April 30, 2009

உழைப்பாளர் தினம் + அல்டிமேட் வாழ்த்துக்கள் + கொஞ்சமா மொக்கை..

May 1 - நாளைக்கு உழைப்பாளர் தினம். உழைக்கும் மக்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். இந்த நாளை கொண்டாடும் இதே வேலையில உண்மையில நமக்கு இந்த நாளை கொண்டாடுற தகுதி இருக்கான்னு யோசிக்கணும். பாக்குற வேலைக்கு கூலியா கூட இருபது ரூபா கேட்டா போலிசே துரத்தி துரத்தி அடிக்கிற நிலைமையில்தான் நம்ம நாடு இருக்கு. கொளுத்துற வெயிலில நாள் பூரா வேலை செஞ்சும் ஒரு வேளை கஞ்சி குடிக்க முடியாம கஷ்டப்படுரவங்க எத்தனை பேர்? இதெல்லாம் மாறினா அன்னைக்கு நாம இந்த நாளை இன்னும் மகிழ்ச்சியா கொண்டாடலாம்.. மாறும்னு நம்புவோம்.
***************
* படிச்சது பத்தாம் வகுப்புதான்..

* ஐந்து மொழிகளை தங்கு தடை இல்லாமல் பேசக் கூடியவர்..

* தனது வாழ்க்கையை ஒரு எளிய மெக்கானிக்காக ஆரம்பித்தவர்..

* பிற்காலத்தில் இந்தியாவின் பெருமையாக பார்முலா ரேசிங்கில் கலந்து கொண்டார்..

* சினிமாவில் நுழைந்தாலும் 4 - 5 வருடங்கள் நிலையான இடம் கிடைக்காமல் போராட்டம்..
* நடிப்புக்காக பல "filmfare" அவார்டுகளை வாங்கியவர்...

* CBSC பிரிவில் ஐந்தாம் வகுப்பில் அவர் பற்றிய ரோல் மாடல்கள் என்ற பாடம் சேர்க்கப் பட்டுள்ளது..

* மே 1 இல பிறந்து - உழைப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் உதாரணமாக இருப்பவர்..

* கிங் ஒப் ஓபனிங் என்று தமிழ் திரையுலகில் அழைக்கப்படுபவர்..

* அசல் "தல"....
அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
***************
படிச்சதில் பிடிச்சது..
ஒரு தகவலை ரொம்ப அவசரமாக நண்பர்களுக்கு பரப்ப வேண்டுமா? மூன்று வழிகள் உள்ளன..

* டெலிபோனை பயன்படுத்துங்கள்..

* தந்தி அடியுங்கள்

* உங்கள் மனைவியிடம் சொல்லுங்கள்..

ரொம்ப ரொம்ப அவசரமா பரப்பணுமா?... அப்போ யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்னு பொண்டாட்டி கிட்ட சொல்லுங்க.. போதும்..
***************
முடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு புதிர்.. இதுவும் என் மாணவர்கள் எனக்கு SMS அனுப்பினது தான்.. பின்னூட்டத்துல பதில சொல்லுங்க..
நீங்க ஒரு படகுல ஏறி நதிக்கு நடுவுல போய்க்கிட்டு இருக்கீங்க.. உங்க கிட்ட ரெண்டு சிகரெட் இருக்கு..(புகை பிடித்தல் உடல் நலனுக்கு கேடானது.. ). நீங்க அதுல ஒரு சிகரட்டை பத்த வைக்கணும். உங்ககிட்ட படகுல வேற ஒண்ணுமே இல்லை.. எப்படி பத்த வைப்பீங்க? யோசிங்க மக்களே..


புதிருக்கான விடை:- ஒரு சிகரெட்டை எடுத்து தண்ணீரில் வீசி விடுங்கள்.. இப்போது படகு லைட்டாகி (லேசாகி) விடும்.. அதில் நீங்கள் இன்னொரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொள்ளலாம். என்னது.. இன்னொரு பதில் வேணும்மா? வச்சுக்கோங்க.. ஒரு சிகரெட்டை மேலத் தூக்கி போட்டு காட்ச் பிடிங்க.. காட்செஸ் வின் மாட்ச்.. (catches win matches)..மாச்சாஸ்னா என்ன.. தீக்குச்சி.. இப்போ சிகரட்ட ஈசியா பத்த வைக்கலாம்.. யாரோ பல்லை கடிக்குற சத்தம் கேக்குதே.. சரி சரி.. எதுன்னாலும் பேசித் தீர்த்துக்கலாம்ப்பா..:-)

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

April 29, 2009

கேள்வியும் நானே..பதிலும் நானே..!!!

