August 26, 2011

வலசை - நேசமும் நன்றிகளும்

கோவில்பட்டியிலிருந்து மதுரை வரும் பேருந்தொன்றில், மே மாதத்தின் ஒரு ஞாயிறு பின்மதியப்பொழுதில், உரையாடியபடி வந்து கொண்டிருந்தோம் நேசனும் நானும். திசையறியாப் பறவைகளென எங்கெங்கோ சுற்றி வந்த பேச்சு இறுதியாக இன்றைய தமிழ் இலக்கியச் சூழலின் மீதாக வந்து நின்றது.

தங்களுக்கென ஒரு குழுவை வைத்துக் கொண்டு சில இதழ்கள் செய்யும் அரசியலும், திறமையிருப்பினும் அர்த்தமில்லாக் காரணங்களுக்காக ஒதுக்கப்படும் இளம் படைப்பாளிகளும் என சூழலின் பயங்கரம் குறித்தான எங்களிருவரின் பார்வையும் ஒன்றாக இருந்தது எங்களுக்கே ஆச்சரியம். வெறுமனே பேசிக் கொண்டிராமல் ஏதேனும் செய்ய வேண்டும் தலைவரே என்பதே எங்களுடைய அன்றைய தீர்மானமாக இருந்தது. இதுவே வலசைக்கான முதல் விதையாகவும் மாறியது.

அந்தப் பிரயாணத்துக்குப் பின்பாக, மிகச்சரியாகப் பத்து நாட்களுக்குப் பிறகு, நேசனிடமிருந்து அழைப்பு வந்தது. நண்பா நாம் ஒரு சிற்றிதழை ஆரம்பிக்கிறோம். சரி, நல்ல விஷயம்.. களத்தில் இறங்க முடிவு செய்து விட்டோம்... எந்த விதத்தில் நாம் தனித்துத் தெரியப் போகிறோம்? இதுவே எங்கள் முன்பாக இருந்த முதல் கேள்வி.

இன்றைக்குத் தமிழில் மொழிபெயர்ப்பு சார்ந்து அதிக முயற்சிகள் எதுவும் எடுக்கப்படுவதில்லை. அப்படியே வந்தாலும் அயல்நாட்டு எழுத்தாளர்களைப் பேசும்போதும் குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டும் பேசி வருகிறோம். இதை மாற்ற வேண்டும். எத்தகைய வித்தியாசமான முயற்சிகள் உலக இலக்கியத்தில் நடைபெற்று வருகின்றன என்பதை எல்லாம் பேசும் இதழாக இது வரவேண்டும் என முடிவானது.

சரியாக ஜூன்-15 அன்று இதழுக்கான படைப்புகள் சார்ந்த தெரிவு தொடங்கியது. நாவல் அறிமுகங்கள், கவிதைகள் மற்றும் சிறுகதைகள் என ஒவ்வொன்றாகத் தெரிவாகி நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுவரைக்கும் பெரிய அளவிலோ தொழில் முறையாகவோ மொழிபெயர்ப்பு அதிகம் செய்திடாத நம் நண்பர்களிடமே படைப்புகள் தரப்பட்டன. எங்களைப் பெரிதும் ஆச்சரியப்படுத்தும் வகையில் எத்தனை துரிதமாக முடியுமோ அத்தனை துரிதமாக மொழிபெயர்ப்புகள் எங்களை வந்தடைந்தன.

ஆரம்பத்தில் நகுலினி என்பதாக இருந்த இதழின் தலைப்பு பின்பு மிகப்பொருத்தமான ஒன்றாக வலசையாக மாறியது. உடல் மற்றும் உடல் மீதான அரசியல் என்பது முதல் இதழின் மையமாக உறுதியானது. ஓவியர் அபராஜிதனுடனான நேர்காணல், தொழில்முறையாக ஒரு மொழிபெயர்ப்பாளர் சந்திக்கும் பிரச்சினைகள், நாடகக் கலைஞர்களுக்கான .முருகபூபதியின் கடிதம் என எல்லாம் இணைந்து இதழைப் பூர்த்தி செய்தன.


