February 27, 2009

உக்கார்ந்து யோசிச்சது (27-02-09)...!!!

இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்று நம் அனைவருக்கும் பெருமை சேர்த்து இந்தியா திரும்பி இருக்கிறார் ரஹ்மான். அவருக்கு வாழ்த்துக்கள். இதே நேரத்தில் நமது தமிழக அரசு இந்த வருடத்துக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்துள்ளது. மொத்தம் 71 கலைஞர்களுக்கு இந்த வருடம் விருது வழங்கப்பட்டு உள்ளது. எல்லாம் சரி... ஆனால் உண்மையாக பாராட்டப்பட வேண்டிய கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதா? எல்லா பத்திரிக்கைகளிலும் பரத், நயன்தாரா, அசின் விருது பெற்றனர் என்றுதான் செய்தி. ஊடகங்களுக்கு பணிவான வேண்டுகோள். எல்லா நாட்களிலுமே சினிமா நட்சத்திரங்களைப் பற்றித்தான் எழுதுகிறீர்கள். இதுபோன்ற தருணங்களிலாவது மற்ற கலைஞர்களைப் பற்றி எழுதலாமே.. ஏற்கனவே நம் நாட்டின் பாரம்பரியக் கலைகள் ஒவ்வொன்றாக அழிந்து வருகின்றன. இந்த நிலையில் நம் தமிழ் மக்களின் அரவணைப்பும் உரிய அங்கீகாரமும் மட்டுமே இது போன்ற கலைகளையும் கலைஞர்களையும் உற்சாகம் கொள்ளச் செய்யும்.
தமிழக அரசும் சில விசயங்களை கவனிக்க வேண்டும். ஏற்கனவே சினிமா கலைஞர்களுக்கு பல விருதுகள் உள்ளன. அவர்களைத் தவித்து மற்ற கலைஞர்களுக்கு மட்டும் இது போன்ற விருதுகளைக் கொடுக்கலாமே. அரசியல் காரங்களைத் தள்ளி வைத்து விட்டு உண்மையான கலைஞர்களை அரசு கவுரவிக்க வேண்டும். செய்வார்களா? ( இதில் கொடுமை என்னவென்றால், இரண்டு நாட்கள் முன்னாடி நண்பனிடம் பேசிக்கொண்டு இருந்தபோது சொன்னான்.. தானைத்தலைவி நமீதாவுக்கு விருது கொடுக்காத தமிழக அரசை கண்டித்து போஸ்டர் ஒட்டி இருக்கிறார்களாம் மதுரையில்.. அடங்கொய்யால.. இவங்களை திருத்தவே முடியாதுப்பா.. )
***************
பதிவுலகில் எல்லாருமே நான் கடவுளைப்பற்றி விதவிதமாகப் பேசி, துவைச்சு, அலசி காயப் போட்டாச்சு. அனைவரும் அருமை என்று ஒத்துக்கொண்ட விசயம்.. இளையராஜாவின் இசை. இந்தப் படத்திற்கான அவருடைய இசையைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் ராஜாவின் இன்னொரு படமான "நந்தலாலா" பற்றி யாரும் அதிகம் பேசவில்லை என்று நினைக்கிறேன். உண்மையில் எனக்கு நான் கடவுளை விட நந்தலாலாவின் இசை மிக அபாரம் என்றே தோன்றுகிறது. "ஒண்ணுக்கொண்ணு துணை இருக்கும் உலகத்திலே அன்பு ஒன்றுதான் அனாதையா?" என்னும் பாடலைக் கேட்டு பாருங்கள். உள்ளத்தை உருக்கும் இசை. யேசுதாஸ் பாடி இருக்கிறார் என்று நினைக்கிறேன். குழந்தைகளுக்கு கதை சொல்வது போல் வரும் "மெல்ல ஊர்ந்து.." பாடலும், தாயைப் பற்றி இளையராஜாவே பாடும் "தாலாட்டு கேட்க நானும்" பாடலும் ரொம்ப இனிமை. கடைசியாக ஒரு நரிக்குறவப் பெண்ணின் குரலில் ஒலிக்கும் "எலிலே" பாடலில் தமிழில் ஒரு புது முயற்சி. வெறும் உறுமி மேளத்தின் பின்னணியில் பாடல் பட்டையைக் கிளப்புகிறது. கண்டிப்பாக கேட்க வேண்டிய ஆல்பம்.
