March 8, 2012

உதிரிப்பூக்கள் - 8

போ மாதத்தில் ஒரு காலை நேரம். பெரியார் பேருந்து நிலையத்தில் நானும் உடன் வேலை பார்க்கும் நண்பரொருவரும் கல்லூரிப் பேருந்துக்காக காத்திருந்தோம், கூடவே சில மாணவர்களும். வெகு நேரம் ஆகியும் பேருந்து வரவில்லை. என்ன ஏதென்று புரியாமல் கல்லூரி மேலாளருக்கு போன் செய்தேன்.

“நம்ம ஃபர்ஸ்ட் இயர் பொண்ணு ஒண்ணு இறந்து போச்சு சார். அதனால காலேஜ் லீவு. முடிஞ்சா ஒரு எட்டு போயிட்டு வந்துருங்களேன். உங்க பஸ்ல வர்ற பிள்ளைதான் சார்..”

எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. நான் முதலாம் வருடத்துக்கு வகுப்புகள் எடுப்பதில்லை என்பதால் அந்தப்பெண் யார் எனத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் தினமும் பேருந்தில் என்னோடு பயணிக்கக்கூடியவள் என்பதால் கண்டிப்பாக நான் அவளைப் பார்த்திருக்க வேண்டும். நண்பரோடு கேதம் கேட்கக் கிளம்பினேன்.

அந்தப் பெண்ணினுடைய வீடு திருப்பரங்குன்றத்தில் இருந்தது. தெப்பக்குளத்துக்கு முன்பாக இருந்த சந்துக்குள் நாங்கள் நுழைந்தபோது மொத்த ஊரும் அங்கே திரண்டு இருந்தது. கல்லூரியில் இருந்து வெகு சில மாணவர்களும் வந்திருந்தனர். அனைவருடைய முகத்திலும் இருள் அப்பிக் கிடந்தது. நாங்கள் உள்ளே நுழைய வேகமாக ஊர்மக்கள் விலகி வழி ஏற்படுத்தித் தந்தார்கள்.

“வெலகுங்க வெலகுங்க.. சாருமாரெல்லாம் வந்திருக்காங்க..”

வீட்டு வாசலில் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் அந்தப் பெண்ணைக் கிடத்தி இருந்தார்கள். தூங்குவது போல சாதாரணமாக இருந்தாள். எனக்குப் பரிச்சயமான பெண்தான். அடிவயிற்றைப் பிசைந்து அழுகை வருவது போல இருக்க அடக்கிக் கொண்டேன். அந்தப் பெண்ணின் தலைமாட்டில் அவளுடைய தாய் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார். எங்களைப் பார்த்தவுடன் அவர் அழுகை இன்னும் அதிகமானது.

“அடியே நான் பெத்த தங்கமே.. உன் சாரெல்லாம் வந்திருக்காங்க.. கண்ணத் தொறந்து பாருடி ராசாத்தி.. அய்யோ..”

அவர் அழ என்னால் அங்கே நிற்க முடியவில்லை. திரும்ப முயன்றபோது வீட்டுக்குள் கடிகார அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டது.

“காலைல நான் படிக்கணும்னு அலாரம் வச்சுட்டுப் படுத்தாளே.. இப்போ அலாரம் தொடர்ச்சியா அடிக்குது. ஆனா எம்மவ எந்திரிக்க மாட்டேங்குறாளே.. அய்யோ சார்.. தயவு செஞ்சு அவள எந்திரிக்கச் சொல்லுங்க சார்.. படிக்கச் சொல்லுங்க சார்..”

நெஞ்சில் அடித்தபடி அழும் அந்த அம்மாவை நான் என்ன சொல்லி சமாதானம் செய்ய இயலும்? பல்லைக் கடித்துக் கொண்டு வெளியே வந்தேன். இத்தனை காலம் ஆகியும் நான் உசுரோட கெடக்க சின்னப் புள்ளய அவன் எடுத்திக்கிட்டானே பாவிப்பரப்ப என்று ஒரு மூதாட்டி தெரு வாசலில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார். அழுகுரல்கள் தொடர்ந்து கேட்க சூழலின் கனம் தாங்காமல் அங்கிருந்து வேகமாக விலகி வெளியே வந்தவனுக்குள் ஒரே ஒரு கேள்வி மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டே இருந்தது. ஏன் இப்படி?

