July 7, 2009

நாடகம்

சிவா படுக்கையில் புரண்டு படுத்தான். ஏதோ சத்தம் கேட்டு தூக்கம் கலைந்து போயிருந்தது. நேரத்தைப் பார்த்தான். மணி இன்னும் ஏழு கூட ஆகவில்லை. சத்தம் இப்போது தெளிவாகக் கேட்டது. அவனுடைய அம்மாதான் பேசிக் கொண்டிருந்தார்.




"உன்னோட ஒரே எழவாப் போச்சு. ஏன் என்னோட உசிர வாங்குற? உன்னோட அலக்குடுத்தே நான் சீக்கிரம் போய் சேர்ந்துடுவேன் போல இருக்கு..".




எரிச்சலோடு எழுந்து வெளியே போனான் . ஹாலில் கிடந்த கட்டிலில் அவனுடைய பாட்டி தலை கவிழ்ந்து மெளனமாக உக்கார்ந்து இருந்தார்.




"ஏம்மா.. காலங்கார்த்தால எதுக்கு அம்மாச்சிய திட்டிக்கிட்டு இருக்கீங்க..?"




"வாடாப்பா.. எங்கடா ஆளைக் காணோமேன்னு பார்த்தேன்.. சப்போட்டுக்கு வந்துட்டியா? உனக்கு அவங்க பண்றதெல்லாம் கண்ணுக்குத் தெரியாதே.. நான் பேசுறது மட்டும் பெரிசாப் படும்.. எனக்குன்னு இந்த வீட்டுல யாரு இருக்கா? எல்லாம் நான் வாங்கி வந்த வரம்.."




"இப்ப என்ன ஆகிடுச்சுன்னு இப்படி பொலம்புரீங்க?"




"இன்னைக்கு காலைல பால்காரன் வர மாட்டேன்னு நேத்திக்கே சொல்லிட்டான்.. சரி இந்த அம்மாக்கு காலைல காப்பி போட்டு தரனுமேன்னு ராத்திரி நான் குடிக்கிற பாலை குடிக்காம பிரிட்ஜில எடுத்து வச்சிட்டேன். ஆனா இந்தம்மா பக்கத்து வீட்டு பொண்ணுக்கிட்ட நாளைக்கு எனக்கு காப்பி போட்டுத் தரியான்னு போய் கேட்டிருக்கு.. காலைல விடியறதுக்கு முன்னாடி அவ கதவைத் தட்டிக்கிட்டு நிக்கிறா.. காப்பியோட.. அப்படின்னா நான் என்ன இந்தம்மாவ பட்டினி போட்டுக் கொல்லுறேனா? இவங்களுக்கு நான் எதுல குறை வச்சேன்? ஏன் ஒண்ணுமே செய்யாத மாதிரி நடந்து நம்ம மானத்த வாங்கணும்?"




சிவா திரும்பி பாட்டியை பார்த்தான். அவர் பாவமாக உக்கார்ந்து இருந்தார். அம்மா இன்னும் பேசிக் கொண்டே இருந்தார். இப்போதைக்கு இது முடியாது எனத் தோன்றியது. அவனுடைய வீட்டில் இது தினமும் நடப்பது. பழகி விட்டிருந்தது. துண்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான்.




சிவா. நண்பர்களுக்கு செல்லமாக சிவகுருநாதன். இளைஞன். இன்னும் திருமணமாக வில்லை. மதுரையில் ஒரு கம்பனியில் சேல்ஸ் ரெப்பாக இருப்பவன். வீட்டில் இருப்பது நான்கு பேர் மட்டுமே. அவனுடைய அப்பா, அம்மா, அம்மாச்சி..கூடவே அவனும். சற்றே வசதி குறைந்த குடும்பம். வாடகை வீடு. அப்பாவுக்கு ஊர் ஊராகப் போய் படம் வரையும் வேலை. அம்மாவின் திறமையால் தான் வீட்டில் பிரச்சினை இல்லாமல் வண்டி ஓடிக் கொண்டிருந்தது.





