April 12, 2010

உங்கள் நாகரீகம் நாசமாய்ப் போகட்டும்..!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் நான் நுழைந்தபோது இரவு மணி ஒன்பதேகால் ஆகி விட்டிருந்தது. ஈரோடு செல்வதற்கான ஏற்காடு எக்ஸ்பிரஸ் பத்தேமுக்காலுக்குத்தான் கிளம்பும். அது வரை என்ன செய்வதெனத் தெரியவில்லை. எங்கும் ஜனத்திரள். கிடைத்த இடத்தை எல்லாம் ஆக்கிரமித்து இருந்தார்கள். வெக்கையில் உடல் அவிந்து விடும் போல இருந்தது. சற்று நேரம் எங்கேயாவது சாவகாசமாக "குளு குளு கூலில்" அமர்ந்தால் நன்றாக இருக்கும் போலத் தோன்றியது... அட அதாங்க.. .சி. எங்கே போகலாம்? சட்டென்று ரயில் நிலையத்திலேயே அமைந்திருக்கும் சரவண பவனின் ஞாபகம் வந்தது.

சாயங்காலம் நண்பர்களோடு சேர்ந்து டிபன் சாப்பிட்டு இருந்ததால் பெரிதாகப் பசியில்லை. ஆனாலும் போய் பேருக்கு எதையாவது சாப்பிட்டு விட்டு, கொஞ்ச நேரம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு வரலாம் எனத தோன்றியதால், அங்கேயே போகலாம் என முடிவு செய்தேன். படியேறிச் சென்று கதவைத் திறந்து உள்ளே நுழைந்தால், அடங்கொய்யால.... இதுக்கு ஸ்டேஷன்ல இருந்த கூட்டமே பரவா இல்லை போலேயே.. மண்டை காய்ந்து போனது. ஏசி போட்டிருக்கிறார்கள் என்று யாராவது சொன்னால்தான் தெரியக்கூடும். உள்ளே அத்தனை வெப்பம். அத்தனையும் மனிதர்களின் மூச்சு. என்ன செய்வது? திரும்பி வந்த வழியே போய் விடலாமா என்றால் மனசு கேட்கவில்லை. மறுநாள் காலை ஈரோடு செல்லும் வரை பசிக்காமல் இருக்க வேண்டுமே. எதையாவது வயிற்றுக்குப் போட்டுச் செல்வோம் என்று உள்ளே நுழைந்தேன்.

எல்லா டேபிளிலும் கூட்டம். மக்கள் வெயிட்டிங்கில் இருந்தார்கள். சாப்பிட்டு முடித்தவர்கள் எழுந்து கொள்ள, சட சடவென அடுத்த குரூப் அந்த இடத்தை பிடித்துக் கொண்டது. நானும் போய் ஓரிடத்தில் நின்று கொண்டேன். என்னருகே ஒரு குடும்பம் நின்று கொண்டு அவர்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். மொத்தம் நான்கு பேர். அம்மா, அப்பா, மகன் மற்றும் மகள். மகனுக்கு பத்து வயதிருக்கும், மகளுக்கு பனிரெண்டு இருக்கலாம். ஆள் யாரும் பார்ப்பதற்கு நம்மூர் ஆட்கள் போலவே இல்லை. டி -ஷர்ட், ஸ்லீவ்லெஸ், அரைக்கால் சட்டை என்று நவநாகரீகமாக உடை அணிந்து இருந்தார்கள். சரி.. வெளிமாநிலத்தவர் போல என்று நினைத்துக் கொண்டேன்.

நாங்கள் நின்று கொண்டிருந்த டேபிள் காலியானது. (மொத்தம் ஆறு பேர் அமரக் கூடியது) பேசிக் கொண்டிருந்த பெரியவர் வேக வேகமாக போய் அமர்ந்து கொண்டார். அவரது குடும்பமும் தொடர்ந்தது. நான் டேபிளின் மறுமுனையில் அமர்வதற்காக சென்றேன். அப்போது அவர் என்னிடம் சொன்னார்.

"Excuse me, we are four.." (மன்னியுங்கள்.. நாங்கள் நான்கு பேர் இருக்கிறோம்..)

நான் பொறுமையாகத் திருப்பி சொன்னேன்..

"ya.. i do know that.. am moving to the other side of the table.." (சரி.. எனக்கும் தெரியும்.. நான் மேஜையின் மறுமுனையில்தான் அமரப் போகிறேன்..)

அவர் தனக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே திரும்பிக் கொண்டார். ஒரு வேளை அவர்களுடைய தனிமையை நான் குலைப்பதாக நினைத்துக் கொண்டாரோ என்னமோ? நான் அமைதியாக டேபிளின் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டேன். எனக்கெதிரே இருந்த மற்றொரு இருக்கையில் ஒரு வயதான பெண்மணி வந்து அமர்ந்து கொண்டார். இதற்கும் பெரியவர் ஏதோ முனக, அவருடைய மனைவி அவரை சமாதானம் செய்துகொண்டிருந்தார்.

