March 31, 2012

3 - திரைப்பார்வை

இழவு வீட்டில் ஆரம்பிக்கும் முதல் காட்சி. குடிமக்கள் புடைசூழ பாரில் நடைபெறும் நாயகன் நாயகி திருமணம். வி நெக்கும் த்ரீ ஃபோர்த்தும் அணிந்து முதலிரவில் நளினமாய் நடைபயிலும் நாயகி. காதலர்கள் இருவரும் மேற்கத்திய உடையில் ஷாம்பெயன் அருந்தி தங்கள் திருமண நாளை கொண்டாடுகிறார்கள். நாயகனுக்கு மனப்பிறழ்வு. ஆனால், அவனுக்கு சின்ன வயது பாதிப்பு அல்லது அம்மா மீதான அதீத அன்பு என்று க்ளிஷேவாக காரணங்கள் ஏதுமில்லாமல், மனநோய். அவ்வளவே. இப்படியாக தமிழ் மரபு அல்லது நம்பிக்கைகள் என்பதாகச் சொல்லப்படும் பல விசயங்களை விலக்கி வைக்கும் படமாக வெளியாகி இருக்கிறது ஐஸ்வர்யா ஆர் தனுசின் “3”.



தனுஷ் - அவருக்குள் இருக்கும் இன்னொரு தனுஷ் - ஸ்ருதி - 3. தனுஷ் ஸ்ருதி பள்ளிக்காதல் - அவர்கள் திருமணம் - அதன் பின்பான வாழ்க்கை - 3. தனுஷ் - ஸ்ருதி - ஐஸ்வர்யா - 3. தனுஷ் ஸ்ருதி - ஐஸ்வர்யா - செல்வராகவன் - 3. அடப்போங்கப்போ. ஏதோ ஒரு வகையில 3. பள்ளிக்காலத்தில் சந்திக்கும் தனுசும் ஐஸ்வர்யாவும் காதலிக்கிறார்கள். ஐந்து வருடங்களுக்குப் பின் வீட்டை எதிர்த்து திருமணம். நல்லபடியாகப் போய்க்கொண்டிருக்கும் வாழ்வில் இடைவேளைக்குப் பிறகு பிரச்சினை. தனுசுக்கு மனநோய். மனைவிக்குத் தெரியாமல் அதிலிருந்து தப்ப முயல்கிறார். ஆனால் அது இயலாது தோற்கிறார். கடைசியில் அவருக்கு என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை.

பழைய படங்களில் எல்லாம் ஒரு டெம்ப்ளேட் வைத்திருப்பார்கள். பெரிய குடும்பத்தின் தலைவர் என்றால் ரங்காராவ், பண்ணையார் என்றால் மனோகர், கிருஷ்ணர் என்றால் ராமாராவ். அதுப்போல இப்போதைய படங்களில் சைக்கோ என்றால் கூப்புடுறா தனுசை என்கிறார்கள். ஏன்யா, இப்பத்தானய்யா மயக்கம் என்ன வந்துச்சு? கந்தசாமி பார்க்கும்போது வந்த மிகப்பெரிய சந்தேகம் அது எப்படி இந்தாளு தான் நடிச்ச அந்நியன் படத்தையே ரீமேக் பண்ண ஒத்துக்கிட்டாருன்னு. இப்போ அது போயிருச்சு. எல்லாம் ஒரே குட்டைல ஊறுன மட்டைங்க. ஆனா தான் எப்படிப்பட்ட நடிகர்னு கிளைமாக்ஸ் சீன்ல காட்டுறாரு பாருங்க.. அதுதான் தனுஷ். பள்ளிப்பருவ உடல்மொழியும் இரண்டாம் பாதியில் அதற்கு அப்படியே எதிராக மாறும் மனநோய் கொண்டவரும் என பிரித்து மேய்கிறார்.



ஸ்ருதிக்கு இதுதான் முதல் படமாக வந்திருக்க வேண்டும். ஸ்கூல் யூனிஃபார்மில் அத்தனை அழகு. கெச்சலான அவரது உடம்பும் நிமிசத்துக்கு நிமிசம் மாறும் முகபாவனைகளும் அசர அடிக்கின்றன. சொல்லப்போனால் முதல் பாதியின் நாயகன் ஸ்ருதிதான். மாடியில் தனுசின் கையை இன்னும் ஒரு நிமிடம் பிடித்துக் கொள்ளட்டுமா எனும்போதும் முதலிரவில் கணவன் மடியில் அமர்ந்து உறவாடும்போதும் நெஞ்சை அள்ளுகிறார். ஆனால் இரண்டாம் பாதி முழுதும் அவரை அழ வைத்தே காலி செய்கிறார்கள். படத்தில் கவனம் ஈர்க்கும் இன்னொரு மனிதர் சிவகார்த்திகேயன். அவரை ஸ்கூல் பையன் எனச் சொல்வது காமெடியாக இருந்தாலும் தனது ஒன் லைனர்களால் வெளுத்து வாங்குகிறார். இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள் யூ நோ.

படத்தின் முன்பாக தைரியமாக “ எ அநிருத் ம்யூசிக்கல்” என்று போடலாம். பாடல்களிலும் பின்னணி இசையிலும் வெளுத்து வாங்கி இருக்கிறார் மனிதர். குறிப்பாக தீம் ம்யூசிக்கைக் கொண்டு போய் தனுசின் சண்டையில் சேர்த்த விதம் அழகு. பாடல்களைப் படமாக்கியதில் கண்ணழகாவும் இதழின் ஒரு ஓரமும் டாப். எதிர்பார்த்ததைப் போலவே கொலவெறியை படு கேவலமாகப் படமாக்கி இருக்கிறார்கள். போதாக்குறைக்கு பாட்டு பூராவும் விளம்பரங்கள் இருந்தது பெரிய எரிச்சல். ஒளிப்பதிவாளருக்கு முதல் பாதியில் நல்ல வாய்ப்பு. தன்னை வெளிக்காட்டிக் கொள்ள அதைச் சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.



அருமையான காதல், நல்ல நடிகர்கள். அட்டகாசமான இசை என எல்லாம் இருந்தும் இந்தப்படத்தை நல்ல படம் எனச் சொல்ல முடியாமல் போனதற்குக் காரணம் இயக்குனர் ஐஸ்வர்யா. சமீபத்தைய எல்லாப் படங்களையும் போல இதிலும் இரண்டு கதைகள். முதல் பாதி காதல் கதை. இரண்டாம் பாதி சைக்கோ கதை. இரண்டும் ஒட்டவே இல்லை. கணவனின் மேல் அத்தனை பிரியம் கொண்ட பெண் அவனுள் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டுபிடிக்காமலா இருப்பாள்? தன் நிலை இத்தனை மோசம் என்று தெரிந்தும் ஏன் தனுஷ் மருத்துவம் செய்து கொள்ள மறுக்கிறார்? நண்பன் குடும்பம் பற்றி எல்லாம் தெரிந்தும் சுந்தர் ஏன் விட்டு வேடிக்கை பார்க்க வேண்டும்? சுத்தமாக லாஜிக் இல்லாத நிலையில் படம் பார்ப்பவரைப் பெரிதும் சோர்வடையச் செய்கிறது. என்னைக் கேட்டால் முதல் பாதியோடு கூட படத்தை முடித்து மக்களைச் சந்தோசமாக வீட்டுக்கு அனுப்பி இருக்கலாம். அதுவே மூன்று மணி நேரம் படம் பார்த்த உணர்வைத்தான் தந்தது. நன்றாக இருந்தாலும் அத்தனை நீளம். இதில் இரண்டாம் பாதி சைக்கோ என்றதில் பார்ப்பவர்கள் மண்டை காய்ந்ததுதான் மிச்சம்.

படம் முடிந்தபின்னும் எனக்குக் குழப்பமாக இருந்தது. படம் பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் முழுவதும் பிடித்ததா என்றால் அதுவும் இல்லை. அடுத்த படத்தில் திரைக்கதையைச் சரியாக அமைப்பதின் மூலம் இந்தக் குழப்பங்கள் எல்லாம் ஏற்படாமல் இருக்க ஐஸ்வர்யா அருள் புரிவாராக. ஆமேன்.

