May 2, 2011

பிறிதொரு மரணம் - உதயசங்கர்

(கல்குதிரையில் வெளியான கட்டுரை)

Man is the only animal for whom his own existence is a problem which he has to solve

- Eric Fromm

தன்னுடைய இருத்தல் சார்ந்த பிரச்சினைகளே இன்றைய உலகில் மனிதன் சந்திக்கக் கூடிய மிகப்பெரிய பிரச்சினைகளாக இருக்கின்றன. எந்த இடத்திலும் நிலை கொள்ளாமல் அடுத்தது என்னவென்ற குழப்பத்தோடு முன்னகரும்போது அடிப்படை விஷயங்கள் காலாவதியாகி தனக்கான சுயத்தைத் தொலைத்துத் திரிய நேரிடுகிறது. உலக மயமாக்கலும் ஊடகங்களின் ஆதிக்கமும் இன்றைக்கு வாழ்வின் மீதான புதியதொரு பரிமாணத்தை உருவாக்கியிருக்கின்றன.

சமீபத்தில் சில மாணவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கையில் கடைசியாக தங்கள் குடும்பத்தோடு அமர்ந்து வேறெந்த சிந்தனையுமின்றி சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்தது எப்போது எனக் கேட்டபோது யாராலுமே பதில் சொல்ல இயலவில்லை. பணம் சம்பாதிப்பதும் இலக்கின்றி வாழ்வதுமே வாழ்க்கை என நம்பக்கூடிய ஒரு காலகட்டத்துக்கு நாம் இயல்பாகவே வந்து விட்டிருக்கிறோம். இது சரியென்றோ தவறென்றோ பேசுவதற்கான அக்கறையோ நேரமோ யாரிடத்திலும் இல்லை.

நமக்கு முன் இப்பாதை வழி பயணம் சென்ற பலரும் சொல்லிப் போன விஷயங்களான அன்பும் சக மனிதர்கள் மீதான நேசமும் நம்பிக்கையும் இன்றைய இயந்திர உலகத்தில் அர்த்தமில்லாத சொற்களாக மாறி விட்டன. பணம் ஒன்றே சகலத்தையும் தீர்மானிக்கும் விஷயமாக மாறிப் போய் விட்ட சூழலில், தன்னைச் சுற்றி இருக்கக் கூடிய தன் மக்களின் வாழ்வை, அவர்கள் தொலைத்து விட்ட விஷயங்களையும் ஆதாரங்களை கேலிக்குரியதாக்கும் வாழ்க்கை முறையையும் வறுமையையும் அதன் அபத்தங்களையும் எந்தப் பாசாங்கும் இல்லாமல் பேசிப் போகிறது உதயஷங்கரின் படைப்புலகம்.

கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக இலக்கியத்தில் இயங்கி வரும் உதயசங்கரின் சிறுகதைகள் மொத்தத் தொகுப்பாக பிறிதொரு மரணம்என்கிற தலைப்பில் வம்சி வெளியீடாக வந்திருக்கிறது. தன்னுடைய அரசியல் நிலைப்பாடு மற்றும் நம்பிக்கைகள் சார்ந்து ஒரு படைப்பாளி இயங்கும்போது பெரும் கவனத்தோடு இயங்க வேண்டி வருகிறது. எக்காரணம் கொண்டும் கதைகளில் பிரச்சார நொடியோ தன்னுடைய சிந்தனைகளை கதாபாத்திரங்களின் வழி இறக்கி வைக்கும் முஸ்தீபுகளோ ஏதுமில்லாமல் கதையைத் தன்போக்கில் பயணிக்க விட வேண்டும் என்பதில் உதயசங்கர் கவனமாக இருந்து சாதித்து இருக்கிறார்.

