July 31, 2009

வரலாறும் தமிழகத்தடங்களும் (நிறைவு பாகம்)..!!!

பாகம் - 1

பாகம் - 2

எந்த ஒரு சமூகத்தின் வரலாற்றையும் அடுத்து வரும் மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் எழுத்து வடிவங்களுக்கு மிக முக்கிய பங்குண்டு. அந்த வகையில் ஆரம்ப காலம் முதலே நம் தமிழ்ச் சமூகம் மாபெரும் தவறுகளை செய்து வந்திருக்கிறது. நம் முன்னோர் பல நல்ல விஷயங்களை செய்து இருந்தாலும் அதை சரியாக ஆவணப்படுத்தவில்லை. மன்னர் காலத்திய கல்வெட்டுக்களும், வேறு தகவல்களும் ரொம்பவும் கம்மியாகவே உள்ளன. அப்படி கிடைக்கும் விவரங்களும் கொஞ்சம் புனைவு கலந்ததாகவே இருக்கின்றன. நாம் அதே தவறை செய்து விடக் கூடாது. தமிழகத்தின் வரலாற்றை சொல்லும் நிகழ்வுகளையும், அதனோடு சம்பந்தப்பட்ட விஷயங்களையும் பொறுப்பாக பதிவு செய்யும் கடமை நமக்கு உண்டு. அந்த நோக்கத்தில் எழுதப்பட்டு இருக்கும் ஒரு புத்தகம்தான் "தமிழகத்தடங்கள்.."

