June 15, 2012

உதிரிப்பூக்கள் - 13

விவரம் தெரிந்து சினிமா பார்க்க ஆரம்பித்த காலத்தில் நான் ரஜினி ரசிகனாயிருந்தேன். காலம் காலமாய் நிலவி வரும் தமிழ் சினிமாவின் இரண்டு முன்னணி நடிகர்களின் பின்னால் அணிவகுத்து நிற்க வேண்டிய அடிப்படைக் கலாச்சாரப்படி எம் ஜி ஆர் - சிவாஜி என்கிற வரிசையில் ரஜினியா கமலா என வந்தபோது ரஜினி ரசிகனாக இருப்பதே எனக்குப் பெருமையாகவும் வசதியாகவும் இருந்தது. ஏன் என்றால் ரஜினி படத்தை வீட்டில் அனைவரோடும் உட்கார்ந்து பார்க்கலாம். சிரிப்பு சண்டை என்று ஜாலியாகப் போகும். ஆனால் கமல் படமோ பாதிக்கு மேல் புரியாது. அத்தோடு அவர் கதாநாயகிகளைக் கண்டபடி கட்டிப்பிடிப்பார் முத்தம் குடுப்பார் என்பதால் குடும்பத்தோடு பார்க்கவும் முடியாது.

அடுத்ததாக
சினிமாவைத் தாண்டி பொது வாழ்விலும் ரஜினி ரொம்ப நல்லவர். எல்லோருக்கும் உதவி செய்பவர். வெளிப்படையான மனிதர். மொத்தத்தில் ரஜினி அப்படியே எம் ஜி ஆர் மாதிரி. கமலோ இதற்கு நேர் எதிர். இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டு கல்யாணம் செய்தவர். யாருக்கும் உதவ மாட்டார். நடிப்பிலும் வாழ்விலும் சிவாஜி மாதிரியே. இப்படியாகக் காதில் விழும் செய்திகள் எல்லாமே ரஜினிக்கு ஆதரவாகவே இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக ரஜினி படம் ன்றாகவே இல்லை என்றாலும் நூறு நாட்கள் ஓடும். கமல் படம் எவ்வளவு நன்றாக இருந்தாலும் ஓடித் தொலையாது. மாமாங்கத்திற்கு ஒரு படம் கமலுக்கு ஓடினால் அதுவே ஆச்சரியம். ஓடும் குதிரையின் மீதுதானே உலகம் பணம் கட்டும் என்கிற நிலையில் ஊருக்குள் பத்து பேர் இருந்தால் அதில் எட்டு பேர் ரஜினி ரசிகராக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லையே?

உறுப்பினராகச் சேர்ந்தால் ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் ஓசி டிக்கெட் கிடைக்கும் என யாரோ சொன்னதை நம்பி நான் போய் இணைந்து கொண்ட சுப்பிரமணியபுரம் ஸ்டைல் கிங் ரஜினிகாந்த் மன்றத்தின் அருகிலேயே சகலகலா வல்லவன் கமல்ஹாசன் நற்பணி மன்றமும் இருந்தது. கடைசிவரைக்கும் எனக்கு ஒரு டிக்கெட் கூட காசு கொடுக்காமல் கிடைக்கவில்லை என்பது வேறு விசயம். ஆனால் தினமும் ஜாலியாகப் பொழுது போக மன்றம் பெரிதும் உதவியது.

மன்ற உறுப்பினர்கள் வீட்டில் விசேசங்கள் நடக்கையில் பேர் போட்டு போஸ்டர் அடிக்க, தெருத்தெருவாய்ப் போய் ஒட்ட, மைக் அன்வுன்ஸ் பண்ண, பள்ளிக்கூடம் திறக்கையில் மாணவர்களுக்கு நல உதவித் திட்டங்கள் என்று ஏதாவது ஒன்று நடந்தபடி இருக்கும். அப்படி எந்த வேலையும் இல்லாத, பொழுது போகாத நேரங்களில், எதிர்ப்பக்கம் போய் கமல் ரசிகர்களை வம்பிழுப்பதென்பது நமது நண்பர்கள் செட்டுக்கு மிகவும் பிடித்தமான விசயங்களில் ஒன்று. எங்கள் ஆள் நடிப்பு அப்படி இப்படி என்றெல்லாம் முரண்டினாலும் கடைசியில் எத்தனை படம் ஓடியது எனும் ஒரே கேள்வியில் எதிர்த்தரப்பு மொத்தமாக ஆஃப் ஆகி விடுவார்கள். ஏதேதோ சொல்லிப் பார்த்து ஒன்றும் முடியாமல் போக அவர்கள் பயன்படுத்தும் கடைசி அஸ்திரம் போங்கடா மெண்டல் ரசிகய்ங்களா என்பதாக இருக்கும். இதற்காகத்தான் காத்திருந்தோம் என்பதுபோல நாங்கள் அவர்கள் மேல் தாவ அதுவரைக்கும் வாய் வார்த்தையாக இருந்தது கைகலப்பாக மாறி யாருடைய மண்டையாவது உடைவதில் போய் முடியும்.

