August 30, 2010

கோணங்கி என்றொரு மாயாவி (3)

கோணங்கி என்றொரு மாயாவி (1)

கோணங்கி என்றொரு மாயாவி (2)

எழுத்தாளர்கள், கதைகள் என போய்க் கொண்டிருந்த நண்பர்களின் உரையாடல் என்னும் காட்டாறு மெதுமெதுவாக கவிதைகளின் திசை வழி பாயத் தொடங்கியது. ஒரு கவிதை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்றோ கவிதையின் வடிவம் இதுதான் என்றோ யாரும் அறுதியிட்டுக் கூற முடியாது. மாறாக ஒரு நல்ல கவிதை வாசகனுக்குத் தரக்கூடிய உணர்வானது, மேப்பில் என்கிற மரத்தினால் செய்யப்பட்ட தரமான வயலின் ஒன்றின் நரம்புகள் மீது விழக்கூடிய இலையொன்று உண்டாக்கும் அதிர்வை ஒத்து இருக்க வேண்டும் என்று சொன்னார் நேசமித்திரன்.

சிறுகதைகளைப் பொறுத்தவரையில் எப்படியோ இருந்தாலும், கவிதையைப் பொறுத்தவரை ஒவ்வொரு பத்து வருடத்துக்கும் தமிழில் கவனிக்கப்பட வேண்டிய கவிஞர்கள் புதிதாக உருவாகி வருவதாக சந்தோஷப்பட்டார் கோணங்கி. புதிதாக எழுதும் கவிஞர்களைத் தேடிக் கண்டுபிடித்து ஊக்குவிக்க வேண்டும் என்பதை கல்குதிரையின் மூலமாக தான் செய்து வருவதையும் குறிப்பிட்டார். சமீபத்தில் எழுத வந்த இளைஞர்களில் உர்சுலாவின் எழுத்துகள் தன்னை வசீகரிப்பதாக சொன்னார். தான் செய்யும் தொழில் சார்ந்து தாணு.பிச்சையா எழுதி இருக்கும் "உரை மெழுகின் மஞ்சாடிப் பொன்"னும் கவனிக்கப்பட வேண்டிய தொகுப்பு என்று சொன்னார். "ஓடியன்" போன்று கவிதைகளில் இன்று அவரவரின் மொழியிலேயே எழுதும் வழக்கம் உண்டாகி இருப்பதை வரவேற்றார்.

தனக்குப் பிடித்த கவிதைத் தொகுப்புகளென ராணி திலக்கின் "நாக திசை"யையும் பிரம்மராஜனின் கடல் பற்றிய பதினெட்டு கவிதைகளையும் சொன்னார் கோணங்கி. குட்டி ரேவதி, மாலதிமைத்ரி போன்ற பெண் கவிஞர்கள் தங்களுக்கான தடைகளை மீறி பல விஷயங்களை எழுதத் தொடங்கி இருப்பது ஆரோக்கியமான விஷயம் என்றாலும் தங்களுக்கென தனித்துவமான ஒரு கவிதை மொழியை அவர்கள் உருவாக்க வேண்டியது அவசியம் என்றும் சொன்னார். கண்ணகி நடந்து சென்ற பாதையில் கேரளத்துக்குப் பயணம் மேற்கொண்ட கவிஞரைப் பற்றி நேசன் கேட்ட போது, தான் கவிதைகளைக் கொண்டே யாரையும் மதிப்பிடுவதாகவும், அரசியல் சார்ந்த மற்ற விஷயங்களில் தனக்கு ஈடுபாடு கிடையாதென்பதையும் தெரிவித்தார்.

இன்றைக்கு இருக்கக்கூடிய கவிஞர்கள் தங்களை ஒரு வட்டத்துக்கு உள்ளாக சுருக்கிக் கொண்டிருப்பதைப் பற்றிய தன்னுடைய வருத்தத்தைப் பதிவு செய்தார் நேசன். சுய இரக்கம், தனிமை, காத்திருப்பு, சமூகத்தின் மீதான கேலி எனச் சுற்றிச் சுற்றி ஒரே விஷயங்களைப் பேசுவதே இன்றைய கவிதைகளின் பலவீனம் என்றும் இது மாதிரியான கவிதைகள் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்காது என்பதும் அவருடைய கருத்தாக இருந்தது. அத்தோடு இன்று எழுத வரும் கவிஞர்களில் பலர் மனுஷயபுத்திரனை நகலெடுக்கவே முயல்கின்றனர் என்றும், தங்களுக்கான தனி மொழியை உண்டாக்குவதில் அக்கறை கொள்ளாமல் இருப்பதாகவும் வருத்தப்பட்டார்.

சுவாரசியமான பேச்சின் ஊடே நண்பர் "பிரியா கார்த்தி" வெளியே சென்று இரவு உணவினை வாங்கி வந்திருந்தார். அடை, சப்பாத்தி, இட்லி என்று களை கட்டியது. உணவுக்குப் பின்பு உரையாடல் மீண்டும் துவங்கியபோது மாதவ் அண்ணன் ஒரு முக்கியமான கேள்வியை கோணங்கியிடம் முன்வைத்தார். "எப்போதும் இல்லாத அளவுக்கு இன அழித்தொழிப்பு இப்போது இலங்கையில் நடந்தேறி இருக்கிறது.. இந்தியாவிலும் தண்டகாருண்யத்தில் மண்ணின் மைந்தர்களை முற்றிலுமாக அடித்து ஒடுக்கும் வேலையும் நடந்து கொண்டிருக்கிறது.. இது போன்ற விஷயங்களை நம் படைப்பாளிகள் பதிவு செய்யாதது ஏன்?" இதே கேள்வியை சென்ற வருடம் "கடவு" நிகழ்ச்சியில் தமிழ்நதி எழுப்பியது என் நினைவுக்கு வந்தது. அப்போது கோணங்கியின் பதிலை எனக்கு ஒத்துக் கொள்ள முடியவில்லை. இப்போது என்ன சொல்லப் போகிறார் என கோர்ந்து கவனித்தேன். எங்கிருந்து வந்ததெனத் தெரியாமல் சட்டென அங்கே ஒரு அமைதி வந்து குடியேறி இருந்தது.

சற்று நேரத்துக்குப் பின் அதை கோணங்கியே உடைத்தார். "முன்னெப்போதும் இல்லாத அளவு இன்றைக்கு சமூகத்தில் ஆபத்துகள் மலிந்து கிடக்கின்றன. தன்னையும் சமூகத்தையும் ஒன்றே பாதுகாக்க வேண்டிய கடமை எழுத்தாளனுக்கு இருக்கிறது. இப்போது என்றில்லாவிட்டாலும் ஏதேவொரு உருவத்தில் படைப்புகளும் பதிவுகளும் வந்து கொண்டேதான் இருக்கின்றன. இனியும் அவை வரும். ஏனெனில் இறந்தவர்களின் ஆவிகள் வேறெங்கும் செல்வதில்லை. அவை எழுத்தாளனையே வந்தடைகின்றன.." இதை அனைவரும் ஒத்துக் கொள்ளும் மனநிலையில் இல்லாவிட்டாலும் மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்புக் கொடுத்து சில விஷயங்களைக் கடந்து போகும் மனதுடையவர்களாக இருந்ததால் வேறொரு களத்தில் உரையாடல் தொடர, மீண்டும் சகஜ நிலை திரும்பியது.

எழுதுவதற்கான சூழல் உருவாக்கிக் கொள்வது என்பது மிக முக்கியம் என்று சொன்னார் கோணங்கி. அதற்காக தான் பயணிக்கும் இடங்களில் இருந்து ஏதேனும் பொருட்களைக் கொண்டு வந்து, எழுதும்போது தன்னருகே வைத்துக் கொள்ளும் பழக்கமும் அவருக்குண்டாம். பின்பு தான் இப்போது எழுதி வரும் நாவலைப் பற்றி விவரிக்கத் தொடங்கினார். தனுஷ்கோடி, வடமாநிலங்கள், வெளிநாடு என்று பல தளங்களில் ஒரே நேரத்தில் பயணிக்கும் பயணியாக, அவற்றை ஒன்றாக இணைக்கும் பாலமாக இருக்கும் அவருடைய ஆற்றல் மிகவும் ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று. இதை எழுத்தில் வாசிக்கும்போது நம்மால் இனங்கண்டு கொள்ள முடிவதில்லை என்பது வேறு விஷயம்.

அவருடைய பேச்சில் அவ்வப்போது தெறித்து விழும் வார்த்தைகள் அசாத்தியமாக இருப்பதும், நம்மால் கற்பனை செய்யக்கூட முடியாத முடியாத விஷயங்களை இவர் எப்படி ஒன்றிணைக்கிறார் என்பதுமே அதிசயம்தான். உதாரணத்துக்கு, வள்ளலார் கண்ட கனவையும் தஸ்தாவெய்ஸ்கி கரமசோவ் பிரதர்ஸில் எழுத் இருக்கும் கனவைப் பற்றியும் சில விஷயங்கள் சொன்னார். எனக்குத் தலையை சுற்றிக் கொண்டு வந்தது. என்ன மாதிரியான மனிதரிவர்? இப்படி எல்லாம் கூட ஒரு மனிதனால் சிந்திக்க முடியுமா என்ன என்று சந்தோஷத்தில் மண்டை காய்ந்து போனேன்.

கோணங்கி தன்னுடைய பிரயாணங்களைப் பற்றிப் பேசும்போது வேடிக்கையான சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டார். அவரும் அவருடைய நண்பரும் வள்ளலார் வாழ்ந்த ஊருக்குக் காரில் பயணிக்கிறார்கள். அங்கே இருக்கும் ஏழை மக்களுக்கு கொடுப்பதற்காக நண்பர் பழங்களை வாங்கி வந்திருக்கிறார். பயணத்தின் போது டிரைவரின் அருகே முன்சீட்டில் அமர்ந்து இருக்கும் கோணங்கி சில பழங்களை எடுத்து சாப்பிட்டபடி வருகிறார். மற்றவர்களுக்கு கொடுப்பதற்காக இருப்பதை ஏன் நீ எடுக்கிறாய் என்கிற ரீதியில் அவரை நண்பர் கடிந்து கொள்கிறார். அப்போது எதிரே ஒரு வயதான குடியானவன் நடந்து வர, காரை நிறுத்தி சட்டெனக் கீழிறங்கும் கோணங்கி அவரிடம் சில பழங்களைக் கொடுத்து இருக்கிறார். வாங்கிக் கொண்ட வயதான மனிதர் சந்தோஷப்பட கோணங்கி அவர் கால்களில் வீழ்ந்து வணங்கி இருக்கிறார்.

ஒன்றுமே புரியாத நண்பர் கோணங்கியைத் திட்டிக்கொண்டே வர, இருவரும் வர வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்து இருக்கிறார்கள். அங்கே நண்பர் அனைவருக்கும் பழங்களைக் கொடுத்தாலும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் பழங்கள் போதாமல் போய் விட்டது. எனவே கிடைக்காதவர்கள் நண்பரைத் திட்டத் தொடங்கி இருக்கிறார்கள். இப்போது கோணங்கி நண்பரைப் பார்த்து இஸ்ரித்துக் கொண்டே சொல்கிறார்.."நீ நல்லது பண்ணனும்னு நினைச்ச.. ஆனா பார்த்தியா? நான்தான் அங்கேயே வள்ளலாரைப் பார்த்துட்டேனே.." ஒரு குழந்தையின் குதூகலத்தோடு இதை சொல்லும்போது கோணங்கியின் கண்கள் இருளிலும் சந்தோஷமாக மின்னிக்கொண்டிருந்தன.

இங்கே மாதவ் அண்ணனைப் பற்றியும், காமராஜ் அண்ணனைப் பற்றியும் கண்டிப்பாக சொல்ல வேண்டும். இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டவர்களாக இருக்கிறார்கள். முதல் முறைதான் பார்க்கிறோம் என்கிற உணர்வு ஏற்படாமல் ஏதோ தங்களில் ஒருவன் என்பதைப் போல தோழர், தோழர் என்று அனுசரணையாக நடந்து கொண்டார்கள். பதிவுலக அரசியல் நிலை சார்ந்து எனக்கும் அவர்களுக்கும் இருந்த சில கருத்து வேறுபாடுகளைப் பற்றி நான் சொன்னபோதும் அவற்றில் இருந்த நியாயத்தை ஒத்துக் கொள்வதில் அவர்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. கோணங்கியுடனான உரையாடல் என்பதால் அவர்கள் இருவரோடும் நிறையப் பேச முயாமல் போனதேன்பதில் எனக்கு வருத்தமே. மீண்டும் ஒருமுறை அவர்களை கண்டிப்பாக சந்தித்து உரையாட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

டால்ஸ்டாய், தஸ்த்யாவேஸ்கி - எழுத்துகளில் அவர்களுடைய ஆளுமை என்று பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது. நேரம் நள்ளிரவையும் தாண்டி விட்டிருந்தது. பேச்சின் சுவாரசியத்தில் நேரம் போனதே தெரியவில்லை. இன்னும் பேசுவதற்கான விஷயங்கள் நிறைய இருந்தாலும் மறுநாள் கல்லூரிக்குப் போக வேண்டும் என்கிற எண்ணம் பெரும்பாரமாக என் தோள்களில் அழுத்திக் கொண்டிருந்தது. கோணங்கியோ தன்னோடு கோவில்பட்டிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். எனினும் கல்லூரி வேலைகள் இருப்பதால் என்னால் வர முடியாதென்பதைத் தெரிவித்தது அவரிடம் இருந்து விடைபெற்றேன். நேசன் நண்பர்களோடு தொடர்ந்து கொண்டிருக்க நான் நண்பர் பிரியா கார்த்தியோடு கிளம்பினேன். நண்பர்களின் பேச்சொலி கொஞ்சம் கொஞ்சமாகக் காற்றில் கரைந்து கொண்டிருந்தது. என் வாழ்வில் மறக்க முடியாத அருமையான தினங்களில் மற்றுமொரு நாள் கூடி இருந்தது. இதைச் சாத்தியமாக்கிய நண்பர்கள் நேசன், மாதவ் மற்றும் கோணங்கிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

August 28, 2010

கோணங்கி என்றொரு மாயாவி (2)

கோணங்கி என்றொரு மாயாவி (1)

பின்னிரவு நேரத்தில் சாத்தூரின் அந்த மொட்டை மாடியில், நீள் பாலை நிலத்தின் திசைகளெங்கும் இலக்கற்று சுற்றித்திரியும் சூறாவளிக் காற்றாய், கோணங்கியுடனான நேசனின் உரையாடல் பல்வேறு தளங்களைத் தொட்டுச் சென்று கொண்டிருந்தது. கிட்டத்தட்ட அவர்கள் இருவருமே ஒத்த கருத்துடையவர்களாக இருந்ததும் அதிசயம். அவர்களின் சம்பாஷணையை நண்பர்கள் அனைவரும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தோம்.

