October 12, 2009

சோளகர் தொட்டி..!!!

நீங்கள் ஒரு இருப்பிடத்தில் வசித்து வருகிறீர்கள். அந்த இருப்பிடமே உங்களுக்கு எல்லாமுமாக இருக்கிறது. அந்த இருப்பிடத்தை நீங்கள் உங்கள் தாயை விட அதிகமாக நேசிக்கிறீர்கள். திடீரென எங்கிருந்தோ வந்த ஒரு கூட்டம் உங்கள் இருப்பிடத்தை அபகரிக்க முயன்றால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

நீங்கள் வசிக்கும் பகுதியின் அருகே ஒரு திருடனின் நடமாட்டம் தென்படுகிறது. அவனைப் பிடிப்பதற்காக காவல்துறையினரும் வந்து சேர்கிறார்கள். நீங்கள் திருடனுக்கு உதவுவதாக குற்றம் சாட்டி கொடுமை செய்கிறார்கள். நாதியற்ற ஜீவனாய் நடுத்தெருவில் நிற்கும் உங்களால் யாரையும் எதிர்க்க முடியவில்லை. இப்போது நீங்கள் என்னதான் செய்ய முடியும்?

ஒரு சில விஷயங்களை வார்த்தைகளால் விளக்க முடியாது. அந்த வாழ்க்கையின் வலி அதை அனுபவித்தவர்கள் மட்டுமே அறியக் கூடியது. அப்படிக் கஷ்டப்பட்ட ஒரு இனத்தைப் பற்றிய பதிவுதான் "சோளகர் தொட்டி". தொட்டி என்பது பழங்குடி இன மக்களின் கிராமத்தை குறிக்கும் வார்த்தை. சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் வாழ்ந்த சோளகர் என்னும் பழங்குடி இன மக்கள் பற்றியும், வீரப்பன் வேட்டையின் போது போலீசாரால் அவர்கள் அனுபவித்த இன்னல்கள் பற்றியும் விரிவாகப் பேசுகிறது "சோளகர் தொட்டி".

இதை ஒரு புத்தகம் என்று சொல்வதை விட ஒரு வாழ்வியல் ஆவணம் என்றுதான் சொல்ல வேண்டும். ரத்தமும் சதையுமாய் நம்மூடே வாழும் மக்களின் சரித்திரம் இந்தப் புத்தகம். இதில் இருக்கும் பெயர்கள் வேண்டுமானால் கற்பனையாக இருக்கலாம். ஆனால் அந்த மக்கள், அவர்களுடைய வாழ்க்கை, அவர்கள் பட்ட கஷ்டங்கள் அத்தனையும் அப்பட்டமான நிஜம். ஒரு பாவமும் அறியாதவர்களாய், தான் உண்டு தன வேலை உண்டு என்று காட்டை நம்பி வாழ்ந்து வந்த கூட்டம் எப்படி எல்லாம் அலைக்கழிக்கப்பட்டார்கள் என்பதை படிப்பவர்கள் உள்ளம் நெகிழ்ந்து போகும் விதமாக பதிவு செய்திருக்கிறார் ச.பாலமுருகன்.

புத்தகம் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. சோளகர் இன மக்களின் வாழ்க்கை முறையும், அடக்குமுறையின் மூலம் அவர்களுடைய நிலத்தை அபகரிக்க நினைக்கும் அநியாயக்காரர்கள் பற்றியும் விரிவாகப் பேசுகிறது முதல் பாகம். வீரப்பனின் வருகை, சோளகர்கள் தங்களுடையது என்றெண்ணும் வனத்துக்குள் செல்ல அவர்களுக்கே தடை, தமிழக மற்றும் கர்நாடக போலிசாரின் வன்கொடுமைகள் என்று பழங்குடி மக்களின் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களை விளக்குகிறது இரண்டாம் பாகம்.

மொத்தப் புத்தகமும் பேதன் என்பவனின் மகன் சிவண்ணாவைக் கதையின் நாயகனாகக் கொண்டு விரிகிறது. விரும்பியவரைத் திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்ற சுதந்திரமும், கிடைக்கும் உணவை அனைவரும் பகிர்ந்துண்டு உண்ணுவதும், ஒருவருக்கு ஒரு பிரச்சினை என்றால் மொத்தத் தொட்டியும் ஒன்றாகத் திரள்வதும் என பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. பேதன், சிக்குமாதா, சிவண்ணா , பரம்பரை பரம்பரையாக ஊருக்கு தலைவனாக இருக்கும் கொத்தல்லி, மணிராசன் கோவில் பூசாரியாக இருக்கும் கோல்காரன் என்று எல்லா மனிதர்களுமே வெள்ளந்திகளாய் இருக்கிறார்கள். அதனாலேயே கஷ்டப்படவும் செய்கிறார்கள்.

