December 31, 2008

நானும், ரயிலில் வந்த பெண்ணும், நாசமாய்ப்போன ஜாதியும்...!!!

நான் கோயம்பத்தூரில் கல்லூரியில் படித்து கொண்டிருந்த காலம். அப்பா ரயில்வேயை சேர்ந்தவர் என்பதால் ஓசி பாஸ் உண்டு. சனி மற்றும் ஞாயிறு கல்லூரி விடுமுறை என்பதால் ரயிலை பிடித்து மதுரைக்கு வந்து விடுவேன். வெள்ளிக்கிழமை மதிய நேர வகுப்புக்களை நான் அட்டென்ட் செய்ததே கிடையாது. (என்னமோ மற்ற நாளெல்லாம் ரொம்ப ஒழுங்கு மாதிரி...). அப்போது இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் என்று ஒரு ட்ரைன் இருந்தது. மாலை நாலு மணிக்கு கோவையிலிருந்து கிளம்பி இரவு ஒன்பது மணிக்கெல்லாம் மதுரைக்கு வந்து விடும். அந்த வண்டி தான் நம்முடைய ஆபத்பாந்தவன். காலேஜ் கட்டடித்து விட்டு ரயிலில் ஏறி வீட்டுக்கு ஓடி வந்துவிடுவேன்.

அன்றும் அதேபோல் கோவையில் இருந்து கிளம்பும் ரயிலில் உட்கார்ந்து இருந்தேன். ட்ரைன் கிளம்பும் வேலையில் ஒரு குடும்பம் ஓடி வந்து ஏறியது. நான் இருந்த கம்பார்த்மன்டில் கூட்டம் அவ்வளவாக இல்லை. நான் ஒருவன் மட்டுமே இருந்த கூபேவில் அவர்களும் வந்து அமர்ந்து கொண்டார்கள். அம்மா, அப்பா மற்றும் மூன்று பெண் பிள்ளைகள். அப்பாவும் அம்மாவும் கொஞ்சம் கரடு முரடாக இருந்தார்கள். மூத்த பெண்ணுக்கு என் வயதுதான் இருக்கும். நல்ல உயரமாக, அழகாக இருந்தாள். இரண்டாவது பெண் கருப்பு என்றாலும் பார்க்க லட்சணமாக இருந்தாள். மூன்றாவது பெண் சற்றே சைனீஸ்காரி போல் இருந்தாள். ஓடி வந்த அவசரத்தில் எதையோ மூத்த பெண் மறந்து விட்டது போல. அவள் அம்மா அவளை திட்டி கொண்டு இருந்தாள். நான் எதையும் கவனிக்காதது போல புத்தகம் படித்து கொண்டு இருந்தேன்.

சற்று நேரத்தில் அவர்கள் நன்றாக செட்டில் ஆகி விட்டனர். பொறுமையாக கொண்டு வந்த தின்பண்டங்களை எடுத்து சாப்பிட தொடங்கினார்கள். அவர் என்னிடம் மெதுவாக பேச்சு கொடுத்தார்.

இரண்டு முறுக்கை என்னிடம் கொடுத்து " சாப்பிடுங்க தம்பி".. என்றார்.

"இல்லைங்க.. பரவாயில்ல" என்றேன்.

"அட சும்மா சாப்பிடுங்க தம்பி" என்று கொடுத்தார். வாங்கி கொண்டேன்.

"தம்பி என்ன பண்றீங்க..."

நான் கல்லூரியின் பெயரை சொல்லி " நாலாவது வருஷம் இன்ஜினீரிங் படிச்சுட்டு இருக்கேன்" என்று சொன்னேன்.

"ரொம்ப சந்தோசம். என் பேரு குருமூர்த்தி. சொந்தமா தொழில் பண்ணிக்கிட்டு இருக்கேன். உங்க காலேஜ்ல இருந்து கொஞ்ச தூரத்துல தான் நம்ம வீடு. தம்பிய எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு யோசிச்சேன். அதான் உங்ககிட்டே பேசினேன்" என்றார்.

நான் "அப்படீங்களா.. " என்று பொத்தாம்பொதுவாக சொல்லி வைத்தேன்.

