"நாமளே எவ்வளவு நேரம் தான்ப்பா பேசுறது... பொண்ணும் பையனும் கொஞ்ச நேரம் தனியாப் பேசட்டும்.. அதுதானே முக்கியம்.." கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர் சொன்னார். அவனும் அவளும் ஒரு அறையில் தனியாக விடப்பட்டார்கள்.
அவன் அவளைப் பார்த்தான். ஒல்லியாகச் சின்னப் பெண்ணாக இருந்தாள். பட்டுச் சேலை மட்டுமே அவளைக் கொஞ்சம் பெரிய ஆளாக காட்டியது. கூரான நாசி. அழகான கண்கள். உதடுகள் மெல்லிதாக துடித்துக் கொண்டு இருந்தன. சின்னதொரு பயமாக இருக்கக் கூடும். அவனுக்கும் வயிற்றை எதோ பண்ணியது. இது போல பெண்ணோடு பேசுவது அவனுக்கும் முதல் தடவை. தயங்கியவனாக அவள் எதிரே அமர்ந்தான்.
அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளுக்கு பிடித்த அரைக்கை சட்டை, ஜீன்ஸ் அணிந்து இருந்தான். நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள். அவன் அவளையே பார்த்துக் கொண்டு இருப்பது தெரிந்தது. வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டாள். அவன் பேரழகன் இல்லை என்றபோதும் பார்க்க கம்பீரமாக இருந்தான். உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.
"நீங்க என்ன படிச்சு இருக்கீங்க, குடும்பம் எல்லாம் பத்தி தரகர் சொன்னாரு... என்னப் பத்தியும் உங்க வீட்ல எல்லாரும் சொல்லி இருப்பாங்க.. உங்களுக்கு எதுவும் கேட்கனும்னா கேளுங்க.." அவன் பேச்சை ஆரம்பித்தான்.
"உங்களுக்கு வீடு, நிலம் ஏதாவது இருக்கா?" அவள் மெதுவாக கேட்டாள்.
"இல்லைங்க.. என்னோடது ஒரு பக்கா மிடில் கிளாஸ் பேமிலி.. நான் இப்போ வேலைக்கு போய் சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகுதான் கொஞ்சம் தலை தூக்கி இருக்கோம்.. அப்பாவோட ரிடயர்மெண்ட பொருத்து ஒரு வீடு வாங்கலாம்னு இருக்கேன்.."
"நான் படிச்சு இருக்குறதால வேலைக்கு போகணும்னு விருப்பப்பட்டா போகலாமா?"
"கண்டிப்பா.. எந்தப் பொண்ணும் வேலைக்கு போகணும்னு தான் நான் சொல்லுவேன்.. யாரையும் சார்ந்து இருக்கக் கூடாதுங்கறது தான் என்னோட எண்ணம்.."
"தாங்க்ஸ்.. உங்களுக்கு.. என்ன பிடிச்சிருக்கா?.." தயங்கியவாறே கேட்டாள்.
"எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லைங்க.. நிஜமாவே உங்களை பிடிச்சு இருக்கு.. குறிப்பா வெளிப்படையா பேசுற உங்க குணம்..இப்போ நீங்க சொல்லுங்க.. உங்களுக்கு என்ன பிடிச்சு இருக்கா..?"
"ம்ம்ம்..நிறைய..."
அவனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. வெளியில் வந்து பெற்றோரிடம் தன் சம்மதத்தை சொன்னான். அவளுடைய சொந்தக்காரர்கள் உள்ளே சென்று அவள் சம்மதத்தை கேட்டு வந்தார்கள். திருமணத்தை தையில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவாகியது.
பெண்ணின் சொந்தக்காரர் ஒருவர் ஆரம்பித்தார். "அப்புறம் மத்த விஷயங்கள் எல்லாம் பேசிடுவோம்.. பொண்ணுக்கு என்ன செய்யணும்னு எதிர்பாக்குறீங்க.?"
"ஒத்தப் பொண்ணு.. உங்களுக்கு என்ன விருப்பமோ செய்ங்க.."அவனுடைய அம்மா சொன்னார்.
"அப்படி இல்லீங்க.. நீங்க என்ன நினைக்குரீங்கன்னு சொன்னாதான் நல்லா இருக்கும்.."
"ஒரு நாப்பது பவுன் பொண்ணுக்கு போடுங்க.. பையனுக்கு அஞ்சு பவுன்"
'இது ரொம்ப ஜாஸ்திங்க.. இன்னைக்கு தங்கம் விக்குற விலை என்ன? நாங்க இருபது பவுன் போடலாம்னு இருக்கோம்."
"இது ரொம்பக் குறைச்சல்.. என் பையன் படிச்ச படிப்புக்கு ஆளாளுக்கு போட்டி போட்டுக்கிட்டு வருவாங்க.."
பேரம் வளர்ந்து கொண்டே போய் கடைசியில் பொண்ணுக்கு முப்பது பவுனும் பையனுக்கு ஐந்து பவுன் என்றும் முடிவானது. அப்புறம் கல்யாண செலவு பற்றிய பேச்சு ஆரம்பித்தது. பையனின் அம்மா கல்யாண செலவில் ஆளுக்கு பாதி என்றார். பெண்ணின் அப்பாவோ அம்பதாயிரம் மட்டுமே தன்னால் தர முடியும் என்றார். அதை வைத்து ஒண்ணுமே செய்ய முடியாது என்று வாதிடத் தொடங்கினர் பையன் வீட்டுக்காரர்கள். பேச்சு வளர்ந்து கொண்டே போனது.
"உங்க பையனுக்கு என்ன கவர்மென்ட் உத்தியோகமா.. ரொம்ப ஓவரா பேசாதீங்க.. எங்க பொண்ணு முகத்துக்காக பாக்குறோம்.." கடைசியாக வாய் விட்டது ஒரு பைத்தியக் கிழம்.
பையனின் அம்மா முகம் சிவந்து போனது. "நீங்க இவ்வளவு பேசினதுக்கு அப்புறமும் உங்க பொண்ணை கட்டணும்னு எங்களுக்கு அவசியம் இல்ல.. வாடா போகலாம்.."
இரு வீட்டாரும் அடித்துக் கொண்டதில் கடைசியில் அவர்களின் ஆசை கருகிப் போனது. அந்தப் பெண் அவனை பாவமாக பார்த்தாள். ஏதும் செய்ய இயலாதவனாக அவன் நடக்கத் தொடங்கினான்.
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)