வாழ்க்கையின் விடை தெரியாத பல கேள்விகளுக்குள் என்னை துரத்திக் கொண்டே இருக்குமொரு விசயம் - மரணம். உண்மையில் மரணம் என்பதுதான் என்ன? அது ஒரு வாழ்க்கைக்கான முற்றுப்புள்ளியா அல்லது மற்றொரு வாழ்வுக்கான ஆரம்பமா? மரணத்துக்குப் பின்பாக நாம் என்னவாக ஆகிறோம்? எதற்கும் என்னிடம் பதில்கள் இல்லை. ஆனால் மரணம் குறித்தான பயம் மட்டும் ரொம்பப் பெரிதாக இருக்கிறது. நானோ அல்லது எனது நினைவுகளோ இல்லாமல் போகும் சூழலை என்னால் எப்போதும் கற்பனை கூட செய்து பார்க்க முடிவதில்லை. ஒரு மனிதன் பிறக்கும்போதே நிச்சயிக்கப்படும் விசயம் அவனுடைய மரணம் என்பதாகச் சொல்லுவார்கள். இருந்தும் நாம் ஏன் மரணத்தைக் கண்டு பயப்படுகிறோம்?

மாணவியின் மரணம் பற்றிச் சொல்லும்போது இதையெல்லாம் என் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தேன். பொறுமையாகக் கேட்டவர் நிதானமாகச் சொன்னார்.

“இங்க சாவு பிரச்சினை இல்லடா தம்பி. ஆனா அந்த சாவு எப்போ எப்படி வருதுங்கிறது தான் நிறைய பேருக்கு பிரச்சினை. வாழ வேண்டிய வயசுல சாகுறது, நோயில கெடந்து செரமப்பட்டுப் போறது, வாழுறதே அடுத்தவங்களுக்கு பாரமா ஆகிடுறது.. இதெல்லாம் இருக்கக் கூடாது. ராத்திரி தூங்கப் போறேன்னு படுத்தாங்க.. காலைல போயிட்டாங்க.. அப்படின்னு சொல்ற மாதிரியான நிம்மதியான சாவு கிடைக்கக் குடுத்து வச்சிருக்கணும்டா..”

னக்கு விவரம் தெரிந்து மரணத்தை முதல் முறையாக நேரில் பார்த்தபோது பனிரெண்டு வயதிருக்கும். சுப்பிரமணியபுரம் ரயில்வே லைன் அருகே நடந்து வந்து கொண்டிருந்தேன். தூரத்தில் மக்கள் கும்பலாக நின்றிருந்தார்கள். வேகமாக அவர்களை நோக்கி நடந்து போனேன். போகும் வழியில் ஒரு மனிதக்கால் கிடந்தது. தொடையிலிருந்து அறுந்து விழுந்த கால். என்னவென்று புரியாமல் மேலே நடந்தேன். இன்னும் சற்றுத் தொலைவில் முட்டியிலிருந்து பிய்ந்து போன கை ஒன்று கிடந்தது. பயந்து போனவனாக முன்னேறிப் போய் கூட்டத்துக்குள் பார்த்தேன்.

அங்கே ஒரு பெண் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்தார். உடம்பில் மீதமிருந்த ஒரு கையும் காலும் கூட பேருக்குத் தான் ஒட்டிக் கொண்டிருந்தன. வழியில் நின்றிருந்த ரயிலின் நடுவே அவசரமாக ஏறிக் குதிக்க முற்பட்டிருக்கிறார். அந்த வேளையில் ரயில் கிளம்பிவிட இந்த அம்மா உள்ளே சிக்கிக் கொண்டிருக்கிறார். கொஞ்ச தூரம் இழுத்துக் கொண்டு போய் பகுதி பகுதியாக அற்று வீசிவிட்டு ரயில் போய் விட்டிருந்தது.

