June 7, 2010

தனிமையின் வலி - தி ஐல் (The Isle - 2000)..!!!

உங்களுக்கென இந்த உலகத்தில் யாருமே இல்லாத ஒரு தனிமையான நிலையை எப்போதேனும் உணர்ந்திருக்கிறீர்களா? யாரோடும் பேசாமல்.. உங்களுக்கான தேவைகளை நீங்களே கவனித்துக் கொண்டு... சந்தோஷமோ அல்லது துக்கமோ, அதனை பகிர்ந்து கொள்ளக் கூட ஆட்கள் இல்லாமல்.. அப்படி ஒரு வாழ்வை நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை அல்லவா? அப்படிப்பட்டதொரு தனிமையை விரும்பி ஏற்றுக் கொண்ட, தனக்கென யாருமற்ற ஒரு பெண்ணின் வாழ்வையும்... எதிர்பாராமல் அவளுக்கு உண்டாகும் காதலையும்... அதனால் ஏற்படும் விளைவுகளையும் சொல்லும் படம்தான் "தி ஐல்" (the isle). தென்கொரியாவின் பிரபல இயக்குனரான கிம் கி டுக்கின் படம்.


அழகான மலைப்பிரதேசத்தின் ஊடாக இருக்கும் ஏரி. அதில் அங்கங்கே அமைந்து இருக்கும் சின்ன சின்ன படகு வீடுகள். அவற்றை மொத்தமாக பராமரிப்பதுதான் நாயகி ஹீ-ஜின்னின் வேலை. யாரோடும் பேசுவது கிடையாது. துணைக்கு ஒரு நாய் மட்டுமே உண்டு. வாடிக்கையாளர்களை படகு வீடுகளுக்கு அழைத்து செல்வதில் ஆரம்பித்து.. அவர்களுக்கு வேண்டிய உணவு, தேனீர் வழங்குவது என அனைத்தையும் கவனித்துக் கொள்கிறாள். தங்குபவர்கள் விருப்பத்திற்காக பெண் வேசைகளை அருகிலிருக்கும் விடுதியில் இருந்து அழைத்து வருவதுடன் தானே சில நேரங்களில் வேசையாகவும் இருக்கிறாள். காதலியைக் கொன்ற குற்றத்திற்காக போலிசால் தேடப்படும் நாயகன் ஹ்யுன்-சிக் படகு வீட்டில் தங்க வரும் காட்சியில் படம் தொடங்குகிறது.

இரவில் அனைவருக்கும் உணவு கொடுக்கும் நாயகியோடு, சீட்டாடிக் கொண்டிருக்கும் நண்பர்களில் ஒருவன் உறவு கொள்கிறான். அதற்கான பணத்தை தர வேண்டும் என்றால் அவள் வாய் திறந்து பேச வேண்டும் என்று அவனுடைய நண்பர்கள் வற்புறுத்துகிறார்கள். நாயகி அமைதியாக இருக்கிறாள். கோபம் கொள்ளும் அவர்கள் பணத்தை நதியில் வீசி விடுகிறார்கள். அவள் அமைதியாக பணத்தை எடுத்துக் கொண்டு போகிறாள். நாயகியோடு உறவு கொண்டவன், நடு இரவில் மலம் கழிப்பதற்காக வெளியே வருகிறான். அப்போது நீருக்குள் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளிவரும் நாயகி அவனை மோசமாக காயப்படுத்தி விட்டு மறைகிறாள்.மறுநாள் காலை. நாயகனின் படகு வீட்டில் வைக்கப்பட்ட உணவு சாப்பிடப்படாமலே இருக்கிறது. ஹீ-ஜின் எட்டிப் பார்க்கும்போது அவன் அழுது கொண்டிருக்கிறான். அன்றிரவு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு சாக முயலுகிறான் ஹ்யுன்-சிக். அப்போதும் நீருக்குள் இருந்து வரும் கத்தி ஒன்று அவனைக் காயப்படுத்தி அவனுடைய திட்டத்தை குலைக்கிறது. தன்னைக் காப்பாற்றியது யார் எனத் தெரியாமல் அவன் குழம்புகிறான். அடுத்த நாள் நாயகனின் வளர்ப்புப் பறவைகளுக்கு உணவளிக்கிறாள் ஹீ-ஜின். அவன் கம்பிகளை வளைத்து பொம்மைகள் செய்வதில் கைதேர்ந்தவனாக இருக்கிறான். ஹீ-ஜின் ஊஞ்சலில் அமர்ந்து ஆடுவதைப் போல ஒரு பொம்மையை அவளுக்குப் பரிசாகத் தருகிறான் ஹ்யுன்-சிக். அவளையும் அறியாமல் அவன் மீது ஹீ-ஜின்னுக்கு ஈர்ப்பு உண்டாகிறது.

