February 17, 2011

நினைவுகளில் பின்சுழலும் ஒலிநாடாக்கள் (1)


பாலு மகேந்திராவின் பழைய திரைப்படங்கள் ஏதேனும் கிடைக்குமா என விசாரிப்பதற்காக கீஷ்டுகானம் வரை போயிருந்தேன். உள்ளே நுழையும்போதே ஒரு மாதிரியாக இருந்தது. கடைசியாக அந்தக் கடைக்குப் போனது எப்போது என்றே நினைவில்லை. இத்தனைக்கும் ஒரு காலத்தில் அந்தக் கடையே பழியாகக் கிடந்திருக்கிறேன். இணையம் வந்தபின்பு வீட்டிலேயே தேவையான விஷயங்களை தரவிறக்கம் செய்து கொள்வதால் அங்கு போவதற்கான தேவைகளே இல்லாமல் போயிருந்தன.

கடை நிறையவே மாறி இருந்தது. எங்கு பார்த்தாலும் டி.வி.டி.க்கள். பெரும்பாலும் ஆங்கில, ஆங்கில டப்பிங் மற்றும் பழைய காலத் தமிழ்ப்படங்கள். அங்கங்கே ஓரமாக சில இடங்களில் மட்டும் பாட்டு சி.டி.க்கள். ஒரு முக்கியமான விஷயம் கண்ணில் தட்டுப்படவே இல்லை. மெதுவாகத் தயங்கியபடியே கடைக்காரரிடம் கேட்டேன்.

"இப்ப கேசட்டுங்க எல்லாம் வர்றது இல்லையாண்ணே?"

வித்தியாசமாக என்னை ஏற இறங்கப் பார்த்தவர் உள்ளே வரும்படி அழைத்துப் போனார். ஒரு மூடிய கதவின் பின்னே அந்த ரேக்கு இருந்தது. அத்தனையும் பழைய கேசட்டுகள்.

"புதுப்படம் கேசட் எல்லாம் கம்பெனிலேயே போடுறது கிடையாது தம்பி. சி.டி. மட்டும்தான். அதுவும் எல்லாப்பயலும் நெட்லே எடுத்துடுறாங்க. அப்புறம் எங்கிட்டு? போன வருஷம் நல்லாப் போன படம்னா எந்திரந்தான். ஆனா அதுவுமே மொத நாள் எத்தன போச்சு தெரியுமா? வெறும் நாப்பது சிடி. அதுதான் இன்னிக்கு வரைக்கும் ஒரே நாள்ல ஜாஸ்தியா வித்த ரெக்கார்டு. இந்த நிலமையில இன்னும் கேசட்டு பத்தி கேட்டுக்கிட்டு இருக்கீங்களே? சரியாப் போச்சு போங்க. ஏதோ இந்த லாரிக்காரன், கார்னு ஒண்ணு ரெண்டு பேரு கேப்பாங்களேன்னு இதை எல்லாம் மிச்சம் வச்சிருக்கோம். ஹ்ம்ம்.."

புலம்பியபடி அவர் வெளியே போக நான் அந்தக் கேசட்டுகளையே பார்த்துக் கொண்டிருந்தேன். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தங்களைப் பலி கொடுத்து, வயதாகிப் போனபின்னும் யாரேனும் வரமாட்டார்களா என்னும் நப்பாசையோடு தெருவில் காத்துக் கிடக்கும் வேசையரைப்போல, யாருக்காக இவை காத்து நிற்கின்றன? ஏதோ கொஞ்சம் பாரமாக இருக்க எதுவுமே வாங்காமல் வீடு வந்து அமைதியாக உட்கார்ந்து விட்டேன்.

வெகு நேரம் கழித்து வீட்டு பரணில் அந்தப் பையைத் தேடிப்பிடித்து எடுத்தேன். உள்ளே கிட்டத்தட்ட முன்னூறு கேசட்டுகள். இரண்டு வருடங்களுக்கு முன்பு டேப் ரெக்கார்டர் பழுதாகிப் போன நாள் முதலாக பயன்படுத்தப்படாமலே முழுக்க தூசியடைந்து கிடைந்தன. அவற்றைப் பார்க்க பார்க்க ஏதோ ஒரு குற்றவுணர்வு என்னை வெகு ஆழமாகப் பீடிக்கத் தொடங்கியது.

இசை மீதான என்னுடைய காதல் என் பத்தாம் வகுப்பு விடுமுறையில் துவங்கியது. அப்பா ரயில்வேயில் இருந்ததால் ஒவ்வொரு வருட முடிவிலும் மே மாதம் இலவசமாக ஊர் சுற்றி வருவோம். அந்த வருடம் சிம்லா போகலாம் என முடிவானது. வழியில் பாம்பேயில் ஒரு நாள் தங்குவதாக இருந்தது. ஒரு கொலைவழக்கில் தமிழ்நாட்டை விட்டு ஓடிப்போயிருந்த என் மாமா பையன் அங்குதான் இருந்தான் என்பதால் அவனை சந்திப்பதற்காக இந்த ஏற்பாடு.