கொஞ்ச நாளைக்கு முன்னாடி நண்பர் அத்திரி இந்த தொடர்பதிவுக்கு கூப்பிட்டு இருந்தார். கிட்டத்தட்ட முப்பது கேள்வி. ரொம்ப யோசிக்க எல்லாம் இல்ல.. மனசுக்கு என்ன தோணுச்சோ, அதை அப்படியே எழுதுறேன்.. படிச்சு பாருங்க..
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
ஊருல இருக்குற எல்லா முருகன் கோவிலுக்கும், மதுரை பாண்டி கோவிலுக்கும் எங்கம்மா அலையா அலைஞ்சு பெத்தெடுத்த புள்ள நானு.. இப்படி ஒரு கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி வரும்னுதான் என்னோட அம்பதாவது பதிவுல என்னோட பெயர்க்காரணத்தை விரிவா சொல்லி இருக்கேன்.. முடிஞ்சா இங்கே க்ளிக்கி அதையும் படிங்க..
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
சமீபத்தில் என்னுடைய இறுதி ஆண்டு மாணவர்களின் பிரிவு உபச்சார விழாவில் அழுதேன்.. மூன்று வருடம் என்னுடைய நல்ல நண்பர்களாக இருந்தவர்கள்.. கண்டிப்பாக எங்கு போனாலும் அவர்களின் நினைவுகள் என்னைத் துரத்திக் கொண்டே இருக்கும்..
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எங்க வாத்தியார் எல்லாம் அதை கையேழுத்துன்னே சொல்ல மாட்டாங்க.. கோழி கிண்டுறதுன்னுதான் சொல்வாங்க... இந்த லட்சணத்துல நீ எல்லாம் வாத்தியாரான்னு என் நண்பர்கள் எல்லாம் கிண்டல் பண்ணும் அளவுக்கு ரொம்ப மோசமா இருக்கும்.. ஆனா எனக்கு என் கையெழுத்து ரொம்ப பிடிக்கும் :-)
4).பிடித்த மதிய உணவு என்ன?
சிக்கன் பிரியாணி
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
வாழ்க்கையில நான் சம்பாதிக்கிற நினைக்கிறது மனிதர்களைத்தான்.. நல்லவங்கன்னு நம்பிக்கை வந்துட்டா கடைசி வரைக்கும் நட்பைத் தொடரனும்னு நினைப்பேன்.. உடனே பழகுனாலும் ரொம்ப நாள் ஆனாலும், அது வாழ்க்கை பூரா கூட வரதா இருக்கணும்.. அவ்வளவுதான்..
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடல்.. சின்ன வயசுல இருந்தே கடல் மேல சொல்ல முடியாத காதல் உண்டு.. குறிப்பா கன்னியாகுமரியும், புதுச்சேரி கடலும் ரொம்பப் பிடிக்கும்
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்ணத்தான் பார்ப்பேன்.. அதுல ஒரு உண்மை இல்லன்னா நெகிழ்வு தெரியும்..
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
என்னோட தன்னம்பிக்கை பிடிக்கும்.. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் வெளியே காட்டிக்க மாட்டேன்.. அந்தக் கஷ்டத்த எப்படி கடந்து வரலாம்னுதான் யோசிப்பேன்..

யார் என்ன சொன்னாலும் மூஞ்சிக்கு நேரா மறுத்துப் பேச தெரியாது.. எனக்குத் தெரிஞ்சே சில நேரங்களில் மக்கள் என்னை யூஸ் பண்ணிக்குவாங்க.. அப்போ மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
என் தேவதையை எங்கமா அப்பா தேடிக்கிட்டு இருக்காங்க.. கிடைச்சதுக்கு அப்புறம்தான் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியும்
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என்னுடைய உற்ற தோழி.. கிட்டக்க இல்லையேன்னு என்னை மிஸ் பண்ணக்கூடிய ஜீவன் அதுதான்.. பையனா பொரந்ததுக்காக என்னை ரொம்பவே வருத்தப்பட வச்சவங்க..
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
இளம்பச்சை நிறத்தில் சட்டை.. அடர்த்தியான பச்சையில் பேன்ட்..
12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
மொபைலில்..."ஒரு கல் ஒரு கண்ணாடி.. - சிவா மனசுல சக்தி.."
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கடலலையின் நீல நிறம்
14.பிடித்த மணம்?
மளிகைக் கடையில போய் நிக்குறப்ப என்னன்னு சொல்ல முடியாத ஒரு மணம் வரும்.. அது ரொம்ப பிடிக்கும்
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
ஆதவா - இளைஞர்... கவிதைகளில் கலக்குபவர். சின்ன வயசுதான்னாலும் கருத்துக்களில் முதிர்ச்சி உண்டு..(பிஞ்சிலே பழுத்தவர்னு கூட சொல்லலாம்.. ஹி ஹி ஹி..) நல்ல நண்பரும் கூட..
டக்ளஸ்... - பாசக்கார பயபுள்ள.. நம்ம ஊரு வேற.. குசும்புக்கு குறைவே கிடையாது.. வந்து கொஞ்ச நாள்லயே நிறைய மக்களை பழகி வச்சிருக்கவர்..
குமரை நிலாவன் - மலேஷியாவில் இருந்து எழுதுபவர்.. அருமையான மனிதர்.. நட்பை மதிப்பவர்.. நாம இந்த சமுதாயத்துக்கு எதாவது செய்யணும் நண்பா என்று அடிக்கடி சொல்பவர்..
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
அத்திரியோட அரசியல் பதிவுகளில் இருக்கும் நையாண்டி ரொம்ப பிடிக்கும்.. குறிப்பா இந்தப் பதிவு..
17. பிடித்த விளையாட்டு?
கால்பந்து.. F1.. கிரிக்கட்.. டென்னிஸ்.. எல்லாமே பார்க்க பிடிக்கும்.. கிரிக்கட் விளையாடுவேன்.. ஷட்டிலும்..
18.கண்ணாடி அணிபவரா?
+2 படிக்குறப்பவே வலது கண்ணு அவுட்டு... அப்ப இருந்தே போட்டிருக்கேன்..
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
மனதைத் தொடும் விதத்தில் இருக்கணும்.. இல்லைன்னா போரடிக்காம போகணும்..
20.கடைசியாகப் பார்த்த படம்?
அது ஒரு சோகக் கதை.. அவ்வ்வ்.. மரியாதை..
21.பிடித்த பருவ காலம் எது?
வசந்த காலம்
22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ஜெயமோகனின் "ஊமைச் செந்நாய்.." நான் படிக்குற அவரோட முதல் புத்தகம்.. வட்டார வழக்குல இருக்குறதால ரொம்பப் பொறுமையா படிச்சிக்கிட்டு இருக்கேன்..
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
நான் பயன்படுத்துறது காலேஜ் கம்ப்யூட்டர்.. அதனால அதை நோண்ட மாட்டேன்..
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
குழந்தைகள் கிட்ட இருந்து வர எல்லா சத்தமும் பிடிக்கும்..

