமுறை நண்பர் கமாண்ட் சாருடைய வண்டியில் போய் வந்தவர் சொன்னார். "சார்.. அவர் நாம நினைக்கிற மாதிரி இல்ல சார். நெஜமாவே நல்லா சொல்லித் தரார்.." ஆனாலும் எனக்கு ஆறவில்லை. அதெல்லாம் அவர் வண்டியில் ஏறவே முடியாது என தீர்மானமாக சொல்லிவிட்டேன்.

ஆனால் நான் நடக்கவே கூடாது என்று ஆசைப்பட்ட நாளும் வந்தது. எல்லா டிரைவர்களும் ஏதோ பங்க்ஷன் என்று லீவ் போட்டுவிட அன்று கமாண்ட் சாரின் வண்டி மட்டும்தான் இருந்தது. வேறு வழியே இல்லை. நானும் நண்பரும் ஏறி விட்டோம். நான் ஓட்ட நண்பர் பின்னால் அமர்ந்து இருந்தார். நான் டிரைவர் சீட்டில் உட்கார்ந்தவுடனே கமாண்ட் சார் தன் கண்டிப்பை ஆரம்பித்து விட்டார்.

"இன்னைக்கு ஒத்தக் கையில ஓட்டுங்க. இன்னொரு கை கியரைப் புடிக்கட்டும்.."

எனக்குப் பழக்க தோஷத்துக்கு கை ஸ்டியரிங்கை நோக்கிப் போக மீண்டும் மீண்டும் இழுத்து விட்டுக் கொண்டே இருந்தார். சற்று நேரத்தில் எனது ஒரு கையில் இருந்த கண்ட்ரோல் பார்த்து எனக்கே ஆச்சரியமாகிப் போனது.

"பார்த்தீங்களா.. அம்புட்டுதான்.. இந்த தன்னம்பிக்கை வரணும் சார்.. அதுதான் முக்கியம்.."

முதல் முறையாக நான் அவர் பேசுவதை கவனிக்கத் தொடங்கினேன்.

"எப்படி எல்லாம் சார் விபத்து நடக்குது? மூணே விஷயம். நீயா நானான்னு போட்டி வரும்போது.. அது இருக்கவே கூடாது. இது வாழ்க்கை. விளையாட்டு கிடையாது. ரெண்டாவது.. அதிக கோபமோ சோகமோ இருக்கும்போது வண்டியத் தொடவே கூடாது. மூணாவது ரொம்ப முக்கியம். தண்ணி போட்டுட்டு ஓட்டவே கூடாது.."

வழியில் ஒரு கடையில் நிப்பாட்டினோம். "டீ சாப்புடலாம்.. இவன்கிட்ட ரொம்ப நல்லா இருக்கும்.."

"இன்னைக்கும் எல்லாருமே லீவு. நீங்க போகலையா.."

"லீவு போட்டா எப்படி சார் பொழப்பு ஓடும்?"

"இதுதான் உங்க முழுநேரத் தொழிலா?"

"ஆமா.. மூவாயிரம் ரூபா சம்பளம்.. இது மட்டும்தான் எனக்குத் தெரிஞ்ச வேலை.."

"வெறும் மூவாயிரம்? அப்போ.. குடும்பம்? பிள்ளைங்க படிப்பு..?"

"நல்ல வேளை எனக்குப் பிள்ளைங்க இல்ல சார்.."

எனக்குத் திக்கென்றது. முதல் முறையாக தனக்கு நல்ல வேளையாக பிள்ளைகள் பிறக்க வில்லை என்று சொல்லக் கூடிய மனிதரை என் வாழ்க்கையில் சந்திக்கிறேன். "வாங்க.. வண்டியில போய்க்கிட்டே பேசுவோம்." இப்போது நண்பர் வண்டியை ஓட்டத் துவங்கினார். நான் பின்னாடி அமர்ந்தேன்.

"எனக்கு லேட் மேரஜ் சார். நாப்பத்தாறு வயசுலதான் கல்யாணம். வேணவே வேணாம்னுதான் இருந்தான். அப்புறம் கடைசி காலத்துல லாபமோ நஷ்டமோ சாஞ்சுக்க ஒருதோள் வேணும் இல்லையா? அதனால் இப்போத்தான்.. ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி பண்ணிக்கிட்டேன். அவங்க ஒரு விடோ. யாருமில்லாதவங்க. அதான் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா.. புள்ள குட்டி எல்லாம் இருந்தா இந்த சம்பளத்துக்கு இன்னைக்கு உலகத்துல பிழைக்க முடியுமா சார்?"

