January 20, 2010

காலத்தை வென்றவன்..!!!


முகமெங்கும் சுருக்கங்களுடன்
கைகால்கள் நடுங்கியபடி
உடல் தள்ளாடியவாறே
சாலையை கடக்க யத்தனிக்கும்
ஆதரவற்ற பெரியவரை
"ச்சீ கிழட்டுப் பரதேசி...
கண்ணு தெரியல?"
எனத் திட்டயபடி
வாகனத்தில் கடந்து போகிறான்
என்றும் பதினாறிலேயே
இருக்கப் போகும்
மார்க்கண்டேயன் ஒருவன்..!!

January 18, 2010

வினோத மனிதர்கள்..!!!

திருநெல்வேலி அரசினர் பொறியியல் கல்லூரி. மாலை நேரம். இருட்டத் தொடங்கியிருந்தது. விடைத்தாள்கள் திருத்தும் பணியை முடித்துக்கொண்டு விடுதிக்கு திரும்புவதற்காக பேருந்து நிறுத்தத்தில் தனியாக காத்துக் கொண்டிருந்தேன். எப்போதாவது வந்து போகும் வாகனங்களைத் தவிர சாலையில் ஆள் நடமாட்டமே இல்லை. சிறிது நேரம் கழித்து, நாற்பது வயது மதிக்கத்தக்க மனிதரொருவர், பேருந்து நிறுத்தத்தில் இருந்த சிமிண்டு திண்டில் வந்து உட்கார்ந்தார். ஏதாவது பேசலாம் என்று அவர் பக்கமாகத் திரும்பினேன். கவனிக்காதவர் போல சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டார். சரி.. தனிமை விரும்பி போல என்று நானும் அமைதியாகிவிட்டேன்.

சற்று நேரம் கழித்து என் பின்னாலிருந்து வினோதமான ஒரு சத்தம் கிளம்பியது. மோட்டார் எஞ்சினை ஸ்டார்ட் செய்வது போல.. இன்னும் குறிப்பிட்டு சொல்வதானால் ஒரு பன்றி உறுமுவதை அந்த ஒலி ஒத்திருந்தது. நான் சத்தம் வந்த பக்கமாகப் பார்த்தேன். வித்தியாசமாக எதுவும் புலப்படவில்லை. நமக்குத்தான் ஏதோ பிரம்மை என்று சமாதானம் செய்தவனாக பார்வையை சாலையில் ஓடவிட்டேன். மீண்டும் அதே சத்தம். எனக்கு பயமாகப் போய் விட்டது. பேருந்து நிறுத்தத்தில் அந்த மனிதரைத் தவிர ஈ காக்கா இல்லை. நான் அவரையே கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தவன் அதிர்ந்து போனேன். அந்த மனிதர்தான் உதடுகளைக் குவித்து அப்படி சத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

நான் கவனிப்பதை அவரும் பார்த்து விட்டார். அவர் கண்களில் ஒரு வலி தெரிந்தது. கைகளைக் கட்டிக் கொண்டார். சிரிக்க முயன்றார். முகத்தை திருப்பிக் கொண்டார். கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது. எப்பாடு பட்டாவது சத்தம் போடாமல் இருக்க முயலுகிறார் என்பது அவருடைய செயல்களில் இருந்து புலப்பட்டது. ஆனாலும் உதடுகளில் இருந்து அந்த சத்தம் வருவதை அவரால் தடுக்க முடியவில்லை. எனக்கு மிகவும் சங்கடமாகப் போய் விட்டது. நான் இருப்பதால்தானே அவருக்கு இந்த சங்கடம்? அந்த நேரம் பார்த்து ஒரு ஆட்டோ வர சட்டென்று ஏறிக் கிளம்பி விட்டேன். இனிமேல் எனக்காக அவர் இத்தனை கஷ்டப்பட வேண்டாம் என்று மனதுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