பழங்குடி இன மக்களுக்கு போலீஸ முகாம்களில் நடக்கும் கொடுமையைப் படிக்கும்போது, மனிதர்களில் இத்தனை கொடூரமானவர்கள் இருப்பார்களா என்ற அதிர்ச்சி நமக்கு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஈரம்மா என்னும் எட்டு மாத கர்ப்பிணியை எந்த வித இரக்கமும் இல்லாமல் காவலர்கள் வன்புணர்ச்சி செய்வதும், போலீசாருக்கு தகவல் சொல்லி உதவிய புட்டனையே சுட்டுக் கொள்வதும், சிவண்ணாவின் மனைவி மாதி மற்றும் மகள் சித்திக்கு நடக்கும் பாலியல் கொடுமைகளும், ஒர்க்ஷாப் என்ற இடத்தில் வைத்து அப்பாவி மக்களுக்கு கரண்ட் ஷாக் கொடுத்து சாகடிக்கும் துயரங்களும், கொல்ல நினைப்பவர்களுக்கு தையல் அளவெடுத்து வீரப்பனின் கையாள் போன்ற சீருடையை அணிவித்து காட்டுக்குள் கூட்டிப்போய் சுடுவதும் என.. வார்த்தைகளால் சொல்ல முடியாத கஷ்டங்களை நம் சக மனிதர்கள் அனுபவித்திருக்கிறார்கள் என்பதை எண்ணும்போதே மனம் பதறுகிறது.

சோளகர் தொட்டியை நான் படிக்கையில் மனம் முழுதும் ஏதோ ஒரு வெறுமை சூழ்ந்து கொண்டது. இதற்கு முன்பாக எஸ்.ராமகிருஷ்ணனின் உறுபசி நாவலைப் படித்தபோது இதே போன்ற ஒரு மனநிலையில் இருந்திருக்கிறேன். ஆனால் சோளகர் தொட்டி என்னுள் ஏற்படுத்திய அழுத்தமும் சோகமும் மிக அதிகம். படிக்கையில் என்னையும் அறியாமல் நான் கண்ணீர் விட்டு அழ எனது அம்மா என்னமோ, ஏதோ என்று பயந்து போனதும் நடந்தது. புத்தகத்தை முடித்து கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் பிரம்மை பிடித்தவனாக அலைந்து இருக்கிறேன்.

புத்தகத்தின் முடிவில் ச.பாலமுருகன் இப்படி சொல்கிறார்.."நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் தனக்குள் உள்வாங்கிக் கொண்டு, ஏதும் செய்ய இயலாத மௌன சாட்சியாக இருக்கிறது தொட்டி..". நாமும் அதுபோலத்தானே..!!


36 comments:

நையாண்டி நைனா said...

Nice Intro for a book.

லோகு said...

:(((((((((

தேவன் மாயம் said...

சோளகர் தொட்டியை நான் படிக்கையில் மனம் முழுதும் ஏதோ ஒரு வெறுமை சூழ்ந்து கொண்டது. இதற்கு முன்பாக எஸ்.ராமகிருஷ்ணனின் உறுபசி நாவலைப் படித்தபோது இதே போன்ற ஒரு மனநிலையில் இருந்திருக்கிறேன். ஆனால் சோளகர் தொட்டி என்னுள் ஏற்படுத்திய அழுத்தமும் சோகமும் மிக அதிகம். படிக்கையில் என்னையும் அறியாமல் நான் கண்ணீர் விட்டு அழ எனது அம்மா என்னமோ, ஏதோ என்று பயந்து போனதும் நடந்தது. புத்தகத்தை முடித்து கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் பிரம்மை பிடித்தவனாக அலைந்து இருக்கிறேன். ///

புத்தகம் இன்னும்படிக்கவில்லை. உங்கள் உணர்வுகள் அபாரம்.

தேவன் மாயம் said...

செய்யவேண்டியதை செய்தாச்சு!!

☀நான் ஆதவன்☀ said...

வாசிக்கிறேன் நண்பா. அறிமுகத்திற்கு நன்றி

selventhiran said...

பாலமுருகன் விவரிக்கும் தொட்டி வாழ்வில் பணம் என்கிற விஷயத்தின் பங்களிப்பு மிகக்குறைவாக இருப்பதை கண்டு... இம்மாதிரியான வாழ்வு நமக்கும் கிட்டாதா என ஏங்கி... பின் வரும் அத்தியாயங்களில் காவல்துறையின் வெறியாட்டங்களைக் கண்டு நடு நடுங்கி... என்றைக்குப் படித்தாலும் சுவை குன்றாத வாழ்வியல் ஆவணம்.

vasu balaji said...