***************
நேற்று ஹைதராபாத்தில் இருந்து பதிவுலக நண்பர் பாரதிராஜாவிடம் பேசிக் கொண்டிருந்தேன். சீக்கிரமா "எல்லாப் புகழும் வில்லுக்கே" பார்ட் டூ எழுதுங்க நண்பா என்றார். ஏன்யா.. நான் நல்லா இருக்கறது பிடிக்கலையா? முதல் பதிவுக்கே ஒரு பெயரில்லா நண்பர் என்னோட மொத்த குடும்பத்தையே காலி பண்ணிட்டார். (அப்படி ஒரு கெட்ட வார்த்தைகள நான் கேட்டதே இல்ல). அதுவாவது பரவா இல்லா.. இன்னொரு பெயரிலி எனக்கு வரப்போற பொண்டாட்டியக்கூட விடாமத் திட்டிட்டாரு. நான் எங்க போய் அழ..? "சரி சரி.. சுனாபானா.. பொது வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்னு" என்ன நானே தேத்திக்கிட்டு.. கூடிய சீக்கிரமே அடுத்த "வில்லு" பதிவ எழுதுறேன் நண்பான்னு சொல்லி இருக்கேன்.
ஏற்கனவே இரண்டு நண்பர்கள் தொடர்பதிவு எழுதக் கூப்பிட்டு இருக்காங்க. "வழக்கொழிந்த தமிழ் சொற்கள்" பற்றி பிரேம் எழுத சொல்லி இருக்கார். "எனக்கு பிடித்த இருவர்" என்ற தலைப்பில் எழுத நண்பர் ஆதவா அழைப்பு விடுத்து இருக்கார். இரு பதிவுமே கொஞ்சம் தகவல்கள் சேகரித்து எழுத வேண்டியவை. கூடிய சீக்கிரம் எழுதி விடுகிறேன். அதோட.. குழந்தைகளுக்கான மாயாஜாலக் கதை ஒண்ணு பதிவுல எழுதணும்னு எண்ணம் இருக்கு.. எழுதலாமா வேண்டாமான்னு பின்னூட்டத்துல சொல்லுங்க நண்பர்களே..
***************
முடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு அஜால் குஜால் கதை..
ஒருத்தன் வீட்டுக்கு வர வழியில கடைத்தெருவுல ரோபோ ஒண்ணப் பார்த்தான். அதுல என்ன விசேஷம்னா யார் பொய் சொன்னாலும் அந்த ரோபோ கண்டுபிடிச்சு அவங்க தலையைக் சேர்த்து ஓங்கி ஒரு அடியப் போடும். விலை பத்தாயிரம் ரூபாய். இவன் ஆசைப்பட்டு அதை வீட்டுக்கு வாங்கிட்டுப் போய்ட்டான். பொண்டாட்டிய வீட்டுலக் காணோம். லேட்டா வர்றா. எங்கடி போனன்னு இவன் கேட்க பக்கத்து வீட்டு அக்காவுக்கு ஒடம்பு முடியல..ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டு போயிருந்தேன்னு சொன்னா. ரோபோ அவ தலையில ஓங்கி அடிச்சது. பொய் சொல்லாம உண்மைய சொல்லுடின்னா.. படத்துக்கு போய் இருக்கா..அப்புறம் இவன் ரோபோவப் பத்தி சொன்னான். அவளுக்கு ஒரே ஆச்சர்யம்.. இது எவ்வளோ விலைங்கன்னு கேட்டா.. விலை கூட சொன்ன திட்டுவாலோன்னு பயந்து இவன் ஆயரம் ரூபாய்ன்னு சொன்னான்.. இவனுக்கு மண்டைல ஒரு போடு. பொண்டாட்டிக்கு இவன் போய் சொல்றன்னு தெரிஞ்சு போச்சு. அப்புறமா உண்மையான விலைய சொன்னான். அந்த நேரம் பார்த்து அவன் மகன் வீட்டுக்குள்ள வந்தான். இவ்வளவு நேரமா எங்கடா போன பக்கின்னு அப்பன் கேட்க... கிளாஸ்ல கூட படிக்கற பையன் வீட்டுக்கு போய் இருந்தேன்ப்பான்னு அவன் சொல்ல.. போடு.. அவனுக்கும் அடி விழுந்துச்சு. உண்மைல அவன் தெருவுல கோலிக்குண்டு விளையாண்டுக்கிட்டு இருந்திருக்கான். அம்மாவுக்கு கோபத்த அடக்க முடியல.. இந்த வயசுலேயே பொய் சொல்லுது பாரு.. அப்பனுக்கு பிள்ளை தப்பாம பொறந்து இருக்குன்னு சொன்னா.. அடுத்த நிமிஷம்.. ரோபோ அவ தலைல ஓங்கி ஒரு அடியப் போட்டுச்சு.. (கதை புரியாத சின்னப்பசங்க புரிஞ்சவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்குங்கப்பா..)
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