விடுதிக்கு திரும்பும் வழி எல்லாம் மனம் அவரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது. எங்கிருந்து அவருக்கு இந்த பழக்கம் வந்திருக்கும்? இவ்வாறு சத்தம் எழுப்புவது அவருடைய பிறவிக்குணமா இல்லை ஏதேனும் நோயா? தன்னுடைய குறையை எண்ணி அவர் எப்படி எல்லாம் மனம் நொந்திருக்கக் கூடும்? நான் இன்று அவரை பயத்துடன் பார்த்தது போல எத்தனை பேர் அவருடைய மனதை காயப்படுத்தி இருப்பார்கள்? உறவினர்களாலும், மற்றவர்களாலும் அவர் எத்தனை முறை அவமானப்படுத்தப்பட்டிருப்பார்? அவருடைய குடும்பத்தார் அவரின் இந்த பழக்கத்தை அல்லது நோயை ஏற்றுக் கொண்டு விட்டார்களா? கேள்விகள்..கேள்விகள்... கேள்விகள்.. ஆனால் பதில்கள்தான் என்னிடத்தில் இல்லை.

இதேபோன்ற வினோத மனிதர்கள் வேறு யாரையேனும் சந்தித்து இருக்கிறேனா என்று யோசித்துப் பார்த்தேன். தேவாரத்தில் இருக்கும் ரங்கசாமி தாத்தாவின் ஞாபகம் வந்தது. என்னுடைய அம்மாச்சியின் ஒன்று விட்ட அண்ணன் அவர். அவருக்கு மிகவும் விசித்திரமான பிரச்சினை ஒன்று இருந்தது. அது.. அவரால் சிரிக்காமல் இருக்க முடியாது. என்ன பேசினாலும் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை சிரித்து விடுவார். அவருடைய அப்பா இறந்து போன நாள் வரை, அது மற்றவர்களுக்கு பெரிய பிரச்சினையாகத் தெரியவில்லை. எழவு வீட்டிலும் தாத்தா விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்க எல்லோரும் அவரை ஒருமாதிரி பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அவருக்கே தன்னுடைய பிரச்சினை அப்போதுதான் உரைக்க ஆரம்பித்து இருக்கிறது. அன்று முதல் அவர் தன்னை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டார். கல்யாணமும் செய்து கொள்ளவில்லை. ஒரு பூட்டிய அறைக்குள்ளேதான் இருப்பார். சாப்பாடு, தூக்கம் எல்லாம் அங்கேயேதான். வெளியில் வந்து யாரோடும் பேச மாட்டார்.

நான் ரங்கசாமி தாத்தாவை முதல்முதலில் பார்த்தது இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது. இருட்டான அறையின் ஒரு மூலையில் உட்கார்ந்து இருந்தவர் ஓடிவந்து என்னைத் தன் கைகளில் அள்ளிக் கொண்டு தட்டாமாலை சுற்றினார். என்னைப் பார்த்ததற்காக ரொம்ப சந்தோஷப்பட்டார். தனக்கு ஏன் இப்படி ஆனது என்று தெரியவில்லை என்றும் எத்தனையோ வைத்தியம் பார்த்தும் இதைக் குணப்படுத்த முடியாமல் போனதால், மற்றவர்கள் எல்லாம் தன்னை பைத்தியம் என்று நினைத்து விடக்கூடும் என அஞ்சியே தன் வாழ்க்கையை ஒரு கூட்டுக்குள் சுருக்கிக் கொண்டதாகவும் சொன்னார். இதை சொல்லும்போதும் வெள்ளந்தியாக சிரித்துக் கொண்டே இருந்தார். எத்தனை நல்ல மனிதர் ஒரே ஒரு விஷயத்தால் இப்படி தன் வாழ்க்கையை தொலைக்க வேண்டியதாகி விட்டதே? அவரின் நிலையை எண்ணி அழத் தொடங்கியவனை கடைசியில் அவர் சமாதானம் செய்ய வேண்டி இருந்தது.

