February 5, 2010

அசல் - திரைப்பார்வை..!!!


ஏகனின் ஏமாற்றத்துக்குப் பின் வரும் "தல"யின் 49 ஆவது படம். சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு. அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்தை டைட்டிலில் போடவில்லை. அசலில் முதல் முறையாக அஜித் திரைக்குப் பின்னே படத்துக்காக பங்களிப்பு செய்து இருக்கிறார். கதை, திரைக்கதை வசனத்தில் உதவி என்றும் இணை இயக்கம் என்றும் போடுகிறார்கள்.

நினைத்ததை முடிக்கும் ஒரு சூப்பர் ஹீரோவின் கதைதான். நியாயமான ஆயுத விற்பனையாளர் அப்பா அஜித். அவருடைய மூத்த தாரத்து மகன்கள் சம்பத் மற்றும் ராஜீவ் கிருஷ்ணா. அவர்களின் மாமா பிரதீப் ராவத். இளைய தாரத்தின் மகனான இன்னொரு அஜித் மீதுதான் அப்பாவுக்கு பாசம். அப்பா இறந்த பிறகு தவறான வழியில் பணம் சேர்க்க நினைக்கும் சகோதரர்களை அஜித் காப்பாற்ற முயல, அவர்களோ அஜித்தையே கொல்ல நினைக்கிறார்கள். ஏன் அவர்கள் அப்படி செய்தார்கள், கடைசியில் என்ன ஆனது என்பதுதான் "அசல்".

திரைக்கு முன்
****************

அஜித் - தனக்கு நன்றாக வருவதை மட்டும் செய்வதை தலயிடம் ரசிக்கலாம்.. இரட்டை வேடம்.. இருந்தாலும் அப்பாவுக்கு வேற யாரையாவது போட்டிருக்கலாம்.. இன்னும் பில்லாவில் இருந்து வெளியே வரவில்லை... நடிக்கிறார்.. பிறகு நன்றாக நடக்கிறார்.. சுருட்டு எதுக்கு என்றுதான் தெரியவில்லை.. பஞ்ச் டயலாக் எதுவும் பேசாதது ஆறுதல்..



கெல்லி டோர்ஜி - ஸ்மார்ட்டான வில்லன்.. பாதியிலேயே அவுட்..

சம்பத் - கெரகம்.. சுத்த வேஸ்ட்..

ராஜீவ் கிருஷ்ணா - சைக்கோ மாதிரி .. இது தேவையா?

பிரதீப் ராவத் - இவர் படத்துல எதுக்கு இருக்காருன்னு அவருக்கே தெரியாது போல..

சுரேஷ் - வில்லன்களில் ஒரே ஆறுதல்.. கொஞ்சம் சீரியஸ்.... நிறையவே காமெடி.. அதிலும் கடைசி சீனில் திருந்துவது மிகப்பெரிய காமெடி..

பிரபு - படத்துல இருக்காரா?

யூகி சேது - லூசு டான்... படத்தோட காமெடி பீசு..

பாவனா - கொள்ளை அழகு.. பாலிஷ் போட்ட மாதிரி சும்மா சூப்பரா இருக்கார்.. சீராக இல்லாத பல்வரிசையோடு சிரிக்கும் ஓரச் சிரிப்பில் பாண்டியன் காலி...

சமீரா - கொஞ்சம் வயசான குதிரை.. ரெண்டு பாட்டுல டான்ஸ் ஆடுறதுக்கு மட்டுமே..



திரைக்குப் பின்
*****************

பிரசாந்த் டி மிசேல் - ஒளிப்பதிவாளர் - ஜமாய்த்து இருக்கிறார்.. டைட்டில் போடும்போது வான்வழியே பாரிஸ் நகரை சுட்டிருக்கும் அழகு மனதை கொள்ளை கொள்ளுகிறது.. வெளிநாடுகளை படமாக்கி இருக்கும் விதம் அருமை.. படத்தின் ரிச் லுக்குக்கு மிக முக்கிய காரணம் இவர்தான்.. ரொம்பவே நன்றாக செய்திருக்கிறார்..

ஆண்டனி - எடிட்டிங் - மொத்தப் படமும் ரெண்டே மணி நேரம்தான்.. முதல் பாதி கொஞ்சம் இழுவை.. இரண்டாம் பாதி ஓகே..

பரத்வாஜ் - இசை - ஐம்பதாவது படமாம்.. கிடைத்த வாய்ப்பை தவற விட்டுருக்கிறார்.. நிறைய காப்பி.. டோட்டடாயிங் பாட்டைத் தவிர எதுவும் தேறவில்லை.. பின்னணியில் பான்ட் இசையை போட்டுக் கொலையாய்க் கொல்லுகிறார்..

கதை - யூகி சேது - வில்லனில் செதுக்கியவர் இதில் சறுக்கி இருக்கிறார்.. நிறையவே பார்த்து சலித்துப் போன கதை.. வெளிநாட்டில் நடக்கும லோக்கல் வாரிசுப் பிரச்சினை - புதிதாக ஒன்றுமே இல்லை..

சரண் - திரைக்கதை, இயக்கம் - ஏன் சரண்? டான் கதை.. அதுக்கு ஸ்டைலான முலாம் போட்டால் போதுமா? திரைக்கதையில் வேகம் வேண்டாமா? அஜித் என்ற மாஸ் நடிகர் இருந்தால் என்ன வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று எண்ணியதன் விளைவா? சின்ன சின்ன ரசனையான விஷயங்கள் வழக்கமாக உங்கள் படங்களில் இருக்கும்.. இதில் அப்படி எதுவுமே இல்லையே? நிறையவே ஏமாற்றம்..

படத்தில் ரசித்த விஷயங்கள்
********************************


--> அஜித்தின் வெகு சாதரணமான இன்ட்ரோ.. ஸ்டைல்

--> பாவனா தன்னுடைய அப்பாவின் புத்தகத்தை அடிக்கடி திறந்து பார்க்கும் அழகு

--> அஜீத்துக்காக பாவனாவும் சமீராவும் உரசிக் கொள்ளும் காட்சி..

--> சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கும் விதம்..

--> உடை அலங்காரம்..

எரிச்சல்கள்
*************

--> சம்பத் மற்றும் பிரதீப் ராவத்..

--> அடிக்கடி எல்லோரும் தல தல என்றே புலம்பிக் கொண்டிருப்பது..

--> திரைக்கதை.. மெது மெதுவாக நகரும் காட்சிகள்..

நான் அஜித் ரசிகன்தான். அதற்காக என்ன மாதிரி படம் எடுத்தாலும் சூப்பர் என்று சொல்லக் கூடியவன் கிடையாது. நல்ல படமாகத் தருவார் என்று நம்பும் என்னைப் போன்ற அஜித்தின் தீவிர ரசிகர்களுக்கு படம் கொஞ்சம் ஏமாற்றம்தான். ரொம்ப எதிர்பார்க்காமல் போனால் ஒரு சராசரி படம் பார்த்த திருப்தி கிடைக்கும்.

அச(த்த)ல் கம்மிதான்

இனிதே நடந்த பதிவர் பயிலரங்கம்..!!!!

மதுரை அமெரிக்கன் கல்லூரி செமினார் ஹாலில் கடந்த வெள்ளியன்று (29/01/2010) மாணவர்களுக்கான பதிவர் பயிலரங்கு சிறப்பாக நடந்தது. பதிவரும், அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் பேராசிரியருமான தருமி ஐயா தலைமையில் நடைபெற்ற பயிலரங்கில் பதிவுலக நண்பர்கள் பலரும் கலந்து கொண்டோம்.

