November 29, 2010

கிகுஜிரோ (1999)

ஒரு குழந்தையின் கண்களுக்குள் வரையப்பட்டு இருக்கும் தேவதையின் படத்தோடு துவங்குகிறது "கிகுஜிரோ". அடுத்தது நமக்கு காத்திருப்பது என்ன என்கிற எதிர்பார்ப்பில்தானே மொத்த வாழ்க்கையின் சூட்சுமம் இருக்கிறது. பயணங்களும் அதுபோலத்தான். அவை எப்போதுமே தங்களுக்குள் பல சுவாரசியங்களை ஒளித்து வைத்திருக்கின்றன. கோடை விடுமுறையில் தன் தாயைத் தேடி கிளம்பும் ஒரு சிறுவனும், தேவதை போல அவனது வாழ்க்கையில் வந்து சேரும் மனிதனொருவனும் இணைந்து பயணிப்பதுதான் படம்.


பள்ளியில் படிக்கும் மாசோ தன்னுடைய பாட்டியோடு வசித்து வருகிறான். கோடை விடுமுறை என்பதால் மாசோவோடு விளையாட யாருமில்லை. அவனோடு கூடப் படிக்கும் மாணவர்கள் எல்லாம் வெளியூருக்குப் போயிருக்கிறார்கள். தனிமையில் வாடும் மாசோ தானும் எங்காவது போக வேண்டுமென சொல்கிறான். அவனுடைய தந்தை விபத்தில் இறந்து போனதையும் தாய் வெகு தொலைவில் அவனுக்காக கஷ்டப்பட்டு வேலை பார்ப்பதையும் சொல்லும் பாட்டி, மாசோ வளர்ந்து பெரியவனாகி எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்கிறாள்.

வீட்டில் தனித்திருக்கும் மாசோவுக்கு எதேச்சையாக தனது தாயின் புகைப்படமும் அவளுடைய விலாசமும் கிடைக்கிறது. ஒரு பையில் தன்னுடைய உடைமைகளையும் கொஞ்சம் பணத்தையும் எடுத்துக் கொண்டு தாயைத் தேடிக் கிளம்புகிறான். வழியில் சில வளர்ந்த பையன்கள் மாசோவை மறித்து அவனிடமிருக்கும் பணத்தை பறிக்கப் பார்க்கிறார்கள். அப்போது மாசோவின் பக்கத்து வீட்டில் முன்பு வசித்த பெண்ணொருத்தி தன் கணவனோடு வந்து அவனைக் காப்பாற்றுகிறாள். அவனுடைய பயணம் பற்றி தெரிந்து கொண்டு தொலைதூரத்தில் இருக்கும் அவ்வூருக்கு தனித்துப் போக வேண்டாமென தன் கணவனையும் கூட அனுப்புகிறாள்.

வினோதமான பழக்கங்களைக் கொண்டிருக்கும் அந்த மனிதர் மாசோவை அழைத்துக் கொண்டு சைக்கிள் ரேசுக்குப் போகிறார். ஊருக்குப் போவதற்காக தன் மனைவி கொடுத்த காசு அத்தனையையும் ரேசில் தொலைத்து விட்டு மாசோவிடம் இருக்கும் பணத்தையும் பிடுங்கிக் கொள்கிறார். ஆனால் மாசோ சொல்லும் நம்பர்களில் அவருக்கு ஜாக்பாட் அடிக்கிறது. பெண்கள், குடி என அந்தப் பணத்தை செலவழிக்கிறார். மறுநாளும் அவரும் மாசோவும் ரேசுக்குப் போகிறார்கள். ஆனால் இம்முறை அவருடைய பணம் அத்தனையையும் தோற்று விடுகிறார். மாசோ ராசியில்லாதவன் என்று அவனைத் திட்டுகிறார்.

அன்றிரவு ஒரு கிழவன் மாசோவிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சிக்கிறான். அவனை அடித்துப்போடும் மிஸ்டர் (அப்படியே அழைப்போம்) கிழவனிடமிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்கிறார். அழும் மாசோவைத் தேற்றி கண்டிப்பாக அம்மாவிடம் கூட்டிப் போவதாகக் சொல்கிறார். இருவரும் ஒரு காரில் போகிறார்கள். வழியில் டிரைவர் எங்கோ இறங்கிபோக அந்தக் காரைத் தானே ஓட்டிக்கொண்டு கிளம்புகிறார் மிஸ்டர். வழியில் அந்தக் கார் ரிப்பெராகிவிட ஒரு ஆடம்பர ஹோட்டலில் அறையெடுத்து தங்குகிறார்கள். அங்கும் மிஸ்டரின் அட்டகாசங்கள் தொடர்கின்றன.

தொடரும் பயணத்தில் லிப்ட் தர மறுக்கும் ஒரு லாரிக்காரனின் கண்ணாடியை அடித்து நொறுக்குகிறார் மிஸ்டர். சிறுவனின் மீது பரிதாபம் கொண்டு ஒரு காதல் ஜோடி அவர்களை வண்டியை ஏற்றிக் கொள்கிறது. ஒரு பார்க்கில் அவர்களோடு சிரிக்க சிரிக்க விளையாடுகிறான் மாசோ. அதில் கலந்து கொள்ளாமல் மிஸ்டர் தனியாகவே இருக்கிறார். சிறுவனுக்கு இறக்கைகளுடன் கூடிய பையை பரிசாகக் கொடுத்து ஒரு பழைய பேருந்து நிறுத்ததில் அவர்களை இறக்கிவிட்டு விட்டு அந்த ஜோடி போகிறார்கள்.


அங்கு காத்திருக்கும் இன்னொருவனிடம் இருந்து உணவைத் திருடித்தரும் மிஸ்டரின் வேடிக்கைகள் தொடருகின்றன. சிறுவனை சிரிக்க வைக்க டாப் டான்ஸ் ஆடுகிறார். வழியில் போகும் வண்டியை நிப்பாட்ட பார்வையற்றவராக நடிக்கிறார். எதுவும் சரிப்பட மாட்டேன் என்கிறது. அன்றிரவு நல்ல மழை பெய்கிறது. சிறுவன் தன் தாயின் படத்தை மிஸ்டரிடம் காட்டி தான் அவளைப் பார்த்ததே இல்லை என்கிறான். அவனும் தன்னைப் போலத்தான் என்று உணருகிறார் மிஸ்டர். அடுத்த நாள் ஒரு நாடோடி எழுத்தாளனைச் சந்திக்கிறார்கள். அவன் மாசோவின் ஊரில் அவர்களை விட்டுப்போகிறான்.

மாசோவின் அம்மாவைத் தேடி செல்லும் மிஸ்டர் அவளுக்கு வேறொரு குடும்பம் இருப்பதைத் தெரிந்து கொள்ளுகிறார். அவளை மாசோவும் பார்த்து விடுகிறான். ஆனால் அவள் வேறு யாரோ என்று சமாதானம் சொல்லி மிஸ்டர் மாசோவை அழைத்துப் போகிறார். மனமுடைந்து கிடக்கும் மாசோவைத் தேற்ற அவருக்கு வழி தெரியவில்லை. பாதையில் மோட்டர் பைக்கில் பயணப்படும் இருவரை சந்திக்கிறார். அவர்களை மிரட்டி ஒரு மணியை வாங்கிக் கொண்டுவந்து மாசோவிடம் தருகிறார். துயர காலங்களில் மணியை ஆட்டினால் தேவதைகள் வருமென மாசோவிடம் ஆறுதல் சொல்லுகிறார்.

பக்கத்தில் நடக்கும் திருவிழாவுக்கு சிறுவனைக் கூட்டிக்கொண்டு போகிறார் மிஸ்டர். அவனைச் சிரிக்க வைப்பதற்காக கடைக்கார்களிடம் வம்பு செய்கிறார். அவன் தன்னுடைய ஆட்களோடு வந்து மிஸ்டரை அடித்துப் போடுகிறான். படியில் வழுக்கி விழுந்ததாக அவர் மாசோவிடம் பொய் சொல்கிறார். இரவு நேரத்தில் பூட்டிக் கிடக்கும் மருந்துக் கடையைத்தேடி மருந்து வாங்கி வந்து மாசோ அவருக்கு உதவுகிறான். இருவருக்கள்ளும் ஒரு அணுக்கம் உண்டாகிறது.

வீட்டுக்குத் திரும்புவதற்கான பயணம் ஆரம்பிக்கிறது. வழியில் அந்த நாடோடி எழுத்தாளனும், பைக்கில் வந்த இரண்டு பயணிகளும் இவர்களைச் சந்திக்கிறார்கள். சிறுவனை குஷிப்படுத்த அங்கேயே சில நாட்கள் கேம்ப் போட அனைவரும் முடிவு செய்கிறார்கள். தாயை மறந்து சிறுவன் அவர்களோடு விளையாடத் துவங்குகிறான். அதே வேளையில் பைக்கில் வந்தவர்களில் ஒருவனை அழைத்துக் கொண்டு தன் தாய் தங்கி இருக்கும் மனநல விடுதிக்குப் போகிறார் மிஸ்டர். ஆனால் அவளைப் பார்க்காமலே திரும்பி வந்து விடுகிறார்.

பாரம்பரிய விளையாட்டுகளை சிறுவனோடு சேர்ந்து அனைவரும் விளையாடுகிறார்கள். பயங்கரமான கொண்டாட்டத்தோடு எந்தவிதமான நெருக்கடியும் இல்லாத கணங்களை அவர்கள் வெகுவாக ரசிக்கிறார்கள். கோடை முடிவடையும் நேரம். முதலில் பைக்கில் வந்தவர்கள் விடைபெற்றுக் கொள்கிறார்கள். டோக்கியோவில் மிஸ்டரையும் சிறுவனையும் இறக்கிவிட்டு எழுத்தாளனும் கிளம்புகிறான். தாங்களும் பிரிய வேண்டிய நேரம் வந்து விட்டதென சொல்லும் மிஸ்டர் மீண்டும் ஒருமுறை இதேபோல போகலாமெனவும் சொல்லுகிறார். நன்றி சொல்லும் மாசோவிடம் பாட்டியை பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு மிஸ்டர் கிளம்புகிறார். திடீரென மாசோ அவருடைய பெயரென்ன என்று கேட்கிறான். அவர் சிரித்தபடியே சொல்கிறார்.. ”கிகுஜிரோ”.


