May 30, 2009

தோரணை - திரை விமர்சனம்..!!!


சத்யம் என்னும் சூப்பர் டூப்பர் பிளாப்பிற்கு பிறகு வந்திருக்கும் விஷாலின் படம். விஜய் ஆகத் துடிக்கும் விஷால் அவரைப் போலவே (சிவகாசி) ஒத்தக்காலில் போஸ் கொடுத்து நிற்கிறார். வில்லனை தந்திரமாக ஏமாற்றி தப்பும் நாயகன் என விஷாலின் முந்தைய படங்களான திமிரு, மலைக்கோட்டை, சண்டக்கோழி ஆகியவற்றையே கலக்கி மீண்டும் கொடுத்து உள்ளார்கள். காமெடியும் ஆக்ஷனும் கலந்த படமாக இருக்கும் என்று பார்த்தால்..?!!!


சின்ன வயதில் தொலைந்து போன அண்ணனைத் தேடி சென்னைக்கு வருகிறார் விஷால். துறைமுகத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் போதை மருந்து கடத்தும் கெட்டவன் பிரகாஷ்ராஜ். கட்டப்பஞ்சாயத்து செய்யும் இன்னொரு தாதா கிஷோர். இந்த இரண்டு ரவுடிகளுக்கும் தீராத பகை. ஒரு கட்டத்தில் விஷாலின் அண்ணனை கொலை செய்ய பிரகாஷ்ராஜ் முயலுகிறார். விஷாலின் அண்ணன் யார்.. அவரை விஷாலால் காப்பாற்ற முடிந்ததா?..இதுதான் தோரணை.


ஏதோ ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி வந்த நோயாளி மாதிரி இருக்கிறார் விஷால். பக்கம் பக்கமாய் பன்ச் டயலாக் பேசிக் கொல்கிறார். சண்டை காட்சிகள் மட்டுமே ஓகே. காமெடி பண்ணுவதாக நம்ம கழுத்தை அறுக்கிறார். நெஞ்சினிலே படம் போல கிஷோரின் அடியாட்களை எல்லாம் வசனம் பேசியே திருத்துகிறார். தாங்க முடியலடா சாமி.."திறந்த" மனசோடு ஸ்ரேயா. உடைகளாக உள்ளாடைகளை மட்டும் உடுத்தி உல்லாசமாக பாடல்களுக்கு வந்து போகிறார். பிரகாஷ்ராஜையும் கிஷோரையும் இதுக்கும் மேல யாராலையும் வீணடிச்சு இருக்க முடியாது.


படத்தில் அவ்வப்போது நம்மை ஆறுதல் கொள்ள செய்வது சந்தானத்தின் காமெடியும், எம்.எஸ்.பாஸ்கரின் லொள்ளு வசனங்களும்தான். வழக்கம் போல இரட்டை அர்த்த வசனங்களும் உண்டு. அதற்காக ராமர் வேஷம் போட்டுக் கொண்டு சீதா, ங்கோ.... என்றெல்லாம் பேசுவது ஓவர். கண்ணை கசக்கும் அம்மாவாக கீதா இன்னும் எத்தனை படங்களில் நடிப்பாரோ? கெட்ட அரசியல்வாதியாக சாயாஜி ஷிண்டேவும், கமிஷனராக லாலும் தலை காட்டி இருக்கிறார்கள். ஒரே ஒரு பாட்டுக்கு மீனாட்சி குத்தாட்டம் போட்டிருக்கிறார்.


இசை - மணிஷர்மா. தன்னுடைய பழைய பாட்டுக்களையே ரீமிக்ஸ் பண்ணி உள்ளார். "வா செல்லம்" பாட்டு தவிர மற்ற எல்லா பாட்டுமே வேஸ்ட். பின்னணி இசைதான் கொஞ்சம் பராவயில்லை. "வா செல்லம்" பாட்டில் ஆர்ட் வொர்க்கும், "தொட்டுக்கோ" பாட்டில் ஒளிப்பதிவும் அம்சம். ராக்கி ராஜேஷின் சண்டைக் காட்சிகளை நன்றாக படமாக்கி உள்ளார்கள்.


முதல் பாதி முழுக்க வெற்று நகைச்சுவைக் காட்சிகளும் பாட்டும் நிறைந்து இருக்கின்றன. விஷாலின் அண்ணன் யார் என்று தெரிய வரும் இடைவேளை பட்டாசு கிளப்புகிறது. சரி, ஏதோ நடக்கப் போகுதுன்னு நிமிர்ந்து உக்கார்ந்தா..புஸ்ஸ்...ஒவ்வொரு ஆக்ஷன் காட்சிக்கு நடுவிலும் சம்பந்தமே இல்லாமல் காதல் காட்சிகள். திரைக்கதை படத்தின் பெரிய பலவீனம். தனது முதல் படத்தில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர் சபா ஐயப்பன்.


கொஞ்சம் தோரணை.. நிறைய ரோதனை..


(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

May 26, 2009

சாகும்வரை நண்பனாயிரு..!!!


வெயில் மங்கிய ஒரு மாலை வேளையில்...
காலை தழுவும் அலைகளை ரசித்தவாறே..
நினைவுகளின் பாதையில் கை கோர்த்தவர்களாய்..
நீயும் நானும் நடந்து கொண்டிருந்தோம்..!!

ஏதோ நினைவு வந்தவளாய்
நீ சட்டெனக் கேட்டாய்..
"நான் யார் உனக்கு..?"

என்னவென்று சொல்ல முடியாத
மௌனத்தில் நான் உறைந்து போனேன்..!!

உன் கண்கள் பார்த்து சொன்னேன்..
"அன்பால் என்னை ஆட்கொண்ட
ராட்சசி நீ..!!
அன்பைப் பொழியும் தாயாய்..
கண்டிப்பில் தகப்பனாய்..
சுக துக்கங்களை சேர்ந்து
பகிரும் தோழியாய்..
நீ என் எல்லாமுமாக இருக்கிறாய்..
உன்னோடு இருக்கும் பொழுதுகளில்
மட்டுமே நான் என்னை
நானாக உணருகிறேன்..!!"

வழிந்து ஓடிய உன் கண்ணீரில்
நிரம்பி இருந்தன கருணையும்,
என் அன்பும் மற்றும் நம் நட்பும்..!!

பின்பு நான் உன்னைக் கேட்டேன்..
"எனக்காக இத்தனை செய்தாய்..
உனக்காக நான் என்ன
செய்யப் போகிறேன்..?"

இறுக்கி என் கைகளை பிடித்து..
என் தோள்களில் சாய்ந்து
கொண்டு நீ சொன்னாய்..
"என் கூடவே இரு..
சாகும்வரை.. நண்பனாக இரு..!!!"

******************

நண்பர்களே.. பணிமாற்றத்தின் காரணமாக என்னால் அடிக்கடி பதிவுகளை பார்க்க வர முடியவில்லை.. எனினும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை எப்படியாவது வந்து நண்பர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டு விடுகிறேன்.. இன்னும் சில தினங்களில் எனக்கென ஒரு மடிக்கணினி வாங்க முயன்று வருகிறேன்.. அதுவரை கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே..

***************

மதுரையில் அடாது மழை பெய்த போதும் விடாது அருமையாக நடந்தது பதிவர் சந்திப்பு.. விபரங்களுக்கு நண்பர்கள் தருமி, தேவன்மாயம், அன்பு, பாலகுமார் ஆகியோருடைய பதிவுகளை பாருங்கள்.. கலந்து கொண்ட அனைவருக்கும், வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கும் நன்றி..

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

May 22, 2009

ஹீரோ (HERO) - 2002..!!!


ஜெட்லி நடித்த சீன மொழி படங்கள் என்றாலே அடிதடி சண்டைக் காட்சிகளும், பறந்து பறந்து செய்யும் சாகசங்களும்தான் நினைவுக்கு வரும். ஆனால் மார்ஷியல் ஆர்ட்ஸ் என்றழைக்கப்படும் சண்டைப் படங்களைக் கூட ஒரு கலாப்பூர்வமான அனுபவமாக மாற்ற முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் "ஹீரோ"(Hero). சீனாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான ஜாங் ஈமு(Zhang Yimou) இயக்கிய இந்தப்படம் 2002 ஆம் ஆண்டு வெளியானது.

கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்து சீனா. ஏழு தேசங்களாக பிரிந்து இருக்கிறது. கின் (QIN) என்ற நாட்டின் அரசன் எல்லா தேசங்களையும் வென்று ஒரே குடையின் கீழ் கொண்டு வர ஆசைப்படுகிறான். அவனைக் கொல்ல முயலும் மூன்று முக்கியமான சதிகாரர்கள்..ப்ரோகன் ஸ்வார்ட்(Broken sword)..பிளையிங் ஸ்னோ(Flying snow)..லாங் ஸ்கை(Long Sky). தன்னுடைய பாதுகாப்புக்காக தனிமைப்படுத்தப்பட்ட மாளிகையில் அரசன் வாழ்ந்து வருகிறான். யாரும் நூறு அடி தூரத்தில் இருந்துதான் அரசனிடம் பேச முடியும். சதிகாரர்களை கொல்லும் வீரர்களுக்கு ஏராளமான பரிசு தருவதாகவும் அரசன் அறிவிக்கிறான்.


