August 6, 2009

ஒரு கிழிஞ்ச சட்டையும் அய்யனாரின் நினைவுகளும்..!!!

ரொம்ப நாளைக்கு அப்புறமா போன வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்னைக்கு வீட்டுல இருந்தேன்.
"ஏம்ப்பா.. வீட்டை சுத்தம் பண்ணி நிறைய நாளாச்சு.. இன்னைக்கு பண்ணலாமுன்னு இருக்கேன்.. எல்லாத்தையும் ஒதுங்க வைக்கணும்.. கொஞ்சம் ஒத்தாசை பண்றியா?" - அம்மா.
தாறுமாறா கொடியில் கிடந்த துணிகளை எல்லாம் எடுத்து பீரோவில் அடுக்கி வச்சேன். அடுத்ததா கட்டிலின் கீழே இருந்த சாமான்களை ஒவ்வொண்ணா ஒதுக்க ஆரம்பிச்சபோதுதான் அது என் கண்ணுல தட்டுப்பட்டுச்சு. என்னோட பொக்கிஷப் பேழை. சின்ன வயசுல இருந்து நான் விலை மதிக்க முடியாததா நினைக்குற சமாச்சாரம் எல்லாம் ஒரு பெட்டில பத்திரமா வச்சு இருக்கேன். எப்பவாச்சும் தோணுனா தொறந்து பார்த்து சந்தோஷப் பட்டுக்குறது.
அன்னைக்கு தோணுச்சு. பொட்டியத் தொறந்தேன். பசங்க அனுப்புன கிரீட்டிங் கார்டு, பிள்ளைங்க கைல கட்டி விட்ட ராக்கி, காலேஜ்ல இருந்தப்போ அம்மாவுக்கு எழுதின லெட்டர், எனக்கு வந்த லெட்டர்ஸ், கிப்ட்ங்க.. எல்லாத்தையும் பார்த்துக்கிட்டே வந்தப்போ ஓரமா ஒரு கிழிஞ்ச சட்டையும். எனக்கு அதைப் பார்த்தவுடனே அய்யனாரோட ஞாபகம் வந்திருச்சு. ஆசையா அந்த சட்டையத் தடவிக் கொடுத்தேன். எத்தனை இனிமையான நாட்கள் அதெல்லாம்?
***************
நான் அப்போ அஞ்சாங்கிளாஸ் படிச்சிக்கிட்டு இருந்தேன். வீடு ஜீவா நகர்ல இருந்துச்சு. எங்க எதுத்த வீட்டுக்கு புதுசா ஒரு குடும்பம் குடி வந்தாங்க. ஒரு அம்மா, ரெண்டு பொண்ணுங்க. அவங்க வந்த அன்னைக்கே அம்மா அவங்க வீட்டுக்கு போய் பேசிக்கிட்டு இருந்தாங்க. நானும் கூடப் போய் இருந்தேன். ரெண்டு பிள்ளைங்களும் சொட்டாங்கல் ஆடிகிட்டு இருந்துச்சுக. நான் ஓரமா நின்னு பார்த்துக்கிட்டு இருந்தப்போ பெரியவதான் மொதல்ல பேசினா.

"நீயும் விளையாட வரியா..?"
நானும் அவங்களோட சேர்ந்துக்கிட்டேன்.

"உன் பேர் என்ன.."

"கார்த்தி. செவன்த் டே ஸ்கூல்ல பிப்த் ஸ்டாண்டர்ட். நீ?"