February 26, 2009

அவனும் அவளும் (5)....!!!

கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு அவன் அவளை சென்னையில் பார்த்தான். கண்டிப்பாக அவளேதான். மறக்கக் கூடிய முகமா அவளுடையது? ஆள் முன்னைக்கு இப்போது இன்னும் இளைத்து இருந்தாள். கையில் ஒரு குழந்தை வேறு இருந்தது. அவள் அவனைப் பார்க்கும்முன் திரும்பி விட எத்தனித்தபோது, அவள் அவனுடைய பெயரைச் சொல்லி கூப்பிட்டாள். மெதுவாக திரும்பி அவளை நோக்கி சென்றான். அவள் கண்களில் ஆச்சர்யம் தேங்கி நின்றது.
"நீ இங்க எப்படி..? சென்னைக்கு எப்போ வந்த?"
"நான் இங்க வந்து எட்டு மாசம் ஆகுதும்மா.. பக்கத்துல ஒரு கம்பனிலதான் வேலை பாக்குறேன்"
"அதிசயமா இருக்கு.. நானே எப்பயாவதுதான் கடைத்தெருவுக்கு வருவேன்.. இன்னைக்கு என் நல்ல நேரம்.. உன்னப் பார்த்துட்டேன்.. எங்க தங்கி இருக்க?"
"கோடம்பாக்கத்துல ஒரு பிரென்ட் கூட ரூம் எடுத்து தங்கி இருக்கேன்"
"சரி வா.. இங்க கிட்டக்கத்தான் என் வீடு.. போய் அங்க பேசிக்கலாம்"
"பரவா இல்ல.. நான் இன்னொரு நாள் வரேனே."
"எத்தன நாள் கழிச்சு பாக்குறோம்? உன்ன அவ்வளவு சீக்கிரம் போக விட்டுடுவேனா? சொன்னா கேளு.. வா.. கிளம்பு.. ஒண்ணும் பேசக் கூடாது". அவள் எப்போதுமே அப்படிதான். ரொம்ப பிடிவாதக்காரி. அவள் சொன்னால் அது நடக்க வேண்டும். இன்னமும் மாறவில்லை போல என்று நினைத்துக் கொண்டான்.
அவர்கள் இருவரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். அவனுடைய அப்பா தென்மாவட்ட நகரம் ஒன்றில் சொந்தமாகக் கடை வைத்திருந்தார். அவன் அருமையாக கவிதை எழுதுவான். எந்தக் கல்லூரியில் போட்டி நடந்தாலும் அதில் கலந்து கொள்வான். அவனுக்கு என்று அவனது கல்லூரியில் ஒரு ரசிகர் மன்றமே இருந்தது. அவள் அவனுக்கு ஒரு வருடம் ஜுனியர். நிறைய புத்தகங்கள் படிப்பவள். அருகில் இருந்த ஒரு கிராமத்தில் வசித்து வந்தாள். இருவருக்குமே அலைவரிசை ஒத்துப் போனதால் எளிதாகப் பழக முடிந்தது. கடைசியில் வழக்கம் போல் காதலில் போய் முடிந்தது.
அவர்களைப் பார்த்து வியக்காத மக்கள் கல்லூரியில் கிடையாது. அப்படி ஒரு அழகான, அன்பான காதலர்கள். ஆனால் யாரும் நன்றாக இருந்தால்தான் விதிக்குப் பிடிக்காதே. ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் அவள் காணாமல் போனாள். காற்றில் கரைந்த கற்பூரம் போல் சுவடே இல்லாமல் மறைந்து விட்டாள். அவன் அவளுடைய ஊருக்கு போனபோது பூட்டி இருந்த வீடுதான் அவனை வரவேற்றது. அவளுடைய அக்கா யாரையோ காதலித்து ஓடிபோனதாகவும், அவமானம் தாங்காமல் அவர்கள் குடும்பத்தோடு ஊரைக் காலி செய்து விட்டுப்போய் விட்டதாகவும் பக்கத்து வீட்டுப் பெண் சொன்னாள். அதுதான் அவன் அவளைப்பற்றி கடைசியாகக் கேள்விப்பட்டது. அதன் பிறகு இன்றுதான் அவளைப் பார்க்கிறான்.
சிறிய வீடு. அழகாக வைத்து இருந்தாள். கணவர் வேலைக்கு சென்று விட்டார் எனவும் இரவு லேட்டாகத்தான் வருவார் என்றும் சொன்னாள். நிறையப் பேசினாள். கணவரை பற்றி, அவருடைய குடும்பம் பற்றி, வேலை பற்றி எல்லாம் சொன்னாள். அவளுடைய அக்கா இப்போது மீண்டும் அவர்களுடைய குடும்பத்தோடு சேர்ந்து விட்டதையும் சொன்னாள். அவளுடைய பையன் அங்கும் இங்கும் ஓடி விளையாண்டுக் கொண்டிருந்தான். வெகு நேரம் பேசி விட்டு அவள் ஓய்ந்து போனாள். அவன் எதுவுமே பேசவில்லை. கொஞ்ச நேரம் அங்கே நிசப்தமாக இருந்தது.
"ஒருத்தர பிரியுறதை விடக் கொடுமையானது என்ன தெரியுமா... அவுங்களோட மௌனம்.. பக்கத்துல இருந்துகிட்டும் ஏன் இப்படி அமைதியா இருக்க.. என்கிட்டப் பேச மாட்டியா..?" கேட்டபோது அவளுடைய குரல் கம்மியது. அவன் அப்போதும் அமைதியாக இருந்தான்.
"என்ன ரொம்பத் தேடி இருப்ப இல்ல? என்மேல கோபம் இருந்தாத் திட்டிடு.. இப்படி அமைதியா இருக்காத.. ப்ளீஸ்..".
அவன் முதல் தடவையாகப் பேசினான். "உன்னைக் கஷ்டப்படுத்தனும்னு என்னைக்குமே நான் நினைக்க மாட்டேன்.. எங்க இருந்தாலும் நீ நல்லா இருந்தாப் போதும். உன்னோட சூழ்நிலையில நான் இருந்தாலும் அப்படித்தான் பண்ணி இருப்பேன்.. நீ சங்கடப்படாதே..".
"உனக்கு எம்மேல வருத்தமே இல்லையா?"
"கண்டிப்பா இல்ல" அவன் சொல்லிக் கொண்டே எழுந்தான். "அப்போ நான் கிளம்புறேன்".
"இன்னொருநாள் அவர் இருக்கறப்ப கண்டிப்பா வரணும்.."
"சரி.." சொல்லிக்கொண்டே வாசலில் இருந்த செருப்புகளை அணிந்து கொண்டான். "நான் போயிட்டு வரேம்மா.."
"ஒரு நிமிஷம்.. "வாசலில் நின்றபடி அவள் கேட்டாள்." உனக்கு....கல்யாணம் ஆகிடுச்சா... ?"
அவன் ஒரு நிமிஷம் அவளை நிமிர்ந்து பார்த்து சிரித்தான். திரும்பி நடக்கத் தொடங்கினான். பஸ்சைப் பிடித்து ரூமுக்கு வந்து சேர்ந்தான். ஓரமாகப் போய் அமர்ந்து கொண்டு ஓவென அழத்தொடங்கினான். அன்று இரவு முழுவதும் அந்த அறையில் இருந்து விசும்பல் ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது.

