Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

February 4, 2012

மெரினா - திரைப்பார்வை

உல சினிமா என்று சில படங்களை, குறிப்பாக ஈரானிய படங்களை, பார்க்கும் போதெல்லாம் பொறாமையாக இருக்கும். தொலைந்து போகும் காலணிகள், மறந்து போன வீட்டுப்பாடப் புத்தகத்தைக் கொண்டு போய்க் கொடுக்க அலையும் சிறுவன், தங்க மீன்கள் வாங்க ஆசைப்படும் குழந்தைகள் போன்ற வெகு சாதாரணமான கதைக்கருவை எடுத்துக்கொண்டு குழந்தைகளின் உலகை வெகு அழகாகப் படமாக்கி இருப்பார்கள். ஏன் இது மாதிரியான படங்களை நம்மால் எடுக்க முடியவில்லை நம் இயக்குனர்கள் ஏன் இப்படி முயற்சிகள் செய்வதில்லை என்று ஆதங்கமாக இருக்கும்.

தமிழ் சினிமாவின் குழந்தைகள் சபிக்கப்பட்டவர்கள். அவர்களை நாம் எப்போதும் இயல்பானவர்களாக திரையில் பார்க்கக் கிடைப்பதேயில்லை. தமிழ்ப்படங்களில் நம் குழந்தைகளுக்கு எப்போதும் இரண்டே வேலைதான். வயதுக்கு மீறி அதிகபிரசங்கித்தனமாகப் பேசி நாயகனின் காதலுக்கு உதவ வேண்டும் அல்லது அன்பான பிள்ளையாயிருந்து அநியாயமாய் வில்லனால் சாகடிக்கப்பட வேண்டும். அப்படி எல்லாம் இல்லாமல் குழந்தைகளின் உலகை இயல்பாக படமாக்கிய படங்கள் தமிழில் வெகு குறைவே.

அந்த வரிசையில் மெரினா என்கிற கடற்கரை பின்புலத்தை எடுத்துக்கொண்டு அங்கு பிழைத்துக் கிடைக்கும் சிறுவர்கள் மற்றும் மனிதர்களின் வாழ்க்கையைப் படமாக்கி இருக்கிறார் பாண்டிராஜ். அவருடைய முதல் படமான பசங்க படத்தின் சாயல் இருப்பது போலத் தோன்றினாலும் அதைக் காட்டிலும் நேர்மையானதொரு படமாகவும் நன்றாகவும் வந்திருக்கிறது மெரினா.



வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்து கடற்கரையில் பிழைப்புக்காக சுற்றித்திரியும் சிறுவர்கள், அவர்களுக்கு உதவும் ஒரு போஸ்ட்மேன், பெற்ற பிள்ளையை அசிங்கப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு பிச்சையெடுத்துத் திரியும் பெரியவர், சினிமா ஆசைகளோடு பாட்டுப் பாடி பிச்சையெடுக்கும் மனிதரும் அவர் பிள்ளையும், பைத்தியம் என்று மற்றவர்களால் ஒதுக்கப்படும் மனிதர், குதிரை சவாரி விட்டு பிழைப்பவர், விதவிதமான காதலர்கள்.. இவர்களின் வாழ்க்கையில் சில பகுதிகள்தான் மெரினா.

படத்தில் பெரிதாக கதை என்று ஏதுமில்லை. ஆனால் எல்லாருக்கும் சொல்வதற்கான வாழ்க்கை இருக்கிறது. கடற்கரையில் கிடக்கும் மனிதர்கள் என்பதற்காக அவர்களின் கஷ்டம் சோகம் விதிக்கெதிரான போராட்டம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிராமல் வாழ்வின் நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு கொண்டாட்டமாய் வாழும் அவர்கள் வாழ்க்கையை சொல்லிப் போகிறது படம்.

நடிகர்களாக மிகச்சரியான மனிதர்களைத் தேர்வு செய்ததன் மூலம் படம் தரும் அனுபவத்தை மறக்க முடியாததாகச் செய்திருக்கிறார் பாண்டிராஜ். தன்னுடைய தயாரிப்பில் முதல் படம். ஏற்கனவே நிரூபித்த தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேடிப்போகாமல் இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என எல்லாமே புதுமுகங்களாய் பிடித்துப் போட்டிருக்கிறார். அவர்களும் நிறைவாகச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக இசையமைப்பாளர் கிரிஷ் படத்தின் மிகப்பெரிய பலம். படத்தின் முதல் இருபது நிமிடத்தை பார்த்தபின்பு சென்னையைப் பிடிக்காதவர்களுக்குக் கூட இனி சென்னை பிடிக்கக்கூடும். எடிட்டிங்கும் ஒளிப்பதிவும் இந்த காட்சிகளில் அட்டகாசம் செய்திருக்கின்றன.



படத்தின் ஒரே பிரச்சினை சிவகார்த்திகேயன் - ஓவியா வரும் பகுதிகள். எந்த ஒட்டுதலும் இல்லாத இன்றைய நவநாகரீகக் காதலைக் காட்ட நினைத்ததில் தவறில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக பெண்கள் எல்லோருமே கேவலமானவர்கள் என்பதாக அடிக்கடி வரும் வசனங்களை மட்டும் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். சிவகார்த்திகேயனைக் காட்டிலும் அவர் நண்பராக வருபவர் பட்டாசு கிளப்புகிறார். கடைசியில் அவருக்கே சி.கா பன்ச் சொல்வதும் திருமணம் முடிந்து கணவரோடு வரும் ஓவியா முதல் முறையாக பீச்சுக்கு வருவதாக சொல்லும் காட்சியும் நச்.

பசங்க படத்தில் ஏற்கனவே பார்த்த சிறுவர்களின் கொண்டாட்டங்கள், முதல் பாதியில் போலிஸ்காரர்கள் தரும் தேவையில்லாத பில்டப், அடுத்தடுத்து நடக்கும் காட்சிகளை நாம் கணிக்க முடிவது என சிலச்சில குறைகள் படத்தில் இருக்கின்றன. ஆனால் தொய்வில்லாத திரைக்கதையும் சிரிக்க வைத்துக் கொண்டேயிருக்கும் வசனங்களும் அதை எளிதில் மறக்கடித்து விடுகின்றன.

நம் மண்ணின் இயல்போடு படங்கள் வெளியாவதில்லை, தமிழ் வாழ்க்கையை யாரும் பதிவு செய்வதில்லை என்பது போன்றான குற்றச்சாட்டுகளுக்கு சரியான பதில் இந்தப்படம். பீச்சில் வாழும் மக்களை காட்சிப்படுத்தும் நல்ல முயற்சி. இன்னும் ஆழமாகப் பேசுவதற்கான ஸ்பேஸ் படத்தில் இருக்கிறது. காதல் பகுதிகளை வெட்டியெறிந்து விட்டு அனுப்பினால் உலக திரைப்பட விழாக்களில் கண்டிப்பாக மெரினா கலக்கும் என்றும் நம்புகிறேன். இயக்குனர் பாண்டிராஜுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

மெரினா - அனுபவம்

January 6, 2012

உக்கார்ந்து யோசிச்சது (06-01-12)

இரண்டு நாட்களுக்கு முன்பாக பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பெரியவர் என்னைப் பார்க்க வந்திருந்தார்.

“வணக்கம் தம்பி..”

“வணக்கம் சார்.. சொல்லுங்க..”

“தம்பி.. எம்பொண்ணு இந்த வருசத்தோட +2 முடிக்கப்போகுது. என்ஜினியரிங் படிக்கணும்னு சொல்றா. அதைக் கொண்டு போய் ********* காலேஜுல சேர்க்கலாம்னு இருக்கேன். அதான் காலேஜு எப்படி இருக்கும்னு உங்களக் கேக்கலாம்னு..”

“நல்ல காலேஜ்தாங்க.. படிச்சு முடிக்கும்போது வேலை எல்லாம் வாங்கிக் கொடுத்துருவாங்க.. ஆனா பிள்ளைங்கள அவங்க ஒரு இயந்திரம் மாதிரித்தான் நடத்துவாங்க. ரொம்பப் படுத்துவாங்க. அத்தோட எக்கச்சக்க கண்டிப்புகள் வேற.. அவங்க சேர்மேன் பப்ளிக் மீட்டிங்கலயே நான் என் கல்லூரிய ஜெயில் மாதிரித்தான் நடத்துவேன்னு சொல்லுறவரு.. அதை மட்டும் யோசிச்சுக்கங்க..”

“ஆகா.. அப்படியா.. அங்கதான் தம்பி நம்ம பிள்ளைய சேர்க்கணும்..”

எனக்கு பக்கென்றது. “என்னங்க சொல்றீங்க..”

“அட ஆமாப்பா.. அப்புறம் பொம்பளப் பிள்ளைய எப்படி கட்டுப்பெட்டியா வளர்க்குறது.. நாம பாட்டுக்கு ஃப்ரீயா வுடப்போய் அதுக நம்ம தலைல மண்ண அள்ளிப் போட்டுட்டா.. விடுங்க.. வேலை வாங்கித் தர்றாங்கல.. போதும்.. சந்தோசமா அங்கேயே கொண்டு போய் சேர்த்துடுறேன்..”

பிள்ளைகளின் உணர்வுகள் பற்றியோ அவர்கள் நல்ல மனிதர்களாக வருவது எல்லாமோ அவசியமில்லை கட்டுப்பாடாக இருந்து வேலை கிடைத்தால் போதும் என்கிற மனநிலையில் பெற்றோர்கள் இருக்கும்வரை நமது கல்விமுறையோ கல்லூரிகளோ மாறுவதற்கான எந்த வாய்ப்பும் கிடையாது என்றே தோன்றுகிறது.

***************

இதுவும் மதுரையில் இருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி பற்றியதுதான். டிப்ளமோவில் 95% வாங்கிய மாணவி அவர். அரசு உதவி பெற்ற ஒரு பொறியியல் கல்லூரியில் அவருக்கு சீட் கிடைத்து இருக்கிறது. அந்த நேரத்தில் இந்தக் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். தங்கள் கல்லூரியில் சேர்ந்து கொள்ளும்படியாகவும் நன்றாகப் படிக்கிறபடியால் கல்லூரிக் கட்டணம் எதுவும் தர வேண்டியதில்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல மனது என்று நம்பி அந்தப் பெண்ணும் அங்கேயே சேர்ந்து இருக்கிறார். ஒரு செமஸ்டர் முடிந்து பரிட்சை தொடங்கும் நேரம். ஹால் டிக்கட் வாங்கப் போன பெண்ணிடம் பெரிய தொகை ஒன்றைச் சொல்லி அதைக் கட்டினால்தான் பரிட்சை எழுத முடியும் என நிர்வாகம் சொல்ல அந்தப் பெண் திகைத்துப் போயிருக்கிறார். ஏழ்மையில் வாடும் தன்னால் அந்தப் பணத்தைக் கட்ட முடியாது எனச் சொல்லி கல்லூரியில் இருந்தே விலகி விட்டார். அவருடைய மதிப்பெண்ணைக் கொண்டு மீண்டும் எங்காவது நல்ல கல்லூரியில் சேர முடியும்தான். ஆனால் வீணாய்ப் போன இந்த ஒரு வருடம்? மனிதர்களின் பணத்தாசைக்கு அளவே கிடையாதா என்று நொந்து கொள்வதைத் தவிர நாம் என்ன செய்ய முடியும்.

***************

இந்தப் புது வருடம் எனக்கு நல்ல படியாகவே பிறந்து இருக்கிறது. வம்சி நடத்திய சிறுகதைப் போட்டியில் எனது கதையும் தேர்வாகி இருக்கிறது. போன வருட இறுதியில், அச்சில் முதன்முதலாக என் எழுத்தை நான் பார்த்தது, மாதவ் அண்ணனின் “கிளிஞ்சல்கள் பறக்கின்றன” மற்றும் ”பெருவெளிச் சலனங்கள்” தொகுப்புகளின் வாயிலாகத்தான். இப்போது, மீண்டும் ஒரு முறை, வம்சி நடத்திய சிறுகதைப் போட்டியில், என் கதையைத் தெரிவு செய்திருக்கிறார்கள். தொடர்ச்சியாகப் பதிவர்களை வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட்டு வரும் வம்சி பதிப்பகத்துக்கும் மாதவ் அண்ணனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நான் பெரிதும் மதிக்கும் என் சக பதிவர்களான ராகவன், கிரிதரன், போகன், ஸ்ரீதர், பாலாசி, ஹேமா, லதாமகன் (மத்தவங்க பேர் சொல்லலைன்னு கோபிச்சுக்காதீங்கப்பா) மற்றும் நான் வலையுலகில் எழுதக் காரணமான அதிஷா ஆகியோரோடு இணைந்து இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதில் கூடுதல் மகிழ்ச்சி. யதார்த்தம் என்பதைத் தாண்டி வேறெதையும் பெரிதாகப் பேசாத எனது கதை நடுவர்களுக்குப் பிடித்ததில் எனக்கே சற்று ஆச்சரியம்தான். தேர்ந்தெடுத்த தமிழ்நதி, பிரபஞ்சன் மற்றும் நாஞ்சில் நாடன் ஆகியோருக்கும் என் நன்றிகள். வெற்றி பெற்ற நண்பர்கள், போட்டியில் பங்கு கொண்ட மக்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

***************

மதுரேய்…

மதுரை மீது தீராக் காதல்கொண்ட ஒருவரின் வலைப்பதிவுகள். மதுரையின் சித்திரவீதிகள் பற்றிய பதிவு ஆகட்டும், ‘பஞ்சபாண்டவ மலையில் பசுமைநடைக்குறிப்புகள்’ எனும் பதிவாகட்டும், ‘அரிட்டாபட்டி மலை ஏன் பாதுக்காக்கப்பட வேண்டும்?’ என்கிற பதிவாகட்டும் அனைத்திலும் வாசகனோடு நேரடியாக உரையாடுவதைப் போன்ற வசீகர மொழிநடை!