அந்தப் பெண்மணி தண்ணீர் தண்ணீர் என்று அரற்றிக் கொண்டிருந்தார். யாரும் அவர் கிட்டே போகவில்லை. கால்மணி நேரம் கழித்து போலிஸ் அங்கே வந்து சேர்ந்தபோது அந்த அம்மா இறந்து போயிருந்தார். சின்ன வயதில் நான் பார்த்த அந்த மரணத்தையும் மாறுகால் மாறுகை வாங்கப்பட்டவர் போல அவர் கிடந்த கோலத்தையும் இப்போது நினைத்தால் கூட எனக்கு பயமாக இருக்கும்.

தினமும் தொலைக்காட்சிகளில், நாளேடுகளில் எல்லாம் விபத்து கொலை தற்கொலை எனப் பல மரணங்கள் பற்றித் தெரிய வருகிறது. ஆனால் அவை எல்லாம் நமக்குள் பெரிய பாதிப்பை உண்டு பண்ணுவதில்லை. நமக்கோ அல்லது நமக்கு நெருக்கமான மனிதர்களுக்கோ எதுவும் நடக்காதவரைக்கும் அவை நமக்கு வெறும் செய்திதான். அவ்வாறு சொல்வது உண்மை என்பதாக மரணங்களை வெறும் செய்திகளாகவே அணுகிக் கொண்டிருந்த எனக்கு அது உண்டாக்கக்கூடிய வலியையும் பாதுகாப்பின்மையையும் முதல்முறையாக உணர்த்தியது நண்பன் முத்துகண்ணனின் சித்தியினுடைய மரணம்தான்.

கண்ணனுக்கு என யாரும் கிடையாது. தன் சித்தி வீட்டில் ஒட்டிக் கொண்டு தன் வாழ்வை நடத்தி வந்தான். திடீரெனக் கான்சரில் அவனது சித்தி இறந்துபோக அதற்குமேல் அந்த வீட்டில் இருக்க உறவினர்கள் அவனை அனுமதிக்க வில்லை. நடுரோட்டுக்கு வந்துவிட்டவனை ஆறுதல் சொல்லி நண்பர்கள்தான் பார்த்துக் கொண்டோம். ஒரு மரணம் ஒரே நாளில் அவனுடைய வாழ்க்கையை மொத்தமாக மாற்றிப் போட்டதைப் பார்த்தபின்புதான் எனக்கு மரணத்தின் தீவிரம் புரிந்தது. மதுரை தத்தநேரி இடுகாட்டிற்கு நான் முதன்முறையாகப் போனதும் அந்த மரணத்தின் போதுதான். அந்தப் பக்கமே போனதில்லை என்கிற பாவத்துக்கு பக்கத்து வீட்டு அக்கா ஒருவரின் மரணம், சாமியின் அப்பா மரணம் என ஒரே வருடத்தில் மூன்று முறை அங்கே போய்வரும் நிலை எனக்கு ஏற்பட்டது.

ன்னுடைய வீட்டில் எனக்குத் தெரிய நிகழ்ந்த முதல் மரணம் என் அப்பாவைப் பெற்ற தாத்தாவினுடையது. அவர் இறந்த மூன்று மாதத்துக்குள்ளாகவே அப்பா பாட்டியும் இறந்து போனார். சின்ன வயதில் இருந்தே அவர்களை எனக்குப் பிடிக்காது என்பதாலும் என் அம்மாவை அவர்கள் நிறைய படுத்தி இருக்கிறார்கள் என்பதாலும் இருவருக்குமே என்னால் நீர்மாலை எடுக்கவும் சட்டி தூக்கவும் முடியாது என அப்பாவிடம் சொல்லி விட்டேன். விசேசம் எல்லாம் முடித்துவிட்டு வந்த அப்பா என்னிடம் கோபமாகக் கத்தினார்.

“நாளைப்பின்ன உங்க அம்மாச்சி தாத்தாவுக்கு ஏதாவது நடக்கும்ல.. அப்பயும் நீ இப்படித்தான் நிக்குறியான்னு பாக்குறேன்..”