3 - குழப்பம்.

March 28, 2012

உதிரிப்பூக்கள் - 9

சி நாட்களுக்கு முன்பு ஒரு விசேசத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை போக வேண்டியிருந்தது. பரங்கிமலையில் இருக்கும் நண்பரொருவனின் அறையில் தங்கிக் கொள்வதாக ஏற்பாடு. அதிகாலை ரயிலில் நான் போய் இறங்கியபோது நண்பன் கிளம்பி வேலைக்குப் போய் விட்டிருந்தான். தனது அறையில் இருக்கும் நண்பர் என்னை கவனித்துக் கொள்வார் என்பதாகச் சொல்லி முகவரியையும் குறுந்தகவலாக அனுப்பி இருந்தான். அப்படி இப்படியென்று அலைந்து திரிந்து அந்த முகவரியைக் கண்டுபிடித்தேன்.

அது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. நண்பனின் வீடு இருந்தது முதல் தளத்தில். மேலே ஏறிப் போனால் ஒரே தளத்தில் எதிரெதிராக இரண்டு வீடுகள். எண் எதுவும் சுவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. நான் எது நண்பன் வீடெனத் தெரியாமல் குருட்டாம்போக்கில் ஒரு வீட்டின் மணியை அடித்து வைத்தேன். சற்று நேரத்துக்குப் பின் கதவு திறந்து ஒரு பெண் வெளியே வந்தார். முப்பது வயதிருக்கலாம். வெகு அமைதியான குரலில் யார் வேண்டுமென கேட்டவரிடம் என் நண்பனின் பெயரைச் சொன்னேன். கொஞ்சம் யோசித்துவிட்டு அப்படி யாரையும் தெரியாதெனச் சொல்லிவிட்டு சின்னதொரு சிரிப்போடு உள்ளே போய் கதவைச் சாத்திக்கொண்டார். ஆக எதிர்த்தாற்போல இருக்கும் வீடுதான் நண்பனின் வீடு என்பதை உறுதி செய்து கொண்டு உள்ளே நுழைந்தேன்.

அன்றைக்கு முழுவதும் எனக்கு ஒருமாதிரியாக இருந்தது. எதிர்த்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் கூடவா மனிதர்கள் இருப்பார்கள்? இது மாதிரியான அனுபவங்கள் எல்லாம் எத்தனையோ முறை கதைகளில் பத்திரிக்கைகளில் டிவிக்களில் எல்லாம் பேசப்பட்டு நமக்கு நன்றாகத் தெரிந்த விசயங்கள்தான். ஆனால் எனக்கு நேரடியாக நடப்பது இதுதான் முதல் தடவை. நகரங்களில் என்று தானில்லை. கிராமம் நகரம் என எல்லாப்பக்கமும் இதுதான் மறுக்கமுடியாத நிதர்சனம். பொதுவாகவே இன்றைக்கு சக மனிதர்கள் மீதான அக்கறை என்றால் என்ன என்று கேட்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

சாயங்காலம் வந்த நண்பனிடம் நடந்ததைச் சொன்னேன். அவன் “ஓ எதுத்த வீட்டுல குடி வந்துட்டாங்களா” என்று என்னிடமே ஆச்சரியமாகத் திரும்பிக் கேட்டான். வெளங்கிடும். “எப்படிடா மனுசனுக்கு மனுசன் பழகிக்காம இருக்கீங்க.. ஆத்திரம் அவசரம்னா என்னடா செய்வீங்க” என்கிற என் கேள்வியை வெகு சாதாரணமாக அவனால் கடந்து போக முடிந்தது. “அதெல்லாம் நடக்குறப்போ பார்த்துக்கலாம். மக்க மனுசாளை தெரிஞ்சு என்ன ஆகப்போகுது. காசு பணம் இருந்தா போதும் மச்சி. எல்லாம் தானா நடக்கும் ”

ஆகக் கடைசியில் எல்லாம் இங்கேதான் வந்து முடிய வேண்டுமா? பணம்தான் வாழ்க்கையில் பிரதானம் என்பது மட்டும்தான் உண்மையா? அன்பு நேசம் சக மனிதன் மீதான அக்கறை என்பதாகச் சொல்லப்பட்ட விசயங்கள் எல்லாம் காலத்தில் கரைந்து போய் விட்டனவா? உண்மையில் வாழ்க்கையின் அர்த்தம்தான் என்ன என்பதான கேள்விகளை நான் எனக்குள் மீண்டும் ஒரு தரம் கேட்டுப் பார்க்கிறேன்.

வாழ்க்கை மீதான என் கண்ணோட்டத்தை மொத்தமாக மாற்றியவர் எஸ்.ராமகிருஷ்ணன். நான் என்னவாக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்ததில் அவருடைய எழுத்துக்குப் பெரும்பங்கு உண்டு. ஏன் நம்மால் இப்படி எல்லாம் இருக்க முடியாது என்கிற கேள்வியை எனக்குள் விதைத்து இதுமாதிரியான ஒரு வாழ்க்கையைத்தான் நாம் வாழ வேண்டும் எனக் கற்றுக் கொடுத்தவரும் அவரே. நான் வாசித்த எஸ்ராவின் முதல் எழுத்து விகடனில் வெளியான துணையெழுத்து தான். அப்போது நான் கல்லூரி இறுதி ஆண்டில் இருந்தேன். இப்போதும் அந்த பத்தி மிக நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. அன்பின் விதைகள்.

எஸ்ரா வசிக்கும் பகுதியில் இருக்கும் ஒரு பள்ளிக்கூட காவல்காரர் ஒருநாள் ஐம்பது ரூபாய்க்கு மணியார்டர் எடுத்துக் கொண்டு வந்திருப்பார். யாருக்குப் பணம் அனுப்புகிறீர்கள் என்று விசாரிக்கும் எஸ்ராவுக்கு அவர் பத்திரிக்கையில் வெளியாகி இருக்கும் உதவி தேவை எனும் விளம்பரம் ஒன்றைக் காட்டுவார். “நம்மள மாதிரி மனுசங்க உதவுவாங்கன்னுதான சார் விளம்பரம் கொடுக்குறாங்க” என்கிற அவரது வார்த்தைகள் எஸ்ராவுக்குள் ஏன் இது ந்மக்குத் தோன்றவில்லை என்கிற தீராத குற்றவுணர்வை உண்டாக்கி விடும்.

அதற்கு சில நாட்களுக்குப் பின்பு அந்த காவலரைத் தேடி ஒரு பெண்ணும் சிறுமியும் கிளம்பி வருவார்கள். அது அந்த உதவி கேட்ட மனிதரின் மனைவியும் பிள்ளையும். அவர் நல்லபடியாக சுகமாகி இருக்க அவருக்கு உதவிய அத்தனை பேருக்கும் நன்றி சொல்வதற்காக அவர்கள் கிளம்பி வந்து இருப்பார்கள். இந்த மாதிரியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதாக எஸ்ரா வியந்து சொல்வதோடு அந்த பத்தி முடியும்.

இதனைப் படித்து முடித்து விட்டு இரண்டு நாட்கள் அழுதபடி இருந்தேன். என் வாழ்க்கையை மொத்தமாக மாற்றிப்போட்ட தருணம் அது. ஏன் இது மாதிரி எல்லாம் எனக்குத் தோன்ற வில்லை, இதுநாள் வரை நான் என்ன மாதிரியாக வாழ்ந்திருக்கிறேன் என்றெல்லாம் அந்த எழுத்துகள் என்னை சுயவிசாரணை செய்து கொள்ள வைத்தது. வாழ்க்கையில் நாம் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதான எண்ணங்களை எல்லாம் எனக்குள் விதைத்ததும் அந்தக்காலம்தான். பணத்தின் பின்னால் ஓடுவதைக் காட்டிலும் அன்பு செய்யும் மனிதர்களை சம்பாதித்தால் போதும் எனத் தீர்மானம் செய்து கொண்டேன்.

