October 4, 2010

பரத்தை கூற்று

இன்றைய சமூகத்தில் அடிமை வழக்கங்கள் ஒழிந்து விட்டதாக சொல்கிறோம், ஆனால் அது உண்மையல்ல. அவை இன்றும் இருக்கின்றன, ஆனால் பெண்கள் மட்டுமே அதற்கு ஆட்படுத்தப்படுகிறார்கள்.. அதன் பெயர்தான் விபச்சாரம்.

- விக்டர் ஹ்யூகோ

நண்பனொருவனோடு பேசிக் கொண்டிருந்தேன். அவன் வெகு நாட்களாக ஒரு பெண்ணை ஒருதலையாய்க் காதலித்து வந்தான்.

"ஏண்டா மாப்ள.. அந்தப் பொண்ணு என்னடா ஆனா? சொன்னியா இல்லையா?"

"பச்ச்.. விடுறா மாப்ள.. அது ஒரு ரூட்டுடா.. அதப் பத்திப் பேசாத.."

எனக்கு அதிர்ச்சி.

"என்னடா.. ஏன் இப்படி சொல்ற.."

"அவ வேற யாரையோ லவ் பண்றாளாம்.. தே******"

நான் இங்கு என் நண்பன் சொன்னது சரி, தவறு என்பது பற்றி பேச விழையவில்லை. மாறாக அவனது பேச்சில் ஒளிந்திருக்கும் ஒரு பொது புத்தியைப் பற்றியே பேச விழைகிறேன். ஒரு பெண்ணைப் பிடிக்கவில்லை. அவளை அசிங்கப்படுத்த வேண்டும். என்ன செய்யலாம்? ரொம்ப எளிது.. ஒற்றை வார்த்தையில் அவள் ஒரு தே**** என்று சொன்னால் வேலை முடிந்தது.

வேசை - தேவரடியாள் என்பது பின்னர் தே***வாக மாறியது.. அந்த வார்த்தையில் இருக்கும் வன்மமும் வலியும்.. தங்கள் உடலையே முதலீடாக வைத்து பிழைப்பு நடத்தும் பாலியல் தொழிலாளிகள் பற்றிய நம் மதிப்பீடு என்னவாக இருக்கிறது? பாலியல் தொழிலாளிகள் இல்லாவிட்டால் இந்த சமூகம் எப்படி இருக்கும்? அவர்களுக்கு இந்த சமுதாயத்தில் என்ன இடம் இருக்கிறது? சமுதாயம் பற்றிய அவர்கள் பார்வை என்னவாக இருக்கும்? இப்படியாக.. நாம் கேட்க நினைக்கின்ற ஆனால் கேட்கத் தயங்குகின்ற கேள்விகள் நிறையவே உண்டு.

இந்தக் கேள்விகளுக்கான விடை தேடும் முயற்சியாகவே சி.சரவணகார்த்திகேயனின் "பரத்தை கூற்றை" அணுகமுடிகிறது. பொதுவெளியில் தைரியமாக பேச முடியாத விஷயமாகவே இன்றுவரை இருக்கும் பாலியல் தொழிலாளிகள் பற்றிய தன்னுடைய கருத்துக்களை இந்தப் புத்தகத்தில் CSK ஆணித்தரமாக பதிவு செய்திருக்கிறார்.

கற்பு பற்றிய தன்னுடைய பார்வை, வேசிகளின் வரலாறு, பெண்களின் மீதான மறைமுகத் தாக்குதல், சங்க இலக்கியத்தில் காணப்படும் பரத்தையர் கூற்று, நவீன இலக்கியத்தில் காணப்படும் பதிவுகள் என சகலத்தையும் அலசிப்போகும் ஆசிரியரின் மிக நீண்டதொரு பூர்வ பீடிகையுடன் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம். "நாம் ஒவ்வொருவருமே ஏதாவதொரு கணத்தில் விபச்சாரியாக நடந்து கொள்கிறோம் - மனதாலும் உடலாலும்". என்னை மிகவும் கவர்ந்த வார்த்தைகள் இவை. அதைப் போலவே புத்தகத்துக்கான தலைப்பை எப்படித் தேர்ந்தெடுத்தார் என்பதையும் சுவாரசியமாகவே சொல்லி இருக்கிறார்.

ஜி.நாகராஜனின் வரிகளை முன்னுரையாகக் கொண்டும், வித்தியாசமானதொரு கடவுள் வாழ்த்து பாடியும் ஆரம்பிக்கிறது புத்தகம். மொத்தம் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. குறிஞ்சி - புணர்தலும் புணர்தல் நிமித்தமும், முல்லை - இருத்தலும் இருத்தல் நிமித்தமும், மருதம் - ஊடலும் ஊடல் நிமித்தமும், நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும், பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும். ஒவ்வொரு திணைக்கும் முப்பது கவிதைகள் என மொத்தம் நூற்றைம்பது கவிதைகள்.

ஒரு வேசியின் பார்வையில் சமுதாயம் என்பதே பெரும்பாலான கவிதைகளின் உள்ளர்த்தமாக இருக்கிறது. இந்தக் கவிதைகளில் காணக் கிடைக்கும் எள்ளலும், அதன் ஊடான கோபமுமே இந்த மொத்தப் புத்தகத்தின் சாரம் என்று சொல்லலாம். இதுதான் நிதர்சனம் என்று பட்டவர்த்தனமாக முகத்தில் அடிக்கின்றன கவிதைகள்.