அப்படிப் பேசினார் என்பதற்காக நான் என் அப்பாவிடம் இரண்டு வருடம் பேசாமல் இருந்தேன். அவர் என்னைத் திட்டியது பெரிதாக வலிக்கவில்லை. ஆனால் என் பிரியத்துக்குரிய தாத்தாவையும் அம்மாச்சியையும் கண்டிப்பாக மரணம் ஒருநாள் பறித்துக் கொள்ளும் என்கிற அவர் வார்த்தைகளின் உண்மைதான் எனக்குப் பெரும்பாரமாக இருந்தது.

பெருந்துறையில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது தாத்தாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனது. இன்னும் ஒருநாள் தாங்கினால் அதிசயம் என்கிற நிலையில்தான் எனக்கு போன் செய்தார்கள். நான் மதுரை வந்து சேர்ந்தபோது தாத்தா ஐ சி யூவில் இருந்தார். அன்று முழுவதும் அவர் அருகிலேயே இருந்தேன். எப்படியாவது அவர் பிழைத்துக் கொள்ள மாட்டாரா என்கிற ஏக்கம் மட்டும் எனக்குள் நிரம்பிக் கிடந்தது.

பிரார்த்தனைகள் பலிக்க யாரும் எதிர்பார்க்காத வண்ணம் எனது தாத்தா பிழைத்துக் கொண்டார். இன்னும் சில நாட்களுக்கு அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று டாக்டர் சொன்னதைக் கேட்டு சந்தோசமாக வெளியே வந்தேன். மருத்துவமனை வாசலில் நின்று என் சின்ன அத்தை மாமாவிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“இப்ப இவர் பிழைக்கலைன்னு யார் அழுதா. முடிஞ்சிருந்தா தூக்கிப் போட்டுட்டு பொழப்பப் பாக்க போயிருக்கலாம். இனி மறுபடி இந்த ஆளுக்கு பீ மூத்திரம் அள்ளிப்போட்டு எல்லாக் கருமமும் நான் தான பாக்கணும்..”

என் வாழ்வில் நான் மொத்தமாக நொறுங்கிப் போன தருணம் அது. இத்தனை நாள் தங்களை வாழ வைத்த மனிதர் இல்லாமல் போனால் நல்லது என அவர்களைச் சொல்ல வைத்தது எது? மரணத்தை விடக் கொடுமையான முதுமையின் கோர முகத்தை நேருக்கு நேர் சந்தித்த அந்த வேளையில் நான் என்ன செய்வதெனப் புரியாமல் திகைத்து நின்றேன்.

அதற்கு ஆறு மாதங்களுக்குப் பின்பு தாத்தா மரணமடைந்த போது எனக்கு அழுகை வரவில்லை. மாறாக வெகு ஆசுவாசமாக இருந்தது. இந்த மனிதர்களின் நடுவே சீப்பட்டுக் கிடப்பதை விட நிம்மதியாக அவர் போய்ச் சேர்ந்து விட்டார் என்கிற பத்திர உணர்வுதான் மனதுக்குள் தோன்றியது. இப்போது இதை எழுதும் கணத்தில் என் அம்மா சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. சாவு என்பதைக் காட்டிலும் அது என்ன மாதிரியான சாவு என்பதில்தான் அடங்கி இருக்கிறது வாழ்வின் நிறைவு.

தையோ யோசித்தபடி வீட்டுக்குள் நுழைகிறேன். தனது அறைக்குள் அமர்ந்து என் அம்மாச்சி தனக்குத்தானே பேசிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய இரண்டாம் குழந்தமைக்குள் இருக்கும் அவருக்குத் தான் செய்வது எதுவும் புரிவதில்லை. நிறைய பொய் சொல்லவும் திருட்டுத் தனங்கள் செய்யவும் ஆரம்பித்து இருக்கிறார். இப்போதெல்லாம் பொறுமை இழந்து அம்மாவும் அவரை நிறையத் திட்டுகிறார்.

ஜெயமோகன் நான் கடவுளில் ஒரு வசனம் எழுதியிருப்பார். வாழ இயலாத மக்களுக்குக் கிடைக்கும் மரணமும் ஒரு வரம்தான். எந்த வலியுமின்றி பிறருக்கு எந்தத் தொந்தரவுமின்றி யார் வாயிலும் விழாமல் மரணம் சீக்கிரமாக அம்மாச்சியைத் தன்வசம் அழைத்துக் கொள்ளப் பிரார்த்தித்தபடி இருக்கிறேன்.

