December 29, 2009

மௌனவெளிகள்..!!!




திரெதிரே இருந்தும்
வார்த்தைகள் அற்ற
கனமான மவுனத்தில்
கழிகின்றன பொழுதுகள்

எப்படி இருக்கீங்க
வீட்டுல எப்படி இருக்காங்க
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கலை
இப்போ கொஞ்சம் பரவாயில்லையா

எதைச் சொல்லி ஆரம்பிப்பது
தந்தையின் மரணத்துக்காக
ஊருக்குச் சென்று
திரும்பி இருக்கும் நண்பரிடம்..!!!

December 28, 2009

டாப் டென் டப்பா படங்கள் 2009 ..!!!

பெரிதும் எதிர்பார்ப்பைக் கிளப்பும் படங்கள் ஊத்திக் கொள்வது நமக்கு ஒண்ணும் புதுசில்லை. இந்த வருஷம் வெளியான நேரடித் தமிழ் படங்கள், கிட்டத்தட்ட 125. (உண்மையிலேயே) வெற்றி பெற்றவை எத்தனைன்னு பார்த்தா மண்டை காய்றது நிச்சயம். என்னோட பார்வையில், நல்லாயிருக்கும்னு நம்பிப் போன ரசிகர்களோட வயித்தெரிச்சல கொட்டிக்கிட்ட, 2009 இன் டாப் டென் டப்பா படங்களைத்தான் இங்கே தொகுத்து இருக்கிறேன். ரேட்டிங் எல்லாம் கொடுக்கலை. இருக்குறதிலேயே பெரிய கொடுமை எதுன்னு நீங்களே சொல்லுங்கப்பா...

படிக்காதவன்
***************

சரியாப் படிக்காத பசங்க எல்லாம் படிச்ச பிகராப் பார்த்து உஷார் பண்ணினா வாழ்க்கைல ஓகோன்னு வரலாம்னு அரிய தத்துவ முத்தை உதிர்த்த படம். வடிவேலு ஸ்டைல்ல விவேக் பண்ணின காமெடிதான் படத்துல பாக்குற மாதிரி இருந்த ஒரே விஷயம். சன் டிவி விளம்பரத்துல மட்டும் படம் நூறு நாள் ஓடுச்சு. பொல்லாதவன், யாரடி நீ மோகினின்னு நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு.. இப்போ வரக்கூடிய தெலுங்கு படங்களே ஓரளவுக்கு டீசெண்டா இருக்குறப்போ, நமக்கு இது தேவையா தனுஷ்?

நான் கடவுள்
**************

பாலா என்கிற அற்புதமான கலைஞன் சறுக்கின படம். இந்தப் படத்தை பாலாவைத் தவிர யாரும் எடுத்திருக்க முடியாது. ஆனால் படத்துக்கு இருந்த பிரமாண்டமான எதிர்பார்ப்பே படத்துக்கு மிகப் பெரிய மைனசாப் போச்சு. நல்ல நடிப்பை தெளிவில்லாத திரைக்கதை காலி பண்ணிருச்சுன்னு தான் சொல்லணும். கிளைமாக்ஸ் மகா சொதப்பல். ஆர்யா மூணு வருஷம் தாடியும் மீசையுமாதலைமறைவாத் திரிஞ்சது மட்டும்தான் மிச்சம்.

1977
*****

ரொம்ப நாளாவே தன்னோட கனவுப்படம்னு சரத் சொல்லிக்கிட்டு இருந்தாரேன்னு நம்பிப் போய் உக்கார்ந்தா.. அவ்வ்வ்வவ்.. ஏண்டா உள்ள வந்தேன்னு கூப்பிட்டு வச்சுக் குத்தின படம். சட்டை இல்லாம நமீதா கூட டான்ஸ் ஆடுன சரத்தைப் பார்த்து ஜன்னி வராத குறைதான். ஜேம்ஸ்பாண்ட் படம் மாதிரி எடுக்கலாம்னு சொல்லி டைரடக்கரு சரத் தலைல மிளகா அரச்சு இருந்தாரு...கூடவ தலையைக் கொடுத்தது நம்ம தப்புத்தான்.

மரியாதை
************

ஏய்.. நீ மட்டும்தான் டப்பா படம் கொடுப்பியா.. நாங்க மாட்டோமான்னு சரத்துக்கு போட்டியா கேப்டன் களம் இறங்கி கலக்கிய படம். வானத்தப்போல விக்ரமன்னு போனா, வெளில வந்தவங்க கண்ணுலையும் காதுலையும் ரத்த ஆறு.. ஒரே லாலலா.. இன்பமே பாட்டுக்கு மீரா ஜாஸ்மின் ஆட, கேப்டன் பாட.. புரட்சிக் கலைஞரோட மேக்கப்பை பார்த்து ஹாலிவுட் மக்கள் எல்லாம் வாவ் வாட் மேன்னு வாயப் பொளந்தவங்க பொளந்தவங்க தான்.. டைரக்ட் டிக்கெட்டு..

ஆனந்த தாண்டவம்
**********************

சுஜாதாவோட "பிரிவோம் சந்திப்போம்".. நாவல்கள் படமாக்கப்படும் போது எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவது கிடையாது என்கின்ற சினிமாத்துறையின் நம்பிக்கையை மீண்டும் உறுதி செய்தது.. நல்ல வேளை இந்தக் கொடுமைய பார்க்காம, படம் வரதுக்கு முன்னாடியே தல போய் சேர்ந்துட்டாரு.. கதாநாயகனோட லட்சணத்துக்கே படத்துக்கு ஆஸ்கார் அவார்டு தரணும்..

தோரணை
************

புலியைப் பார்த்து சூடு போட்டுக்கலாம்.. பூனையைப் பார்த்து? தமிழ் சினிமாவைக் காப்பாத்த ஒரு விஜய் மட்டும் போதாது, நானும் களத்தில் குதிச்சே தீருவேன்னு அடம் பிடிக்கும் விஷாலுக்கு கிடைச்ச மரண அடி. பாட்டும் வொர்க்அவுட் ஆகாததினால படம் பயங்கர ஊத்து.. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கிராமத்துல இருந்து சிட்டிக்கு வர ஹீரோவை நாம பார்க்க வேண்டி இருக்குமோ? கொஞ்சமாவது திருந்துங்கப்பா..

பொக்கிஷம்
**************

தமிழ் சினிமாவை உலக சினிமா ரேஞ்சுக்கு கொண்டு போகாம விட மாட்டேண்டா டோய்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கிற சேரனோட படம். நல்ல எண்ணம் தான்.. ஆனா படம் அந்த மாதிரிஇல்லையே.. நீளம் ஜாஸ்தி + திரைக்கதை சொதப்பல். அத விட பெரிய நொம்பலம், கதாநாயகனா சேரனே நடிச்சதுதான். வெற்றி கொடி கட்டு, பாண்டவர் பூமி, தேசிய கீதம் போன்ற படங்களைத் தந்த இயக்குனர் சேரன் தான் எங்களுக்கு வேண்டும். நடிகர் அல்ல.. புரிந்து கொள்வீர்களா சேரன்?

ஆதவன்
**********

தசாவதாரத்துக்குப் பின் வரும் கே.எஸ்.ரவிக்குமார், அயன் வெற்றியோடு சூர்யா, ஹாரிஸ் என்று படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு. ஆனால் குருவி தந்த உதயநிதியின் படம் என்று நிரூபித்ததால்.. படம் பப்படம். தாய்வீடு காலத்து கதை.. எத்தனை நாள் தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்? பாட்டு, வடிவேலு மட்டும் இல்லை.. மொத நாளே சங்கு ஊதியிருக்கும். நயன்தாராவைப் பார்த்து பல பேர் மயக்கம் போட்டு விழுந்தது தனிக்கதை.

யோகி
*******

பருத்திவீரனுக்குப் பிறகு அமீர் என்ன பண்ணப் போகிறார் என்று எல்லோரும் ஆவலோடு எதிர்பார்க்க, அவரோ கதாநாயக அவதாரம் எடுத்தார். சரி, கதை உலக சினிமா அளவுக்கு இருக்கும் போல என்று பார்த்தால்.. உலக சினிமா கதையை சுட்டு இருந்தார்கள். நான் அந்தப் படத்தைபார்த்ததே கிடையாது என்று இயக்குனரும், அமீரும் உளறியது செம காமெடி. அமீரின் இமேஜை டவுனாக்கிய படம்.

கந்தசாமி
***********

தமிழ் சினிமாவிலேயே ரொம்ப நல்லவர் விக்ரம்தான் என்பதை நிரூபித்த படம். பின்ன? அவர் நடிச்ச அந்நியன் கதையவே ஒருத்தர் அவர்கிட்ட சொல்லி.. இட் இஸ் சோ சுவீட் யூ நோ என்று விக்ரமும் மண்டையை ஆட்டி வைக்க.. இளிச்சவா புரொடியூசர் தாணு சிக்க.. ஷ்ஷ்ஷ்..யப்பா.. முடியல.. படத்தில உருப்புடியா இருந்தது தேவிஸ்ரீ பிராசத்தோட பாட்டு மட்டுமே.. ஆனா அதுக்கு விவேகா எழுதின வைர வரிகள் இருக்கே... நாலஞ்சு அவார்டு கொடுத்தாக் கூட போதாது.. இனிமேல் இப்படி படம்எடுக்காதீங்கன்னு யாராவது கந்தசாமிக்கு லெட்டர் எழுதுங்கப்பா..

என்னடா.. பத்து படம் முடிஞ்சு போச்சே..ஆனா முக்கியமா ரெண்டு படத்தை காணோமேன்னு நீங்க தேடுறது புரியுது.. அதெப்படி விடுவோம்.. ஆனா பாருங்க.. அந்த ரெண்டு படமுமே, கண்டிப்பான முறையில.. ஓடாதுன்னு (ஓடக் கூடாதுன்னு) எதிர்பார்த்த படங்கள்.. சோ.. ஹியர் வி கோ..

வில்லு
********

போக்கிரி படத்துக்குப் பிறகு வந்த விஜய் - பிரபுதேவா காம்பினேசன். தொன்னூருல வந்த சோல்ஜர் ஹிந்திப் படத்தோட உல்டா. பாட்டு எதுவுமே எதிர்பார்த்த வெற்றி பெறாதது மொத அடி. லாஜிக் இல்லாத கதை, சொதப்பலான திரைக்கதை.. சிவசம்போ..

வேட்டைக்காரன்
*******************

படம் நல்லாயிருக்கு, இல்லைன்னு சொல்றத விட.. வில்லு, குருவிக்கு எவ்வளவோ பரவாயில்லை பாசு.. இதுதான் ஒரு விஜய் ரசிகரின் கமென்ட் என்றால், எந்த அளவுக்கு அவர் பாதிக்கப்பட்டிருப்பார் என்று நீங்களே யோசிங்க.. வெளங்கல.. நாலஞ்சு படத்தோட கலவை.. விஜய் திருந்தவே போறதில்லை.. இது பதிவுலக மக்களோட கமென்ட்.. மதுரைல ரெண்டாவது நாளேமதி தியேட்டர்ல காத்தாடுது.. வேற என்னத்த சொல்ல..

(இந்த ரெண்டு படமுமே நான் பார்க்கல.. நண்பர்கள் சொல்லக் கேட்டதுதான் மக்களே..)

இதே மாதிரி நீங்க எதிர்பார்த்து மண்டை காஞ்ச படங்கள் ஏதாவது இருந்தாக் கூட பின்னூட்டத்துல சொல்லுங்கப்பா..

இதையும் படிங்க.. ஜெட்லி - 2009 ஆண்டின் சிறந்த பத்து மொக்கை படங்கள்

December 27, 2009

தீராத விளையாட்டு பிள்ளை..!!!



சத்யம், தோரணை என்று பொறி கலங்கிப் போய் கிடக்கும் விஷாலின் அடுத்த படம். அகத்தியனின் மருமகன் திரு இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கிறார். சண்டக்கோழி, திமிரு என்று பட்டையைக் கிளப்பிய விஷால் - யுவன் காம்போ இந்தப் படத்திலும் தொடர்கிறது. குறிப்பாக சண்டக்கோழியின் "தாவணி போட்ட தீபாவளி"யும் , திமிருவின் "அடங்கொப்புரானே"வும் இன்றளவும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். சில படங்களில் எல்லாப் பாடல்களுமே ஹிட்டாகும். மற்ற படங்களில் ஏதேனும் இரண்டு அல்லது மூன்று பாடல்கள் மட்டுமே நன்றாக இருக்கும். தீராத விளையாட்டுப் பிள்ளை இதில் எந்த வகை? எதிர்பார்ப்புகளை பாடல்கள் பூர்த்தி செய்கின்றனவா?

எல்லாப் பாட்டுமே வெஸ்டர்ன் அடிதான்.

1. Introduction (யுவன் ஷங்கர் ராஜா)

ஒரு நிமிடம் மட்டுமே ஒலிக்கும் சின்ன இசைக்கோர்வை. "காதல் வைரஸ்"இன் பைலாமோர் பாடல் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. தியேட்டரில் படம் ஆரம்பிக்குமுன் போடும் ஆங்கில இசை ஒன்று போடுவார்கள் இல்லையா? அதேபோல பாட்டுக்களுக்கு முன்பாக வரும் அறிமுகம். சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.

2 . பூ முதல் பெண் வரை (யுவன் ஷங்கர் ராஜா)

வாழ்க்கையில் எனக்கு எல்லாம் விதம் விதமாக வேண்டும் என்று பாடும் கதாநாயகனின் அறிமுகப் பாடல். ரொம்ப மெனக்கெடாமல் எழுதி இருக்கிறார் பா.விஜய். காதலின் பிரம்மன் நான் என்றெல்லாம் ஓவராகவே ஹீரோவைப் புகழ்ந்து தள்ளுகிறார். ஆனாலும் வரிகளில் இளமைத் தாண்டவம்.

அழகான பெண்ணொன்று..அறிவான பெண்ணொன்று..அன்பான பெண்ணொன்று..
ஒவ்வொன்றாய் பாரென்று.. என்னவள் யாரென்று.. சொல்கின்ற நாளென்று..

எப்போதும் பெதொஸ் பாடலாக தேடித் பிடித்து பாடும் யுவன் கொஞ்சம் வித்தியாசமாக இந்த வெஸ்டர்ன் பாடலை பாடியிருக்கிறார். முதல் முறை கேட்கும்போது பெரிய அளவில் ஈர்க்கவில்லை. ஆனால் கேட்க கேட்க பரவாயில்லை. பாடலின் ஊடாக வரும் கோரஸ் நன்றாக இருக்கிறது.

3. என் ஜன்னல் வந்த காற்றே ( ரோஷினி, ப்ரியா, திவ்யா)

படத்தில் இருக்கும் மூன்று கதாநாயகிக்களுக்கான அறிமுகப் பாடலாக இருக்கலாம். பாண் பண்டியின் ராப்போடு ஆரம்பிக்கிறது. மூன்று வித்தியாசமான குணாதிசயங்களை பாட்டின் ஊடாக கொண்டு வந்திருக்கிறார்கள். முதல் நாயகி இயற்கையை பெரிதும் வியப்பதோடு ஆரம்பிக்கிறது பாட்டு. இசை, கவிதை, அணில் என்றெல்லாம் பயணிக்கிறது. அடுத்ததாக வரும் நாயகி தன்னை ஒரு சாக்லேட் கேர்ள் என்கிறார். யார் என்னை கவனித்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லை என சொல்லும் தைரியசாலி. மூன்றாவது நாயகி பற்றி சொல்லும் பாட்டின் கடைசி பகுதியில்தான் அதகளம்.

