February 4, 2012

மெரினா - திரைப்பார்வை

உல சினிமா என்று சில படங்களை, குறிப்பாக ஈரானிய படங்களை, பார்க்கும் போதெல்லாம் பொறாமையாக இருக்கும். தொலைந்து போகும் காலணிகள், மறந்து போன வீட்டுப்பாடப் புத்தகத்தைக் கொண்டு போய்க் கொடுக்க அலையும் சிறுவன், தங்க மீன்கள் வாங்க ஆசைப்படும் குழந்தைகள் போன்ற வெகு சாதாரணமான கதைக்கருவை எடுத்துக்கொண்டு குழந்தைகளின் உலகை வெகு அழகாகப் படமாக்கி இருப்பார்கள். ஏன் இது மாதிரியான படங்களை நம்மால் எடுக்க முடியவில்லை நம் இயக்குனர்கள் ஏன் இப்படி முயற்சிகள் செய்வதில்லை என்று ஆதங்கமாக இருக்கும்.

தமிழ் சினிமாவின் குழந்தைகள் சபிக்கப்பட்டவர்கள். அவர்களை நாம் எப்போதும் இயல்பானவர்களாக திரையில் பார்க்கக் கிடைப்பதேயில்லை. தமிழ்ப்படங்களில் நம் குழந்தைகளுக்கு எப்போதும் இரண்டே வேலைதான். வயதுக்கு மீறி அதிகபிரசங்கித்தனமாகப் பேசி நாயகனின் காதலுக்கு உதவ வேண்டும் அல்லது அன்பான பிள்ளையாயிருந்து அநியாயமாய் வில்லனால் சாகடிக்கப்பட வேண்டும். அப்படி எல்லாம் இல்லாமல் குழந்தைகளின் உலகை இயல்பாக படமாக்கிய படங்கள் தமிழில் வெகு குறைவே.

அந்த வரிசையில் மெரினா என்கிற கடற்கரை பின்புலத்தை எடுத்துக்கொண்டு அங்கு பிழைத்துக் கிடைக்கும் சிறுவர்கள் மற்றும் மனிதர்களின் வாழ்க்கையைப் படமாக்கி இருக்கிறார் பாண்டிராஜ். அவருடைய முதல் படமான பசங்க படத்தின் சாயல் இருப்பது போலத் தோன்றினாலும் அதைக் காட்டிலும் நேர்மையானதொரு படமாகவும் நன்றாகவும் வந்திருக்கிறது மெரினா.



வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்து கடற்கரையில் பிழைப்புக்காக சுற்றித்திரியும் சிறுவர்கள், அவர்களுக்கு உதவும் ஒரு போஸ்ட்மேன், பெற்ற பிள்ளையை அசிங்கப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு பிச்சையெடுத்துத் திரியும் பெரியவர், சினிமா ஆசைகளோடு பாட்டுப் பாடி பிச்சையெடுக்கும் மனிதரும் அவர் பிள்ளையும், பைத்தியம் என்று மற்றவர்களால் ஒதுக்கப்படும் மனிதர், குதிரை சவாரி விட்டு பிழைப்பவர், விதவிதமான காதலர்கள்.. இவர்களின் வாழ்க்கையில் சில பகுதிகள்தான் மெரினா.

படத்தில் பெரிதாக கதை என்று ஏதுமில்லை. ஆனால் எல்லாருக்கும் சொல்வதற்கான வாழ்க்கை இருக்கிறது. கடற்கரையில் கிடக்கும் மனிதர்கள் என்பதற்காக அவர்களின் கஷ்டம் சோகம் விதிக்கெதிரான போராட்டம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிராமல் வாழ்வின் நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு கொண்டாட்டமாய் வாழும் அவர்கள் வாழ்க்கையை சொல்லிப் போகிறது படம்.

நடிகர்களாக மிகச்சரியான மனிதர்களைத் தேர்வு செய்ததன் மூலம் படம் தரும் அனுபவத்தை மறக்க முடியாததாகச் செய்திருக்கிறார் பாண்டிராஜ். தன்னுடைய தயாரிப்பில் முதல் படம். ஏற்கனவே நிரூபித்த தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேடிப்போகாமல் இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என எல்லாமே புதுமுகங்களாய் பிடித்துப் போட்டிருக்கிறார். அவர்களும் நிறைவாகச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக இசையமைப்பாளர் கிரிஷ் படத்தின் மிகப்பெரிய பலம். படத்தின் முதல் இருபது நிமிடத்தை பார்த்தபின்பு சென்னையைப் பிடிக்காதவர்களுக்குக் கூட இனி சென்னை பிடிக்கக்கூடும். எடிட்டிங்கும் ஒளிப்பதிவும் இந்த காட்சிகளில் அட்டகாசம் செய்திருக்கின்றன.



படத்தின் ஒரே பிரச்சினை சிவகார்த்திகேயன் - ஓவியா வரும் பகுதிகள். எந்த ஒட்டுதலும் இல்லாத இன்றைய நவநாகரீகக் காதலைக் காட்ட நினைத்ததில் தவறில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக பெண்கள் எல்லோருமே கேவலமானவர்கள் என்பதாக அடிக்கடி வரும் வசனங்களை மட்டும் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். சிவகார்த்திகேயனைக் காட்டிலும் அவர் நண்பராக வருபவர் பட்டாசு கிளப்புகிறார். கடைசியில் அவருக்கே சி.கா பன்ச் சொல்வதும் திருமணம் முடிந்து கணவரோடு வரும் ஓவியா முதல் முறையாக பீச்சுக்கு வருவதாக சொல்லும் காட்சியும் நச்.