தஞ்சை பெரிய கோவிலில் தான் கண்ட சிற்பங்களைப் பற்றிய சில தகவல்களை சொல்லும்போது நேசனின் கண்களில் ஆச்சரியம் பொங்கி வழிந்தது. அத்தனை நுட்பமாக.. கோனார்க், கஜூராகோ போன்ற கோயில்களில் பார்க்கக்கூடிய சிற்பங்களுக்கு இணையான வேலைப்பாடுகள் தஞ்சையிலும் இருக்கின்றனவாம். அவருடைய விவரணையில் எண்ணற்ற சிற்பங்கள் எங்கள் கண்முன்னே அரூப வடிவாக தோன்றி மறைந்து கொண்டிருந்தன.

ஆயிரமாயிரம் கொலைகள் செய்தவன் என்று ராஜராஜன் மீது தனக்கு கோபம் இருந்தாலும், கோவிலைப் பற்றியச் செப்பேட்டில் அதைக் கட்டியவர்களைப் பற்றிய குறிப்பையும் சேர்த்து, இவர்களைக் கொண்டு இந்தக் கோயிலை "எடுப்பித்தேன் " என்று சொன்ன அவனுடைய பண்பைத் தான் ரசிப்பதாகவும் நேசன் சொன்னார். அதன் நீட்சியாக, நாயக்க அரசர்களின் சார்பாக திருச்சியை ஆண்ட தளபதிகள் பற்றியும், அது தொடர்பான புதினங்கள் பற்றியும் பேச்சு தொடர்ந்தது.
பின்பு எங்கெங்கோ ஓடியாடித் திரிந்த உரையாடல் தற்கால தமிழ் எழுத்துச் சூழலைப் பற்றித் திரும்பியது. இன்றைய தமிழ் எழுத்தும் எழுத்தாளர்களும் முற்றிலும் வணிகரீதியாக மாறிப் போய் விட்டதைப் பற்றிய வருத்தம் நண்பர்களால் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டது. எழுத்து என்பது தானாக தோன்ற வேண்டும் எனவும் குறிப்பிட்ட காலத்துக்குள் எழுதித் தர வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படும்போது உண்மையான எழுத்து என்பது தொலைந்து போய் அங்கே வெறும் சொற்களின் கூடாரம் மட்டுமே இருக்கும் என்பதே அனைவரின் எண்ணமுமாக இருந்தது. இந்த நேரத்தில் நேசன் சொல்லிய கருத்து மிக முக்கியமானது. "இன்றைய எழுத்தாளர்கள் ஒரு கைப்பிடி அரிசியைக் கொண்டு ஒரு அண்டா சோறு சமைக்கிறார்கள்". எத்தனை சரியான வார்த்தைகள்?

"வணிக விதிகளுக்கு உட்பட்டு தொடர்ச்சியாக எழுதித் தள்ளும்போது ஒரு எழுத்தாளன் தன்னுடைய சொற்களையும் வார்த்தைகளையும் தொலைக்கத் தொடங்குகிறான். நாட்கள் செல்ல செல்ல அவனுடைய எழுத்துக்களின் ஜீவன் தொலைந்து போக கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போகிறான். இதை விட வருத்தமான விஷயம் எதுவும் இருக்க முடியாது. அதேபோல இன்று படைப்புகளை முன்னிறுத்துவதைக் காட்டிலும் தங்களை முன்னிறுத்துவதில்தான் எழுத்தாளர்கள் முனைப்பாக இருக்கிறார்கள்" என்ற மிகக்கூரான விமர்சனம் நேசனால் முன்வைக்கப்பட்டபோது அதை யாராலும் மறுக்கமுடியவில்லை.

"பத்துப் பக்கங்களைத் தொடர்ச்சியாக படித்தும் வெறும் பத்து வரிகளை மட்டுமே ஒருவனால் நினைவில் நிறுத்த முடியுமானால் அத்தனை பக்கங்களுக்கு அங்கே என்ன தேவை இருக்கிறது? மாறாக, இத்தகையதொரு சூழலில்தான் கோணங்கி மற்றவர்களிடம் இருந்து வேறுபடுகிறார். அவருடைய எழுத்துகளைப் படிப்பதென்பது ஒரு முப்பரிமாணக் கண்ணாடியினால் உற்று நோக்குவதற்கு ஒப்பாகும். கண்ணாடியின் ஒரு பக்கம் இருக்கும் எழுத்துக்கள் மறுபக்கம் பல்வேறு வண்ணங்களாக தெறித்துச் சிதறுகின்றன. பல புதிய தளங்களுக்கு வாசிப்பவர்களைத் தூக்கி அடிக்கின்றன. அதனாலேயே கோணங்கியின் எழுத்துக்களை நான் காதலிக்கிறேன்" என்று சொல்லி முடித்தார் நேசன்.இந்த நேரத்தில்தான் தன்னுடைய எழுத்து எப்படி உருவாகிறது என்பதை கோணங்கி சொன்னார். எழுத வேண்டும் என்கிற முனைப்போடு அமரும்போது எழுத்து அவருக்கு வசப்படாதாம். ஒரு அரை பக்கம் எழுத.. பின்பு காலாற நடந்து செல்ல வேண்டியது. திரும்ப வந்து முதலில் இருந்து எழுதத் தொடங்கினால் ஒரு பக்கத்தைக் கூடத் தாண்ட முடியாதாம். இந்த நேரத்தில் வெளியே செல்ல வேண்டும் என்று சட்டை பேன்ட் அணிந்து கிளம்பி விடுவாராம்.

ஆனால் மிகச்சரியாக வெளியேறும் நேரத்தில் எங்கிருந்து வந்ததெனத் தெரியாமல் சட்டென்று எண்ணங்கள் கோர்வையாக ஓடத் தொடங்குமாம். உடனே மனிதர் உட்கார்ந்து எழுதத் தொடங்கி விடுவாராம். எழுத்து தன்னை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ள வெளியே போக வேண்டியதை மறந்து தொடர்ச்சியாக எழுதி.. இப்படியாக தன்னையே ஏமாற்றி ஏமாற்றித்தான் எழுத வேண்டியிருக்கிறது என்றார் கோணங்கி. சிறுபிள்ளை விளையாட்டு போன்றதொரு உணர்வோடு இதைச் சொல்லி முடித்தபோது கோணங்கியின் கண்களில் வழிந்தோடிய சாந்தத்தையும் நேசபாவத்தையும் பார்த்தபோது அவரை என்னுடைய மனதுக்கு இன்னும் நெருக்கமானவராக உணர முடிந்தது.

அங்கிருந்து உரையாடலின் திசை சற்றே மாறி கவிதைகளை நோக்கித் திரும்பியது. கவிதைகளைப் பற்றிய சுவாரஸ்யமான விவாதங்கள், அண்ணன் மாதவராஜ் எழுப்பிய முக்கியமான கேள்விகள், கோணங்கியின் வித்தியாசமான அனுபவங்கள் என இன்னும் நிறைய விஷயங்கள்.. அடுத்த இடுகையில்..

August 26, 2010

கோணங்கி என்றொரு மாயாவி (1)

சென்ற ஞாயிறன்று அண்ணன் நேசமித்திரன் மதுரைக்கு வந்திருந்தார். ஸ்ரீதர், தருமி ஐயா, பாலகுமார், மதுரை சரவணன், பிரபாகர் என மதுரைப் பதிவுலக நண்பர்கள் எல்லோரும் வந்திருந்தனர். முந்தைய நாள் முழுதும் கேரளாவுக்குப் பயணம் செய்து திரும்பியிருந்த நேசனின் களைப்பு அத்தனையும் பதிவுலக நண்பர்களைக் கண்டதும் காணாமல் போனது.

ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த நேசனுடனான எங்களுடைய முதல் சந்திப்பு முழுக்க முழுக்க கவிதைகள், இலக்கியம் என்று வெகு தீவிரமான ஒன்றாக அமைந்தது. ஆனால் இம்முறை சந்திப்பு வெகு இயல்பாக இருந்தது. நெடு நாட்கள் பழகிய நண்பனொருவனின் தோள் மீது கைபோட்டு மாலையின் மஞ்சள் வெயிலில் சாலையின் ஓரமாக நடந்து போவதைப் போன்றொரு உணர்வு. அமைதியான சலசலப்போடு ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றினைப் போல எங்கள் உரையாடல் அமைந்தது. பதிவுலகம் சார்ந்து என்ன செய்யலாம், வாசிப்பினை எப்படி மேம்படுத்துவது என்றெல்லாம் பேசினோம். கடைசியாக நேசன் கிளம்பும்போது, தான் செவ்வாயன்று கோணங்கியை சந்திக்கவிருப்பதாக தெரிவித்தார்.

ஒரு காலத்தில், தமிழ் இலக்கிய உலகில் யாருடைய பெயரைக் கேட்டால் நான் காத தூரம் ஓடுவேன் என்றால், அது கோணங்கிதான். நண்பர் நரன் கோணங்கியைப் பற்றி "உண்மையான தேசாந்திரி.. எழுத்தாளர்களின் எழுத்தாளர்" என்றெல்லாம் என்னிடம் நிறையவே சொல்லி இருக்கிறார். அதை நம்பி திலகவதி வெளியிட்ட கோணங்கியின் "முத்துக்கள் பத்து" என்ற சிறுகதைத் தொகுதியை வாங்கி வாசித்தபோது நிறையவே குழம்பிப் போனேன். சத்தியமாக ஒன்றுமே புரியவில்லை. "மக்களுக்கு எளிதாகப் புரியாத இலக்கியத்தில் எந்த பயனுமில்லை" என்பதென் கருத்து. எத்தனை முயற்சித்தும் கோணங்கி உருவாக்கும் படிமங்களைக் கண்டுகொள்வதென்பது என்னால் இயலாத ஒன்றாகவே இருந்தது. அது முதலே கோணங்கி என்றாலே கொஞ்சம் எனக்கு அலர்ஜிதான்.

வெகு நாட்களுக்குப் பிறகு, முதல் முறையாக "கடவு" நிகழ்ச்சியில் தான் அவருடைய பேச்சைக் கேட்டேன். தெளிவில்லாத ஆனால் ஒரு விதமான மயக்கத்தைத் தருகிற பேச்சு. அவரைப் பற்றிய என்னுடைய கருத்துக்களில் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டது அப்போதுதான். "மதினிமார்கள் கதை"யை வாசித்த பின்பு எனது கருத்து முற்றாக மாறிப்போனது. குறிப்பாக "கருப்பு ரயில்" என்னை மிகவும் பாதித்த கதைகளில் ஒன்று. பிறகு பாழி, பிதுரா போன்ற நாவல்களை வாசிக்க முயன்று தோற்றுப் போயிருக்கிறேன். ஆனால் அதன் பிறகும் கோணங்கி மீதான மதிப்பு உயரவே செய்திருக்கிறது. எனவே நேசன் கோணங்கியை சந்திப்பதாக சொன்னவுடன் நானும் சேர்ந்து கொள்வதாகக் கூறினேன். நேசனும் சந்தோஷமாக ஒத்துக் கொண்டார். (நெல்லுக்குப் பாயும் நீர் சற்றே புல்லுக்கும் பாய்வது போல..)

செவ்வாயன்று மாலை நான் சாத்தூருக்குப் போய்ச் சேர்ந்தபோது மணி ஆறாகி விட்டிருந்தது. அண்ணன் மாதவராஜின் வீட்டு மொட்டைமாடியில் கோணங்கி, அடர்கருப்பு "காமராஜ்", கோணங்கியின் நண்பர் பாலு, நேசமித்திரன், அவருடைய நண்பர் பாலா என நண்பர்கள் எல்லோருமே ஏற்கனவே குழுமியிருந்தார்கள். உரையாடல் ஆரம்பமாகிய கொஞ்ச நேரத்திலேயே அங்கே மற்றொரு வெளி தோன்ற ஆரம்பித்தது.

