September 14, 2010

ஞாநியுடன் ஒரு சந்திப்பு

"ஓ பக்கங்கள்" ஞாநி பற்றி அறிமுகம் எதுவும் தேவையில்லை. மிக முக்கியமான பத்திரிக்கையாளர்.. யாருக்கும் அஞ்சாமல் தன்னுடைய கருத்துகளைத் தைரியமாக முன்வைப்பவர்.. நாடகம்-எழுத்து-ஓவியம்- திரைப்படங்கள் என்று பல தளங்களில் இயங்குபவர்.


கருத்துரீதியாக அவரோடு எனக்கு நிறைய முரண்பாடுகள் இருந்தாலும் நான் பெரிதும் மதிக்கும் மனிதர்களில் ஞாநியும் ஒருவர். தருமி ஐயா புண்ணியத்தில் மதுரை புத்தகத் திருவிழாவில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. வெகு இயல்பாகப் பேசியவர் புத்தகத் திருவிழா நடக்கும் நாட்களில் ஏதேனும் ஒரு மாலை வேளையில் மதுரை வலைப்பதிவர்களைத் தானும் சந்திக்க ஆவலோடு இருப்பதாக சொன்னார்.

நண்பர்களோடு கலந்து பேசி, போன வியாழக்கிழமை (08-09-10) அன்று மாலை ஞாநியைச் சந்திப்பதற்காக பதிவர்கள் அனைவரும் புத்தகத் திருவிழாவில் ஒன்றுகூடினோம். வழக்கமாக வரும் மதுரை நண்பர்களோடு வெகு நாட்களாக வருவதாக டபாய்த்துக் கொண்டிருந்த முரளிகண்ணன், காணாமல் போனவர்கள் பட்டியலில் இருந்த பீர் ஆகியோரும் இணைந்து கொள்ள கூட்டம் களை கட்டியது. இத்தனை நல்ல மனிதர்களை ஒரே இடத்தில் பார்த்த சந்தோஷத்தில் வானம் ஆனந்தக் கண்ணீர் உகுத்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் (அட.. அதாங்க.. மழை பெய்ஞ்சது).

தமுக்கத்தின் வெட்டவெளியில் நிற்க முடியாமல் நண்பர்கள் அனைவரும் ஞாநியுடன் அருகிலிருந்த "நார்த் கேட்" ஹோட்டலின் சிற்றுண்டி சாலையில் தஞ்சம் புக சந்திப்பு தொடங்கியது. வந்திருந்தவர்கள் எல்லோரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டோம். வலையுலகில் ஒவ்வொருவரும் எந்தவொரு எண்ணத்தோடு உள்ளே வந்தோம், வந்த பின்பு இன்றைக்கு என்ன மாதிரியான எண்ணங்களோடு இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புவதாக ஞாநி சொன்னார்.

பணிஓய்வுக்குப் பின் கிடைத்த அதிக நேரத்தை நல்லபடியாக செலவு செய்ய வலைப்பூக்கள் உதவுவதாக தருமி கூறினார். கல்வி சார்ந்து நிறைய விஷயங்களைச் சமுதாயத்துக்கு சொல்ல வேண்டும் என்பதற்காக தான் இயங்குவதாக மதுரை சரவணனும், தமிழில் எழுதும் பழக்கத்தை தொடர்வதற்காகவே வலைப்பூ என்று ஸ்ரீதரும் சொன்னார்கள். 2005 -ஆம் ஆண்டுவாக்கில் தேர்தல் நேரத்தில் மதுரை சார்ந்து செய்திகளை எழுத வலைப்பூ ஆரம்பித்ததாகவும், பின்னர் அதில் எழுந்த சில நடைமுறைப் பிரச்சினைகளின் காரணமாக, தான் நன்கறிந்த சினிமா பற்றி எழுதுவதாகவும் முரளிகண்ணன் சொன்னார்.

