Showing posts with label பதிவுலகம். Show all posts
Showing posts with label பதிவுலகம். Show all posts

December 31, 2011

நேசம் - புற்றுநோய் விழிப்புணர்வு அமைப்பு

வணக்கம் நண்பர்களே

பொன்வேண்டேன்,
பொருள் வேண்டேன்
மண் வேண்டேன்
மனை வேண்டேன்
நோயற்ற வாழ்வே நான் வாழ வேண்டும்
என்பதே அனைவரின் பிராத்தனையாக இருக்கும்


அரிது அரிது மானிடராய் பிறப்பதரிது, அதனிலும் கூன் குருடும் உடல் குறைபாடுகளும் இல்லாமல் பிறத்தல், அதையும் விட இன்று வாழ்நாள் முழுதும் எந்த வித உடல் பிணிகளும் இன்றி நல்நெடும்வாழ்வு வாழ்வதைவிட பெரிய செல்வம் ஏதும் இல்லை. எண்ணற்ற நோய்கள் வாழ்க்கை முறைகளினால் வந்தாலும் பெரும்பாலும் அவைகள் லைஃப்ஸ்டைல் எனப்படும் வாழ்வுமுறை நோய்களே.

இவ்வகை நோய்களின் ஏன் எதற்கு எப்படி என்றே அறியும் முன் உடலை அரித்து விடும் நோய்களில் ஒன்று கேன்சர் எனப்படும் புற்றுநோய். இன்று உலகம் எங்கும் இதனால் உயிர் விடுவோர் எண்ணிக்கை மற்ற அனைத்தையும் விட அதிகம். புற்றுநோய் வரக்காரணம் எவ்வளவோ இருக்கலாம், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், ஆனால் வந்த பின் அதனுடைய பாதிப்பின் அளவையும் நோயின் தீவிரத்தைப்பொறுத்தும் நிறைய சிகிச்சை முறைகள் உள்ளது.

எல்லா நோயைப்போலவும் இதனையும் நாம் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் நூறு சதவீத குணப்படுத்தலாம். எப்படி கண்டறிவது என்பதே விழிப்புணர்வு.

இந்த புது வருடத்தில் சில நண்பர்கள் இணைந்து உருவாக்கிய அமைப்பு நேசம், முழுக்க முழுக்க புற்றுநோய் குறித்த விழிப்புணர்வும் அதுகுறித்த நிகழ்வுகளுமாக இணையத்தில் உங்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கிறோம்.


நேசம் - அமைப்பில் இருந்து முதல் விழிப்புணர்வு அறிவிப்பு ஜனவரி முதல் அன்று வெளிவரும். புற்றுநோயை கண்டறிந்து களைவோம், போராடி வெல்வோம்






நல்லதொரு முயற்சிக்கு ஆதரவாக நாமும் கைகொடுப்போம் நண்பர்களே.. இந்தப்பதிவை வாசிக்கும் மக்கள் ரீஷேர் செய்து உதவுங்க சாமிகளே...

December 15, 2011

ஈரோடு பதிவர் சங்கமம் - 18.12.2011

பதிவுல தோழர்களே அனைவருக்கும் வணக்கம்..

கடந்த வருடம் ஈரோட்டில் பதிவர்கள் சந்திப்பு அற்புதமாக நடைபெற்றது. அதில் நிறைய பதிவர்கள் பங்கேற்று ஒரு சிறப்பான சந்திப்பு உருவாக்கி கொடுத்தீர்கள்..

இந்த வருடம் ஈரோடு வலைப்பதிவு குழுமம் சார்பாக மீண்டும் ஓர் அற்புத சந்திப்பிற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. நட்புக்கள் எல்லாம் ஈரோடு வாங்க வாங்க...


பதிவர் சந்திப்பு வருகிற 18.12.2011 ஞாயிறு அன்று ஈரோட்டில் நடைபெற உள்ளது.

இடம் : ரோட்டரி சி.டி ஹால், பழையபாளையம், ஈரோடு.


பதிவர்களே இந்த அற்புமான சந்திப்பிற்கு வாங்க சங்கமிக்கலாம்...


மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்....

தாமோதர் சந்துரு 93641-12303
ஆரூரன் - 98947-17185
கதிர் - 98653-90054
கார்த்திக் - 97881-33555
பாலாசி - 90037-05598
வால்பையன் - 99945-00540
ஜாபர் - 98658-39393
ராஜாஜெய்சிங் - 95785-88925
சங்கவி - 9843060707

August 3, 2011

மூன்று முடிச்சு - தொடர்பதிவு

இந்தத் தொடர் பதிவை எழுதும்படி கேட்டுக்கொண்ட நண்பன் கோபிக்கு நன்றி.

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?

நண்பர்கள், புத்தகம், சினிமா

2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?

என் அப்பாவின் ஒன் சைடு பாசம், பஸ்ஸில் பிரயாணம் செய்வது, நம்முடைய நண்பர்களை வேறொருவர் உரிமை கொண்டாடுவது

3) பயப்படும் மூன்று விஷயங்கள்?

பாம்பு, உயரம், பணம்

4) உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்?

பெண்கள், ரஜினி, கடவுள்

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

பேனா, எஸ்ராவும் நானும் இருக்கும் போட்டோ, அவ்வப்போது படிக்கும் புத்தகம்

6) உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் அல்லது மனிதர்கள்?

குழந்தைகள், எப்போதும் கவுண்டர், என் நண்பன் முத்துக்கண்ணன்

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?

கல்லூரியில் நமது நண்பர் முரளிக்கண்ணனைக் கொண்டு ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் முயற்சி, இலக்கியம் சார்ந்து ஒரு வேலை, எப்பொழுதும் போல மாலை நேரங்களில் ஊர் சுற்றுவது

8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

ஆதரவற்ற மக்களுக்கென ஒரு இல்லம் அமைப்பது, சொந்தமாக ஒரு லான்சர் கார் வாங்குவது, முடிந்த மட்டும் வெளிநாடுகள் சுற்றி வருவது

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயஙகள்?

டாக்டர் பட்டம் பெற்று நல்லதொரு கல்லூரியில் உயர்பதவியில் அமர்வது, சீக்கிரமே என் அம்மாவுக்காக சின்ன வீடொன்றைக் கட்டித் தருவது, என் நண்பர்களுக்கு அவர்கள் அறிந்த கார்த்தியாகவே எல்லாரையும் சிரிக்க வைப்பது

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?

முன்னாள் காதலிகள் பற்றிய தகவல்கள், நம்பிக்கை துரோகம் செய்யும் நண்பர்கள் என நான் நம்பி ஏமாந்தவர்களின் பேச்சு, பிரியமானவர்களின் துயரங்கள்

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?

கிடார், சினிமா மொழி, ஓவியம்

12) பிடிச்ச மூன்று உணவு வகை?

பிரியாணி, புரோட்டா, எல்லா அசைவ சமாச்சாரமும்

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

லூசுப்பெண்ணே, பார்த்த முதல் நாளே, என் காதல் சொல்ல (கொஞ்சம் மாறிக்கிட்டே இருக்க லிஸ்ட் இது..)

14) பிடித்த மூன்று படங்கள்?

நிறைய இருக்கு.. ஆனாலும் மூன்று முக்கியமான படங்கள் - சில காரணங்களுக்காக.. வகைக்கு ஒண்ணா

முள்ளும் மலரும் (ரஜினி-மகேந்திரன்)
ப்ரோக்கன் ஆரா (ஜான் டிரவோல்டா - ஜான் வூ)
தி ரோடு ஹோம் (யாங் ஜீமு - நான் பார்த்த முதல் உலகப்படம்)

15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்றுவிஷயம்?

என் மீதான நம்பிக்கை, இசையும் புத்தகமும், நட்பு

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?

எங்க ஊருக்கார அண்ணே ஸ்ரீ
நம்ம பிரியத்துக்குரிய மொக்கைச்சாமி மேவி
கோயம்புத்தூர் அம்மிணி தாரணிபிரியா

May 3, 2011

பதிவுலகமும் நாதாரி பின்னூட்டங்களும்

கிட்டத்தட்ட ரெண்டரை வருஷமா பதிவுகள் எழுதிக்கிட்டு இருக்கேன். வெறுமனே பின்னூட்டம் போடுறதுக்காக ஆரம்பிச்ச பதிவுதான் இது. அதுக்கப்புறம் வேலையத்துப் போய் என்னத்தையாவது கிறுக்கி வைக்க நாலஞ்சு பயபுள்ளைங்க மாப்ள சூப்பருன்னு ஏத்தி விட்டதுல தொடர்ச்சியா எழுத ஆரம்பிச்சேன். இதுல எழுதுறதால எனக்குக் கிடைச்சது என்னன்னா முகம் தெரியா மக்களோட அன்பும் சில அருமையான நட்புகளும்தான். ரொம்ப நாளைக்கு முன்னாடி "நான் ஏன் எழுதுகிறேன்"னு இதைத்தான் சொல்லி இருக்கேன்.

ஒரு சிலர் பதிவை தங்களோட டைரிக்குறிப்புகளா வச்சிருக்காங்க. எழுதிப் பழக ப்ளாக் ஒரு அருமையான இடம் நம்மை அடுத்த தளத்துக்கு நகர்த்திட்டுப் போக இது உதவும்னு பத்திரிக்கைகள்ல எழுத ஆசைப்படுற மக்கள் சொல்றாங்க. எனக்கு இது மொக்கை போட அருமையான இடம் நம்மள மாதிரியான ஜாலியான மக்களை சந்திக்க இது உதவுதுன்னு சொல்றது சில பேரு. ஆக பதிவு எழுதுறதுக்கு எல்லாருக்கும் ஒரு காரணம் இருக்கு. அதே மாதிரி மக்களைத் தொடர்ச்சியா எழுத வைக்கிறதுலயும் அவங்களோட ஆர்வத்த தக்க வைக்கிறதுலயும் பின்னூட்டங்கள் ரொம்ப முக்கியமானவை.

