February 21, 2011

இரு பூதங்கள் - 1

ஒரு ஊருல முனியன், முனியம்மான்னு புருஷன் பொண்டாட்டி இருந்தாங்க. இதுல முனியன் ரொம்ப நல்லவன். அப்பாவி. யாரு எந்த வேல சொன்னாலும் சலிக்காம செய்வான். அத அந்த ஊருக்காரனுங்க நல்லா பயன்படுத்திக்குவாங்க. நாள் பூரா முனியன்கிட்ட வேல வாங்கிட்டு கொறஞ்ச கூலி கொடுத்து அனுப்பி விட்டுடுவாங்க.

முனியம்மாளும் நல்லவதான். ஆனா ஊருல இருக்குற எல்லாரும் தம்புருஷன நல்லா வேல வாங்கிக்கிட்டு ஏமாத்துறாங்களேன்னு அவளுக்கு ரொம்ப வருத்தம். நம்ம புருஷன் சரியான ஏமாளியா இருக்கானேன்னு பொலம்பிக்கிட்டே இருப்பா. இப்படியே விட்டா தன்னால முன்னேறவே முடியாதுன்னு தெரிஞ்சுகிட்டு ஒரு முடிவுக்கு வந்து தன் புருஷனக் கூப்பிட்டு சொன்னா.

“இந்தா பாரு. இந்த ஊருலயே இருந்தா இப்படியே கூலியாத்தான் இருக்கணும். இவய்ங்க உந்தலையில மொளகா அரச்சுக்கிட்டேதான் இருப்பாய்ங்க. நாளப்பின்ன நமக்குன்னு ஒரு புள்ளகுட்டி ஆச்சுன்னா அதுக்கு நாலு காசு பணம் சேர்த்து வைக்க வேணாமா? அதனால நீ நாளைக்கு வேற வேல தேடி வெளியூரு போற.. அங்கயாச்சும் காரியமா பொழக்கப் பாரு.. சரியா?”

முனியனால ஒண்ணும் மறுத்துப் பேச முடியல. சரின்னுட்டு மறுநாளு மூட்டயக் கட்டிட்டான். வழில சாப்பிடுறதுக்கு ரெண்டு களி உருண்டைய சட்டில போட்டுத் தந்தா முனியம்மா. வாங்கிக்கிட்டு காட்டு வழில நடக்க ஆரம்பிச்சான்.

எவ்வளோ நேரம் நடந்திருப்பான்னு அவனுக்கே தெரியாது. நல்ல பசி. சரி எங்கேயாவது உக்கார்ந்து சாப்பிடுவோம்னு ஒரு மரத்து நிழல்ல உக்கார்ந்தான். சட்டியத் தொறந்தா உள்ள மினுமினுட்டு ரெண்டு களி உருண்ட. அதப் பார்த்து முனியனுக்கு நாக்குல எச்சி ஊற ஆரம்பிச்சது. சிரிச்சுக்கிட்டே சந்தோஷமா கத்துனான்.

“ஏய்.. உங்க ரெண்டு பேரையும் நான் இப்போ சாப்பிடப்போறேன்.. ஹா ஹா ஹா”

அவன் கத்துனது அந்த மரத்து மேல உக்கார்ந்து இருந்த ரெண்டு பூதங்க காதுல விழுந்துச்சு. ஆகா கண்ணுக்குத் தெரியாம இருக்குற நம்மள சரியாக் கண்டுபிடிச்சுட்டானே.. அதோட நம்மள சாப்பிடப் போறேன்னு வேற சொல்றானே.. அப்போ இவன் பெரிய மந்திரவாதியாத்தான் இருக்கணும்னு அதுங்களுக்கு ரொம்பப் பயமாப்போச்சு.

டபால்னு எறங்கி முனியன் முன்னாடி வந்துச்சுங்க. “அய்யா மந்திரவாதி.. எங்கள ஒண்ணும் பண்ணிடாதீங்க..”

பொசுக்குன்னு தன் முன்னாடி வந்து நிக்கிற பூதங்களப் பார்த்தவுடனே முனியனுக்கு கையும் ஓடல காலும் ஓடல. இருந்தாலும் தைரியத்த வர வச்சுக்கிட்டு அதுங்கள நிமிர்ந்து பார்த்தான்.

“சரி.. சொல்லுங்க..”

“நீங்க எங்கள சாப்பிடப் போறதா சொன்னீங்க. வேண்டாம். எங்கள விட்டுருங்க..”

முனியனுக்கு புரிஞ்சு போச்சு. ஆகா நம்ம களி உருண்டைய சொன்னத இந்த முட்டா பூதங்க தங்கள சொல்றோம்னு நினச்சுக்கிடுச்சு போல. சரி இதை நாம பயன்படுத்திக்குவோம்னு நினச்சுக்கிட்டான்.

போனாப் போகுதுன்னு விடுறேன். அதுக்குப் பதிலா எனக்கு நீங்க என்ன தருவீங்க..?”