- ஆனந்த விகடன், 11.01.12, வரவேற்பறை பகுதி


நண்பர் மதுரை வாசகனின் வலைப்பதிவு பற்றிய அறிமுகம் இந்த வாரம் விகடனில் வெளியாகி இருக்கிறது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்..:-))

****************

போன வாரம் கல்லூரி வேலையாக திருவண்ணாமலை போயிருந்தபோது வம்சி பதிப்பகத்துக்கும் ஒரு விசிட் போயிருந்தேன். அவர்களின் புத்தகக் கிடங்கின் உள்ளே போய்த் துலாவியதில் எளிதில் கிடைக்காத நிறைய நல்ல புத்தகங்கள் கிடைத்தன. எம்.ஜி.சுரேஷ் மற்றும் தமிழவனின் நாவல்கள், பிரேம்-ரமேஷின் கவிதைத் தொகுப்புகள், எஸ்.ஷங்கரநாராயணனின் சிறுகதைத் தொகுப்புகள். ஜி கே எழுதிய மர்ம நாவல் என்கிற தமிழவனின் நாவலை வாசித்து முடித்திருக்கிறேன். அரசர் காலத்தில் நடக்கும் கதையின் வழியே ஈழம் சார்ந்த சமகாலப் பிரச்சினைகளையும் மதம் மனிதனின் மேல் செலுத்தும் வன்முறையையும் மனிதமனம் கொள்ளும் விகாரங்களையும் விரிவாகப் பேசும் நாவல். சுவாரசியத்துக்கும் குறைவில்லை. முடிந்தால் தமிழவனுடைய மற்ற நாவல்களையும் வாசிக்க வேண்டும். நண்பர்கள் யாரேனும் அவருடைய புத்தகங்களை வைத்திருந்தால் கொடுத்து உதவுங்கள் மக்களே...

***************

சமீபமாக வாசித்ததில் பிடித்தது..

இன்னும் தாதி கழுவாத

இன்னும்
தாதி கழுவாத
இப்பொழுதுதான் பிறந்த குழந்தையின் -
பழைய சட்டை என்று ஏதும் இல்லை
பழைய வீடு என்றும் ஏதும் இல்லை
மெல்லத் திறக்கும் கண்களால்
எந்த உலகை
புதுசாக்க வந்தாய், செல்லக்குட்டி, அதை
எப்படி ஆக்குகிறாய், என் தங்கக்குட்டி

- தேவதச்சன் (கடைசி டினோசர் தொகுப்பிலிருந்து)

**************

கொலவெறியோடு அநிருத் காணாமல் போய்விடுவார் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அந்த எண்ணம் தவறென்று நிரூபித்து இருக்கிறது மூன்று. போ நீ போ, சொல்லு நீ ஐ லவ் யூ, கண்ணழகானு எல்லாப் பாடல்களிலும் மனிதர் பிரித்து மேய்ந்திருக்கிறார். குறிப்பாக "A Life Full of Love" என்கிற தீம் ம்யூசிக் சான்சே இல்லை. மனிதர் தொடர்ச்சியாக நல்ல பாடல்களைத் தர வாழ்த்துகள். என்னுடைய லிஸ்டில் இந்த வார டாப் ஐந்து பாடல்கள்..

நண்பன் - என் ஃபிரண்டப் போல யாரு
மூணு - போ நீ போ
வேட்டை - தையத் தக்கா
மயக்கம் என்ன - பிறை தேடும்
STR - Love Anthem

***************

முடிக்கிறதுக்கு முன்னாடி ஒரே ஒரு மொக்கை..

வாழ்க்கையின் மிக முக்கியமான ஏழு படிநிலைகள் என்னன்னா

-> படிப்பு
-> விளையாட்டு
-> பொழுதுபோக்கு
-> காதல்
->
->
-> பாஸு.. அம்புட்டுத்தான்.. மீதி எங்கன்னு தேடுறீங்களா.. அதான் காதல் வந்தா மத்தது எல்லாம் நாசமாப் போயிருமே? அப்புறம் எப்படி..

இப்போதைக்கு அவ்ளோதான். நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-)))

June 13, 2011

டப்பிங் படங்கள்

"சொல்றே நீ என்ன என்கிட்டே..", "இருக்கு அழகா பொண்ணு ஒங்க வீட்ல.." இந்த ரீதியிலான காமெடி வசனங்களை ஹிந்தி டப்பிங் நாடகங்கள் வாயிலாக 90களில் தமிழ்நாட்டின் எல்லார் வீட்டின் வரவேற்பறைகளிலும் கேட்டு மகிழ்ந்து இருக்கிறோம். ஜுனூன் தமிழ் என புதிதாக ஒரு தமிழ் வடிவத்தையே உருவாக்கிய பெருமை டப்பிங் மக்களுக்கு உண்டு. ஆனாலும் தமிழ் சினிமாவில் டப்பிங் படங்கள் ஆரம்ப காலம் தொட்டே மிக முக்கியமான இடத்தைப் பிடித்து வந்திருக்கின்றன.

எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் டப்பிங் படம் விட்டாலாச்சார்யாவின் கந்தர்வக்கன்னி. மாயாஜாலப் படங்களின் மீதான ஒரு மோகத்தை எனக்குள் காந்தாராவ் நடித்த அந்தப்படம் விதைத்துப்போனது. அதன் பிறகு மாயமோதிரம், மாயத்தீவு ரகசியம், ஜகன்மோகினி என்று தேடித்தேடி பார்த்தேன். மதுரை முருகன் தியேட்டரில்தான் இந்தப்படங்கள் பெரும்பாலும் (செகண்ட்) ரிலீஸ் ஆகும். இது போன்ற மாயாஜாலப் படங்களில் பெரும்பாலும் ஒரே கதைதான். உலகையே ஆளத் துடிக்கும் மந்திரவாதி, ராஜகுமாரன் - குமாரி, ஒரு ஜோக்கர், அவரை விரட்டும் காதலி பேய், ஏழு கடல் தாண்டி ஒளிந்திருக்கும் தீயவனின் உயிர் என்று போய்க் கொண்டே இருக்கும்.



ஆனால் இவற்றில் பெரிய காமெடியே பேய்களுக்கு விட்டல் தரும் யுனிபார்ம் தான். ஒரு நீண்ட தலைகாணி உறை போன்ற துணியில் தைக்கப்பட்ட வெள்ளை அங்கிகளுக்குள் உடம்பு பிதுங்கி வழிய (அதுவும் ஆண் பேய் என்றால் ரொம்பக் கேவலமாக இருக்கும்..) பேய்கள் அடிக்கும் கூத்து எல்லாமே செம மொக்கையாக இருக்கும். கவர்ச்சி நடனம் என்கிற ஒன்றை பெரிய அளவில் பேச வைத்த பெருமையும் இந்த பேய் டான்சர்களுக்கே போய்க் சேர வேண்டும். கருமாந்திரம் பிடித்த காஸ்ட்யூமில் இருக்கும் பேய் நாயகனைக் கண்டால் கிளுகிளுப்பாக செம பிகராக மாறி விடும்.

ஜெயமாலினியை யாரும் மறக்க முடியுமா? ஜெகன்மோகினியில் அடுப்புக்குள் காலை வைத்து சமையல் செய்யும் காட்சி இன்றும் பேசப்படும் ஒன்று. அதை நமீதாவை வைத்து ரீமேக் செய்கிறேன் பேர்வழி எனப் படுத்தியது காலத்தின் கொடுமை. கடைசியாக வந்த மாயாஜாலப் படம் பாலகிருஷ்ணா, ரோஜா நடித்து வெளிவந்த வீரபிரதாபன் என்று ஞாபகம். கணவனே கண் கண்ட தெய்வத்தில் ஆரம்பித்து மணாளனே மங்கையின் பாக்கியம் வரை சகல மந்திரப் படங்களையும் உல்டா பண்ணி இருந்தார்கள். படம் பப்படம் - ஓடவில்லை. ஆனாலும் ஏழெட்டு வயதில் ஆரம்பித்த மாயஜால டப்பிங் படங்களின் மீதான பிரியம் இன்று வரை தொடர்கிறது.

இனி காலத்தில் கொஞ்சம் முன்னோக்கி பயணிப்போம். 90களின் ஆரம்பத்தில் ஒரு பெண் புயல் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டைத் தாக்கி டப்பிங் படங்களுக்கான வரவேற்பை அதிகரிக்க செய்தது. அது விஜயசாந்தி - படம் வைஜெயந்தி .பி.எஸ். அந்த ஒரு படம் நல்லா இருந்ததே என்று நம் மக்கள் போய்ப் பார்த்ததுதான் வினை. அடுத்து அவருடைய எல்லாப் படங்களையும் டப் செய்து நம்மைப் பாடாய்ப் படுத்தினார்கள். "டாஆஐஈஈஇ"என்று கேவலமாக கத்திக் கொண்டு அவர் பாய்ந்து பாய்ந்து அடித்ததைப் பார்த்து நம் பெண்கள் எல்லாம் வீட்டுக்குள் புருஷன்மாரைப் போட்டு மொத்தி எடுத்ததாக ஏஜன்சி தகவல்கள் சொன்னது. மறவர் மகள் என்ற படத்தில் அவரும் பாலகிருஷ்ணாவும் குத்த வைத்து அம்மியில் மசாலா அரைத்த காட்சியைப் பார்த்து காரம் தாங்காமல் தாய்க்குலம் எல்லாம் கண்ணீர் சிந்தி தியேட்டரே நீரில் மிதந்தது.



இதே காலகட்டத்தில் இன்னொரு மனிதர் தெலுங்கு வழியாக தமிழுக்குள் நுழைந்தார். மீசைக்காரன் - டாக்டர் ராஜசேகர். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பேர் வைப்பதில் புரட்சி பண்ணிய பெருமகனார். "எவனா இருந்தா எனக்கென்ன", "எங்கடா உங்க எம்.எல்.", "அடேய் தான் பம் பாசக்" என்றெல்லாம் பெயர் வைத்து டெர்ரர் காட்டிய மனுஷன். இந்தப் படங்களுக்கு எல்லாம் வசனம் எழுத என்றே ஒரு புண்ணியவான் இருந்தார். பெயர் மருதகாசி என நினைக்கிறேன். பழைய காலத்துப் படங்களில் பெரிய ஆளாக இருந்தவர். டேய் என்று காட்டுக்கத்தல் கத்தும் டெக்னிக்கை, இன்றைக்கு எல்லா ரவுடி நாயகர்களும் சொல்வதை, ஆரம்பித்து வைத்தவர் இவராகத்தான் இருக்கும்.

தெலுங்கு மகாஜனங்களின் ரசனையே தனி. ஒரு பானைசோற்றுக்கு ஒரு சோறு இங்கே.. ராத்திரி நேரம். காட்டு வழியே வரும் நாயகன் நாயகி. அடைமழை. ஒதுங்கி நிற்க ஆளில்லாத மண்டபம். ஈரம் சொட்ட சொட்ட செம செக்சியாக நாயகி நாயகனைப் பார்த்து உதட்டைக் கடிப்பாள். காய்ச்சல் வந்த மாதிரி கண்கள் எல்லாம் சொருகி கிட்டே வந்து நாயகன் அவள் தோளில் கை வைக்க.. ஆகா என நாம் நிமிர்ந்து உட்காருவோம். திடுமென எங்கிருந்து வந்தார்களெனத் தெரியாமல் ஒரு முப்பது ஜாரிகள் களத்தில் இறங்கி அவர்களோடு நாயகன் நாயகி மழையில் கும்மாங்குத்து டான்ஸ் ஆடுவார்கள் பாருங்கள்... அவர்கள் தலையில் இடி விழ. நாம் சகலமும் அடங்கி அமைதியாகி விடுவோம். ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது.. டான்ஸ் என்றால் அது கொல்டி மக்கள்தான். பிஸ்து கிளப்புவார்கள்.