லண்டனில் வெறுமனே நேரத்தை கடத்த பயன்பட்ட வலைப்பூ எழுதும் பழக்கம் இன்றும் வலைச்சரம் தொடுப்பதில் வந்து நிற்பதை சீனா ஐயாவும், அவருடைய துணைவியார் செல்விஷங்கர் அம்மாவும் பகிர்ந்து கொண்டார்கள். தமிழில் எழுத வேண்டும் என்கிற ஆர்வமும் அதனால் கிடைக்கும் நட்புகளுமே தன்னை வலைப்பூக்களில் தொடர்ந்து இயங்க வைப்பதாக.. அட விடுங்கப்பா.. எனக்குத்தான் விளம்பரம் பிடிக்காதுன்னு உங்களுக்குத் தெரியும்ல..:-)))

பின்னர் தன்னைப் பற்றிய சுவாரசியமான பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் ஞாநி. தமிழ் எழுத்தாளர்களில் சுஜாதாவுக்கு அடுத்தபடியாக இணையத்தைப் பயன்படுத்தி தட்டச்சு செய்யத் துவங்கிய இரண்டாவது நபர் அவர்தானாம். ஆனால் ஆரம்ப காலத்தில் போனோடிக் (phonetic) முறைகள் இல்லாத நிலையில், தமிழில் தட்டச்சு செய்வது சிரமமாக இருக்கவே இணையத்தில் இருந்து விலகிக் கொண்டாராம். இனி பதிவர்களின் சில கேள்விகளும் அதற்கான ஞானியின் பதில்களும்..

தமிழ் வலைப்பூக்கள் குறித்து?

இணையம் இன்றைக்கு மிகப்பெரிய தகவல்தொடர்பு சாதனமாக உருவாகி இருந்தாலும் பொது ஊடகங்கள் அளவுக்கு தமிழ் இணைய ஊடகம் வளரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். முதலாக எனக்கு இந்த வலைப்பூ என்ற வார்த்தையே சற்று தவறானதாகப்படுகிறது. அதிலும் இடுகை என்றொரு வார்த்தையை உபயோகிக்கிறார்கள். அது சரியானது அல்ல. பதிவு என்பதே சரியானதாக இருக்க முடியும்.

நம்முடைய பிரச்சினையே இதுதான். தமிழில் நல்ல வார்த்தைகள் இருந்தாலும் கூட நாம் அவற்றைப் பயன்படுத்துவதில்லை. குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் பயன்படுத்தும் நிறைய சொற்களை நாம் இரவல் வாங்கிக் கொள்கிறோம்.. அவர்கள் பேசுவதுதான் சரியான தமிழ் என்றொரு எண்ணமும் இங்குண்டு. உண்மையில் இலங்கைத் தமிழில் நிறைய சம்ஸ்கிருத கலப்புண்டு.. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், அவதானிப்பு போன்ற வார்த்தைகளைச் சொல்லலாம்..

வலைப்பூக்களில் எனக்கு இருக்கும் இன்னொரு பிரச்சினை இந்த பின்னூட்டம் என்னும் வார்த்தை.. feedback என்பதை மொழிபெயர்த்து அப்படியே பின்னூட்டம் என்றாக்கி விட்டார்கள். மறுமொழி அல்லது எதிர்வினை என்பதே சரியானதாக இருக்க முடியும் என்பது என் கருத்து. மற்றபடி இன்றைக்கு தமிழ் வலைப்பூக்கள் ஆரோக்கியமான திசையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன. ஆனால் வெகு ஜன ஊடகங்களின் இடத்தை இணையம் பிடிக்க இன்னும் பத்து வருடங்கள் ஆகலாம்.

உங்களை எழுத்தால் எதையாவது மாற்ற முடியும் என நம்புகிறீர்களா?

நம்பிக்கை இல்லை என்றால் எழுதவே மாட்டேனே.. நம் கனவுகள் இன்றில்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் கண்டிப்பாக நடக்கும். எடுத்துக்காட்டுக்கு சொல்ல வேண்டுமென்றால், சென்னை மாநகரின் வீதிகளில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் மனநலம் குன்றியவர்கள் பற்றி எழுதினேன். சில நாட்கள் கழித்து அந்த மாதிரியான மனிதர்களை மருத்துவமனையில் சேர்க்க அரசு உத்தரவிட்டது. இது போன்ற சம்பவங்களின் போதும் நாம் எழுதியதற்கான பலன் என மனம் நிறைகிறது.

