November 3, 2009

பதிவுலகில் ஒரு வருடம் - வரலாறு - நன்றி..!!!


நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. நவம்பர் மூன்று, 2008 - என்னுடைய வலைப்பூவை இப்போதுதான் ஆரம்பித்ததுபோல இருக்கிறது. அதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டது. நாட்கள்தான் எத்தனை வேகமாகப் போகின்றன?!! சொல்லவொண்ணா சந்தோஷ உணர்ச்சியில் மனம் குதூகலிக்கிறது. என்னுடைய சந்தோஷங்களை என்னுடைய நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுவதை விட வேறு நல்ல விஷயம் என்ன இருக்க முடியும் சொல்லுங்கள்? என் வலைப்பூவின் பிறந்தநாளைக் கொண்டாட, நான் ப்ளாக் எழுத வந்த கதையை உங்களுக்கு சொல்லி மகிழவே இந்த இடுகை.


2008 ஜூன் மாதத்தின் ஒரு மதியப்பொழுது. வேலை வெட்டி இல்லாமல் காலேஜில் நெட்டை நோண்டிக் கொண்டிருந்தபோது முதல்முறையாக சாரு நிவேதிதாவின் ப்ளாக் கண்ணில் தட்டுப்பட்டது. அப்போது குட்டிக்கதைகள் வந்து கொண்டிருந்த நேரம். சுவாரசியமாக தினமும் படிக்க ஆரம்பித்தேன். நடுவில் ஒருநாள் அதிஷா என்பவருடைய தளமுகவரியை சாரு குறிப்பிட்டு இருந்தார். நடுத்தரக் குடும்பத்து இளிச்சவாயர்களை அடையாளம் காண்பதைப் பற்றிய இடுகை அது. செம காமெடி. ரசித்துப்படித்தவன் அதற்கு முன் அதிஷா எழுதிய எல்லா இடுகைகளையும் படிக்கத் தொடங்கினேன். அங்கிருந்து லக்கியின் தளம் அறிமுகமானது. பின்பு பரிசல்காரன்.


எனக்கோ ஆச்சரியம். வலையில், தமிழில் இப்படி ஒரு உலகம் இயங்கிக் கொண்டிருந்தது ரொம்ப அதிசயமாக இருந்தது. கம்ப்யூட்டரின் முன் வந்தால் முதலில் இவர்கள் மூவருடைய ப்ளாகை ஓபன் பண்ணி பார்த்துவிட்டுத்தான் மற்றதை படிப்பேன். அந்த அளவுக்கு இவர்கள் என்னை ஈர்த்தவர்கள். பின்பு பின்னூட்டங்களில் இருந்தவர்களையும் தேடிப்பிடித்து படிக்க ஆரம்பித்தேன். என்னுடைய ஆதர்ஷ எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணனும் ப்ளாக் எழுதுகிறார் என்று தெரிந்தபோது சந்தோஷம் இரட்டிப்பானது. இப்படித்தான் தமிழ் வலையுலகம் எனக்கு அறிமுகமானது.


சரி..எத்தனை நாள்தான் படித்துக் கொண்டே இருப்பது? நாமும் பின்னூட்டம் போட வேண்டாமா? அதற்கு நமக்கென ஒரு வலைப்பூ வேண்டுமே?! ப்ளாகரை தேடிக் கண்டுபிடித்தேன். என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தபோது எனக்கு மிகவும் பிடித்த புத்தகமான பொன்னியின் செல்வனையே தலைப்பாக வைத்து தளத்தை ஆரம்பித்தேன். தமிழில் எழுதவும் தெரியாது என்பதால் முதல் இரண்டு இடுகைகள் ஆங்கிலத்திலேயே எழுதினேன்.பின் பரிசலின் தளத்தில் இருந்த லிங்கின் மூலம் கூகிள் ட்ரான்ஸ்லிடேரஷன் அறிமுகம் ஆனது. இன்று வரை அதைத்தான் பயன்படுத்தி வருகிறேன்.