"அய்யனார்.. முருகன் ஸ்கூல்ல நாலாங்கிளாஸ்.. இது என் தங்கச்சி. ரங்கா.. ரெண்டாப்பு படிக்கிறா.."
இதுதான் அய்யனாரோடான என்னோட முதல் அறிமுகம். கொஞ்ச நாள்லேயே அவ எனக்கு நெருங்கின சிநேகிதம் ஆகிட்டா. எப்படா ஸ்கூல் முடியும், அவளைப் போய் பார்த்து விளையாடலாம்னு மனசு கெடந்து அடிச்சுக்கும். பசங்க எல்லாம் கிண்டல் பண்ணுவாய்ங்க.."டேய், பையங்க கூடயும் கொஞ்சம் விளையாடுடான்னு.." நான் கண்டுக்கவே மாட்டேன். நான் இருக்கிற இடத்துல அவ இருப்பா.. அதே மாதிரி நானும்னு சொல்ற அளவுக்கு ரொம்ப க்ளோஸ் ஆகிட்டோம்.
***************
ஒரு நாள் எங்க வீட்டுல உக்கார்ந்து நான், என் தங்கச்சி, ரங்கா, அய்யனார் எல்லாம் உக்கார்ந்து டிவி பார்த்துக்கிட்டு இருந்தோம். விக்ரம்னு கமல் நடிச்ச படம். ஏதோ ஒரு பாட்டு ஓடிக்கிட்டு இருந்துச்சு. அய்யனார் ரொம்ப ரசிச்சு பார்த்து கை தட்டிக்கிட்டு இருந்தா.

"கமல் சூப்பரா டான்ஸ் ஆடுறார் இல்ல? ச்சே..எனக்கு அவரை ரொம்ப பிடிச்சிருக்குடா"
எனக்கு கோபம் கோபமா வந்தது. "ஏன்.. அவர் மட்டும்தான் ஆடுவாரா.. எங்களால முடியாதா? நான் அவரை விட சூப்பரா ஆடுவேன் தெரியுமா?"

"நெஜமாவா..?"

அவ கண்ல இருந்த ஆச்சரியத்தைப் பார்த்தவுடனே எனக்கு சந்தோஷம் தாங்கல. "இப்போ ஆடிக் காட்டுறேன் பாரு.."
ரெண்டு தடவை அப்படியும் இப்படியும் தவ்வினேன். ரெண்டே ஸ்டெப்பு தான். கால் தட்டி கீழே விழுந்துட்டேன். சுத்தி இருந்தவங்க எல்லாம் சிரிச்சுட்டாங்க. எனக்கு அவமானமாப் போச்சு.

"ப்ராக்டிஸ் இல்லைல.. அதான் சரியா வரல.. இப்போ பாரு.. எப்படி ஆடுறேன்னு.."

மறுபடியும் எந்திரிச்சு ஆடப் பார்த்தேன். அதே கதைதான். கீழே விழுந்துட்டேன். என் கண்ணுல தண்ணீர் முட்டிக்கிட்டு வருது. ரங்காவும் என் தங்கச்சியும் விழுந்து விழுந்து சிரிக்கிறாளுங்க. என்னால கண்ணீர அடக்கவே முடியல. அய்யனார் ஓடி வந்து என்னைத் தூக்கி விட்டா.
"சிரிப்ப நிப்பாட்டுங்க.." அவளோட ஒரு கத்துல மத்ததுங்க அமைதி ஆகிடுச்சு.
அய்யனார் என்கிட்டே குனிஞ்சு சொன்னா.."உனக்கு டான்ஸ் ஆடத் தெரியலனாலும் உன்னைத் தாண்டா எனக்கு ரொம்பப் பிடிக்கும்.." என் காலு தரையிலேயே இல்ல. வானத்துல பறக்குற மாதிரி இருந்தது.
***************
"நாளைக்கு கம்மாய்க்கு வெளையாடப் போகலாமா?"

அவ கேட்டு என்னைக்கு நான் இல்லைன்னு சொல்லி இருக்கேன். மறுநா நாங்க வெளயாண்டு முடிச்சப்ப இருட்டிருச்சு.

"கார்த்தி.. நான் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே.."

"என்னப்பா.. சொல்லு.."

"எனக்கு ரொம்ப நாளா பசங்கள மாதிரி சட்ட போட்டுக்கணும்னு ஆசை.. அம்மாக்கிட்ட கேட்டா திட்டும்.. உன்னோட சட்டையத் தரியா.. ஒரே ஒரு தரம்.. போட்டுப் பார்த்துட்டு தந்துடுறேன்..?"
சந்தோஷமாக் கழட்டி கொடுத்தேன். மரத்துக்குப் பின்னாடி மறவாப் போய் போட்டுக்கிட்டு வந்தா.