ரொம்ப எரிச்சல் தரது வாகனங்களோட ஹார்ன் சத்தம்
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
மதுரையில் இருந்து ஷிம்லா வரை.. எங்கப்பா ரயில்வேயில் இருக்குறதால அது ஒண்ணுதான் மிச்சம்.. மொத்த இந்தியாவையும் காசே குடுக்காம ரயில்ல சுத்தி இருக்கேன்.. கண்டிப்பா நம்ம மக்கள் எல்லாருமே ஒரு தடவையாவது கல்கா டூ ஷிம்லா ரயில்ல போய் பாருங்க.. அவ்வளவு அருமையா இருக்கும்..
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
மிமிக்ரி பண்ணுவேன்.. பாடுவேன்.. காலேஜ்ல தமிழ் மன்றத் தலைவரா இருந்திருக்கேன்..
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
சமுதாயத்துல இருக்குற ஏற்றத்தாழ்வு.. கொஞ்ச பேர் பணக்காரனாவும் மீதி எல்லாரும் சோத்துக்கே கஷ்டப்பட்டு.. என்னால இதை ஒத்துக்கவே முடியாது.. இந்த மாதிரி சமயங்கள்லதான் சாமின்னு ஒன்னு இருக்கானே கோபம் வரும்..
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
எல்லாரும் நம்மை கவனிக்கனும்னு ஏதாவது பண்ணிக்கிட்டே இருப்பேன்.. அது சரி கிடையாது..
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
வெளிநாடுகளை சுற்றிப் பார்க்கனும்னு ஆசை உண்டு.. இந்தியால எனக்கு நான் பார்த்த இடத்துல பிடிச்சது.. ஜெய்ப்பூர்..
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
சந்தோஷமா இருக்கணும்.. என்னை சுத்தி இருக்கவங்களையும் சந்தோஷமா வச்சுக்கணும்.. போதும்..
31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
கேள்வி நமக்கு செல்லாது..
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நாம இங்க, இப்படி பொறக்கனும்னு நாம முடிவு பண்றது கிடையாது.. ஆனா நம்ம வாழ்க்கை இப்படித்தான் இருக்கணும்னு நாம்தான் தீர்மானம் பண்றோம்.. நாலு பேருக்கு நல்லது பண்ண முடியாட்டியும், யாருக்கும் கெட்டது செய்யாம வாழ்ந்தாலே பெரிசு..
இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது
1. ஆதவா
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

April 27, 2009

காமத்தின் நீண்ட நிழல்..!!!

மழையின் முதல் துளி மண்ணில் விழுந்த போது அவன் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தான். நான்கு வருட வாழ்க்கையில் நகரத்தின் சந்துகள் அவனுக்கு பழக்கமாகி விட்டன. சிறு தெருக்களின் ஊடாக வேகமாக நடக்கத் தொடங்கினான். சிறுமி ஒருத்தி வேக வேகமாக சைக்கிள் ஒன்றை மிதித்துக் கொண்டு அவனை கடந்து சென்றாள். வீடுகள் எல்லாம் அமைதியில் உறைந்து கிடந்தன. பெருநகரங்களின் தெருக்களில் இப்போதெல்லாம் யாரையும் வெளியே பார்க்கவே முடிவதில்லை. நிமிர்ந்து வானத்தை பார்த்தான். பறவைகளே இல்லாத வானத்தில் மேகங்கள் குழுமி இருந்தன. பெருமழை வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தது.



ஒரு வளைவில் திரும்பியபோது நாய் ஒன்று ஒன்று விருட்டென்று அவனை தாண்டிப் போனது. ஒரு நிமிடம் அதிர்ச்சியில் நிலைகுலைந்தவன், சமாளித்துக் கொண்டு நடையை எட்டி போட்டான். பேருந்து நிலையத்தில் கூட்டம் பெரிதாக இல்லை. அவன் ஊருக்கு செல்லும் பஸ் ஓரமாக நின்று கொண்டிருந்தது. போய் ஏறிக் கொண்டான். ஜன்னல் அருகே இருந்த இடத்தில் போய் அமர்ந்தான்.

காலையில் மாமா போனில் பேசியது ஞாபகம் வந்தது.

"அப்பா இப்பவோ அப்பவோன்னு இருக்காரு.. உன்னை பார்க்கனும்னு ரொம்ப ஆசைப்படுறாரு.. உடனே கிளம்பி வா.."



சிறு கிராமம் ஒன்றில் பிறந்து, தங்களை வளர்க்க அப்பா எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்? நினைக்கும்போதே அவனுக்கு கண்கள் கலங்கின. படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல் நகரத்திற்கு வந்து எத்தனை நாட்கள் ஆகி விட்டன? இன்னும் ஒரு நிலையான இடத்துக்கு வர முடியவில்லை. அக்கா ரெண்டு பேரையும் கட்டிக் கொடுத்தது கூட அப்பாதான். நம்மளால ஒண்ணும் செய்ய முடியலையே..? இயலாமையின் நிதர்சனம் அவனை சுட்டது... போன முறை வீட்டுக்குப் போனபோது அவர் சொன்னது..