நான் என்னுடைய கவனத்தை அந்த சிறுவன் சிறுமியிடம் திருப்பினேன். இருவருமே அருமையான ஆங்கிலத்தில் பேசினார்கள். அவர்களுடைய தாய் நடுநடுவே "சொல்றேன்ல.. கேளுங்க.." என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. இவர்களுடைய தாய்மொழி தமிழ் தானா?

குழந்தைகளுடைய மொழியும், ஆங்கில உச்சரிப்பும் அத்தனை அபாரமாக இருந்தது. அவர்களுடைய தாய்மொழி தமிழ்தான் என்பதை என்னால் அடையாளம் காணவே முடியவில்லை. சிறு குழந்தையாய் பேசத் தொடங்கியது முதலே ஆங்கிலத்தில் பேசப் பழகி விடுகிறார்கள். இதனால்தான் பிறரை ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளுவதில் இவர்களுக்கு எந்த சிரமும் இருப்பதில்லை. நம்ம ஊரு மாணவர்களின் பிரச்சினையே இதுதானே.. ஹ்ம்ம்ம்.

சிறிது நேரத்தில் பேரர் வந்து என்ன வேண்டும் என்று கேட்டார். நான் எனக்கு புரோட்டா குருமாவும், என்னெதிரே இருந்த பெண் தோசையும் ஆர்டர் செய்தோம். அருகில் இருந்த குடும்பம் சோலா பூரி, மினி இட்லி , அது இது, லொட்டு லொசுக்கு என்று என்னென்னவோ சொன்னார்கள். பேரர் கேட்டுக் கொண்டு கிளம்பிப் போனார்.

அந்த சிறுவன் அவனுடைய தாயிடம் திரும்பி சொன்னான்.

(அவர்கள் ஆங்கிலத்தில் பேசியதை நான் தமிழில் சொல்கிறேன்..)

"இவ்வளவு பெரிய ஹோட்டலில் ஏன் இப்படி பஞ்சப் பரதேசிகளை எல்லாம் பேரராக வைக்கிறார்கள்?"

எனக்கு சுருக்கென்றது. அந்த பேரரின் உருவத்தையும், அவரது உடைகளையும் பார்த்து அந்தச் சிறுவன் இப்படி கேட்டிருக்கிறான். காலையில் இருந்து தொடர்ச்சியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஓயாமல், ஓரிடத்தில் நிற்காமல், அலைந்து திரிந்து பார்க்கும் வேலை. இததனைக்கும் அவருடைய ஆடைகள் எல்லாம் கொஞ்சம் கசங்கி இருந்தாலும் சுத்தமாகத்தான் இருந்தன. வந்தவர்களிடம் எல்லாம் சிரித்த முகத்தோடு பேசித்தான் ஆர்டர் எடுத்தார். அவரைப்போய்?

எனக்கு இப்போது அந்தப் பையனின் மேல் கொஞ்சம் எரிச்சல் வந்தது. அவன் கேள்விக்கு அவனுடைய தாயார் என்ன பதில் சொல்கிறார் என்று கவனித்தேன்.

"விடும்மா.. இதெல்லாம் சகஜம்.. அப்புறம் அந்தப் பஞ்சப்பரதேசிகளும் பிழைக்கணும் இல்லையா.. நாம அடுத்த தடவை இன்னும் நல்ல ஹோட்டலாப் போகலாம்.."

எனக்கு ஓடிப்போய் அவர்களை அப்பினால் என்ன என்று தோன்றியது. அவன்தான் சின்னப்பையன்.. தெரியாமல் பேசுகிறான் என்றால்.. இவர்கள் வளர்ந்தவர்கள்தானே? கடுப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டேன். எனக்கான புரோட்டா வந்தவுடன் சாப்பிடத் தொடங்கினேன்.

அவர்கள் கேட்ட ஐட்டங்கள் வர சற்றே லேட்டானது. இப்போது அந்தப் பெண்ணின் முறை.

"அம்மா.. இன்னும் கொஞ்ச நேரத்தில் பாரேன். அந்தப் பரதேசி வருவான்.. மேடம்.. நீங்கள் கேட்ட உணவு வகைகள் எல்லாம் முடிந்து விட்டன அல்லது இல்லை என்று சொல்வான் பாரேன்.."

இதை சொல்லும்போது அந்தப் பெண்ணின் முகம் அஷ்ட கோணலாக இருந்தது. அந்த பேரர் இப்படித்தான் பேசுவாராம். முகத்தை சுருக்கி காண்பிக்கிறாளாம். உடன் சுற்றி அமர்ந்து இருந்த மூவரும் சிரிக்கத் தொடங்கி விட்டனர்.

