December 28, 2010

ஈரோடு சங்கமமும் பெருமாள்முருகனும்

கடத்த 26 -12 -10 அன்று ஈரோட்டில் பதிவர்கள் - வாசகர்கள் பங்குபெற்ற "சங்கமம்" அற்புதமான வகையில் நடந்தேறியது. சனிக்கிழமை மதியமே நானும் நண்பர் ஸ்ரீயும் ஈரோடு போய் விட்டோம். பிரியத்துக்குரிய ஜாபரும் கார்த்தியும் எங்களை வரவேற்று அழைத்துப் போனார்கள். மறுநாள் நிகழ்வுக்கான ஆயத்தங்களைச் செய்வதிலேயே அன்றைய தினம் கழிந்தது.

ஞாயிறு காலை பதினோரு மணி போல நண்பர்கள் எல்லோரும் அரங்கிலே கூடத் தொடங்கி விட்டார்கள். சிங்கை பதிவர் பிரபாகரின் தமிழ் வாழ்த்துடன் நிகழ்வு தொடங்கியது. நிகழ்ச்சியின் முதல் அமர்வாக எழுத்தாளர் பெருமாள் முருகன் சிறுகதைகள் எழுதுவது குறித்துப் பேசினார்.

அதன் பின்னர் நக்கலுக்கும் நையாண்டிக்கும் புகழ் பெற்ற எழுத்தாளர் பாமரன் பேச வந்தார். அவருக்கான தலைப்பு - "உலக மொக்கையர்களே ஒன்று கூடுங்கள்". கணினி என்கிற விஷயத்தை தாங்கள் தீவிரமாக எதிர்த்த காலம் போய் இன்றைக்குத் தாங்களும் கணினி வாயிலாக இயங்க வேண்டி இருப்பதை குறிப்பிட்டுப் பேசினார். தற்கால அரசியல் சூழல் பற்றி வருத்தம் கொண்டாலும் இணையத்தின் மூலம் கிடைக்கும் கட்டற்ற சுதந்திரத்தின் மூலம் மாற்றங்கள் கொண்டு வரமுடியும் என நம்புவதாக பாமரன் தெரிவித்தார். கடைசியாக மண்ட்டோவின் சிந்தனைகள் சிலவற்றை எடுத்துச் சொல்லி தனதுரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக "தமிழ்ஸ்டூடியோ.காம்" அருண் குறும்படங்கள் எடுப்பது பற்றி பேசினார். சென்னையில் குறும்படங்கள் எடுப்பதற்கென சரியான தளமொன்று இல்லாத நேரத்தில், அம்மாதிரியான எண்ணத்தோடு கிளம்பி வரும் மக்களை யாரும் ஏமாற்றி விடாமல் அவர்களுக்கு உதவ ஆரம்பிக்கப்பட்டதே "தமிழ்ஸ்டூடியோ.காம்". குறும்படங்கள் எடுக்க விரும்பும் யாருக்கும் அதற்கான தொழில்நுட்பம் சார்ந்த உதவிகளை எப்போதும் செய்வதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் அறிவித்தார்.

அவருக்குப் பிறகு பேசிய "திரை நானூறு" என்கிற அமைப்பை நடத்தி வரும் திரு.சிதம்பரம் உலக திரைப்படங்கள் பற்றியும் தமிழ் சினிமாவின் பின்தங்கிய நிலை குறித்தும் விரிவாக உரையாற்றினார். அதைத் தொடர்ந்து பதிவர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்ட பிறகு உணவு இடைவேளை விடப்பட்டது. சைவம், அசைவம் என சாப்பாடு பொளந்து கட்டி விட்டார்கள். நிறைவான மதிய உணவுக்குப் பின்னர் பதிவர்கள் மீண்டும் ஒன்றுகூட மதிய நிகழ்வுகள் தொடங்கின.