இன்றைக்கு வலசையின் முதல் இதழ் வெளியாகி இருக்கும் சூழலில் இதற்காக உழைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். படைப்புகளை மொழிபெயர்த்த நண்பர்கள் - ரிஷான் ஷெரிப், ஸ்ரீ, சபரிநாதன், விதூஷ், பாலகுமார், தருமி, ஜெ.சாந்தாராம், ஜ்யோவ்ராம் சுந்தர், கவிதா முரளிதரன், அசதா, சித்தார்த் வெங்கடேசன், கென், பத்மஜா நாராயணன், லதா ராமகிருஷ்ணன் - ஓவியங்கள் வரைந்த ஞானப்பிரகாசம், .முருகபூபதி, தாரணி பிரியா, தமிழ்ப்பறவை பரணி, ராஜன் ராதாமணாளன் - வடிவமைப்பில் உறுதுணையாக இருந்த தாரணி பிரியா - நேர்காணல்களில் உதவிய கிருஷ்ண பிரபு, விஷ்ணு.. அனைவருக்கும் வலசையின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ழ கபேயில் நடந்த பதிவர் கூட்டத்தை ஏற்பாடு செய்வதில் பெருமளவில் உதவிய நண்பர்கள் அப்துல்லா அண்ணன், மயில்ராவணன், விதூஷ் ஆகியோருக்கும் ""வுக்கு வந்து எங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட அத்தனை பதிவுலக நண்பர்களுக்கும் வலசை தன் நன்றியைப் பதிவு செய்கிறது.

இதழுக்கான வாழ்த்துகளும், இதழைப் பற்றிய கருத்துரைகளும் தொடர்ச்சியாக வரத் துவங்கி இருக்கின்றன. புத்தகம் பற்றிய கலந்துரையாடல் விரைவில் மதுரையில் நடைபெறும். இது பற்றிய விரிவான இடுகை இன்னும் சில தினங்களில்.

புத்தகம் கிடைக்கும் இடங்கள்

நியூ புக் லேண்ட்ஸ்
52 சி கீழ்த்தளம்
பனகல் பார்க் அருகில்
டி நகர்
சென்னை

டிஸ்கவரி புக் பேலஸ்
எண் 6, மகாவீர் காம்ப்ளக்ஸ்,
முதல் தளம் முனுசாமி சாலை
கே கே நகர் மேற்கு
சென்னை

திரு.வடகரை வேலன்
கோவை
அலைபேசி: 8012577337

பாரதி புக் ஹவுஸ்
பெரியார் பேருந்து நிலையம் காம்ப்ளக்ஸ்
(மேல்மாடியில்)

செம்மொழி புத்தகக் கடை
கே.எம். காம்ப்ளக்ஸ்
ராம்நகர், பைபாஸ்ரோடு,
மதுரை.

புத்தகம் பற்றிய விமர்சனங்களில் சரி தவறு என எல்லாவற்றையும் கணக்கில் வைத்துக்கொண்டு அடுத்த இதழை இன்னும் சிறப்பாகக் கொண்டு வரவேண்டும் என எண்ணுகிறோம். அதற்கான அன்பும் ஆதரவும் எப்போதும் நம் நண்பர்களிடம் உண்டு எனவும் நம்புகிறோம். மீண்டும் அனைவருக்கும் எங்கள் நேசமும் நன்றிகளும்.

பிரியமுடன்,
நேசமித்திரன்
கார்த்திகைப்பாண்டியன்

August 7, 2011

போட்டா போட்டி 50:50 - திரைப்பார்வை

ஒரு படத்தின் பாதிப்பில் இன்னொரு படம் எடுப்பதில் தவறில்லை, மொத்தமாக காப்பி அடிக்கத்தான் கூடாது (நான் இங்கே தெய்வத்திருமகள் பற்றி ஏதும் பேசவில்லை). அந்த வகையில் பார்க்கும்போது மிகப்பெரிய வெற்றி பெற்ற லகான் திரைப்படத்தின் பாதிப்பில், கிரிக்கெட் போட்டி என்கிற ஆதார விஷயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அதில் முழுக்க முழுக்க நகைச்சுவையைக் கலந்து பட்டாசு கிளப்பி இருக்கும் படம்தான் போட்டா போட்டி. இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆடிய தமிழ்நாட்டின் சடகோபன் ரமேஷ் இந்தப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார்.