மாசோ சந்தோஷமாக வீட்டை நோக்கி ஓடி வருவதோடுதான் படம் ஆரம்பிக்கிறது. மொத்தப்படமும் மாசோவின் டைரியில் இருக்கும் படங்களின் வாயிலாக ஃப்ளாஷ்பேக் முறையில் சொல்லப்படுகிறது. ஒரு பயணத்தின் மூலம் வெவ்வேறு மனிதர்களையும் அவர்களின் குணாதிசயங்களையும் படம் பேசிப் போகிறது. அவர்களில் நிறைய பேர் நல்லவர்களாகவே இருக்கிறார்கள். மொத்தக்கதையிலும் ஒரு மெல்லிய சோகம் இழையோடினாலும் எங்கும் அது வெளிப்படுவதில்லை. முழுக்க முழுக்க நகைச்சுவையாகவே எடுக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக மிஸ்டரின் உடல்மொழி அட்டகாசம். ஆணி ஒன்றை வைத்து ஒரு கார் பாலத்தில் இருந்து கீழே விழும் காட்சியில் விழுந்து விழுந்து சிரித்தேன்.

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்தோடு நாம் ஒன்றிப்போவதற்கு பெரிதும் துணை புரிகின்றன. படத்தில் நடித்திருக்கும் எல்லோருமே கேமிரா இருப்பதே தெரியாத அளவுக்கு இயல்பாக நடித்திருக்கிறார்கள். கிகுஜிரோவாக நடித்திருப்பவர்தான் படத்தின் இயக்குனர் டகேஷி கிடானோ. ஒரு கட்டுக்குள் அடங்காததாக இன்னதென்று சொல்ல முடியாததாக கிகுஜிரோவின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. தனக்கு உதவும் மக்களையும் அவர் திட்டிக்கொண்டே இருக்கிறார். யாரைப் பற்றியும் தனக்கு அக்கறை இல்லை என்று காட்டிக்கொண்டாலும் எல்லாரும் தன்னை கவனிக்க வேண்டும் என்றும் விரும்புகிறார். கடைசியாக அவருக்கும் மாசோவுக்கும் ஓர் இணக்கம் உண்டாகும் இடத்திலும் தன் தாயைப் பார்க்கப் போகுமிடத்திலும் மனிதர் அசரடிக்கிறார்.

பொதுவாக கிடானோவின் படங்கள் அதீத வன்முறை கொண்டதாகவே இருக்குமாம். அதற்கு நேர்மாறாக தொலைந்து போன சம்பிரதாயங்களையும் அன்பையும் பற்றி விரிவாகப் பேசுகிறது கிகுஜிரோ. ஜப்பானில் பல விருதுகளை வென்ற இந்தப்படம் 1999இல் கேன்ஸ் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருதுக்கான போட்டியிலும் கலந்து கொண்டது.

மேலதிகத் தகவல்களுக்கு நன்றி - விக்கிப்பீடியா

November 26, 2010

நந்தலாலா - திரைப்பார்வை

இதுதான் சினிமா. சினிமா என்பது மொழியானால் இதுவே சினிமா. சினிமாவுக்கு ஒரு இலக்கணம் இருப்பது உண்மையானால் தமிழ்ச் சினிமாவில் இருந்து இதனை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் சினிமா ரசிகனுக்கும் இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்..! உலகச் சினிமாவில் தமிழ் மொழியின் கீழ் இடம் பிடித்திருக்கும் பெருமிதமானத் திரைப்படம் இது..! இயக்கம் அற்புதம் என்பதற்கு உதாரணம் காட்ட வேண்டுமெனில் படத்தின் அத்தனை ஷாட்டுகளையும் சொல்லியாக வேண்டும்.. அப்படித்தான் இருக்கிறது..


மனநல மருத்துவமனை கேரக்டர்கள், உடல் ஊனமுற்றவர், ஸ்னிக்தா, குண்டர்கள், தோப்புக்குச் சொந்தக்காரர், மாட்டு வண்டி ஓட்டுபவர், போலீஸ் இன்ஸ்பெக்டர்.. அம்மாவைத் தேடிப் போகும்போது முதலில் கதவைத் திறந்து முகத்தில் அடித்தாற்போல் இல்லை என்று சொல்லி கதவை மூடும் பெண், சிறுவனின் அம்மா, மிஷ்கினின் அண்ணன், டூவிலர் மெக்கானிக் கடை வைத்திருக்கும் அந்த குள்ளமான தம்பதிகள்.. பீர் பாட்டில் இளைஞர்கள்.. ஆங்கிலத்தில் சங்கடத்தைப் பகிர்ந்து கொள்ளும் புதுமணத் தம்பதிகள்.. என்று படத்தில் இருக்கும் அத்தனை பேருமே நடித்திருக்கிறார்கள் என்பது மிகச் சிறப்பான விஷயம்....


இப்படத்திற்கு மணி மகுடமென்றால் அது இளையராஜாவை தவிர வேறு யாரையும் சொல்ல முடியாது. மொட்டை கலக்கியிருக்கிறார். ஆரம்ப காட்சியில் சலசலக்கும் நீரின் ஓசையோடு ஆரம்பிக்கும் இவரது ராஜ்ஜியம் படத்தின் கடைசி காட்சி வரை அதுவும் ரோலிங் டைட்டில் முடியும் வரை கலங்கிய கண்களோடு தியேட்டரில் நிற்கும் ரசிகர்களே அதற்கு சாட்சி. பின்னணியிசை என்றால் என்ன என்பதை இன்றளவில் உயர் நிலையில் இருக்கும் இசையமைப்பாளர்களும் சரி, புதியவர்களுக்கும் சரி பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாய் எங்கு இசை ஒலிக்கக்கூடாது என்பது சரியாக புரிந்து மெளனத்தையே இசையாய் கொண்டு வந்திருக்கும் ராஜா கடைசி இருபது நிமிடங்கள் இசை ராஜாங்கமே நடத்தியிருக்கிறார்.



என்னால் அந்த கடைசி நிமிடங்களில் கண்ணீரை அடக்க முடியவில்லை. படத்தின் காட்சி ஏற்படுத்திய பாதிப்பை விட அதை இசையால் சந்தோஷமோ, துக்கமோ, எல்லா உணர்வுகளையும் மெல்ல மெல்ல ஸ்லோ பாய்சன் போல நம்முள் ஏற்றி.. போதையாய், உருக்கமாய், உணர்வுகளூடே பயணித்து கரைய வைத்திருக்கிறார். முக்கியமாய் அகியின் அம்மா மிஷ்கினிடம் பேசும் வசனமேயில்லாத சிங்கிள் ஷாட் டாப் ஆங்கில் ஷாட்டில் ஒரு கதையை தன் இசையாலேயே சொல்லி கலங்கடித்திருக்கும் மொட்டை என் மொட்டை..


நாம் கடந்து செல்ல வேண்டுய இடம் அங்கேயே தான் இருக்கிறது . நாம் கடப்பதற்காக அது உருவாக்கப்படுவதில்லை. கடந்து போன பின்னும் அது அங்கேயே தான் இருக்க போகிறது. நந்தலாலாவில் பெரும்பாலான காட்சியமைப்புகள் அப்படித்தான் இருப்பதாக எனக்குத் தோன்றியது. வெற்று ஃப்ரேம்முதலில் எஸ்டாபிளிஷ் செய்யப்படுகிறது. அதற்குள் பாத்திரங்கள் வருகிறார்கள். நிகழ்வு முடிந்தவுடன் அடுத்த காட்சியின் தளத்துக்கு சென்று விடுகிறார்கள். நிகழ்வு நடந்த களம் மீண்டும் நமக்கு வெறுமையாய் காட்டப்படுகிறது. காட்சியின் ஆரம்பத்திலும் , முடிவிலும் ஒரு Freeze இருந்து கொண்டேயிருக்கிறது . பார்வையாளனை காட்சியுடன் ஒன்ற வைக்கும் இந்த உத்தி தமிழுக்கு புதிதும் , மிக அவசியமும் கூட….. அஞ்சாதேயில் கூட இந்த யுக்தியை பயன்படுத்தியிருந்தார் மிஷ்கின் . பிரமாண்டம் என்பது கோடிகளை கொட்டுவதால் மட்டுமே வராது .


மகேஷ் முத்துசாமியின் கோணங்களும் , அசைவுகளும் முக்கியமாக ஷோல்டர் ஷாட்கள் பிரமிப்பை அல்ல. பாதிப்பை ஏற்படுத்துகிறது . அகன்ற மற்றும் உயர்நிலை கோணங்கள் மிஷ்கினின் காட்சியமைப்புக்கு பெரிய பலம். குறிப்பாக ஒரு பத்துக்கு பத்தடி அறையில் ஒரு டாப் ஆங்கிள் ஷாட் . வசனம் கிடையாது. பத்து பக்கங்களில் சொல்ல வேண்டியதை நமக்கு சொல்கிறது. சிறுவனின் அம்மாவை மிஷ்கின் சந்திக்கும் காட்சி அது . வேறு விவரணைகள் வேண்டாம். பார்த்து உணருங்கள். பார்வையாளனை தன் தோளில் தூக்கி கொண்டு காட்சிகளுக்குள் கொண்டு போகிறார் மகேஷ். ஹேட்ஸ் ஆஃப் டு யூ சார்.


நான் வேற என்னய்யா பண்றது? சொல்ல நினச்ச எல்லாத்தையும் இந்த மூணு பாவிகளும் அட்சரம் பிசகாம சொல்லியாச்சு. படத்துக்கு ஜீவன் சேர்ப்பது மூன்று மனிதர்கள். இளையராஜா, மகேஷ் முத்துசாமி, மிஷ்கின். படத்துல ரெண்டு மூணு இடத்துல என்னையும் மீறி அழுதுட்டேன். குறிப்பா ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கும் பாட்டு. படத்துல எனக்கு பிடிச்ச மூணு முக்கியமான காட்சிகள்:

--> பெராக்கு பார்த்துக்கிட்டுப் போய் சைக்கிள்ல கீழ விழற பொண்ணு. மிஷ்கின் அவ பாவாடையை லேசா உசத்த அந்தப்பொண்ணு அறையுறதும், அதை அவர் பொருட்படுத்தாம வலிக்குதான்னு கேட்டு எச்சி தொட்டு அப்பிட்டு இப்பக் குளுருதான்னு கேக்குற சீன்.. கிளாஸ். அதே பொண்ணு டிராக்டர் எடுத்துட்டு வந்து இவங்களைக் கொண்டு வந்து விட்டுட்டு, மிஷ்கினோட தோளுல சாஞ்சு அழுதுட்டு திரும்பிப்பார்க்காம போறது.. கவிதை.