கொஞ்ச நேரத்திலேயே அவர்கள் எல்லோரும் என்னிடம் நன்றாக பேசத் தொடங்கி விட்டார்கள். அந்த ஆன்ட்டி (அப்படித்தான் கூப்பிட வேண்டுமாம்...) ஒரு கவர்மென்ட் ஸ்கூல் டீச்செர். மூத்த பெண் கல்லூரி இறுதி வருடம். இரண்டாவது பெண் கல்லூரி முதல் வருடம். கடைசி பெண் +1. என்னை பற்றி எல்லாம் கேட்டு கொண்டார்கள். சொந்த ஊர், குடும்பம், படிப்பு முடிந்தவுடன் வேலை கிடைக்குமா என எல்லாமே கேட்டு கொண்டார்கள். எனக்கும் அவர்களோடு ஒரு பிணைப்பு ஏற்பட்டு விட்டது. பரவாயில்லையே, முதல் சந்திப்பிலேயே இவ்வளவு நன்றாக பழகுகிரார்களே என சந்தோசப்பட்டேன்.

எல்லோரும் ஒன்றாய் சீட்டு விளையாண்டு கொண்டு இருந்தோம். அப்போது அந்த ஆன்ட்டி சொன்னார்கள்.. "மூத்தவளுக்கு பையன் பார்த்துகிட்டு இருக்கோம்பா..... மூணு பொண்ணுங்களா வேற போச்சு...சீக்கிரமா கட்டி கொடுக்கணும்ல". நானும் சரி சரி என்று தலையை ஆட்டி வைத்தேன்.

"எங்க.. ஒன்னும் சரியா அமைய மாட்டேங்குது. நல்ல பையனா இருக்கனும்னுதான் ரொம்ப கஷ்டப்படுறேன்..இவ ரொம்ப உயரமா வேற இருக்காளா.. அதுவே பெரிய பிரச்சினையா இருக்கு ." என்றார்கள்.

திடீர் என்று "தம்பி.. நீங்க கொஞ்சம் எந்திரிச்சு நில்லுங்களேன்.." என்றார்.

எனக்கு சங்கடமாக போய் விட்டது. "எதுக்கு ஆன்ட்டி.." என்றேன்.

"பரவா இல்லப்பா.. இங்க கொஞ்சம் நில்லேன்.." என்றவுடன் நான் எழுந்து நின்றேன்.

"அம்மாடி.. நீயும் இங்க வந்து கொஞ்சம் தம்பி பக்கத்துல நில்லேன்".

மூத்த பெண் சற்றே சிணுங்கிக்கொண்டே என்னருகில் வந்து நின்றாள். "ஏங்க, உயரம் சரியா இருக்குல்ல.. "என்று அங்கிள்கிட்ட சொன்னார்கள். அவரும் ஆமாம் என்று சொன்னார்.

எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவர்கள் இருவரும் தங்களுக்குள் ரொம்ப மும்முரமாக பேசிக்கொள்ள தொடங்கி விட்டனர். ஆகா இது என்னடா வம்பா போச்சு. விட்டா நம்ம கல்யாணம் ட்ரைன்ல தான் நிச்சயம் ஆகும் போலயே என எண்ண தொடங்கி விட்டேன்.

அந்த பக்கம் பார்த்தால் மூத்த பெண் கொஞ்சம் வெட்கத்தோடு என்னை பார்த்து சிரிக்கிறது. "ஆள் வேற நல்லா தான் இருக்கா.. பண்ணிக்கிட்டா என்ன.. " உள்ளே இருந்து சாத்தான் சங்கு ஊத ஆரம்பித்தான். "அப்பா அம்மா கேட்டா.?.. அதெல்லாம் பார்த்துக்கலாம்.." எனக்கு நானே சொல்லி கொண்டேன்.

சற்று நேரம் கழித்து ஆன்ட்டி என்னிடம் நெருங்கி வந்து உட்கார்ந்து கொண்டார்கள். மெதுவாக என்னிடம் கேட்டார்கள்.."தம்பி.. நீங்க என்ன ஆளுங்க..?".

எனக்கு புரியவில்லை. குழம்பியவனாக "என்னங்க..?" என்றேன்.

"இல்ல தம்பி.. நீங்க என்ன ஜாதின்னு கேட்டேன்...".