கதைகள் மற்றும் கவிதைகள், அவற்றுக்கான சாத்தியங்கள் எனப் பலவும் அங்கே வார்த்தைகளில் உருண்டோடிக் கொண்டிருந்தன. இவையனைத்தும் முக்கியமாக கோணங்கி மற்றும் நேசனுக்கிடையே அமைந்த உரையாடலாக இருக்க, மற்றவர்கள் அனைவரும் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தோம். ஆப்பிரிக்கா தேசத்து அடிமைகள், வெவ்வேறு மொழிகளில் உண்டான பாபேல் என்ற வார்த்தைப் பிரயோகம் என வெளியின் கூறுகள் அகலமாக அகலமாக, நாங்கள் அனைவருமே கண்டங்கள் தாண்டி கண்டங்கள் செல்லும் பறவைகளாக மாறிக் கொண்டிருந்தோம்.

கோணங்கியினுடைய கதை சொல்லும் முறை பற்றிய தன்னுடைய குற்றச்சாட்டை அண்ணன் மாதவராஜ் முன்வைத்தார். யாருக்கும் புரியாத எழுத்தால் என்ன பயன் என்பது அவருடைய வாதம். அதற்கு நேசன் கோணங்கியின் சார்பாக பதில் தந்தார். "வெற்றுத்தாளுக்கும், காற்றில் படபடக்கும் வெற்றுத்தாளுக்கும் இருக்கும் வித்தியாசம் முக்கியம். மொழியை இளக்கி எல்லோரும் புரிந்து கொள்ளும்படியாக எழுதுவது வெற்றுத்தாளில் எழுதுவதைப் போன்றது. வாசகன் அதனைப் படிக்க சிரமப்பட வேண்டியதில்லை. மாறாக, காற்றில் படபடக்கும் வெற்றுத்தாள் எனும்போது அதில் எழுதுவதற்கான அடிப்படை உழைப்புத் தேவைப்படுகிறது. புரிந்து கொள்ள வாசகனும் தன்னுடைய உழைப்பைத் தர வேண்டியிருக்கிறது". இதுபோல புனைவுகளின் அதீத சாத்தியங்களைக் கொண்டிருக்கும் எழுத்தே காலம் கடந்து நிற்கும் என்றும், அதனாலேயே கோணங்கியைப் போலவே தானும் அதுமாதிரியான எழுத்துக்களை எழுத முயற்சி செய்வதாகவும்நேசன் கூறினார்.

நாங்கள் பேசிக் கொண்டதில் இருந்து கோணங்கியைப் பற்றிய என்னுடைய அவதானிப்பு இதுதான். தனக்கான ஒரு மாய உலகை கோணங்கி உண்டாக்குகிறார். சிறுவர்களுக்கான புத்தகங்களில் பார்த்தீர்களேயானால், புள்ளிகளை இணைத்து உருவத்தை உண்டாக்கும் புதிரொன்று இருக்கும். ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசையாக எண்களைத் தந்திருப்பார்கள். கோணங்கியும் அதைத்தான் செய்கிறார்.

ஆனால் இங்கே ஒன்றுக்குப் பிறகு ஒன்பது வருகிறது. நடுவில் இருக்கும் எண்கள் அரூபமாக இருக்கின்றன. அந்தப் புள்ளிகளைத் தேடிக் கண்டுபிடிப்பது வாசகனின் சாமர்த்தியம். வார்த்தைகளின் ஊடாக மாயத்தோற்றங்கள் மறைந்து கிடக்கின்றன. ஒளிந்து கிடக்கும் புதிர்கள் சங்கமிக்கும் ஒற்றை முடிச்சை தேடியடையும்போது, அது வாசகனுக்கு தரக்கூடிய இன்பம் அலாதியானது. தொன்மங்களையும் நவீனத்தையும் பிணைத்து தன்னுடைய கதைகளில் கோணங்கி அதைத்தான் செய்கிறார். அது இன்றைக்கு புரிந்து கொள்ளப்படாவிட்டாலும், நல்ல இலக்கியம் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்ளும் காலம் கண்டிப்பாக வரும். அப்போது அதனுடைய மதிப்பு அளவிட முடியாததாக இருக்கும்.

கோணங்கி பகிர்ந்து கொண்ட விஷயங்கள், நேசனின் சுவையான உரையாடல், மாதவ் மற்றும் காமராஜ் என எழுதுவதற்கான இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. அவை அடுத்த இடுகையில்..

August 23, 2010

அன்பின் வலி


துயரத்தின் நீண்ட நிழல்கள்
என்னைத் தீண்டும் போதெல்லாம்
உன் மடி தேடி
சரண்டைந்தவனாக இருக்கிறேன்

நான் யாரென்று அறியாத
முதல் அழுகையின் போதும்

பித்து பிடித்தவன் என
பள்ளி நண்பர்கள்
கேலி செய்த போதும்

பிரியத்துக்குரிய மீனாக்கா
வீடு மாறி சென்ற போதும்

முதன்முறையாக தேர்வுகளில்
தோற்றபோதும்

யிர் நண்பனின் சிதைக்குத்
தீமூட்டித் திரும்பிய
பின்னிரவு வேளையின் போதும்

முதல் காதலியால்
தகுதியற்றவன் என
நிராகரிக்கப்பட்ட போதும்

பிழைக்கத் தெரியாதவன் என
கூட வேலை பார்க்கும் ந(ண்)பர்கள்
திட்டியபோதும்

ன்னுடைய எல்லாமென நம்பியிருந்த
துணையைத் தொலைத்த போதும்

அம்மா..

ன் மடி தேடி
சரண்டைந்தவனாக இருக்கிறேன்

ருந்தும் - அடிமனதில்
வலித்துக்கொண்டே தானிருக்கிறது

ன்றேனும் ஒரு கணமேனும்
இயல்பானதொரு அன்பின் பொருட்டு
உன் மடியில் தலைவைத்து
நான் படுத்ததே இல்லையென்பது..!!!

- கல்யாண்ஜிக்கு

August 21, 2010

கைபேசி எண் 9677027783 - திரைப்பார்வை

முன்னுரை

கார்த்தி கார்த்தின்னு ஒரு கிறுக்கன், இன்னொரு கார்த்திங்குற கிறுக்கன் நடிச்ச "நான் மகான் அல்ல" படத்துக்குப் போகலாம்னு கிளம்பினான். ஆனா பாருங்க.. மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர்ல டிக்கட்டு நூத்தி இருபது ரூபாய்ன்னு சொல்லிட்டாய்ங்க. இந்தப் பரதேசிப்படத்துக்கு இது ரொம்ப ஜாஸ்தின்னு வேற ஏதாவது படத்துக்குப் போகலாம்னு கார்த்தி முடிவு பண்ணினான். என்ன படத்துக்குப் போகலாம்?

அஆங்... விளம்பரம் எல்லாம் வித்தியாசமா ஏதோ ஒரு படம் இருந்துச்சே.. பேய்ப்படம் மாதிரி... கைபேசி எண்.. அதுக்கே போகலாம்னு ஜெயம் தியேட்டருக்குப் போயாச்சு. என்னது.. அதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சா? அது கதையல்ல.. ஒரு கறுப்பு சரித்திரம். பொதுவாச் சொல்லணும்னா "கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா.." அதேதான்.


பொருளுரை

கதை

கும்மிருட்டு. ஒரு பாழடைஞ்ச பங்களா. வெள்ளை ட்ரெஸ்ல ஒரு பெண் அல்லது பிகர் அல்லது பேய்.. நடக்குது நடக்குது நடந்துகிட்டே இருக்கு.காடு மலை தோப்புன்னு நடந்து அந்த பங்களாக்கு வருது. அப்படியே லோ ஆங்கிள், டாப் ஆங்கிள், க்ளோசப்ல முதுகுன்னு மெரட்டுறோம்.. பின்னணில நாய், நரி, நாதாரி எல்லாம் ஊளையிடுது.. என்னது? இதை எல்லாம் இயக்குனர் பாத்துக்கிடுவாரு.. நான் கதை என்னான்னு மட்டும் சொன்னாப் போதுமா? ஓகே ஓகே.. கூல் டவுன்..

ஒரு பையன் - நாயகன். ஒரு பொண்ணு - நாயகி. அவங்களுக்குள்ள தெய்வீகக் காதல். வீட்டுல தெரிஞ்சு ஒரே பிரச்சினை. ஓடி வந்து கல்யாணம் பண்ணிக்கிறாங்க (அ) கல்யாணம் பண்ணிட்டு ஓடி வராங்க. ஏதோ ஒரு ஊர்ல ஏதோ ஒரு வீடு எடுத்துத் தங்குறாங்க. அங்க எதிர்த்த வீட்டுல ஒரு முசுட்டுப் பொம்பள. அவளுக்கு ஆம்பளைங்களக் கண்டாலே பிடிக்காது. கர்ப்பமா இருக்குற நம்ம நாயகிக்கு எல்லா உதவியுமே செய்யுறா.

பிள்ள நல்லாப் பிறக்கணும்னு வேண்டிக்கிறதுக்காக நாயகன், நாயகி, முசுடு மூணு பேரும் ஒரு மலைக்கோயிலுக்குப் போறாங்க. திரும்பி வர வழியில கார் ரிப்பேர். ராத்திரிக்கு ஒரு பாழடைஞ்ச பங்களால தங்குறாங்க. அங்கே ஆவி நடமாட்டம் இருக்கு. அப்புறம் என்ன ஆச்சுன்னு.. சரி சரி.. எப்படியும் நீங்க யாரும் தியேட்டர்ல போய் பார்க்கப் போறதில்ல. தெரிஞ்சும் ஒண்ணும் ஆகப் போறதில்ல.. விடுங்கப்பா.

நடிகர்கள்

தமிழ்த் திரையுலகத்துல சமீப காலத்துல இப்படி ஒரு நடிப்பு சூறாவளிய யாரும் பார்த்திருக்க முடியாது. ஆதர்ஷ்னு பேராம். தயாரிப்பாளர் மகனா இருப்பாரோ? மொதமொத காதலிக்கிட்ட குனிஞ்சு வளைஞ்சு "ஐ லவ் யூ"ன்னு சொல்றப்பவே படம் எப்படி இருக்கும்னு தெரிஞ்சு போச்சு. ஆள் அசப்புல நம்ம பரிசல்காரன் மாதிரியே இருக்கார். குரல் கூட கிட்டத்தட்ட அப்படியே.. ஆனா நான் இப்படி எழுதி இருக்குறத படிச்சுட்டு இந்தப் படத்த பரிசல் பார்த்தா, அவர் தூக்குப் போட்டுத் தொங்குறது உறுதி. பொண்டாட்டியக் காணோம்னு போலிஸ் ஸ்டேஷன்ல வந்து "அர்ஜென்ட் சார்"னு அவதியா உணர்ச்சியோட சொல்றப்ப பக்கத்துல இருக்குறவர் சவுண்ட கொடுத்தாரு பாருங்க.. " சீக்கிரமா பாத்ரூமுக்குப் போடா பரதேசி.."

படத்துல ரெண்டு குஜிலிங்கோ. நாயகி மற்றும் வில்லி. ஒண்ணு பேரு ஜில்லு. இன்னொண்ணு பேரு ஆஷி. ஆனா யாரு யாருன்னுதான் தெரியல. படத்தோட டைட்டில் போடறப்பவே நினச்சேன்.. என்னடா ஹீரோயினி பேரெல்லாம் ஒரு மார்க்கமா இருக்கேன்னு... தப்பு பண்ணிட்டமோ? உள்ள நொழஞ்சதுக்கு அப்புறம் பொலம்பி என்ன பண்றது? ஆனாலும் நாயகி தாவணில வரப்போ ரொம்பவே அழகா இருந்துச்சு. கொடுத்த காசுக்கு படத்துல அது ஒண்ணுதான் மிச்சம்.

தொழில்நுட்பம்

அப்படி ஒண்ணு படத்துல இருக்குதா?

இசைவாணன்னு ஒருத்தர்தான் இசை. இதுக்கு முன்னாடி மலையாள கில்மா படத்துக்கு எல்லாம் மூஜிக் போட்டுக்கிட்டு இருந்திருப்பாரு போல. லவ் சீன்ல எல்லாம் ஒரே முக்கல் முனகல் சவுண்டு. தியேட்டருக்கு வந்திருந்த நாப்பது பேர்ல ரெண்டே ரெண்டு பிகருங்க.. அதுகளுக்கு வெக்கம் தாங்காம ஒரே சிரிப்பு.. (என்னது.. உங்களுக்கு எப்படித் தெரியுமா? ஹி ஹி ஹி.. தேடிப்பிடிச்சு அதுங்க இருந்த "ரோ"ல போயில உக்கார்ந்தோம்..) படத்துல ஒரு நல்ல விஷயம் - பாட்டே கிடையாது. அப்பாடா.. தப்பிச்சோம்டா..

எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ். அந்தப் பேரப் பார்த்துத்தான் நான் ஏமாந்து போயிட்டேன். தாஜ்னு ஒருத்தரோட ஒளிப்பதிவு. அப்புறம் ராமதுரை - கலை இயக்கம். எல்லாருமே படத்துல உப்புக்கு சப்பாணி.

