October 8, 2012

உதிரிப்பூக்கள் - 18

ப்பாவோடு வண்டியில் ரயில்வே காலனி வழியே போய்க் கொண்டிருந்தேன். போலிஸ் லைன் அருகேயிருக்கும் தண்ணித் தொட்டியைத் தாண்டும்போது ஏதோ ஞாபகம் வந்தவர் வண்டியை நிறுத்தச் சொன்னார். செய்தேன். இறங்கிப் போனவர் நேராக அங்கிருந்த ள்ளத்தில் போய் அமர்ந்து கொண்டார். வெகு நேரமாக வராதவரை என்னவென்று போய்ப் பார்த்தால் மனிதருக்குக் கண்ணெல்லாம் கலங்கி இருந்தது.

என்னப்பா ஆச்சு?

என் கூட சின்ன வயசுல இருந்து ஒண்ணா இருந்தவன்யா.. தர்மராசுன்னு பேரு. போன மாசம் தவறிட்டான். இந்த வழியாப் போனோமா.. அவன் நெனப்பு வந்திருச்சு. நாங்க நாலஞ்சு பேரு கூட்டாளிங்க.. உங்களுக்கு அந்தக் கொழாயடி மாதிரி..   இந்தத் தொட்டிக்குக் கீழ தான் எல்லாரும் விழுந்து கெடப்போம். இன்னைக்கு அவனுக யாரும் இல்ல. நான் மட்டும்தான் கடைசி.

வண்ணதாசனுக்கு நடைபெற்ற "அந்நியமற்ற நதி" கூட்டத்தில் எஸ்ரா பேசிய வார்த்தைகள் தான் என் நினைவுக்கு வந்தன. "இடம் என்பது வெறும் இடம் மாத்திரம் அல்ல. அவை நினைவுகளின் மீதங்கள். காலம் மனிதர்களைக் கவர்ந்து போக இடம் மட்டும் அவர்களுடைய நினைவுகளைத் தாங்கி நிற்கிறது. ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு அர்த்தத்தை நமக்குத் தந்து போகிறது."

த்தனை சத்தியமான வார்த்தைகள்? நீருக்குள் கிடக்கும் கூழாங்கற்களாய் ஆழ் மனதில் உறைந்து கிடக்கும் நினைவுகளை மீட்டெடுத்து பைத்தியம் பிடித்ததென நம்மை அலைக்கழிப்பவை இடங்கள். கலைடாஸ்கோப் போல பார்ப்பவரின் தன்மைக்கேற்ப தனது இயல்பையும் இருப்பையும் அவை மாற்றிக் கொள்கின்றன. நிறங்களின் வழி கசிந்துருகும் சில கனவுகள் உயிர்ப்பாய் இருக்கின்றன. சில நம்பிக்கைகள் மொத்தமாய்த் தொலைந்து போகின்றன. வாழ்வின் அற்புத கணங்களை, நாம் இழந்த மனிதர்களை, சந்தோசங்களை, துக்கங்களை, துரோகங்களை என யாவற்றையும் உயிர்ப்பாய் வைத்திருப்பவை நாம் தாண்டிப்போகும் இடங்கள்தானே?

வ்வொரு முறையும் மதுரைக் கல்லூரி பாலத்தின் மீது போகும்போதும் என் கண்கள் சுப்பிரமணியபுரத்தின் சாலைகளில் வீழ்ந்து மீளும். என் வாழ்வின் மிக முக்கியமான காலகட்டம் அங்கேதான் கழிந்தது. உலகம் என்பது என்னவென்று எனக்கு சொல்லித் தந்தது அந்த இடம். இன்றிருக்கும் என்னை வடிவமைத்தது  என நான் அங்கிருந்த நாட்களைச் சொல்லலாம்.

நான் குடியிருந்த சாந்தா அத்தை காம்பவுண்டின் முதல் வீட்டில் இருந்த மீனாக்காவுக்கு பாட்டு என்றால் உயிர். தன் தங்கையோடு சேர்ந்து மேடைக் கச்சேரிகளில் பாடுபவர். இரவில் அவரது வீட்டின் உள்ளிருந்து எப்போதும் ஒரு மெல்லிய ஹம்மிங் கேட்டபடி இருக்கும். நானும் என் தங்கச்சியும் ஒரு நாள் இல்லைன்னா ஒருநாள் சூலமங்கலம் சிஸ்டர்ஸ் மாதிரி பிரமாதமா வருவோம்டா. மடியில் அமர்த்தி என் தலைகோதி பிரியமாகச் சொல்லுவார். இப்போது மீனாக்கா எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. ஆனால் கோவில் திருவிழா மேடைகளைக் கடக்கும்போதெல்லாம் அங்கு பாடிக் கொண்டிருப்பவர் மீனாக்காவாக இருக்கக்கூடாது என்று பதட்டமாக இருக்கும். 