அந்த எழுத்துகள் உண்மையோ பொய்யோ, அது மாதிரியாக மனிதர்கள் சாத்தியமா இல்லையா என்பதை மீறி என்னை மிகவும் பாதித்தது துணையெழுத்தின் அந்தக் கட்டுரை. ஆனால், அன்பின் விதைகளில் பார்த்தது போல, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், சக மனிதனுக்கு உதவி செய்தால் போதும் என்கிற நல்ல மனம் கொண்ட மனிதர்களை என் வாழ்வில் நான் சந்திப்பேன் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

டிசம்பர் 2006. நான் கொங்கு கல்லூரியில் வேலைக்கு சேர்ந்த நேரம். வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் ஹாஸ்டல் வாழ்க்கை. கல்லூரி நகரில் இருந்து நான்கு கிலோமீட்டர் தள்ளி இருந்தது. ஏதேனும் அவசரத் தேவைக்கு டவுனுக்கு போக வேண்டுமானால் நேரத்துக்கு பஸ் வசதி கூட கிடையாது. கேன்டீன் சாப்பாடும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. எல்லாவற்றையும் உத்தேசித்து மதுரையில் இருந்து பைக்கை கொண்டு போய் ஹாஸ்டலில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.

வெகு தூரத்துக்கு வண்டியில் செல்வது என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. எனவே மதுரையில் இருந்து ஈரோட்டுக்கு வண்டியை ஓட்டிப்போக முடிவு செய்தேன். அன்று கிறிஸ்துமஸ் தினம். லீவுக்கு மதுரையில் இருந்தேன். பைக்கை மத்தியான ட்ரைனுக்கு புக் செய்து விட்டதாகவும், அதே ட்ரைனில் நானும் போக இருப்பதாகவும் வீட்டில் சொல்லி விட்டுக் கிளம்பினேன். வாடிப்பட்டி வரும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. நெடுஞ்சாலை வெறிச்சோடிக் கிடந்தது. வெயிலும் அவ்வளவாக இல்லை. எனக்கு பிடித்த பாடல்களை ஹம் செய்தவாறே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தேன்.

திடீரென எங்கிருந்து வந்ததென தெரியாமலே ஒரு கார் சாலையின் வளைவில் இருந்து வெளிப்பட்டது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பிரேக் போட்டால் பின்னால் வரும் பஸ்காரன் தட்டி விடக் கூடும். சட்டென வண்டியை சாலையை விட்டு இறக்கினேன். இறங்கின இடம் மணல் பிரதேசம் என்பதால் வாரி விட்டது. என் கால் முட்டி போய் தார் சாலையின் முனையில் மோதியது மட்டுமே தெரிந்தது. அடுத்து என்ன நடந்தது என்று என் நினைவில் இல்லை.

எனக்கு நினைவு திரும்பிய போது என் முகத்தின் வெகு அருகே குனிந்து நின்ற மனிதர் ஒருவரைப் பார்த்தேன். வயதானவர். "தம்பி.. தம்பி.. எந்திரிப்பா.." என அவர் தான் என்னை எழுப்பிக் கொண்டிருந்தார். அவர் கண்களில் கலவரத்தை மீறி ஒரு கருணை இருந்தது. நான் எழுந்து கொள்ள முயன்றேன். முடியவில்லை. வலது காலை நகர்த்த முடியாத அளவுக்கு வலி. அவர் என் கைகளை தனது தோளின் மீது போட்டுக் கொண்டு என்னை மெதுவாக எழுப்பினார். வயல் வேலை பார்ப்பவர் போல. அவருடைய உடையில் இருந்த சேறு என் மீதும் அப்பிக் கொண்டது. எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தேன். என் வண்டி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டது இருந்தது.

"வண்டிக்கு ஒண்ணும் பிரச்சினை இல்ல.. அப்படி ஓரமா நிக்கட்டும். விடுங்க தம்பி.. ஏதோ தலைக்கு வந்தது தலைப்பாகையோட போயிருச்சுன்னு சந்தோஷப்படுங்க" பேசியவாறே நடந்தார். அருகில் இருந்த சரிவில் பத்தடி தூரம் நடந்து அவருடைய வீட்டை அடைந்தோம். காரை வீடு. எளிமையாக இருந்தது. அடிபட்டு வந்த என்னைப் பார்த்து அவருடைய மனைவி பதைபதைத்துப் போனார். என்னைத் திண்ணையில் அமரவைத்து காலை சுத்தம் செய்தார். முட்டியில் பெரிய அளவில் வெட்டுக்காயம் இருந்தது. கண்டிப்பாகத் தையல் போட வேண்டி இருக்கும். வேறு எங்கும் பெரிய அளவில் அடிபடவில்லை என்பதை உறுதி செய்து கொண்டார். "கொஞ்சம் பொறுத்துக்கோ தம்பி.. என் மகன் கொஞ்ச நேரத்துல வந்துடுவான்.. பிறகு டாக்டர்கிட்ட போகலாம்.." அந்த அம்மா சொன்னார்.

அவருடைய மகன் வந்ததும் விஷயத்தை சொல்லி என்னுடன் அனுப்பி வைத்தனர். கொடைரோட்டுக்கு பைக்கிலேயே போய் டாக்டரைப் பார்த்து தையல் போட்டுக் கொண்டேன். திண்டுக்கல்லில் இருக்கும் என்னுடைய நண்பனுக்கு போன் வரச் சொல்லி விட்டு, நான் பத்திரமாக போக முடியுமா என்பதை உறுதி செய்து கொண்டு அவர்களின் மகன் கிளம்பிப் போனார். அதன் பிறகும் தையல் போட்ட காலுடன் ஈரோடு வரை வண்டி ஓட்டிப் போனது எனது திமிர்.

என் கால் சரியாக கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆனது. கல்லூரியிலேயே இருந்தேன். ஊருக்குப் போகவில்லை. கால் சரியாகி ஊருக்குப் போன பிறகுதான் அம்மாவிடம் கூட உண்மையைச் சொன்னேன். அம்மா அவர்களைப் பார்க்க வேண்டும் என்றார். அழைத்துக் கொண்டு போனேன். அவர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள். நான் யார் இவர்களுக்கு? முன்பின் தெரியாத ஒருவன் மேல் எதற்காக இவர்கள் இத்தனை அக்கறை காட்ட வேண்டும்? என்னுடைய நன்றியைத் தெரிவித்தபோது அந்தப் பெரியவர் சொன்னார்.. "கண்ணுக்கு முன்னாடி ஒரு உசிரு கஷ்டப்படுரப்ப, ஒதவ முடியாட்டி நாம மனுஷனா பொறந்ததுக்கு அர்த்தமே இல்ல தம்பி.." அன்பின் விதைகளில் நான் வாசித்த மனிதர்கள் என் முன்பாக உயிருடன் அங்கே நின்றிருந்தார்கள்.

வெகு சமீபமாகத் தான் சந்தியாவை எனக்குத் தெரியும். சிவகங்கை தாண்டி இருக்கும் பொறியியல் கல்லூரி ஒன்றில் வேலை பார்க்கிறார். அப்பா கிடையாது. அவருடைய மாத வருமானத்தை மட்டுமே நம்பி வாழும் நடுத்தரக் குடும்பம். இருந்தும், சாயங்காலம் தோறும் ட்யூசன் எடுத்துக் கிடைக்கும் பணத்தை, மாதமானவுடன் அருகிலிருக்கும் ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்குக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் காலை நேர வாக்கிங் வரும் மனிதர்களுக்கு அவரை நன்கு அடையாளம் தெரிந்திருக்கலாம். அந்தப் பகுதியில் பறந்து திரியும் காக்கைகளுக்கு வேண்டுமட்டும் பன் வாங்கி பிய்த்துப் போடுவதை தினமும் தனது கடமையென செய்து கொண்டிருக்கும் அந்த மனிதர் பற்றி என்ன சொல்வது? ஹைதராபாத் பயணத்தில் பர்சைத் தொலைத்து நின்றபோது என்ன ஏதென்று விசாரித்து பணம் கொடுத்து உதவிய பெயர் தெரியாத முதியவர், மதுரையின் சாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பிறழ்ந்தோரைப் பாதுகாப்பதே தன் வாழ்வின் கடமையெனச் சொல்லும் பெயர் சொல்ல விரும்பாத நண்பர், வேலை விட்டு வந்த பின்பாக சாலைப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் தன் நேரங்களை செலவிடும் குமார் எனக் காலம் தொடர்ச்சியாக சில அற்புதமான மனிதர்களை எனக்கு அறிமுகம் செய்தபடியே இருக்கிறது.