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

February 25, 2009

சின்ன சின்ன ஆசைகள்..!!!


தூக்கத்தில் ஒருநாள் -
என் கனவில் கடவுள்..
கேட்டார் என்னிடம்...
"சொல் கண்ணே..
உன் ஆசைகள் என்னென்ன?"
எதைச் சொல்ல...
எதை விட...
"தாயின் மடியில்
தலைவைத்து தூங்கி விட ஆசை!!
அவள் கையால் அமுதம் உண்ண ஆசை!!
தந்தை கரம் பிடித்து
தெருவினில் அலைந்திட ஆசை!!
வாங்கி வந்த பொம்மைக்காய்
அண்ணனோடு சண்டை போட்டிட ஆசை!!
பசியை முழுதாய் ஒழித்திட ஆசை!!
தினம் தினம் புதிதாய் உடுத்திட ஆசை!!
நான் நினைப்பதெல்லாம் நடந்திட ஆசை!!
எல்லாவற்றுக்கும் மேலாக -
நானே ஒருநாள் கடவுளாய் மாறிட ஆசை!!"
சொல்லி முடித்து கடவுளைப் பார்த்தேன்..
அனைத்துக்கும் பதிலாய்..
அவரின் புன்னகை மட்டுமே!!
சத்தமாக ஒலித்த மணியோசை
கேட்டு கலைந்தது கனவு!!
நானிருக்கும் அநாதை இல்லத்தின்
இன்றைய பணிகளைத் தொடங்க வேண்டும்..
பதறி எழுகிறேன் நான்!!
என்றேனும் ஒருநாள் என்
ஆசைகளும் கனவும் கைகூடும்
என்னும் நம்பிக்கையோடு..!!!

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

February 23, 2009

"தநா 07 அல 4777" - விமர்சனம்!!!


உலகத்தில் பணக்காரர்கள் மட்டுமே வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒருவன். திமிர் பிடித்த பணக்காரர்களே உலகில் இருக்கக் கூடாது என நம்பும் இன்னொருவன். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது ஏற்படும் நிகழ்வுகள்.. போராட்டங்கள்.. தாங்கள் தொலைத்த வாழ்க்கையை இவர்கள் மீண்டும் மீட்டு எடுப்பதுதான் "தநா 07 அல 4777" (எம்ஜியாரின் கார் நம்பர்). வித்தியாசமான கதைக்களம். "Taxi no.9211" என்னும் ஹிந்திப் படத்தின் தமிழ் பதிப்பு.