எனக்குள் எதோ ஒன்று வெறுமையானதை போல் இருந்தது. பொங்கி வந்த நீரூற்று சட்டென்று அடங்கி போனதை போன்ற உணர்வு. மெதுவாக என் ஜாதியை சொன்னேன். அதைக் கேட்டவுடன் அவர்களின் முகம் இறுகிப்போனது. ஒரு நீண்ட பெருமூச்சுடன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள். சற்று நேரத்திற்கு யாரும் எதுவும் பேசவில்லை.

கொஞ்ச நேரத்திற்கு பிறகு ட்ரைன் ஒரு ஸ்டேஷனில் நின்றது. பிளாஸ்க்கில் இருந்த காப்பியை எடுத்து எல்லோருக்கும் ஊற்றி கொடுக்க தொடங்கினார் ஆன்ட்டி. ஒரு கப்பில் ஊற்றி மூத்த பெண்ணிடம் கொடுத்தார். அடுத்து அவர் சொன்ன வார்த்தைகளை கேட்டு எனக்கு காதில் ரத்தம் வராத குறைதான்.

"அண்ணனுக்கு காப்பி கொடும்மா.."

"அடப்பாவிகளா... ஒரு ஜாதி பிரச்சினையால.. அதுக்குள்ளே நான் அண்ணன் ஆகிட்டேனா.. என்ன கொடுமை இது..." மனதுக்குள் புலம்பி கொண்டேன். அதன் பிறகு அவர்கள் என்னிடம் சரியாக பேசவில்லை. அந்த பெண் என்னை பாவமாய் பார்த்து கொண்டு இருந்தது. எனக்குள் ஓங்கி கத்தினேன்..."ஜாதிகள் நாசமாய் போகட்டும்"!!!!!

December 29, 2008

சினிமா அவார்ட்ஸ் 2008!!!!


கிட்டத்தட்ட நூற்று இருபது படங்கள். அதில் பத்து படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. தமிழ் சினிமாவிற்கு 2008 நல்லதொரு ஆண்டாக அமையவில்லை. எனினும் கதையம்சம் கொண்ட படங்களின் வெற்றி நமக்கு நம்பிக்கை தரும் வகையில் உள்ளது.

டாப் டென் படங்கள்:

1.சுப்ரமணியபுரம்
2.பூ
3.அஞ்சாதே
4.தசாவதாரம்
5.சந்தோஷ் சுப்ரமணியன்
6.சரோஜா
7.அபியும் நானும்
8.யாரடி நீ மோகினி
9.பொம்மலாட்டம்
10.அறை எண் 305ல் கடவுள்

டாப் டென் பாடல்கள்:

1.நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை (வாரணம் ஆயிரம்)
2.கண்கள் இரண்டால் (சுப்ரமணியபுரம்)
3.டாக்ஸி டாக்ஸி (சக்கரக்கட்டி)
4.முதல் மழை(பீமா)
5.அன்பே என் அன்பே (தாம் தூம்)
6.கல்லை மட்டும் கண்டால் (தசாவதாரம்)
7.வெண்மேகம் பெண்ணாக (யாரடி நீ மோகினி)
8.கண்ணதாசன் காரைக்குடி (அஞ்சாதே)
9.தோழியா என் காதலியா (காதலில் விழுந்தேன்)
10.ச்சூ ச்சூ மாரி (பூ)

சிறந்த நடிகர்: சூர்யா (வாரணம் ஆயிரம்)

சிறந்த நடிகர்: கமல்ஹாசன் (தசாவதாரம்)
(சிறப்பு விருது)

சிறந்த நடிகை:பார்வதி (பூ)

சிறந்த நடிகை:சுவாதி (சுப்ரமணியபுரம்)
(சிறப்பு விருது)

சிறந்த நகைச்சுவை நடிகர்: பிரேம்ஜி அமரன் (சரோஜா)

சிறந்த வில்லன் நடிகர்:பிரசன்னா (அஞ்சாதே)

சிறந்த இயக்குனர்:சசிகுமார் (சுப்ரமணியபுரம்)

சிறந்த இயக்குனர்: சசி (பூ)
(சிறப்பு விருது)

சிறந்த இசைஅமைப்பாளர்:ஹாரிஸ் ஜெயராஜ் (வாரணம் ஆயிரம்)

சிறந்த இசைஅமைப்பாளர்:ஜேம்ஸ் வசந்தன் (சுப்ரமணியபுரம்)
(சிறப்பு விருது)

சிறந்த பாடல் ஆசிரியர்:தாமரை (வாரணம் ஆயிரம்)