அந்தப் பயணத்தில் அவன் எனக்கென ஒரு பரிசு வாங்கி வந்திருந்தான். அது ஒரு விடியோகான் வாக்மேன். எனக்கு சந்தோசம் தாங்கவில்லை. நான் பாட்டு கேட்பதற்காக எனக்கே எனக்கென ஒரு வாக்மேன். வாவ்...என்னுடைய செட்டு பசங்களுக்கு மத்தியில் அருமையாக கெத்து காட்டலாம். அதுநாள் வரை எனக்குப் பிடிக்காதவனாக இருந்த அவன் ஒரே நாளில் எனக்கு நெருங்கின மாமனாகிப் போனான். அதில் ஒரு பிரச்சினை. வாக்மேன் இருக்கிறது. ஆனால் கேசட்? ஒன்றுகூட இல்லை. அதை அவனிடமே சொன்னேன்.

"நான் வாங்கித் தர்றேண்டா.. சொல்லு.. உனக்கு என்ன கேசட் வேணும்?"

அப்போதெல்லாம் தமிழ்ப்பாடல்களை விட ஹிந்திப் பாடல்களை அதிகம் விரும்பிக் கேட்பேன், குறிப்பாகப் பாப் பாடல்கள். எம் டிவியும், சானல் வியும் தமிழ்நாட்டில் அறிமுகமாகி இருந்த காலம். எனவே அவனிடம் சொல்லி நான் ஆசை ஆசையாக வாங்கிய முதல் கேசட் "made in india - alisha chinai". பயணம் முழுதும் அந்த ஒரே கேசட்டையே திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருந்தேன். வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் நான் செய்ய வேண்டிய வேலை எதுவெனவும் முடிவு செய்து விட்டேன். அது - கேசட்டுகள் வாங்கிக் குவிப்பது.

(தொடருவேன்..)

19 comments:

சுதர்ஷன் said...

பகிர்வு நன்று :) ரொம்ப நல்லவரா இருப்பார் போல இருக்கே ? அந்த கொலை வழக்கு என்ன ஆச்சு ?

குடந்தை அன்புமணி said...

தொலைக்காட்சிப் பெட்டிகள் அறிமுகமாகிக் கொண்டிருந்த காலக்கட்டடத்தில்
அனைவரின் வீடுகளிலும் ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்த வானொலிப் பெட்டிதான் என் விருப்பமாக இருந்தது. அதிலும் இலங்கை வானொயில் ஒலிபரப்பப்படும் தமிழ் திரைஇசைப் பாடல்கள், அவர்களின் தமிழ் வர்ணனைகள் மிகவும் அற்புதமாக இருக்கும். நான் வேலைக்கு சென்று சம்பாதிக்க ஆரம்பித்தபோதுதான் எனக்கே
எனக்கென ஒரு வாக்மேன் வாங்கினேன். இளையராசாவின் பாடல்களாக தேடித்தேடி பதிவு செய்து கேட்டு மகிழ்ந்தேன். அந்தக் கேசட்டுகள் எல்லாம் சிக்குண்டு போய் இன்னமும் அட்டைப்பெட்டிக்குள்
முடங்கிக் கிடக்கின்றன. இப்பொழுதும் தொலைக்காட்சியிலும் பாடல்கள்தான் எனக்கு பிடித்த பொழுதுபோக்கு என்றாலும், மகளுக்காக சுட்டி டீவியே ஆக்கிரமித்திருக்கிறது.

துளசி கோபால் said...

ஆரம்பம் அருமை.

தொடர்கிறேன்.


இதே கதிதான் ஒளிநாடாக்களுக்கும் ஏற்பட்டது.

ஒரு 1200 டேப்களை City Dump இல் கொண்டு போட்டோம்:( ரெண்டு பெட்டிகளை மட்டும் தனியா வச்சுருக்கேன் கொலுப்படிகள் கட்ட.

settaikkaran said...

நிறைய பெருமூச்சு விட வைத்த இடுகை. ஒரு காலத்தில் என்னிடம் இருந்த கேசட்டுகள் எத்தனை எத்தனை..?

King Viswa said...

எங்கள் வீட்டில் இன்னமும் டேப் ரிகார்டர் பாடிக்கொண்டுதான் இருக்கிறது. பழைய நினைவுகளுக்கு நன்றி.


கிங் விஸ்வா
இரண்டு புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ்கள் - இரும்புக் கை மாயாவி + சிக்பில் குழுவினர்

பா.ராஜாராம் said...

அருமை! தொடருங்கள் கா.பா.

Raju said...

\\அவற்றைப் பார்க்க பார்க்க ஏதோ ஒரு குற்றவுணர்வு என்னை வெகு ஆழமாகப் பீடிக்கத் தொடங்கியது\\

இங்கன நிக்கீறீஹண்ணேய் நீரு!
:-)

Raju said...