சரியாக அதே நேரத்தில் அந்த பேரர் அவர்களுக்கான உணவு வகைகளைக் கொண்டு வந்தார். உடனே அந்தப் பையன் சொன்னான்.

"சாத்தான்.. நினைத்தவுடன் வந்து விட்டான் பாரேன்.."(Think of the devil..)

அதற்கு மேல் அங்கே என்னால் உட்கார முடியவில்லை. விருட்டென்று எழுந்து கொண்டேன். பில்லைக் கொடுத்து விட்டு, அத்தனை கூட்டத்திற்கு நடுவிலும் கனிவுடன் நடந்து கொண்ட அந்த மனிதருக்கு நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தேன்.

அவர்களை எதுவும் கேட்காமல் வந்து விட்டோமே என்று என் மீதே எனக்கு கோபமாக வந்தது. அத்தோடு இவர்களைப் போய் நாகரீகமானவர்கள், விஷயம் தெரிந்த மனிதர்கள் என்றெல்லாம் நினைத்து விட்டோமே என்று ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. சக மனிதனை மதிக்கத் தெரியாத... அவர்களின் வலியை உணரத் தெரியாத.. தங்களைப் போலத்தானே அவர்களும் என்று புரிந்து கொள்ளாத பிள்ளைகள்.. அதை அவர்களுக்கு உணர்த்தாமல் தானும் சேர்ந்து ஆட்டம் போடும் பெற்றோர்கள். இதுதான் நாகரீகமா.. புற அழகு ஒன்றை மட்டுமே கவனிப்பதும், மனிதம் மறப்பதும்.. இதுதான் மேல்தட்டு வர்க்கத்தின் நாசூக்கா? இதுதான் உங்கள் நாகரீகம் எனில்..

அந்த நாகரீகம் நாசமாய்ப் போகட்டும்.

53 comments:

Robin said...

இது நாகரீகம் அல்ல, அகங்காரம்.

Raju said...

நீங்க ஏதாவது அவங்கக்கிட்ட கேட்ருந்தீங்கன்னா, உங்களுக்கு
“நாகரீகம் தெரியாதவன்”ற பட்டம் கிடைச்சாலும் கிடைச்சுருக்கும்.

:-)

ஈரோடு கதிர் said...

இது போல் ஆங்காங்கே பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம்...

vasu balaji said...

அட போங்க கார்த்தி! பெயர் எழுதிய பேட்ஜ் இருந்தாலும் யோவ் பேரர்னு கூப்புடுறதும், ஒரு ரூபாய் டிப்ஸ் வச்சிட்டு கேவலமா பார்க்குறதும் பத்திகிட்டு வரும். இவனுங்க நாகரீகமும் சரி இவனுவளும் சரி நாசமாத்தான் போகணும்.

கே.ஜே.அசோக்குமார் said...

நல்ல பதிவு, இதற்கு காரணம் மொழியென்றுதான் தோன்றுகிறது. தமிழ்மொழியை பேசாமல் ஆங்கிலம் பேசும்போது ஒரு ஆணவம் வந்துவிடுகிறது சில மக்களுக்கு, ஆங்கிலம் பேசதெரியாதவர்களைப் பார்தது, அப்படி கேலிசெய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். அவர்களை நாலு பேர் கேலிசெய்யும் வரை இதை உணரப்போவதில்லை.

விவேக் said...

நாகரிக வளர்ச்சியின் உச்சம் .. சக மனிதர்களை மதிக்க கற்று கொடுக்காத அந்த பெற்றோர்களை என்ன செய்ய!!!
பணத்திமிர் வேறொன்றும் இல்லை...

ஜெட்லி... said...

நிறைய பேரு இது போல இருக்காங்க அண்ணே....
பணம் தான் காரணம்!!

ஜீவன்பென்னி said...

இவங்கள 5 அறிவு ஜீவிகள் சொன்னா, அந்த 5 அறிவு ஜீவிகளை கேவலபடுத்துனதா ஆகிடும். இதுகல எதுல சேக்குறது?

Ravi said...