என்ன இருந்தாலும்
எம் மகளிரைப் போல்
ஆண்களை உறவுக்கு
அழைக்கும் மறுக்கும்
உரிமையில்லையுன்
இல்லக்கற்பரசிகட்கு

கொடுப்பினை
வேண்டும்
கற்போடு
வாழ்வதற்கும்

புழுவோ மண்ணோ
கழுகோ நெருப்போ
தின்னப் புகும் முன்
நீயும் ருசித்துப் போ

விபச்சாரம்
என்பதும்
பெண்ணுரிமை

காசின்றிப்
புணரத் தேவை
காதல்

வாசிக்கும்போதே நமக்கு பல்வேறான உணர்வுகளைத் தூண்டி விட்டு.. நாமும் இதில் ஒரு பகுதிதானே, இதைப் பற்றி நம்மால் என்ன செய்து விட முடியும் என்கிற குற்றவுணர்ச்சியும், சின்னதொரு வலியும் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

இந்தப் புத்தகத்தின் குறைகள் என்று எதைச் சொல்லலாம்? எல்லா விஷயங்களுமே வேசை - சமுதாயம் என்கிற ஒரு பரிமாணத்தை மட்டுமே பேச முற்படுவதாக எனக்கொரு உணர்வு. எத்தகைய சூழல்களில் பெண்கள் வேசைத்தனத்தை ஏற்றுக் கொள்கிறார்கள்.. விரும்பி வருபவர்களின் மனநிலை எப்படி இருக்கும்.. அவர்களின் அக உலகம் குறித்தான பார்வை இந்தப் புத்தகத்தில் அவ்வளவாக சொல்லப்படவில்லை. அதேபோல கவிதைகளின் வடிவமும்... ஒரு சில கவிதைகள் வெறும் ஸ்டேட்மென்டாக முடிந்து போகின்றன.

தேவைப்பட்டால்
தயங்க மாட்டோம் -
வீதியிலிறங்கிக்
கூவியழைக்கவும்

உறவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம்- வீணில்
உண்டு கழித்திருப்போரை
நிந்தனை செய்வோம்

அசர அடிக்கும் கவிதைகளுக்கு நடுவே இது போன்ற ஒரு சில விஷயங்களும் அங்கங்கே வந்து விழுவதைத் தவிர்த்திருக்கலாம். கிட்டத்தட்ட நானூறு கவிதைகளில் இருந்து இந்தக் கவிதைகளைத் தேர்ந்து எடுத்திருப்பதாக ஆசிரியர் சொல்கிறார். கவிதைகளில் தேர்ந்தெடுப்பதில் இன்னும் கூடக் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம் என்கிற எண்ணத்தை இது போன்ற கவிதைகள் தோற்றுவிக்கின்றன.

கடைசியாக - "பரத்தை கூற்றை" வாசிக்கும் யாருக்கும் காமக் கடும்புனலின் ஞாபகம் வருவது நிச்சயம். ஆனால் இரண்டு புத்தகங்களின் தளமும் வேறு. பரத்தை கூற்று வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவும் கவன ஈர்ப்புக்காகவும் எழுதப்பட்டு இருக்கும் புத்தகம் அல்ல. மாறாக நாம் ஒதுக்கி வைத்திருக்கும், மதிக்க மறுக்கும் சமுதாயத்தின் ஒரு அங்கத்தையும் அவர்களின் உணர்வுகளையும் ஆவணப்படுத்துவதற்கான முயற்சி. அதில் CSK சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியும் பெற்றிருக்கிறார். புத்தகத்தை வெளியிட்டு இருக்கும் "அகநாழிகை" பதிப்பகத்துக்கு வாழ்த்துகள்.

பரத்தை கூற்று
சி.சரவணகார்த்திகேயன்
அகநாழிகை வெளியீடு
விலை - ரூ.50/-

12 comments:

Unknown said...

நல்லதொரு விமர்சனம் KP.

நிலாமகள் said...

படிக்கத் தூண்டும் படியான விமர்சனம்.

Anonymous said...

விமர்சனம் அருமை கா.பா!
படிக்கும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறீர்கள்!

தேவன் மாயம் said...

பெண் கவிஞர்கள் எழுத வேண்டியவிசயம்! ஆசிரியருக்கு வாழத்துகள்!

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வு நண்பா...

குமரை நிலாவன் said...

விமர்சனம் அருமை நண்பா...

Unknown said...

நல்ல பகிர்வு நண்பரே

நிகழ்காலத்தில்... said...

புத்தகம் வாங்கிப்படிக்கத் தூண்டுகிறது உங்கள் அக்கறையான விமர்சனம் தல..

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.. புத்தகத்தை வாசித்து உங்கள் மதிப்புரையையும் சொல்லுங்க மக்கா

செந்தமிழ் செல்வன் said...

http://ramesh-coimbatore.blogspot.com/

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்லதொரு விமர்சனம்.
படிக்கத் தூண்டும் படியான விமர்சனம்.
விமர்சனம் அருமை
படிக்கும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறீர்கள்!
நல்ல பகிர்வு.
புத்தகம் வாங்கிப்படிக்கத் தூண்டுகிறது உங்கள் அக்கறையான விமர்சனம்.

மதுரை சரவணன் said...

arumai. nalla vimaarchanam. vaalththukkal. ilakkiya singkam