"நல்லா இருக்கா.. உண்மையாச் சொல்லணும்.."
"நெஜமாவே நல்லா இருக்கு.. அய்யனாரு.. உனக்குப் பிடிச்சு இருந்தா இந்த சட்டைய நீயே வச்சுக்கியேன்.."

"ஆத்தாடி.. அம்மா தோல உரிச்சுடும்.. இரு கழட்டி தாரேன்.."

அவ கழட்டுனப்போ பக்கத்து மரத்துல இருந்த கிளையில சிக்கி சட்ட லேசா கிழிஞ்சு போச்சு. பயந்துட்டா. நான் அம்மாக்கிட்ட சொல்லி சமாளிச்சுக்கிறேன்னு தெய்ரியம் பண்ணி கூட்டி வந்தேன். அன்னில இருந்து அந்த சட்டை என்னோட பிரியமான ஒண்ணா மாறிப் போச்சு. அதை எடுத்து பத்திரமா வச்சுட்டேன்.
***************
அன்னைக்கு காலைல இருந்து அய்யனார வெளியவேக் காணோம். அவளைத் தேடிக்கிட்டு அவ வீட்டுக்கு போனேன். வீட்டுல ஒரே பொம்பளைங்க கூட்டமா இருந்துச்சு. அவங்க அம்மா வாசல்ல நின்னுக்கிட்டு இருந்தாங்க. என்னைய வீட்டுக்குள்ள விடாம வெரட்டி விட்டுட்டாங்க. நான் அம்மாக்கிட்ட கேட்டப்போ அய்யனார் பெரிய மனுஷி ஆகிட்டதால இனிமே பசங்க கூடவெல்லாம் சேர மாட்டான்னு சொல்லிட்டாங்க.
இத்தன நாள் கூடவே இருந்த பிரெண்டு திடீர்னு உன் கூட பேசவே மாட்டான்னா அத என்னால ஒத்துக்கவே முடியல. அவ வீட்டையே சுத்தி சுத்தி வந்தேன். ஒரு நாள் ஜன்னல் வழியா யாரோ என்னக் கூப்பிடுற மாதிரி இருந்துச்சு. பாத்தா அய்யனார்.
"நல்லா இருக்கியாடா.. எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலடா.. அம்மா யார்கூடவும் பேசக் கூடாதுன்னு சொல்றாங்க.. என்னால முடியல.." அழுறா.
எனக்கும் அழுகையா வந்துச்சு."நீ இல்லாம எனக்கும் பொழுதே போகல தெரியுமா.. நான் என் உன் கூட பேசக் கூடாது? பையனா பொறந்தது என் தப்பா?"
"எனக்கும் அதுதாண்டா தெரியல.." கொஞ்சம் நேரம் ரெண்டு பேருமே அமைதியா இருந்தோம். அப்புறமா அவ கேட்டா.."டேய்.. என்னைய எப்பவும் மறந்துட மாட்டியே?"

"என்ன இப்படி கேட்டுட்டே.. நாம எப்பவுமே பிரண்ட்சா இருப்போம்.. நீ பயப்புடாத.." இதுதான் நான் அவக்கிட்ட கடைசியாப் பேசினது. ரெண்டு மாசம் கழிச்சு அவங்க அம்மா கூட வீட்ட காலி பண்ணிக்கிட்டு போய்ட்டாங்க. நான் ஸ்கூலுக்கு போய் இருந்ததால கடைசியா அவ மூஞ்சைக் கூடப் பார்க்க முடியல.
***************
"என்னப்பா ஒரே யோசனை.." அம்மாவோட குரல் என்னை மறுபடியும் நிகழ் காலத்துக்கு கூட்டி வந்துச்சு.
"ஒண்ணுமில்லம்மா.."சட்டையப் பழையபடி பொட்டியில பத்திரமா வச்சு மூடினேன்.
அய்யனாருக்கு இந்நேரம் கல்யாணம் ஆகி இருக்கும். ரெண்டு குழந்தை கூட இருக்கலாம். அவள மறுபடி பார்க்க முடிஞ்சா ஒண்ணே ஒண்ணு மட்டும் கேக்கணும்.
"இப்பவும் உன்னோட வீட்டுக்காரோட சட்டைய வாங்கி போட்டுக்குரியா?"
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

43 comments:

Raju said...