நிகழ்வின் சில துளிகள், நினைவிலிருந்து...

நண்பரும் தலைமை ஆசிரியருமான ஜெரி ஈஷானந்தா, ஈழத்திற்காக உயிராயுதம் ஏந்திய முத்துக்குமார் பற்றி நினைவு கூர்ந்தார். இந்த நிகழ்வு தான், தான் பதிவு எழுத முக்கிய காரணமாக இருந்ததையும் நெகிழ்வுடன் குறிப்பிட்டார். தனது கல்லூரி பருவத்தில் இருந்த வாசிக்கும் ஆர்வம், இப்போது வலைப்பதிவுகள் படிப்பது மூலம், வெகுவாக அதிகரித்திருப்பதாக சொன்னார். மாணவர்கள் பொதுநல நோக்கோடு சமுதாயத்தை அணுக பதிவுகள் முதற்படியாக அமையலாம் என்றார்.

அவர் குறிப்பிட்ட தடுப்புமுகாம் கவிதைகளிலிருந்து சில வரிகள்...

புதைகுழி மறந்த
சதைபிண்டங்களிநூடே
ஊர்ந்து ...நெளியுது
மானுடம்.

வலைச்சரம் சீனா ஐயா குழுப்பதிவுகள் பற்றிக் கூறினார். ஒத்த கருத்துடைய நண்பர்கள் பொதுவான தளத்தில் புகுந்து விளையாட முடியும் என்றும், உதாரணமாக, வருத்தபடாத வாலிபர் சங்கம், பயமறியா பாவைகள் சங்கம், வலைச்சரம், பேரண்ட்ஸ் க்ளப் இன்னும் பல குழுப்பதிவுகள் பற்றியும், அவற்றை உருவாக்குவது பற்றியும், நண்பர்களை உறுப்பினர்களாக இணைப்பது பற்றியும் சில தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வழங்கினார்.

ஐயா பதிவுலகை கலக்கும் "எதிர் கவிதைகள்" பற்றி சொல்லிக் கொண்டிருக்க, கணினியை இயக்கிக் கொண்டிருந்த கார்த்திகைப் பாண்டியன், ஒரு கவிதையையும், அதற்கான எதிர்கவிதையையும் திரையில் காட்ட, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சீனா ஐயாவை இரு கவிதைகளையும் மைக்கில் வாசிக்குமாறு பணிக்க, அவர் கவிதைகளை வாசிக்க, ஐயோ கவிதையா, கலவரம் எதும் வெடிக்கப் போகுதோ என் நான் நினைக்கும் போதே.... நல்ல வேளை, மாணவர்கள் சிரித்துக் கொண்டே கவுஜைகளை கடந்து விட்டனர்.

நண்பர் ஸ்ரீ புதிதாக வலைப்பதிவு ஆரம்பிப்பது எப்படி என செயல்முறை விளக்கங்களுடன் செய்து காட்டினார். ஜிமெயில் ஐ.டி. உருவாக்குவதிலிருந்து, ப்ளாகருக்குள் நுழைவது, கெஜ்செட் சேர்ப்பது, இன்னும் பல தொழில்நுட்ப விஷயங்களை எளிமையாக விளக்கினார். மாணவர்கள் கவனித்தார்களா தெரியவில்லை, கலந்து கொண்ட ஆசிரியர்கள் எல்லாம் ரொம்ப ஆர்வமா குறிப்பு எடுத்துட்டு இருந்தாங்க. அமெரிக்கன் கல்லூரி, விஷ்வல் கம்யூனிகேசன்(தமிழில் என்ன?) துறைக்காக http://viscom-ac.blogspot.com/ என்ற வலைப்பூவும் துவங்கப்பட்டது.

நண்பர் கார்த்திகைப் பாண்டியன் நிகழ்ச்சி முழுமைக்கும் தேவையான, பொருத்தமான ஸ்லைடுகளை கணினியில் இயக்கினார். மேலும் பதிவுலகில் இலக்கியம், நட்பு (தனிதனியா தான், ரெண்டும் சேராதுன்னு பெரியவங்க சொல்லிக்கிறாங்க) பற்றி பேசினார். இலக்கிய மும்மூர்த்திகள் (என்று யாரோ மூன்று பேர் பெயர்கள் சொனார், எனக்கு மனதில் பதியவில்லை) பதிவுலகில் சுறுசுறுப்பாக எழுதுவதாக பேசினார். பதிவுலகில் நீங்கள் காட்டும் உழைப்பு (அதாவது, எழுதுவதில் காட்டும் உழைப்பு) உங்களுக்கு நன்மதிப்பையும், நல்லவேலையும் கூட பெற்றுத்தரும் என்றும் சொன்னார். எழுத்து என்பதையும் தாண்டி பதிவுலகம் மூலம் நடைபெறும் ஆக்கப்பூர்வமான நிகழ்வுகள் பற்றி அருமையாக பேசினார்.

வெறும் ஒத்த கருத்துடைய நன்பர்களுக்குள் நடக்கும் அரட்டை மட்டுமல்ல, இந்த நட்பு மூலமாக சமுதாயத்தில் ஒரு சிறு மாற்றமாவது கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை மாணவர்களுக்கு எளிமையாக விளக்கினார். இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் சொல்லித் தெரிய வைக்க முடியாது, உள்ளிருந்து தான் வர வேண்டுமென்றாலும் ஏற்கனவே ஆர்வமுள்ளவர்களுக்கு கார்த்தியின் பேச்சு ஒரு தூண்டுகோலாக இருந்திருக்கும். முக்கியமாக ஒரு வாத்தியார்த்தனம் இல்லாமல், நண்பர்களிடம் பேசுவது போலவே இயல்பாகவே பேசினார்.

பாலகுமார், என்னென்ன வகையில் பதிவுகள் இருக்கின்றன் என்றும், என்னென்ன வகையிலும் பதிவுகள் இருக்கலாம் என்றும், பதிவில் என்னென்ன செய்யலாம் என்றும், பதிவில் என்னென்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றும், யாராரெல்லாம் பதிவு எழுதுகிறார்கள் என்றும், யாரார் வேண்டுமானாலும் பதிவு எழுதலாம் என்றும் எளிமையாக (????) சொல்லிவிட்டு அமர்ந்தார்.

நிகழ்ச்சியை துவக்கி வைத்து, தருமி ஐயா பதிவுலகம் பற்றி விரிவான விளக்கமும், துவக்கவுரையும் (பவர் பாயிண்ட் ப்ரசண்டேசன் வாயிலாக) தந்ததாக நண்பர்கள் சொன்னார்கள். வேறு ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு தாமதமாக வந்ததால், நான் அவரின் உரையைத் தவற விட்டு விட்டேன்.

இறுதியாக, காட்சி ஊடகத்துறையின் தலைவர், பேரசிரியர் ப்ரபாகர் பேசும் போது, பதிவுலகம் மிகச்சிறந்த மாற்று ஊடகமாக இருக்கும் என்றும், வந்தவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.