இந்த சூழ்நிலையில் மூன்று சதிகாரர்களையும் தான் கொன்று விட்டதாக சொல்லிக் கொண்டு அரண்மனைக்கு வருகிறான் பெயரிலி(Nameless) ஒருவன். அவனை நன்றாக சோதனை செய்த பிறகு அரசனை சந்திக்க அனுமதிக்கிறார்கள். தான் கொன்றதாக சொல்லும் மூன்று பேரின் ஆயுதங்களையும் அவன் அரசனிடம் சமர்பிக்கிறான். பல பரிசுகள் பெறுவதோடு அரசனை நெருங்கி பத்தடி தூரத்தில் உட்காரும் வாய்ப்பும் கிடைக்கிறது. அவன் மூன்று பேரையும் எப்படி கொன்றான் என அரசன் கேட்க பெயரிலி தன் கதையை சொல்லத் துவங்குகிறான்.செஸ் விளையாட்டுக்கூடம் ஒன்றில் ஸ்கையை நேரடியாக சந்திக்கிறான் பெயரிலி. அங்கே நடக்கும் ஆக்ரோஷமான சண்டையின் முடிவில் ஸ்கை சாகிறான். அவனுடையின் ஈட்டியின் முறிந்த முனையை எடுத்துக் கொண்டு ஜாவ் (Zhao) என்னும் நாட்டுக்கு பயணம் ஆகிறான் பெயரிலி. அங்கே ஒரு எழுத்துப்பயிற்சி பள்ளியில்தான் ஸ்நொவும் ஸ்வார்டும் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் காதலர்கள். ஆனால் ஸ்கைக்கும் ஸ்நொவுக்கும் முன்னரே பழக்கம் உண்டு. இதை ஸ்வார்டிடம் தெரிவிக்கிறான் பெயரிலி. கோபம் கொள்ளும் ஸ்வார்ட் ஸ்னோவை பழி வாங்குவதற்காக அவள் கண்முன்னரே தன் பணிப்பெண்ணான மூனுடன் உறவு கொள்கிறான். வெறி கொள்ளும் ஸ்னோ ஸ்வார்டையும், மூனையும் குத்திக் கொல்கிறாள். மறுநாள் படைவீர்கள் முன்னால் பெயரிலியுடன் மோதும் ஸ்னோ ஆத்திரத்துடன் போராடி செத்துப்போகிறாள். இத்துடன் பெயரிலி சொல்லும் கதை முடிகிறது.கதை கேட்கும் அரசன் பெயரிலி சொல்லும் கதையை நம்ப மறுக்கிறார். அவர்கள் சதிகாரர்கள் என்ற போதும் பண்பு நிறைந்தவர்கள் என்கிறார். உண்மையில் என்ன நடந்திருக்கும் என தான் நம்பும் கதையை சொல்லத் தொடங்குகிறார். உண்மையில் பெயரிலி அரசனைக் கொல்வதற்காக வந்தவன். அவனிடம் இருக்கும் விசேஷ சக்தியின் மூலம் பத்தடி தூரத்துக்குள் இருக்கும் யாரயும் அவனால் கண்ணிமைக்கும் நேரத்தில் கொல்ல முடியும். ஆனால் அரசனை நெருங்க வேண்டுமானால் மூன்று சதிகாரர்களையும் அவன் கொல்ல வேண்டும். ஸ்கை தன் உயிரைத் தியாகம் செய்கிறான். யார் தங்கள் உயிரை தியாகம் செய்வது என்று ஸ்நொவுக்கும் ஸ்வார்டுக்கும் போட்டி வேறுகிறது. கடைசியில் ஸ்வார்டைக் காயப்படுத்தி விட்டு ஸ்னோ பெயரிலியுடன் மோதுகிறாள். செத்தும் போகிறாள். ஸ்வார்ட் தன்னுடைய வாளைக் கொடுத்து அனுப்புகிறான். இதன் மூலம் அரசனை நெருங்கி அவரைக் கொல்ல முடியும் என்பது தான் பெயரிலியின் திட்டம் என்று கதையை முடிக்கிறார் அரசன்.


கொலை செய்யத்தான் வந்தேன் என்று உண்மையை ஒப்புக் கொள்கிறான் பெயரிலி. ஆனா அரசர் ஒருவனை தப்பாக எடை போட்டு விட்டதாக சொல்கிறான். அது ஸ்வார்ட். மூன்று வருடங்களுக்கு முன்னரே மன்னரைக் கொல்ல வாய்ப்பு கிடைத்தாலும் அவரை கொல்லாதவன் அவன். நாட்டு மக்களின் நலனுக்காகத்தான் மன்னர் போர் செய்கிறார் என்று நம்புபவன். ஸ்கை மற்றும் ஸ்நொவைக் கொன்றதாக கிளம்பும் பெயரிலியிடம் ஸ்வார்ட் பேசுகிறான். மன்னரின் நல்ல உள்ளத்தைப் புரிய வைக்கிறான். எனவே மன்னரைக் கொல்லும் முயற்சியைக் கைவிடுவதாக அரசனிடம் சொல்கிறான் பெயரிலி.


உண்மையில் ஸ்கையும் ஸ்நொவும் சாகவில்லை. பெயரிலியின் வித்தை அவர்களை கொன்ற மாதிரி நாடகம் ஆட உதவுகிறது. அரசனை கொல்ல பெயரிலி தவறி விட்டான் எனத் தெரிந்து ஸ்னோ ஆத்திரம் அடைகிறாள். ஸ்வார்ட் தான் அவன் மனதை மாற்றி விட்டன் என்று ஆத்திரம் கொண்டு அவனை தாக்குகிறாள். எதிர்த்துப் போரிடும் ஸ்வார்ட் ஒரு தருணத்தில் ஸ்னோ தாக வரும்போது தன் வாளை தாழ்த்தி கத்தியை தன் மார்பில் வாங்கிக் கொள்கிறான். தன் காதலை நிரூபிக்க வேறு வழி தெரியவில்லை என்று சொல்லி சாகிறான். அதே வாளால் குத்திக்கொண்டு ஸ்நொவும் சாகிறாள்.


நாட்டு மக்கள் கூட தன்னை வெறுக்கும்போது தன்னுடைய உண்மையான எண்ணத்தை புரிந்து கொண்டவன் தன்னுடைய முக்கியமான எதிரி என அறிந்து அரசன் அதிர்ந்து போகிறார். தன்னைக் கொல்ல வந்த பெயரிலியையும் தப்ப விட முடியாது. அது தவறான பாடமாகும். எனவே மனதை கல்லாக்கிக் கொண்டு பெயரிலியைக் கொல்ல உத்தரவு தருகிறார். ஆயிரக்கணக்கான அம்புகளை எய்து வீரர்கள் பெயரிலியைக் கொல்கிறார்கள். ஒரு வீரனாக சகல மரியாதையுடன் அவனுடைய சவ அடக்கம் நடைபெறுகிறது. பிற்காலத்தில் ஏழு நாடுகளையும் வென்று அரசன் சீனாவின் முதல் பேரரசராக ஆகிறார்.


ஜாங் ஈமு வண்ணங்களைக் காதலிப்பவர். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு ஓவிய அணிவகுப்பு போலவே இருக்கும். பெயரிலி சொல்லும் முதல் கதை முழுவதும் சிகப்பு நிற உடைகளையும் மஞ்சள் நிறத்தையும் வெகுவாக பயன்படுத்தி இருப்பார். மன்னரின் கதை முழுதும் நீல நிறம் பெரிதும் நிறைந்திருக்கும். கடைசியில் பெயரிலி உண்மையை சொல்லும்போது எங்கும் பச்சை, வெள்ளை நிறத்தைக் காணலாம். ஒரு அகண்ட ஏரியின் மேல் பெயரிலியும், ஸ்வார்டும் மோதும் காட்சி இந்தப்படத்தின் மிகச்சிறப்பான ஒன்று. படத்தின் பிரதானமாக இசையும் இருக்கும். பாரம்பரிய வாத்தியம் இசைக்கப்பட நடக்கும் ச்கையின் சண்டைக்காட்சியும் வெகு நேர்த்தியாக படமாக்கப்பட்டிருக்கும்.


பெயரிலியாக நடித்த ஜெட்லி இந்த படத்துக்காக தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டார். பல விருதுகளை வென்ற இந்தப்படம் 2003 ஆம் வருடம் ஆஸ்கார் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டது. நடு இரவு பனிரெண்டு மணிக்கு வேர்ல்ட் மூவீஸ் சானலில் முதல் முறையாக இந்தப் படத்தை பார்த்தேன். அலாதியான அனுபவம். இதுவரை ஏழெட்டு முறை பார்த்து விட்டேன். ஒவ்வொரு முறையும் ஒரு புது விஷயம் கண்ணுக்குத் தெரியும். நீங்களும் பாருங்கள்.. உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும்..!!!