அவர்கள் ரசனைக்கு இன்னொரு சான்று. மன்னன் என்று ஒரு படம். தலைவர் நடித்தது. அதை மெகா ஸ்டார், நக்மா நடிக்கப் படமாக்கினார்கள்.(தமிழில் இது அர்ஜுன் என்று வெளியானது. நக்மா.. யம்மம்மா..) படம் சூப்பர் ஹிட். கொஞ்ச நாள் கழித்து நம்ம தலைவர் படத்தையும் தெலுங்கில் டப் செய்ய அது இன்னும் பெரிய ஹிட். ஒரே படத்தை இரண்டு தடவை எடுத்தாலும் வெற்றி பெறச் செய்யும் புண்ணிய ஆத்மாக்கள். கதை கச்சடா எல்லாம் எதுக்கு.. ரெண்டு பாட்டு நாலு பைட்டு மூணு கில்மா இருக்கா.. படம் பாரு மாமேய் எனச் சொல்லும் விச்ராந்தியான மக்கள். இன்றைக்கு தமிழ் சினிமா கூட அதை நோக்கித் தான் போய்க்கொண்டிருப்பது நமக்குத் தேவையில்லாத விஷயம்.

மந்திரம், கில்மா என்றெல்லாம் டப்பிங் பண்ணிக் கொண்டிருந்தபோது 2000த்தின் அருகாமையில் வெளிவரத் தொடங்கிய ஆங்கிலத் டப்பிங் படங்கள் புதியதொரு சகாப்தத்தை உருவாக்கின. ...லி என்ன பேசுறான்னே புரியல பேசியே கொல்றாண்டா, சண்டைன்னா அப்படி இருக்கணும் தெரியுமா ஆனா எதுக்கு சண்டை போடுறாங்கன்னுதான் தெரியல என்று பயங்கரமாக பீல் பண்ணி ஆங்கிலப் படம் பார்த்துக் கொண்டிருந்த நம் ஆட்களுக்கு, மெட்ராஸ் பாஷையில் பொளந்து கட்டும் கிரிஸ் டக்கரும் நெல்லை பாஷை பேசும் ஜாக்கி சானும் ரொம்பவே நெருக்கமாகிப் போனார்கள். பைரேட்ஸ் மாதிரியான படமெல்லாம் தமிழில் பார்க்கவிட்டால் சுத்தமாக எனக்கெல்லாம் ஒன்றுமே புரிந்திருக்காது. இருந்தாலும் "என்கிட்டே மோதாதே" பாட்டுக்கு ஜெட்லி டான்ஸ் ஆடுவது எல்லாம் விஜய் டிவியின் வன்கொடுமைதான் .



எனக்குத் தெரிந்த மட்டும் கிட்டத்தட்ட எல்லா வகையான டப்பிங் படங்கள் பற்றி பேசிவிட்டோம், ஒன்றைத் தவிர. சின்ன காசு பெத்த லாபம் என்கிற அதி தீவிர கொள்கையின்படி எடுக்கப்படும் நான்கு பேர் ஒரு ரூம் அஞ்சு நாள் ஷூட்டிங் படங்கள், முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே எடுக்கப்படும் தமிழ்ப் படங்கள் (lovers in blood, honeymoon) போன்றவைதான் அவை. ஆனால் அதை எல்லாம் பேசினால் அவனா நீயி எனும் பெரும்பிரச்சினை கிளம்பக் கூடும் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

கதைக்காகவும் நாயகிகளுக்காகவும் இனிமேல் டப்பிங் செய்வது ஒத்துவரும் எனத் தோன்றவில்லை. ரீமேக் என்கிற விஷயம் இன்றைக்குப் பெரிதாகி விட்ட நிலையில் இனிமேல் நாம் ஆங்கில டப்பிங் படங்களை மட்டும் பார்த்து திருப்தி அடைந்து கொள்ள வேண்டியதுதான் என்றே தோன்றுகிறது.

March 9, 2011

(கவனிக்கப்படாத) மனதைக் கவர்ந்த பாடல்கள் - 3

(கவனிக்கப்படாத) மனதைக் கவர்ந்த பாடல்கள் - 1

(கவனிக்கப்படாத) மனதைக் கவர்ந்த பாடல்கள் - 2

பட்டியல் தொடருது. நல்ல பாட்டா இருந்து டுபுக்கு படங்கள்ல சிக்கி காணாமப் போன பாடல்களை பத்திப் பேசுற முயற்சி இது. உங்களுக்குப் பிடித்த, இதே மாதிரியான, அதிகம் ஹிட்டாகாத நல்ல பாடல்கள் இருந்தாலும் சொல்லுங்க மக்களே..

அது ஒரு காலம் அழகிய காலம்
(படம்: அதே நேரம் அதே இடம் இசை:பிரேம்ஜி அமரன்)

ஜெய்யையும் நம்பி ஹீரோவாப் போட்டு எடுத்த படம். சென்னை 28 விஜயலட்சுமிதான் ஹீரோயினி. காதலி பணத்துக்காக காதலனை ஏமாத்துறான்னு காமா சோமான்னு ஒரு மொக்கப்படம். ஆனா இந்தப் பாட்டு.. சின்ன வலியை உண்டு பண்ணிப் போகும் எளிமையான வரிகள், அலட்டிக்காத இசை. "ஜோடியாய் இருந்தாள் ஒற்றையாய் விடத்தானா.. முத்துப்போல் சிரித்தாள் மொத்தமாய் அழத்தானா.." காதலிச்சு தோத்தவங்க எல்லாருக்கும் கண்டிப்பா ரொம்பப் பிடிக்கும்.

காதல் அடைமழைக்காலம்
(படம்: ஆண்மை தவறேல் இசை: மரிய மனோகர்)

படம் வெளிவரவே இல்லை. புதுமுகங்கள் நடிச்சு குழந்தை வேலப்பன்கிறவர் இயக்குன படம். ராகால எதேச்சையா கேக்கப் போய் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. பாடல்கள் எழுதினது யார்னு தெரியல, மனுஷன் அசத்தி இருக்கார். இந்தப் பாட்டோட ஆரம்பத்துல வர்ற மழை சத்தமும் ஹம்மிங்கும் அட்டகாசமா இருக்கும். இதே பாட்டோட ரீமிக்சும் இருக்கு.

ஆறு கஜம் சேலை உடுத்தி
(படம்: நேதாஜி இசை: வித்யாசாகர்)

ஏதோ ஒரு தீபாவளிக்கு “தினபூமி” பத்திரிக்கைல இந்தப்படத்துக்கு ஓசியா டிக்கட் கொடுத்தாங்களேன்னு போய்ப் பார்த்தேன். அவ்வ்வ்.. சரத்குமார் ஃபுல்ஃபார்ம்ல கொன்னு எடுத்தாரு. நாயகி லிசா ரே. பாவம் அந்தம்மாவ என்ன சொல்லி ஏமாத்திக் கூட்டிட்டு வந்தாய்ங்கன்னு தெரியல. ஒரு மழைப்பாட்டுக்கு போட்ட கெட்ட ஆட்டம் மட்டும் இப்போதைக்கும் ஞாபகம் இருக்கு. வித்யாசாகர் ஆள் யாருன்னு தெரியாம இருந்த காலத்துல ம்யூசிக் பண்ண படம். இந்தப்பாட்டு கொஞ்சம் நாட்டுப்புற எஃபக்ட்ல கேக்க நல்லாயிருக்கும். பாடுனது கோபால்ராவ் மற்றும் சிந்து.

ஒரு தேவதை பார்க்கும்
(படம்: வாமனன் இசை: யுவன்ஷங்கர் ராஜா)

மறுபடியும் ஜெய். மறுபடியும் ஒரு மொக்கை படம். இதே காலத்துல “முத்திரை”ன்னு ஒரு படம் வந்துச்சு. அதுவும் இதுவும் ஒரே கதை, எந்த வெளிநாட்டுப் படத்துல இருந்து சுட்டாய்ங்கன்னு தெரியல. அதுலையும் வாமனன்ல கூடுதலா கிம் கி டுக்கோட திரீ அயன்ல இருந்து வேற சுட்டிருப்பாய்ங்க. படத்தோட ஒரே ஆறுதல் - யுவனோட இசை. இந்தப்பாட்டும் ஏதோ செய்கிறாய் பாட்டும் நல்லா இருக்கும். அப்புறம் அந்த ஹீரோயின்.. ஹி ஹி.. ஷி இஸ் சோ நைஸ் யு நோ.

ஏதோ ஒரு ஏக்கமோ
(படம்:தா இசை: ஸ்ரீவிஜய்)

நிறைய இளையராஜாவின் சாயல் கொண்ட இசை. ஸ்ரீவிஜய் இலங்கைக்காரர் என்பதாகக் கேள்வி. நல்ல படமாக இருந்தும் கவனிக்கப்படாமல் டப்பாவுக்குள் போனதற்கு தாடி வச்சு கருமமாக இருந்த நாயகனும் திரும்ப திரும்ப பேசிப் பேசி சலித்துப்போன மதுரைப் பின்னணியும் கூட காரணமாக இருக்கலாம். எல்லாப் பாட்டுமே நல்லா இருந்த இந்தப்படத்தில் என்னைத் தொட்டுப்புட்டாவும், இந்தப்பாட்டும் என்னோட ஹாட் சாய்ஸ்.

முள்ளாக குத்தக் கூடாது
(படம்: சொன்னால்தான் காதலா இசை: விஜய டி ராஜேந்தர்)

வழக்கமான டியார் படம். தங்கச்சி செத்த பிறகு நம்ம கரடியார் ஒரு அழுகை அழுவார் பாருங்க.. வாட்டெர்ரர் மென். அத விடுங்க. பாட்டுக்கு வருவோம். சிம்பு பாடுன கொஞ்சம் வேகமான பாட்டு. காதல் வேண்டாம்னு சொல்ற ரோஜாவை முரளி கெஞ்சுற மாதிரி எடுத்திருப்பாங்க. நடுவுல நடுவுல வர்ற ஜில்பா ம்யூசிக்லாம் கொஞ்சம் தாங்கிக்கிற மனசு இருந்தா ஓரளவுக்குப் பிடிக்கலாம்.

பூப்பூக்கும் தருணம்
(படம்: அம்பாசமுத்திரம் அம்பானி இசை: கருணாஸ்)

இலங்கையைக் சேர்ந்த இராஜ், கிரேஸ் பாடின பாட்டு. பாப் மற்றும் வெஸ்டர்ன் ஸ்டைல் கலந்து கட்டி அடிச்சிருப்பாரு கருணாஸ். பாட்டை படமாக்குன விதமும் டான்சும் பட்டாசு கிளப்பும். நல்ல வளர்ந்து ஓங்குதாங்கா இருக்குற ஹீரோயின் உக்கார்ந்து எந்திருச்சு ஆடும்போது.. ஊப்ஸ். பாட்டுக்கு நடுவுல நடுவுல வர்ற "ஹேய்" சத்தமும் ராப்பும் பாட்டுக்கு இன்னமும் பெப்பைக் கூட்டும். எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு.

கோரே கோரே
(படம்: மாஸ்கோவின் காவேரி இசை: தமன்)

ரொம்ப எதிர்பார்க்க வச்சு பப்படமாப் போன ரவிவர்மனோட படம் (யார் எதிர்பார்த்தான்னு எல்லாம் எதிர்க்கேள்வி கேட்கக்கூடாது). இன்னைக்கு சினிமால பத்தே ட்யூன வச்சு மாத்தி மாத்தி ம்யூசிக் போட்டுக்கிட்டு இருக்குறது ரெண்டு பேரு. ஒண்ணு - ஹாரிஸ். இன்னொண்ணு - தமன். இந்தப்பாட்டும் ஏற்கனவே கேட்ட ஏதோ ஒரு பாட்டுதான் ஆனாலும் நல்லாயிருக்கும். நம்ம சமந்தாவுக்காக இந்தப்பாட்டைக் கேளுங்க..

{பாடல் வரிகளுக்கு மேல் கிளிக் செய்யும்போது அதன் யூட்யூப் வீடியோவோ அல்லது பாடல்கள் தரவிறக்கம் செய்வதற்கான லின்குகளோ இணைக்கப்பட்டு இருக்கின்றன..}

February 6, 2011

யுத்தம் செய் மிஷ்கின்

தமிழ் சினிமா உலகில் தங்களுக்கென பிரத்தியேக அடையாளங்களை உருவாகிக் கொண்ட இயக்குனர்கள் என்றால் வெகு சிலரை மட்டுமே சொல்ல முடியும். அவர்களில் முக்கியமானவர்கள்... மனித மன உணர்வுகளை துல்லியமாக படம் பிடித்த மகேந்திரன், கிராமப்புறம் சார்ந்த படங்கள் என்றால் பாரதிராஜா, சிக்கலான உறவுமுறைகள் சார்ந்து இயங்கிய பாலச்சந்தர், படத்துக்கு சம்பந்தமே இல்லாத பிரம்மாண்டப் (என்று நம்பப்படுகிற) படங்களை எடுத்த ஷங்கர், இருண்மையும் மூர்க்கனத்தனமும் நிரம்பிய பாத்திரங்களை அச்சு அசலாக உலவவிட்ட பாலா. இவர்கள் எல்லாருமே தாங்கள் உண்டாக்கிய புறச்சூழல் மூலமாகவும் தாங்கள் காட்டிய மனிதர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த உலகம் காரணமாகவும் தனித்துத் தெரிபவர்கள்.