--> ஹார்னைத் திருடி விட்டார் என்று மிஷ்கினை நாயடி அடிக்கும் லாரி டிரைவர், அவர் மனநிலை சரியில்லாதவர் என்று தெரிந்து அன்பு செல்லுத்துவதும் தொடரும் பாடலும்

--> அன்பு செலுத்தும் சிறுவனும் தன்னை மெண்டல் என்று சொல்லிவிட்டானே என மிஷ்கின் அழுது புலம்பும் இறுதிக்காட்சி

தன்னுடைய சோகத்தை ஸ்னிக்தா பகிர்ந்து கொள்ளும் காட்சியும், இளநி வெட்டும் முதியவர் காட்சிகளும் அருமை. கிட்டத்தட்ட படத்தில் வரும் எல்லாருமே நல்லவர்கள் என்பது அழகு. மனநிலை சரியில்லாத ஒருத்தரின் செயல்களைக் கிண்டல் செய்து விட்டார்கள் என ஒரு சிலர் வசைபாடக் கூடும். ஆனால் படம் சீராகப் பயணிக்க அந்த காட்சிகள்தான் இறுக்கத்தை தளர்த்துகின்றன.

கடைசியா மிஷ்கினுக்கு.. 1500 பக்கமெழுதி அதுல 150 பக்கம் எடுத்துப் பண்ணினதுதான் நந்தலாலான்னு எல்லாம் பினாத்திக்கிட்டு இருக்குறதா சொன்னாங்க. பாபா படத்துல ஒரு வசனம் வரும். தெரிந்தவன் பேசமாட்டான். தெரியாதவன் பேசாமல் இருக்க மாட்டான்.. அப்படின்னு. உங்க படம் உங்களுக்காகப் பேசட்டும். நீங்க பேசாதீங்க. "பூ"ன்னு ஒரு படம் வந்தது. அதுல டைட்டில் கார்டுல "தி ரோடு ஹோம்" படத்துக்கு நன்றின்னு ஸ்லைடு போட்டிருப்பாரு சசி. அந்த மனசு உங்களுக்கு ஏனில்லை மிஷ்கின். இந்தப் படத்துல "கிகுஜிரோ" பாதிப்பு இல்லைன்னு உங்களால மனசத் தொட்டு சொல்ல முடியுமா? நந்தலாலா நல்ல படம்தான். ஆனா நேர்மையான படம் இல்லை. இதை நீங்க உணர்ந்து அமைதியா இருந்தா போதும்.

மத்தபடி நந்தலாலா - தாலாட்டு. கண்டிப்பா தமிழ் சினிமால இதுக்குன்னு ஒரு பேர் இருக்கும்.


November 24, 2010

கீழக்குயில்குடியும் நாட்டார் கதைகளும்

கீழக்குயில்குடி - பசுமைநடை

கீழக்குயில்குடியில் இருக்கும் கீழவளவுமலை "சமணர்மலை" என்றுதான் அழைக்கபடுகிறது. மலை மீது ஏறிப் போவதற்கு படிகள் செதுக்கி இருக்கிறார்கள். ஆரம்பப் படிகளின் ஒரு ஓரமாக யானை உருவம் பொறிக்கப்பட்டு இருக்கிறது. இது எப்போது செதுக்கப்பட்டது என்று தெரியவில்லை. யானை "ஆசிவக" மதத்தின் குறியீடு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சற்றே சிரமப்பட்டு மலையேறிப் போனால் "பேச்சிப்பள்ளம்" என்ற இடத்தை அடைய முடிகிறது. இயக்கன் - இயக்கி என்பது யட்சியாக மாறி பின்பு பேச்சி என்றாகி இருக்கலாம். பள்ளமாக இருக்கும் சுனைப்பகுதி - அதை ஒட்டி இருக்கும் நீண்ட பாறைப்பகுதியில் தீர்த்தங்கரர்களின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகக் காணக் கிடைக்கின்றன.


பேச்சிப்பள்ளம்

முக்குடையுடன் இருப்பவர் மகாவீரர். தலைக்கு மேலே ஐந்து தலை நாகம் இருப்பது பார்சுவநாதர் எனவும் தலைக்கு மேல் எழுதலை நாகம் இருப்பது கோமதிநாதர் என்றும் சொல்கிறார்கள். பார்சுவனாதரின் இயக்கிதான் பத்மாவதி. ஒரு முறை அவர் தவத்தில் இருக்கும்போது கமடன் என்கிற அரக்கன் அவருக்குத் தீங்கு செய்ய முற்படுகிறான். ஆபத்திலிருந்து காப்பதற்காக பார்சுவனாதரின் இயக்கனான தனந்தறேயன் ஐந்து தலை நாக வடிவில் வந்து காவல் செய்வதாகவும், மற்றொரு இயக்கியான பத்மாவதி சிங்கம் மீதேறிச் சென்று கமடனோடு போர் புரிந்ததாகவும் (செட்டிப்புடவில் இருக்கும் சிற்பம்) இந்த புடைப்புச் சிற்பங்கள் மூலமாக அனுமானிக்க முடிகிறது.


அச்சநந்தி கல்வெட்டு

இங்கே பேச்சிப்பள்ளத்தில் மிக முக்கியமானதொரு கல்வெட்டும் காணக்கிடைக்கிறது. “ஸ்ரீஅச்சநந்தியின் தாயார் செய்வித்த திருமேனிஎன்னும் பொருள்படும்படியாக வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு இருக்கும் இந்த கல்வெட்டு மிக முக்கியமான வரலாற்றுச் சான்றாகும். திருத்தக்கதேவர் எழுதிய சீவக சிந்தாமணியில் அச்சநந்தி என்பவர் சீவகனுடைய ஆசிரியராக வருபவர். சமணர் கழுவேற்றத்துக்குப் பிறகு எல்லா சமணப்பள்ளிக்கும் சென்று திருவுருவங்களை செதுக்கியதும் இவர்தான் என நம்பப்படிகிறது. தமிழ் இலக்கியமும் வரலாறும் ஒன்றொடொன்று பிணைந்து கிடைப்பதற்கான சான்றென இதைக் கொள்ளலாம்.


மாதேவி பெரும்பள்ளியின் மிச்சங்கள்

சிற்பங்களுக்கு சற்றுத் தள்ளி ஒரு பழங்காலக் கோவிலின் அடிவாரம் மட்டும் காணப்படுகிறது. இது ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் சமயப்பள்ளியாக விளங்கிய மாதேவி பள்ளி என்று சொல்கிறார்கள். மலையில் இன்னும் கொஞ்சம் மேலேறிப் போனால் வேறு சில மொழிகளில் எழுதப்பட்ட ஒரு கல்வெட்டும் காணக் கிடைக்கிறது. மலையிலிருந்து கீழிறங்கி வந்து நண்பர்கள் எல்லோரும் ஆலமர நிழலில் கூடினோம். பசுமை நடையின் இறுதி நிகழ்வாக நாட்டார்களின் வாய்வழி வழங்கும் கதைகள் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் பேரா.முத்தையா பேசினார்.

இன்றைக்கு வரலாற்றை ஒரே கோணத்தில் உற்றுநோக்கும் தவறு நிகழ்ந்து வருகிறது. வெறும் கல்வெட்டுகளையும் சங்கப்பாடல்களையும் மட்டும் வைத்து ஒரு இடத்தின் வரலாற்றை நாம் தீர்மானம் செய்து விடமுடியாது. அந்த இடத்துக்கு சம்பந்தப்பட்ட பொதுமக்கள் வாய்வழியாக சொல்லி வரும் விஷயங்களையும் நம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்து மரபின் ஆறு தரிசனங்கள் என்று குறிப்பிட்ட மதத்தை முன்னிருத்தும் வேலையை சிலர் செய்து வருகிறார்கள். உண்மையில் தமிழினத்தின் ஆதிமதம் சைவமாக இருக்க முடியாது. சைவத்துக்கு வெகு காலத்துக்கு முன்பே சமணமும் பவுத்தமும் நம்மண்ணில் வேரூன்றி விட்டன. இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டின்
ஆதிசமயம் என "ஆசீவகம்"தான் இருந்திருக்க வேண்டும். அந்த மதத்தின் மூன்று குருமார்களில் மிக முக்கியமானவர் பூர்ண காஷ்யபர்.

பிற சமயங்களின் ஊடுருவல் காரணமாக தமிழரின் வழிபாட்டு முறைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது. ஆசிவக பூர்ண காஷ்யபரின் மாறிய வடிவம்தான் இந்த மலையின் அடிவாரத்தில் கோவில் கொண்டிருக்கும் அய்யனார் என்று நம்பப்படுகிறது. இந்த அய்யனார் கோவிலின் முன்பிருக்கும் சிறு தாமரைக்குளத்துக்கு பூர்ண புஷ்கலை என்று பெயர். அய்யனாரின் இரு மனைவிகளின் பெயரும் பூரணி மற்றும் புஷ்கலை என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தக்குளம் அவ்வாறு அழைக்கப்படுகிறது. அதேபோல தமிழ்நாட்டின் கோவில்களில் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்படும் அய்யனார்கள் எல்லாருமே ஆசிவக குருமார்களாக இருக்கக்கூடும்.


திரு.முத்தையா

இந்த மலையின் மேல் ஒரு கருப்பண்ணசாமி கோயில் இருந்ததாகவும் சொல்கிறார்கள். கள்ளர் இன மக்கள் அந்த சாமியைத்தான் தங்கள் குலதெய்வமாக வணங்கி வந்தார்களாம். ஆங்கிலேயர்கள் ரேகைச்சட்டம் கொண்டுவந்த காலத்தில் கள்வர்கள் அடங்க மறுத்து பிரச்சினை செய்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் மடக்கிப் பிடிக்க வழி தெரியாத ஆங்கில அரசு கடைசியாக இந்தக்கோவிலுக்கு கள்வர்கள் கூட்டமாக சாமி கும்பிட வந்தபோதுதான் அவர்களை தந்திரமாகக் கைது பண்ணியிருக்கிறார்கள்.