மணி(பசுபதி) ஒரு முன்கோபி.பத்து வருடங்களில் பல வேலைகள் மாறி விட்டவன். சமுதாயத்தில் நடக்கும் தவறுக்கு எல்லாம் பணம்தான் காரணம் என்று நினைப்பவன். வீட்டில் மனைவி சுபாவிடம்(சிம்ரன்) எல்ஐசியில் வேலை செய்வதாக உதார் விட்டுக் கொண்டு டாக்ஸி ஒட்டிக்கொண்டு இருக்கிறான். கெளதம்(அஜ்மல்) பொறுப்பு இல்லாத ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளை. சாகும்போது அவனுடைய அப்பா சொத்தை எல்லாம் தன்னுடைய நண்பர் பெயருக்கு மாற்றி விடுகிறார். சொத்தைக் கேட்டு தன் தந்தையின் நண்பர் மீது கேஸ் போட்டு இருக்கிறான் கெளதம். அவனுடைய காதலி பூஜா(மீனாக்ஷி).

கெளதம் ஒரு முக்கியமான உயிலை எடுத்துக் கொண்டு நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டும். பாங்கில் இருக்கும் உயிலை எடுக்க மணியின் காரில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு விடுகிறது. போலீசிடம் மணியை மாட்டிவிட்டு கெளதம் தப்பிக்கிறான். ஆனால் கௌதமின் உயில் இருக்கும் பேங்க் லாக்கர் சாவி இப்போது மணியிடம் சிக்கிக் கொள்கிறது. இருவருக்கும் ஒரு யுத்தம் தொடங்குகிறது.ஒருவரை ஒருவர் பழி வாங்க முயல்கிறார்கள். தான் செய்வது தப்பு என்பதை இருவருமே உணர மறுக்கிறார்கள். தன் கணவர் பொய் சொன்னதை அறிந்து மணியை விட்டு பிரிந்து போகிறார் அவனுடைய மனைவி. சொத்து கௌதமுக்கு இல்லை என்று தெரிந்தவுடன் நண்பர்களும் அவனுடைய காதலியும் அவனைப் பிரிகிறார்கள். கடைசியில் இருவரும் தங்களுடைய உண்மையான சந்தோஷத்தை கண்டுபிடிப்பதுதான் படத்தின் கதை.

ரகுவரனுக்கு அடுத்தபடியாக, இன்று தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் என்றாலும் பொருந்தக் கூடியது பசுபதிக்குத்தான் என்று நினைக்கிறேன். அருமையான உடல்மொழி. அஜ்மல்லை பார்க்கும்போதெல்லாம் கண்களில் விஷத்தைக் காண்பிக்கிறார். சிம்ரனிடம் கெஞ்சும் காட்சிகளிலும், மகனிடம் அழும் காட்சியிலும் ரொம்ப நன்றாக நடித்துள்ளார். ஹிந்தியில் நானா படேகர் நடித்த பாத்திரம் பசுபதிக்கு ரொம்ப நன்றாக பொருந்தி வருகிறது. அஜ்மல் - செம ஸ்டைலாக இருக்கிறார். நடையே ஒரு பணக்கார தோரணைதான். அவருடைய ரோலை சரியாக செய்துள்ளார். சிம்ரனுக்கு நல்ல வாய்ப்பு. பயன்படுத்திக் கொண்டுள்ளார். அஜ்மலின் காதலியாக மீனாக்ஷி. "கருப்பசாமி குத்தகைதாரர்" படத்தில் குடும்ப விளக்காக வந்தவரை குட்டி குட்டி உடைகள் குடுத்து ஒரு குத்துப்பாட்டுக்கு கும்மி எடுத்திருக்கிறார்கள்.(அடேங்கப்பா.. இந்த ஒரு வரியில எத்தன "கு" வருது.. சரி சரி..). ஆனால் அவருக்கு கவர்ச்சி எடுபடவில்லை. படத்தின் கடைசியில் ஒரே ஒரு சீனுக்கு பூஜா. அழகாக இருக்கிறார்.

படத்திற்கு தேவையே இல்லாமல் இரண்டு கதாநாயகர்களுக்கும் அறிமுகப் பாடலகள். இசை விஜய் அன்டோனி. "ஆத்திச்சூடி" பாடல் நன்றாக படமாக்கப் பட்டுள்ளது. பாடல்களை விட பின்னணி இசை அருமை. படத்தின் முக்கியமான இன்னொரு விஷயம் வசனம். "ரொம்ப தண்ணி அடிக்காம கிளம்பி வீட்டுக்குப் போ" எனும் அஜ்மலிடம் பசுபதி சொல்லுவார்.." வீட்டுக்கா.. என் வீடுதான் பஸ் ஏறி கோவைக்குப் போயிடுச்சே..". நிறைய இடங்களில் வசனம் ரொம்ப ஷார்ப். ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் கனக்கச்சிதம்.