வித்தியாசமான பழக்கம் கொண்ட இன்னொரு மனிதரைப் பற்றியும் நான் சொல்ல தோன்றுகிறது. என்னுடைய கல்லூரியில் வேலை பார்த்தவர் அந்த விரிவுரையாளர். புத்தகங்களை கணக்கு வழக்கின்றி சேகரிக்கும் வினோத பழக்கம் அவருக்கு இருந்தது. இதில் என்ன வினோதம் என்கிறீர்களா? அவர் அந்தப் புத்தகங்களில் ஒன்றைக் கூட படிக்க மாட்டார். ஒரு புத்தகம் நன்றாக இருக்கிறது என்று யாரேனும் சொல்லி விட்டால் போதும்.. உடனே அந்தப் புத்தகத்தை வாங்கி விடுவார். என்ன மொழி, என்ன பயன்பாடு என்றெல்லாம் சிறிதும் யோசிக்க மாட்டார். சரி.. மற்றவர்களிடம் பெருமையாக சொல்லிக் கொள்வார் என்று பார்த்தால் அதுவும் கிடையாது. அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்ததால்தான் எனக்கே இந்த விஷயம் தெரிய வந்தது. ஒரு முறை தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரிடம் கேட்டே விட்டேன். பதிலாக ஒரே ஒரு புன்னகை மட்டுமே கிடைத்தது. இப்போது அவர் எங்கே இருக்கிறார்.. வாங்கிய புத்தகங்களை என்ன செய்தார்.. இன்னும் புத்தகங்கள் வாங்கிக் கொண்டிருக்கிறாரா? தெரியவில்லை.

தினசரி வாழ்க்கையில் நாம் எத்தனை மனிதர்களை சந்திக்கிறோம்? அதில் இது போல எத்தனை விசித்திரமான மனிதர்களும், வினோத பழக்கங்களும் இருக்கக் கூடும்? நான் பார்த்த விஷயத்தையும், என்னுடைய சிந்தனைகளையும் விடுதி அறையில் என்னோடு தங்கியிருந்த நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் உளவியலில் மிகுந்த நாட்டம் கொண்டவர். நான் சொன்னதை எல்லாம் பொறுமையாகக் கேட்டவர், மெலிதாக சிரித்தார்.

"ஏன் நண்பா.. சிரிக்கிறீங்க.."

"இல்ல தலைவரே.. வித்தியாசமான மனிதர்களா பார்த்திருக்குறதா சொல்றீங்களே.. அத நினைச்சுதான் சிரிச்சேன்.."

"இதுல சிரிக்க என்ன இருக்கு?"

"உண்மைய சொல்லனும்னா எல்லா மனுஷங்களுமே விநோதமானவங்கதானே.."

"எனக்கு புரியல நண்பா.."

"எந்த மிருகமாவது மத்தது வாழ தான் பொருக்காம இருக்குமா? ஆனா மனுஷங்கள பாருங்க.. போட்டி, பொறாம.. ஒருத்தன் நல்லா இருந்தா இன்னொருத்தன் வயிறு எரியுறது.. பக்கத்து நாடு கூட.. வீட்டுக்குள்ள.... சக மனுஷன் கிட்ட.. எங்க பார்த்தாலும் சண்ட.. மதத்த சொல்லி.. இருக்குதா இல்லையான்னு தெரியாத சாமியோட பெயர சொல்லி.. அப்புறம் காசு, பணம்.. மனுஷனுக்கு மரியாதை இல்லாம போச்சு.. அவன் படைச்ச காசுக்கு அவனே அடிமை ஆகிட்டான்.. அன்புன்னா என்னான்னு கேட்கிறான்.. எதுக்காக இந்த வாழ்க்கை.. என்னத்த தேடி போறோம்னு தெரியாமையே ஓடிக்கிட்டு இருக்கோம்.. இங்க யார் நிம்மதியா இருக்கா.. சொல்லுங்க பார்ப்போம்.. எல்லாத்துக்கும் மேல.. உனக்கு வாழ்க்கைய கொடுத்த இயற்கைய நீயே அழிக்கத் துணிஞ்சிட்ட.. இன்னும் கொஞ்ச நாள்ல இங்க எதுமே மிச்சம் இருக்காது.. ஒரு வேளை சோத்துக்கு மனுஷங்க அடிச்சிக்கிட்டு சாகப் போறாங்க.. இது எல்லா மனுஷனுக்கும் பொருந்தும்தானே.. அப்போ நாம எல்லோருமே விநோதமானவங்கதானே?"