இயக்கம்

விஷ்வக்சேனன் அண்ணே.. உங்களால தமிழ் சினிமாக்கு ஒரே ஒரு நல்ல விஷயம்தான் செய்ய முடியும்.. தயவு செஞ்சு ஆப்பிரிக்காவுக்கு ஓடிப் போயிடுங்க.. ஓரளவுக்கு நல்ல கதையைக் கூட எப்படி எல்லாம் கொத்து புரோட்டா போடலாம்னு யோசிச்சு படம் எடுத்து இருக்கீங்க.

உங்க திறமைக்கு ஒரு சாம்பிள் காட்சி.. கர்ப்பிணிப் பொண்ணு கையில முட்டையோட பிரிட்ஜை தொறக்குரா.. அப்பப் பார்த்து அவ கருவைக் கலைக்க வீட்டுக்கார சைக்கோ கொடுத்த மருந்து வேலை செய்து.. கைல இருக்குற முட்டை கீழ விழுந்து உடைய, அந்தப் பொண்ணோட வயித்துல இருக்குற கரு கலைய.. போதும்.. இத்தோட நிறுத்திக்கலாம்.

முடிவுரை

இதுக்கு அப்புறமும் அங்கே முடிக்க என்ன இருக்கு? அதுதான் மொத்தமா எல்லாத்தையும் முடிச்சு அனுப்பிட்டாய்ங்களே. பாண்டியா.. இது உனக்குத் தேவையா? இது உனக்குத் தேவையா? இது உனக்குத் தேவையா? இது உனக்குத் தேவையா? இது உனக்குத் தேவையா? இது உனக்குத் தேவையா? இது உனக்குத் தேவையா? இது உனக்குத் தேவையா? இது உனக்குத் தேவையா? இது உனக்குத் தேவையா? இது உனக்குத் தேவையா? பீ கேர்புல்.. நான் என்னைச் சொன்னேன்.

ஆக மொத்தத்தில் இது ஒரு காவியம்.. மணிக்காவியம்.. ஒப்பற்ற ஒலக காவியம்.

August 19, 2010

உக்கார்ந்து யோசிச்சது (19-08-10)

சென்ற வாரத்தில் ஒரு நாள். சேலத்தில் இருக்கும் பதிவுலக நண்பர் சிவக்குமரன் அலைபேசியில் அழைத்திருந்தார்.

"நண்பா.. அவசரமா ஒரு தகவல் தெரியணும்.."

"சொல்லுங்க தல.."

"அசோகர் கலிங்கத்துப் போர்ல ஈடுபட்டார் இல்லையா.."

"ஆமா?"

"அதுல எந்த மன்னருக்கு எதிராக சண்டை போட்டார்னு தெரியணும்..?"

அவர் கேட்டதும் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அட.. யாரது? இத்தனை நாட்களாக அசோகரைப் பற்றியும் கலிங்கப்போரைப் பற்றியும் பேசி வந்திருக்கிறோம். ஆனால் அந்த எதிரி அரசன் யாரென்று இன்று வரை நமக்குத் தெரியாதே..

"தெரியலையே தல.. நான் வேணும்னா தேடிப் பார்த்துச் சொல்லட்டுமா?"

"சரி நண்பா.."

சட்டென்று இணையத்தில் தேடிப் பார்த்தேன். எங்கும் எந்தப் பெயரும் குறிப்பிடப்படவில்லை. எல்லா இடத்திலுமே அசோகர் கலிங்க நாட்டை எதிர்த்து போர் புரிந்தார் என்று மட்டுமே இருக்கிறது. ஆனால் அந்த அரசர் யாரென்று தெரியவேயில்லை. ஏதோ ஒரு தளத்தில் கலிங்கம் அப்போதே குடியரசாக இருந்ததாக போட்டிருந்தார்கள். மற்றொரு தளத்தில் "கரவேலன்" என்பவன் கலிங்கத்தின் அரசனாக இருந்ததாக குறிப்புகள் சொல்கின்றன. ஆனால் அசோகரின் காலமும் காரவேலனின் காலமும் ஒன்றாக ஒத்துப் போகவில்லை. அப்படியானால் சரித்திரத்தில் இதைப் பற்றிய குறிப்புகளே இல்லையா? தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்கப்பா..

***************

நானே என்னைக்காச்சும் எப்பவாச்சுக்கும்தான் பண்பலைல பாட்டு கேக்குறது.. அப்பப் பார்த்து நம்ம நேரத்துக்கு எதாச்சும் எடக்கு முடக்கா காதுல விழும். நம்ம ராசி அப்படி.. இப்படித்தான் ரெண்டு நாளைக்கு முன்னாடி சூரியன் எப்.எம் கேட்டுக்கிட்டு இருக்கேன். அதுல ஒரு அறிவாளித் தொகுப்பாளினி மகராசி பேசுது...

"இப்பப் பார்த்தீங்கன்னா நம்மாளுங்க கிரிக்கட்ல சூப்பரா விளையாடுறாங்க.. ஆனா ஹாக்கில நல்லா விளையாடுறது கிடையாது.. ஏன்னு நான் கண்டுபிடிச்சுட்டேன்.. அதுக்குக் காரணம்.. கிரிக்கட்ல யூஸ் பண்ற பேட் பார்த்தீங்கன்னா பெரிசா அகலமா இருக்கு.. ஆனா ஹாக்கி பேட் ரொம்பச் சின்னதா குச்சியா இருக்கு.. அதனால இனிமேலே ஹாக்கிலையும் நல்ல பெரிய பேட்டா யூஸ் பண்ணினா நாம ஈசியா ஜெயிக்கலாம்.. எப்படி நம்ம ஐடியா.."

அட.. உன் தலைல இடி விழ.. அது நம்ம தேசிய விளையாட்டும்மா.. அதை ஏன் இப்படி? இந்த மாதிரிப்பேசுற ஜீவராசிங்கள எல்லாம் தயவு செஞ்சு அண்டார்டிக்காவுக்கு நாடு கடத்துங்கப்பா..

***************

"தி எக்ஸ்பெண்டிபல்ஸ் " - பல ஆக்சன் ஸ்டார்கள் இணையுற படம், 80களுக்கு மறுபடியும் கூட்டிட்டுப் போறோம், நாஸ்டால்ஜியா அதுஇதுன்னு.. ரொம்பவே எதிர்பார்த்த படம். வழக்கம் போல ஓவர் பில்டப்பு ஒடம்புக்கு ஆகாதுன்னு படம் நிரூபிச்சு இருக்கு. எல்லாப் பயலும் ஒத்த ஒத்த சீனுக்கு பேருக்கு தலையக் காமிச்சுட்டு போறானுங்க.. அர்னால்ட் வர சீனுக்கு மட்டும் நம்மாளுங்க விசில் பிரிக்கிறாங்க. படத்துல ரெண்டே ஆளுங்களுக்குத்தான் ந(அ)டிக்கிறதுக்கு ஸ்கோப். ஸ்டேலோன் மற்றும் ஜேசன் ஸ்டேதம். இதுல ஜேசன் ஓகே.. பட் ஸ்டேலோன் அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்.. சிக்ஸ் பாக் கொடுமை வேற பண்றாரு.

படத்துல என்னோட மிகப்பெரிய வருத்தம் ஜெட்லி. தீம் ம்யூசிக்கும் ஒத்தக் குடையும் இருந்தாப் போதும், நூறு பேரை எங்காளு பறந்து பறந்து அடிப்பாரு.. அவரைப்போய் ஒரு அண்டா சைஸ் குண்டன் கிட்ட அடிவாங்கவிட்டு.. லீக்கு இது தேவையா? போதாக்குறைக்கு ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டினையும் படத்துல காமெடி வில்லனா ஆக்கியிருக்காங்க. இந்தப் படத்தோட ரெண்டாம் பாகம் எடுக்கலாமான்னு ஸ்டேலோன் யோசிச்சுக்கிட்டு இருக்காராம். அண்ணே.. தயவு செஞ்சு வேணாம்னே.. நாங்க ராம்போவ நெனச்சுக்கிட்டே எங்க காலத்த ஓட்டிடுறோம். ஹ்ம்ம்ம்.. அது ஒரு அழகிய நிலாக்காலம்.

***************

இன்னைக்கு இருக்ககூடிய சில பழமொழிகள் எல்லாம் பார்த்தோம்னா.. நம்ம முன்னோர்கள் சொன்னிட்டுப் போனதோட மருவுதான். அதனால அதோட அர்த்தமும் மாறிப் போயிடுது.

"சேலை கட்டிய மாதரை நம்பாதே.."

இதை மேலோட்டமா பார்த்தா எந்தப் பொம்பளையையும் நம்பக்கூடாதுங்கிற மாதிரி அர்த்தம் வரும். ஆனால் உண்மைல இந்தப் பழமொழியோட அர்த்தம் என்ன? அது இதுதானாம்.

"சேல் அகட்டிய மாந்தரை நம்பாதே.."

சேல் - மீன் அல்லது மீன்களை உடைய பெண். அகட்டிய - விரிந்த தன் விழிகளால் உன்னை அழைப்பவள் (பரத்தை?) அல்லது கண்களால் கதை பேசி மயக்கக் கூடியவள்.. இப்படிப்பட்ட பெண்களை நம்பாதே என்பதுதான் உண்மையான பழமொழியாம்.

***************

ஒரு கவிதை முயற்சி.. (படிச்சுட்டு அடிக்க வரக்கூடாது)

எதுவுமே நடக்காமல்
எல்லாமே நடப்பதுபோல
நடிப்பதென்பது
எப்போதும்
கடினமானதாகவே இருக்கிறது
பிட்டு பட நாயகிக்கு..!!!

***************

கடைசியா பசங்க அனுப்பின ஒரு எஸ்.எம்.எஸ் ஜோக்

பரீட்சை ஹால்ல பசங்க செய்யக்கூடிய ஆறு விஷயங்கள்..

--> ஹாலுக்குள்ள எத்தனை பொண்ணுங்க இருக்காங்கன்னு எண்ணுறது

--> லேடி சூப்பர்வைசரை சைட் அடிக்கிறது

--> எத்தனை ஜன்னல் மாறும் கதவு ஹால்ல இருக்குன்னு எண்ணுறது

--> பேனா நல்லா எழுதுதான்னு கேள்வித்தாள்ல படம் வரஞ்சு பாக்குறது

--> நேத்திக்கு ஏன் படிக்கலைன்னு பீல் பண்றது

--> அடுத்த பரிட்சைக்காவது படிக்கணும்னு சத்தியம் பண்றது

அதே பரிட்சை ஹாலுக்குள்ள பிள்ளைங்க செய்யுற ஆறு விஷயங்கள்..

--> எழுதுறது

--> எழுதுறது

--> எழுதுறது

--> எழுதுறது

--> எழுதுறது

--> எழுதுறது

அப்படி என்னத்தத்தான் எழுதுங்களோ.. அடத்தூ..

இப்போதைக்கு அவ்ளோதான்.. நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-))))

August 18, 2010

உமாசங்கருக்கு ஆதரவாக இடுகை

நண்பர்களே.. ஏற்கனவே சென்ற இடுகையில் சொன்னது போல இது ஒரு நேர்மையான அதிகாரிக்கு ஆதரவு தெரிவிக்கும் முயற்சி.. இதை வாசிக்கும் எல்லோரும் தாங்களும் தங்களுடைய பதிவில் இதேபோல ஒரு இடுகையைப் போட்டு.. அதிகாரத்துக்கு எதிரான உங்கள் கண்டனங்களையும், நேர்மைக்கு துணை நிற்க வேண்டும் என்கிற மன உணர்வையும் வெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.."உமாசங்கர் I.A.S. இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர் என்பது வெள்ளிடை மலை. புதிய திட்டங்கள், செயல் முறைகள் என்று தனக்கென ஒரு பாணியில் நற்பணி செய்து வந்த அவருக்கு இன்றைய அரசு அளித்துவரும் "தண்டனை" , அதற்குரிய காரணம் எல்லாமே என் போன்ற ஒரு குடிமகனுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.

நேர்மையான முறையில் வேலை பார்க்கும் ஒரு சில அதிகாரிகளையும் அதிகாரம் கொண்டும் அடக்க முயற்சிக்கும் அரசுக்கு தீவிரமான கண்டனங்கள்.. சுயலாபத்துக்காக அதிகாரிகளைப் பழிவாங்கும் போக்கினை இந்த அரசு கைவிட வேண்டும்.. துணிச்சலாக அரசை எதிர்த்து நிற்கும் உமாஷங்கரின் நேர்மையைப் பாராட்டுகிறோம்.."

அநீதிக்கு எதிரான உங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க நீங்கள் இங்கே கையெழுத்து இடலாம்.. வாருங்கள் நண்பர்களே.. பதிவர்கள் ஒன்றிணைந்து இதை சாதித்துக் காட்டுவோம்..

August 16, 2010

உமாசங்கருக்காக - ஒரு விண்ணப்பம்

இந்த யோசனையைச் சொன்ன தருமி ஐயாவுக்கு நன்றி... உமாசங்கர் பிரச்சினை பற்றி தருமி அய்யா அவர்கள் எழுதிய இடுகையை இங்கே தருகிறேன்..