தமிழில் எழுதிய முதல் இடுகை என்னைப் பற்றிய அறிமுகமாக அமைந்தது. இரண்டு மாதங்களில், டிசம்பர் மாத இறுதி வரை மொத்தம் பனிரெண்டு இடுகைகள் எழுதினேன். அதை என்னைத்தவிர வேறு யாரும் படிக்கவில்லை. தினமும் தளத்தை திறந்து யாராவது கமென்ட் போட்டிருக்கிறார்களா, யாரும் நம்மை பாலோ பண்ணுகிறார்களா என்று பார்ப்பதிலேயே பொழுது போய்க் கொண்டிருந்தது. 2009 - புது வருடத்தில் நான் எதிர்பார்க்காத ஒரு கணத்தில் என் தளத்துக்கு விடிவு பிறந்தது. என்னுடைய தாத்தில் முதல் பின்னூட்டம் இட்டவர் நண்பர் ச.பிரேம்குமார். (என்ன கொடுமை இது பாண்டியா?) என்னுடைய முதல் பாலோவர். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இனிமேல் தூள் கிளப்புவோம் என்று தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். ஆரம்ப காலம் முதலே என்னுடன் பயணிக்கும் நண்பர் நையாண்டி நைனாவின் நட்பும், கூட்ஸ் வண்டியின் அறிமுகமும் கிடைத்தது இந்த நேரத்தில்தான்.


திரட்டிகளைப் பற்றி நான் அப்போது அறிந்திருக்கவில்லை. எனக்கே தெரியாமல் என்னுடைய பதிவை தமிழ்வெளி மற்றும் திரட்டி.காம் ஆகிய திரட்டிகளில் இணைத்து இருந்தேன். ஒரு இடுகை எழுதினால் மூன்று அல்லது நான்கு கமெண்டுகள் வரும். அதற்கே தலைகால் புரியாமல் ஆடுவேன். மற்ற நண்பர்களுடைய தளங்களில் தமிலிஷ் மற்றும் தமிழ்மணம் கருவிப்பட்டைகள் இருக்கும். அவற்றை எப்படி இணைப்பது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தேன். கடைசியாக பிப்ருவரி 14 அன்று என்னுடைய தளத்தை இந்த இரண்டு திரட்டிகளிலும் இணைத்தேன். இன்றைக்கு வலையுலகில் ஒரு சிலருக்கேனும் என்னைத் தெரியுமளவுக்கு நான் வளர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் திரட்டிகள்தான். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.


ஒரு வருடம். 140 இடுகைகள். 175+ பாலோவர்ஸ். கிட்டத்தட்ட 75,00 ஹிட்ஸ். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு இடுகை. அனுபவம், கதை, கட்டுரை, கவிதை என்று தோன்றுவதை எல்லாம் எழுதி வந்திருக்கிறேன். கேபிள் ஷங்கரின் பதிவுகளால் பாதிக்கப்பட்டு சினிமா விமர்சனம் எழுதத் தொடங்கி இன்று அது ஒரு வழக்கமாகவே மாறி விட்டது. நான் தொடர்ந்து எழுதுகிறேன் என்றால் அதற்கு காரணம் தொடர்ந்து என் எழுத்துக்களை வாசித்து ஆக்கப்பூர்வமாக விமர்சித்து, என்னை ஊக்குவித்து வரும் என்னுடைய நண்பர்கள்தான். அவர்களுக்கு என் நன்றி. நான் ப்ளாக் ஆரம்பித்த போது யாராவது என்னிடம் வந்து இத்தனை எழுதுவாய் என்று சொல்லியிருந்தால் நானே சிரித்திருப்பேன். ஆனால் எதிர்பாராத விஷயங்களை நம்மையும் அறியாமால் நடத்துவதில் தான் வாழ்க்கையின் சுவாரசியம் இருக்கிறது.. இல்லையா?


