April 22, 2011

கோ - திரைப்பார்வை

கே.வி.ஆனந்த் - சுபா கூட்டணியில் வெளியாகி இருக்கும் மூன்றாவது படம் "கோ". கனா கண்டேனில் கந்து வட்டியையும் அயனில் கடத்தல் தொழிலையும் களமாக எடுத்துக் கொண்ட ஆனந்த் இந்தப் படத்தில் வெகு தைரியமாக தற்கால அரசியலைப் பேசி இருக்கிறார். இத்தனை தெளிவான, தீர்க்கமான அரசியல் படம் எதுவும் சமீபத்தில் வெளிவந்ததாகத் தெரியவில்லை. படத்தை வாங்கி வெளியிட்டிருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் படத்தைத் தேர்தலுக்குப் பின் வெளியிட்டிருப்பதில் கூட சின்னதொரு அரசியல் இருக்கலாம் என்றே நினைக்கத் தோன்றுகிறது.தின அஞ்சல் பத்திரிக்கையின் புகைப்பட நிபுணர் ஜீவா. தைரியசாலி. ஒரு பேங்க் கொள்ளையின் போது திறமையாக செயல்பட்டு நக்சல் கும்பலைக் கைது செய்ய உதவுகிறார். அதே பத்திரிக்கையில் வேலை பார்க்கும் நிருபர்கள் பியாவும் கார்த்திகாவும். பியாவுக்கு ஜீவாவின் மேல் காதல். ஜீவாவுக்கு கார்த்திகா மீது காதல். தேர்தல் நேரத்தில் ஜோஸியர் சொன்னார் என்று எதிர்க்கட்சி தலைவர் கோட்டா சீனிவாச ராவ் பதிமூன்று வயதுப் பெண்ணைத் திருமணம் செய்வதை ஜீவா அம்பலப்படுத்துகிறார். அதே போல ஆளும் கட்சியின் முதல்வர் நிருபர் ஒருவரை செருப்பால் அடிப்பதையும் பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சிறகுகள் என்கிற அமைப்பின் மூலமாக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென தேர்தல் களத்தில் குதிக்கிறார் அஜ்மல். நிறைய நல்ல காரியங்கள் மூலம் மக்கள் மனதில் சிறகுகள் இடம்பிடிக்கிறது. இளைஞர்களால் மட்டுமே மாற்றம் கொண்டு வரமுடியும் என்கிற கோஷத்தோடு அஜ்மலின் கட்சி செயல்படத் தொடங்க அவர்களின் பிரச்சார மேடையில் குண்டு வெடிக்கிறது. சிறகுகளைச் சேர்ந்த முப்பது பேரோடு பியாவும் அந்த குண்டுவெடிப்பில் சாகிறார். ஆனால் பியாவின் மரணம் கொலை என்பதை ஜீவா கண்டுபிடிக்கிறார். தேர்தலில் அனுதாப அலை பெருக அஜ்மல் வெற்றி பெறுகிறார். குண்டு வைத்ததும் பியாவைக் கொன்றதும் யார், அஜ்மலால் அரசியலில் மாற்றம் கொண்டு வர முடிந்ததா என்பதேகோ”.

ராம், கற்றது தமிழுக்குப் பிறகு என்னால் இந்தப்படத்தில்தான் ஜீவாவை முழுமையாக ரசிக்க முடிந்தது. ரொம்ப இயல்பாக நடித்து இருக்கிறார். அவருக்கு உடையலங்காரம் செய்திருப்பவருக்கு ஒரு ஸ்பெஷல் ஷொட்டு. முதலில் இந்த வேடத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. நல்ல வேளை நாம் பிழைத்துக் கொண்டோம். கனா கண்டேனில் பிருத்விராஜ் என்றால் இந்தப்படத்தில் அஜ்மல், படத்தின் நிஜ நாயகன் எனச் சொல்லுமளவுக்கு கிளாஸ். மக்களுக்காக வெகு அமைதியாக போராடும்போதும் விதைக்கப்படுகிறோம் எனப் பொங்கி எழும்போதும் கடைசியில் கண்களில் குரூரம் மின்ன சண்டை போடும்போதும் மிரட்டி இருக்கிறார்.கண்ணுக்குக் குளிர்ச்சியாய் கார்த்திகா. நிறைய இடங்களில் ராதா. அந்தக் கண்ணும் மேலேறும் புருவங்களும்.. ஹய்யோ.. சான்ஸே இல்லை. அம்மணிக்கு நடிக்கவும் வருகிறது என்பது பிளஸ் என்றால் அவருடைய உயரம்தான் மைனஸ். ஜீவாவின் லூசுத் தோழியாக பியா. முதல் பாதி ஜாலியாகப் போவதற்கும் கதையின் திருப்புமுனைக்கும் பயன்பட்டு இருக்கிறார். முதல்வராக பிரகாஷ்ராஜ் வந்து போகிறார் என்றால் கோட்டா சீனிவாச ராவ் எதிர்க்கட்சி தலைவராக ராவடி பண்ணுகிறார். நக்சல் தலைவனாக போஸ் வெங்கட்டுக்கு முக்கியமான ரோல்.

