June 17, 2011

அவன் இவன் - திரைப்பார்வை

தந்தையின் ஸ்தானத்தில் இருக்கும் பெரிவர் ஒருவரின் சாவுக்குப் பழிவாங்கும் அவன் இவனின் கதை. எப்போதும் சாதாரண சூழலில் காணக்கிடைக்காத அசாதாரண விளிம்புநிலை மனிதர்களைப் படமாக்கும் பாலா இந்த முறையும் கிட்டத்தட்ட அதே மாதிரியான மனிதர்களோடு களம் இறங்கியிருக்கிறார். படம் கல்பாத்தி அகோரத்தின் தயாரிப்பு.

சேது பார்த்தபோது கொன்னுட்டாண்டா மனுஷன், யாரிந்த பாலா என கேட்கத் தோன்றியது. நந்தா வெளியான நேரம். படம் வெற்றி பெறுமா என்கிற ஒரு டிவி நிருபரின் கேள்விக்கு "அப்படி ஜெயிக்கும்னு நம்பிக்கை இல்லைன்னா ஏன் படம் எடுக்கப் போறேன்" என்று சொன்னார் பாலா. அந்த வெளிப்படையான பேச்சு எனக்கு ரொம்பப் பிடித்துப் போனது. நந்தா பார்த்த முதல் தடவை தல தப்பிச்சுட்டாருடா என்று சொன்னாலும் பின்பு பல நாட்களுக்கு அந்தப் படத்தைப் பற்றி புலம்பி நாலைந்து தடவை பார்த்தேன். பிதாமகனில் சூர்யா செத்தபோது நானும் அழுதிருக்கிறேன். நான் கடவுளின் திரைக்கதை பிடிக்கவில்லை என்னும்போதும் இப்படி ஒரு படத்தை பாலாவைத் தவிர தமிழில் வேறு யாராலும் எடுக்க முடியாது என நண்பர்களோடு சண்டை போட்டிருக்கிறேன். ஆனால் அவன் இவனின் பாலா? என்ன சொல்வது..பாலாவின் படங்களில் ஒரு பொதுத்தன்மை இருக்கும். அவருடைய கதாபாத்திரங்களுக்கென எனத் தனியாக சில விஷயங்களை வைத்திருப்பார். வெகு கலகலப்பாக ஒரு கதாபாத்திரம் காட்டப்பட்டால் கண்டிப்பாக அது மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் அல்லது இறந்து போகும். படம் முடிந்து வரும்போது பார்ப்பவர்களின் மனதில் ஒரு வெறுமையை உணரச் செய்வதே பாலாவின் படங்களில் உத்தி. சேதுவில் பாண்டிமடத்துக்குப் போகுமுன்பு விக்ரமை சிரித்தபடி ஒரு குளோசப் ஷாட் காட்டுவார் பாருங்கள்.. அதே போலத்தான் பிதாமகனில் சூர்யாவின் மரணமும் நான் கடவுளில் காட்டப்படும் பிச்சைக்காரர்களின் உலகமும். பார்ப்பவர்கள் மனதை கனக்கக் செய்யும் அவருடைய முதல் நான்கு படங்களில் ஆதாரமாக ஒரு கதையும் அழுத்தமான சம்பவங்களும் இருக்கும். அவன் இவனில் இது எதுவுமே இல்லை என்பதுதான் பிரச்சினை.

எதை நோக்கி நகர்கிறது என்றே தெரியாத முதல் பாதி. விஷால் கலைஞனாக விரும்பும் திருடன். ஆர்யா பிழைப்புக்குத் திருடும் கேனையன். இருவரும் ஒரே அப்பாவின் வெவ்வேறு மனைவிக்குப் பிறந்தவர்கள். சண்டை போடுகிறார்கள். ஹைனஸ் என்றழைக்கப்படும் ஜி.எம்.குமாரோடு நெருக்கமாக இருக்கிறார்கள். நடுநடுவே காதலிக்கிறார்கள். பெரிய தவறொன்று செய்யும்போது இடைவேளை. பிறகு இரண்டாம் பாதியில் மறுபடியும் சும்மா சுத்துகிறார்கள். கடைசி பதினைத்து நிமிஷத்துக்கு முன்னாடி ஒரு வில்லன் வருகிறான். குமார் சாகடிக்கப்படுகிறார். பழிக்குப் பழி. சுபம்.

