July 13, 2010

கருணை மனசு..!!!

சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன். கிளம்பத் தயாராக இருந்த அந்த மின்தொடர் வண்டியின் ஜன்னலோர சீட்டில் அவன் உட்கார்ந்து இருந்தான். தினமும் அந்த வழித்தடத்தில் சென்று வருபவன். எப்போதும் கூட்டத்தில் தொங்கிக் கொண்டேதான் போக வேண்டும். இன்றைக்கு ஏதோ அதிசயமாக உட்கார இடம் கிடைத்து இருந்தது. அதுவும் ஜன்னலோரமாக..

இது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்களில்தான் நடுத்தர மனிதர்களின் வாழ்க்கை ருசிக்கிறது. அவனுக்கு மனசுக்கு ரொம்ப நிறைவாக இருந்தது. சுற்றி நின்று கொண்டிருந்தவர்களை சற்றே பெருமையாகப் பார்த்துக் கொண்டான். எல்லோரும் நிற்கிறார்கள்.. நான் இன்றைக்கு உட்கார்ந்து இருக்கிறேன்..

ரயில் கிளம்பி விட்டிருந்தது.

"இந்தக் காலத்துல யாரை சார் நம்ப முடியுது? நல்ல மனுஷங்களைப் பார்க்கவே முடியுறதில்ல.. என்னமோ போங்க.." எதிர் சீட்டு மனிதர் பக்கத்தில் இருந்தவரிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.

அவன் சிரித்துக் கொண்டே வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தவனாக, அதிகாலையின் காற்று வேகமாக முகத்தில் மோதுவதை ரசிக்கத் தொடங்கினான். வண்டி ஒரு சின்ன ஸ்டேஷனில் நின்று கிளம்பியது. சிறிது நேரம் கழித்து அந்தப் பாட்டு கேட்டது.

"பழம் நீயப்பா..." உடைந்த குரலைக் கேட்டு திரும்பிப் பார்த்தான். கூட்டத்தின் ஊடாக பாடிக் கொண்டே ஒரு கிழவி.... கிழிந்து போன ஒரு சேலையை உடம்போடு போர்த்தி இருந்தாள். கையில் ஒரு அழுக்கு மூட்டை. எண்ணைப் பிசுக்கேறிய தலை. குழி விழுந்த கண்கள். ஒட்டிய வயிறும் வற்றிய நெஞ்சுமாக அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது.

அவனுக்கு அவளைப் பார்க்க பார்க்க மனதை ஏதோ செய்தது. அவளுக்கு உதவ வேண்டும். ஆனால்..

கிழவிக்குப் பணம் தர வேண்டுமெனில் அவன் எழுந்து அவளருகே போக வேண்டும். எழுந்தால் இந்த இடம் அவனுக்கு மீண்டும் கிடைக்காமல் போகக்கூடும். ஏதோ ஒரு நாளைக்கு அதிசயமாகக் கிடைத்த இடம். அதை இழக்கவும் மனமில்லை. அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

பாடிக் கொண்டே கிழவி அவன் இருந்த இடத்தை நெருங்கி விட்டிருந்தாள். அவனுக்கு ஒரே குழப்பம். இடமா? இல்லை அவளுக்கு உதவுவதா? சுற்றிப் பார்த்தான்.

எல்லாரும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். யாரும் அந்தக் கிழவியைக் கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை. நான் மட்டும் ஏன்? சரி.. நாளைக்கும் இந்த வண்டியில் வர மாட்டாளா? அப்போது பார்த்துக் கொள்வோம். பெரிதாக உதவி செய்வோம். தன்னைத் தானே சமாதானம் செய்தவனாக கவனத்தை வெளியே திருப்ப முயன்றான். ஆனால் முடியவில்லை. கிழவியின் தீனமான குரல் அவன் உள்ளே புகுந்து மனத்தைக் குடைந்தது. இப்போது என்ன செய்வது?

சட்டென்று எழுந்தான். பாக்கெட்டில் கையை விட்டு பத்து ரூபாயை எடுத்தான். அவளருகே போய் கைகளில் கொடுத்தான்.

"மகாராசா.. என்னைப் பெத்த ஐயா.. நீ நல்லா இருக்கணும்.."