நிறைய இடங்களில் வசனத்தில் புகுந்து விளையாடி இருக்கிறார்கள் சுபா. முதல் பாதி முழுக்க ஜாலி கோலி. இரண்டாம் பாதியின் அரசியல் வசனங்களில் தீ கிளப்புகிறார்கள் (சுரேஷ் ஒன்றிரண்டு காட்சிகளில் தலையைக் காண்பித்து இருக்கிறார்). பத்திரிக்கை ஆபிசுக்கு போன் வருகிறது ஏன்யா கடத்தல்காரனே கஸ்டம்ஸ்ல சேர்ற மாதிரிப் படம் எடுப்ப உனக்கு அஞ்சு ஸ்டார் கேக்குதா அரை ஸ்டார் கூட கிடையாது என தன்னைத்தானே சத்தாய்த்துக் கொள்கிறார் ஆனந்த். அத்தோடு கூடவே மச்சான்ஸ், கெமிஸ்ட்ரி என்று சோனாவைப் பேச வைத்து நமீதாவுக்கு ஒரு பஞ்ச். அங்கங்கே கமர்ஷியல் என்று இரட்டை அர்த்த வசனங்களை மட்டும் கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம்.ஹாரிசின் இசையில் பாடல்கள் எல்லாமே கொண்டாட்டம். என்னமோ ஏதோதான் டாப். மெல்லிசைப் பாடலுக்கே தியேட்டருக்குள் மக்கள் நடனம் எல்லாம் ஆடி ஒரே ரகளை. அமளி துமளி பாடல் படம் பிடித்திருக்கும் விதமும் லொக்கேஷன்களும் செம. படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் வரும் முன்பனியே பாடலில் கலை இயக்குனர் கலக்கி இருக்கிறார். பின்னணி இசையில் நிறைய இடங்களில்வி வில் ராக் யூவை உருவி யூஸ் பண்ணி இருக்கிறார் ஹாரிஸ். முதல் பாதியின் நீளத்தை கவனிப்பதில் மட்டும் ஆண்டனி இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

சுபாவோடு சேர்ந்து திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ஆனந்த். பார்வையாளனை முட்டாளாக்கும் அட்டகாசமான திரைக்கதை. முதல் பாதியில் நடந்த எல்லாமே வேறு என்பதை இரண்டாம் பாதியில் புரிய வைக்கும் இடங்களில் அட போட வைக்கிறார். என்ன இறுதி காட்சிகளில் கொஞ்சம் லாஜிக் பார்க்காமல் படம் பார்க்க வேண்டும் என்பதை மட்டும் நினைவில் இருத்துங்கள். இருந்தாலும் எல்லாப் படங்களிலும் ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கும் ஆனந்துக்கு பாராட்டுகள்.

கோலாகலம்.

அப்புறம் படவிமர்சனம் எழுதினா தியேட்டர் டிஸ்கி எல்லாம் போடணுமாம்ல. அதுக்காக..

டிஸ்கி : தியேட்டருக்கு நிறைய ஆண்களும் கொஞ்சம் பெண்களும் வந்து இருந்தார்கள். ஆண்கள் வந்த பைக்குக்கு எல்லாம் ஐந்து ரூபாய் டோக்கன் போட்டார்கள்.

டிஸ்கி : மக்கள் ஜோக்குகளுக்கு சிரித்தார்கள். கை தட்டினார்கள்.

டிஸ்கி : இடைவேளையில் ரெண்டு டிரைய்லரும் நாலு விளம்பரமும் போட்டார்கள். முறுக்கு பாப்கார்ன் கூல் டிரிங்க்ஸ் விற்றார்கள்.

டிஸ்கி : படம் முடிஞ்சு எல்லாரும் எழுந்து வெளியே போனார்கள்.

அம்புட்டுத்தான். நெக்ஸ்டு மீட் பண்ணுவோம்..:-)))

12 comments:

Anna Nagar said...

ok........

Anna Nagar said...

okkk

r.v.saravanan said...

thanks for this post

க ரா said...

நன்றி வாத்தியார் :)

yeskha said...

விமர்சனத்தில் இந்த அளவு டீட்டெயிலாக கதை சொல்வதை தவிர்க்கலாமே..

சிவக்குமரன் said...

like for diskey..

அன்பேசிவம் said...

கிளைமேக்க்ஸில் ஜீவா சிரித்தபடியே ஃப்ரீஸ் ஆகும் ஷாட் எனக்கு ரொம்ப பிடிச்சது. பயபுள்ள பிண்றான், எங்கயாவது அவன் நடிச்சான்னு சொல்ல முடியுமா என்ன?

முரளிகண்ணன் said...

டிஸ்கி :-))

ஆ.ஞானசேகரன் said...

//நெக்ஸ்டு மீட் பண்ணுவோம்..:-)))//


வணக்கம் தலைவரே

ஷர்புதீன் said...

i need ur postal adress for vellinila magazine , pls send

மேவி... said...

காபா நானும் இந்த படத்துக்கு விமர்சனம் எழுதிருக்கிறேன் ....

டிஸ்கி செம காமெடிங்க .... ஒரு வேளை உங்களுக்கு "அவர்" மேல கோவமா ?? (ஏதோ என்னால் முடிந்தது)

Balakumar Vijayaraman said...

// (சுரேஷ் ஒன்றிரண்டு காட்சிகளில் தலையைக் காண்பித்து இருக்கிறார்). //

பாலா வும் வந்தார், கவனிச்சீங்களா ?