August 9, 2013

விட்டு விடுதலையாகி (2)வலையுலகில் நுழைந்த ஆரம்ப காலம் தொட்டு மேவியை நான் நன்கறிவேன். தாம்பரம் ரயில் நிலையத்துக்குள் யாரேனும் ஆசாமி ஒரு கையில் மேலாண்மை புத்தகமும் இன்னொரு கையில் மேலாண்மை பொன்னுசாமியின் புத்தகமும் வைத்துக்கொண்டு இந்தியாவின் பொருளாதாரமும் இந்திரா பார்த்தசாரதியும் எனப் பேசியபடி கடந்து போனால் அவர்தான் மேவி என நீங்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். இதை விளையாட்டாகவோ கேலியாகவோ சொல்லவில்லை. உண்மையில் இதுதான் அவருடைய இயல்பு. எல்லாவற்றிலும் புகுந்து புறப்படும் ஜீவன். அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம். மேலார்ந்த நட்பு என்பதைத் தாண்டி என் மீது அக்கறை செலுத்தும் மனிதர்களில் ஒருவர். நிறைய வாசிப்பவர். ஆனால் அந்த வாசிப்பு புறவயமாக மட்டும் இருப்பதில் எனக்கு எப்போதும் வருத்தமே.


பெருங்களத்தூரில் இருக்கும் மேவியின் வீட்டுக்கு நாங்கள் இருவரும் போய்ச் சேர்ந்தபோது மணி எட்டைத் தாண்டியிருந்தது. அண்ணியின் பிரசவத்துக்காக அவருடைய அம்மா வெளிநாடு போயிருக்க வீட்டில் அப்பா மட்டும் தனியாய் இருந்தார். வணக்கம் சொல்லியபடி உள்ளே நுழைந்தவனை அவர் வினோதமாகப் பார்த்ததன் காரணம் பிற்பாடு தெரிந்தது. இத்தனை வருடங்களில் நண்பர் என்கிற பெயரில் மேவி வீட்டுக்கு அழைத்து வந்திருந்த முதல் ஆள் நான். வீட்டைப் பற்றியும் வேலை பற்றியும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு எங்களை சாப்பிடச் சொன்னார். அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாமென வெளியே சாப்பிட்டு விட்டுப் போயிருந்தோம். என்றாலும் அவரது திருப்திக்காக மீண்டும் ஒருமுறை உணவருந்தி விட்டு மாடிக்குச் சென்று கூடடைந்தோம்.


மறுநாள் காலை எழுந்தபோது எங்கு போவதென எந்தத் தீர்மானமும் இருக்கவில்லை. சட்டெனத்தான் அது தோன்றியது. பாண்டி செல்லலாம். எனக்கு மிகவும் பிடித்தமான விசயங்களில் ஒன்று கடல். அதன் பிரம்மாண்டத்தின் முன் மனம் ஒன்றுமில்லாமல் கரைந்து போய் விடும் தருணங்கள் அற்புதமானவை. இதனை மேவியிடம் சொன்னபோது இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை எனத்தான் கேட்டார். 


“சரக்கடிக்காத மனிதரெல்லாம் எதற்கய்யா பாண்டிச்சேரி போகிறீர்?” 


இதற்கு என்னிடம் பதிலில்லை. கடலைப் பார்க்க வேண்டும், போகிறேன். முடிவு செய்தாயிற்று. 


“அதெல்லாம் சரி.. ஆனா அப்பா அடுத்து எங்க போறீங்கன்னு கேட்டா வேற ஏதாவது ஊரைச் சொல்லுங்க.. சரியா?”  தலையை ஆட்டி வைத்தேன்.


மேவியின் புத்தக அலமாரியிலிருந்து ஆதவனின் ராமசேஷனை உடனழைத்துக் கொண்டு கிளம்பினேன். அப்பாவிடம் விடைபெறும் சமயம்.


“அடுத்து எங்க தம்பி போறீங்க?”


பொய் சொல்லும்போதும் பொருந்தச் சொல்ல வேண்டும் இல்லையா? சட்டென அகநாழிகை வாசுவின் நினைவு வந்தது. 


“மதுராந்தகம் போகலாம்னு இருக்கேன்.. பெறகு கங்கை கொண்ட சோழபுரம்..”. 


“அங்க எல்லாம் எதுக்குப் போறீங்க? நண்பர்கள் யாரும் இருக்காங்களா?”


இங்குதான் என் நாவில் அமர்ந்திருந்த சனீஸ்வரன் நர்த்தனமாட ஆரம்பித்தான்.


“இல்லைங்க.. சும்மா ஒரு அனுபவத்துகாக..”