மொத்தத்தில் நிறைவான நிகழ்ச்சியாக இருந்தது. இன்னும் நேரம் கிடைத்திருந்தால், நண்பர்கள் வலைப்பூக்களை திறந்து வைத்து, மாண்வர்களிடம் ஒரு திறனாய்வு நடத்தியிருக்கலாம், மாணவர்களும் (ஊடகத்துறை சார்ந்தவர்கள் என்பதாலோ, இல்லை ரொம்ப பீட்டர் இல்லாமல் நிகழ்ச்சி எளிமையாக சென்றதாலோ) மிகவும் ஆர்வமாகவே கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் பங்கெடுக்க வாய்ப்பளித்த தருமி ஐயாவிற்கு நன்றிகள்.

புகைப்படங்களைப் பார்க்க இங்கே கிளிக்குங்கள்..

இந்த இடுகை நண்பர் பாலகுமார் எழுதியது.. என்னுடைய தளத்தில் அதனை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்ததற்கு அவருக்கு என் நன்றிகள்...

February 3, 2010

கனவு நிஜமானது - டாக்டர் ஷாலினிக்கு நன்றி..!!!

சந்தோஷமாக இருக்கிறேன் என்னும் ஒற்றை வார்த்தையின் மூலம் என்னுடைய உள்ளத்தின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த இயலாது. அத்தனை சந்தோஷமாக உணர்கிறேன். மதுரையில் "குழந்தைகள் மனநலம்" பற்றிய கருத்தரங்கத்தை டாக்டர்.ஷாலினியின் தலைமையில் நடத்த வேண்டும் என்பது மதுரைப் பதிவர்கள் வெகு நாட்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்த விஷயம். அதை ஒரு கனவு என்று கூட சொல்லலாம். சென்ற ஞாயிற்றுக்கிழமை அந்தக் கனவு நிஜமானது.



செப்டம்பரின் ஒரு அருமையான மாலைப்பொழுதில் இந்த நிகழ்ச்சிக்கான விதை தூவப்பட்டது. சமூகத்துக்கு நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று மதுரை பதிவுலக நண்பர்கள் ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், ஜெர்மனியில் இருந்து நண்பர் குமார் எங்களைத் தொடர்பு கொண்டார். சென்னையில் நடைபெற்ற "குட் டச் பேட் டச்" நிகழ்ச்சியை மதுரையில் நடத்தலாம் என முடிவானது. ஆனால் டாக்டர்.ஷாலினியின் தேதிகள் கிடைப்பது சிக்கலாகிப் போனது. முதல் முறையாக நாம் நடத்தலாம் என முடிவு செய்த விஷயம் என்பதால் அதை மாற்றவும் மனம் வரவில்லை. நல்லதே நினைப்போம், நல்லது நடக்கும்" என்னும் நம்பிக்கையோடு பொறுமை காத்தோம். எங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. கடைசியாக ஜனவரி31 அன்று நிகழ்ச்சியை நடத்துவதென முடிவானது.

31-01-10 - 7:00 AM

"பொதிகையில்" டாக்டர்.ஷாலினி வந்து இறங்கினார். தருமி ஐயாவும், நண்பர் ஸ்ரீதரும் அவரை வரவேற்று அமெரிக்கன் கல்லூரிக்கு அழைத்து சென்றனர். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நான் புகைவண்டி நிலையத்துக்குப் போக இயலவில்லை. கருத்தரங்கம் நடத்துவதற்காக செமினார் ஹாலைத் தந்து உதவிய அமெரிக்கன் கல்லூரி நிர்வாகமே டாக்டர் தங்குவதற்காக விருந்தினர் விடுதியையும் ஏற்பாடு செய்து தந்து இருந்தது. சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு காலை சிற்றுண்டிக்கு எல்லோரும் சந்திப்பது என முடிவானது.



9:00 AM

நான் அமெரிக்கன் கல்லூரியை அடைந்தபோது தருமி ஐயா ஏற்கனவே வந்திருந்தார். டாக்டரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். போனில் அவரின் குரலைக் கேட்டு கொஞ்சம் டரியலாகிப் போயிருந்தேன். ஆள் கொஞ்சம் கெத்து காமிப்பார் போல என்று எண்ணியிருந்தேன். ஆனால் நேரில் என்னுடைய கணிப்புக்கு அப்படியே எதிர்ப்பதமாக இருந்தார் ஷாலினி. ரொம்பவே சாப்ட் டைப் - எளிமை. கலகலப்பாக பேசினார். கொஞ்ச நேரத்தில் ஸ்ரீதரும் வந்து சேர்ந்தார். மீனாட்சி பவனில் காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டு திருமலை மன்னரின் அரண்மனைக்கு கிளம்பினோம். அங்கே எடுத்த சில போட்டோக்கள்..






11:00 AM

டாக்டரை மீண்டும் விடுதியில் தங்க வைத்து விட்டு கல்லூரிக்கு திரும்பினோம். கல்லூரி வாசலில் கட்ட வேண்டிய பிளக்சை பிரகஸ்பதி வழக்கம் போல வீட்டில் மறந்து வைத்து விட்டு வந்திருந்தது. (வேற யாரு.. நானேதான்..) அவசர அவசரமாக வீட்டுக்குப் போய் எடுத்துக் கொண்டு கிளம்பும்போது நண்பர் ஜாபர் ஈரோட்டில் இருந்து வந்து விட்டதாக அலைபேசினார். அவரை கூப்பிட்டுக் கொண்டு கல்லூரிக்கு வந்து சேர்ந்தபோது நண்பர் வால்பையனும் வந்து விட்டிருந்தார்.

2:00 PM

மதிய உணவுக்கு அண்ணா நகர் தாய் ரெஸ்டாரண்டுக்குப் போனோம். எங்களுக்குள் பேசுவதற்கான விஷயங்கள் நிறையவே இருந்தன. ஷாலினி இப்பொது சமண மதம் பற்றி ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறாராம். அதைப்பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சி நடக்கும் ஹாலில் ஓரளவுக்கு மக்கள் கூட்டம் வந்த பிறகு டாக்டரை அழைத்து வரலாம் என முடிவு செய்தோம். சாப்பிட்டுமுடித்து அவரை விடுதியில் விட்டுவிட்டு செமினார் ஹாலுக்கு கிளம்பினோம்.

3:00 PM

அதை அதிர்ச்சி என்று சொல்லுவதா இல்லை பேரதிர்ச்சி என்று சொல்லுவதா? ஹாலில் மொத்தம் மூன்றே பேர்தான் இருந்தார்கள். சீனா ஐயா, ஜெரி மற்றும் அமெரிக்கன் கல்லூரியை சேர்ந்த நண்பரொருவர். எனக்கு பேச்சே வரவில்லை. என்ன செய்வதென்றும் தெரியவில்லை. கிட்டத்தட்ட நூறு பேர் வருவார்கள் என்றெண்ணிக் கொண்டிருந்த நிலையில் வெறும் மூன்று பேர் மட்டும் இருந்தால் மண்டை காயுமா காயாதா? நானும் நம்பர் ஜாபரும் நிறைய பதட்டத்துடன் கல்லூரி வாசலில் வந்து நின்று கொண்டிருந்தோம். வருவோர் போவோர் முகத்தை எல்லாம் பார்த்து இவர்கள் நம் நிகழ்ச்சிக்கு வந்தவர்களாக இருப்பர்களோ என்று அடித்துக் கொண்டது மனது. சற்று நேரம் கழித்து ஒன்றிரண்டு பேர் என ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் வரத் துவங்கியபின்தான் நிம்மதி ஆனது.