பதிவர் கருவாயன் (எ) சுரேஷ் புகைப்படங்கள் எடுக்கும்போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கியமான வரைமுரைகளைப் பற்றி பேசினார். எப்படி வெளிச்சம் அதிகப்படாமல் எடுக்க வேண்டும், பின்னணி ஒரு புகைப்படத்துக்கு எந்தளவுக்கு முக்கியம், பொதுவாக புகைப்பட கருவியை எப்படி கையாள வேண்டும் என்பது போன்ற விஷயங்களை அழகாக சொன்னார்.

அடுத்ததாக பேசியவர் மூத்த (வயதில் அல்ல) பதிவர் ஓசை செல்லா. பதிவுலகம் தனக்கு என்ன மாதிரியான சவுகரியங்களைத் தந்திருக்கிறது, ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளை எப்படி கொண்டு வரலாம் என்றெல்லாம் சொன்னவர், பதிவுகளின் மூலமே சமூகத்தில் நடைபெற்ற ஒரு அரசியல் மோசடியை எப்படி தன்னால் சுட்டிக் காட்ட முடிந்தது என்றும் குறிப்பிட்டார்.

கடைசி நிகழ்வாக நண்பர் லக்ஷ்மணராஜா பேசினார். நிழற்படங்களை ஆவணப்படுத்துதல் என்கிற மிக முக்கியமான விஷயம் பற்றி அழகான இரண்டு போட்டோ ஆல்பங்களின் துணையோடு விளக்கினார். ஒரிசாவில் வேதாந்தா நிறுவனத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் "நியாம்கிரி" என்கிற ஊரைப் பற்றின ஆவணப்பதிவு அட்டகாசமாக இருந்தது. நிழற்படங்கள் கூட கதை சொல்ல முடியும் என்று சொல்லாமல் சொல்லிப் போனார் லக்ஷ்மணராஜா. அன்றைய தினத்தின் கடைசி நிகழ்வாக திருப்பூர் வலைப்பதிவர் குழுமமான "சேர்தளம்" நடத்திய பதிவர் கலந்துரையாடல் நடைபெற்றது.

இப்போது மீண்டும் பெருமாள் முருகனிடம் வருவோம். நன்றாக எழுதுபவர்கள் நன்றாக பேச மாட்டார்கள் என பொதுவாக சொல்வார்கள். எஸ்ரா, பிரபஞ்சன் போன்ற விதிவிலக்குகளோடு பெருமாள் முருகனையும் நாம் சேர்த்துக் கொள்ளலாம். வெகு அருமையாக பேசினார். இனி அவர் பேசியதில் இருந்து..

"சிறுகதைகள் எழுத நினைக்கும் யாருக்கும் வாசிப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. ஆதி காலத்தில் எழுதத் தொடங்கியபோது வாசிப்பு தேவைப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைக்கு கண்டிப்பாக வாசிப்பு தேவை. காரணம், தமிழில் சிறுகதைகளைப் பொறுத்தமட்டில் அத்தனை சாதனைகள் செய்யப்பட்டு இருக்கின்றன. எனவே நம் முன்னோடிகள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளவும், அவர்களைத் தாண்டிப் போகவும் நாம் அவர்களை வாசிப்பது அவசியமாகிறது.

பத்திரிக்கைகள் கூட சிறுகதைகளுக்கு அத்தனை முக்கியம் தருவதில்லை. வெகுஜன பத்திரிக்கைகள், உயிர்மை காலச்சுவடு போன்ற சிற்றிதழ்கள் என எல்லா பத்திரிக்கைகளுமே ஒரே ஒரு சிறுகதையை மட்டுமே வெளியிடுகின்றன. இணையைத்தில் எழுதுபவர்கள் கூட சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை.