உமாசங்கர் நியாயமான அதிகாரி, அவர் மீது அரசு ஏவி இருக்கும் கொடூரத்தை நாம் கண்டும் காணாமலும் இருக்க வேண்டுமா? -- இந்தக் கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொண்டபோது எனக்குத் தோன்றிய பதில் - ஏன் பதிவர்களாகிய நாம் அனைவரும் இம்முறை நம் ஒட்டு மொத்த ஆதரவை அந்த அதிகாரிக்குத் தெரிவிக்கக் கூடாது. அப்படி நாம் ஏதும் செய்தாலும் அது எந்த அளவுக்கு அவருக்கு உதவும் என்பதை விடவும், ஓரளவாவது நாம் நம் கடமையைச் செய்தோம் என்ற நல்ல உணர்வு நமக்கு ஏற்படலாம். அதற்காகவாவது எனக்குத் தோன்றிய ஒன்றை உங்களிடம் கூறுகிறேன். சரியென்றால் ஒட்டு மொத்தமாக ஒரே ஒரு சின்ன காரியம் செய்வோம்.

இந்த அதிகாரி தவறான காரணங்களுக்காக அரசால் தண்டிக்கப்படுகிறார் என்ற எண்ணமுள்ள பதிவர்கள் அனைவரும் ஒன்றாக, ஒரே நாளில் --வருகின்ற வாரத்தில் ஒரு நாள் - புதன் / வியாழக் கிழமை -- நாலைந்து வரிகள் கொண்ட ஒரே ஒரு இடுகையை அவரவர்கள் பதிவில் இடுவோம். அந்த ஒரு நாளில் ஒரே மாதிரியான இடுகைகள் இட்டு நம் ஒற்றுமையான உணர்வை அரசுக்குத் தெரிவிப்போம்.

இதனால் என்ன பயன் என்று கேட்பீரின், என்ன பயன் கிடைக்குமென்று தெரியாது. ஆனால் முழு இணையப் பதிவுலகமே ஒரு மனிதனின் பின்னால் நின்றால் அது அந்த மனிதனுக்கு நிச்சயம் தேவையான மன வலுவைத் தரும். அரசும் சிந்திக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.

ஒருவேளை நான் ஒரு எதிர்க்கட்சிக்காரன், அதற்காக இந்த முயற்சி என்று யாரேனும் நினைத்தால் அவர்களுக்கு ஒரு வார்த்தை: அந்தக் கட்சி, அதன் தலைவர்கள் எதுவுமே என் மரியாதைக்குரியதல்ல. கனவில் கூட நான் அந்தக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டேன் என்ற உறுதி எனக்கு எப்போதும் உண்டு.

இது நிச்சயமாக நியாயம் செத்து வரும் வேளையில் ஒரு தனி மனிதன் பல எதிரப்புகளையும் தாங்கி நியாயத்தின் பக்கம் நிற்கிறானே, அவனுக்கு நம்மாலான எளிய இந்த உதவியைச் செய்வோமே என்ற ஒரே எண்ணம்தான்.

வாருங்கள் ... ஒன்றுபட்டு நின்று நாம் நினைப்பதைச் செயலில் காட்டுவோம். இத்தனை பதிவர்கள் ஒன்றிணைந்தால் நல்லது நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கையோடு ஒன்றிணைவோம். வாருங்கள் ....

நண்பர்களே.. உமாசங்கர் என்னும் அதிகாரியின் மீது ஏவப்பட்டிருக்கும் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிரான நம் மன உணர்வுகளைக் காட்ட இது ஒரு நல்ல வாய்ப்பு.. இந்த ஒரு அதிகாரி என்றில்லாமல் நாளை இது ஒரு தொடர்கதை ஆகிவிடக்கூடும்.. இதே நிலை யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடும்.. எனவே இது போன்ற அட்டூழியங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, உமாஷங்கருக்கு நம்முடைய ஆதரவைத் தெரிவிப்போம்..

உங்களுக்கு விருப்பம் இருப்பின் மேலே சொல்லியிருப்பது போல புதன் அல்லது வியாழன் அன்று.. ஒரு நான்கு வரிகளை உங்கள் தளத்திலே போடுங்கள்..

"நேர்மையான முறையில் வேலை பார்க்கும் ஒரு சில அதிகாரிகளையும் அதிகாரம் கொண்டும் அடக்க முயற்சிக்கும் அரசுக்கு தீவிரமான கண்டனங்கள்.. சுயலாபத்துக்காக அதிகாரிகளைப் பழிவாங்கும் போக்கினை இந்த அரசு கைவிட வேண்டும்.. துணிச்சலாக அரசை எதிர்த்து நிற்கும் உமாஷங்கரின் நேர்மையைப் பாராட்டுகிறோம்.."

நீங்கள் இதே வரிகளைத்தான் எழுத வேண்டும் என்றில்லை.. உங்களுக்குத் தோன்றுவதை எழுதலாம்.. ஆனால் இதை ஒரு சமுதாயக் கடமையாக எண்ணி தயவு செய்து எழுதுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்...

குறிப்புகள்:

தயவு செய்து இதை சாதி ரீதியாக அணுக வேண்டாம். பால், சாதி, சமயம், இருக்குமிடம் எந்த வேறுபாடுமின்றி இதில் ஒன்றுபடுவோமே ...

நிறைய வாசகர்களைப் பெற்றுள்ள பதிவர்கள் இதை மறுபதிப்பாக இட்டால் இன்னும் பலரின் கண்களுக்குப் போய்ச் சேரும். எனவே மறுபதிப்புகள் வரவேற்கப்படுகின்றன.

நண்பர்களுக்கும் இச்செய்தியை இட்டுச் செல்லுங்கள். ஒன்றாக இடுகை இட உதவுங்கள்.

August 13, 2010

காதல் சொல்ல வந்தேன் - தேவையா?

படத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்.. தமிழ் சினிமாவின் இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள்.. தயவு செய்து இது போன்ற படங்களை எடுக்காதீர்கள்.. ப்ளீஸ்..

இரண்டு நாட்களுக்கு முன், வாடிப்பட்டியில் இருந்து மதுரைக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தேன். எனது பின்னிருக்கையில் இரண்டு பேர். அவர்கள் பேசிக் கொண்டது இங்கே..

"மாப்ள.. எவ்வளவு கெஞ்சினாலும் மதிக்க மாட்டேங்குறாடா.. அவள ஏதாவது பண்ணனும்டா.."

"ஏண்டா.. அவ்ளோ சின்சியராவா அவள லவ் பண்ற.."

"ஆமாடா.. சத்தியம்மா அவ இல்லன்னா செத்துருவேண்டா.."

"சரி சரி விடுடா.. இப்படிச் செய்வோம்.. யாராவது ஆள வச்சு அவளைத் தூக்கிட்டு வந்து நம்ம குட்லாடம்பட்டி ஷெட்டுல ஒளிச்சு வச்சுருவோம்.. நாலு நாள் பட்டினி போடு.. மிரட்டு.. மாட்டேங்குறாளா .. அவ முன்னாடி போய் அழு.. சாகுறேன்னு சொல்லு.. எப்படியாவது மசிய வச்சிருவோம்.. பயப்படாதடா.."

"இது நடக்குமாடா மாப்ள..?"

"கண்டிப்பா.. நான் இருக்குறேன் இல்ல? நீ பணத்துக்கு மட்டும் ஏற்பாடு பண்ணு.. பார்த்துக்கலாம்.."

யாரென்று பார்க்கலாம் எனத் திரும்பியவன் அதிர்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு அதிகம் போனால் பதினைந்து வயது இருக்கலாம். இந்த மாதிரியான சமூகத்தில்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் நாம்.

சினிமா என்பது சமூகத்தைத்தான் எதிரொலிக்கிறது. இங்கே நடக்காததையா நாங்கள் காட்டி விட்டோம் என்பதெல்லாம் அந்தக் காலம். உண்மையைச் சொல்வதானால் இன்று சினிமாவைப் பார்த்துத்தான் சமூகம் தன்னை வடிவமைத்துக் கொள்கிறது. திரையில் தோன்றுபவர்களைப் போலவே உடை உடுத்துவதில் ஆரம்பித்து நம்மைக் காக்கும் அரசியல் கடவுள் வரை எல்லாரையும் சினிமாவில்தான் தேடிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் நிதர்சனம்.

ஏற்கனவே கல்லூரி என்றாலே வகுப்புக்குப் போகாத மாணவர்கள், ரவுடிசம், காதல் என்றுதான் சினிமாவில் அர்த்தம். அதை உண்மை என்று நம்பி வந்து நிஜ வாழ்க்கையிலும் அலும்பு பண்ணுவதுதான் இன்று நிறைய கல்லூரிகளில் நடந்து வருகிறது. இது போன்ற சூழ்நிலையில்தான் "காதல் சொல்ல வந்தேன்" போன்ற படங்கள் அவசியமா என்ற கேள்வி வருகிறது.

1980களில் வந்த கல்லூரிப் படங்களை நினைவிருக்கிறதா? வீட்டில் படும் கஷ்டம் பற்றிக் கவலைப்படாத நாயகன். கல்லூரியின் முதல் நாளில்.. ஏதாவது ஒரு மரத்தின் அடியில் பூக்கள் மழையாய்ப் பொழியும் தருணத்தில் நாயகியைச் சந்திப்பான்.. பார்த்தவுடன் காதல்.. அவளுக்கோ அவனைப் பிடிக்காது.. பைத்தியம் போல அவள் பின்னாடியே அலைந்து.. அவளுக்கும் காதல்... கடைசியில் சாவான் அல்லது சாவார்கள்.. அப்புறம் தெய்வீகம், அமரம் என்றெல்லாம் சிலைடு போடுவார்கள்.

தமிழ் சினிமா கொஞ்ச காலமாக மறந்து போயிருந்த விஷயத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார் பூபதிபாண்டியன் (போன வாரம் வெளிவந்த பாணாவும் இதே போலத்தான் என்று கேள்வி..). அதிலும் இந்தப் படத்தின் புதுமை.. தன்னை விட வயதில் மூத்த பெண்ணை.. தன்னை அக்கா என்றழைக்க சொல்லும் பெண்ணை காதலிக்கிறார் என்பதே கதை.

"யார் எப்படிப் போனாலும் கவலையில்லை.. எனக்கு என் காதல்தான் முக்கியம்.. பெற்றவர்கள் காணும் கனவுகளை எல்லாம் நெருப்பில் போட்டு கொளுத்தி விட்டு என்னுடைய சொந்த ஆசைகளுக்குத்தான் நான் முன்னுரிமை கொடுப்பேன்.. நானும் கெட்டு என்னைச் சுற்றி இருப்பவர்களையும் நாசம் செய்வேன்.." இதுதான் இந்தப் படம் சொல்ல வரும் மெசேஜ்.

நன்றாக நடித்திருக்கும் அறிமுக நாயகன், யுவனின் அட்டகாச இசை, தெளிவான திரைக்கதை, படமெங்கும் பட்டாசு கிளப்பும் காமெடி என இப்படம் வெற்றி பெறுவதற்கான சகல விஷயங்களும் இந்தப்படத்தில் இருக்கின்றன. ஆனால் அப்படி நடக்குமாயின், அதை நம் கெட்ட நேரம் என்றுதான் சொல்ல வேண்டும்.

நீங்கள் நல்ல படங்களைத் தர வேண்டாம்.. என்னவென்று தெரியாமலே பல வழிகளில் தங்கள் வாழ்க்கையை நாசம் செய்து கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்களுக்கு இதுபோன்ற மோசமான படங்களைத் தராமல் இருக்கலாமே.. காசையும் கொடுத்து.. படத்தை பார்த்து விட்டு இப்படி பொலம்ப வச்சுட்டானுகளே பாவிகள் என்பதைத் தவிர வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை...:-(((

August 12, 2010

விரிதியானா (1961)


உலக சினிமாவின் பிதாமகர்களில் ஒருவராகக் கொண்டாடப்படுபவர் லூயி புனுவல். மதம் மற்றும் தனி மனிதர்கள் மீது மதம் விதிக்கும் கட்டுப்பாடுகள் பற்றிய தன்னுடைய கருத்துகளை தைரியமாக முன்வைத்த ஸ்பானிஷ் இயக்குனர். அவருடைய முக்கியமான படமான "விரிதியானா" பற்றி சாருவின் ராசலீலாவில் படித்த நாளில் இருந்து, அதைப் பார்த்து விட வேண்டுமென்று வெகு நாட்களாக ஆசை. சமீபத்தில்தான் அது சாத்தியமானது.

கன்னியாஸ்திரி ஆவதற்காக மிஷன் கல்லூரியில் பயின்று வருபவள் விரிதியானா. அவளுடைய படிப்புக்கு இத்தனை நாட்களாக உதவி புரிந்து வந்த மாமா டான் ஜெயிமின் உடல்நிலை சரி இல்லாமல் இருப்பதாக தகவல் வருகிறது. போக விருப்பம் இல்லாத சூழலிலும் மதரின் அறிவுறுத்தலின் பேரில் தன்னுடைய மீதமிருக்கும் ஒரே உறவைக் காண கிளம்புகிறாள் விரிதியானா.

பெரும் செல்வந்தரான டான் ஜெயிம் தனியாளாக தனது பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். அவருடைய மனைவி சிறு வயதிலேயே இறந்து போக.. பணியாள் ரமோனா, ரமோனாவின் மகள் ரிடா, எடுபிடி வேலையாள் மாஞ்சோ என்ற சின்னஞ்சிறு உலகில் எந்த பிடிப்பும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார். தன்னுடைய மனைவியைப் போலவே இருக்கும் விரிதியானா மீது அவருக்கு அலாதிப் பிரியம். ஆனால் விரிதியானாவோ அவரை வெறுக்கிறாள்.