91 தீபாவளி என்று நினைவு. ரஜினியின் தளபதியும் கமலின் குணாவும் நேருக்கு நேர் மோதின. தினமலரோடு மண்டையில் கொண்டை போட்ட சாமுராய் ரஜினி போஸ்டரை இலவசமாகத் தந்தார்கள். அந்தப் போஸ்டரை வாங்கவே அடிதடி ஊருக்குள் தூள் பறந்தது. முதல்முறையாக மணிரத்னத்தோடு ரஜினி இணையும் படம் என்று ரசிகர்களிடையே ஏக அலப்பறை. அந்தப்பக்கம் தலையில் மஞ்சள் துண்டை கட்டிக்கொண்டு பப்பரப்பா என்று கைகளை நீட்டியபடி லட்டு வாங்க நிற்கும் கமல் போஸ்டர் வெளியாக கமல் ரசிகர்கள் மொத்தமாக மண்டை காய்ந்தார்கள்.

படங்கள் வெளியான முதல் நாளே நிலவரம் தெரிந்து போனது. ரஜினி படமாக இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு குன்சாக இருந்தது தளபதி. தேவாஆஆஆ சூர்யாஆஆஆ என்று ஒரே உற்சாக வெள்ளம் தியேட்டர்களில். ரஜினி சாவது கிளைமாக்ஸ் என்றிலிருந்து மாறி மம்முட்டி சாக ரஜினி ரசிகர்கள் அனைவருக்கும் ஏக சந்தோசம். கண்டிப்பாக படம் ஓடிவிடும் எனத் தெரிந்து விட்டது. ஆனால் குணா பார்த்த பாதி பேர் அபிராமி அபிராமி என்று அய்யோ பாவமாக கலங்கிப்போய் வெளியே ஓடிவர உற்சாகம் பிய்த்துக் கொண்டது எங்களுக்கு.

நமது படம் நன்றாக இருப்பதைக் காட்டிலும் எதிராளியின் படம் ஊத்திக் கொள்வது என்பது அளவில்லா சந்தோசம்தான் இல்லையா? இன்றைக்கு அதே குணாவை மீண்டும் மீண்டும் தேடிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பது வேறு விசயம். ஆனால் குணாவின் தோல்வி ஒரு ரஜினி ரசிகனாக அன்றைக்கு ரொம்பக் கொண்டாட்டமாக இருந்தது. என் நினைவுக்கு ரஜினியும் கமலும் நேரடியாக திரையில் மோதியதில் அதுதான் கடைசி. அதன் பின்பாக இருவருமே படங்கள் நடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டதும் ஒரே நாளில் அவர்களுடைய படங்கள் வெளியாவதும் இல்லாமல் போனபின் இந்த ரசிகர்கள் சண்டை வெகுவாகக் குறைந்து போனது.

ரஜினி இரண்டு வருடங்களுக்கு ஒரு படம், கமல் பல பரிசோதனை முயற்சிகள் எனத் தடம் மாறியதால் இவர்கள் வரிசையில் அடுத்தது யார் என்பதே அப்போதைக்கு என்னைப்போன்ற சாதாரண ரசிகனின் கேள்வியாய் இருந்தது.

நாளைய தீர்ப்பு வெளியானபோது குரங்கு என்றும் தகரடப்பா முகம் என்றும் பத்திரிக்கைகளால் நேரடியாகக் கேலி செய்யப்பட்ட விஜய் தமிழின் அடுத்த பெரிய நடிகராக வருவார் என யாராவது அன்று சொல்லியிருந்தால் நிற்காமல் சிரித்திருப்பேன். பெரிய இயக்குனரின் மகன் ஆசைக்கு ஒரு படம் நடிக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அவருடைய இரண்டாவது படமான ரசிகன் வெளியானது. மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றி. பம்பாய் குட்டி சுக்கா ரொட்டி ஒத்தப்பாட்டுக்காக அந்தக் கருமாந்திரம் பிடிச்ச படத்தை நாலஞ்சு தடவை தியேட்டர்ல பார்த்தேண்டா தம்பி என என் அப்பா அடிக்கடி பெருமையாக சொல்வார்.

