August 9, 2013

விட்டு விடுதலையாகி (2)



வலையுலகில் நுழைந்த ஆரம்ப காலம் தொட்டு மேவியை நான் நன்கறிவேன். தாம்பரம் ரயில் நிலையத்துக்குள் யாரேனும் ஆசாமி ஒரு கையில் மேலாண்மை புத்தகமும் இன்னொரு கையில் மேலாண்மை பொன்னுசாமியின் புத்தகமும் வைத்துக்கொண்டு இந்தியாவின் பொருளாதாரமும் இந்திரா பார்த்தசாரதியும் எனப் பேசியபடி கடந்து போனால் அவர்தான் மேவி என நீங்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். இதை விளையாட்டாகவோ கேலியாகவோ சொல்லவில்லை. உண்மையில் இதுதான் அவருடைய இயல்பு. எல்லாவற்றிலும் புகுந்து புறப்படும் ஜீவன். அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம். மேலார்ந்த நட்பு என்பதைத் தாண்டி என் மீது அக்கறை செலுத்தும் மனிதர்களில் ஒருவர். நிறைய வாசிப்பவர். ஆனால் அந்த வாசிப்பு புறவயமாக மட்டும் இருப்பதில் எனக்கு எப்போதும் வருத்தமே.


பெருங்களத்தூரில் இருக்கும் மேவியின் வீட்டுக்கு நாங்கள் இருவரும் போய்ச் சேர்ந்தபோது மணி எட்டைத் தாண்டியிருந்தது. அண்ணியின் பிரசவத்துக்காக அவருடைய அம்மா வெளிநாடு போயிருக்க வீட்டில் அப்பா மட்டும் தனியாய் இருந்தார். வணக்கம் சொல்லியபடி உள்ளே நுழைந்தவனை அவர் வினோதமாகப் பார்த்ததன் காரணம் பிற்பாடு தெரிந்தது. இத்தனை வருடங்களில் நண்பர் என்கிற பெயரில் மேவி வீட்டுக்கு அழைத்து வந்திருந்த முதல் ஆள் நான். வீட்டைப் பற்றியும் வேலை பற்றியும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு எங்களை சாப்பிடச் சொன்னார். அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாமென வெளியே சாப்பிட்டு விட்டுப் போயிருந்தோம். என்றாலும் அவரது திருப்திக்காக மீண்டும் ஒருமுறை உணவருந்தி விட்டு மாடிக்குச் சென்று கூடடைந்தோம்.


மறுநாள் காலை எழுந்தபோது எங்கு போவதென எந்தத் தீர்மானமும் இருக்கவில்லை. சட்டெனத்தான் அது தோன்றியது. பாண்டி செல்லலாம். எனக்கு மிகவும் பிடித்தமான விசயங்களில் ஒன்று கடல். அதன் பிரம்மாண்டத்தின் முன் மனம் ஒன்றுமில்லாமல் கரைந்து போய் விடும் தருணங்கள் அற்புதமானவை. இதனை மேவியிடம் சொன்னபோது இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை எனத்தான் கேட்டார். 


“சரக்கடிக்காத மனிதரெல்லாம் எதற்கய்யா பாண்டிச்சேரி போகிறீர்?” 


இதற்கு என்னிடம் பதிலில்லை. கடலைப் பார்க்க வேண்டும், போகிறேன். முடிவு செய்தாயிற்று. 


“அதெல்லாம் சரி.. ஆனா அப்பா அடுத்து எங்க போறீங்கன்னு கேட்டா வேற ஏதாவது ஊரைச் சொல்லுங்க.. சரியா?”  தலையை ஆட்டி வைத்தேன்.


மேவியின் புத்தக அலமாரியிலிருந்து ஆதவனின் ராமசேஷனை உடனழைத்துக் கொண்டு கிளம்பினேன். அப்பாவிடம் விடைபெறும் சமயம்.


“அடுத்து எங்க தம்பி போறீங்க?”


பொய் சொல்லும்போதும் பொருந்தச் சொல்ல வேண்டும் இல்லையா? சட்டென அகநாழிகை வாசுவின் நினைவு வந்தது. 


“மதுராந்தகம் போகலாம்னு இருக்கேன்.. பெறகு கங்கை கொண்ட சோழபுரம்..”. 


“அங்க எல்லாம் எதுக்குப் போறீங்க? நண்பர்கள் யாரும் இருக்காங்களா?”


இங்குதான் என் நாவில் அமர்ந்திருந்த சனீஸ்வரன் நர்த்தனமாட ஆரம்பித்தான்.


“இல்லைங்க.. சும்மா ஒரு அனுபவத்துகாக..”


அவருக்கு சுத்தமாக நான் சொன்னது புரியவில்லை. ஒரு முறை என்னை மேலும் கீழும் பார்த்தார். பின்பு மேவியின் பக்கம் திரும்பி ஒரு பார்வை. இந்த மாதிரி மனிதர்கள்தான் உனக்குப் பழக்கம்? 


திண்டிவனத்தில் இறங்கி பாண்டி செல்லும் பேருந்தில் ஏறியாயிற்று. இதற்குமுன்பாக ஒரே ஒரு முறை மட்டுமே பாண்டி சென்றிருக்கிறேன், எனக்கு மிகப்பிரியமான தோழியோடு. கடலைத் தவிர்த்து வேறு எங்கு செல்லலாம் என யோசித்த போதுதான் நண்பர் மனோ.மோகனின் நினைவு வந்தது.


பைத்தியகாரியின் பட்டாம்பூச்சி எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கும் மனோ.மோகன் சமகாலக் கவிஞர்களில் முக்கியமானவர். பாண்டி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்காக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவர். தேனியில் நடந்த ஒரு சிறுகதை விமர்சனக் கூட்டத்திலும், சேலத்தில் நடைபெற்ற கவிதைகள் விமர்சன அரங்கிலும் மதுரையில் ஒரு முறையும் அவரைச் சந்தித்து இருக்கிறேன்.


மனோவைப் பார்க்கலாம் என அலைபேசியில் அழைத்தால் தொடர்பு கொள்ள முடியவில்லை. வெயில், கணேசகுமாரன் என நண்பர்கள் பலரிடம் கேட்டும் பயனில்லை. கடைசியாகக் கலாப்ரியாவிடம் கேட்டேன். அவரும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனச் சொல்லி விட்டார். சரி, கடலோடு முடித்துக் கொள்வோம் என முடிவு செய்தது மனம். ஆனால் மிகச்சரியாக பேருந்து நிலையத்தில் இறங்கியபோது அலைபேசி அதிர்ந்தது. மனோ.மோகன். கலாப்ரியா ரமேஷ் பிரேதனுக்கு அழைத்து அங்கிருந்து தகவல் சொல்லி எப்படியோ என்னைப் பிடித்து விட்டிருந்தார்.


“என்ன நண்பா? திடீர் பிரயாணம்?”


“உங்க ஊர் கடலைப் பார்க்கணும் போல இருந்தது நண்பா..”


“பாருங்க.. ஒரு மணி நேரத்துல அங்க இருப்பேன்..”


நான் அதிகம் பார்த்திருக்கும் கடற்கரை எனச் சொன்னால் கன்னியாகுமரிதான். அதற்கு அடுத்தபடியாக திருச்செந்தூர். ஆனால் என்னை மொத்தமாக அள்ளிக் கொண்ட கடல்கள் என்றால் அது தனுஷ்கோடியும் பாண்டியும். கண்ணுகெட்டிய தூரம் வரை மனிதர்கள் நடமாட்டமின்றி வேன்களின் டயர் தடங்கள் மட்டும் பயணிக்கும் தனுஷ்கோடி நமக்குள் வலியை விதைத்துப் போகும் என்றால் பாண்டியில் நான் உணர்ந்தது அமைதியை. நீளமான பெரிய அளவிலான கருங்கற்கள் நிரம்பிய கரையில் சற்றே உள்வாங்கி நீர் தெறிக்கும்படியாயிருந்த பாறை ஒன்றின் மீது சென்றமர்ந்தேன். 


கண்முன்னே மிகப்பரந்த நீலப்போர்வை. அங்கொன்றும் இன்கொன்றுமாய் மிதந்து செல்லும் படகுகள். மதிய வெயில் சற்றே மிதமாக அடித்துக் கொண்டிருந்தாலும் வெக்கை இருக்கவில்லை. காற்றில் ஆடும் தூசு மெல்ல மெல்ல வலுவிழந்து தரையில் வீழ்ந்தடங்குவதைப் போல மனம் சலனங்கள் நீங்கி அமைதியில் தொலைந்து போயிருந்தது. சுற்றிலும் இருந்த மனிதர்களைப் பார்த்தேன். பெரும்பாலானவர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு கடலின் முன்பாக நின்றபடி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்தக்கணத்தின் அற்புதத்தை அனுபவிப்பதும் நினைவுகளை சேகரிப்பதும் தாண்டி அவற்றை ஆவணப்படுத்துவதில் மட்டும் ஏன் இத்தனை அவசரம்?
  

அங்கிருந்து கரையோரமாகவே மெதுவாய் நடக்கத் தொடங்கினேன். அங்கிங்கெனாதபடி எங்கும் சிதறிக் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளும் குப்பைகளும். இன்னும் சில வருடங்கள் கழித்து திரும்பி வந்தால் இந்த இடம் இதே மாதிரி இருக்காது என்பதாய்ப் பட்டது. சின்னதாய் ஒரு வலி. எத்தனை நேரம் நடந்திருப்பேன் எனத் தெரியாமல் கடற்கரையின் நீளத்தை குறுக்கும் நெடுக்குமாய் அளந்து கொண்டிருந்தேன். இப்போது ஓரளவு பழக்கமாகியிருந்த அந்தக் குரல் என்னை அழைத்தது. துணைவியாரோடு மனோ வந்து சேர்ந்திருந்தார்.


- பயணிப்போம்

August 5, 2013

விட்டு விடுதலையாகி

கொஞ்ச நாட்களாகவே மனம் அமைதியிழந்து தவித்து வந்தது. வீடு விட்டால் கல்லூரி, கல்லூரி விட்டால் வீடு, ஆராய்ச்சிப் படிப்புக் குழப்பங்கள் என செக்கு மாடாய் மாறிப் போனதான உணர்வு. மே மாத நடுவில் வந்து சேர்ந்த நகுலனின் வருகை சற்றே நெஞ்சை ஆற்றுப்படுத்தினாலும் வழக்கமான நாட்களிலிருந்து தப்பித்து வெளிக்கிளம்பும் எண்ணம் உள்ளிருந்து உறுத்தியபடியேதான் இருந்தது. 