எதை எழுதினாலும் அதுக்கு மக்கள் என்ன சொல்றாங்கன்னு உடனே தெரிஞ்சிக்கிறது பின்னூட்டங்கள் மூலமாத்தான். பதிவை எழுதிப்புட்டு எத்தனை பின்னூட்டம் வந்திருக்குன்னு அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு வாட்டி ரெப்ரெஷ் பண்ணிப் பாக்குற வியாதி எனக்கும் இருந்திருக்கு. எல்லாம் எதுக்காக? ஒரு சின்ன அங்கீகாரம்.. நாம நல்லாத்தாண்டா எழுதி இருக்கோம்னு நண்பர்கள் பாராட்டும்போது ஒரு சந்தோசம். அதுக்குத்தானே ஆசைப்படுறோம். அதே மாதிரி நல்லாயில்லைன்னு நண்பர்கள் சொன்னாலும் நம்மள நாமளே திருத்திக்க ஒரு வாய்ப்பை பின்னூட்டங்கள் தருது.

சொல்லப்போனா பின்னூட்டம் அப்படிங்கிற வார்த்தையே தப்புத்தான். ஆங்கிலத்துல "comments" அப்படிங்கிறத மொழிபெயர்த்தா "கருத்துரைகள்"னு வேணும்னா சொல்லலாம். அதுதான் சரியா இருக்கும். பதிவுல இருக்குற விஷயங்கள் பத்தி வாசிக்கிறவங்களோட கருத்து என்ன? இது சரியா தப்பா.. என்ன மாதிரியான மாற்றுக்கருத்து இருக்கு? இதை எல்லாம் தெரிஞ்சுக்குறதுக்கான இடமாத்தான் பின்னூட்டங்கள் இருக்கணும். ஆனா இன்னைக்கு அப்படி இருக்கா?

நண்பர் ஒருத்தர் எழுதின பதிவு அது. ஒரு தொலைகாட்சி நிறுவனத்துல வேலை பார்த்த பெண்மணி ஒருத்தவங்க மர்மமான முறையில இறந்து போயிட்டதப் பத்தின பதிவு. அதுல இருந்த மொத பின்னோட்டம் என்ன தெரியுமா? எனக்குத்தான் சுடுகஞ்சி. ஏன்யா உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா? எழவு வீட்டுல போய் ஆதித்யா சேனல் போடுங்கன்னு சொல்ற மாதிரியான அபத்தம் இல்லையா அது? பதிவு என்ன எது பத்தின்னு கொஞ்சம் கூட வெவரம் தெரியாம எதுக்குங்க பின்னூட்டம் போடணும்? உங்க நண்பர் அதப் பார்த்துத்தான் நீங்க வந்து இருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கணும்னா அப்படி ஒரு அவசியமே இல்லைன்னுதான் சொல்லுவேன்.

இன்னொரு கொடுமை. ஒரு பதிவர் தான் ஒரு இன்டர்வியூக்குப் போயிட்டு வந்த கதையை எழுதி இருக்காங்க. ஏற்கனவே ஆளைத் தேர்ந்து எடுத்துட்டு வெறுமனே கண்துடைப்புக்கு நடத்துறாங்கன்னு நொந்து போய் எழுதி இருக்க இடத்துல நம்மாளுங்க போய் போடுற பின்னூட்டம் "மொத வடை". இவங்கள எல்லாம் என்ன பண்றது? இதோட நிப்பாட்டுறாங்களா.. வாய்ல வர்றது எல்லாம் பின்னூட்டம். கோடாலி சுத்தியல் தயிர் தக்காளின்னு.. கருமம்டா. இப்படி எல்லாம் பின்னூட்டம் போடுறதுக்கு போடாமயே இருக்கலாம்.

வாசிச்சு நல்லா இருக்கு இல்லைன்னு சொல்றதுக்குத்தாங்க பின்னூட்டம். இந்த மாதிரி ஈத்தரையா மீ தி ஃபர்ஸ்ட், சுத்தியல், வடைன்னு போடுறதுக்கு இல்லைங்க. விளையாட்டு பண்ணுங்க.. ஆனா பதிவு எதப் பத்தின்னு தெரிஞ்சுக்கிட்டாவது பண்ணுங்க. போற போக்க பார்த்தா அருமை, நல்லாயிருக்கு, :-)))) மாதிரியான டெம்ப்ளேட் பின்னூட்டங்களே பரவாயில்லைன்னு சொல்ற மாதிரி வந்துரும்னுதான் நினைக்கிறேன்.

பதிவுகள் இன்னைக்கு ரொம்பவே நல்லா வளந்துக்கிட்டு இருக்கு. மத்த மீடியால இருந்தெல்லாம் நம்மள கவனிக்கிறாங்க. இங்க இருந்து பத்திரிக்கைகளுக்கு எழுதப் போற அளவுக்கு முக்கியமான இடத்துல இருக்கோம். நமக்குன்னு சில பொறுப்புகள் இருக்கு. அதனாலத்தான் சொல்லணும்னு தோணுச்சு. சொல்லிட்டேன். இனிமே உங்க பாடு. அம்புட்டுத்தான்.

December 28, 2010

ஈரோடு சங்கமமும் பெருமாள்முருகனும்

கடத்த 26 -12 -10 அன்று ஈரோட்டில் பதிவர்கள் - வாசகர்கள் பங்குபெற்ற "சங்கமம்" அற்புதமான வகையில் நடந்தேறியது. சனிக்கிழமை மதியமே நானும் நண்பர் ஸ்ரீயும் ஈரோடு போய் விட்டோம். பிரியத்துக்குரிய ஜாபரும் கார்த்தியும் எங்களை வரவேற்று அழைத்துப் போனார்கள். மறுநாள் நிகழ்வுக்கான ஆயத்தங்களைச் செய்வதிலேயே அன்றைய தினம் கழிந்தது.

ஞாயிறு காலை பதினோரு மணி போல நண்பர்கள் எல்லோரும் அரங்கிலே கூடத் தொடங்கி விட்டார்கள். சிங்கை பதிவர் பிரபாகரின் தமிழ் வாழ்த்துடன் நிகழ்வு தொடங்கியது. நிகழ்ச்சியின் முதல் அமர்வாக எழுத்தாளர் பெருமாள் முருகன் சிறுகதைகள் எழுதுவது குறித்துப் பேசினார்.

அதன் பின்னர் நக்கலுக்கும் நையாண்டிக்கும் புகழ் பெற்ற எழுத்தாளர் பாமரன் பேச வந்தார். அவருக்கான தலைப்பு - "உலக மொக்கையர்களே ஒன்று கூடுங்கள்". கணினி என்கிற விஷயத்தை தாங்கள் தீவிரமாக எதிர்த்த காலம் போய் இன்றைக்குத் தாங்களும் கணினி வாயிலாக இயங்க வேண்டி இருப்பதை குறிப்பிட்டுப் பேசினார். தற்கால அரசியல் சூழல் பற்றி வருத்தம் கொண்டாலும் இணையத்தின் மூலம் கிடைக்கும் கட்டற்ற சுதந்திரத்தின் மூலம் மாற்றங்கள் கொண்டு வரமுடியும் என நம்புவதாக பாமரன் தெரிவித்தார். கடைசியாக மண்ட்டோவின் சிந்தனைகள் சிலவற்றை எடுத்துச் சொல்லி தனதுரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக "தமிழ்ஸ்டூடியோ.காம்" அருண் குறும்படங்கள் எடுப்பது பற்றி பேசினார். சென்னையில் குறும்படங்கள் எடுப்பதற்கென சரியான தளமொன்று இல்லாத நேரத்தில், அம்மாதிரியான எண்ணத்தோடு கிளம்பி வரும் மக்களை யாரும் ஏமாற்றி விடாமல் அவர்களுக்கு உதவ ஆரம்பிக்கப்பட்டதே "தமிழ்ஸ்டூடியோ.காம்". குறும்படங்கள் எடுக்க விரும்பும் யாருக்கும் அதற்கான தொழில்நுட்பம் சார்ந்த உதவிகளை எப்போதும் செய்வதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் அறிவித்தார்.

அவருக்குப் பிறகு பேசிய "திரை நானூறு" என்கிற அமைப்பை நடத்தி வரும் திரு.சிதம்பரம் உலக திரைப்படங்கள் பற்றியும் தமிழ் சினிமாவின் பின்தங்கிய நிலை குறித்தும் விரிவாக உரையாற்றினார். அதைத் தொடர்ந்து பதிவர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்ட பிறகு உணவு இடைவேளை விடப்பட்டது. சைவம், அசைவம் என சாப்பாடு பொளந்து கட்டி விட்டார்கள். நிறைவான மதிய உணவுக்குப் பின்னர் பதிவர்கள் மீண்டும் ஒன்றுகூட மதிய நிகழ்வுகள் தொடங்கின.

பதிவர் கருவாயன் (எ) சுரேஷ் புகைப்படங்கள் எடுக்கும்போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கியமான வரைமுரைகளைப் பற்றி பேசினார். எப்படி வெளிச்சம் அதிகப்படாமல் எடுக்க வேண்டும், பின்னணி ஒரு புகைப்படத்துக்கு எந்தளவுக்கு முக்கியம், பொதுவாக புகைப்பட கருவியை எப்படி கையாள வேண்டும் என்பது போன்ற விஷயங்களை அழகாக சொன்னார்.