அவருக்கு சுத்தமாக நான் சொன்னது புரியவில்லை. ஒரு முறை என்னை மேலும் கீழும் பார்த்தார். பின்பு மேவியின் பக்கம் திரும்பி ஒரு பார்வை. இந்த மாதிரி மனிதர்கள்தான் உனக்குப் பழக்கம்? 


திண்டிவனத்தில் இறங்கி பாண்டி செல்லும் பேருந்தில் ஏறியாயிற்று. இதற்குமுன்பாக ஒரே ஒரு முறை மட்டுமே பாண்டி சென்றிருக்கிறேன், எனக்கு மிகப்பிரியமான தோழியோடு. கடலைத் தவிர்த்து வேறு எங்கு செல்லலாம் என யோசித்த போதுதான் நண்பர் மனோ.மோகனின் நினைவு வந்தது.


பைத்தியகாரியின் பட்டாம்பூச்சி எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கும் மனோ.மோகன் சமகாலக் கவிஞர்களில் முக்கியமானவர். பாண்டி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்காக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவர். தேனியில் நடந்த ஒரு சிறுகதை விமர்சனக் கூட்டத்திலும், சேலத்தில் நடைபெற்ற கவிதைகள் விமர்சன அரங்கிலும் மதுரையில் ஒரு முறையும் அவரைச் சந்தித்து இருக்கிறேன்.


மனோவைப் பார்க்கலாம் என அலைபேசியில் அழைத்தால் தொடர்பு கொள்ள முடியவில்லை. வெயில், கணேசகுமாரன் என நண்பர்கள் பலரிடம் கேட்டும் பயனில்லை. கடைசியாகக் கலாப்ரியாவிடம் கேட்டேன். அவரும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனச் சொல்லி விட்டார். சரி, கடலோடு முடித்துக் கொள்வோம் என முடிவு செய்தது மனம். ஆனால் மிகச்சரியாக பேருந்து நிலையத்தில் இறங்கியபோது அலைபேசி அதிர்ந்தது. மனோ.மோகன். கலாப்ரியா ரமேஷ் பிரேதனுக்கு அழைத்து அங்கிருந்து தகவல் சொல்லி எப்படியோ என்னைப் பிடித்து விட்டிருந்தார்.


“என்ன நண்பா? திடீர் பிரயாணம்?”


“உங்க ஊர் கடலைப் பார்க்கணும் போல இருந்தது நண்பா..”


“பாருங்க.. ஒரு மணி நேரத்துல அங்க இருப்பேன்..”


நான் அதிகம் பார்த்திருக்கும் கடற்கரை எனச் சொன்னால் கன்னியாகுமரிதான். அதற்கு அடுத்தபடியாக திருச்செந்தூர். ஆனால் என்னை மொத்தமாக அள்ளிக் கொண்ட கடல்கள் என்றால் அது தனுஷ்கோடியும் பாண்டியும். கண்ணுகெட்டிய தூரம் வரை மனிதர்கள் நடமாட்டமின்றி வேன்களின் டயர் தடங்கள் மட்டும் பயணிக்கும் தனுஷ்கோடி நமக்குள் வலியை விதைத்துப் போகும் என்றால் பாண்டியில் நான் உணர்ந்தது அமைதியை. நீளமான பெரிய அளவிலான கருங்கற்கள் நிரம்பிய கரையில் சற்றே உள்வாங்கி நீர் தெறிக்கும்படியாயிருந்த பாறை ஒன்றின் மீது சென்றமர்ந்தேன். 


கண்முன்னே மிகப்பரந்த நீலப்போர்வை. அங்கொன்றும் இன்கொன்றுமாய் மிதந்து செல்லும் படகுகள். மதிய வெயில் சற்றே மிதமாக அடித்துக் கொண்டிருந்தாலும் வெக்கை இருக்கவில்லை. காற்றில் ஆடும் தூசு மெல்ல மெல்ல வலுவிழந்து தரையில் வீழ்ந்தடங்குவதைப் போல மனம் சலனங்கள் நீங்கி அமைதியில் தொலைந்து போயிருந்தது. சுற்றிலும் இருந்த மனிதர்களைப் பார்த்தேன். பெரும்பாலானவர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு கடலின் முன்பாக நின்றபடி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்தக்கணத்தின் அற்புதத்தை அனுபவிப்பதும் நினைவுகளை சேகரிப்பதும் தாண்டி அவற்றை ஆவணப்படுத்துவதில் மட்டும் ஏன் இத்தனை அவசரம்?
  