டான் ஜெயிமின் வீட்டிலும் விரிதியானா தன்னுடைய தீவிரமான மத கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறாள். தரையில்தான் படுக்கிறாள். கடுமையான உடைகளை உடுத்துகிறாள். அவளால் அங்கே இயல்பாக இருக்க முடியவில்லை. ஒரு நாள் தன்னுடைய மாமாவுக்கு இன்னொரு குடும்பம் ஒன்றிருப்பதைப் பற்றி விரிதியானா அவரிடமே கேட்கிறாள். அவரோ தன்னை நியாயப்படுத்த முனைகிறார். அவர் மீதான அவளுடைய வெறுப்பு இன்னும் அதிகமாகிறது. விரைவில் வீட்டை விட்டுக் கிளம்பி மிஷன் கல்லூரிக்குத் திரும்ப முடிவு செய்கிறாள்.

விரிதியானா ஊருக்குத் திரும்ப வேண்டிய கடைசி நாள். அன்றிரவு தன்னுடைய மாமாவின் வேண்டுகோளுக்கு இணங்க அவருடைய மனைவியின் உடைகளை அணிந்து உணவுண்ண வருகிறாள். அங்கே விரிதியானா தன்னை மணந்து கொள்ள வேண்டும் என்று கேட்கிறார் டான் ஜெயிம். கோபம் கொள்ளும் விரிதியானா மறுத்து விடுகிறாள். காப்பியில் மயக்க மருந்து கொடுத்து அவளை மயக்கமுறச் செய்து படுக்கை அறைக்கு தூக்கி செல்கிறார் டான் ஜெயிம். ஆனால் குற்றவுணர்வு காரணமாக அவளை எதுவும் செய்யாமல் போய் விடுகிறார்.

காலையில் விழித்தெழும் விரிதியானாவிடம் தான் அவளை அடைந்து விட்டதாகப் பொய் சொல்கிறார் டான் ஜெயிம். எப்படியாவது அவளைத் தன்னோடு இருக்கச் செய்திட வேண்டும் என விரும்புகிறார். ஆனால் விரிதியானாவோ கோபம் அதிகமாகி உடனே கிளம்புகிறாள். டான் ஜெயிம் உண்மையில் நடந்தது என்னவென்று சொன்னாலும் நம்பாமல் கிளம்பி விடுகிறாள். மனமுடைந்த டான் ஜெயிம் தூக்குப் போட்டு செத்துப் போகிறார்.

தன்னுடைய மாமாவின் சாவுக்குத் தானும் ஒரு வகையில் காரணம் என நம்பும் விரிதியானா அங்கேயே தங்கியிருக்க முடிவு செய்கிறாள். மாளிகைக்குப் பின்னாடி இருக்கும் பண்ணை வீட்டை சுத்தம் செய்து தங்குகிறாள். மீண்டும் சர்ச்சுக்கு வரும்படி கூப்பிடும் மதரின் அழைப்பை நிராகரிக்கிறாள். நகரில் இருக்கும் பிச்சை எடுக்கும் மனிதர்களைக் கூட்டி வந்து சேவை செய்ய முடிவு செய்கிறாள்.

சாகுமுன் தன்னுடைய சொத்துகளை விரிதியானாவின் பெயருக்கும், ஊர் அறிந்திராத தன்னுடைய மகன் ஹோர்ஹெயின் பெயருக்கும் எழுதி வைத்திருக்கிறார் டான் ஜெயிம். கடைசிவரை தன்னும் ஏற்றுக் கொள்ளாத தனது அப்பா சாகும்போது ஏன் இப்படி செய்தார் என்பதை ஹோர்ஹெயால் புரிந்து கொள்ள முடியவில்லை. தன்னுடைய காதலியோடு மாளிகைக்கு வந்துத் தங்குகிறான். அவனும் விரிதியானா தன்னை மதிப்பதில்லை என்று உள்ளுக்குள் புழுங்குகிறான்.

பண்ணை வீட்டில் தங்கி இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு உள்ளேயும் நிறைய பிரச்சினைகள் வருகின்றன. விரிதியானா கூட்டி வரும் புதியவன் ஒருவனுக்கு தொழுநோய் இருப்பதை அறிந்து மற்றவர்கள் அவனை வெறுக்கின்றனர். எல்லாரையும் சமாதனாம் செய்து, இனிமேல் அவர்கள் நன்றாக வேலை பார்த்து தங்களைத் தானே கவனித்துக் கொள்ள வேண்டும் என்கிறாள் விரிதியானா. அதே வேளையில் ரமொனாவுக்கும் ஹோர்ஹெக்கும் இடையே உறவு ஏற்படுகிறது.

மறுநாள் விரிதியானாவும், ரமோனாவும் வீட்டை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி பிச்சைக்காரர்களிடம் சொல்லி விட்டு வழக்கறிஞர் வீட்டுக்குப் போகிறார்கள். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வோம் என்றெண்ணி எல்லாப் பிச்சைக்காரர்களும் மாளிகைக்குள் நுழைகிறார்கள். மது, மாமிசம், பின்னணியில் ஒலிக்கும் கிராமபோன் இசை என்று விருந்து தடபுடலாக நடக்கிறது. போதை தலைக்கேற அனைவரும் நடனமாடத் துவங்குகிறார்கள். பிச்சைக்காரர்களில் ஒரு ஆணும் பெண்ணும் உறவு கொள்வதைக் கண்டு மற்றொரு பிச்சைக்காரன் கோபப்பட அங்கே சண்டை மூண்டு வீடே நாசக்காடாகிறது.

வீடு திரும்பும் விரிதியானாவும் ஹோர்ஹெவும் அதிர்ச்சி அடைகிறார்கள். பிச்சைக்காரர்களில் ஒருவன் ஹோர்ஹெவைத் தாக்கி மயக்கமுறச் செய்த பின்பு விரிதியானாவை வன்புணர்ச்சி செய்ய முயலுகிறான். காவலுக்கு அருகிலிருக்கும் தொழுநோய்க்காரனுக்கு பணம் தருவதாக ஹோர்ஹே ஆசை காட்ட, விரிதியானாவைப் புணர முயலுபவனை தொழுநோய்க்காரன் அடித்துக் கொல்கிறான். ரமோனா போலிசை அழைத்து வர எல்லோரும் கைது செய்யப்படுகிறார்கள்.

யார் மீது தான் அன்பு செலுத்தினோமோ, அவர்களே தன்னை இத்தகைய நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள் என்பதை விரிதியானாவால் நம்ப முடியவில்லை. இத்தனை காலம் மதத்தின் பெயரால் தனக்கு சொல்லப்பட்ட விஷயங்கள் எல்லாம் பொய்தானா என்று எண்ணத் துவங்குகிறாள். கடைசியில் ஹோர்ஹெவின் ஆசைக்கு இணங்கி தனக்காக வாழ முடிவு செய்கிறாள். ஹோர்ஹே, விரிதியானா மற்றும் ரமோனா மூவரும் ஒன்றாக அமர்ந்து சீட்டாடுவதாக முடிகிறது படம்.

கிருத்துவ மதத்தின் அடிப்படை நம்பிக்கைகளைக் கேலி செய்வதாகச் சொல்லி இந்தப் படம் ஸ்பெயினில் வெகு நாட்களாகத் தடை செய்யப்பட்டு இருந்தது.

--> ஒரு காட்சியில் குதிரை வண்டியின் அடியில் கட்டப்பட்டு இருக்கும் நாயைக் காண்பிக்கிறார் புனுவல். நாயை மதத்தின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்ட மனிதர்களின் குறியீடு என்று கொள்ளலாம்.

--> பிச்சைக்காரர்கள் உணவுண்ணும் காட்சியில் அப்படியே கடைசி விருந்தை (the last supper) ஞாபகப்படுத்தி இருப்பது

--> சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் உருவடிவில் இருக்கும் கத்தி (Crucifix)

--> கடைசி காட்சியில் விரிதியானா வைத்திருக்கும் முள்கிரீடம் தீயிலிட்டு எரிக்கப்படுகிறது.. இத்தனை நாட்களாகத் தன் தலையில் வைத்திருந்த மதம் என்னும் பாரத்தை அவள் இறக்கி வைக்கிறாள் என்று பொருள்படும் காட்சி இது

மனித மனத்தில் இருக்கும் முரண்களைப் பற்றிப் பேசுவதே இந்தப் படத்தின் முக்கியமான பலம் என்று சொல்லலாம். தன்னுடைய மகனைப் பற்றி கவலை கொள்ளாத டான் ஜெயிம், தண்ணீரில் சிக்கி போராடும் ஒரு சிறு பூச்சி மீது அக்கறை கொண்டவராக இருக்கிறார். தன்னுடைய மன உணர்வுகள் என்பதை விட மதம் தனக்கு கற்பித்த விஷயங்களைக் காப்பாற்றுவதே முக்கியம் என எண்ணுகிறாள் விரிதியானா. குழந்தை இல்லாத காரணத்துக்காக விசனப்படும் பிச்சைக்காரி ஒருவள், மதுவின் மயக்கத்தில் மற்றொரு பிச்சைக்காரியின் குழந்தையை கடிந்து கொள்கிறாள். எந்த தொழுநோய்க்காரனை விரிதியானா அதிக அக்கறை எடுத்து கவனித்துக் கொண்டாளோ, அவனே அவளைப் புணருவதற்காக தன்னுடைய முறை வரும்வரை காத்திருக்கிறான்.

எல்லா மனிதர்களின் மனதில் இருக்கும் வித்தியாசமான எண்ணங்கள், ஆழமான விகாரங்களை எளிதாகப் படம்பிடிக்கிறார் புனுவல். தன்னுடைய மனைவியின் உடைகளையும், காலணிகளையும் அணிந்து அழகு பார்க்கும் டான் ஜெயிம்.. வியாதிக்காரி ஒருத்தியோடு இருந்ததால்தான் தனக்கு தொழுநோய் வந்தது, எனவே தன்னைத் தொடும் அனைத்துப் பெண்களுக்கும் தொழுநோய் வரவேண்டும் எனப் பிரார்த்திப்பவன்.. தனக்கென காதலி இருந்தும் ரமோனா, விரிதியானா இருவரின் மீதும் ஆசை கொள்ளும் ஹோர்ஹே.. வாழ்வில் ஆதரவாக ஒரு மனிதர் வேண்டுமென முதலில் டான் ஜெயிமையும் பிறகு ஹோர்ஹெவையும் சார்ந்து வாழும் ரமோனா.. இரண்டு ஆடுகளை பிடித்து உண்ணுவதால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது என்று சொல்லும் பிச்சைக்காரர்கள்.. காயம் பட்ட புறாவைக் காப்பாற்றுவதும், பிறகு விருந்தின்போது அதே புறாவின் சிறகுகளைப் பறக்க விட்டு மகிழும் தொழுநோய்க்காரன்.. எத்தனை விதமான மனிதர்கள்?

டான் ஜெயிம் தூக்கு போட்டு செத்துப் போன ஸ்கிப்பிங் கயிறைக் கொண்டு அதே மரத்தடியில் விளையாடும் ரீட்டா மூலம் குழந்தைகள் எந்த சூதும் அறியாதவர்கள் என்பதை ஒரே காட்சியில் அழகாக சொல்லி இருக்கிறார் புனுவல். அதே போல கால்களின் மீது புனுவலுக்கு அலாதிப்பிரியம் இருக்கும்போலத் தெரிகிறது. குதித்தாடி ஸ்கிப்பிங் செய்யும் ரிடா, தூக்கத்தில் நடக்கும் விரிதியானா, டான் ஜெயிம் என்று படத்தில் பலருடைய கால்களின் க்ளோசப் காட்சிகள் இருக்கின்றன.

வெகு இயல்பான நடிகர்கள்.. பின்னணியில் ஒலிக்கும் இயற்கை சத்தங்கள் மற்றும் கிராமபோன் இசையை மட்டுமே பயன்படுத்தி இருப்பது.. என எல்லாமே இயல்பாக இருக்கின்றன. ரமொனாவாக நடித்து இருப்பவர் மட்டுமே கொஞ்சம் நாடகத்தனத்துடன் இருக்கிறார். அதிலும், அவரும் ஹோர்ஹெவும் உறவு கொள்ளும் காட்சியில், பூனை ஒன்று எலியைக் கவ்விப் பிடிப்பது போலக் காட்சி அமைத்து இருந்தது மட்டுமே சிரிப்பைக் கிளப்பியது.

கேன்ஸ் விழாவில் விருது பெற்ற இந்தப்படம் சொல்ல வரும் விஷயம் மிகவும் எளிமையானது. மதம் என்ற விஷயத்தை விட தனி மனித உணர்வுகள் முக்கியமானவை. அதே போல ஏழை, பணக்காரர் என்றெல்லாம் இல்லாமல் எல்லாரின் மனதிலும் வன்மம் ஒளிந்திருக்கிறது. வாய்ப்பு கிடைக்காதவரை இங்கே அனைவரும் நல்லவர்கள்தான்.. இல்லையா?

குறிப்பு: இந்தப் படத்தின் குறுந்தகடைத் தந்து உதவிய பேரா.மணிகண்டனுக்கு நன்றிகள் பல..