லைப்பூவில் எழுதத் தொடங்கியபின்பு அறிமுகம் ஆன நண்பர் அவர். மலேசியாவில் இருக்கிறார். இங்கிருக்கும் ஆதரவற்ற மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் நண்பா எனச் சொல்லி மாதாமாதம் இரண்டாயிரம் ரூபாய் எனக்கு அனுப்பி வைத்தபடி இருக்கிறார். வெகு நாட்களுக்குப் பின்பு ஒருநாள் ஏதோ தோன்ற அவரிடம் கேட்டேன்.

“மலேசியாவுல என்ன வேலை பாக்குறீங்க தல..”

“கூலி வேலைதான் நண்பா. தினமும் பாக்குற வேலைக்குத் தகுந்தா மாதிரிச் சம்பளம்...”

நல்ல மனிதர்கள் இருப்பதால்தான் நாட்டில் இன்னும் மழை பெய்கிறது என்று சொல்லுவார்கள். எனக்குப் பொதுவாக அதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. ஆனால், இது மாதிரியான மனிதர்களைப் பார்க்கும்போது, அது உண்மையாக இருக்க வேண்டும் என்றே ஆசையாய் இருக்கிறது.

March 12, 2012

பெண்மை போற்றுவோம் - "என் விகடன்" பதிவு

(மகளிர் தினத்தை ஒட்டி போன வாரம் ஆனந்த விகடன் - என் விகடன் மதுரை பதிப்பில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்..)

நான் எதற்கும் அஞ்சவில்லை. மாறாக, இதற்கெனவே நான் பிறந்ததாக உணர்கிறேன் - ஜோன் ஆஃப் ஆர்க்

என் வாழ்க்கை பெண்களால் ஆனது. சிறு வயது முதல் இன்று வரை பெண்களுடனேயே பெரும்பாலும் வளர்ந்துள்ளேன். பெண்களே எப்போதும் எனக்குப் பிடித்தமானவர்களாகவும் நெருக்கமானவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். என்னுடைய வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஏதோ ஒரு பெண்ணின் பாதிப்பு என்னுடனே இருந்து வருகிறது. நான் என்று மட்டுமல்ல, நம் எல்லோருடைய வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் பெண்கள் பெரிய பாதிப்புகளை விட்டுச் செல்கிறார்கள். கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்ட அம்மா, வறுமையில் எனக்கான ஸ்கூல் ஃபீஸைக் கட்டிய மாட் மிஸ், எப்போதும் தோள் சாய்ந்து அழும் பால்ய சினேகிதி மீனாட்சி, வாழக் கற்றுத்தந்த தோழி சரோ.. எத்தனை எத்தனை பெண்கள். நான் இன்றிருக்கும் நானாய் இருப்பதில் இவர்கள் எல்லாருக்குமே பங்குண்டு.

உடைந்து போகும் தருணங்களில் எல்லாம் நான் சாய்ந்து கொள்ளும் தோள்களாகப் பெண்களே இருந்திருக்கிறார்கள். அது மாதிரியான சமயங்களில் நம்பிக்கை எனும் வார்த்தைக்கு அர்த்தமாக நான் அடையாளம் காணும் இரண்டு பெண்களைப் பற்றி இங்கே பேச ஆசைப்படுகிறேன். அதில் முதலாவதாக என்னுடைய மிக நெருங்கிய தோழியான சக்தி.

கடலூர் தான் சக்தியின் சொந்த ஊர். அவளை முதன்முதலில் அவள் அப்பா இறந்த வீட்டில்தான் பார்த்தேன். மின்சார வாரியத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சக்தியின் அப்பா திடீரென ஒரு இரவில் நெஞ்சு வலியில் இறந்து போனார். இரண்டு பெண் பிள்ளைகளில் சக்திதான் இளையவள். தெரிந்தவர்களுக்கு தகவல் சொல்லி அனுப்பக் கூட ஆளில்லை. என்ன செய்வது எனத் தெரியாமல் குடும்பமே தவித்த நிலையில் வீட்டின் பொறுப்பை சக்தி ஏற்றுக் கொண்டாள். “எங்க அப்பாவுக்கு பையன் இல்லையேன்னு என்னைக்கும் குறை இருந்ததே இல்லை. நாந்தான் அவருக்கு பொண்ணு பையன் எல்லாமே..” நண்பர்களை உதவிக்கு அழைத்து நிலைமையைச் சொன்னாள். அந்த சங்கடமான நேரத்தில்தான் மற்றொரு நண்பர் மூலம் எனக்கும் அவளுக்குமான அறிமுகம் நடந்தது.

உறவினர்களுக்கு சொல்லியனுப்பவதில் ஆரம்பித்து கடைசி காரியம் வரை எல்லாவற்றையும் முன்னின்று அவளே செய்து முடித்தாள். எல்லாரையும் எதிர்த்துத் தன் அப்பாவுக்கு தானே கொள்ளி வைக்கும் தைரியமும் அவளுக்கு இருந்தது. காரியம் முடிந்து வந்தபோது உறவினர் யாரையும் காணவில்லை. ஆண்பிள்ளை இல்லாத வீட்டில் பொறுப்பு தங்கள் மீது வந்து விடுமோ என்கிற பயம். கலங்கி நின்ற அம்மாவுக்கு அப்போதும் ஆறுதலாக இருந்தது சக்திதான். அலைந்து திரிந்து அப்பாவின் வேலையை அக்காவுக்கு வாங்கிக் கொடுத்தாள். அடுத்ததாக லோன் வாங்கிக் கட்டிய வீட்டின் மீதான கடன் அவர்களைத் துரத்தியது. சக்தி பயப்படவில்லை. தமிழ்நாட்டின் தலைநகருக்கு வண்டி ஏறினாள். ஆறு மாத காலம் நாயாய் அலைந்து திரிய பேங்க் ஒன்றில் வேலை கிடைத்தது. கடுமையான உழைப்பு. இரண்டே வருடத்தில் வீட்டின் மீதான கடனை அடைத்தவள் அக்காவுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தாள்.

இன்றைக்கு சக்தி சென்னையில் சொந்தமாக வீடு வாங்கி அம்மாவோடு நிம்மதியாக வாழ்கிறாள். புதுவீடு புகும் நிகழ்வன்று சக்தியின் அம்மா அழுதபடிக்கு சொன்னது இன்னும் என் நினைவில் இருக்கிறது. “அவர் போனதோட என் வாழ்க்கையே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சேன். ரொம்பப் பெருமையா இருக்குடி..”

எதிர்பாராத நிமிடமொன்றில் தோன்றும் தடைகளைப் புன்னகையோடு கடந்து செல்ல எனக்குக் கற்றுக்கொடுத்தவள் சக்திதான். இடைப்பட்ட காலத்தில் அவளுடைய எல்லா சுகதுக்கங்களிலும் உடனிருக்கும் ஆகச்சிறந்த தோழனாக நான் மாறியிருந்தேன். எப்போதும் அமைதியாக இருக்கும் சக்தி என்னோடு பேசும் நேரங்களில் மட்டும் இலகுவாக மனம் விட்டு சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த தோழி ஒருவர் அவளிடம் கேட்டிருக்கிறார்.

