August 12, 2010

விரிதியானா (1961)


உலக சினிமாவின் பிதாமகர்களில் ஒருவராகக் கொண்டாடப்படுபவர் லூயி புனுவல். மதம் மற்றும் தனி மனிதர்கள் மீது மதம் விதிக்கும் கட்டுப்பாடுகள் பற்றிய தன்னுடைய கருத்துகளை தைரியமாக முன்வைத்த ஸ்பானிஷ் இயக்குனர். அவருடைய முக்கியமான படமான "விரிதியானா" பற்றி சாருவின் ராசலீலாவில் படித்த நாளில் இருந்து, அதைப் பார்த்து விட வேண்டுமென்று வெகு நாட்களாக ஆசை. சமீபத்தில்தான் அது சாத்தியமானது.

கன்னியாஸ்திரி ஆவதற்காக மிஷன் கல்லூரியில் பயின்று வருபவள் விரிதியானா. அவளுடைய படிப்புக்கு இத்தனை நாட்களாக உதவி புரிந்து வந்த மாமா டான் ஜெயிமின் உடல்நிலை சரி இல்லாமல் இருப்பதாக தகவல் வருகிறது. போக விருப்பம் இல்லாத சூழலிலும் மதரின் அறிவுறுத்தலின் பேரில் தன்னுடைய மீதமிருக்கும் ஒரே உறவைக் காண கிளம்புகிறாள் விரிதியானா.

பெரும் செல்வந்தரான டான் ஜெயிம் தனியாளாக தனது பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். அவருடைய மனைவி சிறு வயதிலேயே இறந்து போக.. பணியாள் ரமோனா, ரமோனாவின் மகள் ரிடா, எடுபிடி வேலையாள் மாஞ்சோ என்ற சின்னஞ்சிறு உலகில் எந்த பிடிப்பும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார். தன்னுடைய மனைவியைப் போலவே இருக்கும் விரிதியானா மீது அவருக்கு அலாதிப் பிரியம். ஆனால் விரிதியானாவோ அவரை வெறுக்கிறாள்.

டான் ஜெயிமின் வீட்டிலும் விரிதியானா தன்னுடைய தீவிரமான மத கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறாள். தரையில்தான் படுக்கிறாள். கடுமையான உடைகளை உடுத்துகிறாள். அவளால் அங்கே இயல்பாக இருக்க முடியவில்லை. ஒரு நாள் தன்னுடைய மாமாவுக்கு இன்னொரு குடும்பம் ஒன்றிருப்பதைப் பற்றி விரிதியானா அவரிடமே கேட்கிறாள். அவரோ தன்னை நியாயப்படுத்த முனைகிறார். அவர் மீதான அவளுடைய வெறுப்பு இன்னும் அதிகமாகிறது. விரைவில் வீட்டை விட்டுக் கிளம்பி மிஷன் கல்லூரிக்குத் திரும்ப முடிவு செய்கிறாள்.

விரிதியானா ஊருக்குத் திரும்ப வேண்டிய கடைசி நாள். அன்றிரவு தன்னுடைய மாமாவின் வேண்டுகோளுக்கு இணங்க அவருடைய மனைவியின் உடைகளை அணிந்து உணவுண்ண வருகிறாள். அங்கே விரிதியானா தன்னை மணந்து கொள்ள வேண்டும் என்று கேட்கிறார் டான் ஜெயிம். கோபம் கொள்ளும் விரிதியானா மறுத்து விடுகிறாள். காப்பியில் மயக்க மருந்து கொடுத்து அவளை மயக்கமுறச் செய்து படுக்கை அறைக்கு தூக்கி செல்கிறார் டான் ஜெயிம். ஆனால் குற்றவுணர்வு காரணமாக அவளை எதுவும் செய்யாமல் போய் விடுகிறார்.