அற்புதமான நண்பர்களை இந்தப் பதிவுலகம் எனக்கு அளித்து இருக்கிறது. முதன் முதலில் எனக்கு போன் செய்த பொன்.வாசுதேவன், குமாரை நிலாவன், ராஜூ, திருப்பூரில் நான் சந்தித்த சொல்லரசன், ஆதவா, சிவகாசியில் இருக்கும் அன்புத்தம்பி அன்புமதி என நண்பர்கள் வட்டம் கொஞ்சம் கொஞ்சமாக பெருகத் தொடங்கியது. பின்பு வந்த திருச்சி பதிவர் சந்திப்பு, மதுரை மற்றும் ஈரோட்டில் நடந்த சந்திப்புகள் என்று எல்லாமே களைகட்டியது. ஆ.ஞானசேகரன், கமல், இளையகவி, தேவன்மாயம், சீனா ஐயா, தருமி ஐயா, வால்பையன், சுந்தர், பீர், ஜாலிஜம்பர், பாலகுமார், அருண், கதிர், ஜாபர், பாலாஜி, ஜெர்ரி, பப்பு, லோகு, தண்டோரா, Mayvee என்று நட்புவட்டம் வளர்ந்து கொண்டே வந்தது. இன்னுயிர் நண்பர் ஸ்ரீதரின் அறிமுகமும் கிடைத்தது. கடவு நிகழ்ச்சியின்போது ச.முத்துவேல், யாத்ரா ஆகியோரை சந்திக்க முடிந்தது. கோவையில் வடகரை வேலன் அண்ணாச்சியையும், செல்வேந்திரனையும் சந்திக்க முடிந்தது. மேலும் நான் நேரில் பார்த்திராவிடினும் என் மீது அன்பைப் பொழியும், என் மீது அளவு கடந்த அக்கறை கொண்ட நண்பர்கள் ஆ.முத்துராமலிங்கம், கடையம் ஆனந்த், அத்திரி, குடந்தை அன்புமணி, ரம்யா, ஜாக்கிசேகர், பட்டிக்காட்டான், இயற்கை, கவின், கார்த்திக், வினோத் கெளதம், பிரியமுடன் வசந்த், அ.மு.சையது, நாடோடி இலக்கியன், தீப்பெட்டி கணேஷ், சம்பத், உழவன், ஜெட்லி, தவப்புதல்வன், ஷீ-நிஷி, புதியவன், கும்மாச்சி, வானம்பாடிகள், சுரேஷ் என்று எண்ணிக்கையில் அடங்கா நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். என் தங்கையின் திருமணத்திற்கு தங்கள் வீட்டுத் திருமணம் என்கின்ற உணர்வோடு பதிவுலக நண்பர்கள் வந்து கலந்து கொண்டபோது உள்ளம் நெகிழ்ந்து போனேன். உங்கள் அனைவருக்கும் என் உள்ளார்ந்த நன்றி. (நண்பர்களில் யாருடைய பெயரையேனும் தவற விட்டிருந்தால் தயவு செய்து தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம்)


சந்தோஷங்கள் மட்டும்தானா? பதிவுலகில் சங்கடங்களே இல்லையா? இருக்கின்றன. ஆனால் சந்தோஷத்தோடு ஒப்பிடும்போது அவற்றை பெரிய பொருட்டாக நினைப்பதற்கு இல்லை. ஆரம்ப காலத்தில் என்னுடைய தளத்தில் என் அலைபேசி எண்ணைக் கொடுத்திருந்தேன். நடு இரவு இரண்டுமணிக்கு போன் செய்து.."என் பேரு சுப்பிரமணி.. இப்போ அங்க என்ன மணி" என்றெல்லாம் கலாட்டா செய்ய ஆரம்பித்தவுடன் எடுத்து விட்டேன். இது வரை எந்த வம்பு தும்புக்கும் போனது கிடையாது. நான் செய்த தவறாக எண்ணும் ஒரே விஷயம் உயிரோடைக்கு எதிர்வினை ஆற்றியது தான். அது என் குணமல்ல. கோபத்தில் எழுதியதற்காக இன்று வரை வருந்துகிறேன். மற்றபடி சிறுகதைப்போட்டி, பட்டறை என்று பதிவுலகம் ஆரோக்கியமான பாதையில்தான் பயணித்து வருகிறது.


பதிவுலகில் எழுதியதன் மூலம் தான் எஸ்ராவை சந்திக்கும் வாய்ப்பு வந்தது. என் வாழ்நாளின் மறக்க முடியாத நாள் அது. வாமு கோமு, நரன், இசை, திருச்செந்தாழை என்று பல எழுத்தாள நண்பர்களை பதிவுலகம் எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. என்னுடைய வாசிக்கும் ரசனையையும் மேம்படுத்தி இருக்கிறது. நல்ல புத்தகங்களை தேடி வாசிக்க ஆரம்பித்து இருக்கிறேன். நல்ல நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கிறேன். எதுவும் அளவோடு இருந்தால் நமக்கு நன்மையே பயக்கும். பதிவுலகமும் அப்படித்தான். நான் சந்தோஷமாகவே இருக்கிறேன். வரும் நாட்களிலும் இந்த மகிழ்ச்சி நிலைத்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த என் பயணத்தில் என் கூட வந்து கொண்டிருக்கும், வரப்போகும் அனைவருக்கும் மீண்டும் என் நன்றி..!!!

65 comments:

Anbu said...