நிப்பாட்டாமல் பொரிந்து தள்ளி விட்டார். நான் பதில் சொல்ல முடியாமல் பேயறைந்தவன் போல நின்றேன். கேள்விகளின் வீரியம் முழுவதுமாய் எனக்கு உரைக்க சற்று நேரம் ஆனது. அவர் சொன்னது எதுவுமே பொய் இல்லையே? அப்படி ஒரு வாழ்க்கையைத்தானே நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. இந்த லட்சணத்தில் நாம் எங்கே மற்றவர்களை விநோதர்கள் என்று சொல்வது? கொஞ்ச நேரம் இருவருமே அமைதியாக உட்கார்ந்து இருந்தோம். பிறகு எதுவும் பேசாமல் அவர் படுத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் தூங்கியும் போனார். ஜன்னலின் வழியே வானத்தைப் பார்த்தேன். ஒரே இருட்டாக இருந்தது. எங்கேனும் நட்சத்திரக் கீற்றுகள் தென்படுகின்றனவா எனத் தேடினேன். எதுவும் தட்டுப்படவில்லை. ஆயாசம் நிரம்பி வழிய, கனத்த மனதுடன் போர்வையை இழுத்து மூடியவனாக தூங்கிப் போனேன்..!!

January 16, 2010

போர்க்களம் - திரைப்பார்வை..!!!

இந்தப் பொங்கலுக்கு வெளியாகி இருக்கும் படங்களில் டார்க் ஹார்ஸ் என்று "போர்க்களத்தை" சொல்லலாம். செமத்தியான ஆக்சன் படம். "பொல்லாதவன்" கிஷோர் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார். படத்தின் இயக்குனர் பண்டி சரோஜ் குமார் இருபத்தைந்து வயது இளைஞராம். நம்ப முடியவில்லை. தாதாக்களால் கடத்தப்பட்ட பெண்ணை மீட்கும் ஹீரோ என்கின்ற வெகு சாதாரணமான கதை. சொன்ன விதத்திலும், காட்சி அமைப்புகளிலும் அசத்தி இருக்கிறார்கள்.



ஆந்திராவின் கோதாவரி நதிக்கரையில் இருக்கும் சிறு தமிழ் கிராமம். அங்கே ஊரையே அடக்கியாளும் தாதா சம்பத். அவருடைய எதிரி பொன்வண்ணன். சம்பத் கட்டாயமாக திருமணம் செய்ய நினைக்கும் பெண் ஸ்மிதா, அவரிடம் இருந்து தப்பி வந்து சென்னையில் இருக்கும் கிஷோரிடம் அடைக்கலம் புகுகிறார். ஸ்மிதாவுக்கு மெல்ல மெல்ல கிஷோரின் மேல் காதல் உருவாகுகிறது. இருந்தும் கிஷோர் ஸ்மிதாவை ஏற்க மறுத்து போலீசில் ஒப்படைக்கிறார். மறுபடியும் சம்பத்திடம் சிக்கிக் கொள்கிறார் ஸ்மிதா. மனம் மாறும் கிஷோர் ஸ்மிதாவை மீட்கப் புறப்படுகிறார். ஏன்முதலில் கிஷோர் ஸ்மிதாவை ஏற்க மறுத்தார்? கடைசியில் அவரால் ஸ்மிதாவைக் காப்பாற்ற முடிந்ததா என்பதை திரை அரங்கில் பாருங்கள்.



தன்னம்பிக்கையோடு சமுதாயத்தை எதிர்கொள்ளும் நாயகனாக கிஷோர் அருமையாக நடித்து இருக்கிறார். அவரை, ஒரே அடியில் அத்தனை பேரையும் அடித்து நொறுக்குகிற சூப்பர் ஹீரோவாக காட்டி இருக்கிறார்கள். ஒரு தனி மனிதனால் எப்படி முடியும் என்று நாம் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காக பயிற்சி பெற்ற சமுராய், சவுண்ட் அனலைசிசில் டிகிரி என்றெல்லாம் முதலிலேயே தெளிவாக சொல்லி விடுகிறார்கள். வசன உச்சரிப்பில், உடல்மொழியில்.. கிஷோர் கிளாஸ். நாயகி ஸ்மிதாவுக்கு பெரிதாக வேலையில்லை. க்யூட்டாக இருக்கிறார். டாய் என்று ஊரதிரக் கத்தும் வழக்கமான வில்லனாக சம்பத்.