இன்றைய இளைஞர் சமுதாயம் நம்பிக்கை தருகிறதா?

ஆம் எனலாம்.. இல்லை என்றும் சொல்லலாம். சில நாட்களுக்கு முன்பு ஒரு கல்லூரி மாணவர் குழுவிடம் பேசிக் கொண்டிருந்தேன். வன்முறைக்கு வன்முறைதான் தீர்வாக இருக்க முடியும் என தீர்க்கமாக நம்புவதாகச் சொன்னார்கள். நான் கண்டிப்பாக அப்படி இருக்க முடியாது என்ற வாதிட்டேன்.

"இப்போது மதுரைப் புத்தகத் திருவிழா பற்றி முக்கியமானதொரு தினசரிப் பத்திரிகையில் எந்த விதமான செய்தியும் வருவது இல்லை. காரணம் அவர்கள் கேட்ட விளம்பரங்களை கொடுக்க அமைப்பாளர்கள் ஒத்துக் கொள்ளாததால் இருட்டடிப்பு செய்கிறார்கள். வாருங்கள், போய் அவர்கள் அலுவலகத்தில் கல்லடிப்போம்" என்று சொன்னபோது எல்லா மாணவர்களும் அமைதியாகி விட்டார்கள்.

இதுதான் நான் சொல்வது.. எப்போதுமே வன்முறை எதற்கும் தீர்வல்ல என்று.. அதை இளைஞர்கள் உணர வேண்டும். இன்றைக்கு பெண்களுக்கு ஓரளவாவது சுதந்திரம் கிடைத்து இருக்கிறது என்றால் அது ஒரே நாளில் கிடைத்ததா? இல்லையே.. பல நூற்றாண்டுகளின் கனவல்லவா அது.. அது எப்படி சாத்தியம் ஆயிற்று? தொடர்ச்சியான பேச்சு வார்த்தையின் மூலம்தான் அது சாத்தியமாகும்.

அதே மாணவர்களிடம் இன்னொன்றும் கேட்டேன். நாளை உங்களுக்குத் திருமணம் ஆகும்போது ஜாதி, மதம் பார்க்காமல் திருமணம் செய்து கொள்வேன் என்று அடித்துச் சொல்ல முடியுமா எண்டு.. ஒருவரும் கையைத் தூக்கவில்லை. அதுதான் மனதுக்கு மிகவும் வருத்தம். இந்த நிலை மாற வேண்டும். ஆனால் அது நம்முடைய காலத்தில் நடக்காது போலத் தோன்றுகிறது.

படைப்பாளியின் ஜாதி குறித்து பேசுகிறார்களே?

அது உங்களை அமைதியாக்கும் முயற்சி. உங்கள் எழுத்துகளை ஊமையாக்கும் தந்திரம். அதை கண்டுகொள்வதுதான் நீங்கள் உங்கள் எழுத்துக்குச் செய்யும் பெரும் துரோகம். இவற்றை எல்லாம் தாண்டிப் போய்க்கொண்டே இருக்க வேண்டும். நேர்மையாக எழுதக் கூடியவன் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

அரசியல் நெருக்கடிகள்?

நேரடியாக எனக்கு வருவதில்லை. மாறாக நான் பணியாற்றும் பத்திரிக்கைகளுக்குத்தான் நெருக்கடி தருகிறார்கள். அதனால் தான் அவ்வப்போது நான் என்னுடைய முகாம்களை மாற்றிக் கொண்டிருக்கிறேன்.

சக எழுத்தாளர்கள்?

அவர்கள் அதிகார பீடத்தை எதிர்க்க வேண்டாம் என எண்ணுகிறார்கள். நான் அதற்கு நேர்மாறாக நினைக்கிறேன். அதனால் அவர்கள் என்னைப் பொருட்படுத்துவதே கிடையாது. நானும்..

அரசை எதிர்ப்பது மட்டுமே உங்கள் கொள்கை என்று சொல்கிறீர்களா?