இந்தத் தொகுப்பில் வலம்வரும் கதைமாந்தர்கள் எல்லாரும் ஏதோ மாய உலகில் இருந்து குதித்து வந்தவர்கள் கிடையாது. ஒவ்வொரு கணத்தையும் எதிர்பார்ப்புகளோடு கழிக்கும் நடுத்தர வர்க்கத்தினரும், எந்தவொரு ஆதாரமுமின்றி அடுத்த வேளை உணவுக்குக் கூட யாரையேனும் எதிர்நோக்கிக் காத்திருக்கும் விளிம்பு நிலை மனிதர்கள் வரை நாம் பார்த்து அறிந்திருக்கக் கூடிய மக்களே இந்தக் கதைகளில் காணக் கிடைக்கிறார்கள். மனிதர்களின் அந்தரங்கள் சார்ந்து பேசுவதைக் காட்டிலும் அவர்களுடைய புறச் சூழல் எத்தகைய நெருக்கடிகளை உண்டு பண்ணுகிறது என்பதை சொல்லி வாசிப்பவருக்கும் அந்தப் பதட்டத்தைக் கடத்துவது உதயசங்கருக்கு எளிதாகக் கைவருகிறது.

இந்தத் தொகுப்பில் இருக்கக்கூடிய ஆகச் சிறந்த கதையென "மார்ட்டின் ஹைடேக்கரும் மத்தியானச் சோறும்" என்கிற கதையை சொல்லலாம். பெருநகரத்தில் பிழைப்பு தேடித் திரியும் அவனால் ஒரு நாள் முழுக்க பட்டினி கிடக்க முடியாமல் வரும் வழியில் சந்திக்கும் அதிகம் அறிந்திராத நண்பனொருவனிடம் உதவி கேட்கிறான். இவனை விட வீடென்ற ஒன்று இருக்கிரதென்பதைத் தவிர அதிகம் வித்தியாசமில்லாத அவனிடமும் காசில்லாமல் போக இருவரும் வீட்டுக்கு சாப்பிடப் போகிறார்கள். அங்கே தாயின் புலம்பல் தாங்க மாட்டாமல் நண்பன் கோபித்துக் கொண்டு போக கிடைத்த ஒரு வாய் வெறும் சோற்றை அள்ளிப் போட்டுக் கொண்டு கையை நக்கியபடி ஓடும் மனிதனை விட இருத்தல்வாதத்தை யாரால் பெரிதாகக் கேலி செய்து விட முடியும்?

எல்லா மனிதர்களும் சமமெனில் எங்கிருந்து இந்த வித்தியாசங்கள் தோன்றுகின்றன என்கிற ஆதாரக் கேள்வியை முன்வைத்தே உதயசங்கர் தன்னுடைய படைப்புகளை முன்வைக்கிறார். நன்கு வாழ்ந்து கெட்ட முதிய மனிதனொருவன் மாதம் தவறாமல் தம்பி வீட்டில் கிடைக்கும் அமாவாசைச் சோற்றுக்காக ஏங்கிக் கிடக்கும் "கருப்பு மதியம்" கதையும் இதே மாதிரியான இருத்தல் பிரச்சினைகளை முதுமையின் கொடிய மாற்றங்களைக் காட்சிப்படுத்திப் பேசுகிறது.

உதயசங்கரின் கதைகளில் உலாவும் பெண்கள் வெகு சாதாரணமானவர்கள். எங்கிருந்தோ மாயலோகத்தில் இருந்து குதித்தவர்கள் போலல்லாமல் நீங்களும் நானும் எதேச்சையாகக் கடந்து போகக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள். அத்தோடு அவர் படைக்கும் பெண்களை காலம் சார்ந்தும் அணுக வேண்டியிருக்கிறது. கதைகள் எழுதப்பட்ட காலமான 70 -90 களில் தமிழ்ப்பெண்களின் நிலை என்னவாக இருந்தது? எந்தவொரு சூழலிலும் ஆணைச் சார்ந்து இருக்க வேண்டிய நிர்ப்பந்தமும் பொருளாதார விடுதலையின்மையும் பெண்களை பீடித்து இருந்த பெருவியாதிகளாக இருந்த காலத்தை அழுத்தமாக பதிவு செய்யும் பெண்களை நம் கண் முன் நிறுத்துகிறார் ஆசிரியர்.

பெண் விடுதலை, வீரம் என்றெல்லாம் அதீதமாக பேசிக் கொண்டிராமல் இதுதான் நிதர்சனம் பெண்களின் உலகம் இப்படியாகத்தான் இருக்கிறது என்பதை உறைக்கும்படியாக சொல்லிப் போகிறார். வீடுகளின் பட்டாசால்களிலும் அடுக்களையிலும் அலைந்து திரியும் பெண்களில் துயரத்தின் சாயல்களும் தீர்க்க முடியா ஆசையின் பெருங்கனவுகளும் ஆற்றாமையின் பெருவடிவாய் தீவிரமாகப் படிந்து கிடக்கின்றன.