இந்நிலையில் உயிர் எழுத்து மட்டுமே ஒரு இதழுக்கு ஐந்து அல்லது ஆறு சிறுகதைகளை வெளியிட்டு வருகிறது. அவர்களின் முயற்சியை நாம் பாராட்ட வேண்டும். பொதுவில், இன்றைக்கு வாசிக்கும் பழக்கம் என்பது ரொம்பவே குறைந்து போய் விட்டது. குறைந்தபட்சம் மாதம் ஒரு சிறுகதையாவது வாசிக்கும் பழக்கத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

தொடர் வாசிப்பின் மூலமே நம்மால் சிறுகதையின் நுட்பங்களைக் கண்டடைய முடியும். ஜெயமோகனிடம் கேட்டால் தன்னுடைய முதல் சிறுகதை என கணையாழியில் வெளிவந்த நதி பற்றி சொல்லுவார். ஆனால் அதற்கு முன்னரே குமுதம், ஆ.வி போன்ற பத்திரிக்கைகளிலே நிறைய எழுதி இருக்கிறார். அப்படியானால் அவையெல்லாம்? எழுதுவதற்கான பயிற்சி. தொடர்ச்சியாக எழுதுவதன் மூலமே ஒருவர் தனக்கான உத்திகளைக் கண்டறிய முடியும்.

ஒரு விஷயத்தை வாசிக்கும்போது நம்மை அந்த இடத்தில் பொருத்திப் பார்க்கும் திறனை வளர்த்துக் கொள்ளுவது அவசியம். நம்மால் உணர முடிந்த விஷயங்களையே நல்ல இலக்கியமாக ஒருவரால் மாற்ற இயலும். அதே போல நீங்கள் தெரிந்து, உணர்ந்து கொள்ளும் விஷயங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அது உங்களை இன்னும் பக்குவப்படுத்தும்.

முதல் முறையாக கதை எழுதும்போது விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு வாழும் மனிதர்களைக் களனாக எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டுக்கு கந்தர்வனின் அதிசயம் கதையைச் சொல்லலாம். தன்னுடைய வெற்றுக் கையால் ஒரு பனைமரத்தை பிடுங்கி எரியும் மனிதனைப் பற்றிய கதை அது.

அதே போல தி.ஜாவின் காண்டாமணி கதையைச் சொல்லலாம். குற்றவுணர்ச்சியின் காரணமாக கோவிலுக்கு கொடையாகக் கொடுத்த மணி எப்படி அந்த மனிதனின் குற்றவுணர்வை மேலும் அதிகரிக்கச் செய்கிறது என்பதை சொல்லும் அற்புதமான கதை. இது போன்ற விஷயங்களை எடுத்துக் கொள்ளும்போது அது உங்களுக்கு எளிதாக இருக்கும்.

சிறுகதை என்பதொரு கடல். அது பற்றிய ஒரு சில துளிகளை மட்டுமே உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். இதை மனதில் கொண்டால் சிறுகதைகளை எழுதுவது சற்று எளிதாகும் என நம்புகிறேன். வாய்ப்பளித்த ஈரோடு பதிவர்களுக்கு நன்றி.." அட்டகாசமாகப் பேசி அமர்ந்தார் பெருமாள்முருகன்.

எழுத்தில் மட்டுமே கண்டிருந்த ஒரு சில புதிய முகங்களின் அறிமுகம், நண்பர்களுடான உரையாடல், கேலி கிண்டல் என கொண்டாட்டமாக அமைந்தது சங்கமம். இதை சீரிய முறையில் நடத்திக் காட்டிய ஈரோடு பதிவர் குழுமத்திற்கு நன்றிகள் பாராட்டுகளும். ஒரு விடுமுறை தினத்தை நண்பர்களுக்கென ஒதுக்கி சங்கமத்தில் கலந்து கொண்ட பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்..!!!

சங்கமம் புகைப்படங்களைக் காண இங்கே சொடுக்குங்கள் நண்பர்களே..

18 comments:

sathishsangkavi.blogspot.com said...

இன்னிக்கு முதல் விருந்து எனக்கு...

அருமையான தொகுப்பு வாத்தியாரே...

இராகவன் நைஜிரியா said...

சூப்பர் கா.பா.