தவறு செய்யும்போதெல்லாம் எதிர்ப்பது மட்டுமே என்னுடைய வேலை. ஒரு பொறுப்புள்ள குடிமகனாக அதை எப்போதும் செய்வேன்.

இதுபோக நிறைய தனிப்பட்ட விஷயங்களையும் ஞாநி பகிர்ந்து கொண்டார். அட்டகாசமான மழைக்காலப் பொழுது.. உற்சாகமான உரையாடல்.. நண்பர்களோடு அருமையாய்க் கழிந்ததொரு மாலை வேளை. எங்களோடு தானும் ஒருவர் போல தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட ஞானிக்கு மதுரைப் பதிவர்களின் உளமார்ந்த நன்றிகள்.

17 comments:

Anonymous said...

நல்ல உரையாடல் தொகுப்பு கா.பா!
//யாருக்கும் அஞ்சாமல் தன்னுடைய கருத்துகளைத் தைரியமாக முன்வைப்பவர்.//

முற்றிலும் உண்மை!

Ahamed irshad said...

படைப்பாளியின் ஜாதி குறித்து பேசுகிறார்களே?
அது உங்களை அமைதியாக்கும் முயற்சி. உங்கள் எழுத்துகளை ஊமையாக்கும் தந்திரம்.//

நச் பதில்கள்..

கண்ணா.. said...

நல்ல பகிர்வு. சில விஷயங்கள் நச்சுன்னு சொல்லிருக்காரு. சில விஷயங்கள் ரொம்ப சாதாரணமா சொல்லிருக்காரு

பீர் | Peer said...

நல்ல அனுபவம்.

துளசி கோபால் said...

அற்புதமான மனிதர் அவர்.

நன்றாகவே தொகுத்து பதிவு செய்திருக்கிறீர்கள்.

நன்றி.

நேசமித்ரன் said...

இந்த மாதம் சந்திப்பு மாதம் :)

உங்க காட்ல மழை பெய்யுதுங்க சாமிகளா

இலக்கிய மழை

சாரலுக்கு நன்றி

கார்த்திகைப் பாண்டியன் said...

//Balaji saravana said...
நல்ல உரையாடல் தொகுப்பு கா.ப//

நன்றி நண்பா..

// அஹமது இர்ஷாத் said...
நச் பதில்கள்....

நன்றிங்க..

//கண்ணா.. said...
நல்ல பகிர்வு. சில விஷயங்கள் நச்சுன்னு சொல்லிருக்காரு. சில விஷயங்கள் ரொம்ப சாதாரணமா சொல்லிருக்காரு//

தல.. அவர் காட்டமாகப் பேசிய நிறைய விஷயங்களை இங்கே சொல்ல முடியாது என்பதால் சென்சார் செய்து விட்டேன்.. அரசியல் ஆகி விடக் கூடாது அல்லவா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பீர் | Peer said...
நல்ல அனுபவம்//

நீங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம் நண்பா.. தொடர்ந்து டச்சுல இருங்க..

//துளசி கோபால் said...
அற்புதமான மனிதர் அவர்.
நன்றாகவே தொகுத்து பதிவு செய்திருக்கிறீர்கள்.நன்றி.//

ஆமாங்க.. தைரியமான நல்ல மனிதர்..:-)))

//நேசமித்ரன் said...
இந்த மாதம் சந்திப்பு மாதம் :)
உங்க காட்ல மழை பெய்யுதுங்க சாமிகளா இலக்கிய மழை சாரலுக்கு நன்றி//

எல்லாம் உங்க ஆசிர்வாதம்தான் தலைவரே.. நைஜீரியா காத்து வீச ஆரம்பிச்ச நாள்ல இருந்து ஒரே சந்திப்போ சந்திப்புதான் போங்க..:-))

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

எனக்கும் அவதானிப்பு என்ற வார்த்தைக்கு இன்று வரை சரியான அர்த்தம் தெரிய வில்லை, தெரியாமலேயே அந்த வார்த்தையை வாசித்து கொண்டு இருக்கிறேன்.
(assumed or decided= avadhaanippu)

அதே போல கம்மென்ட் என்ற வார்த்தைக்கு பின்னோட்டம் என்பது சரி அல்ல.