எதைச் சாப்பிட்டாலும் வீட்டுக்குள் பேண்டு வைக்கிறார் என வாசலுக்குத் துரத்தப்பட்டவர் எதிர்வீட்டு சம்முவம் பாட்டையா. ரோட்டில் விளையாடும் பசங்களைத் திட்டிக் கொண்டே இருப்பார். மேலே பந்து விழுந்தால் எடுத்து வைத்துக் கொண்டுத் தர மாட்டார். அவரைக் கண்டாலே எங்களுக்கு எரிச்சலாக வரும். நான் வீடு காலி செய்வதற்கு இரண்டு நாட்கள் முன்பு என்னை வரச் சொன்னார் எனப் போயிருந்தேன். தன் தலைகாணிக்குக் கீழிருந்து ஒரு சின்ன டப்பாவை எடுத்துத் தந்தார். அது முழுக்க பழங்காலத்து நாணயங்கள். நான் சேகரிப்பது தெரிந்து எனக்காகக் கொடுத்து விட்டார். இன்னும் கொஞ்ச நாள்ள போகப் போறவன் எனக்கு எதுக்குய்யா, எங்க இருந்தாலும் நல்லா இரு எனக் கண்களில் கண்ணீர் மல்கியபடி கொடுத்த அந்த மனிதரின் பிள்ளைகள் மீதான பிரியம் அன்றுதான் புரிந்தது. அவர்  இன்னும் உயிரோடு இருப்பாரா? இல்லை அந்தக் கட்டில் இன்னும் வெளியேதான் கிடக்குமா? 

மொட்டை மாடியில் நின்றபடி நான் உன்னை விட்டுப் போக மாட்டேண்டா என அழுதவளின் ஈரத்தை இன்னும் உணர முடிகிறது தோள்களில். எனக்குக் கெட்ட வார்த்தை சொல்லித்தந்த குரு பால்வண்டி பாலாஜியும் பாதியில் படிப்பை விட்டு லேத்துக்குப் போன குட்டை குமாரும் என்ன ஆனார்கள்? சாந்தா அத்தையின் மூன்றாவது மகள் தான் காதலித்த ராஜசேகர் அண்ணனோடு ஓடிப்போனாளா இல்லையா? ரைஸ்மில் கிரவுண்டில் கட்டப்பட்ட பாலகுருகுலம் ஸ்கூலுக்குள் எங்காவது ஒரு ஓரத்தில் அவுட், சிக்ஸர் போன்ற அலறல்கள் இன்னும் கேட்குமா? நிறைய கேள்விகள் என் மனதுக்குள் ஓடியபடி இருக்கும். ஒருமுறை அந்தப் பகுதிக்குப் போய்ப் பார்க்கலாமா எனவும் தோன்றும். ஆனால் ஏதோவொரு இனம்புரியாத பீதியும் பதட்டமும் என்னை இன்றுவரை அங்கே போகவிடாமல் செய்தபடி இருக்கின்றன.

த்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலம். அப்போது நான் சோலைஅழகுபுரத்தில் குடியிருந்தேன். ஸ்ரீனிவாசா தியேட்டருக்குப் பின்னால்  ஒரு காம்பவுண்டில் வீடு. அங்கே என் கூட்டாளியாக இருந்தவன் டோரி என்கிற வெங்கடேசன். ஒன்றரைக்கண் என்பதால் டோரி. ரொம்ப அப்பாவி. வீட்டுக்கு பயந்தவன். எனக்கு ரெண்டு வயது மூத்தவன். எங்கள் காம்பவுண்டுக்கு எதிர்வீட்டில் கோமதி, சோபனா என்று இரண்டு பிள்ளைகள். அண்ணா அண்ணா என்று என் மேல் உயிரை விடுவார்கள். பள்ளிக்குப் போகாத நேரங்களில் அவர்கள் வீட்டில்தான் தெருப்பிள்ளைகள் எல்லாம்  ஒன்று கூடி விளையாடுவோம்.