மதுரைக்குப் பக்கத்தில் இருக்கும் உப்பார்பட்டி கிராமம். கொடைவாணன், கொலைவாணன் என்கிற ரெண்டு பங்காளிகளுக்கும் ஆகாது. எதற்கெடுத்தாலும் சண்டை. இதில் கொலைவாணன் சீரியஸ் ஆசாமி என்றால் கொடைவாணன் காமெடி பீஸ். இருவருமே தங்கள் மாமன் மகளான ரஞ்சிதத்தை விரும்புகிறார்கள். யார் அவளைத் திருமணம் செய்வது என்பதற்காக ஒரு கிரிக்கெட் போட்டி நடக்கிறது. கொடைவாணன் குரூப்பிடம் ரமேஷ் கோச்சாக சேர்கிறார். ஊரில் இருக்கும் மலையை உடைத்து பணம் பண்ண நினைக்கும் வெளிநாட்டு குரூப் கொலைவாணனிடம் சேர்க்கிறது. மேட்சில் யார் ஜெயித்தது, ரஞ்சிதம் யாரைத் திருமணம் செய்தாள், தந்திர மனிதர்களிடமிருந்து மலை தப்பியதா என்பதை விழுந்து விழுந்து சிரிக்கும்படியாக சொல்லிப்போகும் கதை.

படத்தின் உண்மையான நாயகன் கொடைவாணனின் அல்லக்கையாக வரும் அவதாரம் என்கிற பாத்திரத்தில் நடித்திருக்கும்அவதார்கணேஷ்தான். கவுண்டர் + சந்தானம் காம்பினேஷன் என்றால் எப்படி இருக்கும்? அதுதான் இவர். டயலாக் டெலிவரியும் அலப்பறையும் என அட்டகாசமாக படம் முழுக்க பட்டையைக் கிளப்பி இருக்கிறார் மனிதர். அதே மாதிரி மனதை அள்ளிக் கொள்ளும் இன்னொரு ஜீவன் கொடைவாணனாக வரும் ஆர்.சிவம். ஜூவிலிருந்து தப்பி வந்த உர்ராங் உட்டான் மாதிரி இருந்து கொண்டு விஜய் ரசிகராக அறிமுகம் ஆகும் காட்சியிலேயே கலக்குகிறார். ராசுக்குட்டி பாக்யராஜ் மாதிரியான கேரக்டர். ஆரம்பத்தில் கொஞ்சம் கடுப்பு வந்தாலும் போகப் போக ரசிக்க வைக்கிறார். கடைசியில் காதலியைத் தாரை வார்க்கும் தியாகியாகிறார்.


கிரிக்கெட் சம்பந்தமான படம் என்பதால் தப்பிக்கிறார் ரமேஷ். ஓகே என்கிற ரீதியிலான நடிப்பு. வெளிநாட்டுக்காரர்கள் நம் மண்ணை எப்படி எல்லாம் நாசம் செய்கிறார்கள் என்று ஊரார் மத்தில் பேசும் காட்சியில் இன்னும் கொஞ்சம் நன்றாகச் செய்திருக்கலாம். நாயகி ரஞ்சிதமாக வரும் ஹரிணி கொஞ்சம் சமிக்ஷா போலவும் கொஞ்சம் ஜெயா சீல் போலவும் இருக்கிறார். பாவாடை சட்டையில் அலையும் கிராமத்துப் பெண்ணுக்கு பொருத்தமான அழகு. வில்லன் கொலைவண்ணனாக வரும் உமர் எதற்கெடுத்தாலும் ஜெயிக்கணும் நான் ஜெயிக்கணும் என்று சீரியசாக காமெடி பண்ணுகிறார். அது ஏன்யா கிராமத்துப் பெரிய மனுஷ வில்லன் என்றாலே உடம்பில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு எதிரில் சாணி தட்டும் வேலைக்காரியை ரசிக்க வேண்டுமா?

