March 31, 2012

3 - திரைப்பார்வை

இழவு வீட்டில் ஆரம்பிக்கும் முதல் காட்சி. குடிமக்கள் புடைசூழ பாரில் நடைபெறும் நாயகன் நாயகி திருமணம். வி நெக்கும் த்ரீ ஃபோர்த்தும் அணிந்து முதலிரவில் நளினமாய் நடைபயிலும் நாயகி. காதலர்கள் இருவரும் மேற்கத்திய உடையில் ஷாம்பெயன் அருந்தி தங்கள் திருமண நாளை கொண்டாடுகிறார்கள். நாயகனுக்கு மனப்பிறழ்வு. ஆனால், அவனுக்கு சின்ன வயது பாதிப்பு அல்லது அம்மா மீதான அதீத அன்பு என்று க்ளிஷேவாக காரணங்கள் ஏதுமில்லாமல், மனநோய். அவ்வளவே. இப்படியாக தமிழ் மரபு அல்லது நம்பிக்கைகள் என்பதாகச் சொல்லப்படும் பல விசயங்களை விலக்கி வைக்கும் படமாக வெளியாகி இருக்கிறது ஐஸ்வர்யா ஆர் தனுசின் “3”.தனுஷ் - அவருக்குள் இருக்கும் இன்னொரு தனுஷ் - ஸ்ருதி - 3. தனுஷ் ஸ்ருதி பள்ளிக்காதல் - அவர்கள் திருமணம் - அதன் பின்பான வாழ்க்கை - 3. தனுஷ் - ஸ்ருதி - ஐஸ்வர்யா - 3. தனுஷ் ஸ்ருதி - ஐஸ்வர்யா - செல்வராகவன் - 3. அடப்போங்கப்போ. ஏதோ ஒரு வகையில 3. பள்ளிக்காலத்தில் சந்திக்கும் தனுசும் ஐஸ்வர்யாவும் காதலிக்கிறார்கள். ஐந்து வருடங்களுக்குப் பின் வீட்டை எதிர்த்து திருமணம். நல்லபடியாகப் போய்க்கொண்டிருக்கும் வாழ்வில் இடைவேளைக்குப் பிறகு பிரச்சினை. தனுசுக்கு மனநோய். மனைவிக்குத் தெரியாமல் அதிலிருந்து தப்ப முயல்கிறார். ஆனால் அது இயலாது தோற்கிறார். கடைசியில் அவருக்கு என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை.

பழைய படங்களில் எல்லாம் ஒரு டெம்ப்ளேட் வைத்திருப்பார்கள். பெரிய குடும்பத்தின் தலைவர் என்றால் ரங்காராவ், பண்ணையார் என்றால் மனோகர், கிருஷ்ணர் என்றால் ராமாராவ். அதுப்போல இப்போதைய படங்களில் சைக்கோ என்றால் கூப்புடுறா தனுசை என்கிறார்கள். ஏன்யா, இப்பத்தானய்யா மயக்கம் என்ன வந்துச்சு? கந்தசாமி பார்க்கும்போது வந்த மிகப்பெரிய சந்தேகம் அது எப்படி இந்தாளு தான் நடிச்ச அந்நியன் படத்தையே ரீமேக் பண்ண ஒத்துக்கிட்டாருன்னு. இப்போ அது போயிருச்சு. எல்லாம் ஒரே குட்டைல ஊறுன மட்டைங்க. ஆனா தான் எப்படிப்பட்ட நடிகர்னு கிளைமாக்ஸ் சீன்ல காட்டுறாரு பாருங்க.. அதுதான் தனுஷ். பள்ளிப்பருவ உடல்மொழியும் இரண்டாம் பாதியில் அதற்கு அப்படியே எதிராக மாறும் மனநோய் கொண்டவரும் என பிரித்து மேய்கிறார்.ஸ்ருதிக்கு இதுதான் முதல் படமாக வந்திருக்க வேண்டும். ஸ்கூல் யூனிஃபார்மில் அத்தனை அழகு. கெச்சலான அவரது உடம்பும் நிமிசத்துக்கு நிமிசம் மாறும் முகபாவனைகளும் அசர அடிக்கின்றன. சொல்லப்போனால் முதல் பாதியின் நாயகன் ஸ்ருதிதான். மாடியில் தனுசின் கையை இன்னும் ஒரு நிமிடம் பிடித்துக் கொள்ளட்டுமா எனும்போதும் முதலிரவில் கணவன் மடியில் அமர்ந்து உறவாடும்போதும் நெஞ்சை அள்ளுகிறார். ஆனால் இரண்டாம் பாதி முழுதும் அவரை அழ வைத்தே காலி செய்கிறார்கள். படத்தில் கவனம் ஈர்க்கும் இன்னொரு மனிதர் சிவகார்த்திகேயன். அவரை ஸ்கூல் பையன் எனச் சொல்வது காமெடியாக இருந்தாலும் தனது ஒன் லைனர்களால் வெளுத்து வாங்குகிறார். இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள் யூ நோ.