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

May 21, 2009

மே 24 - மதுரையில் பதிவர் சந்திப்பு..!!!

அன்புள்ளம் கொண்ட பதிவுலக நண்பர்களே...

வெகு சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற பதிவர் சந்திப்பு பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும். சந்தோஷமான தருணங்கள். எழுத்துகளின் மூலமாக மட்டுமே அறிமுகம் ஆகி இருந்த நண்பர்களை எல்லாம் நேரில் சந்தித்து உரையாட முடிந்தது ஒரு சுகமான அனுபவமாக இருந்தது.

அந்த சந்தோஷத்துடனும், அதே ஆர்வத்துடனும்.. இதோ.. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு ஆகியுள்ளது. பின்வரும் நண்பர்கள் எல்லாம் தாங்கள் சந்திப்புக்கு வருவதை உறுதி செய்து உள்ளார்கள்.

தருமி ஐயா...

டாக்டர் தேவன்மாயம்...

மதுரையில் இருந்து எழுதி வரும் மூத்த பதிவர்கள் கலந்து கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளவும், புதிதாக எழுத ஆரம்பித்து இருக்கும் நண்பர்கள் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளவும் கண்டிப்பாக இந்த சந்திப்பு உதவும்.

நாள் : 24 - 05 -2009 - ஞாயிற்றுக்கிழமை.

நேரம் : மாலை 5 மணி

இடம் : அன்று ஞாயிறு மாலையாவதால் மிகுந்த கூட்டம் இருக்கும் காரணத்தால், நம் பந்தயத்திடலில் - அதாவது, தமிழில், ரேஸ் கோர்ஸ்ஸில் - நம் சந்திப்பை வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.


மதுரை மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் நண்பர்கள் எல்லாரும் கண்டிப்பா வந்து கலந்துக்குங்க. பதிவுகளை படிக்க மட்டுமே செய்றவங்களா இருந்தாலும் வாங்க. கண்டிப்பான முறையில் இது ஒரு நல்ல அனுபவமா இருக்கும்னு நம்புகிறோம். சந்திப்பு பற்றிய சந்தேகங்கள் இருந்தா தொடர்புக்கு...


தருமி ஐயா - 99521 16112

சீனா ஐயா - 98406 24293
வால்பையன் - 99945 00540

மா. கார்த்திகைப் பாண்டியன் - 98421 71138

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

May 19, 2009

ஜாதிகள் இல்லையடி பாப்பா...?!!!

சம்பவம் 1: தேர்தலுக்கு முந்தைய நாள் மாலை. எங்கள் கல்லூரியில் இருந்து வெளியே வரும் மெயின் கேட்டின் அருகே சென்று கொண்டு இருந்தேன். அங்கே பிஹெச்டி முடித்த புரொபசர் ஒருவர் நின்று சக ஆசிரியர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார். என்னவென்று தெரிந்து கொள்ளலாமே என அருகில் சென்றேன். அடுத்த நாள் யாருக்கு ஓட்டு போடவேண்டும் என்பதைப் பற்றி ரொம்பத் தீவிரமாக பேசினார். ஆரம்பித்து இரண்டு மாதங்களே ஆன ஒரு ஜாதிக்கட்சிக்கு கண்டிப்பாக ஓட்டு போட வேண்டும் என எல்லோரையும் கேட்டுக்கொண்டார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
சம்பவம் 2: கல்லூரியின் எதிரே இருக்கும் டீக்கடை. தேர்தலுக்கு மறுநாள். கடைக்கு பால் ஊற்ற வரும் பெரியவருக்கு எப்படியும் எழுபது வயது இருக்கும். அவரிடம் டீ மாஸ்டர் கேட்கிறார்..

"என்ன பெரியவரே.. யாருக்கு ஓட்டு போட்டீங்க..?"

"எல்லாம் நம்ம ..................... தம்பி.."

"நீங்க ரொம்ப நாளா காங்கிரஸ் தான?"

"அட போப்பா.. இவ்வளவு நாளா நம்ம ஜாதிக்குன்னு ஒரு கட்சி இல்லாம இருந்தது.. கைக்கு போட்டேன்.. இப்போத்தான் நமக்குன்னு ஒரு கட்சி இருக்குல்ல.. என்னன்னாலும் நம்ம ஜாதிய விட்டுக் கொடுக்க முடியுமா..?
படித்தவர்கள் என்று பெரிதாக சொல்லிக் கொள்பவர்களுக்கும், படிக்காத பாமர மக்களுக்கும் என்ன வேற்றுமை உள்ளது? தங்களுடைய ஜாதி என்று வரும்போது எல்லோரும் ஒன்றாகி விடுகிறார்களே? ஜெயித்தால் நாட்டுக்கு என்ன நன்மை செய்வோம் என்பதைத் தாண்டி ஜாதிப்பாசத்துக்காக ஓட்டு போடும் நிலைமைதான் நம் நாட்டில் இன்னும் உள்ளது.எல்லாத்தையும் விடப் பெரிய கொடுமை, என்னுடைய மாணவர்களில் சிலரும் குறுஞ்செய்திகள் மூலம் இந்த கட்சிக்காக ஓட்டு சேகரித்ததுதான்.
எந்த ஒரு கட்சியானாலும் தொகுதிக்குள் இருக்கும் மக்களில் எந்த ஜாதி மக்கள் அதிகமாக இருக்கிறார்கள் எனப் பார்த்துத்தான் வேட்பாளர்களை களம் இருக்குகிறார்கள். இங்கு மட்டும் அல்ல. எல்லா இடத்திலும் ஜாதிகள் நீக்கமற நிறைந்து இருக்கின்றன. சமீபத்தில் நடந்தே சட்டக் கல்லூரி பிரச்சினை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். அடிப்படைக் காரணம் - ஜாதி.இளைஞர்கள் இடையே இந்த ஜாதி உணர்வு பரவுவது மிகவும் ஆபத்தானது.
வேலை பார்க்கும் இடத்தில் இருந்து பள்ளிகள் தொடங்கி குடியிருக்கும் வீடுகள் வரை எல்லா இடத்திலும் கேட்கப்படும் முதல் கேள்வி.."தம்பி.. நீங்க என்ன ஆளுங்க..?". அடுத்த தலைமுறையாவது ஜாதிகள் இல்லாத ஒரு சமுதாயத்தை உண்டாக்கும் என நான் நம்பிக்கொண்டு இருக்கிறேன். அது நடக்குமா இல்லை "ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்பது வெறும் பாடப் புத்தகங்களோடு போக வேண்டியதுதானா? விடை தெரியா கேள்வி..!!!
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

May 16, 2009

ராஜாதி ராஜா - திரை விமர்சனம்...!!!


நீங்க: இதெல்லாம் ஒரு படம்னு ஏண்டா போய் பாக்குற?


நான்: வேற என்னண்ணே பண்ண.. நமக்கு சினிமா தான ஒரே பொழுதுபோக்கு..பசங்க சர்வம் நல்லா இல்லன்னு சொன்னாங்களேன்னு இதுக்கு போனேன்..எல்லாம் ஏன் தலைஎழுத்து..


நீங்க: பார்த்தது தான் பார்த்து தொலைச்ச.. சரி.. அதை ஏன் பதிவா போட்டு எங்க உசிர வாங்குற?


நான்: யாம் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம்..இது உங்க தலைஎழுத்து.. ஹி ஹி ஹி..:-)


***************


"லோ கிளாஸ் கிங்" அப்படிங்குற கேப்ஷனோட படம் எடுத்து இருக்காங்க. இதுக்கு மேல கீழ்த்தரமா யாராலையும் எடுக்க முடியாதுன்னு அவங்களே சொல்லிட்டாங்க. பசங்க மாதிரி நல்ல படம் தமிழ்ல வர அதே நேரத்துல இப்படி ஒரு படம். கருமம்டா சாமி. எணபதுகள்ல வந்த கேவலமான மசாலா படம் கூட இதை விட நல்லா இருக்கும். இண்டெர்வல் வரைக்கும் நாம பாக்குறது தமிழ் படமா இல்ல மலையாள சீன் படமானு தெரியல. ஷக்தி சிதம்பரம் படம் சிரிப்பா இருக்கும்னு நம்பி போன மக்களுக்கு செருப்படி.


லாரன்சோட அப்பா அரசாங்க அதிகாரிகளின் தப்பால அவமானப்பட்டு சாகுராறு. சாகுறப்போ தன்னோட மொத மூணு பையன்களை நல்ல டாக்டரா, வக்கீலா, போலீசா கொண்டு வரணும்னு கடைசி பையனான லாரன்ஸ் கிட்ட சத்தியம் வாங்கிட்டு செத்துப் போறாரு. தான் படிக்காம கஷ்டப்பட்டு அண்ணன்களை படிக்க வைக்குறாரு லாரன்ஸ். ஆனா அவங்க பெரிய ஆள் ஆனதும் மக்களுக்கு சேவை செய்யாம, தப்பான அரசியல்வாதியான மும்தாஜ் கூட சேர்ந்துக்கிட்டு அநியாயம் பண்ணுறாங்க. இதுல லாரன்சோட கூடப் பொறக்காத தங்கச்சியும், எடுத்து வளர்த்த பாட்டியும் செத்துப் போறாங்க. அண்ணன்கள் கூட இருந்தே அவங்களை லாரன்ஸ் பழிவாங்குறதுதான் கதை.