சிறந்த பாடகர்: பெல்லி ராஜ் (கண்கள் இரண்டால் - சுப்ரமணியபுரம்)

சிறந்த பாடகி:பாம்பே ஜெயஸ்ரீ (வலியே என் உயிர் வலியே - தாம் தூம்)

சிறந்த வசனகர்த்தா:சிம்புதேவன் (அறை எண் 305ல் கடவுள்)

சிறந்த ஒளிப்பதிவாளர்:மகேஷ் முத்துசுவாமி (அஞ்சாதே)

சிறந்த கலை இயக்குனர்:ராம்போன் (சுப்ரமணியபுரம்)

சிறந்த நடன இயக்குனர்:ஸ்ரீதர் (நாக்க முக்க - காதலில் விழுந்தேன்)

சிறந்த சண்டைபயிற்சி இயக்குனர்:ஆன்டி டிக்ஸ்ன் (தசாவதாரம்)

சிறந்த படத்தொகுப்பாளர்:அஷ்மிட் குந்தேர் (தசாவதாரம்)

வருடத்தின் இறுதியில் வெளிவந்துள்ள சில படங்களின் வெற்றி நமக்கு ஆறுதல் தரும் வகையில் உள்ளது. அடுத்த வருடம் தமிழ் சினிமாவில் மேலும் நல்ல படங்கள் வரவேண்டும் என வேண்டிக்கொள்வோம்!!!

December 25, 2008

அவனும் அவளும்....(2)!!!!!



நேரம் காலை பத்து மணி. அவள் அலுவலகத்தில் மும்முரமாக வேலை பார்த்துக்கொண்டு இருந்த போது அவனிடமிருந்து போன் வந்தது.


"ஹலோ.. சொல்லுப்பா..."


"என்னடிம்மா, வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு.. உடம்புக்கு எதுவும் முடியலியா?"


"இல்லப்பா... ஒன்னும் இல்ல.. இங்க ஆபீஸ்ல ஒரு சின்ன பிரச்சினை.. அவ்ளோதான்.. நீ சொல்லு.. "


"ஏம்மா... என்ன ஆச்சு?"


"உனக்கு தான் தெரியும்ல.. நமக்கும் மானேஜருக்கும் நல்ல நாள்லயே ஆகாது... இன்னைக்கு இன்னொரு ஆள் பண்ண தப்புக்கு நான் மாட்டிக்கிட்டேன்.. அத விடு.. நீ எதுக்கு கால் பண்ணின.. அத சொல்லு..."


"ஒண்ணும் இல்லமா... பழைய தோஸ்த் ஒருத்தன் ஊருக்கு வந்து இருக்கான்...சாயங்காலமா அவன மீட் பண்ணலாம்னு ஒரு பிளான். மத்த பசங்ககிட்டையும் சொல்லி இருக்கேன். அப்படியே ஒரு படத்துக்கும் போயிட்டு வரலாமேனு ஐடியா...அது தான் மேடம்கிட்டே சொல்லிட்டு..."


"சரி.. சரி.. ரொம்ப இழுக்காத.. போயிட்டு வாப்பா.."


"நீங்க ஜாயின் பண்ண முடியாதா..."


"இல்லப்பா..சாரி.. வேல ஜாஸ்தி.. அதோட மானேஜர் பிரச்சினை வேற இருக்கு... நீ போயிட்டு வா..."


"ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே..."


"லூசே..நான் தான் போயிட்டு வான்னு சொல்றேன்ல..ஒண்ணும் பிரச்சினை இல்ல.. ஹவ் எ நைஸ் டைம் பா..."


"ஓகேமா... டேக் கேர்... "


நேரம் நாலு மணி. அவன் நண்பர்களோடு இருந்த பொது அவளது அலுவலகத்தில் இருந்து போன் வந்தது.


"ஹலோ.. நான் ஆபீஸ் கிளார்க் பேசுறேன்.. சார் இருக்காங்களா?"

"நான் தான் பேசுறேன்.. சொல்லுங்க..."


"சார், இங்க மேடம்க்கு ஒரு சின்ன அக்சிடென்ட்..."


"என்னப்பா ஆச்சு..: அவன் பதறிப்போனான்.


"பயப்படுறமாதிரி ஒண்ணும் இல்ல சார்.. வண்டில இருந்து கீழ விழுந்துட்டாங்க.. கைல மட்டும் சின்ன காயம்..மருந்து போட்டாச்சு..."