அடுத்தடுத்து வெளியான விஜய் படங்களின் ஃபார்முலா ரொம்ப எளிமையானது. பேருக்கு ஒரு கதை. நாலு சண்டை கொஞ்சம் காமெடி. ஆனால் பட்டாசான ஒரு கதாநாயகியும் கண்டிப்பாக ஒரு மழைப்பாட்டும் இருக்கும். கூடவே ஒரு கவர்ச்சி நடிகையின் குத்தாட்டப்பாடலும். சுவாதி, சங்கவி, யுவராணி என்று பலரை அறிமுகம் செய்து தங்கத்தமிழ் ரசிகனின் மனதினை எஸ் ஏ சி குளிரச் செய்தார். வயதுக்கு வந்து பிட்டுப்படங்கள் பார்க்க ஆரம்பித்திருந்த காலகட்டம் என்பதால் நானும் மிக எளிதாக விஜய் படங்களை நோக்கி ஈர்க்கப்பட்டேன்.

ஆனால் பூவே உனக்காக வெளியாகி விஜய்க்கு வேறொரு பாதை அமைத்துக் கொடுத்தது. காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய் எல்லாம் வெளியாகி மெகா ஹிட்டாக விஜய் எங்கேயோ போய் விட்டார். படங்கள் ஓடுவது போக தானும் ஒரு ரஜினி ரசிகர் என்று கிடைக்கும் கேப்பில் எல்லாம் விஜய் அடித்து விட்டது எனக்கு இன்னும் வசதியாகிப் போனது. ரஜினி வழியில் அடுத்து நமக்குப் பிடித்தது விஜய்தான் என்று தீர்மானம் ஆனது.

ஜித்துக்கு அப்போது பத்திரிக்கைகள் வைத்திருந்த பெயர் வாய்க்கொழுப்பு நடிகர். ஏடாகூடமாக பேட்டி கொடுப்பது அவருடைய ஸ்பெசாலிட்டி. பாசமலர்கள், ராஜாவின் பார்வையிலே என்று சின்ன சின்ன கச்சடா ரோல்களில் நடித்துக் கொண்டிருந்தவரை முதலில் அடையாளம் காட்டியது ஆசையின் வெற்றி. அதன் பின்பு ஹீரா மற்றும் சுவாதியின் காதல், திமிர்த்தனமான பேட்டிகள் என்று ஆரம்ப கட்டங்களில் அஜித்தை எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. ராசி என்றொரு படம். தானைத்தலைவி ரம்பாவுக்காகப் போய்ப் பார்த்தது. அஜித் வரும் காட்சிகளில் பெரும்பாலும் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தேன்.

தொடர்ச்சியாக படங்கள் ஊத்திக் கொண்டிருந்த நேரத்தில்தான் எதிர்பாராமல் காதல் கோட்டை வெளியாகி சக்கைபோடு போட்டது. படத்துக்கு தேசிய விருதும் கிடைக்க அஜித்துக்கென ஒரு அடையாளம் உருவாகத் தொடங்கியது. அதில் தொடங்கி உன்னைத்தேடி, வாலி எனத் தொடர்ச்சியாக ஆறேழு படங்கள் ஹிட். அடுத்தாக அஜித்துக்கு நேர்ந்த நல்ல விசயம் ஷாலினி. அமர்க்களம் படத்தில் நடிக்கையில் இருவரும் காதல் வயப்பட அஜித் பொறுமையான மனிதனாக மாறத் தொடங்கினார். அதுவரைக்கும் மோசமானவராகப் பார்த்து வந்த மனிதனை சினிமா உலகம் சட்டென்று அற்புதமான மனிதர் என்று கொண்டாடத் தொடங்கியது. வாய்ப்புக் கேட்டு வரும் புதிய இயக்குனர்கள் எல்லாம் அஜித்தை கடவுள் ரேஞ்சுக்குப் புகழ அவரும் மேல்நோக்கி நகர ஆரம்பித்தார். தன்னை விஜய்க்குப் போட்டியாளானாக அஜித் அறிவித்துக் கொண்டதும் இந்த காலகட்டத்தில்தான் நேர்ந்தது.