லாரன்ஸ் நல்லா ஆடுறார். ஸ்டைல் பண்றார். பறந்து பறந்து சண்டை போடுறார். காமெடியும் நல்ல வருது. ஆனா காட்சிக்கு காட்சி ரஜினியை காப்பி அடிக்கிறார். வசனம் பேசுறது அப்படியே ரஜினி ஸ்டைல். ஏற்கனவே பாண்டின்னு ஒரு படம் நடிச்சு அது ஓடி வேற தொலைச்சிடுச்சு. இந்த மாதிரி படமா நடிச்சாத்தான் மாஸ் ஹீரோவா வர முடியும்னு யாரோ அவர்கிட்ட தப்ப சொல்லி இருக்காங்க. அண்ணன்களா போஸ் வெங்கட், யுகேந்திரன், இன்னொரு டிவி ஆர்டிஸ்ட். நல்ல நடிகர்களை எல்லாம் குப்பை கேரக்டர் கொடுத்து வேஸ்ட் பண்ணி இருக்காங்க. கருணாஸ் அப்பப்போ சிரிக்க வைக்கிறார்.


"நீ காலேஜ், நான் ட்ரைநேஜ்.." என்று வசனம் பேசும் வில்லியாக மும்தாஜ். ஆனா ஊன்னா சேலைக் கழற்றி வீசி விடுகிறார். சொந்தக் குரலில் பேசி தமிழின் மீது புல்டோசரை விட்டு ஏத்துகிறார். தப்பான தொழில் செய்யும் அரசியல்வாதி. கடைசியில் லாரன்சிடம் குத்து பட்டு சாகிறார். "அவுத்துப் போட்டு அலைவதே என் தொழில்" என்று நடித்து இருக்கிறார் மீனாட்சி. குற்றாலத்தில் மசாஜ் செய்யும் பெண்ணாக வந்து லாரன்சை ஒருதலையாக காதலிக்கிறார். நேரடியாக மலையாள பிட் படங்களில் நடிக்க முயற்சி செய்யலாம். அவ்வளவு கேவலமாக நடித்து உள்ளார். மும்தாஜின் தங்கையாக ஸ்னிக்தா. முதல் பாட்டுக்கு ஆடி விட்டு காணாமல் போய் இரண்டாம் பாதியில் லாரன்சின் காதலி ஆகிறார். காம்னாவுக்கு ஒரு பாட்டும், ரெண்டு சீனும். அட்டர் வேஸ்ட்.


பாட்டுகளை எல்லாம் எழுதி இருப்பவர்.. தானைத் தலைவர் பேரரசு. இசை அறிமுகம் - கருணாஸ். "யாரோ.." என்னும் ஒரு மெலடி மட்டும் தேறுகிறது. டீயார் வேறு ஒரு பாட்டு பாடி இருக்கார். படத்தில் ஓரளவு பார்க்குற மாதிரி இருக்கிறது.. கனல் கண்ணனின் சண்டைகளும், சுரேஷ் தேவனின் ஒளிப்பதிவும் தான். ஜெய் ஷங்கரின் எடிட்டிங் பயங்கர குழப்பம். ஸ்நிக்தாவுக்கும் லாரன்சுக்கும் குற்றாலத்தில் என்ன நடந்ததுன்னு எதுவுமே படத்துல இல்ல.


இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கதையை விட கதாநாயகிகளின் சதையை ரொம்ப நம்பி இருக்கார். வசனம் எல்லாமே ரெட்டை அர்த்தம்தான். ஒரு காமெடி - ஒரு சீன் பாட்டு - ஒரு சண்டை.. இதுதான் படம்னு எடுத்து இருக்கார். பாட்ஷா, தர்மதுரை போன்ற ரஜினி படங்களின் கதையை சுட்டு, ரஜினி பட பேரையே தலைப்பா வச்சா மட்டும் போதாது தலைவா. கொஞ்சம் உருப்புடியா யோசிங்க.


ராஜாதி ராஜா - வெத்து கூஜா...

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

May 14, 2009

பட்டையக் கிளப்பிய பதிவர் சந்திப்பு - நன்றி..!!!

திருச்சியில நடந்த பதிவர் சந்திப்புக்கு வந்த மக்கள் எல்லாருக்கும் மொதல்ல நன்றி சொல்லிக்கிறேன். நேற்றைய சந்திப்புக்கு வந்த நண்பர்கள்..
தமிழ்த்துளி - டாக்டர் தேவன்மாயம்...
அம்மா அப்பா - ஆ. ஞானசேகரன்
இளைய கவி - கணேஷ் குமார்
அகநாழிகை - பொன். வாசுதேவன்
அப்புறமா.. நான்..
உடம்பு முடியாமப் போனதால ஆதவாவும், கடைசி நேர பிரச்சினைகளால அன்பும் வர முடியாத சூழ்நிலை.
செவ்வாய்க்கிழமை மாலை ஐந்து மணிக்கே நண்பர் வாசுதேவன் திருச்சி வந்து ரூம் எடுத்து தங்கி விட்டார். நான் அவருடன் போய் சேர்ந்து கொண்டபோது நேரம் இரவு பத்து மணியைத் தொட்டு விட்டிருந்தது. வலையுலகில் எனக்கு அறிமுகம் ஆன முதல் நண்பர். அருமையாக கவிதைகள் எழுதக் கூடியவர். பயணங்களை விரும்புபவர். இரவு இரண்டு மணி வரை புத்தகங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அவருடன் கழித்த பொழுதுகள் மிகவும் பயன் உள்ளவையாக இருந்தன.
காலையில் ஒன்பதரை மணி போல முதலில் வந்து சேர்ந்தவர் நண்பர் மெல்போன் கமல். கூடவே அவரது துணைவியாரையும் அழைத்து வந்திருந்தார். மிகச் சமீபத்தில்தான் திருமணம் ஆகி உள்ளது. நேற்று அவருக்கு ரிசப்ஷன். இருந்தும் நண்பர்களைப் பார்க்க வந்தார். எக்கச்சக்கமாக போட்டோ எடுத்துக் கொண்டார். அருமையான இலங்கைத் தமிழில் கதைத்தார். இரண்டு மணி நேரங்கள் இருந்து விட்டு கிளம்பி சென்றார்.
ஒரே ஒரு முறை மட்டுமே டாக்டர் தேவன்மாயம் அவர்களிடம் நான் சாட்டில் பேசி இருந்தேன். அவருடைய நம்பரை வாங்கி நான் முதல் முதல் பேசியதே பதிவர் சந்திப்புக்கு அழைக்கத்தான். எந்த தயக்கமும் இல்லாமல் ஒத்துக் கொண்டார். அவருடைய பின்னூட்டங்கள் மூலமாக அவரை ரொம்ப மூத்தவர் என்று எண்ணிக் கொண்டு இருந்தேன். ஆனால் உண்மையில் டாக்டர் பார்ப்பதற்கு ரொம்ப இளமையாக இருக்கிறார். துறை சார்ந்து வரும் நபர் பற்றியும் பல நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
சிங்கப்பூரில் இருந்து வந்திருக்கும் நண்பர் ஞானசேகரன் - அநியாயத்துக்கு அமைதி. அவருடைய பதிவுகளை போலவே தெளிவான விஷயங்களை நிறுத்தி நிதானமாக பேசுகிறார். மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களை உற்று நோக்கி தன்னுடைய பார்வைகளை முன்வைத்தார்.
சொல்லரசன் - என்னுடைய நெருங்கிய நண்பர் மட்டுமல்லாது என்னுடைய நலம் விரும்பியும் கூட. பின்னூட்டங்கள் இடுவது தொடர்பாக அவருக்கும் வாசுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. அதைப் பற்றியும் நேற்று தெளிவாக பேசினார். சமூகம் சார்ந்த தன்னுடைய கவலைகளையும் பகிர்ந்து கொண்டார்.
திருச்சி சந்திப்பு பற்றிய பதிவை படித்து விட்டு இணைந்து கொண்டவர் நண்பர் கணேஷ் குமார். வலையுலகில் ரொம்பப் பெரிய ஆள்..(உடலமைப்பில் மட்டும் அல்ல..) முதல் முறை பார்க்கிறோம் என்கின்றன சங்கோசம் ஏதும் இல்லாமல் ரொம்ப சாவகசாமகப் பேசினார். தான் வளர்ந்த முறை, தன்னுடைய குடும்பம் என எந்த ஒளிவு மறைவும் அவரிடம் இல்லை. பாசாங்கு செய்யாத ஒரு நல்ல மனிதை சந்திக்க முடிந்ததில் ரொம்ப சந்தோஷம்.
எல்லோரோடும் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஓரமாக நின்று காமெடி பண்ணிக்கொண்டு இருந்தேன். எல்லோரும் அறிமுகம் செய்து கொண்ட பிறகு பல விஷயங்களைப் பற்றி பேசினோம். மதிய உணவுக்குப் பின்பு நண்பர் கணேஷ் விடை பெற்றுக் கொண்டார். மீதம் இருந்த ஐந்து பேரும் மாலை நாலரை மணி வரை பேசிக் கொண்டிருந்து விட்டு விடை பெற்றோம். அருமையான அனுபவம். இதை சாத்தியம் ஆக்கிய நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
சந்திப்பின் போது போன் பண்ணி வாழ்த்திய அன்பு உள்ளங்கள் சக்கரை சுரேஷ், குமாரை நிலாவன், நையாண்டி நைனா மற்றும் ஆ.முத்துராமலிங்கம் ஆகிய நண்பர்களுக்கும் நன்றி. (எனக்கு போட்டோ எல்லாம் பதிவுல எப்படி போடுறதுன்னு தெரியாது.. அதனால மற்ற நண்பர்கள் போட்டோ போடுவாங்க.. கொஞ்சம் அஜ்ஜிஸ் பண்ணிக்கோங்க மக்களே.. )
பதிவர் சந்திப்பு புகைப்படங்களைப் பார்க்க இங்கே க்ளிக்குங்க..டாக்டர் தேவாவோட பதிவு..
***************
புதுமணத் தம்பதிகளான கமல் மற்றும் அவரின் துணைவியாருக்கு பதிவுலகின் சார்பாக திருமண நல்வாழ்த்துக்கள்..
இன்று பிறந்த நாள் காணும் நண்பர் சொல்லரசன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..(அண்ணே..உங்க வயச சொல்லல:-)...)
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