இது ஒரு கலாசார சீரழிவின் அடையாளமே! மேலும் இதற்கு காரணம் இவர்களிடம் மட்டுமில்லை. நம் சமுதாயம் வளர்ந்த விதம் அப்படி. நல்ல குணங்களை தந்தையும் தாயும் மட்டும் ஊட்டுவதில்லை. நம்மை சுற்றியிருக்கும் சமுதாயமும் கற்றுக் கொடுக்கிறது. அந்த குழந்தைகளின் நடத்தைக்கு வேண்டுமானால் அந்த தாய் தந்தையர் பொறுப்பேற்கலாம் என்றால் அந்த பெற்றோரின் நடத்தைக்கு யார் பொறுப்பேற்பது? ஒரு சிறிய விஷயம். ஒரு பெரியவரை "பெரிசு" என்று கூப்பிடுவது தவறு என்றும் அப்படி கூப்பிடுவது அந்த பெரியவருக்கு எத்தகைய மன உளச்சலை தரும் என்பதும் யாரும் உணருவதில்லை. இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் தொலைகாட்சியில் இது நியாயப்படுத்த படுகிறது என்பது அதைவிட கேவலம்.
எல்லாவற்றிக்கும் மேல் அவர்கள் ஆங்கிலம் பேசியதால் அவர்கள் நாகரிகமானவர்கள் என்று நீங்கள் நினைத்த‌து (மேற்கண்ட அனுபவத்திற்கு முன்!)உங்கள் தவறு. அதுதான் நாகரீகம் என்று தமிழ்நாட்டிலேயே ஆங்கிலம் (அதுவும் குடும்பத்தினருக்கு இடையே கூட!)பேசும் இவர்கள் எப்படி அறிவாளிகளாக இருப்பார்கள்?. அறிவாளிகள் தங்கள் தாய் மொழியை அவ‌மான‌ப் ப‌டுத்த‌ மாட்டார்க‌ள்.
ந‌ன்றி
ர‌வி
www.ravikutty.blogspot.com

ஹேமா said...

கார்த்தி தப்புப் பண்ணிட்டீங்க.நீங்க அமைதியா ரெண்டு வார்த்தை கேட்டிருக்கணும்.அப்பத்தான் அந்தப் பையன் இன்னொரு இடத்தில இப்பிடி பேசியிருக்க மாட்டான்.சிலசமயம் தன் தப்பைக்கூட உணர்ந்திருக்ககூடும்.

க.பாலாசி said...

உங்களின் சாபம் பலிக்கட்டும்... வேறெப்படி இந்த மனதை ஆசுவாசப்படுத்துவது.....

அகல்விளக்கு said...

மனிதர்களை மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்... அவர்கள் பிச்சையெடுப்பவர்களாக இருந்தாலும்...

"உழவன்" "Uzhavan" said...

நறுக்குனு நாலுவார்த்தை கேட்டிருக்க வேண்டும் நீங்கள்.. விட்டு விட்டீர்கள்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//நிறைய பேரு இது போல இருக்காங்க அண்ணே....
பணம் தான் காரணம்!!

//

:((

//மனிதர்களை மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்... அவர்கள் பிச்சையெடுப்பவர்களாக இருந்தாலும்...

//

Repeat!!

Rajan said...

//நாகரீகம் நாசமாய்ப் போகட்டும்.//

இதத் தான் தல நாங்க செயல்ல காட்டிட்டு இருக்கோம் !

Rajan said...

//இததனைக்கும் அவருடைய ஆடைகள் எல்லாம் கொஞ்சம் கசங்கி இருந்தாலும் சுத்தமாகத்தான் இருந்தன.//

அது ரின் விளம்பர உடையாக இருந்தாலும் , அச்சிறுவனின் எண்ணம் அப்படித்தான் இருந்திருக்கும் தோழா. கற்பிதம் அவ்வாறு. தம்மிலும் நிறத்திலும் அங்க லட்சணத்தில் சற்று குறைவாகவும் தோற்றம் பெற்ற ஆட்களை பார்க்கையில் அவர்தம் புத்தி வெளியே வந்துவிடும். பணக்கார மேட்டிமைத் திமிர். இன்னும் சிறிது நேரம் அங்கேயே காத்திருந்திருந்தால் அச்சிறுவனின் கையால் பேரருக்கு டிப்ஸ் வழங்க வைத்திருப்பான் அந்த பெரிய மனிதன். அது பொழுது அந்நால்வர் முக பாவனைகளை தவற விட்டு விட்டீர்கள் போல.

☀நான் ஆதவன்☀ said...

நாகரீகம் வளரும் போது ஒரு அறிவும் குறைஞ்சுடும் போல நண்பா :(

குமரை நிலாவன் said...

ஆணவம்,பணத்தமிர் வேறென்ன

கோவி.கண்ணன் said...

ஹூம்,

தொழிலாளியை கட்டிப்பிடிக்கும் எத்தனை வசூல் ராஜா எம்பிபிஎஸ் படம் எடுத்தாலும் திருந்தமாட்டார்கள்.

பிரிவினையே நாகரீக மாந்தர்கள் என்று கூறிக் கொள்வோர்களால் தான் ஏற்படுகிறது.

Unknown said...

அது நாகரீகமே இல்லை கார்த்தி..