மனதில் தோன்றியதை துணைவியாரிடம் சொன்னேன். தனக்குப் பிடிக்காதபோதும் எனக்காய் எல்லாவற்றையும் அனுசரித்துப் போகும் ஜீவன் இதற்கும் மறுப்பேதும் சொல்லவில்லை. ஆனால் ஒரேயொரு விண்ணப்பம் மட்டும் வைத்தாள். எக்காரணம் கொண்டும் இரவு நேரங்களில் பேருந்து நிலையம், மண்டபம் போன்ற பொது இடங்களில் தங்காமல் பத்திரமாய் இருக்க வேண்டும் என்பதுதான் அது. சரி என நன்றி கூறிக் கிளம்பினேன்.

நண்பர் ஒருவரோடு பேசிக் கொண்டிருக்கும்போது இலக்கில்லாமல் சுற்றி வரப் போகிறேன் என்பதைப் பகிர்ந்து கொண்டேன். உடன் அவர் கேட்டது..

“என்ன.. எஸ்ராவா.. தேசாந்திரியா?”

கண்டிப்பாக இல்லை. எஸ்ரா, கோணங்கி போன்றோரின் வாழ்க்கை மீது பொறாமை கலந்த காதல் உண்டென்றாலும்  ஒருபோதும் அவர்களைப் போல அலைந்து திரிவது எனக்குச் சாத்தியப்படாது. எங்கும் குட்டியைத் தூக்கிச் சுமக்கும் அழகர்மலை குரங்கைப் போல வீட்டின் நினைவுகளையும் நெருங்கின மனிதர்களையும் எப்போதும் சுமந்து திரிபவன் நான்.  இது என்னால் இயன்ற ஒரு சின்ன விடுபடல். அன்றாட வாழ்வில் தொலைந்து போகாமல் என்னை நான் தக்க வைத்துக் கொள்ள செய்திடும் சிறு முயற்சி. அவ்வளவே.

போவதென்று முடிவான பின்பு எங்கே போவது எனும் கேள்வி வந்தது. எங்கிருந்து தொடங்குவது என நிறைய யோசித்த பின்பு நான் பெரிதும் வெறுக்கும் நகரமான சென்னைக்கே முதலில் செல்வது எனத் தீர்மானித்தேன். கல்லூரி காலத்தோடு காணாமல் போன ஒரு சில நண்பர்களைப் பார்க்கலாம் என்பதோடு சென்னையின் மால்களில் சுற்ற வேண்டும் என்பதும் அதற்கு ஒரு காரணம். யாரும் உள்நுழையாத ஆடம்பரக் கடைகளுக்குள் எவரேனும் வர  மாட்டார்களா என மிருகத்தின் பசியை கண்களுள் தேக்கி நிற்கும் மால்களிலுள்ள கடைகளின் சிப்பந்திகளைப் பற்றிய ஒரு நடுக்கம் எனக்குள் உண்டு. அவர்களைப் பற்றிய கதை ஒன்றை எழுதும் எண்ணமும் உண்டு. ஆகவே சென்னைதான் ஆரம்பப்புள்ளி என முடிவானது.

சென்னை வந்து இறங்கியபின்பு நான் சந்திக்க விரும்பிய கல்லூரித் தோழனுக்கு அழைத்தேன். அது ஒரு சனிக்கிழமையாக இருக்க தான் சொந்த ஊருக்குப் போய் விட்டதாகச் சொன்னவன் சொல்லாமல் கொள்ளாமல் வந்ததற்காகக் கடிந்து கொண்டான். மற்றவர்களும் ஊரில் இருக்க வாய்ப்பு மிகவும் குறைவு என்பதாய் அவன் சொல்ல நண்பர்களைச் சந்திப்பது இனி சாத்தியப்படாது என்று தெரிந்தது. எந்த மாலுக்குச் செல்லலாம் என்கிற என் கேள்விக்கு புதிதாய்த் திறந்திருக்கும் ஃபோரம் மாலுக்குப் போகலாம் எனச் சொன்னான். நாள் முழுதும் அங்கே கழித்து விடலாம் ஆனால் இராத்தங்கலுக்கு என்ன செய்வது என்கிற புதுக்குழப்பம் வந்து சேர்ந்தது.

அடுத்து எங்கே போவது எனத் தெரியாது. சென்னையில் தான் இரவு தங்க வேண்டும். பணம் செலவழித்து அறையெடுத்துத் தங்க வசதி பற்றாது எனும் சூழலில் நான் நன்கறிந்த அல்லது அப்படி நம்பிக் கொண்டிருந்த சில நண்பர்களுக்கு அழைத்தேன். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் சொன்ன பதிலோ எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒருவர் தனது அப்பாவைக் கேட்க வேண்டும் என்றார். ஒருவர் தனது வீட்டு முதலாளியிடம் அனுமதி பெற வேண்டும் எனச் சொன்னார். இன்னொருவர் மனைவி வீட்டில் இல்லாத காலத்தில் நண்பர்களைக் கூட்டி வந்தால் குடும்பத்தில் பிரச்சினை உண்டாகும் என்றார். எனக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. இறுதியில் எனக்கு சிரிப்புத்தான் வந்தது. ஒரு நிமிடம் எனது வீட்டின் நினைவு வந்து போனது.

பள்ளியின் இறுதி வருடக் காலம். முத்துக்குமார் என்றொரு நண்பன் என்னோடு படித்துக் கொண்டிருந்தான். ஒரு மதிய நேரம் அவனை வீட்டுக்குக் கூட்டிப் போயிருந்தேன். அம்மா வேலைக்குப் போயிருக்க வீட்டில் அம்மாச்சி மட்டும்தான் இருந்தார். வந்தவனுக்கும் சேர்த்து உணவு கொடுக்கும்படி அம்மாச்சியிடம் சொன்னேன். என்ன ஆளுகளோ என்னவோ என அவனுக்குத் தனியாக உணவு தர முடியாது என அவர் மறுத்து விட்டார். கோபம் கொண்டு எனது தட்டில் சோற்றைப் போட்டுக் கொண்டுபோய் அதிலேயே சாப்பிடும்படி சொல்லி இருவரும் சாப்பிட்டோம். மாலை வீடு திரும்பியபின் அம்மாவிடம் அம்மாச்சி போய் சொல்ல அவருக்குத் தான் திட்டு கிடைத்தது. 

சிறுவயது முதலே எனது வீட்டில் இப்படித்தான். நான் வைத்தது தான் சட்டம். கல்லூரிக் காலத்திலும் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வருகிறேன் ஏற்ப்படுகள் செய்து வையுங்கள் என அம்மாவிடம் சொல்லி இருக்கிறேனே தவிர அழைத்து வரட்டுமா என்று அனுமதி கேட்டதில்லை. இப்படியான சூழலில் வளர்ந்தவனுக்கு மற்றவர்கள் சொன்ன காரணங்கள் சிரிப்பை வரவழைத்ததில் ஆச்சரியம் இல்லைதானே? 

நான் மேலே இருக்கும் அண்பர்கள் யாரையும் குற்றம் சொல்ல முற்படவில்லை. மாறாக நான் எத்தனை சுதந்திரத்தோடு வளர்க்கப்பட்டிருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்திய தருணம் அது என்பதைச் சொல்லவே ஆசைப்படுகிறேன். அந்தக்கணம் என் அம்மாவுக்கு மனதுக்குள் நன்றி சொல்லிக் கொண்டேன்.பல நண்பர்களிடம் கேட்டு கடைசியாக நண்பர் மேவியின் வீட்டில் தங்கிக் கொள்ளலாம் என முடிவானது. உடைமைகளை எடுத்துக் கொண்டு மாலுக்குக் கிளம்பினேன்.

- பயணிப்போம்




July 29, 2013

பட்டத்து யானை




“பட்டத்து யானை – போலச் செய்தலின் துயரம்”னு தான் ஆரம்பிக்கலாம்னு இருந்தேன். ஆனா சாரி, இந்தப்படம் அதுக்கெல்லாம் வொர்த் இல்லை. கொஞ்ச நாள் முன்னாடி – வேட்டைக்காரன் வெளியான சமயம் – ஆனந்த விகடன்ல விஜய் ரசிகர்கள் கடிதம் எழுதின மாதிரி ஒரு மேட்டர் பண்ணியிருந்தாங்க. போஸ்டர்ல இருக்க கதாநாயகியோட முகமும், பாட்டும் வேற வேறயா இருக்குறத வச்சுத்தான் தலைவா உங்க படங்களுக்கு நடுவுல இருக்க வித்தியாசங்களைக் கண்டுபிடிக்க முடியுதுன்னு எழுதி இருப்பாங்க. அது விஷாலோட பட்டத்து யானைக்கும் பொருந்தும். நாம நடிச்ச படத்தோட கதைலயே மறுபடியும் நடிக்கிறோமேன்னு சின்ன குற்றவுணர்ச்சி கூட இவங்களுக்கு எல்லாம் வராதா?


அந்நியன் – கந்தசாமி


மலைக்கோட்டை – பட்டத்து யானை


விக்ரம் – விஷால் – விளங்கிரும் (இதுல இன்னொரு வி-யும் வரும்.... அதான் ஊருக்கே தெரியுமே)


வெடி, சமர்னு ரெண்டு பிளாக்பஸ்டருக்குப் பிறகு இந்தப்படமாவது ஓடாதான்னு விஷால் ஏங்கிப் போயிருக்காரு. சாரி பாஸ், பாண்டியநாடு எதையாவது மாத்துதான்னு பார்ப்போம். வெளிறிப் போன வெள்ள காக்கா (அல்லது) வேக வைக்காத கருவாடு மாதிரி இருக்காங்க ஐஸ்வர்யா அர்ஜுன். அவங்களுக்கு ரெண்டு பாட்டு + நாலு சீன் = கேமிராமேன் இஸ் வெரி பாவம். படம் முழுக்க வந்தும் சந்தானத்தால யாரையும் சிரிக்க வைக்க முடியலைன்னா அவர் கேரக்டர் எவ்வளவு மொக்கைன்னு பார்த்துக்கோங்க. கலர் ஜெராக்ஸ் போட்ட காட்ஸில்லா, காடையை வறுத்து கல்லாவுல உட்கார வச்சது எவண்டான்னு டிரைலர் காமெடியைப் பார்த்து ஏமாந்து படத்துக்கு போன நமக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும். விஷால் கிட்ட அடி வாங்கிச் சாகுறதுக்கு ஒரு சீரியஸ் வில்லன், சில பல காமெடி வில்லன்கள்னு பலர் வந்து போறாங்க.. வந்து… போறாங்க.. அவ்வளவே. எப்பவும் போல ரெண்டு சீனே வந்தாலும் மயில்சாமி பட்டாசு.