May 11, 2009

உக்கார்ந்து யோசிச்சது....(11.05.09)!!!

மதுரையில் இருக்கும் பதிவுலக அன்பர் தருமி ஐயா அவர்களை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்தேன். அருமையான மனிதர். இனிமையாகப் பழகுகிறார். என்னைப் போலவே அவரும் ஆசிரியர் என்பதால் மாணவர்கள் பற்றியும், கல்லூரி பழக்க வழக்கங்கள் பற்றியும் பேசினோம். எனக்குத் தெரியாத பல பதிவர்கள் பற்றி சொன்னார். பதிவுலகம் பற்றியும், இன்றைய அரசியல் பற்றிய தன்னுடைய கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். ஐயாவைப் போலவே அவருடைய துணைவியாரும் ரொம்ப நல்லவர். அருகில் இதுக்கும் மனிதர்களுக்கு ஒத்தாசை செய்து கொண்டு இருவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். இரண்டு மணி நேரம் அவருடன் உரையாடி விட்டு விடை பெற்றேன். தருமி ஐயாவைப் பற்றி எனக்கு சொல்லிய அண்ணன் வால்பையனுக்கு நன்றி. கூடிய சீக்கிரம் மதுரையில் ஒரு பதிவர் சந்திப்பை எதிர்பாருங்கள் நண்பர்களே..
***************
சனிக்கிழமை அழகர் அட்டகாசமாக ஆற்றில் இறங்கினார். இந்த முறையும் பச்சை பட்டு தான். வழக்கம் போலவே கூட்டம் அள்ளியது. இந்த வருடம் ஸ்பீக்கர்கள் கட்டி பாட்டு போடும் மக்களை அவ்வளவாக காணவில்லை.
"ஒவ்வொரு வருஷமும் பச்சை உடுத்திதான் இறங்குறாரு.. ஆனா நமக்குத்தான் ஒண்ணும் பெரிசா நடக்க மாட்டேங்குது.. "
"கவலைப்படாத மாப்புள.. இந்த வருஷம் கண்டிப்பா அழகரு நம்ம குறையெல்லாம் தீத்துடுவாறு பாரேன்.."
ரெண்டு பேர் என் முன்னே பேசிக்கொண்டே சென்றனர். இந்த நம்பிக்கை தானே மக்களை இன்று வரை செலுத்தி கொண்டு இருக்கிறது. வைகையில் தண்ணீர் இல்லாத காரணத்தால் டாங்கில் கொண்டு வந்து தண்ணீர் நிரப்பினார்களாம். காலக்கொடுமை. எல்லா கேபிள் சானல்களிலும் அழகரின் தரிசனம்தான். நிறைவாக, நேரடியாகவே தரிசனம் செய்து வந்தேன்.
***************
மற்ற எல்லா ஊர்களைக் காட்டிலும் மதுரையில் தேர்தல் ஜுரம் சற்று அதிகம்தான். காரணம் உங்களுக்கேத் தெரியும். அழகிரியை இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க கங்கணம் கட்டிக்கொண்டு தி.மு.க.வினர் வேலை செய்து வருகிறார்கள். வோட்டுக்கு பணம் கொடுப்பது பற்றி கேள்விப்பட்டு உள்ளேன். ஆனால் பார்த்தது இல்லை. இந்த முறை அதையும் பார்த்து விட்டேன். "கவர் வாங்கிக்கிறீங்களா.." கேஷுவலாக கேட்கிறார்கள். ஓட்டுக்கு ஐநூறு ருபாய். இதில் ரெண்டாவது ரவுண்டு வேற வருமாம். சில இடங்களில் சேலைகள் பட்டுவாடாவும் நடக்கிறது. சிட்டிங் எம்.பி மோகன் மருத்தவமனையில் உள்ளார். ரெண்டு கோடி ருபாய் வாங்கிக் கொண்டு விலகி விட்டதாக பேசிக் கொள்கிறார்கள்.
சனிக்கிழமை இரவு கயல்விழி அழகிரியின் பிரச்சார பேச்சைக் கேட்டேன். "அழகர் ஆத்துல இறங்குற இந்த மாசத்துல உங்களை நம்பி எங்கப்பா மதுரை தேர்தல் களத்துல இறங்கி இருக்கார். உங்களுக்கு என்ன வேணும்னாலும் செஞ்சு கொடுப்பார். அவர் மண்ணின் மைந்தர்.." நிறுத்தி நிதானமாக பேசினார். பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. மக்கள் என்ன முடிவு பண்ணி இருக்காங்கன்னு இன்னும் ஒரு வாரத்துல தெரிஞ்சிடும். ஆனா இந்த தேர்தல் ஒரு கெட்ட உதாரணமா மாறுறதுக்கு வாய்ப்பு இருக்கு. இப்பவே மக்கள் கொடுக்கிற பணம் பத்தலைன்னு சொல்றாங்க. இப்படியே போனா, நம்ம ஜனநாயகக் கடமைய செய்றதுக்கு எவ்வளவு தருவீங்கன்னு பேரம் பேசக்கூடிய நிலை வருமோன்னு பயமா இருக்கு.
***************
அழகான வார்த்தைகள்..
எந்த ஒரு மனிதனும்
தேடி தேடி அலைந்தாலும்
திரும்பவும் கிடைக்காத
ஒரே சிம்மாசனம்..
"தாயின் கருவறை.."
தாமதமா சொல்றேன்.. இருந்தாலும்.. அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்..
***************
முடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு ஜோக்..
ஒரு பறவை மோட்டார் சைக்கிளில் அடிபட்டு விட்டது. மயங்கிக் கிடந்த பறவையை பைக்கை ஓட்டி வந்த மனிதன் எடுத்துக் கொண்டு போய் கூண்டில் அடைத்து வைத்தான். அதற்கு பசிக்குமே என்று கொஞ்சம் ரொட்டியும் தண்ணீரும் கூட வைத்தான். மயக்கம் தெளிந்த பறவை சுற்றும் முற்றும் பார்த்து விட்டு கத்தத் தொடங்கியது.. "அய்யய்யோ.. ஜெயிலா.. பைக்குக்காரன் செத்துட்டானா..?"
***************
நண்பர்களே.. வரும் பதிமூணாம் தேதி திருச்சியில் பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணி இருக்கோம்னு உங்களுக்கு தெரியும். கண்டிப்பா வாங்க.
இடம்: கல்லணை
நேரம்: காலை பத்து மணி.