ஹே தங்கா தங்கா தங்கா
இது தாவணி போட்ட மங்கா
இது அல்லிராணி பொண்ணு
என் மேல வைக்காத கண்ணு

டப்பாங்குத்து ரேஞ்சுக்கு வெஸ்டர்ன் இசையிலேயே இறங்கி குத்தி இருக்கிறார் யுவன். செமபாட்டு.

4. என் ஆசை எதிராளியே (விஜய் யேசுதாஸ், வினைதா )

சீனப் படங்களில் போர்க்காட்சிகளின் போது இசைக்கப்படும் ஒலிக்கோர்வையை ஒத்திருக்கிறது இந்தப் பாட்டின் prelude. அதற்குப் பின் வருவது நமக்கு பழக்கமான வெஸ்டர்ன் இசைதான். நாயகனை மண்டியிட சொல்லும் நாயகி, மறுத்துப் பேசும் நாயகன் என்று போகிறது பாடல். படத்திலேயே இந்தப் பாட்டில் தான் பா.விஜய் கலக்கி இருக்கிறார்.

சிறையில் வைத்து உன்னை சிதிலமாக்கி விட எனது காலடியில் கிடக்க வா..

ஒரு வித ஆண்மையுடன் வினிதாவின் குரல் ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறது.

கைதட்டி கூப்பிட்டு பார் கார்மேகம் தூறல் தருமா...
கண்ணே
நீ ஆணையிட்டால் ஆகாயம் தரையில் வருமா..

விஜயின் குரல் எப்போதும் போல நம்மை ஈர்க்கிறது. ஆனாலும் பாட்டு என்னை பெரிதாக கவரவில்லை.

5 . ஒரு புன்னகை தானே (ரஞ்சித்)

Pick of the album. காதல் ஈடேறிய சந்தோஷத்தில் நாயகன் பாடும் பாடல். எளிமையான வரிகளுக்கு ரொம்ப சிம்பிளாக இசை அமைத்து இருக்கிறார் யுவன். Excellent Arrangements.

ஹே பெண்ணே நீ என்ன அழகான கூர்வாளா..
கொல்லாமல் கொல்கின்றாய் உடைகின்றேன் தூள் தூளா..

ரஞ்சித்தின் குரல் வசீகரிக்கிறது. இருந்தும் இந்தப் பாடலை யுவன் பாடியிருந்தால் இன்னும் அழகாய் இருந்திருக்கும்.

6. தீராத விளையாட்டுப் பிள்ளை (ஆண்ட்ரியா, தன்வி,ரஞ்சித்)

"நெற்றிக்கண்" பாடலின் ரீமிக்சாக இருக்குமோ என்று பயந்து கொண்டே கேட்டேன். நல்ல வேளையாக இல்லை. ஒரு பாடலை மட்டும் வாலி எழுதி இருக்கிறார். இனி அடிக்கடி டிஸ்கோக்களில் பிளே செய்ய ஒரு பாடல் கிடைத்து விட்டது.

ஓயாமல் கொடுப்பாயே தொல்லை..
அம்மம்மா
உன்னைப்போல பிளேபாயே இல்லை..

கிடாரில் பொளந்து கட்டி இருக்கிறார் யுவன். ஆண்ட்ரியாவின் குரலில் உற்சாகம் தளும்பி வழிகிறது.கொஞ்சம் கொஞ்சம் "கள்வனின் காதலியின்" கட்டில் காட்டு மன்னனும் ஞாபகம் வருகிறது. பாட்டு கண்டிப்பாக ஹிட் ஆகும்.


படத்துக்கான எல்லா பாடல்களும் ஹிட்டாவதில் இசையமைப்பாளரைப் போலவே நாயகன், இயக்குனருக்கும் பெரும்பங்கு உண்டு. உதாரணத்துக்கு ஹாரிஸை எடுத்துக் கொள்வோம். கவுதமுக்கு ம்யூசிக் போட்ட வாரணம் ஆயிரத்தில் எல்லாப் பாட்டுமே சூப்பர் ஹிட். ஆனால் ரவிக்குமாருக்கு ஆதவனில் மூன்று பாடல்கள் மட்டுமே ஹிட். இந்த உதாரணம் இளையாராஜாவுக்கும் பொருந்தும். இப்போது யுவன்ஷங்கரும் இதே பார்முலாவைப் பின்பற்றி ஆள்பார்த்துதான் அடிக்கிறாரோ என்றெண்ணத் தோன்றுகிறது. சர்வம், வாமணன், முத்திரை என்று தொடர்ந்து சொதப்பியவர் பையாவில் நிமிர்ந்து இருந்தார். தீ.வி.பி யில் கொஞ்சம் சறுக்கி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

தீராத விளையாட்டு பிள்ளை - கொஞ்சம் சுதி கம்மிதான்

(ஹோய் டக்கு.. நாங்களும் பாட்டு பத்தி எழுதிட்டோம்ல..)

தொடர்புடைய மற்றொரு இடுகை..

ராஜூ - குட்டி பாடல்கள்..!!!

December 25, 2009

உக்கார்ந்து யோசிச்சது (25-12-09)..!!!

குறிப்பும் முன்னொழுக்கமும் என்ற பொன்.வாசுதேவனின் தலையங்கத்துடன் "அகநாழிகை"யின் இரண்டாம் இதழ் வெளிவந்து விட்டது. முதல் இதழில் குறையாக சொல்லப்பட்ட சின்ன எழுத்துரு மாற்றப்பட்டு இப்பொழுது பெரிய எழுத்துருவை பயன்படுத்தி இருப்பதால் படிக்க எளிதாக இருக்கிறது. நம் பதிவுலகை சேர்ந்த அன்பர்கள் அ.மு.செய்யதுவும், அதி பிரதாபனும் அறிமுக எழுத்தாளர்களாக தங்கள் சிறுகதைகளுடன் களம் இறங்கி இருக்கிறார்கள். நிலாரசிகனின் "சங்கமித்திரை" என்னும் கதையும், நண்பர் உழவனின் கவிதையும் வெளியாகி இருக்கிறது.அனைவருக்கும் வாழ்த்துகள். லாவண்யா சுந்தரரராஜன், பா.ராஜாராம், என்.விநாயகமுருகன் ஆகிய பதிவர்களோடு, விக்கிரமாதித்தயன், உமாஷக்தி, சந்திரா, நலன், சுகிர்தா ஆகியோருடைய கவிதைகளும் வெளியாகி இருக்கின்றன.

"அமுதமும் அமைதியும்" என்ற பாவண்ணனின் கட்டுரை என்னை மிகவுமே பாதித்தது. கதை, கட்டுரை எதுவானாலும் மனிதர் அசத்துகிறார். இசை பற்றிய ரா.கிரிதரன் கட்டுரையும் , தாணு பிச்சையாவின் புத்தகம் பற்றிய ஜெயமோகனின் கட்டுரையும் இருக்கின்றன. குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு கட்டுரை - அஜயன் பாலாவின் அல்ஜீரிய சுதந்திரப் போர் பற்றியது. புத்தகத்தின் ஹைலைட்டான விஷயங்கள் இரண்டு. அவை, மனுஷ்யபுத்திரனின் நேர்காணல் மற்றும் லக்ஷ்மி சரவணக்குமாரின் சிறுகதை. புதிதாக சில பிரச்சினைகளை மனுஷ்யபுத்திரனின் பேட்டி தோற்றுவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. "காலச்சுவடு" கண்ணன் மற்றும் "உயிர் எழுத்து" சுதீர் செந்தில் ஆகிய இருவரையும் மனிதர் வாங்கு வாங்கென்று வாங்கியிருக்கிறார். பேட்டியின் முதல் பகுதி மட்டுமே இந்த இதழில் வெளியாகி இருக்கிறது. அடுத்த புத்தகத்துக்கு ஆவலுடன் வெயிட்டிங்.

***************

அவர் ஒரு பிரபல பதிவர். சுவாரசியமான எழுத்து நடைக்கு சொந்தக்காரர். ஆனால் ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் இருந்து கொண்டு மற்றவர்களிடம் இருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொள்கிறாரோ என்பது அவரைப் பற்றிய என் எண்ணமாக இருந்தது. ஆனால் என்னுடைய அத்தனை கணிப்புகளையும் எங்களுடைய முதல் சந்திப்பே தூள் தூளாக்கி விட்டது. அத்தனை எளிமையாக, இனிமையாகப் பழகினார். இப்படி கதம்பமாக எழுதும் பதிவுக்கு "உக்கார்ந்து யோசிச்சது" என்று பெயர் வரக் காரணமும் அவர்தான். அவர் - கார்க்கி. இலக்கியம், இசை, சினிமா என்று ஒரு சில விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். எங்களுக்குள் பல விஷயங்களில் ஒத்த கருத்து இருக்கிறது, ஒன்றைத் தவிர (ஹி ஹி ஹி.. அது என்னன்னு உங்க எல்லாருக்குமே தெரியும்..). நான் அவரிடம் சொன்னது இதுதான். "தல, தளபதி பற்றிய என்னுடைய ரசனையும், உங்களுடைய ரசனையும் வெவ்வேறாக இருந்தாலும் நாம் நண்பர்கள்.. அதுதானே சகா முக்கியம். ." கொஞ்ச நேரமே பேச முடிந்தாலும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நன்றி சகா..

***************

நண்பனை கமுதிக்கு வண்டி ஏற்றி விடுவதற்காக ஆரப்பாளையம் வரை போயிருந்தேன். பேருந்தில் அவன் அமர்ந்த சீட்டிற்குப் பின் ஒரு இளம்பெண்ணும், சிறு குழந்தையும் (நான்கு அல்லது ஐந்து வயது இருக்கும்) உட்கார்ந்து இருந்தார்கள். அந்தப் பெண்ணின் கணவர் வெளியே ஜன்னலின் அருகே நின்று கொண்டிருந்தார். வண்டி கிளம்பப் போகையில் அந்த குழந்தை மழலை மொழியில் திடீரெனப் பேசினாள்.

"ஏ யப்பா.. நானும் அம்மாவும் ஊரில இல்லைன்னு ரொம்ப ஊரு சுத்தாத.. வெளியில எல்லாம் மம்மு சாப்பிடாத.. அம்மா நூடுல்ஸ் வாங்கி வச்சிருக்கு.. அத மட்டும் சாப்பிடு.. வேற ஏதாவது வேணும்னா பக்கத்து வீட்டு யச்சுமி பாட்டிக்கிட்ட வாங்கிக்கோ.. ஏதாவது தப்பு பண்ணின.. தோல உரிச்சு உப்புக்கண்டம் போட்டிருவேன்.."

பக்கத்தில் நின்று கொண்டிருந்த நான் களுக்கென்று சிரித்து விட்டேன். அந்த ஆளுக்கு அவமானமாகப் போய் விட்டது போலும்.

"ஏண்டி, பிள்ளைக்கு இப்பவே டிரைனிங் கொடுக்குறியா" என்று மனைவியின் மீது பாய்ந்தார்.

அதற்குள் பஸ் கிளம்பி விட, நானும் எஸ்கேப் மாமு எஸ்கேப்.

***************

மழை ஓய்ந்தும் தூவானம் விடாத கதையாக, ஈரோடு சங்கமத்தில் விருந்து முடிந்த பின்னும் மக்கள் செம கூத்தடித்து இருக்கிறார்கள். கேபிள் அண்ணன், தண்டோரா, அப்துல்லா அண்ணன், பரிசல், வெயிலான் என்று ஒரு செம ஜமா ஓடியிருக்கிறது. சீக்கிரமாகக் கிளம்பியதால் அநியாயத்துக்கு மிஸ் பண்ணி விட்டேன். அவர்கள் ஆடிய ஆட்டத்தின் சில காட்சிகளை ஈரவெங்காயம் தொகுத்திருக்கிறார். ரகளைகளைப் பார்க்க, இங்கே க்ளிக்குங்க..

***************

ஹாலிவுட்டில் அவ்வப்போது Hot Shots, Epic Movie, Superhero Movie என்று தங்களைத் தாங்களே கிண்டல் செய்து கொள்ளும் வண்ணம் படமெடுப்பார்கள். தமிழில் இதுபோன்ற முயற்சிகள் ரொம்பக் குறைவே. சத்யராஜும், விவேக்கும் ஒரு சில காட்சிகளில் இதை முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் ஒரு முழு நீளப்படம் (கவனியுங்கள்.. நீலப்படம் அல்ல), தமிழ் சினிமாவைக் கிண்டல் செய்து வந்ததாக எனக்கு நினைவில்லை. அந்தக் குறையை நிவர்த்தி செய்ய வந்திருக்கிறது தயாநிதி அழகிரியின் "தமிழ் படம்". சிவாஜி, பில்லா, நாயகன் என்று எல்லா படத்தையும் சகட்டுமேனிக்கு ஓட்டுகிறார்கள். டிரைலரே அசத்துகிறது. அதேபோல எதிர்பார்ப்பை ஏற்றியிருக்கும் இன்னொரு படம் "ஆயிரத்தில் ஒருவன்".செல்வராகவன் பட்டையைக் கிளப்பி இருப்பார் என்று நம்புகிறேன். (ஏன்யா டிரைலருக்கு எல்லாம் ஆளாளுக்கு விமர்சனம் போடுறீங்க.. கொஞ்சம் ஓவரா இல்ல?) "King Solomon's Mines" ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. அது என்ன இங்கிலீஷ் படம், அது பற்றி ஒரு பதிவு போடுங்களேன் என்று கேட்பவர்கள் போகவேண்டிய இடம் அண்ணன் ஹாலிவுட்பாலாவினுடைய தளம்.

***************

ஒரு பொன்மொழி

உங்களுக்குப் பிடித்த நாயகனின் படம் நன்றாக ஓடுகிறது என்ற செய்தியைக் காட்டிலும், எதிராளி நடிகனின் படம் ஊத்திக்கொண்டது என்கின்ற செய்தி பல மடங்கு சந்தோஷத்தை தரக்கூடியது-ஸ்ரீலஸ்ரீஅஜால்குஜால் கார்த்திகேயானந்தா...

***************

இன்று கிருஸ்துமஸ் நன்னாள். இயந்திரமயமாகிப் போன இந்த வாழ்க்கையில் நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கான தேவைகள் ரொம்பவே அதிகம். பண்டிகைகள் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உறவினர்கள் அனைவரும் ஒன்றாய் வீட்டில் கூடவும், நண்பர்களுடன் தங்களின் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளவும் உதவுகின்றன. அந்த வகையில் எல்லா பண்டிகைகளையும் நான் ரொம்பவே விரும்புகிறவன். எனவே.. கேக் எடு.. கொண்டாடு.

பதிவுலக நண்பர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-))))))

December 23, 2009

பட்டும் திருந்தாத ஜென்மங்கள் ( சிறுகதை போட்டிக்காக..)

தடதடத்து ஓடிக் கொண்டிருந்தது ரயில். முகத்தில் அறைந்த குளிர் காற்று மனதுக்கு இதமாய் இருந்தது. தாரை தாரையாய் வெளியே பெய்து கொண்டிருந்த மழையின் துளிகள் என் முகத்தில் தெறித்து விழுந்தன . மழையை ரசிப்பவன்தான் என்றாலும் மழையில் நனைவது ஏனோ பிடிக்காது. கதவை சார்த்தி விட்டுத் திரும்பியபோதுதான் அவளைப் பார்த்தேன். ரயிலின் மற்றொரு வாசலின் ஆபத்தான விளிம்பில் நின்று கொண்டிருந்தாள்.

"ஏய்.. அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க.. விழுந்து கிழுந்து தொலைச்சிட போற.."

நான் கத்தியதை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. அனிச்சையாக உடம்பு பின்வாங்க ரயிலின் உள்ளே வந்தாள். அவளருகே சென்றேன். இப்போது அவளை நெருக்கத்தில் கூர்ந்து பார்க்க முடிந்தது. அழகாக இருந்தாள். உடைகளில் ஏழ்மையின் சாயல்தெரிந்தது.