இந்த மாதிரியான விஷயங்களைக் கேள்விக்குண்டாக்கும் வகையில் "வாசனை" என்கிற கதையும் "பூனைவெளி" என்கிற கதையும் மிக முக்கியமானவை ஆகின்றன. தன் ஆதிக்கம் தாளாது மனைவி தன்னைக் கொன்று விடுவாளோ எனப் பயந்து நடுங்கும் கணவன் உணரும் மரணத்தின் வாசனையும், தாயைப் போலவே பூனைகளைக் குறியீடாகக் கொண்டு தனக்கான வாழ்வை வெளியே ஒரு பெண் தேடியலையும் பூனைவெளியும் பெண்களின் அக உலகம் சார்ந்து இயங்குகின்றன.

மென்மையான மனிதராக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் உதயசங்கரின் கதைகளில் அடுத்ததாக பெரிதும் தேங்கி நிற்பது மனிதர்களின் மீதான நம்பிக்கையின்மையும் பதட்டமுமே. அன்பும் நம்பிக்கையும் அருகி பார்க்கும் மனிதரெல்லாம் நம் எதிரியோ என சந்தேகப்படும் மனித குணமும் அதன் அடிப்படை ஆதாரமாக விளங்கும் பணமும் அவருக்கு புரியாததாகவும் பயம் தரக் கூடியதாகவும் இருக்கின்றன. அவ்வகையில் "நிலை" ஒரு அற்புதமான கதை எனச் சொல்லலாம். நண்பரோடு பகிந்து கொண்டிருக்கும் அறை ஒன்றில் அவரை விசாரித்துக் கொண்டு வரக்கூடிய மனிதன் உண்டாக்கக் கூடிய பதட்டமும் சந்தேகங்களையும் வெகு அழகாக சொல்லிப் போகும் கதை.

நம்புவதா வேண்டாமா என்கிற மனிதனின் அவஸ்தையை வெகு அழுத்தமாகப் பதிவு செய்யும் இக்கதையின் தொடர்ச்சியாக வரும் "அசைவு" என்கிற கதை நேரெதிராக ஆசுவாசத்தையும் குரூரத்தையும் பேசிப்போகிறது. பேருந்தில் பயணிக்கும் இரண்டு பேர் மற்றவன் தன் பணத்தை திருட வந்தவனோ என சந்தேகம் கொண்டு அலைந்திடும் "சக மனிதன்" சமுதாயத்தின் நிலையை கிண்டலுக்கு உட்படுத்துகிறது.

குடும்ப முறைகள் இன்று எந்த மாதிரியான சூழலில் இயங்கி வருகின்றன என்பதை ஆழ்ந்து பதிவு செய்யும் கதைகளும் இத்தொகுப்பில் இருக்கின்றன. ஜி.நாகராஜனின் கதையொன்றை ஞாபகப்படுத்துகிறது "உறவு" சிறுகதை. பெண் பிள்ளைகளுக்கும் சொத்து கொடுக்க வேண்டும் எனச் சொல்லும் தாயை எதிர்த்து சண்டை போடும் மகன்கள் வெயிலில் கிளம்பும்போது தடுத்து சாயங்கலாம சாப்பிட்டுப் போகலாம் எனச் சொல்லும் தாயின் வார்த்தைகளில் ஒளிந்து கிடக்கிறது மிச்சமிருக்கும் பாசத்தின் சிறுதுளி.

பணம் சம்பாதிக்கத் துப்பில்லாத மகனை தாயும் தந்தையும் கூட மதிக்காத நிதர்சனத்தை பேசுகிறது "வாசலில் ஒரு பெட்டி". எத்தனை பெரிய உறவாக இருந்தாலும் பணம் என்கின்ற பிசாசின் முன் தோற்றுப் போனதாக தலைகுனிந்து நிற்க வேண்டிய சூழலை அண்ணன் தங்கை பிரச்சினையாக அழுத்தமாகப் பதிவு செய்கிறது "மனிதர்கள்". கடுமையான பொருளாதாரச் சூழலில் தாய்க்கு செய்யும் செலவுக்குக் கூட கணக்கு பார்க்கும் மகன்களின் கதைதான் "புறாக்களும் தண்டவாளங்களும்". ஆக இன்று உலகத்தின் அடிப்படை ஆதாரமாக அசுர உருவெடுத்து நிற்கும் பணம்தான் நம் இயக்கத்தை தீர்மானிக்கிறதா என்கிற காட்டமான கேள்விகளை உறவுகள் சார்ந்து இந்தக் கதைகள் முன்வைக்கின்றன.