நீங்க நல்லா நாலு வார்த்தை கேட்டுட்டு வந்திருக்கணும்னு எல்லாரும் சொல்றா மாதிரி எனக்குச் சொல்லத்தோணினாலும், அவங்களுக்கெல்லாம் புத்தியில ஏறாது நீங்க போனப்புறம் உங்களையும் கேலிதான் செய்திருப்பாங்கங்கிறதால நீங்க அருவருப்பா ஒரு தடவை அவங்களப் பாத்துட்டு வந்திருக்கலாம். இல்ல யார்கிட்டயாவது ஃபோன் பேசற மாதிரி பச்சைத் தமிழில - “என் பக்கத்துல ஒரு குடும்பம் உக்காந்து சாப்புடுது மாப்ள” என்று ஆரம்பித்து அவர்களை நாறடித்துவிட்டிருக்கலாம்.

Unknown said...

ஒரு நாளக்கு அந்த வேளையை அவர்கள் செய்தால் கஸ்டம் தெரியும்.அனுபவத்தை விட சிறந்த ஆசிரியர் யாரும் இல்லை நண்பா..

உமா said...

இதற்கெல்லாம் பணம், குணம், வளர்ப்பு, தனி மனிதனின் அகங்காரம் அதனுடன் மொழியும் ஒருகாரணம். படிப்பே இல்லாத [அரசியல் வாதி என்றுதான் வைத்துக்கொள்ளுங்களேன்]சிலரும் மற்றவரை எப்படி நடத்துகிறார்கள். அதற்கு அதிகாரம் பணம் இப்படி சில் காரணங்களும் உண்டுதானே?

நிகழ்காலத்தில்... said...

இந்த நிகழ்வைப் பொறுத்தவரை நானாக இருந்தால் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே வந்திருப்பேன் அக் குடும்பத்தினரைப் பார்த்து..

அவர்கள் செயல் அவர்களது கணக்கில் பற்று வைக்கப்பட்டு இருக்கும், உரிய நேரத்தில் அவர்களுக்கு வட்டியுடன் திருப்பித் தரப்படும்.

யாரால்.. இயற்கை நியதியால்..செயல்விளைவுத்தத்துவத்தின் அடிப்படையில்..

இதை நான் நம்புகிறேன். இயல்பாக இருக்கிறேன்.

விருட்டென எழுந்து ஒருகணமேனும் என் மன அமைதியை இழக்க மாட்டேன் ..தல

வேறு சூழ்நிலை அமையும்போது முயற்சி பண்ணிப்பாருங்க தல

வாழ்த்துகள்

ஜோ/Joe said...

அந்த கேடுகெட்டவர்கள் நம் தமிழை பேசாதிருப்பதே நல்லது.

ஆளவந்தான் said...

அடடே.. என்னங்க இதுக்கெல்லாம் போய் அலட்டி கிட்டு... ஃப்ரீயா விடுங்க :)

அந்த பொண்ணு இன்னும் ஒரு 10 வருசத்துல அமெரிக்காவுக்கு படிக்க வரும்.. அப்புறம் ட்யூசன் பீஸ் கட்டுறதுக்கு இங்க இருக்கிற ரெஸ்டாரண்டுல “அதே” வேலை தான் பாக்கணும்.

இல்ல படிச்சு முடிச்சு ”ஏர் ஹோஸ்ட்ரஸா” ”அதே” வேலையை தான் பாக்கும்..

நீங்க நியூட்டனின் மூன்றாம் விதி படிச்சதில்லையா? :)

selventhiran said...

பணக்காரர்களிடத்தில் அன்பை எதிர்பார்க்க முடியாது. கூடாது. பணமும் அன்பும் ஒன்றுக்கொன்று விரோதமானவை. - ஓஷோ

தருமி said...

அப்பல்லோ மருத்துவமனையில் தாய்க்கு சின்ன அறுவை சிகிச்சை. அதற்கு குடும்பமே ரத்த தானத்திற்கு வரவேண்டிய கட்டாயத்தில் .. அந்தக் குடும்பம் செய்த அட்டூழியம் ... அம்மாடி,, அது ஒரு தனிக் கதை. எழுதலாம் அல்லது உங்களையே எழுத வச்சிர்ரேன்.

கொடுமை ....

sriram said...

இது நாகரீகமில்லை, பணத்திமிர்.
பிள்ளைகளுக்கு மனுஷனை (பணத்தை அல்ல) மதிக்கவும், Thanks & Sorry சொல்லவும் கத்துக் கொடுக்கணும்.

எதுக்கெடுத்தாலும் அமெரிக்காவை பின்பற்றும் நம்ம மக்கள் அமெரிக்காவை இந்த மாதிரி விஷயங்களில் பின் பற்றுவதில்லை

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

வினோத் கெளதம் said...