ஒரு வருடத்திற்கு வாழ்த்துக்கள் அண்ணா....

வேந்தன் said...

ஒரு வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள்...:)

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள் நண்பா தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்

மாதேவி said...

தொடரட்டும் வாழ்த்துக்களும் பதிவுகளும்.

Cable சங்கர் said...

வாழ்த்துக்கள்.. பாண்டியன்..

மேவி... said...

pandi pinnita pandi..

kalakkal .....

மேவி... said...

innum periya padivaa yethirparthen ungalidam irunthu....

மேவி... said...

"Mayvee என்று நட்புவட்டம் வளர்ந்து கொண்டே வந்தது."


naan podum mokkai patri sollamal vitatharku romba nantri pandi sir

ஈரோடு கதிர் said...

அழகான வரலாறு

வாழ்த்துகள் பாண்டியன்

கே.என்.சிவராமன் said...

இது ஆரம்பம்தான் பாண்டியன். இன்னும் நீங்கள் சாதிக்க வேண்டியதும், சாதிக்கப் போவதும் நிறைய இருக்கிறது.

வாழ்த்துகள் நண்பா...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

மணிஜி said...

வாழ்த்துக்கள் நண்பா தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்

ஆண்ட்ரு சுபாசு said...

மேன்மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள் அண்ணா.

விநாயக முருகன் said...

ஒரு வருடம். 140 இடுகைகள். 175+ பாலோவர்ஸ். கிட்டத்தட்ட 75,000 ஹிட்ஸ்.

வாழ்த்துக்கள் நண்பரே.

ஹேமா said...

கார்த்திக் இன்னும் இன்னும் உங்கள் எழுத்துலகம் பரந்து விரிந்து பலப்பட என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் கார்த்திகைப் பண்டியன்...

வால்பையன் said...

உங்க ப்ளாக்குக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

ட்ரீட்டுக்கு அடுத்த வாரம் வர்றேன்!

பாலகுமார் said...

வாழ்த்துக்கள் கார்த்தி...
வலைப்பயனம் இன்னும் இனிமையாகட்டும்.. :)

கோவி.கண்ணன் said...

வாழ்த்துகள்.

வலைகாலம் விரைவானது ஆண்டு செல்வதே தெரியாது

க.பாலாசி said...

உங்களது பதிவுலக அனுபவமும் அதற்கான இந்த கட்டுறையையும் மிகவும் ரசிக்கிறேன். ஆரம்ப காலத்தில் தாங்களும் இரண்டொரு பின்னூட்டங்களுக்கு சந்தோஷப்பட்டது எனக்கும் பொருந்தும். உங்களை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சியே. தொடருங்கள் உங்களது எழுத்துப்பயணத்தை....

வருடங்கள் பல கடந்தாலும் பதிவுகளில் எழுதுகிறோம்...அழியாத வரலாறினை.

☀நான் ஆதவன்☀ said...

முதலாம் ஆண்டு நிறைவுக்கு பொருத்தமான பதிவு நண்பா. வாழ்த்துகள், மென் மேலும் கலக்குங்க :-)

Prabhu said...

வாழ்த்துக்கள் வாத்தியாரே!

ஸ்ரீராம். said...

வாழ்த்துக்கள். செய்ததாக எண்ணிய தவறையும் சொல்லி இருப்பது பாராட்டுக்குரியது.மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

சொல்லரசன் said...

பாசமுள்ள பாண்டியருக்கு வாழ்த்துகள்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வாழ்த்துகள் நண்பரே!

Anonymous said...

நிறைந்த அன்பும், பண்பும் தான் உங்கள் வெற்றிக்கு காரணம் நண்பா.

அனைத்து நண்பர்களையும் அரவணைத்து செல்வது என்பது மிகப்பெரிய விஷயம். அதை திறம் பட செய்தது தான் உங்கள் வெற்றியின் மகுடமாக இருக்கிறது.

உங்களை நேரில் சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தால் உண்மையிலே மகிழ்வேன்.

இந்த ஓராண்டில் உங்களை பின்தொடர்பர்கள் 175 என்கின்ற போதும் உங்களுடன் மனதால் பயணம் செய்கின்றவர்கள் ஆயிரத்தை தாண்டும்.

நீங்கள் எழுதிய 100-க்கும் மேற்பட்ட பதிவுகளும் சிறப்பானவையே...