படத்தில் நம்மை சிரிக்க வைப்பவர் கிஷோரின் உதவியாளராக வரும் சத்யன். அவருடைய வசனங்களும், அதற்கு கிஷோர் சொல்லும் ஒரு வரி பதில்களும் அட்டகாசம். நாயகியைக் காப்பாற்றும் முயற்சியில் தமிழ் சினிமா மரபுப்படி வில்லன்களிடம் சிக்கி செத்துப் போகிறார். எல்லா இயக்குனரும் சத்யனைக் கொல்ல வேண்டும் என்றே ஸ்க்ரிப்ட் எழுதுவார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. அவரை ஒரு படத்திலாவது உசிரோட பொழச்சுப் போக விடுங்கப்பா.. படத்தில் குறிப்பிட வேண்டிய மற்றொருவர் போலிஸ் இன்ஸ்பெக்டராக வரும் பிஜூ மேனன். நியாய தர்மங்கள் பார்க்கும் கெட்ட போலிஸ்.. அசால்ட்டாக நடிக்கிறார் மனுஷன். பயமுறுத்தும் கெட்டப்போடு வில்லனின் குருவாக டினு ஆனந்தும் இருக்கிறார்.



படத்தின் ஒளிப்பதிவாளர் மகேந்திரன். அத்தோடு ஷாட்ஸ் என்று பண்டி சரோஜ் குமார் பெயரையும் போடுகிறார்கள். கையைக் கொடுங்கள் சாமிகளே.. சும்மா அதகளம் பண்ணி இருக்கிறீர்கள். எனக்குத் தெரிந்து அஞ்சாதேயில் கேமராவில் பல வித்தியாசமான கோணங்களை பயன்படுத்தி இருந்தார்கள். அதன் பிறகு இந்தப்படம்தான். காமிராவோடு நாமும் உடன் செல்வது போல நம்ப முடியாத கோணங்களில் படமாக்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு ஷாட்டும் ஒரு அற்புதம். அடுத்ததாக கலை இயக்கம் - ஆனந்தன். ரொம்பப் புதிதாக யோசித்து இருக்கிறார். வில்லனின் வீட்டின் முன் இருக்கும் கொடூரமான சிலை, பயங்கர ஆயுதங்கள், கடைசி சண்டை நடக்கும் போர்க்களம் என்று பார்த்து பார்த்து செய்து இருக்கிறார். அருமை. ரோஹித் குல்கர்னியின் பின்னணி இசை நன்றாக இருந்தாலும் பல ஹாலிவுட் படங்களில் ஏற்கனவே கேட்ட உணர்வைத் தருவது சிறிய குறை.



கதையை படிக்கும்போதே புரிந்திருக்குமே? அதேதான். ராமாயணக் கதையேதான். படத்தில் நிறையவே இதைப் பற்றிய குறியீடுகள் இருக்கின்றன. கதை நிகழும் கிராமத்தின் பெயர் லங்கா. வில்லனை ஒரு காட்சியில் ராவணனின் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்கிறார்கள். படம் நெடுகிலும் கருப்பு நிறமும் கிஷோருக்கான ஒரு குறியீடாக வருகிறது. ஆனால் அவருடைய கதாபாத்திரத்தின் சஸ்பென்சை உடைக்க நான் விரும்பவில்லை. ஊர் முழுக்க ஓடிக் கொண்டேயிருக்கும் மன நலம் இல்லாத மனிதன், கிஷோருக்கு தமிழ் சொல்லித்தரும் ராஜேஷ் என்று சின்ன சின்ன கதாபாத்திரத்தை வடிவமைப்பதில் கூட இயக்குனர் ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார். அலட்டிக் கொள்ளாத திரைக்கதை. படம் படு ஸ்டைலிஷாக இருக்கிறது.

முதல் பாதி போவதே தெரியவில்லை. இரண்டாம்பாதி கொஞ்சம் தொய்வு என்றாலும் கடைசி சண்டையில் களை கட்டுகிறது. ஆங்காங்கே செயற்கையாக இருக்கும் காட்சி அமைப்புகளில் மட்டும் இன்னும் கொஞ்சம் சிரத்தை காட்டி இருக்கலாம். இயக்குனர் ஆந்திராவை சேர்ந்தவர். பேங்காக்கில் சினிமா பற்றி பயின்றவராம். நல்ல படத்தை மதிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு தன்னுடைய முதல் படத்தை தமிழில் எடுத்திருக்கிறார். அவருடைய நம்பிக்கையை நம் மக்கள் காப்பாற்றுவார்கள் என நம்புகிறேன்.

January 14, 2010

ஆயிரத்தில் ஒருவன் -திரைப்பார்வை..!!!

எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளோடு பரபரப்பாக வெளியாகி உள்ளது "ஆயிரத்தில் ஒருவன்".

