November 17, 2010

இரத்தப்படலம் - புதையல் பாதை (2)

தன்னைத்தேடி - ஒரு புதிர்ப்பயணம் (1)

இரத்தப்படலம் - தமிழ் காமிக்ஸ்களின் மகுடம் என்று சொன்னால் தவறே கிடையாது. 850 பக்கங்களில் ஒரு காமிக்ஸ் புத்தகம் என்பது இந்திய காமிக்ஸ் வரலாற்றில் யாருமே செய்திராத விஷயம். ஏன்.. உலகில் வேறு எங்கேனும் கூட இப்படி ஒரு முயற்சி நடந்திருக்குமா என்பதும் சந்தேகமே.



(இந்தத் தொடரை காமிக்ஸ் பற்றிய விரிந்த பார்வையாக எழுதலாம் என்றிருந்தேன். ஆனால் வேறு சில காரணங்களுக்காக அதை எழுத முடியாத சூழ்நிலை. எனவே நான் லயன் காமிக்ஸ் அலுவலகம் போய் வந்த அனுபவத்தை மட்டுமே இங்கு பதிவு செய்திருக்கிறேன்..)

இரண்டு வருடங்களுக்கு முன்பு "லயன் ஜாலி ஸ்பெஷலில்" இந்தப் புத்தகம் பற்றி ஆசிரியர் எஸ்.விஜயன் எழுதியபோது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நான் விபரம் தெரிந்து காமிக்ஸ் வாசிக்க ஆரம்பித்திருந்த நேரத்தில் இரத்தப்படலம் ஐந்தாறு பாகங்கள் வந்து விட்டிருந்தது. ஆரம்பம் தெரியாமல் எப்படி வாசிப்பதென அந்த தொடரில் வந்த கதைகளை எல்லாம் வாங்காமலே தவிர்த்து வந்தேன். இப்போது அது அத்தனையும் ஒரே தொகுப்பில் வருகிறது என்றவுடன் ஜாக்பாட் அடித்த மாதிரி மனசுக்கு ரொம்ப குஷியாகிப் போனது. ரொம்பப் பெரிய முயற்சி என்பதால் இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் - முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் என்று அப்போதே தெளிவாக எழுதி இருந்தார் ஆசிரியர். ஆனால் எனக்கு வழக்கம் போல மப்பு. இப்படி சொல்லிவிட்டு எப்படியும் புத்தகம் கடைக்கு வந்து விடும், வாங்கிக் கொள்ளலாம் என்று சோம்பேறித்தனம்.

இரண்டு வருட காத்திருப்புக்குப் பிறகு கடைசியாக இந்தத் தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பு புத்தகம் வெளிவந்துவிட்டதை தெரிந்தவுடன் வீட்டுக்கு அருகிலிருக்கும் கடைக்காரரை நொச்சு நொச்சென்று புடுங்கி எடுத்து விட்டேன். ”ஏம்ப்பா.. வந்தா விக்காம நான் தலையில கட்டிக்கிட்டா அழப்போறேன்என்று ஒரு கட்டத்தில் அவரும் பொறுமையிழந்து காச் மூச்சென்று கத்த ஆரம்பித்து விட்டார். இந்த நிலையில்தான் இணையத்தில் நண்பர் அ.கொ.தீ.எழுதிய பதிவை வாசிக்க நேர்ந்தது. புத்தகம் நேரடி விற்பனைக்கு மட்டுமே - கடைகளுக்கு வராது என்பது எனக்குப் பேரிடி. முன்பதிவுக்கு அனுப்பப்பட்டு விட்ட புத்தகங்கள் தவிர ரொம்பக் கொஞ்சமே பாக்கி இருக்கின்றன.. எனவே முந்திக் கொள்ளுங்கள் என்ற .கொ.தீ. நண்பரின் பதிவு எனக்குள் சைரன் அடித்துப்போனது. வேறு வழியே இல்லை, நேரடியாக சிவகாசிக்கே போய்விடலாம் என்று முடிவு செய்து விட்டேன்.