3:30 PM

அரங்கத்தில் ஐம்பது பேர் கிட்டே இருந்த நிலையில் நிகழ்ச்சி ஆரம்பமானது. சீனா ஐயா நிகழ்ச்சியை ஆரம்பித்து வைக்க, கா.பா.. அட நான்தானப்பா.. வரவேற்புரை வழங்கினார். குழந்தைகள் மனநலம், பெண்களின் அடிப்படை உடற்கூறுகள், குட் டச் பேட் டச் எனப் பல விஷயங்களை பற்றி எளிமையாக விளக்கினார் ஷாலினி. தவறுகளை செய்பவர்களை விட இடம்கொடுப்பவர்கள் அதிகமாக இருப்பதாலேயே பிரச்சினைகள் ஜாஸ்தி ஏற்படுகின்றன என்றவர் பல எடுத்துக்காட்டுகளையும் கூறினார். குழந்தைகளுக்கு உடல் உறுப்புகளைப் பற்றி சொல்லிக் கொடுக்கும்போது ஜனன உறுப்புகளைப் பற்றியும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசி முடித்தார். அவர் முடிக்கும்போது அரங்கம் பார்வையாளர்களால் நிரம்பி விட்டிருந்தது.




5:00 PM

ஒரு சிறிய தேநீர் இடைவேளைக்குப் பிறகு கேள்வி நேரம் தொடங்கியது. நேரில் கேட்க சங்கோஜமாக இருக்கக்கூடிய கேள்விகளை மக்கள் எழுதித் தந்தார்கள். அதை நண்பர் காவேரிகணேஷ் வாசிக்க டாக்டர் பதில் சொல்லத் தொடங்கினார். இங்கே ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். ஷாலினி நல்லதொரு மனநல மருத்துவர் என்பதோடு மட்டுமல்லாது இதிகாசங்களையும் கரைத்துக் குடித்தவராக இருக்கிறார். தனக்கு தேவையான இடங்களில் அருமையான உதாரணங்களோடு அவர் இதிகாசக் கதைகளை சொன்ன விதம் ரொம்பவே அருமை.




குழந்தைகள் மனநலம் மட்டும் என்றிராமல் நிறைய பொதுவான கேள்விகளும் கேட்கப்பட்டன. அனைத்துக்கும் டாக்டர் சலிக்காமல் பதில் சொன்னார். இந்தக் கேள்வி பதில் நேரமே சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது. அதன் பின்னர் ஆண்கள் எல்லாம் ஹாலை விட்டு வெளியேறி விட, பெண்கள் மட்டும் டாக்டருடன் தனிப்பட்ட முறையில் ஒரு அரை மணி நேரம் உரையாடினார்கள். மொத்தத்தில் நிகழ்ச்சி இனிதே நடந்து முடிந்தபோது மணிஏழரையைத் தாண்டி விட்டிருந்தது.




நாலு மணி நேரம். ஒரு சின்ன சலிப்பு கூட இல்லாமல் நிகழ்ச்சியை நடத்தினார் ஷாலினி. அருமையாக இருந்தது. நிகழ்ச்சியின் முடிவில் வால்பையனும், காரைக்குடியில் இருந்து வந்திருந்த நண்பர் "தமிழ்த்துளி" தேவன்மாயமும் டாக்டர்.ஷாலினிக்கு ஒரு நினைவுப் பரிசினை அளித்தார்கள். தருமி ஐயா நன்றியுரை ஆற்றினார். பதிவர்கள் அனைவரும் டாக்டருடன் போட்டோ எடுத்துக் கொண்டோம். இன்னும் சில புகைப்படங்கள் உங்களுக்காக..







இரவு உணவை முடித்துக் கொண்டு புகைவண்டி நிலையத்துக்கு வந்து சேர்ந்தோம். டாக்டருக்காக "பாண்டியனில்" டிக்கட் புக் செய்யப்பட்டு இருந்தது. திருநெல்வேலி லக்ஷ்மி விலாசின் ஸ்பெஷல் இனிப்புகளை டாக்டருக்கு வாங்கிக் கொடுத்து வழியனுப்பி வைத்தோம். அவர் கிளம்பிய பின்பு தருமி ஐயா சொன்ன வார்த்தைகள் ... "நல்லாத் தெரிஞ்ச நண்பர் ஒருத்தரோடப் பழகுன மாதிரியே இருந்தது.. போகுரப்ப மனசுக்கு சங்கடமாப் போச்சு..இல்ல?" சத்தியமான வார்த்தைகள். It was an wonderful experience. Thanks a lot Dr.Shalini.

நன்றிகள் பல..

நன்றி என்று சொல்லி உங்களை எல்லாம் அந்நியப்படுத்த விரும்பவில்லை.. இருந்தாலும்..

கடைசி நேர அவசரத்தில் டிக்கட் எடுக்கவும், அதை கன்பார்ம் செய்து கொடுக்கவும் பேருதவி செய்த அண்ணன் "வானம்பாடிகள்" பாலாவுக்கு ரொம்ப நன்றி.

பதிவுகளின் மூலம் இந்த நிகழ்ச்சி இன்னும் பலர் சென்றடைய உதவிய கேபிள் சங்கர், ராஜூ, ஈரோடு கதிர், நர்சிம், ஈரோடு பதிவர் குழுமம் ஆகியோருக்கு மதுரைப் பதிவர்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களுக்காக சிரமம் பார்க்காமல் வந்த நண்பர் வெயிலானுக்கும் நன்றி.

நாங்களும் எங்கள் பங்களிப்பை செய்வோம் என்று உதவிய நண்பர்கள் ஆ.ஞானசேகரனுக்கும், வால்பையனுக்கும், ராஜாவுக்கும், அமெரிக்கன் கல்லூரியை சேர்ந்த ரவிக்கும் நன்றி.

நிகழ்வை நல்ல முறையில் நடத்த தோள்கொடுத்த அமெரிக்கன் கல்லூரிக்கும் நன்றி.

இறுதியாக, கலந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும்.. நீங்கள் இல்லை என்றால் இது சாத்தியம் ஆகி இருக்காது. ரொம்ப நன்றி.

மதுரைப் பதிவர்கள்

இந்த நிகழ்ச்சியின் மூலம் புதிதாக சில மதுரைப் பதிவர்களின் அறிமுகமும் கிடைத்தது.

மதுரை சரவணன்

வெற்றி

காவேரிகணேஷ்

எம்.பிரபு

ஸ்ரீவித்யா

அன்போடு வழிநடத்தும் தருமி ஐயா மற்றும் சீனா ஐயா, தோள் கொடுக்கும் தோழர்கள் பாலகுமார், ஜெரி, ஸ்ரீதர், ஜாலிஜம்பர், சுந்தர்... அருமையான பதிவுலக நட்புகள்... நாமும் நம்மால் இயன்றதை செய்ய முடிகிறதே என்று சந்தோசம்... போதும்.

நாங்கள் ஏற்கனவே சொன்னது போல இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும் என்றே நம்புகிறோம்..!!!

தொடர்புடைய நண்பர்களின் இடுகைகள்

மருத்துவர் ஷாலினி மதுரை கருத்தரங்கம் - தொகுப்பு - புகைப்படங்கள் (காவேரிகணேஷ்)

மதுரை கருத்தரங்கம் - ஒரு அரைகுறைப் பார்வை
(வெற்றி)

டாக்டர் ஷாலினி (தேவன்மாயம்)

February 1, 2010

தமிழ்ப்படம் - ஒரு டுபாங்கோ பார்வை...!!!