சத்தமே இல்லாமல் உள்ளே வந்த இரண்டு நடிகர்கள் சட்டென்று வளர்ந்து நாங்கள்தான் அடுத்த தலைமுறை போட்டியாளர்கள் என உருவாகி நின்றிருந்தார்கள். போட்டியில் நான் விஜயின் பக்கமிருந்தேன். அதே நேரத்தில் வாலி, கார் ரேஸ், ஷாலினியுடனான அமைதியான வாழ்க்கை என்று அஜித்தின் மீது சின்னதொரு சாஃப்ட் கார்னரும் உருவாகத் தொடங்கி இருந்தது.

நிலாவே வா ரிலீஸ். சோலைமலை தியேட்டரில் காலை எட்டு மணிக்கெல்லாம் ரசிகர்கள் குவிந்து விட்டோம். அந்தத் தியேட்டரில் ஒரு நல்ல விசயம் - சைக்கிள் டோக்கனுக்கு டிக்கெட் தருவார்கள். முண்டியடித்து முன்னால் போய் வரிசையில் நின்றால் மதியம் மூணு மணி வரைக்கும் பொட்டி வரவில்லை. வந்து படம் போட்டபின்பு ஏண்டா பொட்டி வந்தது என்றாகி விட்டது. நாலு கிமீ கடலுக்குள் போன விஜயை சிலுவ என்று கத்தி சுவலட்சுமி கூப்பிட்டுக்கொண்டிருந்தபோது நாங்கள் நாற்பது கிமீ வேகத்தில் தியேட்டரை விட்டு ஓடிக் கொண்டிருந்தோம். அங்கே ஆரம்பித்தது சனியன்.

காதல்னா என்னன்னு தெரியுமா என வாயசைக்காமல் ஒவ்வொரு படத்திலும் விஜய் வசனம் பேசித்தள்ள எனக்கு வாயில் நுரை தள்ள ஆரம்பித்தது. நெஞ்சினிலே, நேருக்கு நேர், என்றென்றும் காதல் என வரிசையாகப் படங்கள். வருவியா வருவியா தியேட்டருக்கு வருவியா என்று கண்ணில் பட்டவர்களை எல்லாம் இழுத்து வைத்து அறைந்து கொண்டிருந்தார் மனுசன். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல வந்தது கண்ணுக்குள் நிலவு. படம் பார்த்த அத்தனை பேரும் பைத்தியம் பிடித்து வெளியே வந்தோம். ஆணியே பிடுங்க வேண்டாம் என மண்டை காய்ந்து சுத்திக் கொண்டிருந்தபோது தான் அஜித்துக்கு முகவரி வெளியானது.

நான் இதுவரைக்கும் பார்த்த படங்களில் மிகப்பிடித்தவை எனச் சொன்னால் அதில் கண்டிப்பாக முகவரிக்கும் இடமிருக்கும். ரொம்பவே இயல்பான கதை. வாழ்வில் வெற்றி பெறத் துடிக்கும் ஒரு இளம் கலைஞனின் வலியை அச்சு அசலாகப் பிரதிபலித்து இருந்தார் அஜித். அந்தப் படத்தோடு நான் கட்சி மாறிவிட்டேன். அதன் பிறகு வெளியான தீனா அஜித்தை ”தல” ஆக்கியது. சிட்டிசன், ரெட் என்று ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் வித்தியாசம் இருந்ததே அஜித்தை ஆதரிக்க எனக்குப் போதுமானதாக இருந்தது.

ஆக்சிடண்ட் ஆகியும் சிரமப்பட்டு நடிக்கிறார், தனிப்பட்ட முறையில் நேர்மையானவர், மனதில் பட்டதை தயங்காமல் பேசுபவர், ரசிகர்களை தன் சுயலாபத்துக்குப் பயன்படுத்தாதவர் என்றெல்லாம் பத்திரிக்கைகள் தலைக்கு மேல் தூக்கிப்பிடிக்க அஜித் இப்போது எனக்கு மிகவும் நெருக்கமானவராகவும் அதே நேரத்தில் அரசியலுக்காக தன் ரசிகர்களைத் தயார் செய்து வந்த விஜய் பிடிக்காதவராகவும் மாறி இருந்தார். வேறு எந்த நடிகரின் படபூஜைகளுக்கும் வராத ரஜினி அஜித் பட பூஜைகளுக்கு வந்தது தன்னுடைய வாரிசு அவர்தானென சொல்வதாகவே நாங்கள் எடுத்துக் கொண்டோம்.