படத்தின் முன்பாக தைரியமாக “ எ அநிருத் ம்யூசிக்கல்” என்று போடலாம். பாடல்களிலும் பின்னணி இசையிலும் வெளுத்து வாங்கி இருக்கிறார் மனிதர். குறிப்பாக தீம் ம்யூசிக்கைக் கொண்டு போய் தனுசின் சண்டையில் சேர்த்த விதம் அழகு. பாடல்களைப் படமாக்கியதில் கண்ணழகாவும் இதழின் ஒரு ஓரமும் டாப். எதிர்பார்த்ததைப் போலவே கொலவெறியை படு கேவலமாகப் படமாக்கி இருக்கிறார்கள். போதாக்குறைக்கு பாட்டு பூராவும் விளம்பரங்கள் இருந்தது பெரிய எரிச்சல். ஒளிப்பதிவாளருக்கு முதல் பாதியில் நல்ல வாய்ப்பு. தன்னை வெளிக்காட்டிக் கொள்ள அதைச் சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.அருமையான காதல், நல்ல நடிகர்கள். அட்டகாசமான இசை என எல்லாம் இருந்தும் இந்தப்படத்தை நல்ல படம் எனச் சொல்ல முடியாமல் போனதற்குக் காரணம் இயக்குனர் ஐஸ்வர்யா. சமீபத்தைய எல்லாப் படங்களையும் போல இதிலும் இரண்டு கதைகள். முதல் பாதி காதல் கதை. இரண்டாம் பாதி சைக்கோ கதை. இரண்டும் ஒட்டவே இல்லை. கணவனின் மேல் அத்தனை பிரியம் கொண்ட பெண் அவனுள் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டுபிடிக்காமலா இருப்பாள்? தன் நிலை இத்தனை மோசம் என்று தெரிந்தும் ஏன் தனுஷ் மருத்துவம் செய்து கொள்ள மறுக்கிறார்? நண்பன் குடும்பம் பற்றி எல்லாம் தெரிந்தும் சுந்தர் ஏன் விட்டு வேடிக்கை பார்க்க வேண்டும்? சுத்தமாக லாஜிக் இல்லாத நிலையில் படம் பார்ப்பவரைப் பெரிதும் சோர்வடையச் செய்கிறது. என்னைக் கேட்டால் முதல் பாதியோடு கூட படத்தை முடித்து மக்களைச் சந்தோசமாக வீட்டுக்கு அனுப்பி இருக்கலாம். அதுவே மூன்று மணி நேரம் படம் பார்த்த உணர்வைத்தான் தந்தது. நன்றாக இருந்தாலும் அத்தனை நீளம். இதில் இரண்டாம் பாதி சைக்கோ என்றதில் பார்ப்பவர்கள் மண்டை காய்ந்ததுதான் மிச்சம்.

படம் முடிந்தபின்னும் எனக்குக் குழப்பமாக இருந்தது. படம் பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் முழுவதும் பிடித்ததா என்றால் அதுவும் இல்லை. அடுத்த படத்தில் திரைக்கதையைச் சரியாக அமைப்பதின் மூலம் இந்தக் குழப்பங்கள் எல்லாம் ஏற்படாமல் இருக்க ஐஸ்வர்யா அருள் புரிவாராக. ஆமேன்.

3 - குழப்பம்.

6 comments:

Anbu said...

ennai mathiri pasanka parkalama anna,,,,

ஹாலிவுட்ரசிகன் said...

மிக அருமையான விமர்சனம் நண்பரே. மனசுல பட்டதை சொல்லிட்டீங்க. சிலவேளை இரண்டாம் பாகம் எடுக்கும்போது ஸ்ருதி-தனுஷ் கசகசாவால் ஸ்க்ரிப்டை பைத்தியக் கணவனாக மாத்திட்டாரோ?

ஆர்வா said...

என்னத்தை சொல்றது... பாவம் கோடி கோடியா கொட்டிக்கொடுத்த ஸ்பான்ஸர்ஸ்...
நட்புடன்
கவிதை காதலன்

அத்திரி said...

எல்லாம் சரி யார் கூட சேர்ந்து படம் பார்த்தீங்க வாத்தி...............

சித்திரவீதிக்காரன் said...

பள்ளிக்காலத்தில் சந்திக்கும் தனுசும் ஐஸ்வர்யாவும் காதலிக்கிறார்கள். \\ இந்தப்படம் உங்களை ரொம்பக்குழப்பிவிட்டதென நினைக்கிறேன். இதுக்குத்தான் நான் கர்ணன் போய் பார்த்தேன். நல்ல கூட்டம். பகிர்விற்கு நன்றி.

Karthik Somalinga said...

>>>பள்ளிப்பருவ உடல்மொழியும்<<<
ஆனால் பள்ளி பருவ முக அமைப்பு இல்லாததுதான் அவரை கை விட்டு விடுகிறது!