அடுத்ததாக பேசியவர் மூத்த (வயதில் அல்ல) பதிவர் ஓசை செல்லா. பதிவுலகம் தனக்கு என்ன மாதிரியான சவுகரியங்களைத் தந்திருக்கிறது, ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளை எப்படி கொண்டு வரலாம் என்றெல்லாம் சொன்னவர், பதிவுகளின் மூலமே சமூகத்தில் நடைபெற்ற ஒரு அரசியல் மோசடியை எப்படி தன்னால் சுட்டிக் காட்ட முடிந்தது என்றும் குறிப்பிட்டார்.

கடைசி நிகழ்வாக நண்பர் லக்ஷ்மணராஜா பேசினார். நிழற்படங்களை ஆவணப்படுத்துதல் என்கிற மிக முக்கியமான விஷயம் பற்றி அழகான இரண்டு போட்டோ ஆல்பங்களின் துணையோடு விளக்கினார். ஒரிசாவில் வேதாந்தா நிறுவனத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் "நியாம்கிரி" என்கிற ஊரைப் பற்றின ஆவணப்பதிவு அட்டகாசமாக இருந்தது. நிழற்படங்கள் கூட கதை சொல்ல முடியும் என்று சொல்லாமல் சொல்லிப் போனார் லக்ஷ்மணராஜா. அன்றைய தினத்தின் கடைசி நிகழ்வாக திருப்பூர் வலைப்பதிவர் குழுமமான "சேர்தளம்" நடத்திய பதிவர் கலந்துரையாடல் நடைபெற்றது.

இப்போது மீண்டும் பெருமாள் முருகனிடம் வருவோம். நன்றாக எழுதுபவர்கள் நன்றாக பேச மாட்டார்கள் என பொதுவாக சொல்வார்கள். எஸ்ரா, பிரபஞ்சன் போன்ற விதிவிலக்குகளோடு பெருமாள் முருகனையும் நாம் சேர்த்துக் கொள்ளலாம். வெகு அருமையாக பேசினார். இனி அவர் பேசியதில் இருந்து..

"சிறுகதைகள் எழுத நினைக்கும் யாருக்கும் வாசிப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. ஆதி காலத்தில் எழுதத் தொடங்கியபோது வாசிப்பு தேவைப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைக்கு கண்டிப்பாக வாசிப்பு தேவை. காரணம், தமிழில் சிறுகதைகளைப் பொறுத்தமட்டில் அத்தனை சாதனைகள் செய்யப்பட்டு இருக்கின்றன. எனவே நம் முன்னோடிகள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளவும், அவர்களைத் தாண்டிப் போகவும் நாம் அவர்களை வாசிப்பது அவசியமாகிறது.

பத்திரிக்கைகள் கூட சிறுகதைகளுக்கு அத்தனை முக்கியம் தருவதில்லை. வெகுஜன பத்திரிக்கைகள், உயிர்மை காலச்சுவடு போன்ற சிற்றிதழ்கள் என எல்லா பத்திரிக்கைகளுமே ஒரே ஒரு சிறுகதையை மட்டுமே வெளியிடுகின்றன. இணையைத்தில் எழுதுபவர்கள் கூட சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை.

இந்நிலையில் உயிர் எழுத்து மட்டுமே ஒரு இதழுக்கு ஐந்து அல்லது ஆறு சிறுகதைகளை வெளியிட்டு வருகிறது. அவர்களின் முயற்சியை நாம் பாராட்ட வேண்டும். பொதுவில், இன்றைக்கு வாசிக்கும் பழக்கம் என்பது ரொம்பவே குறைந்து போய் விட்டது. குறைந்தபட்சம் மாதம் ஒரு சிறுகதையாவது வாசிக்கும் பழக்கத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

தொடர் வாசிப்பின் மூலமே நம்மால் சிறுகதையின் நுட்பங்களைக் கண்டடைய முடியும். ஜெயமோகனிடம் கேட்டால் தன்னுடைய முதல் சிறுகதை என கணையாழியில் வெளிவந்த நதி பற்றி சொல்லுவார். ஆனால் அதற்கு முன்னரே குமுதம், ஆ.வி போன்ற பத்திரிக்கைகளிலே நிறைய எழுதி இருக்கிறார். அப்படியானால் அவையெல்லாம்? எழுதுவதற்கான பயிற்சி. தொடர்ச்சியாக எழுதுவதன் மூலமே ஒருவர் தனக்கான உத்திகளைக் கண்டறிய முடியும்.

ஒரு விஷயத்தை வாசிக்கும்போது நம்மை அந்த இடத்தில் பொருத்திப் பார்க்கும் திறனை வளர்த்துக் கொள்ளுவது அவசியம். நம்மால் உணர முடிந்த விஷயங்களையே நல்ல இலக்கியமாக ஒருவரால் மாற்ற இயலும். அதே போல நீங்கள் தெரிந்து, உணர்ந்து கொள்ளும் விஷயங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அது உங்களை இன்னும் பக்குவப்படுத்தும்.

முதல் முறையாக கதை எழுதும்போது விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு வாழும் மனிதர்களைக் களனாக எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டுக்கு கந்தர்வனின் அதிசயம் கதையைச் சொல்லலாம். தன்னுடைய வெற்றுக் கையால் ஒரு பனைமரத்தை பிடுங்கி எரியும் மனிதனைப் பற்றிய கதை அது.

அதே போல தி.ஜாவின் காண்டாமணி கதையைச் சொல்லலாம். குற்றவுணர்ச்சியின் காரணமாக கோவிலுக்கு கொடையாகக் கொடுத்த மணி எப்படி அந்த மனிதனின் குற்றவுணர்வை மேலும் அதிகரிக்கச் செய்கிறது என்பதை சொல்லும் அற்புதமான கதை. இது போன்ற விஷயங்களை எடுத்துக் கொள்ளும்போது அது உங்களுக்கு எளிதாக இருக்கும்.

சிறுகதை என்பதொரு கடல். அது பற்றிய ஒரு சில துளிகளை மட்டுமே உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். இதை மனதில் கொண்டால் சிறுகதைகளை எழுதுவது சற்று எளிதாகும் என நம்புகிறேன். வாய்ப்பளித்த ஈரோடு பதிவர்களுக்கு நன்றி.." அட்டகாசமாகப் பேசி அமர்ந்தார் பெருமாள்முருகன்.

எழுத்தில் மட்டுமே கண்டிருந்த ஒரு சில புதிய முகங்களின் அறிமுகம், நண்பர்களுடான உரையாடல், கேலி கிண்டல் என கொண்டாட்டமாக அமைந்தது சங்கமம். இதை சீரிய முறையில் நடத்திக் காட்டிய ஈரோடு பதிவர் குழுமத்திற்கு நன்றிகள் பாராட்டுகளும். ஒரு விடுமுறை தினத்தை நண்பர்களுக்கென ஒதுக்கி சங்கமத்தில் கலந்து கொண்ட பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்..!!!

சங்கமம் புகைப்படங்களைக் காண இங்கே சொடுக்குங்கள் நண்பர்களே..

December 21, 2010

விஷ்ணுபுரம் விருது விழா 2010

முன்குறிப்பு: சாகித்ய அகாதெமி விருது பெற்றிருக்கும் நாஞ்சில் நாடனுக்கு நல்வாழ்த்துகள்.

கோவை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக தமிழின் மூத்த படைப்பாளிகளில் ஒருவரான .மாதவனுக்கு விருது வழங்கும் விழா 19-12-10 அன்று பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. "மனதில் உறுதி வேண்டும்" பாட்டை ராமச்சந்திர ஷர்மா பாடி விழாவை ஆரம்பித்து வைத்தார். ஜெமோவின் தீவிர வாசகரும் பிரியத்துக்குரிய பதிவுலக நண்பருமான செல்வேந்திரன் நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார்.

பேராசிரியை எம்..சுசீலா வரவேற்புரை வழங்கினார். "விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைப் பொறுத்தவரை நான் ஒரு குழந்தை மாதிரி. வெகு சமீபத்தில்தான் புதிதாக என்னை இணைத்துக் கொண்டிருப்பவள். இருந்தும் எனக்கு இந்த வாய்ப்பைத் தந்ததற்காக நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்த விருது முழுக்க முழுக்க ஒரு வாசகனின் பார்வையில் மாபெரும் எழுத்தாளனைக் கொண்டாடும் முகமாக வழங்கப்படுகிறது. இதில் எந்த அரசியலும் கிடையாது. ஜெயமோகனின் துணையோடும் அவருடைய வழிகாட்டுதலின் படியும் இந்த நிகழ்வு தொடர்ந்து நடக்கும். இங்கு வந்திருக்கும் அனைவரையும் எங்கள் இலக்கிய வட்டம் சார்பாக வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.."


அடுத்ததாக விழாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த கோவை ஞானி பேசத் துவங்கினார். அதிரடி. அதிர்வெடி. இப்படித்தான் அவருடைய பேச்சை சொல்ல வேண்டும். "பொதுவாக எனக்கு விருதுகளில் நம்பிக்கை இல்லை. விருதுகள் வாங்கினால்தான் அவன் உயர்ந்த கலைஞனா? கவனிக்கப்படாத எத்தனையோ அற்புதமான கலைஞர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் எல்லாம் தகுதியில் குறைந்தவர்களா? கண்டிப்பாக கிடையாது. .மாதவன் போன்ற எழுத்தாளர்கள் தமிழில் இருப்பது நமக்குத்தான் பெருமை. இப்போது அவரைப் பாராட்டி விருது தருகிறீர்கள். சந்தோசம். ஆனால் பரிசுத்தொகை 50,000/- என்பதை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கி லட்ச ருபாய் தரலாம். அவர் எழுத்துகளுக்கு அந்தத் தகுதி இருக்கிறது.