“ஏம்ப்பா.. அவந்தான் உன்னை நல்லாப் புரிஞ்சுக்கிட்டவனா இருக்கான்ல. அவனோட பேசும்போதுதான் நீயும் சந்தோசமா இருக்க. அப்புறம் ஏன் அவனக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது..?”

ஒரு நிமிடம் யோசித்தவள் மெதுவாகப் புன்னகைத்தபடி சொல்லி இருக்கிறாள்.

“எனக்கு எங்கப்பாவ ரொம்பப் பிடிக்கும். அதுக்காக நான் அவரைக் கல்யாணம் பண்ணிக்க முடியுமா? அவனும் எனக்கு அப்பா மாதிரித்தான்..”

ஒரு மனிதனுக்கு இதைவிட மகிழ்ச்சி வேறென்ன இருக்க முடியும்? நட்பு என்கிற இடத்தில் இருக்கும் ஒருவனைத் தன் அப்பா ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கும் அந்தப் பெண்ணின் அன்புக்கு கைமாறாக வாழ்வுக்கும் அவள் தோழனாய் இருப்பதைவிட நான் பெரிதாக என்ன செய்துவிட முடியும்?

சக்தியைப் போலவே நான் பார்த்து ஆச்சரியம் கொள்ளும் இன்னொரு மனுஷி ரம்யா அக்கா. இரண்டு வருடங்களுக்கு முன்பாக இணைய எழுத்துகளின் மூலமாக எனக்கு அறிமுகம் ஆனவர். விதி தன் மீது வீசிய கேலிகளை எல்லாம் நம்பிக்கை என்னும் ஆயுதம் கொண்டு சிரித்தபடி எதிர்கொண்ட அற்புதமானதொரு ஜீவன்.

அவருக்குக்கு சொந்த ஊர் ஹைதராபாத். படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒருமுறை விடுமுறைக்கு உறவினர்கள் வீட்டுக்கு பாம்பே போயிருக்கிறார். அங்கே காபி போடலாமென்று பம்ப் ஸ்டவ்வைப் பற்ற வைக்கப் போய் அது வெடித்து உடம்பெல்லாம் தீக்காயம். முகம் மொத்தமாகக் கருகி விட்டது. நாற்பத்து ஆறு நாட்கள் மருத்துவமனையில் நரக வேதனைக்குப் பிறகு அக்கா இறந்து விட்டதாக அறிவித்து போஸ்ட்மார்ட்டத்துக்குக் கொண்டு போய் விட்டார்கள். ஆனால் அங்கே யாரோ ஒரு புண்ணியவான் முழங்காலில் லேசாக துடிப்பு இருப்பதைப் பார்த்துச் சொல்ல மறுபடி வார்டுக்குக் கொண்டு வந்து பிழைக்க வைத்தார்களாம். என்னுடைய போஸ்ட்மார்ட்டம் பேட்ஜ் நம்பர் பதிமூணு தெரியுமா என அடிக்கடி ரம்யா சிரித்தபடி சொல்வது உண்டு.

உயிர் பிழைத்தாயிற்று. ஆனால் இனி? தன்னால் நார்மலான வாழ்க்கை வாழ முடியாது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முகத்தில் சர்ஜரி செய்ய வேண்டும். அதற்கு எக்கச்சக்கமாகப் பணம் வேண்டும். உறவினர்களின் உதவியை வேண்டாம் என மறுதலித்து விட்டு ரம்யாக்கா சென்னை வந்து சேர்ந்தார். ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் புரோகிராமராக வேலை. கொஞ்சம் கொஞ்சமாக உழைப்பால் உயர்ந்து இன்றைக்கு அந்தக் கம்பெனிக்கு ரம்யாதான் ப்ராஜெக்ட் மேனேஜர். தன் மீது அக்கறை கொண்ட கலைச்செல்வி, சுரேஷ் ஆகியோரோடு ஒரே குடும்பமாக வசித்து வருகிறார். “நாம சந்தோசமா இருக்கணும். நம்மளச் சுத்தி இருக்குற மக்கள சந்தோசமா வச்சுக்கணும். முடிஞ்ச அளவுக்கு இல்லாதவங்களுக்கு உதவணும். போதாதா” என்கிற ரம்யா அக்காவின் எதிர்காலக் கனவு “ஆதரவற்ற மக்களுக்காக ஒரு இல்லம் அமைக்க வேண்டும்..”

எழுத்தின் மூலமாக மட்டுமே அறிந்த ரம்யாக்காவை சந்திக்க வேண்டும் என்று வெகு நாட்களாக ஆசை. அவரைச் சந்திப்பதற்காக சென்னை போயிருந்தேன். ஆனால் அவர் வீட்டுக்குள் நுழையும்போது எனக்கு அப்படி ஒரு காய்ச்சல். இரண்டு நாட்களாகக் கண்களைத் திறக்கக் கூட முடியாமல் படுத்துக் கிடந்தேன். அந்த இரண்டு நாட்களும் என்னருகிலேயே இருந்து என் அம்மா இருந்திருந்தால் எப்படி என்னைப் பார்த்துக் கொண்டிருப்பாரோ அப்படிப் பார்த்துக் கொண்டார் அக்கா. ஒரு கணத்தில் அந்த அன்பின் வேகம் தாங்காமல் பொல பொலவென அழுதுவிட்டேன். ஆதரவாய்த் தோள் சாய்த்துக் கொண்டவர் அன்பாகச் சொனார்..”இதுக்கு எல்லாமா அழுவாங்க.. அக்கா அக்கான்னு வாய் நிறையக் கூப்படுறல.. உனக்காக இது கூடச் செய்யலைன்னா நான் என்னப்பா மனுஷி..” அந்த அன்புதான் ரம்யாக்கா. ஒவ்வொரு பெண்ணுக்கு உள்ளும் தாய்மை உண்டு என்பதை நான் உணர்ந்த கணம் அது. அன்றைய தினத்தையும் அவர் அன்பையும் என்னால் வாழ்நாளுக்கும் மறக்க முடியாது.

எல்லாக் கணங்களிலும் அன்பு நம்பிக்கை என ஏதோவொரு பெண் நம் நினைவுகளில் இடறிப் போகிறார். சமூகம் தனக்கான இடத்தை வழங்க மறுத்தாலும் தன் தேடலைத் தொடர்ந்தபடி உற்சாகமாகத் தன்னிருப்பை உறுதி செய்து கொள்ள முனையும் பெண்களின் போராட்டம் தொடர்ந்தபடியே இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றங்களைப் பெண்கள் உணரத் தொடங்கியிருக்கும் இந்த வேளையில் பாரதியின் வரிகளை நினைவு கூறுவதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன். “மங்கையராய் பிறந்திடவே மாதவம் செய்திட வேண்டுமம்மா..” வாழ்க்கையின் எல்லாமுமாக இருக்கும் தன்னம்பிக்கைப் பெண்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.

March 8, 2012

உதிரிப்பூக்கள் - 8

போ மாதத்தில் ஒரு காலை நேரம். பெரியார் பேருந்து நிலையத்தில் நானும் உடன் வேலை பார்க்கும் நண்பரொருவரும் கல்லூரிப் பேருந்துக்காக காத்திருந்தோம், கூடவே சில மாணவர்களும். வெகு நேரம் ஆகியும் பேருந்து வரவில்லை. என்ன ஏதென்று புரியாமல் கல்லூரி மேலாளருக்கு போன் செய்தேன்.

“நம்ம ஃபர்ஸ்ட் இயர் பொண்ணு ஒண்ணு இறந்து போச்சு சார். அதனால காலேஜ் லீவு. முடிஞ்சா ஒரு எட்டு போயிட்டு வந்துருங்களேன். உங்க பஸ்ல வர்ற பிள்ளைதான் சார்..”

எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. நான் முதலாம் வருடத்துக்கு வகுப்புகள் எடுப்பதில்லை என்பதால் அந்தப்பெண் யார் எனத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் தினமும் பேருந்தில் என்னோடு பயணிக்கக்கூடியவள் என்பதால் கண்டிப்பாக நான் அவளைப் பார்த்திருக்க வேண்டும். நண்பரோடு கேதம் கேட்கக் கிளம்பினேன்.