இந்த ஆண்டில் ஒரு சந்தோஷமான நிகழ்வை சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். அதற்காக காத்திருக்கிறேhம். அந்த நிகழ்வில் எல்லோரும் ஒன்று கூடுவோம்.

நீங்கள் வாழ்வில் தொடர் வெற்றிகளை பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
----- கடையம் ஆனந்த்

புலவன் புலிகேசி said...

ஒரு வருடத்திற்கு வாழ்த்துக்கள் நண்பரே!!!

நர்சிம் said...

வாழ்த்துக்கள் பாஸ்(நண்பான்னு போடலாம்னா உங்க லிஸ்ட்ல இல்லையே ‘பாஸ்’ தான் கரெக்ட்..;))

கா.பா.

இன்னும் உயரம் தொட வாழ்த்துக்கள்.

Anonymous said...

என் பேரு சுப்பிரமணி.. இப்போ அங்க என்ன மணி"
//

ஒரு வேளை அவர் விவேக் ரசிகராக இருப்பாரோ?

பதிவுகளில் மொபைல் நம்பர் போடுவதை தவிர்தது விடுவது நல்லது தான்.

Anonymous said...

வாழ்த்துக்கள்

vasu balaji said...

மனமார்ந்த வாழ்த்துகள். தொடரட்டும் சிறப்பாக.

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்திய அத்தனை நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றி..

//நர்சிம் said...
வாழ்த்துக்கள் பாஸ்(நண்பான்னு போடலாம்னா உங்க லிஸ்ட்ல இல்லையே ‘பாஸ்’ தான் கரெக்ட்..;))//


அய்யய்யோ தல.. பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க.. முடிஞ்ச அளவுக்கு எல்லாருடைய பெயரையும் ஞாபகமா சேர்த்தேன்.. ஆனா எப்படியோ மிஸ் பண்ணிட்டேன்.. தயவு செய்து தப்பா எடுத்துக்காதீங்க.. என்னை நண்பான்னே கூப்பிடுங்க.. அதுதான் எனக்கு சந்தோசம்..

அ.மு.செய்யது said...

வாழ்த்துகள் நண்ப !!!

சுவாரசியமான கதை !!!! இன்னும் ஆரோக்கியமான நட்புகளோடு ஆகச்சிறந்த பணிகளை
மேற்கொள்ள வாழ்த்துகள் !!!

( நல்லா எழுதுறீங்க கார்த்திக்...!!! )

தேவன் மாயம் said...

ஒரு வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள்.

தேவன் மாயம் said...

நீண்ட நெடுங்காலம் எழுதி புகழ் பெற வாழ்த்துக்கள்!

தமிழ் அமுதன் said...

வாழ்த்துக்கள் பாஸ்!!!;))

Karthik said...

வாவ் வாழ்த்துக்கள்ங்ணா.. கலக்குங்க.. :))

Karthik said...

அப்புறம் உங்க தொடர்பதிவு எழுதிட்டேன்.. :)

Prabu M said...

ஒரு வருஷத்திலேயே இவ்வளவு இடுகைகள், நண்பர்கள், பதிவர் சந்திப்புகள், மேலும் பல சிறப்புகளுடன் வேகமான அதே நேரம் சிறப்பான ஒரு பயணத்தைக் கடந்து வந்திருக்கிறீங்க... உங்க வலைப்பூவைப் பாதியிலிருந்துதான் வாசிக்க ஆரம்பித்தேன் இன்றுவரை எல்லா இடுகைகளையும் ரசித்துதான் படித்திருக்கிறேன்... அநேகமாக பதிவுலகில் சோம்பேறியான நான் தொடர்ந்து ஃபாலோ செய்துவரும் (அதாவது அப்டேட் செய்யப்பட்ட எல்லா இடுகைகளையும் படிப்பது!) ஒரே பதிவு உங்களுடையதுதான் என்று நினைக்கிறேன்....

வாழ்த்துக்கள் அண்ணா...

RAMYA said...

ஒரு வருடம் வலையுலகை கலக்கிய அருமை சகோதரா வாழ்த்துக்கள்!

மேலும் சிறக்க எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

RAMYA said...

//
வால்பையன் said...
உங்க ப்ளாக்குக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

ட்ரீட்டுக்கு அடுத்த வாரம் வர்றேன்!
//

ஆரம்பிச்சாச்சா :-)

Ganesan said...

அந்த மதுரகார பதிவருக்கு இந்த மதுரகாரரின் வாழ்த்துக்கள்

வெண்ணிற இரவுகள்....! said...

