January 30, 2010

மழைக்காதலன்..!!!


மழையைப் பற்றிய கவிதையொன்றை
படித்த நாள் முதலாய்
பெரும் ரசிகனாகிப் போனேன்
மழைக்கும் அதை எழுதிய கவிஞனுக்கும்

ஜன்னலின் பின்னே ஓரமாய் நின்று
ரசிக்க மட்டுமே பழகி இருந்த எனக்கு

மழையின் உன்னதத்தையும்
நனைவதின் ஆனந்தத்தையும் சொல்லி
சக்கரவாகமாய் மாறிப்போகும் ஆசையை
உள்ளே விதைத்து சென்றது அந்தக் கவிதை

அரும்பாடு பட்டு எங்கெங்கோ தேடி
அதை எழுதியவரின்
முகவரியைக் கண்டுபிடித்து
சந்திப்புக்கான நாளும் குறிக்கப்பட்டது

ஆசிர்வதிக்கப்பட்டதாய்
நான் நம்பிக் கொண்டிருந்த
அந்த நாளில் - கிளம்பும் வேளையில்
கூட வரும் நண்பனாய்
மழையும் சேர்ந்து கொள்ள
உற்சாகப் பந்தாய் மாறிப் போனது மனது

உள்ளம் நனைத்த மழையின் ஊடாக
ஆனந்தக் கூத்தாடியபடி
அவரின் வீட்டை அடைய

சின்னதொரு புன்முறுவலோடு
வாசல் வந்து வரவேற்றவர்
அலுத்துக் கொண்டே சொன்னார்

"ச்சே.. நாசமாப் போன மழை..
எல்லார் பொழப்பையும் கெடுக்குது..
இல்லீங்க?"

அதன் பிறகு அவரிடம்
என்ன பேசுவதெனத் தெரியாமல்
மௌனமாகத் திரும்பி விட்டேன்..!!!

January 28, 2010

உக்கார்ந்து யோசிச்சது (28-01-10)..!!!

நாமும் உருப்படியாய் ஏதாவது செய்ய வேண்டும் என்று ரொம்ப நாளாக பேசி வந்து, கடைசியாக ஒரு நல்ல விஷயத்தை செய்யும் போது இன்னொரு நல்ல விஷயமும் தானாக நடந்தேறினால்...? குழந்தைகள் மனநலம் பற்றி டாக்டர்.ஷாலினியின் நிகழ்ச்சி ஞாயிறு (31-01-10) அன்று நடக்க இருப்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இதே சமயத்தில், வரும் வெள்ளிகிழமை (29-01-10) அன்று அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுக்கு மதுரை தமிழ்ப்பதிவர் குழுவின் மூலமாக நம் பதிவுலகம் பற்றிய ஒரு அறிமுகப் பயிலரங்கமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பத்து நாள் பசியோடு திரிந்தவனுக்கு கோழி பிரியாணியும், இருட்டுக்கடை அல்வாவும் (குவார்ட்டர் என்று அசைவப் பிரியர்கள் சொல்லிக் கொள்ளலாம்.. ஹி ஹி ஹி) கிடைத்தது போல இருக்கும் அல்லவா.. அப்படித்தான் உணர்கிறேன்.



இந்த நிகழ்ச்சிக்கு இருக்கும் வரவேற்பை வைத்து மதுரையில் இருக்கும் மற்ற பல கலைக்கல்லூரிகளுக்கும் பதிவர் பட்டறை ஒன்றை நடத்தலாம் என்று யோசித்து வருகிறோம். பார்க்கலாம்.

***************

குடியரசு தினம் அன்று கொடியேற்றும் நிகழ்ச்சிக்காக கல்லூரிக்கு போய்க் கொண்டிருந்தேன். கரிமேடு பகுதியை கடக்கும்போது, கிட்டத்தட்ட எழுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர், கையில் தேசியக்கொடியை வைத்துக் கொண்டு வருவோர் போவோரிடம் எல்லாம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று நீட்டிக் கொண்டிருந்தார். அவசரத்தில் நிற்காமல் அவரை தாண்டிப் போய் விட்டேன். ஆனால் கல்லூரிக்கு போனபின்னும் அவருடைய முகம் கண்ணுக்குள்ளேயே இருந்தது. எந்தவித பிரதிபலனும் பாராமல் நாட்டுக்காக தன் கடமையை ஆற்றிக் கொண்டிருந்த அவரை நினைக்கும்போது ரொம்பப் பெருமையாகவும், அதனை மதிக்காமல் கடந்து வந்து விட்டோமே என என் மீதே கோபமாகவும் இருந்தது.

கல்லூரி நிகழ்ச்சி முடிந்ததும் இருப்பாரோ மாட்டாரோ என்ற சந்தேகத்துடனேயே அவரைத் தேடி வந்த வழியே போனேன். மனிதர் அங்கேதான் இருந்தார். அவரிடம் போய்க் கேட்டு கொடியை வாங்கி சட்டையில் குத்திக் கொண்டபோது அவர் முகத்தில் வந்த சந்தோசம் இருக்கிறது பாருங்கள்.. வார்த்தைகளில் சொல்ல முடியாது. இதுபோன்று நாட்டை நேசிக்கும் மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பது மனதுக்கு கொஞ்சம் நெகிழ்வாக இருந்தது.

***************

அண்ணன் தண்டோராவின் புண்ணியத்தில் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்ஜியுடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினார். இந்தப் படத்துக்காக தாங்கள் தேடி அலைந்த விஷயங்களைப் பற்றியும், பட்ட கஷ்டங்கள் பற்றியும் நிறையவே சொன்னார். அவர் சொன்னதில் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம்.. "நம் மூதாதையர்களின் சரித்திரம் சரியாகப் பதிவு செய்யப்படவில்லை" என்பதும் "நம் மக்களின் வாழ்க்கை முறையின் பல விஷயங்கள் நமக்குத் தெரியாமலே போய் விட்டன" என்பதுதான். "பழங்கால மன்னர்கள் எத்தனையோ நல்ல விஷயங்கள் செய்தும் அதை சரியாகப் பதிவு செய்யாத காரணத்தால் இன்று நமக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை" என்றும் வருத்தப்பட்டார். படத்தில் எனக்கிருந்த குழப்பங்கள் பற்றியும், என்னுடைய கேள்விகளையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு பதில் சொன்னார். மனிதர் ரொம்பவே Down to Earth ஆக இருக்கிறார். நண்பர் தண்டோராவிற்கு நன்றி..!!!

