February 8, 2012

உதிரிப்பூக்கள் - 5

காருண்யாவில் பொறியியல் படிக்க சேர்ந்த கொஞ்ச காலத்திலேயே கல்லூரியின் கல்ச்சுரல் டீமில் எளிதாக இணைந்து கொண்டேன். தமிழ்ப்பேச்சு மற்றும் கட்டுரை எழுதுதல் இவற்றோடு மிமிக்ரியும் சுமாராக வரும் என்பதும் முதல் வருடத்தின் ஆரம்பத்தில் இருந்தே சீனியர்களிடம் நிறைய மொத்து வாங்கி அவர்களோடு நான் நெருக்கமாக இருந்ததும் கல்லூரி அணியில் எளிதில் இடம் கிடைக்க உதவியது. என் நல்ல நேரத்திற்கு என்னுடைய இரண்டாம் வருடம் முதல் சினிமா நிகழ்வுகளில் பங்கு கொள்ளக்கூடாது எனும் விதிமுறையோடு மற்ற கல்லூரிகளின் கலை விழாக்களில் பங்கு கொள்ளலாம் என்கிற அனுமதியும் கிடைத்தது. பின்பு இதையே சாக்காக வைத்துக் கொண்டு செமஸ்டரின் பெரும்பகுதி நாட்கள் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருப்பது எங்கள் குழுவின் வழக்கமாக மாறிப்போனது. அதுமாதிரியான ஒரு பயணத்தின் போதுதான் திருச்சி ஆர்..சி கல்லூரியில் அவளை முதன்முறையாகப் பார்த்தேன்.

உலகக் கலாச்சாரத்தில் பாரதப் பண்பாட்டின் பங்களிப்பு என்கிற தலைப்பில் பேசவேண்டும். நிதானமாக எனது கருத்துகளை எல்லாம் சொல்லிவிட்டு மேடையை விட்டு நான் இறங்கியபோது அடுத்ததாக அவள் மேடை ஏறிக் கொண்டிருந்தாள். அடுத்த ஐந்து நிமிடத்துக்கு அங்கே இருந்த எல்லாரும் தங்களை மறந்து அவள் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஏற்ற இறக்கத்துடன் அவள் அத்தனை அழுத்தம் திருத்தமாகப் பேசியது இருக்கிறதே.. அப்பா.. பெண்களால் மட்டும்தான் அப்படிப் பேச இயலும். அதிலும் அவளால் மட்டுமே முடியும் என்று அன்று எனக்குத் தோன்றியது. எதிர்பார்த்ததைப் போலவே அவளுக்கு முதல் பரிசும் எனக்கு இரண்டாம் பரிசும் கிடைத்தன.

அவளிடம் பேச வேண்டும் எனத் தோன்றியது. போய்ப் பேசினேன். இயல்பாக உரையாடினாள். பெயர் சரிதா. சொந்த ஊர் மதுரை என்றதும் எனக்கு ரொம்ப குஷியாகிப் போனது. திருச்சி ஹோலி கிராசில் படித்துக் கொண்டிருந்தாள். அத்தோடு அவளுடைய தம்பி நான் படித்த பள்ளியில் எனக்கு ஜூனியர் என்பதையும் சொன்னாள். வெகு நேரம் பேசிவிட்டு விடைபெற்றுக் கொண்டு போனாள். பிறகு பல கல்லூரி விழாக்களில் அவளைச் சந்திக்க நேர்ந்தபோது சின்னதொரு புன்னகையும் தலையசைப்பையும் எப்போதும் எனக்காக அவள் சேமித்து வைத்திருப்பதாகத் தோன்றும்.