இண்டெர்வல் ப்ளாக்ல வருது பாருங்க ஒரு ட்விஸ்டு.. யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டோம். வில்லன் காண்டாகிக் கத்துறாரு.. “ஆஃப்டர் ஆல் ஒரு சமையக்காரன் நீ.. என்ன அடிச்சிட்டியா..” ஒடனே விஷால் அடிக்கிறாரு பாருங்க ரிபீட்டு.. “ஆமாண்டா.. நா சமையக்காரன் தான்.. ஆனா நா சமையல் கத்துகிட்டது எங்க தெரியுமா.. மதுர ஜெயில்லடா..” எனக்கோ ஒரே பயம். “நான் சாணக்கியன் இல்ல.. சத்திரியண்டா...” ஹோ ஹோ ஹோன்னு பேக்கிரவுண்டு முசீக் போட்டு மீனாட்சி அம்மன் கோயிலைக் காட்டிருவாய்ங்களோன்னு. நல்ல வேளை தப்பிச்சோம்டா சாமி. இப்படித்தான் போகும்னு தெரிஞ்சாலும் ஃபிளாஷ்பேக்குல வர்ற குழந்தையோட கதை – அந்தப் பத்து நிமிஷம் மட்டும்தான் கொஞ்சமாவது படத்தோட டிராவல் பண்ண முடிஞ்சது.     


ஹாரிஸ் ஜெயராஜுக்கு ஒரு அருள் மாதிரி தமனுக்கு இந்தப்படம். ஒரு பாட்டு கூட வெளங்கலை. என்னவொரு என்னவொரு அழகியடா பாட்டு மட்டும் பரவாயில்லை ரகம். ஆனா அதையும் இதுக்கு முன்னாடி எங்கயோ கேட்ட மாதிரியே இருக்கு. படமே சரியில்லைன்னு ஆன பிறகு ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, எடிட்டிங் பத்தியெல்லாம் தனித்தனியா பேசி என்ன ஆகப்போவுது? விடுங்க.. பூபதிபாண்டியனோட காதல் சொல்ல வந்தேன் கான்செப்ட் மோசம்னாலும் படம் பார்க்க நல்லா இருந்தது. ஆனா திரைக்கதை சொதப்பினதால பட்டத்து யானைல சுத்தமா உட்காரவே முடியலை. டைரக்டர் சார்.. முடிக்கிறதுக்கு முன்னாடி ஒரே ஒரு டவுட்டு.. இந்தப்படத்துக்கு எதுக்கு சார் பட்டத்து யானைன்னு பேர் வச்சீங்க?

July 22, 2013

மரியான்


ஆப்பிரிக்காவில் தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொண்ட மனிதொருவர் ஒரு மாத வாழ்வா சாவா போராட்டத்திற்குப் பின்பு அவர்களிடமிருந்து மீண்டு வந்த செய்தினை அடிப்படையாகக் கொண்டு தனது மரியானை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் பரத்பாலா. ஒரு சாதாரணன் தான் வேலை பார்க்கச் சென்ற இடத்தில் மரணத்தின் பிடியில் சிக்கி மீளுவதை இயல்பாகக் காட்ட வேண்டிய கதை இது. ஆனால் கண்டம்  விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளைக் கண்டு உள்ளம் உவக்கும் தமிழனுக்கு இது மட்டும் போதுமா என்ன? ஆக நாயகனுக்கு ஒரு முன்கதை அவசியமாகிறது. சாதாரணன் எனும் பதம் மறைந்து அங்கே ஒரு சாகச நாயகனுக்கான தேவை வலுக்கட்டாயமாக உருவாக்கப்படுகிறது.

கடல்புறத்தில் தனுஷ் அறிமுகமாகும் காட்சியில் யாராலும் எளிதில் பிடிக்க முடியாத சுறா மீனை ஆழ்கடலில் அனாயாசமாகச் சென்று பிடித்து வருகிறார். மீனவர் ஒருவர் பின்னணியில் கத்தியபடியே ஓடுகிறார். “இருபது வருஷத்துக்கு முன்னாடி அவங்க அப்பனால முடியாததை மரியான் செஞ்சுபுட்டாண்டா..” இந்த இடத்திலேயெ தனுஷ் ஒரு சராசரி மீனவன் அல்ல என்பது சொல்லப்பட்டு விடுகிறது. பின்பாக இதை மேலும் வலுவாக்கும் வண்ணம் இன்னொரு காட்சியும் இருக்கிறது. 

படகில் மீன் பிடிக்கச் செல்லும்போது தனுஷிடம் நாயகியின் தந்தை என்பதாகச் சொல்லப்படும் சலீம்குமார் தீக்குச்சி இருக்கிறதா எனக் கேட்கிறார். தன்னிடம் இல்லாத தீப்பெட்டிக்காக அருகிலிருக்கும் படகுக்கு கடலில் குதித்து நீந்தி செல்லும் தனுஷ் தன் வாயில் அந்தப் பெட்டியினை அதக்கியபடி மீண்டும் படகுக்கு வருகிறார். இப்போதும் பின்னணியில் ஒரு குரல் ஒலிக்கிறது. “இவன் அடங்க மாட்டானே?” 

மீனவ கிராமத்திலேயே மிகுந்த அழகுடையவளான நாயகி தன்னைத் துரத்தினாலும் அவளிடமிருந்து விலகிச் செல்வதும் அவள் நன்மைக்காகவே தான் அவளை வெறுப்பதாகவும் தனுஷ் சொல்கிறார். முதல் பாதி முழுக்க இப்படியான காட்சிகளால் தனுஷின் மரியானை எல்லாரையும் முந்திச் செல்லும் சாகச நாயகனாக நிறுவிட இயக்குனர் முயன்றிருக்கிறார். இதற்கான தேவை என்ன? ஏன் நாம் எப்போதும் தலைமைப் பண்புகள் நிறைந்தவர்கள் மட்டுமே நாயகனாக இருக்க முடியும் என நம்புகிறோம்? இவை ஏதும் இல்லாமல் சாதாரண மனிதனால் தன் சாவோடு போராடி வெல்ல முடியாதா எனும் கேள்விகள் இங்கே தொக்கி நிற்கின்றன.

பூ படத்தின் மாரி இப்போது பனிமலராக மாறி மரியானில் மறுபிரவேசம் செய்திருக்கிறார். உயிர்ப்பாய் நடித்திருந்தாலும் எத்தனை தூரம் பனியால் ஒரு ஏழை மீனவப்பெண் பாத்திரத்துக்கு நியாயம் செய்ய முடிந்திருக்கிறது? மார்புப்பிளவுகள் காட்டும் பாவாடை சட்டை, மையப்பிய த்ரெட்டிங் செய்யப்பட்ட விழிகள் என யாவும் அவளை அச்சூழலுக்கு ஒரு அந்நியளாகவே உணர்த்துகின்றன. “நீ உயிரோட வந்திட்ட.. அது போதும்..” என உருகும் காட்சி மட்டும் இப்போதும் கண்ணுக்குள். கதாபாத்திரங்களை அவற்றுக்கான நியாயத்துக்குத் தகுந்தாற்போல நடிகர்களைத் தேர்வு செய்ய இயக்குனர் தவறி இருப்பதற்கான அத்தாட்சிகள் சலீம் குமாரும், உமா ரியாசும்.

சர்வதேச அளவில் இயங்கும் மனிதர்களை ஒரு பிராந்தியத்துக்கான் படத்தில் வேலை பார்த்திட அழைத்து வரும்போது அவர்களால் இங்குள்ள தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமல் போகும் என்பதை நிரூபிக்கிறது கோனிக்ஸின் ஒளிப்பதிவு. கடலோர கிராமம் எனும்  நிலம் சார்ந்த எந்த அடிப்படை தகவல்களும் இல்லாமல் பெரும்பாலும் கிளிஷே எனச் சொல்லப்படும் காட்சிகளாகவே முதல் பாதி முழுக்க அமைந்திருக்கிறது. 

அவருக்கான உண்மையான களத்தை இரண்டாம் பாதியில் வரக்கூடிய பாலைவனக் காட்சிகள் மட்டுமே தரவியலும். அங்கும் இயக்குனரின் குழப்பமே மேலோங்கி நிற்க அங்கும் ஒளிப்பதிவு வெகு சாதாரணமாகவே அமைந்து விடுகிறது. இடைவேளையின் போது நீண்ட பாறையின் மீது நின்றபடி கத்திக்கொண்டிருக்கும் பார்வதியை தனுஷ் திரும்பிப் பார்க்காமல் போவதை லாங் ஷாட்டில் எடுத்திருப்பார். இறுதியில் தனுஷ் திரும்பி வரும்போது பார்வதி அதே பாறையில் காத்திருக்கு தனுஷ் மெதுவாக நடந்து வருவதை மீண்டும் காட்டும் லாங் ஷாட் ஒன்று மட்டுமே உணர்வுகளைச் சரியாய் வெளிப்படுத்துவதாக இருந்தது.

ரஹ்மானின் இசை நன்றாக இருக்கிறது என்றபோதும் பாடல்கள்படமாகப் பார்க்கும்போது அயர்ச்சி தரக் காரணம் அவை இடம்பெறும் தருணங்கள் மட்டுமே. பெரிதும் எதிர்பார்த்த கடல் ராசாவும் ஏமாற்றம் தருகிறது. பின்னணி இசையில் பெரும்பாலும் தனது பாடல்களின் ஹம்மிங்கைப் பயன்படுத்துவது ரஹ்மானின் வழக்கம். அது சில நேரங்களில் அற்புதமாக அமைந்து விடும், கண்டுகொண்டேன் இறுதிக் காட்சியைப் போல. பல நேரங்களில் அது எதிர்மாறான விளைவை ஏற்படுத்தவும் கூடும் என்பதற்கு மரியான் எடுத்துக்காட்டு. 

குட்டி ரேவதி - ஜோ டி குருஸ் - வாழை இலை வெட்டுறதுக்கு என்னத்துக்குடே அருவா?

பல விளம்பரப் படங்கள் இயக்கியிருந்தாலும் திரைப்படம் என வரும்போது இன்னும் அதிகமாக சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கலாம் பரத்பாலா. கடற்படையினர் சுட்ட உடல்கள் மிகச்சரியாக அவர்கள் கிராமத்தைத் தேடி வந்து மிதப்பது, படத்தின் ஆரம்பத்தில் வரும் ஆப்பிரிக்க இடை பின்னர் தீவிரவாதிகளின் கூடாரத்திலும் இசைப்பது முதலான லாஜிக் இடறல்கள் தொடங்கி வெகு மெல்லமாக குழப்பங்களோடு நடைபோடும் திரைக்கதை, நாயகியின் செருப்பை உரசும் அந்தர கால வில்லன் உலாவும் முதல் பாதி எனப் பல இடங்களில் சருக்கி இருக்கிறார் இயக்குனர். “3” படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை தனுஷின் அற்புதமான நடிப்பு வீணாகி இருக்கிறது.