அந்தப் பெண்ணினுடைய வீடு திருப்பரங்குன்றத்தில் இருந்தது. தெப்பக்குளத்துக்கு முன்பாக இருந்த சந்துக்குள் நாங்கள் நுழைந்தபோது மொத்த ஊரும் அங்கே திரண்டு இருந்தது. கல்லூரியில் இருந்து வெகு சில மாணவர்களும் வந்திருந்தனர். அனைவருடைய முகத்திலும் இருள் அப்பிக் கிடந்தது. நாங்கள் உள்ளே நுழைய வேகமாக ஊர்மக்கள் விலகி வழி ஏற்படுத்தித் தந்தார்கள்.

“வெலகுங்க வெலகுங்க.. சாருமாரெல்லாம் வந்திருக்காங்க..”

வீட்டு வாசலில் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் அந்தப் பெண்ணைக் கிடத்தி இருந்தார்கள். தூங்குவது போல சாதாரணமாக இருந்தாள். எனக்குப் பரிச்சயமான பெண்தான். அடிவயிற்றைப் பிசைந்து அழுகை வருவது போல இருக்க அடக்கிக் கொண்டேன். அந்தப் பெண்ணின் தலைமாட்டில் அவளுடைய தாய் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார். எங்களைப் பார்த்தவுடன் அவர் அழுகை இன்னும் அதிகமானது.

“அடியே நான் பெத்த தங்கமே.. உன் சாரெல்லாம் வந்திருக்காங்க.. கண்ணத் தொறந்து பாருடி ராசாத்தி.. அய்யோ..”

அவர் அழ என்னால் அங்கே நிற்க முடியவில்லை. திரும்ப முயன்றபோது வீட்டுக்குள் கடிகார அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டது.

“காலைல நான் படிக்கணும்னு அலாரம் வச்சுட்டுப் படுத்தாளே.. இப்போ அலாரம் தொடர்ச்சியா அடிக்குது. ஆனா எம்மவ எந்திரிக்க மாட்டேங்குறாளே.. அய்யோ சார்.. தயவு செஞ்சு அவள எந்திரிக்கச் சொல்லுங்க சார்.. படிக்கச் சொல்லுங்க சார்..”

நெஞ்சில் அடித்தபடி அழும் அந்த அம்மாவை நான் என்ன சொல்லி சமாதானம் செய்ய இயலும்? பல்லைக் கடித்துக் கொண்டு வெளியே வந்தேன். இத்தனை காலம் ஆகியும் நான் உசுரோட கெடக்க சின்னப் புள்ளய அவன் எடுத்திக்கிட்டானே பாவிப்பரப்ப என்று ஒரு மூதாட்டி தெரு வாசலில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார். அழுகுரல்கள் தொடர்ந்து கேட்க சூழலின் கனம் தாங்காமல் அங்கிருந்து வேகமாக விலகி வெளியே வந்தவனுக்குள் ஒரே ஒரு கேள்வி மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டே இருந்தது. ஏன் இப்படி?

வாழ்க்கையின் விடை தெரியாத பல கேள்விகளுக்குள் என்னை துரத்திக் கொண்டே இருக்குமொரு விசயம் - மரணம். உண்மையில் மரணம் என்பதுதான் என்ன? அது ஒரு வாழ்க்கைக்கான முற்றுப்புள்ளியா அல்லது மற்றொரு வாழ்வுக்கான ஆரம்பமா? மரணத்துக்குப் பின்பாக நாம் என்னவாக ஆகிறோம்? எதற்கும் என்னிடம் பதில்கள் இல்லை. ஆனால் மரணம் குறித்தான பயம் மட்டும் ரொம்பப் பெரிதாக இருக்கிறது. நானோ அல்லது எனது நினைவுகளோ இல்லாமல் போகும் சூழலை என்னால் எப்போதும் கற்பனை கூட செய்து பார்க்க முடிவதில்லை. ஒரு மனிதன் பிறக்கும்போதே நிச்சயிக்கப்படும் விசயம் அவனுடைய மரணம் என்பதாகச் சொல்லுவார்கள். இருந்தும் நாம் ஏன் மரணத்தைக் கண்டு பயப்படுகிறோம்?

மாணவியின் மரணம் பற்றிச் சொல்லும்போது இதையெல்லாம் என் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தேன். பொறுமையாகக் கேட்டவர் நிதானமாகச் சொன்னார்.

“இங்க சாவு பிரச்சினை இல்லடா தம்பி. ஆனா அந்த சாவு எப்போ எப்படி வருதுங்கிறது தான் நிறைய பேருக்கு பிரச்சினை. வாழ வேண்டிய வயசுல சாகுறது, நோயில கெடந்து செரமப்பட்டுப் போறது, வாழுறதே அடுத்தவங்களுக்கு பாரமா ஆகிடுறது.. இதெல்லாம் இருக்கக் கூடாது. ராத்திரி தூங்கப் போறேன்னு படுத்தாங்க.. காலைல போயிட்டாங்க.. அப்படின்னு சொல்ற மாதிரியான நிம்மதியான சாவு கிடைக்கக் குடுத்து வச்சிருக்கணும்டா..”

னக்கு விவரம் தெரிந்து மரணத்தை முதல் முறையாக நேரில் பார்த்தபோது பனிரெண்டு வயதிருக்கும். சுப்பிரமணியபுரம் ரயில்வே லைன் அருகே நடந்து வந்து கொண்டிருந்தேன். தூரத்தில் மக்கள் கும்பலாக நின்றிருந்தார்கள். வேகமாக அவர்களை நோக்கி நடந்து போனேன். போகும் வழியில் ஒரு மனிதக்கால் கிடந்தது. தொடையிலிருந்து அறுந்து விழுந்த கால். என்னவென்று புரியாமல் மேலே நடந்தேன். இன்னும் சற்றுத் தொலைவில் முட்டியிலிருந்து பிய்ந்து போன கை ஒன்று கிடந்தது. பயந்து போனவனாக முன்னேறிப் போய் கூட்டத்துக்குள் பார்த்தேன்.

அங்கே ஒரு பெண் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்தார். உடம்பில் மீதமிருந்த ஒரு கையும் காலும் கூட பேருக்குத் தான் ஒட்டிக் கொண்டிருந்தன. வழியில் நின்றிருந்த ரயிலின் நடுவே அவசரமாக ஏறிக் குதிக்க முற்பட்டிருக்கிறார். அந்த வேளையில் ரயில் கிளம்பிவிட இந்த அம்மா உள்ளே சிக்கிக் கொண்டிருக்கிறார். கொஞ்ச தூரம் இழுத்துக் கொண்டு போய் பகுதி பகுதியாக அற்று வீசிவிட்டு ரயில் போய் விட்டிருந்தது.

அந்தப் பெண்மணி தண்ணீர் தண்ணீர் என்று அரற்றிக் கொண்டிருந்தார். யாரும் அவர் கிட்டே போகவில்லை. கால்மணி நேரம் கழித்து போலிஸ் அங்கே வந்து சேர்ந்தபோது அந்த அம்மா இறந்து போயிருந்தார். சின்ன வயதில் நான் பார்த்த அந்த மரணத்தையும் மாறுகால் மாறுகை வாங்கப்பட்டவர் போல அவர் கிடந்த கோலத்தையும் இப்போது நினைத்தால் கூட எனக்கு பயமாக இருக்கும்.