எனக்கே நல்லாத் தெரியும்.. நா ரொம்ப லேட்டா வண்டில ஏறுறேன்னு... படம் ரிலீஸ் ஆகி மூணு நாள் ஆச்சு.. எல்லா பதிவரும் கைவலிக்க கால்வலிக்க படத்த பத்தி எழுதியாச்சு.. ஆனா என்ன பண்ண? தமிழ்ப்படம் பத்தி எழுதாத காரணத்துல பதிவுலகத்துல இருக்கற ஆரும் என்னோட அன்னந்தண்ணி பொழங்கக் கூடாது.. அதாவது பதிவ வாசிக்கக் கூடாது, கமென்ட் போடக் கூடாதுன்னு நாட்டாம தீர்ப்பு சொல்லிட்டா... ? கடமைன்னு வந்துட்டா கட் அண்ட் ரைட்டா சும்மா கன் மாதிரி இருப்போம்ல.. அதனால.. கெட் செட்.. ரெடி..கோ...



***************

செந்தில் : அண்ணே.. தமிழ்ப்படம் பார்த்துட்டீங்களா அண்ணே?

கவுண்டமணி : ஏண்டா டபரா தலையா.. என்னப் பார்த்தா கிண்டலா இருக்கா? தமிழ்நாட்டுல இருந்துக்கிட்டு தமிழ்ப்படம் பார்க்காம நான் என்ன ஹிந்தி படமும் இங்கிலிபீசு படமா பார்க்கப் போறேன்? அப்படியே பார்த்தாலும் அந்தக் கெரகம் எனக்கு என்ன புரியவா போகுது? ஓங்கி எத்தினேன்னு வையி.. நாலு நாளைக்கு எந்திரிக்க மாட்ட...

செந்தில் : ஐயோ அண்ணே.. நான் அந்த அர்த்தத்துல கேக்கல அண்ணே.. புதுசா ஒரு படம் வந்திருக்குல .. இந்த மிர்ச்சி சிவா நடிச்சது.. தமிழ்ப்படம்.. அதப் பத்திக் கேட்டேன்..

கவுண்டமணி :அப்படித் தெளிவா சொல்லுடா அண்டா வாயா.. பார்த்துட்டேன்.. இப்போ என்ன அதுக்கு?

செந்தில் : அந்தப் படத்தோட கத என்ன அண்ணே?

கவுண்டமணி : அப்படிக் கேளுடா.. இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்னு சொல்றது.. தமிழ்ப்படத்தோட கத என்னன்னா.. கிராமத்துல பொறந்த ஹீரோ எப்படி சிட்டிக்கு வந்து ஒரு அகில ஒலக சூப்பர் ஸ்டாரா.. அதாவது என்ன மாதிரி.. அநியாயத்த தட்டிக் கேக்குற வைஸ் கேப்டனா.. எதிரிகளைக் களை எடுக்குற அண்டர்வேர் ஆபிசரா.. ச்சே.... அண்டர்கவர் ஆபிசரா ஆகுறார்.. அப்படிங்கறதுதான்.. நடுவுல காதல்.. தொலஞ்சு போன குடும்பத்தோட பாட்டுப் பாடி ஒண்ணு சேருறது.. மூஞ்சே காட்டாத வில்லன்னு பல பிட்டுகள ஒண்ணாப் போட்டுக் குலுக்கினா.. சுடச்சுட "தமிழ்ப்படம்" ரெடி..

செந்தில் : ஐயயையையையோ...

கவுண்டமணி : டேய்.. முண்டா முழியா.. என்னடா ஆச்சு?

செந்தில் : பயப்புடாதீங்க அண்ணே.. கதையைக் கேக்குறப்பவே அப்படியே சிலிர்க்குதுன்னே..

கவுண்டமணி : பார்த்துடா.. ரொம்ப சிலிர்த்து கடைசில உன்னைய வேற ஏதாவது ஆஸ்பத்திரில கொண்டு போய் விட்டுர பாருங்க.. எதுக்கும் நீ கொஞ்சம் எட்டத் தள்ளியே இரு நாயே.. அப்புறம் உன்னோட சேர்த்து என்னையும் தூக்கிட்டுப் போகிடப் போறாய்ங்க..





***************

விஜய் : ஏம்ப்பா? படத்துல இந்த சிவாவோட நடிப்பு எப்படி இருக்கு?

அஜித் : என்னது.. தமிழ்ப்படத்துல நடிச்சு இருக்குறது சிவாவா? நீங்க இல்லையா? ஹி ஹி ஹி.. நான் என்னமோ நீங்கதான் கெட்டப் மாத்தி நடிச்சு இருக்கீங்கன்னு நினச்சேன்.. ஏன்னா கதை கிட்டத்தட்ட உங்க படத்தோடது மாதிரி இருந்தது...

விஜய் : ஆனாலும் ஒனக்கு ரொம்ப ஓவருதான்.. சரி சரி.. சிவாவப் பத்தி சொல்லு..

அஜித் : என்னத்தச் சொல்றது.. உண்மையில பயமா இருக்கு.. நீ நான்லாம் சும்மா.. அலட்டிக்காம நடிச்சு இருக்காப்புடி.. அவர் பேசுறத வேற ஒரு மார்க்கமா இருக்கு.. காதலன் பிரபுதேவா மாதிரி ஒரு டான்ஸ் ஆடுறாரு பாரு.. நீயெல்லாம் இனிமேல் டான்ஸ் பத்தி பேசவே கூடாது..ஓமகசியா பாட்டுல உணர்ச்சி வேகத்துல கொடுக்குற எக்ஸ்பிரஷன்ஸ் பார்த்து நானே மெரண்டு போய் கிடக்கேன்.. ஹே.. இனிமேல் நான் பேச மாட்டேன்.. ஒரு ஹிட் கொடுத்துட்டுத்தான் பேசுவேன்..

விஜய் : நாசமாப் போச்சு.. அப்போ நீ எப்போ பேசுறது.. நாங்க எப்போ கேக்குறது?





(கவுண்டமணி - செந்தில் மற்றும் அஜித் - விஜய் என்று இருப்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் / வேண்டாம் என்று வாசகர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)

***************

போதும். இத்தோட நிறுத்திக்குவோம். படத்த பத்தி இனி நாமளே பேசுவோம்.

கடந்த முப்பது வருடங்களாக எந்தெந்த விஷயங்களை எல்லாம் நம் தமிழ் சினிமாவில் கொண்டாடி வந்திருக்கிறோமோ, அதை எல்லாம் நார் நாராய் கிழித்து கசக்கிப் பிழிந்து காயப் போட்டிருக்கிறார்கள். மற்ற படங்களை அவ்வப்போது சின்ன சின்ன கேலியும் கிண்டலும் செய்வதென்பது நம் தமிழ் சினிமாவில் அடிக்கடி காணக் கிடைப்பதுதான். உ.ம்: சத்யராஜின் மகாநடிகன், இங்கிலிஷ்காரன், வெங்கட்பிரபுவின் சரோஜா, விவேக்கின் காமெடி காட்சிகள். ஆனால் ஹாட்ஷாட்ஸ் போல ஒரு முழுநீள ஸ்பூப் படம் தமிழில் வந்தது கிடையாது என்ற குறையை நிவர்த்தி செய்கிறது "தமிழ்ப்படம்".

**************

என்னைப் பொறுத்தவரை இவர்கள்தான் படத்தின் உண்மையான நாயகர்கள்..