"என்ன.. தற்கொலையா?"

"....."

"கேக்குறேன்ல.."

அவள் தலை குனிந்து நின்றாள். அழுது கொண்டிருக்கிறாளா? சுற்றிலும் பார்த்தேன். கம்பார்ட்மெண்டில் இருந்த கொஞ்ச நஞ்ச பேரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

"சரி.. எதுன்னாலும் பொறுமையா பேசிக்கலாம்.. மொதல்ல உள்ளே வந்து உக்காரு.."

அவள் உள்ளே வந்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டு என் எதிரே அமர்ந்தாள். என்னெவென்று வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒரு அமைதி அங்கே நிலவியது.

"உன் பேர் என்னனாவது நான் தெரிஞ்சிக்கலாமா?"

"....."

"போச்சுடா.. இதுக்கும் அமைதிதானா? நீ என்ன ஊமையா?"

"........."

ooOoo


"கிருஷ்ணவேணி.."

சடாரென்று நான் பேசுவேன் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.

"சொந்த ஊரு சிவசைலம்னு திருநெல்வேலி பக்கத்துல ஒரு கிராமம். அப்பாவுக்கு மளிகைக் கடை. நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு. டைலரிங் கத்துக்கப் போன இடத்துலதான் மொதமொதலா ராஜாவைப் பார்த்தேன். பின்னாடி சுத்தி சுத்தி வந்தான். காதல்னு சொன்னான். நம்புனேன். எங்கப்பா கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாரு. வேற வழியில்லாம வீட்ட விட்டு மதுரைக்கு அவன் கூட ஓடி வந்துட்டேன். அதுக்கப்புறம் தான் தெரிஞ்சது, அவன் ஆசைப்பட்டது என்னோட உடம்புக்கும் நகைக்கும்தான்னு.. அவன்கிட்ட இருந்து தப்பிச்சு வந்து இந்த டிரைன்ல ஏறிட்டேன்.. ஆனா அடுத்து என்ன பண்றதுன்னு தெரியல.. அதான் செத்துப் போய்டலாம்னு...ஓ.ம்.ம்.ம்.ம்.ம்"

என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் ஆதரவாக என்னருகே வந்து அமர்ந்தார்.

"மறுபடி உங்க வீட்டுக்குப் போறியா?"

"நான் மாட்டேன்.. எங்கப்பா என்னை வெட்டியே போட்டிருவாரு.."

சிறிது நேர அமைதிக்குப பிறகு கேட்டார்.

"என் கூட என் வீட்டுக்கு வா.. அங்க பத்திரமா இருக்கலாம்.."

இந்தக் காலத்திலும் இப்படிப்பட்ட நல்ல மனிதர்கள் இருக்கிறார்களா? நான் சட்டென்று அவர் கால்களில் விழுந்தேன். என் தோளைத் தொட்டுத் தூக்கினார்.

"உங்க பேர் என்னன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?"

ooOoo

"செல்வம்.."

யார் கூப்பிடுவது என எட்டிப் பார்த்தேன். வெளியே திவாகர் நின்றிருந்தான். பக்கத்து வீட்டில் வசிப்பவன். என்றாவது ஒரு நாள் டைரக்டர் ஆகும் கனவில் இருப்பவன். என்னைப் போலவே அநாதை.

"என்ன திவா?"

"வேணி மேடம் புக் கேட்டிருந்தாங்க.. அதுதான் கொடுத்துட்டுப் போகலாம்னு.."

"கோவிலுக்குப் போயிருக்கா.. டேபிள் மேல வச்சிட்டுப் போ.."

வந்து கொஞ்ச நாட்களே ஆகியிருந்தாலும் கூட வேணி சுற்றி இருக்கும் மனிதர்களோடு நன்றாகப் பழகி விட்டாள். யாரெனக் கேட்டவர்களிடம் உறவுக்காரப் பெண் என்று சொல்லி சமாளித்து விட்டேன்.

என்னுடைய வழக்கங்களும் நிறையவே மாறத் தொடங்கியதை என்னால் உணர முடிந்தது. இஷ்டப்பட்ட நேரத்து வீட்டுக்கு வருவதோ, கண்ட கண்ட இடங்களில் சாப்பிடுவதோ அறவே காணாமல் போனது. என் வாழ்வில் இருந்த வெறுமையை அவள் விரட்டி விட்டிருந்தாள். அவள் மீது எனக்கு தோன்ற ஆரம்பித்து இருந்த உணர்வு.. இதற்குப் பெயர்தான் காதலா..?

எத்தனை நாள்தான் காதலை மனதிலேயே பூட்டி வைப்பது? அவள் என்னை ஏற்பாளா? கூடிய விரைவில் அவளிடம் நேரடியாக சொல்லி விட வேண்டும். என்னால் முடியுமா?

ooOoo

"உங்களால கண்டிப்பா முடியும். நல்லா யோசிச்சு சொல்லுங்க.."

திவாகர் எனக்குள் ஒரு பூகம்பத்தை விதைத்து இருந்தான். அவன் சொன்னது எனக்கு கேட்டுக் கொண்டே இருந்தது.

"உங்க அழகுக்கு நீங்க மட்டும் சினிமால நடிச்சீங்க.. சான்சே இல்ல.. எங்கேயோ போய்டுவீங்க.. எனக்குத் தெரிஞ்ச டைரக்டர் புதுசா ஒரு ஹீரோயின் தேடிக்கிட்டு இருக்கார்.. நாம சொன்னாக் கேப்பாரு.. சொல்றத சொல்லிட்டேன்.. அப்புறம் உங்க இஷ்டம்.."

குழப்பமாக இருந்தது. அன்பைப் பொழியும் செல்வம் ஒரு பக்கம். பணம், புகழ் என்று ஆசை காட்டும் திவாகர் இன்னொரு பக்கம். நான் என்ன முடிவெடுக்க?

ooOoo

வேணி இப்படி ஒரு முடிவெடுப்பாள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தன்னை தேட வேண்டாம் என்று எழுதி வைத்து விட்டு காற்றோடு கரைந்து போயிருந்தாள்.

என் அத்தனை அன்பையும் உன் ஒருத்திக்காக சேமித்து வைத்திருந்தேனே.. ஏன்? பாழாய்ப் போன சினிமா ஆசைக்காக.. ச்சே.. கண்ணில்லாத ஒருவனுக்கு பார்வை கிடைத்து, மீண்டும் இரண்டே நாட்களில் பார்வை பறிபோனால் அவனுக்கு எப்படி இருக்கும்? எனக்கென இருப்பதாக நான் நம்பிக் கொண்டிருந்த ஒரே உறவும்... எனக்கு அழுகை அழுகையாக வந்தது.

ooOoo

எத்தனை சொல்லியும் மனது ஆறவில்லை. வேணி இல்லாத ஒரு வாழ்க்கை எனக்குத் தேவையில்லை. அவளை முதல் முதலாய் பார்த்த ரயிலிலேயே என் வாழ்க்கையை முடித்துக் கொள்வதென முடிவெடுத்தேன்.

அதே ரயில். என் கால்களின் கீழே அதே தடக் தடக்..என்னோடு என் கவலைகளும் சாகட்டும். கீழே குதித்து விட யத்தனித்தபோது.. ஏதோ சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். ரயிலின் மற்றொரு வாசலின் ஆபத்தான விளிம்பில் அவள் நின்று கொண்டிருந்தாள்.

"ஏய்.. அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க.. விழுந்து கிழுந்து தொலைச்சிட போற.."

(செம்மொழிப் பைந்தமிழ் மன்றம் நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதியது..)

December 21, 2009

இனிதே நடைபெற்ற ஈரோடு சங்கமம்..!!!

டிசம்பர் 20 - ஈரோட்டில் பதிவர் வாசகர் சந்திப்பு இனிதே நடைபெற்றது. பதிவுகளில் எழுத்துகளின் வாயிலாக மட்டுமே அறிந்த மனிதர்களை நேரில் பார்க்கும்போது ஏற்படக் கூடிய மகிழ்ச்சியையும் வியப்பையும் சொல்லி மாளாது. பதிவர் சந்திப்புகள் நட்பை வளர்க்கும் உறவுப்பாலங்களாக விளங்குகின்றன. எந்த ஊருக்குப் போய் இறங்கினாலும் கவலையேபடாமல் ஒரு போன் போட்டால் போதும், நமக்கு உதவிட நண்பர்கள் வந்து சேருவார்கள் என்ற நம்பிக்கையையும் இந்தப் பதிவுலகம் தந்திருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. இப்படியொரு ஏற்பாட்டை செய்து எங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திய ஈரோடு வலைப்பதிவர் குழுமத்துக்கு நன்றியும் வாழ்த்துகளும்...

(நேற்று நடந்த நிகழ்வுகளை என் நினைவுகளில் இருந்து தொகுத்து இருக்கிறேன். ஏதேனும் சம்பவத்தையோ, நண்பர்கள் யாருடைய பெயரையோ தவற விட்டிருந்தால் தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம்..)

பதிவர் சந்திப்புக்கு மதுரையிலிருந்து நாங்கள் ஐந்து பேர் கிளம்பினோம். "வலைச்சரம்" சீனா ஐயா, "ஒருமை" ஜெர்ரி ஈஷானந்தா, "விட்டலன் கவிதைகள்" தேவராஜ் விடலன், ஸ்ரீதர் மற்றும் நான். நண்பர் விட்டலன் அஸ்ஸாமில் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். பயணம் பதிப்பகத்தின் மூலமாக ஒரு கவிதை தொகுப்பும் வந்திருக்கிறது. உசிலம்பட்டி அருகே இருக்கும் ராமநாதபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். ஐந்து பேரும் மதுரை ரயில் நிலையத்தில் ஒன்றுகூடி கிளம்பினோம். கவிதை, இலக்கியம், சினிமா, சமூகம் என்று பல தளங்களில் உரையாடிக் கொண்டே வந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. இரண்டரை மணி போல ஈரோட்டுக்கு வந்து சேர்ந்தோம். திருப்பூரில் இருந்து நண்பர் சொல்லரசன் போன் செய்தார். கிட்டத்தட்ட பத்து நண்பர்கள் மூன்று காரில் வண்டி கட்டி கிளம்பி வந்து கொண்டிருப்பதை உறுதி செய்தார்.

பேருந்து நிலையத்தின் அருகே மதிய உணவருந்திக் கொண்டிருந்தபோதே நண்பர் ஜாபர் வந்து சேர்ந்தார். ஜாபர் - பதிவுகளை கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக வாசித்து வருகிறார். இப்போதுதான் தனக்கென ஒரு வலைப்பூவை ஆரம்பித்து இருக்கிறார். அவரோடு கிளம்பி பதிவர் நண்பர்கள் தங்கியிருந்த ராஜ ராஜேஸ்வரி லாட்ஜுக்கு வந்து சேர்ந்தோம். அங்கே நண்பர்கள் நாமக்கல் சிபி, ரம்யா அக்கா, கலையக்கா, சித்தர் சுரேஷ் ஆகியோரோடு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுக் கிளம்பினோம். லாட்ஜுக்கு வெளியில் நந்து F /O நிலா, நாகா, செந்தில்வேலன், உடுமலை.காமின் உரிமையாளர் (பெயர் நினைவிலில்லை..) ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. எல்லோரும் பேசியவாறே நிகழ்ச்சி நடைபெறும் ஹாலை வந்தடைந்தோம். சூடான தேநீருக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிறைய வாசகர்களும் வந்திருந்தார்கள். சரியாக நான்கு மணிக்கு தோழி முருக.கவியின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு பதிவர் நண்பர் ஆரூரன் விஸ்வநாதான் தலைமை தாங்கி நடத்தும்படி ஒருங்கிணைப்பாளர் கதிர் கேட்டுக் கொண்டார். பதிவுகளின் அவசியம் குறித்து தெளிவாகப் பேசினார் நண்பர் ஆரூரன். "கலிங்கராயன்" எப்படி "காளிங்கராயன்" எனவும் கால மாற்றத்தின் காரணமாக "காலிங்கரையான்" எனவும் திரிக்கப்பட்டது என்பதை நகைச்சுவையாகக் குறிப்பிட்டவர், வரலாறு நேர்மையாக பதிவு செய்யப்பட வேண்டியதன் அவசியம் பற்றிப் பேசினார். பின்பு சிறப்பு அழைப்பாளர்கள் பேச அழைக்கப்பட்டார்கள். இரா.வசந்த குமார் "சிறுகதைகள்" எழுதுவது பற்றிய தன்னுடைய கருத்துக்களைப் பதிவு செய்தார். வெண்பா எழுதப் பழகுவது சிறுகதைகள் எழுத மிகவும் உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டார். அடுத்ததாகப் பேசிய சீனா ஐயா "பதிவர்கள்-வாசகர்கள்" பற்றிய தன்னுடைய பார்வையை முன்வைத்தார். அழகு தமிழில் அட்சர சுத்தமாகப் பேசி மனிதர் கலக்கி விட்டார்.

மூன்றாவதாகப் பேசிய சகோதரி சுமஜ்லா வலைப்பூவில் பயன்படுத்தக் கூடிய டெக்னிகல் விஷயங்கள் பற்றிப் பேசினார். அடிப்படி கணினி அறிவு, ஆர்வமும் இருந்தால் போதும், நம்முடைய வலைப்பூவை அழகாக மாற்றி விடலாம் என்றும் ஆலோசனைகள் வழங்கினார். தமிழ் வலைப்பூக்கள் பற்றி அவர் எழுதியிருக்கும் புத்தகம் விரைவில் கண்ணதாசன் பதிப்பகம் சார்பாக வெளிவருகிறது என்ற மகிழ்ச்சியான செய்தியையுன் பகிர்ந்து கொண்டார். அவருக்கு வாழ்த்துகள். அடுத்ததாகப் பேசினார் நண்பர் செந்தில்வேலன். தமிழ் விக்கிபீடியாவில் இருக்கும் தமிழ் பக்கங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று வருத்தப்பட்டவர் இந்த நிலை மாற வேண்டும் என்றார். ஐந்தே நிமிடம் பேசினாலும் நண்பர் பழமைபேசி பட்டையைக் கிளப்பினார். அமெரிக்காவில் இருந்து கொண்டு இங்கே இந்தியாவில் இருக்கும் ஒரு நண்பருக்கு உதவக் கூடிய சூழல் ஒன்றில் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். தமிழர்களுக்கு இடையே நிலவி வந்த இடைவெளியை பதிவுலகம் வெகுவாகக் குறைத்திருக்கிறது என்பதை அழகாக எடுத்துரைத்தார்.

"உலக சினிமா" பற்றிய கருத்துக்களை நண்பர் பட்டர்பிளை சூர்யாவும், "சமூகத்தில் பதிவர்களின் பங்கு' பற்றி ரம்யா அக்காவும் திறம்பட உரையாற்றினார்கள். "பதிவுலகில் அனைவருக்கும் எழுதவும் வாசிப்பதற்கான தளமும் கிடைக்கிறது" என்று குறிப்பிட்ட அகநாழிகை பொன்.வாசுதேவன் பதிவுகள் அச்சு ஊடகங்களில் வர வேண்டியதன் அவசியம் பற்றிப் பேசினார். தஞ்சை பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர்.இராசு கொங்கு மண்ணின் சரித்திரம் பற்றியம் பதிவுகள் எழுதுபவர்கள் பதிவு செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றியும் பேசினார். கடைசியாக "தமிழ்மணம்" காசி வாழ்த்துரை வழங்கினார்.