"உன்னை நீ நல்லா பார்த்துக்கிட்டா போதும்யா.. பத்திரமா இரு.."



வேலை பார்க்கும் இடத்தில் மானேஜரிடம் பதட்டத்தோடு சொன்னபோது அவர் சுவாரசியமாக காது குடைந்து கொண்டிருந்தார். இவனுடைய வார்த்தைகளை ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை. கடைசியில், இன்றைய வேலையை முடித்து விட்டுத்தான் போக வேண்டும் என்றும், இரண்டு நாள் மட்டுமே விடுப்பு தர முடியும் என்றார். இப்போதெல்லாம் மனிதர்களை விட இயந்திரங்கள் தான் உலகில் அதிகமாக உலாவுகின்றனவோ என்னவோ? வெளியே வந்தபோது அவன் நண்பன் கேட்டான்.."தப்பா எடுத்துக்காத.. ரெண்டு நாள்தான் லீவ் தருவேன்னு சொல்றான்.. அதுக்குள்ளே அப்பாவுக்கு எதுவும் ஆகலைன்னா..?" அவனிடம் பதில் இல்லை. மௌனமாக இருந்தான்.



பேருந்து கிளம்பி விட்டிருந்தது. மழை சற்று வழுவாகப் பெய்ய தொடங்கியது. நாசியில் மண்வாசத்தை உணர முடிந்தது. அவனுடைய கவனம் சற்றே மாறி வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினான். வழியில் ஒரு நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது அவள் உள்ளே ஏறினாள்.கூட்டம் கொஞ்சம் ஏறி விட்டிருந்த காரணத்தால் இடம் இல்லாமல் அவனுக்கு வலப்பக்கம் நின்று கொண்டாள். தன்னையும் அறியாமல் அவன் அவளை பார்க்கத் தொடங்கினான்.



அவளிடம் ஒரு சொல்ல முடியாத வசீகரம் இருந்தது. கருப்பு என்றும் சிவப்பு என்றும் சொல்ல முடியாத நிறம். கண்களில் ஒரு கனிவு. மூக்கு நல்ல கூர்மையாக இருந்தது. சின்ன உதடுகள். சரேலென்று இறங்கிய கழுத்தில் சின்னதாய் இரு மச்சங்கள். சேலையை இறுக்கமாக உடுத்தி இருந்ததால் மழையில் நனைந்து அவளின் வளைவுகளை நன்றாக வெளிச்சம் போட்டுக் காட்டியது. வீசிய காற்றில் சற்றே சேலை பறக்கும்போது தெரிந்த நாபியும் பூனை முடிகளும் அவனை என்னவோ செய்தன. நிமிர்ந்து முகத்தை பார்த்தபோது அவள் இவனையே பார்ப்பதுபோல் இருந்தது. சட்டென்று கண்களை மூடிக் கொண்டான்.



அவன் இறங்குமிடத்தில்தான் அவளும் இறங்கினாள். இவனைத் தாண்டி போகும்போது ஒரு சின்ன காகிதத்தை வீசிச் சென்றாள். அதில் அவளுடைய போன் நம்பர் இருந்தது. பேசியபோது கணவன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதாகச் சொன்னாள். நேரம் கிடைத்தால் வீட்டுக்கு வரும்படி அழைத்தாள். மறுநாள் காலை அவன் அவள் வீட்டுக்கு போனான். யாருமில்லாத வீட்டில் அவள் அவனை உற்சாகமாக வரவேற்றாள். குடிப்பதற்கு ஏதேனும் கொண்டு வருகிறேன் என்று சொல்லி உள்ளே போனவளைத் தொடர்ந்து அவன் உள்ளே போனான். பிரிட்ஜை மூடி அவள் திரும்பியபோது அவனின் சூடான வெப்ப மூச்சு அவள் முகத்தின் மீது விழுந்தது. அவள் ஏதும் பேசாமல் அவனுடைய கண்களை ஆழ்ந்து நோக்கினாள். அவன் மெதுவாக அவளுடைய தோளைத் தொட்டான். அவள் மறுப்பேதும் சொல்ல வில்லை. குனிந்து அவள் ஈர உதடுகளை முத்தமிட்டான். அவள் அவனை தன்னோடு இறுகிக் கொண்டாள். சிறு குழந்தை போல அவளைத் தூக்கிக்கொண்டு போய் படுக்கையில் கிடத்தினான். ஒரு மிருகத்தின் வெறியோடு அவளை நெருங்கியபோது..



தடக்கென்று பஸ் ஒரு மேட்டில் ஏறி இறங்கியதில் அவன் விழித்துக் கொண்டான். கண்டது எல்லாம் கனவா? மழை நின்று போய் இருந்தது. அருகில் பார்த்தான். அந்தப் பெண் எப்போதோ இறங்கிப் போய் விட்டிருந்தாள். அப்பா உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் கூட ஒரு பெண்ணை புணருவதாக தனக்கு வந்த கனவை எண்ணி அவன் வெட்கம் கொண்டான். காமம் ஒரு கொடிய மிருகம் போல் மனிதனை எப்போதும் துரத்திக் கொண்டே வருகிறது. உடம்பில் ஓடித் திரியும் பச்சை நரம்புகளைப் போல் அதன் நீண்ட நிழல் எங்கும் படிந்து இருக்கிறது. அவனுக்கு அவன் மீதே வெறுப்புத் தோன்றியது. அவனுடைய ஊர் வந்ததும் இறங்கினான். புலம்பிக் கொண்டே இருளின் உள்ளே நடந்து மறைந்து போனான்.