பலமாகப் பெய்யும் மழையின் ஊடாக ஹீ-ஜின் நாயகனுடைய படகு வீட்டுக்குப் போகிறாள். அங்கே அவன் அவளை கட்டாயப்படுத்தி உறவு கொள்ள முயலுகிறான். கோபம் கொண்டு அவனை அடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறாள். எனினும் வேசையர் விடுதியில் இருந்து ஒரு பெண்ணை அவனுக்காக வரவழைக்கிறாள். வந்திருக்கும் வேசையோடு நாயகன் உறவு கொள்ள மறுக்கிறான். மாறாக அவளோடு வெறுமனே பேசிக் கொண்டிருக்கிறான். புதிதாக வந்தவளுக்கு நாயகனை ரொம்பவும் பிடிக்கிறது. அவள் வெகு நேரமாகத் திரும்பாததால் வேசையர் விடுதியின் சொந்தக்காரன் வந்து நாயகனோடு சண்டை போட்டு அவளைக் கூட்டிப் போகிறான்.

இயல்பாகக் கழியும் சில தினங்களுக்குப் பிறகு அந்த வேசைப்பெண் மீண்டும் நாயகனைத் தேடி வருகிறாள். விடுமுறையை அவனோடு கழிக்க விரும்புவதாக சொல்கிறாள். அன்றிரவு நாயகனும் வேசியும் உறவு கொள்வதை ஹீ-ஜின் மறைந்து இருந்து பார்க்கிறாள். மறுநாள் நாயகன் வேசிக்குப் பணம் தருகிறான். அவளோ அவன் மீதான அன்பினாலேயே தான் வந்ததாக வருத்தத்துடன் சொல்லுகிறாள். நேரம் கிடைக்கும்போது மீண்டும் வருவதாக சொல்லிச் செல்லுகிறாள்.மறுநாள் படகு வீடுகளில் போலிஸ் வந்து சோதனை இடுகிறார்கள். அவர்கள் தன்னைத்தான் தேடி வந்திருப்பதாக எண்ணும் ஹ்யுன்-சிக் மீன் பிடி தூண்டிலை தொண்டைக்குள் செலுத்திக் கொண்டு தற்கொலைக்கு முயலுகிறான். அவனை மறைத்து வைத்து போலிசின் பிடியில் இருந்து காப்பாற்றுகிறாள் ஹீ-ஜின். ஹ்யுன்-சிக்கின் தொண்டையில் சிக்கி இருக்கும் தூண்டில் முட்களை நீக்கி விட்டு, வேதனையில் துவளும் அவனோடு உறவு கொள்கிறாள்.அவர்களுக்குள் ஒரு இனம் புரியாத உறவு உண்டாகிறது.

வேசிப்பெண் மீண்டும் நாயகனை சந்திக்க வருகிறாள். ஆனால் அவளைத் தந்திரமாக வேறொரு படகு வீட்டுக்கு அழைத்துப் போகிறாள் ஹீ-ஜின். அங்கே அவளின் கை கால்களை கட்டி வாயில் துணியை வைத்து அடைத்து சிறை வைக்கிறாள். அன்றிரவு தப்பிக்க முயலும் அந்தப்பெண் தவறி நீரில் விழுந்து இறந்து போகிறாள். அவள் ஓட்டி வந்த ஸ்கூட்டரையும் அவளோடு சேர்த்துக் கட்டி நீரில் தள்ளி விடுகிறாள் ஹீ-ஜின். காணாமல் போனவளைத் தேடி வரும் விடுதி உரிமையாளனுக்கும் ஹ்யுன்-சிக்குக்கும் நடக்கும் சண்டையின் முடிவில், விடுதிக்காரனையும் நீரில் அமிழ்த்தி கொல்கிறாள் நாயகி.