"இப்போ அவங்க எங்கே இருக்காங்க.."


"பக்கத்திலேதான் இருக்காங்க. பேசுங்க சார்..." போனை அவள் வாங்கி கொண்டாள்.


"சொல்லுப்பா..பிரெண்ட பார்த்துட்டயா?"


"இப்போ அது தான் முக்கியமா.. என்னமா ஆச்சு.. கொஞ்சம் பத்திரமா இருக்க வேண்டாமா.. அடி ஏதும் படலியே?"


"இரு.. இரு.. இரு.. நீ டென்சன் ஆகுற அளவுக்கு ஒண்ணும் சீரியஸா எல்லாம் அடி படலப்பா.. லைட்டாதான்.. நான் போன் பண்ண வேண்டாம்னு தான் சொன்னேன்,.. ஆபீஸ்ல தான் கேக்காம போன் பண்ணிட்டாங்க.."


"நீ அங்கேயே இரு..நான் கிளம்பி வரேன்.."


"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்..நீங்க போய் படத்த பார்த்திட்டு வாங்க.. வண்டிய இங்கயே விட்டுட்டு நான் ஆட்டோ பிடிச்சி வீட்டுக்கு போறேன்.. நீ பிரெண்ட்ஸ் கூட கொஞ்ச நேரம் என்ஜாய் பண்ணிட்டு வா.."


"இல்லமா..நான் சொல்றத கொஞ்சம் கேளு.."

"முடியாது..நான் சொல்றத நீ கேளு.. ஓடு.. ஓடு..நான் கிளம்பி வீட்டுக்கு போறேன்..சீ யு..பாய்.. "போனை வைத்து விட்டாள்.


அவள் வீட்டுக்கு வந்து இறங்கியபோது கதவு திறந்து இருந்தது. வெளியே அவனுடைய பைக் நின்றது. உள்ளே போனால் அவன் இருந்தான்.


"எங்க அடிபட்டுச்சிமா.. சொல்லு.. மருந்து போடலாம்.."அவன் அவளை நெருங்கி வந்தான்.


"படத்துக்கு போகலையா..?"


"இல்ல..தியேட்டர் வாசல் வரைக்கும் போனேன்.. மனசு சரில்ல..அதனால டிக்கெட் வாங்கி பசங்கள உள்ள அனுப்பிட்டு நான் வந்துட்டேன்.."


"நான் தான் ஒண்ணும் இல்லன்னு சொன்னேன்ல.. ரொம்ப நாள் கழிச்சு வந்த பிரென்ட்னு சொன்ன.. கூட போய்ருக்கலாம்ல..நான் சொல்றத கேக்கவே கூடாதுன்னு முடிவே ஏதும் பண்ணிருக்கியா?"


"அப்படி எல்லாம் இல்லடிமா.."


"பின்ன..பாவம்ல உன் பிரெண்ட்ஸ் எல்லாம்..என்னதான் திட்டி இருப்பாங்க.."


"அதெல்லாம் இல்லடி.. அவங்களுக்கு தெரியும்.. சொல்லிட்டுதான் வந்தேன்.. காலைல இருந்து ஆபீஸ்ல பிரச்சினை..இப்போ இந்த அக்சிடென்ட் வேறே..நீ இங்க எப்படி இருப்பனு எனக்கு தெரியும்டிமா... இதுல போய் என்னால நிம்மதியா படம் பார்த்துகிட்டு உக்கார்ந்து இருக்க முடியாது.. அதுதான் கிளம்பி வந்துட்டேன்.."


"என்ன சொன்னாலும் ஒரு பதில் வச்சுருப்பியே.. உன்ன திருத்தவே முடியாது.."


"பரவாயில்லடிமா.. நீ என்ன எவ்ளோ திட்டினாலும்... நமக்கு ஒண்ணுனு சொன்னவுடனே இந்த பய துடிச்சி போய் ஓடிவந்துட்டான் பார்த்தியான்னு உள்ளுக்குள்ள சந்தோஷந்தான்படுவன்னு எனக்கு தெரியும்டி.." அவன் சிரித்துக்கொண்டே சொன்னான்.