தினமும் தொலைக்காட்சிகளில், நாளேடுகளில் எல்லாம் விபத்து கொலை தற்கொலை எனப் பல மரணங்கள் பற்றித் தெரிய வருகிறது. ஆனால் அவை எல்லாம் நமக்குள் பெரிய பாதிப்பை உண்டு பண்ணுவதில்லை. நமக்கோ அல்லது நமக்கு நெருக்கமான மனிதர்களுக்கோ எதுவும் நடக்காதவரைக்கும் அவை நமக்கு வெறும் செய்திதான். அவ்வாறு சொல்வது உண்மை என்பதாக மரணங்களை வெறும் செய்திகளாகவே அணுகிக் கொண்டிருந்த எனக்கு அது உண்டாக்கக்கூடிய வலியையும் பாதுகாப்பின்மையையும் முதல்முறையாக உணர்த்தியது நண்பன் முத்துகண்ணனின் சித்தியினுடைய மரணம்தான்.

கண்ணனுக்கு என யாரும் கிடையாது. தன் சித்தி வீட்டில் ஒட்டிக் கொண்டு தன் வாழ்வை நடத்தி வந்தான். திடீரெனக் கான்சரில் அவனது சித்தி இறந்துபோக அதற்குமேல் அந்த வீட்டில் இருக்க உறவினர்கள் அவனை அனுமதிக்க வில்லை. நடுரோட்டுக்கு வந்துவிட்டவனை ஆறுதல் சொல்லி நண்பர்கள்தான் பார்த்துக் கொண்டோம். ஒரு மரணம் ஒரே நாளில் அவனுடைய வாழ்க்கையை மொத்தமாக மாற்றிப் போட்டதைப் பார்த்தபின்புதான் எனக்கு மரணத்தின் தீவிரம் புரிந்தது. மதுரை தத்தநேரி இடுகாட்டிற்கு நான் முதன்முறையாகப் போனதும் அந்த மரணத்தின் போதுதான். அந்தப் பக்கமே போனதில்லை என்கிற பாவத்துக்கு பக்கத்து வீட்டு அக்கா ஒருவரின் மரணம், சாமியின் அப்பா மரணம் என ஒரே வருடத்தில் மூன்று முறை அங்கே போய்வரும் நிலை எனக்கு ஏற்பட்டது.

ன்னுடைய வீட்டில் எனக்குத் தெரிய நிகழ்ந்த முதல் மரணம் என் அப்பாவைப் பெற்ற தாத்தாவினுடையது. அவர் இறந்த மூன்று மாதத்துக்குள்ளாகவே அப்பா பாட்டியும் இறந்து போனார். சின்ன வயதில் இருந்தே அவர்களை எனக்குப் பிடிக்காது என்பதாலும் என் அம்மாவை அவர்கள் நிறைய படுத்தி இருக்கிறார்கள் என்பதாலும் இருவருக்குமே என்னால் நீர்மாலை எடுக்கவும் சட்டி தூக்கவும் முடியாது என அப்பாவிடம் சொல்லி விட்டேன். விசேசம் எல்லாம் முடித்துவிட்டு வந்த அப்பா என்னிடம் கோபமாகக் கத்தினார்.

“நாளைப்பின்ன உங்க அம்மாச்சி தாத்தாவுக்கு ஏதாவது நடக்கும்ல.. அப்பயும் நீ இப்படித்தான் நிக்குறியான்னு பாக்குறேன்..”

அப்படிப் பேசினார் என்பதற்காக நான் என் அப்பாவிடம் இரண்டு வருடம் பேசாமல் இருந்தேன். அவர் என்னைத் திட்டியது பெரிதாக வலிக்கவில்லை. ஆனால் என் பிரியத்துக்குரிய தாத்தாவையும் அம்மாச்சியையும் கண்டிப்பாக மரணம் ஒருநாள் பறித்துக் கொள்ளும் என்கிற அவர் வார்த்தைகளின் உண்மைதான் எனக்குப் பெரும்பாரமாக இருந்தது.

பெருந்துறையில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது தாத்தாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனது. இன்னும் ஒருநாள் தாங்கினால் அதிசயம் என்கிற நிலையில்தான் எனக்கு போன் செய்தார்கள். நான் மதுரை வந்து சேர்ந்தபோது தாத்தா ஐ சி யூவில் இருந்தார். அன்று முழுவதும் அவர் அருகிலேயே இருந்தேன். எப்படியாவது அவர் பிழைத்துக் கொள்ள மாட்டாரா என்கிற ஏக்கம் மட்டும் எனக்குள் நிரம்பிக் கிடந்தது.

பிரார்த்தனைகள் பலிக்க யாரும் எதிர்பார்க்காத வண்ணம் எனது தாத்தா பிழைத்துக் கொண்டார். இன்னும் சில நாட்களுக்கு அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று டாக்டர் சொன்னதைக் கேட்டு சந்தோசமாக வெளியே வந்தேன். மருத்துவமனை வாசலில் நின்று என் சின்ன அத்தை மாமாவிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“இப்ப இவர் பிழைக்கலைன்னு யார் அழுதா. முடிஞ்சிருந்தா தூக்கிப் போட்டுட்டு பொழப்பப் பாக்க போயிருக்கலாம். இனி மறுபடி இந்த ஆளுக்கு பீ மூத்திரம் அள்ளிப்போட்டு எல்லாக் கருமமும் நான் தான பாக்கணும்..”

என் வாழ்வில் நான் மொத்தமாக நொறுங்கிப் போன தருணம் அது. இத்தனை நாள் தங்களை வாழ வைத்த மனிதர் இல்லாமல் போனால் நல்லது என அவர்களைச் சொல்ல வைத்தது எது? மரணத்தை விடக் கொடுமையான முதுமையின் கோர முகத்தை நேருக்கு நேர் சந்தித்த அந்த வேளையில் நான் என்ன செய்வதெனப் புரியாமல் திகைத்து நின்றேன்.

அதற்கு ஆறு மாதங்களுக்குப் பின்பு தாத்தா மரணமடைந்த போது எனக்கு அழுகை வரவில்லை. மாறாக வெகு ஆசுவாசமாக இருந்தது. இந்த மனிதர்களின் நடுவே சீப்பட்டுக் கிடப்பதை விட நிம்மதியாக அவர் போய்ச் சேர்ந்து விட்டார் என்கிற பத்திர உணர்வுதான் மனதுக்குள் தோன்றியது. இப்போது இதை எழுதும் கணத்தில் என் அம்மா சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. சாவு என்பதைக் காட்டிலும் அது என்ன மாதிரியான சாவு என்பதில்தான் அடங்கி இருக்கிறது வாழ்வின் நிறைவு.

தையோ யோசித்தபடி வீட்டுக்குள் நுழைகிறேன். தனது அறைக்குள் அமர்ந்து என் அம்மாச்சி தனக்குத்தானே பேசிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய இரண்டாம் குழந்தமைக்குள் இருக்கும் அவருக்குத் தான் செய்வது எதுவும் புரிவதில்லை. நிறைய பொய் சொல்லவும் திருட்டுத் தனங்கள் செய்யவும் ஆரம்பித்து இருக்கிறார். இப்போதெல்லாம் பொறுமை இழந்து அம்மாவும் அவரை நிறையத் திட்டுகிறார்.

ஜெயமோகன் நான் கடவுளில் ஒரு வசனம் எழுதியிருப்பார். வாழ இயலாத மக்களுக்குக் கிடைக்கும் மரணமும் ஒரு வரம்தான். எந்த வலியுமின்றி பிறருக்கு எந்தத் தொந்தரவுமின்றி யார் வாயிலும் விழாமல் மரணம் சீக்கிரமாக அம்மாச்சியைத் தன்வசம் அழைத்துக் கொள்ளப் பிரார்த்தித்தபடி இருக்கிறேன்.

March 3, 2012

அரவான் - திரைப்பார்வை

சாகித்ய அகாடமி விருது பெற்ற காவல் கோட்டம் நாவலை அடிப்படையாகக் கொண்டு அரவானை உருவாக்கி இருக்கிறார் வசந்தபாலன். மதுரையின் நீண்ட வரலாற்றைப் பேசும் நாவலின் ஒரு பகுதியான பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கள்வர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்ய முயன்றிருக்கிறார்கள். சமீப காலமாக தமிழ் சினிமாவைப் பெரிதாய் ஆக்கிரமித்திருக்கும் பீரியட் பிலிம் மேனியாவில் (மாவீரன் எஃபெக்ட்?!!!) முதல் படமாய் வெளியாகி இருக்கிறது அரவான். டி சிவாவின் அம்மா கிரியேசன்ஸ் தயாரிப்பு.