விடுதிக்காரனின் உடலை அப்புறப்படுத்தும்போது இன்னொரு படகு வீட்டில் கிடக்கும் வேசைப்பெண்ணின் ஒற்றைக் காலணியைப் பார்க்கிறான் நாயகன். அவளையும் ஹீ-ஜின் கொன்றிருக்கக் கூடும் என்பதை புரிந்து கொள்ளுகிறான். படகு வீட்டில் இருந்து தப்பி செல்ல முயற்சி செய்கிறான். தப்ப முடியாமல் பாதி வழியில் நீரில் தத்தளிக்கும் அவனை ஹீ-ஜின் காப்பாற்றுகிறாள். கோபம் கொண்டவனாக அவளை அடித்து உதைக்கிறான். ஆனால் அதன் பின்னர் அவளோடு உறவு கொள்கிறான்.

மறுநாள் தூங்கிக் கொண்டிருக்கும் நாயகியை நீங்கி படகினை எடுத்துக் கொண்டு தப்ப முயலுகிறான். அவன் தன்னை விட்டு பிரிந்து போவதை அறிந்து கொள்ளும் ஹீ-ஜின் தனது யோனியில் தூண்டில் முட்களை மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் பார்க்கிறாள். அவள் அலறல் சத்தம் கேட்டு திரும்பி வரும் ஹ்யுன்-சிக் அவளைக் காப்பாற்றுகிறான். இருவரும் தங்களுக்கான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள். இன்னொரு படகு வீட்டில் தங்கியிருக்கும் பணக்காரன் ஒருவனின் ரோலக்ஸ் கடிகாரம் நீருக்குள் விழுந்து விடுகிறது. அதனை எடுப்பதற்காக நீரில் மூழ்குபவர்களை வரவழைக்கிறான். அவர்கள் அங்கே அமிழ்ந்து கிடக்கும் ஸ்கூட்டரையும் பெண்ணின் உடலையும் கண்டுபிடிக்கிறார்கள். தான் செய்த கொலைகளை கண்டுபிடித்து விடுவார்கள் என்பதை புரிந்து கொள்ளும் ஹீ-ஜின், ஹ்யுன்-சிக்கையும் அழைத்துக் கொண்டு படகு வீட்டுடன் நதியின் பாதையில் புறப்படுகிறாள்.அதன் பின்னர் வரும் படத்தின் இறுதிக் காட்சியை சத்தியமாக என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. நாயகன் நதியின் நடுவில் இருக்கும் ஒரு பச்சை நிற நாணல் புதருக்குள் மறைந்து போகிறான். பிறகு பார்த்தால் அந்த பச்சை நிறப் புதர் நாயகியின் பெண்குறியை மூடி இருக்கிறது. அவள் நிர்வாணமாக படகு நீரில் அமிழ்ந்து கிடக்கிறாள். இத்தகு என்ன அர்த்தம்? அவன் அவளுக்குள் தொலைந்து விட்டான் என்றா? இல்லை அவள் அவனையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டாளா? தெரியவில்லை.. தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்குங்கப்பா..

தனிமையையும் அதன் வலியையும் பேசுவதுதான் இந்தப் படத்தின் நோக்கம். அனைவருக்கும் உணவு தந்து விட்டு ஒற்றை ஆளாக படகில் தனித்துக் கிடக்கும் ஹீ-ஜின்னின் அருகில் படத்தின் தலைப்பான "தி ஐல்" என்று போடுவதே அவள் ஒரு தனித்தீவாக இருப்பதை குறிக்கிறது. நாயகியாக நடித்து இருக்கும் பெண் ரொம்ப அருமையாக நடித்து இருக்கிறார். படத்தில் நாயகி எங்கேயும் பேசுவதே இல்லை. ஆனால் ஒரே ஒரு முறை அவள் போனில் பேசுவது திரைமறைவாக காண்பிக்கப்படுகிறது. தற்கொலை முயற்சியின் போதே வலியால் அலறுவது மட்டுமே படத்தில் நாயகிக்கான ஒரே வசனம்(?). மனிதர்களின் இயல்புகள் சட் சட்டென்று மாறுவதையும் அருமையாகப் பதிவு செய்கிறார் இயக்குனர். முதல் முதலில் தான் பிடிக்கும் மீனை காப்பாற்றி நீரில் விடும் நாயகன், தான் கோபம் கொண்டிருக்கும் காட்சியில் ஓவ்வொரு மீனாகப் படித்து ஆத்திரத்துடன் வெட்டிப் போடும் காட்சியைக் குறிப்பிட்டு சொல்லலாம். பணத்துக்காக வரும் வேசையர்களின் மீதான வன்முறையையும் படம் பேசுகிறது.