***************

பதிவில் எழுதும் எல்லோருக்கும் ஒரு முறையாவது தங்கள் பெயரை அச்சில் பார்க்கும் ஆசை இருக்கும். கல்கியில் என்னைப் பற்றிய அறிமுகம் வந்தபோதே சந்தோசம் தாங்காமல் வீட்டில் இருப்பவர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். இப்போது வம்சி புக்ஸ் வெளியீடாக வந்திருக்கும் பதிவர்களின் புத்தகத் தொகுப்பில் என்னுடைய பயண அனுபவமும் ( ரயில் - பெருவெளிச் சலனங்கள் ), கவிதையும் ( முடியாத கதை - கிளிஞ்சல்கள் பறக்கின்றன ) இடம் பெற்று இருப்பதில் எல்லோருக்கும் சொல்லவொண்ணா மகிழ்ச்சி. குறிப்பாக அம்மா. வருவோர் போவோரிடம் எல்லாம் புத்தகத்தை எடுத்துக் காண்பித்து.. என் பையன் எழுதினது என்று சொல்லி... பார்க்கும்போது நெகிழ்ச்சியாகவும், ரொம்ப பெருமையாகவும் இருக்கிறது. இதை சாத்தியமாக்கிய தோழர் மாதவராஜுக்கும், புத்தகங்களை வாங்கியனுப்பிய நண்பர் கிருஷ்ணபிரபுவுக்கும் நன்றி.

***************

தலயின் "அசல்" டிரைலரே அசத்தலாக இருக்கிறது. மேக்கிங்கில் மிரட்டி இருப்பார்கள் போலத் தெரிகிறது. ஆனால் அதுவல்ல விஷயம். படத்துக்கு அசல் என்று பெயர் வைத்து விட்டு எக்கச்சக்கமான விஷயங்களை காப்பி அடித்திருக்கிறார்கள். முதலில் பாடல்கள். "இவன்தான்" பாட்டு அப்படியே ஜேம்ஸ் பாண்டின் "கோல்டன் ஐ" டைட்டில் பாட்டு. "ஹே துஷ்யந்தா" பாட்டை ஹிந்தி ஜப் வி மெட்டில் இருந்து உருவி இருக்கிறார்கள். போதாக்குறைக்கு புதிய பறவை ரீமிக்ஸ்...அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்.. டிரைலரின் பின்னணி இசையிலும் நிறையவே பாண்டின் தாக்கம். ஏன் பரத்வாஜ் ஏன்?

சரி பாட்டுத்தான் காப்பி என்றால்.. படத்தில் வரும் அஜித்தும், அமெரிக்க கறுப்பின வில்லனும் தங்கள் முன்னே இருக்கும் துப்பாக்கியை சரி செய்து சுட முயலும் காட்சி.. அப்படியே shoot 'em up யில் பார்த்த ஞாபகம். தல நடையாய் நடப்பது பில்லாவை ஞாபகப்படுத்துகிறது. சமீபத்தில் மோதி விளையாடிய சரண் இயக்கி இருப்பது வேறு வயித்தில் புளியைக் கரைக்கிறது. என்ன நடக்கப் போகுதோ? எல்லாம் வல்ல மகரநெடுங்குழைனாதன் தான் காப்பாற்ற வேண்டும்.

***************

புத்தகங்கள் பற்றி நண்பர் "தினசரி வாழ்க்கை" மேவீயும், சாலை பாதுகாப்பு பற்றி தோழி "இதயப்பூக்கள்" இயற்கையும் தொடர்பதிவு எழுத அழைத்து ஒரு மாதத்துக்கு மேலாகவே ஆகிவிட்டது. கல்லூரியில் ஆணி ஜாஸ்தி என்றெல்லாம் காரணம் தேட விரும்பவில்லை. தாமதத்துக்கு வருந்துகிறேன். கூடிய சீக்கிரம் எழுதி விடுகிறேன்.

***************

"அல்வா கொடுத்த பிரபல பதிவர்" அல்லது "சிங்கத்தை அதன் குகையில் சந்தித்தேன்.." இப்படி என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். திருநெல்வேலியில் நண்பர் நையாண்டி நைனாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு மனிதர் ஒரு சிறந்த உதாரணம். உற்சாகமாக உரையாடி விட்டு அவர் அன்போடு வாங்கி தந்த இருட்டுக் கடை அல்வாவையும் ராவிக் கொண்டு வந்தேன். மும்பையில் மையம் கொண்டிருந்த சூறாவளி இப்போது சென்னைக்கு மாற்றல் ஆகி இருப்பதால் அமைதியாக இருக்கிறது. விரைவில் பதிவுலகில் மீண்டும் புகுந்து புறப்பட வாழ்த்துகள்.

***************

சமீபத்தில் ரசித்தது

தபு நடித்த "ஹவா" என்ற திகில்ப்படத்தை "ராசலீலை" என்ற பெயரில் சீன் படமாக இறக்குமதி செய்து இருக்கிறார்கள். அதன் விளம்பரம்.

"பெண் என்றால் பேயும் இரங்கும் என்று சொல்வார்கள். ஆனால் இவள் மீதோ பேயே இறங்கியது".

எப்படி எல்லாம் யோசிக்கிறாய்ங்க..!!

இப்போதைக்கு அவ்வளவுதான். நெக்ஸ்டு மீட் பண்றேன்...:-)))))))))

January 26, 2010

குழந்தைகள் மனநலம் பற்றிய கருத்தரங்கம் - மதுரையில்..!!!

சென்ற வருடம் செப்டம்பர் மாத இறுதியில் மதுரையில் ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடானது. "இதை செய்யணும் அதை செய்யணும் என்று வெறுமனே பேசிக் கொண்டும், பதிவுகளில் எழுதிக் கொண்டிருப்பதொடும் நில்லாமல் இந்த சமூகத்துக்கு நாமும் உருப்புடியாய் ஏதாவது செய்ய வேண்டும்.. என்ன செய்யலாம்?" என்பதே அந்த சந்திப்பின் சாராம்சமாக இருந்தது.