போன திங்களன்று மாலை கல்லூரி முடிந்தவுடன் நம் பைக்கே நமக்குதவி என்று கிளம்பியாகி விட்டது. அதற்குப் பிறகுதான் காத்திருந்தது ஆப்பு. திருமங்கலம் தாண்டி விருதுநகர் வரை பேய்மழை. நெடுஞ்சாலையில் ஒதுங்கி நிற்கவும் வழியில்லை. பொதுவில் என் நண்பர்கள் என்னை கேலி செய்ய பூனை என்று அழைப்பார்கள். காரணம், எனக்கு மழையில் நனைவது அவ்வளவாக சரிப்பட்டு வராது. மழை ரெண்டு போட்டு தூறல் போட்டால் கூட ஓடிப்போய் ஓரமாக நின்று கொள்வேன். அந்த பாவத்துக்கு என் வாழ்நாளில் என்றுமே நனையாத அளவுக்கு அன்றுதான் மழையில் நனைந்தேன். தொப்பமாய் நனைந்தபடி விருதுநகரை அடைந்தபோது மணி ஆறாகி விட்டிருந்தது. அங்கிருந்து லயன் ஆபிசுக்கு போன் போட்டால் அடுத்த அடி. ஏழு மணிக்குள் வராவிட்டால் புத்தகத்தை வாங்க முடியாது என்று சொல்லி விட்டார்கள். கிழிஞ்சது போ என்ற வெறி பிடித்தமாதிரி வண்டியை ஓட்டிக்கொண்டு சிவகாசி போய் சேர்ந்தபோது மணி ஏழாக ஐந்து நிமிடம் இருந்தது.

வெகு நாட்களாக என் கற்பனையில் இப்படி இருக்கும் அப்படி இருக்கும் என எண்ணிக் கொண்டிருந்த லயன் ஆபிஸின் முன் நிற்கிறேன். ரொம்ப சிம்பிளான சின்னதாக இரண்டு அறைகள் கொண்ட அலுவலகம். நான் போனபோது ஆசிரியர் அங்கே இல்லை. புத்தகம் வாங்க மதுரையில் இருந்து வண்டியிலேயே வந்தேன் என்றவுடன் அங்கிருந்தவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. ”இந்த மாதிரியான நேரங்கள்லதான் சார் நாம கஷ்டப்படுறதுக்கான பலன் கிடைக்கிற மாதிரி உணர்வுஎன்று சொல்லிக்கொண்டே புத்தக அறைக்கு அழைத்துச் சென்றார் ஊழியர் ஒருவர். அலுவலகத்திற்கு எதிர்த்தாற்போல் அச்சகம். அதன் மாடியில் காமிக்ஸ் புத்தகங்களின் பொக்கிஷ அறை.

உள்ளே நுழையும்போதே மேஜை மேல் அடுக்கப்பட்டு இருந்த இரத்தப்படலம் கண்களில் தட்டுப்பட்டது. சிறு குழந்தையை வருடிக் கொடுப்பதுபோல அந்த புத்தகத்தின் முகப்பை தடவிப் பார்த்தபோது எனக்கு எழுந்த உணர்வுகளையும் சந்தோஷத்தையும் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. வாங்க வருபவர்களின் வசதிக்காக தங்களிடம் மீதம் இருக்கும் பிரதிகளை எல்லாம் லயன், முத்து, காமிக்ஸ் கிளாசிக்ஸ் என அழகாக பிரித்து அடுக்கி வைத்திருக்கிறார்கள். என்னிடம் இருக்கும் புத்தகங்களின் பட்டியலை எழுதிக் கொண்டு போயிருந்தேன். அதை சரிபார்த்து இல்லாத புத்தகங்களை எல்லாம் பொறுக்கிக் கொண்டேன். கிட்டத்தட்ட அறுபது புத்தகங்கள். செம வேட்டை. நான் புத்தகங்களைத் தேடிக் கொண்டிருந்த நேரத்தில் பல போன் கால்கள் புத்தகம் பற்றி கேட்டு வந்து கொண்டேயிருந்தன என்பது மனதுக்கு கொஞ்சம் இதமாக இருந்தது.