என்னுடைய கல்லூரி இறுதி வருடத்தில் நிர்வாகத்தோடு சண்டை போட்டு மாநிலம் தழுவிய கலைவிழா நடத்திட அனுமதி வாங்கினோம். பொறியியல் கல்லூரிகளை மட்டும் அழைத்தால் சரிதாவால் வர இயலாது என்பதற்காகவே எல்லா கலைக் கல்லூரிகளுக்கும் அழைப்பிதழ் அனுப்பியாக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்று சாதித்தேன். எதிர்பார்த்தது போலவே அவளும் வந்தாள். தமிழ்த்துறையின் சார்பாக நடைபெற்ற எல்லா நிகழ்வுகளிலும் ஏதோ ஒரு பரிசை வென்று அந்தக் கலைவிழாவின் தனிநபர் சாதனையாளர் விருது அவளுக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகான சில நாட்களில் நான் அவளை மறந்து போனேன்.

கல்லூரி முடிந்து என் கனவான ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். இரண்டு வருடங்களுக்குப் பிறகு திண்டுக்கல் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை. எங்கே போனாலும் தான் நம்ம சுழி சும்மா இருக்காதே? அந்தக் கல்லூரியில் கல்ச்சுரல் டீமுக்கு நான்தான் ஒருங்கிணைப்பாளர். அந்த வருட ஃபெஸ்டம்பருக்கு மாணவர்களைக் கூட்டிக்கொண்டு திருச்சிக்குப் போயிருந்தேன்.

எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் சரிதாவை மீண்டும் அங்கே சந்திப்பேன் என்று நினைக்கவே இல்லை. இரண்டு மூன்று வருடங்கள் ஆகியும் ஆள் கொஞ்சம் கூட மாறவில்லை. மாறாக இன்னும் கம்பீரமும் நேர்த்தியும் அவளிடம் கூடி இருந்தது. அவளும் என்னைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொண்டாள். மதுரையில் முதுநிலை படிப்பதாகவும் வழக்கம் போல போட்டிகளில் கலந்து கொள்ள வந்திருப்பதாகவும் சொன்னாள். அவள் பேசுவதைக் கேட்கப் போயிருந்தேன்.

அன்றைக்கு நடுவர் குழு கொடுத்தத் தலைப்பு ஒன்றாகவும் அவள் பேசியது வேறொன்றாகவும் இருந்தது. ஆனால் அந்தத் தீவிரம் மட்டும் அவள் பேச்சில் குறையவே இல்லை. முழுக்க முழுக்க ஈழத்து மக்கள் படும் பாட்டையும் அவர்களின் வேதனை குறித்தும் பேசினாள். இறுதியாக தான் தலைப்புக்கு மாறுபட்டுப் பேசியது தெரிந்தே செய்ததெனவும் இளைஞர்கள் மத்தியில் இதைப் பேச வேண்டியது தனது கடமை என்பதாகவும் சொல்லி நடுவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள். கீழே இறங்கியவளிடம் வேகமாகப் போனேன். நல்லாப் பேசினேனா என்று கேட்டவளிடம் என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.

"இருந்தோம் செத்தோம்னு போயிடக்கூடாது தோழர். நம்ம மக்களுக்கு ஏதாவது செய்யணும்.. செய்வேன்.."

இதைக் சொன்னபோது அவள் கண்கள் மின்னிக் கொண்டிருந்தன. ஏதாவது சாதிக்க வேண்டும் என்கிற வெறி அவளுக்குள் இருந்ததை அந்தக்கண்கள் சொல்லிப்போயின. அதில் மறைந்து கிடந்த ஆசைகளையும் கனவுகளையும் என்னால் உணர முடிந்தது. அவளை நினைக்கும்போது ரொம்பப் பெருமையாகவும் இருந்தது. அதன் பிறகான நாட்களில் எப்போதேனும் அவள் நினைவுகள் மனதுக்குள் அவ்வப்போது வந்து போவதோடு சரி..

பிற்பாடு சில காலங்கள் வெவ்வேறு கல்லூரிகளில் பணியாற்றி மதுரைக்கு வந்து சேர்ந்தேன். ஒரு மாலைநேரம் கோரிப்பாளையம் பகுதியில் நண்பர்களோடு நின்று டாப்படித்துக் கொண்டிருந்தபோது அந்தப்பெண் எங்களைக் கடந்து பேசிக்கொண்டு போனாள். என்னால் அந்தக்குரலை உடனே அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. அது சரிதாதான். ஆள் ரொம்ப மாறிபோய் கசங்கிப் போயிருந்தாள். கண்கள் எல்லாம் இருண்டு போய் தொய்ந்து மொத்தமாக ஆளே வேறு மாதிரி ஆகியிருந்தாள். இடுப்பில் ஒரு குழந்தையுடன் அவள் போக முன்னால் நடந்து போய்க் கொண்டிருந்தவன் அவள் கணவனாக இருக்கக்கூடும்.

எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. கடைசியாக இவளும் தன கனவுகளைத் தொலைத்து விட்டாளா? ஆசைகள் எல்லாம் அவ்வளவுதானா? இயல்பு வாழ்க்கைக்குள் புகுந்து புருஷன் பிள்ளை என்று தொலைந்து போகத்தான் இத்தனை பாடா? எனக்கு ஆயாசமாக இருந்தது. அவளிடம் போய்ப் பேசலாமா என்று தோன்றியது. ஆனால் அது அவளுக்குள் சில குற்றவுணர்ச்சிகளைத் தோன்றச் செய்யலாம் என்பது என்னைத் தடுத்து விட்டது.

து மாதிரியான நிறைய மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். வார்த்தைகளில் விவரிக்க முடியா கனவுகளும் லட்சியங்களும் கொண்டு அலைந்து திரியும் மனிதர்கள். ஆனால் காலம் எல்லாவற்றையும் கலைத்துப் போடுகிறது. நினைக்கிற விசயங்கள் எல்லாம் நடப்பது கிடையாது. தாங்கள் நினைத்த வாழ்க்கையை செய்ய நினைத்ததை சாதித்து முடித்தவர் என வெகு சிலரையே சொல்ல முடிகிறது. காற்றில் அசைந்தாடும் நுரைக்குமிழிகள் சட்டென உடைவதுபோல ஒரே தருணத்தில் எல்லாம் மாறிப் போய்விடுவதுதான் நிதர்சனம். அதனை ஏற்று வாழப்பழகிக் கொள்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். உண்மையை உணர மறுப்பவர்கள் தாங்களும் அழிந்து தங்கள் கனவுகளையும் தங்களோடு சேர்த்து புதைத்துக் கொண்டு விடுகிறார்கள்.

ண்பர் திருச்செந்தாழையின் கடையில் அந்தப் பெரியவரை நிறைய தரம் பார்த்திருக்கிறேன். அலைந்து திரிந்து கருத்த முகம். மூட்டை தூக்கி தூக்கி பலமான தேகம். பஜாரில் அவர் கால் படாத இடமே கிடையாது எனச் சொல்லலாம்.

போன வாரத்தின் ஒரு தினத்தில் நான் கடைக்குப் போனபோது வாசலில் உட்கார்ந்து இருந்தார். நல்ல தண்ணி. என்னைப் பழக்கம் என்பதால் அருகில் கூப்பிட்டு அமர வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

“பதினெட்டு வயசுல இங்கன வந்தேன் தம்பி. கூலியாத்தான் சேர்ந்தேன். மொதலாளிக்கு எம்மேல அம்புட்டுப் பிரியம். எல்லா பதவிசும் சொல்லிக் கொடுத்து வளர்த்தாப்டி.. இங்க நல்லவனா இருந்தாப் பொழைக்க முடியாது. எல்லா சூதும் கத்துக்கிடேன். வளந்து வந்தப்போ ஒரே ஒரு ஆசை மட்டும் இருந்துச்சு. பஜார்ல நமக்குன்னு ஒரு கடையப் போட்டு உள்ள உக்காரணும்னு. நாயா ஒழச்சேன். முப்பது வருசம் ஓடிப்போச்சு. கல்யாணம் கட்டி இன்னைக்கு மவளுக்குக் கூட கல்யாணம் கட்டித் தந்துட்டேன். ஆனா இன்னும் என் ஆச நிறைவேறலை. கனவு எதுவுமே ஓடியாடல.. இன்னைக்கும் ஓடிக்கிட்டே இருக்கேன். ஆனா என்னைக்கு நானும் ஒரு கடயப் போட்டு மொதலாளியா ஆகுறேனோ அன்னைக்குத்தான் தம்பி இந்தக் கட்ட அடங்கும்..”