"பரதேசி..நாயே..பன்னி..என்னோட வீக்பாயிண்ட் தெரிஞ்சுக்கிட்டு, என் உயிரை வாங்குறதுக்கே வந்திருக்கடா.."செல்லமாக அவன் தோள்களில் குத்தியவாறே மார்பில் சாய்ந்து கொண்டாள்.


அவன் சந்தோஷமாக அவளை அணைத்துக்கொண்டு பாட ஆரம்பித்தான்."உனக்கென நான்.. எனக்கென நீ.."!!!!!!

December 23, 2008

சிறந்த மொக்கை படங்கள் 2008....!!!!


2008 ஐ பொறுத்த வரை தமிழ் சினிமாவிற்கு போதாத காலம் என்று தான் சொல்ல வேண்டும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் ஊத்தி கொண்டன. அப்படி இப்படி என்றெல்லாம் பேசப்பட்டு கடைசியில் ரசிகர்களின் தலையில் மசாலா அரைத்த, தயாரிப்பாளரின் தலையிலும் துண்டை போட்ட டாப் டென் படங்களை இங்கே தொகுத்திருக்கிறேன்.

1. குருவி

சென்ற ஆண்டின் மிகச்சிறந்த காமெடி படம். தரணி, விஜய், திரிஷா, என நம்பி போன எல்லோருக்கும் ஆப்பு. சூப்பர்மேன் கூட செய்ய யோசிக்கும் சாகசங்களை கூசாமல் செய்திருந்தார் விஜய். எல்லாத்தையும் விட பெரிய காமெடி, இந்த படத்திற்கான வெற்றி விழாவை கொண்டாடியது, அதோடு இல்லாமல் அதை டிவியில் வேறு ஒளிபரப்பினார்கள். அழகிய தமிழ்மகனை தொடர்ந்து விஜயின் ரெண்டாவது தோல்வி படம். வில்லு படத்தின் மூலம் ஹாட்ரிக் அடிக்க வாழ்த்துக்கள்.

2. குசேலன்

2008இன் மிகப்பெரும் ஏமாற்றம். ரஜினியின் பெயரை ரிப்பேராக்கியதே இந்த படத்தின் சாதனை. பரமசிவன், தொட்டால் பூ மலரும் போன்ற அதி அற்புத படங்களை எடுத்த பிறகும் வாசுவை பற்றி தெரிந்து கொள்ளாமல் அவரிடம் இந்த படத்தை கொடுத்தது ரஜினியின் மாபெரும் தவறு. ரஜினி கவுரவ வேடத்தில் தான் வருகிறார் என்றாவது அடக்கி வாசித்து இருக்கலாம். படத்தின் வியாபாரத்திற்காக ரஜினியை பெயரை ஓவராக பயன்படுத்தியது தப்பாகி போனது. கர்நாடக பிரச்சினை, மன்னிப்பு என எல்லா விதத்திலும் ரஜினியை பாடாய் படுத்தி விட்டு படம் டப்பாவிற்குள் படுத்து கொண்டது.

3. காளை

தியேட்டருக்குள் வந்தவர்களை எல்லாம் வருவியா வருவியா என்று சிம்பு துரத்தி துரத்தி முட்டிய படம். டப்பா கதைக்கு ஏகப்பட்ட பில்ட் அப் வேற. குட்டி பிசாசே பாடல் மட்டும் பிரபலம் ஆனது. திமிர் படத்தை நம்பி போனால் தருண் கோபி ரசிகர்களை செமையாக மண்டை காய வைத்தார். யார் திருந்தினாலும் சிம்பு திருந்த போவதில்லை என்பதை இந்த படம் மீண்டும் நிரூபித்தது.

4. சத்யம்

விஷாலின் டெரர் படம். போலீஸ், சிக்ஸ் பேக், ஆச்சா ஊச்சா என பில்ட் அப் கொடுத்து செமையாக வாங்கி கட்டிக்கொண்ட படம். நயன்தாராவை இதற்க்கு மேல் கேவலமாக யாராலும் காட்டி இருக்க முடியாது. நான் பொறுக்கி இல்ல, போலீஸ் என விஷால் சீரியசாக வசனம் பேச மக்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். உபேந்திரா ஒருவர் மட்டுமே இந்த படத்தால் தமிழுக்கு கிடைத்த உருப்படியான விஷயம்.