துரை தயாநிதி - இதுவரை தேவையில்லாத பிரச்சினைகளுக்காக மட்டுமே ஊடகங்களில் அடிபட்டு வந்த பெயர். முதல் முறையாக அவரைப்பற்றி நல்ல விதமாக பேச வைத்திருக்கிறது "தமிழ்ப்படம்". எனக்கு என்னமோ உதயநிதி ஸ்டாலினை விட தயாநிதிக்கு சினிமா ரசனை அதிகம் என்றே தோன்றுகிறது. "குருவி,ஆதவன்" என்று பெரிய ஸ்டார்களின் பின்னாடி ஓடிப்போய் முன்னவர் கும்மாங்குத்து வாங்கிக் கொண்டிருக்க, இவரோ சத்தமே இல்லாமல் "தமிழ்ப்பட"த்தை தயாரித்து வெற்றி பெற்றிருக்கிறார்.

அமுதன் - இயக்குனருக்கு ரொம்பவே தைரியம். லொள்ளு சபா டைப் படத்தை போர் அடிக்காத திரைக்கதையால் திறமையாக சொல்லி இருக்கிறார். சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனம் செலுத்தி இருக்கிறார். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், சினிமாபட்டிக்கு வந்து போகும் ரயில் வண்டி. இப்போதும் நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த படம் எப்படி எடுக்கப் போகிறார் என்பதை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

கண்ணன் - அறிமுக இசையமைப்பாளர் என்று நம்ப முடியவில்லை. எல்லாப்பாட்டுமே சூப்பர். குத்து விளக்கு பாட்டும், பச்சைத் தமிழன் பாட்டும் என்னோட பேவரைட்ஸ். பின்னணி இசையும் ஓகே. குடும்பப்பாட்டு என்று "MLTR" பாட்டைப் போட்டு கலக்கி இருக்கிறார்.



நீரவ்ஷா - சின்ன பட்ஜெட் படம் போலவே தெரியவில்லை. காட்சிகள் அத்தனை துல்லியம். ரெட் ஒன் காமிராவாம். (தகவல் உபயம் - அண்ணன் ஜாக்கி சேகர் ) நன்றாக செய்திருக்கிறார்.

சந்துரு - வசனம் எழுதி இருப்பவர். பதிவர் - நம்ம ஆளாம். டைமிங் ஜோக்சில் சுழட்டி அடிக்கிறார். வாழ்த்துகள்.

**************

படத்துல எனக்கு ரொம்பப் பிடிச்ச சீன்..

தண்ணியப் போட்டுட்டு சிவா பீச்ல மட்டையாகிக் கிடப்பாரு... மேல இருந்து காமிரா அவர நோக்கி வரும்.. அப்போ அவரு சொல்ற வசனம்.. " பிரியாவ தூக்கிட்டு போய்ட்டானுங்க.. ஏற்கனவே சரக்கு போட்டு தல சுத்திக்கிட்டு இருக்கு.. இவனுங்க வேற மேல காமிராவுல சுத்துறானுங்க.. என்னால முடியல..." (காக்க காக்க..)

அடங்கப்பா.. சிரிச்சு மாளல..

***************

கருத்தம்மா, தளபதி, நாட்டாமை, ரமணா, சிவாஜி, பாட்ஷா, கந்தசாமி, பில்லா, மௌனராகம், ரன், சிதம்பர ரகசியம் (தெரிஞ்சது கையளவு, தெரியாதது உலகளவு) என பல படங்களை சகட்டுமேனிக்கு கிண்டல் செய்து இருக்கிறார்கள். இந்தப் படங்களை எல்லாம் ஏற்கனவே பார்த்து இருந்தால் மட்டுமே ஒரு சில காட்சிகள் புரியும் என்பது படத்தின் பலவீனம். அதே போல முதல் பாதியின் வேகம் இரண்டாம் பாதியில் இல்லை. ஆனாலும் எந்தெந்த காட்சி எந்தெந்த படத்தில் இருந்து சுட்டிருக்கிறார்கள் என்று ரசிகர்கள் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருப்பதில் இந்தக் குறை வெளியே தெரியாமல் அமுங்கிவிடுகிறது.

**************

வீட்டுக்குப் போனபிறகும் யோசிச்சு யோசிச்சு பார்த்து சிரிக்கற அளவுக்கு ஜோக்ஸ் இல்ல. ஆனாலும் படம் பார்க்கும்போது இரண்டு மணி நேரம் கவலையை மறந்து நம்மையும் அறியாமல் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறோம். அதுதான் இந்தப்படத்தின் வெற்றி.

தமிழ்ப்படம் - கொண்டாட்டம்

பின்குறிப்பு 1 : துரை தயாநிதியின் அடுத்த படத்துக்கு பூஜை போட்டு விட்டார்கள். "தூங்கா நகரம்" - நம்ம மதுரையோட இன்னுமொரு பெயர். இதிலும் ஸ்டார்கள் யாருமில்லை. கதையை நம்பி களம் இறங்கி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். வெற்றி பெற வாழ்த்துகள்.

பின்குறிப்பு 2 : அப்பாடா.. படத்தோட கதையோ இல்ல முக்கியமா சீன்களோ, எதுவுமே சொல்லாம ஒரு இடுகை எழுதியாச்சு.. இனிமேலாவது தருமி ஐயா என்னைத் திட்டாமல் இருக்க சினிமா உலகை ரட்சிக்க வந்த கடவுள் "சிவா" அருள்புரிவாராக..:-)))

January 30, 2010

மழைக்காதலன்..!!!


மழையைப் பற்றிய கவிதையொன்றை
படித்த நாள் முதலாய்
பெரும் ரசிகனாகிப் போனேன்
மழைக்கும் அதை எழுதிய கவிஞனுக்கும்

ஜன்னலின் பின்னே ஓரமாய் நின்று
ரசிக்க மட்டுமே பழகி இருந்த எனக்கு

மழையின் உன்னதத்தையும்
நனைவதின் ஆனந்தத்தையும் சொல்லி
சக்கரவாகமாய் மாறிப்போகும் ஆசையை
உள்ளே விதைத்து சென்றது அந்தக் கவிதை

அரும்பாடு பட்டு எங்கெங்கோ தேடி
அதை எழுதியவரின்
முகவரியைக் கண்டுபிடித்து
சந்திப்புக்கான நாளும் குறிக்கப்பட்டது

ஆசிர்வதிக்கப்பட்டதாய்
நான் நம்பிக் கொண்டிருந்த
அந்த நாளில் - கிளம்பும் வேளையில்
கூட வரும் நண்பனாய்
மழையும் சேர்ந்து கொள்ள
உற்சாகப் பந்தாய் மாறிப் போனது மனது

உள்ளம் நனைத்த மழையின் ஊடாக
ஆனந்தக் கூத்தாடியபடி
அவரின் வீட்டை அடைய

சின்னதொரு புன்முறுவலோடு
வாசல் வந்து வரவேற்றவர்
அலுத்துக் கொண்டே சொன்னார்

"ச்சே.. நாசமாப் போன மழை..
எல்லார் பொழப்பையும் கெடுக்குது..
இல்லீங்க?"

அதன் பிறகு அவரிடம்
என்ன பேசுவதெனத் தெரியாமல்
மௌனமாகத் திரும்பி விட்டேன்..!!!

January 28, 2010

உக்கார்ந்து யோசிச்சது (28-01-10)..!!!