கோமதியின் தோழியாகத்தான் கீதாஞ்சலி எங்களுக்கு அறிமுகமானாள். அவளுடைய அம்மா சின்ன வயதில் யாரோடோ ஓடிப்போய் விட்டாள் என்பதால் அவளுடைய அப்பாவுக்கு அவளைப் பிடிக்காது. தன் பாட்டியோடு வசித்து வந்தவள் நாங்கள் இருந்த ஏரியாவுக்கு வீடு மாற்றிக் கொண்டு வந்த கொஞ்ச நாளிலேயே எங்கள் எல்லோரோடும் ரொம்ப நெருக்கமாகி விட்டாள். நமக்கென ஒரு காதலி இருந்தால் தான் கவுரவம் எனத் தீவிரமாக நம்பியதோடு அதற்கான முயற்சிகளில் மனம் தளராமல் நான் ஈடுபட்டிருந்த பருவமது. ஆக நான் காதலிக்க வேண்டியவர்கள் வட்டத்துக்குள் கீதாவும் வந்து சேர்ந்ததில் எந்த ஆச்சரியமும் இருக்கவில்லை. 

எப்போதோ ஒருமுறை தனக்குக் கவிதைகள் பிடிக்கும் என கீதா சொல்லி இருந்தாள். ஆகவே கவிஞர் அவதாரம் எடுத்து அவளை கரெக்ட் செய்யலாம் என முடிவு செய்தேன். ஒரு அன்ரூல்டு நோட்டு முழுக்கக் கவிதைகள். “இந்தப் பூக்களின் வாசமெல்லாம் அந்த மாலையில் வாடி விடும் நம் காதலின் வாசமெல்லாம் எந்த நாளுமே முடிவதில்லை”. புதிய பாட்டாக எழுதினால் கண்டுபிடித்து விடுவாள் என்பதற்காக தேடித் தேடி பழைய பாடல் வரிகளாக எழுதி வைத்திருந்தேன். ஆனால் என் நேரத்துக்கு அந்த நோட்டு கீதாவின் கைகளில் போய்ச் சேர்வதற்கு முன்பாக என் அம்மாவிடம் சிக்கிக் கொண்டது. வாசித்து விட்டு என்ன கருமம்டா இது எனக் கிழித்துப் போட்டு விட்டார். இருந்தும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல என் முயற்சிகள் தொடர்ந்தபடி இருந்தன.

ஒரு மாலை நேரம் மொட்டை மாடியில் நானும் டோரியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது கீதா வந்தாள். திடீரென ஒரு கடிதத்தை எடுத்து டோரியிடம் கொடுத்தவள் ஏதும் சொல்லாமல் போய் விட்டாள். அது ஒரு லவ் லெட்டர். எனக்கு உள்ளே ஒரு டிரான்ஸ்பார்மர் வெடித்தது. இலவு காத்த கிளியின் நிலை உணர்ந்து மண்டை காய்கிறது. டோரியோ நடுங்கி விட்டான்.  வீட்டில் தெரிந்தால் கொன்று போடுவார்கள் எனவே நீயே போய் அவளிடம் இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று சொல்லி விடு என ஒதுங்கிக் கொண்டான். எனக்கு இது தேவைதானா?

ஸ்ரீநிவாசா தியேட்டரின் ஆளில்லா பின்புறத்தில் வைத்துதான் கீதாவிடம் பேசினேன். இது காதலிக்கும் வயசு கிடையாது என்பதையும் டோரி நிறைய பயப்படுவதையும் அவளிடம் சொன்னேன், ஆனால் அவள் புரிந்து கொள்வதாக இல்லை. இடையிடையே வேறு யாரையேனும் அவளை விரும்புகிறவர்களைக் கூட காதலிக்கலாமே என்றெல்லாம் பிட்டைப் போட்டும் அந்த தத்திக்கு எதுவும் விளங்கவில்லை. கடைசியில் கடுப்பாகிக் கத்தினேன்.நீ சின்னப் பொண்ணும்மா. இன்னும் வயசுக்குக் கூட வரல.. கொஞ்சம் யோசிச்சுச் செய். அதற்கு அவள் சொன்ன பதில்தான் எனக்கு பயங்கர அடி. நான் வயசுக்கு வரலைன்னு உங்களுக்குத் தெரியுமா. நான் அதிர்ந்து போனேன். தான் பெரிய பெண்ணாகிவிட்டது தெரிந்தால் அப்பாவிடம் சொல்லி யாருக்காவது கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள் என்பதற்காக அதை வீட்டில் சொல்லாமல் மறைத்திருக்கிறாள். ஒரு பெண்ணுக்கு இத்தனை தைரியம் இருக்கக்கூடும் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. ஏதும் பேச இயலாமல் திரும்பி விட்டேன்.