அடுத்த நிகழ்வாகஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்பதிவர்கள் தண்டோரா, வானம்பாடி, புதுகை அப்துல்லா, பரிசல்காரன், ஜெர்ரி, கார்த்திகைப் பாண்டியன் (ஹி ஹி ஹி.. எல்லாம் ஒரு விளம்பரந்தான்..) ஆகியோரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

கடைசியாக லதானந்த், வெயிலான், பழமைபேசி, புதுகை அப்துல்லா, கேபிள் ஷங்கர், ஸ்ரீதர் ஆகியோரின் முன்னிலையில் பதிவர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது. அனானி கமெண்டுகள் பற்றிய காரசார விவாதம், பதிவுகளில் எழுதப்படும் விஷயங்களில் இருக்க வேண்டிய கவனம் என்று பல வ்சிஹயங்கள் அலசப்பட்டன. பதிவர்கள் பற்றி எல்லோரும் அறியும் வண்ணம் உலகத் தமிழ் மாநாட்டில் நம்முடைய பங்கும் இருக்க வேண்டும் என்ற என்னுடைய கருத்தையும் முன்வைத்தேன். (அப்துல்லா அண்ணே.. கொஞ்சம் கவனிங்க..). பதிவர் சந்திப்பு எல்லாம் ஓகே, அடுத்து நாம் என்ன செய்யலாம் என்ற என்னுடைய கேள்விக்கு கதிர் சொன்ன பதில்.."கார்த்திக்கு கல்யாணம் பண்ணலாம்".. என்ன ஒரு வில்லத்தனம்.. ஆனாலும்.. இந்த டீலிங் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு..

இரவு ஏழு மணி போல நிகழ்வு முடிந்தது. பின்னர் அருமையான இரவு உணவுக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். ஒரு கட்டு கட்டி விட்டு, நண்பர்களிடம் எல்லாம் சொல்லிக் கொண்டு கிளம்பினோம். நேற்றைய நாளை மறக்க முடியாத நாளாக மாற்றிய ஈரோடு பதிவுலக நண்பர்களுக்கு மீண்டும் என் நன்றி. இந்த நிகழ்ச்சி நல்லபடியாக நடந்து முடிய உதவிய தமிழ்மணம் உள்ளிட்ட அத்தனை நண்பர்களுக்கும் நன்றி..!!

கலந்து கொண்ட அன்பர்கள்:

(சென்னையில் இருந்து)

கேபிள் சங்கர், தண்டோரா, பொன்.வாசுதேவன், பட்டர்பிளை சூர்யா, புதுகை அப்துல்லா, ரம்யா, வானம்பாடிகள்

( திருப்பூரில் இருந்து )

வெயிலான், ஈரவெங்காயம், சொல்லரசன், பரிசல்காரன், முரளிகுமார் பத்மநாபன், நிகழ்காலத்தில், ராமன்

( மதுரையில் இருந்து )

ஸ்ரீதர், சீனா, தேவராஜ் விட்டலன், ஜெர்ரி, கார்த்திகைப்பண்டியன்

(ஈரோட்டில் இருந்து)

ஆரூரன், கதிர், பாலாசி, வால்பையன், வசந்தகுமார், அகல்விளக்கு, கார்த்திக், கோடீஸ்வரன், நந்து, சண்முகராஜன், தாமோதர் சந்துரு, சங்கமேஸ்வரன், சுமஜ்லா, ஈரோடுவாசி, நண்டு நோரண்டு, சிவாஜி, நாமக்கல் சிபி

(அமீரகத்தில் இருந்து)

செந்தில்வேலன், நாகா

(கோவையில் இருந்து)

லதானந்த், பழமைபேசி

கரூரில் இருந்து இளையகவி, முனைவர் இரா.குணசீலன் மற்றும் வாசகர்கள்..

(கல்லூரியில் இருக்கும் தொழில்நுட்ப வம்புகளின் காரணமாக என்னால் படங்களை வெளியிட முடியிவில்லை.. நிகழ்வு பற்றி புகைப்படங்களுக்கான சுட்டி இங்கே..)

December 18, 2009

அவதார் - திரைப்பார்வை..!!!



உலகிலேயே மிகவும் அதிகமான வசூலைக் கொடுத்த படத்தின் இயக்குனர் தன்னுடைய அடுத்த படத்தை வெளியிட பனிரெண்டு வருடங்கள் எடுத்துக் கொள்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஜேம்ஸ் கேமரூனின் விஷயத்தில் அதுதான் நடந்திருக்கிறது. 1998இல் வெளிவந்த "டைட்டானிக்" என்னும் மாபெரும் வெற்றிப்படத்தை தொடர்ந்து 2009இல் வெளிவந்திருக்கும் படம்தான் "அவதார்". இன்று வரை ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட படங்களிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள படம். பிரமாண்டம் என்னும் வார்த்தைக்கு அர்த்தம் தேடுபவர்கள் இந்தப் படத்தை பார்த்தால் போதும். நாம் சின்னப் பிள்ளைகளாக இருந்த காலத்தில் இருந்து கேட்டு வந்திருக்கும் அம்புலிமாமா டைப் கதைதான். ஆனால் மேகிங்கில் பட்டாசு கிளப்பி இருக்கிறார்கள்.



பொதுவாக இது போன்ற அயல்கிரகவாசிகள் படங்கள் என்றாலே ஹாலிவுட்டில் ஒரு டெம்ப்ளேட் கதை வைத்திருப்பார்கள். பூமியில் இருப்பவர்கள் எல்லாம் நல்லவர்கள். அவர்களை ஆக்கிரமிக்க வரும் கேட்ட ஏலியன்கள். அப்புறம் ஒரு தலைவன் (பெரும்பாலும் அமெரிக்க ஜனாதிபதி) வருவான். மக்களுக்காக போராடி ஜெயிப்பான். "அவதாரில்" சின்ன மாற்றம். இங்கே ஏலியன்கள் நல்லவர்கள். பூமி மனிதர்கள் அவர்களை அழிக்க நினைக்கிறார்கள். கடைசியில் மனிதர்களில் இருக்கும் நல்லவன் ஒருவன் அவர்களைக் காப்பாற்றுகிறான்.



வினோதமான ஒரு வேற்றுகிரகம் பேண்டோரா. அங்கே "நவி" என்கின்ற இனத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மனித DNA மற்றும் நவி இன DNA இரண்டையும் இணைத்து உருவாக்கப்படும் ஜந்துதான் அவதார். நவி இனத்தைப் போன்ற உடம்பு. ஆனால் மனித மூளையால் இயங்குகிறது (மாட்ரிக்ஸ் ஞாபகம் இருக்கிறதா.. அதே மாதிரி..). கால்கள் செயலிழந்த கதாநாயகன் ஜேக் அவதாராக மாறி நவி இன மக்களுடன் பழகுகிறார். நவி இளவரசியுடன் காதல் கொள்ளுகிறார். அவர்களில் ஒருவனாகவே மாறிப் போகிறார். உண்மையில் மனிதர்களின் குறி - பேண்டோரா கிரகத்தின் கனிம வளம். ரோபோக்களின் துணையோடு நவி இனத்தையே அழிக்க முற்படுகிறார்கள். இப்போது அவர்களைக் காக்கும் பொறுப்பு ஜேக்கிடம் இருக்கிறது. கடைசியில் என்ன ஆனது என்பதுதான் அவதார் படத்தின் கதை.



கண்கொள்ளாக் காட்சி என்று சொல்வோமில்லையா.. இந்த மொத்தப் படமுமே அப்படித்தான் இருக்கிறது. இத்தனைக்கும் நான் இந்தப் படத்தை 2 -Dயில் தான் பார்த்தேன். கால்கள் படும் இடமெல்லாம் பச்சை படர்ந்து செல்லும் சாலைகள், தொட்டவுடன் சுருங்கிக் கொள்ளும் அழகான பெரிய மலர்கள், அந்தரத்தில் தொங்கும் மலைகள், பறக்கும் டிராகன்கள், வித விதமான மிருகங்கள், ஒற்றை மரத்தின் ஊடாக பறந்து கிடக்கும் கிளைகள், சரிந்து விழும் அருவி என காட்சிகள் எல்லாமே விஷுவல் ட்ரீட். ஏதோ ஒரு கனவுலகத்தில் நுழைந்ததைப் போன்ற உணர்வு. ஒவ்வொரு காட்சியிலும் இயக்குனரின் உழைப்பு தெரிகிறது. இந்தப் படத்துக்காகவே புதிதாக ஒரு கேமராவைக் கண்டுபிடித்து பயன்படுத்தி இருக்கிறார்களாம். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்தாலும் கிராபிக்ஸ் செய்ய மட்டும் நான்கு வருடங்கள் ஆனதாம். நவி இன மக்கள் பேசுவதற்காகவே புதிதாக ஒரு மொழியை உருவாக்கி இருக்கிறார்கள்.




நடித்து இருப்பவர்கள் எல்லாமே நன்றாக செய்து இருக்கிறார்கள். குறிப்பாக நாயகியாக வரும் அந்தப் பெண் உண்மையில் எப்படி இருப்பார் என்பதைப் பார்க்க ஆசையாகஇருக்கிறது. படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயங்கள் மூன்று. ஒப்பனை - நீண்ட வால், நீளமான முடி, ஏழடி உயரம், நீல நிறம் என்று பார்க்க அழகாக(?!) இருக்கிறார்கள் நவி இன மக்கள். ஒளிப்பதிவு -சான்சே இல்லை. கடைசியாக பின்னணி இசை. மூன்று துறைகளிலுமே இந்தப் படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்படும் என நம்புகிறேன் (கூடவே விஷுவல் எபெக்ட்சுக்கும்).



படத்தின் பலவீனம் என்று சொன்னால், ஏற்கனவே ஒரு சில படங்களில் நாம் பார்த்து பார்த்து சலித்துப் போன காட்சிகள் வருவதுதான். அடுத்தது இதுதான் நடக்கப் போகிறது என்று யார் வேண்டுமானாலும் சொல்லாம். கடைசி சண்டையில் மிருகங்கள் வந்து உதவுவதும் கொஞ்சம் ஓவர்தான். ஆனால் இது எதுவுமே படம் பார்க்கும்போது நமக்கு தோன்றாமல் இருப்பதுதான் இயக்குனருக்கு வெற்றி. ஜேம்ஸ் கேமரூனுக்கு இந்தியா மீது நிறையவே காதல் உண்டு. டைட்டானிக் கூட ஒரு ஏழை-பணக்காரி காதல் என்ற நம்மூர் மசாலாதான். அதைப் போலவே நம்மூர் புராணக் கதைகளையும் இந்தப் படத்தின் உருவாக்கத்தில் பயன்படுத்தி இருப்பார் போல. நவிக்களின் நீல நிறம், அவதார் என்று பெயர் என நிறையவே இந்தியத்தனம். ஆக மொத்தத்தில் நம் எல்லார் உள்ளேயும் இருக்கும் குழந்தைக்கு செமத்தியான தீனி தரும் கனவுப்படம்.

அவதார் - அட்டகாசம்

(படம் பற்றிய மிரட்டலான டெக்னிக்கல் தகவல்களுக்கு இங்கே சுட்டுங்கள்..)

December 16, 2009

ஒளகப்பட இயக்குனர்களின் சந்திப்பு..!!!

ஆபிசில் சோகமாக உட்கார்ந்து இருக்கிறார் டமீர். உதவியாளர் உள்ளே ஓடி வருகிறார்.

"அண்ணே.. உங்களப் பார்க்க குப்ரமணிய கிவா வந்துக்கிட்டு இருக்காப்புல.. ஏதோ புதுசா கதை புடிச்சிருக்காப்புலையாம்"

டமீர்: அட நாசமாப் போறவனே.. ஒரு ரோகிக்கே வரவன் போறவனெல்லாம் என்ன பார்த்து காறித் துப்பிட்டுப்போறான்.. இதுல இன்னொரு கதையா? ஐயம் எஸ்கேப்பு...

தப்பித்த டமீர் நேராப் போய் லேண்ட் ஆகுற இடம் எதுன்னு பார்த்தா.... நாட்டரசுவோட வீடு.

டமீர்: ஆகா.. பூனைக்கு பயந்து புலியோட குகையில வந்து விழுந்துட்டேன் போலிருக்கே... செத்தேன்..

நாட்டரசு: வாங்கண்ணே.. நீங்க வருவீங்கன்னு தெரிஞ்சுதான் நம்ம நண்பர்கள் கிட்ட எல்லாம் சொல்லிட்டேன்.. இந்தா வந்திருவாய்ங்க

"உருப்புடுவாய்ங்களா .. இவிங்க குடும்பம் எல்லாம் வெளங்காமத் தான் போகும்... தமிழன தமிழனாக் காட்ட விடாம சதி பண்றாங்க..." புலம்பியபடி உள்ளே வருகிறார் டிங்கர் மச்சான்.

டமீர்: என்னாண்ணே.. ஒரே பொலம்பல்? அளவாடிய விழுதுகள் எப்படிப் போய்க்கிட்டு இருக்கு?

டிங்கர்: அத ஏன் தம்பி? ஆனா ஊனா இந்த கிரபுதேவா காணாமப் போயிடுறான்.. கேட்டா லயன் கிட்ட இருந்து போன்னு, கமலத் பஞ்சாயத்துன்னு அழுவுறான்.. சரி நாமளே ஒரு ரோலப் போடுவோம்னு சொன்னா தயாரிப்பாளரு டரியல் ஆவுராறு.. நேத்துக் கூட தம்பி.. இந்த பமன்னா புள்ளைக்கு போனப் போட்டு.. தாயி.. அருமையான ரோலு.. கண்டாங்கி கட்டிக்கிட்டு கட்டையில போற.. சீ சீ.. கட்டை வண்டியில போற மாதிரி பாட்டு எடுப்போம்னு சொன்னா, எனக்கு நாய்க்காய்ச்சல்னு நடுங்கிக்கிட்டே சொல்றா.. எப்புடியா உருப்புடும் தமிழ் சினிமா?

டமீர்: அதேதாண்ணே.. நானும் தமிழ் சினிமாவ உலக சினிமா ரேஞ்சுக்கே கொண்டு போகப் பாக்குறேன்.. ஒருத்தனும் புரிஞ்சிக்க மாட்டேங்குறாய்ங்க..

"ஏய்.. யார் இங்கே உலக சினிமா பத்தி பேசினது? அதெல்லாம் முடியாது.. நான் மட்டுந்தான் பேசுவேன்" என்று அலறிக் கொண்டே வருகிறார் பேரன்.

பேரன்: இப்போத்தான் துபாய்ல இருந்து வரேன்.. அடுத்த வாரம் அலாஸ்கா.. மூணாவது வாரம் நான் எங்க இருக்கேன்னு எனக்கே தெரியலயேப்பா.. ஒரே ஒளகப்பட விழவா போய்க்கிட்டு இருக்கேன்..

டமீர்: (உக்கும்.. இங்க உள்ளூர் செலாவாநிக்கே வக்கில்லையாமா..) வாங்கண்ணே.. ரோகி பார்த்தாச்சா?

பேரன்: நான் ஏற்கனவ சொத்சி பார்த்துட்டேன் தம்பி.. நீங்க டொக்கிஷம் பார்த்தீங்களா?

டமீர்: நான் கூட கிளாசிக் ஏற்கனவே பார்த்துட்டேன்னே...

பேரன்: சரி சரி.. கம்பெனி சீக்ரெட் எல்லாம் வெளியில சொல்லாதப்பா..

டிங்கர்: ஏம்பா.. ரெண்டும் பேரும் என்னப்பா பேசுறீங்க.. ஒண்ணுமே புரியலையே..

டமீர்: போங்கண்ணே.. இதெல்லாம் கேட்டுக்கிட்டு.. வெளில மல்லாட்ட அவிச்சு விக்கிறாங்க.. போய் வாங்கிட்டு வாங்க.. கொரிச்சிக்கிடே பேசுவோம்..