August 10, 2010

தமிழில் பொறியியல் கல்வி -சாத்தியமா?

காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் அவன். 95% மதிப்பெண்கள் பெற்று வகுப்பிலேயே முதலாவதாக வந்தவன். எங்கள் கல்லூரியில் நேரடியாக இரண்டாம் ஆண்டு மின்னியல் படிப்பில் சேர்ந்து இருந்தான். இருபது நாட்களாக ஒழுங்காக வகுப்புகளுக்கு வந்து கொண்டிருந்தான். மிகவும் ஆர்வமாக இருக்கிறான் என்றும், நன்றாக வரக் கூடியவன் என்றும் அவனுக்குப் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர்கள் எல்லாருமே பெருமையாக சொன்னார்கள்.

ஆனால் போன வாரம் தொடங்கிய மாதாந்திரத் தேர்வுக்கு அவன் வரவில்லை. அவனுக்குப் பதிலாக அவனுடைய அப்பாதான் வந்திருந்தார். அவனுடைய வகுப்பாசிரியர் என்கிற முறையில் அவரிடம் பேசினேன்.

"என்னாச்சுங்க.. பையன் ஏன் வரல?"

"அது.. பரீட்சைக்கு.. ரொம்ப பயப்படுறாங்க.. "

நன்றாகப் படிக்கக் கூடியவன் பரிட்சைக்கு பயப்படுகிறானா? என்னால் நம்பமுடியவில்லை.

"அது வந்துங்க.. இவ்வளவு நாள் தமிழ் மீடியத்துல படிச்சுட்டு.. திடீர்னு ஆங்கிலத்துல தேர்வு எழுதச் சொன்னா.. என்னால முடியல.. நான் படிக்கவே போகலன்னு ஒரே அழுகைங்க.."

ஆகா.. இதுதான் விஷயமா? அவனை அழைத்து வரச் செய்து, தைரியம் சொல்லி, அவனைப் போலவே தமிழ் மீடியத்தில் படித்த சீனியர் மாணவர்களை விட்டுப் பேசச் சொல்லி, ரொம்ப நேரம் கவுன்சில் பண்ணி.. கடைசியில்தான் சமாதானம் ஆனான். இப்போது கல்லூரிக்கு சந்தோஷமாக வந்து போய்க் கொண்டிருக்கிறான்.

இவனை மாதிரி எத்தனை மாணவர்கள்? திறமை இருந்தும் இந்த மொழிப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பார்கள்? இவர்களைப் போன்ற மாணவர்களுக்காகத்தான் "தமிழிலேயே பொறியியல் படிக்கலாம்" என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது.

மேலோட்டமாக பார்க்கும்போது இது மிகவும் நல்லதொரு திட்டமாகத் தோன்றலாம். ஆனால் உண்மை நிலை என்ன? தமிழில் பொறியியல் கல்வி சாத்தியமா? சாத்தியமா என்பதை விட இந்த அணுகுமுறை சரிதானா என்று யோசிக்க வேண்டும்.

பொறியியல் படிப்பைப் பொறுத்தவரை நம் நிலை என்ன? இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 450 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஒவ்வொரு வருஷமும், தங்களுடைய பட்டப்படிப்பை முடித்து வெளிவரும் பொறியாளர்களின் எண்ணிக்கை, எப்படியும் ஒரு லட்சத்தைத் தாண்டும். ஆனால் இவர்களில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே நல்ல வேலைக்குப் போவதற்கான தகுதிகளைப் பெற்றிருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது... நம்ப முடிகிறதா?

பொறியியல் படிப்பின் தரம் அத்தனை சொல்லிக் கொள்ளும்படியானதாக இல்லை என்பதுதான் நிதர்சன உண்மை. குறிப்பாக தொடர்பு கொள்ளும் திறன் மற்றும் ஆங்கில அறிவில் நமது மாணவர்கள் மிகவும் பின்தங்கி இருப்பதாக சொல்கிறார்கள்.

அத்தோடு, இன்றைக்கு நம் மாணவர்கள் எந்தப் பிரிவில் படித்தாலும் சரி, அவர்களுக்கு கடைசியாக விதிக்கப்பட்டது சாப்ட்வேர் துறையைச் சேர்ந்த வேலையாகத்தான் இருக்கிறது. கம்ப்யூட்டர் சயன்ஸ், .டி படித்த மாணவர்களை விட பிற படிப்புகளைப் படித்துவிட்டு கணினித்துறையில் இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இன்று ரொம்பவே அதிகம்.

சரி
... இவர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் நிறுவனங்கள் யாவை? எல்லாமே அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பின்புலம் கொண்ட நிறுவனங்கள். அவர்களுக்கான வேலை என்று வரும்போது ஆங்கிலம் என்பது தவிர்க்க இயலாத அத்தியாவசியத் தேவையாகி விடுகிறது. நான்கு வருடங்கள் ஆங்கிலத்தில் படித்த மாணவர்களே சரளமாக பேச தந்தி அடிக்கும்போது, பொறியியலைத் தமிழில் படிக்கும் மாணவர்களின் கதி என்னாவது?

இங்கே ஒரு சில கேள்விகள் எழலாம். ஏன்.. தாய்மொழியில் படிக்கும் வழக்கம் ஜப்பான் மற்றும் ஜெர்மன் போன்ற நாடுகளில் இல்லையா? ஆமாம். இருக்கிறது. ஆனால்அங்கே இருக்கும் அரசாங்கத்தால் அந்த மக்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர முடிகிறது. அது நம் இந்தியாவில் சாத்தியமா? இங்கே இருக்கிறவர்களுக்கே வழியைக் காணோம்.. இதில் எங்கே புதிதாக வருபவர்களுக்கு.. அதுவும் தமிழில் படித்தவர்களுக்கு? சாத்தியமே கிடையாது.

பொறியியல் படிப்பைத் தமிழில் சொல்லித் தருவதில் இருக்கும் இன்னொரு மிகப் பெரிய பிரச்சினை - ஆசிரியர்கள் பற்றாக்குறை. இன்றைக்கு விரும்பி ஆசிரியர் பணிக்கு வரும் மக்கள் ரொம்பக் குறைவு. இதில் எங்கே போய் தமிழில் பாடம் சொல்லித் தருபவர்களைக் கூட்டி வருவது? அப்படியே கிடைத்தாலும் தமிழில் சொல்லித் தருவதென்பது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கக் கூடும். மொழிபெயர்ப்பு, பாடப்புத்தகங்கள் என்று பலப்பல நடைமுறைப் பிரச்சினைகள் உள்ளன.

இந்தக் காரணங்களை எல்லாம் யோசித்துப் பார்க்கும்போதுதான் நம் தாய்மொழியில் பொறியியல் படிப்பதென்பது கஷ்டமென சொல்கிறேன். உடனே.. "ஆகா.. இங்கே ஒருவன் தமிழ்ப் பற்றில்லாமல் இருக்கிறான்" என்றெல்லாம் ஆயுதங்களைத் தூக்கி விட வேண்டாம். சாதக பாதகங்களை ஆராய்ந்து, என் மனதுக்குப் பட்டதைச் சொல்லி இருக்கிறேன். இவை என்னுடைய கருத்துகள் மட்டுமே.

ஒரு சில விஷயங்களை வெளியே இருந்து பார்ப்பதை விட, அவை நடைமுறைக்கு வரும்போதுதான் உண்மை நிலைகள் தெரிய வரும். அதே போலத்தான் இந்த "தமிழில் பொறியியல்" என்னும் பிரச்சினையும். பார்க்கலாம். நல்லது நடந்தால் சந்தோஷமே.. இதைப் பற்றிய உங்கள் கருத்துகளையும் பதிவு செய்யுங்கள் தோழர்களே..!!!

August 7, 2010

ஒரு டுபாக்கூரின் வாக்குமூலம்..!!!

வலை(டை)யுலகில் நான் என்னும் தொடர்பதிவை எழுதும்படி அழைப்பு விடுத்த நண்பர் முகிலனுக்கு நன்றி..

1)வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

கார்த்திகைப்பாண்டியன்
(பதிவுக்கு வச்சிருக்கிற பேரு "பொன்னியின் செல்வன்" - எனக்கு ரொம்பப் பிடிச்ச புத்தகத்தோட பேருப்பா...)

2)அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

எழுதறதுக்கு வச்சுக்கிட்ட கா.பா - என்னோட நிஜப்பேரே இதுதாங்க... எங்க வீட்டுல வச்ச உண்மையான முழுப்பேர கேட்டு மயக்கம் போட்டு விழ மாட்டீங்கன்னா சொல்றேன்.. துரை வேல சண்முக கார்த்திகேயப் பாண்டியன்.. பள்ளிச் சான்றிதழ் எல்லாத்துலையும் இதை எழுதுறதுக்கே ஒரு மணி நேரம் ஆகும்னு பக்கத்து வீட்டு மாமா ஒருத்தரு சுருக்கி வச்சதுதான் இந்தப் பேரு.. இன்னும் விரிவாத் தெரியணும்னா என்னோட அம்பதாவது பதிவப் படிங்கப்பா...

3)
நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி?

அது ஒரு விபத்துன்னு சொல்லலாமா? ஹி ஹி ஹி.. சரி சரி.. ஒரு எதேச்சையான இணையத்தேடலில் அதிஷாவின் வலைப்பூ கண்ணில் சிக்கியது.. அங்க தொட்டு இங்க தொட்டு நெறைய பேரைப் படிச்சேன்.. எல்லாருக்கும் பின்னூட்டம் போட நமக்குன்னு ஒரு தளம் வேணும்னு ஆரம்பிச்சதுதான் இந்தப்பதிவு...எதுவுமே தெரியாமதான் ஆரம்பிச்சேன்.. அப்புறம் கையப் பிடிச்ச கரகரப்பு எதையோ பிடிச்சு பிசையச் சொல்லுங்கிற மாதிரி... இயல்பாகவே இருந்த தமிழார்வம் காரணமா எழுத ஆரம்பிச்சு இப்போ ஒண்ணரை வருஷம் முடிஞ்சு போச்சு..

4)உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்ன எல்லாம் செய்தீர்கள்?

ரொம்பப் பெரிய விஷயமெல்லாம் இல்ல நண்பா.. ஆரம்பத்துல திரட்டி பத்தி தெரியாத காரணத்தால நானே எழுதி நான் மட்டுமே படிச்சுக்கிட்டு இருந்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமா நெட்டே கதின்னு உக்கார்ந்துதான் சூதக் கண்டுபிடிச்சேன்..

இங்க எல்லாமே கிவ் அண்ட் டேக் பாலிசி தான்.. நிறைய நண்பர்களுக்குப் பின்னூட்டம் போட்டேன்.. அப்புறம் ஆரம்பத்துல கொஞ்சம் வெவகாரமா எழுதினேன்.. விஜய் ஓட்டுறது, துப்பட்டா போடலாமா வேண்டாமா, பிடிக்காத விளம்பரங்கள் .. இந்த மாதிரி.. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா மக்கள் கவனிக்க ஆரம்பிச்சாங்க..

பதிவுல நாம எழுதுறது ஒரே ஒரு எண்ணத்துலதான்.. வாசிக்குரவங்க கூட இயல்பா உரையாடுற மாதிரி இருக்கணும்னு எழுதுவேன்.. அவ்வளவுதான்.. எல்லா நண்பர்களின் ஊக்கமும் ஆதரவும்தான் இன்னைக்கு வரைக்கும் தொடர்ந்து எழுத வச்சுக்கிட்டு இருக்கு..

5)வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

என்னுடைய எல்லா இடுகைகளிலுமே எங்கோ ஓர் இடத்தில் நான் இருக்கிறேன். ஒரு பங்கேற்பாளனாக அல்லது ஒரு பார்வையாளனாக.. முழுவதும் புனைவு என்பது என்னால் அவ்வளவாக, தெளிவாக சொல்ல இயலாத ஒரு விஷயமாகவே இருப்பதால், என்னுடைய சொந்த வாழ்விலிருந்தே சம்பவங்களைக் கோர்த்து எழுதுகிறேன்.

விளைவு என்று சொன்னால், ஒரு சம்பவத்தை சொல்லலாம். விஜயைக் கிண்டல் பண்ணி ஒரு இடுகை எழுதி இருந்த நேரம்.. பிரைவேட் நம்பர் என்று நடு ராத்திரி ரெண்டு மணிக்கு ஒரு நாதாரியிடமிருந்து போன் வந்தபோது வீட்டில் பயந்து போனார்கள். அதன் பிறகுதான் பதிவல் இருந்த என்னுடைய அலைபேசி எண்ணை எடுத்துவிட்டேன்.

6)நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

சத்தியமாக இது பொழுதுபோக்கு கிடையாது. பிறகு? பதிவுகளின் மூலம் நிறையவே சம்பாதித்து இருக்கிறேன்.. அன்பான உறவுகளை. இந்த நட்புகளே எனக்கு பதிவுலகில் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.

7)நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணு. தமிழ்லதான் - அதுவும் இது மட்டும்தான்.

8)மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

அன்பையும் உறவுகளையும் மீறி எப்போதாவது வெடித்துக் கிளம்பும் பிரச்சினைகளின்போது பொதுவாகக் கோபம் வந்திருக்கிறது.
அப்பவெல்லாம் எதுலையும் தலையிடாம அமைதியா இருந்துடுவேன்.(கள்ள மவுனம்?!) காரணம், கோபத்தில் ஏதேனும் வார்த்தைகள் வந்து விட்டால் அதை மீண்டும ள்ள முடியாது. எனவே கப் சிப் காரவடைதான்.