படம் முடியும்போது “இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாத்தான் என்ன” என்கிற பாடல் ஒலிக்க ஆரம்பிக்கிறது. ஆனால் உங்க படம் அதுக்குத் தோதா இல்லையே இயக்குனர் சார்....

December 9, 2012

நீர்ப்பறவை


பிராந்தியம் அல்லது தேசியம் சார்ந்ததொரு பிரச்சினை. அதனூடாகச் சொல்லப்படும் ஒரு காதல். காதலர்கள் சந்திக்கும் சங்கடங்கள். அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் அல்லது முடிவு என்ன - இதுதான் மணிரத்னம் படங்களின் டெம்ப்ளேட். கிட்டத்தட்ட இதே மாதிரியானதொரு டெம்ப்ளேட் கதையாக உருவாகி இருக்கிறது நீர்ப்பறவை.  

விஷ்ணுவைப் பார்த்தால் மீனவ இளைஞன் என்றே நம்ப முடியவில்லை. அவரது உடைகள் காலத்துக்கும் சூழலுக்கும் சற்றும் பொருத்தமில்லாமல் இருக்கின்றன. வெகுஜனத் திரைப்படங்களின் சாகச நாயகனுக்கும் விஷ்ணுவுக்கும் பெரிய வித்தியாசங்கள் ஏதுமில்லை. தண்ணியடித்து சலம்பிக் கொண்டிருப்பவர் ஒற்றைப் பார்வையில் காதல் வயப்படுகிறார். திருந்துகிறார். கட்டுமரத்தில் ஒரே நாளில் சிரமப்பட்டு ஏறி நின்று சர்க்கஸ் செய்கிறார். யாராலும் பிடிக்க முடியாத சுறா மீனைப் பிடிக்கிறார். 

காதலுக்காக ஊர் மக்களை எதிர்த்து நியாயம் கேட்கிறார். மீன் விற்கிறார். தரகு வேலை செய்பவன் தான் பிழைக்கத் தெரிந்தவன் என வசனம் பேசுகிறார். நாற்பது நாட்கள் படகில் மீன் பிடிக்கத் தடை விதித்தால் தூத்துக்குடி போய் உப்பளத்தில் வேலை பார்க்கிறார். சமுத்திரக்கனியின் உதவியோடு வல்லம் வாங்குகிறார். தமிழ்ப்படம் ஷிவா போல ஒரு காபி குடிப்பதற்குள் பணக்காரன் ஆகவில்லை என்பது மட்டுமே வித்தியாசம். 

அண்ணாமலை படத்தில் வினு சக்கரவர்த்தி ரவுடி எம் எல் ஏவாக வருவார். ரஜினி அவருக்கு அரசியல் என்றால் என்ன என்பதைப் புரிய வைத்தவுடன் திருந்தி விடுவார். பிற்காலத்தில் ரஜினி சிரமப்படும்போது அவருக்கு உதவி செய்வார். சூரியவம்சத்தில் ஆர்.சுந்தர்ராஜன். இது மாதிரி விக்கிரமன் படங்கள் எல்லாவற்றிலும் நாயகன் சிரமப்படும்போது உதவுவதற்கென்றே சில கதாபாத்திரங்கள் உலாவும். நீர்ப்பறவையில் உப்பளக்காரரும் அவரது தங்கையும்.

சாராயம் விற்பவளின் மகன் விஷச்சாராயம் குடித்து சாகக்கிடக்க நாயகன் காப்பாற்றுகிறார். அதோடு விட்டிருக்கலாம். அடுத்த காட்சியில் வடிவுக்கரசி (சாராயம் விற்பவர்) தனது சாராயப் பானையை உடைக்கிறார். நாயகன் மதுமீட்பு மருத்துவமனையில் அடைக்கப்படுகிறான். தனது கைகள் நடுங்காததைக் கண்டு தான் திருந்தி விட்டதை உணர்கிறான். யாராலும் பிடிக்க முடியாத மீனைப் பிடித்தவனிடம் நாயகி கேட்கிறாள் “யாராலுமே பிடிக்க முடியாத மீனை நீ பிடிச்சியாமே?”. திரும்பும் திசையெல்லாம் கிளிஷே காட்சிகள்.

இந்தப்படத்துக்கு நந்திதா தாசும் நாந்தான் கொன்னேன் எனும் வசனமும் படத்தை ஃப்ளாஷ்பேக்கில் சொல்லும் உத்தியும் எதற்கு? நடு நடுவே என் கணவர் அவ்வளவு காதலிச்சார் தெரியுமா என பேக்கிரவுண்டு வாய்ஸ் வேறு. மீனவர்கள் வாழ்வாதாரம் சார்ந்த விசயங்களைப் பேசும் சமுத்திரக்கனியின் கதாபாத்திரமும் படத்தோடு ஒட்டவில்லை. அரசியல் பேச வேண்டும் என்பதற்காக வெட்டி இட்டப்பட்ட கதாபாத்திரமாகத் தான் வந்து போகிறார். 

கடல்புறத்தில் வாசித்து நாயகிக்கு பெயர் வைக்கலாம். ஆழி சூழ் உலகிலிருந்து அனியம், வல்லம் செய்யும் தொழில், கடலில் இறங்கும் வல்லத்துக்கு செய்யப்படும் பூஜை என்றெல்லாம் அடித்து விடலாம். ஆனால் கதாபாத்திரங்களில் ஓரிருவராவது அந்த வட்டார வழக்கில் உரையாட வேண்டாமா? 

கல்லூரியில் நான் படித்த காலத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த பெர்னாந்தோ நண்பர்கள் நிறைய இருந்தனர். பாசம் காட்டுவதிலும் அன்பு செலுத்துவதிலும் எத்தனை தீவிரமானவ்ர்களோ அதேபோல கோபம் வந்தாலும் அவர்களை எளிதில் அடக்க முடியாது. ஆனால் நீர்ப்பறவையில் இயக்குனரால் அவர்களது சுபாவத்தின்   ஒரு துளியைக் கூட சரியாகக் காட்சிப்படுத்த முடியவில்லை. சரக்கைப் போட்டுவிட்டு புனிதமான சர்ச்சுக்குள் நுழைந்த நாயகன் நாயகியின் அருகில் படுத்துக் கொள்கிறான். ஒற்றைச் சலம்பலோடு அது முடிந்து போகிறது. மீனவர்கள் தவிர்த்து யாரும் கடலுக்குள் போகக்கூடாது எனச் சொல்பவரின் படகையே நாயகன்  திருடுகிறான். அதையும் பாதிரி எளிதில் மன்னிக்கிறார். காலம் காலமாக மீன் வியாபாரம் செய்பவர்களுக்குத் தெரியாத வித்தையாக நாயகன் ஊருக்குள் சென்று மீன் விற்கிறான். அதையும் யாரும் கேட்பதில்லை. ஆனாலும் உங்களுக்கு ரொம்பத் தைரியம் பாஸ். 

படத்தில் சொல்லும்படியான நல்ல விசயங்கள் - சுனைனா, சுனைனா, சுனைனா. அதுதான் அருளுக்கான வல்லம் என சமுத்திரக்கனி யாரோ போல சொல்லும்போது மெதுவாகக் கண்கள் கலங்கி நிற்கும் காட்சி - படத்தின் ஆகச்சிறந்த காட்சி. 

ஒளிப்பதிவும் இசையும் நன்றாய் அமைந்தும் இயக்குனர் அவற்றைச் சரியாக பயன்படுத்தத் தவறிவிட்டார். மீனவர் - இலங்கை ராணுவம் என மிக முக்கியமானதொரு பிரச்சினையை பின்புலனாக எடுத்துக் கொள்ளும்போது அதற்கான நியாயத்தைச் செய்ய வேண்டாமா? சாதாரண காதல் கதையைச் சொல்லத்தான் இத்தனை பில்டப்பா என்ற கடுப்புத்தான் மிஞ்சியது. என் படம் இவ்வளாவுதான் என்று சொல்லிவிட்டு சாதாரணமாகக் கமர்ஷியல் படம் எடுப்பவர்களே பரவாயில்லை என்று தோன்றுகிறது.

(படம் பார்த்த பின்பு விமர்சனம் எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் டிவியில் வந்து இதுவொரு நேர்மையான படம் என்று கழுவி ஊற்றும் இயக்குனரின் மீதானக் கடுப்பே இவ்விமர்சனம். நண்பர்கள் பொறுத்தருள்க..)

October 8, 2012

உதிரிப்பூக்கள் - 18

அப்பாவோடு வண்டியில் ரயில்வே காலனி வழியே போய்க் கொண்டிருந்தேன். போலிஸ் லைன் அருகேயிருக்கும் தண்ணித் தொட்டியைத் தாண்டும்போது ஏதோ ஞாபகம் வந்தவர் வண்டியை நிறுத்தச் சொன்னார். செய்தேன். இறங்கிப் போனவர் நேராக அங்கிருந்த பள்ளத்தில் போய் அமர்ந்து கொண்டார். வெகு நேரமாக வராதவரை என்னவென்று போய்ப் பார்த்தால் மனிதருக்குக் கண்ணெல்லாம் கலங்கி இருந்தது.

என்னப்பா ஆச்சு?

என் கூட சின்ன வயசுல இருந்து ஒண்ணா இருந்தவன்யா.. தர்மராசுன்னு பேரு. போன மாசம் தவறிட்டான். இந்த வழியாப் போனோமா.. அவன் நெனப்பு வந்திருச்சு. நாங்க நாலஞ்சு பேரு கூட்டாளிங்க.. உங்களுக்கு அந்தக் கொழாயடி மாதிரி..   இந்தத் தொட்டிக்குக் கீழ தான் எல்லாரும் விழுந்து கெடப்போம். இன்னைக்கு அவனுக யாரும் இல்ல. நான் மட்டும்தான் கடைசி.

வண்ணதாசனுக்கு நடைபெற்ற "அந்நியமற்ற நதி" கூட்டத்தில் எஸ்ரா பேசிய வார்த்தைகள் தான் என் நினைவுக்கு வந்தன. "இடம் என்பது வெறும் இடம் மாத்திரம் அல்ல. அவை நினைவுகளின் மீதங்கள். காலம் மனிதர்களைக் கவர்ந்து போக இடம் மட்டும் அவர்களுடைய நினைவுகளைத் தாங்கி நிற்கிறது. ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு அர்த்தத்தை நமக்குத் தந்து போகிறது."