அங்கிருந்து கரையோரமாகவே மெதுவாய் நடக்கத் தொடங்கினேன். அங்கிங்கெனாதபடி எங்கும் சிதறிக் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளும் குப்பைகளும். இன்னும் சில வருடங்கள் கழித்து திரும்பி வந்தால் இந்த இடம் இதே மாதிரி இருக்காது என்பதாய்ப் பட்டது. சின்னதாய் ஒரு வலி. எத்தனை நேரம் நடந்திருப்பேன் எனத் தெரியாமல் கடற்கரையின் நீளத்தை குறுக்கும் நெடுக்குமாய் அளந்து கொண்டிருந்தேன். இப்போது ஓரளவு பழக்கமாகியிருந்த அந்தக் குரல் என்னை அழைத்தது. துணைவியாரோடு மனோ வந்து சேர்ந்திருந்தார்.


- பயணிப்போம்

August 5, 2013

விட்டு விடுதலையாகி

கொஞ்ச நாட்களாகவே மனம் அமைதியிழந்து தவித்து வந்தது. வீடு விட்டால் கல்லூரி, கல்லூரி விட்டால் வீடு, ஆராய்ச்சிப் படிப்புக் குழப்பங்கள் என செக்கு மாடாய் மாறிப் போனதான உணர்வு. மே மாத நடுவில் வந்து சேர்ந்த நகுலனின் வருகை சற்றே நெஞ்சை ஆற்றுப்படுத்தினாலும் வழக்கமான நாட்களிலிருந்து தப்பித்து வெளிக்கிளம்பும் எண்ணம் உள்ளிருந்து உறுத்தியபடியேதான் இருந்தது. 

மனதில் தோன்றியதை துணைவியாரிடம் சொன்னேன். தனக்குப் பிடிக்காதபோதும் எனக்காய் எல்லாவற்றையும் அனுசரித்துப் போகும் ஜீவன் இதற்கும் மறுப்பேதும் சொல்லவில்லை. ஆனால் ஒரேயொரு விண்ணப்பம் மட்டும் வைத்தாள். எக்காரணம் கொண்டும் இரவு நேரங்களில் பேருந்து நிலையம், மண்டபம் போன்ற பொது இடங்களில் தங்காமல் பத்திரமாய் இருக்க வேண்டும் என்பதுதான் அது. சரி என நன்றி கூறிக் கிளம்பினேன்.

நண்பர் ஒருவரோடு பேசிக் கொண்டிருக்கும்போது இலக்கில்லாமல் சுற்றி வரப் போகிறேன் என்பதைப் பகிர்ந்து கொண்டேன். உடன் அவர் கேட்டது..

“என்ன.. எஸ்ராவா.. தேசாந்திரியா?”

கண்டிப்பாக இல்லை. எஸ்ரா, கோணங்கி போன்றோரின் வாழ்க்கை மீது பொறாமை கலந்த காதல் உண்டென்றாலும்  ஒருபோதும் அவர்களைப் போல அலைந்து திரிவது எனக்குச் சாத்தியப்படாது. எங்கும் குட்டியைத் தூக்கிச் சுமக்கும் அழகர்மலை குரங்கைப் போல வீட்டின் நினைவுகளையும் நெருங்கின மனிதர்களையும் எப்போதும் சுமந்து திரிபவன் நான்.  இது என்னால் இயன்ற ஒரு சின்ன விடுபடல். அன்றாட வாழ்வில் தொலைந்து போகாமல் என்னை நான் தக்க வைத்துக் கொள்ள செய்திடும் சிறு முயற்சி. அவ்வளவே.

போவதென்று முடிவான பின்பு எங்கே போவது எனும் கேள்வி வந்தது. எங்கிருந்து தொடங்குவது என நிறைய யோசித்த பின்பு நான் பெரிதும் வெறுக்கும் நகரமான சென்னைக்கே முதலில் செல்வது எனத் தீர்மானித்தேன். கல்லூரி காலத்தோடு காணாமல் போன ஒரு சில நண்பர்களைப் பார்க்கலாம் என்பதோடு சென்னையின் மால்களில் சுற்ற வேண்டும் என்பதும் அதற்கு ஒரு காரணம். யாரும் உள்நுழையாத ஆடம்பரக் கடைகளுக்குள் எவரேனும் வர  மாட்டார்களா என மிருகத்தின் பசியை கண்களுள் தேக்கி நிற்கும் மால்களிலுள்ள கடைகளின் சிப்பந்திகளைப் பற்றிய ஒரு நடுக்கம் எனக்குள் உண்டு. அவர்களைப் பற்றிய கதை ஒன்றை எழுதும் எண்ணமும் உண்டு. ஆகவே சென்னைதான் ஆரம்பப்புள்ளி என முடிவானது.