ஆனால், இதிலிருந்து விலகி, கதை சொல்லும் உத்தியிலும் தங்களுக்கான பிரத்தியேகமானதொரு திரை மொழியை உருவாக்குவதிலும் தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் என்னால் மூன்று பேரை சொல்ல முடியும். குற்றவுணர்வு இல்லாத காமத்தை திரையில் காட்சிப்படுத்திய பாலு மகேந்திரா அதில் முதன்மையானவர். அவர் படங்களில் நாயகனுக்கு இடுப்புக்கு மேலேயும் நாயகிக்கு இடுப்புக்குக் கீழேயும் உடையிருக்காது என்பது எழுதப்படாத விதி. அடுத்ததாக மணிரத்னம். படம் இருட்டுக்குள் நடக்கிறது என்றால் சிறு குழந்தை கூட அது மணியின் படம் என சொல்லிச் செல்லும். அதே போல அவர் படத்தின் பாத்திரங்கள் பேசும் ஒற்றை வார்த்தை வசனங்களைத் தனது அடையாளமாக மாற்றிக் கொண்டவர். அந்த வரிசையில் அடுத்தவராக என்னால் இப்போது மிஷ்கின் என்றே சொல்ல முடிகிறது.

காமிரா ஒரு இடத்தில் அசையாமல் நிற்கிறது. அதன் கோணத்தில் ஒரு செயல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எதிர்பாரா ஒரு தருணத்தில் காமிரா திடீரென பயணிக்கத் தொடங்க நாமும் அதன் கூட சேர்ந்து ஓடுகிறோம். டாப் ஆங்கிளில் காட்டப்படும் வைட் ஆங்கிள் ஷாட்டுகள். கால்களின் வழி கதை சொல்லும் உத்தி. ஒரு காட்சி முடியுமிடத்தில் சடாரென ஆரம்பிக்கும் அதிரடிக் காட்சி. சுவர் இருக்குமிடம் மூலமாக இரண்டு அறைகளுக்கும் நடுவே பயணிக்கும் காமிரா. சொல்லிக் கொண்டே போகலாம். கண்டிப்பாக சில வருடங்களுக்குப் பிறகு பெயர் சொல்லாமல் வெறும் காட்சிகளை மட்டும் போட்டுக் காட்டினால் கூட இது மிஷ்கின் படம் என நம்மால் சொல்ல முடியும். தமிழில் அப்படியானதொரு திரை மொழியை உருவாக்கி இருப்பதுதான் மிஷ்கினின் வெற்றி என நான் தீவிரமாக நம்புகிறேன்.

கோபம் வரும்போது பதட்டம் அதிகமாக இருக்கும். பதறிய காரியம் சிதறும் என்று சொல்வார்கள். ஆனால் மிஷ்கினைப் பொறுத்தவரை இது அப்படியே உல்டா. சித்திரம் பேசுதடி முடிந்து நல்ல இயக்குனர் என்று பெயரெடுத்தும் படம் கிடைக்காத காரணத்தால் வெந்துபோய் செய்ததுதான் அஞ்சாதே. அதேபோல மிகப்பெரிய நம்பிக்கையுடன் எடுத்த நந்தலாலா இரண்டு வருடங்களாக வெளியாகாமல் பெட்டியில் இருந்ததன் கோபமே அவரை “யுத்தம் செய்”யத் தூண்டியிருக்கிறது. இந்தப்படத்தை அஞ்சாதே படத்தின் இரண்டாம் பாகம் எனப் பலரும் சொன்னார்கள். ஆனால் சத்தியமாக இதற்கும் அஞ்சாதேக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. போலிஸ் பின்புலம் சார்ந்து இரண்டு நண்பர்களின் கதையைப் பேசியது “அஞ்சாதே”. ஆனால் முழுக்க முழுக்க நகரில் நடக்கும் தொடர்கொலைகளையும் அது பற்றிய போலிஸ் விசாரணையையும் மிகத் துல்லியமாகப் பதிவு செய்யும் “யுத்தம் செய்” தமிழின் முதல் முழுமையான இன்வெஸ்டிகேட்டிவ் படம் என்று சொல்லலாம்.



“கிகுஜிரோ”வை உருவி நந்தலாலா செய்து விட்டு “tribute,tribute" என்று சொல்லிக் கொண்டிருந்த மிஷ்கின் இந்தப் படத்தில் உண்மையாகவே ஒரு அற்புதமான சமர்ப்பணத்தை செய்திருக்கிறார். கதையின் கடைசிக் காட்சியில் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தின் பெயர் "மகேஷ் முத்துசாமி". தன்னுடைய முதல் மூன்று படங்களிலும் தனக்குக் கண்ணாக விளங்கிய நண்பருக்கு இதைவிட அழகாக யாரும் "tribute" செய்துவிட முடியாது. அதேபோல இந்தப்படத்தில் இன்னொரு முக்கியமான விஷயம் - படத்தில் எந்த இடத்திலும் மிஷ்கினின் பெயர் வரவேயில்லை.

இசையமைப்பாளர் கே பற்றி கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும். இசையை எங்கே பயன்படுத்த வேண்டும் என்பதைக் காட்டிலும் எங்கெல்லாம் அமைதியாக இருக்க வேண்டும் என்பதை இந்த இளைஞர் கூர்ந்து கவனத்தில் கொண்டு மிக அருமையாக செய்திருக்கிறார். படத்தின் பின்னணியில் ஒலிக்கும் இசைக்கோர்வைகள் அட்டகாசம். பேண்டோரா பாக்ஸ் என்கிற பெயரில் வரும் இசைத்துணுக்கு கிகுஜிரோவின் “சம்மரை” நினைவுபடுத்துவதை மட்டும் சற்றே தவிர்த்திருக்கலாம். முக்கியமான இன்னொருவர் அறிமுக ஒளிப்பதிவாளர் சத்யா. மகேஷ் முத்துசாமி என்கிற மனிதர் இந்தப் படத்தில் இல்லை என்பதான குறை தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்.

காணாமல் போகும் சேரனின் தங்கை, தொடர்ச்சியாக நகரின் முக்கிய இடங்களில் கண்டெடுக்கப்படும் வெட்டுப்பட்ட கைகள், தற்கொலை செய்து கொண்ட ஒரு குடும்பம், காணாமல் போகும் பெண்கள் என தொடர்ச்சியாக கேள்விகள் நம்மை நோக்கி வந்து கொண்டே இருக்கின்றன. முதல் பாதி முழுதுமே ரொம்பக் குழப்பமாக ஏன் இவை எல்லாம் நடக்கிறது என்கிற ஒரு புதிர்ப்பயணமாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் ஒவ்வொரு கண்ணியாக விடுவிக்கப்பட்டு காரண காரியங்களை நாம் கண்டு கொள்ளும் இடத்தில் திகைத்துப் போகிறோம். படத்தின் கடைசி இருபது நிமிடங்கள் சற்றே நாடகத்தனமாக இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் கண்டிப்பாக அந்த நாடகத்தனம்தான் இந்தப்படத்தின் பலமே.

மாயக்கண்ணாடி, பொக்கிஷம் என்றெல்லாம் சுழன்று சுழன்று நம்மை கொலையாய்க் கொன்ற சேரனுக்கு இந்தப்படம் ஒரு லைஃப்லைன். இறுக்கமான முகத்தோடு சுற்றும்போதும் சரி, தங்கையின் குரலைக் கேட்டு பதட்டம் கொள்ளும்போதும் சரி.. பாத்திரம் உணர்ந்து அளவாக நடித்து இருக்கிறார். இடைவேளைக்கு முன்பு நெயில்கட்டரோடு அவர் போடும் சண்டைக்கு தியேட்டரில் விசில் கிழிகிறது . படத்தின் அடுத்த முக்கிய நடிகர் ஜெயப்பிரகாஷ். பிணங்களைக் கூறு போடும் டாக்டராக அவர் வரும்போது நல்ல நடிகரை வீணடிக்கிறார்களே என்று மண்டை காய்ந்தது. ஆனால் கதையின் போக்கை மாற்றும் பாத்திரமாக அவர் மாறும் இடம் பளிச். “ஓடிக்கிட்டே இருந்தோம்.. அவனுங்க தொரத்துனானுங்க.. முடியல.. எவ்ளோ தூரம் ஓட.. அதான் இப்ப நாம தொரத்துறோம். அவனுங்க ஓடுறானுங்க..” சாகும் தறுவாயில் அவர் பேசும் வசனங்கள் பட்டாசு. ஒய்.ஜி.மகேந்திரா மற்றும் லக்ஷ்மி நரசிம்மனின் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கும் விதம் ரொம்பவே தீவிரம்.

படத்தில் எனக்குப் பிடிக்காத ஒரே விஷயம் அந்தக் கருமம் பிடிச்ச “கன்னித்தீவு பொண்ணா” பாட்டு. வால மீனுக்கும் பாட்டுக்கும், கத்தாழ கண்ணால பாட்டுக்கும் ஏணி வச்சாக்கூட இந்தப் பாட்டால எட்ட முடியாது. மாளவிகாவோட கிரேஸ் என்ன, ஸ்நிக்தாவோட டான்ஸ் என்ன.. இங்க நீத்து சந்திரா வெறும் பம்மாத்து. அதை விடக் கொடுமை சாருவோட நிலமை. நாலு செகண்டு மேனிக்க ரெண்டு தடவை ஆளக் காட்டுறாங்க. அதுபோக பாட்டு பூராவும் அவரொட விரல்கள். ஆர்மோனியம் மேல நளினமா நடனம் ஆடுதாம். அந்தாளு தலையில இடி விழ.. தன்னைத்தானே அசிங்கப்படுத்திக்கிட்டாரு மனுஷன். படத்துல ஒட்டவே செய்யாத இந்தப்பாட்ட மிஷ்கின் எடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்ல.

ஆக மொத்தத்தில் அதகளம் பண்ணும் மிஷ்கினின் இன்னொரு படம்தான் “யுத்தம் செய்”. ஒரே மாதிரியாப் படம் எடுக்கிறார். கொஞ்சம் அலுப்பா இருக்குன்னு எல்லாம் ஒரு சில நண்பர்கள் சொல்றாங்க. எனக்கு அப்படி எதுவும் தெரியல. கடந்த பத்தாண்டுகளில் உருவான தமிழ் இயக்குனர்கள்ல ரொம்ப முக்கியமானவர்கள்னு நாம பேசணும்னா அதுல நம்மால மிஷ்கினை நிராகரிக்கவே முடியாது.

ஏ மிஷ்கின்.. ஐயாம் லவ் யூ..:-))))

December 31, 2010

டாப் டென் டப்பா படங்கள் 2010

வருஷம் முடியப்போகுதுங்கிறதால நம்ம மெய்நிகர் ஒலகத்துல இருக்குற எல்லாப் பயபுள்ளைகளும் பத்து போட்டுக்கிட்டு திரியுதுங்க. அட தலைக்கு போடுற பத்து இல்லைங்க. எனக்குப் பிடிச்ச பத்து படம், பத்து பாட்டு, பத்து நடிகை.. அடடடடா நாட்டுல இந்த பத்து போடுறவங்க இம்சை தாங்க முடியலப்பா.. ஹிஹிஹி.. ஆனாலும் பாருங்க.. ஊரோட ஒத்துப் போகணும்கிற ஒரே காரணத்தினால நாமளும் ஒரு பத்த வெளியிடுறோம். அதாவது, கடந்த வருஷம் அதிகமா எதிர்பார்ப்ப கெளப்பி விட்டு புஸ்வாணமாப் போன பத்து படங்களோட தொகுப்பு இது.

ஜக்குபாய்

அகில இந்திய ரீதியில டொராண்ட்ல வெளியான முதல் பிரபல தமிழ்ப்படம். ரவிக்குமார் - சரத்குமார்னு நம்பிப் போன மக்கள குனிய வச்சு நல்லா குமுறு கும்றுன்னு குமுறித் தள்ளிய படம். படத்த விட படத்துக்கு வெளில நடந்த ஒலகக் காமடிதான் மக்களுக்கு செம குஜால்ஸ். என் காசு போச்சேன்னு ராதிகா அழுவ, ஆறுதல் சொல்ல யாரும் வர மாட்டாங்களான்னு பார்த்து சரத் கூட்டம் போட, மேடைக்கு வந்த தலைவரு "இது வாசபின்னு ஒரு பிரெஞ்சு படம், மக்கள் நல்லா இருந்தா தானே தியேட்டருக்கு வருவாங்க.. அய்யாங் டொய்யாங்"னு வழக்கம் போல போட்டு பின்னிப் பெடலெடுக்க.. ஹே பாபாஜி.. உன் கருணையே கருணை. சரியான மக்குபாய்.