படத்தில் உடலறவு கூட நாயகனும் நாயகியும் தங்கள் வலிகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு கருவியாகவே பயன்படுகிறது. வலி என்பது அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது என்பதையே இயக்குனர் பல காட்சிகளில் உணர்த்த முயலுகிறார். தொண்டை மற்றும் யோனியில் தூண்டில் முட்களை செலுத்திக் கொண்டு தற்கொலைக்கு முயலும் காட்சிகள், தவளை ஒன்றை தோலுரிப்பது, நீரின்றி துடித்து சாகும் மீன்கள், பாதி அறுபட்டு மீண்டும் நீரில் விடப்படும் மீன்கள் என படத்தில் அதிர்ச்சி தரும் காட்சிகள் நிறையவே உண்டு. அதே போல முதல் முறையாக மலம் கழிக்கும் காட்சி ஒன்றை நேரடியாக திரையில் காண்பித்ததும் இந்தப் படமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். வெனிஸ் பட விழாவல் இந்தப் படத்தை பார்த்த பலர் வாயில் எடுத்திருக்கிறார்கள்.. ஒரு சிலர் மயக்கம் போட்டிருக்கிறார்கள் என்றால் படத்தின் காட்சிகள் எத்தனை தீவிரமாக இருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

படத்தின் மொத்த வசனமும் ஒரு பக்கம் கூட வராது. திரைப்படம் என்பது காட்சிகளின் வாயிலாக நகர வேண்டிய ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை தெளிவாக உணர்ந்து எடுத்து இருக்கிறார்கள். படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்ற இரண்டு விஷயங்கள்.. இசையும் ஒளிப்பதிவும். படத்தின் பெரும்பாலான காட்சிகளில் இயற்கை ஒலிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. தேவையான இடத்தில் மட்டுமே ஒலிக்கும் பின்னணி இசையும் அருமையாக இருக்கிறது. பனி படர்ந்த மலை சிகரங்களின் ஊடான ஏரி, படகு வீடுகள், மழையில் நனையும் ஊஞ்சல் பெண், நீரின் அடியில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் என்று ஒளிப்பதிவு அதகளம் செய்கிறது.

இது கிம் கி டுக்கின் ஐந்தாவது படம். தன்னுடைய படங்களில் "ஷாக் வேல்யூ" இருக்க வேண்டும் என்பதை அவர் தெரிந்தே புகுத்துகிறாரா என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். நாயகி ஏன் இப்படி இருக்கிறாள் என்பது எங்கேயும் விளக்கப்படாத நிலையில் அவளுடைய வன்மம் மிகுந்த காதலை ஏற்றுக் கொள்வது சற்றே சிரமமாக இருக்கிறது. எப்படி முடியும், இது சாத்தியமா என்பது போன்ற ஒரு சில கேள்விகளைத் தவிர்த்து பார்த்தால்.. தனிமையின் வலியை தான் சொல்ல நினைத்து போலவே பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

The Isle (2000)

Language: Korean


Director: Kim Ki Duk


Starring: Seo Jeong, Kim Ye-Souk


Genre: Thriller


மேலதிகத் தகவல்களுக்கு நன்றி: விக்கிப்பீடியா

10 comments:

சென்ஷி said...

அய்யனார் இந்தப் படத்தைப் பற்றியும் முடிவைப் பற்றியும் விமர்சனம் எழுதியிருப்பார். எனக்கு பிடித்த படங்களுள் ஒன்று...

http://www.ayyanaarv.com/2009/04/isle.html

சென்ஷி said...

//இத் திரைப்படத்தின் கடைசிக் காட்சி இப்படி இருக்கும்

நதியிலிருந்து ஒருவன் வெளிப்படுவான்.அடர்த்தியாய் உயரமாய் வளர்ந்திருக்கும் பசும் புற்களினுள் நுழைந்து காணாமல் போவான்.நதியும்,பசும்புற்களும் அவனுமாய் அவளின் யோனிக்குள் உள்ளடங்கி இருப்பதாய் காட்சி அவளின் உடலில் சுருங்கும். நீரில் மூழ்கியிருக்கும் அவளது வெற்றுடலின் யோனிக்குள் இன்னொரு நதியும்,நெடிதுயர்ந்த பசும்புற்களும்,அவளின் காதலனும் பத்திரமாய் இருப்பதாக இந்த திரைப்படம் முடியும்.புனைவுகள் தொடும் உயர் எல்லைகள் பார்வையாளனுக்கு / வாசகனுக்கு பெரும் கிளர்வுகளைத் தருவதாய் இருக்கின்றன.திரையில் இப்புனைவின் உச்சம் வந்து போவது இரண்டு நிமிடத்திற்கும் வெகு குறைவானதே.ஆனால் அந்தக் காட்சி ஏற்படுத்திய தாக்கம் அல்லது ஆச்சர்யம் இன்னமும் நீடித்திருக்கிறது.ஒரு திரைப்படத்தை ஒரே காட்சியின் மூலம் இன்னொரு தளத்திற்கு நகர்த்துவது என்பது அசாத்தியமானது.//