அருள்தேவின் இசையில் இதுவரை இதுவரை பாட்டும், டிரையெனிங் எடுக்கும் பாட்டும் கேட்கும்படியானவை. அவரும் ஒரு பாட்டுக்கு சம்பந்தமே இல்லாமல் வந்து இங்கிலீஷ் ஸ்டைலில் நீச்சலுடைப் பெண்களோடு ஆடிவிட்டுப் போகிறார். ஒளிப்பதிவாளப் புண்ணியவான் கோபி அமர்நாத் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் கிராமத்தை கண்ணுக்குக் குளிர்ச்சியாக படம் பிடித்திருக்கிறார். அதிலும் இதுவரை பாட்டு படமாக்கி இருக்கும் விதம் கொள்ளை அழகு. படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு ஆள் எடிட்டர் ராஜா முகமது. முதல் பாதி ஆரம்பித்ததும் தெரியவில்லை. முடிந்ததும் தெரியவில்லை. அத்தனை வேகம். நன்றாகச் செய்திருக்கிறார்.


கதை திரைக்கதை வசனம் எல்லாம் யுவராஜ் என்கிற புதியவர். நல்வரவு. இந்தப்படம் முழுக்க நம்மை யோசிக்க விடாமல் தொடர்ச்சியாக சிரிக்க வைத்துக் கொண்டிருப்பது இயக்குனரின் பலம். குறிப்பாக வசனங்கள். ரொம்ப நுட்பமாக கவனித்துச் சிரிக்கும் இடங்கள் படத்தில் நிறைய இருக்கிறது. கிரிக்கெட் என்கிற ஒரு விஷயத்தை மட்டும் சொல்லாமல் அதில் கமர்ஷியல் படத்துக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் சரியாகக் கலந்து கட்டி அடிப்பதில் யுவராஜ் ஜெயிக்கிறார்.

படத்தில் சில குறைகளும் இல்லாமல் இல்லை. படத்தில் லாஜிக்கே கிடையாது. இரண்டாம் பாதியில் சற்றே தொய்வு தரும் காட்சியமைப்புகள். முக்கால்வாசி கிராமத்து மனிதர்களையே நடிக்க வைத்திருப்பதால் ஒரு சில இடங்கள் நாடகம் போல இருக்கிறது. வசனத்தில் அங்கங்கே தென்படும் இரட்டை அர்த்தங்களும் தேவை இல்லாதவை. கடைசி கிரிக்கெட் காட்சிகள் அத்தனை பரபரப்பு இல்லாமல் இருப்பதும் ஒரு சின்ன குறை. இருந்தாலும், இவை எல்லாவற்றையும் மீறி, நல்லதொரு நகைச்சுவைப் படத்தைக் கொடுத்த இயக்குனருக்கு வாழ்த்துகள்.

போட்டா போட்டி - சிரிப்புச் சரவெடி

August 3, 2011

மூன்று முடிச்சு - தொடர்பதிவு

இந்தத் தொடர் பதிவை எழுதும்படி கேட்டுக்கொண்ட நண்பன் கோபிக்கு நன்றி.

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?

நண்பர்கள், புத்தகம், சினிமா

2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?

என் அப்பாவின் ஒன் சைடு பாசம், பஸ்ஸில் பிரயாணம் செய்வது, நம்முடைய நண்பர்களை வேறொருவர் உரிமை கொண்டாடுவது

3) பயப்படும் மூன்று விஷயங்கள்?

பாம்பு, உயரம், பணம்

4) உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்?

பெண்கள், ரஜினி, கடவுள்

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

பேனா, எஸ்ராவும் நானும் இருக்கும் போட்டோ, அவ்வப்போது படிக்கும் புத்தகம்

6) உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் அல்லது மனிதர்கள்?

குழந்தைகள், எப்போதும் கவுண்டர், என் நண்பன் முத்துக்கண்ணன்

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?

கல்லூரியில் நமது நண்பர் முரளிக்கண்ணனைக் கொண்டு ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் முயற்சி, இலக்கியம் சார்ந்து ஒரு வேலை, எப்பொழுதும் போல மாலை நேரங்களில் ஊர் சுற்றுவது

8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

ஆதரவற்ற மக்களுக்கென ஒரு இல்லம் அமைப்பது, சொந்தமாக ஒரு லான்சர் கார் வாங்குவது, முடிந்த மட்டும் வெளிநாடுகள் சுற்றி வருவது

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயஙகள்?

டாக்டர் பட்டம் பெற்று நல்லதொரு கல்லூரியில் உயர்பதவியில் அமர்வது, சீக்கிரமே என் அம்மாவுக்காக சின்ன வீடொன்றைக் கட்டித் தருவது, என் நண்பர்களுக்கு அவர்கள் அறிந்த கார்த்தியாகவே எல்லாரையும் சிரிக்க வைப்பது

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?