சந்தோஷங்களை பகிர்ந்து கொள்ளும் இதே வேளையில் ஒரு சில வேதனைகளையும் சொல்ல வேண்டியிருக்கிறது. புத்தகங்கள் பிரசுரிப்பதில் இருக்கும் பிரச்சினைகளைப் பற்றி விஜயன் ஹாட்லைனில் எழுதும்போது தெரியாத வலியும் வேதனையும் எனக்கு நேரில் எளிதாகப் புரிந்து போனது. விற்காத புத்தகங்களை எல்லாம் அங்கே கட்டு கட்டாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் இருக்கும் போல - அத்தனை புத்தகங்கள். கேப்டன் டைகர் புத்தகங்கள் கூட புதுமெருகு குறையாமல் அப்படியே கிடைக்கின்றன. இந்தப் புத்தகங்களை என்ன பண்ணுவீங்க என்பதற்கு வேதனையான ஒரு சிரிப்புதான் பதில். பார்க்கும்போதே அடிவயிற்றில் ஏதோ சுரீரென்றொரு வலியுண்டாக்கும் உணர்வு.

லயன் ஊழியர் ஒருவரோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். "மொத்தம் 2500 புக் அடிச்சிருக்கோம் சார். முன்பதிவு எப்படியும் 1000 ஆவது வரும்னு எதிர்பார்த்தோம். ஆனா வந்தது வெறும் 700 தான். அதுவே எங்களுக்கு ரொம்ப சங்கடமா போச்சு. அதனாலேயே இதழ் தயாரிப்பு கொஞ்சம் சுணங்கிப் போச்சு. ஏன்னா இதனால எங்களுக்கு லாபம் எதுவும் கிடையாது. இப்பக்கூட பார்த்தீங்கன்னா, இந்தப் புத்தகத்தோட அடக்க விலை நாங்க விக்கிற விலைய விட அதிகம். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி 200 ரூபான்னா சரி. ஆனா இப்போ இன்னும் வெல கூடிப்போச்சு. அதனால் நஷ்டத்துக்குத்தான் தர வண்டியிருக்கு. ஆசிரியர் இதத் தொழிலா பண்ணல. காமிக்ஸ் மேல இருக்குற காதல்னாலதான் இன்னும் நடத்திக்கிட்டு இருக்காரு. நீங்க அவருக்கு நன்றி சொல்லணும்னு நினச்சா, புக்க படிச்சுட்டு அவருக்கு ஒரு கடுதாசி போடுங்க. அதுதான் எங்களுக்கும் அவருக்கும் முக்கியமான விருது மாதிரி."

அவருக்கு நன்றி சொல்லிக் கிளம்பினேன். கையில் கனமாக இருந்த புத்தக பண்டிலைப் போலவே மனமும் கனத்து இருந்தது. இத்தனை கஷ்டங்களுக்கு நடுவேயும் பிடிவாதமாக காமிக்ஸ் என்னும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கும் எஸ்.விஜயனுக்கு ஒரு ராயல் சல்யூட்.

புத்தகம் பற்றி.. இரண்டே நாட்களில் படித்து விட்டேன். ஹாலிவுட் சினிமா தோற்றது போங்கள் - அத்தனை வேகம். கதையின் ஓட்டம் அட்டகாசம். ஓவியங்களும் பட்டையக் கிளப்புகின்றன. புத்தகத்தின் உள்ளேயே கதை ஆசிரியர், ஓவியர் மற்றும் XIII பற்றிய வேறு சில குறிப்புகளும் பார்க்கக் கிடைக்கின்றன. ஆகமொத்தத்தில் காமிக்ஸ் ரசிகர்களுக்கு பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.

உங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். இந்தப் புது வருடத்துக்கு உங்கள் நண்பர்களுக்கோ, உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கோ ஏதேனும் பரிசு தர விரும்பினால் இந்தப் புத்தகத்தை வாங்கிக் கொடுங்கள். அவர்கள் உங்களை என்றென்றும் மறக்க மாட்டாத ஒரு பரிசாக இது நிச்சயம் இருக்கும். காமிக்ஸ் என்னும் பாரம்பரியத்தைக் காப்பாற்ற கைகொடுங்கள் தோழர்களே..!!!

இரத்தப்படலம்
லயன் காமிக்ஸ் வெளியீடு
ரு.200/-

12 comments:

Unknown said...

how i can get this karthic sir?? n Sri lanka.