என்ன பண்ணுறது..இப்படி பேசுவது தான் நாகரிகம் என்று அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள்..:(

Anonymous said...

Dear karthi,

Thank you for your nice article. The reason for their babaric and brutal behaviour is due to inferiority comlex. It is just because of their emotional outburst. I have seen most of NRI and their ABCD kids used to behave like this. In their residing country, whatever it is, they will be treated like the way they behaved. Please never mind about their attitude and ignore them.
Maduraikkaran

தாராபுரத்தான் said...

உணவங்களில் பணியாளர்களிடம் சட்டம் பேசுவர்களை சகித்து கொள்ளவே முடியாதே.

Shrek said...

//அந்த பொண்ணு இன்னும் ஒரு 10 வருசத்துல அமெரிக்காவுக்கு படிக்க வரும்.. அப்புறம் ட்யூசன் பீஸ் கட்டுறதுக்கு இங்க இருக்கிற ரெஸ்டாரண்டுல “அதே” வேலை தான் பாக்கணும்.

இல்ல படிச்சு முடிச்சு ”ஏர் ஹோஸ்ட்ரஸா” ”அதே” வேலையை தான் பாக்கும்..//

Thats True. but she won't feel the pain. because in USA(most western countries), they won't humiliate the wait staff in public for his/her appearance.

This is upper class "Indian நாகரீகம்" which is mix of 'western + still treating fellow human being so badly indian' mentality,
and it STINKS.

//எதுக்கெடுத்தாலும் அமெரிக்காவை பின்பற்றும் நம்ம மக்கள் அமெரிக்காவை இந்த மாதிரி விஷயங்களில் பின் பற்றுவதில்லை

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

i agree with it completely.

Unknown said...

கார்த்தி,
நியாயமாப் பார்க்கப் போனால் நானும் உங்கப் பக்கம் தான் பேசணும்.

அவங்க பேசின ஆங்கிலத்துக்கும் உங்கள் மொழிபெயர்ப்புக்கும் சில் இடைவெளிகள் இருக்கலாம். அவர்கள் சொன்னதை நீங்கள் அப்படியே ஆங்கிலத்தில் கொடுத்திருந்தாலும் அவர்கள் சொன்ன தொனியை ஊகிக்க முடியாது. உதாரணத்துக்கு “think of the devil" என்பதை அப்படியே சாத்தான் என்று மொழி பெயர்ப்பது சரியாக வராது. இங்கு சிலர் தன் குழந்தைகளைக் குறிப்பிடும் போது கூட “think of the devil" சொல்லுவார்கள்.

நீங்கள் கவனித்தது ஒரு குடும்பத்தினர் அவர்களுக்குள் பேசிக்கொண்ட ஒரு உரையாடல் மட்டுமே. அவற்றில் சில உள்ளர்த்தங்கள் இருக்கலாம். அவை நமக்கு சில நேரங்களில் புரியாது.

அவர்கள் அந்த பேரரை அப்படி நடத்தியிருந்தால் நீங்கள் கேட்பதில் நியாயமிருக்கலாம். அவர்கள் அவரை சரியான முறையில் நடத்தினார்கள் என்பது உங்கள் அவதானிப்பிலேயே புரிந்தது. மற்றபடி அவர்களுக்குள் பேசிக் கொண்ட உரையாடலை வைத்து அவர்களின் நாகரீகத்தை (உங்கள் மனதில் மட்டுமல்லாமல் இணையதளத்தில் பொதுவில்) எடை போடுவது சரியான அளவுகோலாகப் படவில்லை..

அடுத்தவரை மதிக்க வேண்டுமென்ற உங்கள் உயர்ந்த உள்ளத்தை மதிக்கிறேன். மற்றவர் குடும்பத்துக்குள் எட்டிப் பார்த்து அவர்களையும் அவர்கள் நாகரீகத்தையும் எடை போடுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. Let us leave their family conversation to themselves.

Jackiesekar said...

நண்பா நான் எல்லாம் கேட்டு்ட்டு வரும் ஆள்... எவ்வளவு தெனவெட்டோடு பிள்ளைகள் வளர்க்கபடுகின்றார்கள்...

கார்த்திகைப் பாண்டியன் said...

பதிவெழுத ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஆகி விட்டன.. முதல் முறையாக எனது இடுகை தமிழ்மணம் மகுடத்தில்.. சந்தோஷமாக உணர்கிறேன்.. நல்லதொரு விஷயத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் வகையில் வாக்களித்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றி

Unknown said...