"ஸ்பாட்" என்ற பெயரில் குமுதத்திலும், புதிய பார்வையிலும் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்புத்தான் இந்தப் புத்தகம். இதன் ஆசிரியர் மணா ஊர்மணம், தமிழ் மண்ணின் சாமிகள் முதலான வேறு சில புத்தகங்களையும் எழுதி உள்ளார். "அலைச்சலில் ருசி இருந்தால் அது லேசில் அலுப்பதில்லை.." என்று சொல்லும் மணா, தமிழக வரலாற்றில் முக்கியமான இடங்களையும் அவற்றின் சரித்திரப் பின்னணி பற்றியும்... தமிழ் மண்ணுக்காக போராடிய முக்கியமான மனிதர்களின் வாழ்வில் நீங்கா இடம் பெற்ற நினைவுச் சின்னங்கள் பற்றியும் எழுதிய கட்டுரைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன.
ஆயிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன்பு மதத்தின் பெயரால் நடந்த படுகொலைகளுக்கு சாட்சியாக இருக்கும் சாம்பல் நத்தம் (இன்றைய சாமநத்தம்) என்னும் கிராமத்தைப் பற்றிய அறிமுகத்துடன் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம். பாண்டிய மன்னன் கூன்பாண்டியன் சமண மதத்தைப் பின்பற்றுபவன். அவனுக்கு இருக்கும் வெப்பு நோயை ஞானசம்பந்தர் குணப்படுத்தி அவனை சைவ மதத்துக்கு மாற்றுகிறார். இதன் தொடர்ச்சியாக எட்டாயிரம் சமணர்கள் இந்த கிராமத்தின் தெருக்களில் கழுவில் ஏற்றிக் கொல்லப்பட்டு உள்ளார்கள். இந்த நிகழ்வைச் சொல்லும் சித்திரங்கள் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் உள்ளனவாம். கிராமத்தின் வீதிகளில் தோண்டும்போது முதுமக்கள் தாழிகளை மக்கள் கண்டெடுத்து உள்ளார்கள். எனினும் இன்று வரை இங்கே தொல்லியல் துறை ஒரு ஆய்வு கூட நடத்தியது இல்லையாம்.
நம் சுதந்திரப் போருடன் தொடர்புடைய மனிதர்கள் பற்றியும், இடங்கள் பற்றியும் இந்தப் புத்தகத்தில் பல தகவல்கள் உள்ளன. பாளையங்கோட்டையில் ஊமைத்துரை சிறை வைக்கப் பட்டிருந்த இடம்... மருது பாண்டியரை ஆதரித்த வேலு நாச்சியாரின் சிவகங்கை அரண்மனை.. வெள்ளையரை அழித்திட தன உடம்பில் வெடிமருந்தை கட்டிக் கொண்டு மனித வெடிகுண்டாக மாறி கட்டபொம்மனின் தளபதி வீரன் சுந்தரலிங்கம் குதித்த கிட்டங்கி.. வாஞ்சிநாதனால் சுடப்பட்ட ஆஷின் கல்லறை.. காளையார் கோவில் கோபுரம் காக்க நாட்டைத் துறந்து தங்கள் உயிரையும் ஈந்த மருது பாண்டியரின் சமாதி.. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி கோவை சிறையில் இழுத்த செக்கு.. இந்த நிகழ்வுகளையும் அந்த சின்னங்களையும் பற்றி படிக்கும்போதே நம் கண்களில் கண்ணீர் வரும். எத்தனை எத்தனை உன்னத ஆத்மாக்கள் தங்கள் வாழ்வை தியாகம் செய்து வாங்கிய சுதந்திரம் இது என்பதை நமக்கும் நினைவூட்டும் வண்ணம் இந்தக் கட்டுரைகள் அமைந்து உள்ளன.
வெகு சமீபத்திய நிகழ்வுகளையும், அதன் நினைவுச் சின்னங்களையும் மணா இந்தத் தொகுப்பில் பதிவு செய்கிறார். தமிழ் சினிமாவின் போக்கை மாற்றி அமைத்த ராஜா சாண்டோவின் சமாதி கோவையில் கேட்பாரற்றுக் கிடக்கும் செய்தியை நாம் படிக்கும் போது மனது கனத்துப் போகிறது. கூலியை உயர்த்திக் கேட்ட கொடுமைக்காக நாப்பத்து நாலு உயிர்களைக் கூண்டோடு எரித்த கொடுமை கீழ்வெண்மணியில் நடந்ததை சொல்லுபோதும், சாதியின் பெயரால் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு சான்றாக குமரியில் இருக்கும் தாலியறுத்தான் சந்தை பற்றித் தெரிய வரும் போதும் சமூகத்தின் மீது கோபம் வருகிறது.
எம்.ஆர்.ராதாவை நம் அனைவருக்கும் ஒரு கலகக்காரராகத்தான் தெரியும். ஆனால் தன் காதல் மனைவி பிரேமாவதியின் நினைவாக கோவையில் ஒரு ஸ்தூபியை அவர் கட்டி இருக்கிறார் என்றால் நம்மால் நம்ப முடிகிறதா? காலமெல்லாம் சென்டிமென்ட்டை கிண்டல் செய்த அந்த மனிதனுக்குள் ஒரு காதலன் ஒளிந்து இருந்ததை அறியும் போது நம்மையும் அறியாமல் ஒரு நெகிழ்வு வருகிறது. சினிமாவோடு சம்பந்தப்பட்ட மற்ற இடங்களான சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ், தேவக்கோட்டை ரஸ்தா ஸ்டூடியோ, தியாகராஜா பாகவதரின் வீடு ஆகிய இடங்கள் பற்றிய கட்டுரைகளும் இந்தத் தொகுப்பில் உள்ளன.
எளிமையான வரிகள். சுவாரசியமான நடை. இது தான் இந்தப் புத்தகத்தின் அடையாளம். இதன் முன்னுரையை பிரபஞ்சன் எழுதி உள்ளார். வெறுமனே இடங்களைப் பற்றி எழுதாமல், அதனுடன் தொடர்புடைய மற்ற வரலாற்று விஷயங்களையும் சொல்லி இருப்பது சிறப்பு. நம் தமிழின மக்களைப் பற்றி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல இந்தப் புத்தகம் பெரிதும் உதவும் என்று நம்புகிறேன்.
புத்தகம் : தமிழகத் தடங்கள் (முதல் தொகுதி)

ஆசிரியர் : மணா

வெளியீடு: உயிர்மை

விலை: 90/-
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

17 comments:

நையாண்டி நைனா said...

very good posts nanbaa.