அந்த சூழ்நிலையில்தான் ஜெர்மனியில் இருக்கும் நண்பர் குமார் எங்களைத் தொடர்பு கொண்டார். சென்னையில் நடைபெற்ற டாக்டர். ஷாலினியின் குழந்தைகள் மனநலம் பற்றிய கருத்தரங்கத்தை மதுரையில் நடத்தினால் என்ன என்பது அவருடைய எண்ணம். அதை நண்பர்களிடம் சொன்னபோது எல்லோரும் ஒத்த கருத்தோடு இதை செய்யலாம் என்று ஒத்துக் கொண்டனர். இதன் தொடர்ச்சியாக.. மதுரையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (31-01-10) இந்த கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.

இன்றைய சமூக சூழலில் இருக்கக் கூடிய மிக முக்கியமான பிரச்சினைகளில் சிறு குழந்தைகளின் மீது திணிக்கப்படும் பாலியல் பலாத்காரங்களும் ஒன்று. மூன்று வயது குழந்தையைக் கொலை செய்த காமவெறியன், சிதைக்கப்பட்டு புதரில் கிடந்த குழந்தை என்று திரும்பிய பக்கம் எல்லாம் காணக் கிடைக்கும் செய்திகள் நம்மை பயம் கொள்ள செய்வதாக இருக்கின்றன. ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல் எல்லாக் குழந்தைகள் மீதும் இத்தகைய பாலியல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. தனக்கு நடப்பது என்ன என்று தெரியாமலேயே சீரழிக்கப்படும் குழந்தைகள் எத்தனை பேர்? இதனால் குழந்தைகள் உடல்ரீதியாக மட்டுமல்லாது மனரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

தம் குழந்தைகளை பாதுகாக்கும் கடமை பெற்றோருக்கும், அவர்களின் ஆசிரியர்களுக்கும் தான் உண்டு. இத்தகைய நச்சு சூழலில் இருந்து நம் குழந்தைகளை எப்படி பாதுகாப்பது? பிரச்சினைகளை நாம் எப்படி எதிர்கொள்வது? எது நல்ல தொடுகை என்றும் எது கெட்ட தொடுகை என்றும் குழந்தைகளுக்கு எப்படி புரிய வைப்பது? இது போன்ற விஷயங்களைப் பற்றி தெளிவாகப் பேசுவதே இந்தக் கருத்தரங்கத்தின் நோக்கம். குழந்தைகள் மனநலம் பற்றியும், அவர்களை அணுகும் முறை பற்றியும் டாக்டர்.ஷாலினி உரையாற்ற இருக்கிறார். நம்முடைய சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறுவதற்கான கேள்வி நேரத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாள் : 31.01.2010 ஞாயிறு

காலம் : மாலை 3 மணியில் இருந்து 6 மணி வரை

இடம் : அமெரிக்கன் கல்லூரி ( செமினார் ஹால் )

கருத்தரங்க ஆய்வர் : மன நல மருத்துவர் ஷாலினி

பெற்றோர்களும், ஆசிரியர்களும் இந்த நிகழ்ச்சியில் பெரும் திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும்.சமூகத்துக்கு நம்மாலான ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் வடிவம்தான் இந்த சிறு முயற்சி. இதற்கு நண்பர்கள் அனைவரும் உங்களுடைய ஆதரவினைத் தர வேண்டும் என மதுரைப் பதிவர்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். மதுரையில் தொடர்ந்து நடக்க இருக்கும் நிகழ்வுகளுக்கு இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும் என நம்புகிறேன். THIS IS JUST THE BEGINNING.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விழையும் நண்பர்கள் அலைபேசி மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ தங்கள் வருகையை உறுதி செய்தால் மற்ற ஏற்பாடுகள் (போக்குவரத்து, சிற்றுண்டி) செய்வதற்கு வசதியாகஇருக்கும்.

அலைபேச:

தருமி-9952116112
சீனா அய்யா-9840624293
பாலகுமார்-9486102490
ஜெரி ஈஷானந்தா-9791390002
ஸ்ரீ-9360688993
கார்த்திகைப்பாண்டியன் -9842171138

மின்னஞ்சல் தொடர்புக்கு:

dharumi2@gmail.com
sridharrangaraj@gmail.com
karthickpandian@gmail.com

தொடர்புடைய மற்ற இடுகைகள்:

ஸ்ரீதர்
பாலகுமார்
சீனா

நல்லதொரு முறையில் நிகழ்ச்சியை நடத்த உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டுகிறோம். வாருங்கள் நண்பர்களே.. சாதித்துக் காட்டுவோம்..!!!

January 20, 2010

காலத்தை வென்றவன்..!!!


முகமெங்கும் சுருக்கங்களுடன்
கைகால்கள் நடுங்கியபடி
உடல் தள்ளாடியவாறே
சாலையை கடக்க யத்தனிக்கும்
ஆதரவற்ற பெரியவரை
"ச்சீ கிழட்டுப் பரதேசி...
கண்ணு தெரியல?"
எனத் திட்டயபடி
வாகனத்தில் கடந்து போகிறான்
என்றும் பதினாறிலேயே
இருக்கப் போகும்
மார்க்கண்டேயன் ஒருவன்..!!

January 18, 2010

வினோத மனிதர்கள்..!!!

திருநெல்வேலி அரசினர் பொறியியல் கல்லூரி. மாலை நேரம். இருட்டத் தொடங்கியிருந்தது. விடைத்தாள்கள் திருத்தும் பணியை முடித்துக்கொண்டு விடுதிக்கு திரும்புவதற்காக பேருந்து நிறுத்தத்தில் தனியாக காத்துக் கொண்டிருந்தேன். எப்போதாவது வந்து போகும் வாகனங்களைத் தவிர சாலையில் ஆள் நடமாட்டமே இல்லை. சிறிது நேரம் கழித்து, நாற்பது வயது மதிக்கத்தக்க மனிதரொருவர், பேருந்து நிறுத்தத்தில் இருந்த சிமிண்டு திண்டில் வந்து உட்கார்ந்தார். ஏதாவது பேசலாம் என்று அவர் பக்கமாகத் திரும்பினேன். கவனிக்காதவர் போல சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டார். சரி.. தனிமை விரும்பி போல என்று நானும் அமைதியாகிவிட்டேன்.