சங்கமம் நிகழ்ச்சியை நீங்க தொகுத்தளித்த விதம் சிம்ப்ளி சூப்பர்ப்.

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு கா.பா. ஈரோடு சங்கமம் மகிழ்ச்சியையும் ஏக்கத்தையும் கொடுத்தது. உங்களைப் பார்த்தால் கொஞ்சம் பொறாமையாகக்கூட இருக்கிறது நண்பரே. கோவை, ஈரோடு என கலக்குகிறீர்களே.

நல்ல பகிர்வுக்கு நன்றி.

ஆதவா said...

ஏதாவது ரெக்கார்டர் எடுத்துட்டு போனீங்களா? இவ்வளவு விபரமா தெளிவா தொகுத்திருக்கீங்க??
குறிப்பா பெருமாள் முருகன் அவர்கள் பேசினதை நீங்க எழுதியது ரொம்ப நல்லாயிருந்தது!!

தருமி said...

எப்போ கதை எழுத "ஆரம்பிக்க" போறீங்க ..?

சி.பி.செந்தில்குமார் said...

good post. u have good memmory power. thanx for sharing

Unknown said...

Nice! :-)

ஈரோடு கதிர் said...

அழகான தொகுப்பு கா.பா!

கார்த்திகைப் பாண்டியன் said...

சங்கவி
நன்றி தலைவரே

ராகவன்
வாங்கண்ணே.. ரொம்ப நாளைக்குப் பிறகு நம்ம கடைப்பக்கம் வந்திருக்கீங்க.. நன்றி..

சரவணா
கண்ணு போடதீங்க தலைவரே.. நீங்க ஊருக்கு வரும்போது சேர்ந்து சுத்துனா சரியாப் போச்சு..

ஆதவா
எதையும் பிடிச்சு செஞ்சா நல்லா வரும்கிறது உங்களுக்குத் தெரியாததா நண்பா? நன்றி..:-))

கார்த்திகைப் பாண்டியன் said...

தருமி
அய்யா.. இதுவரைக்கும் எழுதினது ஒண்ணுமே இல்லைன்னு சொல்லிட்டீங்க இல்ல? கூடிய சீக்கிரம் எழுத முயற்சி பண்றேன்..

சி.பி.செந்தில்
ரொம்ப நன்றிங்க

ஜீ
வாங்க நண்பா.. கொஞ்ச நாளா காணோமேன்னு பார்த்தேன்..:-))

கதிர்
ரைட்டு நண்பா.. நன்றி..:-))

Mahi_Granny said...

u hv a good memory power . congrats

சண்முககுமார் said...

அருமையான தொகுப்பு


இதையும் படிச்சி பாருங்க

ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்

ரோஸ்விக் said...

அருமையா தொகுத்து எழுதியிருக்கீங்க. இதுபோன்ற தொகுப்புகளைப் படித்து (படித்தாவது) மகிழ்ச்சியடைகிறேன்.

மேவி... said...

ஏன் தொட்டும் தொடாத மாதிரி எழுதிருக்கீங்க காபா சார் ???

நல்லாயிருக்கு ....

குமரை நிலாவன் said...

அருமையா தொகுத்து எழுதியிருக்கீங்க

நண்பரே

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான தொகுப்பு

கார்த்திகைப் பாண்டியன் said...

மகி கிரானி
உங்கள சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம் மேடம்

சண்முககுமார்
ரொம்ப நன்றி நண்பா

ரோஸ்விக்
வாங்க சிங்கை சிங்கமே.. நன்றிப்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

மேவி
எல்லாருமெ நிகழ்வோட மொத்த தொகுப்ப எழுதுவாங்க தல.. அதனாலத்தான் பெருமாள்முருகன் பத்தி சொல்லணுமேன்னு மத்த விஷயங்கள லைட்டா சொல்லி இருக்கேன்

நிலாவன்
நன்றி தலைவரே

டிவிஆர்
ரொம்ப நன்றி சார்..:-))