பசங்க படத்தில் ஏற்கனவே பார்த்த சிறுவர்களின் கொண்டாட்டங்கள், முதல் பாதியில் போலிஸ்காரர்கள் தரும் தேவையில்லாத பில்டப், அடுத்தடுத்து நடக்கும் காட்சிகளை நாம் கணிக்க முடிவது என சிலச்சில குறைகள் படத்தில் இருக்கின்றன. ஆனால் தொய்வில்லாத திரைக்கதையும் சிரிக்க வைத்துக் கொண்டேயிருக்கும் வசனங்களும் அதை எளிதில் மறக்கடித்து விடுகின்றன.

நம் மண்ணின் இயல்போடு படங்கள் வெளியாவதில்லை, தமிழ் வாழ்க்கையை யாரும் பதிவு செய்வதில்லை என்பது போன்றான குற்றச்சாட்டுகளுக்கு சரியான பதில் இந்தப்படம். பீச்சில் வாழும் மக்களை காட்சிப்படுத்தும் நல்ல முயற்சி. இன்னும் ஆழமாகப் பேசுவதற்கான ஸ்பேஸ் படத்தில் இருக்கிறது. காதல் பகுதிகளை வெட்டியெறிந்து விட்டு அனுப்பினால் உலக திரைப்பட விழாக்களில் கண்டிப்பாக மெரினா கலக்கும் என்றும் நம்புகிறேன். இயக்குனர் பாண்டிராஜுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

மெரினா - அனுபவம்

4 comments:

சித்திரவீதிக்காரன் said...

இந்த வருடம் அரவான்'தான் முதலில் பார்க்க வேண்டும் என்று இருந்தேன். தங்கள் பதிவு வாசித்ததும் மெரினா'வை முதலில் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். பகிர்விற்கு நன்றி.

சாவி said...

நண்பரே,
இந்த படம் பற்றிய பல கருத்துக்களில் மாறுபட்டு இருந்தாலும்கூட, படத்தை பற்றிய உங்களின் விமர்சனம் அருமை.

தமிழ் சினிமா உலகம்

மெரினா: 03.02.2012 - திரைவிமர்சனம்!

கோவை நேரம் said...

விமர்சனம் அருமை...மத்தவங்க பார்வையில் எப்படியோ.///.....உங்களின் விமர்சனம் அருமை

இது தமிழ் said...

எடுத்துக் கொண்ட களம் என்பதை தவிர வேறென்ன படத்தில் உள்ளது என்ற குழப்பம் நேருகிறது. ஈரானியப் படங்கள் நம்மை வசிகரிக்க முக்கியக் காரணம் அதன் அந்நியத்தன்மை. அந்த மக்களின் வாழ்விடம் முதல் படத்தில் காட்டப்படும் அனைத்துமே நமக்கு புதிது. அத்தகைய களம் கொண்ட படங்கள் இங்கே வெற்றிப் பெற வேண்டுமானால்.. "யானை உழைப்பு" தேவைப் படுகிறது. புதுசா என்ன இருக்கு என்ற அலுப்பு சட்டென்று பார்வையாளனைப் பீடித்து விடும்.

'நான் கடவுள்' கூட கதை அற்ற படம் என்றே தோன்றுகிறது. ஆனால் அப்படத்தின் வெற்றி அதன் execution-னில் உள்ளது. கேமிரா கோணங்கள், சுவாரசியமான திரைக்கதை என பல காரணிகள் உள்ளடக்கியது தான் திரைப்படம். அது ஒரு மொழி.

நல்ல புத்தகத்தைத் தேடி வாசிப்பது போல்.. படத்தில் சிலாகிக்க பட வேண்டிய காட்சிகளைப் பிரக்ஞையோடு தேட வேண்டியுள்ளது. இயல்பாக படம் பார்வையாளனை வசிகரீத்து உள்ளிழுக்கவில்லை.

என்ன genre படம் என்பதை தீர்மானிக்க இயலுகிறதா!? ஒருவித தயக்கத்துடனுனான முயற்சியாகவே படுகிறது. தீவிரத்தன்மைக் கொண்ட படம் என்றால் இடைச்சொருகலான நகைச்சுவைக் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். இல்லை 'ஜாலி'யான படம் என்றால் முழுவதும் கலகலப்பாகவும் இல்லை.

சரி இத்தகைய தொடக்க முயற்சிகளைப் பாராட்டும் மனநிலை இல்லையா என்றால்.. எனக்கு "இல்லை" என்றே சொல்ல வேண்டும். திரைப்படங்களைத் தொழிலாகவும் பார்க்கிறேன். இத்தகைய படம் பெறும் வெற்றிகள் தான் இதே போன்ற படைப்புகள் தொடர ஊக்குவிக்கும்.

நல்ல படம் எடுக்க நாங்க தயார். மக்கள் பார்க்க தயாரா என 'மெரினா'வை எடுத்துக்காட்டாக்கி சால்ஜாப்பு செய்ய வசதியாக போய் விடும்.

பி.கு.: அவ்வ்.. எவ்ளோ பெரிய பின்னூட்டம்!? :-)

-டின்.