முன்னாள் காதலிகள் பற்றிய தகவல்கள், நம்பிக்கை துரோகம் செய்யும் நண்பர்கள் என நான் நம்பி ஏமாந்தவர்களின் பேச்சு, பிரியமானவர்களின் துயரங்கள்

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?

கிடார், சினிமா மொழி, ஓவியம்

12) பிடிச்ச மூன்று உணவு வகை?

பிரியாணி, புரோட்டா, எல்லா அசைவ சமாச்சாரமும்

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

லூசுப்பெண்ணே, பார்த்த முதல் நாளே, என் காதல் சொல்ல (கொஞ்சம் மாறிக்கிட்டே இருக்க லிஸ்ட் இது..)

14) பிடித்த மூன்று படங்கள்?

நிறைய இருக்கு.. ஆனாலும் மூன்று முக்கியமான படங்கள் - சில காரணங்களுக்காக.. வகைக்கு ஒண்ணா

முள்ளும் மலரும் (ரஜினி-மகேந்திரன்)
ப்ரோக்கன் ஆரா (ஜான் டிரவோல்டா - ஜான் வூ)
தி ரோடு ஹோம் (யாங் ஜீமு - நான் பார்த்த முதல் உலகப்படம்)

15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்றுவிஷயம்?

என் மீதான நம்பிக்கை, இசையும் புத்தகமும், நட்பு

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?

எங்க ஊருக்கார அண்ணே ஸ்ரீ
நம்ம பிரியத்துக்குரிய மொக்கைச்சாமி மேவி
கோயம்புத்தூர் அம்மிணி தாரணிபிரியா

August 1, 2011

மஞ்சள் நிறப் பைத்தியங்கள் - எஸ்.செந்தில் குமார்

நான் வாசிக்கும் எஸ்.செந்தில்குமாரின் முதல் தொகுப்பு இது. அவருடைய கதைகளைப் பற்றிப் பேசுமுன்பாக சிறுகதைகளை நான் புரிந்து கொண்டிருப்பது எவ்வாறு என்பதைச் சொல்ல விழைகிறேன். கதாபாத்திரங்களின் அகவழிப் பயணங்களினூடாக அவர்கள் உணரும் விஷயங்களையும், சிக்கல்கள் மற்றும் நெருக்கடிகளையும் காட்சிப்படுத்துவது ஒரு வகைக் கதை சொல்லல். மாறாக புறவய காரணங்கள் வழியாகவும் தொடர்ச்சியான நிகழ்வுகளின் மூலமாகவும் சம்பவங்களின் கோர்வையாகக் கதை சொல்லிப்போவது இன்னொரு வகை. இதில் செந்தில்குமாரின் கதைகளை இரண்டாவதாகச் சொன்ன வகையில் வைத்தே என்னால் பார்க்க முடிகிறது. துண்டு துண்டாக சிதறிக் கிடக்கும் கண்ணாடிச் சில்லுகளென மனிதன் வாழும் இயந்திர வாழ்விலிருந்து உண்டாகும் யதார்த்தம் சார்ந்த மற்றும் அதை மீறிய படிமங்களும் அவற்றின் மாயத்தன்மையுமே செந்தில்குமாரின் படைப்புலகமாக விரிகின்றன. இனி கதைகள் பற்றி..

இந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதைஇடம்”. யதார்த்த வாழ்வின் சில பக்கங்களை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கும் கதை. தன் மகள் தன்னை ஏமாற்றிய ஆத்திரத்தில் உன் வாழ்க்கை நாசமாகத்தான் போகும் என சாபம் விடும் ஒரு தாயின் வாக்கு பலித்து விட இறுதிவரை தன் தாயை, சாவுக்குக் கூட வராமல், புறக்கணிக்கும் ஒரு மகளின் கதை. யாருக்கும் அவரவருக்கான நியாயம் உண்டென்பதை உணர்வுகளின் கோர்வையாய், மிகுவுணர்ச்சி ஏதுமின்றி, இயல்பான நடையில் சொல்லிப் போகும் கதை. கதையின் முதல் பத்தியிலேயே முடிவு இதுதானென சொல்லிவிட்டு பின் அதற்கான காரணங்களை விவரிக்கும் படியான உத்தி இந்தக்கதைக்கு மிகச்சரியாகப் பொருந்திப் போகிறது.