கள்வர் கூட்டத்தில்கரடியப்பன்என்கிற வல்லாளகண்டன் ஒருவன் இருந்திருக்கிறான். அவமைக் கடைசிவரை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லையாம். அவனும் கடைசியில் தன்னுடைய பக்தியின் காரனமாகத்தான் சிக்கியிருக்கிறான். கோவில் திருப்பணிக்காக தினமும் தண்ணீர் கொண்டு வந்து தருபவனை குருக்களின் உதவியோடு பிடித்திருக்கிறார்கள். இவனுடைய சமாதி இப்போதும் கோவிலின் வாசலில் வேறு பேரில் காணக்கிடைக்கிறது. அவன் நினைவாகத்தான் அய்யனார் கோவிலின் உள்ளே தண்ணீர் சுமந்து வரும் ஒரு கரடியின் சிலை இருக்கிறது. இந்த ஊரைச் சுற்றி இருக்கும் மக்களில் பலருக்கு இவன் நினைவாக கரடி என்று வரும்படியான பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன.

மலை மீது இருந்த கருப்பண்ணன் கோவில் கீழே வந்ததெப்படி எனவும் ஒரு கதை இருக்கிறது. மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு கோபுரம். குதிரை மீது போய்க் கொண்டிருக்கும் வெள்ளைக்கார தௌரை தன்னை யாரோ கீழே தள்ளி விட்டதைப்போல விழுகிறான். திரும்பிப் பார்த்தால் யாரையும் காணவில்லை. மறுபடியும் குதிரையேற்றம் ஆனாலும் மீண்டும் கீழே விழுகிறான். தூரத்தில் யாரேனும் தெரிகிறார்களா என பைனாகுலர் கொண்டு பார்க்கும்போது கீழக்குயில்குடி மலை மீது நின்றபடி கருப்பு சிரித்துக் கொண்டிருந்தாராம். பயந்து போய் அந்த கோவில் குருக்களிடம் சொல்லி கோவிலைக் கீழே கொண்டுவர வேண்டும் என்கிறான். அவரோ பயப்படிகிறார். கோவிலுக்கு அருகில் இருக்கும் சிற்றூரில் நிலம் தருவதாகச் சொல்லி அவரை சம்மதிக்க வைக்கிறான். இதன் காரணமாகத்தான் இப்போது கூட வருடத்துக்கு ஒருமுறை கருப்பசாமி பக்கத்து சிற்றூர் கோவிலில் ஒரு மாதத்துக்கு எழுந்தருளுவதாக ஐதீகம்.

இப்படியாக ஒவ்வொரு ஊருக்கும் எத்தனையோ கதைகள் இருக்கும். இவை மறுவியிருக்கலாம், சற்றே மிகைப்படுத்தி சொல்லப்படிருக்கலாம் எனும்போதும் கண்டிபாக ஏதோவொரு முறையில் வரலாற்றை தனக்குள்ளே ஒளித்து வைத்துக் கொண்டிருக்கும். எனவே இந்தக் கதைகளையும் நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்என சொல்லி முடித்தார்.


உணவருந்தும் நண்பர்கள்

அதன் பிறகு நண்பர்கள் அனைவருக்கும் காலை உணவு பரிமாறப்பட்டது. சாப்பிட்டு விட்டு, அற்புதமானதொரு இடத்தை சுற்றிப் பார்த்த திருப்தியோடும், பல வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொண்ட மனநிறைவோடும் ஊருக்குத் திரும்பினோம். இந்த நிகழ்வை அருமையாக நடத்தி முடித்த நண்பர் .முத்துகிருஷ்ணனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

மேலும் படங்களைப் பார்க்க முத்துக்கிருஷ்ணனின் முகநூல் பக்கத்தை சொடுக்குங்கள்..

November 22, 2010

கீழக்குயில்குடி - பசுமைநடை

யானைமலைக்கு பசுமைநடை போய்வந்ததன் தொடர்ச்சியாக இந்த மாதம் எழுத்தாளர் .முத்துகிருஷ்ணன் மற்றும் நண்பர்களோடு சேர்ந்து நானும் நண்பர் ஸ்ரீதரும் கீழக்குயில்குடிக்குப் போயிருந்தோம். மதுரை நாகமலை புதுக்கோட்டையில் இருந்து இரண்டு கிமீ தொலைவில் இருக்கிறது கீழக்குயில்குடி. ஓங்கி உயர்ந்து நிற்கும் மலையின் அடிவாரத்தில் ஒரு அய்யனார் கோவில் இருக்கிறது. கோவிலின் முன்பாக இருக்கும் குளம் முழுதும் பாசி படர்ந்து நீண்டதொரு பச்சைப்போர்வை போல பார்க்கவே அத்தனை அழகாக இருக்கிறது.


குளத்துக்கு முன்பாக ஸ்ரீதர்

கோவிலின் இடது பக்கமாக நடந்து போய் சமணர் குகையை அடைந்தோம். மக்கள் இந்தப்பகுதியை “செட்டிப்புடவு” என்றழைக்கிறார்கள். புடவு - குகை அல்லது பள்ளம். இரண்டு பேர் தங்கக்கூடிய குகை. அதனுள்ளே எங்கிருந்தோ நீர் கசிந்து வருகிறது. குகையின் உள்ளே படுகைகள் ஏதுமில்லை. இங்கிருக்கும் மிகப்பெரிய தீர்த்தங்கரரின் சிற்பம் காது வளர்த்து செட்டியார் போலக் காட்சியளிப்பதால் இந்தப் பெயர் வந்திருக்கலாம் என்று தெரிகிறது. குகையின் உள்சுவரிலும் நான்கைந்து புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. சிற்பங்களின் கீழே தமிழ் வட்டெழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

முதலாவதாக அயோத்திதாசரைப் பற்றி பல ஆய்வுகள் செய்து வரும் பேரா.அலோஷியஸ் பேசினார். “புடைப்புச் சிற்பத்தின் கீழே இருக்ககூடிய எழுத்துகளை பிராம்மி எழுத்துகள் என்று சொல்கிறார்கள். ஆனால் அசோகர் காலத்து கல்வெட்டுகளில் இவை தம்மலிபி என்றே அழைக்கப்பட்டன. அப்படியானால் இந்த பெயர்மாற்றம் எப்படி உண்டானது? இதில் இருக்கக்கூடிய சமயம் மற்றும் சமூகம் சார்ந்த அரசியல் என்ன என்பதையும் நாம் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வரலாற்றை கூர்ந்து பல கோணங்களில் பார்த்து உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது”.



சமணர் குகை

அடுத்ததாக, இந்த பயணத்தில் கலந்து கொண்ட மிக முக்கியமான மனிதரான தொல்லியல் துறையைச் சேர்ந்த திரு.சாந்தலிங்கம் கீழக்குயில்குடி பற்றி தானறிந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.

“சமணர்கள் வாழ்ந்த இடங்கள் என மொத்தம் 94 இடங்கள் இதுவரை தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட அறுபது இடங்கள் தென் தமிழகத்தில்தான் இருக்கின்றன. காரணம் அவர்கள் நீர்நிலைகள், குறிப்பாக ஊற்றுகள் நிரம்பிய மலைப்பகுதிகளாகப் பார்த்து வாழ்ந்திருக்கிறார்கள். வடதமிழ்நாட்டில் மலைப்பகுதிகள் கம்மி என்பதால் வெகு குறைவாகவே அந்தப்பகுதிகளில் சமணப்படுகைகள் பற்றிய சரித்திரச்சான்றுகள் கிடைத்திருக்கின்றன. தென் தமிழ்நாட்டிலும் குறிப்பாக மதுரையைச் சுற்றித்தான் எண்பெருங்குன்றங்கள் என்று சொல்லப்படும் சமணமலைகள் காணப்படுகின்றன. அதில் முக்கியமானதான கீழக்குயில்குடி சமணர் படுகைகள் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

ஆரம்பத்தில் சமணர்கள் உருவ வழிபாடு என்னும் வழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. அப்படியானால் எப்போதிருந்து சிற்பவழிபாடு தோன்றியிருக்கக்கூடும்? வரலாறு என்று சரியாக நிரூபிக்கப்படாவிட்டாலும் பெரியபுராணத்தில் சொல்லப்படும் மிக முக்கியமான நிகழ்வு சமணர்களின் கழுவேற்றம். எட்டாம் நூற்றாண்டில் நடந்ததாக நம்பபப்டும் அந்த நிகழ்வுக்குப் பிறகு எஞ்சியிருந்த சமணர்கள் மதத்தை எப்படி அழிய விடாமல் பாதுகாப்பது எனத் தெரியாமலேயே கடைசியாக உருவ வழிபாட்டைக் கொண்டுவந்து இந்த சிற்பங்களை செய்யும் வழக்கத்தைக் கொண்டு வந்திருக்கலாம் எனத் தெரிகிறது. அதேபோல ஆரம்ப காலத்தில் சமண மதத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கிடையாது. மற்ற மதங்களை எதிர்கொள்ள வேண்டி சமணர்கள் தங்களைத் தாங்களே மறுஉருவாக்கம் செய்து கொள்ள வேண்டியே பின்பு பெண்களும் மதரீதியாக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.



மகாவீரரின் பிரமாண்டமான புடைப்புச் சிற்பம்

மேலே இருக்கும் சிற்பம் சமணர்களின் 24 ஆவது தீர்த்தங்கரரான மகாவீரருடையது. இருபுறமும் சாமரம் வீசிக்கொண்டு இருப்பவர்கள் அவருக்கு உதவும் இயக்கர்கள். மேலே கந்தர்வர்கள் உருவமும் இருக்கிறது. அவருடைய தலைக்கு மேலே இருப்பது முக்குடை. சமணர்களின் மூன்று முக்கிய கொள்கைகளான நற்செயல்கள், நல்லெண்ணங்கள், மற்றும் நல்ல விஷயங்களுக்கான பார்வை என்கிற மூன்றையும் அந்த குடை நிறுவுகிறது. அவர் அமர்ந்திருக்கும் ஆசனத்தை மூன்று சிங்கங்கள் தாங்கிப் பிடிக்கின்றன. சமணர்கள் சிங்கத்தை தங்கள் மதத்துக்கான அடையாளமாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. சிலைக்கு கீழிருக்கும் வட்டெழுத்துகள் இந்த சமணர் குகையை செய்வித்தவன் என திருக்காட்டாம்பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீவல்லபன் எனச் சொல்லுகின்றன.