மேடையில் என்னைப் பற்றி பேச வேண்டாம் என்று ஜெமோ சொன்னார். ஆனால் நான் ஒரு நல்ல மாணவன் இல்லை என்பதால் அதை மீற வேண்டி இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு ஜெமோவின் பெயரும் சாகித்ய அகாதெமி விருதுக்கு பரிசீலனையில் இருந்திருக்கிறது. விருதுக்குழுவில் இருந்த மூன்று தமிழர்களில் ஒருவர் சொன்னாராம்.."ஜெமோவா.. அவர் தமிழ்த் துரோகி ஆயிற்றே?" ஏனய்யா.. அப்படிப் பார்த்தால் கலைஞரை விடவும் பெரிய தமிழ்த்துரோகி யாரும் இருக்க முடியுமா? இன்னொரு நடுவர் சொன்னாராம் "என்னால் கொற்றவை நாவலைப் படிக்கவே முடியவில்லை.." ஒரு புத்தகத்தை படிக்கவே முடியாத மனிதருக்கு அந்த தேர்வுக்குழுவில் இருக்கத் தகுதி உண்டா?

மூன்றாவதாக இருந்த தமிழவன் எத்தனை போராடியும் அந்த வருடம் ஜெமோவுக்கு விருது கொடுக்கவில்லை. புவியரசுக்குத் தந்தார்கள். இந்த மாதிரி காலக் கொடுமையெல்லாம் தமிழில் மட்டும்தான் நடக்கும். தமிழில் இன்று இருக்கக் கூடிய ஆகச்சிறந்த எழுத்தாளர்களில் கண்டிப்பாக ஜெயமோகனைப் புறக்கணிக்கவே முடியாது. அவருடைய "பின்தொடரும் நிழலில் குரல்" ஒரு மாஸ்டர்பீஸ். இதைச் சொன்னால் என்னை என் கட்சிக்காரர்களுக்குப் பிடிக்காமல் போகிறது. விருது பெறும் மாதவனுக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்துக்கும் என் வாழ்த்துகள்.."

அடுத்ததாக மலையாள நாவலாசிரியர் புனத்தில் குஞ்ஞப்துல்லா .மாதவனுக்கு விருதையும் காசோலையும் வழங்கினார். நிகழ்வை ஒட்டி ஜெயமோகன் எழுதிய "கடைத்தெருவின் கலைஞன்" என்ற புத்தகத்தை மணிரத்னம் வெளியிட வாசகர் ராதாகிருஷ்ணன் என்கிற இளைஞர் பெற்றுக் கொண்டார்.


புனத்தில் குஞ்ஞப்துல்லா மலையாளத்தில் உரையாற்ற அதை ஜெமோ மொழிபெயர்த்து சொன்னார். "25 வருடங்களுக்கு முன்பே என்னை ஜெமொவுக்குத் தெரிந்திருக்கிறது. ஒரு இலக்கிய விழாவில் என்னை சந்தித்து இருக்கிறாராம். அதை என்னோடு பகிர்ந்து கொண்டபோது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவருக்கு நீங்கள் விருது தருவதில் ரொம்ப மகிழ்ச்சி. இன்றைக்கு கேரளத்தில் இலக்கிய சூழல் அத்தனை நன்றாக இல்லை. அங்கிருக்கும் மக்களுக்கு மொழி பற்றிய ஆர்வம் ரொம்பவே குறைந்து வருகிறது. தங்களுடைய பிள்ளைகள் அம்மே என்றழைப்பதை விட மம்மி என்று சொல்ல வேண்டுமென கேரளா அம்மாக்கள் விரும்புகிறார்கள்.


ஆனால் தமிழில் அப்படி இல்லை என்பது மனதுக்கு ரொம்ப நிறைவாக இருக்கிறது. நீங்கள் உங்கள் மொழியை நேசிக்கிறீர்கள். தாயைப் போல, தாயின் முலைப்பாலைப் போல.. ரொம்ப நெகிழ்வாக இருக்கிறது. .மாதவனின் மொழிபெயர்ப்புகளை நான் வாசித்து இருக்கிறேன். தலைசிறந்த எழுத்தாளர். அவர் நெடுங்காலம் நன்றாக இருக்க வேண்டும். இனிமேலும் அவருக்குப் பல விருதுகள்.. ஞானபீடம் ஏன் நோபல் பரிசும் கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.." தமிழ்ச்சூழல் பற்றிய புனத்திலின் பேச்சை ஒரு சில இடங்களில் மொழிபெயர்க்கும் போது சிரிக்காமல் இருக்க ஜெமோ நிறையவே சிரமப்பட்டிருப்பார் என்றே தோன்றுகிறது.

"இலக்கிய விழாக்களில் விருப்பமில்லாத நண்பனொருவனிடம் மணிரத்னம் பேசுகிறார் வாடா என்று சொன்னேன். அடப்போடா அவர் என்னைக்குப் பேசினார் மைக் முன்னாடி சிரிக்கப் போறார் இதுக்கு எதுக்கு என்றான். அவன் எண்ணத்தைப் பொய்யாக்கும் வண்ணம் இப்போது மணி பேசுவார்" என்கிற செல்வாவின் கிண்டலோடு பேச வந்தார் மணிரத்னம். அளவான பேச்சு.

"தமிழ் சினிமாவுக்கும் இலக்கியத்துக்கும் ரொம்ப தூரம் என்கிறார்கள். ஏதோ என்னால் முடிந்தது.. இங்கே வந்திருக்கிறேன். மாதவனின் எழுத்துகள் இருட்டிலிருக்கும் மனிதர்களின் மேல் வெளிச்சம் பாய்ச்சுகிறது என்று சொனார்கள். இருட்டுக்கும் எனக்கும் சம்பந்தம் இருப்பதால்தான் என்னை அழைத்தார்களோ என்னமோ? மாதவனின் கிருஷ்ணப் பருந்தை வாசித்தேன். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. ஆனால் போகப்போக என்னை உள்ளிழுத்துக் கொண்டது. அதில் ஒரு பகுதியை சினிமாவாக்க முயன்றாலே அது அற்புதமான படமாக இருக்கும்.. அவருக்கு என் வாழ்த்துகள்.."

அடுத்ததாக சிறப்புரை ஆற்ற வந்தவர் "எப்போதும் மூக்கின் நுனியில் சினத்தை சுமந்து கொண்டிருக்கும் கும்பமுனி" நாஞ்சில் நாடன். திருவனந்தபுரம் என்கிற ஊரிலிருந்து எத்தனை முக்கியமான கலைஞர்கள் வந்திருக்கிறார்கள் என்று பட்டியலிட்டு தன் பேச்சை ஆரம்பித்தார். "கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக எழுதி வரும் மாபெரும் கலைஞன் .மாதவன். அவருக்கு உண்டான விருதுகளை இன்னும் ஏன் தர மறுக்கிறார்கள்? காரணம் அரசியல். சாதி சார்ந்து விருதுகள் வழங்கும் கொடுமையெல்லாம் இருக்கிறது. நமக்கு முன்னால் விருது வாங்க வரிசையில் இருப்பவர்களைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. முத்தமிழ் அறிஞரில் ஆரம்பித்து கவிச் சக்கரவர்த்தி வரை எல்லோரும் இருக்கிறர்கள். இதெல்லாம் தமிழுக்கு வந்த சோதனை.


திராவிட பாரம்பரியத்தில் வந்த எழுத்தாளர்தான் .மாதவன். முரசொலி தொடங்கி பல திராவிட பத்திரிக்கைகளில் அவருடைய கதைகள் வந்திருக்கின்றன. கிட்டத்தட்ட 200 கதைகள். ஆனால் தன்னுடைய தொகுப்பென வந்தபோது அந்தக் கதைகள் எல்லாவற்றையும் புறந்தள்ளும் தைரியம் மாதவனுக்கு இருந்தது. அவருக்கு விருதுகள் தந்து உங்களைப் பெருமைப்படுத்திக் கொள்ளுங்கள். ஓய்வு பெற்று மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது கூட இந்த அறச்சீற்றம் கொள்ளாவிட்டால் எப்படி?"

அடுத்துப் பேசிய விமர்சகர் வேதசகாயகுமாரின் நிதானமான பேச்சு சற்றே சலிப்படைய வைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். "இதுவரை .மாதவன் கதைகள் பற்றிய திறனாய்வுகள் என எத்தனை வந்திருக்கிறது என்று பார்த்தால் ரொம்ப வருத்தமாக இருக்கிறது. ஏன் அவர் புறக்கணிக்கப்படுகிறார்? தமிழ் இலக்கியத்தின் நவீனத்துவப் போக்கை மாற்றியமைத்த கதாபாத்திரங்கள் மூன்று. ஜி.நாகராஜனின் கந்தன், சுராவின் ஜே ஜே, மாதவனின் சாளைப்பட்டாணி. ஆனால் மற்ற இருவரைப் போல சாளைப்பட்டாணி கவனிக்கப்படவில்லை. இதற்கு என்ன காரணம்?" இதே ரீதியில் கடைசி வரை மாதவன் ஏன் புறக்கணிக்கப்படுகிறார் என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். மேடையில் அவர் பேசியதை எல்லாம் காலையில் நேரடி உரையாடலிலேயே கேட்டு விட்டிருந்ததால் ருசிக்கவில்லை.