முன்சென்ற காலத்தை திரும்பிப் பார்ப்பது எப்போதும் சுகமானது. அதே நேரம் அந்நினைவுகளே ஒரு மனிதனை துயரமேனும் பள்ளத்தாக்கில் சுற்றிச் சுழலடிக்கும் வல்லமையும் கொண்டவை. தொலைத்த வாழ்வின் வலை ஆகக் கொடியது என்பதை "மறதியின் புதைசேறு" பேசுகிறது. விதவிதமான பொம்மைகள் செய்யக்கூடிய ஒருவன் யதார்த்த வாழ்வின் கால்களில் நசுக்கப்பட்டு மளிகைக் கடைக்காரனாக மாறிப்போன காலத்தில் மீண்டும் பொம்மை செய்த தா என வந்து நிற்கும் பையனுடன் செய்யும் பொம்மைகள் எல்லாம் வெறும் காகிதப் பொட்டலங்களாக மட்டுமே வர முடியுமென்பதில் ஒளிந்திருக்கும் வலி அசாத்தியமானது.

தனக்குள் எங்கோ ஒளிந்து கிடந்த புல்லாங்குழல் இசை மீண்டும் வெளிவருவது கண்டு சந்தோசம் கொள்ளாமல் இதெல்லாம் சும்மா என்று சொல்லியபடி தலைதிருப்பும் "டேனியல் பெரியநாயகத்தின் புல்லாங்குழல்" நிதர்சன வாழ்வின் நிழல் பொழுதுகளைப் பேசுகிறது. இதே மாதிரியான உணர்வைத்தான் நெல்லை ஆற்றங்கரையில் பால்யத்தைத் தேடும் மனிதனின் கதையான "அடி"யும் சொல்கிறது.

சாதாரண மக்களுக்கு அபத்தமாகப் படும் விஷயங்களும் எப்படி விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியல் அங்கமாகிப் போகின்றன என்பதைப் பேசும் சில கதைகள் இந்தத் தொகுப்பில் கவனிக்கப்பட வேண்டியவை. தாலிக்கொடி அறுந்து போகும் அளவுக்கு அடித்துத் துரத்தும் கணவன் அடுத்த நாளே எந்த வித குற்றவுணர்வும் இன்றி மனைவியைக் கொஞ்சுவதும் அவளும் அதை பொருட்படுத்தாமல் அவனோடு போவதும் அவர்களுக்கு சகஜமாக இருப்பது "உள்ளும் வெளியும்" கதையில் வெகு அழகாக வெளிப்படுகிறது. "தூரம்", "பால்ய சிநேகிதி" போன்ற இன்னபிற கதைகளும் இதே வகையிலான அபத்தங்களைப் பேசுபவையே.

மாயப்புதிர்த் தன்மையோடு எழுதப்பட்டு இருக்கும் "சித்திரக் குள்ளர்களின் கலகம் ஒரு வரலாற்றுக் குறிப்பு ", "பிறிதொரு மரணம்" ஆகிய கதைகளும் சமூகத்தின் மீதான கோபத்தின் வெளிப்பாடுகளே. உதயஷங்கரின் அங்கதம் வெளிப்பட்டிருக்கும் ஒரே கதையான "அண்டகா கசூம்.." பெருநகர வீதிகளில் தன இருப்பை தொலைத்த ஒருவன் வெளிக்குப் போக முடியாமல் ஒரு நகரமே அவதிப்படுவதாக சொல்லி அந்நகரை விட்டு வெளிவந்த பின்னே தன் இயல்பு நிலை அடைகிறான் என்பதாக நகரத்தின் அவசர வாழ்க்கை மீதான கேலிச்சித்திரத்தை உருவாக்குகிறது. எழுதும் எல்லா கதைகளிலுமே சமூகம் குறித்து பேசுவதிலிருந்து சற்றே விலகி உணர்வு தளத்தில் இயங்கும் "ஒரு பிரிவுக்கவைதை" காதலின் வலியை வெகு ஆழமாக நமக்குள் இறக்கி வைக்கிறது.