நாங்கள் இப்பொழுது தான் ஆரம்பித்து உள்ளோம் நீங்கள் சொல்வது ஊக்கம் அளிக்கிறது நண்பா

தமிழ் said...

வாழ்த்துகள்

உமா said...

வாழ்த்துக்கள் கார்த்திகை பாண்டியன்.இந்தப் பதிவே மிகச் சுவாரஸ்யமாக இருக்கிறது.

suba said...

சிறு தினங்களாக தான் உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன் அனைத்தும் அருமை ! ஓராண்டு முடிவடைந்ததற்காக என் வாழ்த்துக்கள் ..

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

வாழ்த்துகள்!

உங்களுடைய வலைப்பதிவை கூகுள் ரீடரில் தொடர்பவர்களில் நானும் ஒருத்தி. நன்றாக எழுதுகிறீர்கள்.
தொடர்ந்து எழுதுங்கள். கொஞ்சம் கொஞ்சம் உங்களுடைய ஊரைப்பற்றியும் புகைப்படங்களுடன் எழுதினால் எங்களைப்போன்றவர்களுக்கு சந்தோஷமாக இருக்கும். மதுரய உங்ககூட நகர்வலம் வந்தமாதிரியும் இருக்கும். :)

-மதி

ச.பிரேம்குமார் said...

வாழ்த்துகள் பாண்டியன். அதற்குள் ஒரு வருடம் ஒடிவிட்டது என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இன்னும் பல நல்ல பதிவுகளிட வாழ்த்துகள் :)

ஜெட்லி... said...

வாழ்த்துக்கள் சார்

(Mis)Chief Editor said...

வாழ்த்துக்கள் நண்பரே!

நசரேயன் said...

வாழ்த்துக்கள் வாத்தியாரே

K.S.Muthubalakrishnan said...

வாழ்த்துகள் கார்த்திகைப் பண்டியன்...

Unknown said...

வாழ்த்துகள்..

ரயில் பயணங்களில்...!!!(நான் படித்த உங்களின் முதல் இடுகை.. திரும்ப போய் படிச்சுட்டு வந்தேன்..)

Karthik Lollu said...

Treat ellam illaiyaa?? :D

தீப்பெட்டி said...

வாழ்த்துகள்.. கார்த்தி..

மண்குதிரை said...

vaazhththukkal

யுவகிருஷ்ணா said...

தொடர்ச்சியாக ஒரு ஆண்டை ’உருப்படியாக’ கடப்பது தமிழ் வலையுலகில் ஒரு சாதனையே. உங்கள் சாதனைக்கு வாழ்த்துகள்!

குமரை நிலாவன் said...

வாழ்த்துகள் நண்பா...

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..

Karthik said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..

அப்படியே ட்ரீட் எப்போனு சொன்னா மதுரைக்கு ட்ரெய்ன் ஏறலாம்.. :))

"உழவன்" "Uzhavan" said...

ரொம்ப சந்தோசம் நண்பா..
எனக்கும் நீங்கள் ஆற்றிய சில தொழில்நுட்ப உதவிகளையும் இப்போது எண்ணிப் பார்க்கிறேன். எனக்கு ஃபாலோயர் போடச் சொன்ன முதல் நபர் நீங்கள்தான் பாண்டியா.
நன்றிகளும் வாழ்த்துக்களும் :-)

அன்புடன் அருணா said...

Belated wishes!

தருமி said...

//ஒரு வருடம். 140 இடுகைகள். 175+ பாலோவர்ஸ். கிட்டத்தட்ட 75,00 ஹிட்ஸ். //

அம்மாடி!!!

நல்லா இருங்க; வளருங்க.

பீர் | Peer said...

வாழ்த்துக்கள் கார்த்திக்,

(எப்டி தவறவிட்டேன்?)

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள்! நிறைய எழுதுங்கள், மொக்கை இல்லாம ஒரு பெரிய வட்டமே வச்சு இருக்கீங்க, அதுவே பெரிய விசயந்தானுங்களே

cheena (சீனா) said...

அன்பின் கா.பா

எப்படி தவற விட்டேன் ( பீர் கேட்ட மாதிரி )

அண்ணன் தருமி கூறியது போல ஒரு வருடம். 140 இடுகைகள். 175+ பாலோவர்ஸ். கிட்டத்தட்ட 75,000 ஹிட்ஸ். பலே பலே

சீனா கூறுவது நல்வாழ்த்துகள்