இது நடந்த இரண்டு மாதங்களில் கீதா காணாமல் போனாள். அவள் அப்பா எதற்கோ போட்டு அடித்ததால் ஓடிப் போய் விட்டாள் என்றும் வேறு யாரோ ஒரு பையனை இழுத்துக் கொண்டு ஓடி விட்டாள் என்றும் தற்கொலை செய்து கொண்டாள் எனவும் பல கதைகள் ஊருக்குள் நிலவின. ஆனால் அவள் மாயமாய் மறைந்து விட்டாள் என்பது மட்டும் உண்மை. ஒவ்வொரு முறை அரவிந்த் தியேட்டர் - இப்போது ஸ்ரீனிவாசா தியேட்டரின் பெயர் இதுதான் - வழியாகப் போகும்போதும் அவளுடைய நினைவு வரும். அவளுடைய முகம் மனதில் நிழலாடும். ஒருவேளை டோரி அவளிடம் சரி எனச் சொல்லியிருந்தால் கூட அந்தப் பெண்பிள்ளையின் வாழ்க்கை வேறொன்றாக இருந்திருக்கலாம் என்கிற குற்றவுணர்ச்சி பெரும்பாரமாக மனதை அழுத்தும். ஆனால் என்ன செய்வது? முடிந்து போன சில விசயங்களை எப்போதும் நம்மால் மாற்ற முடிவதில்லை.

சிறு வயதிலிருந்தே பழனி எனக்கு மிகவும் பிடித்தமான ஊர். எப்படியும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது அங்கே போய் வருவது வழக்கம். அதுமாதிரியான சமயமொன்றில் சாமி கும்பிட்டு விட்டு படிகளில் இறங்கத் தொடங்கியபோதுதான் நான் அந்தப் பையனைப் பார்த்தேன். அதிகபட்சம் போனால் என்னைக் காட்டிலும் இரண்டு வயது கம்மியாக இருக்கக்கூடும் அவனுக்கு. பனிரெண்டு அல்லது பதிமூன்று சொல்லலாம். கையில் கொஞ்சம் லாட்டரி டிக்கட்டுகள் வைத்திருந்தான்.

சார் சார்.. அடுத்த வாரம் குலுக்கல் சார். வாங்கிக்குங்க சார். அதிர்ஷ்டலட்சுமி உங்களைத் தேடி வர்றா சார்.. ஒரு டிக்கெட் ரெண்ட் ரூவாதான் சார்.. வாங்குங் சார்...

அப்பாவுக்கு லாட்டரிச் சீட்டு வாங்கும் பழக்கமுண்டு. ஆனால் அதனால் அம்மாவோடு பெரும் சண்டை ஏற்பட்டு சமீபமாகத்தான் அந்தப் பழக்கத்தை விட்டிருந்தார். எனவே வேண்டாம் என்பதாகத் தலையசைத்தபடி என் கைகளைப் பிடித்துக் கொண்டு இறங்க ஆரம்பித்தார். ஆனால் அந்தப் பையனும் விடுவதாக இல்லை.

வீட்டுல ரொம்பக் கஷ்டப்படுறோம் சார். வித்துட்டுப்போனாதான் சார் இன்னைக்கு சாப்பாடு. அம்மா பாவம் சார். பொய் சொல்லல சார். வேணும்னா வீட்டுக்கு வந்து பாருங்க சார். வாங்கிக்கங்க சார்.. 

கிட்டத்தட்ட அடிவாரத்துக்கே வந்து விட்டோம். அந்தப் பையனும் திரும்பத் திரும்ப அதே பாட்டைப் பாடியபடி எங்கள் கூடவே வந்து கொண்டிருந்தான். எனக்கு மனசு கேட்கவில்லை.

அப்பா.. பாவம்ப்பா.. வாங்குங்கப்பா..

அப்பா ஏதோ யோசித்தவர் தனது பைக்குள் கைவிட்டு பத்து ரூபாயை எடுத்தார்.