அடுத்ததாக குகைக்கு உள்ளிருக்கும் சிற்பங்களுக்கு வருவோம். இங்கே தீர்த்தங்கரர்களின் சிலையோடு கூடவே இரண்டு பெண்தெய்வங்களின் சிலைகளும் இருக்கின்றன. அமைதியாக பீடத்தின் மீது அமர்ந்திருப்பது அம்பிகா- மாகவீரருக்கான இயக்கி, அதாவது உதவியாளர். இன்னொரு சிற்பம் சிங்கத்தின் மீதமர்ந்து யானை மீதிருக்கும் மற்றவனை எதிர்த்துப் போரிடுவது போல உள்ளது. இங்கே சிங்கம் என்பது சமண மதத்தின் குறியீடாகவும், யானை என்பது மற்றொரு பழமையான மதமான “ஆசிவகம்” என்பதின் குறியீடு எனக் கொள்ளலாம். அப்படியில்லாமல் இந்தப் பெண் பத்மாவதியாக இருக்கக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது . பத்மாவதிதான் 23 ஆவது தீர்த்தங்கரரான “பார்சுவனாதரின்” இயக்கி.



குகையின் உட்புறத்திலிருக்கும் சிற்பங்கள்

எதற்காக பத்மாவதி சண்டை போட வேண்டும்? கீழக்குயில்குடியில் வேறென்ன சமண சிற்பங்கள் இருக்கின்றன? இந்த மலை பற்றிய நாட்டார்கதைகள் தான் எத்தனை எத்தனை? எல்லாம் தொடரும் இடுகையில்...

கீழக்குயில்குடி பற்றிய நண்பர் ஸ்ரீதரின் இடுகையை வாசிக்க இங்கே சொடுக்குங்கள்..

November 20, 2010

மூர்த்தியும் மேட்டர் புத்தகங்களும்

”ஏய்யா.. தங்கம்.. கொஞ்சம் எந்திரிய்யா..”

மூர்த்தி புரண்டு படுத்தான்.

“போங்கம்மா.. காலங்கார்த்தால மனுஷனத் தூங்க விடாம நொச்சு பண்ணிக்கிட்டு..”

வாரயிறுதி நாட்களில் மூர்த்திக்கு காலை என்பது பதினோரு மணிக்குத்தான் விடியும். அதற்கு முன்பான எல்லா நேரமுமே அவனுக்கு அதிகாலைதான்.

“ஒரே ஒரு நிமிஷம்ப்பா.. அம்மா கேக்குறதுக்கு பதில் சொல்லிட்டு தூங்கு சாமி.. நம்ம வீட்டுக்குள்ள கண்ட கண்ட அசிங்கமான புத்தகம்லாம் கிடக்குது. நீ ஏதும் கொண்டு வந்தியாப்பா?”

அவன் போர்வையை இழுத்து மூடிக்கொண்டு எரிச்சலாக சொன்னான்.

“எனக்கு ஒரு வெங்காயப் புத்தகமும் தெரியாது. தூங்க விடுங்கம்மா..”

அவன் எழுந்தபோது மணி பதினொண்ணரை. மெதுவாக நடந்து பின்கட்டுக்குப் போனவன் பேஸ்டை பிரஷ்ஷில் ஈசிக்கொண்டு முன்வாசலுக்கு வந்தான். அந்த நேரத்துக்கு அவன் வாயில் பிரஷ்ஷோடு நிற்பது அந்தக் காலனிவாசிகளுக்கு பழகிப்போன ஒன்று. தண்ணி எடுத்துக் கொண்டு போன பக்கத்து வீட்டு நர்ஸ் ஃபிகர் இவனைப் பார்த்து சிரித்துப் போனது.

இவனும் பதிலுக்கு சிரித்து வைத்தபோதுதான் அது சரக்கென்று ஞாபகம் வந்தது. வீட்டுக்குள் ஏதோ புத்தகம் கிடப்பதாக அம்மா காலையில் எழுப்பினார்களே? அதுவாகத்தான் இருக்குமோ? அவனுக்கு வியர்க்க ஆரம்பித்தது.

மூர்த்திக்கு சென்னையில் பொறியியல் கல்லூரிப்படிப்பு. அப்பாவுக்கு ரயில்வே வேலை என்பதால் ஓசி பாஸ். வார இறுதியில் மதுரைக்கு ஓடிவந்து விடுவான். கல்லூரியில் படிக்கும் தன்னுடைய நண்பர்கள் கேட்டார்களே என அலையோ அலையென அலைந்து கடைசியாக மது தியேட்டர் வாசலில் இரண்டு சீன் புத்தகங்களை வாங்கி இருந்தான். மறுநாள் ஊருக்குக் கிளம்பும்வரை பத்திரமாக இருக்கட்டும் என்று அவற்றை பீரோவின் மேலே ஒளித்து வைத்திருந்தான். அதைத்தான் பூனையா பெருச்சாளியோ தட்டி விட்டிருக்க வேண்டும்.

என்ன சொல்லி அம்மாவை சமாளிப்பெதன யோசித்துக் கொண்டே உள்ளே போனவன் தொட்டியிலிருந்து தண்ணியை மோந்து வாய் கொப்பளிக்கத் தொடங்கினான். அம்மா அடுப்படியில் சமைத்துக் கொண்டிருந்தார்.

"தோசை ஊத்தட்டுமாய்யா.."

"உம்ம்..உம்ம்..”

கொடியிலிருந்த துண்டில் முகத்தை துடைத்துக்கொண்டே மெதுவாகக் கேட்டான்.

“என்னமோ தூங்கும்போது புத்தகம் அது இதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்க? என்னம்மா?”

“நெஜமாவே உனக்கு ஒண்ணும் தெரியாதா?”

“சத்தியமா இல்லம்மா..”

“ரெண்டு புத்தகம்யா.. அசிங்க அசிங்கமா ஆம்பள பொம்பள படம் போட்டது.. கண்டமேனிக்கு எழுதி இருந்துச்சு. நம்ம வீட்டு உள்ரூம்ல கிடக்கு. எனக்கு ஒரு நிமிஷம் உடம்பெல்லாம் பதறிப் போச்சு. நம்ம பையனா இப்படின்னு? இப்போ நீ இல்லைன்னு சொன்னபிறகுதான் நிம்மதியா இருக்கு..”

எதுவும் பேசமுடியாமல் மென்று முழுங்கியபடி மூர்த்தி வீட்டுக்குள் திரும்பினான். பின்னாடி அம்மா சொல்வது காதில் விழுந்தது.

”காலம் போன காலத்துல உங்க அப்பாவுக்கு ஏந்தான் புத்தி இப்படிப் போகுதோ? இன்னைக்கு அந்த மனுஷன் வீட்டுக்கு வரட்டும் பேசிக்கிறேன்...”

மூர்த்திக்கு யாரோ அடிவயிற்றில் கத்தியை சொருகினாற்போல இருந்தது. தன் மீது அம்மா வைத்திருக்கும் நம்பிக்கை ஒரு பக்கம் என்றால் எந்தத் தப்புமே செய்யாத அப்பாவைப் போய் அம்மா சந்தேகப்பட வைத்து விட்டோமே என்ற குற்றவுணர்வு ஒரு புறம். அவனுக்கு தன்மீதே கோபம் கோபமாக வந்தது.

வெகு நேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவனாக மீண்டும் அடுப்படிக்குப் போனான்.

"அம்மா.."

"என்னய்யா.."

"அந்த புத்தகங்களை உள்ளே கொண்டு வந்து வச்சது நாந்தாம்மா.. பசங்க கேட்டாங்கன்னு.. "

அம்மா வேலையை ஒரு நிமிஷம் நிப்பாட்டிவிட்டு அவனைப் பார்த்தார். பிறகு சகஜமாகி வேலையைத் தொடர ஆரம்பித்தார். அவருடைய அமைதியின் அர்த்தம் மூர்த்திக்குப் புரியவில்லை.

"ஏதாவது திட்டுறதுன்னா திட்டிருங்கம்மா.. ஆனா இப்படி அமைதியா இருக்காதீங்க.."

கிட்டத்தட்ட அழுதுவிடுபவன் போல சொன்னான். அம்மா வேலையை நிப்பாட்டிவிட்டு அவனருகே வந்து நின்றார்.

"தம்பி.. நாம கறி சாப்புடுறோம்னு எல்லோருக்குமே தெரியும். அதுக்காக யாரும் எலும்ப மாலையா கோர்த்து போட்டுக்கிறோமா? இல்லையே.. அதுமாதிரித்தான் இதுவும்.. சாப்பிடுற மாதிரி.. தூங்குற மாதிரி.. செக்சும் ஒரு பீலிங்க்தான்.. அது எல்லார்கிட்டயும் இருக்கு.. அது தெரிஞ்சுக்கிற காலத்துல தானாத் தெரிஞ்சிக்கணும். அத விட்டுட்டு இப்படி பச்சை பச்சையா புத்தகம் எல்லாம் எதுக்குப்பா? நீ படிச்சவன். புரிஞ்சுக்குவன்னு நினைக்குறேன்.."

".."

"தோசை ஊத்திட்டேன். வா சாப்பிடு.."

வெகு கண்ணியமாகவும் பொறுமையாகவும் அம்மாவால் அதைத் தாண்டிப் போக முடிந்ததென்பது மூர்த்திக்கு ஆச்சரியமாகவும், கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது. தெளிந்தவனாக சாப்பிட உட்கார்ந்தான்.

அதற்குப் பிறகு அவன் வீட்டுக்கு மேட்டர் புத்தகங்களை கொண்டு போவதேயில்லை.

November 17, 2010

இரத்தப்படலம் - புதையல் பாதை (2)

தன்னைத்தேடி - ஒரு புதிர்ப்பயணம் (1)

இரத்தப்படலம் - தமிழ் காமிக்ஸ்களின் மகுடம் என்று சொன்னால் தவறே கிடையாது. 850 பக்கங்களில் ஒரு காமிக்ஸ் புத்தகம் என்பது இந்திய காமிக்ஸ் வரலாற்றில் யாருமே செய்திராத விஷயம். ஏன்.. உலகில் வேறு எங்கேனும் கூட இப்படி ஒரு முயற்சி நடந்திருக்குமா என்பதும் சந்தேகமே.