கிட்டத்தட்ட இதே ரீதியில், சொக்கன்ஜி ஒரு பதிவெழுதிய நினைவு.

கார்த்திகைப் பாண்டியன் said...

S.Sudharsan
அது ஒண்ணும் இல்லாமப் போச்சுங்க.. இப்போ தமிழ் சினிமால நடிச்சுட்டு இருக்காரு..

அன்புமணி
நண்பா.. எங்க தாத்தாவோட ரேடியோ போட்டி இன்னமும் என்கிட்ட இருக்கு..:-))

துளசி மேடம்..
உங்ககிட்ட வீடியோ டேப்பா..:-((

கார்த்திகைப் பாண்டியன் said...

சேட்டைக்காரன்
அதேதான் தல..:-((

விஸ்வா
நீங்க கொடுத்து வச்சவர் தல.. என்னோட டேப்ப ரிப்பேருக்குக் கொடுக்கப் போறேன்..

பா.ரா.
நன்றிண்ணே..

கார்த்திகைப் பாண்டியன் said...

ராஜூ..
//இங்கன நிக்கீறீஹண்ணேய் நீரு!
:-)//

கரெக்டா கண்டுபிடிச்சுட்டியே மக்கா.. யாராவது சொல்லுவாங்கன்னு நினச்சேன்.. கடைசில நீ..:-))

//கிட்டத்தட்ட இதே ரீதியில், சொக்கன்ஜி ஒரு பதிவெழுதிய நினைவு.//

பார்த்தேன்.. கேசட்டுகள்.. கண்டிப்பா இது வேற மாதிரிப் போகும்.. முழுசா படிச்சுட்டு சொல்லுப்பா..:-))

துளசி கோபால் said...

அதே அதே. வீடியோ டேப்ஸ் தான்.

http://thulasidhalam.blogspot.com/2008/09/blog-post_5623.html

நேரம் இருந்தா சுட்டியில் பாருங்க.

ஆதவா said...

அருமையான ஆரம்பம்!! இந்த மாதிரி ஒவ்வொருவருக்குள்ளும் இசை துவங்கிய கதை இருக்கும்!! வீடியோ கடை சேல்ஸ், கொலை வழக்கு மாமா பையன் என கொஞ்சம் தைரியமாகவே சொல்வதாகத் தெரிகிறது

ஜாபர் ஈரோடு said...

ன்னே..பின்னிப்புட்டன்னே..

கார்த்திகைப் பாண்டியன் said...

துளசி மேடம்
வாசிச்சுட்டேன்.. ஏதோ இப்படியாவது உபயோகப்படுதே.. ஹ்ம்ம்...

ஆதவா..
இது ஆரம்பமே.. தைரியமா சொல்லணும்னு எழுத ஆரம்பிச்சதுதான்.. இன்னும் வரும்..

ஜாஃபர்
நன்றி நண்பா..

மேவி... said...

சின்ன வயதில் இருந்தே பாடல்களென்றால் எனக்கு ரொம்ப இஷ்டம் ... ஆனால் எங்கள் வீட்டில் இருந்தது ஒரு டேப் ரெகார்டர் தான். அதில் என் அண்ணன் மட்டும் தான் பாடல்களை கேட்பான்..... அதுவும் பாப் பாடல்கள் தான். அதனால் நான் பெரும்பாலும் டிவியில் மற்றும் ரேடியோவில் வரும் பாடல்களை கேட்டே வளர்ந்தேன் ....

அதுவும் ஒளியும் ஒலியும் பார்க்க நாலஞ்சு தெருக்களை கடந்து போய் பார்த்ததையெல்லாம் பார்க்க முடியுமா ???


நானெல்லாம் hum aapke hain kaun , dil to pagal hai , aradhana மற்றும் RD BURMAN பாட்டு கேசட்டுகளெல்லாம் தேய்ந்து போகுமளவுக்கு கேட்டிருக்கிறேன்

தருமி said...

மீனாஷி பஜார்ல போய் used cassettes வாங்கி வந்து வேண்டிய பாட்டுகளைப் பதிந்து, பாட்டுக்களை அட்டையில் எழுதி, பெட்டியில் வைத்து, எண்ணிட்டு, பட்டியலிட்டு, அவைகளை அடுக்க என்றே ஒரு மர rack செய்து .....

கேள்வி கேட்பாரற்று கிடக்கின்றன; அவ்வப்போது தங்ஸிடமிருந்து ரெண்டு திட்டு வேறு விழுகிறது - இப்படி குப்பையா இருக்கேன்னு!

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வு நண்பரே

கார்த்திகைப் பாண்டியன் said...

மேவி
சொல்றதுக்கு எல்லாருக்குமே ஒரு கதை இருக்குல்ல?

தருமி அய்யா..
அதே கதைதாங்கைய்யா..:-((

ஞானசேகரன்
நன்றி தலைவரே..