ஆறுதல்: அப்படி ஒண்ணுமே இல்ல.. அவ்வவ்..

கோவா

கதை இல்லைன்னாத்தான் நான் படமெடுப்பேன்னு அடம் பிடிக்கிற வெங்கட்பிரபுவோட மூணாவது படம். சூப்பர் ஸ்டார் மவ காசுல பொங்க வச்சு தம்பிய புரமோட் பண்ண படம் எடுத்தா வெளங்குமா? மக்கள் "கோ - வா"ல "கோ"வ மட்டும் பிடிச்சுக்கிட்டு போயிட்டு வாங்கப்பான்னு சொல்லிட்டாங்க. கடன் பிரச்சினைல ஐஸ்வர்யா மானம் சந்தி சிரிச்சதும் சினேகா பிகினில வர்றாங்கன்னு பொய்ப்பிரச்சாரம் (வருத்தம்ஸ் ஆப் இந்தியா) பண்ணி ஏமாத்துனதும் தான் படத்தோட சாதனை. வெத்து பாவ்லா.

ஆறுதல் - பியா, இது வரை இல்லாத உறவிது

அசல்

"நீங்க நடக்கிறீங்க. நடக்குறீங்க.. நடந்துக்கிட்டே இருக்கீங்க. கோட்டு சூட்டு கண்ணாடியும் உண்டு.. எப்பூடி.." இதச் சொல்லி ஒரு மனுஷன நடிக்க வைக்க முடியுமா? தலகிட்ட போங்க. வட்டாரம், மோதி விளையாடுன்னு புல் பார்ம்ல இருந்த சரண்கிட்ட கொடுத்தப்பவே தெரிஞ்சு போச்சு இது தரிசு தான்னு. போதாக்குறைக்கு டோட்டட்டைங்க்னு பரத்வாஜ் வேற. மொத மூணு நாள்ல பதினெட்டு கோடி எல்லாம் சரி, ஆனா நாலாவது நாள்ல இருந்து ஒரு பய கூட தியேட்டர் பக்கம் போகவே இல்ல. அசல்னு பேரு வச்சுப்புட்டு அத்தனையும் காப்பி. ஊசல்.

ஆறுதல் - பாவனா

தீராத விளையாட்டுப் பிள்ளை

இளைய தளபதி மாதிரி வரணும்னு விஷால் நினைக்கிறது தப்பில்லை. ஆனா அதுக்காக அவர மாதிரி ஓடாத மொக்கப் படமாத்தான் நடிப்பேன்னா என்ன நியாயம்? சத்யம், தோரணைக்குப் பிறகு வந்த ஹாட்ரிக் தோல்வி. மூணு பொண்ணுங்க. தொரத்தி தொரத்தி லவ் பண்ணி மூணு பேரையும் ஏமாத்துற ஹீரோ நல்லவரு. ஏன்னா அவரு ஆம்பிளையாமாம். ஆனா அதே ஒரு பொண்ணு திருப்பி அடிச்சா "அடங்கி நடக்கணும், பஜாரித்தனம் பண்ணாத"னு பொறுப்பா அட்வைஸ். ஏண்டா திருந்தவே மாட்டிங்களா? சன் டிவி கழுத்தைப் பிடிச்சு தள்ளுனாக் கூட ஒரு பயலும் தியேட்டருக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டாய்ங்க. லூசுப்பயபுள்ள.

ஆறுதல் - தனுஸ்ரீ, யுவன்ஷங்கர் ராஜா

ரெட்டைச்சுழி

ஷங்கர் தயாரிக்கிற படம்னா ஏதாவது ஒண்ணு இருக்கும்னு சொல்ற மக்களுக்கு மரண அடி. "இயக்குனர் இமயமும் இயக்குனர் சிகரமும்" சேர்ந்து படம் எடுக்கச் சொன்னா இது ஏதோ மேடை நாடகம் மாதிரி இருந்தது. ஒரு வேளை பசங்க படம் ஏற்கனவே வந்துட்டதால ஊத்திக்கிச்சோ என்னமோ? செழியனும் தாமிராவும் இதை விட நல்லா செய்யக் கூடிய ஆளுங்க. இருந்தும் ஏமாத்திட்டாங்க.இத்தோட ஆனந்தபுரத்து வீடும் சொதப்ப ஷங்கர் அடுத்து படம் தயாரிக்கிற மனநிலைல இல்லைன்னு சொல்றாங்க. அது தமிழ் சினிமாவுக்குத்தான் நஷ்டம். ஹ்ம்ம்.. பார்ப்போம். வெற்றுச்சுழி.

ஆறுதல் - அஞ்சலி

சுறா

நானும் மூணு வருஷமா இந்த டப்பா பட லிஸ்ட் எழுதிக்கிட்டு இருக்கேன். வருஷம் தவறாம இடம்பிடிக்கிற ஒரு ஆள் - ஒரே ஆள்.. நம்ம இளைய தளபதி டாக்டர் தமிழகத்தை காக்கப் போற புரட்சி மனிதர் "விஜய்"தான். தண்ணிக்குள்ள இருந்து அவர் பாஞ்சு வந்ததைப் பார்த்து சில பல டால்பின்கள் தண்ணிக்கு உள்ளயே மூச்சடக்கி செத்துப் போனதா கேள்வி. தெலுங்கு பாட்டு ட்யூனக் காப்பி அடிக்கிறதுக்கு ஒரு படி மேல போய் படம் பிடிச்ச விதத்தையும் காப்பி அடிச்சு தமன்னா டவுசர தூக்கி தூக்கி தளபதி டான்சு ஆடுனது படத்தோட சாதனைகள்ல ஒண்ணு. யாழ் நகர்னு எல்லாம் பேரு வச்சு.. அட அட அடா.. அரசியல்ல பெரிய சாணக்கியனா வருவீங்க தளபதி. கூடிய சீக்கிரம் குதிங்க. கருவாடு.

ஆறுதல் - தஞ்சாவூர் ஜில்லாக்கரி, நான் நடந்தா அதிரடி, நடனம்

ராவணன்

இந்திய சினிமாவின் முகம் - அப்படித்தானா சொல்லிக்கிராய்ங்க - மணிரத்னத்தோட படம். அது ஏண்டா விக்ரமா நீ மட்டும் ரெண்டு வருஷம் உசிரக் கொடுத்து நடிச்சாலும் படம் ஓட மாட்டேங்குது? காட்டுக்குள இருக்குற பழங்குடித் தலைவன் பாரதி கவிதை சொல்றதெல்லாம்.. ங்கொய்யால.. பின் நவீனத்துவ புடலங்கா. ஐச பிருத்வி பிடிச்ச பிடியப் பார்த்தும் கெக்கே பிக்கேன்னு சிரிக்கிறான்னா.. அபிஷேக் பெரிய ஜித்தன்யா நீயி. தனிப்பட்ட முறையில எனக்குப் பிடிச்ச படம். இருந்தாலும் படம் ஜம்பலக்கடி பம்பா ஆகிப்போச்சு. சாதாரணன்.

ஆறுதல் - ரகுமான், ஒளிப்பதிவு

சிந்து சமவெளி

படத்தொடக்கப் போஸ்டர்லையே கதாநாயகிய ஒரு மார்க்கமாப் படுக்கப்போட்டு மேட்டர சொல்லி இருந்தாய்ங்க. படம் ரிலீஸ் ஆனவுடனே அது கன்பார்ம்டு. மாமனாரின் இன்பவெறியே தான். இந்த கில்மா படத்துக்கு ஜெயமோகன் வேற. துருக்னேவ் கதையாம் - அந்த ஆளு இருந்தா தூக்குப் போட்டு செத்துருப்பான். ஆனாலும் அமலா பால் எனும் தேவதையைக் கொடுத்ததுதான் படத்தின் சாதனை.

ஆறுதல் - சுந்தர் சி பாபு

ஈசன்

சுப்ரமணியபுரம் - இது தவிர வேற ஏதும் சொல்லணுமா படத்துக்கான எதிர்பார்ப்பு பத்தி? ஆனா ஒரு டுபுக்கு பழிவாங்குற கதை. அதுக்கு சம்பந்தமே இல்லாம அமைச்சரு, போலீஸ்ன்னு மண்டை காய வச்சுட்டாரு சசி. ஜில்லா விட்டு ஜில்லா வந்து பாட்டு மட்டும் ஒரு தனி சிறுகதை. ஒரே டீமு, ஒரே மாதிரியான மக்கள் இதுல இருந்து வெளில வந்து அடுத்த படத்துல கலக்குங்க மக்கா..

ஆறுதல் - ஜேம்ஸ் வசந்தன், நமோ நாராயணன்

மன்மதன் அம்பு

உலக நாயகனின் ரசிகர்களுக்கு அவர் கொடுத்த புத்தாண்டு பரிசான நசுங்கிப் போன சொம்பு. மும்பை எக்ஸ்பிரஸ் பரவாயில்லைன்னு பயபுள்ளைங்க தெறிச்சு ஓடுதுங்க. வழக்கம் போல எவனோ ஒரு ஹாலிவுட்காரன் 1950 ல எடுத்தத என் கதைன்னு சொல்லி, ஓரமா கே.எஸ்.ரவிக்குமார ஒக்கார வச்சிட்டு கமல் தானே எடுத்திருப்பார் போல. ஆனாலும் உதயநிதி பெரிய ராஜதந்திரிதான். இல்லைனா படத்த ஜெமினிக்கு கை மாத்தி விட்டுருப்பாரா? ஆனாலும் ஊர் ஊரா கப்பல்ல சுத்தி பார்த்துட்டு வந்தத எல்லாம் ஒரு படமா எடுக்கவும் தில்லு வேணும். அக்காங்..

ஆறுதல் - மாதவன், தேவி ஸ்ரீ பிரசாத்

இது எல்லாமே எதிர்பார்க்க வச்சு ஏமாத்துன படம். நான் டப்பான்னு மண்டை காஞ்சு பெரிய வெற்றி பெற்ற படம்னா அது "விண்ணைத்தாண்டி வருவாயா". அதே மாதிரி இந்த வருஷம் நான் பார்த்ததிலேயே ரொம்பக் கேவலமான படம் கைபேசி எண். அதப்பத்தி படிக்க இங்க சொடுக்குங்க மக்கா.

எவ்ளோ பெரிய நடிகரா இருந்தாலும் கதையும் திரைக்கதையும் நல்லா இல்லைனா ஆப்புத்தான். மக்கள் முழிச்சிக்கிடாங்க - இது ஒரு நல்ல டிரெண்டு. அதை மனசுல வச்சுக்கிட்டு நல்ல படங்கள் இயக்குனர்கள் தரணும் - தருவாங்க அப்படிங்கிற நம்பிக்கை இருக்கு. வர்ற வருஷம் தமிழ் சினிமாவுக்கு நல்லதா அமையட்டும். (முடிக்கும்போது தத்துவம் சொல்லணும்ல)

பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

December 4, 2010

பாபா சாகேப் அம்பேத்கர்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்தவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடியவர். சாதிப் பிரச்சினைகளின் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இவருடைய சிலைகளுக்கு இரும்புவேலி அமைத்திருப்பார்கள். இதற்கு மேல் அம்பேத்கரைப் பற்றி எதுவும் தெரியாமலே வளர்ந்திருக்கும் என்னைப் போன்ற இளைய தலைமுறையினருக்கு, அந்த மக்கள் தலைவனின் வாழ்க்கையை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது "டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்". கிட்டத்தட்ட பத்து வருடங்கள் பெட்டிக்குள் முடங்கிக் கிடந்த இந்தப்படம் வெளியானதில் .மு.. நண்பர்களுக்கும் இயக்குனர் லெனினுக்கும் பெரும்பங்கிருப்பதாகத் தெரிகிறது. அவர்களுக்கு என் நன்றிகள்.

அம்பேத்கரின் தனிப்பட்ட வாழ்க்கையை மேம்போக்காகவும், அவருடைய அரசியல் வாழ்க்கையை வெகு தீவிரமாகவும் இந்தப்படம் பதிவு செய்கிறது. சொந்த நாட்டிலும் வெளிநாட்டிலும் சாதிரீதியாகவும் இனரீதியாகவும் அம்பேத்கர் சந்தித்த பிரச்சினைகள், சாதீய அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள், அரசியலில் காங்கிரசுக்கு எதிரான நிலை, காந்திக்கும் அம்பேத்கருக்கும் இருந்த தீவிர கருத்து மோதல்கள் என நிறைய விஷயங்களைப் படமாக்கி இருக்கிறார்கள்.