படத்தில் அங்கங்கே சின்னக் குறைகளும் உண்டு. போலீஸ்காரர்களை கிறுக்கர்களாக காண்பிப்பது,, ஒரு சில காட்சிகளில் தெரியும் நாடகத்தன்மை.. விபத்து நடந்த கார் எப்படி பசுபதிக்கு உடனே கிடைத்தது.. இரண்டாம் பாதி கொஞ்சம் இழுப்பது.. இப்படி சில... ஆனால் எல்லாவற்றையும் அந்த கிளைமாக்ஸ் மறக்க செய்து விடுகிறது. அறிமுக இயக்குனர் லட்சுமிகாந்தனுக்கு இந்தப்படம் ஒரு நல்ல பெயரை வாங்கி கொடுக்கும். ரொம்ப சின்னப் படம்தான். மொத்தமே நூறு நிமிடம் கூட இல்லை. ஆனால் ஒரு நல்ல த்ரில்லர் படம் பார்த்த உணர்வு.

தநா 07 அல 4777 - நம்பி பயணிக்கலாம்.

(ஆஸ்கார் விருதை வென்று தமிழுக்கும் தமிழனுக்கும் பெயர் வாங்கி தந்து இருக்கும் இசைப்புயல் A.R. ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்.. இந்தியாவை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு இன்று விருதுகளை அள்ளிக் குவித்திருக்கும் "slumdog millionaire" படத்துக்கும் மற்றொரு ஆவணப்படமான "smile pinkey" மற்றும் விருது பெற்ற எல்லாருக்குமே வாழ்த்துக்கள்.. )


(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

February 22, 2009

கேட்கக்கூடாத கேள்விகள் பத்து...!!!

(எல்லாரும் பத்து கேள்வின்னு பதிவு போடும்போது நீ மட்டும் ஏண்டா சும்மா இருக்க பாண்டியான்னு நண்பர்கள் ஏத்தி விட்டதால.. இந்த பதிவு.. )
கலைஞர் மு. கருணாநிதியிடம்..
இன்னும் கலைஞர் தொலைக்காட்சியில செய்திக்கு முன்னாடி "தமிழர்களே தமிழர்களே" அப்படின்னு சீன் போடும்போது உங்களுக்கே மனசாட்சி உறுத்தலையா?
செல்வி ஜெ. ஜெயலலிதாவிடம்..
சிறுதாவூர், கொடநாடுன்னு போய் ரெஸ்ட் எடுக்குறீங்க.. ஆண்டிப்பட்டில ஆடு செத்ததுக்கும், மன்னார்குடியில மாடு செத்ததுக்கும் கருணாநிதிதான் காரணம்னு அறிக்கை விடுறீங்க.. கம்யூனிஸ்ட் மக்களை உள்ள வச்சுகிட்டே காங்கிரஸ் மக்களை கூட்டணிக்கு கூப்பிடுறீங்க.. கடைசியில நான் ஒரு சந்நியாசி மாதிரி வாழுறேன்னு சொல்றீங்க.. உங்களைப் பார்த்து உங்க கட்சிக்காரனே மண்டை காஞ்சு அலையுறது உங்களுக்கு தெரியுமா தெரியாதா?
மருத்துவர் ராமதாசிடம்..
தமிழ் மக்களுக்காக இவ்வளவு போராடுற நீங்க.. மத்திய அமைச்சரவைல இருக்குற உங்க மகன் அன்புமணியும் மற்ற அமைச்சர்களையும் ராஜினாமா செய்ய சொல்ல மாட்டேங்குறீங்களே.. ஏன்?
விஜயகாந்த்திடம்...
கருப்பு எம். ஜி. ஆர்..? இன்னும் மக்களோட மட்டும்தான் என்னோட கூட்டணின்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்களா?
சரத்குமாரிடம்...
831..? திருமங்கலம்..? யாருங்க அந்த ஜோசியர் உங்களைத் தேர்தல்ல நிக்க சொன்னது? சுப்ரமணியசாமி விட்ட இடத்துக்கு அடுத்து நீங்கதான்னு ஊருக்குள்ள ஒரு பேச்சிருக்கு தெரியுமா?
கமல்ஹாசனிடம்..
மர்மயோகி படம் மருதநாயகம் பார்ட் டூன்னு சொல்றாங்களே.. உண்மையா சார்?
சூப்பர் ஸ்டார் ரஜினியிடம்..
நான் கடவுள் பார்த்துட்டு அகோரி பாபாக்கள நான் இமயமலைல பார்த்தேன்னு எல்லாம் அடிச்சு விடுறீங்களே தலைவா.. சரி விடுங்க.. ரசிகர்கள் சந்திப்புல தந்திரன்.. ச்சீ.. எந்திரன் படம் முடிஞ்சதுக்கு அப்புறம் உக்கார்ந்து பேசுவோம்னு சொன்னீங்களே.. அது ச்சும்மா உல்லுலாயீ தான.?
சிம்பு - கௌதமிடம்..
கெட்டவன்..? போடா போடி..? சென்னையில் ஒரு மழைக்காலம்..? அல்லு அரவிந்தோட தெலுங்கு படம்? அட போங்கப்பா.. இதெல்லாம் பார்த்தா தொழில் பண்ண முடியுமா?
பதிவர் கார்க்கியிடம்..
அஜித் படம்னா நீங்க உசிர விடுவீங்கலாமே? அப்படியா?
(பரிசலின் பதிவுக்கு எதிர்பதிவு போட்டு இந்த பத்து கேள்வி சீசன ஆரம்பிச்சதே கார்க்கிதான்னு நினைக்கிறேன்.. அதனால அவரையும் உள்ள இழுத்து விட்டாச்சு.. )
பதிவர் கார்த்திகைப்பாண்டியனிடம்..
எல்லாரும் எழுதுனாங்க.. நானும் எழுதுனேன்னு இப்படி ஒரு பத்து கேள்வி பதிவ எழுதி இருக்கியே.. உனக்கே வெக்கமா இல்லையா?
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