"ஏய்.. வெளில விக்கிறாங்க கடலை..
நான் அவனை சும்மா விடலை..
ரோடு ரோடா போடுறது மேப்பு ..
ஒண்ணு சேர்ந்துட்டோம் - இனிமே நாமதான் டாப்பு.."

கொலைவெறியோடு ஆளுக்கு ஒரு கடலைப் பொட்டலத்தையும் வாங்கிக் கொண்டு நுழைகிறார் நாட்டரசு.

டிங்கர்: ஏங்க.. என்னங்க சொல்றீங்க..

நாட்டரசு: அண்ணே.. நாம் எல்லாருமே தனித்தனியா எடுத்து படம் போனியாகல.. ஏன் நாம் எல்லாம் ஒண்ணா சேர்ந்து நடிக்கக் கூடாது? இந்த கதாநாயகப் பயலுகளுக்கு எல்லாம் இனிமா கொடுத்த மாதிரி இருக்கும்ல..

பேரன்: ஆமாம்ப்பா.. நீ சொல்றதுதான் சரி.. தமிழ் ரசிகர்கள் எல்லாம் மண்ணு.. நல்ல படம் எடுத்தா அவங்களுக்குப் பிடிக்காது.. ஓட விட மாட்டாய்ங்க..பேசாம நீ சொல்ற மாதிரியே செஞ்சிடுவோம்..

டமீர்: (அடப்பாவிகளா.. முடிவே பண்ணிட்டிங்களா..) சரி.. அப்போ கதைய சொல்லுங்க..

நாட்டரசு: நீங்க எல்லோரும் கதானாயகன்களா நடிங்க.. எனக்கு கெஸ்ட்டு ரோலு.. அவ்வளவுதான்.. ஓப்பன் பண்ணினா ஒரு குப்பம். அங்கே இருக்குது கதாநாயகனோட வீடு.. டமீர்தான் ஹீரோ.. அவரோட பிரண்டு பேரன்.. ரெண்டும் பேரும் கடல்ல மீன் பிடிக்கப் போறாங்க.. போட்டு ஓட்டுரவருதான் டிங்கர்.. திடீர்னு ஒரு பெரிய சுறா போட்ட அட்டாக் பண்ணுது.. ஐயோ எங்களக் காப்பாத்துங்கன்னு எல்லோரும் கத்துறாங்க.. அப்ப நான் எண்ட்ரி கொடுக்குறேன்.. அப்போ ஒரு பாட்டு..

"நீ எந்த கடலு.. நான் எந்த கடலு.. வலை கூடத் தேவையில்லை"

சும்மா பாட்டக் கேட்டே சுறா மிரண்டு போகுது.. அதோட ஒரு அரை மணி நேரம் பைட் பண்ணி கொல்றேன்..

பேரன்:(நீ இப்படி நடிச்சு மக்கள கொலையாக் கொன்னுடவ போலயேப்பா.. அவ்வவ்..) அப்புறம்?

நாட்டரசு: மீன் பிடிச்சிட்டு பத்திரமா கரைக்கு வர உங்ககிட்ட வில்லனோட ஆளுங்க வம்பு பண்றாங்க.. அங்க ஒரு சண்ட.. அங்கயும் நான் வந்து காப்பாத்துறேன்.. வில்லனைப் பார்த்து பேசுற வசனத்துல பஞ்சு தெறிக்குது..

"டேய்.. நீ அரசியல்வாதிக்குத் தான் பினாமி..
ஆனா நான் ஆண்டவன் உன்ன அழிக்க அனுப்பின சுனாமி.."

எப்பூடி? கதைக்கு பேரு வந்து.. வந்து.. கடலூர்ன்னு வச்சுப்போமா? சொல்லுங்க.. எப்போ ஷூட்டிங் போகலாம்?

டிங்கர்: கதை நல்லாத்தாங்க இருக்கு.. ஆனா மண்ணுவாசம் வீசலியே..

நாட்டரசு: வேணும்னா படம் பார்க்க வர மக்களுக்கு ஆளுக்கு ஒரு கைப்பிடி மண்ண ப்ரீயாக் கொடுப்போம்.. நம்ம ப்ரீகாந்த் மேவாகிட்ட சொன்னா எல்லா வாசமும் வீசுற மாதிரி ம்யுசிக் ரெடி.. மண்ண மோர்ந்து பார்த்துக்கிட்டே படம் பார்த்தா சரியாப்போச்சு..

டிங்கர்: (அட வெளங்காதவனே..) இல்லைங்க.. இத விட அருமையான கதை ஒண்ணு என்கிட்டே இருக்கு.. அப்படியே உணர்ச்சிக் குழம்பா இருக்கும்..

நாட்டரசு: குழம்பு சரி.. அப்ப ரசம் யாருங்க ஊத்துவா?

டிங்கர்: அட சும்மா இருப்பா.. கதையைக் கேளுங்க.. பண்ரொட்டி கிராமம்.. அப்படியே பள்ளிக்கூடத்தக் காட்டுறோம்.. வாசல்ல விக்கிற நெல்லிக்காய வாங்கித் தின்னுரதுக்காக லைன்ல நிக்குதுங்க நாலு பசங்க.. அதுதான் நாம.. வளர்ந்தாலும் படிச்ச ஸ்கூல விட்டுப் பிரியாம அங்கேயே திரியுதுங்க பயபுள்ளைங்க.. இங்க ஒரு திருவிழாப்பாட்ட போடுறோம்..

டமீர்: போச்சுடா.. ஏங்க.. அப்படியே அங்க ஒரு காதல் ஜோடிய காட்டணுமே?

டிங்கர்: எப்படிங்க சரியாச் சொன்னீங்க? எனக்கும் கூட படிக்கிற பிள்ளைக்கும் சின்ன வயசுலேயே காதல்.. இந்த ரோலுக்கு பொய்ஸ்வர்யாவைக் கேக்கலாங்களா?

பேரன்: (நீ கூப்பிட்டா கறவை மினியம்மா கூட வராதுயா டுபுக்கு..) மேல சொல்லுங்க நண்பா

டிங்கர்: கெரகம் கதை அம்புட்டுத்தான்.. நீங்க எங்க காதலை எப்படி தியாகம் பண்ணி சேர்த்து வைக்கிறீங்கன்னு மக்களை பிழிய பிழிய அழ வச்சா முடிஞ்சு போச்சு.. நாலு பாட்டு சும்மா நச்சுன்னு பட்ஜெட்டுல எடுக்குறோம்.. மொதப் பாட்டு மொடக்குறிச்சி.. ரெண்டாவது பாட்டு ரெட்டியார்சத்திரம்..

நாட்டரசு: (ஆகா.. இந்தாளு நமக்கு போட்டியா வந்திருவான் போலிருக்கே..) மூணாவது பாட்டு மூனாறுளையும் நாலாவது பாட்டு நாட்டரசன் கோட்டைளையும் எடுக்கலாம்.. கரெக்டா..

டிங்கர்: சூப்பரு.. எப்படிங்க கரெக்டா சொன்னீங்க?

டமீர்: நாசமாப் போச்சு.. இதெல்லாம் பழைய கதைங்க.. ஏதாவது புதுசாப் பண்ணனும்.. இதுவரைக்கும் சொல்லாததா.. ரோகி மாதிரின்னு வைங்க..

நாட்டரசு: புதுசாவா? நான் நல்லா வஞ்சு புடுவேன்.. மானஸ்தன்யா.. என் படத்தையேதான் மறுபடி மறுபடி எடுத்துக்கிட்டு இருக்கேன்.. ஆப்பிரிக்கப் படத்த எடுத்து மறுபடி அவங்களுக்கே உலகப்பட விழாவுக்கு அனுப்புறதெல்லாம்.. யப்பா... இது உலக நடிப்புடா சாமி..

பேரன்: சரி சரி.. கூல் டவுன்.. நான் வேணும்னா ஒரு கதை சொல்லட்டுமா?

டமீர்: நீங்க மட்டும் ஏன் மிச்சம் வச்சிக்கிட்டு.. சொல்லுங்க.. சொல்லித் தொலைங்க..

பேரன்: காதல்.. சொல்லித் தீராதது.. நாலு பருவம்.. மொதல்ல புறா விடு தூது.. அப்புறமா லெட்டர்.. அதுக்கு அப்புறம் போன்.. கடைசியா மெயில்.. சும்மா சுத்தி சுத்தி லவ் பண்றேன்.. உங்க எல்லோருக்குமே வெயிட்டான ரோல்.. டமீர் போஸ்ட்மன்.. டிங்கர் என்னோட காதலுக்கு ஹெல்ப் பண்ற அண்ணன்.. நாட்டரசுக்கு என்ன தரலாம்?

நாட்டரசு: கொஞ்சம் வெஷம் வாங்கித் தரலாம்? ஏங்க நீங்க லவ் பண்ணி முதுக காட்டி அழுகுறதுக்கு நாங்க ஒக்கார்ந்து விசிறி வீசணுமா? போயா..

பேரன்: நீ மட்டும் ரொம்ப ஒழுங்கா.. ஒம்மூஞ்சிக்கு அவ்வளவுதாண்டி..

"வேண்டாம், வேண்டாம்.. நமக்குள்ள எதுக்குப்பா சண்ட.." என்று டமீரும் டிங்கரும் அமைதிப்படுத்தப் போக.. அவர்கள் இவர்களை திருப்பித் தாக்க..

"டாய்.. யாருடா அவன் நானில்லாம கூட்டம் போட்டது.. அரசியலுக்கு அண்ணன் பழகிரி.. தன்னம்பிக்கைக்கு நான்தாண்டா முகவரி.. ஹே டண்டணக்கா.. எம்மவன் கிம்பு.. என்கிட்ட வச்சுக்காத நீ வம்பு" என்றபடி கரடியார் பாய்ந்து வர.. மொத்த கூட்டமும் கலகலத்து காணாமல் போகிறது.

December 15, 2009

இருட்டை எனக்கு பிடித்திருக்கிறது (உரையாடல் போட்டிக்காக )..!!!



நம் நிழல் மட்டுமாவது
நம்மோடு வருகிறதா
என அடிக்கடி
பரிசோதிக்கும் அவஸ்தைகளோ

புன்னகையை ஏந்தியபடி
எதிர்ப்படும் மனிதர்களுக்கான
முகமூடியைத் தேடி அணிந்திடவோ

சாவி கொடுக்கப்பட்ட எந்திரமாய்
அலுவலகங்களின் ஊடாக
அலைந்து திரிவதோ

நம் செயல்களை
யாரேனும் கண்டு கொள்வார்களோ
என பயம் கொள்வதோ

இருட்டில்
அவசியப்படுவதில்லை

மாறாக

காற்றின் வாசம் நுகர்ந்தவாறே
மாடியில் படுத்தபடி
நண்பர்களோடு கதை பேசித் திரியவும்

கண்ணுக்கு புலப்படா
கற்பனைத் தோழமையின்
தோள் சாய்ந்து அழுதிடவும்

தூக்கமில்லா பின்னிரவு பயணங்களில்
பக்கத்து இருக்கைகளில் துயிலும்
குழந்தைகளின் அழகைப் பார்த்து ரசித்திடவும்

வேதனைகள் ஏதுமில்லாமல்
தூக்கத்தில் ஆழ்ந்து போகவும்

முன் பின் பார்த்தறியா பெண்களை
கனவில் புணர்ந்து திளைக்கவும்

கண்கள் மூடி
இல்லாத கடவுளோடு
சண்டைகள் போடவும்

எந்த பயமுமற்று
நான்
நானாக இருப்பதற்கும்

இருட்டு
எல்லாவற்றுக்கும்
சவுகரியமாக இருக்கிறது
என்பதாலேயே

இருட்டை எனக்குப் பிடித்திருக்கிறது..!!
இருட்டை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது..!!!

December 12, 2009

உக்கார்ந்து யோசிச்சது (12-12-09)..!!!

ஒரு சில மனிதர்களைப் பார்க்கும் பொழுது மட்டும் "எப்படி இவர்களால் இத்தனை அன்பானவர்களாக, அடுத்தவர் மீது அக்கறை கொண்டவர்களாக இருக்க முடிகிறது?" என்று வியப்பாக இருக்கும். பதிவுலகில் அப்படிப்பட்ட ஒரு மனுஷி - ரம்யா. "Will to Live" என்கின்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். நல்லவர்களைச் சுற்றி நல்லவர்களே இருப்பார்கள் என்பதற்கு சான்று - ரம்யா அக்காவுடன் இருக்கும் கலையரசி அக்கா மற்றும் நண்பர் சித்தர் சுரேஷ். அருமையான மனிதர்கள். இரண்டு நாட்கள் அவர்களோடு தங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் அன்பில் என்னை திக்குமுக்காட வைத்து விட்டார்கள். இந்த வார "தேவதை" புத்தகத்தில் ரம்யா அக்கா பற்றிய கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. வாழ்வில் தான் சந்தித்த கஷ்டங்களை எதிர்கொண்டு, தைரியத்தோடு போராடி முன்னேறி இருக்கும் ரம்யாக்காவின் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு பாடம். "இத்தனை கஷ்டங்களா" என்று பரிதாபப்படுவதை விட "நாமும் போராட வேண்டும்" என யாரேனும் ஒருவருக்குத் தோன்றினால் கூட அதுதான் இந்தக் கட்டுரையின் வெற்றி.

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்..

***************

போன வருடம் பூராவும் சாரு அமீரின் "பருத்தி வீரனைத்" தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடினார். "Ethnic feel", "Dynosian feel" என்றெல்லாம் என்னென்னமோ சொன்னார். அதுக்கு பதில் சொல்ற மாதிரி "என்னப் பத்தி தப்பா நெனச்சுட்டீங்களே"ன்னு அமீர் யோகியோட வந்திருக்கார். ( யு டூ அமீர்? ) இதுல வேதனை என்னன்னா, இப்போ சாரு மிஷ்கின் பத்தியும் "நந்தலாலா" பத்தியும் பேச ஆரம்பிச்சு இருக்கார். எனக்கு ரொம்பவும் பிடிச்ச இன்னொரு டைரக்டர். அடுத்தது அவர்தானா? அவ்வவ்....

ஒங்குத்தமா.. எங்குத்தமா.. யார நானும் குத்தம் சொல்ல..

***************

இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது பாகிஸ்தான் பிரிவினையின் காரணமாக பல கலவரங்கள் நடந்தது நமக்குத் தெரியும். இதை அடிப்படையாகக் கொண்டு பல புத்தகங்கள் வந்து இருக்கின்றன. "1947 - தி எர்த்" என்று சமீபத்தில் கூட ஒரு படம் வந்தது. ஆனால் அதே நேரத்தில், நமக்கு வெகு அருகே இதே போல ஒரு பிரச்சினை நடந்து இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? சுதந்திர இந்தியாவுடன் இணைய மறுத்த ஹைதராபாத் நிஜாம் அரசு பற்றியும், அதனால் ஏற்பட்ட கலவரங்கள் பற்றியும் விரிவாகப் பேசுகிறது அசோகமித்திரனின் "18ஆவது அட்சக்கோடு". சந்திரசேகரன் என்னும் தனி மனிதனின் பார்வையில் அன்றைய சூழலை படம் பிடித்துக் காட்டுகிறது அசோகமித்திரனின் பேனா. நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்து சேரும் அகதிகள், அவர்கள் வாழ்க்கை, பிற மதத்தின் மக்கள் மீதான துவேஷம், மாணவர் போராட்டம் என்று பல விஷயங்களைப் பதிவு செய்கிறது இந்தப் புத்தகம். மொழிபெயர்ப்பில் சாகித்ய அகாடமி பரிசையும் வென்றிருக்கிறது. நடை கொஞ்சம் கொழ கொழ வளா வளா தான் என்றாலும் தமிழின் மிக முக்கியமான வரலாற்றுப் பதிவுகளில் ஒன்று என்றுசொல்லலாம்.