அம்பேத்கர் ஆசிரியராக பணிபுரியும் கல்லூரியில் மற்ற ஆசிரியர்கள் தாங்களும் அவரும் ஒரே பானையில் தண்ணீர் குடிக்க வேண்டியிருப்பதை எதிர்க்கிறார்கள். மாணவர்களோ ஒரு தீண்டத்தகாதவன் எப்படி ஆங்கிலத்தில் தங்களுக்குப் பாடம் நடத்த முடியும் என கேலி செய்கிறார்கள். வெளிநாட்டில் படிக்கும்போது இந்தியன் நாயினும் கீழானவன் என அசிங்கப்படுத்தப்படுகிறார். அத்தனையும் மீறி தன்னுடைய மேல்படிப்பை வெற்றிகரமாக முடித்து பாரிஸ்டர் பட்டம் பெறுகிறார் அம்பேத்கர்.

சாதி ஏற்றத்தாழ்வு இல்லாத சமூக விடுதலை என்பது கிடைக்காமல் இந்திய விடுதலை என்பது சாத்திமில்லை என நம்புகிறார் அம்பேத்கர். பம்பாய் மேலவையின் ஒரு அங்கத்தினராக பதவி ஏற்றுக் கொள்கிறார். தீண்டத்தகாதவர்களின் ஆலயப் பிரவேசத்தை ஆரம்பித்து வைக்கிறார். ஊர் பொதுக்குளத்தில் அவர்களுக்கும் தண்ணீர் குடிக்க உரிமை வேண்டும் எனப் போராடுகிறார். உயர் சாதி ஹிந்துக்களின் தீவிர எதிர்ப்பை சம்பாதிக்கிறார். சாதிப் பிரிவினை அவசியம் என்பதை ஆதரிக்கும் காங்கிரசின் கொள்கைகள் அவருக்கு எரிச்சலூட்டுகின்றன.

காந்தி எதிர்க்கும் சைமன் கமிஷனில் ஆஜராகி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான வாழ்வாதாரத் தேவைகள் பற்றி அம்பேத்கர் எடுத்துரைக்கிறார். அவர்களுக்கான இட ஒதுக்கீடு அவசியம் எனத் தீவிரமாக வாதாடுகிறார். ஆனால் அம்பேத்கரின் கருத்துகளை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் இருக்க அம்பேத்கர் விட்டுக் கொடுக்க நேர்கிறது.

சுதந்திர இந்தியாவின் அரசியல் சட்டங்களை வடிவமைக்கும் பொறுப்பை நேரு அரசு அம்பேத்கரிடம் தருகிறது. ஆனால் அம்பேத்கர் பரிந்துரைக்கும் இந்து மசோதா ஜாதி இந்துக்களின் எதிர்ப்பால் கைவிடப்படுகிறது. கோபம் கொள்ளும் அம்பேத்கர் தன்னுடைய பதிவியைத் துறக்கிறார். இந்துவாக இறக்க மாட்டேன் எனச் சொல்லும் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவுகிறார. அதற்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவருடைய மரணம் நிகழ்ந்து எனும் குறிப்போடு படம் முடிகிறது.

தமிழில் வசனம் எழுதி இருப்பது யார் எனத் தெரியவில்லை. அம்பேத்கர் பேசுவதில் நிறையவே கூர்மையான வசனங்கள்.

"நமக்கு ஆலயப்பிரவேசத்தை விட அரசியல் அங்கீகாரம்தான் முக்கியம்.."

"மகாத்மாவின் மனதில் என்ன இருக்கிறது என்பதை சாதாரண மனிதன் எப்படி கண்டு கொள்ள முடியும்.."

"ஹிந்துக்கள் மனம் திருந்துவார்கள் என்று சொல்கிறீர்களே.. ஐந்து வருடங்களுக்குப் பிறகு சங்கராச்சாரியாரின் இடத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவரை அமர வைத்து மற்றவர்களை அவர் காலில் விழ வைக்க உங்களால் முடியுமா?"

"மற்றவர்கள் உங்களை மதிப்பது இருக்கட்டும்.. முதலில் நீங்கள் தன்மானத்தோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள்.."

ஒரு சில இடங்களில் பேச்சுத் தமிழும் மற்ற இடங்களில் எழுத்துத் தமிழும் பேசுவதில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். அதிலும் வெள்ளையர்கள் இழுத்து இழுத்து தமிழ் பேசுவது போல மொழிபெயர்த்திருப்பது தேவையற்றது.


மகாத்மா என நாம் கொண்டாடும் காந்தியின் மீது மிகத் தீவிரமான விமர்சனங்களை இந்தப்படம் முன்வைக்கிறது. மத ரீதியான காந்தியின் கொள்கைகள் அவரைக் கிட்டத்தட்ட ஒரு வில்லனாகவே காட்டுகின்றன. அம்பேத்கரின் கொள்கைகளை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் இருக்கிறார். அவருடைய உடல்நிலை மோசமாகிக் கொண்டே போகிறது. அம்பேத்கர் தன்னுடைய கொள்கைகளை தளர்த்திக் கொள்ள வேண்டும் என அனைவரும் வற்புறுத்துகின்றனர். வேண்டாவெறுப்பாக ஒப்புக் கொண்டு காந்தியை சந்திக்கும் அம்பேத்கர் சொல்கிறார்."அடிக்கடி தேவைப்படும் போதெல்லாம் உண்ணாவிரதம் என்கிற ஆயுதத்தைக் கையில் எடுக்க வேண்டாம்.." காந்தியின் புனித பிம்பத்தை ஒற்றை நொடியில் இந்த வசனங்கள் சிதைத்துப் போகின்றன.

பொதுவாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மனிதர்கள் தனி வாழ்க்கையில் குடும்பத்தின் மீது கவனம் செலுத்த முடியாமல் போகும் என்பதற்கு அம்பேத்கரும் விதிவிலக்கில்லை என்பதை அவருடைய அண்ணனுக்கும் அவருக்கும் நடக்கும் பிரச்சினைன் மூலம் புரிய வைக்கிறார் இயக்குனர். சிறுவயதில் இறந்து போகும் பிள்ளைகள், கடைசி வரை அம்பேத்கரின் நல்லதையே யோசித்த மனைவி ரமாபாய், இறுதிக் காலத்தில் தன்னை கவனித்துக் கொள்வதற்காக அவர் மணந்து கொள்ளும் டாக்டர் சவிதா (இந்த இடத்தில் எனக்கு பெரியாரின் ஞாபகம் வந்தது) என அம்பேத்கரின் தனிப்பட்ட வாழ்க்கையின் சில பகுதிகள் நமக்கு அறியக் கிடைக்கின்றன.

சிறந்த படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த கலை இயக்குனருக்கான தேசிய விருதுகளை இந்தப்படம் வென்றிருக்கிறது. அம்பேத்காரைப் பற்றி அதிகம் தெரிந்திராத காரணத்தால் இந்தப்படம் எனக்கு ரொம்பப் பிடித்து இருந்தது. இரண்டாம் பாதியின் நீளம் மட்டுமே கொஞ்சம் இடைஞ்சல். மம்முட்டியின் கேரியரில் இது முக்கியமான படம். கண்ணியம் மற்றும் மிடுக்கான உடல்மொழியுடன் கூடிய வெகு அழுத்தமான நடிப்பு. தலை வழுக்கையுடன் வரும் கடைசி ஒப்பனை மட்டும் அவருக்குப் பொருந்தவில்லை. மனைவி ரமாபாயாக சோனாலி குல்கர்னி நடித்திருக்கிறார். டாக்டர் சவிதாவாக நடித்திருக்கும் பெண் யாரென்று தெரியவில்லை. வெகு லட்சணம். காந்தி, நேரு, ராஜேந்திர பிரசாத் என முகச்சாயல் பொருந்திப்போகும் நடிகர்களாக பார்த்து நடிக்க வைத்திருப்பது படத்துக்கான நம்பகத்தன்மையை கூட்டுகிறது.

மதுரை அலங்கார் தியேட்டரில் இந்தப்படம் திரையிடப்பட்டிருக்கிறது. இது அனைத்து மக்களும் பார்க்க வேண்டிய படம். ஆனால் ஒரு குறிப்பிட்ட சாராருக்கான படம் என்பதைப் போல முன்னிறுத்தப்படுவது சோகமான விஷயம். நான் போனபோது ஒரு சாதிப் பேரவையின் சார்பாக அம்பேத்கர் படத்துக்கு மாலை மரியாதை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் இன்னொரு குழுவுக்கும் அம்பேத்கர் எங்களவர் என்று சண்டை வேறு வந்ததுதான் பெரிய கொடுமை. எந்த நிலையை மாற்ற வேண்டி அம்பேத்கர் போராடினாரோ, அதில் இன்னும் சொல்லிக் கொள்ளும்படியான மாற்றங்கள் வரவில்லை என்பதே நிதர்சனம். சாதி மத பேதமற்ற பாரதம், அனைவருக்கும் சம உரிமை என்று கனவு கண்ட அந்த மனிதரின் ஆசைகள் என்றுதான் நிறைவேறக் கூடுமெனத் தெரியவில்லை.


September 30, 2010

ரஜினி என்றொரு மந்திரச்சொல்


தமிழ் சினிமா வரலாற்றில் எந்தப் படத்துக்கும் இல்லாத பரபரப்பும் எதிர்பார்ப்பும் "பாபா"வுக்கு இருந்தது. எங்கும் பாபா எதிலும் பாபா. ஊரின் சந்து பொந்து இண்டு இடுக்கெல்லாம் பாபா. நாளைக்குப் படம் ரிலீஸ். முந்தைய நாள் மாலைக்கான ரசிகர் ஷோவுக்கான டிக்கட் என் கையில் இருக்கிறது. சாயங்காலம் ஆறு மணிக்கெல்லாம் குதியாலத்தொடு "அண்ணாமலை" தியேட்டருக்குப் போய் விட்டேன்.

"தம்பி.. நைட்டு ரெண்டு ஷோ.. எட்டு மணிக்கு ஒண்ணு.. அடுத்தது பதினோரு மணிக்கு.. உங்ககிட்ட இருக்குறது பதினோரு மணி டிக்கட்டு.. போயிட்டு பொறுமையா வாங்க.."

"என்னது? பொறுமையா வாரதா.. அடப் போங்கையா.. தியேட்டர் வாசல்ல நின்னு ரசிகர்கள் ஆட்டத்தைப் பார்த்தா தானா பொழுது போகுது.."

ஏழு மணி போல யானை மீது வைத்து படப்பட்டியை எடுத்து வந்தார்கள். ஆட்டம்தான் பாட்டம்தான்.. ஏரியாவே கோலாகலமாக இருந்தது. எட்டு மணி ஷோ ஆரம்பித்து விட்டார்கள். ஒரே பசி. கையிலோ காசு ரொம்ப கம்மியாக இருந்தது. போய் இரண்டு வாழைப்பழம் வாங்கிக் கொண்டேன். ஒன்றை சாப்பிட்டுவிட்டு இன்னொன்றை பத்திரமாகப் பைக்குள் வைத்தாயிற்று. பதினோரு மணி வரைக்கும் தாக்குப்பிடிக்கணும் இல்லையா?

பத்து மணிக்கு கவுண்டரை திறந்து விட்டார்கள். கூட்டம்.. அடிதடி.. தள்ளு முள்ளு.. பெரிசுங்க யாராவது கஷ்டப்பட்டு உள்ளே நுழைந்திருந்தால் அன்றைக்கு "நேரடியாகவே" பாபாவைப் பார்ப்பதற்கான டிக்கட் கிடைத்திருக்கும். அடித்துப் பிடித்து உள்ளே போய் டிக்கட்டை எடுப்பதற்காக பாக்கெட்டுக்குள் கையை விட்டால்.. கூழ் கூழாக வருகிறது.

வாங்கியிருந்த வாழைப்பழமும் டிக்கட்டும் ஒன்றாகக் கசங்கிப் போய்.. ஒன்றும் செய்ய முடியாதென தியேட்டர் மானேஜரும் கையை விரித்து விட்டார். எனக்கு அழுகை வராத குறைதான். படம் பார்க்க முடியாமல் நொந்து நொம்பலமாகி வீட்டுக்கு வந்தபோது மணி பனிரெண்டு. நேராக டிவியின் முன் உட்கார்ந்து கொண்டேன். பேயறைந்த மாதிரி ராத்திரி ரெண்டரை வரை உட்கார்ந்தே இருக்கிறேன்.. தூங்கவே இல்லை. வீட்டில் பயந்து போய் அதட்டி என்னைப் படுக்க வைத்தார்கள். ஆனாலும் காலை நாலு மணிக்கெல்லாம் முழிப்பு வந்து விட்டது.

"பரேட்" பார்க்கப் போவதாக சொல்லி விட்டு ரயில்வே கிரவுண்டில் போய் உட்கார்ந்து கொண்டேன். ஐந்து மணிக்குக் கிளம்பி நேராக"குரு"தியேட்டர். ஆறு மணிக்கு ஷோ. பிளாக்கில் நூறு ரூபாய்க்கு டிக்கட். உள்ளே போய் உட்கார்ந்த பிறகுதான் நிம்மதி ஆனது.