February 20, 2009

மாசில்லாத உலகம் தா...!!!


இயந்திரங்கள் சிந்தும் எச்சில்களாலும்
ஊர்திகள் ஊதும் கரும்புகையாலும் - மட்டுமா
இந்த பூலோகம் மாசுற்றுள்ளது?
மாசுற்ற இதயங்கள் கோடி..!!
கல்வியுலகம் காசுக்கு
சோரம் போனது..
இளைஞர் உலகமோ - ஆசையிலும்
போதையிலும் அல்லல்படுகிறது..
உழைக்கும் நெஞ்சங்கள்
பொறாமைகளால் நசுக்கப்படுகிறது..
அரசியல் உலகமோ
ஊழலில் உழல்கிறது..
மாசில்லாத உலகம் தாவென்று
கடவுளைத் தேடிச் சென்றால் -
கோயில்களை இன்று
சாதிக் குட்டிச்சாத்தான்கள் அழுக்காக்குகின்றன..
எங்கும் தேடிப் பார்த்தேன்..
தாயின் கருவறை தவிர
மாசில்லா இடம் என்
கண்களில் சிக்கவே இல்லை!!
இயற்கையை இன்னும் நாம் மாசுபடுத்தினால்
அது இயற்கையாகவே...
தனது கரைகளை அகற்றிக் கொள்ளும்..!!
உண்மையில் மாசில்லாத உலகம் வேண்டின்..
மாசில்லா உள்ளங்கள் வேண்டுவோம்..!!
எண்ணங்களை உயர்த்தி
உலகை உன்னதமாக்குவோம்... !!!
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

February 18, 2009

நான் ஏன் எழுதுகிறேன்?!!


நாம் அனைவருமே நம் அன்றாட வாழ்கையில் இந்த ஒரு விஷயத்துக்காக ஆசைப்படுகிறோம்.. ஏங்குகிறோம்.. அது என்ன? (விடை.. பின்னாடி...)

நேற்று மாலை கல்லூரி முடிந்த பிறகு கணினியில் அமர்ந்து பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கல்லூரி நாலேகால் மணிக்கெல்லாம் முடிந்து விடும். அதன் பின்னர் தான் மக்களுடைய பதிவுகளைப் பார்க்கும்... நம்முடைய பதிவுகளை எழுதும் நேரம். என் கூட வேலை செய்யும் மேடம் ஒருவர் அருகில் வந்து அமர்ந்தார். தினமும் கல்லூரி பேருந்தில் செல்பவர். நேற்று ஏதோ வேலை என்பதால் இருந்து விட்டார் போல. மெதுவாகப் பேச்சைத் தொடங்கினார்.

"ஏன் சார், இதுல என்ன கிடைக்குதுன்னு தினமும் சாயங்காலம் உக்கார்ந்து எழுதிக்கிட்டு இருக்கீங்க.. உருப்படியா ஏதாவது செய்யலாம்ல..."

நான் ஒன்றும் சொல்லாமல் அவரைப் பார்த்தேன். அவருக்கு நன்றாக ஓவியம் வரையத் தெரியும்.

"நீங்க எதுக்காக மேடம் ஓவியம் வரையுறீங்க..?"

"என்னோட ஆத்மதிருப்திக்கு..."

"சரி.. அதை எதுக்கு மத்தவங்ககிட்ட காமிக்கிறீங்க.. ?"