காலையில் விழித்தெழும் விரிதியானாவிடம் தான் அவளை அடைந்து விட்டதாகப் பொய் சொல்கிறார் டான் ஜெயிம். எப்படியாவது அவளைத் தன்னோடு இருக்கச் செய்திட வேண்டும் என விரும்புகிறார். ஆனால் விரிதியானாவோ கோபம் அதிகமாகி உடனே கிளம்புகிறாள். டான் ஜெயிம் உண்மையில் நடந்தது என்னவென்று சொன்னாலும் நம்பாமல் கிளம்பி விடுகிறாள். மனமுடைந்த டான் ஜெயிம் தூக்குப் போட்டு செத்துப் போகிறார்.

தன்னுடைய மாமாவின் சாவுக்குத் தானும் ஒரு வகையில் காரணம் என நம்பும் விரிதியானா அங்கேயே தங்கியிருக்க முடிவு செய்கிறாள். மாளிகைக்குப் பின்னாடி இருக்கும் பண்ணை வீட்டை சுத்தம் செய்து தங்குகிறாள். மீண்டும் சர்ச்சுக்கு வரும்படி கூப்பிடும் மதரின் அழைப்பை நிராகரிக்கிறாள். நகரில் இருக்கும் பிச்சை எடுக்கும் மனிதர்களைக் கூட்டி வந்து சேவை செய்ய முடிவு செய்கிறாள்.

சாகுமுன் தன்னுடைய சொத்துகளை விரிதியானாவின் பெயருக்கும், ஊர் அறிந்திராத தன்னுடைய மகன் ஹோர்ஹெயின் பெயருக்கும் எழுதி வைத்திருக்கிறார் டான் ஜெயிம். கடைசிவரை தன்னும் ஏற்றுக் கொள்ளாத தனது அப்பா சாகும்போது ஏன் இப்படி செய்தார் என்பதை ஹோர்ஹெயால் புரிந்து கொள்ள முடியவில்லை. தன்னுடைய காதலியோடு மாளிகைக்கு வந்துத் தங்குகிறான். அவனும் விரிதியானா தன்னை மதிப்பதில்லை என்று உள்ளுக்குள் புழுங்குகிறான்.

பண்ணை வீட்டில் தங்கி இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு உள்ளேயும் நிறைய பிரச்சினைகள் வருகின்றன. விரிதியானா கூட்டி வரும் புதியவன் ஒருவனுக்கு தொழுநோய் இருப்பதை அறிந்து மற்றவர்கள் அவனை வெறுக்கின்றனர். எல்லாரையும் சமாதனாம் செய்து, இனிமேல் அவர்கள் நன்றாக வேலை பார்த்து தங்களைத் தானே கவனித்துக் கொள்ள வேண்டும் என்கிறாள் விரிதியானா. அதே வேளையில் ரமொனாவுக்கும் ஹோர்ஹெக்கும் இடையே உறவு ஏற்படுகிறது.

மறுநாள் விரிதியானாவும், ரமோனாவும் வீட்டை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி பிச்சைக்காரர்களிடம் சொல்லி விட்டு வழக்கறிஞர் வீட்டுக்குப் போகிறார்கள். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வோம் என்றெண்ணி எல்லாப் பிச்சைக்காரர்களும் மாளிகைக்குள் நுழைகிறார்கள். மது, மாமிசம், பின்னணியில் ஒலிக்கும் கிராமபோன் இசை என்று விருந்து தடபுடலாக நடக்கிறது. போதை தலைக்கேற அனைவரும் நடனமாடத் துவங்குகிறார்கள். பிச்சைக்காரர்களில் ஒரு ஆணும் பெண்ணும் உறவு கொள்வதைக் கண்டு மற்றொரு பிச்சைக்காரன் கோபப்பட அங்கே சண்டை மூண்டு வீடே நாசக்காடாகிறது.

வீடு திரும்பும் விரிதியானாவும் ஹோர்ஹெவும் அதிர்ச்சி அடைகிறார்கள். பிச்சைக்காரர்களில் ஒருவன் ஹோர்ஹெவைத் தாக்கி மயக்கமுறச் செய்த பின்பு விரிதியானாவை வன்புணர்ச்சி செய்ய முயலுகிறான். காவலுக்கு அருகிலிருக்கும் தொழுநோய்க்காரனுக்கு பணம் தருவதாக ஹோர்ஹே ஆசை காட்ட, விரிதியானாவைப் புணர முயலுபவனை தொழுநோய்க்காரன் அடித்துக் கொல்கிறான். ரமோனா போலிசை அழைத்து வர எல்லோரும் கைது செய்யப்படுகிறார்கள்.