ஜெயமோகன் இரத்தின சுருக்கமாகப் பேசினார். "இந்த விருது தமிழின் முக்கிய படைப்பாளிகளை அடையாளம் கண்டு மரியாதை செய்வதற்காக உண்டானது. பணத்தைக் கொண்டு இதை மதிப்பிட முடியாது. மாறாக நாங்கள் அவர்கள் மீது கொண்டிருக்கும் மரியாதையையே காட்டுகிறது. விருது வழங்கிய குஞ்ஞப்துல்லாவை 25 வருடங்களுக்கு முன்பு ஒரு விழாவில் பார்த்தேன். அந்த விழாவின் நாயகரை எனக்கு பத்து வருடங்களாக நண்பராகத் தெரியும். அதற்காக உங்கள் எழுத்துகள் எனக்குப் பிடித்திருக்க வேண்டும் என அவசியம் இல்லை என்று சொல்லி பேச ஆரம்பித்தார். ஆகா இதோ நம்மைப் போன்றே ஒருவர் இருக்கிறார் என்று ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இன்றைக்கு இங்கே வந்து சிறப்பித்த அவருக்கு என் நன்றி. மாதவனுக்கு விருது வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்..”


அனைவருக்கும் நன்றி சொல்லிய .மாதவனின் ஏற்புரையோடு விழா நிறைவு பெற்றது. தமிழின் முக்கியமானதொரு முன்னோடிக்கு விருது வழங்கி சிறப்பித்த நிகழ்வில் நாமும் கலந்து கொண்டது ரொம்பவே நெகிழ்வாக இருந்தது.

பின்குறிப்பு 1: நகர்வலத்தின்போது அகில இந்திய ரீதியில் ரசவடை என்கிற விஷயத்தை அறிமுகம் செய்து வைத்த அண்ணன் கேபிளுக்கும், பிரதாப்புக்கும் நன்றி. அத்திரி, ஜாக்கி, ., சூர்யா, மேவி போன்ற சென்னை நண்பர்களை சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி. ஒரு சிலரைப் பார்க்க எண்ணியும் பார்க்க முடியவில்லை. அவர்கள் இந்த சிறுவனை மன்னிப்பார்களாக.. ஆமென்..

பின்குறிப்பு 2: பிரியத்துக்குரிய கோபியை முதல் முறையாக சந்தித்தேன். அமைதியாக மசமொக்கை போடுகிறார். உங்களைப் போன்றவர்கள்தான் பதிவுலகுக்குத் தேவை. வாழ்க வளமுடன்..

பின்குறிப்பு 3: அருமையாக மீன்குழம்பும் வறுவலும் செய்து அசத்திய திரு, அண்ணே அண்ணே என்று கவனித்துக் கொண்ட செல்வா.. இருவருக்கும் உளமார்ந்த நன்றிகள். நல்லா இருங்க மக்களே..

பின்குறிப்பு 4: ஸ்ட்ஃப்டு சப்பாத்தி செய்ய வருதான்னு டெஸ்ட் பண்ணிப் பார்க்க கிடச்ச ஸ்பெசிமென் ஆகிட்டோமுன்னு பயந்த சமயத்துல, அருமையா சமைச்சு அசத்திய விஜிக்கும் அப்பாவி ரங்கமணி ராமுக்கும் ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். சஞ்சய் - உங்களுக்கும்.. நன்றி நண்பா..

கடைசியா.. கொஞ்சம் பெரிய பதிவாப் போயிருச்சு. பொறுமையா வாசிச்ச அத்தனை பேருக்கும் நன்றி மக்கள்ஸ்..:-))

[ படங்கள் உதவி - கோபி ராமமூர்த்தி]

December 6, 2010

பதிவர்கள் உங்கள் சாய்ஸ் (2)

அன்பின் பதிவுலக நண்பர்களே.. இது உங்கள் அபிமான "பதிவர்கள் உங்கள் சாய்ஸ்" நிகழ்ச்சி. நான் உங்க பிரியத்துக்குரிய கப்சி ரமா. போன தடவை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஏகோபித்த ஆதரவைக் கொடுத்து வெற்றிபெற செய்த உங்க அத்தனை பேருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். நீங்க கொடுத்த தைரியத்துல நம்ம பதிவர்களை கலாய்க்குற இந்த நிகழ்ச்சி தொடருது. வாங்க.. இன்னைக்கு பிரியாணி ஆகப்போற ஆடுங்க யார் யாருன்னு பார்ப்போம்.

மொதல்ல நாம பேசப்போற பதிவர் பதிவுலகின் டெர்ரர் மனிதர். ஜெயமோகனையே அலற விட்டவர். அவர்தான் நம்ம ”ஆல் இன் ஆல் அழகுராஜா” ராம்ஜி யாஹூ.

டிரிங் டிரிங்..

ரமா: வணக்கம் ராம்ஜி சார். என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?

ராம்ஜி: வணக்கம். உலக இலக்கியத்துக்கும் உள்ளூர் சிட்டுக்குருவி லேகியத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் என்னென்னன்னு விளக்க சொல்லி மச்சி சாருக்கு மெயில் பண்ணிக்கிட்டு இருந்தேன். நடுவுல நீங்க போன் பண்ணிட்டீங்க.

ரமா: பிரதியை எழுதி முடித்த பின் எழுத்தாளன் இறந்து போறான்னு இலக்கியவாதிகள் சொல்றாங்களே.. அது பத்தி என்ன நினைக்கிறீங்க?

ராம்ஜி: மரணம் எல்லாருக்கும் பொதுவானது. நம்ம சிலுக்கு கூட தூக்கு போட்டு செத்துப் போனாங்க. அதைப் பத்தி இவங்க யாரும் ஏன் பேச மாட்டேன்னு சொல்றாங்க?

ரமா: எப்படி சார் உங்களால மட்டும் இத்தனை விசயங்ளைப் பத்தி தெரிஞ்சு வச்சுக்க முடியுது?

ராம்ஜி: எல்லாம் நாம பாக்குற பார்வை தாங்க. நந்தலாலாவோ நாயர் கடை டீயோ.. நம்ம அறிவு தாகத்துக்கு ரெண்டு சொட்டு லிம்கா கிடைக்குதான்னு பார்க்கணும். இதைத்தானே இன்னைக்கு வைரமுத்துவும் அன்னைக்கே பூக்கோவெஸ்கியும் சொல்லிட்டுப் போயிருக்காங்க..

ரமா: ஆகா ஆகா.. புல்லரிக்குதுங்க. அப்புறம் ஒரு சந்தேகம். உங்க கணினியோட திரையில மட்டும் இருபது சானல் வரதாகவும், அதுல உலகின் அத்தனை செய்திகளும் வரதா பதிவுலகுல பேசிக்கிறாங்களே?

ராம்ஜி: எல்லாம் புரளிங்க. வயித்தெரிச்சல். உண்மையில வெறும் பதினாறு சானல் தாங்க வருது..:-(

ரமா: அடங்கப்பா.. முடியலடா சாமி.

ராம்ஜி: சாமிங்கிறது விக்ரம் நடிச்ச படம். அதுல திரிஷா ஒரு பாட்டுக்கு போட்டுக்கிட்டு வர்ற டிரஸ் கூட 1953இல் வெளிவந்த இசபெல்லா கோஸ்டாங்கிற கொலம்பியா படத்துல ஒரு அம்மணச் சாமியார் போட்டிருந்த டிரஸ்ஸோட காப்பிங்க.

ரமா: கிழிஞ்சது போங்க.. அய்யா இதுக்கு மேல எனக்குத் தாங்காது. உங்களுக்கான பாட்டு வருது கேளுங்க..

எவண்டா நம் முன்னே வந்து எதிர்ப்பவன் இங்கே.. தலை எகிறிப்போகும் அங்கே..

பேஸ்தடிச்சுப் போயிருக்கும் நேயர்கள் எல்லாரும் மறுபடியும் ஆட்டைய கவனிங்க. அடுத்து நாம பாக்கப் போறது ஒரு பிரபல பெண் பதிவர். பதிவர்னு சொல்றதை விட பிரபல பஸ்ஸர்னு சொல்லலாம்.

டிரிங் டிரிங்..

ரமா: வணக்கம் மயில் விஜி. என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?

விஜி: வணக்கங்.. கதைப்போட்டிக்கு நான் எழுதுன கதைய படிச்சதுக்கு அப்புறமா பரிசல்காரன் பதிவுல எழுதுறதையே நிப்பாட்டிட்டாருங்க.. அதனால.. முள்ளை முள்ளாலதான் எடுக்கணும்கிற மாதிரி.. மறுபடியும் அவருக்காக ஒரு கதை எழுதிக்கிட்டு இருக்கேங்க. படிச்சா அவருக்கு தெளிஞ்சுருங்க.

ரமா: ஐய்யய்யோ.. இன்னொரு கதையா? பரிசல் செத்தார். அப்புறம் விஜி.. பதிவுலகம் எப்படி இருக்கு? என்ன விசேஷம்?

விஜி: காபா ப்ரித்திக்கு க்யாரண்டி இருக்கான்னு கேட்டுக்கிட்டு இருக்கார். ஆதவன் அலமேலுவா இல்ல சேட்டனா இல்ல ஆதம்பாக்கம் அன்னலட்சுமியா இல்ல புலிக்குட்டியான்னு அலைபாயுறார். அப்புறம்..

ரமா: ஆத்தாடி. போதும் சாமி. உங்களப் பத்தி சொல்ல ஏதுமில்லையா?