அதுக்கு முன்னாடி வர மக்கள் திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டுக்கு எதிரே இருக்குற ஹோட்டல் மேகாவுக்கு வாங்க.
தொடர்புக்கு..
மா.கார்த்திகைப் பாண்டியன் - 98421 71138
"அகநாழிகை" பொன். வாசுதேவன் - 99945 41010
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

May 8, 2009

வாராரு.. வாராரு.. அழகர் வாராரு..!!!எல்லா ஊருலயும் கோவில்கள் உண்டு.. திருவிழாக்களும் வரும். ஆனா நம்ம மதுரையோட சித்திரைத் திருவிழாவ அடிச்சுக்க எதாலையும் முடியாது. கும்பகோணத்துல பனிரெண்டு வருஷத்துக்கு ஒரு தரம் தான் மகாமகம் வரும். அதுக்கு வர கூட்டம் எல்லாம் மதுரைல அழகர் ஆத்துல இறங்குற திருவிழாவுக்கு வர கூட்டம் முன்னாடி சும்மா. சுத்துப்பட்டுல இருக்குற அத்தனை கிராமத்து சனமும் அன்னைக்கு மதுரைல தான் இருக்கும். தீபாவளி, பொங்கலுக்கு அடுத்தபடியா மதுரைல பெரிய திருவிழா இதுதான். கிட்டத்தட்ட பத்து லட்சம் பேருக்கு குறையாம வருஷா வருஷம் வராங்களாம்.
மீனாட்சிக்கும் சொக்கநாதருக்கும் கல்யாணம். நடத்தி வைக்க அண்ணன் அழகர் வாராரு. வர வழியில அவரை கும்புடுற கள்ளர்கள் எல்லாம் கொஞ்ச நேரம் அவங்க கூட தங்கிட்டுப் போகனும்னு சொல்றாங்க. அந்த இடம்தான் அழகர் மலை. அவுங்க அன்புல நெகிழ்ந்து போற அழகர் கல்யாணத்த மறந்து அங்கேயே தங்கிடுராறு. கல்யாணம் நடக்கணுமேன்னு சிவன் தன்னோட உடம்புல இருந்து விஷ்ணுவ உருவாக்க, கல்யாணம் நல்லபடியா நடக்குது. நேரம் கழிச்சு வந்த அழகர் நான் இல்லாம எப்படி கல்யாணம் நடக்கலாம்னு கோவிச்சிக்கிட்டு போறாரு. அவரை சமாதானப்படுத்தி ஹரியும் சிவனும் ஒண்ணுன்னு மக்களுக்கு புரிய வைக்கிறதுதான் சித்திரைத் திருவிழா.
திருக்கல்யாணத்துல ஆரம்பிக்குற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து, அழகர் ஆத்துல இறங்கி, மறுபடி கோவிலுக்கு போறதோட முடியும். பூப்பல்லாக்கு என்ன, எதிர்சேவை என்ன.. எல்லாமே பார்க்க கண்கொள்ளா காட்சி. சாயங்கால நேரம் ஆனா கோயிலைச் சுத்தி இருக்குற ஏரியாக்குள்ள ஒரு பய போக முடியாது. கூட்டம் அள்ளும். அழகர் ஆத்துல இறங்குற அன்னைக்கு சொல்லவே வேணாம்..
எங்க பசங்க எல்லாருக்கும் இந்தத் திருவிழா ஒரு மீட்டிங் பாயின்ட் மாதிரி.. எங்க இருந்தாலும் கரெக்டா அன்னைக்கு எல்லாரும் ஒன்னு கூடியிருவோம். காலைல அஞ்சு மணிக்கு ரயில்வே காலனில இருக்குற எங்க வீட்டு முன்னாடி பயபுள்ளைங்க எல்லாம் ஆஜர் ஆகிடுவாங்க. அப்படியே பொடிநடையா மதுரா கோட்ஸ் பாலம் வழியா நடக்க ஆரம்பிப்போம். போற வழில எல்லாம் தண்ணீர் பந்தல் வச்சு நீர் மோர், ரசனா எல்லாம் ஊத்துவாங்க. அதுல ஆளுக்கு ரெண்டு கிளாசை அடிச்சுட்டு போய்க்கிட்டே இருப்போம். மெதுவா கதை பேசி நடந்தா ஆறு மணி போல தரைப் பாலத்துக்கு போய்டலாம். அந்தக் கூட்டத்துல இறங்கி அழகரைப் பாக்குறது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா அதுலத்தானே நம்ம திறமைய காட்ட முடியும். அடிச்சு புடிச்சு உள்ள போய் சாமி பார்த்துடுவோம்ல..
அழகர் உடுத்தி இருக்குற பட்டு ரொம்ப முக்கியம். ஒரு பேழைல இருக்குற பல வண்ணப பட்டுல இருந்து ஒண்ணைத்தான் செலக்ட் பண்ணுவாங்க. கடந்த மூணு வருஷமா பச்சை உடுத்தித்தான் வந்திக்கிட்டு இருக்காரு. அதை வச்சுத்தான் அந்த வருஷம் ஊரு எப்படி இருக்கும்னு சொல்லுவாங்க. இன்னொரு ஆச்சரியமான விஷயம்.. திருவிழா நடக்குறது அக்னி நட்சித்திரத்துல. ஆனா அன்னைக்கு மட்டும் அவ்வளவா வெயில் இருக்காது. அத்தோட கொஞ்சம்மா மழையும் பெய்யும். இது நானே பார்த்து அனுபவிச்ச உண்மை. இன்னொன்னு.. கரெக்டா அழகர் ஆத்துல இறங்குரப்ப, கருடன் ஒண்ணு மேல பறக்கும். ஆச்சரியம்தான் இல்ல..
திருவிழா நடக்குற இடமான கோரிப்பாளயமே அன்னைக்கு ஜேஜேன்னு இருக்கும். நெறைய பேரு முடி எடுத்து நேர்த்திகடன் செலுத்துவாங்க. ஆட்டுத்தோல்ல தண்ணீரை நிரப்பி பீச்சி அடிக்கிறது இன்னும் பிரபலமான வேண்டுதல். கோபமா வார அழகரை குளுமையாக்க இதை செய்யுறதா அர்த்தம். ஆனா சமீப காலமா இந்தப் பழக்கம் கொஞ்சம் தப்பான முறையில, பெண்களைக் கிண்டல் செய்ய பயன்பட்டு வருது. அந்த ஒரு நாள் மட்டும்தான் ஆத்துல தண்ணி திறந்து விடுவாங்க. வற்றாத நதியான வைகை இன்னைக்கு வெறும் குட்டை மாதிரி இருக்கிறது வருத்தப்பட வேண்டிய விஷயம்.
ஆத்துல இறங்கின அப்புறம் அழகர் ஒவ்வொரு மண்டகப்படியா போய் தங்கி அருள்பாலிப்பார். மண்டகப்படி - ஒவ்வொரு சமூக மக்களும் அவங்கவங்களுக்காக உருவாக்குன இடம். பிரச்சினை ஏதும் இல்லாம எல்லாரும் இதன் மூலமா சாமி பார்க்க முடியும். யாரு வேணும்னாலும் தீபம் காட்டி சாமி கும்பிடலாம். சக்கரைதான் பிரசாதம். எல்லாத்தையும் வாங்கி ஒரு கட்டு கட்டிட்டு அப்படியே வெளியே வந்தோம்னா பக்கத்துல உள்ள கோயில்கள்ல புளிசாதமும், தயிர் சாதமும் குடுப்பாங்க. அங்கயும் ஒரு ரவுண்டு போயிட்டு..(இதுக்கெல்லாம் கூட்டத்துக்கு உள்ள அடிச்சு புடிச்சு போகுறதுக்கு தில் வேணும்..) வீட்டைப் பார்த்து கிளம்பலாம்.
சுத்தி இருக்கிற கடை, கண்ணில எல்லா வியாபாரமும் நடக்கும். முந்தி எல்லாம் மணி அடிச்சிக்கிட்டு ஒரு ஆள் பொம்மையோட சவ்வு மிட்டாய் வித்துக்கிட்டே வருவார். கையில வாட்சு, பல்லி எல்லாம் செஞ்சு கட்டி விடுவார். இப்போ எல்லாம் அது கண்ணுல சிக்கவே மாட்டேங்குது. ஊரும் நெறைய மாறிப்போச்சு. கேபிள்கார பய அத்தனை பேரும் பத்து நாளைக்கு அழகர் திருவிழாவைத்தான் போடுறான். அதனால நேர்ல வரதுக்கு சங்கடப் பட்டுக்கிட்டு நெறைய மக்கள் வீட்டுலையே இருந்துடுறாங்க. என்னதான் டிவில பார்த்தாலும் நேர்ல போய் பாக்குற அந்த சந்தோஷம் வருமா? நேரம் கிடைச்சா ஒரு தரம் ஊருப்பக்கம் திருவிழா பார்க்க வாங்கண்ணே.. பட்டாசு கிளப்பிட்டு அழகரோட அருளை வாங்கிட்டுப் போகலாம்..!!!

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

May 7, 2009

மே 13 - திருச்சியில் பதிவர் சந்திப்பு..!!!

பதிவுலகத்துல எழுதறதால கிடைக்கக் கூடிய சில நன்மைகள் என்னன்னா..

1. நம்மோட எண்ணங்களை நாலு பேரு கிட்ட பகிந்துக்க முடியுது..

2. நீங்க எழுதுறது நல்லா இருக்குன்னு மக்கள் பாரட்டுரப்போ கிடைக்குற சந்தோஷம்..

3. புதிய நண்பர்கள் வட்டம்.. எந்த எந்த ஊர்லையோ இருந்து நண்பர்கள் கிடைக்குறது எவ்வளவு நல்ல விஷயம்..

அதனாலத்தான் பதிவர் சந்திப்புகள் நடத்தி நட்பை இன்னும் வலுப்படுத்திக்கிறோம்.. இதை பத்தி திருக்குறள் என்ன சொல்லுதுன்னா..

"உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே பதிவர் தொழில்"

(ஹி ஹி ஹி.. வள்ளுவர் நம்மளை மன்னிப்பாராக..)
எதுக்காக இவ்வளவு பில்டப்புன்னா..

டும் டும் டும் டும்..

இதனால சகல பதிவுலக மக்களுக்கும் சொல்லிக்கிறது என்னன்னா..

வர மே மாசம் பதிமூணாம் தேதி.. நிறைஞ்ச புதன்கிழமை..

நம்ம மலைக்கோட்டை நகரமான திருச்சில..

பதிவர் சந்திப்பு நடக்கப் போகுது சாமியோவ்..

அதனால..
ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்பிட்டாகோ..

அமெரிக்கால மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாகோ..

துபாய்ல இருக்க மச்சான் வாராகோ..

அப்படின்னு எல்லாம் கதை சொல்லாம நம்ப பதிவுலக மக்கள் எல்லாம் வந்து கலந்துக்கனும்னு வேண்டி விரும்பி கேட்டுக்கிறோம் சாமியோவ்....
என்னது? சந்திப்புக்கு யார் யாரு வராங்களா?

சிங்கப்பூர்ல இருந்து நம்ம நண்பர் ஆ. ஞானசேகரன் வாராரு..

ஆஸ்திரேலியாவுல இருந்து தமிழ் மதுரம் கமல் வாராரு..

காரைக்குடியில இருந்து நம்ம டாக்டர் ஐயா தேவன்மாயம் வாராரு..

திருப்பூர்ல இருந்து நண்பர்கள் ஆதவா மற்றும் சொல்லரசன் வாராங்க..

மதுராந்தகத்துல இருந்து அண்ணன் அகநாழிகை வாராரு..

சிவகாசில இருந்து தம்பி அன்புமதி வராரு..
இன்னும் நம் பதிவுலக உறவினர்கள் எல்லாம் வராங்க..
அதனால நீங்களும் வந்து நிகழ்ச்சிய சிறப்பிச்சு தரணும்னு வேண்டிக்கிறோம்.. காலைல ஒன்பது மணில இருந்து திருச்சி ரயில் நிலையம் கிட்டக்க வந்து ஒரு குரல் கொடுத்திங்கன்னா உங்களை பிக்கப் பண்ணிக்கிறதுக்கு ஏற்பாடுகள் செஞ்சாச்சு சாமியோவ்..
டும் டும் டும் டும்..!!!
கண்டிப்பா வாங்க.. நிறைய புது நண்பர்களோட அறிமுகத்துக்காக ஆவலா இருக்கோம்.

தொடர்புக்கு:

மா.கார்த்திகைப் பாண்டியன் -- 98421 71138

"அகநாழிகை" பொன். வாசுதேவன் -- 99945 41010
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

May 5, 2009

ஓட்டுப் பொறுக்கும் பச்சோந்திகள்..!!!

"என்ன நெஞ்சழுத்தம் இருந்தா அந்த கேவலமான அரசியல்வாதி(வியாதி)களோட எங்கள கம்பேர் பண்ணி எழுதுவ..." அப்படின்னு பச்சோந்திகள் எல்லாம் என்னோட வீட்டு முன்னாடி உண்ணாவிரதம் இருக்கோம்னு அடம் பிடிக்காம இருந்தா சரி.. ஏன்னா இது உண்ணாவிரத சீசன் பாருங்க.. தேர்தல் வந்தாலும் வந்துச்சு .. இவங்களோட அலும்பு தாங்க முடியல.. நேரத்துக்கு ஒரு பேச்சு, நிமிஷத்துக்கு ஒரு பல்டி.. அடங்கப்பா,,, இது உலக நடிப்புடா சாமின்னு ஆளாளுக்கு பிச்சு உதறுராய்ங்க.. இந்த தேர்தல்ல யாருக்குத்தான் ஓட்டு போடுறது? மண்டை காயுது.. எரியுற கொள்ளில எந்த கொள்ளி நல்ல கொள்ளின்னு செலக்ட் பண்ண வேண்டிய கட்டாயத்துல நாம இருக்கோம்..
கலைஞர்: இருக்குறதிலேயே பாவப்பட்ட ஜீவன்.. புலிவால் பிடிச்ச நாயர் கதை தான்.. காங்கிரசை விட்டு விலகுனா ஆட்சி போய்டும்.. இயற்கையா இருக்குற புலி பாசத்தையும் விட முடியாம.. படுற பாடு கொஞ்ச நஞ்சம் இல்ல. கழகமே குடும்பம்னு இருந்த காலம் போய் என்னைக்கு குடும்பமே கழகம்னு கலைஞர் நினைக்க ஆரம்பிச்சாரோ, அன்னைக்கு பிடிச்சது சனி. முத்துக்குமார் மரணம் இளைஞர்கள் மத்தியில ஒரு எழுச்சிய உண்டு பண்ணினப்ப காலேஜ் எல்லாம் லீவு விட்டு அடக்குனாரு.. காலைல பேரணில சீமானைப் பார்த்து கைய அசைச்சுட்டு சாயங்காலமே அரஸ்ட் பண்ணி உள்ள தள்ளினாறு.. பிராபாகரனை கைது பண்ணினா ஒழுங்கா நடத்தனும்.. இது முதல் நாள் அறிக்கை.. அவரு என்னோட பெஸ்ட் ப்ரெண்டு.. இது அடுத்த நாள் காமெடி.. எல்லாமே முன்னுக்கு முரண்.. இந்த தள்ளாத வயசுல கலைஞருக்கு இது தேவையா? எல்லாம் முடிஞ்ச பிறகு வர போலீஸ மாதிரி.. ஒரு ஆறு மணி நேர உண்ணாவிரதம் வேற.. தயவு செஞ்சு கலைஞர் டிவில வர அந்த கட்டுமரம் விளம்பரத்த நிப்பாட்டுங்கப்பா.. அதைப் பார்த்தா கடுப்புதான் வருது.. தமிழினத் தலைவர் தமிழீனத் தலைவரா மாறிப் போனாரு..
ஜெயலலிதா: இந்த அம்மாவாலேயே இவங்களை ஜட்ஜ் பண்ண முடியாது.. நாம அடுத்து என்ன செய்யப் போரோம்கிறது அவங்களுக்கே தெரியாது. இன்ஸ்டன்ட் காபி, இன்ஸ்டன்ட் காதல் மாதிரி இவங்களுக்கு இப்போ வந்து இருக்குறது இலங்கைத் தமிழர்கள் மீதான இன்ஸ்டன்ட் பாசம். மார்ச் மாசம் இவங்க சொன்னது.. போர்னு வந்தா மக்கள் சாகுறது சகஜம் தானே.. ஆனா இன்னைக்கு சொல்றது.. நான் ஆட்சிக்கு வந்தால் தமிழீழம் அமைக்க பாடுபடுவேன்.. அது எப்படிப்பா ஒரே மாசத்துல புத்தி மாறுச்சு? வீடியோ பார்த்தாங்களாம்.. மனசு மாறுச்சாம்.. அப்போ இதுக்கு முன்னாடி வந்த படங்கள எல்லாம் இந்த அம்மா பார்க்கவே இல்லையா? என்னாங்கடா கதை விடுறீங்க? யாரையுமே மதிக்கறதும் கிடையாது.. இந்த லட்சணத்துல பிரதமர் பதவியப் பத்தி வேற பேசுறாங்க.. நினச்சாலே கண்ண கட்டுதுடா சாமி..
ராமதாஸ்: இவரைப் பத்தி நான் இனிமேலும் என்ன சொல்ல? அந்த அம்மா என்னோட வேட்டிய உருவப் பார்த்துச்சு, தானைத் தலைவர் கலைஞர்தான் என் மானத்தைக் காப்பத்தினாறு.. ஈனம், மானம் ரோஷம் இருக்குறவன் அந்த அம்மா கூட இனிமேல் கூட்டணி பத்தி பேச மாட்டான். இதெல்லாம் டாக்டர் ஐயாவோட தத்துவ முத்துக்கள். தமிழ்நாடுலையே இவர் அளவுக்கு கூட்டணி மாறி யாருமே சாதனை பண்ணி இருக்க மாட்டாங்க.. என் குடும்பத்தில் யாராவது அரசியலுக்கு வந்தால் என்னை சாட்டையால் அடிங்கள்.. அப்படின்னு சொன்னவரு.. இப்போ சாட்டைய எங்கயோ மறந்து வச்சுட்டாரு போல.. ஜாதி பலம ஒன்னை மட்டுமே நம்பி அரசியல் பண்ற இவங்களை வளர்த்து விட்டது திராவிட கட்சிகளோட தப்பு..
வைகோ: இன்னைய தேதிக்கு தமிழக அரசியலின் காமெடி பீஸ். கிட்டத்தட்ட அ.தி.மு.க வோட கொள்கை பரப்பு செயலாளர் ரேஞ்சுக்கு இருந்த மனுஷன தொகுதிப் பங்கீட்டுல ஜெயா படுத்துன பாடு.. செம காமெடி. விடுதலைப் புலிகள் பிரச்சினை மட்டும் வரலைன்னா ஆள் இந்நேரத்துக்கு அட்ரஸ் இல்லாம போய் இருப்பாரு. ஜெயாவோட உண்ணாவிரத டிராமால கடைசியா பழரசம் கொடுத்து இவர் முடிச்சு வச்சப்போ, கேவலமா இருந்தது. எப்படி இருந்த வைகோ இப்படி ஆகிட்டாரு?
தேர்தல்ல ஓட்டு போட போகும்போது மட்டும்தான் மற்ற கட்சிக்காரன் கும்பிடுவான். ஆனா கம்யூனிஸ்ட் ஒருத்தன்தான் திரும்பி வரப்பவும் கும்பிட்டு நன்றி சொல்லுவான். அது அந்தக் காலம். இன்னைக்கு அவங்களுக்கும் பதவி ஆசைதான் முக்கியமாப் போச்சு. காங்கிரஸ் இன்னைக்கு தமிழ்நாட்டுல காலி பெருங்காய டப்பா. ஆ ஊன்னு குதிச்ச திருமா காங்கிரஸ் கூடவே கூட்டணி வச்சு இருக்காரு. விஜயகாந்தோ பணம் வாங்கிகிட்டு தனியா நிக்குறதா சொல்றாங்க. நாங்களும் கட்சி வச்சு இருக்கோம்னு சொல்லத்தான் சரத் பி. ஜெ. பி கூட கூட்டணி போட்டு தேர்தலை சந்திக்கிராரு.
இதுல யாருக்கு ஓட்டு போட? இங்க யாருக்குமே கொள்கையும் இல்லை, மக்கள் மேல அக்கறையும் இல்ல.. எல்லாமே பணம்தானு ஆகிப்போச்சு.. தன்னோட அம்மாவாகவே இருந்தாலும், விதிய மீறி போட்ட தண்ணிக்குழாய எடுக்க சொன்ன கர்மவீரர் காமராசர் எங்கே.. ஓட்டுக்காக ...யக் கூட தின்கிற இன்றைய அரசியல்வாதிகள் எங்கே? ஒத்தப் பைசா கூட இல்லாம செத்துப்போன கக்கன், ஜீவா போன்ற பல தலைவர்கள் இருந்த அரசியல் எல்லாம் இன்னைக்கு நாசமாப் போச்சு. இன்னைக்கு பாக்கி இருக்குறது பொறுக்கித் தின்னுற சந்தர்ப்பவாதிக தான். அதனால் நான் இந்த தடவை யாருக்கும் ஓட்டே போடப் போறதில்ல. "O" போடலாம்னா அதை பகிரங்கமாத்தான் செய்யணும். அது பிரச்சினை. உன்னோட ஜனநாயகக் கடமைய புறக்கணிக்க கூடாதுன்னு சொல்றவங்களுக்கு.. தப்பான ஒருத்தனுக்கு ஓட்டு போடுறதும் குற்றம்தான். இந்த நிலைமை மாறனும்னு வேண்டுரதைத் தவிர்த்து நான் செய்யக் கூடியது வேற ஒண்ணுமில்லை..!!!
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