ரஜினியின் அறிமுகக் காட்சி. சீட்கள் அந்தரத்தில் பறக்கின்றன. விசில்கள் காதைக் கிழிக்கின்றன. நான்கு பக்கங்களில் இருந்தும் அகிலா கிரேனில் சுத்தி சுத்தி காமிக்கிறார்கள். ஸ்க்ரீனில் ரஜினியைப் பார்த்தபோது ஏற்பட்ட பரவசத்தை வார்த்தைகளில் சொல்ல முடியாது. (அதன் பிறகு தலைவர் புர்ர்ர்ரா என்றதும் படமும் அப்படியே ஆனது வேறுகதை)

வீட்டுக்கு வந்தால் எல்லோரும் டர்ன் போட்டுத் திட்டுகிறார்கள்.

"நீயெல்லாம் படிச்சவந்தானா? இன்ஜினியராம் வெளக்கெண்ணை.. இதுல நீ நாலு பசங்களுக்கு பாடம் வேற சொல்லிக் கொடுக்குற.. அப்படி என்னதாண்டா இருக்கு அவன்கிட்ட?"

அதுதான் ரஜினி.

படித்தவர், படிக்காதவர், பெரியவர், சிறியவர் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் கவர்ந்தவர் என்பதுதான் ரஜினி. எந்த வயதில் இருந்து நான் ரஜினிக்கு ரசிகன் ஆனேன் என்பது சரியாக நினைவில் இல்லை. ஆனால் விவரம் தெரிந்து பார்த்த முதல் படம் "அண்ணாமலை". தலையை நிமிர்ந்து ரசிகர்களைப் பார்த்து கண்ணடிக்கும் காட்சி.. வாவ்.. அந்த ஸ்டைலும் அழகும் யாருக்கு வரும்?

பின்பு ரஜினிக்குத் தீவிர ரசிகனாகிப் போனது பற்றி சொல்ல வேண்டுமானால் - பாட்ஷா, முத்து, படையப்பா.. சொல்லிக் கொண்டே போகலாம். கடைசியாக சிவாஜி பார்த்ததும் செம சுவாரசியம். ஒவ்வொரு தியேட்டராக சுற்றி விட்டு "வெற்றி" தியேட்டருக்கு காலை எட்டரை மணிக்கு வந்தபோதுதான் பொட்டி வந்தது. அப்படியே உள்ளே போய் விட்டோம்.

800 பேர் உட்காரக் கூடிய தியேட்டர். உள்ளே 1500 பேர் இருந்தோம். யாரும் உட்காரவில்லை. மூன்று மணி நேரமும் நின்று கொண்டே, ஆடியபடியே பார்த்தோம். எனக்கருகில் ஆடிக் கொண்டிருந்தவர் உகாண்டாவைச் சேர்ந்தவராம். படம் வெளியாகும் நேரம் பார்த்து விடுப்பு எடுத்துக் கொண்டு வந்திருந்தார். எப்பிடி..

சிறு வயதிலிருந்தே.. எப்போதும் இரண்டு நடிகர்களுக்குப் பின்னால் பிரிந்து கிடப்பது என்ற தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதியின் காரணமாக.. ரஜினி - கமல் என்ற போட்டியில் நான் ரஜினியின் பின்னால் இருந்தேன். ரசிகர்களுக்கு உதவுபவர், நேர்மையானவர், அவருடைய படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம் - இதெல்லாம் சின்ன வயசில் ரஜினி பற்றி எனக்கு சொல்லப்பட்ட விஷயங்கள்.

கமல் - அப்படியே நேர்மார். விக்ரம் படத்தின் "மீண்டும் மீண்டும் வா" என்ற பாட்டைப் பார்த்துவிட்டு "ச்சீ இந்த ஆளு அசிங்கமா நடிக்கிறாரு" என்று என்னுடைய பெண் தோழிகளிடம் நல்லவனாகக் காட்டிக் கொண்டது இப்போது கூட நினைவில் இருக்கிறது. அப்போதெல்லாம் கமல் ரசிகர்களை ஓட்டுவது என்றாலே அல்வா சாப்பிடுவது மாதிரி. அவரும் அதற்குத் தகுந்த மாதிரி அப்போது அட்டு என்று நினைத்துக் கொண்டிருந்த ஓடாத படங்களாகவே - குணா, சிங்காரவேலன், மகராசன், கலைஞன் .. நடித்துக் கொண்டிருந்தார் என்பது முக்கியம். கமல் ரசிகன் யாராவது எங்கள் கூட்டத்தில் சிக்கினால் சீன் சிந்தாபாத் தான்.

பாவம்.. எங்கள் வீட்டிலும் அப்படி ஒரு ஜீவன் இருந்தது. அது என் அப்பா. அவர் ஒரு தீவிர எம்,ஜி.யார் ரசிகர் (அ) வெறியர். அவருக்கு கமலைத்தான் பிடிக்கும். நண்பர்களோடு சேர்ந்து கொண்டு அவரை ஓட்டு ஓட்டு என்று ஓட்டியிருக்கிறேன்.

இந்த இடத்தில் இரண்டு நாட்களுக்கு முன் லக்கி - யுவகிருஷ்ணா எழுதிய சில வார்த்தைகளை சொல்ல வேண்டியிருக்கிறது. "இந்த ரசிகமனோபாவ லாஜிக்கில் இன்னொரு குளறுபடி ஒன்றினையும் நான் அப்போது கண்டுபிடித்திருந்தேன். எம்.ஜி.ஆரை ரசித்தவர்கள் நிறையபேர் கமலை ரசித்தார்கள். சிவாஜியை ரசித்தவர்கள் ரஜினி ரசிகர்களாக இருந்தார்கள். ஆக்சுவலாக, இது உல்டாவாக இருந்திருக்க வேண்டும்."

பொதுவாகவே இப்படித்தான் இதை யோசிக்கத் தோன்றுகிறது.. ஏன் எம்,ஜி.யார் ரசிகர்களுக்கு ரஜினியைப் பிடிப்பதில்லை? மக்களிடம் செல்வாக்கோடு இருந்தவர் என்றால் எம்.ஜி.யாருக்குப் பிறகு ரஜினிதான். தங்கள் தலைவன் இருந்த இடத்தில் இன்னொருவன் என்பதாலேயே ரஜினியை எம்.ஜி.யார் ரசிகர்கள் வெறுக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இந்த டிரென்ட் இன்று கூடத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ரஜினி ரசிகர்கள் நிறைய பேர் அஜித்தின் பின்னால்தான் - விஜயை வெறுப்பது போல..

ரஜினியின் தனிப்பட்ட வாழ்க்கையின் மீது சில விமர்சனங்கள் உண்டு. குழப்பமானவர், ரசிகர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார், அது இதுவென.. எனக்கு அதெல்லாம் தெரியாது. நான் ரஜினி என்றொரு நடிகனின் ரசிகன். எனவே படத்தைப் பார்த்தோமா.. கொண்டாடினோமா என்று போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான். அதைப் போலவே அரசியலுக்கு வா என்றெல்லாம் அவரை அழைக்க மாட்டேன். அவருக்கு அரசியல் சரிவராது என்பது எனது தனிப்பட்டக் கருத்து. "பாட்டாளி மச்சி தோழர்களே".. இன்னும் மறக்க முடியவில்லை.. அவ்வவ்..

இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பரொருவரின் வீட்டுக்குப் போயிருந்தேன். அவருடைய இரண்டரை வயது மகன் பத்திரிகையில் வந்திருந்த எந்திரன் விழாமபரத்தைக் காண்பித்து.."மாமா.. எந்தி எந்தி.. ரஜினி.." என்று சொல்லியபடியே தலையில் கை வைத்துக் கொண்டான். ஸ்டைல்பண்ணுகிறானாம். ரஜினி என்பது ஒரு மேஜிக். "எந்திரன்" அதை மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கும் என்று நம்புகிறேன். ரஜினி ராக்ஸ்..

(இந்தப் பத்தியை எழுத் தூண்டியது யுவகிருஷ்ணாவின் இந்தப் பதிவுதான் - அவருக்கு என் நன்றி..)

July 23, 2010

உக்கார்ந்து யோசிச்சது (23-07-10)..!!!

தனது கலைப்படைப்புகள் மூலமாக சமுதாய மாற்றங்களை நிகழ்த்துவதாக நினைக்கும் கலைஞனுக்கு, பனம்பழத்தை வீழ்த்திய காக்கையின் கதையைச் சொல்லுங்கள்.

இந்த வார்த்தைகளின் சொந்தக்காரர், தமிழின் ( மறைந்த ) மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். அவர் யாரென்பதை இடுகையின் கடைசியில் சொல்கிறேன்.

***************

நான் திண்டுக்கல்லில் வேலை பார்த்த கல்லூரியில் நடந்த வேடிக்கையான சம்பவம் இது. தகவல்தொழில்நுட்பத்துறையின் (IT) தலைமைப் பொறுப்பில் இருந்த பெண்மணி அவர். வயது நாற்பதுக்கும் மேல் இருக்கும். ஒரு முறை கல்லூரியின் வராந்தாவில் நடந்து வந்து கொண்டிருக்கும்போது எதிரே வந்த இறுதியாண்டு மாணவனைப் பார்த்திருக்கிறார்.

"என்னப்பா.. நல்லாயிருக்கியா? புராஜக்ட் எல்லாம் எப்படி போகுது?"

"ஒண்ணும் பிரச்சினை இல்ல மேடம்.. நல்லா போய்க்கிட்டு இருக்கு.."

"குட்.. எதுல புராஜக்ட் பண்ற?"

"MS Office ல மேடம்.."

"ஓ.. ஏன்ப்பா அவ்ளோ கஷ்டப்பட்டு ஏதோ ஒரு ஆபிஸ்ல பண்ணனும்? நம்ம காலேஜ் ஆபிஸ்லேயே பண்ணலாமே.."

அந்த மாணவனின் முகம் போன போக்கு எப்படி இருந்திருக்கும் (இஞ்சி தின்ன குரங்கு மாதிரி?!) என்பதை யோசித்துப் பார்க்கவே சிரமமாக இருக்கிறது.

***************

இதுவும் மற்றொரு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றதுதான். அதே தொழில்நுட்பத்துறை. ஆனால் இங்கே துறைத்தலைவர் ஒரு ஆண். கிட்டத்தட்ட அறுபது வயதைத் தாண்டியவர். அவருடைய உதவியாளர் ஒருமுறை அவரிடம் சொல்லி இருக்கிறார்.

"சார்.. கம்ப்யூட்டர்ல நிறைய வைரஸ் வந்திருச்சு.. பார்மட் (format) பண்ணலாம்னு இருக்கேன்.. அதனால உங்க பைல எல்லாம் ஒரு பேக்கப் (back-up) எடுத்து வச்சிக்கிட்டா உதவியா இருக்கும்..."

"சரிப்பா.."

சிறிது நேரம் கழித்து துறைத்தலைவர் தனது உதவியாளரை அழைத்து சொல்லி இருக்கிறார்.

"தம்பி... எல்லா பைலையும் காப்பி பண்ணி டெஸ்க்டாப்புல (Desktop) சேவ் பண்ணிட்டேன்.. இப்போ நீங்க ஏதோ பார்மட் பண்ணனும்னு சொன்னீங்களே.. அதைச் செய்யுங்க.."

உதவியாளருக்கு எங்கே போய் முட்டிக் கொள்ளுவதே என்றே தெரியவில்லை. "ஞே.."தான்.

அடயெங்கப்பா.. எங்க இருந்துதான் இவங்கள எல்லாம் பிடிச்சுட்டு வர்றாய்ங்களோ? இரண்டுமே உண்மையாக நடந்த சம்பவம்.. புனைவல்ல.. ஏதும் IT துறைக்கு வந்த சாபமா இருக்குமோ?

***************



மேலே படத்தில் இருப்பது மதுரையின் பைபாஸ் ரோட்டில் இருந்து எல்லீஸ் நகருக்கு பிரியும் எண்பது அடி சாலையின் முகப்புப் பகுதி. அங்கே தரையோடு தரையாக இருக்கிறதே.. அது சாலையை இரண்டாகப் பிரிப்பதற்காக போடப்பட்ட தடுப்பு. ராத்திரி நேரங்களில் இது இருப்பதே தெரியாததால் நிறைய பிரச்சினை. இதனால் வாரத்துக்கு இரண்டு விபத்தாவது ஏற்பட்டு விடுகிறது. இரு சக்கர வாகனங்கள் நேராகப் போய் இதன் மீது மோதி விழுந்து விடுகிறார்கள் அல்லது யாரேனும் தங்களுடைய காரை இதன் மீதாக நட்டக்குத்தலாக ஏற்றி பார்க் (park) செய்து விடுகிறார்கள். உயிர்ச்சேதம் ஏற்படுமுன் மதுரை மாநகராட்சி மக்கள் ஏதேனும் நடவடிக்கை எடுப்பார்களா?