வெகு சாதாரணமான இந்தக் கதைக்கு பாலா தேவையா? பாலாவின் படமென்றால் இதெல்லாம் இருக்கும் என அவர் உருவாக்கிய பிம்பமே அவருக்கு இந்தப் படத்தில் மிகப்பெரிய எதிரியாக மாறியிருக்கிறது.இந்தப்படத்தின் திரைக்கு முன்பான நாயகர்கள் இருவர். முதலில் விஷால். மாறுகண், குரலில் இருக்கும் இளகிய தன்மை, சட் சட்டென்று மாறும் பாவனைகள், பெண்களைப் போல அவர் வெளிப்படுத்தும் உடல்மொழி என நிறைய சிரமப்பட்டிருக்கிறார். சூர்யாவின் முன் விதவிதமாக நடித்துக் காட்டும் இடத்தில் பிரித்து எடுத்திருக்கிறார். இரண்டாவது நாயகன் ஜி.எம்.குமார். அவருடைய கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம் அற்புதம். எல்லாவற்றையும் இழந்தபின்னும் தன்னை நாட்டின் ராஜாவாக நம்பிக் கொண்டிருக்கும் குழந்தைமையும் தனக்கென மக்கள் வேண்டுமெனத் தேடியலையும் பதட்டமும் கலந்து உருவாக்கப்பட்டு இருக்கும் அவர்தான் படத்தின் மிக முக்கியமான மனிதர்.

ஆர்யா ஓவர் சவுண்ட். பிதாமகன் சூர்யாவின் ஜெராக்ஸ் மாதிரி இருக்கிறார். அவருடன் கூடவே வரும் சிறுவனின் செய்கைகள் முழுக்க முழுக்க எரிச்சல். மருந்துக்குக் கூட லாஜிக் பார்க்காத கதாநாயகிகள் ஜனனியும் மதுஷாலினியும். போலிஸ் ஏட்டான ஜனனி திருட்டுப் பயலான விஷாலை காரணமே இல்லாமல் காதலிக்கிறார என்றால் மதுஷாலினிக்கோ ஆர்யா குட்டிக்கரணம் அடிக்கச் சொல்வதால் காதல் வருகிறது. கெரகம்டா. இன்னும் எத்தனை படத்தில்தான் கல்லூரிக்குப் போகும் பெண்ணை அடாவடி நாயகன் கூப்பிட்டு மிரட்டிக் காதலிப்பதைக் காட்டுவார் பாலா? படத்தில் நேர்மையாக காட்டப்பு இருக்கும் ஒரே பாத்திரம் அம்பிகாவினுடையது. பீடி பிடிக்கிறார். மகன் அடிக்கும் குவார்ட்டரில் பங்கு கேட்கிறார். எல்லாவற்றையும் விட ஆர்யாவை அவர் அடிக்கும் கிண்டல்கள்.. அதிரடி.போலீஸ்காரர்களைக் கேவலமாக, ஒன்னாம் நம்பர் லூசான்களாக காண்பிப்பதை தொழிலாகவே செய்து வருபவர் பாலா. இதில் இன்னும் ஒரு படி மேலே போய் திருடர்கள் திருடக் கூடாது எனக் கேட்டு எஸ். ஒருவர் ஊருக்கு கெடா வெட்டி விருந்து தருகிறார். ஏதேனும் திருட்டு நடந்தால் போலிஸ் இவர்கள் வீட்டுக்கு வந்து கெஞ்சி நிற்கிறது. ஆர்யாவும் விஷாலும் ஒரு கோடி ரூபாய் பெறுமானமுள்ள மரத்தைத் திருடுகிறார்கள். ஆனால் ஏன் என்று ஒரு வார்த்தை கேட்காமல் வெளியே விட்டு விடுகிறது காவல்துறை. ஏன் பாலா இப்படி?