--> பருத்தி வீரனின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு வரும் கார்த்தியின் படம்

--> புதுப்பேட்டைக்குப் பின் காணாமல் போன செல்வராகவனின் படம்

--> 32 கோடி ரூபாய் செலவில் மூன்றாண்டுகளாக எடுக்கப்பட்ட படம்

--> சரித்திரம் + சாகசம் என்று வெகு நாட்களுக்குப் பிறகு வெளியாகும் தமிழ்ப்படம்



முதலில் செல்வராகவனுக்கு ஒரு ராயல் சல்யூட். இப்படி ஒரு கதையை யோசிப்பதற்கே ஒரு கெத்து வேண்டும். சாதித்துக் காட்டி இருக்கிறார். தமிழில் இதுவரைக்கும் இப்படி ஒரு படம் வந்தது கிடையாது என்று அடித்துச் சொல்லலாம்.

( படத்தோட கதை எனக்குத் தெரிய வேணாம்னு நினைக்கிறவங்க அடுத்த மூணு பத்திய தாண்டிப் படிங்க மக்கா..)

காலம் - கி.பி.1300 . பாண்டிய மன்னனின் படையெடுப்பால் நாட்டை விட்டு ஓடுகிறார்கள் சோழர்கள். போகும்போது பாண்டியர்களின் குலதெய்வத்தின் சிலையையும் அபகரித்துச் செல்கிறார்கள். வியட்நாமுக்கு அருகே இருக்கும் ஒரு தீவுக்கு தப்பிச் செல்லும் அவர்களை துரத்திக் கொண்டு போன பாண்டிய தளபதி, போகும் வழியை ஒரு ஓலையில் பதிவு செய்கிறான். அதன் பிறகு அந்த சோழவம்சம் என்ன ஆனது என்று தெரியவில்லை.

இன்று, கிட்டத்தட்ட எழுநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த ஓலைச்சுவடி ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளரிடம் (பிரதாப் போத்தன்) கிடைக்கிறது. காணாமல் போன சோழ வம்சத்தை தேடும் முயற்சியில் ஆராய்ச்சியாளரும் காணாமல் போகிறார். அவரைத் தேடி அரசாங்கம் ஒரு குழுவை அனுப்புகிறது. போலிஸ் ஆபிசர் ரீமா, பிரதாப்பின் மகள் ஆண்ட்ரியா, அழகம் பெருமாள் ஆகியோர் அடங்கிய அந்தக் குழுவின் போர்ட்டராக கார்த்தி. கடல், பாம்புகள், காட்டுவாசிகள், புதைகுழி என்று பல ஆபத்துகளைக் கடந்து தொலைந்து போன சோழ மக்களின் நகரைக் கண்டுபிடிக்கிறார்கள். இங்கே இடைவேளை.

அழிந்து போனதாக நம்பிக் கொண்டிருந்த சோழ வம்சத்தின் மிச்சம் அங்கே குற்றுயிரும் குலையுயிருமாக வாழ்கிறார்கள். அவர்களின் அரசன் பார்த்திபன். என்றேனும் தாய் தேசத்தில் இருந்து சேதி வந்து தாங்கள் சோழதேசம் திரும்புவோம் என்னும் நம்பிக்கையோடு காத்திருக்கும் கூட்டம். தான் சோழ தேசத்தின் பிரதிநிதி என்றும் மூன்று நாட்களில் சொந்த ஊர் திரும்பலாம் என்றும் பார்த்திபனை நம்ப வைக்கிறார் ரீமா. ஆனால் உண்மையில் அவர் காலம் காலமாக சோழர்களை பலி வாங்க காத்துக் கொண்டிருக்கும் பாண்டிய வம்சத்தை சேர்ந்தவர். நேரம் பார்த்து பார்த்திபனின் காலை வாரி விடுகிறார். கடைசியில் என்ன ஆனது என்பதை திரையில் பாருங்கள்.