சற்று நேரம் கழித்து என் பின்னாலிருந்து வினோதமான ஒரு சத்தம் கிளம்பியது. மோட்டார் எஞ்சினை ஸ்டார்ட் செய்வது போல.. இன்னும் குறிப்பிட்டு சொல்வதானால் ஒரு பன்றி உறுமுவதை அந்த ஒலி ஒத்திருந்தது. நான் சத்தம் வந்த பக்கமாகப் பார்த்தேன். வித்தியாசமாக எதுவும் புலப்படவில்லை. நமக்குத்தான் ஏதோ பிரம்மை என்று சமாதானம் செய்தவனாக பார்வையை சாலையில் ஓடவிட்டேன். மீண்டும் அதே சத்தம். எனக்கு பயமாகப் போய் விட்டது. பேருந்து நிறுத்தத்தில் அந்த மனிதரைத் தவிர ஈ காக்கா இல்லை. நான் அவரையே கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தவன் அதிர்ந்து போனேன். அந்த மனிதர்தான் உதடுகளைக் குவித்து அப்படி சத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

நான் கவனிப்பதை அவரும் பார்த்து விட்டார். அவர் கண்களில் ஒரு வலி தெரிந்தது. கைகளைக் கட்டிக் கொண்டார். சிரிக்க முயன்றார். முகத்தை திருப்பிக் கொண்டார். கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது. எப்பாடு பட்டாவது சத்தம் போடாமல் இருக்க முயலுகிறார் என்பது அவருடைய செயல்களில் இருந்து புலப்பட்டது. ஆனாலும் உதடுகளில் இருந்து அந்த சத்தம் வருவதை அவரால் தடுக்க முடியவில்லை. எனக்கு மிகவும் சங்கடமாகப் போய் விட்டது. நான் இருப்பதால்தானே அவருக்கு இந்த சங்கடம்? அந்த நேரம் பார்த்து ஒரு ஆட்டோ வர சட்டென்று ஏறிக் கிளம்பி விட்டேன். இனிமேல் எனக்காக அவர் இத்தனை கஷ்டப்பட வேண்டாம் என்று மனதுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

விடுதிக்கு திரும்பும் வழி எல்லாம் மனம் அவரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது. எங்கிருந்து அவருக்கு இந்த பழக்கம் வந்திருக்கும்? இவ்வாறு சத்தம் எழுப்புவது அவருடைய பிறவிக்குணமா இல்லை ஏதேனும் நோயா? தன்னுடைய குறையை எண்ணி அவர் எப்படி எல்லாம் மனம் நொந்திருக்கக் கூடும்? நான் இன்று அவரை பயத்துடன் பார்த்தது போல எத்தனை பேர் அவருடைய மனதை காயப்படுத்தி இருப்பார்கள்? உறவினர்களாலும், மற்றவர்களாலும் அவர் எத்தனை முறை அவமானப்படுத்தப்பட்டிருப்பார்? அவருடைய குடும்பத்தார் அவரின் இந்த பழக்கத்தை அல்லது நோயை ஏற்றுக் கொண்டு விட்டார்களா? கேள்விகள்..கேள்விகள்... கேள்விகள்.. ஆனால் பதில்கள்தான் என்னிடத்தில் இல்லை.

இதேபோன்ற வினோத மனிதர்கள் வேறு யாரையேனும் சந்தித்து இருக்கிறேனா என்று யோசித்துப் பார்த்தேன். தேவாரத்தில் இருக்கும் ரங்கசாமி தாத்தாவின் ஞாபகம் வந்தது. என்னுடைய அம்மாச்சியின் ஒன்று விட்ட அண்ணன் அவர். அவருக்கு மிகவும் விசித்திரமான பிரச்சினை ஒன்று இருந்தது. அது.. அவரால் சிரிக்காமல் இருக்க முடியாது. என்ன பேசினாலும் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை சிரித்து விடுவார். அவருடைய அப்பா இறந்து போன நாள் வரை, அது மற்றவர்களுக்கு பெரிய பிரச்சினையாகத் தெரியவில்லை. எழவு வீட்டிலும் தாத்தா விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்க எல்லோரும் அவரை ஒருமாதிரி பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அவருக்கே தன்னுடைய பிரச்சினை அப்போதுதான் உரைக்க ஆரம்பித்து இருக்கிறது. அன்று முதல் அவர் தன்னை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டார். கல்யாணமும் செய்து கொள்ளவில்லை. ஒரு பூட்டிய அறைக்குள்ளேதான் இருப்பார். சாப்பாடு, தூக்கம் எல்லாம் அங்கேயேதான். வெளியில் வந்து யாரோடும் பேச மாட்டார்.

நான் ரங்கசாமி தாத்தாவை முதல்முதலில் பார்த்தது இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது. இருட்டான அறையின் ஒரு மூலையில் உட்கார்ந்து இருந்தவர் ஓடிவந்து என்னைத் தன் கைகளில் அள்ளிக் கொண்டு தட்டாமாலை சுற்றினார். என்னைப் பார்த்ததற்காக ரொம்ப சந்தோஷப்பட்டார். தனக்கு ஏன் இப்படி ஆனது என்று தெரியவில்லை என்றும் எத்தனையோ வைத்தியம் பார்த்தும் இதைக் குணப்படுத்த முடியாமல் போனதால், மற்றவர்கள் எல்லாம் தன்னை பைத்தியம் என்று நினைத்து விடக்கூடும் என அஞ்சியே தன் வாழ்க்கையை ஒரு கூட்டுக்குள் சுருக்கிக் கொண்டதாகவும் சொன்னார். இதை சொல்லும்போதும் வெள்ளந்தியாக சிரித்துக் கொண்டே இருந்தார். எத்தனை நல்ல மனிதர் ஒரே ஒரு விஷயத்தால் இப்படி தன் வாழ்க்கையை தொலைக்க வேண்டியதாகி விட்டதே? அவரின் நிலையை எண்ணி அழத் தொடங்கியவனை கடைசியில் அவர் சமாதானம் செய்ய வேண்டி இருந்தது.

