April 14, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி - ஒரு பின்நவீனத்துவப் பார்வை

ரமணிசந்திரன் என்றொரு எழுத்தாளர் இருக்கிறார். தமிழில் இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நாவல்களை எழுதிக் கொண்டிருப்பவர். எனக்குத் தெரிந்த எல்லாப் பெண்களுக்கும் அவரை ரொம்பப் பிடிக்கும். ஆனால், நான் வாசித்த வரையில், அவரிடம் இருப்பது ஒரே கதைதான். காதலாகிக் கசிந்துருகும் ஒரு ஆணும் பெண்ணும். பெரும்பாலும் அந்தப் பெண் ஏழையாகவும் ஆண் பணக்காரனாகவும் இருப்பார்கள். திடீரென ஆணுக்குப் பெண் மீது சந்தேகம் வந்து பிரிவார்கள். நீண்டதொரு இடைவெளிக்குப் பிறகு இருவரும் சந்திக்கும்போது பெண் ஆணிடம் வேலை செய்திட வேண்டிய சூழல் நேரும். பிறகு அவனுடைய அண்மையை விட்டு விலகிட முடியாமல் அவள் தன்னைத் தொலைப்பதும் பிரச்சினைகள் தீர்ந்து பெரிய மனதோடு அவன் அவளை ஏற்றுக் கொள்வதும் எனக் கதை முடியும். கிட்டத்தட்ட இதே மாதிரியான ஒற்றைக் கதையோடு தமிழ் சினிமாவை ஒரு கை பார்த்திடக் களம் இறங்கி இருக்கும் எம்.ராஜேஷின் மூன்றாவது படம்தான் ஒரு கல் ஒரு கண்ணாடி.

பொறுப்பே இல்லாத ஒரு ஆண். வீட்டில் வம்பு வளர்ப்பதும் தண்ணி அடிப்பதும் பெண்கள் பின்னால் சுற்றுவதும் அன்றி வேறேதும் தெரியாதவன். அவனைக் கூட இருந்து வழிநடத்தும் நண்பன். தனது மகன் தப்பே செய்தாலும் கூடவே இருந்து ஊக்கம் தரும் அம்மா. எதேச்சையாகப் பார்க்கும் பெண்ணோடு காதல். அவளுடைய அப்பா கண்டிப்பாக காதலுக்கு எதிரியாக இருப்பார். தொடர்ச்சியான வழிதல் மற்றும் மோதலுக்குப் பிறகு உறுதியாகும் காதல். எல்லாம் நல்லபடியாக முடிந்தது எனும் நிலையில் நண்பனை முன்னிட்டு ஒரு பிரிவு. கடைசியில் காதலர்கள் ஒன்றுசேர சுபம். கதை என்கிற விசயத்தைப் பற்றி கவலையே படாது கொண்டாட்டத்தை நம்பிக் களம் இறங்கி இருக்குறார் இயக்குனர்.



என்றாலும் மூன்றாம் காலனிய ஆதிக்கச் சிந்தனைகளுக்கு எதிரான உதிரிகளின் நடவடிக்கைகளைப் பதிவு செய்வதோடு சில பல புனித பிம்பங்களை உடைத்தெறிவதோடு நம்பப்பட்ட உண்மைகளையும் சொல்லப்பட்ட நியாயங்களையும் விமர்சனத்துக்கு உள்ளாக்குவதாலும் குடி உடல்நலத்துக்குக் கேடு என்கிற வரிகளைச் சேர்த்துக் கொண்டு படம் முழுவதும் குடியைப் பிரதானப்படுத்தி இந்திய சென்சார் விதிகளை எள்ளி நகையாடுவதோடு எல்லாவற்றையும் பகடி செய்யும் நோக்குடன் மையத்தைச் சிதறடிக்கும் பின்நவீனத்துவப் போக்குகள் படம் முழுவதும் நிரம்பி வழிகின்றன என்கிற வகையிலும் ஒரு கல் ஒரு கண்ணாடி மிக முக்கியமான படமாக மாறுகிறது.