பேசிக் கொண்டிருந்தபோதே மனிதர் அழ ஆரம்பித்து விட்டார். எளிய மனிதனுக்கான ஆசை. அவர் வாழ்நாளுக்குள் இது நிறைவேறக் கூடுமா எனத் தெரியவில்லை. ஏதும் பேசாமல் நான் வந்து விட்டேன்.

மிழில் முனைவர் படிப்பை முடித்துவிட்டு என்றேனும் தனக்கு அரசாங்க வேலை கிடைக்கக்கூடும் எனும் நம்பிக்கையோடு பஸ்ஸ்டாண்டில் டெலிபோன் கடை வைத்திருக்கும் நண்பர். பத்து வருடப் போராட்டத்துக்குப் பின் இளையான்குடி படத்தில் நான்கு சீன்கள் வந்து விட்டோம் இனி நமக்கு வாழ்க்கை பிரகாசமாய் இருக்கும் என நம்பும் மாமா பையன். தாந்தான் இரும்பிலும் நெருப்பிலும் வெந்து சாகிறோம் தன் பையனாவது நன்றாகப் படிக்கட்டும் என்கிற எனது மாணவனொருவனின் அப்பாவும் இருபது அரியர் வைத்திருக்கும் அவருடைய பையனும். எத்தனை எத்தனை மனிதர்கள். எத்தனை எத்தனை ஆசைகள்? சொல்லிக் கொண்டே போகலாம். கனவுகளைச் சுமந்து திரியும் மனிதர்கள். யாராலும் புரிந்து கொள்ள முடியாத சித்திரங்களாய்த் தொடரும் கனவுகள். ஆனால் காலம் எளிதில் தீர்ந்திடாத புதிரென அவர்களைப் பார்த்து நகைத்தபடி இருக்கிறது.

ரண்டு நாட்களுக்கு முன்பு சரிதாவின் தம்பியைக் கடைவீதியில் பார்த்தேன்.

“எப்படிடா இருக்காங்க உங்க அக்கா?”

கேட்ட மாத்திரத்தில் அவன் கண்கள் பொங்கி அழத் தொடங்கி விட்டான்.

“டேய்.. டேய்.. என்னடா ஆச்சு..”

“அக்கா.. அக்கா.. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி மாமாவுக்கும் அக்காவுக்கும் நடந்த சண்டைல.. தனக்குத்தானே நெருப்பு வச்சுக்கிட்டு.. அக்கா..”

அவன் முடிக்க மாட்டாமல் அழுதபடி இருந்தான். நான் விக்கித்துப் போய் நின்றிருந்தேன். என்னால் ஒருபோதும் காலத்தைப் புரிந்து கொள்ள முடியாது என்றே தோன்றுகிறது.

(என் நினைவுகளில் அழியாத சித்திரமெனத் தேங்கிவிட்ட சரிதாவுக்கு.. இதை எழுதும் இந்த வேளையில் அவளுக்கு மிகவும் பிடித்தமான பிள்ளை நிலா பாட்டை மீண்டும் மீண்டும் கேட்டபடி இருக்கிறேன்..)

16 comments:

நாடோடி இலக்கியன் said...

அருமையான தொடர் கா.பா.

இந்த இடுகையினை படித்து முடித்ததும் மனதில் ஏதோ அழுத்துவதாய் உணருகிறேன்.

cheena (சீனா) said...

அன்பின் கா.பா - என்ன சொல்வது = உணர்ச்சிகளைக் கொட்டி எழுதப்பட்ட பதிவு - பெரும்பாலும் பெண்கள் ஆண்களைத்தான் இன்றும் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை - இலட்சியம் என்பதெல்லாம் திருமணத்திற்கு முன்னர் தான். பாவம் சரிதா

தருமி said...

நல்லதொரு தொடர். தொடரட்டும்...

Rathna said...

நிஜத்தை எழுதி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன், நிஜம் எப்போதுமே இப்படித்தான் மனிதனின் கேள்விகளுக்கு விடையளிப்பதே இல்லை. அருமை.