ஒரு நல்ல புத்தகத்தை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

தீப்பெட்டி said...

நூல் அறிமுகத்திற்கு நன்றி பாஸ்..

அதிகார வர்க்கம் என்றும் சகமனிதனை கொடுமைகளுக்கு உள்ளாக்கிக் கொண்டே இருக்கிறது..

அதிகாரம் என்பது மிகமோசமான போதை.. கையில் வைத்திருப்பவர்கள் நிதானமிழக்காமல் இருப்பது அரிது..

ஆ.ஞானசேகரன் said...

நூல் அறிமுகம் அருமை நண்பா... படிக்க தூண்டும்படியாக இருக்கு பாராட்டுகள் .....

பிரபாகர் said...

//புத்தகத்தை முடித்து கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் பிரம்மை பிடித்தவனாக அலைந்து இருக்கிறேன். //
நல்ல புத்தகத்தை படித்தபின், பாதிப்புக்கள் இரு வகையில் நிகழும், நல்லவற்றை படிக்கும்போது. முதாவது உங்களுக்கு நிகழ்ந்தது. இரண்டாவது இதேபோல்தான், முழு சந்தோஷத்தில். அருமை. வலியின் தாக்கத்தை எங்களுள்ளும் பாய்ச்சி, படிக்க தூண்டியிருக்கிறீர்கள்.... கண்டிப்பாய்.

பிரபாகர்.

அமுதா கிருஷ்ணா said...

படிக்கணுமே...உணர்வுகள் பிரமாதம்...

ஈரோடு கதிர் said...

உண்மையான விமர்சனம் இது..

"சோளகர் தொட்டி" படித்து 4-5 வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.

சமகாலத்தில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை இப்படி சீரழிக்க முடியுமா என்பதை படிக்கும்போது மனம் கலங்குவதை தடுக்க முடியாது..

"சோளகர் தொட்டி" எழுதியமைக்காக நண்பர் பாலமுருகன் இந்த ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் கௌரவிக்கப்பட்டார்.

நன்றி கார்த்திகைப் பாண்டியன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

பகிர்வுக்கு நன்றி.

ஆரூரன் விசுவநாதன் said...

சோளகர் தொட்டியின் இணைப்பை கொடுத்துள்ளேன்.


http://www.tamilamutham.net/site/index.php?option=com_content&task=view&id=386&Itemid=31

வாழ்த்துக்கள்

க.பாலாசி said...

அன்பர் கதிர் அவர்கள் இந்த புத்தகத்தின் கருவினை என்னிடம் சொல்லியிருக்கிறார். இன்னும் நான் படிக்கவில்லை.

//பழங்குடி இன மக்களுக்கு போலீஸ முகாம்களில் நடக்கும் கொடுமையைப் படிக்கும்போது, மனிதர்களில் இத்தனை கொடூரமானவர்கள் இருப்பார்களா என்ற அதிர்ச்சி நமக்கு ஏற்படுவதை தவிர்க்க முடியாது.//

உண்மையில் நம் தமிழ்நாட்டிலும் இதுபோன்ற கொடுமைகள் நடந்திருக்கிறது என்பதை அறிய நேரிடும் போது மிகவும் கஷ்டமாகத்தான் உள்ளது.

அனுபவப் பகிர்விற்கு நன்றி அன்பரே...

க.பாலாசி said...

//ஆரூரன் விசுவநாதன் said...
சோளகர் தொட்டியின் இணைப்பை கொடுத்துள்ளேன்.

http://www.tamilamutham.net/site/index.php?option=com_content&task=view&id=386&Itemid=31//

நன்றி ஆரூரன் அவர்களே...

Jerry Eshananda said...

இன்னும் இதுபோல தொடருங்கள் கார்த்தி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இந் நாவல் பற்றி இந்தியா டுடேயில் விமர்சனம் வந்த போதே; அவருக்கு எழுதி வாங்கிப் படித்தேன்.
அவருக்கு தன் நாவலை வெளிநாட்டில் இருந்தும் எழுதிக் கேட்டு வாங்கியது; பெருமகிழ்வைக் கொடுத்ததை தன் கடிதம் மூலம் தெரிவித்தார்.
அந்த நாவலை படித்து முடித்ததும் பல நாட்களுக்கு சொல்லொண்ணாத் துன்பமாக இருந்தது.
சோளகர் தொட்டி என்றல்ல ; உலகில் ஆபிரிக்க; அமேசன்; இந்தோனேசிய; அவுஸ்ரேலிய ,துருவ; சீன
பழங்குடி மக்கள் வாழ்விடங்களும் இதே வகையிலே அபகரிக்கப் பட்டு; அவர்கள் அழிக்கப் படுவது
மிக வேதனையே!
அந்த அழிவுக்குக் காரணமானவர்கள் ;தம்மை நாகரீகமானவர்கள் என மார்தட்டுவது நகைப்புக்குரியது.
தங்கள் விமர்சனம் அருமை!
இந்த ஆவணம் தமிழ்மக்கள் மத்தியில் பரவலாகப் படிக்கப்படவில்லை. நம் தமிழ் வாசகர்களை
இது வெகுவாகச் சென்றடையவில்லை என்பதே என் கருத்து.