***************

இதுவரை எல்லாப் படங்களிலும் ஹிட்டடித்த ஜெயம் ராஜா - ரவியின் கூட்டணியில் தில்லாங்கடி இன்று வெளியாகிறது. எப்போதும் டிரைலர்களில் (மட்டுமாவது) அசத்தும் சன் டிவி இந்த முறை கோட்டை விட்டிருக்கிறார்கள். அதுவும் நளினியிடம் பன்ச் டயலாக் பற்றிப் பேசும் ஜெயம் ரவியின் குரல் - அவ்வ்வ்வவ்வ்வ்... சுத்தமாக ஒத்துழைக்கவில்லை. சன் டிவி - படம் என்ன ஆகுமெனத் தெரியவில்லை... பார்ப்போம்.

வெகு சமீபமாக வெளியான யுவனின் இசை ஆல்பங்களிலேயே "
தில்லாங்கடி"தான் படுமோசம் எனத் தைரியமாக சொல்வேன். எதுவுமே நம்ம ஊருப் பாட்டு மாதிரியே இல்லை. ஒரே கொல்டி வாடை. சொதப்பி எடுத்திருக்கிறார். அதே போல "நான் மகான் அல்ல"வும் Below par தான். புது வசந்தம் காலத்து பாட்டு போல ஆரம்பிக்கும் வா வா நெலாவப் புடிச்சு தரவா ஒரு பாட்டுதான் நன்றாக இருக்கிறது. கார்த்தி - யுவன் காம்பினேஷன் என்ற எதிர்பார்ப்புக்கு ஆப்பு.

***************

பொதுவாக ஆங்கில நாவல்களை விரும்பிப் படிக்க மாட்டேன். ஆனால் டான் பிரவுனின் "டாவின்சி கோட்" படித்த நாள் முதலாக அவருடைய ரசிகனாக மாறி விட்டேன். அவருடைய எழுத்தில் இருக்கும் வரலாற்றுப் பிழைகள், ஒரே மாதிரியான கதை சொல்லும் முறை என எல்லாவற்றையும் தாண்டி ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது. ரொம்ப நாட்களாகத் தேடி வந்த அவருடைய புத்தகமான "தி லாஸ்ட் சிம்பல்" இப்போதுதான் கிடைத்து இருக்கிறது. அடுத்து அதைத்தான் வாசிக்க வேண்டும்.

***************

வாழ்க்கையில் ஜெயித்தவர்களைப் பற்றிப் பேச நிறைய பேர் இருப்பார்கள். ஆனால் தோற்றவர்கள் பற்றி? மனதெல்லாம் ஆசைகளைச் சுமந்து, கனவுலகில் வாழ்ந்து, நிதர்சனத்தில் எதையுமே சாதிக்க முடியாமல்.. இருந்த இடம் தெரியாமல் காற்றில் கரைந்து போனவர்கள் எத்தனை எத்தனை பேர்? அது போன்ற ஒரு மனிதனின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது அஜயன் பாலாவின் "ஒரு இலையின் வாழ்வு" என்கிற இந்த இடுகை. வாசித்துப் பாருங்கள் நண்பர்களே..

***************

முடிக்கிறதுக்கு முன்னாடி.. வழக்கம் போல ஒரு ஜோக்.

இன்னைக்கு உலகக் கோப்பை கால்பந்தால யாருக்கு ரொம்ப லாபம்னு கேட்டிங்கன்னா.. அது Paul க்குதான். அதாங்க.. ஜோசியம் சொல்ற ஆக்டோபஸ். இப்போ அதுக்கு ரொம்பக் கடினமான ஒரு டெஸ்ட். அதுக்கு முன்னாடி ரெண்டு டப்பா கெடக்குது. அதுல ஒண்ணை அது செலக்ட் பண்ணியாகணும். ஒரு நாள், ரெண்டு நாள், மூணு நாள்.. ஊஹும். அதுவும் யோசிக்குது யோசிக்குது.. ஒண்ணும் வேலைக்கு ஆகல. கடைசியாப் பார்த்துச்சு. டபக்குன்னு தண்ணிய விட்டு வெளில தவ்வி தற்கொலை பண்ணிக்கிச்சு. அட.. அப்படி என்ன அந்த ரெண்டு டப்பால எழுதி இருக்குன்னு கேக்குறீங்களா?

ஒண்ணுல .. வேட்டைக்காரன். இன்னொண்ணுல சுறா..

(நன்றி -அத்திரி)

***************

மேலே இருக்கும் பொன்மொழியைச் சொன்ன எழுத்தாளர் - ஜி.நாகராஜன்

இப்போதைக்கு அவ்ளோதான்.. நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-))))

June 16, 2010

(கவனிக்கப்படாத) மனதைக் கவர்ந்த பாடல்கள்-2..!!!

ஒரு சில பாட்டுகள்.. ரொம்ப நல்ல பாட்டா இருக்கும்.. ஆனா ஏதாவது டுபுக்கு படத்துல இருக்குற காரணத்துனாலேயே யாருக்கும் தெரியாமயே போயிரும். அந்த மாதிரி ஒரு சில பாடல்களை தொகுத்து (கவனிக்கப்படாத) மனத்தைக் கவர்ந்த பாடல்கள் என்கிற தலைப்புல ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதி இருக்கேன். இப்போ அதே மாதிரி எனக்குப் பிடிச்ச.. ஆனா அவ்வளவா பிரபலம் ஆகாத பாடல்களோட ரெண்டாவது தொகுப்பு. பாடல்களுக்கான சுட்டியும் கொடுத்து இருக்கேன்.. பார்த்துட்டு (அல்லது) கேட்டுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க நண்பர்களே..

நிஜமா நிஜமா (படம் - போஸ் இசை - யுவன் ஷங்கர் ராஜா)

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட படம். புலி - சூர்யா.. பூனை - ஸ்ரீகாந்த். "காக்க காக்க மாதிரி ஒரு படம் பண்றோம் சார்"னு இயக்குனரு ஸ்ரீகாந்த் கிட்ட சொல்லி இருப்பார் போல. ஸ்ரீயும் நம்பி ஏமாந்துட்டார். மகா மொக்கையான படத்துல இந்த ஒரு பாட்டு மட்டும் நல்லா இருக்கும். சிநேகா அழகா இருப்பாங்க. பாட்டோட ஒரு ஷாட்டுல "உயிரின் உயிரே" பாட்டுல சூர்யா ஓடி வர மாதிரி ஸ்ரீகாந்த் முழு நீள கோட்டு போட்டு ஓடி வருவார் பாருங்க.. அவ்வ்வ்வவ்வ்வ்வ்

ஒரு தேதி பார்த்தா (படம் - கோயமுத்தூர் மாப்ள இசை - வித்யாசாகர்)

அது ஒரு அழகிய நிலாக்காலம். விஜய் + சங்கவி ஜோடின்னாலே சும்மா அள்ளும். இந்தப் படத்துல கவுண்டமணியும் சேர்ந்து பட்டயக் கிளப்பி இருப்பார். அர்ஜுனோட எல்லாப் படத்துக்கும் இசை அமைச்சுக்கிட்டு, அப்பப்போ வேற யார் படமாவது கிடைக்காதான்னு வித்யாசாகர் ஏங்கிக்கிட்டு இருந்த டைம். அருமையான மெலடியா இந்தப் பாட்டக் கொடுத்திருப்பார். பார்க்கவும் நல்லா இருக்கும். (பாட்டோட லிங்க் ஏதாவது இருந்தா சொல்லுங்கப்பா..)

முகம் என்ன (படம் - சுபாஷ் இசை - வித்யாசாகர்)

அர்ஜுன் ரேவதியோடவும், அபு சலீம் புகழ் மோனிகா பேடி கூடவும் சேர்ந்து நடிச்ச படம். எல்லாப் பாட்டுமே நல்லா இருக்கும். இந்தப் பாட்ட பாலா ரொம்ப ரசிச்சு பாடி இருப்பார். படத்த பத்தின இன்னொரு முக்கியமான தகவல்.. இதுக வர "ஏய் சலோமா சலோ" பாட்டுதான் கடைசியா சிலுக்கு ஆடுன பாட்டு. தீக்குள்ள இருந்து வந்து தீக்குள்லையே போற மாதிரி எடுத்து இருப்பாங்க..:-(((

இருபது வயசு (படம் - அரசாட்சி இசை - ஹாரிஸ் ஜெயராஜ்)

"வல்லரசு" மகராஜன் இயக்கத்துல அர்ஜுன் நடிச்ச படம். மொதப்படம் தமிழ்ல நடிச்சா நாமளும் ஒரு ஐஸ்வர்யான்னு நம்பி லாரா தத்தா நடிச்சாங்க. ஆனா படம் பப்படம். ஹாரிசோட இசைன்னே பல பேருக்குத் தெரியாது. இந்தப் பாட்டு சக்கையான ஐட்டம் சாங். ஹரிணி செமையா பாடி இருப்பாங்க. பாட்டுக்கு ஆடுனது "தாஜ்மகால்" ரியா சென். பார்க்க சூப்பரா இருக்கும். அதுலையும் கீழ படுத்துக்கிட்டு இடுப்ப மட்டும் தூக்கி ஒரு ஸ்டெப் போடுவாங்க பாருங்க.. ஆகா ஆகா.. (வெறும் பாட்டு லிங்க் தான் கொடுத்து இருக்கேன்.. யாராவது வீடியோ லிங்க் கொடுங்கப்பா..)

பூவரசம் பூவே (படம் - கடவுள் இசை - இளையராஜா)

கடவுள் மறுப்ப மையமா வச்சு வேலு பிரபாகரன் இயக்கிய முதல் படம். மணிவண்ணன் கடவுளா வந்து கடைசியா செத்துப் போவார். இந்தப் பாட்டு என்ன ஸ்பெஷல்னா.. தமிழ்ப்படங்கள்ள வந்த மிகச் சிறந்த கில்மாப்பாடல்கள்ன்னு ஒரு லிஸ்ட் எடுத்தா கண்டிப்பா இந்தப் பாட்டுக்கும் அதுல இடம் உண்டு. கேக்குறதுக்கும் நல்லா இருக்கும்.. ஹி ஹி ஹி.. வீடியோவ பாருங்க.. கொடுத்து வச்ச தாடிக்காரன்... ஹ்ம்ம்ம்..

முதன்முதலாக (படம் - எதிரி இசை - யுவன் ஷங்கர் ராஜா)

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கம். மாதவன் மாஸ் ஹீரோவாக முயற்சி பண்ணின படம். "பாட்டில் மணி"யா வந்து அவர் ரவுடிசம் பண்றதப் பார்த்தா காமெடியா இருக்கும். சதாவும், கனிகாவும் நாயகிகள். இந்தப் பாட்டு.. ஒரு மாதிரியாக தனது சோகத்தையும் காதலையும் நாயகன் சொல்ற மாதிரி இருக்குற பாட்டு. ஹரிஹரன் ரசிச்சு பாடி இருப்பாரு. பாட்டு படமாக்கின விதம் அக்மார்க் கே.எஸ்.ஆர் ஸ்டைல். நல்லா இருக்கும்.

சோனாலி சோனாலி (படம் - காமா இசை - ஆதித்யன்)

தமிழ் சினிமால ஒரு கில்மா படத்துக்கு சினிமா எக்ஸ்பிரஸ் ஒரு தனிப் புத்தகமே போட்டுச்சுன்னா அது இந்தப் படம்தான். பிரபல ஒளிப்பதிவாளர் அசோக் குமார் தன்னோட மகன (?!) ஹீரோவைப் போட்டு எடுத்தா அஜால் குஜால் படம். படத்துல ஒண்ணுமே இல்லாம எல்லாத்தையும் சென்சார் படுபாவிங்க வெட்டி விட்டு பல ரசிக பக்த கேடிகளோட பாவத்த சம்பாதிச்சது தனிக்கதை. பாட்டப் பொறுத்த வரைக்கும்.. ஹரிஹரன் கும்முன்னு பாடி இருப்பாரு. (எப்படி தேடியும் லிங்க் கிடைக்கல.. யாராவது தெரிஞ்சா சொல்லுங்க..)

வெண்ணிலா சிறகடித்து (படம் - பொன்னியின் செல்வன் இசை - வித்யாசாகர்)

எனக்கு ரொம்பப் பிடிச்ச கோபிகாவும், சுத்தமா பிடிக்காத ரவிகிருஷ்ணாவும் நடிச்ச படம். தயாரிப்பாளருக்காக அவர் மகன ஹீரோவாப் போட்ட நல்ல படம் கூட நாறிடும்னு ராதாமோகனுக்கு நல்ல பாடம் சொன்ன படம். நாயகன், நாயகியோட சுத்தி இருக்குறவங்க எல்லாரும் ரொம்ப நல்லா நடிச்சு இருப்பாங்க. அமைதியான அழகு - அதுதான் கோபிகா.. அருமையான பாட்டு.

மக்கள்ஸ்.. இது எனக்குப் பிடிச்ச ஒரு சில பாட்டுதான்.. உங்களுக்கும் இந்த மாதிரி பிடிச்ச, ஆனா நிறைய பேருக்குத் தெரியாத பாட்டு இருந்தா பின்னூட்டத்துல சொல்லிட்டு போங்கப்பா...