தமிழ் சினிமாவின் நாயகன் என்கிற கற்பிக்கப்பட்ட உண்மையின் பேருருவை ஒன்றுமில்லாததாக கலைத்துப் போட்டு உடன் வரும் நண்பனை முன்னிறுத்திப் புதியதொரு சகாப்தம் படைக்கிறார்கள். எதிலும் நிலையில்லாதவனாக யாராலும் நம்ப முடியாதவனாக நாயகனுடைய பாத்திரம் இருப்பது பின்காலனிய காலகட்டத்தின் மறுக்கவியலாக் கூறுகளைப் பிரதிபலிக்கிறது. இத்தனை காலம் உடற்பயிற்சி நடனத்தின் பிரதிநிதியாக தான் ஒருவன் மட்டுமே இருக்கிறோம் என்கிற கே.பாக்கியராஜின் இறுமாப்பையும் அவருடைய சர்வாதிகாரத்தையும் உதயநிதி ஸ்டாலின் என்கிற அஸ்திரத்தைக் கொண்டு வீழ்த்தி இருக்கிறார் இயக்குனர். காதல் சோகம் பாசம் கோபம் என எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான முகம் கொண்டு நிற்பதன் மூலமாக புதுவிதமான நடிப்பு முறையையும் செய்து பார்த்திருக்கிறார்கள் எனும்போது இயக்குனரின் பரீட்சார்த்த ஆர்வங்களை நம்மால் வியக்காமல் இருக்க முடிவதில்லை. மோந்து பார்த்தாலே மட்டையாயிடுவாண்டா என்கிற வாய்மொழி வழக்காடலை முதன்முறையாக காட்சிப்படுத்திக் காட்டி இருக்கும் இயக்குனரின் தைரியம் அசாத்தியமானதும் கூட.

பிரதிக்கு உள்ளேயே பிரதியைப் பற்றிய விமர்சனங்களை முன்வைப்பது பின்நவீனத்துவத்தின் மற்றொரு முக்கியமான போக்கு. நாயகன், நாயகியாக நடித்திருக்கும் ஹன்சிகா மோத்வானியைப் பார்க்கும் முதல் தடவையிலேயே, பித்துப் பிடித்தவன் ஆகிறான். ஆனால் நாயகியைப் பெண் பார்க்க வரும் மற்றொரு பாத்திரத்தின் மூலமாக நீ சிரிச்சா கேவலமா இருக்கு நீ போட்டிருக்க டிரஸ் பச்சக் கலரு சிங்குச்சா ஆக மொத்தம் நீ ஆண்ட்டி மாதிரி இருக்க என்று நேரடியான விமர்சனங்களை முன்வைக்கிறார் அல்லது தன் மனதில் இருக்கும் உண்மைகளை வெளிப்படுத்தவும் செய்கிறார் இயக்குனர். ஆக ஒரு வகையில் இவ்வளவுதான் உன் தேர்வா என்று இந்த இடத்தில் நாயகனைப் பார்த்து எள்ளி நகையாடுகிறார்.

சந்தானத்தின் பாத்திரம் இந்தப்படத்தின் உச்சபட்சக் கொண்டாட்டம். தமிழ் சினிமாவின் நண்பனை நேரடியாகப் பகடி செய்கிறதன் மூலம் இதுநாள் வரை சொல்லப்பட்ட நண்பர்களின் நியாயங்களைக் கேள்விக்கு உள்ளாக்கும் பாத்திரம். தனது காதலியை அனுப்பி நண்பனின் காதலைக் கூறுபோடும் நண்பனின் குரூரத்தை இதுவரைக்கும் யாரும் தமிழில் சொன்னதில்லை என்றே சொல்லலாம். இறுதிக்காட்சியில் ஹன்சிகா திருமணத்தில் உதயநிதி ஆங்கிலத்தில் பொளந்துகட்ட அதை சந்தானம் மொழிபெயர்ப்பதும் பிரசங்கிப்பதும் வாழ்க்கை என்பதும் இது மாதிரியான எழுப்புதல் கூட்டங்களுக்கு ஒப்பானதுதான் எனச் சொல்லும் மிகக் கூர்மையான அங்கதம். ஆனாலும் படம் முழுதும் சந்தானம் தெலுங்கு நடிகர் பிரம்மானந்தத்தைப் பிரதி செய்ய முர்பட்டிருக்கிறார் என்பதைச் சின்னதொரு வருத்தத்தோடு இங்கு பதிவு செய்வது அவசியமாகிறது.