May 1, 2009

பசங்க - திரை விமர்சனம்..!!!


இப்படிப்பட்ட ஒரு படத்தை தயாரித்ததற்காக - முதலில் சசிகுமார் அவர்களுக்கு பாராட்டுக்கள். எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாவில் முழுக்க முழுக்க குழந்தைகளை மட்டுமே கதை நாயகர்களாக கொண்டு படம் எதுவும் சமீபத்தில் வந்ததாக நினைவில்லை. பொதுவாக தமிழ் சினிமாவின் குழந்தைகள் வயதுக்கு மீறி பேசுபவர்களாக, இயல்பு நிலைக்கு மாறாக மட்டுமே சித்தரிக்கப்பட்டு வந்துள்ளனர். அதை உடைத்து, முதல் முறையாக குழந்தைகளின் அக உலகுக்கு வெகு நெருக்கத்தில் இருக்கும் ஒரு படமாக இருக்கிறது.."பசங்க..". படம் பார்க்கும் மக்களுக்கு மீண்டும் தங்கள் பள்ளிப் பிராயத்து நினைவுகளை கண்டிப்பாக இந்தப் படம் மீட்டு தரும்.


ஒரு டவுன் பள்ளி. அங்கே படிக்கும் மாணவர்களான ஜீவா, பக்கோடா, குட்டிமணி மூவரும் நண்பர்கள். சேட்டைக்காரர்கள். பள்ளிக்கு புதிதாக வரும் அன்புக்கரசை வாத்தியார்கள் உள்பட எல்லோருக்கும் பிடித்து இருக்கிறது. ஜீவாவுக்கும் அன்புக்கும் இடையே வெறுப்பும் போட்டியும் உண்டாகிறது. இது அவர்களின் குடும்பம் வரை பாதிக்கிறது. அன்பின் சித்தப்பாவும் ஜீவாவின் அக்காவும் காதலிக்கிறார்கள். அவர்களால் குடும்பங்கள் இணைகின்றன. ஆனால் ஜீவா, அன்பு இடையேயான விரோதம் குறையவில்லை. கடைசியில் இருவரும் நண்பர்கள் ஆனார்களா என்பதே கதை.


கற்றது தமிழ் படத்தில் சின்ன வயது ஜீவாவாக வரும் சிறுவன்தான் இந்தப் படத்தில் ஜீவா. கண்களில் வெறுப்பு மிளிர எல்லா காட்சிகளிலுமே நன்றாக நடித்து உள்ளான். கடைசியில் அன்புக்காக அழும் காட்சியில் நம்மையும் கண்கலங்க வைக்கிறான். அன்பாக வரும் சிறுவனும் அசத்துகிறான். ஜீவாவின் அள்ளக்கைகளாக வரும் பக்கோடாவும், குட்டிமணியும் தூள். ஏத்தி விட்டே தனக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ளும் பக்கோடா அசத்துகிறான். எல்லாக் குழந்தைகளுமே ரொம்ப இயல்பாக நடிக்க வைத்திருப்பது இயக்குனரின் திறமை.


சரோஜா படத்தில் அறையும் குறையுமாக வந்த வேகாவா இவர்? தாவணி, சேலையில் அவ்வளவு திருத்தம். எளிய காதலனாக அறிமுகம் ஆகி இருக்கும் விமல் நம் பக்கத்து வீட்டில் அடிக்கடி பார்க்கும் முகம் போல் இருக்கிறார். பள்ளிக்கூட வாத்தியாராக, ஜீவாவின் அப்பாவாக நடித்து இருப்பவர் ரொம்பவே நன்றாக நடித்து உள்ளார். சண்டை போட்டுக் கொள்ளும் அன்பின் அப்பாவை அழைத்து பேசும் காட்சிகள் ரொம்பவே யதார்த்தம். மகனுக்காக கஷ்டப்படும் அன்பின் அப்பாவும் கச்சிதம்.


படத்தின் முதல் பாதி முழுக்க பசங்களின் அட்டகாசம் தான். ஒரே மாதிரி பிரச்சினைகளாக வந்து கொண்டிருக்கும் வேளையில் படத்தை சுவாரசியம் ஆக்குவது வேகா - விமலின் காதல் காட்சிகள். போனில் இருவரும் ஒருச்வரை ஒருவர் கலாய்த்துக் கொள்வது கலக்கல். ஓட்டப் போட்டியில் பையனுடன் கூடவே குடும்பமும் ஓடுவது சின்ன கவிதை. சைக்கிள் இல்லாமல் போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் மகன் ஏங்க, அவனுக்காகவே அப்பா முதல் முறையாக வாழ்க்கையை பற்றி யோசிக்க ஆரம்பிப்பது அருமை. பெற்றோரின் பிரச்சினைகள் எந்த அளவுக்கு குழந்தைகளை பாதிக்கும் என்பதை யதார்த்தமாக சொல்லி உள்ளார்கள்.


ஜேம்ஸ் வசந்தன் இசையில் டாக்டர். பாலமுரளி கிருஸ்ணா பாடி இருக்கும் அன்பு உண்டாக்கும் வீடு பாடலும் அதை படமாக்கி இருக்கும் விதமும் அருமை. ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாருமே புதுமுகங்கள்தான். நிறைவாக செய்து இருக்கிறார்கள். எந்த விதமான சமரசமும் செய்து கொள்ளாமல் ஒரு நல்ல படத்தை தந்து இருக்கிறார் அறிமுக இயக்குனர் பாண்டிராஜ். படத்தின் பலவீனம் முதல் பாதியின் வேகமும் படத்தின் நீளமும். இருந்தாலும் இந்த மாதிரி படங்களை ஊக்குவிக்கும்போது சின்ன சின்ன குறைகளைத் தவிர்த்து விடலாம். வாழ்க்கையின் இயல்பான பக்கங்களுக்கு வெகு அருகே இருக்கும் ஒரு படத்தை தந்தமைக்கு இயக்குனருக்கும் நன்றி.


பசங்க - பட்டயக் கிளப்புராய்ங்க..


(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)