ஜித் படங்களை பார்த்து ரசிப்பதைக் காட்டிலும் முதல் நாளே விஜய் படங்களைப் பார்த்துக் கிண்டலடிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. புறாவுக்கு பெல் அடிக்கிறாண்டா என்று ஆரம்பித்து உண்மைக் காதல்னா சொல்லு ****க்கூடத் தர்றேன் என்று சகட்டுமேனிக்கு ஓட்டினால் உடன் இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு பொறி பறக்கும். படம் வெளியாகும் முதல் நாள் கூட்டமாகப் போய் விஜய் ரசிகர்களோடு ஒரண்ட இழுப்பது ஒரு சுகமான அனுபவம்.

மதுர படம் ரிலீசான நேரம். முதல் நாள் இரவுக் காட்சி. உடுமலைப்பேட்டையில் நண்பர்களோடு படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வாய் பேச முடியாத பெண் ஒருத்தியை விஜய் பேச வைக்கும் காட்சி. என்னால் சிரிப்பை அடக்கமுடியாமல் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தேன். உடன் இருந்த நண்பர்களில் ஒருவன் தீவிர விஜய் ரசிகன். அதான் படம் பிடிக்கல்லீல்ல அப்புறம் என்ன டாஷுக்கு மொத நாளே பார்த்துட்டு வயிறெறியணும் என்று காய்ந்து தள்ளி விட்டான். எனக்கு சுருக்கென்று ஆகி விட்டது. ஆமாம்தானே? பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு ஏன் முதல் நாளே பார்க்க வேண்டும்? இடைவேளையோடு வெளியேறினேன். அதுதான் நான் கடைசியாக விஜய் படம் பார்த்தது. பெருந்துறையில் இருந்து மதுரை வரும் வழியில் பஸ்ஸில் சிவகாசி போட்டான் என்று டிக்கெட் எடுத்திருந்தும் பாதி வழியிலேயே இறங்கிக் கொள்ளும் அளவுக்கு இன்றைக்கும் கொள்கைப் பிடிப்போடு இருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஜித் விஜய் போட்டியில் மிகவும் சுவாரசியமான விசயம் ரசிகர்கள் பட வெளியீட்டன்று ஒட்டும் போஸ்டர்கள்தான். கடவுளைப் பார்த்தது எவண்டா தலயை ஜெயிச்சது எவண்டா இளைய தலைவலியே உனக்கு நாங்கதான் எமன்டா என்பது ஒருபக்கம் இருக்கும். தளபதி தான் வெயிட்டு தறு”தல” எல்லாம் வேஸ்ட்டு என இன்னொரு பக்கம் களைகட்டும். இவர்கள் என்ன போஸ்டர் ஒட்டுகிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காகவே படம் வெளியாகும் தினத்தில் வண்டியை எடுத்துக்கொண்டு ரவுண்ட்ஸ் போய்வருவோம். நமது நேரம் நன்றாக இருந்தால் தியேட்டரிலேயே அடிதடிகள் நடப்பதைப் பார்க்கும் அதிர்ஷ்டமும் கிடைக்கும். படம் நன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ரசிகர்களின் அக்கப்போரு பார்க்கப் பார்க்க சலிக்காது. ஆகமொத்தம் படம் வெளியாகும் நாளில் நமக்கு நன்றாகப் பொழுதுபோகும். சமீபமாக இரண்டு நடிகர்களும் ஒன்றாக சேர்ந்து போஸ் கொடுப்பது, நண்பர்கள் என்று பேட்டி கொடுப்பது என்றிருந்தாலும் ரசிகர்களுக்கு நடுவே இருக்கும் பகை தீரும் என எனக்குத் தோன்றவில்லை. நடிகர்களிடையே போட்டி இருக்கலாம் பொறாமை இருக்கக்கூடாது என்று மைண்ட் வாய்ஸ் கேட்டாலும் அதை எல்லாம் பார்த்தால் தொழில் பண்ண முடியுமா பாஸ்?