முதல் பாதி சம்பவங்களின் கோர்வையை கொஞ்சமாவது ரசிக்க முடிகிறதென்றால் அதற்குக் காரணம் எஸ்ராவின் வசனங்கள். தொடர்ச்சியாக சிரித்துக் கொண்டே இருக்கிறோம். ஆனாலும் பெண்கள் அணியும் பேண்டில் ஜிப் இருக்குமா என்கிற ரீதியிலான வசனம் எல்லாம் தேவையில்லை என்றே தோன்றுகிறது. யுவனின் டியோ டியோ டோலேவுக்கு விஷால் போடும் கெட்ட ஆட்டத்தில் தியேட்டரே குலுங்குகிறது. பின்னணி இசையும் ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவும் படத்துக்குத் தேவையான மூடைக் கொடுக்கின்றன.

கடைசி பத்து நிமிடத்துக்காக ஒரு மொத்த படத்தையும் பார்க்க முடியுமா? குமார் சாவதும் விஷாலின் நடிப்பும் கடைசி ரவுத்திரமும் இல்லையெனில் இந்தப்படம் ஒரு குப்பை என்று தைரியமாக சொல்லியிருப்பேன். ஆனால் அந்த கடைசி காட்சிகள் படத்தை கொஞ்சமே கொஞ்சம் காப்பாற்றுகின்றன. சத்தியமாக இது நமக்குத் தெரிந்த பாலாவின் படம் கிடையாது. ஒருவேளை அதுமாதிரியான பிம்பத்திலிருந்து வெளிவர பாலா எடுத்துக் கொண்ட முயற்சி என்றாலும் அவருக்கு இது தோல்வியே.

அவன் - இவன் - எவன்

7 comments:

ஜெட்லி... said...

அதே தான்....

CS. Mohan Kumar said...

எல்லாருமே நல்லா இல்லைன்னு தான் சொல்றீங்க :((

N.H. Narasimma Prasad said...

எது எப்படியோ. படம் பாக்கற மாதிரி இருந்தா சரி.

சிநேகிதன் அக்பர் said...

எதிர்பார்ப்பு இல்லாம பார்த்தா பிடிக்குமா?

Sivakumar said...

இன்னொரு முறை பாலாவின் கோரமான க்ளைமாக்ஸ், முரட்டு ஹீரோ படங்கள் வந்தால் நம்ம உடம்பு தாங்காது. அவர் தன் ரூட்டை மாற்றியே ஆக வேண்டும்.

karthikkumar.karu said...

bala film edukirathukku munnadiey sollitaru... annoda adutha film 'Avan - Ivan ' ennoda munthiya film mathiri irukathu... Ithu konjam vithiyasamanathu...


Appuram athukku avaroda munthaiya film udan compare panrennga....

Athu verai... Ithu verai....

Unknown said...

malam en ivvalavu adhigamaaga vasanangalil payanpaduthappattirukirathu endru enaku puriyavillai.. Saakkadai alli suththappaduththum thuppuravup paniyaalargalin nilanai namakku puriyavaikavo alladhu nam indhiyargalin sagippuththanmaiyai veru vidhathil sothithu irukalaam. Andri rasigargalai mugam sulika vaipathe padaippaaligalin noakkam endral adutha padathil malam thinnum kaatchi ondrai vaithu thaan paarungalen. Thevai endraal antha kadhaappathirathirkum avan ivan heroine galuku nadathiyathu pol oru thedal nadathalam., :-(