அம்மாச்சி..அவரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் சிவாவுக்கு கண்கள் கலங்கி விடும். அம்மாச்சிக்கு பிறந்தது மொத்தம் நாலு பிள்ளைகள். மூன்று பெண்களும் ஒரு பையனும். அவனுடைய அம்மா தான் மூத்தவர். சித்திகள் இருவரும் இப்போது உயிரோடு இல்லை. தாத்தா மாமா வீட்டில் இருந்தார் . சிவாவின் அம்மாச்சி ரொம்ப வைராக்கியம் மிக்கவர். பதினைந்து வருங்களுக்கு முன்பு அவனுடைய தாத்தா ஏதோ அவரைத் தப்பாக பேசிவிட, அன்று முதல் அவரோடு பேசுவதையே நிறுத்திக் கொண்டார். மாமாவால் இரண்டு பேரையும் ஒன்றாக வைத்து பார்க்க முடியாத காரணத்தால் நான்கு வருடத்துக்கு முன்னாடி அம்மாச்சி சிவா வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.





அம்மாச்சி வீட்டுக்கு வந்த புதிதில் ஏதும் பிரச்சினைகள் இருக்கவில்லை. ஆனால் போகப்போக சிவாவின் அம்மாவுக்கு அவருடைய சுதந்திரம் பறிக்கப் பட்டதை போலத் தோன்றியது. நினைத்த இடங்களுக்கு போக முடியவில்லை. எங்கே போனாலும் அம்மாச்சிக்கு வேண்டியதை செய்து விட்டுத்தான் செல்ல வேண்டி வந்தது. அதற்குத் தகுந்தாற்போல அம்மாச்சியின் குணங்களிலும் நிறைய மாற்றங்கள்.





முதுமையின் ரேகைகள் அவரின் மீது படியத் தொடங்கி இருந்தது. யாரையும் நம்ப மறுத்தார். சொன்னதையே பத்து தடவை சொல்வது, சொன்னால் அந்தக் காரியம் உடனே நடக்க வேண்டும் என்பது என்று அடம் பிடிக்கத் தொடங்கினார். கண்முன்னே அவர் குழந்தையாக மாறுவதை சிவாவால் உணர முடிந்தது. ஆனால் அதை சிவாவின் அம்மாவால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. பாட்டியின் நிலை பற்றி சிவா எடுத்துச் சொன்னால் அதை ஏற்க மறுத்தார். மாறாக தனக்கும் தன் பிள்ளைக்கும் இடையே பிரச்சினை வரக் காரணமாக இருப்பதாக அம்மாச்சியின்மீது வெறுப்பு கொள்ளத் தொடங்கினார்.




ஒரு ஞாயிற்றுக்கிழமை. சிவாவின் அம்மா மார்கெட்டுக்கு போயிருந்த சமயம். சிவா வீட்டில் உக்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். அம்மாச்சி மெதுவாக நடந்து வந்து அவன் அருகே அமர்ந்தார்.




"என்ன அம்மாச்சி.. என்ன வேணும்?"




"நான் சொல்றத உங்கம்மா கிட்ட சொல்லிடாதையா.. வர வர அவ பேசுற பேச்சு தாங்க முடியல.. பெத்த தாயை நாயே பேயனு எல்லாம் பேசுறா.. என்னால அவ நிம்மதியே போச்சுன்னு கேவலமாத் திட்டுறா.. ஒரு சில வார்த்தைகள் எல்லாம் உன்கிட்ட சொல்லக் கூட முடியாது.. நான் இப்போ எல்லாம் கடவுள் கிட்ட என்ன வேண்டிக்கிறேன்னு தெரியுமா? கூடிய சீக்கிரம் நான் செத்துப் போய்டனும்னு தான்.. எனக்கு இருக்குற ஒரே சொந்தம் நீதான்.. என்னைய நல்ல படியா தூக்கி போட்டுரு.." சொல்லி முடித்து அவனை பார்த்து கையெடுத்து கும்பிட சிவா ஆடிப் போனான். அன்றில் இருந்து அம்மாச்சியை பார்த்துக் கொள்ளும் வேலையை வீட்டில் இருக்கும் போது முழுதுமாக அவனே செய்ய ஆரம்பித்தான். நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன.