சரி இவர்களோடு இந்தக் கச்சாயத்து எல்லாம் முடிந்துவிடும் என்று நினைத்தால்... சில நாட்களுக்கு முன்பு வாலு டீசர் வெளியானது. சிம்புவைப் பார்த்து ஹன்சிகா சொல்கிறார். ஒரு சில பசங்களப் பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும். உன்னமாதிரிப் பசங்கள பார்த்தவுடனே பிடிச்சிரும். சுத்தம்.

யில்வே காலனியில் ”ரஜினி” ராமனாதன் என்றால் எல்லோருக்கும் தெரியும். ரசிகர் என்பதைக் காட்டிலும் வெறியர் என்று சொல்லலாம். எங்களுக்கு சீனியர் செட். எனக்குப் பதினைந்து வயது மூத்தவர். எல்லா மன்ற வேலைகளிலும் முதல் ஆளாக நிற்பவர். தலைவர் மட்டும் அரசியலுக்கு வரட்டும் அப்புறம் நம்ம ராஜ்ஜியம்தான் என்று எந்நேரமும் பினாத்திக் கொண்டிருந்த மனிதர். இளம் வயதில் வேஇலைக்குப் போனதைக் காட்டிலும் மன்ற வேலைகளுக்காக அவர் அலைந்தது அதிகம். போனவாரம் அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். பழைய விசயங்களை எல்லாம் தன்னை மறந்து பேசிக் கொண்டிருந்தார். கோச்சடையான் வரட்டும் பட்டையக் கிளப்பிருவோம் தம்பி எனச் சொல்லும்போது அவருக்கு அத்தனை சந்தோசம்.

கடைசி வரைக்கும் தலைவர் அரசியலுக்கு வரலைன்னு உங்களுக்கு வருத்தமே இல்லையாண்ணே

அது கெடக்கு தம்பி. அவர் வரலைன்னாலும் எத்தனை பேருக்கு நல்லது செய்றாரு. போதாதா

அப்படி இல்லைண்ணே.. சரி விடுங்க.

அப்போதுதான் கவனித்தேன். அவர் உடம்பில் அங்கங்கே காயங்கள்.

என்னண்ணே இது.. ஒரே காயமா இருக்கு..

அதுவா தம்பி.. நம்ம தலைவருக்கு உடம்பு சரியில்லாமப் போச்சுல.. சிங்கப்பூர் போனாரே.. அவர் கொரல அப்பக் கேட்டீங்களா தம்பி.. எனக்கு சாகலாம் போல இருந்துச்சு.. அந்த மனுசன் நல்லபடியாத் திரும்பி வரணும்ல.. அதான் திருப்பரங்குன்றதுக்கு அலகு குத்தி காவடி எடுத்தேன். எப்படி.. நம்ம பிரார்த்தனைதான். ஆள் ஜம்முன்னு துள்ளிக் குதிச்சு வந்தார் பார்த்தீங்களா

எனக்கு என்னமோ செய்தது. கண்கள் கொஞ்சம் ஈரமாகி இருந்தன. திரையில் நடிப்பவர்கள் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் திரைக்கு முன்னிருப்பவர்கள் நடிப்பதில்லை என்பது மட்டும் தெரிகிறது. அவ்வளவுதான்.

11 comments:

கிருஷ்ணா வ வெ said...

என்ன நண்பரே,திருமணம் சிறப்பாக முடிந்ததா?

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றி தலைவரே.. திருமணம் நல்லபடியா நடந்து முடிஞ்சது..:-))

கிருஷ்ணா வ வெ said...

எதார்த்தமான பதிவு.

நீங்கள் அடைந்த அதே குழப்பம் என்னக்கும் இருந்தது.
எனது நண்பர்களுக்கு நான் நன்றி சொல்லவேண்டும்,
நான் அஜித் ரசிகர் என அடையாளம் காட்டியது அவர்கள் தான்.

இதோ பில்லா 2 படத்திற்கு ரெடி ஆகிவிட்டோம்.

Unknown said...

கலக்கல்..

கோவை நேரம் said...

அருமை....விஜய்..அஜித்...பற்றின பார்வை...

நிழல்மொழி said...