எப்போதும் தனது இசையை தானே மீண்டும் நகல் எடுக்கும் புனித இசைப்போராளி ஹாரிஸ் இந்தப் படத்திலும் தனது திருப்பணியை தெளிவாகச் செய்திருக்கிறார். கண்களை மூடிக் கொண்டு பின்னணி இசையைக் கேட்டால் அப்படியே கஜினியில் இருந்து உருவியது தெளிவாகப் புரியும். அதே போல மொத்தத் தியேட்டரையும் நடனமாட வைக்கும் - அத்தனை பாதிக்கப்பட்டவர்கள் இங்கே இருக்கிறார்கள் - வேணாம் மச்சான் வேணாம் பாடலை ஒரு படி மேலே போய் தேவா வடிவேலும் இணையின் வாடி பொட்டப்புள்ள வெளியே பாடலில் இருந்து உருவியதின் மூலம் மாறி வரும் காலப்போக்குக்குத் தகுந்தாற்போல தானும் மறக்கூடியவன் என்பதை அழகாகப் பதிவு செய்கிறார் ஹாரிஸ்.

அப்படியானால் இந்தப்படத்தின் ஆகப்பெரிய பிரச்சினை தான் என்ன? இயக்குனரின் மனம் ஆண்வயப்பட்டதாக இருக்கிறது. அது நாயகனின் எல்லா செயல்களையும் நியாயப்படுத்துகிறது. அவன் எத்தனை மோசமானவனாக வெட்டியான ஆளாக இருந்தாலும் பரவாயில்லை எந்த மறுதலிப்பும் இன்றி அவனை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனப் பெண்ணை நிர்ப்பந்திக்கிறது. அழகான பெண்கள் மட்டுமே சாலையில் நடமாட வேண்டும் என்பதிலும் புற அழகே காதலை முடிவு செய்கிறது என்பதிலும் நாயகியைக் கட்டாயப்படுத்தி அவள் அன்பைப் பெற்றாலும் ஆணைப் பொறுத்தவரை எதுவும் சரிதான் என்பதிலும் தென்படுவதுஆண் என்னும் அகங்காரத்தின் உச்சம். இருபது வருடம் பேசாமல் இருந்த தன் கணவன் ஒற்றை வார்த்தை பேசியவுடன் இத்தனை வருடம் ஆதரவாக இருந்த பையனை நாயகனின் அம்மா வைவதும் கூட இயக்குனரின் ஆணாதிக்க மனத்தின் வெளிப்பாடே. இத்தனைச் சிக்கல்களை முன்வைத்து பார்க்கும்போது..

ஏய் ஏய் நிறுத்து.. எதுக்கு இவ்ளோ மெனக்கெடுற? படம் நல்லா இருக்கா இல்லையா? சூப்பரா இருக்கு தலைவா. ஜாலியா போய் கொண்டாடிட்டு ஜாலியா வரலாம். அவ்ளோதான. அப்புறம் எதுக்கு இப்படி ஜல்லியடிக்குற. போ.. போய் பொழப்பப் பாரு. அட.. இப்பப் பார்த்தீங்கன்னா.. விமர்சனத்துக்கு நடுவுல நீங்களும் எழுதுறவரும் பேசிக்கிறீங்க பாருங்க. இது கூட பின்நவீனத்துவக் கூறுதான். அதாவது.. கீழைத்தேய மரபுல என்ன சொல்றாங்கன்னா.. டேய்.. அடிவாங்காம ஓடிப் போயிரு, இத்தோட முடிச்சுக்குவோம்.