“இதோ..”

ஒரு பூதம் கண்ண மூடி ஜெய் அலக் பலக் டபக் நிரஞ்சன்னு ஒரு மந்திரத்த சொல்லுச்சு. புஸ்ஸுன்னு புகை. முனியன் கண்ணத் தொறந்து பார்த்தா அவன் கைல ஒரு மண் தட்டு இருந்துச்சு.

“இத வச்சு நான் என்ன பண்ண?”

“குருவே.. இது மந்திரத்தட்டு.. நீங்க சாப்பிடுறதுக்கு எதக் கேட்டாலும் கொடுக்கும்..”

முனியனுக்கு குஷியாயிடுச்சு. தட்ட எடுத்துக்கிட்டு பூதங்ககிட்ட சொல்லிட்டுக் கெளம்பிட்டான். ஊருக்குத் திரும்பி நடக்குறப்போ ராத்திரி ஆகிடுச்சு. இந்நேரத்துக்கு மேல இருட்டுல நடக்க முடியாது. என்ன பண்ணலாம்னு யோசிச்சப்போ வழில ஒரு வீட்டைப் பார்த்தான். சரி இங்க தங்கிட்டு காலைல போவோம்னு நெனச்சான். அங்க போய்ப் பார்த்தா ஒரு கெழவி வந்து கதவைத் தொறந்தா.

“பாட்டி.. பாட்டி.. இன்னைக்கு ராத்திரி மட்டும் நான் இங்க தங்கிக்கலாமா?”

“அதுக்கென்னப்பா.. தாராளமா.. ஆனா இங்க சாப்பிட எதுவும் இல்லையே..”

“நீ கவலப்படாத பாட்டி.. இப்போப் பாரு..”

அப்பாவி முனியன் தன்னோட தட்ட வெளில எடுத்து லட்டு கொடு பூந்தி கொடுன்னு சொல்ல ஆரம்பிச்சான். அவன் சொல்லச்சொல்ல எல்லா சாப்பாடும் மாயமா வர ஆரம்பிச்சது. கெழவிக்கு ஒரே ஆச்சரியம். இது எப்படி தம்பின்னு கேட்டா. முனியனும் தன்னோட கதைய சொன்னான்.

ரெண்டு பேரும் நல்லா சாப்பிட்டுப்புட்டு தூங்கப் போயிட்டாங்க. முனியனுக்கு சரியான அசதி. அடிச்சுப் போட்ட மாதிரித் தூங்கிட்டான். ஆனா கெழவிக்குத் தூக்கமே வரல. அந்த தட்டு ஞாபகமாவே இருந்துச்சு. நடுராத்திரில மெதுவா எந்திரிச்சு முனியனோட அறைக்குப் போனா. அங்க இருந்த மாயத்தட்ட எடுத்துட்டு ஒரு சாதாரண தட்ட வச்சுட்டு சத்தமே இல்லாம வந்து படுத்துக்கிட்டா.

அடுத்த நாள் காலையில ரொம்ப சீக்கிரமாவே எந்திரிச்சுட்ட முனியன் பாட்டிக்கிட்ட சொல்லிக்கிட்டு தன்னோட தட்டயும் எடுத்துக்கிட்டு கெளம்பிட்டான். வீட்டுக்கு வந்து சந்தோஷமா கதவத் தட்டினான்.

“முனியம்மா.. கதவத்திற.. டிங்டிங்டிங் டிடிக்டிடிங்..”

(தொடரும்..)

10 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

தலைவரே! கதை அருமைங்கோ.

தமிழ்வாசி பிரகாஷ் said...

அட மொத அலா வந்திருக்கோம் போல! எப்புடி?

ஆர்வா said...

ஆஹா.. சீக்கிரம் கதவை திறக்க சொல்லுங்க.. நீங்க அடுத்த பாகத்தை எழுதுங்க

செ.சரவணக்குமார் said...

நல்லாருக்கு நண்பா. இந்த மாதிரி கதை கேட்டு ரொம்ப நாளாச்சு. தொடருங்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

தமிழ்வாசி
நன்றி தலைவரே

சரவணா
கொஞ்சம் புதுசா ஏதாவது பண்ணலாமேன்னு..:-))

சிவக்குமரன் said...

present sir!

மேவி... said...

400 அடிக்க வாழ்த்துக்கள் காபா .... யாராச்சு காபாவை பின் தொடர்பு கொள்ளுகளேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

சிவா
ரொம்ப நாளைக்குப் பிறகு..:-))

மேவி
வெளம்பரத்துக்கு நன்றி..:-))

cheena (சீனா) said...

என்ன கா.பா - சின்னப்புள்ளக கதை எல்லாம் எழுத ஆரம்பிசாச்சா .... ஏன் வற்றாத நதியே வத்துதா ......

கார்த்திகைப் பாண்டியன் said...

சீனா அய்யா..
இந்த நதி வத்தாம இருக்க எல்லா முயற்சியும் எடுக்கும்..