***************

மொபைலில் பேசிக் கொண்டே போய் விபத்தில் சிக்கிக் கொள்ளுவோரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருவது கவலையளிக்கிறது. நேற்று காலை மதுரையிலும் ஒரு விபத்து. கணவன், மனைவி சென்ற பைக். போனில் பேசிக்கொண்டே போய் நேராகச் சென்று குப்பை வண்டிக்குள் விட்டிருக்கிறார்கள். மனைவி ஸ்பாட் அவுட். கணவன் பிழைப்பது கஷ்டம்தான் என்கிறார்கள். ஒன்றரை வயது குழந்தை வேறு இருக்கிறதாம். ஏன் இப்படி? வண்டியை நிறுத்தி விட்டு பேசலாம்.. இல்லையா... வீட்டுக்கு போய் சேர்ந்து விட்டு பேசலாம். முடியாதென்றால் ஒரேடியாகப் போக வேண்டியதுதான். மக்கள் யோசிப்பார்கள்?

சிந்தனை செய் மனமே..

***************


அரசுப் பேருந்துகளில் எல்லாம் சமீப காலமாக "பூம் டிவி" என்று புதிதாக ஒன்றைக் காட்டி வருகிறார்கள். நல்ல முயற்சி. ஆனால் மனசாட்சி இல்லாத யாரோ ஒருவர்தான் பாடல்களை செலக்ட் செய்திருப்பார் என்று நினைக்கிறேன். கஸ்தூரிராஜாவின் விசிறி போல.. பிரபுவும் தேவயானியும் நடித்த கும்மிப்பாட்டு, காலம் போன காலத்தில் சிவாஜி நாட்டுப்புறக் கலைஞராக நடித்த படம் - இதிலிருந்து எல்லாம் பாட்டு போட்டால் மனுஷன் பஸ்சுக்குள் ஒக்கார்ந்திருக்க முடியுமா? நடுநடுவில் விளம்பரங்கள் வேற.. ஷ்.. யப்பா.. முடியல.. ஏதோ தலைவரோட "பணக்காரன்" புண்ணியத்துல கொஞ்சமா பொழுது போகுது.


மாத்தி யோசி..


***************


சமீப காலமாக அடிக்கடி கண்களில் தட்டுப்படும் பெயர் - நாவிஷ் செந்தில்குமார். மனிதர் கவிதைகளில் பிரித்து மேய்கிறார். திண்ணை.காமில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். அவருடைய இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.


நட்பு

"சாப்பிட்டேன்" என
அம்மாவிடமும்
"கவலைப்பட வில்லை" என
அப்பாவிடமும்
"அடுத்த மாதத்திற்குள்
வேலை வாங்கிவிடுவேன்" என
அண்ணனிடமும்
"முதல் மாதச் சம்பளத்தில்
உனக்கொரு மடிக்கணினி" என
தங்கையிடமும் சொல்ல முடிந்தது...
"காலையிலிருந்து சாப்பிடல…
ரொம்பப் பசிக்குதுடா,
ஏதாவது வாங்கிக்கொடு"
என நண்பனிடம்
மட்டும் தான் கேட்க முடிந்தது...

***************

சூப்பர் ஸ்டார் - எத்தனை பேர் வந்தாலும் இந்தப் பட்டத்துக்கு உரியவர் ஒருவர்தான். ஆறிலிருந்து அறுபது வரை - அனைவரின் உள்ளம் கவர்ந்த மனிதர். பிறந்த தின வாழ்த்துகள்.

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்..

இப்போதைக்கு அவ்வளவுதான்.. நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-)))))))))))

December 10, 2009

காதல் கிறுக்கல்கள்..!!!

னக்கான
உன்
கவிதைகளை
நீ
என் மூலமாக
எழுதிக்
கொண்டிருக்கிறாய்..!!

***************

ன்றேனும்
உன்னைப் பார்க்க முடியும்
என்னும் நம்பிக்கையிலேயே
விடிகின்றன என் பொழுதுகள்..
ஆனால் - கனவிலும்
முகம் காட்ட மறுப்பவளாக
இருக்கிறாய் நீ..!!

***************

த்தனையோ
தேவதை கதைகளை
சொன்ன பாட்டி
கடைசி வரை
சொல்லவேயில்லை..
அவை - உன்னைப் போலத்தான்
இருக்குமென்பதை..!!

***************

நான் சொல்லும்
ஒவ்வொரு பொய்க்கும்
செல்லமாய் கோபப்பட்டு
என் கன்னங்களில் தட்டுவாய்..
நீ தட்ட வேண்டும் என்பதற்காகவே
பொய்களை
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
நான்..!!

***************

தோழிகளோடு போய் வந்த
சுற்றுலாவின் புகைப்படங்களை
என்னை நெருங்கி அமர்ந்தவளாக
காட்டிக் கொண்டிருக்கிறாய்..
எதையுமே கவனிக்காமல்
உன் விழிகளின் நடனத்தை
ரசித்தபடி இருக்கிறேன்..
உனக்கு மிகவும் பிடித்த
இடமெதுவென சட்டென்று நீ கேட்க
யோசிக்காமல் உன் மடிதான்
என்று சொல்கிறேன்..
"ச்சீய்.." என்றவாறே
வெட்கம் கொண்டவளாக
என் தோள்களில்
சாய்ந்து கொள்கிறாய்..!!

எல்லாமே கொஞ்சம் கோக்கு மாக்கான ஒரு feelல எழுதினது.. கண்டுக்காதீங்கப்பா..:-))))

December 9, 2009

எங்கே செல்லும் இந்தப் பாதை?

"டேய் மாப்ள.. நேத்து நடந்த மேட்டர் தெரியுமா?"

"என்னடா.."

"நம்மள ரொம்ப நாளா கட்டைய கொடுத்துக்கிட்டு இருந்தான்ல.. கரிமேடு குமாரு.. வசமா மாட்டிட்டான்.."

"எப்போடா.. எங்க வச்சு மடக்குனீங்க?"

"சாயங்காலம் நம்ம பசங்களோட டாப்ப போடலாம்னு ரயில்வே காலனி பக்கம் போயிருந்தேன்.. இப்பவெல்லாம் பிள்ளைங்கள பிரச்சினை இல்லாத ஏரியான்னு அங்கிட்டு தான் தள்ளிக்கிட்டு வராய்ங்க.. சும்மா சுத்திக்கிட்டு இருக்குறப்ப இவன் கண்ணுல சிக்கிட்டான்.. கூப்பிட்டு பேசினா ஓவரா சத்தாய்க்கிறான்.. கடுப்பாயிருச்சு.. இழுத்து வச்சு வவுத்த சேர்த்து ஒரே குத்து... அடிங்கோ@#$%.... அழுதுட்டான்.."

"அப்புறம்?"

"இருங்கடா வரேன்னு போய் ஆளைக் கூட்டியாந்தான்.. அவங்க வந்து நம்ம குரூப்ப பார்த்து பயந்து ஓடிட்டாய்ங்கள்ள..."

"அது.. அவனுக்கு வேணுண்டா.. ஏண்டா மாப்புள.. ரொம்ப நாளா இந்த வசந்தி பிள்ளைக்கு ரூட் விட்டுக்கிட்டு இருந்தியே.. என்னடா ஆச்சு?"

"அவ வேலைக்கு ஆக மாட்டாடா.."

"ஏண்டா அப்படி சொல்ற?"

"ரொம்பப் பயந்தாங்கொள்ளியா இருக்காடா.. எங்கேயும் வெளியே கூப்பிட்டா வர மாட்டேங்குறா.. ராத்திரி எஸ்.எம்.எஸ் அனுப்பக் கூட பயப்படுறா.. அவளக் கரெக்ட் பண்ணி மேட்டர் முடிகிறது எல்லாம் ரொம்பக் கஷ்டம் மச்சான்.. போன வாரம் தங்கச்சி ப்ரெண்டு ஒருத்தி வீட்டுக்கு வந்தா.. சும்மா செம கட்டை.. அடுத்து அவளைத்தான் நூல் விட்டுக்கிட்டு இருக்கேன்.. ஆமா.. அந்த மல்லிகாப் புள்ளைய முடிச்சுட்டியா?"

"அவ நம்மள எல்லாம் விடத் தெளிவு மாப்புள.. கஷ்டப்பட்டு ஒருத்தன் ரூமுக்கு கூப்பிட்டு போனனா.. @#$%^&&* அவளே லூப்ப கைல வச்சிருந்தா.. செம மாட்டு.."

"ரைட்டு.. நீ நடத்துடா மகனே.. மச்சம்டா.. நமக்குதான் சரியானதா ஒன்னு கூட மாட்ட மாட்டேங்குது.. அதுக்கெல்லாம் கொடுப்பின வேணும்.."

"பொருமிச் சாகாதீங்கடா.. நேத்து நம்ம காலேஜ் பஸ் ஏதோ அடியாமே? என்னவாவது விசேஷம் உண்டா?"

"இல்லடா.. எல்லாப் பயலும் தப்பிச்சுட்டாங்க.. ஒரு நாள் லீவு போச்சு.."

"ஆகா.. வட போச்சே.. விடுறா மாப்ள.. ஒரு நாள் இல்ல ஒரு நா.. இந்த வாத்தியா நாய்ங்க போற வேனத் தூக்குறோம்.. பத்து நாளைக்கு லீவு கன்பார்ம்.. ஹா ஹாஹா"

மேலே இருக்கும் உரையாடல் கதையோ கற்பனையோ அல்ல.. மதுரையின் முன்னணி பொறியியல் கல்லூரி ஒன்றின் பேருந்தில் மூன்று மாணவர்கள் பேசிக் கொண்டது. அவர்கள் முதல் வருடப் படிப்பில் தான் இருக்கிறார்கள் என்பது கவனிக்க வேண்டியது. சுற்றி இத்தனை பேர் இருக்கிறார்களே, அவர்களுக்கு கேட்கக் கூடுமே என்ற எந்த கவலையும் இல்லாமல் பேசிக் கொண்டிருந்தார்கள். தங்கள் பொறுப்பை அறியாமல் இருப்பதென்பது வேறு.. ஆனால் தெரிந்தே தவறுகள் செய்யும் இவர்களைப் பற்றி என்ன சொல்ல? இவர்கள்தானா நாளைய இந்தியாவின் தூண்கள்? நம்மை நாமே நொந்து கொள்வதைத் தவிர வேறெதுவும் தோன்றவில்லை.

December 7, 2009

இடைவெளி..!!!

தொலைத்ததாய் நம்பிக் கொண்டிருந்த உறவொன்று
மீண்டு(ம்) என்முன்னே வந்து நிற்க
ஆசிர்வதிக்கப்பட்டதாய் மாறிப்போகிறது இந்த தினம்

ஆணும் பெண்ணும் நண்பர்களாய் மட்டும் இருக்க முடியும்
என்னும் அடிப்படையில் தோன்றியது
உனக்கும் எனக்குமான உறவின் அடையாளம்

கால நேரம் மறந்த கட்டற்ற பறவைகளாய்
நாம் சுற்றித் திரிந்த பொழுதுகளை
சுப்பிரமணியபுரத்தின் கல்லு சந்துகளும் குட்டிச் சுவர்களும்
இன்றும் கூட கதை கதையாய் பேசிக் கொண்டிருக்கக் கூடும்

உன்னோடு ஆடிய வளையலாட்டமும்
விடுமுறைகளின் போது மட்டும் வந்து சேரும் காய்ச்சலும்
பையனாக பிறந்ததற்காக நீ என் மீது கொள்ளும் செல்லக் கோபங்களும்

ஓர் மழை நாளின் நள்ளிரவில்
உன்னோடு சேர்ந்து காணாமல் போயின

"வாங்க வீட்டுக்கு போய் பேசுவோம்"

எப்பொழுதும் டா போட்டுப் பேசும் உன்னிடம்
எங்கிருந்து வந்தது இந்த மரியாதை?

கைகோர்த்து நடந்த பாதையில்
நீ மட்டும் வெகுதூரம் முன்னே சென்றிருக்க
நான் பால்யத்திலேயே தேங்கி விட்டேனா?

வீட்டை அடைந்து சாவகசாமாய் பேசியபடி
படிகளில் ஏறிய நீ தடுமாற
தாங்க வந்த என்னை சுவாதீனமாய் தடுத்து
விலகிய முந்தானையை சரி செய்த தருணத்தில்

காலத்தின் கொடிய கரங்களால்
சிதைக்கப்பட்டது
நம் நட்பும்
என் பால்யத்தின் வீதியெங்கும்
பாதசுவடுகளாய் பதிந்து இருந்த
உன் நினைவுகளும்..

December 3, 2009

ஓடு ஓடு ஓடு .. வரான் பாரு வேட்டைக்காரன்..!!!

விஜய் அல்லது அஜித் படம் வந்தால் யார் சந்தோஷப்படுகிறார்களோ இல்லையோ, மொபைல் நெட்வொர்க்குகளுக்கு கொண்டாட்டம்தான். ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி திட்டி இவர்களின் ரசிகர்கள் அனுப்பும் குறுந்தகவல்கள், ஜோக்குகள் எல்லாமே அட்டகாசம். மிஸ்டர் X, மிஸ்டர் Y என்று ஆனந்த விகடனில் தனியாக ஒரு பக்கமே போடுமளவுக்கு இந்த ஜோக்குகள் பிரசித்தம். அந்த வரிசையில் சமீபத்திய ஹிட் - வேட்டைக்காரன். இங்கே நான் தொகுத்து இருக்கும் ஜோக்குகள் எதுவும் என் சொந்தக் கற்பனை அல்ல. நண்பர்கள் இதை நகைச்சுவையாக மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். (இதெல்லாம் நான் எதுக்கு சொல்றேன்னா, நான் ஒரு நடுநிலைவாதி பாருங்க.. அதுக்காக.. ஹி ஹி ஹி..)

***************

வேட்டைக்காரன் படத்தின் கதைதான் என்ன?

விஜய் ஒரு வேட்டைக்காரர். மான் வேட்டைக்காக காட்டுக்குப் போகிறார். அங்கே புலியின் குகையில் மாட்டிக் கொண்டிருக்கும் அனுஷ்காவைப் பார்க்கிறார். காப்பாற்ற முயலுகையில் புலி அவரைத் துரத்த ஆரம்பிக்கிறது. விஜய் தப்பிப்பதற்காக டிவிஎஸ் சாம்பில் ஏறிப் பறக்கிறார். (இங்கே தான் புலி உறுமுது பாட்டு..) புலியிடம் இருந்து தப்பிக்க வேண்டும். லெப்ட் இன்டிகேடரைப் போட்டு வண்டியை வலது பக்கம் திருப்புகிறார். புலி குழம்பிப் போய் வேறு வழியில் போய் விடுகிறது. வண்டியில் போகும்போது ஒரு தென்னை மரத்திலிருந்து தேங்காய் விஜய் தலையில் விழுகிறது. (இங்கே என் உச்சி மண்டையில சுர்ருங்குது பாட்டு..) திடீர் என்று புலி ஷார்ட் ரூட்டில் வந்து விஜயை மடக்கி விடுகிறது. வேறு வழியின்றி விஜய் பாட ஆரம்பிக்கிறார்.(நான் அடிச்சா தாங்க மாட்ட..) கேட்கும் புலி செத்துவிழுகிறது. அனுஷ்காவைக் காப்பற்றுகிறார் விஜய். கடைசியாக இரண்டு பேரும் சேர்ந்து "கரிகாலன் காலைப் போல' என்று பாட படம் முடிகிறது. எப்பூடி?

சரி சரி.. இந்தக் கதை பிடிக்கவில்லையா? இது ஓகேவா என்று பாருங்கள்..