நாமும் உருப்படியாய் ஏதாவது செய்ய வேண்டும் என்று ரொம்ப நாளாக பேசி வந்து, கடைசியாக ஒரு நல்ல விஷயத்தை செய்யும் போது இன்னொரு நல்ல விஷயமும் தானாக நடந்தேறினால்...? குழந்தைகள் மனநலம் பற்றி டாக்டர்.ஷாலினியின் நிகழ்ச்சி ஞாயிறு (31-01-10) அன்று நடக்க இருப்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இதே சமயத்தில், வரும் வெள்ளிகிழமை (29-01-10) அன்று அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுக்கு மதுரை தமிழ்ப்பதிவர் குழுவின் மூலமாக நம் பதிவுலகம் பற்றிய ஒரு அறிமுகப் பயிலரங்கமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பத்து நாள் பசியோடு திரிந்தவனுக்கு கோழி பிரியாணியும், இருட்டுக்கடை அல்வாவும் (குவார்ட்டர் என்று அசைவப் பிரியர்கள் சொல்லிக் கொள்ளலாம்.. ஹி ஹி ஹி) கிடைத்தது போல இருக்கும் அல்லவா.. அப்படித்தான் உணர்கிறேன்.



இந்த நிகழ்ச்சிக்கு இருக்கும் வரவேற்பை வைத்து மதுரையில் இருக்கும் மற்ற பல கலைக்கல்லூரிகளுக்கும் பதிவர் பட்டறை ஒன்றை நடத்தலாம் என்று யோசித்து வருகிறோம். பார்க்கலாம்.

***************

குடியரசு தினம் அன்று கொடியேற்றும் நிகழ்ச்சிக்காக கல்லூரிக்கு போய்க் கொண்டிருந்தேன். கரிமேடு பகுதியை கடக்கும்போது, கிட்டத்தட்ட எழுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர், கையில் தேசியக்கொடியை வைத்துக் கொண்டு வருவோர் போவோரிடம் எல்லாம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று நீட்டிக் கொண்டிருந்தார். அவசரத்தில் நிற்காமல் அவரை தாண்டிப் போய் விட்டேன். ஆனால் கல்லூரிக்கு போனபின்னும் அவருடைய முகம் கண்ணுக்குள்ளேயே இருந்தது. எந்தவித பிரதிபலனும் பாராமல் நாட்டுக்காக தன் கடமையை ஆற்றிக் கொண்டிருந்த அவரை நினைக்கும்போது ரொம்பப் பெருமையாகவும், அதனை மதிக்காமல் கடந்து வந்து விட்டோமே என என் மீதே கோபமாகவும் இருந்தது.

கல்லூரி நிகழ்ச்சி முடிந்ததும் இருப்பாரோ மாட்டாரோ என்ற சந்தேகத்துடனேயே அவரைத் தேடி வந்த வழியே போனேன். மனிதர் அங்கேதான் இருந்தார். அவரிடம் போய்க் கேட்டு கொடியை வாங்கி சட்டையில் குத்திக் கொண்டபோது அவர் முகத்தில் வந்த சந்தோசம் இருக்கிறது பாருங்கள்.. வார்த்தைகளில் சொல்ல முடியாது. இதுபோன்று நாட்டை நேசிக்கும் மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பது மனதுக்கு கொஞ்சம் நெகிழ்வாக இருந்தது.

***************

அண்ணன் தண்டோராவின் புண்ணியத்தில் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்ஜியுடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினார். இந்தப் படத்துக்காக தாங்கள் தேடி அலைந்த விஷயங்களைப் பற்றியும், பட்ட கஷ்டங்கள் பற்றியும் நிறையவே சொன்னார். அவர் சொன்னதில் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம்.. "நம் மூதாதையர்களின் சரித்திரம் சரியாகப் பதிவு செய்யப்படவில்லை" என்பதும் "நம் மக்களின் வாழ்க்கை முறையின் பல விஷயங்கள் நமக்குத் தெரியாமலே போய் விட்டன" என்பதுதான். "பழங்கால மன்னர்கள் எத்தனையோ நல்ல விஷயங்கள் செய்தும் அதை சரியாகப் பதிவு செய்யாத காரணத்தால் இன்று நமக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை" என்றும் வருத்தப்பட்டார். படத்தில் எனக்கிருந்த குழப்பங்கள் பற்றியும், என்னுடைய கேள்விகளையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு பதில் சொன்னார். மனிதர் ரொம்பவே Down to Earth ஆக இருக்கிறார். நண்பர் தண்டோராவிற்கு நன்றி..!!!

***************

பதிவில் எழுதும் எல்லோருக்கும் ஒரு முறையாவது தங்கள் பெயரை அச்சில் பார்க்கும் ஆசை இருக்கும். கல்கியில் என்னைப் பற்றிய அறிமுகம் வந்தபோதே சந்தோசம் தாங்காமல் வீட்டில் இருப்பவர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். இப்போது வம்சி புக்ஸ் வெளியீடாக வந்திருக்கும் பதிவர்களின் புத்தகத் தொகுப்பில் என்னுடைய பயண அனுபவமும் ( ரயில் - பெருவெளிச் சலனங்கள் ), கவிதையும் ( முடியாத கதை - கிளிஞ்சல்கள் பறக்கின்றன ) இடம் பெற்று இருப்பதில் எல்லோருக்கும் சொல்லவொண்ணா மகிழ்ச்சி. குறிப்பாக அம்மா. வருவோர் போவோரிடம் எல்லாம் புத்தகத்தை எடுத்துக் காண்பித்து.. என் பையன் எழுதினது என்று சொல்லி... பார்க்கும்போது நெகிழ்ச்சியாகவும், ரொம்ப பெருமையாகவும் இருக்கிறது. இதை சாத்தியமாக்கிய தோழர் மாதவராஜுக்கும், புத்தகங்களை வாங்கியனுப்பிய நண்பர் கிருஷ்ணபிரபுவுக்கும் நன்றி.

***************

தலயின் "அசல்" டிரைலரே அசத்தலாக இருக்கிறது. மேக்கிங்கில் மிரட்டி இருப்பார்கள் போலத் தெரிகிறது. ஆனால் அதுவல்ல விஷயம். படத்துக்கு அசல் என்று பெயர் வைத்து விட்டு எக்கச்சக்கமான விஷயங்களை காப்பி அடித்திருக்கிறார்கள். முதலில் பாடல்கள். "இவன்தான்" பாட்டு அப்படியே ஜேம்ஸ் பாண்டின் "கோல்டன் ஐ" டைட்டில் பாட்டு. "ஹே துஷ்யந்தா" பாட்டை ஹிந்தி ஜப் வி மெட்டில் இருந்து உருவி இருக்கிறார்கள். போதாக்குறைக்கு புதிய பறவை ரீமிக்ஸ்...அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்.. டிரைலரின் பின்னணி இசையிலும் நிறையவே பாண்டின் தாக்கம். ஏன் பரத்வாஜ் ஏன்?

சரி பாட்டுத்தான் காப்பி என்றால்.. படத்தில் வரும் அஜித்தும், அமெரிக்க கறுப்பின வில்லனும் தங்கள் முன்னே இருக்கும் துப்பாக்கியை சரி செய்து சுட முயலும் காட்சி.. அப்படியே shoot 'em up யில் பார்த்த ஞாபகம். தல நடையாய் நடப்பது பில்லாவை ஞாபகப்படுத்துகிறது. சமீபத்தில் மோதி விளையாடிய சரண் இயக்கி இருப்பது வேறு வயித்தில் புளியைக் கரைக்கிறது. என்ன நடக்கப் போகுதோ? எல்லாம் வல்ல மகரநெடுங்குழைனாதன் தான் காப்பாற்ற வேண்டும்.