எனக்கு டிக்கெட் வேண்டாம். இதை வச்சுக்கப்பா..

இதுவரை நீண்டிருந்த அந்தப் பையனின் கைகள் சட்டென பின்னிழுத்துக் கொண்டன. அவன் கண்கள் கலங்கி விட்டிருந்தன.

நீங்க டிக்கெட் வாங்கலைன்னாக் கூடப் பரவாயில்லை சார். ஆனா எனக்கு எந்தப் பிச்சையும் போட வேண்டாம் சார்..

அப்பா அமைதியாக அந்தப் பையனிடம் இருந்து ஐந்து டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தார். சந்தோசமாக வாங்கிக் கொண்டவனின் கண்கள் இப்போது சிரித்தன. எனக்கு அந்தப் பையனை நினைக்கும்போது ரொம்பப் பெருமையாக இருந்தது. அதன் பின்பு ஒவ்வொரு முறையும் பழனிக்குப் போகும்போதெல்லாம் என் கண்கள் அவனைத் தேடும். அவனையொத்த சாயலுடைய பையன் எங்கேயாவது தென்படுவானா என்று மனம் கிடந்து அலைபாயும். ஆனால் அவன் என்னிடம் அகப்படவே மாட்டான்.

ஐந்தாறு வருடங்கள் பின்பாக - கொஞ்சம் கொஞ்சமாக நான் கடவுள் என்பதைக் கேள்வி கேட்கத் தொடங்கியிருந்த காலகட்டம் - அம்மாவின் நச்சரிப்பு தாங்காமல் பழனிக்குப் போயிருந்தேன். நான், அம்மா, அப்பா மூவரும் யானைப் பாதையில் ஏறிக் கொண்டிருந்தோம். எதிரே ஒரு மனிதர் இறங்கி வந்து கொண்டிருந்தார். அழுதபடி கண்கள் எல்லாம் சிவந்து பார்க்கவே பாவமாக இருந்தார். தானாகப் புலம்பியபடி வந்த மனிதரிடம் என்ன ஆனதென்று அப்பா கேட்டார்.

எல்லாம் பிளான் பண்ணிப் பண்றாய்ங்க சார். கீழ கிடந்த லாட்டரி டிக்கட்ட விட்டுட்டுப் போறீங்க தம்பின்னு விக்கிறவன்கிட்ட எடுத்துக் கொடுத்தா.. அது உன்னைத் தேடித்தான் வந்திருக்கு.. வாங்கிக்கோன்னு கம்பெல் பண்ணுனானுங்க.. அடப் போங்கப்பா வேண்டாம்னு கெளம்புனா ஒரு கூட்டமா சுத்திக்கிட்டு அடிக்க வர்றானுக.. எல்லாம் ஒரே குரூப்பு போல.. சொல்லி வச்சுப் பண்றானுங்க.. கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு வந்தா.. இங்கேயும்.. ச்சே.. வெறுத்துப் போகுது சார்..

இப்படி எல்லாம் கூடவா செய்வார்கள் எனும் ஆச்சரியத்தோடு மேலேறிப் போனால் சற்று தூரத்திலேயே டிக்கெட்காரர்களோடு மல்லுக் கட்டிக் கொண்டிருந்த இன்னொரு மனிதரைப் பார்க்க முடிந்தது. நான் அப்படியாக மட்டும் இருந்துவிடக் கூடாது என வேண்டியவனாக பிரச்சினை செய்து கொண்டிருந்தவர்கள் யாரெனப் பார்த்தேன். நடுவே எல்லாருக்கும் முன்பாக அந்த மனிதரின் சட்டையைப் பிடித்து வம்பு பண்ணிக் கொண்டிருந்தவன் - அவனேதான்.

அதன் பிறகு நான் பழனிக்குப் போகவேயில்லை.

சொல்லிக் கொண்டே போகலாம். ண்ணற்ற விதைகளைத் தனக்குள் ஒளித்து வைத்திருக்கும் மாதுளை போல ஒவ்வொரு இடமும் தனக்குள் எண்ணிலடங்கா மனிதர்களையும் அவர்கள் சார்ந்த நினைவுகளையும் ஒளித்து வைத்திருக்கிறது.  இடங்கள் வெறும் இடங்கள் மட்டும் அல்ல. அவை நினைவுகளின் தாழ்வாரங்கள்.