ஒரு நாள் காக்காவும் கொக்கும் வானத்தில் பறந்து கொண்டிருந்தன. திடீரென்று கொக்கு தடுமாறி சாக்கடையில் விழுந்து விடுகிறது. காக்க தன கையைக் கொடுத்து கொக்கைத் தூக்கி விட, கொக்கு "கறுப்பான கையாலே என்னப் புடிச்சான்" என்று பாட, ஒரே லவ்ஸ்தான்.ஆனால் கொக்கு வெள்ளையாக இருப்பதைக் காரணம் காட்டி காக்காவின் குடும்பத்தார் அவர்களின் காதலி ஏற்க மறுக்கிறார்கள். வேதனை கொண்ட கொக்கு கருப்பாவதர்காக எப்போதும் வெயிலில் ஒற்றைக்காலில் நிற்க ஆரம்பித்தது. எதிர்பாராத ஒரு பொழுதில் 'வேட்டைக்காரன்" விஜய் கொக்கை சுட்டு விடுகிறார். தீராத சினம் கொண்ட காக்கா விஜயை பழி வாங்க சபதம் செய்கிறது. கடைசியில் காக்காவின் சத்தியம் பலித்ததா? படத்தைப் பாருங்கள். (நன்றி - அத்திரி)

இதுவும் பிடிக்கலையா? உண்மையான கதையை சொல்லனுமா?

சாரி.. ஒரு கதைய சொல்லி நண்பர்களோட உயிரை வாங்குற அளவுக்கு நான் கொலைகாரன் இல்லைங்க..

***************

அவசர அறிவிப்பு:

மக்கள் அனைவரும் உடனடியாக "2012 ருத்ரம்" என்னும் படத்தை பார்க்கும்படி கேட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஏன் என்றால்..
....
....
....
....
வேட்டைக்காரன் படம் ரிலீஸ் ஆனால் என்ன நடக்கும் என்பதை வெள்ளைக்காரங்க படமாஎடுத்திருக்காங்க..

***************

"வேட்டைக்காரன் படம் பார்க்க போற எல்லோருக்கும் ரெண்டு பஞ்சு தராங்கலாமே? காதுல வைக்கிரதுக்கா? பின்னணி இசை அவ்வளவு கொடூரமாவா இருக்கு?"

"அதுக்கு இல்லன்னே.. அந்தப் பஞ்சு ரெண்டும் படம் பார்த்து முடிக்கிறப்ப ஆளத் தூக்கி விடுவாங்கல்ல.. அப்ப மூக்குல வைக்கிறதுக்கு.."(நன்றி -நையாண்டி நைனா )

***************

வேட்டைக்காரன் பாட்டின் லேட்டஸ்ட் ரீமிக்ஸ்:


போஸ்டர் பார்த்தா தாங்க மாட்ட..
டிரைலர் பார்த்தா தூங்க மாட்ட..
படம் பார்த்தா முழுசா வீடு போய் சேர மாட்ட..

***************

ஹட்ச் - இப்போ.. வோடபோன்

மெட்ராஸ் - இப்போ.. சென்னை

பாம்பே - இப்போ.. மும்பை

கல்கத்தா - இப்போ கொல்கத்தா

சர்தார் - இப்போ.. விஜய்..

இப்போதைக்கு அவ்வளவுதான்.. கூடிய விரைவில் "சாட்டைக்காரன் - முன் பின் எந்த நவீனத்துவமும் இல்லாத ஒரு விமர்சனத்தில்" மீட் பண்ணுவோம்..:-)))

December 1, 2009

எ ஷார்ட் பிலிம் அபவுட் லவ்(1988)..!!!


வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு உன்னதமான உணர்வு - காதல். இதுதான் காதல் என்றோ, எப்போது யார் மீது காதல் பிறக்கும் என்றோ எவராலும் கணிக்க முடியாது. காதல் கொள்ளாத மனிதர்கள் இந்த பூமியில் யாருமே கிடையாது என்று அடித்துச் சொல்லலாம். இளைஞன் ஒருவன் தன்னை விட மூத்த பெண் ஒருத்தியின் மீது கொண்ட காதலின் தீவிரத்தையும், தனிமையின் வலியையும் பற்றி பேசும் படம்தான் " ஷார்ட் பிலிம் அபவுட் லவ்".

கையில் காயம் பட்டவனாக மருத்துவமனையில் படுத்திருக்கும் பத்தொன்பது வயது இளைஞன் டோமக்கின் நினைவுகளின் வாயிலாக விரிகிறது படம். அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தன் நண்பனின் தாயுடன் வசித்து வருகிறான் டோமக். எதிர்த்தாற்போல் உள்ள குடியிருப்பில் இருக்கும் பெண்ணின் நடவடிக்கைகளைத் தன்னிடம் இருக்கும் தொலைநோக்கி வழியாக பார்த்து வருகிறான். அவள் இவனை விட மூத்தவள். அவளுடைய பெயர் மேக்தா. வரைகலை நிபுணர்.

இரவில் மேக்டா வீட்டுக்கு வருகிறாள். அவளுக்கு போன் செய்கிறான் டோமக். ஆனால் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறான். உன்னோடு தினமும் இதே தொல்லையாகப் போய் விட்டது என்று அவள் கோபம் கொண்டு கத்தி விட்டு போனை வைத்து விடுகிறாள். மீண்டும் அவளை அழைக்கும் அவன் சாரி என்று ஒற்றை வார்த்தை சொல்லி விட்டு போனை கட் செய்கிறான். மறுநாளும் அவளைத் தொலைநோக்கி வழியாகப் பார்க்கிறான். அவள் தன்னுடைய நண்பனோடு வந்து உறவில் ஈடுபடுகிறாள். கோபம் கொண்டு தொலைநோக்கியை தள்ளிப் போட்டு விட்டு கேஸ் கம்பெனிக்கு போன் செய்கிறான். தன் வீட்டில் கேஸ் லீக் ஆவதாகச் சொல்லி அவளுடைய முகவரியைத் தருகிறான். அவர்களின் அவசர வருகையால் மேக்டா குழம்பிப் போகிறாள். அவர்கள் உறவு கொள்வதைத் தடுத்ததில் டோமக் குரூர சந்தோசம் கொள்கிறான். மேக்டாவை அருகில் சந்திக்க விரும்பும் டோமக் அவள் வீட்டின் பால்காரனாகச் சேர்கிறான்.

மறுநாள் அவள் வெகு தாமதமாக வீட்டுக்கு வருகிறாள். தன்னுடைய நண்பனோடு சண்டை போட்டு விட்டு அறைக்குள் வந்து அழுகிறாள். இதைப் பார்க்கும் டோமக் பால் பாக்கெட் போடும் சாக்கில் அவளுக்கு மணி ஆர்டர் வந்திருப்பதாக ஒரு ஸ்லிப்பை அவள் வீட்டில் போட்டுச் செல்கிறான். பணம் வந்திருப்பதாக நம்பிக் கொண்டு அவளும் தபால் அலுவலகத்திற்கு வருகிறாள். எனினும் பணம் கிடைக்காமல் ஏமாந்து போகிறாள். தான் தான் அவளைப் பார்ப்பதற்காக அவ்வாறு செய்ததாக ஒத்துக் கொள்கிறான் டோமக். அவள் அழுதது தனக்கு தெரியும் என்று சொல்ல அவள் அதிர்ச்சி அடைகிறாள். எப்படி என்று கேட்க தான் தொலைநோக்கி வழியாகப் பார்த்ததை சொல்கிறான். அவள் கோபமாக அவனைத் திட்டி விட்டுப் போகிறாள்.

மறுநாள் தன்னுடைய நண்பனிடம் இவனைப் பற்றி சொல்கிறாள் மேக்டா. அவன் டோமக்கை வம்புக்கு இழுத்து அடித்து விடுகிறான். பால் கொண்டு வரும் டோமக் காயம் பட்டிருப்பதைப் பார்த்து மேக்டா கேலி செய்கிறாள். அவன் சடாரென்று அவளைக் காதலிப்பதாகச் சொல்லி விடுகிறான். அவள் அவனுக்கு தன்னிடம் என்ன வேண்டும் என்று கேட்க ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி விட்டு ஓடி விடுகிறான். திரும்பி வந்து தன்னோடு ஐஸ்க்ரீம் சாப்பிட ஓட்டலுக்கு வரமுடியுமா எனக் கேட்கிறான். அவள் ஒத்துக் கொள்கிறாள். ஹோட்டலில் எத்தனை நாட்களாக அவன் அவளைப் பார்த்து வருகிறான் என்று விசாரிக்கிறாள். அவன் ஒரு வருடம் என்கிறான். அவளுடைய முன்னாள் காதலன் அவளுக்கு எழுதிய கடிதங்களையும் தான் மறைத்து விட்டதை சொல்கிறான். அவள் அவனை தன்னுடைய கைகளை ஆதரவாக பிடித்துக் கொள்ளும்படி சொல்கிறாள்.

இருவரும் அவளுடைய அறைக்கு வருகிறார்கள். அவள் அவனுடைய காதலைப் பற்றி விசாரித்துக் கொண்டே அவன் கைகளை எடுத்து தன மீது வைத்துக் கொள்கிறாள். பெண்ணின் முதல் ஸ்பரிசம் காரணமாக அவன் உடனே உச்ச நிலையை அடைந்து விடுகிறான். இவ்வளவுதான் உன் காதலா என்று அவள் கேட்க வெட்கம் கொண்டவனாக வீட்டுக்கு ஓடி விடுகிறான். அவளுக்கு சங்கடமாகப் போய் விடுகிறது. மன்னித்து விடு, திரும்பி வா என்று அட்டையில் எழுதிக் காட்டுகிறாள். அவனோ குளியலறைக்குள் புகுந்து தன் கைகளை அறுத்துக் கொண்டு மூர்ச்சை அடைகிறான்.

வெகுநேரம் வரை அவன் திரும்பாததால் அவள் கவலை கொள்கிறாள். அவன் விட்டுச் சென்ற கோட்டை எடுத்துக் கொண்டு அவனுடைய வீட்டுக்குப் போகிறாள். அங்கே அவன் இல்லை, வெளியே போயிருப்பதாக நண்பனின் அம்மா சொல்கிறாள். மறுநாள் அவனுடைய அலுவலகத்தில் விசாரித்து அவன் காதலுக்காக கைகளை அறுத்துக் கொண்டு மருத்துவமனையில் இருப்பதாக அறிகிறாள். தினமும் அவனுடைய அறையில் ஏதேனும் நடமாட்டம் தெரிகிறதா என பைனாகுலர்களின் வழியாக பார்க்க ஆரம்பிக்கிறாள். ஒரு நாள் அவன் திரும்பி விட்டதை அறிந்து அவனுடைய வீட்டுக்கு ஓடுகிறாள். அங்கே அவன் தூங்கிக் கொண்டிருக்கிறான். அவனுடைய தொலைநோக்கியின் வழியாக தன்னுடையஅறையை அவள் பார்க்கத் தொடங்குவதோடு படம் முடிகிறது.

உளவியல் ரீதியான பல விஷயங்களை இந்தப் படம் பேசுகிறது. உலகில் மனிதர்கள் ஏன் கவலைப்படுகிறார்கள் என்ற டோமக்கின் கேள்விக்கு பதிலே இல்லாத விஷயம் அது என்கிறாள் அவனுடைய நண்பனின் அம்மா. கதையின் முக்கிய பாத்திரங்களான டோமக், மேக்டா, நண்பனின் அம்மா ஆகிய மூவருமே தீராத தனிமையால் அவதிப்படுகிறார்கள். அதுதான் அவர்களை பல்வேறு செயல்களைச் செய்ய தூண்டுகிறது. தன்னை டொமாக்பார்க்கிறான் என்பதை தெரிந்து கொண்டு அவன் கண்களில் படுமாறு படுக்கையை நகர்த்திப் போட்டு மேக்டா உறவு கொள்வது மனித மனதில் இருக்கும் குரூரத்தின் வெளிப்பாடு. ஹோட்டலில் தன்னைக் காதலிப்பதாக சொல்லும் டோமக்கிடம் மேக்டா சொல்கிறாள்.."காதலா.. அப்படி ஒன்று இந்த உலகத்தில் கிடையாது..".

படத்தில் பாலியல் விஷயங்களும் வெகு தைரியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தன்னுடைய அறையில் இருக்கும் டோமக்கிடம் மேக்டா கேட்கிறாள் "நான் உறவு கொள்வதைப் பார்த்து நீ சுய இன்பத்தில் ஈடுபடுவது உண்டா..?" ஆமாம் என்று அவனும் ஒத்துக் கொள்கிறான். ஆனால் இப்போது அவளைக் காதலிப்பதால் இனிமேல் அப்படி செய்ய மாட்டேன் என்கிறான். டோமக்கின் அறைக்கு வரும் மேக்டாவிடம் நண்பனின் அம்மா "நான் சொல்வது உனக்கு விளையாட்டாக இருக்கலாம்.. ஆனால் அவனுடைய அலாரத்தில் எப்போதும் எட்டரை மணிதான் இருக்கும்.. ஏனென்றால் அதுதான் நீ வீட்டுக்கு வரும் நேரம்" என்று சொல்லும் காட்சி டோமக்கின் காதலின் தீவிரத்தை புரிய வைக்கிறது. பைனாகுலர்களைக் கொண்டு மேக்டா டோமக்கின் அறையைப் பார்க்க ஆரம்பிக்கும் காட்சியில் அவன் மீது அவளுக்கு நேசம் பிறந்து விட்டதை எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது. இறுதிக் காட்சியும் ஒரு கவிதை. தொலைநோக்கி வழியாக தன்னுடைய அறையை மேக்டா பார்க்கிறாள். அங்கே அவள் அழுது கொண்டிருப்பது தெரிகிறது. ஆனால் இப்போது அவளுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் அவள் கூடவே டோமக் இருக்கிறான்.

படத்தின் மிக முக்கியமான அங்கம், படத்தின் பின்னணி இசை. தொலைநோக்கி வழியாக டோமக் பார்க்கும் போது வரக் கூடிய இசை நெஞ்சை உருக்கக் கூடியது. அந்தக் காட்சிகளைத் தவிர மற்ற காட்சிகளில் எல்லாம் இயற்கையான பின்னணி சத்தங்களே பயன்படுத்தப் பட்டு இருக்கின்றன. முக்கால்வாசி நேரம் இருட்டிலேயே படம் நடந்தாலும் ஒளிப்பதிவு கண்களை உறுத்தாமல் இருப்பது அழகு. 1988 ஆம் ஆண்டு வெளியான இந்த போலந்து நாட்டு படத்தின் இயக்குனர் கீஸ்லோவேஸ்கி. உலகத் திரைப்பட விழாக்களில் பல விருதுகளை பெற்ற இந்தப் படம்தான் பிற்காலத்தில் "எக் சொட்டி சி லவ் ஸ்டோரி" என்ற பேரில் மணிஷா நடித்து சீன் படமாக ஹிந்தியில் வெளியானது. இசைக்காகவும் காதலின் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்திய விதத்துக்காகவும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் "எ ஷார்ட் பிலிம் அபவுட் லவ்"!!!

November 25, 2009

உறுமீன்களற்ற நதி..!!!

ஒரு கவிதை என்பது எப்படி இருக்க வேண்டும்? கவிதை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏதாவது விதிகள் உள்ளனவா? மடக்கி மடக்கி எழுதினால்தான் கவிதையா? கவிதைகளுக்கு என்று கட்டமைக்கப்பட்ட வடிவம் ஏதேனும் உள்ளதா? ஒரு சில கவிதைகளை எத்தனை முறை படித்தாலும் புரிந்து கொள்வதற்கு சிரமமாக இருக்கிறதே? எது நல்ல கவிதை? சாமானியன் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு எழுதினால்தான் நல்ல கவிதையா? அதுதான் இலக்கியத் தரமா? என் மனதுக்குள் பல நாட்களாகவே இருந்து வரும் கேள்விகள் இவை.