யார் மீது தான் அன்பு செலுத்தினோமோ, அவர்களே தன்னை இத்தகைய நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள் என்பதை விரிதியானாவால் நம்ப முடியவில்லை. இத்தனை காலம் மதத்தின் பெயரால் தனக்கு சொல்லப்பட்ட விஷயங்கள் எல்லாம் பொய்தானா என்று எண்ணத் துவங்குகிறாள். கடைசியில் ஹோர்ஹெவின் ஆசைக்கு இணங்கி தனக்காக வாழ முடிவு செய்கிறாள். ஹோர்ஹே, விரிதியானா மற்றும் ரமோனா மூவரும் ஒன்றாக அமர்ந்து சீட்டாடுவதாக முடிகிறது படம்.

கிருத்துவ மதத்தின் அடிப்படை நம்பிக்கைகளைக் கேலி செய்வதாகச் சொல்லி இந்தப் படம் ஸ்பெயினில் வெகு நாட்களாகத் தடை செய்யப்பட்டு இருந்தது.

--> ஒரு காட்சியில் குதிரை வண்டியின் அடியில் கட்டப்பட்டு இருக்கும் நாயைக் காண்பிக்கிறார் புனுவல். நாயை மதத்தின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்ட மனிதர்களின் குறியீடு என்று கொள்ளலாம்.

--> பிச்சைக்காரர்கள் உணவுண்ணும் காட்சியில் அப்படியே கடைசி விருந்தை (the last supper) ஞாபகப்படுத்தி இருப்பது

--> சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் உருவடிவில் இருக்கும் கத்தி (Crucifix)

--> கடைசி காட்சியில் விரிதியானா வைத்திருக்கும் முள்கிரீடம் தீயிலிட்டு எரிக்கப்படுகிறது.. இத்தனை நாட்களாகத் தன் தலையில் வைத்திருந்த மதம் என்னும் பாரத்தை அவள் இறக்கி வைக்கிறாள் என்று பொருள்படும் காட்சி இது

மனித மனத்தில் இருக்கும் முரண்களைப் பற்றிப் பேசுவதே இந்தப் படத்தின் முக்கியமான பலம் என்று சொல்லலாம். தன்னுடைய மகனைப் பற்றி கவலை கொள்ளாத டான் ஜெயிம், தண்ணீரில் சிக்கி போராடும் ஒரு சிறு பூச்சி மீது அக்கறை கொண்டவராக இருக்கிறார். தன்னுடைய மன உணர்வுகள் என்பதை விட மதம் தனக்கு கற்பித்த விஷயங்களைக் காப்பாற்றுவதே முக்கியம் என எண்ணுகிறாள் விரிதியானா. குழந்தை இல்லாத காரணத்துக்காக விசனப்படும் பிச்சைக்காரி ஒருவள், மதுவின் மயக்கத்தில் மற்றொரு பிச்சைக்காரியின் குழந்தையை கடிந்து கொள்கிறாள். எந்த தொழுநோய்க்காரனை விரிதியானா அதிக அக்கறை எடுத்து கவனித்துக் கொண்டாளோ, அவனே அவளைப் புணருவதற்காக தன்னுடைய முறை வரும்வரை காத்திருக்கிறான்.