எத்தனை சத்தியமான வார்த்தைகள்? நீருக்குள் கிடக்கும் கூழாங்கற்களாய் ஆழ் மனதில் உறைந்து கிடக்கும் நினைவுகளை மீட்டெடுத்து பைத்தியம் பிடித்ததென நம்மை அலைக்கழிப்பவை இடங்கள். கலைடாஸ்கோப் போல பார்ப்பவரின் தன்மைக்கேற்ப தனது இயல்பையும் இருப்பையும் அவை மாற்றிக் கொள்கின்றன. நிறங்களின் வழி கசிந்துருகும் சில கனவுகள் உயிர்ப்பாய் இருக்கின்றன. சில நம்பிக்கைகள் மொத்தமாய்த் தொலைந்து போகின்றன. வாழ்வின் அற்புத கணங்களை, நாம் இழந்த மனிதர்களை, சந்தோசங்களை, துக்கங்களை, துரோகங்களை என யாவற்றையும் உயிர்ப்பாய் வைத்திருப்பவை நாம் தாண்டிப்போகும் இடங்கள்தானே?

ஒவ்வொரு முறையும் மதுரைக் கல்லூரி பாலத்தின் மீது போகும்போதும் என் கண்கள் சுப்பிரமணியபுரத்தின் சாலைகளில் வீழ்ந்து மீளும். என் வாழ்வின் மிக முக்கியமான காலகட்டம் அங்கேதான் கழிந்தது. உலகம் என்பது என்னவென்று எனக்கு சொல்லித் தந்தது அந்த இடம். இன்றிருக்கும் என்னை வடிவமைத்தது  என நான் அங்கிருந்த நாட்களைச் சொல்லலாம்.

நான் குடியிருந்த சாந்தா அத்தை காம்பவுண்டின் முதல் வீட்டில் இருந்த மீனாக்காவுக்கு பாட்டு என்றால் உயிர். தன் தங்கையோடு சேர்ந்து மேடைக் கச்சேரிகளில் பாடுபவர். இரவில் அவரது வீட்டின் உள்ளிருந்து எப்போதும் ஒரு மெல்லிய ஹம்மிங் கேட்டபடி இருக்கும். நானும் என் தங்கச்சியும் ஒரு நாள் இல்லைன்னா ஒருநாள் சூலமங்கலம் சிஸ்டர்ஸ் மாதிரி பிரமாதமா வருவோம்டா. மடியில் அமர்த்தி என் தலைகோதி பிரியமாகச் சொல்லுவார். இப்போது மீனாக்கா எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. ஆனால் கோவில் திருவிழா மேடைகளைக் கடக்கும்போதெல்லாம் அங்கு பாடிக் கொண்டிருப்பவர் மீனாக்காவாக இருக்கக்கூடாது என்று பதட்டமாக இருக்கும். 

எதைச் சாப்பிட்டாலும் வீட்டுக்குள் பேண்டு வைக்கிறார் என வாசலுக்குத் துரத்தப்பட்டவர் எதிர்வீட்டு சம்முவம் பாட்டையா. ரோட்டில் விளையாடும் பசங்களைத் திட்டிக் கொண்டே இருப்பார். மேலே பந்து விழுந்தால் எடுத்து வைத்துக் கொண்டுத் தர மாட்டார். அவரைக் கண்டாலே எங்களுக்கு எரிச்சலாக வரும். நான் வீடு காலி செய்வதற்கு இரண்டு நாட்கள் முன்பு என்னை வரச் சொன்னார் எனப் போயிருந்தேன். தன் தலைகாணிக்குக் கீழிருந்து ஒரு சின்ன டப்பாவை எடுத்துத் தந்தார். அது முழுக்க பழங்காலத்து நாணயங்கள். நான் சேகரிப்பது தெரிந்து எனக்காகக் கொடுத்து விட்டார். இன்னும் கொஞ்ச நாள்ள போகப் போறவன் எனக்கு எதுக்குய்யா, எங்க இருந்தாலும் நல்லா இரு எனக் கண்களில் கண்ணீர் மல்கியபடி கொடுத்த அந்த மனிதரின் பிள்ளைகள் மீதான பிரியம் அன்றுதான் புரிந்தது. அவர்  இன்னும் உயிரோடு இருப்பாரா? இல்லை அந்தக் கட்டில் இன்னும் வெளியேதான் கிடக்குமா? 

மொட்டை மாடியில் நின்றபடி நான் உன்னை விட்டுப் போக மாட்டேண்டா என அழுதவளின் ஈரத்தை இன்னும் உணர முடிகிறது தோள்களில். எனக்குக் கெட்ட வார்த்தை சொல்லித்தந்த குரு பால்வண்டி பாலாஜியும் பாதியில் படிப்பை விட்டு லேத்துக்குப் போன குட்டை குமாரும் என்ன ஆனார்கள்? சாந்தா அத்தையின் மூன்றாவது மகள் தான் காதலித்த ராஜசேகர் அண்ணனோடு ஓடிப்போனாளா இல்லையா? ரைஸ்மில் கிரவுண்டில் கட்டப்பட்ட பாலகுருகுலம் ஸ்கூலுக்குள் எங்காவது ஒரு ஓரத்தில் அவுட், சிக்ஸர் போன்ற அலறல்கள் இன்னும் கேட்குமா? நிறைய கேள்விகள் என் மனதுக்குள் ஓடியபடி இருக்கும். ஒருமுறை அந்தப் பகுதிக்குப் போய்ப் பார்க்கலாமா எனவும் தோன்றும். ஆனால் ஏதோவொரு இனம்புரியாத பீதியும் பதட்டமும் என்னை இன்றுவரை அங்கே போகவிடாமல் செய்தபடி இருக்கின்றன.

பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலம். அப்போது நான் சோலைஅழகுபுரத்தில் குடியிருந்தேன். ஸ்ரீனிவாசா தியேட்டருக்குப் பின்னால்  ஒரு காம்பவுண்டில் வீடு. அங்கே என் கூட்டாளியாக இருந்தவன் டோரி என்கிற வெங்கடேசன். ஒன்றரைக்கண் என்பதால் டோரி. ரொம்ப அப்பாவி. வீட்டுக்கு பயந்தவன். எனக்கு ரெண்டு வயது மூத்தவன். எங்கள் காம்பவுண்டுக்கு எதிர்வீட்டில் கோமதி, சோபனா என்று இரண்டு பிள்ளைகள். அண்ணா அண்ணா என்று என் மேல் உயிரை விடுவார்கள். பள்ளிக்குப் போகாத நேரங்களில் அவர்கள் வீட்டில்தான் தெருப்பிள்ளைகள் எல்லாம்  ஒன்று கூடி விளையாடுவோம்.

கோமதியின் தோழியாகத்தான் கீதாஞ்சலி எங்களுக்கு அறிமுகமானாள். அவளுடைய அம்மா சின்ன வயதில் யாரோடோ ஓடிப்போய் விட்டாள் என்பதால் அவளுடைய அப்பாவுக்கு அவளைப் பிடிக்காது. தன் பாட்டியோடு வசித்து வந்தவள் நாங்கள் இருந்த ஏரியாவுக்கு வீடு மாற்றிக் கொண்டு வந்த கொஞ்ச நாளிலேயே எங்கள் எல்லோரோடும் ரொம்ப நெருக்கமாகி விட்டாள். நமக்கென ஒரு காதலி இருந்தால் தான் கவுரவம் எனத் தீவிரமாக நம்பியதோடு அதற்கான முயற்சிகளில் மனம் தளராமல் நான் ஈடுபட்டிருந்த பருவமது. ஆக நான் காதலிக்க வேண்டியவர்கள் வட்டத்துக்குள் கீதாவும் வந்து சேர்ந்ததில் எந்த ஆச்சரியமும் இருக்கவில்லை. 

எப்போதோ ஒருமுறை தனக்குக் கவிதைகள் பிடிக்கும் என கீதா சொல்லி இருந்தாள். ஆகவே கவிஞர் அவதாரம் எடுத்து அவளை கரெக்ட் செய்யலாம் என முடிவு செய்தேன். ஒரு அன்ரூல்டு நோட்டு முழுக்கக் கவிதைகள். “இந்தப் பூக்களின் வாசமெல்லாம் அந்த மாலையில் வாடி விடும் நம் காதலின் வாசமெல்லாம் எந்த நாளுமே முடிவதில்லை”. புதிய பாட்டாக எழுதினால் கண்டுபிடித்து விடுவாள் என்பதற்காக தேடித் தேடி பழைய பாடல் வரிகளாக எழுதி வைத்திருந்தேன். ஆனால் என் நேரத்துக்கு அந்த நோட்டு கீதாவின் கைகளில் போய்ச் சேர்வதற்கு முன்பாக என் அம்மாவிடம் சிக்கிக் கொண்டது. வாசித்து விட்டு என்ன கருமம்டா இது எனக் கிழித்துப் போட்டு விட்டார். இருந்தும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல என் முயற்சிகள் தொடர்ந்தபடி இருந்தன.

ஒரு மாலை நேரம் மொட்டை மாடியில் நானும் டோரியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது கீதா வந்தாள். திடீரென ஒரு கடிதத்தை எடுத்து டோரியிடம் கொடுத்தவள் ஏதும் சொல்லாமல் போய் விட்டாள். அது ஒரு லவ் லெட்டர். எனக்கு உள்ளே ஒரு டிரான்ஸ்பார்மர் வெடித்தது. இலவு காத்த கிளியின் நிலை உணர்ந்து மண்டை காய்கிறது. டோரியோ நடுங்கி விட்டான்.  வீட்டில் தெரிந்தால் கொன்று போடுவார்கள் எனவே நீயே போய் அவளிடம் இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று சொல்லி விடு என ஒதுங்கிக் கொண்டான். எனக்கு இது தேவைதானா?

ஸ்ரீநிவாசா தியேட்டரின் ஆளில்லா பின்புறத்தில் வைத்துதான் கீதாவிடம் பேசினேன். இது காதலிக்கும் வயசு கிடையாது என்பதையும் டோரி நிறைய பயப்படுவதையும் அவளிடம் சொன்னேன், ஆனால் அவள் புரிந்து கொள்வதாக இல்லை. இடையிடையே வேறு யாரையேனும் அவளை விரும்புகிறவர்களைக் கூட காதலிக்கலாமே என்றெல்லாம் பிட்டைப் போட்டும் அந்த தத்திக்கு எதுவும் விளங்கவில்லை. கடைசியில் கடுப்பாகிக் கத்தினேன்.நீ சின்னப் பொண்ணும்மா. இன்னும் வயசுக்குக் கூட வரல.. கொஞ்சம் யோசிச்சுச் செய். அதற்கு அவள் சொன்ன பதில்தான் எனக்கு பயங்கர அடி. நான் வயசுக்கு வரலைன்னு உங்களுக்குத் தெரியுமா. நான் அதிர்ந்து போனேன். தான் பெரிய பெண்ணாகிவிட்டது தெரிந்தால் அப்பாவிடம் சொல்லி யாருக்காவது கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள் என்பதற்காக அதை வீட்டில் சொல்லாமல் மறைத்திருக்கிறாள். ஒரு பெண்ணுக்கு இத்தனை தைரியம் இருக்கக்கூடும் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. ஏதும் பேச இயலாமல் திரும்பி விட்டேன்.

