Showing posts with label திருமண அழைப்பு. Show all posts
Showing posts with label திருமண அழைப்பு. Show all posts

June 21, 2009

அன்புடன் அழைக்கிறேன்.. வாழ்த்த வாங்க..!!!


90 களின் ஆரம்பம். நான் ஐந்தாம் வகுப்போ ஆறாம் வகுப்போ படித்ததாக ஞாபகம். எங்கள் வீட்டில் அப்போது டிவி கிடையாது. பக்கத்து வீட்டில்தான் போய் பார்க்க வேண்டும். ஒரு முறை ஆர்வமாக டிவி பார்க்க பக்கத்து வீட்டுக்கு போனால், நான் வருவதைப் பார்த்து அந்த அக்கா கதவை வேகமாக சாத்தி விட்டார். அம்மா அதைப் பார்த்து விட எனக்கு நல்ல திட்டு. டிவி பார்க்க முடியாத ஆத்திரம் ஒரு பக்கம், அம்மாவிடம் திட்டு வாங்கியது ஒரு பக்கம் என்று உட்கார்ந்து அழுது கொண்டிருந்தேன். அப்போது ஆறுதலாக என் தோளின் மீது விழுந்தன பிஞ்சு விரல்கள். "அழாதண்ணே.. நாம அம்மாக்கிட்ட சொல்லி புது டிவி வாங்கிக்கலாம்..". ஐந்தே வயதான என் தங்கை கண்களில் நீரோடு என் அருகில் நின்று கொண்டிருந்தாள்.



எனக்குப் பின் ஆறு வருடங்கள் கழித்து பிறந்தவள் என் தங்கை. எங்கள் வீட்டின் ஒரே பெண் பிள்ளை என்பதால் பயங்கரச் செல்லம். எந்தப் பொருளை வாங்கினாலும் முதலில் எனக்கு வாங்கி விட்டுத்தான் அவளுக்கு வாங்கிக் கொள்ளுவாள். நான் அவளிடம் காட்டும் பாசத்தை விட பத்து மடங்கு என் மீது அன்பை பொழிபவள். பள்ளியில் சேரும்போது கூட அண்ணனோடுதான் போவேன் என்று எனது பள்ளியிலேதான் சேர்ந்தாள். கைகளைப் பிடித்து அவளை கூட்டிக்கொண்டு பள்ளிக்கு போனது நேற்று நடந்தது போல இருக்கிறது. இன்றைக்கு.. அவளுக்கு கல்யாணம். காலம்தான் எத்தனை வேகமாக ஓடுகிறது?



எத்தனையோ திருமணங்களுக்கு சென்று இருக்கிறேன். நண்பர்களின் திருமணத்தில் முதல் ஆளாய் நின்று வேலை பார்த்து இருக்கிறேன். ஆனால் என் வீட்டில் ஒரு விசேஷம் என்பது இதுதான் முதல் தடவை. எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறேன். மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்த தருணத்தை என்னுடைய நண்பர்கள் உடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். கடந்த ஆறு மாதங்களில் இணையத்தில் எனக்கு கிடைத்த நண்பர்கள்... நீங்களும் என் தங்கையை வந்து வாழ்த்த வேண்டும் என்று விரும்புகிறேன்.



நாள்: 24 - 06 - 09 புதன்கிழமை

முகூர்த்த நேரம்: காலை 9:45 முதல் 10:45 வரை

மணமக்கள்: நா.நாகராணி
இர.தமிழ்க்குமரன்

இடம்: அன்னை வேளாங்கண்ணி திருமண மாளிகை,

மேலப்பொன்னகரம் ஏழாவது தெரு,

மதுரை.



இல்லற வாழ்வை ஆரம்பிக்கும் என் தங்கைக்கு நல்ல உள்ளங்களின் ஆசீர்வாதம் கண்டிப்பாக வேண்டும். நீங்கள் அனைவரும் வந்து வாழ்த்த வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.


பிரியமுடன்,

மா.கார்த்திகைப் பாண்டியன்.