சென்னை வந்து இறங்கியபின்பு நான் சந்திக்க விரும்பிய கல்லூரித் தோழனுக்கு அழைத்தேன். அது ஒரு சனிக்கிழமையாக இருக்க தான் சொந்த ஊருக்குப் போய் விட்டதாகச் சொன்னவன் சொல்லாமல் கொள்ளாமல் வந்ததற்காகக் கடிந்து கொண்டான். மற்றவர்களும் ஊரில் இருக்க வாய்ப்பு மிகவும் குறைவு என்பதாய் அவன் சொல்ல நண்பர்களைச் சந்திப்பது இனி சாத்தியப்படாது என்று தெரிந்தது. எந்த மாலுக்குச் செல்லலாம் என்கிற என் கேள்விக்கு புதிதாய்த் திறந்திருக்கும் ஃபோரம் மாலுக்குப் போகலாம் எனச் சொன்னான். நாள் முழுதும் அங்கே கழித்து விடலாம் ஆனால் இராத்தங்கலுக்கு என்ன செய்வது என்கிற புதுக்குழப்பம் வந்து சேர்ந்தது.

அடுத்து எங்கே போவது எனத் தெரியாது. சென்னையில் தான் இரவு தங்க வேண்டும். பணம் செலவழித்து அறையெடுத்துத் தங்க வசதி பற்றாது எனும் சூழலில் நான் நன்கறிந்த அல்லது அப்படி நம்பிக் கொண்டிருந்த சில நண்பர்களுக்கு அழைத்தேன். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் சொன்ன பதிலோ எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒருவர் தனது அப்பாவைக் கேட்க வேண்டும் என்றார். ஒருவர் தனது வீட்டு முதலாளியிடம் அனுமதி பெற வேண்டும் எனச் சொன்னார். இன்னொருவர் மனைவி வீட்டில் இல்லாத காலத்தில் நண்பர்களைக் கூட்டி வந்தால் குடும்பத்தில் பிரச்சினை உண்டாகும் என்றார். எனக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. இறுதியில் எனக்கு சிரிப்புத்தான் வந்தது. ஒரு நிமிடம் எனது வீட்டின் நினைவு வந்து போனது.

பள்ளியின் இறுதி வருடக் காலம். முத்துக்குமார் என்றொரு நண்பன் என்னோடு படித்துக் கொண்டிருந்தான். ஒரு மதிய நேரம் அவனை வீட்டுக்குக் கூட்டிப் போயிருந்தேன். அம்மா வேலைக்குப் போயிருக்க வீட்டில் அம்மாச்சி மட்டும்தான் இருந்தார். வந்தவனுக்கும் சேர்த்து உணவு கொடுக்கும்படி அம்மாச்சியிடம் சொன்னேன். என்ன ஆளுகளோ என்னவோ என அவனுக்குத் தனியாக உணவு தர முடியாது என அவர் மறுத்து விட்டார். கோபம் கொண்டு எனது தட்டில் சோற்றைப் போட்டுக் கொண்டுபோய் அதிலேயே சாப்பிடும்படி சொல்லி இருவரும் சாப்பிட்டோம். மாலை வீடு திரும்பியபின் அம்மாவிடம் அம்மாச்சி போய் சொல்ல அவருக்குத் தான் திட்டு கிடைத்தது. 

சிறுவயது முதலே எனது வீட்டில் இப்படித்தான். நான் வைத்தது தான் சட்டம். கல்லூரிக் காலத்திலும் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வருகிறேன் ஏற்ப்படுகள் செய்து வையுங்கள் என அம்மாவிடம் சொல்லி இருக்கிறேனே தவிர அழைத்து வரட்டுமா என்று அனுமதி கேட்டதில்லை. இப்படியான சூழலில் வளர்ந்தவனுக்கு மற்றவர்கள் சொன்ன காரணங்கள் சிரிப்பை வரவழைத்ததில் ஆச்சரியம் இல்லைதானே? 

நான் மேலே இருக்கும் அண்பர்கள் யாரையும் குற்றம் சொல்ல முற்படவில்லை. மாறாக நான் எத்தனை சுதந்திரத்தோடு வளர்க்கப்பட்டிருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்திய தருணம் அது என்பதைச் சொல்லவே ஆசைப்படுகிறேன். அந்தக்கணம் என் அம்மாவுக்கு மனதுக்குள் நன்றி சொல்லிக் கொண்டேன்.பல நண்பர்களிடம் கேட்டு கடைசியாக நண்பர் மேவியின் வீட்டில் தங்கிக் கொள்ளலாம் என முடிவானது. உடைமைகளை எடுத்துக் கொண்டு மாலுக்குக் கிளம்பினேன்.

- பயணிப்போம்