சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன். கிளம்பத் தயாராக இருந்த அந்த மின்தொடர் வண்டியின் ஜன்னலோர சீட்டில் அவன் உட்கார்ந்து இருந்தான். தினமும் அந்த வழித்தடத்தில் சென்று வருபவன். எப்போதும் கூட்டத்தில் தொங்கிக் கொண்டேதான் போக வேண்டும். இன்றைக்கு ஏதோ அதிசயமாக உட்கார இடம் கிடைத்து இருந்தது. அதுவும் ஜன்னலோரமாக..
இது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்களில்தான் நடுத்தர மனிதர்களின் வாழ்க்கை ருசிக்கிறது. அவனுக்கு மனசுக்கு ரொம்ப நிறைவாக இருந்தது. சுற்றி நின்று கொண்டிருந்தவர்களை சற்றே பெருமையாகப் பார்த்துக் கொண்டான். எல்லோரும் நிற்கிறார்கள்.. நான் இன்றைக்கு உட்கார்ந்து இருக்கிறேன்..
ரயில் கிளம்பி விட்டிருந்தது.
"இந்தக் காலத்துல யாரை சார் நம்ப முடியுது? நல்ல மனுஷங்களைப் பார்க்கவே முடியுறதில்ல.. என்னமோ போங்க.." எதிர் சீட்டு மனிதர் பக்கத்தில் இருந்தவரிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.
அவன் சிரித்துக் கொண்டே வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தவனாக, அதிகாலையின் காற்று வேகமாக முகத்தில் மோதுவதை ரசிக்கத் தொடங்கினான். வண்டி ஒரு சின்ன ஸ்டேஷனில் நின்று கிளம்பியது. சிறிது நேரம் கழித்து அந்தப் பாட்டு கேட்டது.
"பழம் நீயப்பா..." உடைந்த குரலைக் கேட்டு திரும்பிப் பார்த்தான். கூட்டத்தின் ஊடாக பாடிக் கொண்டே ஒரு கிழவி.... கிழிந்து போன ஒரு சேலையை உடம்போடு போர்த்தி இருந்தாள். கையில் ஒரு அழுக்கு மூட்டை. எண்ணைப் பிசுக்கேறிய தலை. குழி விழுந்த கண்கள். ஒட்டிய வயிறும் வற்றிய நெஞ்சுமாக அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது.
அவனுக்கு அவளைப் பார்க்க பார்க்க மனதை ஏதோ செய்தது. அவளுக்கு உதவ வேண்டும். ஆனால்..
கிழவிக்குப் பணம் தர வேண்டுமெனில் அவன் எழுந்து அவளருகே போக வேண்டும். எழுந்தால் இந்த இடம் அவனுக்கு மீண்டும் கிடைக்காமல் போகக்கூடும். ஏதோ ஒரு நாளைக்கு அதிசயமாகக் கிடைத்த இடம். அதை இழக்கவும் மனமில்லை. அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
பாடிக் கொண்டே கிழவி அவன் இருந்த இடத்தை நெருங்கி விட்டிருந்தாள். அவனுக்கு ஒரே குழப்பம். இடமா? இல்லை அவளுக்கு உதவுவதா? சுற்றிப் பார்த்தான்.
எல்லாரும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். யாரும் அந்தக் கிழவியைக் கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை. நான் மட்டும் ஏன்? சரி.. நாளைக்கும் இந்த வண்டியில் வர மாட்டாளா? அப்போது பார்த்துக் கொள்வோம். பெரிதாக உதவி செய்வோம். தன்னைத் தானே சமாதானம் செய்தவனாக கவனத்தை வெளியே திருப்ப முயன்றான். ஆனால் முடியவில்லை. கிழவியின் தீனமான குரல் அவன் உள்ளே புகுந்து மனத்தைக் குடைந்தது. இப்போது என்ன செய்வது?
சட்டென்று எழுந்தான். பாக்கெட்டில் கையை விட்டு பத்து ரூபாயை எடுத்தான். அவளருகே போய் கைகளில் கொடுத்தான்.
"மகாராசா.. என்னைப் பெத்த ஐயா.. நீ நல்லா இருக்கணும்.."
திரும்பிப் பார்த்தான். அவன் உட்கார்ந்த இடத்தில் யாரும் உட்காரவில்லை. நிம்மதியாக இருந்தது. மீண்டும் போய் உட்கார்ந்து கொண்டான். எதிர் சீட்டில் இருந்தவர் சிரித்தபடியே அவனிடம் சொன்னார்..
"உங்களுக்கு ரொம்ப கருணை மனசு சார்.."
அவன் அவரைப் பார்த்து சிரித்துவிட்டு தலையைக் குனிந்து கொண்டான்.