Vijaya Kumar said...

Recently only I start reading your blog. Through Mr.Philosophy Prabakar blog.

My experience and your experience are alike. You live in Madurai and I put-up Chennai. You have good writing skills and I have good reading habits. That it! Keep riding!!

முரளிகண்ணன் said...

மனம் கனக்கிறது

மாதேவி said...

கனவுகள் உதிர்ந்த பூவாகி :((

கோவை நேரம் said...

நெஞ்சை கனக்கிறது

Thekkikattan|தெகா said...

நல்ல காத்திரமான எழுத்து. தொடர்ந்து எழுதுங்க...

rajasundararajan said...

ஜெயமோகனுடைய எழுத்துத் தந்திரம் உங்களுக்குள் குடியேறி வருகிறதோ?

'சரிதா' குணவார்ப்பை ஒரேயடியாகத் தூக்கிநிறுத்திப் பின் சடாரென்று கீழே போட்டு உடைக்கிறீர்கள்.

இதைச் சமனிலை குலையாமல் எழுதுவது எப்படி என்பதற்கு, சு. வேணுகோபலின் "வெண்ணிலை" தொகுப்பில், 'வெண்ணிலை' என்கிற கதையே நல்ல எடுத்துக்காட்டு. விழிமேய்ச்சலுக்கும் ஈடுபடுதலுக்கும் உள்ள வேறுபாடு அது. (மேற்கோள் காட்டுவது, அன்பரே, வாசித்துப் பார்க்க வேண்டும் என்பற்காக).

ஆனால், இந்த எழுத்துப் பூக்களில் நீங்கள் கூறும் இரண்டு சம்பவங்கள் முறையே சம்பந்தப் பட்டவர்களது 'கற்பனாவாத'/ 'தப்பித்தல்' மனநிலைகளைத் தெளிவு படுத்திவிடுகின்றன. அவற்றை எழுத்தில் கொண்டுவந்ததற்காக உங்களைப் பாரட்டுகிறேன்.

1. //"இருந்தோம் செத்தோம்னு போயிடக்கூடாது தோழர். நம்ம மக்களுக்கு ஏதாவது செய்யணும்.. செய்வேன்.."//

2. //கடைக்குப் போனபோது வாசலில் உட்கார்ந்து இருந்தார். நல்ல தண்ணி.//

KSGOA said...

உதிரிப்பூக்கள் தொடர்ந்து படிக்கிறேன்.நல்லா இருக்கு.

ஹுஸைனம்மா said...

//சாதிக்க வேண்டும் என்கிற வெறி அவளுக்குள் .... அதில் மறைந்து கிடந்த ஆசைகளையும் கனவுகளையும்//

இந்த ஒரு சரிதாவின் கதை, ஆண்களுக்கு தமக்கு அமைந்திருக்கும்/அமையப்போகும் மனைவியின் கனவுகளையும் மதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் தந்திருக்கும் என நம்புகிறேன். நன்றி.

sakthi said...

கடைசி பத்தியில் மனம் கனத்து விட்டது கா பா :(

ஹேமா said...

கார்த்தி ரொம்பநாளாச்சு உங்க பக்கம் வந்து.சுகம்தானே !
நம் எண்ணப்படி வாழவிடாமல் காலம் சிலசமயங்களில் புரட்டிப்போட்டுத்தான் விடுகிறது !

Arvind said...

unga padaippukal padikkum podhu tamizh mela aasai varudhu thozha.. unga anubhavangala ketkum bodhu unga mela mariyadha varudhu.. vazhthukal...
enna porutha vara unga saritha innum tamizha vazhdutu irupa nu nambhuvom..
Gr8 Writing... Gr8 Flow... keep posting...

Unknown said...

காற்றில் அசைந்தாடும் நுரைக்குமிழிகள் சட்டென உடைவதுபோல ஒரே தருணத்தில் எல்லாம் மாறிப் போய்விடுவதுதான் நிதர்சனம்.வாழ்க்கையின் போக்கு இந்த ஒரு வரியில் .