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

April 26, 2009

மரியாதை - திரை விமர்சனம்..!!!


தமிழகத்தை தாக்க வந்த..ச்சீ.. காக்க வந்த தங்கத் தலைவர், இளைஞர்களின் விடிவெள்ளி, புரட்சிக் கலைஞர் விசயகாந்துக்கு சில விண்ணப்பங்கள்..


1. தயவு செஞ்சு உங்க தொப்பைய குறைங்க.. நீங்க திரைக்கு வரதுக்கு ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடியே தொப்பை ஸ்க்ரீனுக்கு வந்துருது.. போற போக்கை பார்த்தா ஸ்க்ரீனில் முக்காவாசி இடத்தை நிறைப்பது நமீதாவா இல்லை நீங்களான்னு போட்டியே வைக்கலாம் போல..


2. உங்க ஒப்பனைக் கலைஞர்கிட்ட சொல்லி நல்ல விக்கா வாங்க சொல்லுங்க.. உங்கள க்ளோசப்புல காட்டுறப்போ பிள்ளைங்க எல்லாம் பயப்படுதுல்ல..


3. உங்களுக்கு காஸ்டியூம் டிசைன் பண்றவரு யாருன்னு சொல்லுங்க.. தேடிப் பிடிச்சு கால்ல விழணும்.. ரோஸ், பச்சை, மஞ்சள்னு இத்தனை கலர்ல கோட் சூட் போட முடியும்னு கண்டுபிடிச்சு பல பேரு கண்ணை குருடாக்குன அந்த புண்ணியவானுக்கு.. இருக்கு..


இல்லை.. இதெல்லாம் என்னால மாத்த முடியாதுன்னு சொன்னா.. ரொம்ப ஈசியா ஒரு விஷயம் இருக்கு.. தயவு செஞ்சு நடிக்கிறத விட்டுடுங்க.. தமிழ் மக்கள் பொழச்சு போகட்டும்..


***************


ஒரு அம்மா வீட்டுக்கு முன்னாடி பெருக்கிக்கிட்டு இருக்காங்க.. அவங்க பையன் வானத்துல இருக்குற சூரியன பார்த்துக்கிட்டே இருக்கான்..


"என்னப்பா. ரொம்ப நேரமா சூரியனையே உத்துப் பாத்துக்கிட்டு இருக்க?"


"இல்லம்மா.. அந்த சூரியனுக்கு மீசை இருந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சு பார்த்தேன்.."


"வேற என்ன.. நம்ம அண்ணாமலை ஐயா மாதிரி இருக்கும்.."


சூரியன க்ளோசப்புல காட்டுறாங்க.. அதுக்கு மீசை, கண்ணு, மூக்கு, வாய் எல்லாம் கிராபிக்ஸ்ல வரைஞ்சா விசயகாந்து.. தாங்க முடியல.. தமிழ் சினிமா திருந்த வாய்ப்பே இல்லடா சாமி..


***************


ஊரிலேயே பெரிய மனிதர் விஜயகாந்த். மகனை அன்பாக அவன் இஷ்டப்படி வளர்க்கிறார். மகன் விஜயகாந்த் விவசாயம் படித்து விட்டு ஊரிலியே இருக்கிறார். கெமிக்கல் பாக்டரி ஆரம்பிக்க விரும்பும் வில்லன்களுக்கு நிலத்தை விற்க அப்பா விஜயகாந்த் மறுத்து விடுகிறார். மீனா (இவர் உண்மையில் வில்லனின் காதலி..) மகன் விஜயகாந்தை காதலிப்பதுபோல் நடித்து சொத்துக்களையும் நிலத்தையும் ஏமாற்றி வாங்கி விடுகிறார். இவர்களின் வீட்டுக்கு புதிதாக வரும் மீரா ஜாஸ்மின் குடும்பத்தில் மீண்டும் மகிழ்ச்சியை கொண்டு வருகிறார். அவர் யார்? வாழ்க்கையில் மீண்டும் விஜயகாந்த் வெற்றி பெற்றாரா? வில்லன்களிடம் இருந்து சொத்துக்களை மீட்க முடிந்ததா? இதுதான் மரியாதை படத்தின் கதை.


வீட்டுக்கு வருபவர் பொய் சொல்லி உள்ளே நுழைந்து எல்லோருக்கும் சந்தோஷத்தை கொண்டு வருவது - பூவே உனக்காக..


காதலித்த பெண் ஏமாற்றி விட்டதால் நொந்து போன கதாவை அடுத்த பெண் மாற்றி வாழ்க்கையில் முன்னேறச் செய்வது - சூர்யா வம்சம்..


மொத்த குடும்பமும் ஒன்றாக வாழ்ந்து வரும் காட்சிகள் - வானத்தை போல..


முந்தைய படங்கள் எல்லாத்தையும் கலந்து கட்டி ஒரு மொக்கை படத்தை எடுத்துள்ளார் விக்ரமன். பொதுவாக இவர் படங்களில் இருக்கும் செண்டிமெண்ட் காட்சிகள் கூட இந்தப் படத்தில் இல்லை.