மாற்று மெய்மை எனக்கு எப்போதும் மிகப்பிடித்தமான விஷயமாக இருந்து வந்திருக்கிறது. அதன் காரணமாகவேஅனைப்பட்டி வெற்றிலை சுவாமிகளின் சரிதம்ரொம்ப வசீகரிக்கிறது. சமாதி இருக்கும் இடம் பற்றிய விவரணையும், அங்கே வந்து ரோஜா மலரை எடுத்துப் போகும் சிறுமியும், ரோஜா அவள் முகமாய் மாறுவதும் என நிறைய சொல்லலாம். குறிப்பாக இந்தக் கதையின் முடிவு.. தந்தையின் மரணத்துக்குப் போ என குழந்தை தரும் பணத்தைப் பெற்றுக் கொண்டவன் அதன் பின் ஊருக்கே போவதில்லை. அவன் தன்னை முற்றுமாக உணர்ந்த நிலையின் அழகிய வெளிப்பாடு அது. ஆனால் இந்தக் கதையில் சொல்லப்படும் சாமியின் வரலாற்றில் இருந்து ஒரு பக்கம், ஏற்கனவே நிகழ்காலத்தில் சொல்லப்பட்டு விட்ட நிலையில் மீண்டும் சொல்வது எதற்கெனப் புரியவில்லை.

ஒரு சாகசக்காரனின் மனநிலையை வாசிப்பவனுக்குத் தரக்கூடியதுஎன்னைத் தொடர்ந்து வாருங்கள்”. கதைகளின் நடுவே புதையலைத் தேடிப்போகும் துருவன் நம் எல்லோருக்கு உள்ளேயும் உண்டு. அப்படி பொய்யான புதையலைத் தேடியபடி வாழ்க்கையை தொலைத்து நிற்கும் மாமாவின், மதுரவல்லியின் துயரத்தை இந்தக்கதை சொல்கிறது. தன் கணவனை இன்னொருத்திக்கு விட்டுக் கொடுத்த பிறகு அத்தை நிகழ்காலத்துக்குத் திரும்புகிறாள். அதன் பிறகு அவள் புதையல் கதைகளை வாசிப்பதே இல்லை.

கவிதைகளில் வரக்கூடிய படிமங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளெனமறையும் முகம்மற்றும்மஞ்சள் நிறப் பைத்தியங்கள்ஆகியவற்றைச் சொல்லலாம். திருமணத்துக்கு முன் கிறிஸ்துவைக் காதலித்தாலும் வேளாங்கன்னிக்கு நீரூற்றில் அவளுடைய கணவன் முகமே தெரிவது அவள் தன் வாழ்க்கையை அவனுக்கு ஒப்புக் கொடுத்ததற்கான சாட்சியம். அவளுக்குப் பிடித்த மேய்ப்பர் - ஆடுகளின் சித்திரங்களில் எப்போதும் ஆடுகளைத் தனியாகவே அவளால் பார்க்க முடிகிறது. ஆடென்பதே இங்கு அவளாக, கிறிஸ்து மேய்ய்ப்பராக இருக்கிறான் என்றே நான் வரிந்து கொள்கிறேன்.

மஞ்சள் நிறப் பைத்தியங்கள் - வாசஸ்தலத்தில் பார்த்த மாயப்பெண் பரப்பிச் செல்லும் மஞ்சள் நிறம் மீதான காதலைப் பேசும் அழகானதொரு உருவகம். இந்தத் தொகுப்பில் தனித்து தெரியக்கூடிய கதையெனஆயிரம் கால்கள் கொண்ட பூரானைச்சொல்லலாம். தொகுப்பின் பொதுப்போகிலிருந்து விலகி வெகு அபூர்வமாக பெண்மனதின் ஆழத்தில் ஊடுருவி அகமனப் போராட்டங்களைச் சொல்லும் கதை. மாதத்தில் மூன்று நாட்கள் தென்படும் பூரான், கலவிக்குப் பின்பாக கணவன் மீது தோன்றும் வெறுப்பு, இரண்டு பெண்களுக்கிடையே தோன்றும் அன்பென நிறைய இடங்களை அந்தரங்கமாகத் தொட்டுப் போகும் கதையிது.