"Excuse me, we are four.." - நன்றாக ஞாபகம் இருக்கிறது. சென்ட்ரல் ஜெயிலை இடித்த பொழுது என்னுடைய மருமகனுடன் அதை பார்ப்பதற்கு சென்றுவிட்டு, சரவணா பவனில் சாப்பிடச் சென்ற பொழுது இந்த வாசகத்தை தமிழில் நானும் ஒரு பெரியவரிடம் பயன்படுத்தி இருக்கிறேன். அவர் கோவமுடன் எதையோ திருப்பிக் கேட்டார். என்னுடைய மருமகன் தான் அவரை சமாதானப் படுத்தினான். நான் சாதாரணமாகத் தான் அவ்வாறு கூறினேன். என்றாலும் அவருடைய உணர்வை நான் தூண்டி இருக்கிறேன். அதை யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுதே அவர் வேறுமேசைக்கு நகர்ந்துவிட்டார். நான் ஒரு மன்னிப்பைக் கேட்டிருக்கலாமோ என்று பிறகு நினைத்துக் கொண்டேன். எனக்கான ஒரே ஆறுதல் அந்தப் பெரியவர் என்னைத் திட்டிவிட்டு சென்றார் என்பதுதான். அவர் என்ன வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்று மருமகனிடம் தான் கேட்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை அடுத்தவர்களை மதிக்க வேண்டும் என்று நினைப்பதைக் காட்டிலும், யாரையும் காயப்படுத்தி விடக் கூடாது என்பதில் அதிக கவனம் எடுத்துக் கொள்வேன். அதையும் மீறி சில நேரங்களில் அபத்தமாக நடந்து கொள்கிறேன்...நடந்துவிடுகிறது...

இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் தவறுகள் தெரியாமல் கூட நடக்கலாம். அதாவது அறியாமையில்.

வரதராஜலு .பூ said...

//அந்த நாகரீகம் நாசமாய்ப் போகட்டும்//

நாம் சொல்லவே தேவையில்லை. அவர்கள் நாசமாகதான் போவார்கள். நாசம் ஆரம்பமாகும்போதுதான் இப்படி எல்லாம் பேச ஆரம்பிப்பார்கள். என்ன, அதை அவர்களால் உணரதான் முடியாது

:(

Anonymous said...

இது போல நிறைய பேரு இருக்காங்க தல.
நல்ல பதிவு.

eppm chennaiku vanthinga thala... phone paniirukalam ila..

Sabarinathan Arthanari said...

//நாசம் ஆரம்பமாகும்போதுதான் இப்படி எல்லாம் பேச ஆரம்பிப்பார்கள். என்ன, அதை அவர்களால் உணரதான் முடியாது//

//அவர்கள் செயல் அவர்களது கணக்கில் பற்று வைக்கப்பட்டு இருக்கும், உரிய நேரத்தில் அவர்களுக்கு வட்டியுடன் திருப்பித் தரப்படும்.//

//யார்கிட்டயாவது ஃபோன் பேசற மாதிரி பச்சைத் தமிழில - “என் பக்கத்துல ஒரு குடும்பம் உக்காந்து சாப்புடுது மாப்ள” என்று ஆரம்பித்து அவர்களை நாறடித்துவிட்டிருக்கலாம்.//

பின்னூட்டங்கள் நன்று
திருப்பி தருவது அக்கணமே எனில் தவறு செய்பவர்கள் சிந்திப்பர். “இதற்கென்று தனியாக அவதாரம் வராது. தவறை நயமாக தட்டி கேட்டால் நாமும் கூட ஒரு அவதாரம் தான்”

யூர்கன் க்ருகியர் said...

//வரதராஜலு .பூ said...
//அந்த நாகரீகம் நாசமாய்ப் போகட்டும்//

நாம் சொல்லவே தேவையில்லை. அவர்கள் நாசமாகதான் போவார்கள். நாசம் ஆரம்பமாகும்போதுதான் இப்படி எல்லாம் பேச ஆரம்பிப்பார்கள். என்ன, அதை அவர்களால் உணரதான் முடியாது

:(
//

SUPER !

KANNAMMA said...

//நாகரீகம் நாசமாய்ப் போகட்டும்.//
IPPO INTHA ULAGAME INTHA MAATHIRIYAANA NAAGARIGATHTHAI THEDI THAN POIGKITTIRUKKU.ITHU NAAGARIGAMA?ILLA PANA VARGATHTHIN AANAVAMA?-NU THERIYALA.ITHA KETTAA NAMAKKUM "PANCHA PARATHESI"-NU NAME SOLLIDUVAANGA.ORU MANITHARAI SAGA MANITHARGALE MATHIKKAATHA NILAMAI INTHA GENERATION-LA THAAN PAARKKA MUDIYUM.IPPADI ORU NAAGAREGAM THEVAYAA?

Sanjai Gandhi said...