(இந்தத் தொடரை காமிக்ஸ் பற்றிய விரிந்த பார்வையாக எழுதலாம் என்றிருந்தேன். ஆனால் வேறு சில காரணங்களுக்காக அதை எழுத முடியாத சூழ்நிலை. எனவே நான் லயன் காமிக்ஸ் அலுவலகம் போய் வந்த அனுபவத்தை மட்டுமே இங்கு பதிவு செய்திருக்கிறேன்..)

இரண்டு வருடங்களுக்கு முன்பு "லயன் ஜாலி ஸ்பெஷலில்" இந்தப் புத்தகம் பற்றி ஆசிரியர் எஸ்.விஜயன் எழுதியபோது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நான் விபரம் தெரிந்து காமிக்ஸ் வாசிக்க ஆரம்பித்திருந்த நேரத்தில் இரத்தப்படலம் ஐந்தாறு பாகங்கள் வந்து விட்டிருந்தது. ஆரம்பம் தெரியாமல் எப்படி வாசிப்பதென அந்த தொடரில் வந்த கதைகளை எல்லாம் வாங்காமலே தவிர்த்து வந்தேன். இப்போது அது அத்தனையும் ஒரே தொகுப்பில் வருகிறது என்றவுடன் ஜாக்பாட் அடித்த மாதிரி மனசுக்கு ரொம்ப குஷியாகிப் போனது. ரொம்பப் பெரிய முயற்சி என்பதால் இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் - முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் என்று அப்போதே தெளிவாக எழுதி இருந்தார் ஆசிரியர். ஆனால் எனக்கு வழக்கம் போல மப்பு. இப்படி சொல்லிவிட்டு எப்படியும் புத்தகம் கடைக்கு வந்து விடும், வாங்கிக் கொள்ளலாம் என்று சோம்பேறித்தனம்.

இரண்டு வருட காத்திருப்புக்குப் பிறகு கடைசியாக இந்தத் தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பு புத்தகம் வெளிவந்துவிட்டதை தெரிந்தவுடன் வீட்டுக்கு அருகிலிருக்கும் கடைக்காரரை நொச்சு நொச்சென்று புடுங்கி எடுத்து விட்டேன். ”ஏம்ப்பா.. வந்தா விக்காம நான் தலையில கட்டிக்கிட்டா அழப்போறேன்என்று ஒரு கட்டத்தில் அவரும் பொறுமையிழந்து காச் மூச்சென்று கத்த ஆரம்பித்து விட்டார். இந்த நிலையில்தான் இணையத்தில் நண்பர் அ.கொ.தீ.எழுதிய பதிவை வாசிக்க நேர்ந்தது. புத்தகம் நேரடி விற்பனைக்கு மட்டுமே - கடைகளுக்கு வராது என்பது எனக்குப் பேரிடி. முன்பதிவுக்கு அனுப்பப்பட்டு விட்ட புத்தகங்கள் தவிர ரொம்பக் கொஞ்சமே பாக்கி இருக்கின்றன.. எனவே முந்திக் கொள்ளுங்கள் என்ற .கொ.தீ. நண்பரின் பதிவு எனக்குள் சைரன் அடித்துப்போனது. வேறு வழியே இல்லை, நேரடியாக சிவகாசிக்கே போய்விடலாம் என்று முடிவு செய்து விட்டேன்.

போன திங்களன்று மாலை கல்லூரி முடிந்தவுடன் நம் பைக்கே நமக்குதவி என்று கிளம்பியாகி விட்டது. அதற்குப் பிறகுதான் காத்திருந்தது ஆப்பு. திருமங்கலம் தாண்டி விருதுநகர் வரை பேய்மழை. நெடுஞ்சாலையில் ஒதுங்கி நிற்கவும் வழியில்லை. பொதுவில் என் நண்பர்கள் என்னை கேலி செய்ய பூனை என்று அழைப்பார்கள். காரணம், எனக்கு மழையில் நனைவது அவ்வளவாக சரிப்பட்டு வராது. மழை ரெண்டு போட்டு தூறல் போட்டால் கூட ஓடிப்போய் ஓரமாக நின்று கொள்வேன். அந்த பாவத்துக்கு என் வாழ்நாளில் என்றுமே நனையாத அளவுக்கு அன்றுதான் மழையில் நனைந்தேன். தொப்பமாய் நனைந்தபடி விருதுநகரை அடைந்தபோது மணி ஆறாகி விட்டிருந்தது. அங்கிருந்து லயன் ஆபிசுக்கு போன் போட்டால் அடுத்த அடி. ஏழு மணிக்குள் வராவிட்டால் புத்தகத்தை வாங்க முடியாது என்று சொல்லி விட்டார்கள். கிழிஞ்சது போ என்ற வெறி பிடித்தமாதிரி வண்டியை ஓட்டிக்கொண்டு சிவகாசி போய் சேர்ந்தபோது மணி ஏழாக ஐந்து நிமிடம் இருந்தது.

வெகு நாட்களாக என் கற்பனையில் இப்படி இருக்கும் அப்படி இருக்கும் என எண்ணிக் கொண்டிருந்த லயன் ஆபிஸின் முன் நிற்கிறேன். ரொம்ப சிம்பிளான சின்னதாக இரண்டு அறைகள் கொண்ட அலுவலகம். நான் போனபோது ஆசிரியர் அங்கே இல்லை. புத்தகம் வாங்க மதுரையில் இருந்து வண்டியிலேயே வந்தேன் என்றவுடன் அங்கிருந்தவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. ”இந்த மாதிரியான நேரங்கள்லதான் சார் நாம கஷ்டப்படுறதுக்கான பலன் கிடைக்கிற மாதிரி உணர்வுஎன்று சொல்லிக்கொண்டே புத்தக அறைக்கு அழைத்துச் சென்றார் ஊழியர் ஒருவர். அலுவலகத்திற்கு எதிர்த்தாற்போல் அச்சகம். அதன் மாடியில் காமிக்ஸ் புத்தகங்களின் பொக்கிஷ அறை.

உள்ளே நுழையும்போதே மேஜை மேல் அடுக்கப்பட்டு இருந்த இரத்தப்படலம் கண்களில் தட்டுப்பட்டது. சிறு குழந்தையை வருடிக் கொடுப்பதுபோல அந்த புத்தகத்தின் முகப்பை தடவிப் பார்த்தபோது எனக்கு எழுந்த உணர்வுகளையும் சந்தோஷத்தையும் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. வாங்க வருபவர்களின் வசதிக்காக தங்களிடம் மீதம் இருக்கும் பிரதிகளை எல்லாம் லயன், முத்து, காமிக்ஸ் கிளாசிக்ஸ் என அழகாக பிரித்து அடுக்கி வைத்திருக்கிறார்கள். என்னிடம் இருக்கும் புத்தகங்களின் பட்டியலை எழுதிக் கொண்டு போயிருந்தேன். அதை சரிபார்த்து இல்லாத புத்தகங்களை எல்லாம் பொறுக்கிக் கொண்டேன். கிட்டத்தட்ட அறுபது புத்தகங்கள். செம வேட்டை. நான் புத்தகங்களைத் தேடிக் கொண்டிருந்த நேரத்தில் பல போன் கால்கள் புத்தகம் பற்றி கேட்டு வந்து கொண்டேயிருந்தன என்பது மனதுக்கு கொஞ்சம் இதமாக இருந்தது.

சந்தோஷங்களை பகிர்ந்து கொள்ளும் இதே வேளையில் ஒரு சில வேதனைகளையும் சொல்ல வேண்டியிருக்கிறது. புத்தகங்கள் பிரசுரிப்பதில் இருக்கும் பிரச்சினைகளைப் பற்றி விஜயன் ஹாட்லைனில் எழுதும்போது தெரியாத வலியும் வேதனையும் எனக்கு நேரில் எளிதாகப் புரிந்து போனது. விற்காத புத்தகங்களை எல்லாம் அங்கே கட்டு கட்டாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் இருக்கும் போல - அத்தனை புத்தகங்கள். கேப்டன் டைகர் புத்தகங்கள் கூட புதுமெருகு குறையாமல் அப்படியே கிடைக்கின்றன. இந்தப் புத்தகங்களை என்ன பண்ணுவீங்க என்பதற்கு வேதனையான ஒரு சிரிப்புதான் பதில். பார்க்கும்போதே அடிவயிற்றில் ஏதோ சுரீரென்றொரு வலியுண்டாக்கும் உணர்வு.

லயன் ஊழியர் ஒருவரோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். "மொத்தம் 2500 புக் அடிச்சிருக்கோம் சார். முன்பதிவு எப்படியும் 1000 ஆவது வரும்னு எதிர்பார்த்தோம். ஆனா வந்தது வெறும் 700 தான். அதுவே எங்களுக்கு ரொம்ப சங்கடமா போச்சு. அதனாலேயே இதழ் தயாரிப்பு கொஞ்சம் சுணங்கிப் போச்சு. ஏன்னா இதனால எங்களுக்கு லாபம் எதுவும் கிடையாது. இப்பக்கூட பார்த்தீங்கன்னா, இந்தப் புத்தகத்தோட அடக்க விலை நாங்க விக்கிற விலைய விட அதிகம். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி 200 ரூபான்னா சரி. ஆனா இப்போ இன்னும் வெல கூடிப்போச்சு. அதனால் நஷ்டத்துக்குத்தான் தர வண்டியிருக்கு. ஆசிரியர் இதத் தொழிலா பண்ணல. காமிக்ஸ் மேல இருக்குற காதல்னாலதான் இன்னும் நடத்திக்கிட்டு இருக்காரு. நீங்க அவருக்கு நன்றி சொல்லணும்னு நினச்சா, புக்க படிச்சுட்டு அவருக்கு ஒரு கடுதாசி போடுங்க. அதுதான் எங்களுக்கும் அவருக்கும் முக்கியமான விருது மாதிரி."

அவருக்கு நன்றி சொல்லிக் கிளம்பினேன். கையில் கனமாக இருந்த புத்தக பண்டிலைப் போலவே மனமும் கனத்து இருந்தது. இத்தனை கஷ்டங்களுக்கு நடுவேயும் பிடிவாதமாக காமிக்ஸ் என்னும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கும் எஸ்.விஜயனுக்கு ஒரு ராயல் சல்யூட்.