வால்பையன் said...

தகவலுக்கு நன்றி!

லோகு said...

படிக்க வேண்டிய புத்தகம் தான்..

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி..

சொல்லரசன் said...

ந‌ல்ல‌தொருப‌திவு,நல்ல‌தொருப‌கிர்வு,
பெரிய தொடர் எழுதபோறிங்கன்னு நினைச்சேன். இத்துடன் முடிந்து விட்டதா?

Anonymous said...

gud 1

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said...
very good posts nanbaa//

thanks nainaa

கார்த்திகைப் பாண்டியன் said...

//வால்பையன் said...
தகவலுக்கு நன்றி!//

நன்றி வால்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//லோகு said...
படிக்க வேண்டிய புத்தகம் தான்..
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி..//

நல்ல சுவாரசியமான புத்தகம் லோகு.. படித்துப்பாருங்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said...
ந‌ல்ல‌தொருப‌திவு,நல்ல‌தொருப‌கிர்வு,
பெரிய தொடர் எழுதபோறிங்கன்னு நினைச்சேன். இத்துடன் முடிந்து விட்டதா?//

ஒன்னும் சொல்றதுக்கு இல்லை நண்பா..இந்தப் புத்தகத்தை ஆதாரமா வச்சுத்தான் இந்தத் தொடரை ஆரம்பிச்சேன்.. அதனால் இத்தோட முடிச்சாச்சு..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Anonymous said...
gud 1//

அனானிக்கு நன்றி

ஆ.ஞானசேகரன் said...

நல்ல ஒரு பகிர்வு பாராட்டுகள் கார்த்திகை பாண்டியன்

குடந்தை அன்புமணி said...

மூன்று பாகங்களையும் இன்றுதான் படிக்க முடிந்தது. (மன்னிக்கவும்... சற்று வேலைப் பளு.) நல்ல பகிர்வு. எந்த பழமைவாய்ந்த இடங்களுக்கு சென்றாலும் நீங்கள் சொன்னதுபோல் கரிக்கோடுகளும், காதல் சின்னங்களும் கிறுக்கப்பட்டுள்ளன. ஒருசில இடங்களைத்தவிர அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. அரசு கவனித்தால்தான் வருங்கால சந்ததிகளுக்கு இருக்கிற மிச்ச சொச்சமாவது காட்சிக்கு இருக்கும்.

மணா-வின் புத்தகம் நிச்சயம் வாங்க வேண்டிய- வாசிக்க வேண்டிய- நூலகத்தில் இருக்க வேண்டிய புத்தகம்தான்.
நன்றி நண்பா.

Anbu said...

நல்ல பகிர்வு அண்ணா...

கண்டிப்பாக படிக்கிறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.ஞானசேகரன் said...
நல்ல ஒரு பகிர்வு பாராட்டுகள் கார்த்திகை பாண்டியன்//

நன்றி நண்பரே

கார்த்திகைப் பாண்டியன் said...

//குடந்தை அன்புமணி said...
நல்ல பகிர்வு. எந்த பழமைவாய்ந்த இடங்களுக்கு சென்றாலும் நீங்கள் சொன்னதுபோல் கரிக்கோடுகளும், காதல் சின்னங்களும் கிறுக்கப் பட்டுள்ளன. ஒருசில இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. அரசு கவனித்தால்தான் வருங்கால சந்ததிகளுக்கு இருக்கிற மிச்ச சொச்சமாவது காட்சிக்கு இருக்கும்.//

அந்த நப்பாசையில் தான் நண்பா எழுதி இருக்கிறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Anbu said...
நல்ல பகிர்வு அண்ணா...
கண்டிப்பாக படிக்கிறேன்..//

அன்புக்கு நன்றி

Unknown said...

இன்னும் நிறைய எழுதுங்க தல..
பெரிய விசயத்த சுருக்கமா முடிச்சுட்டிங்க..!