எல்லா மனிதர்களின் மனதில் இருக்கும் வித்தியாசமான எண்ணங்கள், ஆழமான விகாரங்களை எளிதாகப் படம்பிடிக்கிறார் புனுவல். தன்னுடைய மனைவியின் உடைகளையும், காலணிகளையும் அணிந்து அழகு பார்க்கும் டான் ஜெயிம்.. வியாதிக்காரி ஒருத்தியோடு இருந்ததால்தான் தனக்கு தொழுநோய் வந்தது, எனவே தன்னைத் தொடும் அனைத்துப் பெண்களுக்கும் தொழுநோய் வரவேண்டும் எனப் பிரார்த்திப்பவன்.. தனக்கென காதலி இருந்தும் ரமோனா, விரிதியானா இருவரின் மீதும் ஆசை கொள்ளும் ஹோர்ஹே.. வாழ்வில் ஆதரவாக ஒரு மனிதர் வேண்டுமென முதலில் டான் ஜெயிமையும் பிறகு ஹோர்ஹெவையும் சார்ந்து வாழும் ரமோனா.. இரண்டு ஆடுகளை பிடித்து உண்ணுவதால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது என்று சொல்லும் பிச்சைக்காரர்கள்.. காயம் பட்ட புறாவைக் காப்பாற்றுவதும், பிறகு விருந்தின்போது அதே புறாவின் சிறகுகளைப் பறக்க விட்டு மகிழும் தொழுநோய்க்காரன்.. எத்தனை விதமான மனிதர்கள்?

டான் ஜெயிம் தூக்கு போட்டு செத்துப் போன ஸ்கிப்பிங் கயிறைக் கொண்டு அதே மரத்தடியில் விளையாடும் ரீட்டா மூலம் குழந்தைகள் எந்த சூதும் அறியாதவர்கள் என்பதை ஒரே காட்சியில் அழகாக சொல்லி இருக்கிறார் புனுவல். அதே போல கால்களின் மீது புனுவலுக்கு அலாதிப்பிரியம் இருக்கும்போலத் தெரிகிறது. குதித்தாடி ஸ்கிப்பிங் செய்யும் ரிடா, தூக்கத்தில் நடக்கும் விரிதியானா, டான் ஜெயிம் என்று படத்தில் பலருடைய கால்களின் க்ளோசப் காட்சிகள் இருக்கின்றன.

வெகு இயல்பான நடிகர்கள்.. பின்னணியில் ஒலிக்கும் இயற்கை சத்தங்கள் மற்றும் கிராமபோன் இசையை மட்டுமே பயன்படுத்தி இருப்பது.. என எல்லாமே இயல்பாக இருக்கின்றன. ரமொனாவாக நடித்து இருப்பவர் மட்டுமே கொஞ்சம் நாடகத்தனத்துடன் இருக்கிறார். அதிலும், அவரும் ஹோர்ஹெவும் உறவு கொள்ளும் காட்சியில், பூனை ஒன்று எலியைக் கவ்விப் பிடிப்பது போலக் காட்சி அமைத்து இருந்தது மட்டுமே சிரிப்பைக் கிளப்பியது.

கேன்ஸ் விழாவில் விருது பெற்ற இந்தப்படம் சொல்ல வரும் விஷயம் மிகவும் எளிமையானது. மதம் என்ற விஷயத்தை விட தனி மனித உணர்வுகள் முக்கியமானவை. அதே போல ஏழை, பணக்காரர் என்றெல்லாம் இல்லாமல் எல்லாரின் மனதிலும் வன்மம் ஒளிந்திருக்கிறது. வாய்ப்பு கிடைக்காதவரை இங்கே அனைவரும் நல்லவர்கள்தான்.. இல்லையா?

குறிப்பு: இந்தப் படத்தின் குறுந்தகடைத் தந்து உதவிய பேரா.மணிகண்டனுக்கு நன்றிகள் பல..

15 comments:

மேவி... said...

"குறிப்பு: இந்தப் படத்தின் குறுந்தகடைத் தந்து உதவிய பேரா.மணிகண்டனுக்கு நன்றிகள் பல.. "

அப்படின்னா அடுத்த வாட்டி இங்கிட்டு வரும் போது கொண்டு வாங்க

மேவி... said...

மனுஷ பைய மனசு ஒரு குரங்கு தான்ன்னு சொல்லலமா சொல்லிருக்காங்க பாஸ் ....

" விரிதியானா அதிக அக்கறை எடுத்து கவனித்துக் கொண்டாளோ, அவனே அவளைப் புணருவதற்காக தன்னுடைய முறை வரும்வரை காத்திருக்கிறான்"

இந்த காட்சி ...எந்த மக்களிக்காக இயேசு கஷ்டபட்டரோ அவர்களே கடைசியில் இயேசுவை கலால் அடிதர்களில்லையே...அத குறுயீடு ஆ சொல்லிருக்காங்க பாஸ்

கார்த்திகைப் பாண்டியன் said...