புத்தகம் பற்றி.. இரண்டே நாட்களில் படித்து விட்டேன். ஹாலிவுட் சினிமா தோற்றது போங்கள் - அத்தனை வேகம். கதையின் ஓட்டம் அட்டகாசம். ஓவியங்களும் பட்டையக் கிளப்புகின்றன. புத்தகத்தின் உள்ளேயே கதை ஆசிரியர், ஓவியர் மற்றும் XIII பற்றிய வேறு சில குறிப்புகளும் பார்க்கக் கிடைக்கின்றன. ஆகமொத்தத்தில் காமிக்ஸ் ரசிகர்களுக்கு பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.

உங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். இந்தப் புது வருடத்துக்கு உங்கள் நண்பர்களுக்கோ, உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கோ ஏதேனும் பரிசு தர விரும்பினால் இந்தப் புத்தகத்தை வாங்கிக் கொடுங்கள். அவர்கள் உங்களை என்றென்றும் மறக்க மாட்டாத ஒரு பரிசாக இது நிச்சயம் இருக்கும். காமிக்ஸ் என்னும் பாரம்பரியத்தைக் காப்பாற்ற கைகொடுங்கள் தோழர்களே..!!!

இரத்தப்படலம்
லயன் காமிக்ஸ் வெளியீடு
ரு.200/-

November 15, 2010

நெற்குஞ்சம் - தேன்மொழி

இரண்டு வருடங்களுக்கு முன்பு நண்பர் யாத்ரா மதுரை புத்தகத் திருவிழாவுக்கு வந்திருந்தார். அங்கே அவர் வாங்கிய பல கவிதைத் தொகுப்புகளில் "துறவி நண்டு"ம் இருந்தது (காலச்சுவடு வெளியீடு). தொகுப்பின் பெயர் வித்தியாசமாக இருக்கிறதே, அப்படி என்னதான் இருக்கிறது எனப் பார்க்கலாமே என்று படிக்க ஆரம்பித்து மண்டையில் இருக்கும் இச்ச சொச்ச முடியும் நட்டமாய் நட்டுக் கொண்டு நின்றதுதான் மிச்சம். சத்தியமாக ஒன்றுமே புரியவில்லை. இப்படியாகத்தான் கவிஞர் தேன்மொழி எனக்கு அறிமுகமானார். எனவே நண்பரொருவர் தேன்மொழியின் சிறுகதைத் தொகுப்பான "நெற்குஞ்சம்" நன்றாக இருப்பதாக சொல்லி வாசிக்கத் தந்தபோது மிரட்சியாக இருந்தது. எப்படி இருக்குமோ என்ற பயத்திலேயே நிறைய நாட்கள் வாசிக்காமலேயே வைத்திருந்தேன்.

புத்தகங்கள் வாசிப்பதற்கென ஒரு தனி மனநிலை வேண்டுமென்பதில் எனக்குத் தீவிர நம்பிக்கை உண்டு. வாசிப்பு என்பது ஒரு முழுமையான அனுபவமாக இருக்கும்போது, வாசிப்பவன் அந்த புத்தகத்தில் முழுவதுமாய் கரைந்து போகும் தருணங்கள் அற்புதமானவை. அப்படி வாசிக்கவே நான் ஆசைப்படுவேன். திடீரென நேற்று காலையில் எதையாவது ஆழ்ந்து வாசிக்க வேண்டும் என்கிற எண்ணம் உந்தித் தள்ள இந்தப் புத்தகத்தின் ஞாபகம் வந்தது. பொறுமையாக வாசிக்கலாம் என உட்கார்ந்தேன். எடுத்து வாசிக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே நான் செய்த தவறு புரிய ஆரம்பித்தது. ரொம்ப அழகான, மனதை அள்ளிச் செல்லக் கூடிய எளிமையான மொழி. எந்த ஒரு புத்தகத்தையும் இனிமேல் முன்முடிவோடு அணுகக் கூடாது என்பதை இந்தப் புத்தகம் எனக்கு சொல்லித் தந்திருக்கிறது.

நெற்குஞ்சம் - தேன்மொழியின் முதல் சிறுகதைத் தொகுப்பு. இதுவரை யாருமே சொல்லாத கதைகள், படுபயங்கரமான புதிய கதை சொல்லும் உத்திகள்.. இப்படியெல்லாம் இந்தத் தொகுதியில் எதுவும் இல்லை. எல்லாமே வெகு சாதாரணமான கதைகள். ஊர்ப்பெரியவர்களால் அசிங்கப்படும் பெண், காதலைச் சொல்ல மறந்த இருவரின் சந்திப்பு, தனக்கான அங்கீகாரத்தை தேடும் பெண்கள் என நாம் நன்கறிந்த கதைமாந்தர்கள்.. ஏற்கனவே எத்தனையோ பேர் பேசித் தீர்த்த கதைகள்தான். ஆனாலும் விவரணைகளாலும் தன் மொழியின் சாதுர்யத்தாலும் கவனம் ஈர்த்து நம்மை அசரடிக்கிறார் தேன்மொழி. வண்ணதாசனின் பட்டறையிலிருந்து வந்தவர் என்பதை எல்லாக் கதைகளுமே சொல்லிப் போகின்றன.

ஆசிரியர் தன் அனுபவங்களையும் பார்த்த விஷயங்களையும் கதைகளாக்கி இருப்பார் என்று தோன்றுகிறது. கிட்டத்தட்ட எல்லாக் கதைகளுமே தன்னிலையிலேயே சொல்லப்படுகின்றன. அதுவும் பெண்களின் பார்வையில்தான் சொல்லப்படுகின்றன. வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள்... இந்தப் புத்தகம் முழுதுமே ஒரு வார்த்தைகளின் கூடாரமாகத்தான் இருக்கிறது. இரவில் எங்கோ தூரத்தில் ஒலிக்கும் வயலின் இசையென, நிசப்தமாய் ஓடும் ஆற்றின் அமைதி போல, தவிப்பின்போது ஆறுதலாய் தடவிக் கொடுக்கும் கரங்கள் போல.. வார்த்தைகள் வாசிப்பவனை ஆற்றுப்படுத்துகின்றன.

இந்தத் தொகுப்பில் இருக்கும் மிகமுக்கியமான கதையென "தாழி" என்றொரு கதையைச் சொல்லலாம். சுனாமியில் காணாமல் போன மகளைத் தேடி வரும் பெரியவர், இறந்தவர்களின் போட்டோ ஆல்பம் மூலமாக அடையாளம் காட்டும் பணியைச் செய்யும் அரசு அலுவலர் என இரண்டே பாத்திரங்களைக் கொண்டு எழுதப்பட்ட கதை. அந்தப் பெண்ணின் போட்டோ எந்த இடத்திலும் இருந்து விடக் கூடாது என வேண்டிக் கொள்கிறார் அலுவலர். ஆனால் அந்தப் பெண் இறந்து போனதை உறுதி செய்யும் பெரியவரின் அழுகை இன்னும் கொடுமையாக "இப்படி அம்மணமா செத்து கிடக்காளே எம்மவ" எனக்கதறும்போது இயற்கையின் மீதான கடுங்கோபமும் ஆற்றாமையும் வாசிக்கும் நம்மையும் உக்கிரமாகத் தாக்குகிறது.

இன்னொரு முக்கியமான கதை பிணவறையில் ஊழியம் செய்து பிழைக்கும் ஆரோக்கியம் என்பவனைப் பற்றிய “நாவாய்ப்பறவை”. தனக்கானதொரு தனி உலகை சிருஷ்டித்துக் கொண்டு வாழ்பவன். உறவென யாருமே இல்லாதவனின் நிலை பற்றிய விவரணை மிக அருமையாக இந்தக் கதையில் வெளிப்பட்டு இருக்கிறது. இருந்தும் கதையின் கடைசியில் ஒலிக்கும் பிரச்சார தொனி தேவையற்றதாகவே எனக்குப் படுகிறது. இதைப்போலவே தனிமனுஷியான ஆயிஷாவின் வாழ்க்கையைப்பேசும் “மீன்கொத்திகள் வரும் நேரமு”ம் அருமையாக வந்திருக்கிறது. ஒழுக்கம் என்கிற விஷயத்தை மீறி ஒரு பெண்ணின் அகம்சார்ந்த தேடல் என்பதாக இந்தக் கதை விரிகிறது.

மாய யதார்த்த பாணியில் பயணிக்கிறது “பேச்சிமரம்”. தன்னுடைய எல்லாமுமாய் இருந்த ஒருத்தி பேச்சிமரவடிவில் (பனை) வாழ்வதாக நம்பும் பெரிவரைப் பற்றிய கதை. கதை சொல்லலில் மற்ற கதைகள் எல்லாம் நேர்க்கோட்டில் பயணிக்க இதுமட்டுமே முன்னும் பின்னுமாய் மாறிவரக்கூடிய கதை. தலைப்புக் கதையான “நெற்குஞ்சம்” ஒரு சின்னஞ்சிறிய குருவியின் மரணம் நமக்குள் ஏற்படுத்தக்கூடிய குற்றவுணர்வையும், தனிமையின் கொடுமையையும் பேசிப்போகிறது. கோவில் என்ற சம்பிரதாயமான இடத்தில் சந்தித்துக் கொள்ளும் இரண்டு முன்னாள் காதலர்களின் தவிப்பை அழகாக பதிவு செய்கிறது “நாகாபரணம்”.

மரணம், ஆண் பெண் இடையேயான உறவு என்பதைப்பேசும் கடல்கோள், நாகதாளி இரண்டுமே எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஒரே மாதிரியான களம், பலமுறை பேசி சலித்த விஷயங்கள் என்பதால் அவை என்னை பெரிதாக ஈர்க்கவில்லை. அதைப்போலத்தான் “நிலக்குடை”யும். வேலைக்காரப்பெண் - அவளை அடைய நினைக்கும் பெரிய வீட்டுக்காரர் என ரொம்பவே அரதப்பழசான கதை. இந்தத் தொகுப்பின் மிக மோசமான கதையென “மரப்பாச்சி மொழி”யை சொல்வேன். பெண்ணியம் என்கிற விஷயத்தை மிக நீண்ட பிரச்சாரத்தின் மூலமாக நிறுவ முயலும் இந்தக்கதையை தொகுப்பில் சேர்க்காமலே இருந்திருக்கலாம்.

இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதியிருக்கும் ரவிக்குமாருக்கு,

தனக்குப் பிடித்த படைப்பை கொண்டாடுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் யாரோடு ஒப்பிடுகிறோம், என்ன மாதிரியான இடத்தில் அதை வைக்கிறோம் என்பது ரொம்பவே முக்கியம. கடந்த பத்தாண்டுகளில் இது போல புத்தகம் வந்ததில்லை, புதுமைப்பித்தன் மரபில் வரும் கதை, ஜெர்மானிய லத்தின் அமெரிக்க கதைகளுக்கு ஈடாக.. இதெல்லாம் என்ன ஐயா? உங்களுக்கே ரொம்ப அதிகமாகத் தெரியவில்லையா? தட்டிக்கொடுங்கள். ஆனால் தலையில் தூக்கி வைத்து ஆடாதீர்கள். அதுவே அந்த படைப்பாளியின் வீழ்ச்சிக்கு காரணமாக மாறிவிடலாம். ஒரு இளம்படைப்பாளியை காலி பண்ண அவரை விமர்சனம்தான் பண்ண வேண்டும் என்கிற அவசியமில்லை. அதிகமான பாராட்டு, கவனிப்பு மற்றும் தகுதிக்கு மீறிய வியந்தோதுதலும் கண்டிப்பாக மனிதனை இல்லாமல் செய்து விடும். இதை நீங்கள் எதிர்காலத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள்.

கடைசியாக.. நான் இங்கே எந்தக்கதையின் வரிகளையும், நான் சிலாகித்த இடங்களையும் குறிப்பிட்டு எழுதவில்லை. மாறாக அவற்றின் கருவைப் பற்றி மட்டுமே சொல்லியிருக்கிறேன். காரணம்.. வெறுமனே தனித்தனியாக வரிகளை எடுத்து வாசிப்பதை விட மொத்தமாக வாசிக்கும்போது அவை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக உணரக்கூடும் என்பதாலேயே எழுதாமல் விடுகிறேன். அது சரியானதுதான் என்பதை நீங்கள் இந்த புத்தகத்தை வாசிக்கும்போது நிச்சயம் உணருவீர்கள். கதைகள் சொல்லப்பட்ட விதத்துக்காகவும் மொழியின் அழகியலுக்காகவும் கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகம்.

நெற்குஞ்சம் - தேன்மொழி
மணற்கேணி வெளியீடு
ரூ.90/-

November 11, 2010

தன்னைத்தேடி - ஒரு புதிர்ப்பயணம் (1)

புதையலைத் தேடிக் கிளம்பிய அவர்கள் வழியில் பல இன்னல்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இதுவரை யாருமே பயணம் செய்திராத பாதையில் பயணம் செய்யும் தைரியம் கொண்டு முன்னேறிச் சென்ற அவர்களை எதிர்நோக்கி கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஆபத்துகள் காத்துக் கிடந்தன. ஆள்விழுங்கி ஏரிகள், பயங்கரப் பிராணிகள், காற்றும் புக முடியாத அடர்கானகம், நரமாமிசம் தின்னும் காட்டுவாசிகள் என்று எக்கச்சக்க தடங்கல்கள். அதை எல்லாவற்றையும் முறியடித்து அவர்கள் புதையல் பாதையின் இறுதியை நெருங்கி விட்டார்கள். அங்கே..

நிற்க.. மேலே இருக்கும் வாசகங்களைப் படிக்கும்போது ஏதேனும் காமிக்ஸ் புத்தகம் படிக்கும் உணர்வு உங்களுக்கு ஏற்படுகிறது எனில்.. சந்தோஷமாக உங்கள் தோளில் நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள். என் இனமய்யா நீர். என்னது காமிக்சா? அது சின்ன பிள்ளைங்க படிக்குறதாச்சே என்று சொல்லக்கூடியவர் என்றால் இப்படியே ஜகா வாங்கிக் கொள்ளுங்கள். இது உங்களுக்கான இடுகையல்ல..



அழகான படங்களோடும் மிக நுண்ணிய தகவல்களோடும் வரும் காமிக்ஸின் சித்திரக்கதைகள் நம் மனதை எளிதில் கொள்ளை கொண்டு விடக்கூடியவை. ஒரு அறை என்பது இப்படி இருந்தது என்று பக்கம் பக்கமாக வார்த்தைகளில் விளக்குவதை விட ஒரு படத்தின் மூலம் எளிதாக சொல்லி விடலாம். பார்க்கப்போனால் காமிக்ஸ்தான் இன்றைய திரைப்படங்களுக்கான முன்னோடி என்றுகூட சொல்லலாம். லாங்ஷாட், க்ளோசப் என்று ஒரு காட்சியை எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கான ஆரம்ப முயற்சிகளை எல்லாம் முதலில் செய்து காண்பித்தது காமிக்ஸ்தான்.

காமிக்ஸ் வாசிப்பது ஒரு அற்புத அனுபவம். வாசிக்கும் நம்மையும் ஒரு பாத்திரமாக மாற்றி உள்ளிழுத்துக் கொள்ளும் ஆற்றல் அந்தப் புத்தகங்களுக்கு உண்டு. அந்தப் புத்தகங்களை வாசிக்கும் தருணங்களில் விரைந்தோடும் குதிரைகளில் நாயகர்களோடு ஒருவனாக நானும் பயணித்திருக்கிறேன். இரும்புக்கை மாயாவியாய் மாறி அரூப வடிவில் துப்பாக்கி ஏந்தி எதிரிகளை டுமீல் டுமீல் என சுட்டு வீழ்த்தி இருக்கிறேன். ஸ்பைடரின் வலையில் தலைகீழாகத் தொங்கியுமிருக்கிறேன்.

கொலராடோ நதியும் செவ்விந்தியர்களும் ஏதோ நமக்கு வெகு அருகாமையில் இருப்பதைப் போன்றதொரு உணர்வை காமிக்ஸ்கள் எனக்கு கொடுத்திருக்கின்றன. எனக்கு அறிமுகமாயிராத முற்றிலும் புதிய உலகங்களையும் காமிக்ஸ்களின் மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன். அஸ்டெக் என்றொரு இனம் இருக்கிறது, அவர்கள் சூரியக்கடவுளை வழிபடுவார்கள் என்பதில் ஆரம்பித்து கவுபாய்களின் உலகம் எப்படியிருக்கும் என்பது வரை காமிக்ஸ்கள் பல தகவல்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கின்றன.

விவரம் தெரிந்து நான் முதல்முதலில் காமிக்ஸ் வாங்கிய தினம் இன்றைக்கும் எனக்கு நினைவில் இருக்கிறது. நான் நான்காவதோ ஐந்தாவதோ படித்த சமயம். எதையோ கேட்டு அடம்பிடிக்கும் என்னை சமாளிக்க என் தாத்தா கடைக்கு அழைத்துப் போகிறார். அங்கே தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு புத்தகத்தின் அட்டைப்படம் என்னை வெகுவாக கவர்ந்திழுக்க அது வேண்டும் என கேட்டு வாங்குகிறேன். அந்த புத்தகம் டெக்ஸ் வில்லரின் "மந்திர மண்டலம்". மா-ஷை என்கிற கொடிய சூனியக்காரியை எதிர்த்துப் போராடும் டெக்ஸ் ஒரு மரணப் பள்ளத்தில் வீழ்வதும, அங்கே எதிர்ப்படும் பயங்கர ஆபத்துகளை சமாளித்து மீள்வதும்தான் கதை. அன்று ஆரம்பித்த காமிக்ஸ் மீதான என்னுடைய ஆர்வம் இன்று வரை தொடர்கிறது.

இந்த விஷயங்களை எல்லாம் என் நினைவுகளின் பேழையிலிருந்து இப்போது மீட்டெடுத்துப் பேசுவதற்கான அவசியம்.... இருக்கிறது. இந்தத் தீபாவளி, காமிக்ஸ் வாசிக்கும் அனைவருக்கும் மறக்க முடியாத ஒன்றாக அமைந்து விட்டது. கிடைப்பதற்கு அரிதானதொரு புதையல்.. இரண்டு வருடங்கள் முன்பாக அறிவிக்கப்பட்டதிலிருந்து கனவாகவே இருந்து விட்டதொரு விஷயம் இப்போது நனவாகி இருக்கிறது. 1986 இல் ஆரம்பித்த XIIIயின் பயணம் 25 வருடங்களுக்குப் பிறகு கடைசியாகத் தன் இலக்கை கண்டடைந்து இருக்கிறது. ஆம் நண்பர்களே.. லயன் காமிக்ஸின் "இரத்தப்படலம்" ஜம்போ ஸ்பெஷல் வெளியாகி விட்டது.


சில வருடங்களுக்கு முன் கமல்ஹாசன் நடித்த "வெற்றி விழா" என்றொரு படம் வெளியானது உங்கள் நினைவிலிருக்கலாம். அது இந்த காமிக்ஸ் தொடரைக் காப்பியடித்து எடுக்கப்பட்டதே. இரத்தப்படலத்தின் மூலக்கதை என்ன? கொலை முயற்சிக்கு ஆளாகி தன் நினைவுகளைத் தொலைத்த ஒருவன் தான் யாரெனத் தெரிந்து கொள்ள மேற்கொள்ளும் பயணம்தான் "இரத்தப்படலம்". ஒருவன் தன்னைத்தானே தேடிப்போவது என்பது விசித்திரம்தான் இல்லையா? மொத்தம் பதினெட்டு பாகங்கள் உடைய கதை. இதுவரை பத்து பாகங்கள் மட்டுமே லயனில் வெளிவந்து இருந்தன. ஆனால் இப்போது எல்லாப் பாகங்களையும் இணைத்து ஒரு ராட்சத இதழாக இந்தப் புத்தகம் வெளிவந்து இருக்கிறது.

காமிக்சைக் கொண்டாடும் அனைவருக்கும் அரிய பொக்கிஷமாக வந்திருக்கும் இந்தப்புத்தகத்தை வாங்க நான் பயணித்த கதையே ஒரு பெரும் கதைதான். அந்தக் கதையும், லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களும்.. அடுத்த இடுகையில்..

(தொடருவேன்..)