
கருத்துரீதியாக அவரோடு எனக்கு நிறைய முரண்பாடுகள் இருந்தாலும் நான் பெரிதும் மதிக்கும் மனிதர்களில் ஞாநியும் ஒருவர். தருமி ஐயா புண்ணியத்தில் மதுரை புத்தகத் திருவிழாவில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. வெகு இயல்பாகப் பேசியவர் புத்தகத் திருவிழா நடக்கும் நாட்களில் ஏதேனும் ஒரு மாலை வேளையில் மதுரை வலைப்பதிவர்களைத் தானும் சந்திக்க ஆவலோடு இருப்பதாக சொன்னார்.

தமுக்கத்தின் வெட்டவெளியில் நிற்க முடியாமல் நண்பர்கள் அனைவரும் ஞாநியுடன் அருகிலிருந்த "நார்த் கேட்" ஹோட்டலின் சிற்றுண்டி சாலையில் தஞ்சம் புக சந்திப்பு தொடங்கியது. வந்திருந்தவர்கள் எல்லோரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டோம். வலையுலகில் ஒவ்வொருவரும் எந்தவொரு எண்ணத்தோடு உள்ளே வந்தோம், வந்த பின்பு இன்றைக்கு என்ன மாதிரியான எண்ணங்களோடு இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புவதாக ஞாநி சொன்னார்.

லண்டனில் வெறுமனே நேரத்தை கடத்த பயன்பட்ட வலைப்பூ எழுதும் பழக்கம் இன்றும் வலைச்சரம் தொடுப்பதில் வந்து நிற்பதை சீனா ஐயாவும், அவருடைய துணைவியார் செல்விஷங்கர் அம்மாவும் பகிர்ந்து கொண்டார்கள். தமிழில் எழுத வேண்டும் என்கிற ஆர்வமும் அதனால் கிடைக்கும் நட்புகளுமே தன்னை வலைப்பூக்களில் தொடர்ந்து இயங்க வைப்பதாக.. அட விடுங்கப்பா.. எனக்குத்தான் விளம்பரம் பிடிக்காதுன்னு உங்களுக்குத் தெரியும்ல..:-)))
பின்னர் தன்னைப் பற்றிய சுவாரசியமான பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் ஞாநி. தமிழ் எழுத்தாளர்களில் சுஜாதாவுக்கு அடுத்தபடியாக இணையத்தைப் பயன்படுத்தி தட்டச்சு செய்யத் துவங்கிய இரண்டாவது நபர் அவர்தானாம். ஆனால் ஆரம்ப காலத்தில் போனோடிக் (phonetic) முறைகள் இல்லாத நிலையில், தமிழில் தட்டச்சு செய்வது சிரமமாக இருக்கவே இணையத்தில் இருந்து விலகிக் கொண்டாராம். இனி பதிவர்களின் சில கேள்விகளும் அதற்கான ஞானியின் பதில்களும்..
தமிழ் வலைப்பூக்கள் குறித்து?
இணையம் இன்றைக்கு மிகப்பெரிய தகவல்தொடர்பு சாதனமாக உருவாகி இருந்தாலும் பொது ஊடகங்கள் அளவுக்கு தமிழ் இணைய ஊடகம் வளரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். முதலாக எனக்கு இந்த வலைப்பூ என்ற வார்த்தையே சற்று தவறானதாகப்படுகிறது. அதிலும் இடுகை என்றொரு வார்த்தையை உபயோகிக்கிறார்கள். அது சரியானது அல்ல. பதிவு என்பதே சரியானதாக இருக்க முடியும்.

வலைப்பூக்களில் எனக்கு இருக்கும் இன்னொரு பிரச்சினை இந்த பின்னூட்டம் என்னும் வார்த்தை.. feedback என்பதை மொழிபெயர்த்து அப்படியே பின்னூட்டம் என்றாக்கி விட்டார்கள். மறுமொழி அல்லது எதிர்வினை என்பதே சரியானதாக இருக்க முடியும் என்பது என் கருத்து. மற்றபடி இன்றைக்கு தமிழ் வலைப்பூக்கள் ஆரோக்கியமான திசையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன. ஆனால் வெகு ஜன ஊடகங்களின் இடத்தை இணையம் பிடிக்க இன்னும் பத்து வருடங்கள் ஆகலாம்.
உங்களை எழுத்தால் எதையாவது மாற்ற முடியும் என நம்புகிறீர்களா?

இன்றைய இளைஞர் சமுதாயம் நம்பிக்கை தருகிறதா?
ஆம் எனலாம்.. இல்லை என்றும் சொல்லலாம். சில நாட்களுக்கு முன்பு ஒரு கல்லூரி மாணவர் குழுவிடம் பேசிக் கொண்டிருந்தேன். வன்முறைக்கு வன்முறைதான் தீர்வாக இருக்க முடியும் என தீர்க்கமாக நம்புவதாகச் சொன்னார்கள். நான் கண்டிப்பாக அப்படி இருக்க முடியாது என்ற வாதிட்டேன்.
"இப்போது மதுரைப் புத்தகத் திருவிழா பற்றி முக்கியமானதொரு தினசரிப் பத்திரிகையில் எந்த விதமான செய்தியும் வருவது இல்லை. காரணம் அவர்கள் கேட்ட விளம்பரங்களை கொடுக்க அமைப்பாளர்கள் ஒத்துக் கொள்ளாததால் இருட்டடிப்பு செய்கிறார்கள். வாருங்கள், போய் அவர்கள் அலுவலகத்தில் கல்லடிப்போம்" என்று சொன்னபோது எல்லா மாணவர்களும் அமைதியாகி விட்டார்கள்.

அதே மாணவர்களிடம் இன்னொன்றும் கேட்டேன். நாளை உங்களுக்குத் திருமணம் ஆகும்போது ஜாதி, மதம் பார்க்காமல் திருமணம் செய்து கொள்வேன் என்று அடித்துச் சொல்ல முடியுமா எண்டு.. ஒருவரும் கையைத் தூக்கவில்லை. அதுதான் மனதுக்கு மிகவும் வருத்தம். இந்த நிலை மாற வேண்டும். ஆனால் அது நம்முடைய காலத்தில் நடக்காது போலத் தோன்றுகிறது.
படைப்பாளியின் ஜாதி குறித்து பேசுகிறார்களே?

அரசியல் நெருக்கடிகள்?
நேரடியாக எனக்கு வருவதில்லை. மாறாக நான் பணியாற்றும் பத்திரிக்கைகளுக்குத்தான் நெருக்கடி தருகிறார்கள். அதனால் தான் அவ்வப்போது நான் என்னுடைய முகாம்களை மாற்றிக் கொண்டிருக்கிறேன்.
சக எழுத்தாளர்கள்?
அவர்கள் அதிகார பீடத்தை எதிர்க்க வேண்டாம் என எண்ணுகிறார்கள். நான் அதற்கு நேர்மாறாக நினைக்கிறேன். அதனால் அவர்கள் என்னைப் பொருட்படுத்துவதே கிடையாது. நானும்..
அரசை எதிர்ப்பது மட்டுமே உங்கள் கொள்கை என்று சொல்கிறீர்களா?
தவறு செய்யும்போதெல்லாம் எதிர்ப்பது மட்டுமே என்னுடைய வேலை. ஒரு பொறுப்புள்ள குடிமகனாக அதை எப்போதும் செய்வேன்.