வித்தியாசமான பழக்கம் கொண்ட இன்னொரு மனிதரைப் பற்றியும் நான் சொல்ல தோன்றுகிறது. என்னுடைய கல்லூரியில் வேலை பார்த்தவர் அந்த விரிவுரையாளர். புத்தகங்களை கணக்கு வழக்கின்றி சேகரிக்கும் வினோத பழக்கம் அவருக்கு இருந்தது. இதில் என்ன வினோதம் என்கிறீர்களா? அவர் அந்தப் புத்தகங்களில் ஒன்றைக் கூட படிக்க மாட்டார். ஒரு புத்தகம் நன்றாக இருக்கிறது என்று யாரேனும் சொல்லி விட்டால் போதும்.. உடனே அந்தப் புத்தகத்தை வாங்கி விடுவார். என்ன மொழி, என்ன பயன்பாடு என்றெல்லாம் சிறிதும் யோசிக்க மாட்டார். சரி.. மற்றவர்களிடம் பெருமையாக சொல்லிக் கொள்வார் என்று பார்த்தால் அதுவும் கிடையாது. அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்ததால்தான் எனக்கே இந்த விஷயம் தெரிய வந்தது. ஒரு முறை தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரிடம் கேட்டே விட்டேன். பதிலாக ஒரே ஒரு புன்னகை மட்டுமே கிடைத்தது. இப்போது அவர் எங்கே இருக்கிறார்.. வாங்கிய புத்தகங்களை என்ன செய்தார்.. இன்னும் புத்தகங்கள் வாங்கிக் கொண்டிருக்கிறாரா? தெரியவில்லை.

தினசரி வாழ்க்கையில் நாம் எத்தனை மனிதர்களை சந்திக்கிறோம்? அதில் இது போல எத்தனை விசித்திரமான மனிதர்களும், வினோத பழக்கங்களும் இருக்கக் கூடும்? நான் பார்த்த விஷயத்தையும், என்னுடைய சிந்தனைகளையும் விடுதி அறையில் என்னோடு தங்கியிருந்த நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் உளவியலில் மிகுந்த நாட்டம் கொண்டவர். நான் சொன்னதை எல்லாம் பொறுமையாகக் கேட்டவர், மெலிதாக சிரித்தார்.

"ஏன் நண்பா.. சிரிக்கிறீங்க.."

"இல்ல தலைவரே.. வித்தியாசமான மனிதர்களா பார்த்திருக்குறதா சொல்றீங்களே.. அத நினைச்சுதான் சிரிச்சேன்.."

"இதுல சிரிக்க என்ன இருக்கு?"

"உண்மைய சொல்லனும்னா எல்லா மனுஷங்களுமே விநோதமானவங்கதானே.."

"எனக்கு புரியல நண்பா.."

"எந்த மிருகமாவது மத்தது வாழ தான் பொருக்காம இருக்குமா? ஆனா மனுஷங்கள பாருங்க.. போட்டி, பொறாம.. ஒருத்தன் நல்லா இருந்தா இன்னொருத்தன் வயிறு எரியுறது.. பக்கத்து நாடு கூட.. வீட்டுக்குள்ள.... சக மனுஷன் கிட்ட.. எங்க பார்த்தாலும் சண்ட.. மதத்த சொல்லி.. இருக்குதா இல்லையான்னு தெரியாத சாமியோட பெயர சொல்லி.. அப்புறம் காசு, பணம்.. மனுஷனுக்கு மரியாதை இல்லாம போச்சு.. அவன் படைச்ச காசுக்கு அவனே அடிமை ஆகிட்டான்.. அன்புன்னா என்னான்னு கேட்கிறான்.. எதுக்காக இந்த வாழ்க்கை.. என்னத்த தேடி போறோம்னு தெரியாமையே ஓடிக்கிட்டு இருக்கோம்.. இங்க யார் நிம்மதியா இருக்கா.. சொல்லுங்க பார்ப்போம்.. எல்லாத்துக்கும் மேல.. உனக்கு வாழ்க்கைய கொடுத்த இயற்கைய நீயே அழிக்கத் துணிஞ்சிட்ட.. இன்னும் கொஞ்ச நாள்ல இங்க எதுமே மிச்சம் இருக்காது.. ஒரு வேளை சோத்துக்கு மனுஷங்க அடிச்சிக்கிட்டு சாகப் போறாங்க.. இது எல்லா மனுஷனுக்கும் பொருந்தும்தானே.. அப்போ நாம எல்லோருமே விநோதமானவங்கதானே?"

நிப்பாட்டாமல் பொரிந்து தள்ளி விட்டார். நான் பதில் சொல்ல முடியாமல் பேயறைந்தவன் போல நின்றேன். கேள்விகளின் வீரியம் முழுவதுமாய் எனக்கு உரைக்க சற்று நேரம் ஆனது. அவர் சொன்னது எதுவுமே பொய் இல்லையே? அப்படி ஒரு வாழ்க்கையைத்தானே நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. இந்த லட்சணத்தில் நாம் எங்கே மற்றவர்களை விநோதர்கள் என்று சொல்வது? கொஞ்ச நேரம் இருவருமே அமைதியாக உட்கார்ந்து இருந்தோம். பிறகு எதுவும் பேசாமல் அவர் படுத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் தூங்கியும் போனார். ஜன்னலின் வழியே வானத்தைப் பார்த்தேன். ஒரே இருட்டாக இருந்தது. எங்கேனும் நட்சத்திரக் கீற்றுகள் தென்படுகின்றனவா எனத் தேடினேன். எதுவும் தட்டுப்படவில்லை. ஆயாசம் நிரம்பி வழிய, கனத்த மனதுடன் போர்வையை இழுத்து மூடியவனாக தூங்கிப் போனேன்..!!

January 16, 2010

போர்க்களம் - திரைப்பார்வை..!!!

இந்தப் பொங்கலுக்கு வெளியாகி இருக்கும் படங்களில் டார்க் ஹார்ஸ் என்று "போர்க்களத்தை" சொல்லலாம். செமத்தியான ஆக்சன் படம். "பொல்லாதவன்" கிஷோர் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார். படத்தின் இயக்குனர் பண்டி சரோஜ் குமார் இருபத்தைந்து வயது இளைஞராம். நம்ப முடியவில்லை. தாதாக்களால் கடத்தப்பட்ட பெண்ணை மீட்கும் ஹீரோ என்கின்ற வெகு சாதாரணமான கதை. சொன்ன விதத்திலும், காட்சி அமைப்புகளிலும் அசத்தி இருக்கிறார்கள்.