இது நடந்த இரண்டு மாதங்களில் கீதா காணாமல் போனாள். அவள் அப்பா எதற்கோ போட்டு அடித்ததால் ஓடிப் போய் விட்டாள் என்றும் வேறு யாரோ ஒரு பையனை இழுத்துக் கொண்டு ஓடி விட்டாள் என்றும் தற்கொலை செய்து கொண்டாள் எனவும் பல கதைகள் ஊருக்குள் நிலவின. ஆனால் அவள் மாயமாய் மறைந்து விட்டாள் என்பது மட்டும் உண்மை. ஒவ்வொரு முறை அரவிந்த் தியேட்டர் - இப்போது ஸ்ரீனிவாசா தியேட்டரின் பெயர் இதுதான் - வழியாகப் போகும்போதும் அவளுடைய நினைவு வரும். அவளுடைய முகம் மனதில் நிழலாடும். ஒருவேளை டோரி அவளிடம் சரி எனச் சொல்லியிருந்தால் கூட அந்தப் பெண்பிள்ளையின் வாழ்க்கை வேறொன்றாக இருந்திருக்கலாம் என்கிற குற்றவுணர்ச்சி பெரும்பாரமாக மனதை அழுத்தும். ஆனால் என்ன செய்வது? முடிந்து போன சில விசயங்களை எப்போதும் நம்மால் மாற்ற முடிவதில்லை.

சிறு வயதிலிருந்தே பழனி எனக்கு மிகவும் பிடித்தமான ஊர். எப்படியும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது அங்கே போய் வருவது வழக்கம். அதுமாதிரியான சமயமொன்றில் சாமி கும்பிட்டு விட்டு படிகளில் இறங்கத் தொடங்கியபோதுதான் நான் அந்தப் பையனைப் பார்த்தேன். அதிகபட்சம் போனால் என்னைக் காட்டிலும் இரண்டு வயது கம்மியாக இருக்கக்கூடும் அவனுக்கு. பனிரெண்டு அல்லது பதிமூன்று சொல்லலாம். கையில் கொஞ்சம் லாட்டரி டிக்கட்டுகள் வைத்திருந்தான்.

சார் சார்.. அடுத்த வாரம் குலுக்கல் சார். வாங்கிக்குங்க சார். அதிர்ஷ்டலட்சுமி உங்களைத் தேடி வர்றா சார்.. ஒரு டிக்கெட் ரெண்ட் ரூவாதான் சார்.. வாங்குங் சார்...

அப்பாவுக்கு லாட்டரிச் சீட்டு வாங்கும் பழக்கமுண்டு. ஆனால் அதனால் அம்மாவோடு பெரும் சண்டை ஏற்பட்டு சமீபமாகத்தான் அந்தப் பழக்கத்தை விட்டிருந்தார். எனவே வேண்டாம் என்பதாகத் தலையசைத்தபடி என் கைகளைப் பிடித்துக் கொண்டு இறங்க ஆரம்பித்தார். ஆனால் அந்தப் பையனும் விடுவதாக இல்லை.

வீட்டுல ரொம்பக் கஷ்டப்படுறோம் சார். வித்துட்டுப்போனாதான் சார் இன்னைக்கு சாப்பாடு. அம்மா பாவம் சார். பொய் சொல்லல சார். வேணும்னா வீட்டுக்கு வந்து பாருங்க சார். வாங்கிக்கங்க சார்.. 

கிட்டத்தட்ட அடிவாரத்துக்கே வந்து விட்டோம். அந்தப் பையனும் திரும்பத் திரும்ப அதே பாட்டைப் பாடியபடி எங்கள் கூடவே வந்து கொண்டிருந்தான். எனக்கு மனசு கேட்கவில்லை.

அப்பா.. பாவம்ப்பா.. வாங்குங்கப்பா..

அப்பா ஏதோ யோசித்தவர் தனது பைக்குள் கைவிட்டு பத்து ரூபாயை எடுத்தார்.

எனக்கு டிக்கெட் வேண்டாம். இதை வச்சுக்கப்பா..

இதுவரை நீண்டிருந்த அந்தப் பையனின் கைகள் சட்டென பின்னிழுத்துக் கொண்டன. அவன் கண்கள் கலங்கி விட்டிருந்தன.

நீங்க டிக்கெட் வாங்கலைன்னாக் கூடப் பரவாயில்லை சார். ஆனா எனக்கு எந்தப் பிச்சையும் போட வேண்டாம் சார்..

அப்பா அமைதியாக அந்தப் பையனிடம் இருந்து ஐந்து டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தார். சந்தோசமாக வாங்கிக் கொண்டவனின் கண்கள் இப்போது சிரித்தன. எனக்கு அந்தப் பையனை நினைக்கும்போது ரொம்பப் பெருமையாக இருந்தது. அதன் பின்பு ஒவ்வொரு முறையும் பழனிக்குப் போகும்போதெல்லாம் என் கண்கள் அவனைத் தேடும். அவனையொத்த சாயலுடைய பையன் எங்கேயாவது தென்படுவானா என்று மனம் கிடந்து அலைபாயும். ஆனால் அவன் என்னிடம் அகப்படவே மாட்டான்.

ஐந்தாறு வருடங்கள் பின்பாக - கொஞ்சம் கொஞ்சமாக நான் கடவுள் என்பதைக் கேள்வி கேட்கத் தொடங்கியிருந்த காலகட்டம் - அம்மாவின் நச்சரிப்பு தாங்காமல் பழனிக்குப் போயிருந்தேன். நான், அம்மா, அப்பா மூவரும் யானைப் பாதையில் ஏறிக் கொண்டிருந்தோம். எதிரே ஒரு மனிதர் இறங்கி வந்து கொண்டிருந்தார். அழுதபடி கண்கள் எல்லாம் சிவந்து பார்க்கவே பாவமாக இருந்தார். தானாகப் புலம்பியபடி வந்த மனிதரிடம் என்ன ஆனதென்று அப்பா கேட்டார்.

எல்லாம் பிளான் பண்ணிப் பண்றாய்ங்க சார். கீழ கிடந்த லாட்டரி டிக்கட்ட விட்டுட்டுப் போறீங்க தம்பின்னு விக்கிறவன்கிட்ட எடுத்துக் கொடுத்தா.. அது உன்னைத் தேடித்தான் வந்திருக்கு.. வாங்கிக்கோன்னு கம்பெல் பண்ணுனானுங்க.. அடப் போங்கப்பா வேண்டாம்னு கெளம்புனா ஒரு கூட்டமா சுத்திக்கிட்டு அடிக்க வர்றானுக.. எல்லாம் ஒரே குரூப்பு போல.. சொல்லி வச்சுப் பண்றானுங்க.. கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு வந்தா.. இங்கேயும்.. ச்சே.. வெறுத்துப் போகுது சார்..

இப்படி எல்லாம் கூடவா செய்வார்கள் எனும் ஆச்சரியத்தோடு மேலேறிப் போனால் சற்று தூரத்திலேயே டிக்கெட்காரர்களோடு மல்லுக் கட்டிக் கொண்டிருந்த இன்னொரு மனிதரைப் பார்க்க முடிந்தது. நான் அப்படியாக மட்டும் இருந்துவிடக் கூடாது என வேண்டியவனாக பிரச்சினை செய்து கொண்டிருந்தவர்கள் யாரெனப் பார்த்தேன். நடுவே எல்லாருக்கும் முன்பாக அந்த மனிதரின் சட்டையைப் பிடித்து வம்பு பண்ணிக் கொண்டிருந்தவன் - அவனேதான்.

அதன் பிறகு நான் பழனிக்குப் போகவேயில்லை.

சொல்லிக் கொண்டே போகலாம். எண்ணற்ற விதைகளைத் தனக்குள் ஒளித்து வைத்திருக்கும் மாதுளை போல ஒவ்வொரு இடமும் தனக்குள் எண்ணிலடங்கா மனிதர்களையும் அவர்கள் சார்ந்த நினைவுகளையும் ஒளித்து வைத்திருக்கிறது.  இடங்கள் வெறும் இடங்கள் மட்டும் அல்ல. அவை நினைவுகளின் தாழ்வாரங்கள்.

September 21, 2012

உதிரிப்பூக்கள் - 17

பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரிக்குப் போகும் காலகட்டம். கோவை சிறுவாணி மலையடிவாரத்தில் இருந்த ஒரு பொறியியல் கல்லூரியில் சீட் கிடைத்தது. என்னை ஹாஸ்டலில் கொண்டு சேர்க்க வந்த மக்களுக்கு பயங்கர சந்தோசம். அருமையான வசதிகளுடன் கூடிய கல்லூரி, தலைக்கு மேலே தவழ்ந்து போகும் மேகங்கள், மெல்லிய தூறலுடன் மழை, அற்புதமான சுற்றுச்சூழல் என எல்லாம் பார்க்கையில் அம்மாவுக்குப் பரம திருப்தி. பத்திரமா இருந்துக்கப்பா என்று ஒற்றை வார்த்தையோடு நிம்மதியாகக் கிளம்பிவிட்டார். ஆனால் நான் உள்ளுக்குள் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தேன்.

கிளம்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் செட்டியைப் பார்க்கப் போயிருந்தேன் (ராம்பிரசாத் - ஞாபகம் இருக்கானா?). காரைக்காலில் ஒரு பிசியோதெரபி கல்லூரியில் சேர்ந்தவன் இரண்டே வாரங்களில் பயங்கரக் காய்ச்சலோடு ஊருக்குத் திரும்பி வந்திருந்தான். என்னடா ஆச்சு என்று கேட்டதற்கு ஓவென அழ ஆரம்பித்து விட்டான். காரணம் - ராகிங்.

கல்லூரியின் முதல் நாளே பத்து ஆசை சாக்லேட் ரேப்பர்களைக் கொடுத்து அவற்றின் நிறத்தை நீக்கித் தர வேண்டுமென சொல்லி இருக்கிறார்கள் சீனியர்கள். அதுவும் வாயால் சவைத்து சவைத்தே எடுக்க வேண்டுமாம். ஒரு துளி நிறம் மிச்சமிருந்தாலும் அதற்குத் தண்டனையாக மேலும் பத்து ரேப்பர்கள். ஆசை ரேப்பரில் எத்தனை நிறங்கள் இருக்கும் என்று தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேளுங்கள். அன்றைக்குப் பூராவும் ரேப்பர்களை சவைத்து சாயங்காலத்தின் போது வாயெல்லாம் வீங்கி இரண்டு நாட்கள் பயல் பேசமுடியாமல் கிடந்திருக்கிறான்.