உண்மையிலேயே கமல் தனது ரசிகர்களை ஒழுங்குபடுத்திய முதல் நடிகர்.தனது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாக மாற்றியதும் அதன் மூலமாக உண்மையிலேயே மக்களுக்குப் பயன் படும் உதவிகள் செய்ததும் கமல் தான்.ரத்த தானத்தை ஊக்குவித்திருக்கிறார்.உடல் தானத்தை முதன்முதலில் உலகறிய செய்திருக்கிறார்.கண்தானத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார்.எல்லாவற்றுக்கும் மேலாக கமல் சப்தமின்றி எத்தனை பேருக்கு உதவியிருக்கிறார் என்பது தனிக்கதை.அடுத்ததாக,கமல்ஹாசன் தொடர்ந்து வருமான வரியை மிச்சம் இன்றிக் கட்டிவருகிறவர்.அதற்காக தொடர்ந்து வருமான வரித்துறையால் பாராட்டப் பட்டவர்.வருமான வரி உள்ளிட்ட மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விளம்பரங்களில் இலவசமாக நடித்துக் கொடுப்பவர் கமல்.அவர் நினைத்திருந்தால் வணிக ரீதியிலான விளம்பரங்களில் நடித்து கல்லாகட்டி இருக்க முடியும்.ஆனால் அதை அவர் சற்றும் முனையாதவர்.கமல் தன் சம்பாத்தியத்தின் பெரும் பகுதியை திரைப்படங்களிலேயே முதலீடாக்கி வென்றும் தோற்றும் வாழ்ந்து வருகிறார்.மொத்தத்தில் கார்த்திகைப் பாண்டியன் கமல் பற்றி எழுதி இருக்கக் கூடிய அனைத்து வரிகளையும் வார்த்தைகளையும் நிராகரிக்கிறேன்.கமல் நம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே ஒரு பெருமை.மேலும் அவர் ஒரு உதாரண நாயகனும் கூட.

கார்த்திகைப் பாண்டியன் said...

அன்பின் பாரதி சார்,

நான் கமலைப் பற்றிச் சொல்லும்போது எழுதி இருக்கும் வார்த்தைகள் இவை.

//இப்படியாகக் காதில் விழும் செய்திகள் எல்லாமே ரஜினிக்கு ஆதரவாகவே இருக்கும்.//

சிறுவயதில் நான் கேள்விப்பட்ட, வளர்ந்த சூழலை பதிவு செய்திருக்கிறேனே ஒழிய இவை மட்டுமே உண்மை என்கிற ரீதியில் நான் எதையும் எழுதி விடவில்லை என்பதைத் தயவு செய்து கவனியுங்கள். இந்த மொத்தத்தொடருமே என் இளமைக்காலம் சார்ந்த நாஸ்டால்ஜியா பதிவுகளே. அப்போது இருந்த சூழலையும், சிறுவயது நம்பிக்கைகளையும் தான் எழுதி இருக்கிறேன். ஒரு சாதாரண ரசிக மனோபாவத்தில் எனக்கு அப்போதிருந்த, நான் கேட்டறிந்த விஷயங்கள் அன்றி இவை வேறெதுவுமில்லை. யாரையும் புண்படுத்துவும் நான் இதை எழுதுவுமில்லை. புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். நன்றி...

தமிழ்வாசி பிரகாஷ் said...

பெருந்துறையில் இருந்து மதுரை வரும் வழியில் பஸ்ஸில் சிவகாசி போட்டான் என்று டிக்கெட் எடுத்திருந்தும் பாதி வழியிலேயே இறங்கிக் கொள்ளும் அளவுக்கு இன்றைக்கும் கொள்கைப் பிடிப்போடு இருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்./////

இனிமே இப்படி பாதியிலே இறங்கிராதிங்க..... கூட உங்க துணையும் இருப்பாங்கல்ல

subha said...
This comment has been removed by the author.
subha said...

அருமையான எழுத்து நடை சார்...
ரசிகர்களாக இருப்பதில் தவறில்லை...வெறியர்களாக இருப்பதுதான் தவறு...
உன் தலைவர் பெரிதா , என் தலைவர் பெரிதா என வீண் சண்டை இடாமல் இருப்பதே நம் வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது...
இது என்னுடைய தாழ்மையான கருத்து...தவறிருந்தால் மன்னிக்கவும்...

சித்திரவீதிக்காரன் said...

சிலரை பார்த்தா பிடிக்கும், சிலரைப் பார்த்தவுடனே பிடிக்கும். ஆனால், பவர்ஸ்டாரை எல்லோருக்கும் பிடிக்கும்.
- பவர்ஸ்டார் பாசறை