மற்றபடி
சில பதிவர்கள் மேல் பொறாமை நெறையவே உண்டு. ஏன் நம்மால் இப்படி எழுத முடியவில்லை என்று நிறைய பேர் மேல் காண்டாக இருக்கிறேன். நான் அடிப்படையில் ஒரு கோமாளி.. ஆனால் எழுத்தில் எனக்கு அது வந்து தொலையாது. எனவே
நகைச்சுவையாக எழுதும் மக்கள் மீது கொஞ்சம் பொறாமை உண்டு.

9)உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

பின்னூட்டங்களில் நண்பர் பிரேம்குமார் சண்முகமணி. என்னுடைய முதல் வாசகர் அவர்தான். நான் எழுதத் தொடங்கிய காலத்தில், பல புதிய பதிவர்களைத் தேடிக் கண்டுபிடித்து ஊக்குவித்த நல்ல மனிதர். அவர் எங்க ஊருக்காரர் என்பது எனக்கு இன்னும் பெருமை. இதுவரை அவரை ஒருதடவை கூட சந்தித்தது கிடையாது, அலைபேசியிலும் பேசியது கிடையாது என்பதில் எனக்கு வருத்தமுண்டு. நான் சந்திக்க விரும்பும் மனிதர்.

அலைபேசியில் கூப்பிட்டு பாராட்டிய முதல் நண்பர் சொல்லரசன். திருப்பூர்க்காரர். பதிவு, நட்பு என்பதையும் மீறி என் மீது அக்கறை செலுத்தும் பாசத்துக்குரிய அண்ணன் அவர்.

10) கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

தேங்கி நிற்காத ஆறு போல ஓடிக் கொண்டியிருக்க வேண்டும், தெரிந்து கொள்வதற்கான விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கிறது என்று நம்புகிறவன். அவ்வளவே...

விருப்பமிருக்கும் நண்பர்கள் யார் வேண்டுமானாலும் இதைத் தொடரலாம்..

August 4, 2010

கடவுளும் பிரார்த்தனையும்..!!!


ண்களை இறுக்கிக் கட்டி
கைகளைப் பின்புறம் பிணைத்து
நிர்வாணமாய்
முதுகில் சுடப்பட்டவர்களின்
மரண ஓலம்

சாவின் கொடூர முகத்தை
சுற்றி நின்று ரசித்தவர்களின்
எக்காளச் சிரிப்பு

வெற்றுக் களிமண்ணை
ரொட்டியாய் சுட்டு சாப்பிடும்
குழந்தைகளின் கேவல் சத்தம்

முகமெங்கும் அப்பிக் கிடக்கும் மண்ணும்
சீழ் வடியும் நிணமுமாய்
மதக்கூடங்களின் வாசலில்
கையேந்தித் திரியும்
கைவிடப்பட்டவர்களின் ஆழ்மன அரற்றல்கள்

சித்திரவதை பொறுக்காமல் கதறியழும்
பரத்தையின் கூக்குரல்

யாமல் உலகின் ஏதாவொரு மூலையில்
வெடித்துக் கொண்டேயிருக்கும் மார்ட்டர்கள்

லகின் எல்லா அவலங்களின் சப்தமும்
தன் காதுகளை வந்தடைய
கிளர்ச்சியடைந்த கடவுள்
கரமைதுனம் செய்யத் துவங்குகிறார்

ரியலிசம்
சர்ரியலிசம்
மேஜிக்கல் ரியலிசம்
போஸ்ட் மாடர்னிசம்
என எதையும் அறிந்திராத
சாலையோர ஓவியனொருவன்
பசியில் ஏங்கியழும்
தன் குழந்தை முகம்
மனதில் நிறுத்தி
தான் பார்த்திராத
கடவுளின் படத்தை
வரையத் தொடங்குகிறான்
மழை மட்டும் வந்து விடக் கூடாது
என்று வேண்டியபடியே

ருவறை பிளந்து
வெளிக்கொள்ளப்பட்ட
சவலைப் பிள்ளையொன்றின்
அழுகுரல் கேட்டு
உச்சநிலையெய்திய
கடவுளின் சுக்கிலத்திலிருந்து
தெறித்து பூமியில் விழுகிறது
சொட்டொன்று
மழையின் முதல் துளியாய்..!!!

August 2, 2010

நாங்களும் ரவுடிதாண்டியேய்..!!!

கிட்டத்தட்ட ஒன்றரை வருஷமா இணையத்துல எழுதிக்கிட்டு இருக்கோமே.. இதனால் நமக்கு என்ன கிடைச்சிருக்குன்னு யோசிச்சு பார்த்தா, சட்டுன்னு ரெண்டு விஷயத்த சொல்லலாம்ணே... மனசு நெறைய சந்தோசம், நட்புங்குரதையும் மீறி நம்ம மேல அன்பு செலுத்துற நல்ல உள்ளங்கள். இது போதாதா? சின்னதா ஒரு அயர்ச்சி வரும்போதெல்லாம் உங்க அன்புதாண்ணே நம்மள நிக்காம ஓட வச்சுக்கிட்டு இருக்கு.. அதுக்கு உங்க எல்லோருக்கும் முதல்ல நன்றி சொல்லிக்கிறேன்.

சரி.. எதுக்குடா இப்போ இந்த பில்டப்புன்னு கேகுறீங்களா? எல்லாம் ஒரு சின்ன சூதுதாண்ணே. நம்ம பதிவுலக நண்பர்கள் பலரும் அவவங்க தளத்துல வாசகர் கடிதம்னு போடுவாங்க. எனக்கு அதையெல்லாம் பாக்குறப்ப கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா இருக்கும். என்னடா.. நாமளும் எழுதுறோம்.. ஆனா இது வரைக்கும் ஒரு வாசகர் கடிதம் கூட வந்தது இல்லையே.. ஏன்?

சரி விடுடா பாண்டியா.. நமக்கு துபாய், ஓமன், அண்டார்டிகா முதலான பல நாடுகள்லதான் வாசகர்கள் இருக்குறாங்க.. அவங்களுக்கு தமிழ் எழுதத் தெரியாததனால கடிதம் வரலன்னு நம்மள நாமளே சமாதனம் பண்ணிக்கிறது.. ஒரு சில சமயம் நமக்கு நாமே திட்டத்த பயன்படுத்திக்குவோம்மான்னு நினைப்பேன். அப்புறம்.. ச்சே ச்சே.. இந்த இலக்கியவாதி எழுத்தாளப் பயலுகதான் அப்படி பண்ணுரானுங்கன்னா, நம்மளுமா? வேண்டாம்னு விட்டாச்சு. ஹி ஹி ஹி.. கானா பானா வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்தான..

ஆனாலும் ஒரு சின்ன சோகம் உள்ளுக்குள்ளியே இருந்துச்சுண்ணே. இப்போ விஷயம் என்னன்னா.. அந்த சின்ன சோகமும் நமக்கு இல்லாம போச்சு. வந்துருச்சுல வந்துருச்சுல.. எங்களுக்கும் வாசகர் கடிதம் வந்திருச்சுல.. அந்தக் கடிதங்களையும், சந்தோஷத்தையும் உங்களோட பகிர்ந்துக்கத்தான் இந்த இடுகை.

கடிதம் 1:

அன்புள்ள கார்த்தி,

நான் மகி. என் பெயர் வேண்டுமானால் இளமையாக இருக்கலாம். ஆனால் உண்மையில் நிரம்ப வயதானவள். பல நாட்களாக உங்களுடைய தளத்தை (சத்தமில்லாமல்) வாசித்து வருகிறேன். இதுவரை எந்தப் பின்னூட்டமும் போட்டது கிடையாது. நானும் ஒரு ஆசிரியர். என்னைப் போன்ற ஆசிரியர் ஒருவர் தமிழின் மீது ஆர்வம் கொண்டு எழுதுவதைக் காணும்போது சந்தோஷமாக இருக்கிறது. ஒரு தமிழ்ப் பழமொழியைச் சொல்லி உங்களை வாழ்த்த விரும்புகிறேன். "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்.." அதேதான். நீங்கள் மற்றவர்களுக்கு நல்லது செய்ய செய்ய தங்களுக்கான நல்ல விஷயங்கள் தானே நடந்தேறும். தொடர்ந்து எழுதுங்கள். விரைவில் உங்கள் திருமணம் நடந்தேற வாழ்த்துக்கள்.

ரொம்ப நன்றிங்க.. அந்த கடைசி வரிய நோட் பண்ணுங்கப்பா..:-)))))

கடிதம் 2:

அண்ணே வணக்கம். உங்க தம்பி பாசத்துடன் எழுதும் சாரி டைப் பண்ணும் மெயில். உங்க வலைப்பூவோட அதிதீவிர ரசிகன் நான். உங்க பதிவுகள் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு. நானும் மதுரைக்காரன்தாண்ணே. மதுரைய ஒட்டி வர உங்கப் பதிவுகளை ரொம்ப விரும்பி படிப்பேன்.

உங்க பதிவுலையே எனக்கு ரொம்பப் பிடிச்சது, ரயில்ல உங்களை மாப்பிள்ளை பார்த்ததா வருமே.. அதுதாண்ணே. இப்போ நினைச்சாக்கூட சிரிப்பு வருது. என்னோட மொபைல ஸ்பீட் டயல் ஒண்ணுல உங்க பதிவுதான் இருக்குண்ணே.. மத்த வலைப்பதிவே எல்லாம் புக்மார்க் பண்ணி வச்சிருக்கேன் அண்ணே. ஆனா உங்க பதிவு நானே டைப் பண்ணிடுவேன். மனப்பாடமாத் தெரியும். உங்க பதிவுன்னா எனக்கு அவ்வளவு பிரியம்.

நான் தினமும் உங்க ப்ளாகை பார்ப்பேன். ஆனா நீங்க தினமும் எழுதுறது இல்ல. அது எனக்கு வருத்தம்தான். நீங்க எவ்ளோ பிசியா இருந்தாலும் எனக்காக தினமும் ஒரு பதிவு போடணும்.செய்வீங்களா?

அண்ணே.. நானும் ஒரு லெக்சரர் தான் .. உங்க கூட பேசணும்னு ஆசையா இருக்கு.. உங்க நபரைத் தர முடியுமா? உங்கள் பதிலை எதிர்பார்க்கும அன்புத்தம்பிஅன்பு.

இதைப் படிச்சதும். எனக்கு ஒரே குழப்பம். ஒரு வேளை நம்ம மாணவர்கள் யாரும் நம்ம கூட விளையாடுறாங்களோன்னு? சரி எதுக்கும் இருக்கட்டுமேன்னு ஒரு பதில் மடல் அனுப்புனேன்.

அன்பின் அன்பு..

உங்கள் அன்புக்கு நன்றி.. நீங்க என்னை ஓட்டுறீங்கன்னு ரொம்ப நல்லாத் தெரியுது.. சந்தோஷம்.. என்னைய நல்லாத் தெரிஞ்ச யாரோதான் நீங்க.. நானும் ஒரு லெக்சரர்னு சொல்றீங்க.. அது உண்மையில்லைன்னு நினைக்கிறேன்....அப்படி இல்லாமல் நீங்கள் சொல்வது உண்மைனா ரொம்ப மகிழ்ச்சி.. தமிழ் மீது ஆர்வம் கொண்ட இன்னுமொரு ஜீவன்னு மனசு கொண்டாடும்.. என்னோடு பேச நினைத்தால் உங்கள் அலைபேசி எண்ணை அனுப்புங்கள்.. நானே தொடர்பு கொள்கிறேன். மீண்டும் உங்கள் அன்புக்கு நன்றி..

பிரியமுடன்,
மா.கார்த்திகைப்பாண்டியன்

சற்றே நேரத்தில் பதட்டமான பதில் வந்து சேர்ந்தது.

அண்ணே.. உங்க மேல ஒரு இனம்புரியாத நெருக்கம். அதனாலத்தான் விளையாட்டா மெயில் அனுப்பினேன். தப்பா எடுத்துக்காதீங்க. என்னோட நம்பர் $%^&$#@. உங்களோட பேச ஆர்வமா இருக்கேன்.

கூப்பிட்டேன். தம்பி அன்பு புதுக்கோட்டை அதுகே இருக்கும் ஒரு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறாராம். என்னுடைய நீண்ட நாள் வாசகர். கூச்சத்தின் காரணமாக இத்தனை நாள் பேசாமல் இருந்ததாகச் சொன்னார். நிறைய பேசினோம். அடுத்த முறை நேரில் சந்திக்கலாம் என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டார்.

பதிவுலகில் நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது, நாமும் சில மனிதர்களைச் சம்பாதித்து இருக்கிறோம் என்று கொஞ்சம் பெருமையாக இருக்கிறது. அதே நேரம்.. போக வேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கிறது. எதையில் மண்டையில் ஏற விடாத வரைக்கும் நல்லது என்பதையும் உணர்ந்தே இருக்கிறேன். இந்த வலைப்பூவுக்குத் தங்கள் ஆதரவைத் தந்து கொண்டிருக்கும், எப்போதும் தரப்போகும் பதிவுலக நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..!!!