அன்றைய பொழுது நல்லதாகத்தான் விடிந்தது. ரொம்ப நாளாக தீர்க்கப் படாமல் இருந்த செட்டில்மென்ட் ஒன்று சரியாகி சிவாவின் கைக்கு பணம் வந்து இருந்தது. நண்பர்களோடு சிரித்துப் பேசியவாறே தேநீர் குடித்துக் கொண்டிருந்த போது போன் வந்தது. அவனுடைய மாமா.




"தம்பி.. உடனே கிளம்பி வா.. அம்மாச்சி தவறிட்டாங்க.."




திக்கென்றிருந்தது. அடித்து பிடித்து வீட்டுக்கு வந்தான். கட்டிலில் அம்மாச்சியின் உடம்பை கிடத்தி இருந்தார்கள். மாலை போட்டு தலை மாட்டில் ஊதுவத்தி ஏத்தி வைத்து இருந்தார்கள். கால்மாட்டில் சிவாவின் அம்மா அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.




"டேய்.. சிவா.. பாருடா.. உங்க அம்மாச்சி நம்மள எல்லாம் விட்டுப் போய்ட்டாங்கடா.. அம்மா.. பாரும்மா.. உன் பேரன் வந்திருக்கான்.. கண்ணத் தொறந்து பாரும்மா.. வார்த்தைக்கு வார்த்த விஜயா, விஜயான்னு கூபிடுவியே.. இனிமே யாரும்மா என்ன அப்படி கூப்பிடுவா...நீ இல்லாம நான் எப்படிம்மா இருப்பேன்.. ஐயோ.."




அவன் ஏதும் பேசாமல் பாட்டியின் காலடியில் போய் உட்கார்ந்தான். கண்கள் கண்ணீரால் நிரம்பி இருந்தன. அவன் அழுதது எதற்காக என்பதை அவனுக்கு மட்டுமே தெரியும்.



(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

22 comments:

பீர் | Peer said...

படிச்சுட்டு வரேன்.
(ஒரு ரெண்டு மணி நேரம் ஆகுமா?)

குடந்தை அன்புமணி said...

//அவன் அழுதது எதற்காக என்பதை அவனுக்கு மட்டுமே தெரியும்.//

இப்ப எங்களுக்கும் தெரியும். நிறைய வீட்டில் நடப்பதுதான் கார்த்தி. அருமையா எழுதியிருக்கீங்க.

குடந்தை அன்புமணி said...

கார்த்தி... ஒரு தொழில் நுட்பம்...
கதையில் ஒரு பாரா முடிந்ததும் எண்டர் தட்டியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு பாராவிற்கும் அடுத்த பாராவிற்கும் அதிகமா இடைவெளி விழுகிறது. இதற்கு எளிய வழி... ஒரு பாரா முடிந்து அடுத்த பாராவின் முதல் வரிக்கு முன் < br என்று போட்டு > என்று போடவும். நன்றாக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

Raju said...

வர வர உண்மைத்தமிழன் ரேஞ்சுக்கு போயிட்டீங்க...!
இதக் கேட்க யாருமே இல்லையா..?
நைனா... நான் கத்துறது கேக்குதா...?

சொல்லரசன் said...

//டக்ளஸ்....... said...
வர வர உண்மைத்தமிழன் ரேஞ்சுக்கு போயிட்டீங்க...!
இதக் கேட்க யாருமே இல்லையா..?
நைனா... நான் கத்துறது கேக்குதா...?//


நாலுவரியை நாற்பதுவரி மாதிரி காட்டியிருக்காரு இதை போய் உ.தமிழன் ரேஞ்சுக்கு ஒப்பிடவேண்டாம்,அப்புறம் அவருடைய தொண்டர்படை தளபதி நையான்டி கோவிச்சிக்கபோகிறார்

அகநாழிகை said...