அய்யனாரின் பதிவிலிருந்து :)

ஜெய்சக்திராமன் said...

@Shenshi....

Thank you for sharing the information and the immediate response... coz.. I too had the doubt

கார்த்திகைப் பாண்டியன் said...

@ சென்ஷி

ரொம்ப நன்றி நண்பா..:-)))

//ஜெய்சக்திராமன் said...
@Shenshi....Thank you for sharing the information and the immediate response... coz.. I too had the doubt//

நீ இந்தப் படம் பார்த்து இருக்கியா? good good..:-)))

Raju said...

நான்லாம் சப்-டைட்டிலை படிக்கிறதுக்குள்ள ஸ்கிரீன்ல காட்சி மாறீரும்..!
:-(

நேசமித்ரன் said...

நல்ல விமர்சனம் கா.பா

http://bleachingpowder.blogspot.com/2009/03/blog-post.html

இந்த லின்க்கும் பாருங்க :)

சாருவும் எழுதினார் !!

கார்த்திகைப் பாண்டியன் said...

//♠ ராஜு ♠ said...
நான்லாம் சப்-டைட்டிலை படிக்கிறதுக்குள்ள ஸ்கிரீன்ல காட்சி மாறீரும்..! :-(//

விடுப்பா.. அடுத்த தடவை நீயும் நானும் ஒண்ணா சேர்ந்து ஒரு ஒல(க்)கப்படம் பார்ப்போம்..:-)))

//நேசமித்ரன் said...
நல்ல விமர்சனம் கா.பா http://bleachingpowder.blogspot.com/2009/03/blog-post.html ந்த லின்க்கும் பாருங்க :) சாருவும் எழுதினார் !!//

தகவல்களுக்கு நன்றி தலைவரே

மேவி... said...

"உங்களுக்கென இந்த உலகத்தில் யாருமே இல்லாத ஒரு தனிமையான நிலையை எப்போதேனும் உணர்ந்திருக்கிறீர்களா? யாரோடும் பேசாமல்.. உங்களுக்கான தேவைகளை நீங்களே கவனித்துக் கொண்டு... சந்தோஷமோ அல்லது துக்கமோ, அதனை பகிர்ந்து கொள்ளக் கூட ஆட்கள் இல்லாமல்.. அப்படி ஒரு வாழ்வை நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை அல்லவா?"


நான் இந்த மாதிரி வாழ்ந்திருக்கிறேன் .....தனிமை எனக்கு பிடித்த ஓன்று தான் சார் ......


தனிமை ...உறவு ....இதை பற்றி எஸ்ரா கூட ஒரு கட்டுரை எழுதிருக்கார்ந்னு நினைக்கிறேன் பாஸ் .... பதிவு சுவாரசியமாக இல்லை தலைவரே

முடிந்தால் THE READER படத்தை பாருங்கள் .......

(கில்மா படத்தை பத்தி எழுதிருக்கீங்கன்னு சொன்னிங்க ....... எழுத்துகளில் தான் கில்மா இல்லை ...atleast அந்த படத்தையாச்சு முழுசா போட்டு இருக்கலாமே..........)

மேவி... said...

கார்த்தி என்னாச்சு ..... பதிவு மொக்கை தனமா இருக்கே ?????

படத்தை ரசிச்சு பார்க்கல போல் இருக்கே ......

கார்த்திகைப் பாண்டியன் said...

//டம்பி மேவீ said...
கார்த்தி என்னாச்சு ..... பதிவு மொக்கை தனமா இருக்கே ????? படத்தை ரசிச்சு பார்க்கல போல் இருக்கே ......//

ரொம்பப் பிடிச்சதுன்னு சொல்ல முடியாதுப்பா.. இடுகைல தெரியுதா என்ன? பார்த்துக்கலாம்..:-)))