Karthik said...

அட்டகாசமா எழுதியிருக்கீங்க...

நன்றி..:)

பாலகுமார் said...

உயிரோட்டமுள்ள அறிமுகம்...

படிக்க நினைத்திருக்கும் புத்தகம்!

ஹேமா said...

கார்த்திக்,நான் படித்துக் கலங்கியிருக்கிறேன் இந்தப் புத்தகத்தை.

குமரை நிலாவன் said...

நூல் அறிமுகம் அருமை நண்பா... படிக்க தூண்டும்படியாக இருக்கு பாராட்டுகள் .....

பீர் | Peer said...

புத்தக அறிமுகத்திற்கு நன்றி, கார்த்திக்.

வினோத் கெளதம் said...

புத்தக அறிமுகத்திற்கு நன்றி கார்த்தி..
உணர்வுகளை அப்படியே பிரதிபலித்து இருக்கிறிர்கள்..

சொல்லரசன் said...

//நீங்கள் வசிக்கும் பகுதியின் அருகே ஒரு திருடனின் நடமாட்டம் தென்படுகிறது. அவனைப் பிடிப்பதற்காக காவல்துறையினரும் வந்து சேர்கிறார்கள். நீங்கள் திருடனுக்கு உதவுவதாக குற்றம் சாட்டி கொடுமை செய்கிறார்கள். //


உண்மைதான்,அன்று அந்த திருடனுக்கு உதவி செய்தாக கோடிஸ்வர்களையே
தடாவில் போட்டவர்களுக்கு ஒன்றும்மறியா பழங்குடியினர் எம்மாத்திரம்?

வால்பையன் said...

அருமையான புத்தகம் தல!

இது பற்றி லதானந்த் சாரிடம் பெரிய விவாதமே நடந்திருக்கிறது!

அ.மு.செய்யது said...

Intresting !!!

நல்ல பகிர்வு கார்த்திக்..கண்டிப்பாக படிக்க வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது.

பதிவின் கடைசி வரிகள் நச்..!!

RAGUNATHAN said...

படிக்கத் தூண்டும் விமர்சனம். பகிர்வுக்கு நன்றி :)

cheena (சீனா) said...

நல்லதொரு புத்தக் விமர்சனம் - படிக்கத்தூண்டும் ஆவலை ஏற்படுத்தும் இடுகை. புத்தகத்தின் தாக்கம் எப்படி என்பதற்கு இவ்விடுகை ஒர் உதாரணம்.

நல்வாழ்த்துகள் கார்த்தி

Unknown said...

அறிமுகத்திற்கு நன்றி...புத்தகம் எங்கு கிடைக்கிறது கார்த்திக்.

தமிழ் நாடன் said...

சந்தனக்காடு தொடரின் இறுதியில் சோளகர் இனத்தை சேர்ந்த சிலர் கொடுத்த வாக்குமூலத்தை பார்த்த ஞாபகம் இருக்கிறத்ய். அவர்கள் சொல்கின்ற கதையை கேட்டாலே உறைந்து விடுவோம். நாம் சுதந்திர பூமியில்தான் வாழ்கிறோம் என்பதை நம்புவதற்கில்லை.

கார்த்திகைப் பாண்டியன் said...

//கிருஷ்ண பிரபு said...
அறிமுகத்திற்கு நன்றி...புத்தகம் எங்கு கிடைக்கிறது கார்த்திக்.//

புத்தகம் பற்றிய விவரங்களை உங்களுக்கு மின்மடலில் தெரிவிக்கிறேன் நண்பா

நசரேயன் said...

நல்ல அறிமுகம் வாத்தியாரே

Anonymous said...

MANAM ULANDRU ALUTHIRUKIRAEN....UDANAE ATHAI DOCUMENTARY FILM EDUTHAEN.. ENTHA IDATHILAUM THIRAIDA ANUMATHI MARUKAPATTATHU....

R. Gopi said...

ரொம்பப் பெரிய இலக்கியவாதியோ. நெறய படிப்பீங்க போல

thamizhparavai said...

nalla aRimugam karthik