கார்த்தி,
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.


(அம்மாச்சி நலமாகி விட்டார்களா?)

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

ச.பிரேம்குமார் said...

நல்ல முயற்சி. வாழ்த்துகள் பாண்டியன்

நையாண்டி நைனா said...

Good Narration.

பீர் | Peer said...

உண்மையில் இது நாடக உலகம் தான், கார்த்திக்.

ப்ரியமுடன் வசந்த் said...

போலி வாழ்க்கையை எதார்த்தமாக சொல்லிட்டீங்க கார்த்திகேய பாண்டியன்

அருமை.....

RAMYA said...

கார்த்திக் ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க. அசத்தறீங்க அசத்துங்க.

வால்பையன் said...

ரொம்போஓஓஓஓஓஓஓஒ பெருசு!

ஆ.ஞானசேகரன் said...

நன்றாக இருக்கு நண்பா. தொடருங்கள்

மேவி... said...

கார்த்திகை ......

உண்மையில் இந்த உலகம் ஒரு நாடக மேடை... அதில் சிலர் தாம் ஏற்று இருக்கும் வேஷத்தை சரி வர செய்வார்கள் .... சிலர் குழம்பி போய் விடுவார்கள். தெளிவை நோக்கி தான் இந்த வாழ்க்கை பயணம் ; ஆனால் அந்த தேள்வை அடையாமல் இறந்து விடுவார்கள்.

பிரிவு என்பது இறப்பில் இல்லை ; ஒருவனின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் போகும் போது தான் உண்மையான பிரிவு .....

கதை அருமை ......

வெறுமையான உணர்வுகள் கொண்ட வாழ்க்கையை அழகாக பதிவு செய்துள்ளிர்கள்.

நன்று

Prabhu said...

வர வர உண்மைத்தமிழன் ரேஞ்சுக்கு போயிட்டீங்க...!
இதக் கேட்க யாருமே இல்லையா..?
நைனா... நான் கத்துறது கேக்குதா...?///

ஏன் இல்ல? நான் இருக்குறேன்.....

ஆனா, இவரு இன்னும் உ.த. ரேஞ்சுக்கு போகலப்பா!
அவரோட ஒரு பக்க கதை சைசுக்கு கூட இது இல்ல!

நையாண்டி நைனா said...

இங்கு சில சிறுவர்கள் எங்கள் "தல"யை சீண்டுகிறார்கள் அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை.

எங்க "தல"ய அடிச்சுக்க இன்னும் யாரும் பொறக்கலை என்பதை மார்தட்டி சொல்லி கொள்கிறேன்.

இப்படிக்கு.
நையாண்டி நைனா.

Unknown said...

வந்துட்டார் தொண்டர்படை தளபதி,டக்கு,பப்புவும் எச்சரிக்கையாக இருப்பது நலம்

"உழவன்" "Uzhavan" said...

நல்ல கதை என்று சொல்வதைவிட நல்ல கருத்து என்றே சொல்லலாம். அருமை கார்த்தி.

தீப்பெட்டி said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க கார்த்தி..

சிறப்பான பதிவு..

ஹேமா said...

பாண்டியன்,நீங்கள் நினைத்ததை வெளியிட்ட விதம் அருமை.வாழ்வு நாடகமாக இருந்தாலும் அந்தப் பாத்திரத்தை சரிவரச் செய்வதிலேயே வாழ்வின் - நாடகத்தின் வெற்றி.

Unknown said...

நெகிழ்ச்சியான கதை கார்த்தி..

எனக்கும் இதுபோன்று நேரில் பார்த்த அனுபவம் உண்டு..

ரவி said...

கம்போஸ் விண்டோவில் இருந்து டைப் செய்யாமல் எடிட் விண்டோவில் இருந்தே டைப் செய்தால் தேவையற்ற இடைவெளி விழாது......