5. இந்திரலோகத்தில் நா. அழகப்பன்

வடிவேலு தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொண்ட படம். கடைசி வரை இது காமெடி படமா இல்லை சீரியஸ் படமா என்றே புரியவில்லை. இந்த படத்தில் நடிப்பதற்காக இருபத்து இரண்டு படங்களை வேண்டாம் என்றாராம் வடிவேலு. ஐயோ பாவம்.. இந்த டுபுக்கு படத்துக்காக எவ்வளவு தியாகம் பண்ணி இருக்காரு.. ரொம்ப நல்லவரு சார் நீங்க..

6. அரசாங்கம்

புரட்சி கலைஞரின் 150ஆவது படம். இந்தியாவையும் தாண்டி கனடா வரை போய் கேப்டன் அங்கேயும் தீவிரவாதிகளை பந்தாடும் வழக்கமான கதை. ரெண்டு கதாநாயகிகள் வேற. அரசியல் பேசாமல் நடித்தும் படம் ஓடவில்லை.

7. சக்கரக்கட்டி

சாந்தனு அறிமுகமான படம். கலைப்புலி தாணுவின் மகன் பிரபு இயக்குனர். A.R. ரகுமானின் துள்ளல் இசை. எல்லாம் இருந்தும் கதை என்னும் விஷயம் இல்லாததால் படம் பப்படமாகி போனது.

8. ஏகன்

பில்லாவின் வெற்றிக்கு பின் அஜித் நடித்த படம். முதல் முறையாக தல காமெடி செய்ய முயற்சி செய்து இருந்தார். ராஜு சுந்தரத்தின் தெளிவில்லாத திரைக்கதை, மொக்க காமெடி என எல்லாம் சேர்ந்து படத்தை காலி செய்து விட்டன.

9. பீமா

இரண்டு வருடங்களுக்கு பிறகு வெளியான விக்ரம் படம். இயக்கம் லிங்குசாமி. இசை ஹாரிஸ் ஜெயராஜ். வித்தியாசமான கிளைமாக்ஸ். இருந்தும் படம் படுத்து கொண்டது. காரணம் - கதை. எத்தனை நாள் தான் ஒரே ரவுடி கதையை மாற்றி மாற்றி எடுப்பார்களோ. இந்த படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் ஏ. எம். ரத்தினம் என்ன ஆனார் என்றே தெரியவில்லை.

10. வாரணம் ஆயிரம்

சூர்யா போன்ற ஒரு அற்புதமான நடிகரை எந்த அளவு வீணடிக்க முடியுமோ அந்தளவுக்கு வீணடித்த படம். பாடல்களின் தயவால் படம் A சென்டர்களில் தப்பித்து கொண்டது. செந்தில் அருணாச்சலம் படத்தில் சொன்னது போல முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே எடுக்கப்பட்ட தமிழ் படம்.

அடுத்த வருடத்தில் இருந்தாவது நடிகர்களை நம்பாமல் கதையை நம்பி படம் எடுக்கும் வழக்கம் வந்தால் மட்டுமே, நமக்கு நல்ல திரைப்படங்கள் கிடைக்கும்!!!

December 22, 2008

நாட்டு நடப்பு!!!!

பணியின் நிமித்தமாக வெளியூர் சென்று விட்ட காரணத்தினால் சில நாட்களாக எழுத இயலாமல் போய் விட்டது. கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கோவையிலும் ஒரு வாரம் மதுரையிலுமாக பொழுது போனது. பல புதிய நண்பர்களோடு பழக வாய்ப்பு கிடைத்தது. கோவை நகரம் பெரிதாக ஏதும் மாறவில்லை. ஈஷா யோகா மையம் வரை சென்று வரும் வாய்ப்பு கிடைத்தது. நான் பொதுவாக கடவுளை அதிகமாக நம்புவதில்லை என்னும் போதும் மனதிற்கு நிம்மதி தரும் இடமாக ஈஷா இருக்கிறது. பாதரசத்தால் செய்யப்பட்ட லிங்கத்தை நீரின் உள்ளே பிரதிஷ்டை செய்து இருக்கிறார்கள். அந்த தண்ணீர் நம்மேல் படும் போதே நம்மால் வித்தியாசத்தை உணர முடிகிறது.மழையின் காரணமாக கோவையில் அதிகமாக வெளியே சுற்ற இயலவில்லை. மற்றபடி மதுரையில் நண்பர்களை சந்திக்கவே நேரம் சரியாக இருந்தது. இதோ, மீண்டும் பணிக்கு திரும்பி வந்தாயிற்று.
**********************************************************************