நெல்லை மற்றும் கோவில்பட்டி ஆகிய இடங்களே களங்கள். ஸ்டேஷன் மாஸ்டர்களும் தீப்பெட்டித் தொழில் செய்பவர்களும் வறுமையில் உழல்பவர்களும் பிரதானக் கதாபாத்திரங்கள் என மீண்டும் மீண்டும் கதைகள் ஒரே சட்டகத்துக்குள் இயங்குவது சின்னதொரு சலிப்பை உண்டாக்குகிறது. அதே போல, ஒரே மாதிரியான உணர்வைத் தரக்கூடிய கதைகளை வெவ்வேறு சூழலுக்குள் பொருத்திக் கதை சொல்லும் இடத்தில் (சகமனிதன் - நிலை, தூரம் - உள்ளும் வெளியும், குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு - ஒரு விளக்கும் இரண்டு கண்களும், விடியுமா - ஊழி) சற்றே அலுப்புத் தட்டவும் செய்கிறது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். அகச்சிக்கல்களை ஆழமாகப் பேச இடமிருந்தும் அவற்றை தவிர்த்து நேரடிக் கதையாடலை மட்டுமே உதயஷங்கர் நம்புகிறார் என்பது வருத்தமான விஷயம்.

புத்தக வடிவமைப்பில் அட்டையில் நல்ல கவனம் செலுத்தி இருக்கும் பதிப்பகத்தார் உள்ளே பயன்படுத்தப்பட்டு இருக்கும் எழுத்துருவிலும் சற்றே கவனம் செலுத்தி இருக்கலாம். பக்.227 தொடங்கி எழுத்துரு வெகு சிறியதாக இருப்பது வாசிப்பவருக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது.

இருந்தும், முப்பது வருடங்களாக, தான் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் சார்ந்து தொடர்ச்சியாக இயங்கி வரும் உதயசங்கரை கண்டிப்பாக பாராட்டவே வேண்டும். என்றேனும் நிலை மாறும் எனும் நம்பிக்கையுடன் தொடர்ச்சியாக எழுதி வரும் அவருக்கு வாழ்த்துகள். எளிதான மொழி, சொல்ல வந்த விஷயத்தைத் திறம்பட சொல்லுதல், சக மனிதர்களின் மீதான அக்கறை என உதயசங்கரின் தொகுப்பு கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய ஒன்று.


பிறிதொரு மரணம்
வம்சி வெளியீடு
ரூ.200

4 comments:

சுவாமிநாதன் said...

புத்தகத்துல வந்ததுக்கு வாழ்த்துகள் கார்த்தி சார்

sakthi said...

வாழ்த்துக்கள் கா பா

sakthi said...

ஒவ்வொரு கணத்தையும் எதிர்பார்ப்புகளோடு கழிக்கும் நடுத்தர வர்க்கத்தினரும், எந்தவொரு ஆதாரமுமின்றி அடுத்த வேளை உணவுக்குக் கூட யாரையேனும் எதிர்நோக்கிக் காத்திருக்கும் விளிம்பு நிலை மனிதர்கள் வரை நாம் பார்த்து அறிந்திருக்கக் கூடிய மக்களே இந்தக் கதைகளில் காணக் கிடைக்கிறார்கள்.

அப்போ யதார்தமான கதை மாந்தர்கள்ன்னு சொல்லுங்க

sakthi said...

நன்கு வாழ்ந்து கெட்ட முதிய மனிதனொருவன் மாதம் தவறாமல் தம்பி வீட்டில் கிடைக்கும் அமாவாசைச் சோற்றுக்காக ஏங்கிக் கிடக்கும் "கருப்பு மதியம்" கதையும் இதே மாதிரியான இருத்தல் பிரச்சினைகளை முதுமையின் கொடிய மாற்றங்களைக் காட்சிப்படுத்திப் பேசுகிறது.


முதுமையில் வறுமை மிக கொடுமை