விஜி: ஏன் இல்ல? இதோ சொல்றேன். நான் ஒரு அப்பாவி.

(அடிப்பாவி என யாரோ பின்னாடி இருந்து புலம்பும் சத்தமும் டொமீல் என ஏதோ கட்டையால் சாத்தும் சத்தமும் கேட்கிறது..)

விஜி: அப்புறம் ரமா வேற என்ன கேக்கணும்?

ரமா: ஹி ஹி ஹி. வேற ஒண்ணுமே இல்லைங்க. இப்போ அடி வாங்குன ஜீவனுக்காக ஒரு பாட்டு வந்துக்கிட்டே இருக்குங்கோவ்..

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு.. இதில் நீயென்ன.. ஞானப்பெண்ணே..

அடுத்து நாம பாக்கப்போறது ஒரு மூத்த பதிவர். மதுரை தந்த தங்கம், தன்மானச் சிங்கம், அன்புக்கும் பாசத்துக்கும் உரிய சீனா அய்யா அவர்கள்.

டிரிங் டிரிங்..

ரமா: அய்யா.. வணக்கம்.

சீனா: வணக்கம்.. சொல்லுங்கோ.

ரமா: எங்க நிகழ்ச்சி பத்தி என்ன நினைக்கிறீங்க?

சீனா: அருமை - பதிவர்கள் உரையாடல் - சகட்டு மேனிக்கு கலாய்த்தல் - உலகத்தரமான கேள்விகள் - அற்புதமான தொகுப்பாளினி - வாழ்த்துகள்.

ரமா: (ஆகா.. பின்னூட்டம் போடுற மாதிரியே பேசறாரே..)

சீனா: ரமா.. கேக்க மறந்துட்டேன்.. அப்புறம் எப்போ வலைச்சரம் எழுதுறீங்க?

ரமா: அய்யா.. நான் பதிவர் இல்லைங்க..

சீனா: அட ஆமாம்ல.. எல்லார்கிட்டயும் இதைக் கேட்டு பழகிப்போச்சு..

ரமா: அய்யா சமீபமாத்தான் உங்களுக்கு மணிவிழா நடந்ததா கேள்விப்பட்டோம். உங்களுக்கும் செல்விஷங்கர் அம்மாவுக்கும் இந்த நேரத்துல வாழ்த்து சொல்றதுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். உங்களுக்கான பாட்டு வந்துக்கிட்டே இருக்கு.. கேட்டு என்ஜாய் பண்ணுங்க..

நல்லதொரு குடும்பம்.. பல்கலைக்கழகம்..

அடுத்ததா நாம பாக்கப் போரது ஒரு சேட்டைக்காரப் பதிவர். மொக்கை போடுறதுல சூரர். வாங்க அவர் யாருன்னு பார்க்கலாம்.

டிரிங் டிரிங்..

ரமா: வணக்கம் மேவி. என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?

டம்பி மேவி: ரொம்ப கஷ்டமான வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். அதாவது.. சும்மா இருக்கேன்.

ரமா: சார்...

டம்பி மேவி: சாருவா? எனக்கு அவரைத் தெரியாதே.. பீருன்னு ஒருத்தர் பழவந்தாங்கல்ல பலசரக்கு கடை வச்சிருக்கார். அவரை மட்டும்தான் தெரியும்.

ரமா: சுத்தம். நீங்க ஒரு பெரிய வாசகர். உலக இலக்கியத்த எல்லாம் கரச்சுக் குடிச்சவர்னு சொன்னாங்களே.. தஸ்தாவெஸ்கிய படிச்சிருக்கீங்களா?

டம்பி மேவி: என்னது.. தாத்தா கைல விஸ்கியா?

ரமா: அவ்வ்வ்வ்வ்.. ரமா.. இது உனக்குத் தேவையா?

டம்பி மேவி: இங்க எல்லாமே எல்லாருக்கும் தேவைதான் பாஸ். இப்படித்தான் ஒரு இங்க்மெர் பெர்க்மென் படத்துல...

ரமா: படத்துல?

டம்பி மேவி: யாருக்குத் தெரியும்? சும்மா வாயில வந்தத சொன்னேன்.

ரமா: அய்யோ.. எனக்குத் தலையே வெடிச்சிடும் போலயிருக்கு..

டம்பி மேவி: நான் வேணும்னா ஏதாவது பாட்டு பாடட்டுமா? பாடியே தலைவலியை போக்க முடியும்னு அபிதான சிந்தாமணில சொல்லியிருக்காங்க.. ஏழாம் நூற்றாண்டுல சமண முனிவர்கள் கூட..

ரமா: யோவ்.. இதுக்கு மேல ஏதாவது பேசுன உந்தலையில கல்லைத் தூக்கிப் போட்டுருவேன். பாட்டு போடுறேன்.. கேட்டுட்டு ஓடிப் போயிரு..

டம்பி மேவி: ஹே ஹே ஹே.. நீ என்னம்மா எனக்கு பாட்டு போடுறது? இப்போ நான் உனக்கு பாட்டு போடுறேன் பாரு..

சுட்டி சுட்டி உன் வாலக் கொஞ்சம் சுருட்டிக் கொள்ளுடி..

ரமா: (ஆகா.. இன்னைக்கு நமக்கு நேரம் சரியில்ல போல இருக்கே.. நமக்கே பாட்டு போடுறாய்ங்களே.. எஸ்ஸாகிற வேண்டியதுதான்..)

ஆகவே நேயர்களே.. இந்த பதிவர்கள் உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சி இத்தோடு முடிகிறது. மீண்டும் ஒரு நிகழ்ச்சியில் வேறு சில பிரபல பதிவர்களோடு உங்களை சந்திக்கிறேன். அதுவரை உங்களிடமிருந்து வடைபெறுவது.. உங்கள் அன்புத் தொகுப்பாளினி கப்ஸி ரமா. பை பை.

November 3, 2010

ஹேப்பி பர்த்டே டு மீ :-)))

இன்றோடு "பொன்னியின் செல்வனு"க்கு இரண்டு வயது பூர்த்தி ஆகிறது. இந்த வலைப்பூவ சின்னப்புள்ள விளையாட்டு மாதிரி ஆரம்பிச்சது. இப்போப் பார்த்தா ரெண்டு வருஷம் ஆகிடுச்சுன்னு சொல்லும்போது ஆச்சரியமாவும் பிரமிப்பாவும் இருக்கு. நான் இவ்வளவு ஜல்லி அடிப்பேன்னு சத்தியமா நினச்சு கூட பார்த்தது இல்ல.. மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது நண்பர்களே.











சொந்தக்கதை சோகக்கதை, சினிமா, வாசிக்குற புத்தகம், சமூகத்துல என்னை பாதிக்குற விஷயங்கள், மொக்கைன்னு ஒண்ணு பாக்கி விடாம உள்ள தோணுற எல்லாமே எழுதி இருக்கிறேன். புரியற மாதிரி எழுதணும், சுவாரசியமாவும் இருக்கணும். இதைத்தான் என் அளவுகோலா வச்சிருக்கேன். என்னோட எழுத்துகள் மூலமா உங்ககூட நான் பேசுறேன். அவ்வளவுதான்..

நண்பர் திருச்செந்தாழை ஒரு விஷயத்த அடிக்கடி சொல்வாரு.. "உன் மனசுல தோணுற விஷயங்கள எந்த பாசாங்கும் இல்லாமநேர்மையா எழுது நண்பா.." அதன்படி இருக்கத்தான் முயற்சி பண்றேன். ஆரம்பத்துல இருந்த ஹிட்ஸ், பாலோவர் மோகம்லாம் இப்போ குறைஞ்சு போச்சு. ஓரளவு உருப்புடியா எழுதுறோமான்னு மட்டும்தான் பாக்குறேன்.

வலையுலகம் எனக்குத் தந்திருக்குற மிகப்பெரிய பொக்கிஷம் - என்னுடைய நட்புகள். நட்புங்கிறத மீறி உறவுன்னு சொல்லக் கூடிய மனிதர்கள். கிட்டத்தட்ட என் வாழ்வின் ஒரு அங்கமாகிப்போன அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். அத்தோட பதிவுலக ரெண்டு வருஷத்துல நிறைய புது விஷயங்கள் கத்துக்கிட்டு இருக்கேன். வாசிக்குற பழக்கம் கொஞ்சமா அதிகரிச்சு இருக்கு. நிறைய உலகப்படங்கள தேடி தேடி பார்க்க ஆரம்பிச்சு இருக்கேன். ரொம்ப நிறைவாக உணருகிறேன்.

இந்த நேரத்துல மொதமொத என்னைக் கண்டுபிடிச்சு ஊக்கம் சொன்ன பிரேமை நினச்சு பார்க்கிறேன். “பிரேம்.. நீங்க மட்டும் இல்லைன்னா ஆளில்லாத கடையில யாருக்குடா டீ ஆத்தணும்னு அன்னைக்கே கடைய சாத்திட்டு கிளம்பி இருப்பேன். ரொம்ப நன்றி நண்பா..”

என்னோட ரம்பத்த தாங்கிக்கிட்டு இருக்குற, தாங்கப்போற அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி. என்னோட இந்த சந்தோஷத்த உங்க எல்லார்கூடவும் சேர்ந்து பகிர்ந்துக்குறதுல ரொம்ப மகிழ்ச்சி நண்பர்களே..





சுவீட் எடு.. கொண்டாடு... ஹேப்பி பர்த்டே டு “பொன்னியின்செல்வன்”..!!!