மொத்தப்படத்தின் கருத்துமே அதுதான் தல.. இங்க யாருமே நியாயவான் கிடையாதுன்னு சொல்றார் புனுவல்..

Unknown said...

நண்பா, அருமையான படம். தெளிவான விமர்சனம். ஏற்கனவே நிறைய நண்பர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்ப நீங்களும் சொல்லிட்டிங்க. பார்த்திர வேண்டியத்துதான். டவுன்லோட் செய்து வச்சிருக்கேன், தேடனும்.. :-))

அகல்விளக்கு said...

ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க அண்ணா....

:)

கார்த்திகைப் பாண்டியன் said...

//முரளிகுமார் பத்மநாபன் said...
நண்பா, அருமையான படம். தெளிவான விமர்சனம். ஏற்கனவே நிறைய நண்பர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்ப நீங்களும் சொல்லிட்டிங்க. பார்த்திர வேண்டியத்துதான். டவுன்லோட் செய்து வச்சிருக்கேன், தேடனும்.. :-))//

புனுவலோட மற்ற படங்களத் தேடிக்கிட்டு இருக்கேன் தல..

// அகல்விளக்கு said...
ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க அண்ணா.... :)//

நன்றிப்பா..

settaikkaran said...

நிறையப் பேருக்கு இப்போ உலகத் திரைப்படங்கள் மீது ஆர்வம் வந்திருக்கிறது. இது போன்ற படங்களைப் பார்த்து பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுக்கள்!

மதுரை சரவணன் said...

நல்ல நடை .. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

சுவாமிநாதன் said...

படம் பார்த்த அனுபவம் ஏற்படுத்திய பாண்டியருக்கு நன்றி.

ஆனால் குறுந்தகடைத் தந்து உதவிய பேரா.மணிகண்டனுக்கு நீங்களும் அடுத்தவருக்கு தரலாமே!!!!!!!!

மணியோசை said...

அன்பு பாண்டி,
virdiana X நான் கடவுள் ஒப்பிடுகையில்

பல சுவாரசியமான விஷயங்கள் பார்க்கலாம்
Manikandan VCET

கார்த்திகைப் பாண்டியன் said...

//சேட்டைக்காரன் said...
நிறையப் பேருக்கு இப்போ உலகத் திரைப்படங்கள் மீது ஆர்வம் வந்திருக்கிறது. இது போன்ற படங்களைப் பார்த்து பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுக்கள்!//

நன்றி நண்பரே..

// மதுரை சரவணன் said...
நல்ல நடை .. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்//

வாங்க தலைவரே.. நன்றி..:-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

//சுவாமிநாதன் said...
படம் பார்த்த அனுபவம் ஏற்படுத்திய பாண்டியருக்கு நன்றி.ஆனால் குறுந்தகடைத் தந்து உதவிய பேரா.மணிகண்டனுக்கு நீங்களும் அடுத்தவருக்கு தரலாமே!!!!!!!!//

write பண்ணித் தர்றேன் சாமி..

//மணியோசை said...
அன்பு பாண்டி,virdiana X நான் கடவுள் ஒப்பிடுகையில் பல சுவாரசியமான விஷயங்கள் பார்க்கலாம்//

ஆமாம் சார்.. நீங்க ஏழாம் உலகம் படிச்சுட்டீங்களா? நிறைய ஒற்றுமைகளைப் பார்க்க முடிகிறது...

விரிதியானா said...

என் வாழ்க்கையை பற்றி எழுதியதற்கு மிகவும் நன்றி.

கார்த்திகைப் பாண்டியன் said...

//விரிதியானா said...
என் வாழ்க்கையை பற்றி எழுதியதற்கு மிகவும் நன்றி.//

வந்துட்டான்யா வந்துட்டான்.. அவ்வ்வ்வ்வ்வ்

சென்ஷி said...

டவுன்லோடிடறேன் :))