மும்பையில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதல் சமீபத்தில் நம் நாட்டில் நடைபெற்ற மிக மோசமான நிகழ்வாகும். முதல் முறையாக கடல் வழியே உள்ளே வந்துள்ளனர். நம் நாட்டின் பாதுகாப்பையே பெரும் கேள்விக்குறி ஆக்கியுள்ளது இந்த தாக்குதல். அமைச்சர்களை மாற்றுவதால் மட்டும் இந்த பிரச்சினை தீர்ந்து விட போவதில்லை. தீவிரவாதத்திற்கு எதிரான ஒரு போரை நாம் மேற்கொள்ள வேண்டும். கடுமையான சட்டங்கள் மூலமாக மட்டுமே இது சாத்தியமாகும். மக்களை காக்க தங்கள் உயிரை இழந்தவர்கள், தாக்குதலின்போது தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது போராடிய வீரர்கள் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்கள். ஒற்றுமையாக இருந்து நம் மக்கள் அனைவரும் தேசத்திற்கான அபிமானத்தை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது. எந்த மதமானுலும் மக்களை நேசிக்க சொல்கிறதே தவிர கொள்ள சொல்வதில்லை. இனிமேல் இது போன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க எல்லா மத கடவுள்களும் அருள் புரிவதாக...
*********************************************************************
போன மாதத்தில் நண்பர் ஒருவருக்கு சென்னை சென்று வரும் வாய்ப்பு கிடைத்தது. ஏண்டா போனோம் என்ற நிலையில் தான் மனிதர் திரும்பி வந்தார். மழைக்காலத்தில் சென்னை சென்று வருவதை விட நாம் நேராக நரகத்திற்கே சென்று வரலாம் என புலம்பி தள்ளி விட்டார். நண்பர் தங்கி இருந்த வேளச்சேரி பகுதி தனித்தீவாகவே மாறி போனதாம். கிட்டத்தட்ட படகு சவாரி மூலமாகதான் மக்களால் நடமாட முடிந்து இருக்கிறது. அதோடு கொஞ்சம் பாம்புகளும் வீட்டுக்குள் வந்து சென்றதால் மனிதர் அரண்டு போய் விட்டார். சிங்கார சென்னை மழையின் போது சிரிப்பாய் சிரித்து விடுவதை யாராலும் மாற்ற முடியாது போலும். ஒவ்வொரு முறையும் நிவாரணம் கொடுக்க வருவதை விட இதற்கான நிரந்தர தீர்வினை நம் அரசாங்கம் யோசித்தால் தேவலாம். மின்சாரமும் இல்லாமல் மக்கள் பாடு பெரும்பாடாய் போவதை எந்த புண்ணியவான் வந்து மாற்றுவாரோ..
**********************************************************************
வெகு நாட்களாய் தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த ஒரு மெகா தொடர் முடிவுக்கு வந்தது. கண்கள் பனிக்க, இதயம் இனிக்க... அடடா என்ன ஒரு காட்சி.. பல திருப்பங்களுக்கும் மோதல்களுக்கும் பிறகு வந்த இந்த இனிய முடிவு நேயர்களாகிய தமிழக மக்களுக்கு இன்ப அதிர்ச்சி. யார் சந்தோஷபட்டிருப்பார்களோ இல்லையோ, நம் தமிழக முதல்வருக்கு இந்த இணைப்பு மிக்க சந்தோசத்தை தந்திருக்கும். ஒரே உறையில் இரண்டு வாள்கள்? சன் டிவி vs கலைஞர் டிவி? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...
**********************************************************************
விலைவாசி உயர்வு, தீவிரவாதம் என் அனைத்தையும் மீறி, காங்கிரஸ் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று உள்ளது. இது வரப்போகும் பாராளுமன்ற தேர்தல்களில் எதிரொலிக்குமா என் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்...

சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த ஒரு எஸ்.எம்.எஸ். இது..

விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுட்டு வெற்றி பெற்ற வீரருக்கு பத்து கோடி பரிசு.. நாட்டை காக்க துப்பாக்கி ஏந்தி தன் உயிரை விட்ட இராணுவ வீரரின் குடும்பத்துக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு.. ஜெய் ஹிந்த்... வாழ்க இந்தியா...!!!!