மகன் விஜயகாந்த்தை கண் கொண்டு பார்க்க முடியவில்லை. இஞ்சி தின்ன குரங்கு போலவே இருக்கிறார். அப்பா கேரக்டேர் எவ்வளவோ பரவா இல்லை. அம்பிகாவும் அம்முவும் அம்மா மகளாக வந்து போகிறார்கள். ரமேஷ் கன்னா வானத்தை போல படத்தில் செய்த அதே ரோல். சமைக்கத் தெரியாத அம்பிகா, பாடத் தெரியாத அம்மு, மொக்கை ஜோக் சொல்லும் ரமேஷ், பழைய காலத்து காமெடி மியூசிக் என நகைச்சுவை காட்சிகள் எல்லாமே பிளேடு போடுகின்றன. வில்லனாக ஷண்முகராஜன், சம்பத்.. ரெண்டுமே காமெடி பீஸ். மீனாவுக்கு வயதாகி விட்டது ரொம்ப நன்றாகத் தெரிகிறது. கடைசியில் அவர் மனம் திருந்துவதும் நம்பும்படி இல்லை. படத்தின் ஒரே ஆறுதல், மீரா ஜாஸ்மின். நல்ல நடிச்சு இருக்கார். ஆளும் பார்க்க பிரெஷா இருக்கார்.


விஜய் ஆண்டனியோட இசையில பாடல்கள் எல்லாமே மெலடியா நல்லா இருக்கு. ஆனா, இன்பமே பாட்டை பாடின உதித் நாராயணனோட வாயில வசம்பைக் கொண்டு தேய்க்க.. ஒளிப்பதிவு நல்ல தெளிவு. பாட்டு எல்லாம் கொஞ்சம் பார்க்குற மாதிரி இருக்கு. என்ன.. பாட்டியாலா பாண்ட், ரோஸ் கோட் எல்லாம் போட்டுக்கிட்டு விஜயகாந்த் ஆடுறதை கொஞ்சம் சகிச்சிக்கணும். சென்னை காதல் என்ற மகா மொக்கை படத்துக்கு பிறகு விக்ரமனுக்கு கிடைச்ச வாய்ப்பை வீண் அடிச்சுட்டார்னுதான் சொல்லணும். எத்தனை நாளைக்குத்தான் ஒரே கதையவே எடுப்பீங்க? கொஞ்சம் மாத்தி யோசிங்க சார்.


படம் பார்த்தவங்களோட "மரியாதை" கெட்டுப் போச்சு..!!!


(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

April 24, 2009

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அபத்தங்கள்....!!!

காலம் காலமா நம்ம தமிழ் சினிமாவில் மாறாத சில விஷயங்கள் இருக்கு. அந்தக் காலத்து எம்ஜியார்ல ஆரம்பிச்சு இன்னைக்கு இருக்கிற தனுஷ் வரைக்கும் கண்டிப்பா எல்லார் படத்துலயும் இந்த விஷயங்கள் இருக்கும். அதுல எனக்கு தெரிஞ்ச சில விஷயங்கள் பத்தித் தான் இந்தப் பதிவு.. இதே மாதிரி விஷயங்கள் உங்களுக்கும் தோணுனா அதப்பத்தி பின்னூட்டத்துல சொல்லுங்க நண்பர்களே..
---> கதாநாயகனோட அறிமுகம்.. கை, கால், மூக்கு, நாக்குன்னு எல்லாத்தையும் காமிப்பாங்க ஆனா மூஞ்ச மட்டும் உடனே காட்ட மாட்டாங்க.. யாராவது ஒரு பெரிசு வந்து ஹீரோவைப் பத்தி நாலு நல்ல விஷயம் சொன்ன உடனே ஸ்லோமோஷன்லதான் நம்ம கதாவோட முகத்தை காட்டணும் என்கிறதுதான் விதி..
---> கதாநாயகி கண்டிப்பா வில்லனோட தங்கச்சியாவோ, மகளாவோத்தான் இருப்பா. முதல் தடவை பார்க்கும்போது நாயகனோட மோதல் வரும்.. அப்புறமா அவளோட மானத்தை நம்ம கதா காப்பாத்துன உடனே காதல் வந்திரும்..
---> நாயகனும் நாயகியும் இருக்குறது கொட்டாம்பட்டியா இருந்தாலும், காதல் வந்த உடனே டூயட் பாட ச்விட்சர்லாந்தோ, நியுசிலாந்தோ போய்டுவாங்க.. அங்கே பனி மழை மாதிரி பெய்யும்.. நம்ம கதா கையுறை, காலுறை, ஆணுறை உட்பட்ட எல்லா உறைகளும் போட்டுக்கிட்டு ஆடுவாரு.. ஆனா நம்ம நாயகிக்கு ரெண்டே பீசுதான்.. அந்த அம்மா குளிர்ல நடுங்குரதுதான் டான்சு..
---> கதாநாயகனுக்கு தங்கச்சி இருந்தா அவ வில்லனை காதலிச்சு ஏமாந்து இருப்பா.. அதே மாதிரி வில்லனுக்கு நாயகனை பழி வாங்கணும்னா தெரிஞ்ச ஒரே வழி கதாவோட தங்கச்சிய கற்பழிக்கிரதுதான்.. அப்போ சுவத்துல இருக்குர புலி மானை வேட்டையாடுற போட்டோவைக் காட்டுறது ரொம்ப முக்கியம்..
---> படத்துல ரெண்டாவது கதாநாயகி கதாவை ஒருதலையா காதலிப்பா.. கடைசி சீன்ல வில்லன் நம்ம கதாவை கொல்ல முயற்சி பண்ணும்போது நடுவுல விழுந்து செத்துப் போவா.. அப்போ கதாவோட கைய நாயகியோட சேர்த்து வைக்கிறதுதான் அவளோட முக்கிய கடமை..
---> குண்டடி பட்டா எல்லாரும் பொட்டுன்னு போய்டுவாங்க.. ஆனா நம்ம கதாவுக்கு குண்டடி பட்டா, அரை மணி நேரம் உணர்ச்சிகரமா பேசிட்டுத்தான் சாவாரு..
---> கதாநாயகி கோவிச்சுக்கிட்டு வேற ஊருக்கு போறதுக்காக எர்போர்ட்டுக்கோ, ரெயில்வே ஸ்டேஷனுக்கோ போவா.. அவ வரதுக்காகவே நாயகியோட பிரென்ட் காத்துக்கிட்டு இருப்பா.. ஹீரோ எவ்ளோ நல்லவன்னு சொல்லிட்டு வந்த வேலை முடிஞ்சதுன்னு கிளம்பிடுவா..
---> குடும்பப் படம்னா கடைசி ஒரே சீன்ல வில்லன் நல்லவனா மாறி மன்னிப்பு கேட்டுருவாரு.. உடனே குடும்பத்துல எல்லாரும் அவரை மன்னிச்சு ஏததுக்கிடுவான்க..
---> கதா வாழ்க்கைல முன்னேறனும்னா ஒரே ஒரு பாட்டு போதும்.. அந்த பாட்டு இப்போ விக்ரமன் சார்கிட்ட ஸ்டாக்ல இருக்கறதா பேசிக்கிறாங்க..