"இதற்கிடையில் ஒரு பெண்கதையை வாசித்தபோது 80களில் வெளியான பாலைவனச்சோலையின் ஞாபகம் வந்துபோனது. என்றாலும் இந்தக்கதையில் மதுரை மக்களின் மனநிலையை அழகாகச் சொல்லும் இடம் சினிமாக்களுக்கு அவர்கள் தரும் முக்கியத்துவம் பற்றி பேசுமிடத்தில் வருகிறது. சந்தோசம் துக்கம் என எதுவானாலும் சினிமா என்பதை எப்படிப் பார்த்தாலும் அவர்களிடமிருந்து பிரிக்கவே முடியாதென்பதை கதை சித்தரிக்கிறது. என்றாலும் காலத்தோடு ஒவ்வாததாக இருக்கும் இந்தக் கதையும், வாழ்வின் வறுமையைப் பேசும்பாலை நிலக் காதல்ஆகிய கதைகளும் சின்னதொரு அயர்ச்சியைத் தருகின்றன.

ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லும்போது வாசகனுக்கு அது உண்டாக்கக்கூடிய உணர்வு எத்தகையதாக இருக்கும்? வெறுமையையோ இல்லை அவலத்தையோ கடத்தவே அவை பயன்படும். ஆனால்அம்மாவின் காதல் கடிதங்கள்கதையில் அதிர்ஷ்டம்-துரதிர்ஷ்டம் சார்ந்த விவரிப்புகள் அதை நிகழ்த்தத் தவறுகின்றன. என்ன காரணத்தினால் இவை மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது என்கிற எரிச்சலே வருகிறது. அதேபோல கதையின் போக்கை முன்னமே முடிவாகச் சொல்ல இயலும்அதிகாலைத் தற்கொலையின் கதையும்தொகுப்போடு சேர்ந்தியங்கும் ஒத்திசைவு இல்லாதவை.

எந்தக் கதையிலும் சொல்லக்கூடிய கதை என்கிற ஒன்று கண்டிப்பாக இருந்தேயாக வேண்டும் என கேட்கக்கூடியவனில்லை நான். ஆனால் அந்தக்கதையின் வாயிலாக அது தரும் தகவல்கள் வழியாக அது கலையாக மாற வேண்டும் என்பது ரொம்பவே முக்கியம். ஆனால்ஹென்றிவெல் மார்ஷெல் நினைவு நூலகம்கதையில் அந்த சப்ளிமேஷன் - கலையாக மாறும் தருணம் நிகழவே இல்லை. அது வெறும் தகவல்களின் துருத்தலாகவே இருக்கிறது.

சுவாரசியமாக கதைசொல்லல் என்பதொரு கலை. அது செந்தில்குமாருக்கு எளிதாகக் கைகூடி வருகிறது. மொழியைக் கொண்டு வித்தை காட்டாமல், அனைவருக்கும் புரியும் எளிய மொழியில், எதார்த்தமான கதைகளை எழுதி இருக்கிறார். “மஞ்சள் நிறப் பைத்தியங்களைப்பொறுத்தவரையில் அலைகள் இல்லாத கடல் போன்ற அமைதியானத் தொகுப்பு. ஆனால் காலம் என்கிற ஒரு விஷயத்தை செந்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய தருணமிது. ஏறக்குறைய எல்லா கதைகளுமே சொல்லப்பட்டு விட்ட நிலையில் என்ன மாதிரியாக கதை சொல்கிறோம், என்ன உத்திகள் பயன்படுகின்றன, அவை இன்றைய காலகட்டத்தோடு பொருந்திப் போகிறதாக இருக்கிறதாவென்பது முக்கியம். அவ்வகையிலான கதைகளை அவர் எழுதுவார் எனும் நம்பிக்கையோடு முடிக்கிறேன்.

(31-07-11 அன்று ந்டைபெற்ற புத்தகம் மீதான விமர்சன அரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை..)

மஞ்சள் நிறப் பைத்தியங்கள்
தோழமை வெளியீடு
விலை - ரூ.80/-