ஒரு கல் ஒரு கண்ணாடி - கொண்டாட்டம்

19 comments:

நாடோடி இலக்கியன் said...

கா பா பின்னிட்டீங்க. படத்தை பற்றி விடுங்க.உங்க எழுத்து யோவ் நிஜமாவே ஆச்சர்யமா இருக்குய்யா, நிறைய பொறாமையாவும்.

சூப்பர்...சூப்பர்...

புதுகை.அப்துல்லா said...

நிஜமாலுமே சூப்பர்ர்ர்ர்... நான் உங்க விமர்சனத்தைச் சொன்னேன் :)

நையாண்டி நைனா said...

மீ பாவம்..

டமில் பாவம்...

அல்லாத்துக்கும் மேலே படிக்குறவன் ரொம்ப பாவம்...

Ravichandran Somu said...

கலக்கல் :)))

அன்பேசிவம் said...

மாப்ளே! சூப்பரப்பூ....:-)

Muthu Pandi said...

Super... Interesting writing style..........Congrats.. & Continue

Unknown said...

//இத்தனை காலம் உடற்பயிற்சி நடனத்தின் பிரதிநிதியாக தான் ஒருவன் மட்டுமே இருக்கிறோம் என்கிற கே.பாக்கியராஜின் இறுமாப்பையும் அவருடைய சர்வாதிகாரத்தையும் உதயநிதி ஸ்டாலின் என்கிற அஸ்திரத்தைக் கொண்டு வீழ்த்தி இருக்கிறார் இயக்குனர்.//

ரசித்தேன், கா.பா :)))

ஆமா, இன்னோரு அஸ்திரமும் இருக்குன்னு ஒரு காலேஜில பேசிக்குறாங்க :)))

King Viswa said...

அண்ணே, பல இடங்களில் விழுந்து விழுந்து சிரித்தேன் (கட்டில் மேலேதான்).

இதனோட லிங்க்'ஐ இயக்குனருக்கும் ஹீரோவுக்கும் அனுப்பனும்.

சூப்பர் நடை. ஜாலியான விமர்சனம்.

லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் பற்றி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் சிறப்பு பேட்டி

அகல்விளக்கு said...

செம ரைட்டிங் அண்ணா...

butterfly Surya said...

கலக்கல் நடை. சூப்பர் கா.பா

அத்திரி said...

வாத்தீ....................................

Balakumar Vijayaraman said...

ஐ!!! கார்த்தி எழுதிட்டாப்லேல... இனி அநாமதேய எழுத்தாளர் இந்த படத்துக்கு விமர்சனம் எழுத முடியாதுல்ல... :)

sethu said...

sir really superb review,,,,

Philosophy Prabhakaran said...

யப்பா யப்பா யப்பா யப்பா யப்பா... யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா....

selventhiran said...

Am jealous on u!

kashyapan said...

பேராசிரியர் அவர்களே! நவீனத்துவம்,பின்நவீனத்துவம் என்று சொல்லி பாவம் ராஜேஷை குழப்பாதீர்கள்.கதையே இல்லை என்று தயாரிப்பாளர்,நடிகர் கூறிவிட்டார். செலவுக்கணக்கு என்ன வென்று தெரியுமா? எல்லாம் பாலாகிவிட்டது அது பொதும் ஐயா! ---காஸ்யபன்

க ரா said...

மாப்ள :)

Romeoboy said...

:))))

வெற்றியாள் வேந்தன் said...

இத்தனை காலம் உடற்பயிற்சி நடனத்தின் பிரதிநிதியாக தான் ஒருவன் மட்டுமே இருக்கிறோம் என்கிற கே.பாக்கியராஜின் இறுமாப்பையும் அவருடைய சர்வாதிகாரத்தையும் உதயநிதி ஸ்டாலின் என்கிற அஸ்திரத்தைக் கொண்டு வீழ்த்தி இருக்கிறார் இயக்குனர்.

yaaruppa athu.. enakkum kathukkoduppaa DANCE.