ஆந்திராவின் கோதாவரி நதிக்கரையில் இருக்கும் சிறு தமிழ் கிராமம். அங்கே ஊரையே அடக்கியாளும் தாதா சம்பத். அவருடைய எதிரி பொன்வண்ணன். சம்பத் கட்டாயமாக திருமணம் செய்ய நினைக்கும் பெண் ஸ்மிதா, அவரிடம் இருந்து தப்பி வந்து சென்னையில் இருக்கும் கிஷோரிடம் அடைக்கலம் புகுகிறார். ஸ்மிதாவுக்கு மெல்ல மெல்ல கிஷோரின் மேல் காதல் உருவாகுகிறது. இருந்தும் கிஷோர் ஸ்மிதாவை ஏற்க மறுத்து போலீசில் ஒப்படைக்கிறார். மறுபடியும் சம்பத்திடம் சிக்கிக் கொள்கிறார் ஸ்மிதா. மனம் மாறும் கிஷோர் ஸ்மிதாவை மீட்கப் புறப்படுகிறார். ஏன்முதலில் கிஷோர் ஸ்மிதாவை ஏற்க மறுத்தார்? கடைசியில் அவரால் ஸ்மிதாவைக் காப்பாற்ற முடிந்ததா என்பதை திரை அரங்கில் பாருங்கள்.



தன்னம்பிக்கையோடு சமுதாயத்தை எதிர்கொள்ளும் நாயகனாக கிஷோர் அருமையாக நடித்து இருக்கிறார். அவரை, ஒரே அடியில் அத்தனை பேரையும் அடித்து நொறுக்குகிற சூப்பர் ஹீரோவாக காட்டி இருக்கிறார்கள். ஒரு தனி மனிதனால் எப்படி முடியும் என்று நாம் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காக பயிற்சி பெற்ற சமுராய், சவுண்ட் அனலைசிசில் டிகிரி என்றெல்லாம் முதலிலேயே தெளிவாக சொல்லி விடுகிறார்கள். வசன உச்சரிப்பில், உடல்மொழியில்.. கிஷோர் கிளாஸ். நாயகி ஸ்மிதாவுக்கு பெரிதாக வேலையில்லை. க்யூட்டாக இருக்கிறார். டாய் என்று ஊரதிரக் கத்தும் வழக்கமான வில்லனாக சம்பத்.

படத்தில் நம்மை சிரிக்க வைப்பவர் கிஷோரின் உதவியாளராக வரும் சத்யன். அவருடைய வசனங்களும், அதற்கு கிஷோர் சொல்லும் ஒரு வரி பதில்களும் அட்டகாசம். நாயகியைக் காப்பாற்றும் முயற்சியில் தமிழ் சினிமா மரபுப்படி வில்லன்களிடம் சிக்கி செத்துப் போகிறார். எல்லா இயக்குனரும் சத்யனைக் கொல்ல வேண்டும் என்றே ஸ்க்ரிப்ட் எழுதுவார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. அவரை ஒரு படத்திலாவது உசிரோட பொழச்சுப் போக விடுங்கப்பா.. படத்தில் குறிப்பிட வேண்டிய மற்றொருவர் போலிஸ் இன்ஸ்பெக்டராக வரும் பிஜூ மேனன். நியாய தர்மங்கள் பார்க்கும் கெட்ட போலிஸ்.. அசால்ட்டாக நடிக்கிறார் மனுஷன். பயமுறுத்தும் கெட்டப்போடு வில்லனின் குருவாக டினு ஆனந்தும் இருக்கிறார்.



படத்தின் ஒளிப்பதிவாளர் மகேந்திரன். அத்தோடு ஷாட்ஸ் என்று பண்டி சரோஜ் குமார் பெயரையும் போடுகிறார்கள். கையைக் கொடுங்கள் சாமிகளே.. சும்மா அதகளம் பண்ணி இருக்கிறீர்கள். எனக்குத் தெரிந்து அஞ்சாதேயில் கேமராவில் பல வித்தியாசமான கோணங்களை பயன்படுத்தி இருந்தார்கள். அதன் பிறகு இந்தப்படம்தான். காமிராவோடு நாமும் உடன் செல்வது போல நம்ப முடியாத கோணங்களில் படமாக்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு ஷாட்டும் ஒரு அற்புதம். அடுத்ததாக கலை இயக்கம் - ஆனந்தன். ரொம்பப் புதிதாக யோசித்து இருக்கிறார். வில்லனின் வீட்டின் முன் இருக்கும் கொடூரமான சிலை, பயங்கர ஆயுதங்கள், கடைசி சண்டை நடக்கும் போர்க்களம் என்று பார்த்து பார்த்து செய்து இருக்கிறார். அருமை. ரோஹித் குல்கர்னியின் பின்னணி இசை நன்றாக இருந்தாலும் பல ஹாலிவுட் படங்களில் ஏற்கனவே கேட்ட உணர்வைத் தருவது சிறிய குறை.



கதையை படிக்கும்போதே புரிந்திருக்குமே? அதேதான். ராமாயணக் கதையேதான். படத்தில் நிறையவே இதைப் பற்றிய குறியீடுகள் இருக்கின்றன. கதை நிகழும் கிராமத்தின் பெயர் லங்கா. வில்லனை ஒரு காட்சியில் ராவணனின் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்கிறார்கள். படம் நெடுகிலும் கருப்பு நிறமும் கிஷோருக்கான ஒரு குறியீடாக வருகிறது. ஆனால் அவருடைய கதாபாத்திரத்தின் சஸ்பென்சை உடைக்க நான் விரும்பவில்லை. ஊர் முழுக்க ஓடிக் கொண்டேயிருக்கும் மன நலம் இல்லாத மனிதன், கிஷோருக்கு தமிழ் சொல்லித்தரும் ராஜேஷ் என்று சின்ன சின்ன கதாபாத்திரத்தை வடிவமைப்பதில் கூட இயக்குனர் ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார். அலட்டிக் கொள்ளாத திரைக்கதை. படம் படு ஸ்டைலிஷாக இருக்கிறது.

முதல் பாதி போவதே தெரியவில்லை. இரண்டாம்பாதி கொஞ்சம் தொய்வு என்றாலும் கடைசி சண்டையில் களை கட்டுகிறது. ஆங்காங்கே செயற்கையாக இருக்கும் காட்சி அமைப்புகளில் மட்டும் இன்னும் கொஞ்சம் சிரத்தை காட்டி இருக்கலாம். இயக்குனர் ஆந்திராவை சேர்ந்தவர். பேங்காக்கில் சினிமா பற்றி பயின்றவராம். நல்ல படத்தை மதிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு தன்னுடைய முதல் படத்தை தமிழில் எடுத்திருக்கிறார். அவருடைய நம்பிக்கையை நம் மக்கள் காப்பாற்றுவார்கள் என நம்புகிறேன்.

January 14, 2010

ஆயிரத்தில் ஒருவன் -திரைப்பார்வை..!!!

எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளோடு பரபரப்பாக வெளியாகி உள்ளது "ஆயிரத்தில் ஒருவன்".