எல்லாவற்றையும் விடப் பெரிய கொடுமை அவனுக்கு ஹாஸ்டலில் நடந்திருக்கிறது. முதலாம் வருட மாணவர்களை எல்லாம் ஒரு இருட்டு அறைக்குள் தள்ளி நிர்வாணமாக்கி இருக்கிறார்கள். பிறகு அவர்களில் ஒவ்வொருவராகப் போய் மற்றவர்களுடைய பிறப்புறுப்பின் அளவை ஸ்கேலால் அளந்து வர வேண்டும். கடைசியாக எல்லாரும் ஒரே மாதிரி அளந்திருக்கிறார்களா என்று சீனியர்கள் சரி பார்ப்பார்கள். தப்பாய் அளந்தவனுக்கு செமத்தியான அடியும் உதையும் கிடைக்கும். இதெல்லாம் தாங்கிக் கொள்ள மாட்டாமல் ஓடிவந்து விட்ட செட்டி அடுத்து கல்லூரிக்குப் போகவே மட்டேன் என அழும் அளவுக்கு பயந்து கிடந்தான். ஆக ராகிங் பற்றிய பயத்தில் நான் ததிங்கினத்தோம் போட்டுக் கொண்டிருந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லைதானே?

கல்லூரியின் முதல் நாள். மிகச்சரியாக இண்டெர்வெல் சமயத்தில் சீனியர்களிடம் சிக்கினேன். 

எந்த ஊருடா நீ?

மதுரைண்ணே..

ப்ர்ர்ர் என்று சிரித்து விட்டார்கள். அண்ணே என்கிற வார்த்தையின் பயன்பாடு அவர்களுக்கு அத்தனை கிண்டலானதாக இருந்தது.

மதுரையாம்... அண்ணேவாம்.. கெரகம்.. அது கிடக்கட்டும். நாங்க எல்லாம் உனக்கு அண்ணங்க தான? எங்க பேர் கேக்க மாட்டியா...

பரவாயில்லை ஒரு நேசபாவத்தோடு தான் இருக்கிறார்கள் என்று நம்பிக் கேட்டேன்.

உங்க பேரு என்னண்ணே?

முடிக்குமுன்பாக மண்டையைச் சேர்த்து அடி விழுந்தது.

அவனுக்கு நீதான் பேரு வச்சியா? ஒழுங்கா மரியாதையாக் கேளுடா..

எப்படிண்ணே கேக்கணும்?

மைட்டி மைட்டி சீனியர் சார் ஐயாம் அக்லி அக்லி ஜூனியர் சார் மே சார் ஐ சார் நோ சார் யுவர் சார் நேம் சார்.. இப்படிக் கேளுடா வெண்ண..

சுற்றி இருந்த பத்து அண்ணன்கள், பதினைந்து அக்காக்களிடம் எல்லாம் பேர் கேட்டு முடித்தபின்பு அடுத்த இம்சை ஆரம்பமானது. எங்கள் கல்லூரிக்கு என இருந்த பிரத்தியேகமான முறையில் சல்யூட் அடிக்க வேண்டும். எப்படி? அட்டென்ஷனில் நின்று இடது கையைத் தொடையிடுக்கில் இறுக்கிப்பிடித்து வானில் ஒரு தவ்வு தவ்வி அதே நேரத்தில் முழுதுமாய்ச் சுழன்று கீழிறங்கும் வேளையில் வலக்கையால் சல்யூட் அடிக்க வேண்டும். கேட்கும் போதே தலை சுற்றுகிறதா? அப்போது அதைச் செய்பவர்களுக்கு? சுற்றி இருக்கும் அத்தனை பேருக்கும் சல்யூட் அடி. ஆக இப்படி கோலாகலமாகத்தான் தொடங்கியது என் கல்லூரி வாழ்க்கை.

பெரும்பாலும் ராகிங் என்கிற பெயரில் அப்போது நடந்து கொண்டிருந்தது எல்லாம் பணம் பறிப்பதுதான். பணத்துக்காக பேயாய் அலையும் ஜீவன்களை நான் அங்குதான் முதலில் சந்தித்தேன். அன்றைய காலகட்டத்தில் என் செலவுக்காக அம்மாவால் மாதாமாதம் தர முடிந்தது வெறும் நூறு ரூபாய் மட்டுமே. பாக்கெட் வைத்த ஷார்ட்ஸ் போட்டு அதில் பணத்தை ஒளித்து வைத்திருப்பேன். ஆனால் எமப்பயல்கள் அதையும் தேடி எடுத்து விடுவார்கள். காசு போட்டு படத்துக்கு கூட்டிப் போகச் சொல்வார்கள். புதிதாய் ரிலீஸ் ஆன படங்களின் கேசட்கள் வாங்கி வா என்பார்கள். என் சுவாசக் காற்றே மட்டும் நாலைந்து கேசட்டுகள் என் சீனியர்களுக்கு அழுதிருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

அதில் தமிழ் மாணவர்களைக் கூட ஒரு கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். சில நேரங்களில் நாம் கெஞ்சினால் மனம் இளகி விட்டு விடுவார்கள். ஆனால் தெலுங்கு மற்றும் மலையாள மாணவர்கள்தான் ரொம்பப் பாவம். அந்த  சீனியர்கள் எப்போதும் பத்து முதல் இருபது பேர் வரைக்கும் ஒரு கூட்டமாகத்தான் வருவார்கள். யார் நல்ல பசையுள்ள பார்ட்டி என்று பார்த்து அழைத்துப் போய் விடுவார்கள். அவர்கள் கேட்பதை எல்லாம் செய்து கொடுத்து விட்டால் அவன் பிழைத்தான். மறுத்துப் பேசினால் ஹாஸ்டலுக்குப் பின்னால் இருக்கும் காட்டுக்குள் கூட்டிப்போய் அடி நொறுக்கி விடுவார்கள். 

நான் பள்ளியில் படிக்கும்வரைக்கும் யாரும்  எதற்கும் என்னை அடித்தது இல்லை. முதல் வருடம் முழுவதும் அப்படி இப்படி என்று பணம் போனால் கூட யாரிடமும் அடி வாங்காமல் தப்பித்துக் கொண்டேன். அதில் எனக்கு பரம சந்தோசமும் பெருமையும் கூட. ஆனால் எல்லாவற்றுக்கும் சேர்த்து பெரிய மொத்தாக வாங்கப் போகிறேன் என்பது அப்போது எனக்குத் தெரியாது.

இரண்டாம் வருடம். லேட்டரல் பயல்கள் மீது எங்களுக்கு ஒரு காண்டு. நாங்கள் மட்டும் இத்தனை இம்சைப்பட்டு முதல் வருடம் படித்து விட்டு வருவோம், நீங்கள் நோகாமல் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து சீனியர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ளுவீர்கள்? அப்படி எல்லாம் விட்டு விட முடியாது தம்பிகளா? அதனால் லேட்டரல் மக்களை நாங்களே ராகிங் செய்வது என முடிவானது. இந்த நாங்களே என்பது நான் மற்றும் எனது நான்கு அறை நண்பர்களைக் குறிக்கிறது எனக் கொள்க.

ஒரு நிறைந்த செவ்வாய்க்கிழமை இரவில் சுந்தரேசன் எங்களிடம் மாட்டினான். எப்படிடா குழந்தை பிறக்கும் எனக்கேட்டால் சாமி கொடுப்பார் என சொல்லுமளவுக்கு மிகப்பெரிய அப்பாவி அவன். எங்களுக்கும் அப்படி ஒரு ஆள்தான் தேவை. ஏனென்றால் அவன்தான் நாம் எத்தனை அடித்தாலும் திருப்பி அடிக்க மாட்டான் பாருங்கள். அன்றைக்கு ராத்திரி முழுக்க செம கூத்து. அவனை ஓட்டி எடுத்து விட்டோம். போதாக்குறைக்கு எங்கள் முதல் ராகிங் முயற்சியை எப்போதும் நினைவில் கொள்ளும் வகையில் அதைக் கேசட்டில் பதிவு செய்தும் வைத்துக் கொண்டோம்.

மறுநாள் காலை எட்டு மணி போல அவசரமாகக் கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். அந்த நேரம் பார்த்து ஃபைனல் இயர் ஸ்டூடண்ட் சேர்மன் அங்கே வந்தார்.

என்னடா சாமியாரே.. நேத்து ஒரே ஆட்டம் போல?

ஆமாண்ணே.. சும்மா விளையாட்டுக்கு..

அதனால் என்னடா.. விடு.. ஏதோ ரெக்கார்ட்லாம் பண்ணிங்களாம்.. போடு கொஞ்ச நேரம் ஜாலியாக் கேப்போம்..

கேசட் ஒரு இருபது நிமிடம் ஓடியிருக்கும். எதேச்சையாக சேர்மன் கேட்டார்.

இம்புட்டு பேக்கா இருக்கான். இந்த சுந்தரேசன் யாருன்னு தெரியுமாடா..

இல்லையே.. ஏண்ணே.. சிரித்தபடி கேட்டேன்.

அவன் என் தம்பிடா...

அன்றைக்கு இரவு சேர்மனின் அறைக்குள் நண்பர்கள் அனைவரும் மண்டியிட்டு அமர்ந்திருந்தோம். கேசட் ஓடிக் கொண்டிருக்க சுந்தரேசன் யார் யார் எதை எதைப் பேசியது என அடையாளம் காட்டிக் கொண்டிருந்தான். யார் என்னவென்று தெரியாதவர்கள் எல்லாம் வந்து எங்களை அடித்துக் கொண்டிருந்தார்கள். 

இவனுங்க கெட்ட கேட்டுக்கு இண்ட்ர்னல் ராகிங்.. ஏண்டா?

ஒருவன் எங்கிருந்தாவது வருவான். நாங்கள் மண்டியிட்டு இருப்பதைப் பார்ப்பான். ஓங்கி முதுகைச் சேர்த்து ஒரு மிதி. அம்மா என்று கதறியபடி கீழே விழுந்தாலும் உடன் எழுந்து கொள்வோம். இல்லை என்றால் அதற்கும் அடிப்பார்கள். பிறகு பொறுமையாகக் கேப்பான்.

எதுக்குடா மாப்ள இவனுங்கள அடிக்கிறீங்க?

ஏண்டா டேய்.. எதுக்கு என்னன்னு கேட்டுட்டாவது அடிக்கக் கூடாதா? லூசுப்பயலுகளா.. அடிச்சுட்டுதான் கேப்பீங்களாடா? இது என் மைண்ட் வாய்ஸ். அன்றைக்கு இரவு ரூமுக்குத் திரும்பி வந்தபோது அத்தனை பேர் உடம்பும் புண்ணாகிப் போயிருந்தது. பேருக்குத் தூங்கி விட்டு காலையில் எழுந்தோம்.  அடுத்த குண்டு தயராக இருந்தது. 