சமீபத்தில் நண்பர் மற்றும் கவிஞர் யாத்ராவிடம் இது பற்றிக் கேட்டபோது அவர் அழகாகச் சொன்னார்.. "கவிதை என்பது எப்படி வேண்டுமானாலும் எழுதப்பட்டு இருக்கலாம். எந்த விதிகளும் கிடையாது. பத்தி பத்தியாகக் கூட எழுதலாம். ஆனால் அதைப் படித்து முடிக்கும் போது உங்களுக்குள் ஒரு சிறு சலனத்தையேனும் உண்டாக்கி இருந்தால் அதுதான் நல்ல கவிதைக்கான அடையாளம். வாசிப்பு அனுபவத்தைப் பொறுத்து ஒவ்வொருவரின் புரிதல் தன்மை வேறுபடலாம். புரியா விட்டால் நல்ல கவிதை, புரிந்தால் அது சாதாரணமானது என்றெல்லாம் கிடையாது.. எல்லாமே இலக்கியம்தான்." யோசித்துப் பார்க்கும்போது இது எத்தனை ஆழமான உண்மை என்று புரிகிறது.

கவிதைகளைப் பொறுத்த மட்டில் நான் வாசிப்பின் ஆரம்பநிலையில் இருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். புத்தகமாக வாங்கிப் படிக்கும் முன்பே முகுந்த் நாகராஜனின் கவிதைகளை இணையத்தில் வாசித்து இருக்கிறேன். எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், அற்புதமான விஷயங்களை கவிதைகளில் சொல்ல முடியும் என்பது எனக்கு அப்போதுதான் புரிந்தது. அதன் பின்னர் மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் என்னைப் பெருமளவில் ஈர்த்து இருக்கின்றன. அந்த வரிசையில், நான் வாசித்தவரையில், என்னைப் பெரிதும் கவர்ந்த கவிதைப் புத்தகமென இசையின் "உறுமீன்களற்ற நதி"யைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இசை தன் மீதும், தன்னைச் சுற்றி இருப்பவர்கள் மீதும் காட்டும் அன்பும் பாசமும் இந்தப் புத்தகத்தின் கவிதைகள் வழியே வெளிப்படுகின்றன. பொதுவாக கவிதைகளில் காணக் கிடைக்காத கேலியும், கிண்டலும் இசையின் கவிதைகள் எங்கும் நிறைந்து கிடக்கின்றன. சமூக அவலங்களின் மீதான சாடல்களையும், தன் மன அடுக்குகளில் தோன்றும் விசித்திரமான எண்ணங்களையும் அழகிய கவிதைகளாய் மாற்றும் வித்தை இசைக்கு மிக எளிதாக கைவருகிறது. கண்முன்னே நடக்கும் அக்கிரமங்களைக் கண்டும் காணாதது போல் போக வேண்டிய சூழல், ஆசைக்கும் நிஜ வாழ்க்கைக்குமான முரண்கள், கடவுளின் மீதான தன் கோபம் என எல்லாவற்றையும் தொட்டுச் செல்கிறது அவருடைய கவிதைமொழி.

தமிழில் கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான கவிஞர்களில் தானும் ஒருவர் என்பதை இந்த புத்தகத்தின் மூலம் பதிவு செய்து இருக்கிறார் இசை. இசையின் இயற்பெயர் .சத்தியமூர்த்தி. கோவையில் வசித்து வருகிறார். தற்போது உயிர்மையில் தொடர்ச்சியாக கவிதைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. "காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி" என்பது முதல் கவிதைத் தொகுப்பு. 'உறுமீன்களற்ற நதி" அவருடைய இரண்டாவது தொகுப்பு. டங்குடிங்குடு என்பற பெயரில் பதிவுலகிலும் எழுதி வருகிறார்.

புத்தகத்தில் இருந்து சில கவிதைகள்..

பிச்சாந்தேகி

ஒவ்வொரு இரவிலும்
தன்னுடலை வட்டவடிவ
அலுமினியத் தட்டாக்கி
யௌவனம் கொழுத்த வீடுகளின்
முன் நிற்கிறான் அவன்

காலையில் கதவு திறக்கும் பெண்ணுடலில்
முட்டி மோதி அலையுமவன் பெருமூச்சு

விளக்கை அணைத்ததும்
எங்கிருந்து கிளம்பி உடலில் நுழைகிறது
அந்த நுண்கிருமி

எரிக்க எதுவும் கிடைக்காமல்
படுக்கையில் கிடந்து புரள்கிறது ஆறடி ஜுவாலை

தலையணை எங்கும் குவிந்து கிடக்கிறது உதடுகள்

அவன் நினைவில் புணர்ந்த
பதிவிரதைகளின் சாபமோ என்னவோ
இதுவரையிலும் ஒரு சில்லரைக்காசும்
பெற முடியாத தன் தட்டை
நாற்பத்தி மூன்றாம் வயதில்
கிணற்றில் முக்கி அழித்தான்

3 கி.மீ

அந்த ஊருக்கு
இந்த வழியே
3 கி.மீ எனக் காட்டிக் கொண்டு
நிற்கும்
கைகாட்டி மரத்துக்கு
அவ்வூரைப் பார்க்கும்
ஆசை வந்து விட்டது ஒரு நாள்

வாஞ்சை கொண்டு
கிளம்பிய மரம்
நடையாய் நடந்து கொண்டிருக்க

3 கி.மீ 3 கி.மீ எனத்
தன்னைப் பின்னோக்கி
இழுத்துக் கொள்கிறது
அவ்வூர்

தற்கொலைக்குத் தயாராகுபவன்

தற்கொலைக்குத் தயாராகுபவன்
பித்துநிலையில்
என்னன்னெவோ செய்கிறான்

அவன் கையில்
குடும்ப புகைப்படமொன்று கிடைக்கிறது
அதிலிருந்து
தனியே தன்னுருவைப்
பிரித்தெடுக்கும் முயற்சியில்
கத்திரிக்கத் துவங்குகிறான்

எவ்வளவு நுட்பமாகச் செயல்பட்டும்
கை கோர்த்திருக்கிற
தங்கையின் சுண்டுவிரல்நுனி
கூடவே வருவேன் என்கிறது

உறுமீன்களற்ற நதி

பதிப்பகம்: காலச்சுவடு

விலை: ரூ.60/-

(பின்குறிப்பு: வருகிற வெள்ளிக்கிழமை (27-11-09) அன்று நண்பர் யாத்ராவின் திருமண தாம்பூல நிச்சய விழா சென்னையில் நடைபெற இருக்கிறது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்..)

November 23, 2009

உக்கார்ந்து யோசிச்சது - கல்லூரி ஸ்பெஷல்...!!!

அழகர்மலையின் அடிவாரத்தில் எழில் கொஞ்சும் சூழலில் அமைந்திருக்கும் பொறியியல் கல்லூரி அது. கடந்த ஒரு வாரமாக செய்முறைத் தேர்வுகள் ஆய்வாளராக (External Lab Examiner) அங்கேதான் சென்று வந்து கொண்டிருந்தேன். ஆரம்பித்து மூன்று வருடமே ஆகி இருந்தாலும் மாணவர்களுக்கான எல்லா வசதிகளையும் நிர்வாகம் செய்து தந்திருக்கிறது. காற்றோட்டத்துடன் கூடிய வகுப்பறைகள். அருமையான ஆய்வுக்கூட வசதிகள். அசந்து போய் விட்டேன்.

பெரும்பாலும் கிராமப்புற மாணவர்கள்தான் அந்தக் கல்லூரியில் படிக்கிறார்கள். அவர்களோடு உரையாடுகையில், கேள்விகள் கேட்கையில் முக்கியமான ஒரு விஷயத்தை கவனித்தேன். நன்றாக படிப்பவர்களாக இருந்தாலும் கூட அவர்களால் தாங்கள் நினைப்பதை தெளிவாக சொல்ல முடியவில்லை. காரணம் - அவர்கள் வளர்த்துக் கொள்ள தவறிய மிக முக்கியமான திறமை. அது "Communication Skills"" என்று சொல்லப்படும் தொடர்பு கொள்ளும் திறன்.

ஆங்கிலத்தில் பொளந்து கட்டுவதைப் பற்றி பிறகு யோசிக்கலாம். முதலில் வாயைத் திறந்து பேச வேண்டும் அல்லவா? என்னுடைய மாணவர்களிடம் அடிக்கடி இதைப் பற்றி நான் பேசுவதுண்டு. பொதுவாகவே தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த விஷயத்தைப் பொறுத்தவரை மிகவும் பின்தங்கியவர்களாகவே இருக்கிறார்கள். இந்த நிலை மாற ஒவ்வொரு கல்லூரியும் தனிப்பட்ட முயற்சிகள் எடுக்க வேண்டும். இல்லை என்றால் பெரிய நிறுவனங்கள் எல்லாம் சென்னை, கோவை போன்ற நகரங்களில் மட்டுமே கேம்பஸ் பிளேஸ்மென்டுக்காக செல்வார்கள். நிலைமை மாறும் என்று நம்புவோம்.

***************

நாம் எத்தனைதான் நல்ல பிள்ளை மாதிரி அடங்கி இருக்க நினைத்தாலும் நம்ம சுழி சும்மாவே இருப்பதில்லை. ஆய்வாளராகப் போன இடத்திலும் அங்கிருந்த மக்களோடு நன்றாகப் பழகி விட்டேன். குறிப்பாக மின்னியல் துறையின் தலைவர் நமக்கு நெருங்கிய நண்பராகி விட்டார். அட்டகாசமான மனிதர். தமிழை நேசிக்கக் கூடியவர். கவிதை எல்லாம் எழுதுவாராம். அது மட்டுமல்லாது செம வேடிக்கையாய் பேசுகிறார். சாம்பிளுக்கு ஒன்று... அவர் என்னிடம் சொல்லியது..

"சார்.. நீங்க லெக்சரர்.. பாடம் சொல்லித்தாறவர்.. அதாவது பிரசங்கி.. நான் துறைத்தலைவர்.. உங்களை விட ஜாஸ்தி பேசணும்.. அப்போ நான்? அதிகப் பிரசங்கி.."

வாத்தியார் என்றால் மூன்று கிலோ இஞ்சியை முழுதாக அரைத்துக் குடித்த மாதிரியே அலைய வேண்டும் என்று யார் சொன்னது?

***************

என்னுடைய கல்லூரியில் உடன் வேலை பார்க்கும் நண்பர் அவர். ஆய்வுக்கூட உதவியாளராகப் பணிபுரிகிறார். மதுரை தியாகராயர் கல்லூரியில் பகுதி நேர பொறியியல் படிப்பு படித்து வருகிறார். நண்பருக்குத் திருமணம் ஆகி குழந்தையும் உண்டு. அவருடைய மகள் இரண்டாம் வகுப்பில் படித்து வருகிறாள். மாலை நேரத்தில் அவரை சந்திப்பதற்காக அவருடைய வீட்டுக்குப் போயிருந்தேன். நான் போன நேரம் நண்பர் தரையில் அமர்ந்து கணக்கு போட்டு பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து அவருடைய மகளும் வந்து சேர்ந்தாள். அவர்களுக்கு இடையேயான உரையாடல் இங்கே..

"என்னப்பா பண்ணிக்கிட்டு இருக்க..?"

"அப்பா ஹோம்வொர்க் பண்ணிட்டு இருக்கேன்மா.."

"இவ்வளவு நேரமாவா? என்ன பாடம்?"

"கணக்குமா.."

"எங்க மிஸ் கூடத்தான் ஹோம்வொர்க் கொடுத்தாங்க.. நான் முடிச்சுட்டேனே.."

"அப்பா.. பெரிய பையன்ல.. அதான் கொஞ்சம் பெரிய கணக்கா கொடுத்திருக்காங்கமா.."

"சும்மா ஏமாத்ததப்பா.. நானும் நோட்டுலதான் எழுதுறேன்.. நீயும் நோட்டுலதான் எழுதுற... உனக்கு தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லுப்பா.."

சொல்லிவிட்டு ஓடி விட்டாள். நண்பர் என்னைப் பார்த்து அசடு வழிய, நான் சிரித்தபடி கிளம்பினேன்.

***************

வெள்ளிக்கிழமை சாயங்காலம் கல்லூரி முடிந்து வெளியே தான் வந்திருப்பேன். திடீரென மழை பிடித்துக் கொண்டது. நனைந்து கொண்டே வண்டியைக் கிளப்பினேன். தெப்பக்குளம் வரை என்னோடு டபுள்ஸ் வரும் நண்பரும் ஓடி வந்து ஏறிக் கொண்டார்.

"நல்ல வேளை.. இன்னைக்காவது மழை பெஞ்சதே" என்றார்.

"அடடா, மழை பெஞ்சு ஊரெல்லாம் நல்லா இருக்கணும்னு நினைக்கிறீங்களே.. ரொம்ப சந்தோஷம்" என்றேன்.

"நீங்க வேற.. கிட்டத்தட்ட ஒரு வாரமாவே இந்த ஜெர்கினையும் தொப்பியையும் எடுத்துக்கிட்டு வரேன்... மழையே இல்லை.. ஏதோ இன்னைக்கு பெய்தாலாவது நாம இதுகளத் தூக்கிட்டு திரிஞ்சதுக்கு ஒரு அர்த்தம் இருக்குல்ல.."

அடப்பாவி மனுஷா? எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்கிறாய்ங்களோ..

***************

நண்பர்களே.. நான் எப்போதுமே என்னுடைய இடுகைகளில் வரும் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லும் பழக்கம் உடையவன். ஆனால் கடந்த மூன்று நான்கு மாதங்களாகவே என்னால் அவ்வாறு பதில் சொல்ல இயலவில்லை. நான் புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கல்லூரியில் இணைய வசதிகள் அதிகமாக இல்லாததும், அங்கே ப்ளாகர் தடை செய்யப்பட்டு இருப்பதும்தான் காரணம். என்னுடைய பதிவை பிரவுசிங் சென்டரில் இருந்துதான் எழுதி வருகிறேன். இருக்கக் கூடிய நேரத்தில் இடுகைகள் எழுதவும், மற்ற நண்பர்களின் இடுகைகளைப் படித்து பின்னூட்டம் இடவும் மட்டுமே முடிகிறது. கூடிய விரைவில் எனக்கென ஒரு கணினி வாங்கி விட்டால் இந்தப் பிரச்சினைகள் தீர்ந்து விடும். எனவே பின்னூட்டங்களுக்கு பதில் சொல்ல மாட்டேன் என்கிறேன் என்று யாரும் தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். நன்றி..!!

***************

கல்லூரி ஸ்பெஷல்னு போட்டதால, வழக்கமா சொல்ற கவிதைக்கு பதிலா ஒரு புதிர் கணக்கு.. விடையைக் கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க நண்பர்களே..

ஒரு கல்யாண வீடு. அங்கே வருகிற எல்லோருக்கும் ஆப்பிள் பழம் தருகிறார்கள். பெரிவர்களில் ஆண் என்றால் ஐந்து பழமும், பெண் என்றால் மூன்று பழமும் தர வேண்டும். குழந்தைகளுக்கு அரை பழம் (1/2) மட்டுமே கொடுக்க வேண்டும். திருமணத்துக்கு வந்தது மொத்தம் நூறு பேர் . நம்மிடம் இருப்பதும் நூறு ஆப்பிள்கள்தான். சரியாகப் பகிர்ந்து கொடுத்தாயிற்று. அப்படியானால் வந்த நூறு பேரில் எத்தனை ஆண், எத்தனை பெண் மற்றும் எத்தனை குழந்தைகள் இருந்தார்கள்? யோசிங்க யோசிங்க..

நெக்ஸ்டு மீட் பண்றேன்.... :-))))))))))