***************

புத்தகங்கள் பற்றி நண்பர் "தினசரி வாழ்க்கை" மேவீயும், சாலை பாதுகாப்பு பற்றி தோழி "இதயப்பூக்கள்" இயற்கையும் தொடர்பதிவு எழுத அழைத்து ஒரு மாதத்துக்கு மேலாகவே ஆகிவிட்டது. கல்லூரியில் ஆணி ஜாஸ்தி என்றெல்லாம் காரணம் தேட விரும்பவில்லை. தாமதத்துக்கு வருந்துகிறேன். கூடிய சீக்கிரம் எழுதி விடுகிறேன்.

***************

"அல்வா கொடுத்த பிரபல பதிவர்" அல்லது "சிங்கத்தை அதன் குகையில் சந்தித்தேன்.." இப்படி என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். திருநெல்வேலியில் நண்பர் நையாண்டி நைனாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு மனிதர் ஒரு சிறந்த உதாரணம். உற்சாகமாக உரையாடி விட்டு அவர் அன்போடு வாங்கி தந்த இருட்டுக் கடை அல்வாவையும் ராவிக் கொண்டு வந்தேன். மும்பையில் மையம் கொண்டிருந்த சூறாவளி இப்போது சென்னைக்கு மாற்றல் ஆகி இருப்பதால் அமைதியாக இருக்கிறது. விரைவில் பதிவுலகில் மீண்டும் புகுந்து புறப்பட வாழ்த்துகள்.

***************

சமீபத்தில் ரசித்தது

தபு நடித்த "ஹவா" என்ற திகில்ப்படத்தை "ராசலீலை" என்ற பெயரில் சீன் படமாக இறக்குமதி செய்து இருக்கிறார்கள். அதன் விளம்பரம்.

"பெண் என்றால் பேயும் இரங்கும் என்று சொல்வார்கள். ஆனால் இவள் மீதோ பேயே இறங்கியது".

எப்படி எல்லாம் யோசிக்கிறாய்ங்க..!!

இப்போதைக்கு அவ்வளவுதான். நெக்ஸ்டு மீட் பண்றேன்...:-)))))))))

January 26, 2010

குழந்தைகள் மனநலம் பற்றிய கருத்தரங்கம் - மதுரையில்..!!!

சென்ற வருடம் செப்டம்பர் மாத இறுதியில் மதுரையில் ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடானது. "இதை செய்யணும் அதை செய்யணும் என்று வெறுமனே பேசிக் கொண்டும், பதிவுகளில் எழுதிக் கொண்டிருப்பதொடும் நில்லாமல் இந்த சமூகத்துக்கு நாமும் உருப்புடியாய் ஏதாவது செய்ய வேண்டும்.. என்ன செய்யலாம்?" என்பதே அந்த சந்திப்பின் சாராம்சமாக இருந்தது.

அந்த சூழ்நிலையில்தான் ஜெர்மனியில் இருக்கும் நண்பர் குமார் எங்களைத் தொடர்பு கொண்டார். சென்னையில் நடைபெற்ற டாக்டர். ஷாலினியின் குழந்தைகள் மனநலம் பற்றிய கருத்தரங்கத்தை மதுரையில் நடத்தினால் என்ன என்பது அவருடைய எண்ணம். அதை நண்பர்களிடம் சொன்னபோது எல்லோரும் ஒத்த கருத்தோடு இதை செய்யலாம் என்று ஒத்துக் கொண்டனர். இதன் தொடர்ச்சியாக.. மதுரையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (31-01-10) இந்த கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.

இன்றைய சமூக சூழலில் இருக்கக் கூடிய மிக முக்கியமான பிரச்சினைகளில் சிறு குழந்தைகளின் மீது திணிக்கப்படும் பாலியல் பலாத்காரங்களும் ஒன்று. மூன்று வயது குழந்தையைக் கொலை செய்த காமவெறியன், சிதைக்கப்பட்டு புதரில் கிடந்த குழந்தை என்று திரும்பிய பக்கம் எல்லாம் காணக் கிடைக்கும் செய்திகள் நம்மை பயம் கொள்ள செய்வதாக இருக்கின்றன. ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல் எல்லாக் குழந்தைகள் மீதும் இத்தகைய பாலியல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. தனக்கு நடப்பது என்ன என்று தெரியாமலேயே சீரழிக்கப்படும் குழந்தைகள் எத்தனை பேர்? இதனால் குழந்தைகள் உடல்ரீதியாக மட்டுமல்லாது மனரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

தம் குழந்தைகளை பாதுகாக்கும் கடமை பெற்றோருக்கும், அவர்களின் ஆசிரியர்களுக்கும் தான் உண்டு. இத்தகைய நச்சு சூழலில் இருந்து நம் குழந்தைகளை எப்படி பாதுகாப்பது? பிரச்சினைகளை நாம் எப்படி எதிர்கொள்வது? எது நல்ல தொடுகை என்றும் எது கெட்ட தொடுகை என்றும் குழந்தைகளுக்கு எப்படி புரிய வைப்பது? இது போன்ற விஷயங்களைப் பற்றி தெளிவாகப் பேசுவதே இந்தக் கருத்தரங்கத்தின் நோக்கம். குழந்தைகள் மனநலம் பற்றியும், அவர்களை அணுகும் முறை பற்றியும் டாக்டர்.ஷாலினி உரையாற்ற இருக்கிறார். நம்முடைய சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறுவதற்கான கேள்வி நேரத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாள் : 31.01.2010 ஞாயிறு

காலம் : மாலை 3 மணியில் இருந்து 6 மணி வரை

இடம் : அமெரிக்கன் கல்லூரி ( செமினார் ஹால் )

கருத்தரங்க ஆய்வர் : மன நல மருத்துவர் ஷாலினி

பெற்றோர்களும், ஆசிரியர்களும் இந்த நிகழ்ச்சியில் பெரும் திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும்.சமூகத்துக்கு நம்மாலான ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் வடிவம்தான் இந்த சிறு முயற்சி. இதற்கு நண்பர்கள் அனைவரும் உங்களுடைய ஆதரவினைத் தர வேண்டும் என மதுரைப் பதிவர்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். மதுரையில் தொடர்ந்து நடக்க இருக்கும் நிகழ்வுகளுக்கு இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும் என நம்புகிறேன். THIS IS JUST THE BEGINNING.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விழையும் நண்பர்கள் அலைபேசி மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ தங்கள் வருகையை உறுதி செய்தால் மற்ற ஏற்பாடுகள் (போக்குவரத்து, சிற்றுண்டி) செய்வதற்கு வசதியாகஇருக்கும்.

அலைபேச:

தருமி-9952116112
சீனா அய்யா-9840624293
பாலகுமார்-9486102490
ஜெரி ஈஷானந்தா-9791390002
ஸ்ரீ-9360688993
கார்த்திகைப்பாண்டியன் -9842171138

மின்னஞ்சல் தொடர்புக்கு:

dharumi2@gmail.com
sridharrangaraj@gmail.com
karthickpandian@gmail.com

தொடர்புடைய மற்ற இடுகைகள்:

ஸ்ரீதர்
பாலகுமார்
சீனா

நல்லதொரு முறையில் நிகழ்ச்சியை நடத்த உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டுகிறோம். வாருங்கள் நண்பர்களே.. சாதித்துக் காட்டுவோம்..!!!