மாப்ள. நேத்து அடிச்சது ஹாஸ்டல் சீனியர்களாம். இன்னைக்கு ராத்திரி டே ஸ்காலர்ஸ் வர்றாங்களாம்..

நாசமாப் போச்சு. நம்மால முடியாதுடா யப்பா. இதுக்கு மேல உடம்பு தாங்காது. மாலை கல்லூரி முடிந்தது சத்தம் போடாமல் கோவையில் இருந்த எங்கள் நண்பன் ஒருவனின் வீட்டுக்கு எஸ் ஆகி விட்டோம்.

இரவில்  எங்களைத் தேடிக் கொண்டு வந்தது நான்காம் வருட மாணவர்கள் அல்ல - மூன்றாம் வருட மாணவர்கள். எந்தக் கல்லூரியையும் போல எங்கள் கல்லூரியிலும் மூன்றாம் வருட மக்களுக்கும் நான்காம் வருட மக்களுக்கும் ஆகவே ஆகாது. ஹாஸ்டலில் ஒரு தப்பு நடந்தால் ஃபைனல் இயர் மட்டும்தான் தட்டிக் கேட்கலாமா, நாங்கள் கேட்கக் கூடாதா என்னும் உயரிய கொள்கையோடு எங்களைத் தேடி இருக்கிறார்கள். நாங்கள் கையில் சிக்கவில்லை. ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் எங்கள் பக்கத்து அறையில் இருந்த இன்னொரு நண்பனை பிடித்து நாயடி அடித்து விட்டார்கள். அங்குதான் ஆரம்பித்தது வினை.

எதிர்பாராதவிதமாக அவர்கள் அடித்தது அவன் உயிர்நிலையில் பட்டு விட்டது. வலி தாங்காமல் துடித்தவனை மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள். பரிசோதித்துப் பார்த்த டாக்டர் அவன் எழுந்து நடமாட ஆறு மாதங்கள் ஆகும் என்றும் அதன் பின்பும் அவன் ஆண்மையோடு இருப்பது சந்தேகம்தான் என்றும் சொல்லி விட்டார். மறுநாள் காலை இந்தத் தகவல் எங்களுக்கு வந்து சேர்ந்தபோது நாங்கள் அதிர்ந்து போனோம். கல்லூரிக்குத் திரும்பி வந்தால் இரண்டாம் வருட மாணவர்கள் ஸ்ட்ரைக். வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களை டிஸ்மிஸ் செய்யும் வரை போராட்டம். கடைசியில் கல்லூரி நிர்வாகம் ஆறு மூன்றாம் வருட மாணவர்களைக் கல்லூரியை விட்டுத் தூக்கிய பின்புதான் பிரச்சினை ஓய்ந்தது. எங்களை யாரும் இந்தக் களேபரத்தில் கவனிக்கவில்லை என்பதில் எங்களுக்கு ஒரு அல்ப நிம்மதி.

கல்லூரியில் எனது மூன்றாம் வருடம். எங்களுக்கும் ஃபைனல் இயர் மாணவர்களுக்கும் ஒரு மறைமுகப் போர் நடந்தபடி இருக்க அதை மீண்டும்  பெரிதாக்கிய பிரச்சினை இரண்டாம் வருட மாணவர்களின் வடிவில் வந்தது.

கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் ஒரு பெண். அவளை ஒரு எலெக்ட்ரிக்கல் பையனும் மெக்கானிக்கல் பையனும் விரும்பி இருக்கிறார்கள். அவளோ அந்த எலெக்ட்ரிக்கல் பையனை விரும்பி இருக்கிறாள். காண்டாகிப் போன மெக்கானிக்கல் பையன் லேடிஸ் ஹாஸ்டல் வாசலில் வைத்தே அந்த எலெக்ட்ரிக்கல் பையனை அடி நொறுக்கி விட்டான். அவன் அழுது கொண்டே எங்களிடம் வந்தான். நாங்களும் அந்த மெக்கானிக்கல் பையனைக் கூப்பிட்டு மிரட்டி அனுப்பினோம். அந்தப் பக்கி அதை நேராக ஃபைனல் இயர் மக்களிடம் போய் சொல்லி விட்டு ஒதுங்கிக் கொண்டது. ஆக மீண்டும் எங்களுக்கும் சீனியர்களுக்கும் சண்டை.

ஃபிப்ரவரி மாதத்தின் இரண்டாம் வாரம். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மூன்றாம் வருட ஸ்டூடண்ட் சேர்மனின் கார் தீப்பற்றி எரிகிறது. அன்று மாலை எங்களிடம் சிக்கிய செக்யூரிட்டி ஒருவர் தீ வைத்தது நான்காம் வருட மாணவர்கள் என்பதையும் யார் யார் என்பதையும் சொல்லி விட்டார். மறுநாள் மாலை சீனியர்களை ஹாஸ்டலில் புகுந்து கதவுகளை எல்லாம் உடைத்து அடி நொறுக்குகிறோம். கல்லூரியின் மிகப்பெரிய தலைகள் எல்லாம் வந்து சண்டையை நிப்பாட்டும்படிக் கெஞ்சுகிறார்கள். யாரும் கேட்கத் தயாராக இல்லை.

வெகு சில எண்ணிக்கையில் சீனியர்கள். நாங்களோ அவர்களைப் போல மூன்று மடங்கு எண்ணிக்கையில் இருந்தோம். முந்தைய நாட்களின் ராகிங் கோபம் எல்லாம் சேர்ந்து கொள்ள கையில் டிராஃப்டரோடு வெறியாட்டம் போட்ட அந்த நேரத்தை இப்போது நினைத்துப் பார்க்கையில் வெட்கமாக இருக்கிறது. அடிதடி எல்லாம் ஓய்ந்த பின்பும் அன்றைய இரவு பதட்டமாக கழிந்தது.

புதன் அன்று என் அம்மாவுக்கு மதுரையில் கண் ஆபரேஷன். எனவே நண்பர்களிடம் சொல்லிக் கொண்டு செவ்வாயன்று காலை ஊருக்குக் கிளம்பினேன். பிரச்சினையின் காரணமாக கல்லூரிக்கு இரண்டு நாள் விடுப்பு விட்டிருந்ததும் எனக்கு வசதியாகப் போக ஹாயாக் கிளம்பி விட்டேன். அப்போது எல்லாம் முடிந்து விட்டதாக நான் நினைத்தது இரண்டே நாட்களில் பொய்யாகிப் போனது.

புதன்கிழமை இரவு ஒன்பது மணி போல மூன்றாம் வருட மாணவர்கள் நான்கு பேர் கோவைக்கு படத்துக்குப் போய்விட்டு பைக்கில் திரும்பி இருக்கிறார்கள். கல்லூரிக்கு இரண்டு கிலோமீட்டர் முன்பாக சீனியர்கள் அவர்களை மடக்கி விட்டார்கள். மூவர் மாட்டிக் கொள்ள ஒருவன் மட்டும் தப்பி வந்து ஹாஸ்டலில் இருந்த என் நண்பர்களிடம் சொல்லி விட்டான். உடன் அங்கிருந்து 94 பேர் கொண்ட ஒரு கூட்டம் கிளம்பி விட்டது. 

கல்லூரி விடுதியின் வாசலில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்திருக்கிறார் ஒரு கவர்மெண்ட் பஸ் டிரைவர். இப்போது பஸ்ஸை நீ எடுக்கிறாயா இல்லை நாங்கள் எடுக்கட்டுமா என மிரட்டி மொத்தக் கும்பலும் கிளம்பி அந்த இடத்துக்குப் போயிருக்கிறார்கள். கையில் ஹாக்கி ஸ்டிக், பேட், சைக்கிள் செயின் போன்ற ஆயுதங்களும்.

சீனியர்கள் தங்கியிருந்த வீட்டுக்குப் பெயர் வொயிட் ஹவுஸ். அவர்கள் கிட்டத்தட்ட இருபது பேர். எனது நண்பர்கள் அங்கே போய் இறங்க பயங்கரக் களேபரம். கண்டபடி சண்டை நடந்திருக்கிறது. விமல் என்று ஒரு சீனியர். அருமையாக நடனம் ஆடுபவர். கோவையின் மைக்கேல் ஜாக்சன் என்று சொல்வோம். சைக்கிள் செயின் பற்றி இழுத்ததில் அவருடைய வலது கண் தெறித்துப் போனது. சீனியர்கள் அடித்ததில் என் நண்பன் மைக்கேலுக்கு காது கேட்காமல் போனது. எல்லாவ்ற்றுக்கும் மேலே, தன்னையும் அடித்து விடுவார்களோ என பயந்து ஓடிய சீனியர் சுந்தர் என்பவர், தரையோடு தரையாக இருந்த கிணற்றுக்குள் விழுந்து செத்துப் போனார்.

அம்மாவின் ஆபரேஷன் நல்லபடியாக முடிந்து நான் வெள்ளியன்று ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். போன் வந்தது.

மாப்ள.. ஐடிசி டா.. சீனியருங்க நம்ம மேல கொலவெறில இருக்காங்க.. பார்த்துக்க..

புலனாய்வு பத்திரிக்கைககள் எல்லாம் கண்டபடி எழுதின. ஆண்களுக்கு ராகிங். பெண்களுக்கு ரேப்பிங். பயங்கரக் கல்லூரி. கொலைவெறி கொண்ட மூன்றாம் வருட மாணவர்கள். என்ன சொல்வதன்றே தெரியவில்லை. நண்பர்களில் 36 பேர் டிஸ்மிஸ். 50 பேர் சஸ்பெண்ட். அங்கே இருந்தவன் இல்லாதவன் என்று கணக்கில்லாமல் யார் மீதெல்லாம் கல்லூரிக்கு கடுப்பு இருந்ததோ அவர்களை எல்லாம் தாளித்து எடுத்து விட்டார்கள்.

அம்மாவுக்கு ஆபரேஷன் இல்லாதிருந்தால் ஒருவேளை நானும் அவர்களில் ஒருவராய் இருந்திருக்கலாம். என்னை அன்று காப்பாற்றியது எதுவென்று இதுவரைக்கும் எனக்குத் தெரியவில்லை. அத்தோடு அடங்கியவர்கள்தான் நாங்கள். அதற்குப் பிறகு நான்காம் வருடம் முடிக்கும் வரை ஒரு சத்தம் கிடையாது. கல்லூரி நிர்வாகமும் எங்களுக்கு எந்த பிளேஸ்மெண்டும் வராமல் பார்த்துக் கொண்டது. இன்றைக்கு யோசிக்கும்போது எல்லாமே பைத்தியக்காரத்தனம் என்பது புரிகிறது. வருடங்களில் பின்னோக்கிப் பிரயாணித்து சில விசயங்களை, சில தவறுகளை மாற்றி விட வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஆனால் முடியவில்லை. அமைதியாகச் சிரித்தபடி இருக்கிறது காலம்.