நான் அமைதியாக இருந்தேன்.

"கல்கத்தால இஸ்கான் கேள்விப்பட்டு இருக்கீங்களா.. மொத மொதல்ல பதினெட்டு வயசுல அங்க கிளார்க் வேல. வீட்டை விட்டுட்டுப் போனேன். அண்ணன் ஒருத்தன் நாலு தங்கச்சிங்க. அண்ணனுக்கு இந்தியன் எக்ச்பிரசுல வேலை. எல்லாம் நல்லத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு. ஒரு நாள் திடீர்னு போன் வந்தது. அண்ணனுக்கு ஹார்ட் அட்டாக். ஒடனே வான்னு.. அவன் பெரிய ஆளு. ஜோசியம் எல்லாம் தெரிஞ்சவன். தான் சாகுற நாள முன்கூட்டியே கணிச்சு வச்சுட்டு செத்துப் போயிருந்தான். கேரளால இருந்தவன். அன்னைக்கு ஒருநாள் இந்தியா பூரா இருந்த அவன் கம்பெனி மக்களோட சம்பளத்த வசூல் பண்ணித் தந்தாங்க. நம்ம தமிழ்நாட்டுல அப்படி செஞ்சு இருக்க மாட்டாங்க. 75 ,000 ரூபா கெடச்சது. அத வச்சு அண்ணியையும் புள்ளைகளையும் செட்டில் பண்ணி விட்டோம். இப்போம் இந்தப்பக்கம் நாலு தங்கச்சிங்க.. அதுங்கள நல்லா உக்கார வைச்சு திரும்பி பார்த்தா நமக்கு வயசாகிபோச்சு.."

"அவங்க எல்லாம் இப்போ?"

அவர் விரக்தியாகத் திரும்பிப் பார்த்து சிரித்தார். "எல்லாரும் நல்லா இருக்காங்க. ஆனா என்ன ஒதுக்கிட்டாங்க . பழசு எல்லாம் எதுக்கு. அடுத்தது என்னன்னு பாருன்னு புதுப்பாடம் சொல்லிக் கொடுத்து போயிட்டாங்க.."

சற்று நேர அமைதிக்குப் பிறகு தொடர்ந்தார்.

"இப்போ கிடைக்கிற மூவாயிரம் ரூபா சம்பளத்தையும் தொடக்கூட மாட்டேன் சார். அப்படியே பேங்கில் போட்டுடுறேன். நாளைப்பின்ன எனக்கோ அவளுக்கோ ஒடம்பு முடியலைன்னா யார்கிட்டயும் போய் நிக்கக் கூடாது பாருங்க.."

"அப்போ வீட்டு செலவுக்கு?"

"இந்தா.. வண்டில வர்ற மக்கள் கொஞ்சம் பணம் தருவாங்க சார். அத வச்சு ஓட்டிக்குவேன். முதலாளிக்கு நம்ம மேல அம்புட்டுப் பிரியம். ஒத்த வார்த்த இது வரைக்கும் கடிஞ்சு சொன்னதில்ல. அதுக்கு பங்கம் வரமா நடந்துக்கிட்ட போதும் சார். குமார்னா கடைசிவரைக்கும் அப்படியே கெத்தா இருக்கணும் சார்.."

அவர் பெயர் குமார் என்பதே எனக்கு அப்போதுதான் தெரியும். கமாண்ட் சார் எனக்குள் எதையோ இடறி விட்டிருந்தார். மற்றவர்கள் என்று வாழும் எல்லாருமே இங்கே இப்படித்தான் மதிக்கப்படுவார்களா? இளிச்சவாயர்களாகவே இருந்து போக வேண்டியதுதானா? நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்திருந்தது.

"நாளைக்கும் டையத்துக்கு வந்திருங்க சார்.."

நான் அவரை நிமிர்ந்து பார்த்தேன். கையில் இருந்த கொஞ்ச பணத்தை எடுத்து அவரிடம் கொடுத்தேன்.

"இல்ல சார்.. வேணாம். முடிச்சுப் போறப்ப பார்த்துக்கலாம். என்னைக்காவது என் மனசு தாங்காம பேசுவேன். அதைப் பொறுமையா நீங்க கேட்டதே பெருசு. இந்தக் காசுக்காக நான் பேசினேன்னு இருக்க வேணாம் சார்..பார்க்கலாம்.."

அவர் சிரித்தபடியே கிளம்பினார். ஆனால் அதில் ஒளிந்திருந்த வலியும் பயமும் என்றும் என்னை துயரப்படுத்திக் கொண்டே இருக்கும்.