---> கடைசியா, கதா எத்தனை பேரைக் கொன்னாலும், வில்லன் என்ன அட்டூழியம் பண்ணினாலும் கண்டுக்காம இருந்துட்டு, படம் முடிய அஞ்சு நிமிஷமே இருக்குரப்பதான் போலிஸ் வரும்..
அவ்வ்வ்வ்வ்வ்... இந்த மாதிரி நெறைய இருக்கு.. இப்போதைக்கு இது போதும்..
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

April 21, 2009

பேருந்து - சில நினைவுகளும் ஒரு கறுப்பு தினமும்..!!! (சங்கமம் போட்டிக்காக)


பேருந்தை பிடிக்கும்
அவசரத்தில் உணவை
மறுத்து ஓடிய நாட்களும்....

நிற்கும்போது ஏறாமல் - நகரத்
துவங்கியபின் ஓடிப்போய்
ஏறும் இளமைத்திமிரும்....

சக பயணியின் வசவை
ரசித்துக்கொண்டே படியில்
தொங்கும் பெருமிதமும்..

நண்பர்களின் பாட்டுக் கச்சேரியும்..
கணப்பொழுதில் சிரிப்பை தந்து
கடந்து போகும் பள்ளிப் பெண்ணும்..

நடத்துனரோடு ஆடும் நகைச்சுவை
கூத்தும் - பஸ் டே
கொண்டாட்ட குதூகலமும்..

எல்லாம் அவனுக்கு
பிடித்து இருந்தன..!!

உடன் பழகிய தோழிகள்
கண்முன்னே உயிரோடு
கொளுத்தப் படும்வரை.. !!!

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

April 20, 2009

எனக்குப் பிடித்த ஆசிரியர்கள்...!!!!

எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு..