திரும்பிப் பார்த்தான். அவன் உட்கார்ந்த இடத்தில் யாரும் உட்காரவில்லை. நிம்மதியாக இருந்தது. மீண்டும் போய் உட்கார்ந்து கொண்டான். எதிர் சீட்டில் இருந்தவர் சிரித்தபடியே அவனிடம் சொன்னார்..

"உங்களுக்கு ரொம்ப கருணை மனசு சார்.."

அவன் அவரைப் பார்த்து சிரித்துவிட்டு தலையைக் குனிந்து கொண்டான்.

16 comments:

ஜெய்சக்திராமன் said...

பின்னிட்டீங்க தலைவரே!!! அருமை....

ஜீவன்பென்னி said...

புனைவு நல்லாயிருக்கு.

malarvizhi said...

ரொம்ப நல்லா இருக்கு.

க ரா said...

நல்லா இருக்க்குங்க.

தருமி said...

ம்ம்...ம்ம்... ம்

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஜெய்சக்திராமன் said...
பின்னிட்டீங்க தலைவரே!!!அருமை..//

நன்றிடா..:-)))

// ஜீவன்பென்னி said...
புனைவு நல்லாயிருக்கு.//

நன்றிங்க..

//malarvizhi said...
ரொம்ப நல்லா இருக்கு.//

ரொம்ப நன்றிங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//இராமசாமி கண்ணண் said...
நல்லா இருக்க்குங்க.//

:-))))))

//தருமி said...
ம்ம்...ம்ம்... ம்//

ஐயா... ஒண்ணு ரெண்டு வார்த்தை சேர்த்து சொன்னா இன்னும் தெளிவா இருக்கும்..-))

மேவி... said...

சார் ...கதையும் கருதும் நல்ல தான் இருக்கு. ஆனா ஒரு nativity இல்லை ....

எலெக்ட்ரிக் டிரைன் ல எழுந்து போய் பிச்சை போடா வேண்டும்ன்னு இல்லை..... உட்கார்ந்த படியே பிச்சை போட முடியும்

இதை நான் ஏன் சொல்லுறேன்ன்ன உங்க கதையை உலகம் முழுக்க (சென்னையில் இருப்பவர்களும் சேர்த்து) படிப்பார்கள் ....


இப்படியே கருணை, பாசம், காசுன்னு எழுதிகிட்டு இருந்த அடுத்த எஸ்ரா யாக வாய்ப்பு உண்டு. இதையெல்லாம் எழுதுவதற்கு ஆளுங்க நிறைய பேர் இருக்காங்க (குறிப்பா இந்த மாதிரி ஒரு பக்க கதைகள் எழுத) ....உங்களுக்கு என்று ஒரு எழுத்து நடை இருக்கு. அதை எழுதுங்க பாஸ் ....

vasu balaji said...

இல்லை டம்பீ. தினம் 35 வருடங்களாக பாசஞ்சர்/மின்சார ரயிலில் போய் வருகிறவன் என்ற முறையில், கார்த்தியின் கருவை
/அவன் அவரைப் பார்த்து சிரித்துவிட்டு தலையைக் குனிந்து கொண்டான்.//
நான் இதில் பார்க்கிறேன். இரண்டு ரூபாய் போட்டுவிட்டு, குருட்டுப் பிச்சைக்காரியிடம், ஒரு ரூபாய் ஐம்பது காசு எடுப்பவர்கள், ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு நாட்டைக் கொடுத்தார்போல் மற்றவர்களைப் பார்க்கிறவர்கள், பார்வையின்றி துழாவும் கைகள் எங்கு மீது படுமோ என்று அருவெறுத்து பதறி ஐந்து பைசா போடுபவர்கள் இப்படி எத்தனை பேரைப் பார்க்கிறேன். பாராட்டப்படும்போது இடத்துக்காக மனம் போராடியதை உணர்ந்து நாணிக் குறுகியதாய் கொள்ளும்போது ஒரு தோழமை வருகிறதல்லவா. வெல்டன் கார்த்தி:)

வரதராஜலு .பூ said...