--> பருத்தி வீரனின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு வரும் கார்த்தியின் படம்

--> புதுப்பேட்டைக்குப் பின் காணாமல் போன செல்வராகவனின் படம்

--> 32 கோடி ரூபாய் செலவில் மூன்றாண்டுகளாக எடுக்கப்பட்ட படம்

--> சரித்திரம் + சாகசம் என்று வெகு நாட்களுக்குப் பிறகு வெளியாகும் தமிழ்ப்படம்



முதலில் செல்வராகவனுக்கு ஒரு ராயல் சல்யூட். இப்படி ஒரு கதையை யோசிப்பதற்கே ஒரு கெத்து வேண்டும். சாதித்துக் காட்டி இருக்கிறார். தமிழில் இதுவரைக்கும் இப்படி ஒரு படம் வந்தது கிடையாது என்று அடித்துச் சொல்லலாம்.

( படத்தோட கதை எனக்குத் தெரிய வேணாம்னு நினைக்கிறவங்க அடுத்த மூணு பத்திய தாண்டிப் படிங்க மக்கா..)

காலம் - கி.பி.1300 . பாண்டிய மன்னனின் படையெடுப்பால் நாட்டை விட்டு ஓடுகிறார்கள் சோழர்கள். போகும்போது பாண்டியர்களின் குலதெய்வத்தின் சிலையையும் அபகரித்துச் செல்கிறார்கள். வியட்நாமுக்கு அருகே இருக்கும் ஒரு தீவுக்கு தப்பிச் செல்லும் அவர்களை துரத்திக் கொண்டு போன பாண்டிய தளபதி, போகும் வழியை ஒரு ஓலையில் பதிவு செய்கிறான். அதன் பிறகு அந்த சோழவம்சம் என்ன ஆனது என்று தெரியவில்லை.

இன்று, கிட்டத்தட்ட எழுநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த ஓலைச்சுவடி ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளரிடம் (பிரதாப் போத்தன்) கிடைக்கிறது. காணாமல் போன சோழ வம்சத்தை தேடும் முயற்சியில் ஆராய்ச்சியாளரும் காணாமல் போகிறார். அவரைத் தேடி அரசாங்கம் ஒரு குழுவை அனுப்புகிறது. போலிஸ் ஆபிசர் ரீமா, பிரதாப்பின் மகள் ஆண்ட்ரியா, அழகம் பெருமாள் ஆகியோர் அடங்கிய அந்தக் குழுவின் போர்ட்டராக கார்த்தி. கடல், பாம்புகள், காட்டுவாசிகள், புதைகுழி என்று பல ஆபத்துகளைக் கடந்து தொலைந்து போன சோழ மக்களின் நகரைக் கண்டுபிடிக்கிறார்கள். இங்கே இடைவேளை.

அழிந்து போனதாக நம்பிக் கொண்டிருந்த சோழ வம்சத்தின் மிச்சம் அங்கே குற்றுயிரும் குலையுயிருமாக வாழ்கிறார்கள். அவர்களின் அரசன் பார்த்திபன். என்றேனும் தாய் தேசத்தில் இருந்து சேதி வந்து தாங்கள் சோழதேசம் திரும்புவோம் என்னும் நம்பிக்கையோடு காத்திருக்கும் கூட்டம். தான் சோழ தேசத்தின் பிரதிநிதி என்றும் மூன்று நாட்களில் சொந்த ஊர் திரும்பலாம் என்றும் பார்த்திபனை நம்ப வைக்கிறார் ரீமா. ஆனால் உண்மையில் அவர் காலம் காலமாக சோழர்களை பலி வாங்க காத்துக் கொண்டிருக்கும் பாண்டிய வம்சத்தை சேர்ந்தவர். நேரம் பார்த்து பார்த்திபனின் காலை வாரி விடுகிறார். கடைசியில் என்ன ஆனது என்பதை திரையில் பாருங்கள்.



சட்டையில்லாத வெறும் உடம்போடு காருக்குள் இருந்து கார்த்தி அறிமுகமாகும் காட்சி அட்டகாசம். எம்ஜியார் பாட்டுக்கு ஆடுகிறார். அதன் பிறகு சொங்கி சோதாவாகிப் போகிறார். முதல் பாதியில் ஊருக்கு நேர்ந்து விட்டார்போல வருவோர் போவோர் எல்லாரும் அவரை அடிக்கிறார்கள். இரண்டாம் பாதியில் உப்புக்கு சப்பாணி போல வந்து போகிறார். கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் சூர்யாவின் குரல் போலவே கேட்கிறது. உடல்மொழியிலும் முக்கால்வாசி பருத்திவீரன். ரூட்ட மாத்துங்க பாசு.. ஆண்ட்ரியா செல்வராகவனின் அக்மார்க் சோகநாயகி. அவர் கவர்ச்சி காட்டாமல் இருப்பது நமக்கு நல்லது. படத்தின் ஆயிரம்வாலா பட்டாசு.. ரீமாசென். சான்சே இல்லை. ஆட்டம்பாட்டம் என்ன.. கத்திசண்டை என்ன.. கோபம் கொப்பளிக்க கண்களாலேயே வெறுப்பைக் கக்குவது என்ன.. தூள் பரத்தி இருக்கிறார்.



ஆரம்ப கட்டத்தில் எரிச்சலைக் கிளப்பினாலும் இரண்டே காட்சிகளில் நம் உள்ளத்தை அள்ளிக் கொள்கிறார் பார்த்திபன். ரீமாவின் துரோகத்தால் தன் மக்கள் வஞ்சிக்கப்பட்டதை அறிந்து ஒரு குற்றவுணர்வுடன் கூடிய நடையோடு அழுது கொண்டே வருகிறார் பாருங்கள்.. சூப்பர். இறுதிக் காட்சியில் கண்முன்னே தன் மக்கள் நாசம் செய்யப்படுவதைக் கண்டு துடிப்பதும் நல்ல நடிப்பு. அங்கங்கே வரும் கோண செஷ்டையையும் நடனத்தையும் தவிர்த்து பார்த்திபன்.. அட்டகாசம். அழகம் பெருமாளும் மற்றவர்களும் அவரவர் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக செய்து இருக்கிறார்கள். எல்லா காட்சிகளிலும் மக்கள் வெள்ளம். முகம், உடம்பு என எல்லாப் பகுதியிலும் கரியைப் பூசிக்கொண்டு சிரமப்பட்டு நடித்து இருக்கிறார்கள். படத்தில் நடித்திருக்கும் துணை நடிகர்களுக்கு ரொம்பவே கடமைப்பட்டு இருக்கிறார் செல்வராகவன்.