"அவங்களுக்கும் பிடிச்சிருந்தா பாராட்டுவாங்கல்ல.. அதுக்குத்தான்.. "

"நீங்க ஓவியம் வரையறது வேஸ்ட்ன்னு நான் எப்பவாவது சொல்லி இருக்கேனா?" அவருக்கு முகம் சுண்டிப் போனது. ஏதும் சொல்லாமல் எழுந்து போய் விட்டார்.

நான் ஏன் எழுதுகிறேன்?

நாம் எல்லாருமே சம்பளம் வாங்கிட்டுத்தான் வேலை பார்க்கிறோம். ஆனாலும், நமது அலுவலரோ.. முதலாளியோ.. இந்த வேலைய நீங்க நல்லா பண்ணி இருக்கீங்கன்னு பாராட்டும்போது சந்தோஷப்படுகிறோமா இல்லையா?

இந்த எல்லா கேள்விக்கும் ஒரே விடைதான். நாம் அனைவருமே அங்கீகாரத்திற்காக.. பாராட்டுக்காக ஏங்குகிறோம். சிறு குழந்தை ஒன்று தனது புத்தகத்தில் ஒரு படம் வரைந்து விட்டு நம்மிடம் கொண்டு வந்து நீட்டும்போது, நன்றாக இருக்கிறது என சொன்னால் அதன் முகத்தில் வரும் சந்தோஷத்திற்கு ஈடு கிடையாது. நம் அனைவருக்குள்ளும் அதே போல் ஒரு குழந்தை உண்டு. நாமும் அந்த ஆதரவைத் தேடுகிறோம்.

நேற்று மாலை ஆறு மணிபோல் ஒரு STD கால் வந்தது. நான் லண்டனில் இருந்து என் நண்பன் பேசுகிறான் என்று நினைத்துக் கொண்டு "டேய் மகேஷ்.. சொல்றா மாப்ள.. " என்றேன். "நானும் நண்பர்தாங்க.. ஆனா மகேஷ் இல்ல" என்று வந்தது பதில். மலேஷியாவில் இருந்து பேசுவதாக சொன்னார். நண்பர் நிலாவன் என்னும் பெயரில் வலையில் எழுதி வருகிறார். பேச வேண்டும் எனத்தோன்றியதால் கூப்பிட்டதாக சொன்னார். என்னால் சந்தோஷத்தை அடக்க முடியவில்லை. கொஞ்ச நேரம் பேசினோம். மின்னஞ்சலில் தொடர்பு கொள்வதாகக் கூறி விடைபெற்றுக் கொண்டார். இதேபோல் போனவாரம் மதுராந்தகத்தில் இருந்து அகநாழிகை என்னும் பெயரில் எழுதி வரும் நண்பர் பொன்.வாசுதேவன் கூப்பிட்டு இருந்தார். அவருடனும் நிறைய பேச முடிந்தது.

இவ்வளவு ஏன்? திருப்பூரில் இருந்து எழுதி வருகிறார் நண்பர் ஆதவா. அவருடைய கவிதைகளைப் படித்தாலே எனக்கு கண்ணைக் கட்டும். அவ்வளவு அருமையாக எழுதுபவர். நாம் ஏதாவது ரெண்டு வரியை கிறுக்கி வைத்தால் கூட நம் தளத்துக்கு வந்து கவிதை நல்லா இருக்கு நண்பா என்று சொல்லி விட்டுப் போகிறார். முதலில் இருந்தே எனது எழுத்துக்களைப் படித்து ஊக்கப்படுத்தி வரும் பிரேம், நையாண்டி நைனா, கவின், ராம், சொல்லரசன்..(எல்லாருடைய பெயரையும் சொல்ல முடியவில்லை.. வருத்தம் கொள்ள வேண்டாம்..) இவர்களை எல்லாம் எனக்குத் தந்தது பதிவுலகம் தானே. இந்த அன்பும், புது நட்பும், உறவுகளை விட நமக்கு வேற என்ன வேண்டும்?

இந்த இரண்டு மாதங்களில் நம்முடைய எழுத்தை இத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய விஷயம். என் அம்மாவிடம் இதை பகிர்ந்து கொண்டபோது அவர்களுக்கு உண்டான மகிழ்ச்சியை வார்த்தைகளில் சொல்ல முடியாது. என் எழுத்தைப் படிக்கும், எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வரும் நண்பர்களுக்கு நன்றி சொல்லத்தான் இந்தப் பதிவு.

அதனால உனக்கு எதுக்குப்பா இந்த வேண்டாத வேலைன்னு சொல்ற மக்களுக்கு நான் சொல்லிக்கிறது இதுதான்.. "போங்கப்பா.. போய் அவங்கவங்க வேலை வெட்டியப் பாருங்க..."

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)