கதைத்தல், கதைக்கிறேன் என்ற வார்த்தையும் சிங்கள வார்த்தையில் (கதாகர) இருந்து வந்துள்ளது போல. கதைக்கிறேன் என்ற வார்த்தையையும் நான் வெறுக்கிறேன்

மார்கண்டேயன் said...

ரொம்ப சந்தோஷம், பகிர்ந்ததுக்கு,

மதுரை சரவணன் said...

அப்படியே பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள். ஞாநி ஒரு தைரியமான மனிதர் என்பது அவரின் தீர்க்கமான பேச்சு உதாரணம். அருமையான அந்த தருணங்கள் மீண்டும் கிடைக்காது. வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

@ராம்ஜி யாஹூ

நான் பார்க்க எல்லார் தளத்துலையும் உங்க பின்னூட்டம் இருக்கு.. சளைக்காமப் படிச்சு சகட்டுமேனிக்கு எல்லாரையும் சந்தோஷப்படுத்தும் உங்களுக்கு என் நன்றி தோழரே..

// மார்கண்டேயன் said...
ரொம்ப சந்தோஷம், பகிர்ந்ததுக்கு//

:-))))

// மதுரை சரவணன் said...
அப்படியே பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள். ஞாநி ஒரு தைரியமான மனிதர் என்பது அவரின் தீர்க்கமான பேச்சு உதாரணம். அருமையான அந்த தருணங்கள் மீண்டும் கிடைக்காது. வாழ்த்துக்கள்//

ஏன் தலைவரே கிடைக்காது? அடுத்த தடவை அவர் வரும்போதும் கண்டிப்பா சந்திப்போம்..

cheena (சீனா) said...

அன்பின் காபா

அருமை - சந்திப்பினைப் பற்றிய இடுகை அருமை. ஞானியின் பெயர்க்காரணம் - இயற்பெயர் - வார இதழ்களில் எழுதுவதில் உள்ள சிரமம் - என்றும் எதிலும் எழுதுவேன் என்ற தைரியம் - பேசுவதில் - பேசும் கருத்துகளில் உள்ள தெளிவு - இயல்பாகப் பழகும் - புதியவர்களுடன் பழகும் விதம் - அத்தனையும் நன்று. நல்ல மனிதர்

நல்வாழ்த்துகள் காபா
நட்புடன் சீனா

Guruji said...

அருமையான பதிவு உள்ளத்தில் தோன்றும் கருத்தை மறைக்காமல் அப்படியே பதிவு செய்யும் மனிதர்களில் ஞானி யும் ஒருவர் . அவரின் எழுத்தை போலவே பேட்டியும் பளீர் ரகம்.

மேவி... said...

நல்லதொரு தொகுப்பு . வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

//cheena (சீனா) said...
அன்பின் காபா அருமை - சந்திப்பினைப் பற்றிய இடுகை அருமை. ஞானியின் பெயர்க்காரணம் - இயற்பெயர் - வார இதழ்களில் எழுதுவதில் உள்ள சிரமம் - என்றும் எதிலும் எழுதுவேன் என்ற தைரியம் - பேசுவதில் - பேசும் கருத்துகளில் உள்ள தெளிவு - இயல்பாகப் பழகும் - புதியவர்களுடன் பழகும் விதம் - அத்தனையும் நன்று. நல்ல மனிதர//

hints develop பண்ணினா இதையே ஒரு இடுகையா எழுதலாமே ஐயா

//ஸ்ரீ ராமானந்த குருஜி said...
அருமையான பதிவு உள்ளத்தில் தோன்றும் கருத்தை மறைக்காமல் அப்படியே பதிவு செய்யும் மனிதர்களில் ஞானி யும் ஒருவர் . அவரின் எழுத்தை போலவே பேட்டியும் பளீர் ரகம்.//

ஆம்மாங்க.. நன்றி..

// டம்பி மேவீ said...
நல்லதொரு தொகுப்பு வாழ்த்துக்கள்//

நன்றி மேவி

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வுக்கு மகிழ்ச்சி தல