சட்டையில்லாத வெறும் உடம்போடு காருக்குள் இருந்து கார்த்தி அறிமுகமாகும் காட்சி அட்டகாசம். எம்ஜியார் பாட்டுக்கு ஆடுகிறார். அதன் பிறகு சொங்கி சோதாவாகிப் போகிறார். முதல் பாதியில் ஊருக்கு நேர்ந்து விட்டார்போல வருவோர் போவோர் எல்லாரும் அவரை அடிக்கிறார்கள். இரண்டாம் பாதியில் உப்புக்கு சப்பாணி போல வந்து போகிறார். கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் சூர்யாவின் குரல் போலவே கேட்கிறது. உடல்மொழியிலும் முக்கால்வாசி பருத்திவீரன். ரூட்ட மாத்துங்க பாசு.. ஆண்ட்ரியா செல்வராகவனின் அக்மார்க் சோகநாயகி. அவர் கவர்ச்சி காட்டாமல் இருப்பது நமக்கு நல்லது. படத்தின் ஆயிரம்வாலா பட்டாசு.. ரீமாசென். சான்சே இல்லை. ஆட்டம்பாட்டம் என்ன.. கத்திசண்டை என்ன.. கோபம் கொப்பளிக்க கண்களாலேயே வெறுப்பைக் கக்குவது என்ன.. தூள் பரத்தி இருக்கிறார்.



ஆரம்ப கட்டத்தில் எரிச்சலைக் கிளப்பினாலும் இரண்டே காட்சிகளில் நம் உள்ளத்தை அள்ளிக் கொள்கிறார் பார்த்திபன். ரீமாவின் துரோகத்தால் தன் மக்கள் வஞ்சிக்கப்பட்டதை அறிந்து ஒரு குற்றவுணர்வுடன் கூடிய நடையோடு அழுது கொண்டே வருகிறார் பாருங்கள்.. சூப்பர். இறுதிக் காட்சியில் கண்முன்னே தன் மக்கள் நாசம் செய்யப்படுவதைக் கண்டு துடிப்பதும் நல்ல நடிப்பு. அங்கங்கே வரும் கோண செஷ்டையையும் நடனத்தையும் தவிர்த்து பார்த்திபன்.. அட்டகாசம். அழகம் பெருமாளும் மற்றவர்களும் அவரவர் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக செய்து இருக்கிறார்கள். எல்லா காட்சிகளிலும் மக்கள் வெள்ளம். முகம், உடம்பு என எல்லாப் பகுதியிலும் கரியைப் பூசிக்கொண்டு சிரமப்பட்டு நடித்து இருக்கிறார்கள். படத்தில் நடித்திருக்கும் துணை நடிகர்களுக்கு ரொம்பவே கடமைப்பட்டு இருக்கிறார் செல்வராகவன்.

பின்னணி இசையில் பிசிறு தட்டி இருக்கிறார் பிரகாஷ் குமார். படத்தில் பயன்படுத்தி இருக்கும் பாடல்கள் - கோவிந்தா கோவிந்தா, உன்மேல ஆசைதான், நிலமெங்கே.. எல்லாமே நச். மாலை நேரம் படத்தில் இல்லையென்பது எனக்கு மிகவும் வருத்தம். கலை இயக்குனர் யாரென்று தெரியவில்லை.. கலக்கி இருக்கிறார். நீண்ட கால்களின் நிழல் நடராஜரின் உருவமாக வருவதில் ஆரம்பித்து அடர்ந்த காடுகளின் ஊடே இருக்கும் கோட்டைக் கொத்தளங்கள், சோழ மக்கள் தங்கி இருக்கும் இருண்ட குகைகள் என புகுந்து புறப்பட்டு இருக்கிறார். நேரத்துக்குத் தக்கவாறு கலர் டோன்கள் மாற்றம், அகண்ட கேன்வாஸ் என ராம்ஜியின் காமிரா மாயாஜாலம் செய்கிறது. படத்தில் ஒரே ஒருவர்தான் வேலை பார்க்கவில்லை. அவர் - எடிட்டர் கோலா பாஸ்கர். படம் கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் ஓடுகிறது. கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். கிராபிக்ஸ் காட்சிகளில் நாம் இன்னும் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்பதற்கு இந்தப்படம் நல்ல எடுத்துக்காட்டு.