பின்னணி இசையில் பிசிறு தட்டி இருக்கிறார் பிரகாஷ் குமார். படத்தில் பயன்படுத்தி இருக்கும் பாடல்கள் - கோவிந்தா கோவிந்தா, உன்மேல ஆசைதான், நிலமெங்கே.. எல்லாமே நச். மாலை நேரம் படத்தில் இல்லையென்பது எனக்கு மிகவும் வருத்தம். கலை இயக்குனர் யாரென்று தெரியவில்லை.. கலக்கி இருக்கிறார். நீண்ட கால்களின் நிழல் நடராஜரின் உருவமாக வருவதில் ஆரம்பித்து அடர்ந்த காடுகளின் ஊடே இருக்கும் கோட்டைக் கொத்தளங்கள், சோழ மக்கள் தங்கி இருக்கும் இருண்ட குகைகள் என புகுந்து புறப்பட்டு இருக்கிறார். நேரத்துக்குத் தக்கவாறு கலர் டோன்கள் மாற்றம், அகண்ட கேன்வாஸ் என ராம்ஜியின் காமிரா மாயாஜாலம் செய்கிறது. படத்தில் ஒரே ஒருவர்தான் வேலை பார்க்கவில்லை. அவர் - எடிட்டர் கோலா பாஸ்கர். படம் கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் ஓடுகிறது. கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். கிராபிக்ஸ் காட்சிகளில் நாம் இன்னும் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்பதற்கு இந்தப்படம் நல்ல எடுத்துக்காட்டு.



எல்லா செல்வராகவன் படங்கள் போலவே இந்தப் படத்திலும் செக்ஸ், மனித உணர்வுகளைச் சொல்லும் பல நுணுக்கமான விஷயங்கள் இருக்கின்றன. இத்தனை நல்ல விஷயங்கள், வித்தியாசமான கதை.. பிறகு என்ன சூது என்கிறீர்களா? அது - திரைக்கதை. முதல் பாதியோடு படம் முடிந்திருந்தால் ஒரு அட்டகாசமான அட்வென்ச்சர் படம் பார்த்த திருப்தி கிடைத்திருக்கும். இரண்டாம் பாதியில் சொதப்பி இருக்கிறார் செல்வா. எந்த ஆங்கிலப்படத்தின் சாயலும் இந்தப் படத்தில் இருக்காது என்றெல்லாம் பேட்டி தந்திருக்கிறார் செல்வா. ஆனால் படத்தின் டைட்டில் போடுவதே மம்மியின் உல்டா. கிங் சாலமன் மைன்ஸ், மெக்கென்னாஸ் கோல்டு, சீன சண்டைப் படங்கள், கிளாடியேட்டர் என்று நாம் பார்த்து ரசித்த பல படங்களின் காட்சிகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை.

இப்போ என்னதான் பண்ண.. படம் பார்க்கலாமா வேண்டாமா என்று ஒரு வார்த்தையில் சொல்லு என்பவர்களுக்கு.. வித்தியாசமான கதைக்களன் மற்றும் தமிழில்இனிமேலும் இப்படிப்பட்ட முயற்சிகள் வரவேண்டும் என்பதற்காகவே கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டிய படம்.

January 9, 2010

குழப்பக் கவிதைகள் - 2



நான்
நானாக
இருக்கும்
என்னை
உங்களுக்கு
பிடிக்காமல்
போகிறது


உங்களுக்குப்
பிடித்திருக்கும்
என்னை
என்னால்
அங்கீகரிக்க
முடிவதில்லை


யாரென
அறிந்திராத
உங்களுக்கான நான்
அல்லது
எனக்கான நான்


விடைகளைத் தேடி


முடிவில்லா
மாயவெளியில்
சுழன்று
திரிகிறது
நான்...!!!



குறிப்பு 1 : அன்பின் நண்பர்களே.. கல்லூரிப் பணி காரணமாக கடந்த ஒரு வாரமாக திருநெல்வேலியில் தங்கி இருப்பதால் அடிக்கடி வலைப்பக்கம் வர முடிவதில்லை.. ஆளை எங்கே காணோம் என்று போன் செய்து விசாரித்த நண்பர்களுக்கும், விசாரிக்க நினைத்து போன் செய்யாமல் போன நண்பர்களுக்கும் நன்றி.. அப்பாடா ஒரு வாரம் நிம்மதியா இருந்தோம்னு நினைக்கிற மக்களுக்கு.. அடியே.. கூடிய சீக்கிரம் திரும்பி வருவோம்ல..:-))))))

குறிப்பு 2:நெல்லையில் இருக்கும் பதிவுலக நண்பர்கள் யாரேனும் தொடர்பு கொள்ள விரும்பினால்.. 98421 71138..

January 2, 2010

குழப்பக் கவிதைகள் -1


அர்த்தங்கள்
ஏதுமற்ற
பெருவெளியில்

அது
அதுவாக
இருக்கும்வரை

இது
இதுவாகவே
இருந்தது...

இன்னதென்று
விளக்க முடியாத
ஒரு
அற்புத கணத்தில் **

அது
இதுவாக
மாறிப்
போனபோது

இது
எது
ஆவதெனத்
தெரியாமல்
குழம்பி நின்றது..!!!

** - மதுரையில் நடைபெற்ற கடவு நிகழ்ச்சியில் கவிஞர் விக்கிரமாதித்தனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.. அவரோடு உரையாடிக் கொண்டிருந்தபோது, அவர் சொல்லிய சில வார்த்தைகளின் விளையாட்டில் தோன்றியதுதான் இந்தக்கவிதையின் கரு...

January 1, 2010

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!!!


அன்பின் நண்பர்களே.. ஒவ்வொரு புது வருடமும் நமக்குள் நம்பிக்கையை விதைக்கிறது.... கடந்து போன வருடத்தின் காயங்களை மறந்து சந்தோஷங்களை மட்டும் நெஞ்சில் நிறுத்துவோம்.. பிறக்கும் இந்தப் புது வருடத்தில் நம் கனவுகள் எல்லாம் ஈடேறட்டும்..எங்கும் அன்பு செழிக்கட்டும்.. அமைதி பரவட்டும்.. பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!!!