பின்குறிப்பு 1: புதிய தலைமுறையில் வலைத்தளங்கள் பற்றிய கட்டுரையில் என்னையும் குறிப்பிட்டு இருக்கும் லக்கிக்கும், தகவலைப் பகிர்ந்து கொண்ட அண்ணன் ஜாக்கி சேகருக்கும் நன்றிகள் பல..

பின்குறிப்பு 2: நண்பர்கள் அனைவருக்கும் (அட்வான்ஸ்) தீபாவளி நல்வாழ்த்துகள்..

October 14, 2010

அழிக்கப்படும் புராதனங்கள்

சிதறாமல் அமர்வாரா ஜைனர்?
ஜைனர் புடைப்பு சிற்பங்கள் கொண்ட ஆளுருட்டி மலை


புதுக்கோட்டை மாவட்டமே, தொன்மையானது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், கற்கால மனிதர்கள் வாழும் குகைகள், புதை பொருள் தாளிகள், cane circle எனப்படும் கல் வளைவுகள், நடுகற்கள் ஆரம்பித்து, ஜைன குகைகள், புடைப்பு சிற்பங்கள், மூலிகை ஓவியங்கள், முதல் தமிழ் மூல எழுத்துக்களாம் பிராம்மி எழுத்துக்கள், முதல் காலச் சோழர்களின் கோயில் ஆகியவை நிரம்பிய, சித்தன்னவாசல், குடுமியான் மலை, நார்த்தாமலை, கடம்பர்மலை, ஆளுருட்டிமலை ஆகியவை நிரம்பிய பகுதி புதுக்கோட்டை. அந்தப் பெயர் இனி நிலைக்குமா என்பது சந்தேகமே.

கடந்த சில மாதங்களாக மிக அதிகமாக கல் குவாரி காண்டிராக்டர்களால், அடி முடி காணாமல், தொல்லியல் துறையின் சட்டங்கள், தடுப்பு சட்டங்கள், (ban) ஆகியவை மதிக்கப் படாமல், இந்த காலத்தால் அழியாத புராதனச் சின்னங்கள் பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் அதிரும் குண்டுகளால், குகைகளும், நிற்கும் இடங்களும் மக்கள் நடமாடுகையிலேயே ஆட்டம் கொண்ட வண்ணம் உள்ளது. இப்படியே தொடர்ந்தால், மத்தியத் தொல்லியல் துறையால் காக்கப்படும் இச்சின்னங்களும் குவாரிக் கற்களாக இரையாகும் நாள் வெகுதூரமில்லை.

மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளையும், அங்குள்ள காவலர்களையும் தொடர்பு கொண்ட போது, யாரிடம் முறையிட்டாலும், அரசியல் பலமிக்க கல் குவாரிக் காரர்களை தடுக்க முடியவில்லை என்று வருத்தமே தெரிவிக்கின்றனர். இனியும் தாமதியாமல், தமிழ் நாடு அரசு தொல்லியல் சின்னங்கள் உள்ள மலைகள் முழுவதையுமே காப்பதற்கான சட்டம் இயற்றி,(இல்லை இருக்கும் சட்டத்தை தூசி தட்டி எடுத்து) உடனேயே இந்த காலவரையற்ற குண்டுவெடிப்புகளை தடுக்காவிட்டால், தமிழகத்தின் தொன்மைக்குப் பெருமையாக விளங்கும் இச்சின்னங்கள் இனி புகைப்படங்களாக மட்டும் காணும் நிலை உருவாகிவிடும். அரசு உடனடியாக கவனிக்குமா?

வெடித்து வைக்கப்பட்டுள்ள கற்குவியல்கள் தகர்க்கப்பட்ட கற்குவாரிகள் படுகைக்கு மிக அருகே

collr.tnpdk@nic.in மற்றும் collrpdk@tn.nic.in
மாபெரும் அழிப்பு நடவடிக்கையை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு மின் அஞ்சல் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வலைப்பதிவர்கள் அனைவரும் தங்கள் வலைப் பக்கங்களில் இதை மறு வெளியிடு செய்து தருமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.

அன்புடன்
ஆரூரன் விசுவநாதன்
To
The Collector,
Pudukottai Dist.
Order immediatly to stop quarrying. Such a monument can not be built by present or future govt. Such monuments are telling poetry, history of geography of glorious past.

(நண்பர் ஆரூரன் விசுவநாதனின் பதிவிலிருந்து..)

September 8, 2010

எஸ்ரா புத்தக வெளியீடு (2)

எஸ்ரா புத்தக வெளியீடு (1)

உலக சினிமா பற்றிய "இருள் இனிது ஒளி இனிது" என்ற புத்தகத்தை தமிழ்நாட்டின் பரபரப்பான எழுத்தாளரான சாரு நிவேதிதா (முத்துகிருஷ்ணன் அப்படித்தான்யா சொன்னாரு..) வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். "நான் பார்ப்பதற்கு இளமையாக இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். ஆனால் என்னுடைய எழுத்தாள நண்பர்கள் என்னை வேறுமாதிரி கேட்கிறார்கள். என்ன சாரு.. ஆள் டல்லா இருக்கீங்க? நெத்தி எல்லாம் ஏறிடுச்சே.. அப்படின்னு.. ஏன்னா.. இங்க ஒரு எழுத்தாளன் நல்லா இருந்தா இன்னொருத்தனுக்கு பொறுக்காது. அப்புறம் நான் புத்தக வெளியீட்டுக்கு போறதா சொன்னவுடனே கேட்டாங்க.. இப்போ எந்தப் புத்தகத்தை கிழிக்கப் போறீங்கன்னு.. நான் எதுக்கு எல்லாப் புத்தகத்தையும் கிழிக்கணும்? என்னுடைய சக எழுத்தாளனை மதிக்காத, தவறாகப் பேசிய ஒரு புத்தகத்தைத்தான் கிழிச்சேனே தவிர ஏதும் காரண காரியத்தோடு எல்லாம் இல்ல.. ஒரு நல்ல புத்தகத்த கேரளாவுலயும், வெளிநாட்டுலையும் அப்படிக் கொண்டாடுறாங்க..ஆனா தமிழ்நாட்டுல எழுத்தாளனுக்கு மரியாதை இல்ல.. நல்ல எழுத்தாளருடைய புத்தகம் ஒரு லட்சம் காப்பி விக்க வேண்டாமா?

இப்போ இந்தக் கூட்டத்துல கூட எனக்கு ஒரு கலாச்சார அதிர்ச்சி இருக்கு.. இங்க வந்திருக்கிற மக்கள்ள ஒண்ணு ரெண்டு பேரத் தவிர எல்லாமே ஆம்பிளைங்க.. ஏன் இப்படி.. அது என்னமோ.. நான் என்ன சொன்னாலும் எது எழுதினாலும் அது பரபரப்பாகிடுது. போன வாரம் ஆனந்த விகடன்ல உடம்பு முடியாம ஆஸ்பத்திரில இருந்ததைப் பத்தியும், அங்க கேரளா முதல்வருக்குக் கொடுக்கிற ரூம்ல இருந்ததைப் பத்தியும் எழுதி இருந்தேன். உடனே சாரு அடிச்சு விடுறான் பாருன்னு ஆரம்பிச்சுட்டாங்க. இங்க தமிழ்நாட்டுலதான் முதல்வரப் பிடிச்சு தாங்குறது எல்லாம். கேரளாவுல அப்படிக் கிடையாது. எல்லாரும் சமம்தான். உண்மையில அந்த ரூம் எவ்ளோ கேவலமா இருந்ததுங்கிறது வேறவிஷயம்.

ஒரு சிலரோட பேசும்போதுதான் எனக்கு நல்லா எழுத்தாளர்கள் கூட பேசிக்கிட்டு இருக்கோம்கிற உணர்வு வரும். முன்னாடி அப்படி இருந்த ஆளுங்க.. நகுலன் மற்றும் க.நா.சு. சி.சு.செல்லப்பா கிட்ட பேசினா ஏதோ ஒரு காங்கிரஸ்காரன்கிட்ட பேசுற மாதிரியே இருக்கும்.. அந்த மாதிரி.. இன்னைக்கு எனக்கு எழுத்தாளர் ஒருத்தர் கூட பேசுரோம்கிற உணர்வு எஸ்ரா கூட பேசும்போதுதான் கிடைக்குது. அவர் ஒரு அபாரமான உழைப்பாளி. இந்தப் புத்தகத்துல இருபது படம் பத்தி சொல்லி இருக்கார். நான் சினிமாதான் மூச்சுன்னு வாழுறவன். நானே இந்தப் படங்கள்ல ஒண்ணே ஒண்ணுதான் பார்த்து இருக்கேன்னு சொன்னா.. அவர் எப்படிப்பட்ட உழைப்பாளியா இருக்கணும்? அதனால இது கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகம்.." என்று சொல்லி விட்டு புத்தகத்தில் இருந்து பேருக்கு ரெண்டு பக்கத்தை அடையாளம் சொல்லி விட்டு உட்கார்ந்தார் சாரு. எனக்குத் தெரிந்து அவர் அந்த புத்தகத்தை வாசிக்கவில்லை என்றே தோன்றியது.