6 comments:

K.S.Muthubalakrishnan said...

can't tell anything. good post

Yaathoramani.blogspot.com said...

மரணம் தொடர்பான தங்கள் நினைவுகளைப்
ப்திவு செய்து போனவிதம் என்னையும்
என் சம்பத்தப்பட்ட பல மரணங்களை
நினைக்கச் செய்து போனது

rajasundararajan said...

//ராத்திரி தூங்கப் போறேன்னு படுத்தாங்க.. காலைல போயிட்டாங்க.//

இது மாதிரியான சாவு கூட, சிறுவயதில் வந்தால், நல்ல சாவு ஆகாது. இறந்த மாணவி அலார்ம் வைத்துப் படுத்தாள் என்றதில் இது மாதிரியான சாவு அது என்னும் தொனி வருகிறதே?

"பழுத்த பழமாகி உதிர வேண்டும்" இதுவே நல்ல சாவு என்பதும் நம்மிடம் இருக்கும் இன்னொரு கருத்து. பழுத்தும் கிளையில் ஒட்டிக்கொண்டு இருந்தால்...

சின்ன அத்தையின் கணக்குவரம்புச் சிக்கல் இதுதான்!

மதுரைப் பெரியார் பஸ் ஸ்டாண்டில் கொழுக்குமொழுக்கு என்று ஒருத்தி கிடைத்தாள். எங்கே போவது எப்படிப் போவது என்பதொன்றும் பழகாத ஊர் அந்நாளில் அது. அவள் சாய்ஸுக்கு விட்டுவிட்டேன். இரவு நேரம். ஒரு டவுன் பஸ்ஸில் ஏற்றி ஆற்றங் கரையில் கொண்டுவந்து இறக்கினாள். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி. இருட்டாகவும் இருந்தது. அவள் முன் நடக்க, பின்னோடு நானும். சட்டென்று ஒரு திறந்த வெளி! எங்கள் போக்குக்கு வலது பக்கமாக, பத்துப்பதினைந்து அடிக்கு ஒன்று என்பதாக, மூண்டு கனலும் மூன்று எரிக்குவியல். அந்த வெளிதாண்டி அப்பால், வலப்புறம் சற்றுத் தொலைவில் இருந்த குடிசைகள் ஒன்றில் அவள் என்னைத் தன்மேல் கவிழ்த்தாள். அந்நேரம் பார்த்து மழையும் கவிழ்ந்தது. ஓட்டைக் கூரை என் வெற்று முதுகில் மழைச் சீண்டலால் எரிச்சல் உறுத்தினாலும், "துணிந்தபின் எண்ணுவதென்பது இழுக்கு" என்றும் "கர்மண்யேவ அதிகார:" என்றும் செயல் முடித்தேன்.

மழை ஓய்ந்து தனியாளாகத் திரும்பினேன். ஏனோ தாகம் எடுத்தது. திறந்தவெளி வழியில் இடப்பக்கமாகத் திரும்பி அங்கிருந்த வெட்டியான்களிடம் தண்ணீர் கேட்டுக் குடித்தேன்.

- இங்க சாவு பிரச்சினை இல்லடா, தம்பி. ஆனா அதை எப்படி relate பண்ணிக்கிறோம்கிறதுதான் பிரச்சனை.

சித்திரவீதிக்காரன் said...

மனதை நெகிழச்செய்த பதிவு. இன்று என் விகடனில் வந்த தங்கள் பெண்கள் தினக்கட்டுரையும் மனதை நெகிழச்செய்தது.

Vijaya Kumar said...

உதிரிப்பூக்கள் - 8

Fantastic post. Keep going.

Unknown said...

மரணம் பற்றி பேசும்போது பிரபஞ்சக்குடில் பதிவர் எழுதிய வறுகடலை வாசம் என்ற பதிவும் ஞாபகம் வருகிறது .