Manoj said...

Sir.....kandipaa. ennakku veenum...in my childhood i was crazy about comics....pls help me to get tht....is ths possible to get in post????

அருண்மொழிவர்மன் said...

தன்னைத்தானே தேடி அலையும் தனி மனிதனின் கதை என்ற 'சப் டைட்டிலுடன்' வெளியாகிய இரத்தப் படலத்தை ஈழத்தில் போர்க்காலம் ஒன்றில் தேடி வாசித்த நினைவு வருகின்றது. இதற்கு வரையப்பட்ட ஓவியங்கள் தமிழ் காமிக்ஸ் உலகில் ஒரு உச்சம் என்பேன்....

கார்த்திகைப் பாண்டியன் said...

புத்தகங்கள் வாங்க:

லயன் காமிக்ஸ்
த.பெ.எண்:384,
8/D-5, சேர்மன் P.K.S.A.A ரோடு,
அம்மன்கோவில்பட்டி,
சிவகாசி - 626189.

பேச: 04562 - 272649
0452 - 320993

மேவி... said...

@ Ajith : it seems u should have to take a dd for Rs.230 and send to them. just spoke to them

மேவி... said...

@ அருண்மொழிவர்மன் : ஒரு வேளை நீங்கள் சொல்வது Mary Shelley எழுதிய THE LAST MAN யோட மொழிபெயர்ப்பாக இருக்குமோ ????

மதுரை சரவணன் said...

தேடிச் சென்ற படலம் காமிக்ஸ் புத்தகத்தை விட சுறுசுறுப்பாக இருக்கிறது.... நான் உங்கள் எழுத்து மழையில் நனைந்து விட்டேன்... வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

@டம்பி மேவி

அருன்மொழி சொல்றது இந்தப் புத்தகத்த பத்திதான் நண்பா.. “the bourne identity”அடிப்படையா வச்சு எழுதப்பட்ட கதை..

@மதுரைசரவணன்

நன்றி தலைவரே

ஆ.ஞானசேகரன் said...

சுருசுருப்பான எழுத்து

கார்த்திகைப் பாண்டியன் said...

@ஞானசேகரன்

நன்றி தலைவரே

King Viswa said...

//அருண்மொழிவர்மன் said...
தன்னைத்தானே தேடி அலையும் தனி மனிதனின் கதை என்ற 'சப் டைட்டிலுடன்' வெளியாகிய இரத்தப் படலத்தை ஈழத்தில் போர்க்காலம் ஒன்றில் தேடி வாசித்த நினைவு வருகின்றது. இதற்கு வரையப்பட்ட ஓவியங்கள் தமிழ் காமிக்ஸ் உலகில் ஒரு உச்சம் என்பேன்...//

//டம்பி மேவீ said...
@ அருண்மொழிவர்மன் : ஒரு வேளை நீங்கள் சொல்வது Mary Shelley எழுதிய THE LAST MAN யோட மொழிபெயர்ப்பாக இருக்குமோ ????//

//கார்த்திகைப் பாண்டியன் said...
@டம்பி மேவி

அருன்மொழி சொல்றது இந்தப் புத்தகத்த பத்திதான் நண்பா.. “the bourne identity”அடிப்படையா வச்சு எழுதப்பட்ட கதை..//

நண்பர்களே,
அருண்மொழி கூறுவது உண்மைதான். என்னுடைய அருமை நண்பர் நிஷஹரன் இந்த இரத்தப்படலம் கதைகளை இலங்கையில் ஐஸ்பெர்க் காமிக்ஸ் என்ற பெயரில் வெளியிட்டார். இதோ அதற்க்கான லிங்க்: ஐஸ்பெர்க் காமிக்ஸ் பற்றிய தமிழ் காமிக்ஸ் உலகம் பதிவு

King Viswa said...

\\இந்தத் தொடரை காமிக்ஸ் பற்றிய விரிந்த பார்வையாக எழுதலாம் என்றிருந்தேன். ஆனால் வேறு சில காரணங்களுக்காக அதை எழுத முடியாத சூழ்நிலை.\\

????????