புல்ஷிட்... நானா இருந்தா சாம்பார் போன்றவற்றை அந்த டேபிளில் அங்கும் இங்கும் கொஞ்சம் கொட்டி வைத்திருப்பேன்.. தண்ணீரை டேபிளில் கை தவறியது போல் தவற விட்டிருப்பேன்.. அந்த எருமைகளை நன்றாக கடுப்பேற்றி இருப்பேன்.. நல்ல வாய்ப்பை விட்டுட்டிங்க வாத்தியாரே..சில நேரங்களில் நாம் நாகரிகமானவர்களாய் இருக்க வேண்டியதில்லை..

Prathap Kumar S. said...

பணத்திமிர் புடிச்ச பிசாசு குடும்பமே...அவ்ளோ டீசன்சி பார்க்கறீங்கன்னா
லீ மெரிடியினுக்குப்போய் குடும்பத்தோட கொட்டிக்கவேண்டியதுதானடா பன்னாடடைங்ளா....

செ.சரவணக்குமார் said...

மிக முக்கியமான பதிவு நண்பரே.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

ஜோதிஜி said...

மிகச் சரியாக அறிவே தெய்வம் சொல்லியிருக்கிறார். பரிதாபப்பட வேண்டிய ஜீவன்களைப் பார்த்து பயந்து போய் விட்டீர்கள் அல்லது ரௌத்ரமாகி விட்டீர்கள்.

இந்தக்குழந்தைகள் வளர்ந்து அருகில் உள்ள அனாதை ஆசிரிமத்திற்கு இதே அம்மா அப்பாவை முன்பதிவு செய்யும் காலம் வரும். நாம் பார்க்க மாட்டோம். காலம் பார்க்கும்.

நான் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். ஆங்கி மொழியால் அல்ல. வளர்த்துக்கொண்டுருக்கும் விதத்தால்.

விஜய் said...

தோழ,

மேலை நாட்டு நாகரீகமே இதுதானே, உள்ளே எத்துனை கேவலமாக இருந்தாலும், வெளியே பகட்டாய் காட்டிக்கொள்வது! அவர்களின் உடை கலாசாரத்தில் இதை நன்கு பார்க்கலாம், தொளதொள உடலையும் சிக்கென்று காட்டும் வகையில் ‘வெஸ்ட்’ ‘ப்ரீஃப்’ போன்றவை எல்லாம் அணிவர். அது அவர்கள் வழக்கு, சரி போகட்டும், நம்மவர் ஏன் அதை பின்பற்ற வேண்டும்? தட்பவெட்ப நிலை துவங்கி குடும்ப சூழல் வரை எதிலுமே அவர்கள் வழக்கம் நமக்கு ஒத்துப்போகாது என்பதை நம் ‘படித்த முட்டாள்கள்’ உணரவே மாட்டார் போல... அந்த உனவக பணியாளருக்கு ’நன்றி’ சொல்லிவந்த தங்களைப் போன்றவர்களும் உள்ளனரே, அதுவெ பெரிய ஆறுதல்!

Anonymous said...

இது போன்று அவர்களுக்கு நிகழும் போது வலி உணர்வர்..முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...

ஜெய்சக்திராமன் said...

இது பழகி விட்ட ஒன்றுதான் என்றாலும், நாளைய சமூகத்தில் மனிதர்களிடம் மனிதாபிமானம் என்ற ஒன்று இருக்காது என எண்ணும் பொது நெஞ்சின் அடியாழத்தில் ஒரு முள் தைப்பதை உணர முடிகிறது.

shaan said...

"பிள்ள வளர்க்கிற லட்சணத்தப் பாரு" அப்படின்னு அங்க வச்சே நீங்க முணுமுணுக்கவாவது செஞ்சிருக்கணும். அப்ப தான் அந்த மாதிரி ஜென்மங்களுக்கு அறிவு வரும்.

shaan said...

உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் இது போன்ற மக்கள் குறைந்து தான் வருகின்றனர். ஏனெனில் இன்று பணக்காரன் ஏழை என்ற இடைவெளியும் குறைந்து வருகிறது. இது போன்ற மக்கள் 20 வருடங்களுக்கு முன்னர் நிறையவே இருந்திருப்பர். இது ஏதாவது திடீர் பணக்கார காலாவதி மருந்து வியாபாரியின் குடும்பமாக இருக்கலாம். எதற்கும் கைது செய்யப்படும் காலாவதி மருந்து வியாபாரிகள் பற்றிய செய்திகளை கொஞ்சம் உன்னிப்பாகவே கவனியுங்கள்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கண்டிப்பா, சாப்பிட்டுவிட்டு, சந்தனமாத்தான் போயிருப்பாங்க..

ஏன்னா..ஏன்னா..அவர்கள் ஆங்கிலதை தாய்மொழியாக கொண்ட தமிழர்களாக இருப்பாங்கனு நினைக்கிறேன்..

*இயற்கை ராஜி* said...

ஹ்ம்ம்ம்