ம்ம்.....!
மொதல்ல அய்யனரை பையன்னு நெனைச்சுட்டேன்.

மணிஜி said...

/ம்ம்.....!
மொதல்ல அய்யனரை பையன்னு நெனைச்சுட்டேன்//

நான் யூகித்தேன்..நல்ல பகிர்வு

கும்மாச்சி said...

கார்த்திகைப்பாண்டியன் நடை அருமை. கலக்குங்க.

லோகு said...

நல்லதொரு 'ஆட்டோகிராப்..'.

jaffer-erode said...

touching post, jaffer erode

குடிகாரன் said...

ஆட்டோகிராஃப் பார்ட் 2 நல்லாயிருக்கு

நையாண்டி நைனா said...

அடப்போப்பா... அய்யனாருன்னு பேரை பார்த்த வொடனே நான் என் சின்ன மூளைய காப்பாத்திக்க வேற வேலை பார்க்க போயிட்டேன்... அப்புறம் உயிர் கொடுப்பான் தோழன் அப்படின்னு நெனச்சு கண்ணை மூடிகிட்டு இங்கே வந்து பார்த்தா....!!!!

Rajaraman said...

தென்றல் வருடுவது போன்ற மலரும் நினைவுகள். அதை நல்ல நடையில் எழுதியுள்ளீர்கள்.

குடந்தை அன்புமணி said...

மலரும் நினைவுகள்...
ம்... நடக்கட்டும் நடக்கட்டும்...

பாலகுமார் said...

//தாறுமாறா கொடியில் கிடந்த துணிகளை எல்லாம் எடுத்து பீரோவில் அடுக்கி வச்சேன்...//

கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டீங்க போல ! :)

//"உனக்கு டான்ஸ் ஆடத் தெரியலனாலும் உன்னைத் தாண்டா எனக்கு ரொம்பப் பிடிக்கும்.."//

தம்தன தம்தன தாளம் வரும் .................

புல்லட் said...

அருமையான மென்மையான காதல் ததும்பும் நடை...

நர்சிம் said...

அடுத்த கட்டம்.வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

எனக்கும் என் மதுரை ஞாபகம் மண்டைகுள்ள ஓடுது!

நாஞ்சில் நாதம் said...

மலரும் நினைவுகள்

நல்லாயிருக்கு

Karthik said...

செம கதைங்ணா!! :)

தேவன் மாயம் said...

பழைய நினைவுகளை சொல்லி இருப்பது மனதை என்னவோ செய்கிறது..

அகநாழிகை said...

கார்த்தி,
அய்யனார் என்றதும் கவிஞர்களையே நினைவூட்டியது. அருமையான மீள்நினைவு. பால்யத்தின் நினைவுகள் என்றுமே பசுமரத்தாணி போல பதிந்திருக்கும். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

அத்திரி said...

நண்பா அருமை

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நடை நல்லாருக்கு கார்த்தி.

பீர் | Peer said...

கார்த்திக் இதைத்தான் உங்கட்டருந்து எதிர்பார்க்கிறோம்...

அருமை கார்த்திக்.. வாழ்த்துக்கள்.

ஹேமா said...

கார்த்தி,மனசு குழைஞ்சு ஒரு பெரு மூச்சுத்தான் வந்திச்சு.சில நிகழ்வுகள் மனசுக்குள் நிரந்தரம்.

Unknown said...

ம்ம்.. சரிங்க..

அ.மு.செய்யது said...

பழைய நினைவுகள்....மூழ்கினேன் பதிவில்..

இந்த மாதிரி நிறைய அய்யனார்கள் எல்லோர் வாழ்விலும் உண்டு கார்த்தி.

ஞாபகம் வருதே (2)

ரசித்தேன்.

ஆ.ஞானசேகரன் said...