பொருள்: "எண்" என்று சொல்லப்படுவதும், "எழுத்து" என்று கூறப்படுவதும் என்னும் இவை இரண்டும், இவ்வுலகில் வாழும் உயிர்களுக்குக் கண் என்பார்கள்.
எழுத்தறிவித்தவன் இறைவன் - இப்படி ஒரு சொலவடை உண்டு. சொல்லி கொடுக்குற ஆசிரியர கடவுளுக்கு சமமா சொல்ற மக்கள் நாம. கடவுள் எப்பவும் மனுஷன் கூட இருக்க முடியாதுன்னுதான் அம்மாவக் கொடுத்தான். ஆனா இன்னைக்கு இருக்கிற சூழ்நிலைல அம்மாவ விட பசங்க கூட அதிகமா நேரம் செலவிடுறது ஆசிரியர்கள்தான். மூணு வயசுல பள்ளிக்கூடம் போக ஆரம்பிச்சா இருபது வயசுல கல்லூரி முடிக்கிற வரைக்கும்.. ஒரு பையனோட / பொண்ணோட நல்வாழ்வைத் தீர்மானிக்குரதுல ஆசிரியர்களுக்கும் முக்கிய பங்கு இருக்கு. வெறுமனே பாடத்தை மட்டும் சொல்லித் தராம, ஒழுக்கத்தையும் வாழ்கைல போராடுற குணத்தையும், நம்பிக்கையையும் ஆசிரியர்கள்தான் சொல்லித்தரணும். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் பற்றிய இந்த தொடர்பதிவை என்னை எழுத சொல்லிய நண்பர் லோகுவுக்கு நன்றி. அவருடைய பதிவை படிக்க இங்க க்ளிக்குங்க..
நான் படிச்சது மதுரை ஜெய்ஹிந்துபுரத்துல இருக்குற செவேந்த் டே அட்வெண்டிஸ்ட் பள்ளி. அந்தப் பள்ளி ஆரம்பிச்சப்போ போய் சேர்ந்த கொஞ்ச பேர்ல நானும் ஒருத்தன். கடைசியா பனிரெண்டாம் வகுப்பு முடிக்கிற வரை ஒரே ஸ்கூல் தான். ஆரம்ப காலத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச ஆசிரியர்கள்னா.. ப்ரின்சிபாலா இருந்த சுந்தர் சிங் சார், அவங்களோட மனைவிதான் என்னோட தமிழ் டீச்சர் (பேர் ஞாபகம் இல்லை).. மாட் மிஸ்(இவங்க ஒரு ஆங்கிலோ இந்தியன்.. ஆனா அருமையா தமிழ் பேசுவாங்க...) ரொம்ப சின்ன வயசுங்கரதால இவங்களைப் பத்தின வேற எந்த விஷயமும் ஞாபகம் இல்லை.
என்னுடைய பள்ளி வாழ்க்கைல நான் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது ரெண்டு பேர்.
குருராஜ் சார்: ரெண்டாவதுல இருந்து +2 வரை எனக்கு பாடம் எடுத்தார். கடவுள் மேல ரொம்ப பக்தி உள்ளவர். எப்பவும் மாரல் கிளாஸ் எடுத்தாருன்னா எல்லாருமே அவ்வளவு விரும்பி கேப்போம். சின்ன சின்ன கதைகள் சொல்லி, பாட்டெல்லாம் பாடி போர் அடிக்காம நடத்துவார். ஒரு தடவை ஸ்கூல்ல இருந்து ஒரு மேடத்தை சஸ்பெண்டு பண்ணிட்டாங்க. யாருக்கும் தெரியாம ஒரு நாலஞ்சு பசங்க போய் அவங்களை பார்த்துட்டு வந்தோம். இதை யாரோ பிரின்சிகிட்ட போட்டுக் கொடுக்க, எங்க மேல விசாரணை வச்சாங்க. அப்போ கடைசி வரை கூட இருந்து, கார்த்தி அப்படி தப்பெல்லாம் பண்ண மாட்டான்னு வாதாடி எனக்காக சார் ரொம்ப கஷ்டப்பட்டதை மறக்கவே முடியாது. பள்ளிக்கூடம் முடிஞ்சா கடைசி நாள் அவரை பார்த்து ஆசிர்வாதம் வாங்கினேன். நீ ரொம்ப நல்லா வருவடான்னு அழுதுகிட்டே என்னை கட்டிப்பிடிச்சிக்கிட்டாரு. அந்த நிமிஷம் எனக்குள்ள இன்னும் அப்படியே இருக்கு.
மாரியம்மாள் மிஸ்: இவங்க என்னோட ஆறாம் வகுப்புல வந்து சேர்ந்தாங்க. வந்த புதுசுல யாருக்கும் இவங்களை பிடிக்காது. ரொம்ப கண்டிப்பானவங்க. ஆனா போகப் போக பசங்க அவங்க நல்ல மனச புரிஞ்சிக்கிட்டோம். பிசிக்ஸ் தான் அவங்களுடைய முக்கிய பாடம்னாலும் மத்த பாடத்துல யார் போய்க் கேட்டாலும் சொல்லிக் கொடுப்பாங்க. இவங்க கிளாஸ்லதான் நான் அதிகமா சேட்டை பண்ணி மாட்டி இருக்கேன். மத்த ஆசிரியர்களுக்கும் உதவி பண்றதுல மொத ஆளா இருப்பாங்க. நாம நல்லா இருந்தா பத்தாது, நம்மள சுத்தி இருக்கவங்களையும் சந்தோஷமா வச்சுக்கணும்னு எனக்கு சொல்லிக் கொடுத்தவங்க இவங்கதான்.
கல்லூரியில நிறைய ஆசிரியர்கள் பழகினாலும் அவ்வளவா யாரும் என்னை ரொம்ப பாதிச்சது கிடையாது. இந்தப் பதிவுல பிடிக்காத ஆசிரியர்கள் பத்தியும் எழுத சொல்லி இருந்தாரு நண்பர் லோகு. அன்னைக்கு அந்த நேரத்துல யாராவது ஒரு ஆசிரியர் மேல கோபம் வந்தது உண்டு. ஆனா இன்னைக்கு பொறுமையா யோசிச்சு பார்த்தா, எல்லாமே நம்ம நல்லதுக்குத்தானே.. யாருமே நாம கெட்டுப் போகணும்னு சொல்லலியேன்னு தான் தோணுது. உண்மைல நாமதான் ஆசிரியர்கள் மனச நோக அடிச்சிருக்கோம்.. அதனால் யாரையும் பிடிக்காதவங்கன்னு எழுத மனசு வரல..
ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குகிறது இளைஞர்கள்னு சொன்னா.. அவங்கள நல்ல மனிதர்களா ஆக்குறது ஆசிரியர்கள்தான். இது ஒரு வேலை கிடையாது.. சேவை. இன்னைக்கு நெறைய பேரு வேலை கிடைக்காம விளையாட்டா இந்த ப்ரோபாசனுக்கு வராங்க. அப்படி இல்லாம இதை மனமுவந்து செஞ்சாங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன். நான் ஒரு ஆசிரியரா இருக்குறதுல பெருமைப்படுறேன். நான் படிக்கும்போது என்னோட ஆசிரியர் என்கூட எப்படி சகஜமா பழகனும்னு ஆசைப்பட்டேனோ, அப்படித்தான் நான் இன்னைக்கு இருக்கேன். கொஞ்ச நாள் கழிச்சு என்னோட மாணவர்கள் யாரவது அவங்களுக்கு பிடிச்ச ஆசிரியர்கள் பத்தி சொல்லும்போது, அதுல என்னோட பேரும் இருந்தா, எனக்கு கிடச்ச மிகப்பெரிய விருது அதுதான்..!!!
இந்த தொடர்பதிவுக்கு நான் அழைக்க விரும்புவது...
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)