ரொம்ப நல்லா இருக்குங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

//டம்பி மேவீ said...
சார் ...கதையும் கருதும் நல்ல தான் இருக்கு. ஆனா ஒரு nativity இல்லை .... எலெக்ட்ரிக் டிரைன் ல எழுந்து போய் பிச்சை போடா வேண்டும்ன்னு இல்லை..... உட்கார்ந்த படியே பிச்சை போட முடியும் இதை நான் ஏன் சொல்லுறேன்ன்ன உங்க கதையை உலகம் முழுக்க (சென்னையில் இருப்பவர்களும் சேர்த்து)படிப்பார்கள்//

சென்னைல இருந்து வானம்பாடிகள் ஐயா சொல்லி இருக்குற பதில பாருங்க தல..:-)))

//இப்படியே கருணை, பாசம், காசுன்னு எழுதிகிட்டு இருந்த அடுத்த எஸ்ரா யாக வாய்ப்பு உண்டு. இதையெல்லாம் எழுதுவதற்கு ஆளுங்க நிறைய பேர் இருக்காங்க (குறிப்பா இந்த மாதிரி ஒரு பக்க கதைகள் எழுத) ....உங்களுக்கு என்று ஒரு எழுத்து நடை இருக்கு. அதை எழுதுங்க பாஸ் ....//

என்னை பாதிக்கும், ஈர்க்கும் விஷயங்களைப் பற்றி.. உள்ளத்தில் ஓடும் நுண்ணிய உணர்வுகள் பற்றி.. இதை எல்லாம் தான் எழுதுகிறேன் நண்பா.. எனக்கென ஒரு நடையும் கிடையாது.. அப்படி இல்லாமல் இருப்பதையே நான் விரும்புகிறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

@ வானம்பாடிகள்

இதேதான் சார்.. நாம சொல்ல வரத்தை யாராவது ஒருத்தராவது கரெக்டா புரிஞ்சுக்குறப்போ வர்ற சந்தோசம் இருக்கு பாருங்க.. விளக்கத்துக்கு ரொம்ப நன்றி சார்..:-))))))

// வரதராஜலு .பூ said...
ரொம்ப நல்லா இருக்குங்க//

நன்றிங்க..:-))))

மேவி... said...

"நான் இதில் பார்க்கிறேன். இரண்டு ரூபாய் போட்டுவிட்டு, குருட்டுப் பிச்சைக்காரியிடம், ஒரு ரூபாய் ஐம்பது காசு எடுப்பவர்கள், ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு நாட்டைக் கொடுத்தார்போல் மற்றவர்களைப் பார்க்கிறவர்கள், பார்வையின்றி துழாவும் கைகள் எங்கு மீது படுமோ என்று அருவெறுத்து பதறி ஐந்து பைசா போடுபவர்கள் இப்படி எத்தனை பேரைப் பார்க்கிறேன்"

நான் இப்படிப்பட்டவன் அல்ல ...... எல்லோரையும் தோழமை உணர்வுடன் தான் பார்பேன்

மேவி... said...

"எனக்கென ஒரு நடையும் கிடையாது.. அப்படி இல்லாமல் இருப்பதையே நான் விரும்புகிறேன்.."

உங்களுக்கு இரண்டு கால் இருக்கே ..அதையும் பார்த்துக்கிறேனே பிறகு எப்படி நடை இல்லை ன்னு நீங்க சொல்லுறீங்க ???

jokes apart ...நீங்கள் அப்படி னியாநிது கொள்ளலாம் ...ஆனால் உங்களது பதிவை படிக்கும் பொழுது எனக்கொரு வித்தயாசமான உணர்வே தருகிறது.....உங்களது எழுத்து நடை உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் நான் அந்த எழுத்து நடைக்காகவும், நட்பிற்க்காகவும் தான் உங்களது பதிவுகளை விரும்பி படிக்கிறேன்

மேவி... said...

மேலும் எழுந்து போய் பிச்சை போடும் அளவுக்கு ரயில் பொட்டி ஒன்றும் பெருசா இருக்காது ....சற்று எம்பிய வாக்கில் வேண்டுமானால் பிச்சை போட வேண்டிருக்கும் ....

பிறகு நான் பார்த்த வரைக்கும் பிச்சை கேட்பவர்கள் இடைப்பட்ட இடத்திலும் வந்து பிச்சை கேட்பார்கள் ..இதை வைத்து தான் நான் அவ்வாறு சொன்னேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

@ mayvee..

cool dude.. samathanam..:-))))