எல்லா செல்வராகவன் படங்கள் போலவே இந்தப் படத்திலும் செக்ஸ், மனித உணர்வுகளைச் சொல்லும் பல நுணுக்கமான விஷயங்கள் இருக்கின்றன. இத்தனை நல்ல விஷயங்கள், வித்தியாசமான கதை.. பிறகு என்ன சூது என்கிறீர்களா? அது - திரைக்கதை. முதல் பாதியோடு படம் முடிந்திருந்தால் ஒரு அட்டகாசமான அட்வென்ச்சர் படம் பார்த்த திருப்தி கிடைத்திருக்கும். இரண்டாம் பாதியில் சொதப்பி இருக்கிறார் செல்வா. எந்த ஆங்கிலப்படத்தின் சாயலும் இந்தப் படத்தில் இருக்காது என்றெல்லாம் பேட்டி தந்திருக்கிறார் செல்வா. ஆனால் படத்தின் டைட்டில் போடுவதே மம்மியின் உல்டா. கிங் சாலமன் மைன்ஸ், மெக்கென்னாஸ் கோல்டு, சீன சண்டைப் படங்கள், கிளாடியேட்டர் என்று நாம் பார்த்து ரசித்த பல படங்களின் காட்சிகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை.

இப்போ என்னதான் பண்ண.. படம் பார்க்கலாமா வேண்டாமா என்று ஒரு வார்த்தையில் சொல்லு என்பவர்களுக்கு.. வித்தியாசமான கதைக்களன் மற்றும் தமிழில்இனிமேலும் இப்படிப்பட்ட முயற்சிகள் வரவேண்டும் என்பதற்காகவே கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டிய படம்.

January 9, 2010

குழப்பக் கவிதைகள் - 2



நான்
நானாக
இருக்கும்
என்னை
உங்களுக்கு
பிடிக்காமல்
போகிறது


உங்களுக்குப்
பிடித்திருக்கும்
என்னை
என்னால்
அங்கீகரிக்க
முடிவதில்லை


யாரென
அறிந்திராத
உங்களுக்கான நான்
அல்லது
எனக்கான நான்


விடைகளைத் தேடி


முடிவில்லா
மாயவெளியில்
சுழன்று
திரிகிறது
நான்...!!!



குறிப்பு 1 : அன்பின் நண்பர்களே.. கல்லூரிப் பணி காரணமாக கடந்த ஒரு வாரமாக திருநெல்வேலியில் தங்கி இருப்பதால் அடிக்கடி வலைப்பக்கம் வர முடிவதில்லை.. ஆளை எங்கே காணோம் என்று போன் செய்து விசாரித்த நண்பர்களுக்கும், விசாரிக்க நினைத்து போன் செய்யாமல் போன நண்பர்களுக்கும் நன்றி.. அப்பாடா ஒரு வாரம் நிம்மதியா இருந்தோம்னு நினைக்கிற மக்களுக்கு.. அடியே.. கூடிய சீக்கிரம் திரும்பி வருவோம்ல..:-))))))

குறிப்பு 2:நெல்லையில் இருக்கும் பதிவுலக நண்பர்கள் யாரேனும் தொடர்பு கொள்ள விரும்பினால்.. 98421 71138..

January 2, 2010

குழப்பக் கவிதைகள் -1


அர்த்தங்கள்
ஏதுமற்ற
பெருவெளியில்

அது
அதுவாக
இருக்கும்வரை

இது
இதுவாகவே
இருந்தது...

இன்னதென்று
விளக்க முடியாத
ஒரு
அற்புத கணத்தில் **

அது
இதுவாக
மாறிப்
போனபோது

இது
எது
ஆவதெனத்
தெரியாமல்
குழம்பி நின்றது..!!!

** - மதுரையில் நடைபெற்ற கடவு நிகழ்ச்சியில் கவிஞர் விக்கிரமாதித்தனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.. அவரோடு உரையாடிக் கொண்டிருந்தபோது, அவர் சொல்லிய சில வார்த்தைகளின் விளையாட்டில் தோன்றியதுதான் இந்தக்கவிதையின் கரு...

January 1, 2010

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!!!


அன்பின் நண்பர்களே.. ஒவ்வொரு புது வருடமும் நமக்குள் நம்பிக்கையை விதைக்கிறது.... கடந்து போன வருடத்தின் காயங்களை மறந்து சந்தோஷங்களை மட்டும் நெஞ்சில் நிறுத்துவோம்.. பிறக்கும் இந்தப் புது வருடத்தில் நம் கனவுகள் எல்லாம் ஈடேறட்டும்..எங்கும் அன்பு செழிக்கட்டும்.. அமைதி பரவட்டும்.. பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!!!