வெளிநாட்டு எழுத்தாளர்கள் பற்றிய "செகாவின் மீது பனி பெய்கிறது" என்கிற புத்தகத்தை வெளியிட்டு பேரா.அருணன் சிறப்புரை ஆற்றினார். "உலகின் மிக முக்கியமான எழுத்து ஆளுமைகளைப் பற்றி இந்தப் புத்தகம் பேசுகிறது. எங்கோ இருக்கும் அந்நிய எழுத்தாளன் ஒருவனை நம் நாட்டின் கலாச்சாரத்துக்கு ஏற்ப ஒப்புமைப்படுத்திப் பார்க்க எஸ்.ரமாகிருஷ்ணனால் முடிகிறது என்பதே ஆச்சரியம்தான். எழுத்துக்களை வன்மையாய்ப் படைக்கும் ஆற்றல் பெற்றக் கைகள் டால்ஸ்டாயின் கைகள் என்று இந்தப் புத்தகத்தில் சில வரிகள் வருகின்றன. அது உங்களுக்கும் பொருந்தும்.

நிறைய விஷயங்களை அழகாக சொல்லி இருப்பதற்கு வாழ்த்துகள். முடிக்கும் முன்பாக, உங்களிடம் ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். நீங்கள் நல்லவர். வளர்ந்து விட்ட எழுத்தாளர். புதிதாக வருபவர்கள் ஏதேனும் தவறு செய்தால் அதை மென்மையாக எடுத்துச் சொல்லுங்கள். அவர்கள் திருத்திக் கொள்வார்கள். அதுதான் நீங்கள் வளரும் எழுத்தாளர்களுக்கு செய்யும் முக்கியமான உதவியாக இருக்கும்.." காவல்கோட்டம் பற்றியும் வெங்கடேசன் பற்றியும் எஸ்ரா சொல்லிய கருத்துகளின் மீதான தன வருத்தத்தைப் பதிவு செய்து அமர்ந்தார் அருணன்.

சிறுகதைகளின் தொகுப்பான "அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது" என்கிற புத்தகத்தை பிரபஞ்சன் வெளிட்டு ஆற்றிய சிறப்புரை: "இங்கே இருக்கும் எல்லாரையும் விட நான் சிறப்பாக உடை அணிந்திருப்பதாக முத்துகிருஷ்ணன் கிண்டல் செய்தார். (பிரபஞ்சன் ஆழமான ஊதாப்பூ நிறத்தில் பளபளவென ஒரு சட்டை போட்டிருந்தார்) நான் இதைத் தெரிந்தேதான் செய்கிறேன். எனக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றை நான் வெளிக்காட்டிக் கொள்வதும் கிடையாது, உடையணிவதில் சமரசம் செய்து கொள்வதும் கிடையாது. ஏனென்றால் இன்று நானொருவன் தற்கொலை செய்து கொண்டால் என்னைப் பார்த்து நூறு பேர் தற்கொலை செய்து கொள்வார்கள். நன்றாக எழுத வருபவர்களை கையைப் படித்து அழைத்து வரும் கடமை எனக்கு இருக்கிறது.தமிழ் எழுத்தாளனுக்கு இதுதான் கதி என்று சொன்னால் யாருக்காவது எழுத ஆசை வருமா?

எழுத்தாளன் என்பவன் எப்போதும் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என க,நா.சு சொல்லுவார். தினமும் இரண்டு மணி நேரமாவது எழுத்துக்கென செலவிட வேண்டும். சரி.. தினமும் எழுதுவதென்பது இயலாது. அப்படியானால் என்ன செய்யலாம்? ஆங்கில கதாசிரியர்களின் நாவல்களை மொழிபெயர்க்கலாமே.. எப்படியும் எழுத்தோடு தொடர்பில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதேபோல ஒரு நல்ல எழுத்தாளனுக்கு வாசிப்பும் ரொம்ப முக்கியம். வாசிக்க வில்லையென்றால் நீ முடிந்து போவாய். அதனால்தான் நான் யாரையுமே வாசிக்க மாட்டேன் என்று சொன்ன மனிதர் ஒருவருக்கு 1972இலேயே சரக்கு தீர்ந்து போனது. திரும்பிப் பார்க்கும்போது யாரும் இல்லை. எல்லாரும் முன்னே சென்றுவிட்டார்கள்.

இந்த சிறுகதை தொகுப்பில் இருக்கும் கதைகள் எல்லாமே புனைவின் அசாத்திய எல்லைகளைத் தொட முயலுகின்றன. கிரேக்கத்து முயல் என்றொரு கதை. இதில் எஸ்ராவே ஒரு பாத்திரமாக வருகிறார். என்ன ஒரு சிந்தனை பாருங்கள்? காலம் காலமாக ஆமைகளிடம் தாங்கள் தோற்று வரும் கதைபற்றி கோபம் கொண்டதொரு முயலின் கதையாக இது விரிகிறது. அருமையான கற்பனை. இப்படிப்பட்ட எழுத்துகள் நம்மிடம் இருப்பதே ஒரு பெருமையான விஷயம் இல்லையா? ஆனால் நாம் இத்தோடு தேங்கி நின்று விடக்கூடாது. இதை வெளியில் இருக்கும் மக்களுக்கும் கொண்டு போக வேண்டும். நல்ல தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்த்து எல்லாருக்கும் கொண்டுபோய் சேர்க்கும் பணியை மனுஷ்யபுத்திரன் போன்றோர் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்".

கடைசியாக எஸ்ரா பேச வந்தார். புத்தகங்களைப் பற்றிய ஏற்புரை என்பதைத் தவிர்த்து "அன்டன் செகாவ்" பற்றிய சிறப்புரை ஒன்றை வழங்கினார். "நான் இப்படித் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் உயிர்மையும் மனுஷ்யபுத்திரனும்தான். அவர்களுக்கு என் நன்றி. இன்றைக்கு எழுதுபவனுக்கும் வாசகனுக்கும் இடையே உள்ள தூரம் குறுகி இருந்தாலும், அனைவரும் சந்தித்து உரையாட ஒரு பொதுவெளி தேவைப்படுகிறது. அதற்காகத்தான் இந்தப் புத்தக வெளியீடு விழா. பறவைகள் பறந்து போவது தொடங்கி அவைகள் குழுவாக இணைந்து இயங்குவது வரை பார்த்து தெரிந்து கொள்வதற்கான விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. எந்த ஒரு விஷயமுமே நாம் பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது. இங்கே வந்திருக்கும் ஒவ்வொருவரையும் நான் நிரம்பவே மதிக்கிறேன். அனைவருமே தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமானவர்கள்,. இப்போது சாருவை எடுத்துக் கொண்டால், கிட்டத்தட்ட முப்பத்து ஐந்து வருடங்களாக தொடர்ந்து இயங்கி வருபவர். அவர்கள் எல்லாருமே தங்களுடைய இடத்தை அடைய அத்தனை கஷ்டப்பட்டு இருக்கிறார்கள்.

இங்கே நான் கிளம்பி வரும்போது நண்பர் ஒருவர் கேட்டார். செகாவ் என்பது எங்கே இருக்கும் ரயில்வே நிலையம் என்று.. எனக்கு ஒரே அதிர்ச்சி. ஏன் இப்படி கேட்கிறீர்கள் என்றேன். இல்லை செகாவின் மீது பனி பெய்கிறது என்று எழுதி இருப்பதால் அவ்வாறு புரிந்து கொண்டேன் என்று சொன்னார். இதைப் போன்ற மக்களுக்கும் மிக முக்கியமான ஒரு எழுத்தாளரை அறிமுகம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முயற்சி. ஏன் குறிப்பாக செகாவ்? கிட்டத்தட்ட 550 சிறுகதைகள் எழுதி இருக்கும் ஒரு அற்புதமான கலைஞன். இந்த வருடம் அவருடைய 150 ஆவது ஆண்டு விழா. ரஷ்யாவில் இதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடுகிறார்கள். அவர் வாழ்ந்த இடங்களுக்கு மக்களை சுற்றுலாவாக அழைத்துச் சென்று அவருடைய கதைகளை நடித்துக் காண்பிக்கிறார்கள். அவர் பிறந்த நாடு என்றில்லாமல் ஆஸ்திரேலியாவில் கூட அவரைச் சிறப்பிக்க விழா எடுக்கிறார்கள்.

நிறைய எழுத்தாளுமைகளைப் போலவே தன்னுடைய சிறு வயதில் எண்ணற்ற கஷ்டங்களை அனுபவித்தவர் செகாவ். அப்பா இறந்து போக அவர் பட்ட கடனுக்காக ஒரு சின்னக் கடையில் வேலைக்கு அமர்த்தப்பட்டார். அங்கே தான் பட்ட அவமானகளை எல்லாம் கஷ்டம் என்று எண்ணாமல் பகடி செய்ய ஆரம்பித்ததில் இருந்து தொடங்குகிறது அவருடைய இலக்கியப் பயணம். அவருடைய கதைகளில் மிக முக்கியமானது டார்லிங் எனப்படும் கதை. நான்கு மனிதர்களிடம் அவர்களுக்கெனவே வாழ்ந்து தன்னுடைய தனித்தன்மையைத் தொலைத்து வருந்தும் பெண்ணொருத்தியின் கதையது. இன்னொரு முக்கியமான கதை "பந்தயம்". வாழ்க்கையை சூதாக வைத்து தோற்கும் இரண்டு மனிதர்களின் கதை. சிறை என்பது எத்தனை கொடுமையானது என்பதை அத்தனை அழகாகச் சொல்லி இருப்பார். நாம் கொண்டாட வேண்டிய ஒரு முக்கியமான இலக்கிய ஆளுமைதான் செகாவ்.."அருமையாகப் பேசி முடித்தார் எஸ்ரா.

அற்புதமான நிகழ்வொன்றில் நண்பர்களோடு இணைந்து கலந்து கொண்ட மகிழ்ச்சியோடு புத்தகங்களை வாங்கிக் கொண்டு கிளம்பினோம்..!!!