//"இப்பவும் உன்னோட வீட்டுக்காரோட சட்டைய வாங்கி போட்டுக்குரியா?"//

நண்பா ஒவ்வொரு எழுத்தும் பேசியது.. வாழ்த்துகல்

இராம்/Raam said...

கதை நல்லாயிருந்துச்சுண்ணே.. :)

Joe said...

அட்டகாசம்!
நெகிழ வைத்த இடுகை.

ஆ.சுதா said...

இன்றைக்குள் எப்படியும் படித்துவிடுவேன் அப்புறம் என் கருத்து!!!

ச.பிரேம்குமார் said...

பால்யத்தின் நினைவுகள் அழகாய் இருந்தன பாண்டியன். கடைசி வரி மிகவும் அழகு.

Anonymous said...

உண்மை நிகழ்வு காட்சியை மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்தேன்...கள்ளம் அறியா வயதின் ஏக்கம் ஆதங்கம்...ஆம் நினைவுகள் என்றுமே பசுமையானவை...

ப்ரியமுடன் வசந்த் said...

பசுமையான மலரும் நினைவுகள் கார்த்திகேயபாண்டியன்

ஈரோடு கதிர் said...

கார்த்தி...

அய்யனார் பெண் பெயரா... ஆச்சரியமாக இருக்கிறது

மென்மையான உணர்வுகளைப் பகிர்ந்துள்ளீர்கள்

இனிமையான நடை... ரசித்தேன்

தருமி said...

கார்த்திகை,
பொத்தி வச்சிருந்தது ரொம்ப நல்லா இருக்கு .....

"உழவன்" "Uzhavan" said...

சகோதரனின் சட்டையைப் போட்டுக்கொள்ளும் சகோதரிகளின் பாசத்தைவிட, நண்பனின் சட்டையைப் போடக்கேட்ட தோழியின் நட்பு ஒரு படி உயர்ந்ததாகவே தென்படுகிறது.
நண்பா.. அய்யனாருங்குறது அவங்க உண்மையான பெயரா?? இல்லையெனில் ஏன் இந்தப் பெயரை தெரிவுசெய்தீர்கள் எனத் தெரியவில்லை.
அருமையான நினைவுகளை வெளிப்படுத்திய கதை. வாழ்த்துக்கள்

சொல்லரசன் said...

மலரும் நினைவுகள் அருமை,ஒரு சிறுகதை போல் இருந்தது உங்க பகிர்வு.

ஆ.சுதா said...

கதை நல்லா வந்திருக்கு பாண்டியன்.

துபாய் ராஜா said...

நல்லதொரு நண்பர்கள் வாரப்பதிவு.

சிறுவயது சிநேகிதங்கள் பல இப்படித்தான் சிதறிப்போகின்றன.

cheena (சீனா) said...

அன்பின் கார்த்தி

அருமையான கொசுவத்தி -- இடுகை இடும்போது எவ்வளவு மனமகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள் - அது தான் மலரும் நினைவுகளின் செயல்திறன்.

புள்ளைக கட்டின ராக்கீஸ் - ம்ம் அய்யனார் நல்ல வேளை ராக்கி கட்டலயே

நல்ல நடை - எளிமையா இருக்கு

நல்வாழ்த்துகள்

மேவி... said...

PRESENT SIR

சுந்தர் said...

இங்கேயும் கிழிசலா ?

Anonymous said...

அருமையாக எழுதியிருக்கீங்க

Prabhu said...

கடந்த கால நினைவுகள் எப்பொழுதுமே பசுமரத்தாணி...
அதற்கு இந்த நிகழ்வு ஒரு நல்ல உதாரணம்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

அய்யனார், ரங்கா - பெண் பெயர்களா!!!

எழுதப்பட்ட விதம் மிகவும் அருமை.

Unknown said...

அருமையா எழுதி இருக்கிங்க.

இடுகை மொத்தத்தையும் “தட்டான் தட்டான் தண்ணிக்குள்ள, தவள ரெண்டும் கூட்டுக்குள்ள ச்சூ ச்சூ மாரி”ன்னு பின்னணி இசையோடே படிச்சேன் :-)