கள்வர்கள் வாழும் கிராமம் வேம்பூர். ஊருக்குள் பெரிய கொத்து கொம்பூதியுனுடையது. அதில் புதிதாக வந்து சேருகிறான் அநாதையான வரிப்புலி. முதலில் அவனை வெறுக்கும் ஊர்மக்கள் அவன் திறமையைப் பார்த்து தங்களில் ஒருவனாக ஏற்றுக் கொள்கிறார்கள். யாருமே திருட முடியாத கோட்டையூர் காவலை உடைத்துத் திரும்புகையில் காவலர்களிடம் சிக்கிக் கொள்கிறான் கொம்பூதி. அப்போது தன் உயிரைப் பணயம் வைத்து கொம்பூதியைக் காக்கிறான் வரிப்புலி. இருவருக்குமான நட்பு இன்னும் அத்தியந்தம் ஆகிறது.

தன் தங்கையை மணக்கும்படி கேட்கும் கொம்பூதியிடம் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்ட உண்மையைச் சொல்லும் வரிப்புலியின் உண்மையான பின்புலம் என்ன? மாடுபிடி ஒன்றில் வேம்பூரின் மானம் காக்கக் களமிறங்கும் அவனை ஒரு கும்பல் அடித்துக் கைது செய்கிறது. கூடவே அவன் சின்னியவீரம்பட்டியின் பலியாள் என்றும் சொல்லிப் போகிறது. என்ன காரணத்துக்காக புலி பலியாள் ஆக்கப்பட்டான்? இறுதியில் வரிப்புலியின் முடிவு என்ன ஆனது என்பதைச் சொல்லும் கதைதான் அரவான்.



படத்தின் முதல் பாதியின் நாயகன் - கொம்பூதியாக வரும் பசுபதி. தொண்ணூறுகளில் நாசர் என்றால் இப்போது பசுபதி. தனக்குத் தரும் எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் சரியாகச் செய்யும் மனிதர். இரண்டாம் பாதி வரிப்புலி ஆதிக்குச் சொந்தம். ஆள் பார்க்க அட்டகாசமாக இருக்கிறார். கடுமையாக உழைத்து இருக்கிறார். ஆனால் அவருடைய குரலும் வசன உச்சரிப்பும் சுத்தமாக பழங்காலத் தமிழுக்கு ஒட்டவில்லை. ஆதியின் மனைவியாக வரும் தன்ஷிகாவுக்கும் இதே பிரச்சினைதான். படத்தின் நடுவே அங்கங்கே சிரிக்க வைக்கிறார் சிங்கப்புலி. பரத்தும் அஞ்சலியும் கண்டிப்பாக இந்தக் கதாபாத்திரங்களை செய்திருக்க வேண்டிய அவசியமில்லை.

படத்துக்கு மிகப்பெரிய பலம் சித்தார்த்தின் ஒளிப்பதிவு. நிறைய வித்தியாசமான கோணங்களில் அழகாகப் படம் பிடித்து கவனம் ஈர்க்கிறார் மனிதர். நிலா நிலா பாடலில் ஒரு மரத்தூருக்குள் முயங்கிக் கிடக்கும் ஆதி-தன்ஷிகா காட்சி ஒன்று போதும் படத்துக்கு. இன்னொரு அழகான இடம் ஆதி பசுபதியைக் காப்பாற்றும் காட்சி. நம்மால் முடிந்த கிராஃபிக்சோடு அழகாகப் படமாக்கி இருக்கிறார்கள். இது மாதிரியான பீரியட் படங்களில் கலை இயக்கம் பற்றி நிறைய பேசுவார்கள். நன்றாக இருந்தாலும் அரவானில் சில தவறுகளும் இருப்பதாகவே எனக்குப் பட்டது. குறிப்பாக அஞ்சலியின் உடை அமைப்பு சுத்தமாக அந்தக் காலகட்டத்துக்குப் பொருந்தாது போல எனக்கொரு உணர்வு. இசையமைப்பாளராக கார்த்தி அறிமுகம். பாடல்கள் எல்லாமே நிறைவு. பின்னணி இசையும் எனக்குப் பிடித்தே இருந்தது.



தனக்கு இலக்கியப் பரிச்சயம் உண்டு என்பதையும் வெவ்வேறு தளங்களில் படம் எடுப்பதே தனக்குப் பிடிக்கும் என அடிக்கடி சொல்லி வருபவர் வசந்தபாலன். அரவான் ஒரு அற்புதமான முயற்சி. முடிந்த அளவுக்கு நேர்மையாக சொல்ல முயன்று இருக்கிறார் மனிதர். கதையில் ஒரு இடத்தில் அறிமுகம் ஆகும் ராசா திக்கித் திக்கித் தமிழ் பேசுவார். என்னடா இது என்று யோசிக்கையில் பின்பு தான் ஞாபகம் வந்தது அது நாயக்கர் ஆண்ட காலம் என்பதும் ராசா தெலுங்கு பேசுபவர் என்பதும். இது மாதிரியான சின்ன சின்ன விசயங்களாக நிறைய பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள்.

ஆனால் சரியான கதையைத் தெரிவு செய்தவர் திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார். ஆதியின் கதையைச் சொல்லும் இரண்டாம் பாதி சரியான இழுவை. கதை நகர்வேனா என்கிறது. வித்தியாசமகப் படம் பண்ண வேண்டும் என்கிற தைரியம் இருக்கும் இயக்குனர்கள் கூட ஏன் படத்தில் கண்டிப்பாகப் பாடல்கள் வேண்டும் என அடம்பிடிக்கிறார்கள் எனப் புரியமாட்டேன் என்கிறது. அதைப் போலவே எக்கச்சக்க கேள்விகளும். காவல்காரனான ஆதி பிழைக்க வேறு வழியே இல்லாமல் ஏன் திருடனாக வேண்டும்? தேட்டை போட்டதை எல்லாம் பசுபதி வருவார் என்பதற்காகவே உருண்டை போட்டு வைத்தாரா? ராசா காணாமல் போனால் பாளையம் என்ன ஏது என்று தேடாதா? நிறைய கேட்டுக் கொண்டே போகலாம். அத்தோடு படத்தில் பயன்படுத்தி இருக்கும் பேச்சுத்தமிழ். நாம் முந்தைய காலத்தின் பதிவொன்றைப் பார்க்கிறோம் என்கிற உணர்வே சுத்தமாக இல்லை.

படத்தில் சில இடங்களில் அபோகாலிப்டோவின் பாதிப்பு. படத்தின் முடிவைப் பொறுத்தவரைக்கும் வசந்தபாலன் ஒரு தீர்மானத்தோடு இருந்திருக்கிறார். கண்டிப்பாக தன் படங்கள் சோகமாகத்தான் முடிய வேண்டும் என்கிற எண்ணம் மனிதருக்கு இருக்கிறது. ஆதியை அடித்து இழுத்து வரும் காட்சிகளில் இயேசுவின் இறுதிப்பயணம்தான் நினைவுக்கு வந்தது. படம் முடிந்து மரண தண்டனையை ஒழிப்போம் என்று ஸ்லைடு போட்டார்கள். அதற்கும் இந்தப் படத்துக்கும் என்ன சம்பந்தம் எனப் புரியவில்லை. வெறுமனே இந்தக் காலத்துக்குப் பொருந்தக்கூடியது எனப் போட்டார்களோ என்னமோ?

அரவான் மீது எனக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஒரு அனுபவமாக படம் அதை நிறைவேற்றவில்லை என்றுதான் சொல்லுவேன். திரைக்குழுவினரின் கடுமையான உழைப்பு, கள்வர்கள் வாழ்வின் மீதான பதிவு என்பதற்காகப் பார்க்கலாம்.